- Messages
- 676
- Reaction score
- 1,079
- Points
- 93
காதல் கணம் 33
போனை காதைவிட்டு கீழிறக்கிய ராஜ மாணிக்கத்திடம், "என்னாச்சிண்ணே? என்ன சொல்றான் அந்த விஜயாதித்தன்?" என்று தன் காது கடுக்கனை தடவியபடியே கேட்டான் மகா.
ராஜ மாணிக்கத்திடம் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. அவர் டீபாயிலிருந்த சிகரெட் பெட்டியிலிருந்து சிகரெட் ஒன்றை உருவி வாயில் வைத்து பற்றவைத்தார்.
"மாணிக்ஜி"
மகா கூப்பிட்டிருந்தால் இன்னும் மௌனியாகவே இருந்திருப்பாரோ என்னவோ கூப்பிட்டது வீசி என்பதால் நிமிர்ந்து உட்கார்ந்தார் ராஜ மாணிக்கம்.
வலப்புறம் நின்றிருந்த மகாவிடம் நாசி வழியே புகைவிட்டபடியே பொய் சொல்லத்துவங்கினார். "மகா, போன தடவை அவன் கார் ஒண்ணை எடுத்துட்டு வந்தோம் இல்லையா? அதைக் கேட்கிறான்.. ரொம்ப ராசியான காராம்.."
"ப்பூ! அது தானாண்ணே.. அது நம்ம கேரேஜ்ல தான் கிடக்குதுண்ணே.. நான் போய் வண்டியைப் போட்டுட்டு பாப்பாவை அழைச்சிட்டு வந்திடுறேண்ணே.." என்றான் மகா.
"இல்ல மகா.. அவன் காரை என்னை கொண்டுவந்து விட சொல்றான்.."
"அண்ணே! அவன் ஏதோ ஸ்கெட்ச் போட்டிருக்க மாதிரி தெரியுதுண்ணே"
"இல்ல மகா, அவன் என்னை தனியா வர சொல்லலை.. அதனால பயப்பட வேணாம்.."
"சரிண்ணே, இப்போவே போய் காரை எடுத்திட்டு வந்திடுறேன்.."
மகா வருவதற்குள் ராஜ மாணிக்கம் விஸ்கியை இரண்டு லாட்ஜ் உள்ளே ஏற்றியிருந்தார்.
செல்லூர் கிளம்பும்போது அந்தக்காரை மகா தான் ஓட்டினான். பக்கத்தில் வீசி உட்கார்ந்திருந்தான். பின்னால் ராஜ மாணிக்கம் பதட்டமாக நெற்றியைத் தடவிக்கொண்டிருந்தார். அவரது இடுப்பில் கனமான பிஸ்டல் ஒன்று உட்கார்ந்திருந்தது.
வீசி அவரை ப்ரன்ட் மிர்ரரில் பார்த்துக்கொண்டே வந்தான்.
செல்லூர் கிரானைட் குடவுனிற்கு வந்த பின்பு, காரிலிருந்தவர்களிடம், "எல்லாரும் உங்க பிஸ்டலை காருக்குள்ளேயே போட்டுட்டு வாங்க.. அவன் பொருள் எதுவும் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்" என்றார் ராஜ மாணிக்கம்.
"அண்ணே, கண்டிப்பா இது ஸ்கெட்ச் தாண்ணே" என்று மகா அறுதியிட்டு சொன்னான்.
"மகா உனக்கு தொழில் சொல்லிக்கொடுத்தது யாரு?"
"என்னண்ணே இப்படி கேட்குறீங்க? நீங்க தாண்ணே"
"அப்போ நான் சொல்றேன்! எல்லாத்தையும் உள்ளப்போடு!!" பதட்டத்தில் பலமாக சவுண்ட் விட்டிருந்தார் ராஜ மாணிக்கம்.
மகாவிற்கு விழுந்த அதட்டலில் மற்றவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து பொருள்களை காரினுள் தூக்கிப்போட்டார்கள்.
மகா முனைத்துக்கொண்டு முதல் ஆளாக தொழிற்சாலைக்குள் சென்றான்.
அனைவருமாக அந்த இடத்தையே அரைமணிநேரத்திற்கும் மேலாக அலசியிருப்பார்கள். ஆனால், ஒரு ஈ காக்காவும் அந்த இடத்தில் தட்டுப்படவில்லை.
அது ஏற்கனவே வீசியை கடத்திவந்து, கிரானைட் கட்டிங் மிஷினால் தடயம் போட்ட இடம் என்பதால் ஒருவித உணர்வலை கிளம்பியது அவனுக்குள். 'அன்றைய நாள் மட்டும் மாணிக்ஜியின் ஆட்கள் வராமல் இருந்திருந்தால்?' நினைக்கும் போதே குப்பென்று வியர்த்தது அவனுக்கு. தலையை உதறி தன்னை சமாளித்துப்பார்த்தான். இன்னும் ஏதோ ஒரு அபசுருதி அவனுக்குள் ஒலிப்பது போலவே இருந்தது. ஞாபக நீரோடையின் சலசலப்பு வேறு தொடர்ந்து அவனை இம்சித்தது.
பெரிய ராட்சத இயந்திரங்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்த மகா, "என்னண்ணே.. மணி பத்தாகிடுச்சு இன்னும் யாரையும் காணோம்?" என்றான்.
ராஜ மாணிக்கமும் அவன் சொன்னவுடன் தனது கைக்கடிகாரத்தை தான் பார்த்தார். மணி பத்து ஐந்து.
'விஜயாதித்தன் பொல்லாதவன்.. இங்க எங்கயோ தான் ஒளிஞ்சிருக்கான்.. இனி வேற வழியேயில்ல.. வீசி உயிரோட இருக்கிறவரை என் பொண்ணு எனக்கு கிடைக்கப்போறதில்ல.. ஆனா, வீசியை என்னால சுட முடியுமா?'
விஸ்கியின் வேகத்தில் அவரின் ரத்தவோட்டம் அதிகரித்தது.
"அண்ணே.. அண்ணே" மகாவின் உலுக்கலில் சுயநினைவுக்கு வந்த ராஜ மாணிக்கம் வீசியைத் தேடினார்.
அவன் அவருக்கு பின்னே.. மேலேயிருந்து தொங்கிக்கொண்டிருந்த இரும்புச் சங்கிலியுடனான வளையங்களையே வெறித்துக் கொண்டிருந்தான்.
ராஜ மாணிக்கத்தின் முகம் வேதனையில் சுருங்கியது. கைகள் வெடவெடக்க தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை வெளியே எடுத்தார்.
தனது பதினைந்து வயதில் முதல்முதலாக அவர் பிஸ்டலை தொட்டபோது கூட அதைப் பார்த்து பயந்ததாகவோ, கைகள் நடுங்கியதாகவோ அவருக்கு நினைவில்லை.
ஆனால், இப்போது அவரின் கையிலிருந்து பிஸ்டல் நழுவும் போல் இருந்தது. வசதிக்காக தனது இரு கைகளாலும் பிஸ்டலை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். அப்படியும் கைகள் ஆட்டம் கொடுத்தது.
வீசியால் வானளாவப் பறந்தவரால் தற்போது பூமியில் உறுதியாகக்கூட காலை ஊன்ற முடியாத நிலைமை. முயன்று விசையை அழுத்தினார். க்டப்!
ராஜ மாணிக்கத்தின் வரலாற்றில் முதல்முறை புல்லட் குறி தவறியது அன்று தான்.
ஒரு இன்ச் இடைவெளியில் உயிர் தப்பிய வீசி, அவரை அரண்டுப்பார்த்தான்.
ஏனையவர்களும் ராஜ மாணிக்கத்தின் கையிலிருந்த துப்பாக்கியையே தான் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
முன்னால் அவன் திரும்பி இருந்தபோதே சரியாக சுடமுடியவில்லை. 'அடே! முதுகில் குத்திய துரோகி!' என்றவன் நேருக்கு நேராக பார்த்துக்கொண்டிருக்கும் போதா அவரால் சுட முடியும்?
அந்த நைன் எம்எம் அறுநூத்திபத்து கிராம் எடையுள்ள சாம்பல் வண்ண பிஸ்டலை மகாவிடம் தூக்கிப்போட்டு, "மகா, வீசியை சுடு" என்று உத்தரவிட்டார்.
வீசியின் உடலெங்கும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.
மகா குழப்பத்தோடு கேட்டான். "அண்ணே, இவனைப்போய்?"
அவர் அதிகாரமாக இரைந்தார். "நான் சொல்றதை செய் மகா!"
"இல்லண்ணே முடியாது.. நம்ம இங்க பாப்பாவைத் தேடித்தானே வந்தோம்? வாங்க தேடுவோம்.."
"முட்டாள்! வீசியை போட்டாத்தான்டா விஜயாதித்தன் உன் பாப்பாவை அனுப்புவான்.."
இவ்விடத்தில் ராஜ மாணிக்கம் மட்டும் வித்யா கடத்தப்பட்டதில் இந்த வீசியும் விஜயாதித்தனுக்கு உடந்தை என்று சொல்லியிருந்தால், நிச்சயம் மகா யோசிக்காமல் வீசியை சுட்டிருப்பான். ஆனால், ராஜ மாணிக்கம் வேறல்லவா சொல்கிறார்.
"ஏண்ணே! நாளைக்கு கமலாக்காவை கடத்தி வச்சிட்டு என்னை போட சொன்னாலும் போட்டிருவீங்களாண்ணே?"
"மகா!"
"இல்லண்ணே.. உங்க மருமகன்னு தலைல தூக்கிவச்சி ஆடினவனுக்கே இந்த நிலைமைன்னா, எங்களை மாதிரி அனாதைப் பசங்களையெல்லாம் ஈஸியா போட்டிருவீங்கல்லண்ணே?"
"விஜயாதித்தன் சாதிச்சிட்டான் மகா.. அவன்கிட்ட நான் தோத்துட்டேன்" சொல்லிவிட்டு முகம் வேதனையை பிரதிபலிக்க திரும்பி நின்றுகொண்டார் ராஜ மாணிக்கம்.
அவனுக்கு அவரின் நிலை புரிந்தது. திரும்பி வீசியைப் பார்த்தான். அவன் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன.
அது விரக்திப் புன்னகையா அல்லது அலட்சியப்புன்னகையா என்று இனங்காண முடியவில்லை மகாவால்.
அடுத்து வீசி பேசிய வார்த்தைகள்! மகா கற்பனை பண்ணிக்கூட பார்க்க இயலாதது!
"என்ன மகா யோசிக்கிற? சுடு என்னை.. உனக்கு இது முடியாத காரியமா என்ன? ஏன் தயங்குற? வித்யாவுக்காக தானே மாணிக்ஜி என்னை போட சொல்றாரு? இதோ இதே இடத்துல எட்டு வருஷத்துக்கு முன்னாடி தோலுரிச்ச ஆடு மாதிரி செத்துத் தொங்கியிருக்க வேண்டியவன் மகா நான்.. இந்த உயிர் அவர் போட்ட பிச்சை.. அவருக்காகப் போறதுல எனக்கு சந்தோசம் தான்.."
மகாவிற்கு வீசியின் மேல் வெறுப்பாகயிருந்தது. எப்படி இப்படி அப்பழுக்கற்றவனாக இவனால் இருக்க முடிகிறது? ஒவ்வொருமுறையும் எனக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுவதே இவனுக்கு வேலையா? என்று முகத்தை சுளித்தான்.
இதுவரை ராஜ மாணிக்கத்தின் பேச்சை மீறிப்பழகிறாத மகா, இன்றும் அதேபோல் பிஸ்டலை வீசியை நோக்கி உயர்த்திப்பிடித்தான்.
வீசி நேர்கொண்ட பார்வையுடன், 'நீ சுடு.. நான் சாகத் தயார்' என்பது போலவே தன் இரு தோள்களையும் விரித்து நெஞ்சை நிமிர்த்திக்காட்டினான்.
ஒருவன் இப்படி நிற்பானாயின் யாரால் தான் அவனை சுட முடியும்?!
வாளையேந்திவிட்டு துர்க்கைக்கு களப்பலி கொடுக்க தயங்கிக் கொண்டிருந்தான் மகா. அவன் மனம் அலைக்கழிந்துகொண்டே இருந்தது. 'இவன் எனக்கு கீழ இருக்கணும்னு தான் நினைச்சேனே தவிர, இருக்கவே கூடாதுன்னு நினைக்கலையே.. ஆனா, வீசியை இப்ப சுடாம போனா பாப்பாவை.. ஆமா நிச்சயம் பாப்பாவை காப்பாத்த முடியாது' இவ்வெண்ணம் எழுந்ததுமே நெஞ்சை திடப்படுத்திக்கொண்டு முதல் குண்டை வீசியின் நெஞ்சை நோக்கி பாயவிட்டான் மகா.
ராஜ மாணிக்கம் போல் மகாவுக்குமே குறி தவறி குண்டு வீசியின் புஜத்திலேயே இறங்கியது.
சூடான ரத்தம் தெறிக்க வீசி கண்ணை மூடிய வேளையில்.. மகா ட்ரிக்கரை இழுத்து அடுத்தக்குண்டை பாய்ச்சவிருந்த வேளையில்.. இருவருக்கும் இடையில் வந்து நின்றாள் ஷ்ரதா.
மகா அவளைப் பார்த்ததுமே சுதாரித்து பிஸ்டலை கீழிறக்கினான்.
வீசியுமே, "தள்ளிப்போ ஷ்ரதா" என்று அவளை இடப்பக்கமாக கீழேப்பிடித்து தள்ளிவிட்டான்.
ராஜ மாணிக்கம் முதற்கொண்டு சுற்றியிருந்த அனைவருமே அதிர்ந்து அவளைப் பார்த்திருக்க, "உங்களுக்கு எட்டு வருசமா விசுவாசியா இருந்தவருக்கு நீங்க கொடுக்கிற பரிசு இது தானா?" என்று எழுந்து நின்றபடியே நியாயம் கேட்டாள் ஷ்ரதா.
ராஜ மாணிக்கம் குரலில் ஜீவனில்லை என்றாலும் உறுதியிருந்தது. "என் பொண்ணுக்காக நான் எதுவும் செய்யத் தயாராயிருக்கேன்.." என்றார்.
ஷ்ரதா, "உங்கப்பொண்ணு.. உங்கப்பொண்ணு" என்றபடியே சுற்றிமுற்றி பார்த்தவள், தரையில் பூஜைக்கூடையுடன் விழுந்திருந்த போனை எடுத்து அருண்மொழி என்றிருந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.
எதிர்புறம், "ஹலோ! ஹலோ!" என்று ஒலிக்க, இவள் பதிலுரைக்கவில்லை.
மீண்டும் அழைப்பைத் துண்டிவிட்டு முயன்றாள். அதே "ஹலோ! ஹலோ!" கேட்டது. முன்புபோலவே பேசாமலிருந்தாள்.
பிறகு, போனை முழுமையாக அணைத்துவிட்டு, "இப்போ.. இப்போ உங்கப்பொண்ணு வந்துருவா" என்றாள்.
சொன்னபடியே வெளியேயிருந்து, "அப்பா" என்று அழைத்துக்கொண்டே ஓடிவந்து ராஜ மாணிக்கத்தின் நெஞ்சில் விழுந்தாள் வித்யா.
ஷ்ரதா வீசியை நெருங்கி, பரிதவித்தபடியே அவனது கைக்காயத்தைப் பார்த்தாள்.
அவன் தன் அடிபட்ட தோளைப் பிடித்துக்கொண்டே, "நீயெப்படி இங்க?" என்று விசாரித்தான்.
வித்யா ராஜ மாணிக்கத்தின் நெஞ்சிலிருந்து விலகியவள், சுற்றி அனைவரையும் பார்த்தாள்.
மகாவின் கையில் துப்பாக்கி, வீசியின் புஜத்தில் குண்டடி, உண்மை விளங்கியதுமே, "அற்புதம்பா! ரொம்ப அற்புதம்! அந்த சிவனேஸ்வரன் சொன்னப்போக்கூட நான் நம்பல.. ஆனா இப்போ நம்புறேன்பா.. நீங்களும் வீசியை கொல்லத் தயாராகிட்டீங்கல்ல?"
ஏற்கனவே மகள் புடவை இல்லாமல் யாரோ ஆண்மகன் ஒருவனின் சட்டையை அணிந்திருப்பதைப் பார்த்து துடித்துப் போயிருந்தவர், அவளின் கேள்வியில் இன்னும் இடிந்துபோனார்.
"வித்யா.."
"வேண்டாம்பா.. எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்.. ஆனா, என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. விஜயாதித்தனோட புக் ஸ்டால் பத்தி கலெக்டருக்கு தகவல் கொடுத்தது யாரு? நீங்க தானே? சொல்லுங்கப்பா நீங்க தானே? ம்ம் அப்போ நீங்க தலை குனிஞ்சி நிற்கிறதைப் பார்த்தா நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம் இல்ல? வீசியை விஜயாதித்தன் கிட்ட மாட்டிவிட்டு, நீங்களே அவரை காப்பாத்துற மாதிரி காப்பாத்தி, அவரை அவருக்கு எதிரா திருப்பிவிட்டு.. எதுக்குப்பா? ஏன் இந்த கெட்டபுத்தி உங்களுக்கு? என் ஆட்டம் பரதநாட்டியம்னா உங்க ஆட்டம் இப்படி மனுசங்களை வச்சி ஆடுறது தானாப்பா?" கண்கள் இடுங்கக்கேட்டாள் மகள்.
"வித்யா.." என்று அவளை இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டார் ராஜ மாணிக்கம்.
"போங்கப்பா உங்களை நான் என்னவோன்னு நினைச்சேன்.. நீங்க என்னடான்னா.." என்று அவரை கீழ்த்தரமான ஒரு ஆளாக ஒதுக்கிவிட்டு வீசியின் அருகில் வந்தாள் வித்யா.
வீசி, ஷ்ரதா என இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.
தனக்குத் தெரியாமலேயே தான் சதுரங்கத்தில் ஒரு காயாக நகர்த்தப்பட்டு கொண்டிருந்த உண்மை வீசியை குத்திக் கிழித்துப்போட்டது. மனம் செயலொடிந்து ராஜ மாணிக்கத்தை அசையாது பார்த்தான்.
ஷ்ரதா வீசியை கண்ணீர் மல்க பார்த்திருந்தாள்.
வீசியை நெருங்கிய வித்யா அதிரடியாக ஷ்ரதாவின் துப்பட்டாவை இழுத்து, வீசியின் கைக்காயத்திற்கு கட்டுப்போட்டாள்.
ஷ்ரதாவிற்கு அந்த அழுகையிலும் வித்யாவின் உரிமையான செயலில் கோபம் வந்தது.
வித்யா ஷ்ரதாவின் காரமான பார்வையை உள்வாங்கிக்கொண்டு நமட்டுச்சிரிப்பு சிரித்தாள்.
பின், வீசியிடம் ஷ்ரதாவின் சார்பில் நியாயம் கேட்டாள். "வீசி, எனக்குத்தெரிஞ்சு உங்களுக்கு ஷ்ரதா மேல கோபம்னா, நீங்க ஊரைவிட்டு ஓடிப்போக கூப்பிட்டும் அவ அன்னைக்கு பாலத்துக்குக் கீழ வராதது தானே?"
ஷ்ரதா லயம் தப்பிய இதயத்துடிப்புடன் அவனை தலையுயர்த்திப் பார்த்தாள்.
வீசி குழப்பரேகைகளுடன் வித்யாவைப் பார்க்க, வித்யா, "எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கறீங்களா வீசி? அன்னைக்கு ஷ்ரதாவை அங்க வரவிடாம தடுத்த சிவனேஸ்வரன் தான் சொன்னாரு.." என்றாள்.
இதில் ஷ்ரதா குறுக்கிட்டு, "வித்யா, நீங்க என்ன சொல்றீங்க?!" என்றாள்.
வித்யா ஞாபகம் வந்தவளாக, "ஓஹ்! உனக்கு எல்லாம் மறந்துப்போயிடுச்சில்ல ஷ்ரதா? இப்போ விலாவரியா சொல்ல நேரமில்ல.. மொத வீசியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போகனும்.. மகா! போய் வண்டியை எடு!" என்று கட்டளையிட்டபடியே அவன்புறம் திரும்பினாள்.
"அது வந்து பாப்பா.." என்று தயங்கினான் மகா.
"பாப்பா இல்ல.. எஜமானியம்மா.. என்ன புரியலையா? அப்பாவுக்கு உடம்பு முடியலை இல்லையா? இனி நான் தான் அவர் தொழிலை எடுத்துப் பார்த்துக்கப்போறேன்.. போ! போய் வண்டியை எடு!" என்று உத்தரவு தொனியில் சொன்னாள்.
செல்லாக்காசாய் புறந்தள்ளப்பட்ட ராஜ மாணிக்கம் 'செல்' என்று அவனுக்கு உடல்மொழியில் அனுமதி வழங்கினார்.
ஓட்டப்பந்தயவீரன் போல் ஓடி வண்டியின் கதவைத்திறந்தான் மகா.
ஷ்ரதா மற்றும் வித்யாவின் கைத்தாங்கலுடன் வீசி காரினுள் ஏற்றப்படும் முன், தள்ளிநின்ற காரின் டிக்கியிலிருந்து வந்த சத்தத்தில், "அது என்ன சத்தம் மகா?" என்றாள் வித்யா.
மகா ஓடிப்போய் தன் ஆட்களிடம் சாவி வாங்கிவந்து அந்தக்காரின் டிக்கியைத் திறந்தான். உள்ளிருந்து கீழே புரண்டு விழுந்தது சிவனேஸ்வரன்.
வீசியைத் தவிர்த்து மற்ற அனைவரும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
வித்யா சிவனேஸ்வரனின் கட்டுகளை அவிழ்க்க உத்தரவிட்டவள், அவனை நெருங்கி, "உங்க தப்பு புரியாம, இப்பவும் நீங்க பிடிவாதமா இருப்பீங்கன்னா நீங்க மனுஷனே இல்ல சிவனேஸ்வரன்.." என்றாள்.
அவன் ஷ்ரதாவை அடிபட்ட பார்வை பார்த்தான். ஆனால், அவள் விழிகள் வீசியின் மீதே நிலைத்திருந்தது.
"ஷ்ரதாக்கூட இருந்தா தான் வீசி சந்தோசமா இருப்பாருன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சி சிவனேஸ்வரன்.. ஆனா, வீசியால தான் ஷ்ரதாவை சந்தோஷமா வச்சிக்கமுடியும்னு உங்களுக்கு தான் புரியலை.."
வித்யாவின் வார்த்தைகள் அவனுக்குள் மின்சாரத்தை பாய்ச்சியது போல் இருந்தது.
ஷ்ரதா இன்னும் வீசியையேப் பார்த்துக்கொண்டிருந்தது அவன் சுயமரியாதைக்கு மட்டுமின்றி காதல் மனதிற்கே பெரிய அடியாக அமைந்தது.
உண்மைகள் ஏன் இவ்வளவு கசப்பானவையாக இருக்கின்றன? முட்டிபோட்டபடியே தரையில் குத்தி அழுதான் சிவனேஸ்வரன்.
"ம்ம், காரை எடு மகா" என்றாள் வித்யா.
அனைவரையும் ஏற்றிக்கொண்ட கார் புழுதி கிளப்பிக்கொண்டு செல்ல, வெகுநேரத்திற்குப் பின்பே, ஷ்ரதா தன்னைவிட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டதை உணர்ந்தான் சிவனேஸ்வரன்.
காதல் கணம் கூடும்...
இன்னும் சில கேள்விகளுக்கு பதில் இறுதி அத்தியாயத்தில் கிடைக்கும் ப்ரெண்ட்ஸ். விரைவில் இறுதி அத்தியாயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
என்றும் உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க
கருத்துத்திரி,
ஷிவானியோடு உரையாடு!
Last edited: