- Messages
- 33
- Reaction score
- 6
- Points
- 8
RD-22 -சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -10
கோயிலுக்குச் செல்வதற்காகப் பல்லக்கில் ஏறச்சென்ற ருத்ராதேவியை நோக்கிப் பதட்டமாக ஓடி வந்த யாழ்.
"இளவரசி! பாண்டிய குமாரரும், அவருடைய நண்பரும், வீரர்களும் பாசறையிலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனராம்." என்று கூறியதும் அதிர்ச்சியடைந்த ருத்ராதேவி, 'ஏன்?' என்ற கேள்வியுடன் தூரத்தில் தெரிந்த சிவன் கோயிலின் கோபுரத்தைப் பார்த்தாள்…
கிழக்குத் திசை சிவப்பு ஆடை உடுக்க, விடிகாலைப் பொழுதை அறிவிக்கும் விதமாகப் புள்ளினங்கள் கோபுரத்திலிருந்து பறந்து சென்றன... அதைக் கண்ட ருத்ராதேவி,
'இவ்வளவு உயிர்களுக்கு உறைவிடம் அளிக்கும் எந்தையே… எமக்கு உம் மனதில் சிறிதேனும் இடமிருத்தால் இந்தச் சோதனை வருமோ?' என்று மனமுருகி வேண்டிய சமயத்தில் கோயிலில் உள்ள ஆலயமணி ஒலித்தது…
இமையோரங்களில் நீர் கோர்த்தை யாரும் அறியாமல் மறைத்தபடி, யாழின் அருகில் சென்ற ருத்ராதேவி, "எப்பொழுது சென்றார்கள்? என் அப்பா எங்கே இருக்கிறாரென்று பார்த்தாயா?" என்று பதற்றமாகக் கேட்டாள்.
"அரசர் அரண்மனையில் தான் இருக்கிறார். பாண்டிய குமாரர், நம் அரச மணிமகுடத்தையும் பெற்றுச் செல்லவில்லை... அவர் எப்போது இங்கிருந்து சென்றார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை." எனப் படபடவென பதில் உரைத்தாள் யாழ்.
"கோட்டை வாயிலில் இருக்கும் காவலாளிகள் கூட அறியாவண்ணம் பாசறையிலிருந்தவர் சென்றதெப்படி?" என்று ருத்ராதேவி கேட்டதும்,
"அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது இளவரசி! விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கிறேன்…" என்று கூறினாள் யாழ்.
ஒரு நிமிடம், 'கோயிலுக்குச் செல்வதா? வேண்டாமா?' என்று தடுமாறிய ருத்ராதேவி, கோயிலுக்கே செல்வதென்று முடிவெடுத்து யாழிடம்,
"மற்றொரு பல்லக்கில் என்னைப் பின்தொடர்ந்து வா!" என்று கூறிவிட்டுப் பல்லக்கில் ஏறினாள்.
'மாறன், என் தந்தையின் மணிமகுடத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளாமல் அவசரமாக ஏன் சென்றான்?' என்ற எண்ணங்களே சுழன்றதால், எப்பொழுதும் போல் நிதானமாக ஒவ்வொரு பரிவார தெய்வங்களையும் வணங்காமல், வேகவேகமாக வணங்கிவிட்டு, கருவறையில் வீற்றிருந்த லிங்க ஸ்வரூபனாகிய ஈசனின் முன் நின்ற ருத்ராதேவியின் கண்களில் வற்றாத அருவியாகக் கண்ணீர் வழிந்தோடியது…
அதனைக் கண்ட யாழ் பதறி, "இளவரசி! தயைகூர்ந்து மனதைக் கட்டுப்படுத்துங்கள்… எவரேனும் தங்களின் கண்ணீரைப் பார்த்து விட்டால், உடனடியாக நம் அரசருக்குத் தெரிவிக்கக்கூடும்" என்றதும்.
அப்பொழுதுதான் கண்ணீர் வழிவதை உணர்ந்த ருத்ராதேவி சட்டென்று அவ்விடம்விட்டு அகன்று கண்ணீரைத் துடைத்துவிட்டு உமையவளின் சன்னதிக்குச் சென்றாள்.
"தாயே! எனக்குள் ஏன் இவ்வளவு தடுமாற்றம்! மாறனை ஒரே ஒரு தினம் பார்த்ததிலேயே மனம் பறிபோய்விட்டதா?! அந்தப் அளவிற்கா என் மனம் பலவீனமாக இருக்கிறது? எவ்வளவு முயன்றும் இதயம் கலங்குவதைத் தடுக்கும் வழி அறியாமல் தவிக்கிறேன் தாயே! என்னைப்போல் மானிடப் பெண்ணான நீ, அந்த ஈசனையே விரும்பி, கணவனாகப் பெற்றாய்… ஈசனை மணப்பதற்குள் எத்தனை தடைகளைக் கடந்திருப்பாய்? காதல் மணம் புரிந்த பெண்ணாக உனக்கு, என் மனவேதனையும் புரியும்… மாறன் என் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துவிட்டான்… ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறதென்று தெரியவில்லை… அதை அறிந்துகொள்ளும் வழியும் தெரியவில்லை... அவரை மறந்து வாழ்வதும் என்னால் முடியாது... என் விருப்பம் நிறைவேற அருள்புரியுங்கள் தாயே…" என்று உமையவளிடம் மனமுருகி வேண்டினாள்.
தெய்வ தரிசனத்திற்குப் பிறகு தனிமையில் மனம்விட்டு பெசுவதற்காக ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர் ருத்ராதேவியும், யாழும்.
ஒரு நாழிகை கடந்தும் இருவருமே ஏதும் பேசாமல் அமைதியாக, சிந்தனை வயப்பட்டவர்களாய் அமர்ந்திருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்தான் அரண்மனைக் காவலாளி!
"இளவரசி தேவியாருக்கு வணக்கம்! கோட்டை வாசலில் இருந்த காவலாளிகளிடம், பாண்டிய குமாரர் பற்றி விசாரிக்கச் சென்றிருந்தேன். இன்று அதிகாலை விடிவதற்கு இரண்டு நாழிகைக்கு முன்பே அனைவரும் பாசறையைவிட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டதாகக் காவலாளிகள் கூறினர்." என்று கூறிய காவலாளியிடம்,
"நல்லது! நீங்கள் போகலாம்!" என்று யாழ் கூற,
ருத்ராதேவி எதுவும் கூறாமலிருக்கவே, சிறிது தயங்கி நின்றவன், இடைவரை குனிந்து, "உத்தரவு தாருங்கள் இளவரசி!" என்று கூறி வணங்கி விட்டுச் சென்றான் அந்தக் காவலாளி.
"என்ன காரணமாக இருக்கும் என்று உன்னால் ஏதாவது யூகிக்க முடிகிறதா யாழ்?"
"இன்று அதிகாலை விசாரித்தபொழுது ஒரு தகவல் கேள்வியுற்றேன்... நேற்று இரண்டு பணியாளரகள், என் தந்தையார் அனுப்பிவைத்து, என்னைத் தேடி வந்ததாகவும், நான் உங்களுடன் வெகுநேரம் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்ததால் திரும்பிச் சென்று விட்டதாகவும், நம் பணிப்பெண் கூறினாள். ஆனால் 'அவ்விதம் எந்தப் பணியாளரையும் நான் அனுப்பவில்லை' என்று என் தந்தை கூறினார். இதிலிருந்து ஒருவேளை நேற்று வந்த இருவர் பாண்டிய குமாரரும் அவருடைய நண்பருமாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்."
"இதை ஏன் வந்ததும் கூறவில்லை?" என்று சட்டென்று கேட்ட ருந்ராதேவியிடம்,
"இப்பொழுதுதான் யோசித்துப் பார்த்தேன்… அதுமட்டுமின்றி, இது என்னுடைய யூகம் தானே தவிர, உறுதியான தகவல் கிடையாது இளவரசி!" என்று கூறினாள் யாழ்.
உடனே இருவரும் அரண்மனைக்குச் சென்று, மாறனையும் விக்ரமனையும் பார்த்த பணிப்பெண்களை அழைத்து, யாழைத் தேடி வந்தவர்களின் அங்க அடையாளங்களைக் கூறுமாறும், வந்தவர்களிருவரும் யாருடனாவது பேசினார்களா? ஏதேனும் தகவல் கூறிவிட்டுச் சென்றார்களா? என்றும் பலவாறு விசாரித்தனர்…
பணிப்பெண்கள் கூறிய அங்க அடையாளங்களிலிருந்து, 'வந்தது மாறனும் விக்ரமனுமாகத்தான் இருக்க வேண்டும்!' என்று ருத்ராதேவியும், யாழும் முடிவுக்கு வந்தனர்.
ஒருவேளை வந்தவர்கள் மாறன் என்றால், எதற்காக வந்தார்? ஏன் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்? யாழைத் தேடி வந்தாரா? அல்லது அதைச் சாக்கிட்டு என்னைக் காண வந்தாரா?'என்று மேல்மாடத்தில் வந்தமர்ந்து, என்ன நடந்திருக்க்கூடும் என்று எண்ணிய ருத்ராதேவிக்கு ஒரு சந்தேகம் வலுக்க,
முன்னும் பின்னும் நடந்தவாறு யோசித்துக் கொண்டிருந்த யாழிடம்,
"நாம் நேற்று மேல்மாடத்தில் பேசிக்கொண்டிருந்தை அவர்கள் கேட்டிருக்கக் கூடுமோ?" என்று கேட்ட ருத்ராதேவியிடம்,
"இருக்கலாம்!" என்று யாழ் கூறியதும்,
முந்தைய தினம் தங்களுக்குள் நடைபெற்ற உரையாடலை இருவரும் நினைவு கூர்ந்தனர்.
"ஈஸ்வரா! நேற்று நாம் அவரைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம்!" என்று யாழ் பதற,
"அவர்கள் ஏன் உன்னைத் தேடி வந்தார்கள்?" என்ற ருத்ராதேவியின் குரல் தேய,
"நேற்று வந்தவர்கள், அவர்கள் இருவர்தான் என்பதற்கு நமக்குச் சரியான ஆதாரங்கள் இல்லை இளவரசி! அப்படியே இருந்தாலும் அவர்கள் என்னைத் தேடி வருவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை." என்றாள் சமாதானப் படுத்தும் குரலில் யாழ்.
"அவர் என்ன காரணமாக இவ்விடம் விட்டுச் சென்றார்கள் என்பதை நாம் அறிய வேண்டும் யாழ்!"
"அது ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை இளவரசி! இப்பொழுதே நாம் ஒற்றர் ஒருவரை மதுரைக்கு அனுப்புவோம்... இரண்டு நாட்களில் விஷயம் வந்துவிடும்." என்று யாழ் கூற, உடனடியாக ஒர் ஒற்றரை மதுரையை நோக்கி அனுப்பி வைத்தாள் ருத்ராதேவி.
இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பி வந்த ஒற்றன், "பாண்டிய படைகள் மதுரை போய்ச் சேர்ந்துவிட்டன. ஆனால் இதுவரை பாண்டிய குமாரரை யாரும் பார்க்கவில்லை என்று கூறுகின்றனர் இளவரசி!" என்று கூறினார்.
"இலங்கைக்குப் படை நடத்திச் சென்ற மதுரை மாமன்னர் குலசேகரப் பாண்டியர் வந்துவிட்டாரா?" என்று கேட்டாள் ருத்ரமாதேவி.
"இல்லை தேவி! பெரிய பாண்டியர் வருவதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்கின்றனர்" என்று ஒற்றன் கூற,
"சரி! நீங்கள் போகலாம்!" என்று அனுப்பி வைத்துவிட்டு யாழிடம்,
"அரசரிடம் வேறு எங்கேனும் உல்லாச பயணம் செல்வதாக அனுமதி பெற்று, நாம் மதுரை வரை சென்று வருவோம்!" என்று ருத்ரதேவி தீர்க்கமான குரலில் கூற, அதிர்ச்சியில் வாய்திறந்து நின்றாள் யாழ்.
குலசேகரப் பாண்டியரின் அந்தப்புர அரண்மனைகளுள் ஒன்றில்…
"கதிரவன் மேற்கே உதித்து விட்டானா என்ன? இரண்டு நாட்களாக என் செல்ல மகன், என் அரண்மனையிலேயே தங்கி இருக்கிறானே?" என்று முப்பதுகளில் இருந்த பெண்மணி, உப்பரிகை ஊஞ்சலில் தவமியற்றிய நிலையில் அமர்ந்திருந்த மாறனிடம் பகடி பேச,
மாறனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே, அவனருகில் நெருங்கி அமர்ந்து, மாறனின் வலது கையை எடுத்துத் தன் இரு உள்ளங்கைகளுக்குள் அடக்கியவாறு வாஞ்சையான குரலில், "என்னாயிற்று குமாரா? உன்னைப் பார்த்தால் படை நடத்திச் சென்று, வெற்றி வாகை சூடியவன் போல் தெரியவில்லையே? உமது வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுரை மக்கள், நகரெங்கும் தோரணங்களால் அலங்கரித்து, பல தேசத்திலிருந்து நாடக, நாட்டிய கலைஞர்களையும், புலவர்களையும் வரவழைத்து மிகப் பெரிய வரவேற்பு செய்யக் காத்திருக்க, நீயோ எந்தவொரு அறிவிப்புமின்றித் திடீரெனப் படைகளுடன் திரும்பி வந்தாய்... வந்ததிலிருந்து ஏதோ ஒன்றை சிந்தித்தவண்ணம் தனித்திருக்கிறாயே? அப்படியெது உன்னை வாட்டுகிறதென்று என்னிடம் கூறக்கூடாதா?" என்று கேட்டார்.
மதுரை பேரரசரின் இதயக் கோட்டைடையை ஆட்சி செய்யும் பேரழகு தெய்வம்… நல்ல கோதுமை நிறத்தில், முழங்காலைத் தொடும் அலைஅலையான கருங்கூந்தலுமாய் இன்றும் இளமை குன்றாமல், பெரிய நீளக்கண்களில் கருணையையே கருவிழிகளாகக் கொண்டிருந்தார் வேதநாயகிதேவியார்… அதே விழிகள் தனது தந்தைக்கு மட்டும் காதலுரைப்பதாய் தந்தை கூறக் கேட்டிருக்கிறான். முத்துப்பற்கள் தெரிய புன்னகை வடிவத்தைத் தவிர வேறெந்த வடிவமும் அறியாத இளஞ்சிவப்பு இதழ்களைப் பிரித்து,
"என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதால், என் செல்வத்தின் இளம் மனதை வாட்டி வதைக்கும் காரிருள் நீங்கிடுமா என்ன?" என்று கேட்டதும்,
தன் தாயின் அன்பிலும் அக்கறையான வார்த்தைகளிலும் கலங்கிய மாறன், தன் தாயின் கையை எடுத்துத் தனது மடியில் தன் கரங்களுக்குள் வைத்தவாறு, "நான் ஒன்று கேட்பேன்! உங்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் என்னிடம் கூற வேண்டும்!" என்று ஆரம்பித்தான்.
"போருக்குச் சென்றால் அனுபவம் கிடைக்கும் என்பது உண்மைதான் அதற்காக ஒரே போரில் நீ இவ்வளவு தொண்டு கிழவன்போல் மாறி விடுவாய் என்று நான் கருதவில்லை…" என்று சிரித்தபடி கூறிய தன் தாயிடம்,
"நான் கேட்டதற்கு இது பதில் இல்லையே?" என்றான் மாறன்.
"இதுவரை உன்னிடம் நான் எதையும் மறைத்ததில்லை குமாரா! கேள்" என்ற தன் தாய் வேதநாயகிதேவியாரின் மடியில் தலைசாய்த்து.
"ம்ம்ம்… தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது... இதற்கான பதிலைத் தவிர, என்ன ஏது? என்று கேள்வி கேட்கக் கூடாது... சரியா?" என்ற மாறனின் தலைமுடியை கலைந்தபடி,
"என்ன பீடிகையெல்லாம் பலமாக இருக்கிறதே?"
"ம்ம்… அம்ம்மா… நான் விளையாட்டுத்தனமாக எதையும் கேட்கப்போவதில்லை... தயவுசெய்து என்னைக் கிண்டல் செய்வதை விடுத்து உரிய பதிலைக் கூறுங்கள்!" என்றான் மாறன்.
மாறன் பேச்சில் இருந்த தீவிரத்தில், ஒரு நிமிடம் புருவத்தைச் சுளித்துப் பார்த்த வேதநாயகிதேவியார், "சரி சரி" என்றார் தன் மகனின் கண்களையே பார்த்தவாறு.
"நீங்களும் பாண்டிய அரசுக்கு உட்பட்ட குறுநில மன்னரின் மகள் தானே?"
தெரிந்த பதிலுக்கு ஏன் இத்தனை பீடிகை என்பதைப் போல் சிரித்த வேதநாயகிதேவியார், "ஆமாம்!' என்றார்.
தன் தாயின் மடியிலிருந்து எழுந்து ஊஞ்சலில் அமர்ந்து, சிறிது நேரம் ஊஞ்சல் கட்டியிருந்த தங்க செயினியில் அலங்காரமாகக் கோர்க்கப்பட்டிருந்த முத்துக்களைச் சுண்டியபடி அமைதியாக அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்த வேதநாயகிதேவி,
"பட்டத்தரசியாரின் அரண்மனைக்குச் சென்றாயா? அவர்கள் ஏதேனும் விபரீதமாகக் கூறிவிட்டார்களா? ஏன் இவ்வளவு யோசனை? என்னிடம் கூறுவதற்கு நீ ஏன் இவ்வளவு தயக்கம் காட்ட வேண்டும்? இதுநாள்வரை மனதளிவில், உனக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் இடைவெளி விட்டதில்லையே குமாரா?" என்ற தன் தாயின் குரலில் இருந்த கவலையில் நிமிர்ந்த மாறன்,
"அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா! நான் செண்பகப் பொழிலிலிருந்து நேராக உங்கள் அரண்மனைக்குத் தான் வந்திருக்கிறேன். வேறு எங்கும் செல்லவில்லை!" என்றான்.
ஆனாலும் தன் மகன் ஏதோ கேட்கத் தயங்குவது புரிந்து, "குமாரா எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் கேட்கலாம்!" என்று புன்னகை தவழ, தன் மகனின் கண்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் ஊக்கினார்.
"அம்மா எம் தந்தையைத் திருமணம் செய்வதற்கு முன்பாக, உங்களுக்கும், உங்கள் தந்தையான எம் பாட்டனாருக்கும், உங்கள் வருங்கால வாழ்க்கையைப் பற்றிக் கனவுகள் இருந்ததா?" என்று கேட்டான்.
புன்னகையால் இதழ்கள் மேலும் விரிய, "இது என்ன கேள்வி குமாரா? எல்லாத் தந்தைக்கும், தாய்க்கும், தன் பிள்ளைகளின் எதிர்காலம்பற்றிய கனவுகள் இருக்கத்தானே செய்யும்? இதில் நாங்களிருவரும் மட்டும் எப்படி விதிவிலக்காவோம்?" என்று கேட்டார் வேதநாயகிதேவியார்.
மீண்டும் சற்றேத் தயங்கிய மாறன், பிறகு 'கேட்டே விடுவது!' என்ற உறுதியுடன் தன் தாயைப் பார்த்து, "அம்மா! நான் கேட்கும் கேள்விகளுக்கு மனதளவில் வேதனைப்படாமல், பதில் கூறவேண்டுகிறேன்!" என்று தன் தாயின் முகத்தையே கலக்கத்துடன் பார்த்தான்.
'மாறன் ஏதோ வில்லங்கமாகக் கேட்கப் போகிறான்' என்பதை அறிந்த வேதநாயகிதேவி, தானும் தயாராகி, "முதலில், நீ கேட்க வந்ததைக் கேள்!" என்று கூறினார்.
'ஒரு குறுநில மன்னனுக்குத் தன் மகளை, அதாவது உங்களை... ம்ம்ம்... ஒரு அரசனுக்குப் பட்டத்தரசியாக மணமுடிக்க வேண்டும் என்றுதானே கனவு இருந்திருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது... தாங்கள்…" என்று இழுத்து, தயங்கி நிறுத்தினான் மாறன்.
சிறிது நேரம் தூரத்தில் கதிரவனின் கதிர் வீச்சால் தகதகவெனப் பிரகாசித்த, பட்டுப் போன்ற வெண்பஞ்சு மேகங்கள் நகர்வதையும், சேர்ந்து பிரிவதையும் பார்த்துக் கொண்டிருந்தவர், தன் மகன் தன் பதிலுக்காகக் காத்திருக்கிறான் என்பதை உணர்ந்து, மாறனைப் பார்த்து, "ஆம்! அனைத்து மன்னர்களுக்கும், மணம்புரிந்து செல்லும் தங்கள் மகள், ஒரு நாட்டுக்குப் பட்டத்தரசியாக வேண்டும் என்பதுதான் லட்சியமாகவே இருக்கும். ஆனால்… இந்த மாமதுரை பேரரசின் பெருமைமிகு சக்ரவர்த்தி, மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா ஒன்றின் கலைநிகழ்ச்சியைக் காணவந்த என்னைப் பார்த்து, விருப்பப்பட்டுப் பெண் கேட்டு வந்தால், பேரரசரின் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னரால் மறுக்க இயலுமா? அவ்வாறே மறுத்தாலும், அக்குறுநில மன்னனை போரில் வென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்களே இப்புவியாளும் பேரரசர்கள்!!" என்று இதழ்களில் வேதனையான புன்னகை ஒன்றை வெளியிட்டு, சிறிது நேரத்தில் மீண்டும், "இருப்பினும் என் தந்தை, என் மகளின் விருப்பத்தைக் கேட்டு, தங்களுக்குச் செய்தி அனுப்பி வைக்கிறேன்!" என்று பதிலுரை அனுப்பி வைத்தார்....
….மதுரையம்பதியின் மாமன்னரை மணம்புரிய மறுத்தால், என்னமாதிரியான விளைவுகள் நிகழும் என்பதை அறிந்த எந்த ஒரு மகளும் என்ன முடிவெடுப்பாளோ அதைத்தான் நானும் என்று செய்தேன்... ஆமாம்! திருமணத்திற்குச் சம்மதம் கூறினேன்!... நான் மனதார சம்மதம் கூறவில்லை என்பதை அறிந்த என் தந்தை, 'உன் விருப்பத்தை மீறி எதுவும் செய்யமாட்டேன். எதுவாக இருந்தாலும் பார்த்துவிடலாம் கூறு' என்றார்... எனக்கு என் வாழ்வை விட என் தந்தையின் உயிர் முக்கியமாகத் தெரிந்தது... அதனால் அத்தனை நாட்கள் என் மனதில் வளர்த்து வந்த பட்டத்தரசி கனவுகளை நொறுக்கி விட்டு, சந்தோஷமாகச் சிரித்தபடி, 'எனக்கு முழுச் சம்மதம் தந்தையே மதுரை பேரரசை மணக்கக் கசக்குமா என்ன?' என்று நான் கூறவும் என் தந்தை திருமணத்திற்குச் சம்மதித்தார்." என்று கூறி முடித்தார் வேதநாயகிதேவியார்.
அத்தருணத்தில் தன் தாயின் மனம் எவ்வளவு வேதனையைச் சுமத்திருக்கும் என்று வருந்திய மாறன்,
"இங்கு வந்து உங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்ததா அம்மா?" என்று கேட்ட தன் மகனின் கன்னத்தில் கை வைத்து,
"நிச்சயமாக இல்லை என் செல்வமே! இங்கு வந்த பிறகுதான் உன் தந்தை என்மீது கொண்ட அன்பின் ஆழத்தை என்னால் அறிய முடிந்தது... இன்றும் அவர் கண்களில் என்மீது உள்ள அன்பு தெரிகிறது… ஒரு நாட்டின் பட்டத்தரசியாக வாழ்வதைவிட, நல்லமனிதனின் இதயத்தில் அரசியாக வாழ்வதுதான் சிறந்தது என்பதை உணர்ந்த பிறகு மகிழ்ச்சிக்கும் குறைவேது... வேதனைக்கு வழியேது…" என்று சிரித்தார் வேதநாயகிதேவியார்.
வார்த்தைகளின் எண்ணிக்கை - 1479.
சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️