Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

30

“அட!! என்னப்பா!! உங்களில் ஒருத்தர் தானே இந்த மாதிரி வீடியோஸ் போட்டு இருக்காங்க!!! இத பாக்க மாட்டிங்களா!! உங்க கூட இருக்கிறவங்களை நீங்களே ஊக்குவிக்க மாட்டீங்களா?? உங்களுக்கே கசக்குதா என்ன?? இதெல்லாம் இவங்க வீடியோ கால்ல பேசின விஷயங்கள் கிடையாது... ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருத்தரும் மாறி மாறி தங்களைத் தங்களுக்குள் தாக்கி போட்ட வீடியோஸ் தான்... இதெல்லாம் பொதுவாகப் பதிவிட்ட வீடியோக்கள்... எதுவுமே தனிப்பட்ட வகையில் ரெக்கார்டு பண்ணினது கிடையாது.. தனியாப் பேசி, எடிட் பண்ணி, அப்லோட் பண்ணினது தான்... இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.. பார்க்கிறீங்களா??” என ஜுபின் அவர்களை வற்புறுத்தும் தொனியில் சற்றே எள்ளலுடன் கேட்க, ‘இதுக்குமேல எங்களால முடியாது..’ எனக் கைவிரித்துவிட்டனர் அனைவரும்.

இதுகாறும் அமைதியாகப் புன்னகையுடன் அனைவரையும் தன கட்டுக்குள் வைத்திருந்த ஜெனிதா தன் முறை வந்தது என அறிந்து உரத்தக் குரலில் அனைவருக்கும் உரைக்கும் வண்ணம், அவர்களது காரியங்களை உரைக்கும் வண்ணம் பேசத் தொடங்கி விட்டாள்.

“சோ... உங்க கூட இருக்கவங்களோட வீடியோஸ்களையே உங்களால பார்க்க முடியாது இல்லையா?? அப்படின்னா இது எல்லாம் மக்கள் பார்க்கணும்னு ஏன் விரும்புறீங்க?? சரி ஓகே... மக்கள் விரும்புறாங்க அதுக்காக நீங்க வீடியோ போடறீங்க... அதை நான் தப்பு சொல்லலை... ஆனா அவங்களுக்கு இப்படியும் ஒரு கோணம் இருக்குன்னு காட்டினது யாரு?? நீங்க தான் இல்லையா!! உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை எடுத்துக்கோங்க.. தினமும் பிரியாணி சாப்பிட்ட ஒருத்தனுக்குக் கீரை கொடுத்தா பிடிக்காதுதான்.. ஆனால் வெறுமனே தினமும் கீரை இல்ல தினமும் தயிர் சாதம் அப்படின்னு இருந்தா வேற வழி இல்லாம அவன் கீரையைத் தானே சாப்பிட்டாகணும்... பிரியாணி எங்க இருந்து கிடைக்கும்?? இதையே தான் உங்களுக்கும் சொல்றேன்.. மக்களுக்கு இந்த மாதிரி தான் பிடிக்கும், இப்படிக் கொடுத்தா தான் ரசிப்பாங்க அப்படின்னு கொடுக்க நீங்க யாரு?? இப்படி ஒரு மெஷர்மென்ட் லைன் எப்படி நீங்களாகவே டிசைட் பண்ணிக்கிறீங்க?? நல்லதை மட்டுமேதான் கொடுக்கணும்ன்னு நீங்க ஒரு உறுதியோட நல்ல விஷயத்தை மட்டுமே கொடுத்தா எப்படியும் அவங்க உங்களோட விஷயத்தைப் பார்த்து தானே ஆகணும்!! ஐ அக்ரி.. எப்போதும் மோட்டிவேஷன் வீடியோஸ், கருத்து சொல்ற வீடியோஸ் மட்டும் பார்த்துட்டு இருந்தா போரடிக்கும் தான்... வாழ்க்கையில என்டர்டெயின்மென்ட் இருக்கும் இல்லைன்னா மூளை சூடாகிடும்... ஆனா என்டர்டெயின்மென்ட் மிதமிஞ்சி போய்டக்கூடாது இல்லையா?? நம்ம மூளையைப் புத்துணர்ச்சியா வச்சுக்குறதுக்குத் தான் என்டர்டெயின்மென்ட்... ஆனால் அதுவே மூளையை மழுங்கடிச்சிடக் கூடாது... இப்பவும் இந்த மாதிரி வீடியோக்கள் உங்க மூளைய அப்படித்தான் ஆக்கிக்கிட்டு இருக்குது... எது நல்லது, எது கெட்டது, எது உண்மை, எது நிதர்சனம் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் எது, எது நம் வாழ்க்கையில் ஆக்கத்தைத் தரக்கூடிய விஷயங்கள் அப்படின்னு எதையுமே சிந்திக்க விடாம இந்தக் காரியங்கள் எல்லாம் உங்க மூளையை ஒருவித நச்சுத்தன்மையைக் கலக்க வச்சிருக்குது... இதைச் செய்யறவங்க தான் இந்த மாதிரி முட்டாள்தனமா பண்றாங்க அப்படின்னா இதைப் பார்க்கிறவர்களுக்கு நிச்சயமா ஏதோ ஒரு புள்ளியில் இதோட தாக்கம் இருக்கத்தான் செய்யும்.. நல்லா யோசிச்சு பாருங்க... இங்கே யாரும் ஆரம்பத்திலேயே அந்த வீடியோ போஸ்ட் பண்றதுக்காக வந்தவங்க கிடையாது.. ஒருத்தரை மாத்தி ஒருத்தர் தொத்திக்கிட்ட தொற்றுநோய் தான் எல்லாத்துக்கும் காரணம்... இன்னிக்கு ஒருத்தர் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தார், அதாவது அட்டென்ஷன் சீகிங் செய்தார் அப்படின்னா அதைப் பார்க்கிற அடுத்தவருக்கு அது ஒருவை இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரிதான்... சோ அதைப் பார்க்கையில் அடுத்தவங்களுக்கு அந்த அட்டென்ஷன் சீகிங் வைரஸ் தாராளமா பரவும்... அவரோட கண்ணு வழியா உள்ளே நுழைஞ்சு அப்புறமா மூளைக்குப் போகும் அந்த அட்டென்ஷன் சீகிங் வைரஸ்... அவரையும் அதேமாதிரி செய்யத் தூண்டும்... அவரும் தன்னால முடிஞ்ச அளவுக்குத் தனக்குன்னு ஒரு தனித்தன்மை ஏற்படுத்திக்க ஏதோ ஒரு விஷயத்தில் முயற்சிப்பாரு.. அவருடைய வீடியோ பார்க்கிற பத்துப் பேரில் 2 பேருக்கு தானும் இதே மாதிரி பண்ணனும்னு தோணும்... அதுக்கப்புறம் என்ன?? ஆட்டோமேட்டிக்கா இந்த விஷயங்கள் பரவி கொண்டே தான் இருக்கும்... சமீபத்தில் எடுத்த புள்ளிவிவரக் கணக்குப்படி இந்தச் செயலியை இந்தியாவில் மட்டும் 4 மில்லியன் பேர் இன்ஸ்டால் பண்ணி இருக்கிறாங்... அதிலேயும் தொடர்ந்து பயன்படுத்துறவங்க ரெண்டு மில்லியன் பேர்... அப்ப யோசிச்சு பாருங்க, எத்தனை பேர் இதைத் தொடர்ந்து பயன்படுத்தித் தங்களோட நேரத்தையும் நிம்மதியையும் கெடுத்து இருக்கிறீங்க?? நான் உங்களை எந்தக் குறையும் சொல்லலை... நீங்க பிரபலமாகிக்கிட்டு இருக்கிறீங்க... அது தப்புன்னும் சொல்லலை... ஆனா அது உங்களையும் உங்களைச் சுத்தி இருக்குறவங்களையும் உங்களுடைய எதிர்காலத்தையும் எவ்வளவு பாதிக்கும்?? ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க..”

“வெண்பா.. உனக்கு அப்பான்னா பிடிக்கும் தானே!! அப்பான்னா யாருக்குதான் பிடிக்காது! உன் அப்பா எவ்ளோ பீல் பண்ணி பேசினார் தெரியுமா?? அவருக்கு நீன்னா ரொம்ப இஷ்டம்.. உன்னை IAS ஆக்கி பார்க்க ஆசைப்பட்டார்... ஒருவேளை அவருடைய ஆசைப்படி நீ IAS ஆகியிருந்தா இந்த அளவுக்குப் பேமஸ் ஆகி இருக்க மாட்ட தான்... ஆனா உன்னுடைய எதிர்காலம் ரொம்பச் சேஃப் அண்ட் செக்யூர்டா இருந்திருக்கும்... ஆனா நீ இப்ப எந்த நிலைமையில் வந்து நிற்கிறன்னு உனக்குப் புரியுதா?? உன் வயசு பொண்ணுங்களை யோசிச்சு பாரு.. அவங்க எல்லாம் இப்ப நீட் எக்ஸாம் பிரிப்பர் பண்ணி, பாஸ் பண்ணிட்டு இருக்கிறாங்க... ஒருவேளை டாக்டர் ஆயிட்டா அவங்க ஆயுசுக்கும் நிம்மதியா, ஒரு மரியாதையை இருப்பாங்க இல்லையா?? இன்னைக்கு உன்ன கைதட்டி ஆரவாரித்து ரசிகர்கள் எனச் சொல்றவங்க உன்னைவிடக் கவர்ச்சியா ஆடுற யாரோ ஒருத்தர் வந்தா கண்டிப்பா அவங்க பின்னாடி போயிடுவாங்க... சீரழியப் போறது உன்னோட எதிர்காலம் தான்.. அதை முதல்ல புரிஞ்சிக்கோ... மண்ணுக்கு இரையாகி அரிச்சுப் போகுற இந்த மனித உடலின் நிர்வாணம்ங்கிறதை ஒரு தடவை பார்த்தா சலிச்சுப் போயிடும்... அதுக்கு அப்புறமா உன்னை ஒரு காட்சி பொருளா பார்க்கிற எல்லாருக்கும் நீ ஒரு பொணத்துக்குச் சமானம் தான்... நான் சொல்றதெல்லாம் உனக்குப் புரியுமா என்னன்னு எனக்குத் தெரியல... நெருக்கமான காட்சியில் நடித்த உனக்கு அதுக்குப் பின்னாடி இருக்க விஷயம் தெரியாம இருக்கறதுக்கு வாய்ப்பு இல்லை தான்... இருந்தும் உன் வயசுக்கு மீறின விஷயங்களை உன்கிட்ட சொல்றது தப்புன்னு அதுக்காகத் தான் பார்த்து பேசிட்டு இருக்குறேன்..”

“வெண்ணிலா மேடம்!! ஒவ்வொரு விஷயத்துக்கும் நீங்க அவ்ளோ விசனப்பட்டுக் கோபமானீங்களே... உங்க கோபம் நியாயமானதுதான்... ஒரு பையனோட அம்மாவா இங்கே ரொம்பவே பொறுப்பா யோசிக்கிறீங்க... அது எல்லாமே பாராட்டத்தக்கது... ஆனால் நீங்களும் அதே தப்பைதான் பண்ணிட்டு இருக்கீங்க உங்க பையனை உலகறிய செய்யணும், அப்படின்னு நினைச்சு அதுக்கு நீங்க ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தா வெண்பாவோட அம்மா சாரதா இன்னொரு வழியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறாங்க... இரண்டுமே ஒரே இடத்தைப் போய்ச் சேர்ற பாதைகள் தானே!! அப்புறம் எப்படி ஒன்னோட ஒன்னு சிறந்ததாகும்? உங்களுக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயமா மேடம்??”

“இப்பவும் மூர்த்தி, நமஸ்தேவுங்க கலா, கண்ணம்மா, ‘ரவுடி பேபி’ சத்யா நீங்க எல்லாரும் இதுதான் உலகம்ன்னு நெனைச்சிக்கிட்டு ஒரு மாயச் சுழல்ல மாட்டிக்கிட்டு நிக்கிறீங்க... நீங்க நிக்கிறது ஒரு கழிவுநீர் ஓடைன்னு உங்களுக்குப் புரியலை... ஏதோ புனித தீர்த்தத்துல நீராடிட்டு இருக்கிறதா நினைப்பு உங்களுக்கு... நீங்க செய்யுறதை எல்லாம் கைதட்டி ரசிக்குற மக்கள் எல்லாம் உங்களை ஒரு கழைக்கூத்தாடி பக்கத்துல தலையில் பானையை வச்சு ஆடிட்டு இருக்குற குரங்கு மாதிரிதான் பார்க்கிறாங்க... உங்களைப் பொருத்தவரைக்கும் இதெல்லாம் உங்கமேல இருக்கிற அன்பின் வெளிப்பாடு.. அப்படித்தானே!! நிச்சயமா உங்க மேல இருக்கிற அன்பினாலே உங்களுக்கு வியூஸ் வரலை... நீங்க செய்ற ஒவ்வொரு விஷயமும் அவர்களைச் சிரிக்க வைக்குது... அதுக்காக உங்களை விவேக் சார், வடிவேலு sir அளவுக்கு நீங்க நினைச்சுக்க வேண்டாம்... அவங்க மனிதர் உருவில் வந்த தெய்வங்கள்.... மக்களுக்கு நல்லதை மட்டுமே கொண்டு சேர்க்க ஆசைப்பட்டாங்க... நீங்க என்ன பண்றீங்க தெரியுமா? குரங்கு தலைமேல பானையை வைத்து ஆடுமே அதே மாதிரி ஆடிட்டு இருக்கிறீங்க... உங்களைப் பேட்டி எடுக்கிறவங்க, உங்களை ட்ரோல் பண்ணி மக்கள்கிட்டே கொண்டு சேர்க்கிறேன் பேர்வழின்னு சுத்திட்டு இருக்கிற எல்லாரும் உங்க பக்கத்துல நின்னு, உங்கள ஆட்டுவிக்கிற சர்க்கஸ்காரன் மாதிரி தான்... மத்தபடி நீங்க பெரிய ஸ்டாராகவோ இல்லை இந்த உலகம் போற்றும் உத்தம சீலராகவோ எண்ணிக்க வேணாம்... என்னைப் பொருத்தவரைக்கும் நீங்க நாலு பேருமே ஒரே சேத்துல ஊறின ஜந்துதான்... நான் சொல்றது உங்களுக்குக் கஷ்டமா இருக்கலாம்... ஆனா அதுதான் உண்மை...”

“கண்ணம்மா உங்களுடைய சில பேட்டிகள் பார்த்தேன்... அதாவது கிரின்ச் பேட்டிகள் இல்லை... உண்மையா நீங்க வருத்தப்பட்டுப் பேசின பேட்டிகள்... உண்மையான்னு விசாரிச்சேன்.. அது உண்மைதான்... உங்களுக்கு அப்பா இல்லை, அம்மா மட்டும் தான்னு சொன்னாங்க.. அவங்க தான் உங்களைக் கஷ்டப்பட்டு 12வது வரை படிக்க வச்சதுன்னு கேள்விப்பட்டேன்... அதுக்கப்புறமும் பார்ட் டைம் ஜாப் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்குப் போய்க்கிட்டே நீங்க பி.எஸ்சி எம்.எஸ்சி வரை படிச்சதை கேட்டப்போ உண்மையாவே உங்க மேல ரொம்பப் பெரிய மரியாதை வந்துச்சு... ஆனா உங்க காணொளிகளைப் பார்க்கிறப்போ அந்த மரியாதை எல்லாம் காத்தோட தூள் தூளாகப் போய்டுச்சு... யோசிச்சு பாருங்க, இவ்வளவு மன தைரியத்தோடு போராடி, வாழ்க்கையில சாதிக்கணும்னு உறுதியுடன் இருந்த பொண்ணு ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கணும்?? எல்லாரும் நம்மளை பார்த்தா தான் நாம வாழறோம்ன்னு அர்த்தமா?? நமக்குன்னு ஒரு குட்டியான உலகத்துல நாம சந்தோஷமா வாழ்ந்தா பத்தாதா?? பல பேர் சொல்ற மாதிரி அந்தப் பாரதி உயிரோடு இருந்தாலும் இல்லாட்டியும் அப்படி ஒருத்தன் இல்லாமலேயே போனாலும் அவன் மட்டும் தான் உங்க உலகமா?? இந்தக் கிங்காங் செயலிதான் உங்களது சுதந்திர பிரதேசமா?? இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன்... ஏம்மா இப்படி ஒரு முடிவு?? குண்டாயிருக்கிறது ஒண்ணும் அத்தனை பெரிய பாவம் இல்லையே!! எத்தனையோ விழிப்புணர்வு படங்கள், எத்தனையோ விழிப்புணர்வு வீடியோக்கள் எல்லாமே வந்திருச்சு... ஆனா நீங்க ஏன் உங்களைக் குண்டாயிருக்கிறதை முன்னிறுத்தி அப்படிப் பண்றேன், இப்படிப் பண்றேன்னு சொல்லி உங்களை நீங்களே ஒரு கேலிப் பொருளாக, ஒரு பேசுபொருளாக நீட்டுறீங்க?? உங்களுடைய தோற்றத்தை அடுத்தவங்க தானாக வந்து கேலி பண்றது அது தவிர்க்க முடியாத விஷயம்... அவர்களுக்கான பேசிக் மேனர்ஸ், பேசிக் குணமும் அதுதான்.... ஆனா ஏன் நாமளே வாலன்டியராகப் போயி ஒருத்தங்க கிட்ட நம்மைக் கிண்டல் பண்றதுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கணும்?? இதெல்லாம் உங்களுக்குத் தப்புன்னு தோணலையா?? இல்ல உங்கள் மூளை அதெல்லாம் யோசிக்கிறதுக்கு மறுத்துடுச்சா?? ஏன் இப்படி ஒரு முடிவு??”

“ரவுடி பேபி சத்யா... பிரபு உங்க மேல ரொம்பப் பாசமா இருந்தாரு தானே!! அவருடைய அன்பை விட உங்களுக்கு இந்தக் கிங்காங், இதுல வர்ற நைஸ், சூப்பர் அப்படிங்கிற கமெண்ட்ஸ் பெருசா போயிட்டுல்ல! உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லவா?? உங்க பசங்க ரெண்டு பேரும் படிக்கல, தீப்பெட்டி ஃபேக்டரி வேலைக்குப் போறாங்க... நான் இருந்தா என் பசங்களை நல்லா காப்பாத்தி இருப்பேன், இந்தப் பிரபு காசு இல்லாம வேலைக்கு அனுப்பி விட்டான் அப்படின்னு மட்டும் தயவு செஞ்சு சொல்லாதீங்க.. அப்படிச் சொல்லிட்டீங்க அவ்ளோதான்.. ஏதாவது சொல்லிட போறேன்... கூட இருக்கிற பசங்க அவனை அவ்வளவு கேவலமா பேசுறாங்களாம்... அவங்க பிரெண்ட்ஸ் பேரன்ட்ஸ் இவனோட சேரவே கூடாதுன்னு சொல்லுறாங்களாம்... வீட்ல வந்து ஒரே அழுகை, பிரபுவும் அவங்க கம்பெனில தலைகாட்ட முடியலை... எதுவுமே வேணாம்ன்னு எழுதிக் கொடுத்துட்டு ஊரைவிட்டே போய்ட்டாங்க.. அங்கே போன இடத்திலேயும் எப்படியும் உங்க பசங்கன்னு அங்கேயும் அவங்களுக்கு யாரும் அட்மிஷன் கொடுக்க முன்வரல... அப்புறம் என்ன செய்ய முடியும்?? பகல் முழுக்க உன் புருஷனும் ரெண்டு பசங்களும் தீப்பெட்டி பேக்டரியில் தீக்குச்சி அடுக்குறாங்க, நைட் முழுக்க அந்தப் பசங்களுக்கு அவனுக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுக்கிறான் பிரபு... பத்தாவது டுடோரியல் காலேஜ்ல பிரைவேட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி எப்படியாவது உன் முன்னாடி அந்தப் பசங்கள வாழ வச்சிடணும்னு வைராக்கியத்தோடு இருக்காராம் பிரபு... இதெல்லாம் யாரால சத்யா?? உன்னோட சுதந்திரத்தை தடை செய்யணும்ங்கறதோ சோசியலி ஆக்டிவா இருக்கிறதை குறை செய்யனும்கிறதோ பிரவுவோட எண்ணம் இல்லையே!! அப்புறம் எதுக்காகக் குடும்பம் அப்படிங்கிற ஒரு அழகான கட்டமைப்பை உடைத்துட்டு வெளியே வந்த?? பிரபு மேல எந்தத் தப்பும் இல்லையே!! அப்படி இருக்கிறப்போ அவனுக்கும் உன் குழந்தைகளுக்கும் ஏன் இப்படி ஒரு தண்டனை?? அதுதான் யோசிச்சு பாக்குறப்போ ரொம்ப மனசு வெம்பிப் போகுது... உன்னோட சுயநலத்துக்காக இங்கே பல பேரை நோகடித்து இருக்கிற... அது உனக்குப் புரியலை, ஓகே.. உனக்கான பாதையை அதுவா இருந்தா நீ போய்க்கிட்டே இருக்கலாம்...”

“மிஸ்டர்.மூர்த்தி உங்களுக்கும் அதுதான்... இன்னைக்கு வேணா நீங்க பெரிய ஸ்டாரா இருக்கலாம் ஆனா உங்க பிள்ளைங்களோட மனசு யோசிச்சு பாருங்க.. உங்களுக்குப் பெண் குழந்தைங்க இருக்காங்க.. நீங்க பேசுற அசிங்கமான விஷயங்கள், அதோட அர்த்தம் அந்தப் பிள்ளைகளுக்கு விளங்கினா என்ன ஆகும்?? முதல்ல உங்க மேல இருக்கிற மரியாதை குறையும், இந்தச் சொசைட்டி மேல இருக்கிற வெறுப்பு அதிகமாகும்.. உங்கள சுத்தி இருக்கிறவங்க இதுக்கான அர்த்தம் புரிஞ்சி, அதனால் வர்ற வெறுப்பை அந்தப் பிள்ளைங்க மேல காட்ட ஆரம்பிச்சா??? அவங்க அதைத் தாங்கிப்பாங்களா?? இங்கே எல்லாரும் ஒரு விஷயத்தையும் யோசித்துப் பார்க்கலாம்.. எதுவும் நிரந்தரமில்லை, நாம வாழ்ந்துட்டு இருக்கிற இந்த வாழ்க்கை நிரந்தரம் கிடையாது.. இந்த நிமிஷம் உயிரோட இருக்குற நாம அடுத்த நிமிஷம் இருப்போமா என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.. அப்படி இருக்கிறப்போ இந்த அற்பப் புகழ் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்காக ஏன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு, இங்க அடுத்தவங்களோட கவனத்தை ஈர்க்கனும் அப்படிங்கிற ஒரு குறிக்கோளுக்காக ஏன் உங்கள சுத்தி இருக்கிறவங்கள நோகடிக்கிறீங்க?? இந்த ஒரே ஒரு கேள்விதான் எல்லாருக்குமே... ஏதோ ஒரு விஷயத்தில், ஏதோ ஒரு புள்ளியில் எல்லாரும் தன்னை வியந்து பார்க்கணும்; எல்லாருடைய கவனமும் தன் மேல் திரும்பணும் அப்படிங்கிற ஆசையிருக்கும் தான்... அதை நான் இல்லைன்னு சொல்லலை... ஏன் எனக்குமே ஒரு காலத்தில் இருந்த ஆசை இருந்தது, இப்போதும் இருப்பது தான்... ஆனா இப்படியான காரியங்களில் இறங்குறது ரொம்பவே தப்பான விஷயம்.. நான் பல பேசலாம், ஆனா மாற்றம் உங்களோட அடிமனசில் வரணும்... மாற்றம் என்கிறது நான் இப்ப அரை மணி நேரத்துக்கு அட்வைஸ் பண்ணின உடனே உங்க மனசுல தோணுறது கிடையாது.. அது ஒரு ப்ராசஸ்... நாட் எ ஈவென்ட்... ஒவ்வொன்னா உங்க மனசுக்குள்ள அது தோன்றும்... தோன்றினால் நீங்க மனுஷங்க, உங்களுக்குள்ள அந்த ஈரம் இருக்குது.. இல்லைனா உங்களுக்கு இதோ இந்த மாய உலகம்தான் முக்கியம்... அப்படினா... அதுக்கு மேல உங்க இஷ்டம்...”: என ஜெனிதா பேசி முடிக்க அனைவரும் தங்களுக்குள் வெதும்பி, தாங்கள் செய்த செயல்களுக்காக வருந்தி, மனங்கசந்து அழத் தொடங்கினர்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

31

தங்களைத் தாங்களே நொந்து மனம்வருந்திக் கொண்டிருந்தவர்களின் நிந்தனையை அதிகரிக்க ஆசை கொண்டாள் போலும் ஜெனிதா!!

“அப்புறம்... இன்னொரு விஷயம் சொல்ல ஆசைப்படுறேன்!!! அதைக் கேட்டா இன்னும் குளுகுளுன்னு இருக்கும்...” எனப் பேசத் தொடங்கினாள். அவளுக்குச் சாம்பிராணி போடும் நோக்கில் ஜுபினும், “குளுகுளு வெண்பனி போலே...” எனப் பின்னணி பாடினான்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஹைஃபை செய்து கொண்டவாறே பேசத் தொடங்கினர். “உங்கள்ல எத்தனை பேருக்கு இனியாவைத் தெரியும்??” என ஜெனிதா கேட்க, ஏறத்தாழ அனைவருமே, “தெரியும்...” என்பதாகத் தலையசைத்தனர்.

“ஓகே... குட்... அப்போ ரொம்ப வசதியாப் போச்சுது...” என்றவள், “அல்மோஸ்ட் எல்லாருக்கும் இனியாவை தெரியும்ன்னு நெனைக்கிறேன்... உங்கள்ல நெறைய பேருக்கு அவங்க ஒரு முன்னுதாரணமா, முன்னோடியா இருந்திருக்கிறதுக்குக் கூட வாய்ப்பிருக்குது.. தெரியாதவங்களுக்காகக் கொஞ்சம் சொல்றேன்.. கேட்டுக்கோங்க... ஆரம்பக் காலத்துல இந்த ஆப்ல வீடியோ போட்டுட்டு இருந்தவங்க தான் இனியா... அதே மாதிரி இந்தச் சோசியல் மீடியா தளத்துல இருந்து வெள்ளித்திரைக்குப் போறதுக்கு வாய்ப்பு கிடைச்சவங்க அவங்கதான்... அந்தப் பொண்ணும் மிடில் கிளாஸ்ல பொறந்து, பல கனவுகளோட வைராக்கியமா படிச்சு வேலைக்குன்னு வெளியே வந்த பொண்ணுதான்.. எதேச்சையா இந்த ஆப்புக்குள்ள வந்து தனக்குத் தானே ஆப்பு வச்சிக்கிட்டாங்க... ஆரம்பத்துல நல்ல வரவேற்பு கிடைச்சதும் இவங்க அப்கிரேட் ஆக நெனச்சாங்க... சினிமாவுக்குப் போறதுக்கான பாதைகள் எவ்ளோ கஷ்டமா இருக்கும்ன்னு தான் எல்லாருக்குமே தெரியுமே!! அதேதான் இவளுக்கும் நடந்துச்சு... ஆனா இவளுக்கு எப்படியாவது வாய்ப்பை வாங்கியே ஆகணும்ன்னு வைராக்கியம்... அதைத் தக்க வச்சிக்கிறதுக்காகக் கவர்ச்சியா வீடியோ போட ஆரம்பிச்சு, இப்போ விபச்சார வழக்கிலே அரெஸ்ட் ஆகியிருக்கிறா... இதோ இங்கே நிக்கறாங்களே.. ரவுடி பேபி சத்யா மேடம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒழுக்கம் பத்தி பக்கம் பக்கமா பேசிட்டு இருந்தாங்களே.. அவங்களும் இனியாவும் பேசின ஆடியோ லீக் ஆச்சுதே... சிங்கப்பூருக்குப் போறாங்களாம், அங்கே தங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு மூணு லட்சமாம்... இதை ஒரு பிரபல தொலைக்காட்சி ஒலிபரப்பு பண்ணியிருக்கிறாங்க... எவ்வளவாய் நம்ம சமுதாயம் சீரழிஞ்சு கிடக்குதுன்னு பாருங்க... சரி, இந்தப் பொண்ணு அவ சுய விருப்பத்தோட தான் இதையெல்லாம் பண்ணுனா, யாரும் அவளை வற்புறுத்தலைன்னு வச்சிக்கலாம்.. அவ அப்பா அம்மாவோட நிலைமை என்ன?? தன் பொண்ணை நல்லபடியா படிக்க வச்சு, அவளுக்குச் சகல வசதியும் செஞ்சு கொடுத்து, நல்ல ஒரு பொறுப்புல உக்கார வைக்கிற அளவுக்குச் சிலுவை சுமந்திருக்கிறாங்க... ஆனா அது எதையுமே உணராம விட்டேத்தியா திரிஞ்சா என்ன அர்த்தம்?? இதோ இங்கே நிக்கிற இனியான்னு மட்டுமில்ல, ரவுடி பேபின்னு மட்டுமில்ல... என்னால ஆயிரம் மூர்த்திகளைக் காட்ட முடியும், ஆயிரம் இனியாக்களையும் ஆயிரம் ரவுடி பேபிக்களையும் காட்ட முடியும்... ப்ராங்க்ஸ்ங்கற பேர்ல பைத்தியக்காரத்தனமா சுத்திட்டு இருக்கிற லட்சம் பேரை என்னால காட்ட முடியும்... இவங்களைச் சுத்தி இருக்கிறவங்க, அவங்களோட நிலைமையை யாராவது பேசியிருக்கிறாங்களா?? ஒருத்தரை மாத்தி ஒருத்தர் பார்த்து வீடியோஸ் போட ஆரம்பிச்சு இப்படிச் சீர்கெட்டுப் போக வழிவகுத்து இருக்கிறதை யாராவது காட்டியிருக்கிறாங்களா?? இதைப் பார்க்கிறவங்களுக்கு மனசளவுல ஏற்படுற பாதிப்புகள், தீய விளைவுகள் பத்தியாவது யாராவது என்னைக்காவது திங் பண்ணி பார்த்திருக்கிறீங்களா?? அட்லீஸ்ட் நாம பார்க்கிற தீய விஷயங்கள் நம்ம மைண்ட்ல ஸ்டோர் ஆகி இருந்து, உடம்பு முழுக்க நெகட்டிவ் வைப்ரேஷன் ஸ்ப்ரெட் பண்ணும் அப்படிங்கிறதாவது தெரியுமா உங்களுக்கு??” என ஜெனிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் அவர்கள் முன் வந்து விழுந்தான்.

அனைவரும் பதறிக் கொண்டு அவனை எழுப்பப் போக, “எல்லாரும் இங்கிருந்து ஓடிப் போங்க... நான் இங்கே பாம் வச்சிருக்கிறேன்..” எனக் கூறவும் அனைவரும் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்க, “பயந்துட்டீங்களா?? ஹா ஹா... சும்மா... எல்லாரும் அங்கே கேமிரா பாருங்க...” என்றான் அவன்.

அனைவரும் அவனை ஒருசேர முறைக்க, கூட்டத்தில் ஒருவர், “ஹப்பாடா... நான்கூடப் பயந்துட்டேன்... ஒருவேளை நீ இங்கே நிஜமாவே பாம் வச்சிருந்து, நாமல்லாம் இங்கேயிருந்து ஓடிப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டா இந்த வீடியோ கிடைக்காதேன்னு பயந்துட்டேன்...” என நிம்மதிப் பெருமூச்சுடன் குறிப்பிட, “இவங்கள்லாம் எவ்ளோ பேசினாலும் எத்தனை வீடியோ போட்டு மூச்சு முட்ட முட்ட அட்வைஸ் பண்ணினாலும் மாறவே மாட்டாங்க மேடம்... AS வைரஸ் அந்த அளவுக்கு உடம்பு முழுக்கப் பெருகி, பரவி, ஊறிப் போய் இருக்குது...” என ஜெனிதாவின் காதில் கிசுகிசுத்தான் ஜுபின்.

“ஆமா ஜுபின்... நானும் போனாப் போகுதுன்னு பார்த்தேன்.. இதுக்கு மேல சரிப்பட்டு வராது... நம்ம பிரதம மந்திரி சொன்னதைச் செஞ்சிட வேண்டியதுதான்...” என அவள் கூற, “என்ன சொன்னாரு மேம்?? தளபதி சொன்ன மாதிரி ‘நையப்புடை’யா?? நம்ம பசங்க லத்தி வச்சிருக்கிறாங்க... நான் வேணும்ன்னா எடுத்துட்டு வர சொல்லவா??” என ஆர்வமாக அங்கிருந்து புறப்படுவதற்கு எத்தனித்தான் ஜுபின்.

“அட! இருங்க ஜுபின்... நீங்க வேற கிளாஸ் லீடர் பிரம்பை எடுத்துட்டு வர்றதுக்கு ரெடியா நிக்கிற மாதிரி ஓடுறதுக்கு அவசரப்படுறீங்க?! இதோ.. நம்ம ப்ராங்க் திலகம் சொன்னாரே!! அவர் ஆசைப்பட்டுச் சொன்னதை அப்படியே இம்ப்ளிமென்ட் பண்ணிடலாம்.. இவ்ளோ தூரம் நான் தொண்டை தண்ணி வத்த கத்துனதுக்கு எந்தப் பலனுமே இல்லைன்னு இவரோட செயல் காட்டிருச்சு... ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்ற மாதிரி இங்கே இருக்கிற எல்லாரும் அல்மோஸ்ட் இதே நிலைமையில் தான் இருப்பாங்கன்னு தோணுது... இப்போ வேணும்ன்னா இப்போ அழுது கத்திட்டு இருக்கிறாங்க.. இதுவே வெளியே போனா அடுத்த அஞ்சாவது நிமிஷம் இதையும் ஒரு கன்டென்ட் ஆக்கிடுவாங்க... அந்த அளவுக்கு இவங்க மூளை துருபிடிச்சு கிடக்குது... நல்ல வேளையா நான் ஓவர் எமோஷனலாகி பிரிப்பர் பண்ணிட்டு வந்த டயலாக் எல்லாத்தையும் பேசி எனர்ஜியை வேஸ்ட் பண்ணலை...” எனச் சுய ஆசுவாசம் செய்து கொண்டவாறே அங்கிருந்த தூணில் சாய்ந்தாள்.

அங்கிருந்த அனைவரும் கதறி அழுது கொண்டிருக்க, சுற்றி வேலியாக நின்று கொண்டிருந்தனர் நாதன் உட்பட அனைத்து காவலர்களும். அவர்களின் அழுகை ஜுபினின் நெஞ்சைப் பிழிந்தது. வெண்ணிலா முதலிய அனைவரும் தாங்கள் செய்த தவறுக்காக மனங்கசந்து அழுவதைப் பார்த்தவன் அவர்களுக்காகப் பரிந்து பேச ஜெனிதாவை அணுக எத்தனிக்கையில் அவர்களை நோக்கி வந்தனர் நாதனும் இதர காவலர்களும்.

கைது செய்திருந்த நபர்களின் அழுகையைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்த ஜெனிதாவின் காதருவே வந்த முகுந்த், “என்ன மேடம்?! இவங்க இப்படியெல்லாம் ஃபீல் பண்றப்போ ஃபீலிங்கா இருக்குதா?? கழிவிரக்கம் பிறக்குதா?? உங்களோட மிஷன் சக்சீட்ன்னு மனசு ஆனந்தக் கூத்தாடுதா??” என அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, ஜெனிதாவிற்குப் பதிலாக, “ம்ம்ம்... ம்ம்ம்...” என மேலும் கீழும் தலையாட்டினான் ஜுபின்.

“சார்ர்ர்... நீங்களா??” என முகுந்த் ஆச்சரியமாக அவனைப் பார்க்க, அவனருகே வந்து நின்றான் நாதன். “சார்... இவ்ளோ ஃபீல் பண்றீங்களே! ஒரு நிமிஷம்... ஒரே ஒரு நிமிஷம்... அந்தப் பிங்க் கலர் புடவை கட்டியிருக்கிற அம்மாவை ஃபோக்கஸ் பண்ணுங்க...” என அவன் சுட்டிக்காட்ட, குறிப்பிட்ட அந்தப் பெண்ணைப் பார்த்தான் அவன்.

சுட்டப்பட்ட அந்தப் பெண், தரையில் மண்டியிட்டு அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். பார்ப்பவர் எவராயினும் அவள்பால் இரக்கம் சுரந்து, இதயத்தில் குருதியனைய கண்ணீர் வழிவது உசிதம். ஆனால் நாதனோ நெடுந்தொடரில் வரும் அழுகைக் காட்சியைப் பார்ப்பதைப் போலச் சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்த ஜுபின், “கொஞ்சமாவது இரங்குறானா பாரு... கல்நெஞ்சக்காரன்..” என மனதிற்குள் திட்டியவாறே கண்களைத் துடைத்துக் கொள்ள, “ஐயா ஜுபின் அவர்களே... அந்த அம்மா திரும்பி நிக்கிற திசையை நோக்கி கொஞ்சம் பாருங்க..” என்றான் நாதன்.

அவன் கூறிய திசையைச் சீர்தூக்கிப் பார்க்க, அது அவர்கள் குறிப்பிட்ட கேமிரா இருக்குமிடம். அதாவது, அங்கே நடப்பவற்றைப் பதிவு செய்து அனைவருக்கும் ஒரு நகல் அனுப்பி விடுவதாக ஜெனிதா கூறிய அந்த நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகப் பொருத்தப்பட்டிருந்த கேமிரா அது.

“அடப்பாவிகளா!!” என வாயில் கைவைத்த ஜுபின் நாதனைப் பார்க்க, “ஹ்ம்..” எனத் தோளைக் குலுக்கினான் அவன். அதன்பின்னர் அவன் நுணுக்கமாகப் பார்க்க, கிட்டத்தட்ட அனைவருமே ஏதோவொரு கோணத்தில் அந்தக் கேமிராவை நோக்கியே தங்களது செய்கைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

“அப்போ.. யாருமே நெஜமா அழலையா?? இதைக் கூடகன்டென்ட் ஆக்குற மனநிலையில தான் இருக்கிறாங்களா??” என ஆச்சரியமாகப் பார்த்த ஜுபின், ஜெனிதாவை நோக்க, “அதான் அப்பவே சொன்னனே ஜுபின்... இந்த AS வைரஸ் அவ்ளோ சீக்கிரம் எல்லாம் சரியாகிடாது... மூளையில ஏதோ ஒரு மூலையில பதுங்கிக் கிடந்து சாகுற வரைக்கும் நம்மை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணிக்கிட்டே தான் இருக்கும்... கிட்டத்தட்ட கேன்சர் செல் போல... அதனால இவங்கள இப்படியே விடுறது சரியில்லை.. இவங்க வெளியே போனா திரும்பவும் அதையே செஞ்சு, இன்னும் பல பேரை இதே மாதிரி செய்யுறதுக்குத் தூண்டுவாங்க, பல பேரோட சிந்தையைச் சீரழிப்பாங்க... அதனால இவங்க எல்லாரையும் இங்கேயே ஒரே இடத்துல வச்சு அனுப்பிடலாம்..” என உறுதியாகக் கூறினாள் அவள்.

“அச்சோ!! மேடம்.... என்ன பேசறீங்க?? ஒரு உயிரை எடுக்கிற அனுமதியை உங்களுக்கு யார் கொடுத்தது?? இவங்க தப்பு பண்ணியிருக்கிறாங்க தான்.. ஏதோ ஒரு சூழ்நிலையில அடுத்தவங்களோட புகழுக்கும் பாராட்டுக்கும் ஆசைப்பட்டுத் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறாங்க தான்... ஆனா... ஆனா அதுக்காக இவ்ளோ பெரிய தண்டனை தரணுமா?? இவங்களுக்குக் கவுன்சலிங் கொடுக்கலாம் மேம்... நிச்சயமா எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு மாறிடுவாங்க...” என ஜுபின் பேச, குறுக்கிட்டான் நாதன்.

“நீங்க சொல்றது சரிதான் சார்... நிச்சயமா புரிஞ்சிக்குவாங்க... மாறிட வாய்ப்புக் கொஞ்சம் கம்மிதான்... சரி, மாறிடறாங்கன்னே வச்சுக்கலாம்... ஆனா அந்தக் கவுன்சலிங் முடிச்சதுக்கு அப்புறம் வெளியே இந்தச் சொசைட்டிக்கு தானே வந்தாகணும்... இவ்ளோ நாள் இந்த ஆப்பை பயன்படுத்தின அதே இடத்துக்குத் தானே வரணும்? ஒருவேளை அவங்க கவுன்சலிங் முடிச்சிட்டு வர்ற அந்தக் குறுகிய காலகட்டத்துக்குள்ள நீங்க எந்திரன் 2.0 ‘பட்சி’ மாதிரி உருமாறி எல்லாரோட ஃபோனையும் பிடுங்கி அழிக்கப் போறீங்களா என்ன??” என நாதன் கேட்க, அந்தக் குழுவில் இருந்த அனைவருமே சிரித்து விட்டனர்.

ஜுபின் அவனை முறைத்துப் பார்க்க, “அவன் சொல்றது சரிதான் சார்... சிரங்கன் சும்மா இருந்தாலும் அவன் கை சும்மா இருக்காதுன்னு ஊர்ல சொல்ற பழமொழி மாதிரி அவங்களே மாற நினைச்சாலும் சுத்தி இருக்கிற விஷயங்கள் அவங்களை மாற அனுமதிக்காது... உதாரணமா ரோட்டுல நடந்து போனா நீங்க அவங்க தானே, நீங்க இவங்க தானேன்னு கேட்பாங்க... எல்லாரையும் நாம கட்டுப்படுத்தி வைக்க முடியுமா என்ன?? அடுத்தவங்க மொபைல் யூஸ் பண்றதைப் பார்க்கிறப்போ இவங்களுக்கு அதைப் பயன்படுத்தணும்ன்னு ஆசை வரும்.. இப்போ வாழ்வின் ஒரு அங்கமா, அத்தியாவசியமானதா ஆகிருச்சு மொபைல்... சோ யூஸ் பண்ண ஆரம்பிப்பாங்க.. இவங்களுக்கும் பழைய மாதிரியே பண்ணனும்ன்னு ஆசைவரும்... உள்ளுக்குள்ள இருக்கிற AS வைரஸ் தன்னோட வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்... அப்புறம் என்ன?? திரும்பப் பழைய குருடி கதவைத் திறடின்னு ஆரம்பிச்சிடுவாங்க... இதுதான் நடக்கும்ன்னு நான் ஏன் இவ்ளோ ஷ்யூரா சொல்றேன்னா இப்போ இங்கே நடந்துட்டு இருக்குதே அதுதான் அதுக்கான ட்ரெயிலர்... ஏன்னா இவ்ளோ பேசியும் அகைன் கேமிராவை தானே பார்த்துட்டு இருக்கிறாங்க... உடம்புல இருக்கிற அத்தனை செல்லிலேயும் அந்த AS வைரசோட தாக்கம் இருக்குது... அது அவ்ளோ ஈஸியா இவங்களை விடவும் விடாது, விட்டுட்டுப் போகவும் செய்யாது... நீங்க பெருசா யோசிக்காதீங்க சார்... ஜஸ்ட் கேஷுவலா எடுத்துக்கோங்க...” என ஜுபினின் தோளில் கைவைத்தான் முகுந்த்.

ஆனாலும் அவன் மனம் அந்தக் காரியத்திற்கு உடன்படவில்லை. ஒருவித தயக்கத்துடனே நின்று கொண்டிருந்தான்.

இப்போது வினித் பேசத் தொடங்கினான். “சார்... நான் உங்க அளவுக்கெல்லாம் படிக்கலை, அவ்ளோ பெரிய அறிவாளியும் இல்லை... எனக்குத் தோணினதை சொல்றேன்... ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஏதோ ஒரு மேகஸின்ல ஒரு உண்மை சம்பவத்தைக் கதையா படிச்சேன்.. அது என்னன்னா அமெரிக்காவுல ஒரு இடத்துல பாலம் வேலை நடந்துட்டு இருந்துச்சாம்... வேலை கிட்டத்தட்ட முடியப் போற சூழல்... இன்னும் இரண்டு வரிசை தளம் போட்டுட்டா வேலை முடிஞ்சிடும்... எல்லாரும் ஒருத்தனை பொறுப்பா வேலையை முடிக்கச் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.. அவனும் ஒருநாள் ராத்திரி தானே, என்ன ஆகிடப் போகுதுன்னு பொறுப்பில்லாம அப்படியே விட்டுட்டு வீட்டுக்குப் போயிட்டான்.. அன்னைக்கு ராத்திரி அந்த வழியா ஒரு ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிட்டு வந்திருக்கிறான்... பாலம் முடிக்காம இருந்ததால அந்தப் பாலம் உடைஞ்சு அவன் செத்துப் போயிட்டான்.. அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க.. அவன் இறந்ததுக்கு அப்புறம் பணத் தேவைகளுக்காகவும், கடன் பிரச்சனைகளுக்காகவும் அவங்க விபச்சாரத்தில் விழுந்தாங்க.. அவங்களால பல குடும்பங்கள் சிதைஞ்சு, சீரழிஞ்சு போச்சுதுன்னு... இத்தனைக்கும் இதிலே ஒருத்தனோட கவனக் குறைவுதான்... இப்போ நான் சொல்ற கதைக்கும் நடந்துட்டு இருக்கிற விஷயத்துக்கும் சம்பந்தமில்லாம இருக்கிற மாதிரி தோணலாம்... ஆனா அதோட மையக்கருத்து ஒண்ணே ஒண்ணுதான்... ஒருத்தர் செய்யுற தவறு நேரடியாவோ மறைமுகமா பல பேரோட நிம்மதியையும் வாழ்க்கையையும் அசைச்சுப் பார்க்கும்..”

“சார்... இப்போ இவங்களை விடுறதுல ஒரு பிரச்சனையுமில்லை... இவங்களால் ஏற்படுற மோசமான விஷயங்களும் ஒரு மேட்டர் இல்லை... ஆனா இவங்களுக்கு எதாவது தண்டனை கொடுத்தா அது பல பேருக்கு ஒரு அபாய மணியா இருக்கும், தங்களைத் தாங்களே திருத்திக்க வாய்ப்பா அமையும்... தப்பு, பண்ணாதீங்க, மாறுங்கன்னு அறைகூவல் விடுத்தா மட்டும் போதாது சார்... இங்கே பலருக்கு எல்லாத்துக்கும் ஒரு எவிடென்ஸ், ஒரு கண்கூடா தெரியுற ஒரு விஷயம் தேவை.. அப்படி நாம இவங்களுக்குக் கொடுக்கப் போற தண்டனையையும் இவங்க முடிவையும் பார்த்து அடுத்து வீடியோ ரெகார்ட் பண்றதுக்கே கையெல்லாம் பதறனும்.. அந்த மாதிரி மாஸான தரமான சம்பவத்தைத் தான் நாங்க எதிர்பார்க்கிறோம்...” என நாதன் கூற சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினாள் ஜெனிதா.

அங்கிருந்த அனைவருமே அவளைப் பார்க்க, “எல்லாரும் அவங்க அவங்க இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கோங்க... இந்த இடமே இப்போ வெடிச்சு சிதறப் போகுது...” என வில்லத்தனமாகப் பேசினாள் அவள்.

சற்று முன்னர்தான் இன்னொருவனும் அதைக் கூறி பயமுறுத்தி இருந்ததால், “சும்மா புலி வருது, புலி வருதுன்னு சொல்லாதீங்க மேம்... இதுவும் ப்ராங்க் தானே...” என்பதாகப் பார்த்தனர் அனைவரும்.

அவளது குழுவினர் அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் நோக்க, விண்ணதிர சிரித்தவள் “லெட்ஸ் டூ தி சம்பவம் பேபி...” என அங்கிருந்த கேமிராவைப் பார்த்துக் கண்ணடிக்க, அந்த இடமே வெடித்துச் சிதறியது; ஜெனிதா உட்பட அனைவருமே தீக்கிரையாகி சாம்பலாகினர்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஊரார் அனைவரும் ஒருவரையொருவர் பதற்றத்தில் நோக்கிக் கொண்டிருக்க, அந்தக் குறும்புக்கார பெரியவர் எழுந்து கொண்டார். “அதான் படம் முடிஞ்சிருச்சுல்லா... போங்க... போங்க... போய்ப் பொழைப்ப பாருங்க.. இன்னும் இதை மாதிரி நூறு படம் போட்டாலும் யாரும் திருந்த போறதில்ல... என்னத்தைப் போட்டு உக்கார்ந்துக்கிட்டு... ஆளாளுக்கு வீட்டுக்குப் போய் உறங்குங்க... காலையில உங்க வீட்டுல இருந்து பிடிச்சிட்டுப் போன ஆளுவளை எல்லாம் கொண்டந்து விட்டுருவாவ... அப்புறம் எல்லாரும் ஒண்ணா உக்கார்ந்து அந்தப் போன் டப்பாவையே கட்டிக்கிட்டுக் கிடந்தது அழுங்க...” என அனைவரையும் அங்கிருந்து விரட்ட முற்பட, “ஐயா... இன்னும் படம் முடியலைன்னு நினைக்கிறோம்... என்னதான் முடிவுன்னு உக்கார்ந்து பார்த்து தெரிஞ்சிட்டு போவோம்...” என அனைவரும் ஆர்வமாகத் திரையில் கவனத்தைப் பதித்துக் காத்திருந்தனர்.

“ஏன் உங்களுக்கு இந்த முடிவு பத்தாதா??? மூச்சுவிடாம பேசணுமாக்கும்?! பேசுனா மட்டும் திருந்தவா போறிய? திரும்பவும் போய் அந்தப் போனையே நொட்டு நொட்டுன்னு தட்டிக்கிட்டு அந்தக் கிங்காங் வீடியோவை தான் பார்க்கப் போறிய.. அப்புறம் எதுக்கு?? அதான் அவிய தெளிவா காமிச்சு இருக்காவல்லா... இன்னும் என்னவாம்?? நீங்க வேணும்ன்னா உக்கார்ந்து பார்த்துட்டு வாங்க... எனக்கு இப்பவே திருப்தி கிடைச்சிருச்சு... நான் போறேன்...” என அவர் அங்கிருந்து நகர எத்தனிக்க, மீண்டும் திரையில் தோன்றினாள் ஜெனிதா.
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

32

ஜெனிதா திரையில் தோன்றவும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“அந்தக் காலத்துலலாம் எம்.ஜி.ஆர் ஸ்கிரீன்ல வரும் போது நாங்க இப்படித்தான் கைதட்டி கூச்சல் போடுவோம்... துண்டுவேட்டியில பூவை வச்சிக்கிட்டு அவரைக் காட்டினதும் தூவுவோம்...” எனத் தன் பேரனிடம் குறிப்பிட்டார் முதியவர் ஒருவர்.

“என்ன மக்களே!! பயந்துட்டீங்களா?? இல்லை செத்து போன பிள்ளை உயிரோட வந்துருச்சேன்னு நெனைச்சு சந்தோஷமா இருக்கிறீங்களா??” என அவள் பேச, உண்மையாகவே அவள் காணொளி அழைப்பில்தான் வந்துவிட்டாளோ என ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டனர்.

அதற்கும் பதிலளிக்கும் விதமாக அவளே தொடர்ந்தாள். “பயப்படாதீங்க... நான் வீடியோ கால்ல எல்லாம் வரலை... இதுவும் ரெக்கார்ட் தான்... எல்லாரும் படத்தை முழுசா பார்த்திருப்பீங்கன்னு நம்புறேன்... ஹா ஹா.. படத்தை முழுசா பார்த்தா மட்டும்தான் இந்த வீடியோவை ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கிறேனே... பின்ன வெறும் கருத்தை மட்டுமே சொல்லிட்டு இருந்தா நீங்க எல்லாம் பார்ப்பீங்களா என்ன?? தெறிச்சு ஓடிட மாட்டீங்க..” என அவள் சற்றே கேலியாகக் குறிப்பிட, “தாயி.... நீ என்ன சொன்னாலும் காது கொடுத்து கேப்போம் மா... அதான் இவ்ளோ நேரம் எல்லாரோட வாழ்க்கை வரலாற்றையும் துகிலுரிச்சு காட்டினியே... இதுக்கு அப்புறமும் கேக்காம இருப்போமா??” என்றார் அமர்ந்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர்.

அதையும் அவள் முன்னரே அனுமானித்திருப்பாள் போலும். அதற்கும் முன்னெச்சரிக்கையாகப் பதிலிறுத்தாள் காணொளியில். “என் இனிய தமிழ் மக்களே!! நீங்க இவ்ளோ தூரம் பில்டப் பண்ற அளவுக்கு நான் எதுவும் பண்ணிடலை... நான் ஜஸ்ட் எழுதிக் கொடுத்ததைப் பேசி நடிச்சேன்.. அவ்ளோதான்... டோன் மட்டும் தான் என்னுது.. போன் எல்லாம் வேற ஒருத்தங்களோடது... சும்மா சும்மா... ஜஸ்ட் ஃபன்... இந்த இடத்துல உங்க எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்... ஏன்னா இவ்ளோ பொறுமையா மொத்த படத்தையும் உக்கார்ந்து பார்த்திருக்கிறீங்க... ஒரு கலைஞனா அது எனக்கு ரொம்பப் பெரிய சந்தோசம் ரொம்ப நன்றி!! பல பல கதாபாத்திரங்களா வாழ்ந்த எல்லார் சார்பா நான் நன்றியை சொல்லிக்கிறேன்...” என ஜெனிதா கூறவும், அந்தத் தொடரில் நடித்திருந்த அத்தனை பேரும் கைகூப்பித் தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்தவள் “இந்தப் பாராட்டுக்கு எல்லாம் உரித்தான ஆள் மின்மினி... அவங்க தான் இந்தப் படத்தோட இயக்குநர்.. இந்தக் கான்செப்ட், ஸீன்ஸ் எல்லாமே அவங்களே வடிவமைச்சது... இப்போ அவங்க உங்ககிட்டே சில வார்த்தைகள் பேசுவாங்க...” என அருகில் நின்று கொண்டிருந்த மின்மினியை புன்முறுவலுடன் அறிமுகம் செய்தாள்.

இயக்குநருக்கான எந்தவித அலட்டல்களுமின்றி மிக எளிமையாகவே நின்று கொண்டிருந்தாள் மின்மினி. எப்போதும் உயர்ந்தோர் புற அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் தந்து நேரத்தை விரயமாக்குவது இல்லையாம். உதாரணத்திற்குக் காந்தி, அப்துல் கலாம், காமராஜர், கக்கன் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

போகட்டும், இ(ப்போ)து திரைப்படம் வாயிலாக மி(ஒ)ளிர்ந்த மின்மினியின் கீச்சுக்குரல் திக்கெங்கும் ஒலிக்கும் நேரம்...

மெலிதான புன்னகையுடன் மெல்ல முன்னேறி, ஓரடி முன்னால் வந்தவள், ஆரவாரமின்றிப் பேசத் தொடங்கினாள்.

“எல்லாருக்கும் வணக்கம், இவ்வளவு நேரம் பொறுமையா பார்த்ததுக்கு என்னோட சிரம்தாழ்ந்த நன்றி!! இப்படி ஒரு தனிமைப்படுத்தல் காலத்தைப் பிரயோஜனப்படுத்துற விதமா என்னோட தொடர் அமைஞ்சது ரொம்ப மகிழ்ச்சி!! எதுக்காக இந்தச் சீரிஸ்?? அந்தக் குறிப்பிட்ட ஆப் பத்தி தெரியாமலே, யூஸ் பண்ணாமலே எத்தனையோ பேர் இருக்கிறோமே!! ஜஸ்ட் எண்டர்டெயின்மென்ட்டுக்காக யூஸ் பண்ற ஆப், அதோட நன்மை தீமைகள் பத்தி ஏன் இவ்ளோ எக்சாஜிரேட் பண்ணி பேசணும்? அப்படின்னு பல கேள்விகள் உங்களுக்குள்ள தோணி இருக்கலாம்... ஒரு படைப்பாளியா இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்றது என்னோட கடமை... ஏன்னா கிட்டத்தட்ட மூணு மணிநேரம் உங்க எல்லாரோட நேரத்தையும் நான் சாப்பிட்டுருக்கிறேனே.. அதுக்கு இந்தச் சீரிஸ் ஒர்த் தான்னு நான் தெளிவுபடுத்தணும் இல்லையா?? அதுக்காகத் தான் இந்த ஸ்பீச்... நெறைய சொல்லணும்ன்னு தோணுது.. ஆனா அதையெல்லாம் ரொம்ப ஷார்ட்டா பேசுற மாதிரி தான் நோட்ஸ் எடுத்து பிரிப்பர் பண்ணிட்டு நிக்கிறேன்.. ஒருவேளை உணர்ச்சிவசப்பட்டு மடை திறந்த வெள்ளம் மாதிரி பேச ஆரம்பிச்சிட்டா தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா கேளுங்க.. யாரும் பார்வர்ட் பண்ணிட்டு போய்டாதீங்க.. ஏன்னா இந்தச் சீரிஸ்க்கு பின்னாடி அவ்ளோ உழைப்பும் சகிப்புத் தன்மையும் இருக்குது.. அதைத் தான் நான் இப்போ உங்ககிட்டே ஷேர் பண்ணிக்கப் போறேன்...”

“ஆக்சுவலா இந்தக் கான்செப்ட் சில மாதங்களுக்கு முன்னாடி எனக்குள்ளே தோணின கான்செப்ட் தான்... எதேச்சையா யூடியூப்ல ஸ்க்ரோல் பண்ணிட்டு இருக்கிறப்போ ரோஸ்ட், ட்ரோல் அப்படின்னு ரெண்டு வார்த்தைகள் கண்ணுல சிக்கிச்சு... நம்மைப் பொருத்த வரைக்கும் ரோஸ்ட் அப்படின்னா எதையாவது வறுக்கிறது... இங்கே மனுஷங்களை வறுத்து வச்சிருக்கிறாங்க... அப்படி என்னதான் இருக்குதுன்னு உள்ளே போனா அங்கே அவங்க உக்கார்ந்து மத்தவங்களைக் கேலி பண்ணிட்டு இருக்கிறாங்க... ஆக்சுவலா இங்கே அடுத்தவங்களைக் கேலி பண்றது எல்லாமே ஹராஸ்மென்ட், ஈவ்டீசிங்ல சேர்த்தி... ஆனா பப்ளிக்கா ஒருத்தங்களோட பெயர், போட்டோ எல்லாம் போட்டு டீஸ் பண்றது, கலாய்க்கிறது எல்லாமே ஒருவித விசித்திரமா இருந்துச்சு... அதைப் பல பேர் என்கரேஜ் பண்ணி கமென்ட்ஸ் கொடுத்திருந்தாங்க.. சரி, அப்படிக் கேலி பண்றதையும் ஆதரிக்கிற அளவுக்கு அங்கே என்னதான் இருக்குதுன்னு திறந்து பார்த்தா என்னால ரெண்டு நிமிஷத்துக்கு மேல அந்த வீடியோவைப் பார்க்க முடியல... அந்த அளவுக்கு உள்ளே நெகட்டிவிட்டி, முகத்தைச் சுளிக்க வைக்கிற அளவுக்குப் பேச்சு, பாவனை எல்லாமே இருக்குது... வேணாம்டா சாமின்னு வெளியே வந்துட்டேன்... அப்புறமும் அப்பப்போ என்னோட யூடியூப்ல அந்த வீடியோ வரும், ஆனா கண்டுக்காம ஸ்கிப் பண்ணிடுவேன்.. அப்போதான் எதேச்சையா ஒரு விஷயம் கண்ணுல சிக்கிச்சு... ‘கிங்காங்’ பிரபலம் இனியா சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அப்படின்னு... அந்த ஆப்ல அவ்ளோ பேமஸ் ஆகுற விஷயங்கள் இருக்குதான்னு திறந்து பார்க்க ஆரம்பிச்சேன்... உள்ளே போனதுதான் தாமதம், அப்புறம் என்னால வெளியே வரவே முடியல.. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலா அங்கே நடக்கிறதைப் பார்த்துட்டு இருந்திருக்கிறேன்... ஒரு பக்கம் பாட்டுக்கு வாயசைச்சு போடுற கும்பல், இன்னொரு பக்கம் கப்பிளா லவ்ஸ் பண்ற கும்பல், இன்னொரு பக்கம் வாயைத் திறந்தாலே அர்ச்சனை(!) மழை பொழியுற கும்பல்... இப்படிப் பல கும்பல்களும் அதுக்குத் தனித்தனியா ரசிகர் மன்றங்களும் இருக்கிறதைப் பார்த்ததுமே ஒரே ஆச்சரியம்.. அட!! இப்படிகூட ஒரு உலகம் இருக்குதான்னு...”

“இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு தானேன்னு நான் ப்ரீயா விட்டுட்டேன்... அப்புறம் ஒருநாள் தலைவர் மூர்த்தி அவரோட வீடியோ பார்த்தேன்... உண்மையா அவரோட வீடியோவை எல்லாம் பொது இடத்திலே காதிலே ஹெட்போன்ஸ் இல்லாம கேக்கவே முடியாது.. அந்த அளவுக்கு மோசமான வார்த்தைகள்!! ஆனா இதையும் கொண்டாடுறதுக்கு ஒரு கும்பல்!! ‘தலைவரே’ன்னு ஒரு பட்டம்... அப்போ எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்துச்சு... சின்ன வயசுல நான் அம்மாவை ‘வாளா... உக்காருளா...’ அப்படின்னு விளையாட்டுத்தனமா சொல்லிட்டாக் கூட வாயிலே மிளகாய்ப் பொடியைத் தேய்ச்சுப் பனிஷ் பண்ணுவாங்க... கிட்டத்தட்ட எல்லார் வீட்டிலேயும் இதே நிலைமைதான் இருந்திருக்கும்ன்னு நம்புறேன்... அதனாலேயே நாம வளர வளர கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாம இருந்திருக்கலாம்... ஆனா உள்ளே தேக்கி வச்ச வன்மங்களும், ஆழ்மனதின் குரூரங்களும் வெளிப்படுறதுக்குச் சரியான நேரமா மூர்த்தியோட பேச்சு அமைஞ்சிருக்கும்ன்னு நெனச்சிக்கிட்டேன்... அதனால தான் எல்லாரும் அவரை அவ்ளோ ரசிச்சு பார்க்கிறாங்கன்னு புரிய வந்துச்சு...”

“இப்படி இந்த ரசனைக்குப் பின்னதான உளவியல் பத்தி யோசிச்சிட்டு இருக்கிறப்போ தான் இன்னொரு அம்மா அவங்க பையன் கெட்ட வார்த்தை பேசுறதை ரெக்கார்ட் பண்ணி போஸ்ட் பண்ணியிருந்தாங்க... அதைத் திரும்பத் திரும்ப ஷேர் பண்ணியிருந்தது ஒரு கும்பல்.. அப்போ எனக்குத் தோணின விஷயம் மக்கள் தங்கள் மனதின் குரூரங்களை வெளிப்படையா பொதுவில் வெளிப்படுத்த முடியாத போது இப்படி ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திட்டு இருக்கிறாங்க அப்படின்னு...”

“இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோஸ், ஒவ்வொரு கோணங்கள், ஒவ்வொரு உளவியல் சார்ந்த விஷயங்கள்ன்னு அப்பப்போ நான் தெரிஞ்சிட்டு இருக்கிறப்போ எல்லாம் இந்தப் பிரபலங்கள்(!) செய்யுற விஷயங்கள் பத்தி அப்பப்போ நியூஸ்ல, அங்கே இங்கேன்னு எதாவது கேள்விப்பட நேரும்... சரி, என்னவோ பண்ணிட்டுப் போறாங்கன்னு பெருசா எடுத்துக்கலை.. அப்புறம் ஒரு மூணு மாதம் எந்த வேலையும் இல்லாம வீட்டுல இருந்தேன்.. அப்போ ரிலாக்ஸ்க்காக இந்த மாதிரி வீடியோஸ் பார்க்க ஆரம்பிச்சு, அதுவே பெரிய ஸ்ட்ரெஸாக ஆரம்பிச்சுது... இவங்களைப் பத்தியே விஷயங்கள் வரத் தொடங்கினதும், அந்த நெகட்டிவ் விஷயங்களையே என்னோட கேரியரை தூக்கி விடற பாஸிடிவ் விஷயங்களுக்காக யூஸ் பண்ணிக்கலாம்ன்னு நான் பார்க்கிற எல்லாத்தையும் நோட் பண்ணி வைக்கத் தொடங்கினேன்.... அப்படிதான் இந்தச் சீரிஸ்க்கான தாட் ப்ராசஸ் மனசுக்குள்ள உருவாச்சுது... கிட்டத்தட்ட ஒரு மூணு மாதம் கழிச்சு எல்லாத்தையும் திருப்பிப் பார்க்கிறப்போ பல உண்மைகள் எனக்குப் புரிய வந்துச்சு..”

“அதாவது முதல் தப்பு இவங்களோடது இல்லை... இவங்களை இந்த மாதிரி பண்றதுக்கு ஊக்குவிக்கிறவங்களோடது... டிமாண்ட் இருக்கிறதால தானே சப்ளை பண்ணுறாங்க... இந்தச் சொஸைட்டியில டீசன்டா வாழ்ந்துட்டு இருக்கிற பலருக்கும் வேற ஒரு கோணமும் வேற ஒரு முகமும் இருக்குது.. வெளிப்படுத்த முடியாத பல கோபங்களும் குரூரங்களும் இருக்குது... அதுக்கெல்லாம் வடிகாலா இருந்தது இந்த ஆப், அண்ட் அதிலே வர்ற வீடியோஸ்... இங்கே நான் ஒரு ஆப் மட்டும் சொல்லியிருக்கிறதால அந்த ஒரு ஆப்ன்னால மட்டும் தான் மனுஷ குலமே அழிஞ்சு போகப் போற மாதிரி இமாஜின் பண்ணிக்க வேணாம்... ஆக்சுவலி நான் இந்தச் சீரிஸ்ல காட்டினது ஒரு ரெப்ரசென்டேடிவ் மாதிரி.. அவ்ளோதான்.. அதாவது, இங்கே மனுஷ குலத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கிற பல ஆப்(பு)கள் இருக்குதுதான்.. ஆனா எல்லாத்தையும் குறிப்பிட முடியாதுங்கிறதுக்காக ஒண்ணை மட்டும் குறிப்பிட்டு சகல வசதிகளையும் அதனுள்ளே சேர்த்துட்டேன்... அப்புறமா இதிலே காட்டின காணொளிகள் எல்லாமே வெறும் கற்பனை, சித்தரிக்கப்பட்ட காட்சிகள்ன்னு மட்டும் நினைச்சிடாதீங்க... அத்தனையும் அந்த ஆப்ல நான் பார்த்த காட்சிகள்.. இதைவிட உக்கிரமான வீரியமான வீடியோஸ் எல்லாம் இருந்துச்சு... பொதுவிலே காட்டுறதால கொஞ்சம் நாகரீகமான வீடியோஸ் எல்லாம் எடுத்து தொகுத்து உங்களுக்குப் போஸ்ட் பண்ணியிருக்கிறேன்...”

“நீங்க நல்லா கூர்ந்து கவனிச்சா தெரியும், இந்த ‘ரவுடி பேபி’ சத்யா, கண்ணம்மா, வெண்பா, மூர்த்தி இவங்க எல்லாம் யாருன்னு.. நிஜத்துல இருக்கிற கதாபாத்திரங்களைத் தான் நான் பெயர் மட்டும் மாத்தி காட்சிபடுத்தியிருக்கிறேன்... மத்தபடி அவங்களோட மேனரிசம், அங்கே காட்டின அவங்களோட லீலைகள் அத்தனையும் நூறு சதவீதம் அதி சத்தியம்!! பெயர்கள் கூட எல்லாரும் ஈஸியா ஞாபகம் வச்சிக்கிற மாதிரி நீங்க எல்லாரும் விரும்பிப் பார்க்கிற சீரியலில் வர்ற பெயர்கள்தான் வச்சிருக்கிறேன்..”

“அம்மாடி!! நான்தான் அந்த ஆப் யூஸ் பண்ணினதே இல்லையே, எனக்கு இவங்களை எல்லாம் தெரியவே தெரியாதே.. அப்புறம் நான் ஏன் இந்தப் படத்தைப் பார்க்கணும்?? இதை ஏன் ஒரு பெரிய விஷயமா எக்ஸாசிரேட் பண்ணி அலட்டிக்கணும்?? அப்படிங்கற கேள்வி உங்கள்ல எழுந்திருக்கலாம்... அது தப்புன்னு சொல்ல மாட்டேன்... ஏன்னா நாம வீட்டுக்குள்ள பத்திரமா இருக்கிறப்போ ஏன் வெளியே பெய்யற மழையையும் வெயிலையும் குறிச்சு கவலைப்படணும்?? மனுஷனோட இயல்பு அதுதான்... ஆனா ஒரு விஷயம்... இந்தச் சீரிஸ்ல நான் காட்டின எல்லாரும் அப்படி ஒரு சேஃப்பான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தவங்கதான்.. யாரும் வானத்துல இருந்து பொத்துன்னு குதிச்சு வந்து வீடியோவை அப்லோட் பண்ணி எல்லாரையும் கெடுக்களை.. எல்லாரும் நம்மள்ல ஒருத்தரா நம்மளோட வாழ்ந்துட்டு இருக்கிறவங்க தான்.. ஏதோ ஒரு சூழ்நிலையில் எதேச்சையா உள்ளே நுழைஞ்சு, ஒட்டுமொத்தமா தொலைஞ்சு போனவங்கதான்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள், ஒவ்வொரு நியாயங்கள்.. இங்கே நாம் யாரையும் குறை சொல்ல முடியாது...”

“இப்போ என்னோட தரப்பு வாதம் என்ன அப்படின்னா இதெல்லாம் எனக்கு வேணாம், நான் தெரிஞ்சுக்க விரும்பலை அப்படின்னு சொல்ற உங்க வீட்டில இருக்கிறவங்களோ உங்களைச் சுத்தி இருக்கிறவங்களோ இல்லை நீங்களுமோ ஏதோ ஒரு கட்டத்திலே இந்த மாதிரி புகழுக்கு மயங்க மாட்டீங்கன்னு எந்த அளவுக்கு நிச்சயம்??? ஏன்னா மனுஷ மனம் எதிர்பார்த்து ஏங்கி காத்திருக்கிறதே அடுத்தவங்க தர்ற ஆதரவான ஆறுதலான வார்த்தைகளுக்குத் தானே!! அப்படி ஒரு பாராட்டு கிடைக்கிறப்போ எல்லாரும் செய்வாங்க தான்... இந்தச் சீரிஸ்ல நான் சொல்ல வந்தது ஒண்ணே ஒண்ணுதான்... இந்த மாதிரியான விஷயங்களும் நாட்டிலே நடந்துட்டு இருக்குது.. அதையே உலகம்ன்னு நம்பிட்டு இருக்கிற பாதிப் பேர் நம்மளோட வாழ்ந்துட்டு இருக்கிறாங்கன்னு தான்...”

“அதனால தான் அவங்களோட வாழ்க்கையை ஒவ்வொரு ஸ்டெப்பா, ஆரம்பத்திலே இருந்து காட்டினேன்... அவங்க எந்த மாதிரியான ஒரு கம்போர்ட் ஜோன்ல இருந்து இப்படி உள்ளே நுழைஞ்சு அப்புறம் மொத்தமா தங்களை இழந்துட்டு, சுத்தி இருக்கிறவங்களையும் அழிச்சிக்கிட்டு எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறாங்கன்னு... இதே மாதிரி சூழ்நிலை யாருக்கு வேணாலும் வரலாம்.. ஏன்னா அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்ன்னு நிச்சயமில்லாத வாழ்க்கை.. இதிலே நான் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன், எனக்கு இப்படியெல்லாம் நடக்காதுன்னு யாராலேயும் சொல்லிட முடியாது...”

“சரி.. அது போகட்டும்... நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம்... நீங்க நல்லா பார்த்தீங்கன்னா தெரியும்... இந்த மாதிரி குறிப்பிட்ட வீடியோஸ்க்கு வியூஸ் அதிகமா போயிருக்கும்... கேட்டா நான் பார்க்கவே இல்லை, எனக்குப் பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லுவாங்க... அப்போ வியூஸ் தர்றவங்க, லைக் பண்றவங்க எல்லாரும் வேற்றுக் கிரகத்துலே இருந்து வந்தாங்களா?? எனக்கு இந்த விஷயம் புரியவே இல்லை... யாருமே பார்க்கலைன்னா அவங்க ஏன் இந்த வீடியோ போட போறாங்க?? ஒரு பொண்ணு ஷால் போடாம ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுற வீடியோவுக்கும் புடவை கட்டி ஆடுற வீடியோவுக்கும் வர்ற வியூஸ்ல அவ்ளோ வித்தியாசம்! அதுக்காக ஆம்பளைங்கதான் என்கரேஜ் பண்றாங்கன்னு சொல்ல வரலை.. இது இருபாலருக்கும் பொதுவானது தான்.. எல்லாரும் ஏதோ ஒரு வகையில இந்தத் தப்புக்குத் துணை போயிட்டு தான் இருக்கிறோம்... தப்பு பண்றவனை விடத் தப்பு பண்ண தூண்டுறவனுக்கும் அதுக்குத் துணை போறவனுக்கும்தான் முதல்ல தண்டனை தரணும்... நாட்டுல பல பேர் இந்த ரெண்டாவது மூணாவது கேட்டகிரி தான்...”

“ஸ்வீட் கடையிலே கலர் கலரா ஸ்வீட் செஞ்சு அடுக்கியிருக்கிறாங்கன்னு வச்சிக்கலாம்... அது எல்லாமே பார்க்கிறதுக்குச் செம அட்ராக்ட்டிவா இருக்குது, சாப்பிட்டாலும் ரொம்ப டேஸ்டா தான் இருக்கும்... ஆனா அதோட விளைவுகள்??? உடம்புக்குக் கேடு தானே.. அதே மாதிரிதான் கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த விஷயங்கள் பார்க்கிறதுக்கும் நேரம் போக்குறதுக்கும் ரொம்ப நல்லா இருக்கும், நல்லா நேரம் போகும்.. ஆனா அதோட விளைவுகள்?? ரொம்ப மோசமானது... நம்ம மூளையைச் சிதைக்கும், உடம்பு முழுக்க நெகட்டிவிட்டியை தோற்றுவிக்கும்... நம்மளோட அன்றாட வேலைகள்ல அதோட பாதிப்பை ஏற்படுத்தும்... இப்போ இந்த வீடியோக்களையே பார்த்துட்டு இருக்கிற நாம எதிர்ல வர்றவன் கீழே விழுந்தா தூக்கி விடுவோம்ன்னு நெனைக்கிறீங்களா?? நிச்சயமா மாட்டோம்.. அதையும் வீடியோ எடுத்துக் கன்டென்ட் ஆக்கத்தான் நினைப்போம்!! ஏன்னா நாம பார்த்த விஷயங்கள்ல அதைத் தானே நமக்குக் கற்பிச்சு இருக்கிறாங்க.. ஒவ்வொரு தடவையும் ப்ராங்க்பண்றோம்ங்கற பேருல அடுத்தவங்களோட உணர்வுகளோட விளையாடுவோம், ஆபாசத்தை மட்டுமே பார்த்து மனசை கெடுத்துப்போம்...”

“அதே ஸ்வீட் கடையில இருக்கிற ஸ்வீட்டை யாருமே வாங்கலைன்னு வச்சிக்கோங்களேன்... அது வேஸ்டா போய்டும்... அப்புறம் அந்தக் கடைக்காரன் வேற வழியில்லாம வேற விஷயத்தைச் செஞ்சுதானே ஆகணும்?! அதையே தான் இங்கேயும்... அவங்க ஸ்ப்ரெட் பண்ற மோசமான விஷயங்களை நாம பார்க்காம உதாசீனம் பண்ணிட்டா அவங்க ஏன் இப்படிப்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றப் போறாங்க??”

“நாலு மணிக்கு இன்ஸ்டாக்ராம்ல காத்துக் கிடக்கிறவங்களை எல்லாம் என்னன்னு சொல்றது?? ஆக, நாம தான் அவங்களை நேரடியாவோ மறைமுகமாவோ ஊக்குவிக்கிறோம்..”

“இங்கே பார்க்கிறவங்களை மட்டுமே நான் குறை சொல்ல வரலை... செய்யுற நீங்களும் குற்றவாளிகள் தான்... சீரிஸ்ல கடைசியா ஜெனிதா பேசுற காட்சியில ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க அப்படிங்கற டயலாக் அடிக்கடி வரும்.. அதுக்கான அர்த்தம் என்னன்னா ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் சத்யாவோ, கண்ணம்மாவோ யோசிச்சுப் பார்த்திருந்தா அவங்களைச் சுத்தி இருக்கிற விஷயங்கள் இவ்ளோ மோசமானதா ஆகியிருந்திருக்காது... அதுக்காக மொத்த பிரச்சனைகளுக்கும் காரணம் இவங்க மட்டுமேன்னு சொல்ல வரலை... இவங்களும் கிட்டத்தட்ட ரெப்ரசன்டேட்டிவ் மாதிரி நான் எடுத்துக்கிட்ட கேரக்டர்ஸ் தான்... அதே மாதிரி அந்த ஜெயில் காட்சியிலே பலதரப்பட்ட மக்கள் இருந்திருப்பாங்க.. அதாவது அந்த ஆப் எக்ஸ்பெர்ட்ஸ், அது பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சவங்க, முழுக்கத் தெரிஞ்சவங்க, அது பத்தி கேள்விப்படவே படாதவங்கன்னு.. இப்படி ஒவ்வொரு க்ரூப் ஆஃப் பீப்பிளோட பிரதிநிதிகளாதான் அந்தக் காட்சியில எல்லாரையும் ஒண்ணா இணைச்சிருந்தேன்...”
 

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
33
“அப்புறம் ஏன் கடைசிக் காட்சியை அப்படியே முடிச்சிட்டேன் அப்படின்னா அதுக்கு மேல அவங்களைப் பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல... ஏன்னா தேவைப்படுற அளவுக்குக் குடும்பத்தையும் மத்தவங்களையும் கஷ்டப்படுத்தியாச்சு.. இனி அவங்க மாறப் போறதும் இல்லை, சேரப் போறதும் இல்லை.. இந்த மாதிரியான ஒரு விஷயம் நடக்குது, நாளை அது உங்களுக்கும் நடக்கலாம் அப்படிங்கறதை காட்சிப்படுத்த நினைச்ச ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு விஷயமா கேரி அவுட் பண்ணி உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.. பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு ஒரு தெளிவு வந்திருக்கும்ன்னு நம்புறேன், வந்தா நல்லது...”
“அதுக்காக இந்த மாதிரி எண்டர்டெயின்மென்ட் விஷயங்களப் பார்க்கவே கூடாது, ஆப்ஸ் யூஸ் பண்ணவே கூடாதுன்னு நான் சொல்ல வரலை... நிச்சயமா பொழுதுபோக்கு அப்படிங்கறது மூளைக்கு ரொம்பவே அவசியம்... ஓய்வே இல்லாம மூளை வேலை செஞ்சிட்டு இருந்தாலும் நாம பைத்தியம் பிடிச்சு சைக்கோ ஆகிடுவோம்... அதனால பொழுதுபோக்கு விஷயங்கள் தேவைதான்... பட்... பட்.. அதிலேயும் ஒரு எதிக்ஸ் இருந்தா நல்லது... உதாரணத்துக்கு எப்பவும் உங்களைக் கருத்து சொல்ற விவேக் சார் காமெடியை மட்டுமே பார்த்துட்டு இருக்கச் சொல்லலை... வடிவேல் சார் காமெடியும் பார்க்கணும்.. அப்போதான் மூளை உயிர்ப்பா, புத்துணர்ச்சியா இருக்கும்... அதுக்காக நம்ம மூர்த்தி சார் பேசற ‘செத்தப் பயலே.. நாரப் பயலே’ டைப் ஸ்லாங் எல்லாம் ஜோக்லாம் நகைச்சுவைன்னு சொன்னா என்ன பண்றது??”
“ஆக்சுவலா எனக்கு நம்ம சொஸைட்டி மேல நெறைய வருத்தம் இருக்குது.. எப்பவுமே நல்ல விஷயங்கள் மக்கள்கிட்டே போய்ச் சேருறதுக்கு ரொம்பநாள் எடுத்துக்குது... அது நிச்சயமா போய்ச் சேர்ந்தே ஆகும்ன்னு அறுதியிட்டும் சொல்ல முடியாது... சேர்ந்தால் மகிழ்ச்சி, இல்லைன்னா அப்படியே விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.. இவங்க எல்லாரும் இருக்கிற அந்தக் கழிவுநீர் போன்ற செயலிகளிலே எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்குது தெரியுமா?? என்ன டிக்டாக் செயலியில நல்ல விஷயமான்னு நீங்க ஆச்சரியமா யோசிக்கலாம்... ஆமாங்க... எத்தனையோ பேர் அதிலே ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறாங்க, அதர் லாங்குவேஜ் குட்டி குட்டியா வார்த்தைகள் சொல்லித் தர்றாங்க, வெக்காபுலரி, ஆக்சென்ட் டீச் பண்றாங்க.. தங்களுக்குத் தெரிஞ்ச சின்னச் சின்னக் கலைகளைக் கத்துத் தராங்க, டிஸ்ப்ளே பண்றாங்க... டான்ஸ், பாட்டுன்னு தங்களுக்கு நல்லா வர்ற விஷயங்களை இந்த உலகறிய செய்யுறதுக்குன்னு ஆக்கப்பூர்வமா எத்தனையோ பேர் யூஸ் பண்ணிட்டுதான் இருக்கிறாங்க... ஆனா யாரும் அதையெல்லாம் பார்க்கிறது இல்லை... இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் பார்த்து இவங்களை எல்லாம் ஃபேமஸ் ஆக்கி விட்டுடறீங்க, அப்புறமா இவங்க எல்லாரும் நானும் ஃபேமஸ் தான், நானும் சூப்பர் மாடல்தான்னு சுத்திட்டு இருக்கிறாங்க...”
“உங்கள்ல எத்தனை பேருக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதியைத் தெரியும்?? அவரோட பாடல்கள் தாண்டி, அவர் பண்ணிட்டு இருக்கிற நல்ல விஷயங்கள் உங்கள்ல எத்தனை பேருக்குப் பரிச்சயம்?? தமிழ் ஆராய்ச்சி பண்ணி தமிழி, ராணுவ வீரரோட வாழ்க்கை குறிப்புன்னு அவர் போட்டுட்டு இருக்கிற வீடியோவை நம்மள்ல எத்தனை பேர் பார்த்திருக்கறோம்?? கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கலாம்... நல்லதையே பார்த்தா நல்லதே நடக்கும்... ஆனா நாம அதெல்லாம் பார்க்க மாட்டோம்... ‘ரவுடி பேபி’ வீடியோ பார்த்து நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு, அதை யாராவது ட்ரோல் பண்ணியிருக்கிறாங்களான்னு பார்த்து அதுக்கும் சிரிச்சிட்டு கடந்துட வேண்டியது... என்ன வகையான மனநிலை இதெல்லாம்?? அடுத்தவங்களைக் கேலி பண்ணி, அதிலே சந்தோசம் காணுறதுல ஒரு அற்ப சந்தோசம்!! அதனாலதான் ஒரு பொண்ணு என்னை விட்டுடுங்க அண்ணான்னு கதறி அழற ஆடியோவைக் கூட விடாம டப்ஸ்மாஷ் பண்ணிட்டு இருக்கிறோம் நாம... எவ்வளவாய் மனுஷத்தன்மையை இழந்துட்டு வர்றோம் நாம?? இதெல்லாம் அவங்களுக்குள்ள இருக்கிற AS வைரஸ் தாக்கம், அண்ட் நமக்குள்ள இருக்கிற குரூரம்... சும்மா ‘ஜானே மேரி ஜானே மன்’ன்னு பாடின ஒருத்தனை இன்னைக்கு இன்டர்நேஷனல் லெவல்ல ஃபேமஸ் ஆக்கி விடுற அளவுக்குப் பவர் வாய்ந்தது இந்தச் சோசியல் மீடியா அண்ட் அதிலே இருக்கிற ஃபீச்சர்ஸ் எல்லாம்.. மனித குலத்தோட மேம்பாட்டுக்காக உருவாக்கினவை எல்லாம்.. ஆனா நாம அதையெல்லாம் பயன்படுத்தாம வெறுமனே ‘Dreamum Wakeupum’, ‘Param Sundari’, ‘Nee Bulletu Bandaikku’, “Manike Mange Hithe’வையும் ட்ரென்ட் பண்ணிட்டு இருக்கிறோம்..”
“இன்னொரு விஷயம்.. சமீபத்துல பெரிய அளவுல ட்ரென்டான ஒண்ணு.. சுதன்னு ஒரு ஐடி இஞ்சினியர்... அவர் கெட்ட கெட்ட வார்த்தையா லைவ்ல பேசி வீடியோ போடுவாராம்.. அதை எல்லாரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பார்ப்பாங்களாம்... லட்சக்கணக்குல வியூஸ், சப்ஸ்கிரைபர்ஸ்... நாடு எங்கே போயிட்டு இருக்குதுங்க?? இத்தனைக்கும் நல்லா படிச்ச ஒருத்தன் பொதுதளத்துல வெளிப்படையா கெட்ட வார்த்தை பேசுறான்! அதைக் கைதட்டி என்கரேஜ் பண்றாங்க பல பேர்!! குரூரத்தின் உச்சக்கட்டம் இதெல்லாம்? இதுதான் ஹியூமன் வேல்யூஸா?? நமக்குக் கல்வி இதைத்தான் கத்து தருதா?? நாம பொழுதுபோக்கா நெனைச்சு ஜஸ்ட் லைக் தட் பார்த்துட்டு கடந்து போற வீடியோவினால வர்ற காசில் அவன் சொகுசுக்காரே... சாரி சாரி... ஆடிகார் சொகுசுக்கார்ல சேர்த்தி இல்லைல... அந்த ஆடிக்காரே வாங்கிட்டான்... அப்போ நாட்டுல ஈஸியா சம்பாதிக்கிற வழி இதுதானா?? ஒவ்வொரு நாளும் வியர்வை சிந்தி, என்னைக்கோ ஒருநாள் முன்னேறிடுவோம்ன்னு நம்பிட்டு இருக்கிறவங்க எல்லாரும் முட்டாளுங்க அப்படித்தானே!! இப்படி ஈஸியா கெட்ட வார்த்தைகள் மூலமாவும் மோசமான செயல்கள், அசைவுகள் செஞ்சா ஓவர் நைட்டுல ஒபாமா ஆகிடலாம்ல... இப்படி ஒரு தப்பான உதாரணத்தை ஏன் அடுத்தவங்களுக்கு இவங்கள்லாம் ஏற்படுத்திக் கொடுக்கிறாங்கன்னு தெரியலை...”
“இந்த மாதிரி நெகட்டிவிட்டி ஸ்ப்ரெட் பண்றதுக்கு அவ்ளோ பெரிய மேடையில விருது வேற... எனக்கு இந்த விருதோட முகாந்திரம் புரியலை... லைக்… அவார்ட் அப்படிங்கறது நம்மோட திறமைக்கான அங்கீகாரம்தானே... பட் இங்கே இப்போ கொடுக்கிற ட்ரென்ட், ஹாட் டாப்பிக் அப்படிங்கற விருதுகள் எல்லாமே திறமைக்கான அங்கீகாரமா எனக்குத் தெரியலையே... அவ்ளோ பெரிய மேடையில விருது, தனித்தனியா பேட்டிகள்??! இதெல்லாம் எதுக்காக?? இவ்ளோ பெரிய மேடையில இத்தனை பேர் கரகோஷத்தோட கௌரவப்படுத்துற அளவுக்கு அவங்க என்ன சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்திருக்கிறாங்களா இல்ல மக்களோட உரிமைக்காகப் போராடிட்டு இருக்கிறாங்களா? அப்புறம் ஏன் இத்தனை அலட்டல்கள்? ஃபோட்டோஷூட் நடத்தி ஃபேமஸ், வ்லாக்ல வீட்டை சுத்திக்காட்டுறது, டெய்லி ரொட்டீனை ரெக்கார்ட் செஞ்சு போடுறது, டிக்டாக்ல யூடியூப்ல இஷ்டத்துக்கு எதெதையோ பேசி வீடியோ போடுறது இந்த மாதிரி விஷயங்கள்ல இருந்து எதுவும் உங்களுக்கு லைஃப் மாரல்ஸ், வாழ்வதற்கான வழிகாட்டி கிடைச்சிருக்குதா?? அப்புறம் ஏன் ட்ரென்ட் பண்றீங்க?? இல்ல.. நான் உங்களை அக்யூஸ் பண்றதுக்காகக் கேக்கலை... எல்லாமே ஜஸ்ட் எண்டர்டெயின்மென்ட்தான்.. பட் நீங்க திரும்பத் திரும்பப் பார்த்து, என்கரேஜ் பண்ணின ஆளுங்க இங்கே விருது வாங்குற அளவுக்கு உயர்ந்து நிக்கிறாங்க... ஆனா நாம இன்னமும் அதே இடத்துலதானே நிக்கிறோம்?? வ்லாக்ல செலிபிரிட்டி லைஃப்ஸ்டைல், அவங்க பயன்படுத்துற பிராண்டட் பொருள்களைப் பார்க்கிறப்போ நாமளும் அதே மாதிரி வாழணும்ன்னு டெம்ப்ட் ஆகலைன்னு ஒரே ஒருத்தர் சொல்லுங்க பார்ப்போம்... அந்த மாதிரி விஷயங்கள் எண்டர்டெயின்மென்ட் பர்பஸ்க்காகப் பண்ணப்பட்டாலும் நாம ஏதோ ஒருவகையில இன்ஃப்ளூயன்ஸ் ஆகிட்டுதான் இருக்கிறோம்... அங்கே திரையில ஆடுற சாமானிய மக்களும் உங்களை மாதிரி அதையெல்லாம் பார்த்து கைதட்டிட்டு இருந்த ஆளுங்கதான்... அவங்க இந்த அளவுக்கு வளர்ந்து நிக்கிறது தன்னோட உழைப்பினாலேயோ, திறமையினாலேயோ இல்லவே இல்ல... நாம திரும்பத் திரும்பப் பார்க்கிறது மூலமாதான்.. இல்லைன்னா பகல்ல குடிச்சிட்டு வந்து ஒரு பிரான்க் ஷோல உளறிட்டு இருந்தவர் அஞ்சு படத்துல காமெடியனா ஆகமுடியுமா, உள்ளாடை தெரியுற மாதிரிதான்டா ட்ரெஸ் பண்ணுவேன்னு சொன்ன பொண்ணு ஹீரோயின் ஆகமுடியுமா, அசிங்க அசிங்கமா பேசுறதால மட்டுமே மில்லியன் கணக்குல வியூவ்ஸ் வாங்க முடியுமா, காதலனைத் தேடுறேன்னு எல்லாரையும் அசிங்க அசிங்கமா பேசிட்டு சுத்திட்டு இருக்கிற பொண்ணுதான் செலிபிரிட்டி லெவலுக்கு ஸீன்போட முடியுமா?? இல்ல வெறுமனே கவர்ச்சி ஃபோட்டோ போடுறதால மட்டும் 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் வச்சிக்க முடியுமா?? இதெல்லாம் யாரால நம்மாலதான்... நம்மால மட்டும்தான்... நினைக்கவே ரொம்ப வேதனையா இருக்குது... வருங்காலச் சந்ததி என்னவாகுமோன்னு பரிதவிப்பா இருக்குது... இந்த மாதிரியான ஒரு சமுதாயத்திலேதான் நாளைக்கு நம்ம பசங்களும் வாழ்ந்து ஸ்ட்ரக்கிள் பண்ணப் போறாங்கன்னு நெனைக்கிறப்போ உடம்பெல்லாம் நடுங்குது..”
“கண்ணியம்ன்னு ஒரு வார்த்தை உண்டு... இங்கே பலருக்கு அதை உடைக்கிறதே வேலை... ஈஸியா முத்தம் கொடுக்கிறதையும் கட்டிப்பிடிக்கிறதையும் வீடியோ எடுத்து போட்டு விட்டுடறீங்க?? சின்னப் பசங்க இதைப் பார்த்தா என்னவாகும்?? அது சரி, இப்போ அவங்களும்தான் கப்பிள் வீடியோஸ் போடறாங்களே.. அதுக்கும் தனி மவுசு இருக்குதே!! ஆக்சுவலி இங்கே சோசியலைசேஷன் அப்படிங்கற விஷயம் எதுல இருக்குதோ இல்லையோ, இதிலே இருக்குது... எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி வீடியோ போட்டுடணும்... நிக்கிறது, நடக்கிறது, பேசுறது, தூங்கறது, சாப்பிடறதுன்னு.. இவ்ளோ ஏன் அருவியில குளிக்கிறதைக் கூடக் கன்டென்ட் தேத்துற கூட்டமும் இருக்குது... இப்படியே எல்லாத்தையும் கன்டென்ட் நோக்கிலேயே அணுகினா எப்போதான் இந்த விஷயங்களோட இன்பத்தைச் சிலாகித்துச் சுகிக்கக் கத்துக்குவீங்க?? இல்லை எனக்குப் புரியல, அதனாலதான் கேக்குறேன்... வெறும் வியூஸ், லைக்ஸ், கமெண்ட்ஸ் மட்டுமே போதும்.. அதோடவே உங்க வாழ்க்கை முடிஞ்சி போய்டுதுல்ல... ஒருவிஷயம் மட்டும் நல்லா புரிஞ்சிக்கோங்க... இந்த அழகும் இளமையும் உடம்புல ரத்த ஓட்டமும் இருக்கிற வரைக்கும்தான் இந்த ஆட்டமெல்லாம்... அப்புறம் யாரும் நம்மைத் தேடி வரமாட்டாங்க... நம்மைவிடப் பெட்டரா பெர்பார்ம் பண்றவங்களை ரசிச்சு, கைதட்டிட்டு போயிட்டே இருப்பாங்க...” என மின்மினி உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டே போக, “மேடம்... தண்ணி குடிச்சிட்டுப் பேசுங்க...” எனத் தண்ணீர் புட்டியை எடுத்து வந்து கொடுத்தாள் ஜெனிதா.
“தேங்க்ஸ்மா...” என்றவாறே வாங்கி ஒரு மிடறு அருந்தியவள், “சாரி.. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்... ஏன்னா அவ்ளோ நெகட்டிவிட்டி... நெறைய கோபம் ஒவ்வொருத்தர் மேலேயும்... அதனால தான்...” என மன்னிப்புக் கோரலுடன் சற்றே தன்மையாகத் தொடர்ந்தாள்.
“அதாவது நம்ம கலாச்சாரத்திலே எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்குது... எது எங்கே எப்படி இருக்கணும்ன்னு.. எது இலைமறை காயா, மறைவிலே நடக்கணுமோ அது அங்கே நடக்கணும்... எது வெளிப்படையா வெளியே பேசப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படணுமோ அதைப் பேசித்தான் ஆகணும்... சோ, நல்லதையே பாருங்க, நல்லதையே பேசுங்க... அதுக்காகப் பொழுதுபோக்கு அம்சம்ன்னு எதுவுமே வேணாம்ன்னு சொல்லலை.. அதிலேயும் ஒரு எதிக்ஸ் வச்சிக்கிட்டா நல்லா இருக்கும்ன்னு தான் ஒரு சஜஷனா முன்னாடி எடுத்து வைக்கிறேன்... எத்தனையோ நல்ல விஷயங்கள் இங்கே இருக்குது... லைக் நெறைய மோட்டிவேஷனல் ஷாட்ஸ் போடறாங்க, மியூஸிக் அப்டேட் பண்றாங்க, புதுசு புதுசா கத்துக்க வேண்டிய ஆர்ட்ஸ் எல்லாமே இப்போ சோசியல் மீடியாவுல அவைலபிலா இருக்குதுதான்.. எல்லாருமே என்னைக்கோ ஒருநாள் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும், எப்படியாவது நமக்குத் தெரிஞ்ச நல்ல விஷயத்தை மக்கள்கிட்டே கொண்டு சேர்த்துட முடியாதான்னு போராடிட்டு இருக்கிறாங்க... ஆனா நம்மளோட கவனம் எல்லாம் இந்த மாதிரி ஆளுங்க மேல விழாது.. அவங்களும் அப்புறம் சோர்ந்து வேற வேலையைக் கவனிக்கப் போய்டுவாங்க... முதல்ல நல்ல விஷயங்களைப் பார்க்கவும் பேசவும் பரப்பவும் ஆதரிக்கவும் மனசளவுல தீர்மானம் பண்ணனும்.. அதுக்கு அப்புறம் தான் மத்த எல்லாமே... நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்.... கிருஷ்ண பரமாத்மா சொன்ன மாதிரி நீ என்ன கண்ணாடி போட்டுட்டு பார்க்கிறியோ இந்த உலகம் அப்படித் தான் தெரியும்... சோ இந்த விஷயத்துல எல்லார் பேரிலேயும் பிழை இருக்குதுதான்..”
“அதுக்காக நான் சரியா இருக்கிறேன், அவங்கதான் தப்பு பண்றாங்கன்னு ப்ளேம் பண்றதுல எந்த அர்த்தமும் இல்லை... ஒவ்வொரு தனி மனுஷனும் தனக்குத் தானே சுய கட்டுப்பாட்டோட இருந்துட்டா இங்கே AS வைரஸ் என்ன, எத்தனை கொடிய வைரஸ் வந்தாலும் நம்மை ஒண்ணும் செய்ய முடியாது... எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல்தான் வாழ்க்கை... திரும்பவும் சொல்றேன்.. நல்லதை பார்ப்போம், நல்லதை பேசுவோம், நல்லதையே செய்வோம், நல்லதையே பரப்புவோம்.. எல்லாரும் ரொம்ப நல்லாவே வாழ்வோம்... இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஏற்கனவே உங்களோட மூணு மணி நேரம் + இந்தப் பத்து நிமிஷத்தை நான் அபகரிச்சிட்டேன்.. இதுக்கு மேல பேசி உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பலை... நான் சுட்டிக்காட்டின விஷயங்கள் இம்மி அளவாவது உங்க மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றத்துக்கு வழிவகுத்ததுன்னா அதுவே எனக்குப் பெரிய சந்தோசம்... வாழ்நாளின் ஆகப்பெரும் சாதனையா நெனைச்சுக்குவேன்... அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்கிறேன்...” என்றவள் நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டு, தன்னைத்தான் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
தொடர்ந்தவள், “இவ்ளோ நேரம் பொறுமையா கேட்டுட்டு இருந்த எல்லாருக்கும் ஒன்ஸ் அகைன் தேங்க் யூ... இந்தச் சீரிஸை வெற்றிகரமா முடிக்க உதவி செஞ்ச எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப நன்றி!! அண்ட் இதை உங்க எல்லார்கிட்டேயும் கொண்டு சேர்க்கிறதுக்கு ஆவன செஞ்ச பிரதம மந்திரி அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!! விரைவில் இன்னொரு நல்ல படைப்புடன் உங்களைச் சந்திக்கிறேன்..” எனக் கரம் கூப்பித் தனது நன்றியைத் தெரிவிக்க, “சுபம்” எனத் திரையில் ஒளிர்ந்தது.
“ஹே!!! ஹே!!” எனத் திடலில் அமர்ந்திருந்த மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி, ஆரவாரித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, “பரவால்லையே!! இப்பவே நல்ல விஷயங்களை மக்கள் ஆமோதிக்க ஆரம்பிச்சிட்டாங்களே!!” என மகிழ்ந்தார் ஊராட்சி மன்ற அலுவலர்களில் ஒருவர்.
இவர்கள் இவ்விடம் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்க, அந்தச் சத்தத்தையும் விஞ்சும் வகையில் முன்புபோல அறிவிப்பு மணி ஒலிக்க, அடுத்ததாக என்ன நிகழுமோ என்னும் பயத்தில் அனைவரும் சப்தநாடியும் ஒடுங்கிப் போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, அவ்விடம் மரண அமைதி நிலவியது...
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

34

மூன்று சக்கர வாகனத்தில் வந்து இறங்கிய அரசு அதிகாரிகள், “படம் முடிஞ்சதா??” எனப் பஞ்சாயத்து அலுவலர்களிடம் விசாரிக்க, “ஆமா சார்... மொத்தத்தையும் இன்னைக்கே பார்த்து முடிச்சிட்டாங்க... ஒரு நாளுக்கு ஒரு எபிசோட் தான்னு எவ்ளோ சொன்னாலும் கேக்காம அடம் பண்ணினாங்க.. அதான்.. வேற வழியில்லாம மொத்த படத்தையும் போட்டுட்டோம்...” எனக் கையைப் பிசைந்தவாறே உரைத்தனர்.

அதைக் கேட்டதும் தங்களுக்குள் நகைத்த அதிகாரிகள், “என்னடா இவங்க?! சொல்லி வச்சது மாதிரி எல்லா ஊரிலேயும் ஒரே மாதிரி அடம்பிடிச்சிருக்கிறாங்க...” எனக் கூற, “ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு சார்.. எதார்த்தமா நம்ம வீட்டுல பார்க்கிற மாதிரி விஷயங்கள் இருக்குதுன்னு சொன்னாங்க... நெஜமாவே பெரிய அளவுல எந்த ட்விஸ்ட்ஸ், டேர்ன்ஸ்ம் இல்லாம அப்படியே வாழைப்பழத்துல ஊசி செருகின மாதிரி விஷயத்தை உள்ளே நுழைச்சு, தப்பை மண்டையில நச்சுன்னு அடிச்சு உரைக்க வச்சிட்டாங்க...” என்றனர் அலுவலர்கள்.

“எது எப்படியோ நல்லது நடந்தா சரிதான்... இனியாவது வீட்டுக்குப் போகவிட்டா சரிதான்... இந்த AS வைரஸ் பரவ ஆரம்பிச்ச நேரத்துல இருந்து ஓடிக்கிட்டேதான் இருக்கிறோம்... முதல்ல வீட்டுக்குப் போய்ப் பொண்டாட்டி பிள்ளைங்களோட மனசு விட்டுப் பேசணும்...” என அதிகாரிகளுள் ஒருவர் குறிப்பிட, “நானும் அதையேதான் நெனச்சேன்..” என ஆமோதித்தார் மற்றொருவர்.

ஊர்மக்கள் அனைவரும் தங்களையே ஒருவித பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த ஒலிபெருக்கியுடன் ஒருங்கிணைந்த ஒலிவாங்கியின் உதவியுடன் பேசத் தொடங்கினார்.

“மக்களே!! எல்லாரும் படத்தைப் பார்த்து நல்லா என்ஜாய் பண்ணியிருப்பீங்கன்னு உங்க பஞ்சாயத்து ஆபீசர்கள் சொன்னாங்க... ரொம்ப நல்ல விஷயம்... நாங்க இதைக் கவர்மென்டுக்கு ரிப்போர்ட் அனுப்பிடறோம்... எல்லாரும் வரும்போது கோவமாதான் வந்திருப்பீங்கன்னு தெரியும், ஆனா இப்போ முகத்தைப் பார்க்கிறப்போ ஒரு தெளிவும் மாற்றமும் தெரியுது... இதைத் தானும் சிஎம்மும் பிஎம்மும் எதிர்பார்த்தாங்க.. அப்புறம் நாங்க வந்ததுக்கான முக்கியக் காரணம்.. உங்க வீட்டுல இருந்து AS வைரஸ் தொற்று இருக்குதுன்னு பிடிச்சிட்டுப் போன உங்க வீட்டு ஆளுங்களை எல்லாம் நாளைக்குக் காலையில கொண்டு வந்து விட்டுடறோம்... அங்கே அவங்களுக்கு எந்தத் தண்டனையும் தனிப்பட்ட எந்த ட்ரீட்மென்டும் திணிக்கப்படலை... உங்களையெல்லாம் பரப்பி வச்சு இங்கே காட்டின வீடியோவை அங்கே ஒவ்வொருத்தரையும் தனித்தனியா உக்கார வச்சு ப்ளே செஞ்சு காட்டினோம்... ஏற்கனவே வீட்டைப் பிரிஞ்சு இருந்தவங்க இந்த வீடியோவோட தாக்கத்திலே ரொம்பவே எமோஷனலா உடைஞ்சு போயிருப்பாங்க... நிச்சயமா அவங்களுக்குள்ள ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கும்ன்னு நம்புறோம்.. எங்களைப் பொருத்தவரைக்கும் எல்லாரும் மாறலைன்னாலும் ஓரளவுக்காவது மாறியிருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்குது.. ஏன்னா எந்த விஷயத்திலேயும் நூறு சதவீதம் பலனை எதிர்பார்க்கக்கூடாது, அது சாத்தியமுமில்லை... சோ அரசாங்கத்தால செய்ய முடிஞ்சா அவங்களோட கடமையைச் செஞ்சியிருக்கிறாங்க... அதுக்கு மேல எல்லாம் உங்க கையிலேதான் இருக்குது... இதுக்கு எதுக்காகத் தனியே கூட்டிட்டு போனீங்கன்னு கேட்டா மருந்து எப்பவும் கசப்பாதானே இருக்கும், அதே மாதிரிதான் இந்த ட்ரீட்மென்ட் கொஞ்சம் தனிப்படுத்தப்பட்டு நடந்துச்சு.. அவ்ளோதான்... ஓகே.. எல்லாரும் நிம்மதியா வீட்டுக்குப் போய்த் தூங்குங்க... நாளைக்குக் காலையில எல்லாரும் வந்துடுவாங்க... சிஎம் எல்லாரையும் கூட்டிட்டு போன மாதிரியே பத்திரமா வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுட சொல்லி ஆர்டர் போட்டிருக்கிறாங்க... உங்க அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு யாரையெல்லாம் பிடிச்சிட்டு போனோமோ அவங்க எல்லாரும் நாளைக்குக் காலையில உங்களோட இருப்பாங்க... இத்தனை நாள் வந்த அன்பையும் அக்கறையையும் யூட்டிலைஸ் பண்ணிக்காம இருந்தீங்க அப்படின்னா இனியாவது நாட்களைப் பிரயோஜனப்படுத்திக்கோங்க... ஏன்னா ஒரேயொரு வாழ்க்கைதான், அதை ஒரு தடவை தான் வாழ முடியும்.. சரி, நாங்க கிளம்புறோம்.. இன்னும் நெறைய ஊருக்கு போய் அனவுன்ஸ் பண்ண வேண்டியது இருக்குது...” எனக் குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற பின்னரும் அனைவரும் அங்கிருந்து நகர மனமின்றி நின்று கொண்டிருக்க, ஊரின் மூத்தகுடிமக்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னப்பா.. அப்பவே தூக்கம் வருது, தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு இருந்தீங்க.. வீட்டுக்குப் போகலையா?? இன்னும் வேற படமெல்லாம் போட மாட்டாவ... ஒரு படம்தான்... அதான் உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் நாளைக்குக் காலையில வந்துருவாவன்னு சொல்லிட்டாவல்லா... அப்புறம் என்ன?? போங்க.. போய்த் தூங்குங்க...” எனப் பெரியவர் ஒருவர் குறிப்பிட, “ஐயா... எப்படிய்யா சாதாரணமா வீட்டுக்குப் போக முடியும்?? உண்மையா இதைப் பார்த்ததுக்கு அப்புறம் நாங்க எப்படி ஒரு மாயச் சுழல்ல மாட்டிக்கிட்டு இருந்திருக்கிறோம்ன்னு புரிஞ்சிக்கிட்டோம்... கழுத்துல பாசியை மாட்டிக்கிட்டு அமிழ்ந்து போனது மட்டுமில்லாம அது தப்புன்னு அறிவுல உரைக்காம இருந்திருக்கிறோம்... இப்போ எல்லாமே புரிஞ்சு போச்சுது...” எனப் பேச வாயெடுத்தார் ஒருவர்.

“அம்மாடி... இங்கே யாரும் யாரையும் தப்புன்னு சொல்லலை... அவியதான் படத்துல தெளிவா சொன்னாவளே... பொழுதுபோக்குக்காகப் பாருங்க, தப்பில்லைன்னு... தேவையில்லாத விஷயத்தைப் பார்த்து உங்க மனசையும் கெடுத்துக்கிட்டு, அந்த மாதிரி தப்பான வழியில போறவங்களையும் ஊக்குவிக்காதியன்னு தானே சொன்னாவ... இப்போதான் நீங்க உணர்ந்துகிட்டியல்லா.. பிறகு என்ன?? இனி நமக்கு நாமே கட்டுப்பாடா இருந்துக்கிட்டா நல்லது.. யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது... வீடியோ போடுதவிய திருந்துனா திருந்துதாவ, இல்லைனா என்னவோ பண்ணிட்டு போகட்டும்... நீங்க ரொம்ப யோசிக்காம இருங்க..” என முதியவர் ஒருவர் தேற்றும் விதமாகப் பேசினார்.

“இல்ல ஐயா... வீட்டுல நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஆத்மார்த்தமா முகம் கொடுத்துகூடப் பேசினது கிடையாது... வாரத்துல ஒருநாள் லீவு.. அதிலேயும் பசங்க அவங்க பாட்டுக்கு எதாவது வீடியோ பார்த்துட்டுக் கேம் விளையாடிட்டு இருப்பாங்க.. அவர் ஒரு பக்கம் போன்ல எதையாவது பார்த்துட்டு இருப்பாரு... நானும் எனக்குத் தெரிஞ்ச வகையில் சீரியலோ பார்த்துட்டு, சும்மா இந்த மாதிரி டிக்டாக், ரீல்ஸ் பார்த்துட்டு இருப்பேன்... உண்மையா அவரையும் என் பையனையும் அவங்க கூட்டிட்டுப் போன இத்தனை மணிநேரத்துல நான் அவ்ளோ பரிதவிச்சேன்.. அவங்களுக்கு என்ன ஆகுமோன்னு தவிச்சிட்டு இருந்தேன், கூட இருந்தப்போ நல்லா பேசியிருக்கலாமோ, நல்லா கவனிச்சிருக்கலாமோ அப்படின்னு பலமாதிரி சிந்தனைகள் உள்ளே ஓடிட்டு இருந்துச்சு... ஆனா அதையெல்லாம் ஊர்ஜிதப்படுத்துற மாதிரி இந்தப் படத்திலே நெறைய விஷயங்கள் காமிச்சாங்க... நல்லா தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்த அவங்களையே இந்த AS வைரஸ் அசைச்சுப் பார்க்கிறப்போ நாங்க எல்லாம் எம்மாத்திரம்?? பாதிநேரம் போன்ல தான் மூழ்கியிருக்கிறோம்..” என வருத்தமாகப் பேசினார் பெண்மணி ஒருவர்.

அவரது கையைப் பிடித்துத் தடுத்த பெரியவர் ஒருவர், “திருந்த வாய்ப்பு கிடைச்சும் திருந்தாம இருக்கிறவன் எல்லாம் மனுஷனே கிடையாது... நீங்க மாற முடிவெடுத்ததே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்... எங்க காலத்திலே எல்லாம் இந்த மாதிரி போனு எல்லாம் இல்லை, அதனால பெருசா எந்தப் பாதிப்பும் எங்களுக்குத் தெரியல... ஒருவேளை நாங்களும் இந்தக் காலத்திலே இப்படியொரு சூழ்நிலையில பிறந்து, வாழ வேண்டிய சூழ்நிலை வந்திருந்தா இப்படித்தான் இருந்திருப்போமோ என்னவோ?! விடுங்கம்மா.. முதல்ல எல்லாரும் வீட்டுக்குப் போய் ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க... பிள்ளைங்க எல்லாம் தூக்கத்துல கண்ணு சிவந்து போய் நிக்கிது பாருங்க..” என்றார்.

“அண்ணாச்சி.. பேசாம நம்ம எல்லாரும் ஒரு முடிவு பண்ணுவோமா?? நம்ம ஊர்ல போனையும் இந்த மாதிரி கெடுதலை பரப்புற ஆப் எல்லாத்தையும் யூஸ் பண்ணக் கூடாதுன்னு ஒருமனதா தீர்மானம் போட்டு, அதை நிறைவேத்த முயற்சி பண்ணினா என்ன?” என அங்கிருந்த ஒருவர் யோசனையை முன்வைக்க, மென்னகையுடன் நின்று கொண்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் பேசத் தொடங்கினார்.

“அதெல்லாம் சரிப்பட்டு வராது அண்ணாச்சி... எப்பவும் ஃபோனோடவே இருந்துட்டு திடீர்ன்னு எதுவும் இல்லை, யூஸ் பண்ணக் கூடாதுன்னு சொன்னா எல்லாருக்குமே கஷ்டம்தான்... அது மட்டுமில்லாம இங்கே எல்லாமே நவீனமயமாகிட்டு வருது... தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லாத ஒரு வாழ்க்கைங்கறது சாத்தியமில்லாது ஒண்ணு... இப்போ எல்லாமே ஃபோன்லதான் பார்த்தாக வேண்டிய கட்டாயத்துல இருக்கிறோம்... சாப்பாடு, துணி, வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாத்தையும் அதிலேதான் ஆர்டர் பண்றோம், வேலையெல்லாம் அதிலேதான் செய்யுறோம், இப்போ பசங்களுக்குப் பாடம்கூட ஃபோன்லதான் நடத்துறாங்க, எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி காணாம போன ப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லார்கூடவும் அதுமூலமாதான் டச்ல இருக்கிறோம்... அதனால ஒரேயடியா எல்லாத்தையும் விட்டு விலகுறது ரொம்பப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்... அந்த அளவுக்கு ஃபோனும் அதிலே இருக்கிற விஷயங்களும் நம்ம வாழ்க்கையோட ஒரு முக்கியமான, அத்தியாவசியமான, தவிர்க்க முடியாத அங்கமா மாறிடுச்சு.. அப்படி இருக்கிறப்போ நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாம் சரிப்பட்டு வராது...”

“இப்போ நீங்க சொல்ற மாதிரி நாம ஒரு ரூல்ஸ் போட்டோம்ன்னு வையுங்களேன்... எல்லாருக்கும் அது பிடிக்கும், எல்லாராலேயும் கடைபிடிக்க முடியும்ன்னு உறுதியா சொல்ல முடியாது.. அடுத்தவங்களோட விருப்பு வெறுப்புகளையும் கட்டுப்படுத்தி வைக்க நமக்கு ரைட்சும் கிடையாது.. ஒருவேளை ஊருக்காக அவங்க இதுக்குச் சம்மதிக்கிறாங்கன்னு வச்சுக்கலாம்... ஆனா ஏதோ ஒரு சமயத்துல தேவைப்படுறப்போ இல்லீகலா யூஸ் பண்ணுவாங்க, அதைப் பார்க்கிற மத்தவங்களும் யூஸ் பண்ண ஆரம்பிப்பாங்க, அப்புறம் அதைத் தடுக்கிறதுக்குத் தனியா ஒரு டீம் அமைக்கணும்.. இதெல்லாம் ரிஸ்க்...நமக்கு நாமே கட்டுப்பாடா இருக்கிறது பெட்டர்... எப்பவும் நாமதான் உணர்ச்சிகளுக்கு ராஜாவா இருக்கணும், உணர்ச்சிகள் நம்மை ஆளக்கூடாது.. அவரவர் வாழ்க்கைக்கும், தனிமனித ஒழுக்கத்துக்கும் அவரவர்தான் காவல்... இதிலே நாம சொல்றதுக்கும் நிர்பந்தம் பண்றதுக்கும் எதுவுமில்லை...” என உறுதியாக அவர் குறிப்பிட, கூட்டத்தில் இருந்த பெரும்பாலானோர் அந்தக் கருத்தை ஆமோதித்தனர்.

அலைபேசி மட்டும் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் எவராலும் வாழ இயலாது என்பதை உணர்ந்து கொண்ட இறுதியாக அனைவரும் ஒருசேர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். இனி ஊரில் உள்ளோர் யாவரும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனைத்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மட்டும் அவற்றின் அம்சங்களையும் பயன்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் செய்தனர்.

அனைத்து விஷயங்களுக்கும் தங்களுக்குத் தாங்களே சுயவரைமுறைகளை வகுத்து வாழ முடிவு செய்தனர். இயன்றமட்டும் நல்ல விஷயங்களை ஆதரிக்கத் தங்களாலான முன்னெடுப்புகளைச் செய்யத் தீர்மானித்தனர். அதன் முதல்படியாகப் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக நாட்டுப்புற கலைஞர்கள், அழிந்து வரும் கலைகளை ஊக்குவிக்க முடிவெடுத்தனர். அதன்படி, ஒவ்வொரு வார இறுதியிலும் ஊர்த்திடலில் கூத்து முதலிய ஆட்டங்கள் நடைபெறும், எவரையும் வந்து பார்க்குமாறு நிர்பந்திக்க மாட்டர், அனைத்தும் தனிமனித விருப்பமே என உறுதியாகக் கூறி, அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

ஏறத்தாழ அந்தத் தொடர் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் இதே நிலைதான். ஏதேனுமொரு நல்ல விஷயத்தை ஊக்குவிக்க முடிவு செய்திருந்தனர். இனி அவ்வூரின் பிரஜைகள் யாவரும் நல்லதையே பார்ப்பர், நல்லதையே பேசுவர், நல்லதையே சிந்திப்பர், நல்லதையே பரப்புவர், நல்வாழ்வு வாழ்வர்!! இவ்விடம் AS வைரசிற்குக் கிஞ்சித்தும் வேலையில்லை!!

இனி எல்லாம் நலமே!! நேர்மறை எண்ணங்களைப் பரப்புவோம்!! உலகை ஆனந்தப் பூந்தோட்டமாக்குவோம்!!

முற்றும்...
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
ஒரு வழியாக கடைசி நாளில் கதையை நிறைவு செய்துவிட்டேன் தோழமைகளே! இதுவரை என்னை ஊக்குவித்த, இனி ஊக்குவிக்கப் போகிற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!! கதையை வாசித்துவிட்டு கருத்துகளை சொன்னால் என்னை நானே மேம்படுத்திக் கொள்வேன்!
 
Status
Not open for further replies.
Top Bottom