Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நரகமாகும் காதல் கணங்கள் - Tamil Novel

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 24​



அவர்கள் நால்வரில் ஒருவன் தனது கைப்பேசியின் பட்டன்களை இயக்கி காதில் வைத்தான். "அண்ணே, நீங்க சொன்ன மாதிரி இங்க தானே அந்தப்பொண்ணு இருக்கு.. சிவாத்தம்பி இங்க தானே தூக்கிட்டு வந்திருக்கு.. சரிங்கண்ணே, நம்ம கிரானைட் குடவுனுக்கே தூக்கிட்டு வந்திருறோம்ண்ணே.." என்றான்.

வித்யா அவன் பேச்சைக்கேட்டதும் பயந்து திரும்பி தான் வந்த பக்கமே ஓட ஆரம்பித்தாள். மொட்டையன் ஒருவன் வேகமாக அவளை நெருங்கிப் பிடிக்க முயன்றதில் சேலை முந்தானை அவன் கையில் சிக்கி, அப்படியே முழுப்புடவையும் அவனால் உருவப்பட்டு தரையில் சகதியில் உருண்டாள்.

நால்வரும் காமப்பார்வையில் அவளுடலை மாமிசமாக்கி புழுவாய் ஊர்ந்தார்கள். அரக்கர்கள் போல் குனிந்து நிமிர்ந்து சிரித்தார்கள்.

அவள் அச்சத்தில், "சிவனேஸா! சிவனேஸா!" என்று உச்சஸ்தாயில் கத்தினாள்.

அவள் வாழ்க்கையும் மகாபாரத சீரியலாக இருந்திருந்தால் கூப்பிட்ட குரலுக்கு இந்நேரம் கிருஷ்ணர் எண்டராகி காப்பாற்றியிருப்பார். என்ன செய்வது! அடுத்த சீன் என்னவென்று தெரியாத லைவ் டெலிகாஸ்ட் தானே வாழ்க்கை!

அவன் வருவது போல் தெரியவில்லை எனவும், கைக்கு அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அவர்களை தாக்க முயன்றாள் வித்யா. முதலடி வலுவாக விழுந்துவிட்டதில் புடவையை உருவிய மொட்டைத்தலையன் "பிடிங்கடா அவளை" என்று அங்கேயே தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.

மற்றவர்கள் ஒன்றுகூடி அவள் கையிலிருந்த கட்டையை பறிக்க முயற்சி செய்யவும், அதை அவர்கள் மீதே தூக்கிப்போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் மீண்டும் ஓடத்துவங்கினாள் வித்யா.

மொட்டையனைத் தவிர்த்து மற்ற மூவரும் தொடர்ந்து அவளைத் துரத்தினார்கள்.

டிஸ்கவரி சானலில் ஒரு புலியோ, சிங்கமோ துரத்தும்போது உயிர் பயத்தில் ஒரு புள்ளிமான் எப்படி மருண்டு ஓடுமோ அப்படித்தான் கரடுமுரடான அந்தப்பாதையில், நிலவின் ஒளியில், நெஞ்சம் தடதடக்க, நீர்த்தேக்கங்களையெல்லாம் குதித்து தாவிக்கடந்து, உயிரைக் கையில் பிடித்து ஓடினாள் வித்யா.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் சிவனேஸ்வரனைக் கண்டதும் எவரெஸ்ட் சிகரத்தை நெருங்கியவள் போல் கூடுதல் ஆற்றலைப் பெற்று வேகமாக ஓடிவந்து அவன் நெஞ்சில் மோதி நின்றாள்.

அவனைக் கட்டிப்பிடித்து தனது பயத்தையும் பதட்டத்தையும் குறைத்துக் கொண்டிருந்தவள், திடீரென சுதாரிப்படைந்தவள் போல் அவனைவிட்டு விலகி நின்றாள்.

பின்பு, திரும்பிப்பார்த்து பயத்தில் அவனுக்குப் பின்னால் வந்து ஒளிந்துகொண்டாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்தத் தன் செய்கையைக் குறித்து. யாரிடமிருந்து தப்பிக்கவேண்டும் என்று ஓடினாளோ இப்போது அவனிடமே அடைக்கலம் கேட்கும் நிலைமை.

சிவனேஸ்வரன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை வெளியே எடுத்தான்.

துரத்தி வந்த தடியர்கள் மூவரும், "தம்பி, மாமா தான் இந்தப்பொண்ணை தூக்கிட்டு வர சொன்னாரு.. நீங்க விலகிக்கோங்க.." என்றதும், பிஸ்டலை மேலே வானத்தை நோக்கி இரண்டுமுறை சுட்டான். க்டப்! க்டப்! என்ற சத்தத்தோடு பிஸ்டலின் வாயிலிருந்து புகை வந்தது நிலவொளியில் புலப்பட்டது. வித்யா பீதியில் அவன் முதுகு வழியாக அவன் வயிற்றைக் கட்டிக்கொண்டாள்.

அவர்கள் தங்கள் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், "டேய்! விஜியண்ணேக்கிட்ட நேர்ல பேசிட்டு வந்து பார்த்துக்குவோம்டா.. நம்ம ஆளுங்களோட வந்து தூக்கிட்டு போகும்போது இவர் என்ன பண்றார்னு பார்க்கலாம்.." என்று பின்வாங்கினார்கள்.

அவர்கள் கிளம்பியதும் அவன் அவள் கையைப் பிடித்து குடிசைக்கு இழுத்து வந்தான்.

உள்ளே நுழைந்ததும் வலப்புறங்கையால் சுளீரென அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவள் பதிலுக்கு அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

அவனுக்கு மிகவும் பரிச்சயமான பெண் ஷ்ரதா என்பதால் அனைவரும் அவளைப்போலவே இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டான் போலும் சிவனேஸ்வரன். ஆனால், வித்யா நான் ராணி மங்கம்மாவின் பேத்தியாக்கும் என்று அறைந்து சொல்லாமல் சொன்னாள்.

அவன் மீண்டும் ஒரு அறைவிட்டு, "இடியட்" என்றான்.

அவள் தானும் பதிலுக்கு ஒரு அறைவிட்டு "நீதான் இடியட்" என்றாள்.

அவன் மூன்றாவதாக ஒரு அறைவிட்டு முன்னெச்சரிக்கையுடன் அவள் இரு கைகளையும் பின்புறமாக சேர்த்து பிடித்துக் கொண்டான். அதில் இருவரின் தேகமும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. சண்டைபோடுவதில் மும்முரமாக இருந்த இருவருக்குள்ளுமே இந்த தேக உரசல் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.

"ஹேய்! உன்கிட்ட என்ன சொன்னேன்?" என்று அதட்டினான் சிவனேஸ்வரன்.

அவள் திமிறி அவன் கைகளைத் தட்டிவிட்டு, "உன்னால தான் எல்லாம்.. இப்போ அந்த விஜயாதித்தன் ஆட்கள் வந்து என்னை கடத்திட்டுப் போகப்போறாங்க.. நீ நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கப்போற.. அவனுங்க என்னை அங்க கொண்டுபோய் என்னவெல்லாம் செய்வானுங்களோ தெரியாது.." என்று புலம்பினாள். கண்களில் லேசாக நீர் படலமிட்டிருந்தது.

அவன் அப்போது அந்த நூறு வாட்ஸ் மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் தான் கவனித்தான் அவள் ஆடையை.

அவள் ஜாக்கெட்டை தைத்த டெய்லர் அதற்கு முன்பு கிணறு வெட்டிக்கொண்டிருந்தவராய் இருந்திருக்க வேண்டும், முன்புற கழுத்தை விசாலமாகவும் ஆழமாகவும் கத்தரித்திருந்தார்.

தான் கவர்ச்சிக் கன்னியாய் ஒருவனுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பிரக்ஞையேயின்றி அழுது கொண்டிருந்தாள் வித்யா. அவளுக்கு எப்போது எந்தக்கணம் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பே மேலோங்கி இருந்ததால் ஆடைகவனம் இல்லை.

"வாங்க! என்னை எங்க வீட்டுல கொண்டுபோய் விடுங்க.." என்றாள். அவன் அசையாமல் நின்றான்.

திடீரென தன் கால் மீது ஏதோ ஏறியது போல் இருக்கவும் சட்டென்று அவனை நெருங்கி சட்டையைப் பிடித்துக்கொண்டாள். "ஏதோ பூச்சி" என்று கீழேயே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் அனல் மூச்சுக்கூட தாபத்தை உணர்த்தவில்லை.

ஒருநிலைக்கு மேல் முடியாமல் சிவனேஸ்வரன் அவளிடையில் கையிட்டு தன்னோடு இறுக்கிக்கொண்டான்.

அவள் விதிர்த்துப்போய், "ஹேய்! விடு என்னை.." என்று அவன் கரத்தை விலக்கப்போராடினாள்.

அவன் அவளை நகர்த்திக்கொண்டே வந்து கயிற்றுக் கட்டிலில் தள்ளியவன், தானும் அவள் மேலேயே சரிந்தான்.

அவள் மேல் சென்ட், சகதி, வியர்வை என்று கலந்துக்கட்டி நாற்றம் அடித்தது. ஆனால், காமமூர்க்கனுக்கு மூளையும் மூக்கும் ஒருசேர வேலைசெய்யாதது போல நடந்துக்கொண்டான்.

தன்னை தன் உடலால் பலவந்தமாக அழுத்தி அடக்கியவனை, தன் கைவிரல் நகங்களால் முகத்தில் பிறாண்டி வைத்தாள் வித்யா. வலியோடு அவள் கைகளை இரண்டையும் தலைக்கு இருபுறமும் பிடித்து வைத்துக் கொண்டவன், தனது குறிக்கோளில் கவனமானான்.

எவ்வளவு போராடியும் சிவனேஸ்வரனின் வலிமையே ஜெயிப்பது போன்றதான நிலையில், தனது திமிறல்களை எல்லாம் கைவிட்ட வித்யா கேவலாய் கெஞ்சத் தொடங்கினாள். "இவ்ளோ நேரம் உன்னை நல்லவன்னு நினைச்சேன்.. ஆனா நீ.. நோவ்.. ப்ளீஸ்"

"உனக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை துரத்திட்டு வந்த நாய்களுக்கும் எந்த வித்தியாசமுமே இல்லைன்னு நிரூபிச்சிட்ட.. உன் யோக்யதை தெரிஞ்சி தான் அந்த ஷ்ரதா தப்பிச்சிட்டா போல.." என்றவள் சொன்னது தான் தாமதம், சுதந்திரமாய் அவள் கழுத்தில் ஊர்ந்து கொண்டிருந்தவன் கொதிக்கும் பாலில் வாய்வைத்தவன் போல அவளைவிட்டு விலகி எழுந்து விட்டான்.

தனது வார்த்தைகள் அவனை காயப்படுத்திவிட்டதை கிரகித்த வித்யா, கைகளை உடலின் குறுக்காகப் போட்டுக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

அவன் திரும்பி உட்கார்ந்தபடியே தன் சட்டையின் பட்டன்களைக் கழற்றி அவளிடம் நீட்டினான். தந்த சட்டையை மறுக்காமல் வாங்கி அணிந்துகொண்டாள் வித்யா.

திடீரென அவன் 'இல்ல' எனவும், அவள் பயத்துடனே சன்னமாக 'ம்ம்?' என்றாள்.

"இல்ல, என் ஷ்ரதாவுக்கு என்னைப் பிடிக்காம இல்ல.." என்றான் அவன்.

"அப்புறம் ஏன் நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கல?"

கேள்விக்கான விடைதேடி சிவனேஸ்வரனின் நினைவுப் பயணமும் தொடங்கியது.


********************


"ஐ லவ் யூ"

திக்குமுக்காடிப்போனான் சிவனேஸ்வரன்.

யாரைப்பார்த்து கத்திக்கொண்டிருக்கிறான் இந்த வீசி என்ற கேள்விக்கு இப்போது இடமேயில்லை.

ஏனெனில், வெளியே நின்ற ஷ்ரதாவின் பிங்க் நிற ஸ்கூட்டியைப் பார்த்து தானே தன் வண்டியையே நிறுத்தியிருந்தான் அவன்.

'துரோகி! பச்சைத்துரோகி! எவ்வளவு முறை ஷ்ரதா மீதான என் காதலை இவனிடம் சொல்லியிருப்பேன்? இன்னும் நான் என் உள்ளக்கிடக்கை அவளிடம் சொல்லக்கூடயில்லையே.. அதற்குள் பாவி முந்திக்கொண்டானே.. நான் ஒரு மடையன்! அப்பா அட்டைப்பூச்சி லேசுபட்டதல்ல; ஒட்டிக்கொண்டால் ரத்தத்தை உறிஞ்சாமல் விடாது சிவா என்று பலமுறை அறிவுறுத்தியும், என் தோளில் இடம் கொடுத்தேனே.. ம்ம், எனக்கு இது தேவை தான்! எவ்வளவு பெரிய ஒழுக்கசீலன் என்று ஷ்ரதாவை இவனிடம் அனுப்பி வைத்தேன்.. இவன் அக்கா, அண்ணனை வளைத்துப்போட்டாள் என்றால் இவன் தங்கையை வளைத்துப்போட பார்க்கிறான்.. தூப்! மானங்கெட்ட குடும்பம்' என்று உள்ளுக்குள் பொருமினான்.

"அதான் ஐலவ்யூ சொல்லிட்டேனே.. ப்ளீஸ் கையை கட் பண்ணிடாத.. அந்த ரம்பத்தை கீழேப்போடு ஷ்ரதா" என்று பதறினான் வீசி.

'அவளை மயக்கி தன்னை காதலிக்கும்படி செய்துவிட்டு, இப்போது அவள் தான் என்னவோ தன்மீது பைத்தியமாகிக்கிடப்பது போல் நடிக்கிறானே! மோசக்காரன்! கூடயிருந்தே கழுத்தறுத்த துஷ்டன்.. அன்னைக்கு இதனால தான் எனக்கு ஆறுதல் சொல்லக்கூட முடியலையா இவனுக்கு.. ம்ம், குற்றவுணர்வு குத்தியிருக்கும்.. உன் சந்தோசம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது வீசி" என்று கருவியபடியே சென்றுவிட்டான் சிவனேஸ்வரன்.

ஷ்ரதா ரம்பத்தை கீழேப்போட்டுவிட்டு முகத்தை மூடி அழுதாள்.

'ப்ச்' என்று சலித்தபடியே அருகில் வந்த வீசி, "அதான் ஐலவ்யூன்னு சொல்லிட்டேனே.. அப்புறமும் ஏன் அழற?" என்று அதட்டினான்.

அவள், "நீங்க சும்மா தான் சொன்னீங்க, எனக்குத் தெரியும்" என்றாள் அழுகையினூடே.

எல்லாம் சரியாகத் தெரிந்துகொண்டே குழந்தை போல நடப்பவளை என்ன செய்வது? அவனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்தால் தலையிலேறி உட்கார்ந்து கொள்வாளோ என தனது சுபாவத்தை விட்டுக்கொடுக்காமலே சொன்னான், "சும்மா எல்லாம் சொல்லலை" என்று.

உண்மையில் இவ்வாக்கியத்தை முதலில் தான் தன் மனதில் பதிய வைக்கவே முயன்று கொண்டிருந்தான் வீசி.

நிச்சயம் அவனுக்கு அவள் மீது காதல் எல்லாம் இல்லை என்று தெரியும். அந்தக்கருமம் வராமலிருப்பதுவும் இப்போது தலையாய பிரச்சினையில்லை.

ஆனால், இந்த 'ஐலவ்யூ' ஏதோ ஒரு கட்டாயத்தில் வந்த உளறலாக இருந்தாலும் அவனுக்கு சிறிதுகாலம் காதல் பண்ணிப்பார்த்தால் தான் என்னவென்று தோன்றியது. காதல் செய்த அனைவருமேவா கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? அந்த நம்பிக்கை தான் அவனுக்கு துணிவைத் தந்தது.

"அப்போ உண்மையாத்தான் சொன்னீங்களா?"

'ம்ம்' என்றுவிட்டு கல்லாப்பக்கம் சென்று உட்கார்ந்தான்.

அவள் லஜ்ஜையோடு தயங்கியபடியே அவனருகில் வந்து நின்றாள். அவன் பதிவேட்டையேப் பார்த்துக் கொண்டிருந்தான். காதலை சொல்லிவிட்ட பின் அடுத்தக்கட்டம் என்ன என்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது அவனிடம்.

வந்தவள் அங்கிருந்த ஒரு தாளில் தனது போன் நம்பரை எழுதி அவனருகில் நகர்த்திவைத்தாள்.

அவன் பார்த்து தனது நோக்கியா போனில் பதிவுசெய்து கொண்டான். மனம் 'நெக்ஸ்ட்? நெக்ஸ்ட்?' என்றது.

அவள் "உங்க நம்பர்?" என்றாள் கீழே குனிந்துகொண்டே.

அவன் வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே நுழையவும் கத்தரித்தாற்போல, "போன் பண்ணி சொல்றேன்" என்றான்.

அவள் ஏமாற்றமாக, 'ம்ம்' என்று தொங்கிய முகத்துடன் வெளியே கிளம்பினாள்.

உள்ளே நுழைந்த வாலிபன் கதைசொல்லி கி.ராவின் சிறுகதை தொகுப்பை வாங்கிக்கொண்டு வெளியேறிவிட்டான்.

வீசி ஷ்ரதா ஸ்கூட்டியை கிளப்பி சென்றுவிட்டாளா என்று இருக்கையிலிருந்து எழுந்து எட்டிப்பார்த்தபோது, மீண்டும் உள்ளே வந்து, "உண்மையாத்தான் சொன்னீங்களா?" என்று அவனை திடுக்கிடச் செய்தாள் ஷ்ரதா.

அவன் பொத்தென்று நாற்காலியில் விழுந்தவன், ஆமாமென்று கத்தவும் அரண்டு ஓடிவிட்டாள் ஷ்ரதா.

சிறிதுநேரம் கடுமையாகவே முகத்தை வைத்திருந்தவன், பிறகு தன்னாலயே சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

ஷ்ரதாவின் குழந்தைத்தனமான செயல்கள், அவளது காதல் நிச்சயம் தன்னை பாதிக்காது என்ற எண்ணத்தை அவனுக்குள் வலுப்படுத்திவிட்டன.

LFRTwRgEAdxyOZ_YEJp8KSRvMpgpS6U3j2cepPnZdrLj17d28C7n2Ayrzv2BWcZVFBbUW2Pog9ONz1X8TT7VGA-DH54-2ncEUEBfbyH8pT0cjZh7f54pH8E5mKggs90Ywl6DGH3I


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

வாங்க! இந்த வண்டில ஏறிப்போய் இந்த வீசி என்னதான் நினைக்கிறான்னு ஒரு எட்டு கேட்டுட்டு வந்திடலாம்.

கருத்துத்திரி,

🚃🚃🚃🚃🚃🚃
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 25​



காலத்தின் கால்களில் சக்கரத்தை கட்டிவிட்டுச் சென்றவர், காதிலும் 'கடமை கண் போன்றது' என்று அறிவுறுத்திவிட்டு சென்றிருக்க வேண்டும். அதற்குள் கடமை உணர்ச்சியில் நாட்காட்டியில் எழுவரை டிஸ்மிஸ் செய்திருந்தது.

அந்த டிஸ்மிஸ் கணக்குப்படி பார்த்தால் ஷ்ரதா வீசியிடம் ஐலவ்யூ சொல்லி இன்றோடு ஒரு வாரம்.

செல்லும்போது அவனிடம் போன் நம்பர் கொடுத்துவிட்டு வந்த ஷ்ரதா ஒவ்வொரு நாளும் அவனிடமிருந்து போன் வராதா என்று ஏங்கி துடித்துவிட்டாள்.

ஆனால், வீசியோ 'என்ன போன் நம்பர் கொடுத்துட்டு அவபாட்டுக்க போயிட்டா.. போன் பண்ணி என்னத்தை பேசுறது? நாம போன் பண்ணி பேச ஆரம்பிச்சா நாமே தேடிப்போய் வழியிற மாதிரி ஆயிடும்' என்று ஆர்வம் இருந்தாலும் அடக்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போலவே நடித்தான்.

ஷ்ரதாவுக்கு பொறுமையில்லை. நேரே அவனைத்தேடி புத்தகக்கடைக்கே வந்துவிட்டாள்.

வந்தவள் உள்ளே சென்று புத்தகம் எதையோ தீவிரமாக தேடுவதுபோலவே சிறிதுநேரம் பாவலாக் காட்டினாள்.

அவளருகில் வந்தவன், "என்ன புக் மேடம் வேணும்?" என்று அவளை சீண்ட,

"ஷிவா அத்தான் முன்னாடி அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டதுக்குத்தான் சாரி சொல்லிட்டேனே?" என்று சட்டென்று அனிச்சம் மலர்போல் முகம் வாடிவிட்டாள் ஷ்ரதா.

பிறகு, அவளாகவே ஒரு புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்து, "நம்பர் கொடுத்தும் ஒண்ணும் பேசலையே.." என்றாள். பயம் தான். ஆனாலும் ஆசை உசுப்பேற்றிவிட்டது.

அவன் இப்போது ஏதாவது கூறவேண்டுமே என்ற நிர்பந்தத்தில், "நம்பர் தெரியாம டெலிட் ஆயிடுச்சி" என்றான்.

ஆனால், அதற்குள் அவளுக்குத்தான் கண்கள் கரித்துக்கொண்டு வந்துவிட்டது.

அவளை கவனித்துக் கொண்டிருந்த வீசி ஆவேசமாக, "எப்போப்பார்த்தாலும் கண்ணீரை கண்ணுல ஸ்டாக் வச்சிட்டே இருப்பியா? எரிச்சலா இருக்கு நீ அழறதைப் பார்க்க.. நீயா புரிஞ்சிக்க மாட்டியா? வேலையில இருக்கும்போது எப்படி போன் பேச முடியும்? நீ எப்போ ஃப்ரீயா இருப்பேன்னும் எனக்குத் தெரியாது.. உனக்கு டிஸ்டர்ப்பா இருக்குமேன்னு தான் பேசலை.." என்று தன் கையிலிருந்த புத்தகத்தை தலைப்பெழுதிவிட்டு அவளிடம் கொடுத்தான்.

அவள் பிரவுன் பூப்போட்ட கைக்குட்டையால் தன் கண்ணை துடைத்தபடியே, "இல்ல, டிஸ்டர்ப் எல்லாம் இல்ல.. நீங்க நைட் வேலை முடிச்சி நைன் தேர்ட்டிக்கு மேல கூட எனக்கு போன் பண்ணி பேசலாம்.." என்றாள்.

'அப்பா! சட்டு சட்டுன்னு மூக்கு சிவந்துபோயிடுறா! எங்கயிருந்து தான் இவளுக்கு மட்டும் மேட்ச் மேட்ச்சா கர்ச்சீப் கிடைக்குமோ தெரியல?'

ஷ்ரதா செல்லும்போது, "அடிக்கடி எங்க காலேஜ்ல செமினார் வைக்குறாங்க" என்று சொல்லிவிட்டுப் போனாள். இவ்வகையால் நான் அடிக்கடி புத்தகம் தேடி இங்கு வருவேன் என்று குறிப்பால் சொல்லிவிட்டுப்போனாள். புரியாமல் போக வீசி ஒன்றும் குழல்விளக்கு அல்லவே.

வீட்டிற்குச் சென்ற ஷ்ரதா தான் கொண்டு வந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை திறந்து பார்த்தபோது தனது செல்போன் எண்ணை பென்சிலால் கிறுக்கி வைத்திருந்தான் வீசி.

பார்த்த உடனே பனிக்கட்டியைத் தூக்கி தன் கன்னங்கள் இரண்டிலும் வைத்தது போல ஜில்லென்று உணர்ந்தாள் ஷ்ரதா. 'காதல் அவருக்குள்ளும் கனிந்துவிட்டது' என்றவள் மனம் குத்தாட்டம் போட்டது.

பொறுக்க முடியாமல் அடுத்தநாள் மாலை ஆறுமணி எப்போதடா ஆகும் என்று விநாடிகளை முதுகில் சுமக்கத் துவங்கியவளுக்கு, ஆறுமணி ஆனபோது மதுப்பிரியனை போல கை நடுக்கம் கொண்டது. போனில் பதினோரு முறை பட்டன்களைத் தட்டி கட் செய்துவிட்டாள். பிறகு, போன் பேசவேண்டாம். மெசேஜ் அனுப்புவோம் என்ற சமாதானத்திற்கு வந்தாள்.

துவக்க உரையாடலாக அவனுக்கு, 'gud evg 😊' என்று அனுப்பி வைத்தாள்.

வீசி போனின் செய்தி அதிர்வில் கையிலெடுத்துப் பார்த்தான். அவளின் குட் ஈவினிங்கில் பெரிதாக ஆர்வமில்லையானாலும் பதிலுக்கு 'gud evg' என்று அனுப்பி வைத்தான்.

அந்த செய்தியை பச்சைக்கொடி அசைவாக எடுத்துக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தாள் ஷ்ரதா.

@@@@@

Shraddha: Tq 4 ur reply
Shraddha: Busy???

Vc: Mm

Shraddha: Sorry 😞
Shraddha: Important work???

Vc: No

Shraddha: 😃

Vc: Apram?

Shraddha: I Love you

Vc: sari

Shraddha: 😞
Shraddha: Ipo ungaluku call pannalama

Vc: Mm

@@@@@

இந்த ஆண்-பெண் உரையாடலில் mm-ஐ மட்டும் பார்ப்பவர்கள், நிச்சயம் வீசியை ஒரு பெண்ணின் பேக் ஐடி என்றே கருதக்கூடும்.

ஷ்ரதாவின் அழைப்பை ஏற்றவுடன் எதிர்புற பதிலுக்காக காத்திருந்தான் வீசி.

ஷ்ரதாவுக்கு இது முதல்முறை என்பதால் நெஞ்சு ரொம்பவே திக்கிற்று. "ஹலோ" என்று மென்மையாக சொன்னாள்.

பதிலுக்கு அவனும் குரலின் கடுமையை குறைத்து, "ம்ம் சொல்லு" என்றான்.

அவன் குரல் கனிந்திருந்த தைரியத்திலும், போனில் என்பதாலும் இயல்பாக பேசத்துவங்கினாள் ஷ்ரதா. "உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொன்னீங்கன்னா.." என்று இழுத்தாள்.

"தெரிஞ்சிட்டு என்ன செய்யப்போற?" கேள்வி கறாராய் வந்தது அவனிடம்.

ஷ்ரதா துணிச்சலாக சொன்னாள். "தெரிஞ்சிட்டு.. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குவேன்.." என்று.

வீசிக்கு அந்த பதில் ரசிக்கவில்லை. 'நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதில் உன்னை என்பது மொத்தமாகத் தானே? இல்லை பகுதியாகவா? இந்தக்காதல் ஏன் நீ எனக்குப் பிடித்த மாதிரி மாறு; நான் உனக்குப் பிடித்த மாதிரி மாறுகிறேன் என்று இருவரையும் கோமாளியாய் மாற்றுகிறது?'

அவனிடமிருந்து கேள்வி விட்டேற்றியாய் வந்தது. "நான் என்னத்த சொல்ல? நீ தான் சொல்லேன்.. உனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு.."

முதலில் அவன் பேச்சு சுணக்கத்தைக் கொடுத்தாலும், பிறகு உற்சாகமாக சொல்லத் துவங்கினாள் ஷ்ரதா. "எனக்கு என் அப்பாவை ரொம்பப் பிடிக்கும்.. எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்திருவாரு.. நேத்து ஒரு காமெடி நடந்தது எங்க வீட்டுல.. நான் கிராப் வரையறதுக்காக பென்சில் கேட்டேனா? முகிலண்ணா தப்பான பிராண்ட் வாங்கிட்டு வந்துட்டாரு.. அப்பா இனி என் பொண்ணு என்ஜினீயராக நாலு வருஷம் ஆகும்; ஒவ்வொரு தடவையும் இது மாதிரி மறந்துட்டு வருவியான்னு பென்சில் பிராண்ட் நேமை அவரு கையிலயே பச்சைக்குத்தி விட்டுட்டாரு" என்று ஹாஸ்யம் போல சொல்லி உரக்கச் சிரித்தாள்.

வீசிக்கு விறுவிறுவென்று வந்தது. 'என்னவொரு சர்வாதிகாரத்தனம் இது! இதைப்போய் நகைச்சுவை போல் சொல்லி சிரிக்கிறாள் என்றால் இவளுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்! ஹிம்! இவளைச்சொல்லி என்ன! வளர்ப்பு அப்படி..' என்று அவன் முகம் இன்னும் இறுகியது.

எதிர்புறம் இருப்பவளுக்குத் இது தெரிய வாய்ப்பில்லாததால் "ஹலோ! ஹலோ! வருணத்தான்" என்றாள்.

அவன் வருணத்தானில் சுதாரித்து, "என்ன சொல்லிக் கூப்பிட்ட?" என்றான்.

அவள் தன் நாக்கையே கடித்துக்கொண்டு, "அது தனியாயிருக்கும் போது உங்களை அப்படி சொல்லி கூப்பிட்டுப் பார்ப்பேனா, அதுவே இப்போ பேசும்போதும் வாய்தவறி வந்திருச்சி.." என்றாள்.

"தனியாயிருக்கும் போது என்னை நினைச்சி பார்ப்பியா?" இக்கேள்வியை கேட்டுவிட்டு அவசரப்பட்டுவிட்டோமோ என்று நினைத்தான் வீசி.

'ம்ம்' என்று முனகலாக பதில் வந்தது அவளிடம்.

அவள் சொன்னது உண்மையா பொய்யா என்று வீசி ஆராய விரும்பவில்லை. ஏனெனில், அவனுக்கு அப்பதில் ஒருவித பரவசத்தைக் கொடுத்தது. சிறிதுநேரம் கண்ணை மூடி அனுபவித்தான்.

அது தெரியாமல் ஷ்ரதா பாட்டுக்க உளறிக்கொண்டேப்போனாள். "எங்க வீட்டுல ஒரு டெடி இருக்கு.. அதுக்கு பேரு நிலவ்.. அது இல்லாம எனக்கு நைட் தூக்கமே வராது.. சொல்லப்போனா அதுவும் எனக்கு ஒரு ஃப்ரெண்ட் மாதிரி.. அப்புறம் எனக்கு பூனைக்குட்டின்னா ரொம்பப் பிடிக்கும்.. என் பிரெண்ட் தாரிணி வீட்டுல ஒரு கிட்டி இருக்கு.. ஒரு தடவை அது என் பாவாடைல மூத்திரம் பேஞ்சி வச்சிருச்சி.." என்றொரு களுக்.

"அப்புறம்? ஆங்! பஞ்சுமிட்டாய்னா எனக்கு ரொம்பப்பிடிக்கும்! அய்யயோ! முருகனை விட்டுட்டேன் பாருங்க.. முருகபெருமான் வந்து என்னோட பாய் பெஸ்டி.. அவர்கிட்ட வேண்டுவேன், கொஞ்சுவேன், கெஞ்சுவேன், சண்டைபோடுவேன் எல்லாம் பண்ணுவேன்" மீண்டும் ஒரு கெக்கப்பிக்கே.

'சிரிப்பும் அழுகையும் இவளுக்கு அலுக்காத விஷயங்கள் போலும்' வீசி தன் தலையை ஆட்டிக்கொண்டான்.

எப்போதும் இந்நேரத்திற்கு பொழுதுபோகாமல் புத்தகம் படித்துக் கொண்டிருப்பவனுக்கு இப்போது அவளிடம் பேசிக்கொண்டிருப்பது நல்ல மாறுதலாகவே தோன்றியது.

பேசிக்கொண்டிருக்கும் போதே யாரோ திடீரென 'ஷ்ரதா' என்று அழைத்துக்கொண்டே அவள் அறைக்குள் நுழைய, ஷ்ரதா பேசுவதை நிறுத்திவிட்டாள்.

ஆனால், வீசிக்கு தொடர்ந்து பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

"ஷ்ரதா, உனக்கு என்ன கொண்டு வந்திருக்கேன் பாரு" என்று கேட்ட குரலை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை வீசிக்கு.

'சிவனேஸ்வரன் ஷ்ரதாவின் வீட்டில் இப்போது என்ன செய்கிறான்?' என்றே யோசித்தான்.

யோசனையை திசைதிருப்பியது சிவனேஸ்வரனின் உற்சாகக்குரல். "ஷ்ரதா, டொட்டடொயிங்!"

"ஹை! கருப்பட்டி பனியாரம்!"

"ம்ம், அம்மா செஞ்சது ஷ்ரதா.. நான் உனக்குப் பிடிக்குமேன்னு எடுத்திட்டு வந்தேன்.."

சாப்பிட்டுப் பார்த்தாள் போல ஷ்ரதா, "செம டேஸ்ட் அத்தான்" என்றாள்.

சற்று முன்பு வருணத்தானை நேசித்த வீசி, தற்போது அத்தான் என்ற சொல்லையே முற்றிலுமாய் வெறுத்தான். மதுரை வட்டாரவழக்கில் முறைப்பையன்களை அழைக்க அதிகம் பயன்படுத்தப்படும் சொல் 'மச்சான்' தான். இன்னும் தமிழகத்தின் தெற்கு ஓரத்திற்கு சென்றால் தான் 'அத்தான்' என்ற புழக்கத்தைப் பார்க்கலாம். காசிராஜனின் பூர்வீகம் வாஞ்சி மணியாச்சி பக்கம் என்பதால் அந்தப்பக்கமிருந்து வந்த வார்த்தையை கேலியாக சொல்லிப்பின் அதையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள் ஷ்ரதா.

"அய்யோ! அதையெல்லாம் தொடாதீங்க அத்தான்" என்று சிணுங்கல் சத்தம் கேட்டபோது உண்மையில் பதறிவிட்டான் வீசி. அடுத்த வார்த்தை தான் அவனை ஆசுவாசமடையச் செய்தது. "அது என் டெடி"

"வாங்கிக்கொடுத்தது நான் தானே ஷ்ரதா? பெர்த்டே கிப்ட்டா கொடுத்தேனே?"

"அதுக்குன்னு"

"சரி தொடலை.. ஷ்ரதா நீ ராஜாராணின்னு ஒரு படம் வந்திருக்கேப் பார்த்தியா?"

"இல்லையே அத்தான் பார்க்கலையே.. யார் நடிச்சது? கதை என்ன?"

சொன்னான் சிவனேஸ்வரன். வீசியும் அவன் சொன்ன கதையை கேட்டுக்கொண்டு தான் இருந்தான். கதையின் முடிவில் ஷ்ரதா, "பாலுமகேந்திராவோட நெஞ்சத்தை கிள்ளாதேவையும், மணிரத்தினத்தோட மௌனராகத்தையும் மிக்ஸ் பண்ணின மாதிரி இருக்கு அத்தான்" என்றாள்.

சிவனேஸ்வரன், "உன்கிட்டபோய் கதை சொன்னேன் பாரு" என்று அவள் மேல் பில்லோவை எறிவதும், அதற்கு அவள் சிரித்து அவனைக் கடுப்பேற்றுவதும் ஒலிநாடகமாகக் கேட்டுக்கொண்டிருந்தது வீசிக்கு.

கூடுதல் பத்துநிமிடங்கள் செலவிட்டுவிட்டு சிவனேஸ்வரன் கிளம்பியபோது தான் வீசியின் ஞாபகமே வந்து, போனை எடுத்துப்பார்த்தாள் ஷ்ரதா.

அது இன்னும் அணைக்கப்படாமல் இருக்கவும் காதில் வைத்து 'ஹலோ' என்றாள்.

வீசி அசுவாரசியமாய், "என்ன? சிவா போய்ட்டானா?" என்றான்.

"ம்ம் போயாச்சி.. நீங்க இவ்ளோநேரமும் நாங்க பேசினதை கேட்டுக்கிட்டா இருந்தீங்க?"

"ஆமா, உனக்கு கருப்பட்டி பனியாரம்னா ரொம்ப பிடிக்குமோ?" ஏளனமாகத் தான் கேள்வி வந்து விழுந்தது.

"ஆமாங்க, கருப்பட்டி பனியாரம், பருப்புப்போலி, பருத்திப்பால், பால் கொழுக்கட்டைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

அவள் போனில் அடுக்கிக் கொண்டிருக்கும் போதே எதிரில் நாகூர் அண்ணா டீ கொண்டுவருவதைப் பார்த்து, மணி ஏழாகிவிட்டதை உணர்ந்து டக்கென்று, "அப்புறம் பேசறேன்" என்று அழைப்பை துண்டித்துவிட்டான் வீசி.

முதல்முறை ஷ்ரதாவுக்கு வீசியின் மேல் கோபம் வந்தது. அது அவன் தங்கள் பேச்சை ஒட்டுக்கேட்டதற்காக அன்று. அவன் டக்கென்று அழைப்பை துண்டித்துவிட்டானே என்று தான்.

மறுநாள் மாலையில் ஆறுமணிக்கு ஷ்ரதா ரிங் விட்டபோது எடுக்கும் சூழல் இருப்பினும் போனை கட்செய்துவிட்டான் வீசி.

தனக்கு அவனுடன் பேச கிடைத்த அந்த பொன்னான ஒன்றரை மணிநேரத்தையும் வீணாக்க விரும்பாதவள் போல் ஷ்ரதா பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து மிஸ்டுகால் அனுப்பிக்கொண்டேயிருந்தாள். வீசி ஒருகட்டத்தில் போனை சைலென்ட் மோடில் போட்டுவிட்டான்.

அன்றிரவு வேலைமுடிந்து வீடு திரும்பும்போது அவன் போனை எடுத்துப் பார்த்தபோது ஷ்ரதாவிடமிருந்து இருபது எண்ணிக்கையில் மிஸ்டுகால் வந்திருந்தது. வீசிக்கு ஒருவள் தன்னை இந்தளவுக்கு தேடுவது ஒருபுறம் சுகமாக இருந்தாலும், இன்னொருபுறம் நாம் வீம்பாக இருந்திராமல் போனை எடுத்துப் பேசியிருக்கலாமோ என்று மனத்தாங்கலாக இருந்தது. அதனால் அடுத்தநாள் மாலை அவள் அழைப்பு விடுக்கும்போது, எடுத்துப் பேசுவோம் என்றிருந்தான்.

ஆனால், அவன் எதிர்பார்த்தபடி ஷ்ரதா அவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

வீசி சத்தம் வரவில்லையானாலும் அடிக்கடி போனை தூக்கிப் பார்த்த வண்ணமே இருந்தான்.

நிமிடமுள் ஆறரை ஏழு என்று நகர நகர பொறுமையை இழந்தவனாய், தானே அவளுக்கு போன் போட்டான். ஆனால், எதிர்புறம் 'பிஸி.. பிஸி' என்று வந்தது. தொடர்ந்து மூன்று முறை முயற்சித்தான். அதேபோல் தான் வந்தது. யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் இவள் என்று சம்பந்தமேயின்றி அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. நேற்று தான் எடுக்காதபோதும் அவளுக்கு இப்படி தானே இருந்திருக்கும் என்றவன் யோசிக்கவே இல்லை.

நான் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். ஆனால், அவள் என்னை உச்சாணிக்கொம்பில் தூக்கி வைக்க வேண்டும் என்பதுபோல் தான் அவனது ஆசையும் நடவடிக்கையும் இருந்தது.

அடுத்த நாள் மாலை ஆறுமணிக்கும் அதேபோல் போனைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். ஆனால், இம்முறை போனில் அல்லாமல் நேரிலேயே வந்திருந்தாள் ஷ்ரதா.

வீசி தன்னைத்தேடி வந்தவளிடம் கோபத்தைக் காட்டும் விதமாக ஒருவார்த்தை பேசவில்லை. அப்புறம் செய்யலாம் என்று கிடப்பில் போடும் வேலையையெல்லாம் தலைபோகும் அவசரத்தில் செய்து கொண்டிருந்தான்.

வந்தவள், "எங்க வீட்டுல ஆதி அத்தான்கிட்ட பேசச்சொல்லி கம்பெல் பண்றாங்க.." என்றாள்.

அவன் அவள் முகத்தைக்கூட நிமிர்ந்துப் பார்க்கவில்லை. "கோகிலா அத்தை என் போன் நம்பரை வேற அத்தான் கிட்ட கொடுத்திருக்காங்கப் போல.. அத்தான் அடிக்கடி மெசேஜ், போனுன்னு பண்ணி டார்ச்சர் பண்றாங்க.." என்றாள்.

அவன் குத்தலாக, "ஓ! அதான் நேத்து உங்களுக்கு போன் பண்ணினபோது பிஸி பிஸின்னு வந்ததா?" என்றான்.

ஷ்ரதா மனம்வாடி, "ம்ம்" என்று தலையாட்டினாள். அவன் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான்.

அவன் என்ன நினைக்கிறான் என்றே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. "பேசாம அத்தான்கிட்ட நாம லவ் பண்றோம்ன்னு சொல்லிடவா?" என்றாள்.

'குடியே முழுகிடும்' சட்டென்று நிமிர்ந்த வீசி, "இல்ல, இப்போ சொல்ல வேணாம்" என்றான்.

"இல்ல, அத்தான் மனசில ஆசையை வளர்க்கிற மாதிரி இருக்கு.. இப்போவே சொல்லிடுறது நல்லது இல்லையா?"

"ம்ஹீம், உங்கப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகிடும்.."

'இப்போ நான் இருக்கிற பிரச்சனை உங்களுக்குப் புரியலையா?' என்று கேட்டால் கடுவன்பூனை மரஉச்சியில் ஏறி உட்கார்ந்துகொள்ளுமே என்று ஷ்ரதா தன்மையாக சொன்னாள். "இல்லங்க, ஆதி அத்தான்கிட்ட உண்மையை சொல்லி, சொல்லவேணாம்னு சொன்னா யார்கிட்டயும் சொல்லமாட்டாங்க.. அப்படியே சொன்னாலும் அப்பா முதல்ல கோபிப்பாங்க.. பின்னாடி ஓகே சொல்லிடுவாங்க.."

'இவளென்ன தன்னை சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளா? இவள் அப்பாவை ஏன் இவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை?' பல யோசனைகள் ரோடு கிராஸ் பண்ணின வீசியின் மூளைக்குள்.

"உனக்கு நான் இங்க வேலைப் பார்க்கிறது பிடிக்கலையா என்ன?" என்றான் ஒரே போடாக.

"இல்லங்க, அது வந்து"

"உன் அப்பா எவ்வளவு மோசமானவருன்னு தெரியாம பேசற.. சிவா அண்ணனை முடிஞ்சளவு அவாய்ட் பண்ணு.. சீக்கிரம் அவரே புரிஞ்சிப்பாரு.."

'புரிந்து கொண்டால் நல்லது தான். ஆனால், புரிந்து கொள்வாரா ஆதி அத்தான்?' யோசனையுடனே ஷ்ரதா, 'ம்ம்' என்று வெளியேறப்போனவள், "நீங்க ஃப்ரீனா ஒருநாள் வெளிய எங்கேயாவது போகலாமா?" என்று தயக்கமாக கேட்டாள்.

கண்டிப்பாக அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக்கழிப்பான் என்றே எதிர்பார்த்தாள். ஆனால், மாறாக வீசி யோசிப்பது போல் இருந்தது.

இதுவரை அவன் வெளியே என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால், போனால் நன்றாகயிருக்குமே என்று நினைத்தான். "லீவ் போடுறது கஷ்டம் தான்.. ஆனா, போறதுனா எங்கப்போறது?" என்றான் குழப்பமாக.

அவள் ஆர்வமாக, "திருப்பரங்குன்றம் போலாமா? இங்க பக்கத்துல எங்கப்போனாலும் அப்பாவுக்கு தெரிஞ்சிடும்" என்றாள்.

அவனும் போய் பார்க்கலாமே என்று சரியென்றான்.

சொல்லி வைத்தபடி மூன்று நாட்களுக்குப்பின், அவள் அவளது கல்லூரி வாசலில் துப்பட்டாவை முகமூடிபோல் சுற்றிக் காத்திருக்க, வீசிபோய் அழைத்துக்கொண்டான்.

பேருந்தில் செல்லும்போது கூட்டமாக இருந்ததால் இடம் கிடைக்காமல் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் ஷ்ரதா. அவளது முகமூடிக்கும் அதுக்கும் வெந்து தணிந்துவிட்டாள். வீசியிடம் இச்சமயத்திற்கு ஒரு பைக் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஓடிய எண்ணத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

பேருந்தில் படியருகில் நின்றிருந்த வீசியை எட்டிப் பார்த்தபோது அந்த ஆசை, அசௌகரியம் என்று எதுவும் அவனிடம் காணப்படவில்லை. இதெல்லாம் சகஜம் என்பதுபோலவே நின்றிருந்தான்.

திருப்பரங்குன்றம் சென்றடைந்தபோது புதுஉற்சாகம் வந்து தொற்றி, இருவருமே ஆர்வமாக மலையேறத் தொடங்கினார்கள்.

ஷ்ரதா அவனிடம் வளவளவென்று பேசிக்கொண்டே வந்தாள். அந்த கல்கட்டியான பாதையில் செல்லச்செல்ல முருகனை தனக்கு எந்தளவு பிடிக்குமென்று விவரித்தபடியே வந்தாள். திடீரென ஓரிடத்தில் நின்று "நமக்கு கல்யாணம் பழமுதிர்ச்சோலைல தான் நடக்கணும்" என்று தீர்மானமாக சொன்னாள்.

அவன், "ஹப்பா! இவ மனக்கோட்டை கட்டுறதுல வல்லவி" என்று முணுமுணுத்தான்.

இருவரும் சென்றது உச்சிவெயிலில் தான். ஆனால், கீழிலிருந்து செல்லும் பாதையில் இருபுறமுமே அடப்பமாக மரங்கள் நின்றிருந்ததால் சூரியனுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது போலவே இருவரும் சென்று கொண்டிருந்தார்கள்.

சில இடங்களில் பாறை படிகட்டுகள் கூடயின்றி மலையில் செதுக்கி வைத்த பிடிப்புகளின் மீது ஏறி சென்றார்கள். வீசி அவளுக்கு கைகொடுத்து உதவினான்.

வழியில் கண்ட பாறைகளிலெல்லாம் முருகவேல்-கவிதா, ராமசாமி-தங்கலெட்சுமி என்று முன்னாள் காதலர்கள் தங்கள் முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருக்க, ஷ்ரதாவும் அவர்களை பின்பற்றி, ஒரு பாறையில் வருண் சக்கரவர்த்தி-ஷ்ரதாஞ்சலி என்று எழுதி ஹார்ட்டீன் வரைந்து அம்புவிட்டாள். ஒரு மழையில் அழிந்துவிடும் லட்சணத்தில் தான் அந்த கல்கிறுக்கல் இருந்தது.

முன்னே சென்று கொண்டிருந்தவன் பின்னால் திரும்பிப் பார்த்து, "என்ன பண்ற? வா" என்று ஒரு அதட்டல் போட்டான்.

ஷ்ரதா கல்லைப்போட்டுவிட்டு, "ஆங்! வரேன்" என்றபடியே அவன் பின்னேயே ஓடினாள். அதன்பின், சென்று கொண்டிருக்கும்போதே ஓரிடத்தில் நிழலாகப் பார்த்து சோர்ந்து உட்கார்ந்துவிட்டாள்.

அவளருகில் வந்தவன், "கோவில்கிட்ட வந்தாச்சி.. எழுந்திரு ஷ்ரதா" என்று தனது முதுகில் தொங்கிய பையிலிருந்து தண்ணீர்பாட்டிலை எடுத்துக்கொடுத்தான்.

குடித்தவள் எதிரே ஆயிரம் அடி பள்ளத்தில் பச்சை பசேல் வயல்வெளிகளோடு தெரிந்த மதுரையை பார்த்துக்கொண்டே, "பசிக்கிற மாதிரி இருக்குல்ல?" என்றாள்.

அவன் தனது பையைத் திறந்து ஒரு செவ்வக வடிவ டிபன் பாக்ஸை எடுத்து நீட்டினான். ஷ்ரதா திறந்துப் பார்த்தவள், இன்பமாக அதிர்ந்தாள். அவளுக்கு பிடித்த பருப்புப்போலிக்கு கீழே அங்காங்கு தீக்காயங்களுடன் இரண்டு சப்பாத்தி ரோல்கள் இருந்தன.

வீசிக்கு அவள் சாப்பிடுவதைப் பார்ப்பதே ஒரு வேடிக்கையாக இருந்தது. சப்பாத்திக்கு வலிக்கும் போல் பிட்டு, குருமாவில் தோய்த்து வாய் கொள்ளாத அளவிற்கு அடக்கினாள் ஷ்ரதா. முதலிரண்டு மெல்லலில் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை. விழுங்கும்போது தான் குருமா வேலையைக் காட்டியது. "ஹா! உரைக்குது! உரைக்குது!" என்று கத்தி அங்கிருந்த குரங்குகளையெல்லாம் பயமுறுத்திவிட்டாள். தங்களுக்கும் சப்பாத்தி தருவாள் என்று பார்த்திருந்தவைகள் எல்லாம் பதறியடித்து ஓடின.

காரத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் அவள் குடித்து காலி பண்ண, வீசி அதற்காக அவளை கடிந்துகொண்டான். கோபத்தில் முகத்தை தூக்கி வைத்தபடியே எஞ்சிய படிகளையும் கடந்தாள் ஷ்ரதா.

உச்சியை அடைந்தபோது மணி ஒன்றாகியிருந்தது. மனித சஞ்சாரம் எதுவுமின்றி அமைதியாக இருந்த அந்த காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்றுவருவது என்பது காசிக்கே சென்றுவருவதற்கு சமம் என்பதால் பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரியன்று மட்டும் கூட்டம் களைகட்டும்.

இளசுகள் இருவரும் லிங்கத்தை வழிபட்டு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு கோவிலின் பின்புறமிருந்த மச்சிமுனி சித்தரை காணச்சென்றார்கள்.

மச்சிமுனி சித்தரைப் பற்றி ஒரு கதை உண்டு. அவர் சிவனை நோக்கி தவமிருந்து மீனாக மாறி அங்குள்ள சுனையில் நீந்துவதாக வட்டாரத்தில் ஒரு புனைவுண்டு.

பெரிய வெள்ளை மீனாக அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து காட்சிதரும் மச்சிமுனியைக் கண்டால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது அந்த பிராந்தியத்தில் உள்ளவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மச்சிமுனியைப் பார்க்க வரும் பக்தர்கள் அனைவரும் தயிர் பாக்கெட்டையும், பொறி பாக்கெட்டையும் வாங்கி வந்து மச்சிமுனி தீர்த்தத்தில் கொட்டுவார்கள். மச்சிமுனியும் யாரேனும் ஓரிருவருக்கு மட்டும் அருள்பாலித்து தன் மதிப்பை தக்கவைத்துக்கொள்வார்.

வீசி தான் ஏற்கனவே கீழே வாங்கி வந்திருந்த தயிர் பாக்கெட்டை உடைத்து நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டினான். ஷ்ரதா முகத்தை மூடிக்கொண்டு நின்றிருந்தாள்.

திடீரென குட்டி மீன்களுக்கிடையே ஒரு பெரிய வெள்ளை மீன் தோன்றி அவனை கலவரப்படுத்திவிட்டுச் சென்றது.

வீசி, "ஹேய் ஷ்ரதா! நீ மச்சிமுனியைப் பார்த்தியா? மச்சிமுனியைப் பார்த்தியா?" என்று ஆரவாரித்தான்.

எங்கேப் பார்க்க? அவள் தான் கண்களை மூடிக்கொண்டு நின்றிருக்கிறாளே!

சுனையைவிட்டு விலகி வந்ததும், "லூசு, நீ ஏன் மச்சிமுனியைப் பார்க்காம கண்ணை மூடிக்கிட்ட?" என்று திட்டினான் வீசி.

அவள் தனது சிறுவயது மீன் பயக்கதையை பேய்க்கதை லெவலுக்கு பில்டப் செய்து அவனுக்கு சொன்னாள். வீசி வாய்விட்டு சிரித்து மீண்டும் அவளுக்கு லூசுபட்டம் கட்டினான். ஆனால், அதில் அவளுக்கு துளிகூட கோபம் வரவில்லை. காற்று களைத்துவிட்ட சிகையில் அழகாய் தெரிந்தவனின் கம்பீரமே ஆட்டுக்குட்டியாய் அவன் காலடியில் அவளைக் கட்டிப்போட்டது.

சுனைநீரை குடித்துவிட்டு, தீர்த்தமென பாட்டிலிலும் கொஞ்சம் நிரப்பிக்கொண்டு மனநிறைவுடன் இருவரும் கீழே படியிறங்கினார்கள். ஏறும்போது இருந்த சோர்வும், கடினமும் இறங்கும்போது இருக்கவில்லை. யாரோ தங்களை கைபிடித்து, விறுவிறுவென கீழே இழுத்துச்செல்வது போலவே இருவரும் உணர்ந்தார்கள்.

தரைக்கு வந்ததும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து, "அவங்க எவ்ளோ ஃபாஸ்ட்டா பூ தொடுக்குறாங்கயில்ல?" என்று பூக்காரப் பெண்மணி ஒருவரைப் பார்த்து வியந்தாள் ஷ்ரதா.

வீசி அவளிடம் சங்கடத்தோடு, "உனக்கு பூ வேணுமா?" என்று கேட்டான்.

"இல்ல, மல்லிப்பூ வச்சா எனக்கு தலை வலிக்கும்.." என்றவள் தொடர்ந்து பூத்தொடுத்தலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த சமயம் பார்த்து ஷேட்டுப்பையன் ஒருவன் மணியடித்துக்கொண்டே பஞ்சுமிட்டாய் விற்றுக்கொண்டு செல்ல, "பஞ்சுமிட்டாய்" என்று கத்தி நிறுத்தி வீசிக்கும் சேர்த்து அவளே பஞ்சுமிட்டாய் வாங்கிக்கொடுத்தாள் ஷ்ரதா.

வாங்கியவள் அதை தன் கல்லூரியில் சென்று சாப்பிட்டு இருக்கலாம். ஆசையில் அங்கேயே பிரித்து வம்பில் மாட்டிக்கொண்டாள்.

தனது முகமூடியை அவிழ்த்து ஆர்வமாக பஞ்சுமிட்டாயை தின்று கொண்டிருந்தவள் தன்னை ஒரு ஸ்கார்பியோ கடந்து சென்றதை கவனிக்கத் தவறிவிட்டாள்.

NgikuwbN8SzKh_PAHDAiQlgqvuqqMkHSN313f-MMPgru0bdYW1hDQUnxG6fsYGu1KrZ_gonN2LDFAZAqwannNCwqVUjsUPj4ou6DArSOs6kNzQJJUMILLD6guB0jwJZkNDp9-EY7


காதல் கணம் கூடும்…​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

54 நாட்களில் 50 ஆயிரம் வாசிப்புகளை பெற்றிருக்கிறார்கள் ஷ்ரதாவும் வீசியும். உங்களின் ஏகோபித்த வரவேற்புக்கு நன்றி ப்ரெண்ட்ஸ்💋

கீழே உள்ள பள்ளத்தாக்கில் குதித்து என்னோடு கருத்துப்பரிமாறிக் கொள்ளலாம் ப்ரெண்ட்ஸ்😊

கருத்துத்திரி,
கருத்துப்பள்ளத்தாக்கு
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 26​



திருப்பரங்குன்றத்தில் ஷ்ரதாவை அடையாளம் கண்டுகொண்டவர், முருகனை தரிசிக்க காரில் குடும்பத்தோடு வந்திருந்த விஜயாதித்தனின் பால்ய சிநேகிதர் குமரகுரு.

அந்த மீசைக்காரர் சேதியை அப்படியே விஜயாதித்தனின் காதில் கொண்டுபோய் சேர்த்ததில் விஜயாதித்தன் உக்கிரமாகிவிட்டார்.

மீசைக்காரருக்கு வீசியை யாரென்று தெரியாததால், "பாப்பாவை ஒரு பையனோட திருப்பரங்குன்ற பஸ் ஸ்டாப்ல பார்த்தேன் விஜயாதித்தா.. பொறுமை காக்கணும்.. அது பாப்பா தான்னு உறுதியா எனக்குத்தெரியும்.. நான் வெளிய யார்கிட்டயும் சொல்லல.. பின்னாடி விஷயம் பெருசாகி நீ தலைகுனிஞ்சி நிற்கக்கூடாதேன்னு தான் லேசா உன் காதுல போட்டு வைக்கிறேன்" என்று சூடேற்றிவிட்டுப் போனார்.

விஜயாதித்தனால் ஷ்ரதாவை மன்னிக்கவே முடியவில்லை. 'என்னை ஊரார் முன்பு தலை குனிய வைக்கவே இவர்கள் எனக்கு பிள்ளைகளாக பிறந்திருக்கிறார்களா!'

விஜயாதித்தன் ஷ்ரதாவின் காதலனாக வீசியை யோசிக்கவில்லை. அவளது கல்லூரி நண்பர்களில் ஒருவராக இருக்கும் என்று நினைத்தார். மகனிடம் கற்றப்பாடத்தால் அதைப்பற்றி ஷ்ரதாவிடம் அவர் விசாரிக்க துணியவில்லை. ஏன் தன் மனைவி மீனாட்சியிடம் கூட சொல்லவில்லை. விஷயத்தை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளாமல் சுளுவாய் முடிக்க நினைத்தார். ஆதலால், நேரே தன் தங்கை கோகிலாவை சந்தித்து விசயத்தை உடைத்தார்.

பின் அவரிடம், "சொல்றதை சொல்லிட்டேன்.. சீக்கிரம் உன் பையனை இந்தியா வந்து என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு.. கல்யாணம் முடிஞ்ச பின்னாடி அவன் அங்க இருந்தாலும் சரி, இவ இங்க இருந்தாலும் சரி.." என்று தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டுப் போனார்.

கோகிலா விஜயாதித்தன் சொன்னதைச் சொல்லி ஆதீஸ்வரனை எச்சரித்தார். "உனக்கு கல்யாணம், இல்ல எங்களுக்கு கருமாதின்னு ஏதாவது ஒண்ணை சொல்லி உடனே இந்தியா வாடா" என்று நடுங்கினார்.

மகனும் ஒரு மாதத்தில் இந்தியா வந்துசேருமாறு கல்லூரி சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துவிட்டு டிக்கெட் புக் செய்துவிட்டான்.

கோகிலா அத்தோடு நில்லாமல் மறுநாளே விஜயாதித்தனின் வீடுதேடி வந்துவிட்டார். ஷ்ரதாவின் அறைக்குச்சென்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அவரது மூத்த மகனின் புஜபல பராக்கிரமத்தைப் பற்றியும், அவன் அவள் மீது கொண்டுள்ள ஆசையைப் பற்றியும் எடுத்துரைத்தார். ஷ்ரதா சங்கோஜமாக நெளிந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள்.

செல்லும் போது கோகிலா அவளது விரலில் மோதிரம் ஒன்றை போட்டுவிட்டு, ஆதீஸ்வரன் அவளுக்காக பிலிப்பைன்ஸிலிருந்து அனுப்பியது என்று சொல்லி, கழற்றவே கூடாது என்று எச்சரித்தார்.

ஷ்ரதா அயற்சியாக அந்த மோதிரத்தைப் பார்த்தாள். பத்தாததிற்கு அவர் மகன் ஆதீஸ்வரன் வேறு அடிக்கடி அழைப்புவிடுத்து அவளை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தான்.

ஷ்ரதா இதையெல்லாம் வீசியிடம் வாட்ஸாப் உரையாடலில் சொல்லியபோது, அவன் அவசரப்பட வேண்டாமென்றே சொல்லிக்கொண்டிருந்தான்.

அவளுக்கு எவ்வளவு நாள் தான் காதலை மறைத்து வைப்பதென்று, அவன் பதில் எரிச்சலைத் தந்தது. ஆனால், அவளால் அதனை அவனிடம் சொல்ல முடியவில்லை.

ஏனெனில், இன்னை வரையிலும் அப்படியொரு உரிமையை வீசி அவளுக்கு அளிக்கவில்லை. உரிமையை எடுக்க அவளும் துணியவில்லை.

எத்தனையோ முறை தான் சொல்லும் ஐலவ்யூவிற்கு பதில் ஐலவ்யூ சொல்லாமல் அவன், "சரி, ஓகே, ம்ம் அப்பறம்" என்று பற்றற்ற தொனியில் சொல்வதையே ஏனென்று கேட்கத்துணிவில்லாதவளுக்கு இதையெப்படி கேட்க முடியும்?

வீசி அவளின் அவஸ்தையைப் பற்றியெல்லாம் அக்கறைப்படவில்லை. பட்டிருந்தால் பின்னால் நிகழவிருக்கும் அனர்த்தங்களை அவன் தடுத்திருக்க முடியும். ஆனால், அஜாக்கிரதையாக விட்டுவிட்டான்.

விஜயாதித்தன் இடையில் அறிவிப்பாக ஷ்ரதாவுக்கு அடுத்த மாதமே திருமணம் செய்யப்போவதாக வீட்டில் சொன்னபோது அருண்மொழியும் மீனாட்சியும் பெரிதாக மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. தெரிவித்தாலும் விஜயாதித்தன் கேட்கமாட்டார் என்று தெரியும். பிறகெதற்கு அதை செய்துகொண்டு என்று விட்டுவிட்டார்கள்.

ஆனால், ஷ்ரதா தான் மூச்சடைத்துவிட்டாள். உடனே அதைப்பற்றி வீசியிடம் சொல்லவேண்டும் என்று அவனைத்தேடி புத்தகக்கடைக்கும் ஓடி வந்துவிட்டாள்.

அங்கு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி எதிரெதிரே நின்றிருந்தார்கள். அவள் மூன்றாம் கட்டில், அவன் நான்காம் கட்டில். அவர்களுக்கிடையே தடுப்பாக ஒரு பாரிய புத்தக மதில். அதுவே அவர்களின் மனநிலையையும் குறிப்பால் உணர்த்துவது போல் இருந்தது.

அந்த அறைக்குள் நிற்பது புழுக்கமாக இருக்கவும் மின்விசிறியை இயக்கச் சென்ற வீசி விளையாட்டாக அனைத்து சுவிட்சுகளையும் இயக்கினான்.

விபரீத விளையாட்டு வினையில் முடியும் என்பதற்கேற்ப மின்விசிறி சுற்றத்துவங்கும் ஓசையுடனே நான்காம் கட்டின் சுவற்றோடு ஒன்றிய புத்தக அடுக்கும் சரசரவென்று உள்ளே சென்றது. அந்தச்சத்தத்தில் ஷ்ரதாவும் என்னவென்று ஓடிவந்துப் பார்த்தாள். உள்ளே ஒரு குட்டி அறை இலவச இணைப்பாக விரிந்தது.

ஷ்ரதா கண்களை அகல விரித்துப் பார்க்கும்போதே, அவள் கைப்பேசி இசைத்தது. திரையைப் பார்த்து அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

வீசி உள்ளே சென்றான். சுற்றிப் பார்த்தபோது சுவர் முழுக்க லாக்கராக இருந்தது. தரையில் பார்த்தால் காய்ந்துபோன ரத்தத்துளிகள்!

உள்ளே ஓரத்தில் ஒரு நாற்காலியின் மீது ரத்தத்தில் போட்டு புரட்டியெடுத்து போல் தாம்பு ஒன்று கிடந்ததும் அரண்டுவிட்டான் வீசி. அங்கு அடித்த துர்நாற்றத்தில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு உடனே வெளியேறியும் விட்டான்.

அறையில் அனைத்தையும் சுற்றிப்பார்த்த வீசி, மேலே மூலையில் ஒரு கண்காணிப்பு கேமிரா இருந்ததையும், அது தன் வரவை பதிவு செய்ததையும் கவனிக்கத் தவறிவிட்டான்.

பின்னால் அதுவே அவன் படப்போகும் பல அல்லல்களுக்கு ஆதாரமாக அமைந்தது.

ஷ்ரதா எதிர்புறம் பேசுவதை மட்டுமே உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தாள். பதிலுக்கு விடையளிக்கவில்லை.

வீசி வெளியே வந்தவன் அனைத்து சுவிட்சுகளையும் இயக்கி, மீண்டும் பழையபடியே புத்தக அடுக்குகளை கொண்டுவந்தான். இப்போது அந்த புத்தக அடுக்கிற்கு பின்புறம் ஒரு ரகசிய அறை இருக்கிறது என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

வீசி அதைப் பார்த்துக்கொண்டே ஷ்ரதாவின் புறம் திரும்பினான். அவள் காதில் 'ஐலவ்யூ பியூட்டி' சொல்லி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஆதீஸ்வரனுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். வீசி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரியவும் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

பின், நெற்றி சுருங்க யோசித்துக் கொண்டிருந்தவனிடம் "அது என்ன ரூம்?" என்று கேட்டாள்.

அவன், "ஏதோ ஸ்டோர் ரூம் மாதிரி இருக்கு.. பெர்சனல் யூஸ்க்கு வச்சிருப்பாங்க போல" என்று மழுப்பினான்.

ஷ்ரதா தான் சொல்ல வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பதென விழித்துக் கொண்டிருந்தாள்.

வீசி அவளருகில் நெருங்கியவன் தொடர்பேயின்றி, "ஷ்ரதா என்னைப்பாரு.. நான், உங்கப்பா, முருகன் எங்க மூணு பேர்ல யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்?" என்றான்.

அவள் தன் மனதிலிருப்பதை அவனுக்கு உணர்த்தும் விதமாக, அவனை உரசி நின்று, எக்கி அவன் கன்னத்திலொரு முத்தம் பதித்தாள்.

வீசிக்கு அவள் முத்தம் கொடுத்தவிடம் பற்றியெறிந்தது. யோசியாமல் பளாரென அவள் கன்னத்திலொரு அறைவிட்டான்.

கண்ணீர் கரகரவென்று கன்னத்தில் வழிய, வெளியே ஓடிவிட்டாள் ஷ்ரதா.

அறைந்துவிட்டு தான் ஞானயோதயம் பெற்றான் வீசி. "சே! நான் ஏன் அவளை அறைஞ்சேன்? அம்மா சொன்ன மாதிரியே நிதானம்ங்கிறது சுத்தமா என்கிட்ட இல்ல.. நான் அவ லவ்வர்.. அதனால தானே இப்படி செஞ்சா.. ஆனாலும் இப்படி முத்தம் கொடுக்கிறது சரியில்லைன்னு நான் அவகிட்ட எடுத்து சொல்லியிருக்கலாம்.. இப்படி கடுமையா நடந்திருக்க வேணாம்.."

மறுநாளே ஷ்ரதா அழைப்பு விடுத்து பேசியிருந்தால் கூட வீசி அதற்காக மனமுவந்து மன்னிப்பு கேட்டு அவ்விஷயத்தை அத்தோடு மறந்திருப்பானோ என்னவோ! ஆனால், கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும் ஷ்ரதா அவனை தொடர்பு கொள்ளாதது தான் அவன் மனதைப்போட்டு பிசைந்தது. கண்ணில் விழுந்த தூசு போல் தினம் உறுத்தி திணறடித்தது.

அடிக்கடி அவள் பேச்சும், முகமும் மனக்கண்ணில் தோன்றி மறைந்ததில் வீசி அவனாகவே இல்லை. காதிற்குள் 'ஐலவ்யூ.. ஐலவ்யூ' என்று அவள் குரல் வேறு அகாலத்தில் கேட்டுக்கொண்டிருந்தது.

'ஒருவேளை இது தான் லவ்வோ?' முதல்முறையாக வீசி மனம் லேசாகி பறப்பது போல் உணர்ந்தான்.

ஒவ்வொருமுறை ஷ்ரதாவைப் பற்றி சிந்திக்கும்போதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. 'மேடம் நமக்கு மேல கோபக்காரங்களா இருப்பாங்கப்போல..' தனிமையில் சிரித்துக்கொண்டான்.

'எவ்வளவுநாள் கோபம் தாக்குப்பிடிக்குதுன்னு தான் பார்ப்போமே?' என்று வம்பாக மேலும் இரண்டுநாள் பொறுத்துப் பார்த்தான். ம்ஹீம்! அவள் தரப்பிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

'ஜாடிக்கேத்த மூடி தான்' என்று சிரித்துக்கொண்டு, தானே முதல்முறையாக வழிய சென்று அவளிடம் பேச முடிவுசெய்தான் வீசி. ரொம்ப தாமதமான முடிவிது!

அக்காவைப் பார்க்கும் சாக்கில் அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம் தான். ஆனால், அது அவ்வளவு சரியாக வரும்போல் அவனுக்குத் தோன்றவில்லை. அவளது பொறியியல் கல்லூரிக்கே சென்று அதிர்ச்சியளிக்கவேண்டும் என்று முடிவுசெய்தான், அங்கு தனக்கொரு அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல்.

முதல்முறை உண்மையாகவே அவள் மீதுள்ள ஈடுபாட்டால் அவளை சந்திக்கச்செல்கிறோம். வெறுங்கையோடு செல்வதா? தனது சட்டைப்பையை தடவிப்பார்த்தான் வீசி. நேற்று அவன் அப்பா உடுமாற்றிற்காக மூன்று சட்டையெடுக்கச்சொல்லி கொடுத்திருந்த பணம் ரூபாய் ஆயிரம் சொலையாக இருந்தது. இதில் ஏதாவது வாங்கிவிட்டு திருடுபோய்விட்டது என்று வீட்டில் பொய்சொல்லிக் கொள்ளலாம். அவனது மூளை அபாரமாக திட்டமிட்டது.

அத்திட்டத்தின் முதல்பகுதியாக ஆவணிமூலவீதி சென்று, தேடி அலைந்து ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கினான் வீசி.

பிறகு, தன்னை நினைத்தே சிரித்துக்கொண்டு அவள் கல்லூரிக்குச் சென்றான்.

கல்லூரியை நெருங்கியதும் மீண்டுமொருமுறை தனது சட்டையை இழுத்து சரிசெய்துகொண்டு, பேண்ட் பாக்கெட்டிலிருக்கும் மோதிரப்பெட்டியை தொட்டுப் பார்த்துக்கொண்டு அவளைத்தேடி உள்ளே சென்றான்.

வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த ஷ்ரதா, சாளரம் வழியாக வீசியைப் பார்த்ததும் முகம் வெளுத்து வெலவெலத்துவிட்டாள். 'முருகா, என்ன இது சோதனை!'

அவனது சைகையில் பேராசிரியரிடம் 'எஸ்கியூஸ்' கேட்டு வெளியேவந்தாள்.

தனிமையான இடமாகத்தேடி அவளுடன் அரசமரத்தடியில் சென்று நின்ற வீசி, அங்கு மரத்தில் சுபா-சுந்தர் என்று செதுக்கப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே, "அன்னைக்கு நான் அப்படி முரட்டுத்தனமா நடந்திருக்கக்கூடாது.. ச்சே! சாரி ஷ்ரதா.. உன்னை அடிச்சிட்டு எனக்குத்தூக்கமே வரலை தெரியுமா? என் மேலயே எனக்கு கோபம்" என்றான்.

அவன் மன்னிப்பு வார்த்தைகளில் உலுக்கப்பட்ட பூமரமாய் உள்ளுக்குள்ளேயே அதிர்ந்து உதிர்ந்து போனாள் ஷ்ரதா.

"நான் தான் அப்படி அவசரப்பட்டு அடிச்சிட்டேன்.. நீயாவது அடுத்து வந்து பேசியிருக்கலாம் இல்ல?" என்றான்.

அவள் ஒருவித அலைப்புறுதலுடனே நின்றிருந்தாள். கைகள் கைக்குட்டையை கண்டமேனிக்கு கசக்கியது.

'என்ன இவ இப்படி நிற்கிறா?' வீசி அவளருகில் நெருங்கி வந்தான்.

அவள் ஓரெட்டு பின்னால் சென்றாள். அவன் அதை உணர்வதற்குள்ளாகவே கல்லூரியின் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்தது. மாணவர்கள் அங்குமிங்குமாக உலாவத் துவங்கினார்கள். ஷ்ரதா கலங்கிய தனது கண்களை அவசரமாகத் துடைத்துக்கொண்டாள்.

"சாரி கேட்டுட்டேன்.. இனிமே எனக்கு போன் பண்ணுவ இல்ல ஷ்ரதா? புக் ஸ்டாலுக்கு வருவ இல்ல?" என்று சிரித்தான்.

பின், ஞாபகம் வந்தவன் போல, "நான் சிவாக்கிட்ட உன்னைப்பத்தியும் என்னைப்பத்தியும் சொல்லலாம்னு இருக்கேன் ஷ்ரதா.. ஏன்னா அவன் உன்னை.." என்று சிவனேஸ்வரனின் அவள் மீதான காதலை சொல்லப்போனவன் திடீரென அவளது ரிங்டோன் இடைமறிக்கவும் பேசுவதை நிறுத்தினான்.

அவள் கைப்பேசியின் திரையைக் கண்டதுமே கலவரமாகி வீசியையும் திரையையும் மாறிமாறிப் பார்த்தாள்.

அவனுக்கு அவளது பதற்றம் ஏதோ தவறு என்று சொல்லியது. அருகில் வந்து பலவந்தமாக அவள் போனை பிடுங்கிப் பார்த்தான். திரையில் 'ஆதி டார்லிங்' என்று இருந்தது. வீசி வாசித்ததுமே வெக்கென்றாகி அவளையும் திரையையும் மாறிமாறிப் பார்த்தான்.

ஷ்ரதா குற்றவுணர்வில் தலை குனிந்து நின்றிருந்தாள். அவளுக்கு அவனை நெருங்கி போனைப் பிடுங்க தைரியமும் இல்லை. 'சாரி' என்று சொல்ல தெம்பும் இல்லை. கண்ணீரை கொட்டியபடியே நின்றிருந்தாள்.

வீசி, அவசரமாக அவள் வாட்ஸாப்பிற்குள் சென்றுப் பார்த்தான். ஆதியுடனான அவளது உரையாடல்களை எல்லாம் ஒருவரி விடாமல் வாசித்தான். கை தானாக போனை நழுவவிட்டது.

அதன்பின் அவன் அவளிடம் எதுவுமே கேட்கவில்லை. தனது பேண்ட் பாக்கெட்டிற்குள்ளிருந்த மோதிரபெட்டியை மட்டும் அவள் முகத்தில் எறிவது போல் அங்கேயே வீசிவிட்டுப் போனான்.

ஷ்ரதா அந்த பெட்டியைக் கையிலெடுத்து அவன் செல்லும் திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் இமைகள் இமைக்கவில்லை. ஆனால், கண்மணிகள் மட்டும் கண்ணீரில் குளித்துக்கொண்டிருந்தன.

வீசியால் நம்பவே முடியவில்லை. ஒரு பத்துநாள் இடைவெளி எப்படி என்னையும் அவளையும் பிரிக்க முடியும்? இப்படி நடப்பதற்கு அவள் என்னை அன்றே திருப்பி அடித்திருக்கலாமே! கத்தித் தீர்த்து சட்டையைப் பிடித்திருக்கலாமே! இல்லை எப்போதும் போல் அழுதே என்னை சாகடித்திருக்கலாமே! ஏன் இப்படி என்னை ஏமாற்றினாள்? என்று பலவாறு புலம்பித்தீர்த்தான்.

அவர்களின் வாட்ஸாப் உரையாடல்கள் வேறு அடிக்கடி அவன் கண்முன்னே வந்துபோனது.

@@@@@@

Aadhi: beauty i urgently need 5 kisses

Shraddha: 💋💋💋💋💋

Aadhi: I can feel your lips on my lips. You know what, It's very soft and warm. Can you feel my lips😉

Shraddha: mm

@@@@@@

தனக்கு முன்னாலிருந்த பேப்பர் வெயிட்டை சுவற்றை நோக்கி எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினான் வீசி.

அடுத்து ஒரு உரையாடலை அவன் மூளை ஸ்க்ரீன்சாட் எடுத்து வந்து காட்டியது.

@@@@@

Aadhi: night nee en bed la endha side paduppa beauty?
Aadhi: right or left?

Shraddha: your wish poonaikutti

Aadhi: love you beauty 🙈

Shraddha: mm😘

@@@@@

"எப்படி உன்னால அவன்கூட போன்லயே குடும்பம் நடத்த முடிஞ்சது ஷ்ரதா?" மேசையை தட்டினான் வீசி.

புத்தகம் வாங்க வந்திருந்த இருவர் இரண்டாம் கட்டிற்குள்ளிருந்து எட்டிப்பார்த்தார்கள்.

"ஒண்ணுமில்ல" என்று சொல்லி கீழே எதையோ தேடுவது போல பாவனை செய்தான் வீசி. மீண்டும் ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்தது மூளை.

@@@@@

Aadhi : beauty i will kiss all of your moles. How many kisses will you get at that time? 😉

Shraddha: cheeeeeee🙈

Aadhi: please beauty😉

Shraddha: no poonaikutti 🔞

Aadhi: please beauty. I want to know where that thiruttu rascals olinjifying👮‍♂️

@@@@@

"அவன் கேட்டான்னு ஒவ்வொன்னும் எங்கேயிருக்குன்னு மேப்பு போட்டு சொல்லுவியா? எனக்கு ஏன் இப்படி வலிக்குது? நான் ஏன் இப்படி புலம்புறேன்? உன்னை வெகுளி அப்பாவின்னு நினைச்சேனே.. என்னை இப்படி அடிமுட்டாளாக்கிட்டியே ஷ்ரதா!!!" நாகரீகம் கருதாமல் அலறினான் வீசி.

ஷ்ரதா அவன் இப்படி தன்னை தேடி வருவான், இறங்கி வருவான் என்று நினைக்கவே இல்லை. ஏனெனில், அன்று அவன் தன்னை அறைந்தபோது தான் அவன் தன்னை காதலிக்கவே இல்லையென்று அவள் புரிந்துகொண்டாள்.


dSiiWXN7x8COyXhPqr-SUybLMOAJ56ND_GKGJavUo9NyKoqxnqrXjhPA8uPiSip14-2gUNF6uW12xZb3ZUkepu8KfrckOrTue-8jYiZf5ZiZ_fj4yGYAcyiyd12ussWX_PPZWjUz


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

தவறு யார் பக்கம்? வாங்க ப்ரெண்ட்ஸ் விவாதிக்கலாம்.

கருத்துத்திரி,
விவாத களம்
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 27​



வீசி தன்னை அறைந்து அவமானப்படுத்திய அன்று அழுதுகொண்டே வீட்டிற்கு கிளம்பிய ஷ்ரதா தனதறைக்குச் சென்றதும் கைப்பையையும், துப்பட்டாவையும் வீசியெறிந்தாள்.

அசந்தர்ப்பமாக கைப்பேசி மெட்டிசைத்தபோது வீசி தான் என்று ஆர்வமாக எடுத்துப்பார்த்தாள். அப்போது மட்டும் வீசி பண்ணியிருந்து ஏதாவது சமாதானம் சொல்லியிருந்தால் ஷ்ரதா அதிகம் யோசித்திருக்க மாட்டாள். ஆனால், போன் பண்ணியிருந்தது ஆதீஸ்வரன்.

திரையைப் பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரமாக வந்தது. இவன் மட்டும் அந்த நேரத்தில் முத்தம் கொடுத்து என்னை கலவரப்படுத்தியிருக்கா விட்டால் நான் அவ்வாறு செய்திருக்கவே மாட்டேனே. பாவி! இவனால் தான் எல்லாம் என்று கோபத்தில் திட்டிவிட்டு வைக்கவேண்டும் என்று தான் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

அவனென்றால் எடுத்ததுமே நான்கு இடைவெளிவிட்ட 'ப்ச்' சத்தங்களுடன் "ஐலவ்யூ பியூட்டி" என்றான்.

ஷ்ரதா கோபத்தில் முகம் தக்காளியாக, "ஐ ஹேட் யூ" என்று அழைப்பை துண்டிக்கப்போனாள்.

அவன், "ப்ளீஸ்! ப்ளீஸ்! வச்சிடாத ஷ்ரதா.. டியூட்டில இல்லாத போது மட்டும் தான் என்னால உன்கிட்ட பேசமுடியும்.." என்று இரக்கத்தை சம்பாதித்தான். அவள் மௌனமாக இருந்தாள்.

அதையே நல்ல அறிகுறியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து அக்கறையாக வினவினான் ஆதீஸ்வரன், "சாப்பிட்டுட்டியா பியூட்டி?"

அவளுக்கு நடந்தவைப் பற்றியே யோசித்து சித்தபிரம்மையில் ஆழ்ந்திருப்பதற்கு இப்படி யாருடனாவது பேசி மனதை திசைதிருப்புவது உசிதம் என்றுபட்டது. அனிச்சையாக 'ம்ம்' என்றாள்.

"இன்னைக்கு காலேஜ்ல என்ன நடந்தது?" என்று உரையாடலை நீட்டித்துக்கொண்டேப் போனான் ஆதி.

ஷ்ரதா அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மெதுவாக யோசித்து யோசித்து பதிலளித்தாள். இடையில் 'நாம் ஏன் இவனுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறோம்?' என்ற கேள்வி எழத்தான் செய்தது. ஆனாலும் அனைத்திற்கும் விடையளித்தாள், நிதானமாக.

ஆதீஸ்வரன் சிலநேரம் ஜோக் சொல்லி அவளை சிரிக்க வைத்தான். சிலநேரம் வழிசலாக பேசி அவளை எரிச்சலூட்டினான். இன்னும் சில நேரம் வெட்கப்பட வைத்தான். அரைமணிநேரம் அவன் பேசிவிட்டு வைத்தபோது அவள் மனம் உப்பு சப்பின்றி பேசும் வீசியுடன் அவனை ஒப்பிட்டது. மனக்கிளையொன்று படக்கென்று முறிந்து விழ, வீசி தன்னை காதலிக்கவேயில்லை என்று அப்போது தான் புரிந்து கொண்டாள்.

ஒரு கட்டத்தில் உண்மையை ஜீரணிக்க முடியாமல் பிச்சி போலவே புலம்ப ஆரம்பித்துவிட்டாள் ஷ்ரதா. "ஏன் என்னை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்துனீங்க வருணத்தான்? என்கிட்ட இருக்க எது உங்களை ஏமாத்தச் சொல்லுச்சி? ஒரு பொண்ணே தேடிவந்து காதலை சொன்னா இப்படி தான் உதாசீனம் பண்ணுவீங்க இல்ல? நீங்க பண்ணினா மட்டும் தான் அது தெய்வீகக் காதல், மண்ணாங்கட்டி எல்லாம் இல்ல? அதுவே ஒரு பொண்ணு பண்ணினா அலைஞ்சான் கேஸு? இதையெல்லாம் நான் உங்க முகத்துக்கு நேரா கேட்கணும் வருணத்தான்.. ஆனா, என்னால முடியுமா? உங்களை நெருங்கினாலே என் சுயமரியாதையை இழக்கிற மாதிரி இப்படி ஏதாவது பண்ணி என்னை சுருட்டிப்போட்டிருறீங்களே வருணத்தான்..' என்று விடாமல் புலம்பிக் கொண்டிருந்தவளின் கண்ணீரும் ஒரு சமயத்தில் வற்றித்தான் போனது.

உள்ளெழும் நினைவு பிம்பங்களை எல்லாம் அவளால் தீயிட்டு பொசுக்க முடியவில்லை. அவனாக நினைத்து அலுக்காமல் எத்தனைமுறை முத்தம் கொடுத்திருப்பாள் அந்தக் கரடிபொம்மைக்கும், கண்ணாடிக்கும்?!

குயிலின் தந்திரத்தால் தன் முட்டை என்று குயில் முட்டையை அடைக்காத்து வரும் காக்கா, ஒருநாள் அது தன் குஞ்சல்ல, குயிலின் குஞ்சு என்றறியும் போது எப்படிக் கரையுமோ அப்படித்தான் தன் காதல்முட்டையும் உடைந்துபோன ஏமாற்றத்தில், கலக்கத்தின் பிடியில் கரைந்துக்கொண்டிருந்தாள் ஷ்ரதா.

'என் அழுகை பிடிக்கலைன்னு சொல்ற உங்கக்கிட்ட ஏன் வருணத்தான் என்னை அழவைக்கிறதே நீங்கதான்னு என்னால சொல்ல முடியல? உங்கப்பொய் எனக்கு பிடிக்கலை வருணத்தான்.. என் மீதான உங்க அலட்சியம் எனக்கு சுத்தமாப் பிடிக்கலை.. ஆனா, எது என்னை உங்களைத்தேடி ஓடி வர வைக்குது? சுயமரியாதை இழந்து மண்டிப்போட்டு கெஞ்ச வைக்குது? ஆங்! அந்த கன்னக்குழி தானே! உங்க அந்தக் கன்னக்குழி மேல இப்போ எனக்கு மயக்கம் இல்ல வருணத்தான்.. உங்களைத் திரும்ப பாக்கும்போது நான் அதுல விழமாட்டேன்.. நிச்சயம் நான் அதுல விழக்கூடாது.. உங்க நினைவு வராதபடி இருக்க கண்டிப்பா நான் ஏதாவது செய்யணும்.. செய்வேன்' இப்படி வீம்பாக எண்ணிக்கொண்டவள் அடுத்து செய்ததெல்லாம் வயதுக்கோளாறே.

************************

ஷ்ரதா தற்போது வீசியின் எண்ணிற்குத்தான் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தாள்.

"தப்புப் பண்ணிட்டேன் வருணத்தான்.. சாரி வருணத்தான்.. உங்களை மறக்கத்தான், இல்ல மறக்க முடியாமத்தான் இப்படியெல்லாம் பண்ணினேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? ப்ளீஸ் வருணத்தான் நீங்க நம்பணும்.. ப்ளீஸ் ப்ளீஸ் பிக்கப் த கால்"

ஆனால், எவ்வளவு முயன்றும் அவள் முயற்சிக்கு பலனாக எதிர்புறம் அவன் போனை எடுக்கவில்லை.

ஷ்ரதா அவனுக்கு தொடர்ந்து,
SORRY
SORRY
SORRY
SORRY
SORRY
என்றே ஐந்நூறு முறைக்கும் மேலாக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு கீங்கீங்கிற்கும் வீசி போனை எடுத்துப்பார்த்தானே ஒழிய அவளிடம் பேச ஆர்வம் கொள்ளவில்லை.

ரிப்ளை எதுவும் வராததில் சோர்ந்துபோன ஷ்ரதா தீனமாக இறைவனை வேண்டத்துவங்கினாள், "முருகா! ப்ளீஸ் என் வருணத்தானை என்கிட்ட பேச வச்சிடு.."

பாவி! அவளின் முணுமுணுப்பு விடியும்வரை நிற்கவில்லை.

*******************

வீராப்பாக இவ்வளவு நாள் வீசியிடம் பேசாமல் இருந்த சிவனேஸ்வரனுக்கு, தன் அண்ணனுக்கும் ஷ்ரதாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருப்பதே இந்த வீசியால் தான் என்றறிந்தபோது கோபம் தாங்கவில்லை.

மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஷ்ரதாவின் அந்தக்காதலன் யாரென்று. அது அவனுக்குமா தெரியாது?

"எவ்வளவு தைரியமிருந்தா ஷ்ரதாவை வெளிய கூட்டிட்டுப் போவான் இந்த ராஸ்கல்? அவ கால்ல போடுற நெயில்பாலீஷுக்காக தன் ஒரு மாச சம்பளத்தை தியாகம் செய்யணும் இவன்.. அவன் வியர்வை நாத்தத்தை எப்படி ஷ்ரதா சகிச்சிக்கிறா?" என்று ஷ்ரதாவை தன் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருப்பவனாக விசனப்பட்டான்.

மாபெரும் மலையை நகர்த்திவைப்பதுபோல இப்போது அவன் முன்னே இரு வேலைகள் இருந்தன. ஒன்று, ஷ்ரதாவுக்கு வீசிமேல் உள்ள மயக்கத்தை தெளிய வைப்பது. இரண்டு, ஷ்ரதாவின் அவசரக் கல்யாணத்தை நிறுத்துவது. ஆனால், இரண்டையும் எவ்வாறு செய்து முடிப்பது? குழம்பிக் கொண்டிருந்தவன் பிறகு ஒரு வழி கண்டவனாக தனது அண்ணன் ஆதீஸ்வரனுக்கு தான் ஷ்ரதாவை உயிருக்கு உயிராக விரும்புவதைப் பற்றி நீண்ட பத்தியொன்றை தயார் செய்து அனுப்பிவைத்தான்.

திரையில் எதிர்புறம் அவன் அதை வாசித்துவிட்டான் என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக்குகள் தோன்றியபோது பக்பக்கென்று அடித்துக்கொண்டது அவனது நெஞ்சு.

சிறிதுநேரத்திற்குப் பின், மேலே பெயர்பட்டையில் டைப்பிங் என்று வந்தபோது கிரிக்கெட் மேட்சில் வெற்றி தோல்வியை முடிவுசெய்யும் கடைசி ஓவரை சீட் நுனியில் உட்கார்ந்துப் பார்ப்பவன் போலவே மொத்த எதிர்பார்ப்பையும் கண்ணில் தேக்கி, இதயம் எகிறித்துடிக்கப் பார்த்திருந்தான் சிவனேஸ்வரன்.

நீண்ட காத்திருப்பிற்குப்பின் இரண்டே வரியில் பதில் அனுப்பியிருந்தான் ஆதீஸ்வரன். "நீ ஏன் இதை முன்னாடியே என்கிட்ட சொல்லலை சிவா?.. மொதல்ல ஷ்ரதாவை நேர்ல பார்த்து உன் மனசுல இருக்கிறதை சொல்லுடா" என்று டைப்பியிருந்தான்.

பார்த்ததும் சிவனேஸ்வரனுக்கு உச்சிக் குளிர்ந்துவிட்டது. ஆனால், தான் சொல்லி புரிய வைப்பதைவிட சிறுவயதிலிருந்தே சிவாவுடன் நல்ல நட்பிலிருக்கும் ஷ்ரதா எடுத்துச்சொன்னால், தம்பி உடனே புரிந்துகொள்வான் என்றே ஆதீஸ்வரன் இவ்வாறு சொன்னான் என்பதை யார் சிவனேஸ்வரனுக்கு எடுத்து சொல்வது?!

வாசித்ததுமே தலைகால் புரியாமல் கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தான் சிவனேஸ்வரன். இவ்வளவு நாள் 'ஆதியிடம் இதை எப்படி சொல்லப்போகிறேன்? இதை அவன் எப்படி எடுத்துக் கொள்வான்?' என்றே மனதுக்குள் மறுகிக் கொண்டிருந்தவனுக்கு தன்னைப்பிணைத்து வைத்திருந்த பெரிய விலங்கொன்று அறுபட்டதுபோல் இருந்தது.

'எனக்கிருந்த மிகப்பெரும் தோஷம் நீங்கிவிட்டது. இன்னும் இந்த வீசி தான். அவனுக்கும் இன்றே முடிவுகட்டுகிறேன்' என்று வீசியை சந்திக்க புத்தகக்கடையை நோக்கி விரைந்தான் சிவனேஸ்வரன்.

அது வீசி ஷ்ரதா அனுப்பிய 'SORRY' மழையில் நனைந்துக் கொண்டிருந்த நன்னேரம்.

திடும் பிரவேசமாக உள்ளே நுழைந்த சிவனேஸ்வரனைப் பார்த்ததும், வீசி தன் கைப்பேசியை கல்லாவிற்குள் மறைத்து வைத்தான்.

சிவனேஸ்வரன் வீசியிடம் நலம் விசாரிக்கக்கூட செய்யவில்லை. எடுத்த எடுப்பிலேயே, "என்ன வீசி ஆளே மாறிப்போயிட்டாப் போல இருக்கு?" என்று குத்தலாகக் கேட்டான். வீசி பதிலுக்கு அவனை அளப்பது போலப்பார்த்தான்.

சிவனேஸ்வரன் அங்கிருந்த நாற்காலியில் அவனுக்கு முன்பு சென்று உட்கார்ந்தபடியே வில்லங்கமாக பேசினான். "ம்ம் நானும் உன்னை என்னவோன்னு நினைச்சேன் வீசி.. நீ உன் அக்காவுக்கும் மேல உள்ள கெட்டிக்காரன் தான்னு நிரூபிச்சிட்ட.. எப்படி, எங்க கை வைக்கணும்னு உனக்கு நல்லாவேத் தெரிஞ்சிருக்கு.. ஒருவேளை இந்த நரித்தந்திரம் எல்லாம் உங்க சக்கரவர்த்தி ப்ளட்டோடையே கலந்ததோ?"

வீசியின் கலங்கிய கண்கள் இரண்டிலும் கோபம் கொப்பளித்தது. அவனது காது துடிப்பதைக் கண்ட சிவனேஸ்வரன், "கோபப்படுறியா வீசி? உண்மையை சொன்னதும் சுருக்குன்னு இருக்கா? உன்னைப்போய் யோக்கியன்னு நம்பி ஷ்ரதாவை இங்க அனுப்பிவச்சேனேடா! எனக்கு நல்லபாடம் கத்துக்குடுத்திட்ட" என்று சீறினான்.

"சிவா நடந்தது தெரியாம பேசாத! ஷ்ரதா என்னை முன்னாடியிருந்தே விரும்பியிருக்கா" வீசி சத்தமாக சொல்லத்தான் முயன்றான். ஆனால், பாதியிலேயே குரல் உள்ளேப் போய்விட்டது.

"துரோகி! பேசாதடா! அவ மனசைக் கெடுத்ததே நீதான்டா!" பேய் பிடித்தவன் போலக்கத்தினான் சிவனேஸ்வரன்.

"சிவா, அவ உன்னை லவ் பண்ணவே இல்ல" என்று வீசி மறுத்து சொன்ன வேளை, கோபத்தில் என்ன செய்கிறோமென்றே தெரியாமல் மூர்க்கமாகத் தாக்கி வீசியின் சில்லுமூக்கை உடைத்தான் சிவனேஸ்வரன்.

மூக்கில் ரத்தம் சொட்ட நின்றிருந்த வீசி, மடக்கிய தனது கைவிரல் முஷ்டிகளை தளரவிட்டான். "ஏற்கனவே நான் நொந்துபோய் இருக்கேன்டா சிவா.. உன் வலி என்னன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது.. ஏன்னா இப்ப அதே வலியைத் தான் நானும் அனுபவிச்சிக்கிட்டிருக்கேன்" என்றவன் கடைசி வரியை மட்டும் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

சிவனேஸ்வரன் அவன் பேச்சை சட்டை செய்யவில்லை. "ஷ்ரதா என் பொண்டாட்டி.. இனி நீ அவளை பார்க்கவோ பேசவோ செய்யக்கூடாது வீசி.. மீறிப் பார்த்தா விளைவு மோசமா இருக்கும்.. என் மாமாவைப் பத்தி உனக்குத் தெரியாது வீசி.. ஜாக்கிரதை!" என்று திண்ணமான குரலில் எச்சரித்துவிட்டுப் போனான்.

அவன் போகும்போது முன்னால் நடைபாதையில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை எட்டி உதைத்துவிட்டுப்போக, வீசி தான் கல்லாவிற்குள் மறைத்து வைத்த நோக்கியாவை வெளியில் எடுத்துப் பார்த்தான். ஷ்ரதா 'SORRY' அனுப்புதலை இன்னும் நிறுத்தியிருக்கவில்லை.

இவ்வளவு நேரமும் கோபம், வலி, பொறாமையென்றே சிக்கித் தவித்துக்கொண்டிருந்தவனுக்கு, சிவாவின் மிரட்டல் தான் ஷ்ரதாவை தன்னால் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாதென்கிற உண்மையை புரிய வைத்தது. அவன் எந்தப் பதற்றமுமின்றி சொல்லிப் பார்த்தான், "ஐலவ்யூ ஷ்ரதா" என்று.

***********************

உலகம் எனும் கோப்பையில் உயரத்தில் எவனோ ஊற்றி வைத்து அருந்தும் மது தான் இந்த இரவா?

போதையில் சுயம் மறந்து கிடந்தவர்கள் அனைவரும் காலையில் தான் எல்லாம் தெளிந்ததைபோல் நடந்துகொண்டிருந்தார்கள்.

சிவனேஸ்வரன் கல்லூரிக்குக் கிளம்பும்பொருட்டு தனது போன் சார்ஜரை பேகிற்குள் திணித்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் வரவேற்பறையில் கோகிலா ஓலமிட்டுக் கத்தும் சப்தம் கேட்டது.

அவசரஅவசரமாய் வெளியே ஹாலுக்கு ஓடிவந்துப் பார்த்தவனுக்கு பிரச்சினைக்கு காரணம் டீவியில் ஓடிய செய்தி தான் என்றறிந்த போது, கண்கள் அங்கு நிலைகுத்தி நின்றது.

டீவியில் விஜயாதித்தனின் புத்தகக்கடைக்குள் சோதனை நடந்து கொண்டிருப்பதும், கீழே முக்கியச்செய்தியாக 'இருபத்திரண்டு அஸ்திகளுக்கும் கிரானைட் குவாரி முதலாளிக்கும் என்ன சம்பந்தம்?' என்று ஓடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

மாவட்ட ஆட்சியர் தேவன், டிஐஜி எத்திராஜ், காவல் துறையினர் மற்றும் ஊடகத்துறையினர் என்று மகாளிப்பட்டியே அமளிதுமளிபட்டது.

முக்கிய அதிகாரிகள் வந்துவிட்டதால் அனைத்து நியூஸ் சானல்களிலும் இது தான் ஹெட்லைனே!

"அய்யோ! என் அண்ணனைப்பத்தி ஏதோ தப்பா தப்பா சொல்றாங்க பாருங்க.. வாங்க, சீக்கிரம் அண்ணன் வீட்டுக்கு போவோம்" என்று அவசரப்படுத்தினார் கோகிலா.

சிவனேஸ்வரன், காசிராஜன், கோகிலா என்று மூவரும் அங்கு சென்று சேர்வதற்குள், விஜயாதித்தனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

விபரம் கேட்ட ஊடகத்துறையினரிடம், டிஐஜி கீழ்க்கண்டவாறு பதிலளித்தார். "இந்த ரகசிய அறையைப் பத்தி நேத்து தான் கலெக்டர்சாருக்கு தகவல் வந்திருக்கு.. சார் உடனே களத்துல இறங்கி ஆக்சன் எடுத்திருக்காங்க.. தகவல் கொடுத்தவரோட பெயரை உங்களுக்கு இப்போ சொல்ல முடியாது.. தட் இஸ் வெரி கான்பிடென்ஷியல்.. உள்ள சுவரோட ஒட்டின அமைப்புல மின் தகன எந்திரம் ஒண்ணு செட் பண்ணியிருக்காங்க.. சுத்தியிருந்த லாக்கர்ஸ்ல இருந்தும் இருபத்திரண்டு அஸ்தி பார்சல் கைப்பத்தியிருக்கோம்.. அப்புறம் இன்னும் சில ஆவணங்களும் சிக்கியிருக்கு.. புக்ஸ்டால் ஓவ்னர் விஜயாதித்தனையும், ஸ்டாலோட வொர்க்கர்ஸ் ரெண்டுபேரையும் விசாரணைக்காக கைது பண்ணியிருக்கோம்.. விசாரணையோட முடிவுல தான் உண்மை என்னன்னு தெரிய வரும்" என்றார்.

விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்தே கேஆர்பிக்கு இருப்பு கொள்ளவில்லை. டிஐஜிக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்.

கலெக்டர் பேட்டி கொடுக்க ஆரம்பிக்கவுமே அவரைவிட்டு சற்றுத்தள்ளி வந்த டிஐஜி, "அதான் எனக்கு தகவல் கிடைச்சதுமே உங்கக்கிட்ட சொல்லிட்டேனே சார்.. முன்னாடியே சொல்லனும்னா இன்னைக்கு காலையில தானே எனக்கேத் தெரியும்.. எவனோ டேரக்டா கலெக்டருக்கே போன் பண்ணி சொல்லியிருக்கான்.. இந்த ஆள் இளம் ரத்தம் பார்த்தீங்களா? அதான் நேர்மைன்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நிற்கிறான்.. உங்கப் பேர் எதுவும் வெளிய வராதபடி பார்த்துக்க நம்ம ஆளுங்க நாலு பேரை ஏற்கனவே உள்ள நிற்க வச்சிருக்கேன் சார்.. உள்ள ரெண்டு மூணு டாக்குமெண்ட்ஸ்ல வேற உங்கப்பேர் இருந்ததா சொன்னாங்க.. அதுல ஒரு டாக்குமெண்ட்ல போனவருசம் தலையாரிலயிருந்து கலெக்டர் வரை நீங்க மாசாமாசம் விஜயாதித்தன் மூலமா யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா பண்ணியிருக்கீங்கன்னு தெளிவா போட்டிருக்காம் சார்.. ஒண்ணும் பிரச்சினையில்ல.. பயப்படாதீங்க.. நம்ம ஆளுங்கக்கிட்ட சொன்னா மாத்தி வச்சிடுவாங்க.. இப்போ லம்ப்பா சிக்கியிருக்கிறது விஜயாதித்தனும் அவரு பினாமி அந்த எம்எல்ஏவும் தான்.. இனி விஜயாதித்தன் தப்பித்தவறி உங்கப்பெயரை உளறினா தான் உண்டு.. வக்கீல் ரெடி பண்ணிட்டீங்களா சார்? ம்ம் அப்போ சரி சார்.." என்று பேசிவிட்டு, இணைப்பு துண்டிக்கப்படவும் கலெக்டர் அருகில் வந்து கம்பீரமாக நின்றுகொண்டார்.

கேஆர்பி நடத்தி வந்தது ஒரு அரசு என்பதால் இரண்டு வாரத்திலேயே விஜயாதித்தனுக்கு பெயில் வாங்கிக்கொடுத்து, மூன்று மாதத்திலேயே வழக்கை திசைதிருப்பி விட்டார். அதற்கு அவர் பலருக்கும் படியளக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் அதற்கு சற்றும் சளைக்கவில்லை. ஏனெனில், அவர் தான் லஞ்சம் கொடுத்தே பழகியவராயிற்றே!

குவாரிகள் ஆக்கிரமிப்புக்கு ரூட்டு போட்டுத்தந்த வருவாய்த்துறை; கால்வாய்கள், ஊருணிகளை விழுங்க உதவிய பொதுப்பணித்துறை; புறம்போக்கு நிலங்களை பதிவுசெய்து தருவதற்காக பத்திரப் பதிவுத்துறை; பள்ளி, சமுதாயக்கூடங்களை இடித்து குவாரியாக்க உதவிய ஊரக வளர்ச்சித்துறை; ஒரு நம்பர் பிளேட்டில் எட்டு கன்டெயினர் லாரிகள் வீதம் ஓட்டுவதற்கு உதவி புரிந்த வட்டாரப் போக்குவரத்துத் துறை; கிரானைட்டுகளை கணக்கில் வராமல் விற்பனை செய்வதற்குத் துணை புரிந்த வணிகவரித்துறை; கணக்கில் வராத கள்ள ஏற்றுமதிக்கு துணை நிற்கும் சுங்கத்துறை என அனைவருக்கும் எழும்புத்துண்டை கை நிறைய தூக்கி வீசிப்பழகியவருக்கு விஜயாதித்தனை வெளியே கொண்டு வருவது மட்டும் கடினமா என்ன!

சகலரும் அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப அன்பளிப்பை பெற்றுக்கொண்டு தங்கள் கடமையை செய்வது போல பாவலா காட்டினார்கள்.

நிச்சயம் கேஆர்பியை விசாரணைக்கு உட்படுத்தினால் கொள்ளைக்குள் கொலை, லஞ்சம், மோசடி, நம்பிக்கைத் துரோகம், தேசத்துரோகம், சூழல் நாசம், இயற்கை வளம் அழிப்பு உள்ளிட்ட பல பாதகங்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், நீதிதேவதை தான் கண்ணை மூடிக்கொண்டு நிற்கிறாளே.

மோகனையும் வீசியையும் விசாரித்த காவலதிகாரிகள் நான்கு மணிநேரத்திலேயே அவர்களுக்கும் இந்த ரகசிய அறை அஸ்திக்கும் எந்த சம்பந்தமுமில்லை யென்று உத்தேசித்து அவர்களை குடைவதை விட்டுவிட்டார்கள்.

விஜயாதித்தனுடனான விசாரணை தான் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருந்தது. கேஆர்பி அனுப்பிய வழக்கறிஞரும் அருண்மொழியும் வெளியே காத்திருந்தார்கள்.

மாலை ஆறு மணியளவில் விசாரணை முடிந்தபோது தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் விஜயாதித்தன், "புக்ஸ்டால் பத்தி கலெக்டருக்கு போன் பண்ணினது யாரு?" என்று உறுமலாகக் கேட்டார். நிச்சயம் அந்தத் துரோகிக்குரிய தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்று விசாரிக்கும் போதே அவருக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது.

வழக்கறிஞரானவர், "கடையில வேலை பார்க்கிற பையன் தான் சொன்னதா சொல்லிக்கிறாங்க.." என்றதும், உடன் நின்ற அருண்மொழியும், "ஆமாப்பா, ஜீவா சொன்னான், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அவன் உள்ளேப்போய் பார்த்தது சிசிடிவில பதிவாகியிருக்கு" என்றான்.

"ஓஹோ" என்றவர், "இப்போ அவனை எதுவும் செய்ய வேணாம்.. நான் வெளிய வந்ததும் பாத்துக்கலாம்.." என்றார்.

அந்தத்தொனி மகனாகிய அருண்மொழிக்கே கிலியூட்டியது. 'மதுவால இதை தாங்கிக்கிற முடியுமா? நிச்சயம் அவ தம்பிக்கு இது தேவை தான்..' என்று நினைத்துக்கொண்டே, "சரிங்கப்பா" என்றான்.

விஜயாதித்தன் பார்வையில் வேட்கையோடு, "நான் வெளிய வர்ற வரைக்கும் என் இடத்துல நீ தான் நின்னு எல்லாத்தையும் பார்த்துக்கணும் அருண்மொழி" என்றபோது, 'என்ன! உங்க இடத்துல நானா!' என்று அருண்மொழி புல்லரித்துப்போனவன் அடக்கமாக, "சரிங்கப்பா" என்றான்.

விஜயாதித்தனை சீக்கிரம் பெயிலில் வெளியே எடுத்துவிடலாம் என்று வழக்கறிஞர் சொன்ன தைரியத்தில் வீட்டிற்கு வந்த அருண்மொழி, வீசியை முன்னிறுத்தி மதுபாலாவிடம் மல்லுக்கட்டினான். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய், "எங்கப்பா வெளிய வந்த பின்னாடி இருக்கு உன் தம்பிக்கு.. அவனை அஸ்தியாப் பார்க்க தயாராயிரு" என்று பயமுறுத்திவிட்டுப் போனான்.

மதுபாலாவுக்கு அது எதேர்ச்சையாக வந்த வார்த்தைகளென்று நம்ப முடியவில்லை. நிலைமையின் தீவிரம் புரிந்ததால் உடனே தனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

அவள் இரவு ஒன்பது மணிக்கு ஜெயவிலாஸில் இருக்கும் தன் தாய்வீட்டிற்கு வந்து சேர்ந்த சமயம் தான், பிரகாஷ்சக்கரவர்த்தியும் தனக்குத் தெரிந்த கவுன்சிலர் மற்றும் ஏட்டு ஒருவரின் உதவியுடன் வீசியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

அவனைப் பார்த்ததுமே மதுபாலா அழுதுவிட்டாள். "ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை? எவ்வளவு பெரிய சிக்கலை நீ இழுத்து வச்சிருக்கத் தெரியுமா? உன்னை அவங்க கொல்ல தீர்மானிச்சிட்டாங்கடா.." என்று கமறியகுரலில் சொன்னாள்.

அவள் கூறியதன் எதிரொலிப்பு ஒரு சதவீதம் கூட அவன் முகத்தில் தெரியவில்லை. அபிராமி "வருண்" என்று அவனருகில் வந்து தோளைத் தொட்டபோது தான் கணீர் குரலில் சொன்னான். "நான் யாருக்கும் எந்தத் தகவலும் கொடுக்கலை.. நான்னு சொல்லி வேற யாரோ கலெக்டருக்கு தகவல் கொடுத்திருக்காங்க.. அப்புறம் ஒரு அப்புராணியை ஒண்ணும் போலீஸ் பிடிச்சிட்டு போகலைக்கா.. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்னு சும்மாவா சொன்னாங்க.." என்றான்.

"என்னால தான்.. எல்லாம் என்னால தான்.. தெரிஞ்சே புதைகுழியில விழுந்தேன்.. இப்போ உங்களையும் சேர்த்து உள்ள இழுத்துக்கிட்டு இருக்கேன்.." என்று தன் தலையிலடித்துக்கொண்டு அழுத மதுபாலா, திடீரென பித்துப் பிடித்தவள் போல, "இல்ல.. இல்ல.. இனி நீ இங்க இருக்கக்கூடாது வருண்.. ம்மா, ப்பா இவனை எங்கேயாவது வெளியூருக்கு அனுப்பி வைங்க.. அவங்க மோசமானவங்க.. நீ எங்கேயாவது வெளியூருக்கு போயிடு வருண்" என்றாள்.

அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்தியும் மதுபாலா சொல்வதே சரி என்று அவனை வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

வீசி அவர்களிடம், எவ்வளவோ முரண்டு பண்ணிப் பார்த்தான். இறுதியில் அவர்கள் கேட்காததால், "சரி காலையிலப் போறேன்" என்ற சமாதானத்திற்கு வந்தான்.

அன்றிரவு முழுவதும் அவர்கள் வீட்டில் ஒருவர் கண்ணிலும் ஒருபொட்டுத் தூக்கமில்லை.

தனது அழகிய சின்னஞ்சிறு கூட்டை தானே கலைத்துவிட்டது போல் குப்புறப்படுத்து தலையணையை நனைத்தாள் மதுபாலா.

9AazjJZONJ2444WNN2WZBq8BdvhoWdfKMo1aa2Qa8C5WK0QObbE7X_yXwA_5auryT22x5KMnoQK-itfX4yDct1xlLII5f409drtCHj_Q1f7OXnaHhjtdhJhKo5p_IovjcPGDYVlr


காதல் கணம் கூடும்...

அடுத்த அத்தியாயத்துடன் பிளாஷ்பேக் ஓவர் ப்ரெண்ட்ஸ்.​

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க.

கருத்துத்திரி,
வாங்கப் பழகலாம்❣️


 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 28​




தனதறையில் இரும்புக்கட்டிலில் படுத்திருந்த வீசிக்கு சிந்தை முழுவதும் 'காலையில் எங்கு செல்வது?' எனும் கேள்வியே தொடர் மாரத்தான் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது.

தனது அப்பா சொன்னது போல் கொடைக்கானலில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு செல்லலாம் தான். ஆனால், அதில் அவனுக்கு விருப்பமில்லை. காரணம், மதுபாலாவின் படிப்பு செலவிற்கு கையேந்தியதிலிருந்தே அவர் அவர்களை மதிப்பதில்லை என்பதால் ரொம்பவே யோசித்தான்.

அந்த யோசனையுடனே அசுவாரசியமாக தனது போனை எடுத்து கான்டாக்ட் லிஸ்ட்டை ஓட்டிப்பார்த்தவனுக்கு தற்போது கேரளாவில் வசிக்கும் தனது நண்பன் மாதேஷின் எண் கண்ணில் படவும், உடனே அங்கு செல்ல முடிவெடுத்தான். அதனை அவனிடம் தெரிவிக்கும் பொருட்டு ஆன்லைன் வந்தவனுக்கு முதல் அறிவிப்பாக மதியம் ஷ்ரதா அவனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ் ஒன்று காத்திருக்கவும், ஹெட்போனை இணைத்து இரு காதிற்கும் கொடுத்தான்.

ஷ்ரதா பிசிறு தட்டிய குரலில் விம்மிக்கொண்டேப் பேசினாள். "அவ்வளவு சாரி கேட்டும் உங்கக்கோபம் குறையலை இல்ல? என்னை பழிவாங்க எங்க அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க இல்ல? இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே?" என்று கேட்டிருந்தாள்.

வீசி, "அட பைத்தியமே!" என்று முணுமுணுத்தவன், வாட்ஸாப்பில் அவளுக்கு டைப் செய்ய ஆரம்பித்தான்.

முதலில் தன்னைப் பற்றி அவளுக்கு விளக்குவான் என்று பார்த்தால்.. வீம்பன் தன் நிலையிலிருந்து இறங்கிவராதவனாக வேறு செய்தியை தட்டச்சு செய்துக் கொண்டிருந்தான்.

**************

Vc: Mani ipo 10.30 pm

Vc: Innum 10 ½ mani neraththula naan keralavukku train eariduven

Vc: Thirumba madurai varuvena vara mattena theriyaadhu

Vc: Oruvelai Nee ennai ippavum love panrenna en mela unaku nambikkai irukkudhunna 7-8am kulla nee jeyavilas bridge ku keezha varanum

Vc: naan unakkaga anga kaaththirupen

Vc: ama nee ellaththaiyum udharittu ennoda kerala varanum

Vc: unaku yosikka indha 9 ½ mani neram podhumnu ninaikiren

Vc: So nalla Yosichu mudivedu

Vc: Apram

Vc: i love you❤️

******************

அனுப்பி விட்டான். ஆனாலும் அவள் எப்போது ஆன்லைன் வருவாள்? என்றே அவன் மனம் ஏங்கித் தவித்தது.

திடீரென ஒரு கொடுமையான சந்தேகம். ஒருவேளை அவள் தாமதமாகப் பார்த்தால்? இல்லை பார்க்காமலேயே போய்விட்டால்?

என்னவொரு அபத்தமான நினைப்பு இது! வருவதும் வராமலிருப்பதும் உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு நான் ஏன் அவள் நிச்சயம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்? ஒருவேளை இது தான் காதலா? சே! என் அடிமன ஆசையை எப்படி காதலோடு முடிச்சிப்போடுகிறேன் பார்! எது எப்படியோ அவள் போனை எடுத்ததுமே நான் அனுப்பிய மெஸேஜை பார்க்கவேண்டும். வாட்ஸாப் மெஸேஜை காப்பி செய்து நார்மல் மெஸேஜ் ஒன்றும் தட்டிவிட்டால் தான் என்ன? உள்ளம் நினைத்ததை அடுத்த கணம் அவன் கை நிறைவேற்றிவிட்டது.

கைப்பேசியை அணைத்துத் தூர வைத்தவன் போர்வையை தலைவரை மூடினான். தூக்கம் வரவில்லையானாலும் தானும் ஷ்ரதாவும் கேரளாவில் படகு இல்லங்களில் எப்படி வாழ்வோம் என்றே இன்ப சொப்பனத்தில் அந்த இரவை கழித்தவனுக்கு, இரவின் நீட்சி ஒன்றும் அவ்வளவு கொடுமையானதாக இருக்கவில்லை.

************************

விஜயாதித்தனை கைது செய்த விஷயம் கொரோனா தொற்று போல் ஊர் முழுவதும் பரவியதன் பலனாக, அவரின் உறவினர்கள் அனைவரும் கீரைத்துரையில் குவிந்துவிட்டனர்.

அவர்களின் நல்வரவால் ஷ்ரதாவின் வீடே கச்சடா முச்சடாவென்று கிடந்தது. விஜயாதித்தன் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால் 'போங்க' என்று அனைவரையும் அடித்து விரட்டியிருப்பார். ஆனால், மீனாட்சி கொஞ்சம் சாது என்பதால், சாந்தமாக அவர்களுக்கு சேவகம் புரிந்துக்கொண்டிருந்தார்.

ஷ்ரதா கீழே இந்த அமர்க்களங்கள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. விஷயம் தெரிவதற்கு முன், காலையில் சாப்பிடவென்று அவள் கீழிறங்கி வந்தது. மதிய உணவைக்கூட சாந்தாம்மாவிடம் கொடுத்தனுப்பச் சொல்லிவிட்டாள். இவ்விதமே விஜயாதித்தன் மீதுள்ள கோபத்தில் அவள் இரவு உணவையும் வேண்டவே வேண்டாமென பிடிவாதமாக மறுக்க, பெரியவர்களுடன் பேசிக்கொண்டே அவளை கவனித்துக்கொண்டிருந்த சிவனேஸ்வரன், இரவு பத்துமணியளவில் ஷ்ரதாவின் அறைக்கு பால் டம்ளருடன் சென்றுகொண்டிருந்த சாந்தாம்மாவை நிறுத்தி, அதைத் தான் வாங்கிக்கொண்டு அவளறைக்குச் சென்றான்.

முதலில் அவளறை இருளடைந்து கிடப்பதைப் பார்த்து திகைத்துப்போனவன், "ஷ்ரதா! ஷ்ரதா!" என அழைத்துக்கொண்டே தட்டுத்தடுமாறி மின்விளக்கின் சுவிட்சை இயக்கினான். ஷ்ரதா அங்கு படுக்கையில் சீராக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள்.

பதற்றம் நீங்கி முகம் தெளிவாகியவன் மேசைவிளக்கின் அருகே மாத்திரை அட்டை ஒன்று கிடக்கவும், வேகமாக ஓடிவந்து எடுத்துப்பார்த்தான்.

அது தலைவலி மாத்திரை தான் என ஊர்ஜிதமாகவும் ஆசுவாசமடைந்தவன் போல பாலை அதன் அருகிலேயே வைத்துவிட்டு, ஓரத்தில் கிடந்த பூஃப் இருக்கையை அவள் கட்டிலையொட்டி எடுத்துப்போட்டான்.

பின், அதில் உட்கார்ந்துகொண்டு அவள் முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சிவனேஸ்வரன் அப்படி எவ்வளவுநேரம் அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தானோ தெரியாது. ஆனால், அவன் பார்வையில் ஒரு கணம் கூட விரசம் இல்லை. மாறாக, ரசிப்பும் வியப்பும் மட்டுமே இருந்தது.

'என்ன இல்லை இவளுக்கு.. அந்தப் பரதேசியைப் போய் காதலிக்கிறாளே!' அசந்தர்ப்பமாக வீசி அவன் ஞாபகத்திற்கு வந்தான்.

ஒரு பெண் தூங்கும்போது கூட இவ்வளவு அழகாக இருக்க முடியுமா? மேலும் பத்து நிமிடங்கள் பிக்சல் பிக்சலாக அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகிவிட்டது. மெதுவாக அவளை நெருங்கி, நெற்றியில் முத்தமிட்டான். எதிர்வினையாக அவள் இதழ்கள் தூக்கத்திலேயே குறுநகை புரிந்தன.

குனிந்துப் பார்த்தவன் பயந்து மீண்டும் தன்னிருக்கையிலேயே வந்து உட்கார்ந்துகொண்டான். 'ஹார்ட் ஏன் இவ்ளோ ஃபாஸ்ட்டா பீட்டாகுது?' நெஞ்சில் கை வைத்துப் பார்த்துக்கொண்டான்.

பின், நடுங்கிய தனது இரு கைகளையும் இறுக்கிப் பிணைத்துக்கொண்டு, அவளை நுண்ணோக்குவதையே முக்கிய வேலையாக தொடர்ந்துக் கொண்டிருந்தவனுக்கு, இம்முறை தன் தவத்தை கலைப்பது போல் ஒலித்த ஷ்ரதாவின் கைப்பேசியை அடித்து நொறுக்கும் வேகமே வந்தது. "ப்ச், யாரது நைட் பதினொன்றரைக்கு மெஸேஜ் அனுப்புறது?" எரிச்சலாக உச்சுக்கொட்டியபடியே அவள் போனை எடுத்துப் பார்த்தான்.

அதில் வீசி கேரளா செல்லவிருப்பதும், விரும்பினால் ஷ்ரதாவை தன்னுடன் வரச்சொல்லி அழைத்திருப்பதும் கருப்பொருளாக இருக்க, "பிச்சைக்கார நாயே" என்று ஆவேசமாக சொல்லிவிட்டு, திரும்பி ஷ்ரதாவைப் பார்த்தான். அவள் முகம் நிச்சலனமாக இருந்தது.

'நல்லவேளை எந்திரிக்கலை' நிம்மதிப் பெருமூச்சுவிட்டவனாக அந்தத் தகவலை அழித்துவிட்டு, அநாகரிகத்தின் உச்சமாக அவள் வாட்ஸாப்பிற்குள் சென்றுப் பார்த்தான்.

முதலில் அவனுக்கு ஷ்ரதா ஏன் வீசிக்கு இவ்வளவு 'SORRY' மெசேஜ் அனுப்பியிருக்கிறாள் என்றே புரியவில்லை. எதுவாகினும் அவர்களிருவருக்குள்ளும் உறவு சுமூகமாயில்லை என்ற புரிதலே அவனுக்கு ஆத்ம திருப்தியைத் தந்தது.

அத்துடன் ஷ்ரதா இறுதியாக அவனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜை கேட்பதற்காக அவளின் ஹெட்போனைத் தேடினான். தேடும் மும்முரத்தில் அவன் ஜன்னலை ஒட்டிக்கிடந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் டிராயரை இழுக்க, உள்ளே ஹெட்போனுடன் கிடந்த மோதிரப்பெட்டியொன்று அவன் கண்ணை உறுத்தியது.

முதலில் அதை புறந்தள்ளியவனாக ஹெட்போனை மட்டும் எடுத்த சிவனேஸ்வரன் பின், குரங்குப்புத்திகொண்டு அந்த சிவப்பு வெல்வெட் பெட்டியை எடுத்து திறந்துப்பார்த்தான்.

மூடியின் உட்பக்கத்தில் 'ஐலவ்யூ ஷ்ரதா' என்று எழுதியிருப்பதைக் கண்டதுமே, "ஓஹ்! ஐயா கொடுத்த கிப்ட்டா.." என்று சர்வஅலட்சியமாக அதைத்தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்துக்கொண்டான். 'இதை அவன் மூஞ்சில விட்டெறியனும்' என்ற கோபாவேசம் அவனிடம்.

காரியத்தில் கண்ணாக போனில் ஹெட்போனை இணைத்து ஆடியோவை இயக்கியவனுக்கு ஷ்ரதாவின் பேச்சு நித்தியானந்தமாக இருந்தது. "ஆகா! ஷ்ரதா இப்போ வீசி மேல கோபத்துல இருக்காப் போலயே! ம்ம், இதுவும் நல்லது தான்! இந்த வீசியை? ம்ம்? நாளைக்கு ஏப்ரல் பூல் பண்ணிடலாம்" என்று வன்மமாக நினைத்துக்கொண்டு, போனிலிருந்த அவள் சிம்மை கழற்றி எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.

சிவனேஸ்வரன் இவ்வாறு தனது அறைக்கு வந்து சென்றது எல்லாம் தெரியாத ஷ்ரதா இன்னும் ஆழ்ந்த நித்திரையிலேயே இருந்தாள்.


*********************

தனது காதலை காப்பாற்ற சிவனேஸ்வரன் விடிந்தும் விடியாததுமாக தாரணி சந்துவின் வீட்டுவாசலில் சென்று நின்றான்.

அவள் ஏழரைமணி கல்லூரிப் பேருந்தை எதிர்பார்த்து வெளியே வந்தபோது, இவன் அவளிடம் ஓடிப்போய் "ஹாய் தாரிணி" என்றான்.

அவள் இவனைப் பார்த்ததுமே மிரண்டு இரண்டெட்டு பின் வாங்க, "ஹேய்! நான் தான்.. சிவனேஸ்வரன்.." என்று தன்னை நினைவுபடுத்தினான் அவன்.

"ம்ம், ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க" என்று மிரட்சியுடனே சொன்னாள் அவள்.

"இங்கப்பாரு தாரிணி உனக்கு வீசி தெரியும்ல என் ஃப்ரெண்டு? நீயும் ஷ்ரதாவும் நான் சொல்லி அவன் புக் ஸ்டாலுக்குக்கூட டியூசன் போனீங்களே?" தன் தவறை தானே தன் வாயாலேயே வாக்குமூலம் கொடுக்கும் அவலநிலை அவனுக்கு.

"ம்ம், ஞாபகம் இருக்கு.. சொல்லுங்க" அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னாள் தாரிணி.

"வீசி இப்போ பெரிய ஆபத்துல இருக்கான் தாரிணி.. நீ தான் இப்போ அவனுக்கு உதவணும்"

"நானா? நீங்க இப்போ என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலையே சார்!"

"ஒண்ணுமில்ல தாரிணி, நீ இந்த மோதிரத்தை வீசிக்கிட்ட கொடுத்து, நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ஷ்ரதா இங்க வரமாட்டா.. அவளுக்கு இங்க வர விருப்பமில்லைன்னு உங்கக்கிட்ட சொல்லச் சொன்னான்னு சொல்லணும்.."

தாரிணியின் முகத்தில் ஈயாடவில்லை. வீசியை காதலித்த மனம் உள்ளே வெட்டப்பட்டு ஊமையாய் கதறிக்கொண்டிருந்தது.

"என்ன யோசிக்கிற தாரிணி?"

"இல்ல நான் ஷ்ரதாகிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு.." என்று சொல்லிக்கொண்டிருந்தபடியே தனது பர்ஸிலிருந்த போனை வெளியில் எடுத்து ஷ்ரதாவுக்கு அழைப்புவிடுத்தாள்.

சிவனேஸ்வரன் அர்த்தபுஷ்டியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவள் தன்னைப் பார்க்கும்போது முகத்தை மாற்றிக்கொண்டான்.

"நாட் ரீச்சபில்னு வருது" சோகமாக சொன்னாள் தாரணி.

"தாரிணி இதுக்கெல்லாம் நேரமில்ல.. வீசி இப்போ உயிர்போகிற ஆபத்துல இருக்கான்.. நாம சீக்கிரம் ஜெயவிலாஸ் பாலத்துக்குக் கீழ போகணும்.." என்று அவளை தன் பைக்கில் ஏறச்சொன்னான் சிவனேஸ்வரன்.

அவள் இன்னும் யோசிப்புப் பாவனையிலேயே தயங்கியபடியே அவன் பைக்கில் ஏறி உட்கார்ந்தாள்.

பைக்கை தொண்ணூறில் விட்டு பாலத்திற்கடியிலிருந்த வீசி தங்களை பார்க்க முடியாத வட்டத்திற்கு வந்து அவளை இறக்கி விட்டவன், "நான் சொன்ன மாதிரியே சொல்லிடு என்ன?" என்று நினைவு படுத்தினான். அவள் அவனை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.

பாலத்திற்கடியிலிருந்த கல் திண்டொன்றில், மணி எட்டைத்தொட இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்ததால் நகம் கடித்தபடியே உட்கார்ந்திருந்த வீசி, தாரிணியைக் கண்டதுமே எழுந்து நின்றான்.

தாரிணிக்கு வீசியிடம் பொய் சொல்லப்போகிறோம் என்ற உணர்வே அச்சத்தைத் தந்தது. ஒவ்வொரு அடியையும் பயந்து பயந்து எடுத்துவைத்தாள்.

வீசி முதலில் தாரிணியை ஷ்ரதாவென்றே நினைத்துவிட்டான். தூரத்தில் அவள் முகம் சரியாகத் தெரியவில்லை அவனுக்கு. இதில் ஒரு கணம் அவன் மனம், 'அவளும் ப்ளூ ட்ரெஸ், நானும் ப்ளூ ட்ரெஸ்' என்று அல்பமாக சந்தோசப்பட வேறு செய்தது.

கண் கொட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்த வீசிக்கு அவள் முகம் அருகில் வர வர கற்பனை கேபிள்கள் அனைத்தும் அறுபட்டு, முகம் தடங்கலுக்கு வருந்தியது.

நெருங்கி வந்தவளிடம் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் மறைத்து இயல்பான முகத்தோற்றத்துடன் "என்ன தாரிணி, ஷ்ரதா அனுப்பினாளா?" என்றான் வீசி.

அவள் 'ம்ம்' என்று தலையாட்டியவண்ணமே தன் கையிலிருந்த மோதிரத்தை நீட்டினாள்.

தனது காதலுக்கு ஷ்ரதா அனுப்பிய இரங்கல் செய்தியே இந்த மோதிரம் என்று உணர ரொம்ப நேரம் எடுக்காத வீசி, அந்த மோதிரத்தை கையில் வாங்கிப் பார்த்துக்கொண்டே, "ஷ்ரதா என்ன சொன்னா?" என்றான்.

"அவளுக்கு.. இங்க வர விருப்பமில்லைன்னு சொல்லச் சொன்னா.." என்று திக்கினாள் தாரிணி.

"உண்மையாவா?" கேட்டுவிட்டே அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்று உணர்ந்தான் வீசி.

"ஷ்ரதாவை கடைசியா ஒரு தடவை எனக்குப் பார்க்கணும் தாரிணி.. ப்ளீஸ் அவளை இங்க வரச்சொல்றியா?"

"சார்?"

"ப்ளீஸ் தாரிணி இன்னும் ஒண்ணேகால் மணி நேரத்துல எனக்கு ட்ரெயின்.. ப்ளீஸ்"

அவளிடம் இப்படி கெஞ்ச அசிங்கமாக இருந்தது வீசிக்கு. அவள் கண்களைப் பார்ப்பதையே தவிர்த்தான்.

தாரிணிக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. சிங்கம் தன் முடிகளை இழந்து நிற்பது போல் காணப்பட்டான் அவன்.

"சொல்றேன் சார்" என்று கிளம்ப ஆயத்தமானாள் தாரிணி.

"இரு.. இரு.. நடந்துப்போனா லேட்டாகும்.. ஆட்டோல போ" என்று சாலையில் சென்ற ஒரு ஆட்டோவை மறித்து அவளை ஏற்றிவிட்டான் வீசி. அவனுக்கு தலையசைத்து விடைபெற்றாள் தாரிணி.

இந்த மௌன நாடகத்தை ஒளிந்திருந்தபடியே உற்றுநோக்கிக் கொண்டிருந்த சிவனேஸ்வரன், தாரிணியை ஏற்றிச் சென்ற ஆட்டோவை பின்தொடர்ந்து வந்து வழிமறித்தான்.

தாரிணி சிவனேஸ்வரனிடம் வீசி கூறியதை கூறிவிட்டு, தான் இதை ஷ்ரதாவிடம் சென்று கூறப்போவதாக பிடிவாதமாக நின்றாள். தடுத்துப்பார்த்த சிவா பின், முடியாமல் போகவும் 'போ' என்று அவளுக்கு வழிவிட்டான்.

ஆனால், குரூரமாக உடனே அருண்மொழிக்குப் போன்போட்டு வீசி கேரளா செல்லவிருப்பதைப் பற்றி கோள் மூட்டினான்.

தாரிணி ஆட்டோவில் ஷ்ரதாவின் வீட்டுவாசலில் வந்து இறங்கியபோது சாம்பல்நிற சுமோ ஒன்று வேகமாக அவளை உரசுவது போல் கடந்து சென்றது.

அவள் தனது புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டே ஜல்ஜல்லென்று உள்ளே சென்றாள். விதவிதமான மனிதர்கள் அவளை விதவிதமான முக பாவனைகளுடன் வரவேற்றார்கள். அவர்களைக் கடந்து ஷ்ரதாவின் அறைக்கு செல்வதென்பது பிரம்ம பிரயத்தனமாகத்தான் பட்டது.

அறையில் ஷ்ரதாவை சந்தித்த தாரிணிக்கு முதலில், 'ஹேய் ஷ்ரதா! என்னாச்சு? ஏன் இப்படியிருக்க?' என்றே கேட்க ஆவலிருந்தாலும் அவகாசமின்றி, "ஷ்ரதா என்கூட கிளம்பு" என்று பரபரத்தாள்.

ஷ்ரதா வியப்பாக, "எங்கே?" என்று வினவ, "ரொம்ப அவசரம்.. வா ஆட்டோல போகும்போது சொல்றேன்" என்றாள் அவள்.

ஷ்ரதா குழப்பமாகப் பார்க்கவும், "வா சொல்றேன்" என்று கையைப்பிடித்து வெளியே இழுத்துவந்தாள்.

ஷ்ரதாவின் உறவினர்கள் சிலர், "எங்கப்போற ஷ்ரதா?" என்று வினவ, தாரிணியை மாட்டிவிடாமல், "பக்கத்துல பெருமாள் கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன்" என்றே சமாளித்து அவளுடன் வெளியேறினாள்.

தாரிணி ஷ்ரதா ஆட்டோவில் தன்னருகில் வந்து அமரவும், தான் காத்திருப்பில் போட்டிருந்த ஆட்டோ டிரைவரிடம், "போலாம்ண்ணே" என்றாள்.

"ஹேய் தாரிணி! இப்போவாவது சொல்லு.. எங்கேடி போறோம்?"

"ம்ம்? உன் லவ்வரை பார்க்கப்போறோம்"

"புரியுற மாதிரி சொல்லுடி எரும"

"வீசி சாரை பார்க்கப்போறோம்டி"

ஷ்ரதா திடுக்கிட்டவளாக, "அது.. தாரிணி.. உனக்கெப்படி தெரியும் நானும் அவரும்?" என்று தடுமாறவும், இன்று தான் சிவனேஸ்வரனை சந்தித்ததிலிருந்து அவனை வெட்டிவிட்டது வரை நடந்த நிகழ்வுகளனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளிடம் ஒப்பித்தாள் தாரிணி.

முற்றாக அவள், "உன் சிவா அத்தான்கிட்ட ஏதோ தப்பு இருக்குடி" என்று சொன்னபோது, அந்த கடைசிவரியை மட்டும் காதில் ஏற்றிக்கொள்ளாத ஷ்ரதா, தன் முகத்தில் விழுந்த முடிகளையும், பறந்த துப்பட்டாவையும் சரிசெய்தபடியே ஆட்டோ டிரைவரிடம், "அண்ணே, கொஞ்சம் பாஸ்ட்டா போங்கண்ணே" என்றாள்.

ஏற்கனவே வேகமாக சென்று கொண்டிருந்த அந்த டிரைவர், அவளின் வேண்டுகோளில் இன்னும் வேகத்தை அதிகரித்தார்.

அவள் பதைபதைப்பாக இருப்பதைப் பார்த்த தாரிணி ஆற்றமாட்டாமல், "என்ன தான்டி உங்களுக்குள்ளப் பிரச்சினை?" என்று கேட்க, அவளிடம் வெடித்துச் சிதறினாள் ஷ்ரதா.

"என்ன பிரச்சினையா? நான் பணக்காரியாயிருக்கிறது, எங்கப்பாவுக்கு பொண்ணா இருக்கிறதுன்னு எல்லாம் அவருக்குத் தான்டி பிரச்சினை.. இப்போக்கூட பாரு என்னை கடைசியாப் பார்க்கிறதுக்கு வரச்சொல்லியிருக்காரு.. ட்ரெயின் ஏறி எங்கப்போறாராம்டி?"

"தெரியலையே ஷ்ரதா"

"இப்படித்தான்.. இப்படித்தான்டி என்னை எப்போப்பார்த்தாலும் அழ வைப்பாரு.. அப்புறம் அழாத பிடிக்கலைன்னு புலிக்கதை சொல்வாரு.."

தாரிணி ஷ்ரதாவின் மடிமீது கிடந்த அவளின் வலக்கையை எடுத்து, "சார், ரொம்ப நல்லவர் ஷ்ரதா.. அவரு உன்னை ரொம்ப லவ் பண்றாரு.. நீ ரொம்ப லக்கி" என்றாள்.

அதை சொல்லும்போது தாரிணியின் கண்கள் கலங்கியது போல் இருந்ததைக் கண்ட ஷ்ரதா அவளை வினோதமாகப் பார்க்க, தடாலென அந்த விபத்து நிகழ்ந்து முடிந்தது.

வாகன நெரிசல் எதுவுமில்லையென்று பறந்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர், எதிரிலொரு மஹிந்திரா ட்ரக் வண்டியைப் பார்க்கவும், வேகத்தைக் குறைக்க முயன்றார். ஆனால், பிரேக் சொல்பேச்சு கேட்கவில்லை. விளைவு, அனைவரின் "ஆ" என்ற அலறலோடு ஆட்டோ வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டது.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அங்கபிரதட்சணம் செய்த ஆட்டோவிற்குள் இருந்தவர்களை பரிதவிப்பாக மருத்துவமனைக்குச் தூக்கிச்சென்றார்கள். ஷ்ரதா தன் சுயநினைவை இழந்துக் கொண்டிருந்தாள்.

4-12IUdeV-3CGnHgVq3_BNklYynJQ-RpNq164J01BNZHXjhfsqTXTIFP9EXFnMXtj0iqAvHOrHkoHqwgUAV6FZkc6Mefct2Wn3B5fBAC6SlynP5VNC6Cp_NQi_1eNRIJtgZvZJY_


காதல் கணம் கூடும்...

எழுத எழுத பிளாஸ்பேக் நீண்டுகொண்டே செல்கிறது ப்ரெண்ட்ஸ்😂

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
தென்றல் வந்து என்னைத் தொடும்🖤
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 29​



வீசி நிச்சயம் தன் வாழ்நாளில் இப்படியொரு அவஸ்தையை அனுபவித்திருக்க மாட்டான். தன் ரௌத்திரம், சுயமரியாதை என அனைத்தையும் தொலைத்துவிட்டு இப்படி நடுரோட்டில் நிற்பான் எனவும் கனவு கண்டிருக்கமாட்டான். ஆனால், நிற்கிறான். அவளால் தான்! எல்லாம் அவளால் தான்! முருகா முருகா என்று புலம்புகிறவள் இறுதியில் அவனையே புலம்பவிட்டுவிட்டாள்.

வீசி இப்பொழுதுகூட ஏன் ஷ்ரதா மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கிறான் எனத் தெரியவில்லை. ஆனால், வைக்கிறான். அந்த அழுகுனி இம்முறை என்னை ஏமாற்றமாட்டாள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான்.

போனில் ஏதேனும் காரணம் சொல்லமாட்டாளா என எடுத்து எடுத்துப் பார்க்கிறான். நாம் நைசாக அவனருகில் சென்று இதுதான் வீசி காதலென்றால், கொஞ்சம் யோசித்துவிட்டு அவன் முகம் சுளிக்கவும் கூடும். காதல் அவனை விட்டுவைக்கவில்லை. ஆனால், அதனை அவன் முழுதாக உணரவுமில்லை!

வீசிக்கு இந்தப்பக்கம் பார்த்தோமானால், அருண்மொழியிடம் போட்டுக் கொடுத்த பின்பும், இன்னும் அவனையே கண்காணித்துக் கொண்டிருந்தான் சிவனேஸ்வரன். அவனுக்கு வீசியின் தவிப்பைப் பார்ப்பதில் அப்படியொரு இன்பம்!

வீசி தன் போனை இயக்கியதைப் பார்த்ததும், "இவன் என்ன போனை எடுக்கிறான்? இன்னும் அடியாளுங்களை வேறக்காணோம்.. அட! போன்ல வேற ஏதோ டைப் பண்றானே" என வேகமாக தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து, ஷ்ரதாவின் சிம்மை செருகி, வாட்ஸாப்பை இயக்கினான் சிவனேஸ்வரன்.

எடுத்ததுமே எதிர்புறம் வீசி அனுப்பிக் கொண்டிருந்த செய்தி வந்தது.

***********

Vc: pazhi vaanguriyaa shraddha

Vc: unkitta ennai kenja vaikkuriyaa

Vc: un appavai paththi collector kitta sonnadhu naan illa

Vc: Podhumaa

*************

"டேய் வீசி! எனக்கே நீ கெஞ்சுறதைப் பார்த்தா பாவமா இருக்கேடா.. நல்லவேளை சிம்மை கழட்டிட்டு வந்தேன்.. இல்ல ஷ்ரதா உன் நடிப்புல ஏமாந்துப்போயிருப்பா"

"ஷ்ரதாவே வந்து சொன்னா தான் போவியா? இந்தா சொல்றா, போ!"

************

Shraddha: ungalai madhiri oru pichchaikaranai love panninadhu evvalavu periya thappunu naan purinjikitten

Shraddha: ipo unga mugaththula muzhikka kooda enaku viruppamilla

Shraddha: good bye 🙏

**************

வீசிக்கு பதிலனுப்பிவிட்டு ஷ்ரதாவின் சிம்மைக் கழற்றி தலையைச் சுற்றி தூக்கியெறிந்தான் சிவனேஸ்வரன்.

"அட! எங்கேடா போன வீசி?"

கண்ணிமைக்கும் நேரத்தில் வீசி காணாமல் போயிருந்தான்.

சுற்றி இரண்டுமுறை பார்த்துவிட்டு, 'ரோஷக்காரன் கிளம்பிட்டான் போல' என்று தானே முடிவுகட்டிக்கொண்டு ஷ்ரதாவின் வீட்டிற்கு வந்தான் சிவனேஸ்வரன்.

அவனைப் பார்த்ததும், "எங்கப் போயிட்டு வர்ற சிவா? உன் அம்மா காலைலயிருந்து உன்னைத் தேடிக்கிட்டு இருக்கா.." என்று அதிருப்தி தெரிவித்தபடியே அருகில் வந்தார் காசிராஜன்.

அவ்வேளை தன்னறையிலிருந்து வெளிப்பட்ட அருண்மொழி, சிவனேஸ்வரனிடம், "கொஞ்சம் என் ரூம் வரைக்கும் வா சிவா" என்று சொல்லிவிட்டுப் போனான்.

சிவனேஸ்வரன் தன் தந்தையிடம், "இப்போ வரேன் பா" என்றுவிட்டு அருண்மொழியின் பின்னேயே சென்றான்.

அருண்மொழியின் அறையில் அவன் மகளும் மகனும் முன்பு விளையாடிய சாட்சியங்கள் அனைத்தும் இரைந்து கிடந்தன.

வந்தவனிடம் அருண்மொழி பதட்டமாக, "சிவா, வீசி அங்க பாலத்துக்குக் கீழ இல்லைன்னு நம்ம ஆளுங்க சொல்றாங்கடா!" என்றான்.

சிவனேஸ்வரன் சலிப்பாக, "ஆமா, அவன் ரயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்பின பின்னாடி போனா.." என்று அலட்சியமாக முகத்தைத் திருப்பினான்.

"ரயில்வே ஸ்டேஷனா? ஜனங்க அதிகமா நடமாடுற இடத்துல வச்சு அவனைத் தூக்க முடியாதே.. இப்போ என்ன பண்றது?" இப்போது ஏதும் செய்யாமல் வீசியை தப்பிக்கவிட்டால் விஜயாதித்தன் கேட்கும் கேள்விகளுக்கு நாக்கைப் பிடிங்கிக் கொள்ளவேண்டும். அவசரத்தில் ஒன்றும் தோன்றமாட்டேன் என்றது அருண்மொழிக்கு.

"இப்படி பண்ணினா என்ன?" இருவருமே திரும்பிப் பார்த்தார்கள். காசிராஜன் அங்கு நின்றிருந்தார்.

"போலீஸ் ஸ்டேஷன்ல அவன் நம்ம பணத்தை திருடிட்டு தப்பிச்சுப்போக ட்ரை பண்றான்னு பொய்யா கம்ப்ளைன்ட் ஒண்ணு கொடுத்தா என்ன?"

அருண்மொழி, "நல்ல யோசனை மாமா.." என்று கண்கள் பளபளத்தபடியே போன் பேச விலகிப்போனான்.

சிவனேஸ்வரனின் தோளில் கைப்போட்ட காசிராஜன், "இப்பயாவது அவனைப்பத்தி புரிஞ்சிக்கிட்டயே சிவா.." என்று அவன் முதுகைத் தட்டிக்கொடுத்தார்.

அவன், "ஆமாப்பா, இப்போ தான் அவனைப்பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்டேன்.." என்று குற்றம் செய்தவன் போல் தலைகுனிந்தான். அது காசிராஜனின் செருக்கிற்கு இன்னும் தூபம் போட்டது.

அருண்மொழி போன் பேசிவிட்டு வந்தவன், "மாமா, நம்ம ஏரியா எஸ்ஐகிட்ட சொல்லிட்டேன்.. அரெஸ்ட் பண்ணிட்டு கூப்பிடுறேன்; ஸ்டேஷன்ல வந்து ஃபார்மாலிட்டிக்கு ஒரு எப்ஐஆர் எழுதிக்கொடுத்திட்டு போங்கன்னு சொல்றாரு.. இப்போ என்னன்னு மாமா கம்ப்ளைன்ட் கொடுக்கறது?" என்று யோசிப்பவன் போல நெற்றியைத் தேய்த்தான்.

காசிராஜன் ஏற்கனவே காரணத்தை யோசித்து வைத்தவர் போல சொன்னார். "அவன் இதோ சிவாவோட பிரெண்ட் தானேப்பா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி சிவாக்கூட அவன் நம்ம வீட்டுக்கு வந்தான், அப்போ எங்கக் கம்பெனிலயிருந்து நான் டாக்ஸ் கட்ட கொண்டு வந்த பணம் முப்பது லட்சத்தை திருடிட்டான்னு கம்ப்ளைன்ட் கொடுப்போம்.."

"பிரில்லியண்ட் ஐடியா மாமா.. இப்போவே நம்ம எஸ்ஐ அறிவழகன் கிட்ட இதை சொல்லிடுறேன்.." என்று அருண்மொழி மீண்டும் போனும் கையுமாக நகர்ந்தான்.

கீழே கிடந்த குரங்கு பொம்மையை வெறித்துக் கொண்டிருந்த சிவனேஸ்வரன் திரும்பி தன் தந்தையைப் பார்த்தான்.

அவர் கண்ணில் எதையோ சாதித்துவிட்ட மின்னல் வெட்டியது. தன்னைப் பார்த்து சிரித்தவருக்கு தானும் பதில் புன்னகை வழங்கினான் சிவனேஸ்வரன்.

*********************

வஞ்சகர்களின் திட்டபடியே, வீசி டிவிசி எக்ஸ்பிரஸில் ஏறப்போன சமயம் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டான்.

அவனை போலீஸ் ஜீப்பில் கைவிலங்கோடு கீரைத்துறை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தபோதே, அருண்மொழிக்கு போனில் அழைப்பு விடுத்து, ஸ்டேஷன் வரச்சொன்னார் துணை ஆய்வாளர் அறிவழகன்.

அப்போது வீசி இப்படித்தான் நினைத்தான். 'ஷ்ரதா உன்னைவிட்டுப் போகணும்னு நினைக்கிறவனை ஏன் விதி உன்கிட்டயே மறுபடியும் கொண்டு வந்து சேர்க்குது?'

வாசலில் காத்திருந்த அருண்மொழி, துணை ஆய்வாளர் அறிவழகனுக்கு வணக்கம் வைத்தான். அவரும் பதிலுக்கு தலையசைத்தார்.

ஏற்கனவே கணித்திருந்தாலும் சிவனேஸ்வரனுக்கு துணை ஆய்வாளரை நேரில் பார்த்ததும் முகம் அதிர்ச்சியை அப்பட்டமாகக் காட்டியது.

வீசி கைவிலங்கு விலக்கப்பட்டு உதவுவாரின்றி லாக்கப்பில் அடைக்கப்பட்டான்.

எப்ஐஆர் கொடுக்க காசிராஜன் அறிவழகனுக்கு முன்பிருந்த நாற்காலியில் அருண்மொழிக்கருகில் வந்து உட்கார்ந்தார்.

வீசி லாக்கப்பின் கம்பிகளை பிடித்துக்கொண்டே பரிதாபமாக அவர்களைப் பார்த்திருந்தான்.

காசிராஜன் தன் புனைவை சொல்லி முடித்ததும், "ம்ம் சொல்லு சிவா!" என்று கட்டளையிட்டார்.

அவன், 'ஒரு ப்ரெண்ட் நமக்கு துரோகம் செஞ்சா எப்படி இருக்கும்னு இப்போ தெரியுதா வீசி?' என்று லாக்கப்பில் கிடப்பவனிடம் பார்வையால் வினவிக் கொண்டிருந்தவன், "ஆங்? ஆமாம் சார், இவனை என் ப்ரெண்ட்னு சொல்லி எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போனேன்.. இவன் என்னடான்னா எங்க அப்பா வச்சிருந்த பணத்தையே திருடிட்டுப் போயிட்டான் சார்.. பணத்தை எங்கேயோ மறைச்சி வச்சிட்டு தான் சார் இப்போ இவன் கேரளா போகப் பிளான் பண்ணியிருக்கான்" என படபடவென பொரிந்தான்.

அவர்கள் கூறிய அனைத்தையும் கேட்டு அதிர்ச்சியில் சமைந்துப் போயிருந்த வீசி, "இல்ல சார், என் மேல உள்ள விரோதத்துல தான் இவங்க இப்படிலாம் பொய் சொல்றாங்க" என்றான்.

அறிவழகன் அருண்மொழியையும் வீசியையும் மாறிமாறிப் பார்த்து சிரித்தார்.

பின், முன்னே குனிந்து தணிந்த குரலில், "பேருக்கு எப்ஐஆர் போடறேன்.. ஆனா, கோர்ட்டுக்கு கொண்டு போகிற வழியில தப்பிச்சிட்டான்னு மாத்தி சொல்லிடலாம்.. நீங்க அவனை எப்படி கவனிக்கணுமோ கவனிச்சிக்கங்க.." என்று கண்சிமிட்டினார்.

அருண்மொழி வாயெல்லாம் பல்லாக சரியென்று எழுந்து நின்று அவருக்கு கும்பிடு போட்டான்.

புகார் கொடுக்க வந்த மூவரும் கிளம்பும்போது சிவனேஸ்வரன் மட்டும் மனம் பிசைய, மெள்ள மெள்ள நடந்துசென்றான். அறுந்துபோன நட்பு இழை இன்னும் லேசாக அவனுள் ஒட்டிக்கொண்டிருந்ததோ என்னவோ!

ஸ்டேஷன் லாக்கப்பில், "ப்ளீஸ் சார் அடிக்காதீங்க சார்.. ப்ளீஸ் சார்" என்று கதறிய வீசிக்கு அங்கு பச்சாதாபம் காட்ட யாருமில்லை. அவன் உடை முழுவதையும் உருவி, கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிப்போட்டு, பிரம்பால் லாடம் கட்டினார்கள்.

அதிகாரத்தின் யானை கால்களில் மிதிபடும் சித்தெறும்பின் நிலையிலிருந்தான் வீசி. வெளிகாயம் உள்காயம் என்று அந்த இரவின் நீளம் விளங்கியது அவனுக்கு.

மறுநாள் கண்துடைப்பாக வீசி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது சுவீகாரம் செய்யப்பட்ட குழந்தை போல் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றப்பட்டான். அடியாட்கள் நிற்கக்கூட முடியாமல் இருந்தவனை, அனாயசமாக தங்கள் தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு சென்றார்கள்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் காவலர்கள் அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

வீசியுடனான அந்த ஆம்னி குண்டும் குழியுமான அந்த சாலையில் குலுங்கி குலுங்கி சென்றுக்கொண்டிருந்தது.

*******************

அருண்மொழியின் உத்தரவுபடி, நேரே வீசியை செல்லூரிலுள்ள அவர்கள் கிரானைட் குடவுனிற்கு இழுத்துச்சென்ற கைக்கூலிகள், அவனை அங்கு தலைகீழாக தொங்கவிட்டார்கள்.

வீசி கொஞ்சநஞ்ச உயிருடன் மீன் போல் முன்னும் பின்னுமாக துள்ளினான்.

அவனின் முயற்சிகள் அவர்களுக்கு வேடிக்கையாக இருந்ததோ என்னவோ ரசித்துச் சிரிப்பதற்காகவே சிறிதுநேரம் அவனை அவ்வாறு விட்டுவைத்தார்கள்.

பின், அவனது முயற்சிகள் அனைத்தும் அடங்கி ஓய்ந்தபோது அரக்கர்கள் இரக்கமேயில்லாமல் உருட்டுக்கட்டையால் இரத்தம் சொட்டச்சொட்ட அடித்தார்கள்.

ஏற்கனவே புத்தகக்கடையில் அவனிடம் அடிவாங்கியவர்களில் இருவர் வேறு இந்த ஜோதியில் ஐக்கியம் என்பதால் பழிவாங்கும் படலம் வேறு சேர்ந்து அரங்கேறிக்கொண்டிருந்தது.

கும்பலில் குட்டையானவன் பூனைக்குரலில் கத்தினான். "ஜீவாண்ணே, இவனை சும்மாவிடக்கூடாதுண்ணே.. இதை விட பெருசா செய்யணும்ண்ணே.."

"டேய்! சின்னவரோட மச்சான்டா இவன்" - ஜீவாண்ணாவுடைய பதில் இது.

"ஏண்ணே! அவரு தானே இங்க கட்டிப்போட்டு வைக்கச் சொன்னாரு.. எப்படியும் இவன் பண்ணின வேலைக்கு விஜியண்ணே இவனை சும்மாவிடுவார்னு நினைக்கிறீங்க?"

"சரிடா, இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற?"

"இவன் நம்மளை ஏன்டா தொட்டோம்னு நினைக்கிற அளவுக்கு பண்ணனும்ணே.. டேய் வாசு! அந்த கிரானைட் கட்டிங் மிஷினை எடுத்துட்டு வாடா.."

வாசு உடனே அதற்கு செவிசாய்த்தான்.

அரை மயக்கநிலையில் கிடந்த வீசி எதிர்க்க வலுவில்லாமல் அவர்களின் குரோதத்திற்கு செத்து செத்துப் பிழைத்தான்.

அவர்கள் தன் முதுகில் செய்த ஒவ்வொரு விளையாட்டிற்கும் துடித்து துடித்து அலறினான். மொத்தம் பதினேழு கீறல்கள். ஒவ்வொன்றிற்கும் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.

"ம்ம்! போதும் இவனை அவுத்துவிட்டுட்டு இந்த இடத்தை கழுவி விட்ரலாம்" என்று அவர்கள் தங்களுக்குள்ளேயே திருப்தியாக ஒரு முடிவிற்கு வந்தபோது தான் அந்தத் திருப்பம் நிகழ்ந்தது. வீசியைப் பொறுத்தவரை அது ஒரு தெய்வ சங்கல்பம்!

யாரும் எதிர்பார்த்திராத சமயம் திடுமென குடவுனிற்குள் நுழைந்த எட்டுபேர், விஜயாதித்தனின் ஆட்களை சரமாரியாக தாக்கிவிட்டு வீசியை தங்களுடனே தூக்கிச்சென்றார்கள்.

வீசி, தன்னை காப்பாற்றியவர்களைக் கூட கண் திறந்து பார்க்க முடியாமல் கிடந்தான்.

ஊசலாடிக் கொண்டிருந்த அவன் உயிர் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் சொகுசு அறையில் வைத்து வைத்தியம் பார்க்கப்பட்ட பின்பே காப்பாற்றப்பட்டது.

தான் விழித்துப் பேச ஆரம்பித்த ஒவ்வொரு நாளும் தன்னுடன் வந்து அரட்டையடித்துவிட்டுச் சென்ற அந்த மனிதரை வீசிக்கு ரொம்பவேப் பிடித்துப்போனது.

அனைவரும் அவரை 'மாணிக்கண்ணே' என்றார்கள்.

ஆனால், வீசி அவ்வாறு அவரை கூப்பிட்டபோது 'ராஜ மாணிக்கம்' என்று முழுநாமம் பெற்ற அந்த மனிதர் வேடிக்கையாகச் சிரித்தார். அவனுக்கு அது கூச்சமாக இருந்தது.

எப்படி கூப்பிடுவது என்றே பலவாறு யோசித்து ஒருநாள் 'மாணிக்ஜி' என்றான். அப்போது அவர் அவன் முதுகை தட்டிக்கொடுத்தார். காயம் இன்னும் ஆறாதபடியால் அந்தத் தட்டல் வலியைக் கொடுத்தாலும், வீசி அதை காட்டிக்கொள்ளவில்லை.

நாட்கள் செல்ல செல்ல அங்கிருந்தவர்கள் அனைவருடனும் சகஜமாக பேசப் பழகிக்கொண்டான் வீசி. அவர்களும் அவனை தங்களவர்களாக ஏற்கப்பழகிவிட்டார்கள்.

அதிலும் வித்யாவுக்கு அவனை ஒருபடி கூடுதலாய் பிடித்துவிட்டது. காரணமேயில்லாமல் அடிக்கடி அவனை வந்து சந்தித்தாள். வீசி முடிந்தளவு அவளிடமிருந்து விலகியிருக்கவே தீர்மானித்தான். இன்னொரு காயத்தை ஏற்க அவன் மனம் தயாராகயில்லை.

நாட்கள் ஒவ்வொன்றும் வாக்கிங்கிலிருந்து ரன்னிங்கிற்கு முன்னேறியது போல் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

இடையில் ஒருநாள் ராஜ மாணிக்கம் விஜயாதித்தனின் எதிரி என்றும், இருவரும் கேஆர்பிக்கு கீழே வேலை செய்கிறார்கள் என்றும் தெரிய வந்தபோது வீசி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ராஜ மாணிக்கத்தின் மேல் கோபம், பயம் எதுவுமின்றி தன்னைக் காப்பாற்றியவர் என்ற நன்றியுணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது அவனிடம். அதில் முழுமையாய் குணமடைந்த பின், ராஜ மாணிக்கத்தின் கீழேயே கணக்குப்பிள்ளையாக வேலைக்குச் சேர்ந்தான் வீசி.

ராஜ மாணிக்கத்திற்குச் சொந்தமான கிரானைட் குவாரிகளில் எவ்வளவு பாறைகள் வெட்டியெடுக்கப்படுகின்றன. அவை எங்கெங்கே அனுப்பி வைக்கப்படுகின்றன என்று நயாபைசா விடாமல் துல்லியமாக கணக்குப்பார்த்தான். ராஜ மாணிக்கமே அவன் திறமையில் அசந்து தான் போனார்.

ஒருமுறை அவர் அவனிடம் தன் ஆள் என்றாலே துப்பாக்கி இருக்கவேண்டும் என்று ஒரு துப்பாக்கியை நீட்டியபோது வீசி மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.

ஆனால், வாங்கும்போது மறுவாரமே அதை தான் உபயோகிக்க வேண்டிய நிலை வரும் என்று நிச்சயமாக அவன் நினைத்துப் பார்த்திருக்கமாட்டான்.

ஒரு பருவக்காற்று சுழற்சியில் அவன் வாழ்க்கையே போர்க்களமாகிவிட்டது. எதிரியின் உயிரை பறித்தல் என்பது தர்மமாகிவிட்டது.

****************

வீசியின் வீர தீர செயல்களை எல்லாம் கேள்விப்பட்டபோது விஜயாதித்தனுக்கு உடலில் மிளகாயை அரைத்துப் பூசியது போல் காந்தியது.

ஏற்கனவே வீசியை தங்களின் கஸ்டடியில் இருந்து அந்த ராஜ மாணிக்கம் கடத்திச் சென்றிருக்கிறான் என்ற கடுப்பிலிருந்த விஜயாதித்தனுக்கும், அருண்மொழிக்கும் வீசி தங்களின் ஆட்களை எதிர்க்க வேறு செய்கிறான் என்று தெரிந்ததும் கோபம் கொப்பளித்தது. ஆத்திரமாக கேஆர்பியிடம் சென்று முறையிட்டார்கள்.

ஆனால், கேஆர்பி விசாரித்த போது ராஜ மாணிக்கம், "என் உயிரை வேணும்னாலும் கேளுங்கண்ணே.. ஆனா அந்தப்பையனை மட்டும் அனுப்ப முடியாது" என்று திண்ணமாக கூறி மறுத்துவிட்டார்.

இதை அடியாட்கள் மூலம் வீசி அறிந்த போது கண் கலங்கிவிட்டான். அக்கணத்தில் அவன் மனதில் ஒரு தீர்மானம் பிறந்தது, 'இனி மாணிக்ஜி தான் எனக்கு தெய்வம், குரு, வழிகாட்டி எல்லாம்'

ராஜ மாணிக்கம் 'நீ செய்ய வேண்டாம் வீசி' என மறுத்தும் வலிய விஜயாதித்தனுக்கு எதிரான சம்பவங்களில் எல்லாம் ஈடுபட்டு, அவரை புருவம் உயர்த்தச் செய்தான் வீசி.

அவனின் புஜபல பராக்கிரமத்தில் ராஜ மாணிக்கமும் 'இனி உன் எதிரி நானல்ல விஜயாதித்தா.. வீசி தான்..' என்று போர்முரசு கொட்டுமளவிற்கு வந்துவிட்டார்.

வீசியின் தலையீட்டையும் அட்டூழியத்தையும் விஜயாதித்தனால் ஜீரணிக்கவே முடியவில்லை. கைக்கும் வாய்க்கும் வாகான தன் மகனையே எந்நேரமும் கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தார்.

அருண்மொழி இந்த இயலாமையின் கோபத்தை எல்லாம் வீட்டில் மதுபாலாவிடம் காட்டினான். அவள் தன் தாய்வீட்டிற்குச் சென்று, வீசி கொடைக்கானல் செல்லவில்லை; இங்கு மதுரையில் ஒரு ரவுடி கும்பலிடம் தான் வேலை செய்கிறான் என்று அழுகையோடு முறையிட்டதும், அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்தியும் அவனைத்தேடி ராஜ மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்தார்கள்.

அப்போது வீசி அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டான். "நான் இங்க மாணிக்ஜிக்கு கீழ வேலை பார்க்கிற வரை தான் என் உயிருக்கு உத்திரவாதம்.. விலகினா உங்கப்பிள்ளை உங்களுக்கு இல்ல" என்று அவர்கள் தன்னை வற்புறுத்த இயலாத அளவுக்கு அவர்களின் வாயை கட்டிப்போட்டுவிட்டான்.

அப்போது அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்தியும் அவனை வேதனையோடு பார்த்துக்கொண்டே சென்றார்கள்.

அவர்கள் சென்றபின் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவர்கள் கடைசியாக பார்த்துச்சென்ற அந்த பார்வை ரொம்பவே இம்சித்தது.

எப்போதும் ஒருவித மனகலக்கத்துடனே திரிந்தவனை ராஜ மாணிக்கம் அழைத்து, "வீசி, நீ என் கூடவே இரு.. ஆனா, உங்கம்மா அப்பாவுக்கும் மகனா இரு" என்றதும், அன்று அவன் அடைந்த உவகைக்கு உவமையே கிடையாது. அவரின் இருகைகளையும் பிடித்து புறங்கையில் முத்தமிட்டான்.

ராஜ மாணிக்கம் அவன் தன் அன்னை தந்தையிடம் சேர்வதற்காக பெயருக்கு தனியே, பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் கிரானைட் விற்பனை செய்யும் அலுவலகம் ஒன்றை நிறுவிக்கொடுத்தார்.

வீசி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த நிறுவனத்திற்கு 'ரூபி கிரானைட்ஸ்' என்று பெயர் சூட்டினான். ராஜ மாணிக்கம் அதில் மனம் குளிர்ந்துப்போனார். 'இந்த துரியோதனனுக்கு ஏத்த கர்ணன் இவன் தான்' என்று வீசியை மெச்சுதலாய் பார்த்தார்.

அந்நாளிலிருந்து அவன் மீதான அவர் கவனிப்பும் பிரத்யேகமானது. அது தவறில்லை என்று மெய்ப்பிக்க, இந்த எட்டு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் அவரை வியக்கவைத்துக் கொண்டேயிருந்தான் வீசி.

ராஜ மாணிக்கத்தின் மற்ற அடியாட்கள் போல் அவரை தலையில் தூக்கிவைத்து துதி பாடாததும், தன் வேலையை நேரத்திற்குள் செவ்வனே செய்து முடிப்பதுவுமே மற்றவர்களிடமிருந்து அவனை வித்தியாசப்படுத்திக் காண்பித்தது.

ராஜ மாணிக்கத்திற்கு அவன் தொழில் நேர்த்தியில் கேஆர்பியையே தூக்கி சாப்பிட்டுவிடுவான் போல் தோன்றினான். ஒருவேளை இவனை என் மருமகனாக்கிக்கொண்டால் தான் என்ன? மிகப் பிரமாதம்! விஜயாதித்தனுக்கு இதைவிட பெரிய அடி ஒன்று இருக்கவே முடியாது. தவிர கமலாவும் வீசி சென்றபின் வித்யா அவன் தங்கியிருந்த அறையில் தங்கி, அவன் போட்டோவையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றாள். ஆம், இது தான் சரி என்று ராஜ மாணிக்கம் பகல் கனவு காண ஆரம்பித்தார்.

சமயம் பார்த்து தான் நினைத்ததை தயங்காமல் வீசியிடம் தெரிவிக்கவும் செய்தார்.

இதனால் விஜயாதித்தன் பாதிக்கப்படுவார் என்பதே வீசியை அவரின் விருப்பத்திற்கு இசைய வைத்தது. "உங்க விருப்பம் மாணிக்ஜி" என்றுவிட்டான்.

WFHEMGh8MwcjMI50M5ou6lAS8611xdIE2Ak6eVezlCO7Ad-AO9iHSqGOcIa0fnRn8boktwYwDeNjihHvUOd3FibJWt0MF8o_tNbPVvTwHPkgBrF4KcvbZhQWjQK8yeNw1NARCd0-


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
தொட்டால் பூ மலரும்🌷
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 30​



தொடர்ந்து மழையில் ஊறியிருந்த மண்சுவர், பனைஓலை, ஜீவராசிகள் என்றே தேடித்தேடி காற்றில் நறுமணத்தை கலந்துக் கொண்டிருந்தது இயற்கை.

"இப்போ மணி என்னயிருக்கும்?"

வித்யா கேட்டவுடன் பார்த்தவன் சொன்னான். "ட்வெல்வ் தேர்ட்டி"

'ஓ' என்றவள் அலட்சியமாக சில வார்த்தைகளை விட்டுவிட்டாள். "வீசியும் ஷ்ரதாவும் முன்னாடி லவ் பண்ணியிருப்பாங்கன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கலை.. ஆமா நீங்க தான் இவ்வளவு வில்லன் வேலைப் பார்த்திருக்கீங்களே..."

சிவனேஸ்வரன் அவளை முறைத்துப் பார்த்ததுமே உதட்டைக் கடித்துக்கொண்டு, "இல்ல.. ஐ மீன்.. எப்படி நீங்க வீசி ஷ்ரதாவை கட்ட வி..ட்..டீ..ங்கன்னு?" கடைசி வார்த்தையில் இழுவை அதிகமாய் இருந்தது.

"நான் எங்க விட்டேன்.. எனக்கு அவங்களுக்கு கல்யாணம் ஆனதே தெரியாது" என்று முறுக்கிக்கொண்டான் சிவனேஸ்வரன்.

"என்ன சொல்றீங்க! உண்மையாவே தெரியாதா?" வித்யாவின் சந்தேகப்பார்வை அவனுக்கு எரிச்சலைத் தந்தது.

"என் அம்மா அப்பா என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டாங்க.. பெங்களூர்ல வேலைப் பார்த்துக்கிட்டு இருந்த என்கிட்ட திடீர்னு ஒருநாள் 'உனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கோம்.. பத்திரிக்கையும் அடிச்சிட்டோம்'னு சொன்னாங்க.. நான் பதறியடிச்சி ஓடிவந்துப் பார்த்தா, 'பாரு! ஷ்ரதாவுக்கே கல்யாணம் ஆகிடுச்சி.. ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்ற பொண்ணு கழுத்துல தாலி கட்டு'ன்னு சொல்றாங்க.. எனக்கும் அப்போ வேற வழி தெரியல"

"இல்ல, எனக்குப் புரியல.. உங்க அம்மா தானே முன்னாடி ஷ்ரதாவை உங்க வீட்டுக்கு மருமகளாக்கணும்னு நினைச்சாங்க?"

"ஆமா, ஆனா இடையில தான் எங்கண்ணன் சதி பண்ணிட்டானே.. எங்கம்மா என் அண்ணன் இறந்ததுக்கு காரணமே ஷ்ரதா தான்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க"

"என்ன சொல்றீங்க! உங்க அண்ணன் இறந்துட்டாரா?!"

"ம்ம், எங்கம்மா என் அண்ணன் ஃபிளைட் வெடிச்சி செத்ததுக்கு காரணமே, அவன் ஷ்ரதா கழுத்துல கட்டின தாலி தான்னு நினைக்கிறாங்க.."

வித்யாவால் தன் ஆர்வத்தையும் அதிர்ச்சியையும் மறைக்க முடியவில்லை. அவனை இன்னும் சற்று நெருங்கி உட்கார்ந்துக்கொண்டு கேட்டாள். "என்ன! உங்கண்ணன் ஷ்ரதா கழுத்துல தாலி கட்டினாரா?!"

"ஆமா, உண்மையை சொல்லனும்னா அது ஒரு கல்யாணமே கிடையாது"

தன் அண்ணனின் அன்றைய செயலுக்கான கோபம் இன்னும் அவன் முகத்தில் தாண்டவமாடியது.

*********************

அன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, எதிரே வந்த மஹிந்திரா ட்ரக் வண்டியால் தூக்கி வீசப்பட்ட விபத்தில் ஷ்ரதா முற்றிலுமாக சுயநினைவிழந்திருந்தாள்.

யாருடனோ அவள் ஊர் சுற்றுகிறாள் என்று கேள்விப்பட்டதிலிருந்தே அவள் மேல் பிடிப்பின்றி இருந்த விஜயாதித்தனுக்கு அவள் இவ்வாறு அடிபட்டு சுயநினைவின்றி கிடக்கிறாள் என்று தெரிந்ததுமே தசை லேசாக ஆடத்தான் செய்தது.

இருப்பினும் கல் நெஞ்சுக்காரராய், "டாக்டர்கிட்ட எழுந்து நடமாடுவாளா இல்ல அப்படியே தான் கிடப்பாளான்னு கேளு அருண்மொழி.. மாட்டான்னா ஊசியப் போட்டு சோலியை முடிக்கச்சொல்லு.." என்று இரக்கமேயின்றி சொன்னார்.

அருண்மொழி திடுக்கிட்டவன் போல மறுப்புமொழி கூறினான். "இல்லப்பா, எப்போ வேணா நினைவு திரும்பும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணி தான் பார்ப்போமே.. அப்புறம் உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல பெயில் கிடைச்சிரும்னு வக்கீலுங்க சொல்றாங்கப்பா.." என்றான்.

"ரெண்டு நாளா? ரெண்டு வாரம் அருண்மொழி! ரெண்டு வாரம்! பதினாலு நாளா நான் உள்ள இருக்கேன்டா.. அந்தப்பய இதுக்கான விலையை கொடுத்தே ஆகணும்.."

"அது வந்துப்பா…"

"என்ன அருண்மொழி? ம்ம்ம்! சொல்லு?"

விஜயாதித்தனின் உறுமல், மேலும் அருண்மொழியின் வார்த்தைகளை உள்ளிழுத்தது.

"அப்பா அதுவந்து அவன் ஊரை விட்டு தப்பிச்சிப்போக இருக்கிறதா கேள்விப்பட்டு… நம்ம ஆளுங்களைவிட்டு அவனை நம்ம செல்லூர் குடவுன்ல போட்டு அடைச்சு வைக்கச் சொன்னேன்பா.."

அவன் முடிக்கவில்லை. அதற்குள்ளாக விஜயாதித்தனே மீதத்தை யூகித்துக்கொண்டு, "நல்ல வேலை செஞ்ச அருண்மொழி.. என் ஆஸ்திக்கும் தொழிலுக்கும் அடுத்த வாரிசு நீ தான்னு நிரூபிச்சிட்டடா.." என்று மெச்சுதலாய் அவனைப் பார்த்தார்.

அவனால் அவரை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. "அப்பா அதுவந்து ஒரு தப்பு நடந்துப்போச்சிப்பா.. அவனை குடவுன்ல கட்டி வச்சிருந்தப்போ, நம்ம ஆட்கள் கண்ணசந்த நேரத்துல ராஜ மாணிக்கத்தோட ஆட்கள் அவனை தூக்கிட்டுப் போயிட்டாங்களாம்ப்பா.."

விஷயத்தின் வீரியத்தில் விஜயாதித்தனின் ரத்தம் கொதித்தது. ஜெயிலென்றும் பாராமல் மூர்த்தன்யமாய் கத்தினார். "தெரியும்.. தெரியும்.. உன்னால ஒரு வேலையும் உருப்படியா செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும் அருண்மொழி.. உனக்கு சொல் புத்தியும் கிடையாது.. சுய புத்தியும் கிடையாது.. இருந்திருந்தா அந்த பிச்சைக்காரன் வீட்டுல போய் என்னை பொண்ணு கேட்க சொல்லிருப்பியா? இல்ல இப்போ இவனைத்தான் ராஜ மாணிக்கத்துக்கு தாரை வார்த்திருப்பியா? உன்னால எனக்கு எப்பவுமே தலைகுனிவு தான் அருண்மொழி.. நிச்சயம் ராஜ மாணிக்கம் உள்நோக்கம் இல்லாம இதை செஞ்சிருக்க மாட்டான்.. எப்படியும் அந்தப்பயலை நமக்கு எதிரா திருப்பிவிடத்தான் பார்ப்பான்.. என்ன மரமாட்டம் நிற்கிற? போ! உன் புது எதிரிக்கு வாள்வீச தயாராகு" என்றார்.

அருண்மொழிக்கு விஜயாதித்தனின் இந்த கலக்கமும் ஆவேசமும் வீணென்றுத் தோன்றியது. 'அடியாட்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால் வீசி பிழைப்பதே அபூர்வம் எனும்போது, இவர் எதற்கு இப்படி கற்பனை செய்து குதித்துக் கொண்டிருக்கிறார்?' இதை விஜயாதித்தனிடம் சொன்னால் மேலும் சில மண்டகப்படிகள் தனக்குக் கிடைக்கும் என்பதால், மைந்தன் தன் தவறுக்கு வருந்துபவன் போல முகத்தை வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

விஜயாதித்தன் தனக்கு முன்பிருந்த இரும்புத்தடுப்பை இரண்டு முறை குத்தினார். கோபம் யார் மேல் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு இருந்தது. 'நான் முதல்ல வெளிய வரணும்!'

எதிர்பார்த்தது போலவே இரண்டு நாளில் அவருக்கு பெயில் கிடைத்து வெளியே வந்தபோது முதலில், "அந்த வீசியை ராஜ மாணிக்கம் எங்க ஒளிச்சு வச்சிருக்கான்?" என்றே ஆத்திரப்பட்டார் மனிதர்.

புறாக்குஞ்சு கள்ளப்பருந்தின் கண்காணிப்பில், அதன் றெக்கைக்கடியில் தான் பத்திரமாக இருக்கிறது என்று தெரிந்ததும், 'உனக்காக வேடனா வலைவீசி காத்திருக்கேன் வருண் சக்கரவர்த்தி.. நீயே வந்து மாட்டுவ' என்று வஞ்சினத்தோடு காத்திருக்கவும் செய்தார்.

விஜயாதித்தன் சிறையிலிருந்து வெளியே வந்து சரியாக மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். தெய்வாதீனமாக ஷ்ரதாவிற்கு அப்போது தான் நினைவு திரும்பியிருந்தது.

இவ்வளவு நாள் மகள் இருக்கிறாளா செத்தாளா என்று கூட எட்டிப்பார்க்காமல் கிடந்தவர், விஷயத்தை கேள்விப்பட்டதுமே முதல் ஆளாக அவளைத்தேடி மருத்துவமனை வந்தார்.

அங்கு மகளின் முன்னால் ஒப்புக்கு மருத்துவரின் கையைப்பிடித்து நன்றி கூறி நெகிழ்ந்தார். "எவ்வளவு.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. என் மக உயிர் தான் முக்கியம்னு சொன்னேன்.. சொன்னபடியே என் பொண்ணை காப்பாத்தி கொடுத்துட்டீங்க டாக்டர்" என்று கண்ணைத் துடைத்தார்.

ஷ்ரதாவுக்கு அவரின் நடத்தைகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. இவ்வளவு நாளும் அவளுக்கு அவர் போட்டிருந்த கண்கட்டு அவிழ்ந்தது போல் இருந்தது. அவரைப் பார்ப்பதையே தவிர்த்தாள்.

ஆயினும் அவர் வலிய வந்து அவளிடம் பேச்சுக்கொடுத்தார். "ஷ்ரதாம்மா, அப்பாவை இப்படி பயமுறுத்திட்டியேடா" என்று அருகில் வந்து அவளை அணைக்க முயன்றார்.

ஷ்ரதா மூர்க்கமாக கத்தி அவரை வெளியேறச் சொன்னாள். "நில்லுங்க! என் கிட்ட வராதீங்க! உங்களைப் பார்த்தா எனக்கு பயமாயிருக்கு.. அம்மா இவரை இங்கயிருந்து வெளிய போகச் சொல்லுங்கம்மா.. எனக்கு இப்படி ஒரு கொலைகார அப்பா வேண்டாம்மா.." என்று காதைப்பொத்தி கூச்சல் போட்டாள். ஓங்கிக்கத்தியதில் தலைவலி வேறு ஒருபுறம் சேர்ந்துகொண்டது.

நடக்கும் களேபரங்களைக் கண்டு ஷ்ரதாவிடம் ஓடிவந்த செவிலியர், "உடம்பு காயம் மட்டும் தான் சார் ஆறியிருக்கு.. இன்னும் தலையில பட்ட காயமெல்லாம் ஆறலை சார்.. இந்த ஸ்டேஜ்ல அவங்க மூளைக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்கிற மாதிரி நடந்துக்கிறதோ பேசுறதோ ரொம்ப டேஞ்சர் சார்.. இதனால அவங்க சுயநினைவை இழக்கக்கூட சான்ஸ் இருக்கு சார்" என்று எச்சரித்துவிட்டு மாத்திரை ட்ரேயுடன் வெளியேறினார்.

விஜயாதித்தனின் உயர்ந்த புருவம் இன்னும் இறங்கியிருக்கவில்லை. ஷ்ரதாவை மனிதர் அடாது பார்த்தார். இன்னும் வியப்பிலிருந்து மீண்டிராதவராகவே அவளிருந்த அறைக்கு வெளியேயிருந்த ஸ்டீல் சேரில் வந்து உட்கார்ந்தார்.

"அப்பான்னு வாய் நிறைய கூப்பிடுற கழுதை இன்னைக்கு இப்படி பேசிடுச்சே" என்றவர் வெதும்பிக்கொண்டிருக்கும் போதே, கோகிலா தன் குடும்பத்தோடு ஷ்ரதாவைப் பார்க்க வந்து சேர்ந்தார்.

முந்தையநாள் தான் ஷ்ரதாவுக்கு நினைவு திரும்பியதாக விஜயாதித்தன் போனில் அவருக்கு சொல்லியிருந்தார். உடனே அம்மையார், "ஷ்ரதா இனி எப்படியும் வீடு திரும்பிடுவா.. அவளுக்கும் ஆதிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.." என்று அமோக திட்டத்துடன், குடும்பத்தோடு கிளம்பி வந்துவிட்டார்.

வந்ததும் வராந்தாவில் ஷ்ரதாவின் பேச்சுக்களையே தீவிரமாக அசைபோட்டுக் கொண்டிருந்த விஜயாதித்தனைப் பார்த்து, தன் கையிலிருந்த ஆப்பிள், ஹார்லிக்ஸ் பைகளை எல்லாம் தன் கணவரிடம் கொடுத்து ஓரங்கட்டிவிட்டு, "என்னண்ணே வெளிய உட்கார்ந்திருக்க? முகம் வேற கசங்கிப்போயிருக்கு.. இரு, நான் போய் முதல்ல ஷ்ரதாவைப் பார்த்துட்டு வரேன்.." என்று சொல்லிவிட்டு, பின்னால் திரும்பி, "டேய் வாங்கடா.." என்று தன் இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

ஷ்ரதாவுக்கு ஆதியை பார்த்ததுமே முகம் ரத்தப் பசையற்றுப்போனது. யாரோ இரண்டு பேர் சேர்ந்து அவள் தலைக்குள் வாணவேடிக்கை நிகழ்த்துவது போல ரணமாக இருந்தது. பத்தாததிற்கு அவன் குறும்புப்புன்னகை வேறு அவளை கூனிக்குறுகச் செய்தது.

இப்படி குபீரென்ற உயரத்துடன், வாட்டசாட்டமாக, வேதம் பயின்றவன் போன்ற முக தேஜஸுடன், கண்ணில் காதல் பொங்க அவன் வந்து நிற்பான் என்று தெரிந்திருந்தால் ஷ்ரதா அன்று அவனுடன் பேச்சை நீட்டித்திருக்க மாட்டாளோ என்னவோ!

"அய்யோ! இந்த ஆதி அத்தான் ஏன் இப்படி முழுங்கிற மாதிரி பார்த்துத் தொலையுறாங்க? புத்திகெட்டு வரைமுறை தாண்டி நான் உங்கக்கிட்ட பேசினது தான், எனக்கு நானே வச்சிக்கிட்ட சூனியம்.. அய்யோ! மறுபடியும் ஒரு சிரிப்பு.. ஒருவேளை அந்த மச்சம் சொன்ன அன்னைக்கு பேசினதை நினைச்சி சிரிக்கிறாரோ? இல்ல இல்ல இருக்காது.. ஒருவேளை அந்த ஃபர்ஸ்ட் நைட் பத்தி பேசினாரே, அதுக்கு நாம பதில் கொடுத்ததை நினைச்சி சிரிக்கிறாரோ? அய்யோ! ப்ளீஸ் அத்தான்! அப்படி பார்க்கிறதை நிறுத்துங்க.. சிரிக்கிறதை நிறுத்துங்க.. ரெண்டுக்கும் அர்த்தம் யோசிச்சே என் தலை வெடிச்சிரும் போல இருக்கு.. நேர்ல இப்படி வெறுக்கிறவர் கிட்ட என்னால எப்படி போன்ல மட்டும் கொஞ்சிக்குழாவ முடிஞ்சது?" முள் மேல் உட்கார்ந்திருப்பவள் போல தவித்தாள் ஷ்ரதா.

கோகிலா, ஷ்ரதாவை நெருங்கி அவள் கன்னத்தைத் தாங்கியபடியே ஆதூரமாக நலம் விசாரித்தார். அவள் தயக்கமாக நெளிந்துகொண்டே அவருக்கு பதிலளித்தாள்.

அவளிடம் பேசிக்கொண்டேயிருந்தவர், மீனாட்சியிடம் திரும்பி, "இவ எப்போ அண்ணி வீட்டுக்கு வருவா?" என்று விபரம் கேட்டார்.

பின், ஆதீஸ்வரனிடம் திரும்பி, "ஷ்ரதா ஷ்ரதான்னு உயிரையே விடுவியேடா.. இப்போ என்ன தள்ளி நிக்கிற? வா! வந்து பேசு!" என்றுவிட்டு, விஜயாதித்தனிடம் பேசச் செல்வதாய் பேர் பண்ணிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

சூழ்நிலை கட்டாயத்தில் ஷ்ரதா மீண்டும் மெதுவாக நிமிர்ந்து ஆதீஸ்வரனைப் பார்த்தாள்.

அவன் இன்னும் தன் புன்னகையை மாற்றியிருக்கவில்லை.

ஷ்ரதா அவனை பார்க்க நேர்வதை தவிர்க்கும் பொருட்டு தன் இரண்டு குண்டு திராட்சைகளையும் சிவனேஸ்வரனின் புறம் உருட்டினாள்.

சிவனேஸ்வரன் தன்னால் தான் ஷ்ரதாவுக்கு இப்படி ஆனதென்று குற்றவுணர்வில் வெட்கி தலைகுனிந்திருந்தவன், தன் அன்னையின் இறுதிப் பேச்சில் முகவாய் இறுகினான். 'இந்த ஆதியே விட்டுக் கொடுத்தாலும் இந்த அம்மா விடமாட்டாங்க போல இருக்கே?' என்று மனம் வெதும்பினான்.

இதில் இடையில் ஒருமுறை நிமிர்ந்துப் பார்த்து, ஷ்ரதா தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று உறுதி செய்தபோது, அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை.

இருப்பினும், அவளின் களைத்துப்போன தோற்றம் வந்து ஒருபக்கம் அவனை இம்சிக்கத்தான் செய்தது.

என் ஷ்ரதாவா இது! கண் ரப்பை தொய்ந்து, கண்ணைச்சுற்றி கருவளையம் படர்ந்து, மாதுளைமொட்டென தேன் பிளிரும் இதழ்கள் காய்ந்து, கழுத்து நரம்புகள் புடைத்து, வெள்ளைக் கட்டுக்குள் கருங்கூந்தல் மறைந்து, முகம், கழுத்து, கையென அங்கங்கு கண் திருஷ்டிக்கு சிராய்த்து… ஆனாலும் என் ஷ்ரதா அழகி தான்!

'இன்னும் என்னைத்தான் பார்க்கிறாளா?' என்று நிமிர்ந்துப் பார்த்து உறுதி செய்துவிட்டு, திரும்பி மெத்தனமாக ஆதிஸ்வரனைப் பார்த்தான்.

அவன் முகம் ஒரு டன் பொறாமையைத் தாங்கியிருந்தது சிவனேஸ்வரனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவனின் அந்த சிரிப்பு தான் ஆதீஸ்வரனின் ஈகோவை தூண்டிவிட்டதோ என்னவோ, ஏற்கனவே தான் செய்யப்போவது சரியா தவறா என்ற குழப்பத்திலிருந்தவன் தெளிவான சிந்தையுடன் ஷ்ரதாவை நெருங்கி, அவள் தன்னைப் பார்க்க வெட்கி தலை குனிந்தவேளையில், தடாலென தனது சட்டைப் பைக்குள்ளிருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டிவிட்டான்.

கட்டிலுக்கு மறுபுறம் நின்றிருந்த மீனாட்சி, "தம்பி! என்ன காரியம் பண்ணிட்டீங்க?!" என்று பதற, ரெண்டெட்டில் அவனை சமீபித்த காசிராஜன், அவன் தோளை வலுக்கட்டாயமாகத் திருப்பி, அவன் கன்னத்திலொரு அறை விட்டார்.

சிவனேஸ்வரன் கோபாவேசமாக வெளியில் சென்றவன், "ம்மா, உங்க மூத்தப் பிள்ளை பண்ணியிருக்க காரியத்தைப் பாருங்க.." என்று கனைத்தான்.

அச்சமயமே சாப்பாட்டுக்கூடை சுமந்து வந்த மதுபாலாவுடன் அருண்மொழியும் வந்திருக்க, அனைவருமாக உள்ளே ஓடிவந்துப் பார்த்தார்கள்.

ஷ்ரதா ஆதி கட்டிய அந்தத் தாலியை கையிலேந்தி, உள்ளே நுழைந்த அனைவரையும் மிரள மிரளப் பார்த்தாள்.

விஜயாதித்தன் அந்தத் தாலியைப் பார்த்ததுமே, "சபாஷ் மாப்பிள்ளை!" என்று பாராட்டினார்.

அறை வாங்கி நின்றவன் மற்றவர்கள் இதற்கு ஆட்சியேபித்தாலும் ஷ்ரதா இதற்கு சந்தோசப்படுவாள் என்றே நினைத்திருப்பான் போலும். ஆனால், அவள் முகம் வேற செய்தி சொல்லியதில் முகம் வெளிறிப்போனான்.

இன்றைய தலைமுறை பெருமையாக காலரைத்தூக்கி சொல்லிக்கொள்ளும் க்ரஷ், பப்பி லவ், எக்ஸ் என்று எந்த டகால்டி வேலையும் செய்யாமல் அவளையே நினைத்து, அவளுடனே கற்பனையில் வாழ்ந்துக் கொண்டிருப்பவன் அல்லவா அவன்!

ஷ்ரதா கோபமும் அழுகையும் போட்டிப்போட பேச முடியாமல் திணறினாள்.

பின், நிலைமையை சமாளிக்க கோகிலா தான் தனது மூத்த மகனை கடிய வேண்டியதாகிற்று. "மேளதாளம் கொட்டி, பெரியவங்க ஆசியோட வேண்டிய தாலியை இப்படி எட்டடி ஹாஸ்பிடல் ரூம்ல வச்சி கட்டிட்டியேடா.. நான் தான் நீ ஷ்ரதா மேல ஆசை வச்சிருக்கிறதை மாமாகிட்ட சொல்லி இருக்கேன்.. நீ திரும்ப வெளிநாடு போறதுக்குள்ள எப்படியும் எங்கண்ணே உங்க கல்யாணத்தை நடத்தி முடிச்சிவாருன்னு சொன்னேனேடா.. அவசரக்குடுக்கை! அதுக்குள்ள உனக்கென்ன நடுக்கம்.." என்று அவன் கொமட்டில் குத்தினார்.

விஜயாதித்தன் தொண்டையை செருமிக்கொண்டவராக தனக்கான பேசும் வாய்ப்பை பெற்றார். "அட விடு கோகிலா! நம்ம நடத்த வேண்டியதை உன் மகன் பைசா செலவில்லாம முடிச்சிட்டான்.. ஷ்ரதா டிஸ்சார்ஜ் ஆனதும் ஊரைக் கூட்டி ஒரு விருந்து போட்டா முடிஞ்சது.. உன் பையன் கல்யாண செலவை மிச்சப்படுத்திக் கொடுத்ததுக்கு நீ அவனுக்கு நன்றி தான் சொல்லனும்.." என்று நகைத்தார்.

மற்றவர்கள் அனைவரும் இப்பேச்சை ரசிக்கவில்லையானாலும், 'ஆனது ஆகிவிட்டது, இனி என்ன செய்ய முடியும்' என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஷ்ரதாவுக்கு வீசியின் ஞாபகம் வந்து நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? ஒருவேளை அவர் திரும்பி வந்தால் நான் எப்படி அவர் முகத்தில் முழிப்பேன்? அவர் வேறு கோபக்காரராகிற்றே! அய்யோ முருகா! ஏன் என்னை பிழைக்க வைத்து இப்படி விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருக்கிறாய்? எனக்கு இந்தப் பூமியில் வாழவே பிடிக்கவில்லை. ப்ளீஸ் என்னை உன்கிட்டயே கூப்பிட்டுக்கோ. இனி நிச்சயம் என்னால் அவரைப் பார்க்க முடியாது. அப்படியொரு சூழ்நிலையை மட்டும் நீ உருவாக்கித் தந்தால் என் உயிரே போய்விடும்.

ஷ்ரதாவின் கண்கள் முதலில் தெப்பமாகி, பின்பு அருவியாய் உருமாறின.

இந்த அனாதரவான சூழ்நிலையில் வீசியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென கண்கள் இருட்டி, தலைவலி உயிர்போனது. யாரோ தலையில் சுத்தியலைக்கொண்டு அடிப்பது போல் தலையை இடம் வலம் ஆட்டிக்கொண்டே இருந்தாள். போடப்பட்ட கட்டுக்களையும் மீறி அவள் தலையில் ரத்தம் கசிய, சட்டென்று படுக்கையிலேயே மயக்கம் போட்டு விழுந்தாள்.

தன் அன்னை, விஜயாதித்தன் என்று அர்த்தமின்றி மாறிமாறிப் பேசுபவர்களின் பேச்சையே கேட்டுக்கொண்டு, ஷ்ரதாவின் முகத்தில் வந்து போகும் உணர்வலைகளை அவதானித்துக் கொண்டிருந்த சிவனேஸ்வரன், அவள் மயக்கம் போட்டு விழுந்த கணமே முதல் ஆளாக, "ம்மா! ஷ்ரதா மயங்கி விழுந்துட்டா" என்றான்.

மயக்கச் சுழலுக்குள் விழுந்த ஷ்ரதா, வீசியை தான் முதல் முதலாக சந்தித்த அந்தப் பொற்காலத்திற்கு யாராலோ வலுவாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அந்தப்பயணம் அவளை ஒருகணத்தில் கூட களைப்படையச் செய்யவில்லை.

இறுதியாக அவள் சென்றடைந்தவிடத்தில் வீசி, கத்திக் கொண்டிருந்தான். "அக்கா, வா நம்ம நம்ம வீட்டுக்குப் போவோம்.. அக்கா, நம்ம எப்படி நம்ம குடும்பம் எப்படின்னு இவங்களுக்கு முன்னாடியேத் தெரியும் தானே.. அப்பறம் ஏன் உன்னைக் குத்திக்காட்டி பேசுறாங்களாம்?"

-iuWrGvqvE3uA5l3--pmEpS_Wm22OfDobRUxMUOlhxJmHcydoRLyv6xy8_fm8BzsrczGTUITI7jh9LMLqZG9AWEslJY0wyYlqf1l6IeFGH7sWdsZBJcdGT8uXZFecWeOA0nUEeVo


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.​

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

அப்புறம் ப்ரெண்ட்ஸ் 29-ஆவது அத்தியாயத்திலேயே நாம் பந்தய இலக்கான நாற்பதாயிரம் வார்த்தைகளை கடந்துவிட்டோம் என்பதை இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்😊

கீழே உள்ள லிப்ட் பொத்தானை அழுத்தி நீங்கள் கமெண்ட் ஃப்ளோரிற்கு செல்லலாம் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
லிப்ட் பொத்தான்
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 31​



மயக்கச் சுழலில் சிக்கி கரையேறியவளுக்கு அருண்மொழியின் திருமணத்தன்று, தனது தமக்கைக்காக ருத்ரமூர்த்தியாய் மாறியிருந்த வீசியின் பிம்பமே மறுபடி மறுபடி தோன்றி, அவன் குரலே மறுபடி மறுபடி கேட்டது. "அக்கா, வா நம்ம நம்ம வீட்டுக்குப் போவோம்.. அக்கா, நம்ம எப்படி நம்ம குடும்பம் எப்படின்னு இவங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே.. அப்பறம் ஏன் உன்னை குத்திக்காட்டி பேசுறாங்களாம்?"

அவனது தமக்கை மீதான பாசத்தையும், ரௌத்திரத்தையும், கவர்ச்சியான முகத்தில் விழுந்த கன்னக்குழியையுமே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பதினைந்து வயது ஷ்ரதா, அவனை நெருங்கி தொடப்போனபோது மீண்டும் ஒரு சுழல் தோன்றி அவளை உள்ளிழுத்துக்கொண்டது. அச்சுழலில் சிக்கியவள் இறுதியில் தன் அன்னையின் மடியில் தான் நிலாச்சோறு சாப்பிட்ட காலத்திற்குச் சென்றுவிட்டாள்!

"ம்மா! ஷ்ரதா மயங்கி விழுந்துட்டா" என்ற சிவனேஸ்வரனின் அபாயவிளியைக் கேட்டதுமே, வாசலில் நின்றிருந்த அருண்மொழி ஓடிப்போய் தலைமை மருத்துவரை அழைத்துவந்தான்.

வந்தவர் அவளை சோதித்துப் பார்த்துவிட்டு, அருகிலிருந்த டியூட்டி டாக்டரிடம், "எதுக்கு இந்த ரூம்ல இவ்வளவு பேர் நிற்கிறாங்க? ஆமா இதென்ன தாலி? ரொம்ப பிரமாதம்! எப்போயிருந்து நம்ம ஹாஸ்பிடல் கல்யாண சத்திரம் ஆச்சு? முதல்ல இவங்க எல்லாரையும் வெளிய போகச்சொல்லுங்க.. இன்னும் பேஷன்ட் ரெக்கவரி ஆகலைன்னு சொன்னேனா இல்லையா? சிஸ்டர் புனிதாவை வரச்சொல்லுங்க! ம்ம் க்விக்!" என்றார்.

அனுதாபப் பார்வையோடு அனைவரும் வெளியேறினார்கள்.

விஜயாதித்தன் வெளியே வந்த மீனாட்சியை பிடித்து வைத்துக்கொண்டு அவரின் காதருகே கிசுகிசுத்தார். "ஏய்! என்னடி சொல்லிக் கொடுத்த என் பொண்ணுக்கிட்ட? இப்படி எடுத்தெறிஞ்சுப் பேசறா?"

மீனாட்சி புடவைத்தலைப்பால் வாயைப்பொத்தி அழுது கொண்டிருந்தவர், முதன்முறையாக விஜயாதித்தனுக்கு எதிராக குரலை உயர்த்திப் பேசினார். "நான் என்ன சொல்லிக் கொடுக்க? உங்களை போலீஸ் வீட்டுக்கு வந்து அரெஸ்ட் பண்ணின அன்னைக்கே அவ சரியா சாப்பிடாம, ஒரு நாள் பூரா ரூமை விட்டு வெளிய வராம கிடந்தா.. மறுநாள் காலையில நான் காஃபி கொடுக்கப்போனப்போ 'அம்மா, அப்பா ரொம்ப கெட்டவராம்மா? கொலைகாரராம்மா? இவ்வளவு நாள் நம்மக்கிட்ட நல்லவர் போல வேஷம் போட்டுக்கிட்டு இருந்தாராம்மா'ன்னு அழறா.. நான் என்ன செய்ய?"

மீனாட்சி சொன்னது போலவே, ஷ்ரதாவுக்கு அன்று வீசி தன் மீதான கோபத்தை தன் தந்தையின் மீது காட்டியது தான் ஊடலே தவிர்த்து, ரகசிய அறையைப் பற்றி அவன் மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியதன்று.

வீசியின் கெட்டநேரம் அவன் ஷ்ரதாவின் போனைப் பார்த்த மறுநாளே புத்தகக்கடை பிரச்சினையும் பூதாகரமாய் வெடித்துச் சிதறியது.

மீனாட்சியின் துடுக்கில் விஜயாதித்தன் அடங்கிவிட்டார். ஆனால், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கிணங்க மீனாட்சி விடவில்லை.

"என்ன நீங்க! நம்மப் பொண்ணு கண்ணு முழிச்சு முழுசா ரெண்டுநாள் கூட ஆகல.. அதுக்குள்ளேயும் அவளை கண்ணை மூட வச்சிட்டியேடான்னு உங்க தங்கச்சிப் பையனை கேட்காம, என்னை குறுக்கு விசாரணை பண்றீங்க?" என்றார்.

அத்தோடு நில்லாமல் ஆதீஸ்வரனையும் நெருங்கி, "பாவி! என் பொண்ணை கொல்லத்தான் வெளிநாட்டுலயிருந்து வந்தியாடா?" என்று மூன்று வாரமாக மகளின் வாடி வதங்கிய வதனத்தையே பார்த்துக் கொண்டிருந்தவராக கொந்தளித்துவிட்டார்.

கோகிலாவால் பிள்ளைப்பூச்சி அண்ணியின் காரசார வார்த்தைகளை சகிக்க முடியவில்லை. "அண்ணே! வீட்டு மருமகன் கிட்ட அண்ணி மரியாதையில்லாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்காங்க.. நீங்களும் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க.." என்று அவரை மனைவியை கண்டிக்கச்சொன்னார்.

விஜயாதித்தன் மீனாட்சியை அந்நியசக்தி ஏதோ ஆட்கொண்டிருப்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தவர் தன் தங்கையிடம் திரும்பி, "கோகிலா, அவ கஷ்டம் அவளுக்கு.. நீதான் கொஞ்சம் இங்க வந்து உட்காரேன்.." என்றார் பம்மியவராக.

கோகிலாவும் மீனாட்சியை முறைத்து பார்த்துக்கொண்டே தன் முந்தானையை இடுப்பில் இழுத்து சொருகியவராய் அவரின் அருகில் வந்து உட்கார்ந்தார்.

நாற்பது வயது மதிக்கத்தக்க செவிலியர் ஒருவர் ஷ்ரதாவின் அறைக்குள் வேகமாக ஓடியதைப் பார்த்து, அவர் தான் சிஸ்டர் புனிதாவாக இருக்கும் என்று அனைவரும் யூகித்தார்கள்.

காத்திருந்த கால்மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த தலைமை மருத்துவர், அருகில் ஆர்வமாக வந்தவர்களிடம் கறார் குரலில் சொன்னார். "பேஷன்ட்க்கு இன்னும் கான்ஷியஸ் திரும்பலை.. மூளையில ப்ளட் கிளாட் ஏதும் ஆகியிருக்குமோன்னு சந்தேகப்படுறோம்.. எதையும் ஸ்கேன் எடுத்துப் பார்த்த பின்னாடி தான் உறுதியா சொல்ல முடியும்"

விஜயாதித்தன், "டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. என் பொண்ணை மட்டும் காப்பாத்திருங்க.." என்றதும்,

"ம்ம், நாங்க காப்பாத்தி கொடுக்கிறோம்.. நீங்க மறுபடியும் வந்து இது மாதிரி கேஸை சீரியஸாக்கி விட்டுட்டு போயிருங்க.." என்று அனைவரையும் கோபமாக உறுத்து விழித்துவிட்டு தனதறைக்குச் சென்றுவிட்டார் அந்த தலைமை மருத்துவர்.

அனைவரும் இப்போது ஆதீஸ்வரனை தான் பார்வையால் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள்.

கீழே ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்த மீனாட்சியை மதுபாலா இயன்றளவு தேற்றிக் கொண்டிருந்தாள்.

ஆதீஸ்வரன் யாருடைய பார்வையையும் எதிர்கொள்ள முடியாமல் மருத்துவமனையை விட்டே வெளியேறிவிட்டான்.

வீட்டிற்கு செல்லும் பொழுது அவன் சிந்தை முழுவதும் ஷ்ரதாவின் நினைவே மீட்டப்பட்டுக் கொண்டிருந்தது. 'ஏன் ஷ்ரதா? ஏன் இப்படி என்னை ஏமாத்தின? எவ்வளவு ஆசையா உன் கழுத்துல தாலி கட்டினேன் தெரியுமா? என்னை உனக்குப் பிடிக்கும் தானே! அப்புறம் ஏன் மயங்கி விழுந்த? இன்னும் மூணு வாரத்துல நான் பிலிப்பைன்ஸ்ல இருக்கணும்.. ஆமா, அதுவரைக்கும் எனக்கு பொறுமையில்லை தான்.. ஆனா, நீ என்னை ஏமாத்திட்ட ஷ்ரதா.. இனி நீயே என்னை இந்தியா வாங்கத்தான்னு சொன்னா தான் நான் இந்தியா வருவேன்.. இல்லைன்னா..' கண்களை மூடிக்கொண்டான் ஆதீஸ்வரன்.

எந்த நேரத்தில் புண்ணியவான் இப்படி நினைத்தானோ தெரியவில்லை. ஒரே வாரத்தில் பிலிப்பைன்ஸிற்கு விமானம் ஏறி வானிலேயே கரைந்து போய்விட்டான். அவன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறிவிட்டது.

அச்சமயம் கோகிலா தன் உந்தியிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினார். சுற்றியிருந்தவர்களின் தூண்டுதலில் விஜயாதித்தனின் குடும்பத்தின் மேலும் மண்ணைவாரித் தூற்றினார். "உம் பொண்ணு அந்த இந்திரலோகத்து சுந்தரி கழுத்துல தாலி கட்டின நேரம் தான் என் புள்ளை மேலோகம் போயிட்டான்.. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் கும்பிடுற சாமியெல்லாம் சேர்ந்து அவளை படுக்கையில தள்ளி, தப்பிச்சுக்கோடி முண்டைன்னு எனக்கு குறிப்பு காட்டியிருக்கு.. இந்தக் கேனசிறுக்கிக்கு அது புரியலையே! இப்போ நான் என்ன செய்யுவேன்?!"

விஜயாதித்தன் ஏற்கனவே ஷ்ரதாவுக்கு சித்த பிரம்மை பிடித்த கடுப்பிலிருந்தவர், "இந்தாப்பாரு! இந்த மாதிரி உளறல் பேச்செல்லாம் இங்க வேணாம்.. உன் பையனால தான் என் பொண்ணு இப்போ பைத்தியமாகி வீட்டுல கிடக்கா.. நான் முந்துறதுக்கு முன்னாடி பேச்சில நீ முந்துறியோ? இனி உன் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. உறவு அத்துப்போச்சி.. வெளிய போ" என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட்டார்.

"பின்னே போகாம இங்கயே உன் வீட்லயேவா தங்கப்போறேன்னு நினைச்ச? உன் உள்ளங்கால் சிரங்கு உறவு ஒண்ணும் எனக்கும் வேணாம்.." என்று அதிரடியாக தன் அண்ணனுடனான உறவை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் கோகிலா.

விஷயத்தை கேள்விப்பட்டபோது சிவனேஸ்வரன் வானுக்கும் பூமிக்கும் குதித்து, "இப்பவே போய் மாமாக்கிட்ட மன்னிப்புக் கேளுங்கம்மா" என்றான்.

ஆனால் அவர், "நான் செத்தாலும் இனி அவன் வீட்டு வாசலை மிதிக்க மாட்டேன்டா" என்றுவிட்டார்.

அவரின் மூத்த மகனைப் பற்றிய புலம்பலானது அவர் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்ந்தது. உறவினர்கள் மத்தியில் ஷ்ரதாவை "பைத்தியம், அதிர்ஷ்டக்கட்டை, என் மகனை முழுங்கிட்டா" என்றே வசை பாடினார்.

இதை காதில் ஏற்றிக்கொண்டவர்களில் பலர், இனி ஷ்ரதாவின் கழுத்தில் மாலை விழுவது கடினமே என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.

ஆனால், விஜயாதித்தனா? கொக்கா? எதிரி பலமடைவதையும் தடுக்க வேண்டும். வீட்டு பாரத்தையும் இறக்கி வைக்கவேண்டும். யோசித்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காவாக அருண்மொழியை தூண்டிவிட்டு, மதுபாலாவின் மூலம் காரியத்தை சாதித்துவிட்டார்.

வீசி முதலில் மதுபாலாவின் கோரிக்கையை மறுக்கவே செய்தான். ஆனால், மதுபாலா தான் உணர்ச்சிகரமாக பேசி அவனை இசக்கிவிட்டாள்.

"ப்ளீஸ் வருண், எனக்காகடா.. நான் அம்மா அப்பாவை கூட சம்மதிக்க வச்சிட்டேன்டா"

"அம்மாப்பா சம்மதிச்சிட்டாங்களா?!"

"ம்ம், ஷ்ரதாவுக்கும் வருணுக்கும் கல்யாணம் நடந்தா, என் மாமனார் பழசை மறந்து வருணை மன்னிச்சிடுறதா சொன்னாருன்னு சொன்னேன்.."

"உடனே சரின்னு சொல்லிட்டாங்களாக்கும்?"

"முதல்ல யோசிச்சாங்க.. அப்புறம் நான் ஷ்ரதா பைத்தியமெல்லாம் கிடையாதும்மா.. பழசை மறந்திருக்கா அவ்வளவு தான்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டாங்க"

"அம்மாவுமா சரின்னு சொன்னாங்க?!"

"நீ கேட்கிறது புரியுது வருண்.. நான் தான் சொன்னேனேடா.. அவளுக்கு விருப்பமில்லாம நடந்த சம்பவம் அதுன்னு.. அந்த கிறுக்கன் ஆதி பண்ணின தப்புக்கு பாவம் அவ என்ன பண்ணுவா?"

"அக்கா உனக்கு என் நிலைமை புரியாது.. நான் மாணிக்ஜிக்கு அவருப்பொண்ணை கட்டிக்கிறதா வாக்கு கொடுத்திருக்கேன்"

"தெரியும்டா.. அதனால தான் என் மாமனார் உன்னை மருமகனாக்கிக்கிற துடிக்கிறார்னும் எனக்குத் தெரியும்.."

"அம்மாவுக்கு உன் புருஷன் உன்னை பெல்ட்டால அடிச்சது, சூடுபோட்டது, என்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு தான் வீட்டுக்கு வரணும்னு சொன்னதெல்லாம் தெரியுமாக்கா?"

"ம்ஹீம் தெரியாது.. ப்ளீஸ் நீயும் சொல்லிறாத"

"ஒரு பெட்டர் ஐடியா சொல்லவாக்கா? பேசாம நீ உன் புருஷனை டைவர்ஸ் பண்ணிடு"

"உன் அட்வைஸுக்கு ரொம்ப தான்க்ஸ் வருண்.. நீ ராஜ மாணிக்கம் வீட்டுல இருந்துக்கிட்டு அம்மா அப்பா கூப்பிட்டப்போ வராம, அவரு உத்தரவு கொடுத்தப்பின்னாடி வந்தியே(?) அப்போவே நான் யோசிச்சிருக்கணும்.. இப்போயிருக்கிறது என் தம்பி வருண் இல்ல.. பிரபல ரவுடி வீசின்னு.." அவள் வார்த்தைகள் விம்மல்களுக்கிடையே ஜனித்திருந்தன.

வீசி திடுக்கிட்டு, "அக்கா!" என்றான்.

"அம்மா அப்பா நீ அமைதியா தொழிலை மட்டும் கவனிக்கிறதா நினைக்கலாம் வருண்.. ஆனா, உன் ஒவ்வொரு அசைவுக்குமான எதிர்வினையை வீட்டுல நான் தான்டா அனுபவிக்கிறேன்.. நீ ஷ்ரதாவை கல்யாணம் செஞ்சிக்கிட்டா எனக்கு இந்த சித்திரவதைலயிருந்து விடுதலை கிடைச்சிடும்.." என்று அவன் கைகளிரண்டையும் பிடித்து, உள்ளங்கையில் முகம் புதைத்து, கண்ணீரால் குளிப்பாட்டினாள்.

பின், அவனை ஏறிட்டுப்பார்த்து ஏமாற்றமாய் ததும்பிய கண்களை துடைத்துக்கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்.

திக்பிரம்மை பிடித்தாற்போல் நின்றிருந்த வீசிக்கு தன்மீதே கடுப்பாக இருந்தது. அவனுக்கு அருண்மொழியை அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு வேகமாக வந்தது. ஆனால், அங்கும் இடையில் வந்து நிற்பது மதுபாலா. ஷிட்!

மதுபாலா குறிப்பிட்ட நாளை வைத்துப் பார்த்தால், ஷ்ரதா தன்னைப் பார்க்க வந்தபோது தான் அவளுக்கு விபத்து ஏற்பட்டு நினைவு தவறியிருக்கிறது என்பது அவனுக்கு தெரியாமல் இல்லை. மதுபாலா கூறுவது போல் ஆதிஸ்வரன் தாலி கட்டியதற்கு பாவம் அவள் என்ன செய்வாள் தான்.

ஆனால்.. ஆனால்.. ஷ்ரதா அன்று ஏன் என்னை வெறுத்தாள்? மோதிரத்தை ஏன் திருப்பிக் கொடுத்தாள்? இப்போது அவள் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக இருக்கிறாள். நான் இங்கு கிறுக்கன் போல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்றே குமைந்தான் வீசி.

திடிரென அவனுக்குள் ஒரு ஆவேசம். இல்லை அவள் நிம்மதியாக இருக்கக்கூடாது. எனக்கு ஞாபகமே பிரச்சினை என்றால் அவளுக்கு ஞாபகமின்மையே பிரச்சினையாக இருக்க வேண்டும். என்னை நரக வேதனைக்கு உள்ளாக்கிய அந்த இரண்டு நாளே என் வாழ்நாளாக மாறியிருக்க, அவள் வாழ்நாளே நரகவேதனையாக இருக்க வேண்டும்.

அவமானத்தின் உச்சமான அந்த நினைவுகளின் எச்சத்தில் எத்தனை நாள் இரவு நான் நித்திரையின்றி தவித்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா ஷ்ரதா? எத்தனை நாளிரவு மேனி நடுங்க நடு சாமத்தில் வியர்த்து விறுவிறுத்து எழுந்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா ஷ்ரதா? பகலில் பலரின் ரத்தத்தை ருசி பார்க்கும் நான், இரவில் பலர் என்னை வேட்டையாடுவதை தடுக்க முடியாமலிருக்கும் இழிநிலையை அறிவாயா நீ?

உடல் முழுவதும் முட்களால் குத்தினால் உனக்கு எப்படியிருக்கும்? ஒரு பொட்டு ஆடையின்றி நிற்கும் உன் சரீரத்தை ருசி பார்க்கும் வேட்கையோடு ஓநாய்கூட்டம் ஒன்று சூழ்ந்திருந்தால் எப்படியிருக்கும்? மழை பெய்த அடர்ந்த கானகத்தில் உன் காலை முதலை கவ்வினாலோ, இல்லை மலைப்பாம்பு சுற்றி இறுக்கினாலோ, இல்லை அட்டைபூச்சி விசித்திரமாய் சிறகுமுளைத்து ரத்தம் உறிய உன்னை துரத்தினாலோ எப்படியிருக்கும்?

உன்னால் இதை புரிந்துகொள்ள முடியாது ஷ்ரதா. எனது இரவுகள் கழியும் விதத்தை உனக்கு உணர்த்தினால் தவிர, உன்னால் விளங்கிக்கொள்ளவே முடியாது. உணர்த்துவேன். நிச்சயம் நான் அதை உனக்கு உணர்த்துவேன் என்று அடிபட்ட வேங்கையாய் சபதமெடுத்தான் வீசி.

*****************

'கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..' என்ற மேளதாளச் சத்தங்களுக்கிடையே..

‘மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’

என்று ஒலித்த மந்திரத்தின் பொருள் புரியாமலேயே ஷ்ரதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் வீசி.

யார் இந்த ஷ்ரதா?

இயற்பெயர்: ஷ்ரதாஞ்சலி
வயது: இருபத்தைந்து
படிப்பு: பிஇ
நிறம்: பாலும் ரோஜாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்ட நிறம்
உயரம்: ஐந்தடி நான்கு அங்குலம்

யார் இந்த வீசி?

இயற்பெயர்: வருண் சக்கரவர்த்தி
வயது: முப்பது
படிப்பு: டிஎம்இ
நிறம்: கோதுமை நிறம்
உயரம்: ஐந்தடி பத்து அங்குலம்

மணப்பெண்ணாய் அமர்ந்திருந்த ஷ்ரதா தன் மார்பில் புரண்ட தாலிச்சரடையே ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னே அவளுக்கு எத்தனை வருட கனவு இது!

uqidPrfGO4HMwGaRjSFvyhGNz5MRKq2onpy5_-8XyOsdgUdZ7WKPT-JV-xbQiqNZx0x1NxLQ6lapz1YIUuWwrpvLK3jwDrDxEwzpAamv0ZjGnGh_8P2K0mTM7qXlickNItXuuoJp


காதல் கணம் கூடும்...

இந்த ஜூலை மாதத்தில் 'Most active reader of the week' பரிசு பெற்ற பட்டுகள்... தர்ஷினி, கலை கார்த்தி மற்றும் ஸ்ரீதேவி(vicappu givi) ஆகியோர் மூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்❣️

நீங்களும் இதேபோல் பரிசுபெற வேண்டுமானால் தளத்தில் முதலில் register செய்து log in செய்யவேண்டும் ப்ரெண்ட்ஸ். பிறகு, நீங்கள் வாசிக்கும் கதைகளுக்கு கமெண்ட் செய்யவேண்டும்😊

எங்கள் தரப்பிலிருந்து என்றும் உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
ஒரு விரல் புரட்சி
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 32​



சிவனேஸ்வரன் கூறுவதையெல்லாம் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த வித்யா திடுமென அவனை இடைமறித்தாள். "நில்லுங்க! நில்லுங்க! ஏன் உங்கண்ணே அப்படி பண்ணினாரு? நீங்க தான் அவர்கிட்ட ஷ்ரதாவை லவ் பண்றதா ஏற்கனவே சொன்னீங்களே?"

சிவனேஸ்வரன் அந்தக் கேள்விக்கு கோபாவேசமாக பதிலளித்தான். "இதையே நானும் அவன்கிட்ட கேட்டப்போ, அவன் என்ன சொன்னான் தெரியுமா? ஷ்ரதாவும் அவனும் லவ் பண்ணினதா என்கிட்டயே பொய் சொல்றான்.. யாருக்கிட்ட? என்கிட்ட சொல்றான்.. எனக்குத் தெரியாதா ஷ்ரதா யாரை லவ் பண்ணினான்னு?"

"இருந்தாலும் உங்க அண்ணன் பண்ணினது ரொம்பத் தப்பு.."

"நான் நம்பினவங்க எல்லாருமே துரோகியா மாறினா எனக்கு எப்படியிருக்கும் சொல்லு?"

"கஷ்டம் தான்"

"அப்புறம் என்னாச்சி?"

"அப்புறம் என்ன?"

"இல்ல ஷ்ரதாவுக்கு அதுக்கப்புறம் ஞாபகமே திரும்பலையா?"

"இல்ல இடையில நாலு வருஷத்துக்கு முன்னாடி அவளுக்கு பாதி ஞாபகம் வந்து, மாமா அவளை காலேஜுக்கெல்லாம் அனுப்பினாரு.. நானும் அவ பிஇ தேர்ட் இயர் படிச்சிக்கிட்டிருந்தப்போ, எனக்கு அவ மேல உள்ள விருப்பத்தைப்பத்தி என் அம்மா அப்பாகிட்ட சொன்னேன்.. என் அப்பா எதுவும் சொல்லலை.. ஏன்னா அவரு வீசிக்கு பண்ணின பாவம் தான் என் அண்ணனை காவு வாங்கிருச்சின்னு நினைச்சிக்கிட்டு இருந்தாரு.. ஆனா, எங்கம்மா 'ஷ்ரதா தான் எல்லாத்துக்கும் காரணம்.. அவ ராசியில்லாதவ, தாலி அத்தவ, உனக்கு அவ தான் வேணும்னா என் புணத்து மேல தான்டா உன் கல்யாணம் நடக்கும்'னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டாங்க.. நான் அப்பவும் எப்படியாவது அவங்க மனசை மாத்திடலாம்னு நம்பிக்கையா இருந்தேன்.. விதி, ஏதேதோ நடந்துப்போச்சி.. அந்த வீசி ஷ்ரதாவை எப்படியெல்லாம் டார்ச்சர் பண்றான் தெரியுமா? சரியான சைக்கோ அவன்.. அவளை என் கையில கொடுத்திருந்தா நான் எப்படியெல்லாம் பார்த்திருப்பேன் தெரியுமா?"

வித்யாவால் தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆணித்தரமாக கத்திவிட்டாள். "வீசி அவளை அப்படி பண்றதுக்கு காரணமே நீங்க தான்! ஏன் வீசி கேரளா போறதை ஷ்ரதா வீட்டுல சொன்னீங்க? தப்பெல்லாம் உங்க மேல தான்!"

சிவனேஸ்வரனும் அவளிடம் பதிலுக்கு கத்தினான். "நான் அன்னைக்கு அப்படி மாட்டிவிடலைன்னாலும் உன் அப்பா ஆளுங்க அவனை மாட்டிவிட்டிருப்பாங்க தானே?"

"என்ன சொல்றீங்க நீங்க?"

"ஹே! எதுவுமே தெரியாத மாதிரி நடிக்காத.. ஜெயவிலாஸ் பாலத்துக்குக் கீழ வீசியை என்னை மாதிரியே ஒருத்தன் ஃபாலோவ் பண்றதைப் பார்த்தேன்.. வீசி லாக்கப்ல இருந்தப்போவும் அந்த ஆளை ஸ்டேஷன்ல ஓரமா ஒரு பெஞ்சில பார்த்தேன்.. அருண்மொழி கிட்ட கேட்டப்போ, அவன் ராஜ மாணிக்கம் ஆளுன்னு சொன்னாரு.. ஏன் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகனுமே உங்கப்பாவோட ஆளுன்னு சொன்னாரு.. எங்க மாமாகிட்ட கேட்டு மறுத்திட்டதால உங்கப்பா தான் அவருக்கு ப்ரோமோஷன் வாங்கிக் கொடுத்தாராமே.. ஹ்ம்ம், எப்படியும் அறிவழகன் சொல்லித்தான் அடியாளுங்க வீசியை எங்க கொண்டுபோனாங்கன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.."

வித்யா பேந்த பேந்த விழித்தவள், "எது எப்படியோ எங்க அப்பா தான் வீசியை விஜயாதித்தன் கிட்டயிருந்து காப்பாத்தினாரு.." என்றாள்.

"அப்படி காப்பாத்துற நிலைமையை உருவாக்கினதே நீங்க தானே? புக் ஸ்டால் பத்தி கலெக்டர்கிட்ட போட்டுக் கொடுத்தது யாரு?"

"எங்கப்பா சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா? கேஆர்பியும் அதுல இன்வால்வ் ஆகியிருந்ததால நிச்சயம் எங்கப்பா சொல்லியிருக்க மாட்டாங்க.. மொத எங்கப்பாக்கிட்ட என்னை கொண்டுபோய் விடுங்க.. உண்மை என்னன்னு நானே உங்களுக்கு நிரூபிக்கிறேன்.."

வெளியே செல்லச்சொல்லி கதவை நோக்கி கை காட்டினான் சிவனேஸ்வரன்.

ஆவலாக கதவைத் திறந்தவளை.. மேலும் முன்னேற முடியாத அளவிற்கு வழியை மறைத்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்மொழி.

அவனைப் பார்த்ததும் விக்கித்துப்போய் வித்யா, "சிவனேஸா!" என்று பின்வாங்க, அருண்மொழி திரும்பி தன் ஆட்களுக்கு கண்களால் சைகை காட்டியபடியே முன்னேறினான்.

சிவனேஸ்வரன் சுதாரித்து தனது துப்பாக்கியை எடுப்பதற்குள்ளாகவே இருவர் ஓடிவந்து அவனின் இருகைகளையும் முதுகிற்கு பின்னால் மடக்கிப்பிடித்துக் கொண்டனர்.

"அவனை அந்த கம்பத்துல கட்டிப்போடுங்கடா!" என்று உத்தரவிட்ட அருண்மொழி, வித்யா கதற கதற அவளை தூக்கிச்சென்றான்.

சீதையை ராவணன் கவர்ந்துசென்ற காட்சி கண்முன் நிழலாடின சிவனேஸ்வரனுக்கு. அவ்வேளை அவன் ஒன்றை மறந்தேப் போனான். அவன் ராமனல்ல என்பதையா? இல்லை ராமன் ஏகபத்தினி விரதன் என்பதை.

நிலைமை தலைகீழாக, முன்பு வித்யா கட்டிவைக்கப்பட்டிருந்த அதே நிலைகம்பத்திலேயே தற்போது சிவனேஸ்வரனும் கட்டி வைக்கப்பட்டிருந்தான்.

தனது பலத்தையெல்லாம் திரட்டி, எவ்வளவோ முயன்று கயிற்றை அறுக்கப் பார்த்தான்.

விளைவு, வேயப்பட்டிருந்த மேற்கூரையே அவன் தலையில் இடிந்து விழும் அபாயம் இருந்தது.

சலித்து முயற்சியை கைவிட்டவன், "சே! இப்ப இங்கயிருந்து எப்படி தப்பிக்கிறது?" என்றே புலம்பித் தவித்தான்.

அருண்மொழி அண்ட் கோ சென்று சரியாக இரண்டுமணி நேரம் கடந்திருக்கும், அதற்குள் வேறு யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது.

துவண்டுபோய் கிடந்த சிவனேஸ்வரன் அனிச்சையாய் தலையை உயர்த்திப் பார்த்தான்.

சரேலென அந்த குடிசைக்குள் நுழைந்தவன் வீசி. உடன் அவனுக்கு ஆதரவாய் கையில் துப்பாக்கியுடன் நான்கு கர சேவகர்கள் வேறு திமுதிமுவென்று உள்ளே நுழைந்தார்கள்.

வீசிக்கு சிவனேஸ்வரனை கட்டப்பட்ட நிலையில் பார்த்ததுமே பெரிய ஏமாற்றமாய் இருந்தது.

ஆங்காரத்தில் அங்கிருந்த கயிற்றுக்கட்டிலை உயரமாகத் தூக்கி கீழேப்போட்டான்.

பின், தன் ஆட்களைப் பார்த்து, "அவனை கையக்காலை கட்டி கார் டிக்கில தூக்கிப்போடுங்கடா" என்றான்.

சிவனேஸ்வரனின் முகத்திலிருந்த கீறல்கள் அவனை யோக்கியனாய் உருவகப்படுத்தவில்லை வீசிக்கு.

"வித்யாவை பார்க்கும்போது அவ சொல்ற வார்த்தைகள்ல தான் உன் விடுதலை இருக்கு சிவா.." என்று சிவனேஸ்வரனின் முகத்திற்கு நேரே குனிந்து எச்சரித்தான்.

சிவனேஸ்வரன் கூரை இடிந்து விழுந்தாலும் பரவாயில்லை என்று தன் பற்களை கடித்துக்கொண்டு கைக்கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்தான். மேலேயிருந்து கடமுடா சத்தத்துடன் மழைத்துளிகள் சில தன் மேல் சிதறவும் வீசி தன் ஆட்களைப் பார்த்து, 'உம்!' என்று கர்ஜித்தான்.

அவ்வளவு தான், அடியாட்கள் ஓடிவந்து சிவனேஸ்வரனின் கண், வாய், கால்கள், கைகள் என்று தனித்தனியே கட்டி கார் டிக்கியினுள் தூக்கிப்போட்டார்கள். உள்ளே துள்ளத்துடிக்க கிடந்தான் சிவனேஸ்வரன்.

வீசி மகாவிற்கு போன்போட்டு விஷயத்தை தெரிவித்தபோது அவன், "உனக்கெப்படி அந்த இடம் தெரியும்?" என்று குதர்க்கமாக வினவினான்.

வீசி, 'இவனும் இவன் சந்தேகமும்' என்று அலுத்துக்கொண்டே, "நம்ம ஆளுங்க விஜயாதித்தனோட ஆளுங்க ரெண்டுபேரை வில்லாபுரம் ராஜன் ஹாஸ்பிடல்ல வச்சி பார்த்திருக்கானுங்க.. அவனுகளைப் பிடிச்சி விசாரிச்சப்போ தான் அவனுகள்ள ஒருத்தனை வித்யா கட்டையால அடிச்சிருக்கான்னும், சிவா விஜயாதித்தன் ஆட்கள்கிட்டயிருந்து அவளை காப்பாத்தியிருக்கான்னும் தெரிஞ்சிருக்கு.."

"ஓஹோ! சரி அடுத்து இப்போ என்ன பண்றது?"

"வித்யா விஜயாதித்தன் கைக்குப் போயிட்டதால இனி அவன் சொல்றபடி தான் நாம கேட்டாகனும்.."

"..."

"எப்படியும் காலைல அவன் மாணிக்ஜிகிட்ட டிமாண்ட் வைப்பான்.. நீ மாணிக்ஜி வீட்டுக்கு வந்திரு.. நானும் அங்க வந்திடுறேன்.."

"இப்போ உனக்கு சந்தோசமா வீசி? இது தானே உங்க பிளான்?"

எதிர்புறம் அழைப்பை துண்டித்திருந்தான் வீசி.

******************

விஷயத்தை கேள்விப்பட்ட ராஜ மாணிக்கம் பதட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துக்கொண்டிருந்தார்.

"எப்படி? எப்படி வீசி? வித்யாவை அவன் கையில விட்ட? நான் இந்தப் பசங்களை கூட நம்பல.. நீ இதுல இறங்கியிருக்கதால எப்படியும் வித்யாவை கண்டுபிடிச்சிருவன்னு நம்பிக்கையா இருந்தேன்.. இப்போ நீயே வந்து அவளை விஜயாதித்தன் கொண்டு போயிட்டான்னு சொல்ற.. இல்ல.. இல்ல.. நான் உங்க யாரையும் நம்பியிருக்கக்கூடாது.. நானே அவளை தேடிப்போயிருக்கணும்"

வீசி மீதான ராஜ மாணிக்கத்தின் நம்பிக்கை உடைந்ததில் மகாவிற்கு குளுகுளுவென்றிருந்தது.

"மன்னிச்சிருங்க மாணிக்ஜி.. இந்த ஒரு தடவை தவறவிட்டுட்டோம்.. அடுத்த தடவை இப்படி நடக்காம பார்த்துக்கிறோம்.." விடிகாலை மூன்று மணிக்கு அவரிடம் மன்னிப்புக்கேட்டுக் கொண்டிருந்தான் வீசி.

ராஜ மாணிக்கம், வீசி தலைகுனிந்து நிற்பதை பார்க்க சகியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

"இப்போ அவன் போனுக்காக நான் காத்திருக்கணுமா வீசி?"

ஒவ்வொரு வரியின் முடிவிலும், 'மாணிக்ஜி' என்றே சேர்த்து வந்த வீசி, ஆயிரம் சமாதானங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.

சரியாக காலை ஏழு ஐம்பதிற்கு விஜயாதித்தனிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

எடுத்ததுமே எதிர்புறம் எக்காளமாக சிரித்து, அவரை வெறுப்பேற்றினார் விஜயாதித்தன். "நேரத்தை விரயமாக்காம சொல்ல வந்ததை சொல்லு விஜயாதித்தா!" என்று எரிச்சலாகக் கத்தினார் ராஜ மாணிக்கம்.

விஜயாதித்தனுக்கு பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஷ்ரதாவுக்காக, ராஜ மாணிக்கத்திடம் இதேபோல் கத்தியது ஞாபகம் வந்தது. கூடவே, அப்போது விஷயம் கேஆர்பி வரை சென்று குடும்ப உறுப்பினர்களை வியாபார விஷயத்தில் உள்ளிழுக்கக்கூடாது என்கிற ஒப்பந்தத்திற்கு இருவருமே ஒப்புதல் தெரிவித்ததும் ஞாபகம் வந்தது.

'நீ மட்டும் இந்த வீசியை உன் பக்கம் சேர்க்காம இருந்திருந்தீன்னா நான் நம்ம ஒப்பந்தத்தை மீற வேண்டிய அவசியமே வந்திருக்காது ராஜ மாணிக்கம்.. எல்லாம் நீயே உருவாக்கிக்கிட்டது.. மலைப்பாம்பை உன் உடம்பை சுத்தி போட்டுக்கிட்டு இப்போ இறுக்குதே வலிக்குதேன்னா எப்படி?'

'உக்கும்' என்று கனைத்துக்கொண்டே கேட்டார் விஜயாதித்தன். "ரொம்ப சூடா இருக்கப்போலயே ராஜ மாணிக்கம்? ஜிகர்தண்டா ஏதும் அனுப்பி வைக்கட்டுமா?"

"ங்கோ*** என் பொண்ணு எங்கன்னு சொல்லுடா?"

"ஹாஹாஹா நீ இப்படி டென்ஷன் ஆகுறதைப் பார்த்தா, பக்கத்துல இருக்க என் அறிவாளி மாப்பிள்ளைக்குக்கூட உன் பொண்ணு எங்கயிருக்கான்னு கண்டுபிடிக்க முடியலை போலயே மாணிக் பாட்ஷா ஜி?" தன்னுடைய முறை என்பதால் நேரம் பார்த்து நையாண்டி பண்ணினார் விஜயாதித்தன்.

"தைரியமான ஆம்பளைன்னா நேருக்கு நேரா என்கூட மோதுடா.. அதை விட்டுட்டு பொண்ணை தூக்கியிருக்கியேடா பொட்ட.."

"பெருமதிப்பிற்குரிய மாணிக்ஜி! இப்போ என் பொண்ணு உங்க கஸ்டடில இல்ல.. உங்கப்பொண்ணு தான் என் கஸ்டடில இருக்கா.. அதை கொஞ்சம் ஞாபகத்துல வச்சிக்கிட்டா நல்லது.. அப்புறம் என் பொண்ணை தூக்குறதா இருந்தா, பக்கத்துல இருக்கிற என் மாப்பிள்ளைக்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறது நல்லது"

"....."

"ம்ம்.. எங்க இப்போ குரலை உசத்திப்பேசுடா வெண்ண? காரியமில்லாம ஒண்ணும் அந்த வருண் சக்கரவர்த்திக்கு நான் மாமனார் ஆகலைடா!"

எதிர்புறம் நறநறவென்று பல்லைக்கடித்தார் ராஜ மாணிக்கம்.

"அந்தப் பயம் இருக்கட்டும்.. இப்போ நீ என்ன பண்றேன்னா, செல்லூர்ல இருக்க என் கிரானைட் குடவுனுக்கு வர்ற.. புத்திசாலித்தனமா பண்றோம்னு நினைச்சி கேஆர்பி அண்ணேகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடப்போற.. அவர்கிட்டயிருந்து போன் வந்தது? இப்போ தாண்ணே கழுத்தறுத்துப்போட்டேன்னு சொல்லி உம்பொண்ணு கதையை முடிச்சிருவேன்.. ஜாக்கிரதை! எனக்குத் தேவை நீ உன் கையாலயே வீசியை முடிக்கணும் அவ்வளவு தான்.. உனக்கும் எனக்கும் நடுவுல அவன் யாரு?"

"...."

"என்ன சத்தத்தையேக் காணோம் ராஜ மாணிக்கம்? ஆதியிலயே ஒழிச்சுக்கட்ட நினைச்சவனை என் பொண்ணு வாழ்க்கையைப்பத்தி கூட கவலைப்படாம எதுக்கு மருமகனாக்குனேன்னு நினைக்கிற? எல்லாம் அவனை உனக்கு எதிரியாக்கத்தான்டா.. கேஆர்பி அண்ணேக்கிட்ட என் உயிரை வேணா கேளுங்க, வீசியை மட்டும் கேட்காதீங்கன்னு சொன்னியே.. எங்க இப்போ நீ யாரை காப்பாத்துவன்னு நானும் பார்க்கிறேன்டா.."

"........"

"உன் பொண்ணு மேல உனக்கு ரொம்ப பாசம்ல ராஜ மாணிக்கம்? தப்பில்ல நானும் ஒரு காலத்துல அப்படித்தான் இருந்தேன்.. ஆனா, இப்போ எனக்கு குடும்பம், பொண்டாட்டி, பிள்ளைன்னு எதுவும் கிடையாது.. ஆமா எதுவும் கிடையாது.. எனக்கு என் ஊருல நான் மட்டும் தான் ராஜாவா இருக்கணும்.. சரி சொல்லு! யாரை இப்போ காப்பாத்தப்போற? வருண் சக்கரவர்த்தியையா? இல்ல உன் பொண்ணையா?"

"......"

"என்ன ராஜ மாணிக்கம் பேச்சையேக் காணோம்? உன் கேங்ல பேசத்தெரிஞ்சவன் யாராவது இருந்தா, அவன்கிட்ட போனைக்குடு.. உச்! நீ யோசிக்கிறதைப் பார்த்தா என் மாப்பிள்ளை உசுரு தான் உனக்கு முக்கியம் போலயே?"

"இல்ல! இல்ல விஜயாதித்தா! நான் நீ சொல்றபடியே செய்யுறேன்"

"உன்னைப்பத்தி எனக்குத் தெரியும் ராஜ மாணிக்கம்"

அழைப்பைத் துண்டித்துவிட்டு அருண்மொழியிடம் பேசுவதற்காக திரையைத் தட்டினார் விஜயாதித்தன்.

எடுத்ததும்…

"ஆங் சொல்லுங்கப்பா"

"இப்போ எங்கயிருக்க அருண்மொழி?"

"காரோட நம்பர் பிளேட்டை மாத்திட்டு தேனி ரோட்டுல தான்பா சுத்திக்கிட்டுயிருக்கோம்.."

"ம்ம், சரியா ஒம்பதே முக்காலுக்கு நம்ம செல்லூர் குடவுனுக்கு பின்னாடி வந்திரு.. பத்து மணிக்கு அந்த வருண் சக்கரவர்த்தியை ராஜ மாணிக்கமே போடுவான்.. கவனமா கேளு! ராஜ மாணிக்கம் வருண் சக்கரவர்த்தியை போட்டுத்தள்ளின பின்னாடி தான் பொண்ணு அவன் கைக்கு சேரணும்"

"கண்டிப்பாப்பா.. அது வரைக்கும் வெளியே உங்கப் போனுக்காக வெயிட் பண்றோம்பா.."

"ம்ம்.. அப்புறம் வீசியை பொணமா அள்ளிட்டு வந்து நீதான் உன் தங்கச்சி மடியில போடணும்.."

"சரிங்கப்பா.. நீங்க சொல்றபடியே செஞ்சிடுறேன்"

"மணி இப்போ எட்டு.. நான் இப்போ வீட்டுலயிருந்து கிளம்பினா தான் சரியாயிருக்கும்னு நினைக்கிறேன்.." என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு திரும்பினார்.

ஸ்தம்பித்த பாவனையில் கையில் பூஜைக்கூடையுடன் நின்றிருந்த ஷ்ரதா, அவரை நோக்கி திகிலாக அடியெடுத்து வைத்தாள்.

Y2PGOFiE1tA_iZBHqPzFSThfmzI98fHIbuXLDBGQicf9snvzta06xTLEFGpracc8Z_hkDfA6bxJ0Gj69meVvpL8fGluEO17e2-YhfjGToraYK0ruACV8ORgVCHb96FnjWrF9MeKT


காதல் கணம் கூடும்...

அனைவருக்கும் நண்பர்கள் மற்றும் சகோதரிகள் தின வாழ்த்துகள் பட்டூஸ்❣️

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

சிவனேஸ்வரன் பற்றி உங்களது அபிப்பிராயம்?

கருத்துத்திரி,
A. நல்லவன்

B. கெட்டவன்
 
Last edited:
Top Bottom