மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு தான் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த பெட்டியைத் திறந்து, அலமாரியில் உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.
உடன் அவளுக்கு மதுபாலாவும் அபிராமியும் உதவிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஷ்ரதாவின் செல்போன் ஒலி எழுப்ப, எடுத்துப் பேசியவளின் கைகள் நடுங்கியது. குரலும் தயங்கியபடியே வெளிவந்தது. "ம்ம், சொல்லுங்க"
தயக்கத்திற்கு காரணம்?
ஆம், அந்த நல்லவன் தான்.
"அக்கா அம்மா பக்கத்துல இருக்காங்களா?.."
"ம்ம் ஆமாங்க, குடுக்கவா?.." என்று கேட்டு, அவன் பதிலை எதிர்பாராமலேயே "அண்ணி, அவங்க பேசுறாங்க" என்று தன் கையில் கனத்தவனை மதுபாலாவிடம் கொடுத்துவிட்டாள் ஷ்ரதா.
அவளின் இந்த செயலில் எதிர்புறம் நறநறவென்று பல்லைக் கடித்தான் வீசி. ஏற்கனவே அவன் அவனது அக்காவின் மீது கோபத்தில் இருக்கிறான். இதில் இவள் வேறு இப்படி செய்தால்?
போனில் பதட்டமாக, "என்ன வருண்?" என்று கேட்ட அக்காவிடம், "அது.. காலையில பாத்ரூம் டேப்பை சரியா மூடினேனான்னு சந்தேகம்.. அதான் போன் பண்ணினேன்.. அவ என்னடான்னா உன்கிட்ட கொடுத்திட்டா.." என்று வாய்க்கு வந்ததை உளறினான்.
பொறுப்பாய் அவள் குளியலறை சென்று பார்த்து, "பார்த்துட்டேன் டா.. எல்லாம் சரியா தான் இருக்கு.." என்று உறுதி செய்தாள்.
"ஓஹ்" என்றவனின் ஏமாற்ற முகத்தை எட்டிப்பார்க்க வழியில்லாதவள் பின், போனை தனது பிள்ளைகளிடம் கொடுத்துவிட, அஸ்வினும் அனன்யாவும் ஐஸ், கேக், சாக்லேட், பிஸ்கட் என்ற உலகப்புகழ் பதார்த்த பதங்களுக்கிடையே ஆயிரம் மாமா போட்டனர்.
அவன் அவர்களிடம் "ம்ம்.. ம்ம்.. வாங்கிட்டு வரேன்.. ஆனா ஒரு கன்டிஷன்.. இப்போ நீங்க உங்க அத்தையை தனியா பால்கனிக்கு கூட்டிட்டுப்போய் அவங்கக்கிட்ட போனைக் கொடுக்குறீங்க.." எனவும் அந்த பொல்லாத விஷமிகளும் ஷ்ரதாவை தனியே இழுத்துச்சென்று "மாமா பேசுறாங்க" என்று போனை நீட்டினர்.
ஷ்ரதா ஏதோ தீர்த்தம் போல் பவ்யமாய் அதனை வாங்கியவள் மெதுவாய் காதில் வைத்தாள். "ஹேய் லூசு.. அக்கா அம்மா இருக்காங்களான்னு கேட்டா உடனே போனை தூக்கிக்கிட்டுப் போய் அவங்கக்கிட்ட கொடுத்திருவியா?.. கொஞ்சம் அவங்க முன்னாடி அன்னியோன்யமா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம்னு போன் போட்டா வேண்டாவெறுப்பா நடந்துக்கிற?" என்று காச்சு மூச்சென்று கத்திவிட்டான்.
ஷ்ரதா அவனிடம், "இல்லங்க.. அப்படியெல்லாம் இல்லங்க.." என்று கந்தசஷ்டி கவசம் போல் சொன்னதையே திருப்பி திருப்பி உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.
"என்ன இல்லைங்க.." வல்லென விழுந்தான் அவன்.
"என்ன ஷ்ரதா இன்னுமா வருண் பேசிக்கிட்டு இருக்கான்.." அவனுக்கு அவன் அக்கா குரல் தெளிவாய் கேட்டது.
"மொத சிரிச்ச மாதிரி மூஞ்சை வை.. என்ன சிரிக்கிறியா?"
"ஆமாங்க"
"இப்போ அய்யோ நான் மாட்டேன், அண்ணி பக்கத்துல இருக்காங்கன்னு சொல்லி வெட்கப்பட்டபடியே போனை வை.."
"அது.."
"அது இல்ல.. அய்யோன்னு ஆரம்பிக்கணும்.."
ஷ்ரதாவும் அவன் சொன்னபடியே செய்தாள். போன் கட்டானதும் தான் ஷ்ரதாவிற்குள் அந்த கேள்விப்பூவே பூத்தது. "இவருக்கு எப்படி என் போன் நம்பர் தெரியும்?"
***************
மாலையில் வீசிக்கு அழைப்பு விடுத்த அபிராமி, "டேய் வருண் எங்கயிருக்க?.." என்றார்.
சொன்னான் அவன்.
"அப்போ இன்னும் நீ கிளம்பவே இல்லையா?.. நாங்கல்லாம் எப்பவோ புறப்பட்டாச்சு.. உனக்காகத் தான் காத்திருக்கோம்.. எங்கேயா?.. அடப்பாவி இன்னைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடப் போய் ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரலாம்னு சொன்னேனேடா! மறந்துட்டியா?.. சரி, சரி சீக்கிரம் கிளம்பி வா.." என்றவர், "வேலை டென்ஷன்ல மறந்துட்டானாம்" என்றார் தன்னை பார்த்திருந்த ஷ்ரதாவிடம்.
'ம்க்கும் இவ்ளோ டென்ஷன்லயும் மதியம் என்னை போன் போட்டு திட்ட மட்டும் மறக்க மாட்டாராம்..' என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள் ஷ்ரதா.
காரில் வந்து இறங்கியவுடன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவன் சோபாவில் தன் அம்மா அக்காவுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து "ஷ்ரதா மேல வா!" என்றபடியே தன்னறைக்குச் சென்றான்.
ஷ்ரதாவும் சிங்கத்தின் குகைக்குள் நுழையும் முயல் போலவே பம்மியபடி அவனது அறைக்குள் நுழைந்தாள்.
அங்கு வீசி மேல்சட்டை இல்லாமல் தன் அலமாரியைப்போட்டு குடைந்துக் கொண்டிருந்தான்.
பின், அதிலிருந்து ஊதா நிற சட்டையையும், அதே நிறத்தில் கரையிட்ட வேட்டியையும் எடுத்தவனாக திரும்பி அவளைப் பார்த்தான்.
பச்சைப் பட்டில் சித்திரமாக நின்றிருந்தவள் வெற்றுடம்பாக நின்றிருப்பவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலைகுனிந்திருந்தாள்.
நல்ல ரசனையும் காதலும் உள்ள கணவனாக இருப்பின் இவ்விடத்தில் அவள் முகம் ஓலையாகவும் அவன் உதடு எழுத்தாணியாகவும் மாறியிருந்திருக்கும்.
எங்கே! இந்த வீசி தான் கடுவன் பூனையின் கேரக்டரை கடன் வாங்கி வந்திருப்பவனாயிற்றே.
அரை நிமிடம் தான் அவளைப் பார்த்தான் அவன். நேரே அவளது அலமாரிக்கு சென்று அதே ஊதா நிறத்தில் உடையைத் தேடினான்.
அவன் கையில் வாகாய் லெஹங்கா ஒன்று சிக்கியது. எடுத்து மெத்தையில் போட்டவன் "ம்ம் ஃபாஸ்ட், அந்தப் புடவையை உருவி வீசிட்டு இந்த ட்ரெஸைப் போட்டுக்கோ" என்றான்.
"இல்லத்தான்.. ச்ச் இல்ல சார்.. அத்தை தான் மொத மொத கல்யாணமாகி கோவிலுக்குப் போறீங்க, புடவை கட்டினா தான் லக்ஷ்மிகரமா இருக்கும்னு இந்தப்புடவையை கட்டி விட்டாங்க.."
"ஏன் இந்த அலமாரியில புடவையை நீ கீழ கடைசி ராக்ல வச்சிருக்க?"
"அது எனக்கு புடவை கட்டப் பிடிக்காதனால கீழ…."
"ம்ம் அப்புறம் ஏன் அந்த ட்ரெஸை போடணும்?.. இதை போட்டுக்கோ.."
"இல்ல…. அத்த மனசு கஷ்டப்படும்"
ஏதோ அடிப்பது போல் நொடியில் அவளை நெருங்கியவன், "இங்கப்பாரு! மொத எனக்கு இந்த மாதிரி என்னை எதிர்த்துப் பேசுறது பிடிக்காது.. நான் சொன்னா செய்யணும்.. தட்ஸ் இட்.. உங்க அத்தை மனசு கஷ்டப்படும்னு புடவையை அவுக்க கஷ்டமா இருந்ததுன்னா நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா?" என்றான் விஷமமாக கைகளை தேய்த்தபடி.
"இல்லை" என்று வேகமாய் தலையாட்டினாள் ஷ்ரதா.
"அப்போ நான் சொன்னதை செய்!" என்றுவிட்டு கிளம்புவதில் அவசரம் காட்டினான் அவன்.
வீசி கிளம்பி கண்ணாடி முன்னே நின்று சார்லியை தன் உடம்பில் பீய்ச்சிக் கொண்டிருந்தபோது, இன்னொரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் ஷ்ரதா.
அவனுக்கு அவளைப் பார்க்கவெல்லாம் நேரமில்லை. கிளம்பியதும் அவளது கையைப்பிடித்து கீழே இழுத்து வந்துவிட்டான்.
அவர்களையும் அவர்களது உடைகளையும் பார்த்த மதுபாலா, அபிராமியிடம் 'பாருங்கம்மா' என்று கண்களால் சமிக்ஞை செய்ய, அவர் மனநிறைவான புன்னகையை வெளிப்படுத்தினார்.
மதுபாலாவின் குழந்தைகள் இருவரும் "ஈஈ அத்தையும் மாமாவும் ஒரே கலர் ட்ரெஸ்" என்று குதூகலித்தனர்.
கோவிலுக்கு என்றதும் புத்துணர்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது ஷ்ரதாவின் முகத்தில்.
காரில் முன் இருக்கையில் அவனருகில் அமர்ந்திருந்தவள், கண்ணாடி வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
பின் இருக்கைகளில் பிரகாஷ் சக்கரவர்த்தி, அபிராமி, மதுபாலா மற்றும் அவளின் குழந்தைகள் என அனைவரும் அமர்ந்திருந்தனர்.
வாகன நெருக்கடி அதிகமான சாலையான தெற்குவாசல் வழியாக அந்த எம்ஜி க்ளஸ்டர் கார் சென்றுகொண்டிருந்த போது பைக்கில் இடையில் வந்து மோதினான் இளைஞன் ஒருவன். அவனை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தான் வீசி.
காதுகளை கைகளால் இறுக மூடிக்கொண்ட ஷ்ரதா, "வருண் அத்தான் நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்களா?" என்று மானசீகமாக கேட்டுக்கொண்டாள்.
அபிராமி, "வண்டில குழந்தைங்க எல்லாம் இருக்காங்க வருண்.. என்னப் பேச்சு பேசுற.." என்று திட்டினார்.
முகத்தைத் தீவிரமாகவே வைத்திருந்தவன் கோவிலுக்குள் செல்லும் தெருவிற்கு முன்னமே புது மண்டபத்தருகில் வண்டியை நிறுத்தி விட்டு, அனைவரையும் இறங்கச்சொன்னான்.
அனைவரும் ஜனசந்தடி மிக்க அந்தப் பகுதியைக் கடந்து கோவிலுக்குள் நுழைந்தனர். உள்ளே கோவிலின் இருபுறமும் வளையல் கடை, பூஜா சாமான் கடை, பூக்கடை, சாமி படங்கள் கடை, ஜோசியம் பார்த்தல் என வரிசையாக வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
நுழைவிலேயே அர்ச்சனைக்கு தேவையானப் பொருட்களை வாங்கிய அபிராமி, மதுபாலாவிற்கு மல்லிகைப்பூ வாங்கி கொடுத்துவிட்டு "உனக்கு என்ன பூ பிடிக்கும் ஷ்ரதா?" என்றார்.
"ரோஸ் வாங்கிக் கொடுங்க காதுல வச்சிக்குவா" என்று கேலி செய்தான் வீசி.
"போடா.." என்றவர் அவன் கூறியபடியே ரோஸ் வாங்கிக் கொடுத்தார். வாங்கி கையில் வைத்தபடியே வந்தாள் ஷ்ரதா.
அப்போது வளையல் கடையிலிருந்து ஒருவர் எழுந்து ஓடிவந்து "வாங்க பாப்பா.. நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா?.. அப்பா வரலையா?" என்று அவளிடம் குலசம் விசாரிக்க, "இல்ல வரலை" என்று சொல்லியபடியே திரும்பியவள், அங்கு ருத்ரமூர்த்தியாய் நின்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்ததும் "சாமி கும்பிட்டுட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
அவள் உள்ளே செல்ல செல்ல விஜயாதித்தனை தெரிந்த ஒவ்வொருவராய் வந்து நலம் விசாரிக்க, தப்பி வந்தால் போதும் எனும்படியாக அனைவரிடமும் ஒரு வரி பதிலிலேயே நழுவிவிட்டாள் ஷ்ரதா.
இவற்றையெல்லாம் சகித்துக் கொண்ட வீசிக்கு அவள் அடுத்ததாக செய்த ஒரு காரியத்தை தான் சகிக்கவே முடியவில்லை.
அவர்கள் தாமரைக்குளத்தை அடைந்தபோது எதிரில் வந்த ஒரு குடும்பத்தைப் பார்த்ததும், "ஷிவாத்தான்.." என்று ஓடினாள் ஷ்ரதா.
ஓடிச்சென்றதில் பாவாடை தடுக்கி விழப்போனவளை தாங்கிப்பிடித்தவனைக் கண்டு தூணில் தன் கையைக் குத்திக்கொண்டான் வீசி.
சிவனேஸ்வரன்... விஜயாதித்தனின் தங்கை மகன். பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் எப்போது மதுரை வந்தான் என்று அவளுக்கேத் தெரியாது.
ஏதோ குடும்ப பிரச்சனையால் கடந்த மூன்று வருடமாகவே அத்தையும் மாமாவும் தன் குடும்பத்துடன் பேசுவதில்லை என்பது மட்டும் தெரிந்திருந்தாலும், ப்ளஸ்டூ தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றதும் அதனை முதலில் தன்னிடம் ஓடிவந்து கூறியவனை அவளால் மறக்க முடியுமா என்ன?
இப்போது அவளது ஷிவா அத்தானைப் பார்த்ததும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை அவளால்.
தன் தோள்களில் அவன் கரங்கள் இருக்கும் சுரணையே இல்லாமல், "அத்தான் எப்படி இருக்கீங்க?.. எப்போ மதுரை வந்தீங்க?" என்று அவன் கையைப் பற்றியபடியே உற்சாகமாய் கேட்டுக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.
சிவனேஸ்வரனும் அவ்வப்போது வீசியைப் பார்த்தபடியே பதிலளித்துக் கொண்டிருந்தான்.
சிவனேஸ்வரனிடம் பேசிவிட்டு பக்கத்தில் தனது அத்தை மாமாவிடம் திரும்பியவள், "அத்தை மாமா எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரித்தாள்.
இருவரும் பதிலேதும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டனர்.
தன் அத்தையின் கையில் இருந்த தட்டில் நான்கு மூலைகளிலும் சந்தனம் வைக்கப்பட்டிருந்த திருமணப் பத்திரிக்கைகளை பார்த்தவள், "ஹை! அத்தானுக்கு கல்யாணமா?.. அத்தான் சொல்லவே இல்ல.. எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாத்தான்?.. உங்கக் கல்யாணத்துக்கு வரமுடியுமோ என்னவோ தெரியல.. ம்ம் இந்தாங்க இதை என் கல்யாணப்பரிசா வச்சிக்கங்க.." என்று தன் கையிலிருந்த மோதிரத்தை கழற்றி அவன் சுண்டு விரலில் போட்டுவிட்டாள். உடன் தன் கையிலிருந்த ரோஜா மொட்டையும் அவனிடம் தாரை வார்த்தாள்.
அவளின் அச்செயலில் தீங்கங்குகளுக்கு நிகராக கண்கள் சிவந்தபடி நின்றிருந்தான் வீசி.
சிவனேஸ்வரனின் குடும்பம் தன்னைக் கடந்து சென்ற பின், "வா வருண், கற்ப கிரகம் போவோம்" என்ற தன் தாயிடம், "நான் வரல.. நீங்க போங்க" என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டு தாமரைக்குளத்தின் படிகளிலேயே நின்று விட்டான் வீசி.
"இவ்வளவு தூரம் வந்துட்டு இப்படி செய்றானே" என்று சலித்துக் கொண்ட அபிராமி மற்றவர்களை அழைத்துக்கொண்டு மீனாட்சி அம்மனை தரிசிக்கச் சென்று விட்டார்.
செல்லும்போது வீசியை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள் ஷ்ரதா.
அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
காதல் கணம் கூடும்...