Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 30

சிலிகா ஏரி - வங்காள விரிகுடா கடல் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும், ஆசியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி. ஒடிசாவின் கன்ஜாம், குர்தா, பூரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1100 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு பறந்து விரிந்துக் கிடக்கும் இந்த ஏரியில், அள்ளித் தெளித்தது போல் ஆங்காங்கே மிதக்கும் பல தீவுகளில் ஒன்றான மிராஜ்பாடா, இடம் பெயர் பறவைகளின் புகலிடமாக இருந்தாலும் மனிதர்களின் புழக்கம் அதிகம் இல்லாமல் ஓவென்றிருந்தது. பல நூற்றாண்டு பழமையான மாகாளி கோவிலை பார்வையிட வரும் சில வெளிநாட்டுப் பயணிகளைத் தவிர வெகு சொற்பமான மக்களே வசிக்கும் அந்த தீவில், தனித்துவிடப்பட்ட குழந்தை போல், கீழ்வானில் தேய்ந்து மறையும் மாலைநேர சூரியனை விழியாகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

அவள் அமர்ந்திருக்கும் மணல்மேட்டில், நண்டு ஒன்று அவளை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்த வெளிநாட்டு பறவை கூட்டம் ஒன்று அவள் தலைக்கு மேல் பறந்து சென்றுக் கொண்டிருந்தது. கடல்நீரோடு உறவாடிய உப்புக்காற்று அவள் மெல்லிய மேனியை மோதிக் கடந்து சென்றது. எதுவும் அவளை பாதிக்கவில்லை. பாறையை சுமந்துக் கொண்டிருப்பது போல் கனத்துப்போயிருந்த மனம் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது.

அன்று எதைப்பற்றியும் யோசிக்காமல் உண்மையை பட்டென்று போட்டு உடைத்துவிட்டாள். என்ன இருந்தாலும் அவன் ஒரு மாஃபியா மனிதன். அவனுடைய எதிர்வினை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவனுடைய அன்பும் அக்கறையும் அப்படியே தலைகீழாக மாறியிருக்கலாம். அவளிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். ஏன், அவளை கொலை கூட செய்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி எதையும் செய்யவில்லை. அவள் எதிர்பார்த்த அதிர்ச்சி, கோபம், ஆத்திரம் எதுவும் இல்லை அவனிடம். மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தான். பார்வை மட்டும் ஓரிரு நிமிடங்கள் அவள் முகத்தில் நிலைத்திருந்தது. பிறகு, “செத்தவனை உனக்கு முதல்லயே தெரியுமா?” என்றான்.

அவள் மறுப்பாக தலையசைத்தாள். மீண்டும் ஒரு உணர்வற்ற பார்வைக்குப் பிறகு, “உன்னோட பேரண்ட்ஸ் ஏன் உன்ன தேடலை?” என்றான்.

“அம்மா கண்டிப்பா என்னை தேடியிருப்பாங்க. ரீச் பண்ண முடிஞ்சிருக்காதா இருக்கும்” - தாயின் நினைவில் அவள் குரல் நைந்தது.

“அப்பா? வாட் அபௌட் ஹிம்?”

அவனுடைய கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. மெளனமாக தலை கவிழ்ந்து நின்றாள். சற்று நேரம் கழித்து, “அவர் ஒரு ஆர்மி மேன். சர்வீஸ் முடிஞ்சு வந்து லோக்கல்ல வேலை பார்த்துகிட்டு இருந்தார். அங்கதான் ஏதோ ஒரு லேடி கூட.. ஐ டோன்ட் நோ.. ஹி ஜஸ்ட் லெஃப்ட் அஸ். என்னையும் அம்மாவையும் அப்படியே விட்டுட்டு போய்ட்டாரு. நாலஞ்சு வருஷம்.. இல்ல.. ஆறு வருஷம் கூட இருக்கலாம். எங்க இருக்காரு.. எப்படி இருக்காரு எதுவும் தெரியாது. அம்மா அவரை தேடி ஊர் ஊரா அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க. இப்போ.. என்னையும்..” - பேச முடியாமல் தொண்டையை அடைத்த ஆத்திரத்தை விழுங்கிக் கொண்டாள். கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது. ஆதரவாக அவள் கரம் பற்றினான் அர்ஜுன்.

“உன் அப்பாவை மிஸ் பண்றியா?”

“நோ..” - உடனடியாக மறுத்தாள். அந்த மறுப்பில் இருந்த கோபத்தை அவன் உணர்ந்தான்.

“சின்ன வயசுலேருந்து நா ஹாஸ்ட்டல்ல தான் இருக்கேன். அவர் அவரோட வேலையில எப்பவும் பிஸியா இருப்பாரு. எங்க இரண்டு பேருக்கும் பெருசா எந்த அட்டாச்மென்ட்டும் இல்ல. ஆனா அம்மா.. நாங்க இரண்டு பேரும் ரொம்ப கிளோஸ். தினமும் நாலஞ்சு தடவையாவது எனக்கு போன் பண்ணிடுவாங்க. எம்மேல அவ்வளவு பாசம்.. அக்கறை.. ஐ மிஸ் ஹர் சோ மச்.”

“நீ என்கிட்ட இதைப்பற்றி முதலிலேயே பேசியிருக்கனும்” - சின்ன கடுமை எட்டிப்பார்த்தது அவன் குரலில்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா. “துப்பாக்கி, இரத்தம், கொலை இதெல்லாம் சினிமால கூட நான் அதிகம் பார்த்ததில்லை. இங்க அதெல்லாம் ரொம்ப சாதாரணமா இருக்கு. என்னோட மனநிலை எப்படி இருந்திருக்கும்? ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ.”

“ஐம் சாரி” - உடனே தணிந்தான். பிடித்திருந்த அவள் கரத்தில் இதழ் பதித்தான். “உன்னோட அம்மாவை நீ சீக்கிரமே சந்திக்கிறதுக்கு ஏற்பாடு செய்றேன்” - பிடியில் அழுத்தம் கொடுத்து அவளுக்கு நம்பிக்கையூட்டினான். மிருதுளா தன்னிச்சையாக அவன் தோளில் தலை சாய்த்தாள்.

இப்போது கூட அவன் அருகில் அமர்ந்திருப்பது போல் - அவன் தோளில் சாய்ந்திருப்பது போல் தான் தோன்றுகிறது. ஆனால் அவனைப் பார்த்து.. அவன் குரலை கேட்டு.. இன்றோடு மூன்று நாட்களாகிவிட்டது. அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. பத்திரமாக திரும்பி வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை ஒருபக்கம் இருந்தாலும், அவன் எந்த சூழ்நிலையில் இருக்கிறானோ! எவ்வளவு ஆபத்தான வேலையில் ஈடுபட்டிருக்கிறானோ! எத்தனை நெருக்கடியில் இருக்கிறானோ! என்கிற யோசனையை தவிர்க்க முடியவில்லை. மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடியவில்லை.

“பூஹ்!” - அவளிடம் நெருங்கி வந்த நண்டை கையில் பிடித்து அவள் முகத்திற்கு அருகே கொண்டு சென்று பயம் காட்டி, “ஆ!” என்று அவள் அலறுவதை ரசித்து சிரித்தபடி அவளுக்கு அருகில் அமர்ந்தான் டேவிட்.

“ச்சே.. ஆளப்பாரு.. சின்ன பிள்ளை மாதிரி நண்டு பிடிச்சு விளையாடிகிட்டு” - அவனுடைய உருட்டலுக்கு பயந்துவிட்ட தன் தோல்வியை சங்கடத்துடன் மறைத்து அவனை கடிந்தாள். அதையும் ரசித்து சிரித்த டேவிட், “கொஞ்சம் விட்டிருந்தா கடிச்சிருக்கும்” என்றபடி கையிலிருந்த நண்டை தூர தூக்கியெறிந்தான்.

அருமையான மனிதன். இந்த மூன்று நாட்களாக அவளை கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பது போல் பாதுகாக்கிறான். ஒரு நிமிடம் கூட அவளை தன் பார்வையிலிருந்து விலக்க விடமாட்டான். எதிரிகளை மட்டும் அல்ல.. ஈ எறும்பைக் கூட அவளிடம் அண்ட விடமாட்டான். இந்த நண்டை மட்டும் விட்டுவிடுவானா என்ன? - மிருதுளா புன்னகைத்தாள். அவளுடைய அழகிய புன்னகையில் அவன் மனம் இலவம்பஞ்சு போல் காற்றில் மிதந்தது.

“அப்படி என்ன யோசனை?”

“ம்ஹும்” - எதுவும் இல்லை என்று தலையை குறுக்காக அசைத்தாள்.

“சரி வா, டின்னர் ரெடி. டிஃபரெண்ட் ரெசிபி ட்ரை பண்ணியிருக்கேன். டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லு.”

“பாபிம்மாவையே செய்ய சொல்லியிருக்கலாமே! நீங்க ஏன் சிரமப்படறீங்க?” - பாபிம்மா என்பவர் அவர்கள் தங்கியிருக்கும் பீச் ஹௌஸின் கேர் டேக்கர். இங்கு வந்த முதல் நாள் அவர்தான் சமைத்துக் கொடுத்தார். என்ன.. சாப்பிடத்தான் முடியவில்லை. எனவே மறுநாளிலிருந்து டேவிட் தன் கைவண்ணத்தை காட்ட துவங்கிவிட்டான்.

“பாபிம்மா சமையலையே சாப்பிடுன்னு விட்டிருக்கனும். அப்போ தெரிஞ்சிருக்கும்” - கிண்டலடித்தான்.

“உங்க அளவுக்கு ஒன்னும் அவங்க மோசமா சமைக்கல.. ஷி இஸ் பெட்டர்” - பதிலுக்கு அவளும் வாரினாள். இருவரும் சிரித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகியிருந்தது.

இரவு உணவு முடிந்த பிறகு மீண்டும் தனியாக வந்து வராண்டாவில் அமர்ந்துவிட்டாள் மிருதுளா. வழக்கம் போல அவளை பின்தொடந்து வந்தான் டேவிட்.

“தூங்கலையா?”

“ம்ஹும்.. தூக்கம் வரல” - கனகனவென்று மூக்கால் பேசினாள்.

‘அழுதிருக்காளா!’ - பதட்டத்துடன் அவள் முகத்தை பார்த்தான். “என்ன ஆச்சு? ஏன் என்னவோ போல இருக்க?”

“ஒன்னும் இல்ல.. லேசா சளி பிடிச்சிருக்கு.”

“ஓ! அப்போ உள்ள போய் படு. மருந்து எதுவும் வேணுமா?”

“இல்லல்ல.. அதெல்லாம் வேண்டாம்” என்று மறுத்தவள், சற்று சிந்தித்துவிட்டு “டேவிட்” என்று இழுத்தாள்.

அவள் எதை பற்றி பேசப் போகிறாள் என்று டேவிட் நன்றாகவே அறிந்திருந்தான். என்னதான் திசைதிருப்பினாலும் இறுதியில் ஒரே புள்ளியில் வந்து நிற்கும் அவளுடைய சிந்தனை அவனை சலிப்படைய செய்தது.

“ம்ம்ம்..” என்றான் ஆர்வமற்று.

“அர்ஜூன்கிட்டேருந்து.. ஏதாவது.. மெசேஜ் வந்ததா?” - தயக்கத்துடன் கேட்டாள். தினமும் இந்த கேள்வியை கேட்டு கொண்டுதான் இருக்கிறாள். அவனும் ஒரே பதிலை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

“இல்ல..”

அவள் முகம் வாடியது. அதை காணும் பொழுது அர்ஜுன் மீதுதான் அவனுக்கு கோபம் வந்தது. இவளுடைய ஈடுபாட்டையும் அவனுடைய கபடத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து உள்ளுக்குள் வெம்பினான்.

“எந்த ஊருக்கு போயிருக்காங்க? கார்ட்ஸ் எல்லாம் கூட இருப்பாங்கல்ல? பாதுகாப்பாத்தானே இருப்பாங்க?”

“அதெல்லாம் யாருக்கும் தெரியாது மிருதுளா. இங்க ஒருத்தருக்கு அஸைன் ஆகற வேலையும் அவங்களோட மூவ்ஸும் மத்தவங்களுக்கு தெரியிற மாதிரி வெளிப்படையா இருக்காது. இது அண்டர் வேர்ல்ட். இங்க நீ பார்க்கற எல்லாமே நிழல். இங்க நிஜத்தை தேடாத.. ஏமாற்றம் உன்ன முழுங்கிடும். காணாம போயிடுவ.. புரியுதா உனக்கு?” - அவளுடைய கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தவன் தன்னுடைய ஆதங்கத்தையும் சேர்த்து கொட்டித் தீர்த்தான்.

அவன் என்ன சொல்கிறான் என்பதை அவள் சிந்தித்து புரிந்துக்கொள்வதற்குள் அவனுடைய அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தவன் சட்டென்று மிருதுளாவின் பக்கம் திரும்பினான்.

“அர்ஜுன் தானே?” - கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள். அவனுடைய நீண்ட டயலாக்கை புரிந்துகொள்ளாதவள், இதை மட்டும் ஒற்றை பார்வையில் புரிந்துக்கொண்டு விட்டாள்.

‘ஒரு அலைபேசி அழைப்பை மறைக்க தெரியவில்லை. பெரிய மாஃபியா மனிதனாம்!’ - தன்னைத்தானே வெறுத்தவன் அவளுடைய கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு அழைப்பை ஏற்றான்.

********************

அர்ஜுன் ஹோத்ரா ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் அவனிடம் ஒரு அசாத்திய திறமையிருந்தது. சூழ்நிலையோடு பொருந்திப்போவது. ஆம்! எங்கு சென்றாலும் அந்த இடத்தில் தன்னை கரைத்துவிடக் கூடியவன் அர்ஜுன். மகல்பாட்னாவைவிட்டு வெளியேறிவிட்டால் அவனை டிராக் செய்வதென்பது இயலாத காரியம்.

அவன் பயணம் செய்வது, எந்த விதமான ஜிபிஎஸ் கருவியும் இல்லாத ரீமாடல் செய்யப்பட்ட அதிவிரைவு கார். அவசிய தொடர்புக்கு பயன்படுத்துவது, சிக்னலை பின்தொடர முடியாத சேட்டிலைட் அலைபேசி. அதுமட்டும் அல்ல.. சரளமான பலமொழிப் புலமையும், இயல்பான பாவமும் அவனை மக்கள் காட்டுக்குள் மறைத்துவிடும். தனித்துக் காண்பது சாத்தியமற்றது.

இப்போதுகூட அவன் திடீரென்று அந்த பெண்ணோடு எங்கு மறைந்து போனான் என்கிற கேள்வி கோர்த்தாவின் முக்கிய புள்ளிகள் பலரையும் குடைந்துக் கொண்டிருந்தது. அவனுடைய மனமோ மிராஜ்பாடா தீவையே சுற்றிக் கொண்டிருந்தது. மூன்று நாட்களாக ஈடுபட்டிருந்த வேலையில் தீவிரமாக மூழ்கியிருந்தவன், அன்று இரவு உறங்குவதற்கு முன் அங்கு நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினான். உடனே அலைபேசியில் டேவிட்டை தொடர்புகொண்டான்.

“எஸ் அர்ஜுன்..”

“அங்க என்ன ஸ்டேட்டஸ்? மிருதுளா எப்படி இருக்கா?”

“எவ்ரிதிங் அண்டர் கண்ட்ரோல். ஒன்னும் பிரச்சனை இல்ல.”

“குட்.. யு காட் எனி அதர் கால்ஸ்?”

“நோ”

“சரி.. இன்னும் மூணு நாள்தான்.. கவனமா இரு” - அவன் டேவிட்டிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்த போது இடையில் ஒரு தும்மல் ஒலி கேட்டது.

“யார் அது? மிருதுளாவா?” - அவன் கவனம் நொடியில் சிதறியது.

“ம்ம்ம்.. ஆமாம்” - சிறு தயக்கத்துடன் கூறினான்.

“டைம் ஆச்சு! இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்ருக்கா?”

“ஒன்னும் இல்ல.. சும்மா.. ஜஸ்ட் பேசிட்டிருந்தோம்” - இயல்பாக இல்லாமல் ஏதோ சமாளிப்பது போலிருந்தது அவனுடைய பதில்.

அர்ஜுனின் தசைகள் இறுகின. இரத்தத்தில் அழுத்தம் கூடியது. “போனை அவகிட்ட கொடு” - கடுகடுத்தான்.

அடுத்த சில நொடிகளில், “ஹலோ” என்று ஒலித்த மெல்லிய குரல் அவனுடைய டென்ஷனை இன்னும் அதிகமாக்கியது. அதை அப்படியே அவளிடம் கொட்டிவிடக் கூடாதே எச்சரிக்கையுடன் அமைதியாக இருந்தான். அவன் குரலை கேட்கும் ஆவலுடன் காத்திருந்த மிருதுளாவிற்கு, ‘உஸ்-புஸ்’ என்று சீரும் அவனுடைய மூச்சுக்காற்றின் சத்தத்தை மட்டுமே கேட்க முடிந்தது.

“அர்ஜுன்..?” - அவள் குரலில் அவன் பெயரின் உச்சரிப்பு மிகவும் அழகாக இருந்தது. அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

ஏதோ வழக்கத்திற்கு மாறான பயம்.. கோபம்.. அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. டேவிட் அவள் மனதை கலைத்துவிடுவான் என்று நினைக்கிறானோ! அவனுடைய திட்டங்கள் பாழாகிவிடும் என்று அஞ்சுகிறானோ! - எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. கோபமும் மூர்க்கமும் மூளையை மழுங்கடித்துவிட்டது போல் தோன்றியது.

“இருக்கீங்களா?” - மீண்டும் அவள் குரல்.

“தூங்காம இன்னும் என்ன பண்ணிட்டிருக்க நீ?” - அழுத்தம் திருத்தமாகக் கேட்டான். அவன் குரலிலிருந்த கடுமை மிருதுளாவை திகைப்படையச் செய்தது.

“இல்ல.. தூக்கம்.. வரல.. அதான்..” என்று கோர்வையற்று தடுமாறினாள். அந்த தடுமாற்றம் அவன் அமைதியை இன்னும் குலைத்தது.

“கதையடிச்சுக்கிட்டு இருந்தா எப்படி தூக்கம் வரும்?”

“எக்ஸ்கியூஸ் மீ?”

“கோ டு ஸ்லீப்.. நௌ” - அதிகாரம் தெறித்தது அவன் குரலில்.

அவனிடம் அன்பான வார்த்தையை எதிர்பார்த்த மிருதுளாவின் மனம் காயப்பட்டது.

“என்கிட்ட சொல்ல.. இல்ல கேட்க வேற எதுவும் இல்லையா?”

“காது கேட்கும்ல? சொன்னதை செய்” - சிறிதும் இளகவில்லை அவன். ‘அப்படி என்ன கோபம்! அவள் என்ன தவறு செய்தாள்?’ - அவளுக்கு ஆத்திரம் தொண்டையை அடைத்தது. கண்ணை கரித்தது. சமாளித்துக் கொண்டு, பதில் பேசாமல் அலைபேசியை டேவிட்டிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அறைக்கு திரும்பினாள்.

*******************

கேஜ் ஃபைட்டிங் முடிந்து ஒரு வாரம் கழிந்தும் கூட அவன் இன்னும் அமைதியடையவில்லை. இடது கையில் இரண்டு எலும்பு முறிவு. தாடை எலும்பில் லேசான தெறிப்பு.. கழுத்துப்பகுதியில் சதை பிடிப்பு.. அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு தன்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யும்படி ரௌண்ட்ஸ் வந்த மருத்துவரிடம் சீற்றத்துடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான் சுஜித்.

இங்கு இருக்கும் வரை கோர்த்தாவின் ஆட்கள் அவனை பார்க்க வந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை சந்திக்க அவன் விரும்பவில்லை. அவர்களுடைய கண்களில் தெரியும் ஏளனத்தையும், அனுதாபத்தையும் அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத குணம் அவனை இன்னும் ஆக்ரோஷ மனநிலைக்கு இட்டு சென்றுக் கொண்டிருந்தது. அதை சரி செய்வதற்கான மனநல சிகிச்சைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இவன் அறவே ஒத்துழைக்க மறுத்தான். மருத்துவர்களுக்கு இவனை கையாள்வது சற்று சிரமமாக இருந்தது. சுமன் மட்டும் இல்லையென்றால் இந்த ஒரு வாரம் கூட அவன் மருத்துவமனையில் தாக்குப்பிடித்திருக்க மாட்டான். எப்போதோ கம்பியை நீட்டியிருப்பான். அவனை அமைதியாக வைத்திருக்க வேறு வழியில்லாமல் அடிக்கடி ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அன்றும் அதைத்தான் செய்தார் அந்த மருத்துவர்.

சுஜித் உறங்கி கொண்டிருந்த வேளையில் அவனைப் பார்க்க வந்தான் மாலிக். சுமன் அவனை இயல்பாக வரவேற்றாள். அவனுடைய உடல்நிலைப் பற்றி விசாரித்தாள். அவன் மீது அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. நடந்ததை ஒரு போட்டியாக மட்டுமே பார்க்கும் மனப்பக்குவம் அவளுக்கு இருந்தது. அதை தனிப்பட்ட முறையில் எடுத்து பகை பாராட்ட அவள் விரும்பவில்லை. அவளுடைய முதிர்ச்சி மாலிக்கை ஆச்சரியப்படுத்தியது. அவளுடைய புரிதலுக்கு நன்றி கூறி நண்பனின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தான்.

“உடம்பு பரவால்ல.. மனசுதான் சரியில்ல. ரொம்ப அக்ரெஸிவா பிஹேவ் பண்றான். கௌன்சிலிங் போயிட்டிருக்கு.”

“ஐம் சாரி..”

“நோ நோ.. நீங்க சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. கேஜ் பைட்டிங் பற்றி எனக்கு தெரியும். நீங்க நெனச்சிருந்தா சுஜித்தை கொன்னுருக்கலாம். சுஜித் ஜெயிக்கற நிலைமைல இருந்திருந்தா அதைத்தான் செஞ்சிருப்பான். ஆனா நீங்க அப்படி செய்யல. ஐம் கிரேட்ஃபுல் டு யு. தேங்க்ஸ்” - உண்மையை உணர்ந்து அவனுக்கு மனமார நன்றி கூறினாள்.

அடுத்த நொடியே நோயாளி படுக்கையை ஒட்டியிருந்த மேஜையில் இருந்த மருத்துவ உபகாரணங்களெல்லாம் பயங்கர சத்தத்துடன் தரையில் உருண்டன. உடல் வலியையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆவேசத்துடன் எழுந்த சுஜித், “ஏய்! நீ ஏன் இங்க வந்த? என்னோட தோல்வியை என்ஜாய் பண்ண வந்தியா? உன்னோட வெற்றியை கொண்டாட வந்தியா? யு ப்ளடி சீட்டர்.. வெளியே போ.. வெளியே போடா ராஸ்கல்” என்று மாலிக்கை பிடித்துத் தள்ளினான்.

சுமன் அவனை தடுக்க முயன்றாள். மாலிக் தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றான். எதுவுமே அவனிடம் எடுபடவில்லை. கரை புரளும் காட்டு வெள்ளம் போல் கட்டவிழ்த்து கொண்டு சீறினான். ஒரு கட்டத்திற்கு மேல் செவிலியர்கள் தலையிட்டு மாலிக்கை அங்கிருந்து அனுப்பிவிட்டு சுஜித்தை அமைதிப்படுத்த முயன்றார்கள். ஆனால் அவனுடைய கோபம் சுமனின் பக்கம் திரும்பியது.

“என்ன சொன்ன? என்ன சொன்ன நீ? டெல் மீ நௌ..”

“என்ன? என்ன சொன்னேன்?”

“அவன்கிட்ட ஏதோ சொன்னியே..”

“சுஜித் ப்ளீஸ்.. கொஞ்சம் அமைதியா இரு.. காம் டௌன்” - அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.

“ஐம் கம்ப்ளீட்ல்லி சில் டார்லிங்.. யு ஜஸ்ட் டெல் மீ.. இன்னொரு தரம் அந்த வார்த்தையை உன் வாயிலிருந்து கேட்கனும் போல இருக்கு” - கொலை வெறி தெரிந்தது அவன் கண்களில்.

“நீ எதை கேட்கற? எனக்கு புரியல.. நீ முதல்ல உட்காரேன்.. இந்தா இந்த தண்ணிய குடி.”

“நோ..” - அவன் தட்டிவிட்ட வேகத்தில் தம்ளர் தரையில் தெரித்து விழ தண்ணீர் அறையெங்கும் சிதறியது. “நடிக்கிறியா? நடிக்கிறியா நீ.. ம்ம்ம்?” - அவள் தோள்களை பிடித்து ஆவேசமாக உலுக்கினான். அவன் முகம் சிவந்துவிட்டது. மூச்சு வாங்கியது. நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்கள் காதோரம் வடிந்தது.

அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தாள் சுமன். இந்த மூட் ஸ்விங்.. இந்த கோபம்.. இந்த பதட்டம்.. ஏதாவது சீரியஸான உடல்நிலை கோளாறை கொண்டு வந்துவிடுமோ என்று அஞ்சினாள்.

“நல்லவ மாதிரி.. என்மேல அக்கறை இருக்க மாதிரி.. நடிக்கிற இல்ல? நம்பிட்டேனே.. நீயும் என்னை ஏமாத்துற. யு ஆர் ஜஸ்ட் மேனிபுலேட்டிங் மீ.. ஹனிபாட்டிங் மீ.. ஐ நோ” - அவளை பின்னுக்கு தள்ளிவிட்டு தளர்ந்து கட்டிலில் அமர்ந்தான்.

மாலிக் அவனுடைய நெருங்கிய நண்பன். அவன் தனக்கு எதிராக மாற கூடும் என்கிற சந்தேகம் சிறிதும் இல்லாமல் அவனிடம் வெளிப்படையாக இருந்தான். ஆனால் அவனுடைய நம்பிக்கையை மாலிக் அந்த இரும்பு கூண்டுக்குள் சிதைத்துவிட்டான். தன் காதலியை கூட சந்தேகிக்கும் அளவுக்கு பலமான சிதைவு.

சுமன் அவனை பார்த்து பரிதாபப்பட்டாள். அவனுடைய மனநிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுவிட்டதே என்று எண்ணி வேதனைப்பட்டாள்.

“அவனுக்கு.. நீ.. கடமைப்பட்டிருக்க? யு ஆர் கிரேட் ஃபுல் டு ஹிம்.. ம்ம்ம்?” - குனிந்த தலை நிமிராமல் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் கேட்டான்.

“சுஜித்.. நா..” - அவள் விளக்கம் கொடுப்பதற்குள் குறுக்கிட்டு, “ஏன்?” என்று நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவன் பார்வையில் வருத்தம் இருந்தது.. இயலாமை இருந்தது.. அவனை அப்படி பார்க்க உள்ளே வலித்தது அவளுக்கு.

“எனக்கு உயிர் பிச்சை போட்டிருக்கான்.. இல்ல? அவன் இடத்துல நா இருந்திருந்தா அவனை கொன்னுருப்பேன் இல்ல?” என்று தளர்வுடன் கேட்டவன் திடீரென்று உக்கிரமானான். “எஸ்.. கொன்னுருப்பேன்.. நிச்சயமா கொன்னுருப்பேன்.. ஏன்னா நா நேர்மையா மோதினேன். என் மனசுல எந்த அழுக்கும் இல்ல.. குற்ற உணர்ச்சியும் இல்ல. இப்படி உயிரோட விட்டு அவமானப்படுத்தறதுக்கு பதிலா கொன்னுப்போட்டுடறது எவ்வளவோ மேல்.. அவன் ஒரு ஏமாத்துக்காரன்.. ஃப்ராட்.. அதனாலதான் அவனால என்னை கொல்ல முடியல.”

“கொஞ்சம் பொறுமையா திங்க் பண்ணு சுஜித். அவர் உன்னோட ஃபிரண்ட். அதனாலதான்..”

“துரோகி.. பச்சை துரோகி..” - அவள் முடிப்பதற்குள் ஆக்ரோஷமாகக் கத்தினான்.

“வெற்றி தோல்வியெல்லாம் சகஜம்தானே. ஸ்போர்ட்டிவா எடுத்துக்கோ” - அவள் அமைதியாகவே எடுத்துக் கூறினாள்.

“எதை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும்? அவன் என் முதுகுல குத்துனதையா? என்னோடயே பிராக்டிஸ் பண்ணி.. என்னோட டெக்னிக்ஸையெல்லாம் என்கிட்டயே கத்துக்கிட்டு.. என்னோட மைனஸையெல்லாம் என் மூலமாவே தெரிஞ்சுக்கிட்டு என் முதுகுல குத்தி ஜெயிச்சிருக்கான். இதுதான் வெற்றியா? இப்படித்தான் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சன் ஜெயிப்பானா?” - விரக்தியும் கோபமும் விரவியிருந்தது அவன் பேச்சில்.

“இதை வெறும் ஸ்போர்ட்டு மட்டும் சொல்லிட முடியாது சுஜித்.. இதுல உங்க இரண்டு பேரோட உயிரும் சம்மந்தப்பட்டிருந்தது. இது ஒரு யுத்தம்.. வார்.. நத்திங் இஸ் ராங் இன் வார் ரைட்?”

அப்படி அவள் கேட்டதும் அவனுடைய பார்வை மாறியது. ஒருவித அலட்சியமும் நக்கலும் கலந்த மலிந்த பார்வை பார்த்தான்.

“ப்ச்.. ப்ச்.. நத்திங் இஸ் ராங் இன் ‘லவ்’ அண்ட் வார்.. அதுதான் கரெக்ட்டான ஃப்ரேஸ் இல்ல?” - லவ் என்கிற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து குத்தலாகக் கேட்டான்.

சுமனின் முகம் மாறியது. “மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாத” - அவன் எங்கு வருகிறான் என்பதை உடனே புரிந்துக்கொண்டு கண்டித்தாள்.

“ஹி வாஸ் இன் லவ் வித் யு ரைட்?”

“பழைய குப்பையை எதுக்கு இப்ப கிளர்ற? நா உன்னைத்தானே சூஸ் பண்ணினேன்.”

“ஆனா அவன்தான் பெட்டர்.. பாரு.. பிராடு பண்ணியாவது யுத்தத்துல ஜெயிச்சுட்டான். இப்போ.. தியாகி வேஷம் போட்டு அடுத்த நாடகத்தை ஆரம்பிச்சிருக்கான். நடிப்புலேயும் சார் கிங்கு. கண்டிப்பா உன்ன கவுத்துடுவான்.”

“சுஜித் ப்ளீஸ்..”

“நீ என்னை கவுத்துடுவ..”

“போதும் நிறுத்து”

“ஐ ஹேட் யு” - பற்கள் நறநறக்க வெறுப்பை உமிழ்ந்தான்.

“ஐ லவ் யுடா” - காதலில் கசிந்தாள் சுமன்.

“ஓ ரியலி!”

“எஸ். ஐ லவ் யு. அண்ட் யு நோ தட்” - அவன் மனதில் பதியவைப்பது போல் அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

“அப்படின்னா எனக்கு நிம்மதியை கொடு.. அமைதியை கொடு..” - திட்டமாகக் கோரினான்.

“எப்படிடா?” - புரியாமல் கேட்டாள்.

“பை லீவிங் மீ”

“வாட்!”

“ஐ வாண்ட் பீஸ்.. ப்ளீஸ் லீவ் மீ”

“லூசு மாதிரி பேசாதடா”

“சோ.. நீ நடிக்கிற.. பொய் சொல்ற.. இல்ல?”

“ஐயோ! ஏண்டா இப்படி படுத்துற? என்னைய விட்டுட்டு நீ எப்படி இருப்ப? பைத்தியம் பிடிச்சுப் போயிடுவ.. சொன்னா கேளு. பேசாம கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு. எல்லாம் சரியாயிடும்” - அவனை படுக்க வைக்க முயற்சி செய்து, போர்வையை அவன் மீது இழுத்துவிட முயன்றாள்.

அவள் கையை தட்டிவிட்டு போர்வையை இழுத்து வீசிவிட்டு, “நீ இங்க இருந்தா எனக்கு தூக்கம் வராது சுமன். ஐ ரியலி வாண்ட் திஸ் பிரேக்.. ப்ளீஸ்.. என்னை விட்டுப்போ.. போயிடு” என்று ஆவேசமாக கத்தினான். அவன் ஏதோ கோபத்தில் பேசவில்லை, தீவிரமான முடிவோடு தான் பேசுகிறான் என்பதை புரிந்துக்கொண்ட சுமன் கலங்கிப்போனாள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 31

வீசியெறியாத குறையாக டேவிட்டிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு அறைக்கு வந்த மிருதுளாவிற்கு ஆறவேயவில்லை. கிணற்றில் போட்ட கல் போல் மூன்று நாள் எந்த தகவலும் இல்லாமல் கம்மென்று இருந்துவிட்டு இன்று அழைப்பவன் ஒரு சம்பிரதாயத்துக்கு கூட அவளிடம் நலன் விசாரிக்கவில்லை. ஏதோ தில்லுமுல்லுகாரியிடம் பேசுவது போல் கொடுகொடுவென்று கொட்டுகிறான். கொலைகாரன்.. கொடுமைக்காரன்.. இவனிடம் இந்த கொடுகொடுப்பை தவிர வேறு என்ன இருக்கும்? - கோபம் பொங்கியது.

அத்தனை கோபத்திலும் அவன் என்ன சொன்னானோ அதைத்தான் அப்படியே செய்தாலே தவிர, ‘நீ என்ன சொல்வது.. நான் என்ன கேட்பது’ என்கிற ரீதியில் எதிர்மறையாக நடக்க வேண்டும் என்கிற யோசனை கூட வரவில்லை அவளுக்கு. எத்தனை தொலைவில் இருந்தாலும் அந்த அளவுக்கு அவனுடைய ஆதிக்கம் அவளிடம் செல்லுபடியானது. அதை கூட உணராமல், அவன் ஏன் அப்படி கோபப்பட்டான் என்பதையே யோசித்துக் கொண்டிருந்தாள். என்ன தான் மூளையை கசக்கிப் பிழிந்தாலும் தன்னிடம் எந்த தவறும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. ‘அப்படியென்றால் அவன் ஏதாவது டென்ஷனில் இருந்திருப்பானோ! என்னவாக இருக்கும்?’ - சிந்தனை திசை திரும்பியதும் கோபம் கவலையாக மாறியது.

‘அவன்தான் நம்மகிட்ட நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை கேட்கல.. நாமளாவது என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கலாம்.. என்ன மாதிரியான அழுத்தத்துல இருக்கானோ தெரியலையே!’ - வெகுவாய் கவலைப்பட்டாள். அவனுடைய நலனை விசாரிக்க தவறியதற்கு வருந்தினாள். ஆனால் தவறிய தருணம் தவறியதுதானே! அதை மீட்டெடுக்க முடியாதல்லவா!

******************

என்ன தான் உறுதியாக முடிவெடுத்தாலும் ஓரிரண்டு நாட்களுக்கு மேல் அவனால் தன்னை பிரிந்திருக்க முடியாது என்கிற நம்பிக்கையில்தான் அன்று அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினாள் சுமன். ஆனால் ஒரு வாரம் கழிந்தும் கூட அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. இவளாக தொடர்பு கொள்ள முயன்றாலும் அழைப்பை ஏற்பதில்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் அவனைப் பற்றியே நினைத்து நினைத்து நொந்து போனவள் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், நேரில் சென்று பார்க்கலாம் என்று எண்ணி புறப்பட்டாள். எப்படி இருந்தாலும் அவள் முகத்தை பார்த்துவிட்டால் நிச்சயம் அவனுடைய இந்த முரட்டு பிடிவாதம் நொறுங்கிவிடும் - நம்பிக்கையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தவள் ரிஸப்ஷனிஸ்ட் சொன்ன செய்தியை கேட்டு திகைத்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பே சுஜித் மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்துகொண்டு சென்றுவிட்டான். அவனை கவனித்துக்கொள்வதற்கு கோர்த்தா, மூன்று பேர் அடங்கிய மருத்துவ குழு ஒன்றை அவனுடைய வீட்டிற்கே அனுப்பியுள்ளது.

அவளிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லையே! ஏன் இப்படி அவளை ஒதுக்குகிறான்? அவள் இல்லாமல் இருந்துவிடுவானா என்ன? - கத்தி அழ வேண்டும் போலிருந்தது. சமாளித்துக் கொண்டு வெளியே வந்தவள், சுஜித்தின் வீட்டிற்கு வண்டியை விடுமாறு டிரைவரிடம் கூறினாள்.

வீட்டு பக்கமே வரமாட்டான்.. அவனுடைய தந்தைக்கு அது பெரும் குறை.. இப்போது நிம்மதியாக இருப்பார். சம்மந்தம் இல்லாமல் அவர் மீதும் கோபம் வந்தது அவளுக்கு.

ஆவேசமாக அழைப்பு மணியை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தாள். எரிச்சலுடன் கதவை திறந்தார் சுஜித்தின் தந்தை.. வாட்டசாட்டமான மனிதர். கண்களில் கோபம் தெரிந்தது.. சந்தேகமே இல்லை.. இந்த மனிதரின் குணம்தான் அப்படியே அவனுக்கும் கடத்தப்பட்டிருக்கிறது.

“என்ன விஷயம்?” - கடுப்புடன் கேட்டார். சுமனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். அவன் செய்யும் தவறுகளுக்கெல்லாம் இவளை பொறுப்பாளியாக்குவதே அவருக்கு வேலை. இப்போதுகூட இவன் இப்படி அடிபட்டுக் கிடப்பதற்கு அவள்தான் காரணம் என்று கருதினார். பேஸ்மெண்ட்டில் நடந்த கொலை.. சர்வைலென்ஸ் கேமிரா தில்லுமுல்லு.. அதில் சுமன் செய்த குழப்பம் அனைத்தையும் அறிந்தே வைத்திருந்தார். எனவே அவளிடம் வெறுப்பை வெளிப்படையாகக் காட்ட அவர் தயங்கவில்லை.

அவருடைய கோபத்திற்கெல்லாம் அசைந்து கொடுக்கும் ஆள் அவள் அல்ல.

“நா சுஜித்தை பார்க்க வந்தேன். எங்க அவன்?” - அதட்டலாகவே கேட்டாள்.

முறைத்துக் கொண்டே அவளுக்கு வழிவிட்டு உள்ளே நகர்ந்தார். அவர்களுக்குள் சில நாட்களுக்கு முன்பு நடந்த வாக்குவாதம் அவருக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவளை வாசலோடு திருப்பி அனுப்ப சற்றும் தயங்கியிருக்க மாட்டார்.

வீட்டுக்குள் நுழைந்ததும் விறுவிறுவென்று அவனுடைய அறைக்கு விரைந்தாள். சுஜித் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“இப்போதான் தூங்கினாங்க மேடம்.. ஸ்லீப்பிங் பில் போட்டிருக்காங்க..” - உடன் இருந்த நர்ஸ் கூறினாள்.

அவளிடம் அவனுடைய உடல்நிலை, மனநிலையைப் பற்றியெல்லாம் விசாரித்தாள். அவனுடைய போனை எடுத்து தான் அனுப்பிய குறுஞ்செய்தி எல்லாம் வாசித்துவிட்டானா என்று சோதித்து, வாசித்துவிட்டுதான் அழுத்தமாக இருக்கிறான் என்பதையும் தெரிந்துக் கொண்டாள்.

அதன்பிறகு அவன் விழிக்கும்வரை அவன் முகத்தை பார்த்தபடியே அருகில் அமர்ந்திருந்தாள். நர்ஸ் சொன்னபடி இரண்டு மணி நேரமெல்லாம் அவன் உறங்கவில்லை.. அரை மணி நேரத்திலேயே புரண்டு படுத்தவன், சட்டென்று விழித்துவிட்டான். மாத்திரை கூட அவனுக்கு முழுமையாக உதவவில்லை என்று அவளுக்குப் புரிந்தது.

அவளை பார்த்ததும் அவன் புருவம் சுருங்கியது.. நிஜமா கனவா என்று தடுமாறுவது போல் தோன்றியது. அப்படியென்றால் அவன் கனவில் அவள் வருகிறாளா! வராமல் என்ன.. நிச்சயம் வந்திருப்பாள்.. - பெருமையுடன் புன்னகை பூத்தாள். அவன் முகம் கடுத்தது. எதுவுமே சொல்லாமல், அவளுக்கு முதுகுகாட்டி புரண்டு படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

“சுஜித்! உன்ன பார்க்கத்தானே வந்திருக்கேன். எதுக்கு இப்படி மூஞ்சியை திருப்பிக்கிற? நா என்னடா பண்ணினேன்?” - பாவமாகக் கேட்டாள்.

அவன் பாவப்படவில்லை.. பதிலாக அவனுக்கு கோபம் தான் வந்தது.. பற்களை நறநறத்தபடி அசையாமல் படுத்திருந்தான்.

“எத்தனை மெசேஜ் பண்ணினேன், எல்லாத்தையும் படிச்சுட்டு ஒண்ணுக்கு கூட ரிப்லை பண்ணலடா நீ. ஒருவாட்டி கூட கால் அட்டெண்ட் பண்ணல.. லூசு மாதிரி மூணு நாளா உன்னையே நெனச்சுக்கிட்டு இருந்தேன் தெரியுமா?”

“திரும்பு சுஜித்.. சொல்றேன்ல.. ஒரே ஒரு தரம் திரும்பேன்” - அவனை பிடித்து உலுக்கினாள். சுஜித் எழுந்து அமர்ந்தான்.

“இப்போதான் எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் நார்மல் ஆயிட்டு வர்றேன்.. ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிற? ஏன் எனக்கான ஸ்பேஸை கொடுக்க மாட்டேங்கிற? காண்ட் யு ஜஸ்ட் லீவ் மீ அலோன்?” - அவனுடைய வார்த்தைகளும் முகபாவமும் அவளை வெகுதூரம் தள்ளி நிறுத்தியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பரிதவித்தாள் சுமன்.

“ப்ளீஸ்டா.. என்கிட்ட இப்படி யாரோ மாதிரி பேசாத. நாம வேற எதைப் பத்தியும் நினைக்க வேண்டாம்.. உன்னையும் என்னையும் பத்தி மட்டும் நினைப்போம். நா இங்கேயே உன்கூடவே வேணுன்னாலும் இருந்துடறேன். நாம அங்க மகல்பாட்னாவுக்கு போகவே வேண்டாம். ப்ளீஸ்டா சுஜித்” - கெஞ்சினாள்.

மகல்பாட்னா என்கிற பெயரை கேட்டதுமே சுஜித்திடம் நிறைய மாற்றம் தெரிந்தது. நரம்புகள் புடைக்க இறுகிப் போனான். வியர்வை துளிர்த்தது.

“நீ கிளம்பு.. திரும்ப வராத” - உறுதியாக கூறினான். சுமன் வெடித்து அழுதாள். அவனுடைய இந்த புது பரிமாணத்தை அவளால் நம்பவே முடியவில்லை.

“ஷட்-அப்.. ஜஸ்ட் ஷட்-அப். ஓகே? என் கண்ணு முன்னாடி உட்கார்ந்துகிட்டு இப்படி அழுதுகிட்டு இருக்காத. கிளம்புன்னா கிளம்பு.. காதுல விழல?” - சீற்றத்துடன் சத்தம் போட்டான். மூச்சின் சமநிலை மாறியது. வியர்வை அதிகரித்து உடல் நனைந்தது.

“சார் டென்ஷன் ஆகாதீங்க.. மேடம்.. அவரோட பிபி அதிகமாகக் கூடாது.. ப்ளீஸ் நீங்க கிளம்புங்க. சார் கொஞ்சம் ஸ்டேபிள் ஆனதும் பேசிக்கலாம்” - இருவருக்கும் இடையில் நர்ஸ் புகுந்தாள்.

சுமனின் மனம் விட்டுப்போய்விட்டது. “நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே ஓடி வர்றேன்ல, அதான்.. இப்படி தூக்கியெறியிற. நா இல்லன்னாதாண்டா உனக்கு என்னோட அருமை தெரியும். நா போறேன்.. திரும்பி வரமாட்டேன். நீ சந்தோஷமா இரு..” - அழுதுக்கொண்டே அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டாள்.

‘போ போ’ என்று விரட்டிவிட்டது அவன்தான். அவளும் அழுதுக்கொண்டே போய்விட்டாள். இனி என்ன? - தளர்ந்து போய் பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான். தலை கவிழ்ந்திருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வடிந்து தரையில் விழுந்து தெறித்தது.

********************

“இதுதான் நம்மளோட பிளான்.. ராகேஷ் சுக்லா நாளைக்கு காலையில சரியா எட்டு மணிக்கு டெல்லியில வந்து இறங்குறார். அவர் தங்கற அதே ஹோட்டல்ல, அவருக்கு புக் பண்ணியிருக்கற ரூமுக்கு எதிர்த்த ரூமை நாம ஏற்கனவே புக் பண்ணிட்டோம். நம்ம ஆளுங்க இரண்டு பேர் அந்த ரூம்லயும், ஹோட்டலுக்கு வெளியே இரண்டு பேர் தனித்தனியாவும் நின்னு நிலவரத்தை கவனிக்கறாங்க. ராகேஷ் ஹோட்டலுக்கு வந்ததும், அவர் தனியா தான் வர்றாரா இல்லை கார்ட்ஸும் கூட வர்றாங்களாங்கற விபரத்தை சேகரிச்சு பாஸ் பண்ணறது மட்டும் தான் வெளியே இருக்க இரண்டு பேரோட வேலை.”

“கார்ட்ஸ் கூட இருந்தா பிளான் எ - அட்டாக் பண்ணி ஆளை போடறது. கார்ட்ஸ் இல்லைன்னா பிளான் பி - சைலண்டா உள்ள நுழைஞ்சு மேட்டரை முடிச்சிட்டு தற்கொலை மாதிரி செட்டப் பண்ணிடறது” - பகவானுடைய பேச்சில் நம்பிக்கை நிறைந்திருந்தது.

“இதெல்லாம் சாத்தியமா? எக்சிக்யூஷன்ல எங்கேயாவது தப்பு நடந்துட்டா என்ன செய்றது?” - சிறு கலக்கம் தெரிந்தது ஜெனார்த் நாயக்கின் குரலில்.

“தப்பு நடக்க வாய்ப்பே இல்ல. பிளான் எ எக்சிக்யூஷன் - ரூம்ல இருக்க இரண்டு பேர், புதுசா உள்ள நுழையிற மூணு பேர் மொத்தம் அஞ்சு பேர். எல்லாருமே ப்ரொபஷனல் கில்லர்ஸ். சந்தர்ப்பம் பார்த்து சரியான நேரத்துல அட்டாக் பண்ண கூடியவங்க. எப்படி பண்ணனுங்கறதை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, டீம் ஹெட் அந்த நேரத்துல பிளான் பண்ணிக்குவான்.”

“பிளான் பி எக்சிக்யூஷன் - ராகேஷ் ஹோட்டல் ரூம்ல நுழைஞ்சதுமே, எதிர்த்த ரூம்ல தங்கியிருக்கும் இரண்டு பேரும் கேமிராவை ஹேக் பண்ணிட்டு பறந்துடுவாங்க. அடுத்த நிமிஷமே நம்மளோட கில்லர்ஸ் ஹோட்டலுக்குள்ள நுழைஞ்சிடுவாங்க. மொத்தம் மூணு பேர், ஒருத்தன் டோர் லாக்கை ரீப்ரோகிராம் பண்ணி கதவை திறப்பான். இரண்டாவது ஆள் ராகேஷை சத்தமில்லாம முடிப்பான். மூணாவது ஆள் தடயங்களை அழிச்சிட்டு தற்கொலை மாதிரி செட் பண்ணிடுவான். லாக்கை திறந்தவன் மறுபடியும் அதை பழையபடி ரீப்ரோகிராம் பண்ணி கதவை மூடிடுவான். மூணு பேரும் வந்த அடையாளமே இல்லாம வெளியேறிடுவாங்க. அதிகபட்சம் முப்பது நிமிஷம்.. தப்பு நடக்க வாய்ப்பே இல்ல” - பகவான் உறுதியாகக் கூறினார். ஜெனார்த் நாயக்கிற்கும் அப்படித்தான் தோன்றியது.

மறுநாள் காலை, அவர்கள் எதிர்பார்த்தபடியே சரியாக எட்டு மணிக்கு ராகேஷ் சுக்லா டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவருடைய பிரத்தியேக பாதுகாவலர்கள் மூன்று மணி நேரம் தாமதமாக அடுத்த விமானத்தில் வருவதால், அவரை பாதுகாக்கும் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றிருந்த உள்ளூர் ஏஜென்சி ஒன்றின் ஏஜென்ட்டுகள் அவரை கமுக்கமாக காரில் ஏற்றிக் கொண்டு பறந்தார்கள்.

ராகேஷ் சுக்லாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த கோர்த்தா ப்ளாக் குழுவின் பட்சிகள் இரண்டு, அவரை விமான நிலையத்திலிருந்து பின்தொடர்ந்து வருவதை – அவரோ, அவரை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்த ஏஜென்ட்டுகளோ யாரும் கவனிக்கவில்லை. காரணம், ரிலே ஓட்டம் போல் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் அவரை பின்தொடரும் வாகனமும் பட்சிகளும் மாறிக் கொண்டே இருந்தார்கள். அதை கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியம்தான்.

கார் ஹோட்டலை வந்தடைந்தது. வெளியே நோட்டமிட்டுக் கொண்டிருந்த பட்சிகள் ராகேஷ் ஏஜென்ட்டுகளோடு ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டார் என்கிற தகவலை கில்லர் ஸ்குவார்டிற்கு கொடுத்துவிட்டு பறந்துவிட்டது.

சுக்லா, ஹோட்டலுக்கு வந்ததும் எந்த விளம்பரமும் இல்லாமல் நேராக தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார். அவர் உள்ளே நுழைவதற்கு முன் பாதுகாப்பு ஏஜென்ட் உள்ளே நுழைந்து அறையை முழுமையாக சோதித்து அவருடைய பாதுகாப்பை உறுதி செய்துக்கொண்ட பிறகே அவரை உள்ளே அழைத்தான். பாதுகாப்பு குழுவோடு உள்ளே நுழைந்தார் சுக்லா. பால்கனி இல்லாத அறை. மெயின் டோர் வழியாக மட்டும்தான் உள்ளே நுழைய முடியும். பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திருப்தியாக அறையிலிருந்து வெளியேறிய பாதுகாப்பு குழு, அந்த தளத்திலிருந்தும் கீழே இறங்கியது. இனி கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்காணித்தால் போதும். தேவைப்பட்டால் மேலே வரலாம்.

எதிர் அறையில் பதுங்கியிருந்த பகவானின் ஆட்கள், பாதுகாப்பு லென்ஸ் வழியாக அவருடைய அறை வாயிலை நோட்டமிட்டு நிலவரத்தை கில்லிங் ஸ்குவார்டிற்கு கொடுக்க, கேமிராவை ஹேக் செய்யும்படி ஆர்டர் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதை முடித்துவிட்டு அவர்கள் வெளியேறவும் கில்லிங் ஸ்குவார்டில் இருக்கும் மூவரும் ஒன்று கூடி மேலே வரவும் சரியாக இருந்தது. அறிமுகமற்றவர்கள் போல் ஒருவரை ஒருவர் கடந்துச் சென்றார்கள்.

கொலைகாரர்கள் என்று சத்தியம் செய்து சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள். தோற்றத்தில் அத்தனை மிடுக்கும் நேர்த்தியும் இருந்தது அவர்களிடம். கட்டுமஸ்தான உடலை உயர்தரமான ஆடையிலும், குரூரம் நிறைந்த குணத்தை இயல்பான முகத்திலும் மறைத்துக் கொண்டு வெகு சாதாரணமாக மூன்றாம் தளத்திற்கு வந்துவிட்டார்கள்.

ராகேஷ் சுக்லா தனியாக அறையில் இருக்கிறார். தப்பிச் செல்ல பால்கனிகூட இல்லை.. ஒரே கதவுதான்.. அதையும் இப்போது உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய போகிறது அந்த கொலைகாரக் குழு.

இதோ.. கதவில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் லாக்கை, சில நிமிட போராட்டத்தில் ரீப்ரோகிராம் செய்து திறந்துவிட்டான் ஒருவன். மூவர் முகத்திலும் மகிழ்ச்சி மின்னி மறைந்தது. துப்பாக்கியை தயார் நிலையில் வைத்தபடி கதவை மெல்ல திறந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான் ஒருவன். அறை காலியாக இருந்தது. குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. சகாக்களுக்கு சாதகமாக தலையசைத்து சிக்னல் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தான். மற்ற இருவரும் அவனை பின்தொடர்ந்தார்கள். அவர்களுடைய கவனம் முழுவதும் குளியலறையை நோக்கியிருந்தது. ஒரே நொடிதான்.. மின்னல் வெட்டியது போல் கண்ணிமைக்கும் நேரத்தில் இடைவிடாமல் மூன்று முறை வெடித்தது துப்பாக்கி.. யார் யாரை சுட்டது.. எங்கிருந்து வெடித்தது என்று எதையும் ஊகிக்கும் முன்னர் மூவரும் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார்கள். அவர்களிடம் அசைவில்லாததை உறுதி செய்துக் கொண்டு எச்சரிக்கையுடன் சோபாவுக்கு பின்னாலிருந்து வெளிப்பட்டான் அர்ஜுன் ஹோத்ரா.

ஆம்! அர்ஜுன் ஹோத்ராவே தான்! ராகேஷ் சுக்லா அர்ஜூனாக மாறியது மிகவும் பழைய டெக்னிக் தான். திரைப்படங்கள் பலவற்றில் நாம் பார்த்து பழகிய டெக்னிக்.. ஆனால் உலகின் சில முக்கிய இன்டெலிஜெண்ட்ஸ் ஆபரேஷன்ஸை கவிழ்த்துவிட்ட டெக்னிக்.

லோக்கல் ஏஜென்ட்ஸ் என்கிற போர்வையில் இருந்த அர்ஜுனும் அவன் சகாக்களும் ராகேஷ் சுக்லாவோடு அறைக்குள் நுழைந்தார்கள். வெளியே வரும் போது ராகேஷ் சுக்லாவின் உடை பாதுகாப்பு ஏஜென்ட் போல் மாறியிருந்தது. ஆளோடு ஆளாக அவர் வெளியேறிவிட அர்ஜுன் எதிரிகளை எதிர்பார்த்து உள்ளேயே தங்கிவிட்டான். தருணம் பார்த்து தாக்கி சாய்த்தும்விட்டான்.

இது ஒரு துரித போர்.. ஒரே அறை.. மூவருக்கு ஒருவன்.. அனைவர் கையிலும் ஆயுதங்கள்.. மிகவும் ஆபத்தான ஆபரேஷன்.. இங்கு வெற்றியை முடிவு செய்தது தகவல் தான். அவர்களுக்கு கிடைத்த பொய்யான தகவல்.. அவனுக்கு கிடைத்த உண்மையான தகவல். உண்மையும் பொய்யும் இடம்மாறியிருந்தால் வெற்றியும் கைமாறியிருக்கும். ஆனால் அதற்கு இடம் கொடுப்பவன் அர்ஜுன் ஹோத்ராவாக இருக்க முடியாதே!

தரையில் கிடந்தவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிவிட்டு, கழுத்து வளைவில் கைவைத்து நாடியை சோதித்தான். ஒருவன் உயிரோடிருந்தான்.. அவன் முக்கியம். துரிதமாக செயல்பட்டு அவன் காயத்திற்கு முதலுதவி செய்து இரத்தப்போக்கை கட்டுப்படுத்தினான்.

அவன் அதை செய்துக் கொண்டிருக்கும் பொழுதே, ஏஜென்ட்ஸ் என்கிற போர்வையில் கண்ட்ரோல் ரூமில் இருந்த கோர்த்தாவின் ஆட்களில் இருவர் தடதடவென்று அந்த அறைக்குள் நுழைந்தார்கள். எந்த இடைவேளையில் அவர்களுக்கு சிக்னல் கொடுத்தானோ! அது அவனுக்கே வெளிச்சம்.

அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையில் பரபரப்பாக வேலைகள் நடந்தன. பிணங்களை இரத்தம் கசியாமல் பாடி பேகில் பேக் செய்து, அதை துணியால் மூட்டை போல் கட்டி, லாண்டரி சர்வீஸ் மேன் வேஷத்தில் வந்த கோர்த்தா ஆள் மூலம் ஹோட்டலைவிட்டு அப்புறப்படுத்தினார்கள். உயிருக்கு ஊசலாடி மயங்கிவிட்டவனை மிக சாமர்த்தியமாக லிப்ட் மூலம் - தரை தளத்தில் கோர்த்தா ஆள் ஒருவனுக்கு புக் செய்யப்பட்டிருக்கும் அறைக்கு கடத்தி, அந்த அறையின் பால்கனி மூலம் பார்க்கிங் லாட்டிற்கு எடுத்து சென்று சில நிமிடத்தில் வேனில் ஏற்றிக் கொண்டு பறந்துவிட்டார்கள். பதினைந்து நிமிடத்திற்குள் தடயங்கள் வெகு துரிதமாக அழிக்கப்பட்டன. அங்கே ஒரு யுத்தம் நடந்து முடிந்ததற்கான அறிகுறி எதுவுமே இல்லாமல் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது அந்த ஹோட்டல்.

மூன்று மணி நேரம் தாமதமாக வருவதாக போக்கு காட்டிவிட்டு ஒரு வாரத்திற்கு முன்பே டெல்லுக்கு வந்து இறங்கிவிட்ட அர்ஜுன் ஹோத்ராவின் குழு, வந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துவிட்டது.

**************************

‘கில் பிஃபோர் யு ஆர் கில்ட்’ (‘நீ கொல்லப்படுவதற்கு முன் கொன்றுவிடு’) - போர்க்களத்தில் சொல்லப்படும் ஓர் அழகிய வாய்மொழி. அதைத்தான் செய்து முடித்திருந்தான் அர்ஜுன். சற்று தயங்கியிருந்தாலும் அந்த மூவரின் தோட்டாக்களுக்கும் அவன் இரையாகியிருப்பான். இந்நேரம் அவனுடைய உடல் பாடி பேகில் பேக் செய்யப்பட்டிருக்கும்.. இங்கு வாழ வேண்டும் என்றால் கொல்ல வேண்டும்.. கொன்றால் மட்டும் தான் வாழ முடியும். நிதர்சனம் நெஞ்சை நிமிர செய்தது. உள்ளே குறுகுறுத்த மனிதம் உள்ளத்தின் ஏதோ மூலையில் தூக்கியெறியப்பட்டது. ‘புஸ்ஸ்ஸ்’ என்கிற சத்தத்துடன் உச்சந்தலையில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்த ஷவரை அணைத்துவிட்டு டவலை எடுத்தான்.

அவள் முகம் நினைவில் வந்தது.. திரும்ப பார்க்க முடியாமல் போய்விடுமோ என்கிற நூல் நுனியளவிலான எண்ணம் அவன் மனதை குத்திக் கொண்டிருந்தது. அன்றைய வெற்றியின் பலனே அதுதான் என்பது போல் மனம் பரபரத்தது. ‘மடத்தனம்’ - தன்னைத்தானே கடிந்து கொண்டபடி குளியலறையிலிருந்து வெளியே வந்து உடைமாற்றி தயாரானான்.

பக்கத்து அறையில் தான் ராகேஷ் சுக்லா தங்கியிருக்கிறார். அவருடைய மீட்டிங் வெற்றிகரமாக முடிய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அது தொடர்பாக சில போன் கால்கள் செய்ய வேண்டியிருந்தது. பேசி முடித்துவிட்டு அலைபேசியை கீழே வைத்தவனுக்கு முன்பிருந்த அதே பரபரப்பு.. அவளிடம் பேச வேண்டும் போல்.. அவள் குரலை கேட்க வேண்டும் போல்.. பத்திரமாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் போல்.. அத்தனையும் அவன் விருப்பத்திற்கு மாறான உணர்வுகள்.. இடம் கொடுக்க விரும்பாமல், சுக்லாவை சந்திக்கச் சென்றான்.

சந்திப்பு நடக்கவிருக்கும் இடம், நேரம், பயண விபரம் அனைத்தையும் விலக்கிக் கூறிவிட்டு, அவருடைய மெய்ப்பாதுகாவலர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறிவிட்டு கீழே வந்தான். தரைத்தளத்தில் இயங்கும் ரெஸ்டாரண்டை தவிர்த்து, அவன் உண்ணக்கூடும் என்று ஊகிக்க முடியாத ஒரு ஹோட்டலில் உண்டுவிட்டு சுக்லாவுக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு வந்தான்.

உணவு விஷயத்தில் அவன் எப்பொழுதுமே அதீத கவனத்தோடுதான் இருப்பான். தன் பிரத்தியேக சமையல்காரரை தவிர வேறு யாரையும் நம்பமாட்டான். அது ஒரு வியாதி போலவே அவனை தொற்றிக் கொண்டிருக்கிறது. இன்றும் அந்த எச்சரிக்கைதான், தங்கியிருக்கும் இடத்தைவிட்டு வெகுதூரம் தள்ளி உள்ள ஒரு ஹோட்டலை தேடி அவனை துரத்தியது.

சுக்லாவுக்கு உணவை கொடுத்துவிட்டு அறைக்கு திரும்பியவனுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு வேலை எதுவும் இல்லை. அவள் நினைவு அரிக்கத் துவங்கியது. அலைபேசியை எடுத்து டேவிட்டிற்கு அழைத்தான். நான்கைந்து முறை ரிங் சென்ற பிறகு அழைப்பு ஏற்கப்பட்டது.. ஆனால் யாரும் பேசவில்லை.. மாறாக மறுபுறத்திலிருந்து பெரிதாக சத்தம் கேட்டது.. சிரிப்புச் சத்தம்.

“ஹேய்! ஆவ்.. ஐயோ! விடு.. டே..வி..ட்! ப்ளீஸ்.. ஹா ஹா” - மிருதுளாவின் சிணுங்கல் சிரிப்பும் களிப்புமாக அவன் செவியை எட்ட, சட்டென்று உடல் விறைத்து நிமிர்ந்தான் அர்ஜுன்.

“விட்றதா? என்ன பண்றேன் பாரு உன்ன.. ஹா ஹா.. எங்க.. இப்போ எப்படி.. அட.. ஏய்.. ஹா ஹா” - மேல்மூச்சு வாங்கும் டேவிட்டின் உல்லாச குரல் அவன் அடிவயிற்றில் அமிலத்தை ஊற்றியது. துடித்துப்போனான் அர்ஜுன்.

“நோ-நோ-நோ.. ஹேய்! கைய விடு.. ஹா ஹா” - மகிழ்சியும் துள்ளலுமாக கத்தினாள் மிருதுளா. அவன் அலைபேசி அழைப்பில் தொடர்பில் இருப்பதை இருவருமே அறியவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்! நெஞ்சுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் உள்ளம் எரிந்தது. கொலை செய்யும் போதுகூட வராத பதட்டம் இப்போது அவனை நிலைகுலைய செய்தது.

“ஹலோ.. டேவிட்.. ஹ..லோ.. ஏய்.. பேசுடா” - ஆத்திரத்துடன் கத்தினான். ஆனால் அந்த பக்கத்திலிருந்து சீண்டல்களும், சிணுங்கல்களும் மட்டுமே அவனுக்கு பதிலாகக் கிடைத்தது. “டா..மி..ட்!” - கடுங்கோபத்துடன் அழைப்பை துண்டித்துவிட்டு அலைபேசியை கடாசினான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 32

மிராஜ்பாடாவிற்கு வந்ததிலிருந்து டேவிட்தான் சமைக்கிறான். எந்த சிரமமும் இல்லாமல் மூன்று வேளையும் முறையாக உண்டு கொண்டிருந்த மிருதுளாவிற்கு வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் பிரியாணி செய்தால் “களி கிண்டியாச்சா?” என்பாள். ரொட்டி செய்தால் “வரட்டி ரெடியா?” என்பாள். குருமாவை குழம்பு என்பாள், குழம்பை ரசம் என்பாள், ரசம் வைத்தால், “ஐயோ! தண்ணியில தக்காளி நசுங்கிக் கிடக்கு” என்பாள்.

பொறுத்து பொறுத்துப் பார்த்தவன் அன்று அவளை சமையலுக்கு போட்டுவிட்டான். மிருதுளாவும் ஒன்றும் பெரிய செஃப் இல்லை. ஹாஸ்ட்டலில் இருந்தவரை சமையலறையின் திசை கூட தெரியாமல் இருந்தவள், இப்போது கல்லூரி தோழிகளுடன் அறை எடுத்து தங்கிய பிறகுதான் சில இன்ஸ்டெண்ட் உணவுகளை சமைக்கப் பழகியிருந்தாள்.

டேவிட், “இன்னைக்கு நீதான் சமைக்கிற” என்றதும் திருத்திருத்தவள், “மேகி பாக்கெட் இருக்கா? சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.. சூப்பரா இருக்கும்” என்றாள்.

“மேகி பாக்கெட்டா!” என்று வாயைப் பிளந்தவன் “சாப்பிட மட்டும் தான் தெரியுமா!” என்றான்.

அவனிடம் வீம்புப் பேசி சமைத்துக் காட்டுவேன் என்று களமிறங்கினாள் மிருதுளா. என்னதான் செய்கிறாள் என்று அவனும் வேடிக்கை பார்த்தான்.

முட்டை பிரியாணி செய்யப் போவதாக அறிவித்துவிட்டு, சமையலறையை பயங்கரமாக செட் செய்தாள். அவனுடைய அலைபேசியை பிடுங்கி அதில் பாட்டு போட்டு பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஹெட் போனை மாட்டிக் கொண்டாள். பாட்டின் ரிதத்திற்கு காலாலும் கழுத்தாலும் தாளம் போட்டபடி தக்காளி வெங்காயத்தை கழுவி நறுக்கினாள்.

அவளுடைய அசைவுகளை ரசித்தபடி கிட்சன் கௌண்டரில் ஏறி அமர்ந்து, கேரட்டை எடுத்துக் கடித்தான் டேவிட்.

“டேவிட்.. பிரிட்ஜ் மேல முட்டை இருக்கு.. நாலு எடுத்து இந்த பக்கம் போடு” - காதுக்குள் ஒலிக்கும் பாடலை மிஞ்சிவிடும் வகையில் சத்தம் போட்டாள்.

“கத்தாத” என்று கடிந்து கொண்டே முட்டையை எடுத்தவன், “மிருதுளா” என்று அழைத்து, அவள் திரும்பியதும், “கேட்ச்” என்று அவளிடம் தூக்கிப் போட்டான். அது நச்சென்று அவள் மீது விழுந்து தெறித்தது.

“ஆவ்!” - அதிர்ச்சியும் அருவருப்புமாக முகத்தை சுளித்தாள் மிருதுளா.

“சா..ரி!” - பல்லை காட்டினான். உண்மையில் அவள் பிடித்துவிடுவாள் என்று தான் நினைத்தான்.

“வொய் டிட் யு டூ திஸ்?” - ஹெட்போனை பிடுங்கி எறிந்துவிட்டு அவனிடம் சண்டைக்கு நின்றாள்.

“தூக்கிப் போட சொன்னியே! அதுவும் நாலு முட்டையை..” - அவன் அப்பாவியாக விளக்கம் கேட்டான்.

“அதுக்கு?”

“நா ஒன்னை தானே போட்டேன்.. நீ ஏன் பிடிக்கல?”

“உன்ன.. மகனே செத்த இன்னைக்கு” என்று கத்திக்கொண்டே நறுக்கி வைத்திருந்த தக்காளிகளை எடுத்து அவன் மீது சரமாரியாக வீசத் துவங்கினாள்.

அவன் எத்தனுக்கு எத்தன்.. ஜித்தனுக்கு ஜித்தன்.. நறுக்கிய தக்காளியைக் கூட கச் கச்சென்று கேட்ச் பிடித்து அவள் மீதே திருப்பி வீசிவிட்டு பயங்கரமாக சிரித்தான்.

அவள் அதீத கோபத்திற்கு ஆளானால். சட்டென்று பக்கத்திலிருந்த ஜக்கை எடுத்து தண்ணீரை அவன் மீது விசிறி ஊற்றினாள். தக்காளியை பிடித்தது சரி.. தண்ணீரை பிடிக்க முடியுமா? குபீரென்று முகத்தில் வந்து மோதிய தண்ணீரில் மூச்சுமுட்டி தலையை சிலுப்பினான் டேவிட்.

“எப்புடி?” - ஜம்பமாக புருவம் உயர்த்தினாள். அடுத்த கணம் யோசிக்காமல் அவளை துரத்தத் துவங்கினான் டேவிட். கையில் கரண்டியோடு சமையலறையை வட்டமடித்து, “ஹேய்.. நீதானே.. ஃபர்ஸ்ட்.. நோ” என்று கத்திக் கொண்டே ஹாலுக்கு ஓடினாள்.

அவள் ஓட.. இவன் துரத்த, இவன் துரத்த.. அவள் ஓட.. இருவருக்கும் மூச்சு வாங்கினாலும் அவனுக்கு திண்மையிருந்தது. அவள்தான் சோர்ந்து போய் அவனிடம் அகப்பட்டுக் கொண்டாள். அப்போதும் கூட கரண்டியால் அவனை தாக்க முற்பட்டாள். சிங்கத்திடம் சிக்கிய எலிக்குஞ்சு போல் அவளால் அந்த கரண்டியை வைத்துக் கொண்டு அவனை என்ன செய்துவிட முடியும்? வெகு சுலபமாக அவளை ஒரு கையிலும், கரண்டி பிடித்திருந்த கையை மறு கையிலும் சிறை செய்துவிட்டான்.

அப்போது அவளுடைய பேண்ட் பாக்கெட்டில் சைலன்ட் மோடிலிருந்த டேவிட்டின் அலைபேசி ஒளிர்ந்தது. அவனிடமிருந்து தப்பிக்கும் உத்வேகத்திலிருந்தவள் அதை உணரவே இல்லை. டேவிட்டிடம் இருந்து தப்பித்து அவனை ஒரு அடியாவது அடித்துவிட வேண்டும் என்று முரண்டு பிடித்தவள், அவனை இழுத்துக் கொண்டு சோபாவில் விழுந்துவாரினாள். அப்போதுதான் எங்கோ இடிபட்டு அழைப்பு தானாகவே ஏற்கப்பட்டுவிட்டது.

“ஹேய்..! ஆவ்.. ஐயோ..! விடு. டே..வி..ட்..! ப்ளீஸ்.. ஹா ஹா” - அவனை பிடித்து தள்ளிவிட்டு எழ முயன்றாள்.

அவளுடைய குறிக்கோள் புரிந்து, “விட்றதா? என்ன பண்றேன் பாரு உன்ன.. ஹா ஹா.. எங்க.. இப்போ எப்படி.. அட.. ஏய்.. ஹா ஹா” என்றபடி கரண்டியை அவளிடமிருந்து பிடுங்கியெறிந்தான்.

“நோ-நோ-நோ.. ஹேய்..! கைய விடு.. ஹா ஹா..” - கரண்டி கைநழுவி போய்விட்ட துக்கத்தில் கூக்குரலிட்டவள், பிறகு சிரித்துக் கொண்டே அவனை கையால் சாத்தினாள்.

இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த பாபிம்மா, “அய்யே.. என்ன சண்டை இது.. சின்ன புள்ளைங்க மாதிரி.. விடுங்க.. விடுங்க” என்று விலக்கிவிட்டார்.

“பாருங்க பாபிம்மா.. என்னோட ட்ரெஸ்ஸெல்லாம் போச்சு. இப்போ நா எந்த ட்ரெஸ்ஸை மாத்திக்குவேன்” - சிணுங்கினாள்.

“பாருங்க பாபிம்மா.. என்னோட முட்டையெல்லாம் போச்சு.. இப்போ நா எந்த முட்டையை சாப்பிடுவேன்” - அவளை போலவே பேசி நடித்துக் காட்டி அவளை இன்னும் வெறுப்பேற்றி அடிவாங்கி கொண்டான்.

“இனி நா ஒன்னும் செய்ய மாட்டேன்.. நீயே சமைச்சுக்க.. நா குளிக்க போறேன்.. பே” - பழிப்புக்காட்டி முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

“ம்கூம்.. அப்படியே சமைச்சுட்டாலும்..” - டேவிட்டின் கிண்டல் குரல் அவளை துரத்திக் கொண்டு வந்தது.

“போ.. போ.. போய்.. கிச்சனை க்ளீன் பண்ணு” - திட்டிக் கொண்டே போனாள் மிருதுளா.

அவளுடைய கோபத்தையும், உரிமையையும் ரசித்து அசைபோட்டபடி, உதவிக்கு வந்த பாபிம்மாவை ஒதுக்கிவிட்டு, அவள் குளித்துவிட்டு வருவதற்குள் சமையலறையை சுத்தம் செய்து கலக்கலான மதிய உணவை தயார் செய்து முடித்தான் டேவிட்.

***********************

துறுதுறுப்புதான் அவளுடைய அடையாளம். எதற்கும் கவலைப்படமாட்டாள். பட்டாம்பூச்சி போல் சிறகடித்துக் கொண்டே இருப்பாள். சிரிப்பற்ற அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் அவள் சிரிப்பதே இல்லை. சுமனுடைய இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று எண்ணி சங்கடப்பட்டான் மாலிக். அவளை பார்க்கும் பொழுதெல்லாம் மனசாட்சி குத்தியது.

பூஜாவிடம் சென்று உதவி கேட்டான். சுமனுக்கு தைரியம் கொடுக்க சொன்னான். அவளோடு நல்ல முறையில் நேரம் செலவழிக்க சொன்னான். சுஜித்தை சென்று பார்த்து வர சொன்னான். அவன் எப்போது மீண்டு வருவான்.. எப்போது அவனுடைய மனநிலை இயல்பாகும் என்று அவளை கேள்வியால் துளைத்தான்.

சுஜித் பூஜாவிற்கும் நல்ல நண்பன். அதோடு மாலிக்கின் மனநிலையும் அவளுக்கு நன்றாக புரிந்தது. எனவே தன் சக்திக்கு உட்பட்டு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தையும் நேர்மையாக செய்தாள். அதன் பலனாக சுமனை மன அழுத்தத்திற்குள் செல்லாமல் பாதுகாக்க முடிந்தது. அவளை சில வேலைகளில் ஈடுபடுத்தி அவளுடைய நேரத்தை பயனுள்ளதாக்க முடிந்தது.

அதோடு நிற்கவில்லை மாலிக். அர்ஜுன் வந்ததும் அவனிடம் பேசி சுமனுக்கு, அவளுடைய பழைய வேலையையும் கோர்த்தாவில் அவளுடைய உரிமைகளையும் திருப்பிக் கொடுக்கும் படி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.

************************

டின்னர் டேபிளை நேர்த்தியாக செட் செய்துக் கொண்டிருந்தான் டேவிட். மதிய உணவு சமைக்கும் பொழுது ‘மேகி’ பிடிக்கும் என்று மிருதுளா குறிப்பிட்டதை மனதில் வைத்துக் கொண்டு முறையான சைனீஸ் நூடுல்ஸ் ரெசிபியை முயற்சி செய்திருந்தான். அதை அவளுக்கு அழகாக ப்ரெசென்ட் செய்ய வேண்டும் என்பதற்காக உணவு மேஜையை, பூஜாடி வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரித்துக் கொண்டிருந்தான்.

“வரே..வா! அற்புதம்.. அற்புதம்! யாருக்காக இதெல்லாம் செஞ்சுக்கிட்டிருக்க?” - மிருதுளாவின் வருகை அவனை உற்சாகப்படுத்தியது.

“நிச்சயமா உனக்காக இல்ல” என்றான் சிரித்துக் கொண்டே.

“ஹேய்.. உண்மையை சொல்லு. வரட்டியா? கலியா? எதை கவர் பண்ண இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்க?” என்றபடி மேஜையிலிருந்த பீங்கான் பாத்திரங்களை திறந்து பார்த்தாள். சைனீஸ் நூடுல்சும் பொரித்த கோழியும் கமகமத்தது.

“அடப்பாவி! ரெகுலர் ரெசிபியே கொடுமையா செய்வ.. இதுல சைனீஸ் வேறயா! உண்மையை சொல்லு என்னை கொலை பண்ண எதுவும் திட்டம் போட்டுட்டியா?”

“ஆமான்னு சொன்னா சாப்பிடாம போய்டுவியா?”

“ஹிஹி.. அப்படியெல்லாம் போயிட முடியுமா? கொலையே பண்ணினாலும் நீ என் நண்பேன்டா!”

“நம்பிட்டேன்.. உட்கார்ந்து கொட்டிக்க” - வாய் மொழியில் மட்டும் தான் அலட்சியம். விருந்தோம்பலில் சேவகனாக மாறி அவளை மகாராணியாக பாவித்தான்.

டேவிட்டை மிருதுளாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.. நல்லவன்.. பாதுகாப்பானவன்.. பழக எளிமையானவன்.. அவள் மீது அன்பு கொண்டவன்.. அவனோடு கழியும் தருணங்கள் மிகவும் லேசானவை.. இனிமையானவை.

அர்ஜுன் அப்படி அல்ல.. அவனோடு இருப்பதும், பசித்த புலிக்கு பக்கத்தில் இருப்பதும் ஒன்று தான். அவ்வளவு பயமாக இருக்கும். எந்த நேரத்தில் கடித்துக் குதறுவான் என்றே தெரியாது. எதையும் வெளிப்படையாக பேச மாட்டான்.. முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது.. எப்போதும் கடுகடுவென்றுதான் இருப்பான். ஆனாலும் அவனிடம் கனிவை உணர்ந்திருக்கிறாள் மிருதுளா.. அவன் காட்டும் அக்கறையில் கரைந்திருக்கிறாள்.. அவன் பார்வையின் ஈர்ப்பை அவளால் முறிக்க முடிந்ததில்லை. கடுமையாய் கழியும் பொழுதில் கூட அவன் அருகாமை அவள் அடிவயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்கவிடும். எப்போதாவது லேசாக வளையும் அவன் உதட்டுச் சிரிப்பில் அவள் உள்ளம் துள்ளிக் குதிக்கும். இந்த அனுபவங்கள் வயது கோளாறாக இருக்கலாம். ஆனால் இந்த வயது கோளாறை அவள் வேறு யாரிடமும் உணர்ந்ததில்லை. இப்போது கூட அவன் நினைவாகவே உள்ளது. எப்போது வருவான்?

“டே..விட்” - பாதி உணவில் இருக்கும் போது ஜவ்வு மிட்டாய் போல் அவன் பெயரை இழுபறி செய்தாள்.

அந்த குரல் மாடுலேஷனை கேட்டதுமே அவனுக்கு புரிந்துவிட்டது. சொல்லித்தொலை என்பது போல், “ம்ம்ம்ம்” என்றான்.

“அர்ஜுன்கிட்டேருந்து.. மெசேஜ்.. கால்.. ஏதாவது?”

“ஏன்? ஏற்கனவே வாங்கினது பத்தலையா?” - வெடுக்கென்று கேட்டான்.

“என்ன..? என்ன வாங்கினேன்.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே” - சமாளிக்க முயன்றாள்.

“தெரியும் தெரியும் சாப்பிடு” - அவளுடைய முயற்சியை அசால்டாக முறியடித்துவிட்டு உணவில் கவனமாக இருப்பது போல் குனிந்து கொண்டான். அர்ஜுன் பெயர் அவள் வாயில் வந்தாலே எதையோ பறிகொடுக்கப் போகும் பயம் அவனை ஆட்கொண்டுவிடும். அதிலிருந்து மீண்டு வர சில நிமிடங்கள் பிடிக்கும். இருந்தும்கூட தன்னுடைய மனப்போராட்டத்தை இதுவரை அவளிடம் அவன் காட்டியதே இல்லை.

“என்ன தெரியும்? அர்ஜுன் ஒன்னும் உன் அளவுக்கு மோசம் இல்ல.. உன்கிட்ட வாங்கற முட்டையடியை விட அர்ஜுனோட முசுட்டுத்தனம் எவ்வளவோ பரவால்ல” - உதட்டை சுழித்தாள். உடனே டேவிட்டின் முகம் சிரிப்பில் மலர்ந்தது.

“நீ ரொம்ப ஒழுங்கு.. உன்கிட்ட வாங்கின கரண்டியடி எனக்குத்தானே தெரியும்.”

“ஏய்.. பொய்.. பொய்.. ஒரு அடி கூட வாங்கல.. வேணுன்னா இப்போ கொடுக்குறேன்” என்று கையிலிருந்த முள்கரண்டியை அவன் முகத்துக்கு நேராக நீட்டினாள்.

இம்மியளவும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்த டேவிட் அவள் நீட்டிய கரண்டியில் ஒட்டியிருந்த ஒரு துண்டு நூடுல்ஸை வாயில் எடுத்துக் கொண்டான். அந்த ஒரு கணத்தில் அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தை இனம் கண்டு கொண்ட மிருதுளா அதிர்ந்தாள். அவளுடைய தடுமாற்றத்தை டேவிட்டும் புரிந்துக்கொண்டான்.

திட்டமிட்டு செய்யவில்லை.. மனமெங்கும் வியாபித்திருந்த காதல் அவனை தடுமாறச் செய்துவிட்டது. ஒரு சின்ன தடுமாற்றம் அவர்களுக்குள் உள்ள இயல்பு தன்மையையே மாற்றிவிடுமோ என்று பயந்துவிட்டான். உடனே அதை சரி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில், “குத்த வந்தியா! ஊட்டிவிடறியோன்னு நெனச்சேன்.. சாரி” என்றான் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு. முரட்டு முகத்தில் அப்பாவி பாவம்.. கொஞ்சமும் பொருந்தாத அந்த முரண்பாடு மிருதுளாவின் முகத்தில் புன்னகையை கொண்டுவந்தது.

“ஆசைதான்.. இந்தா உன் எச்சியை நீயே வச்சுக்கோ. நா வேற ஃபோர்க் எடுத்துக்கறேன்” என்று விளையாட்டாக கூறுவது போல் கரண்டியை மாற்றிக் கொண்டு உண்ண துவங்கினாள். ஓரிரு நிமிடங்கள்தான் கழிந்திருக்கும்.. அழுத்தமான காலடி ஓசை அவர்கள் கவனத்தை ஈர்த்தது. இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்த்தார்கள். அர்ஜுன் ஹோத்ரா அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 33

திட்டப்படி அன்று இரவு சுக்லா, தன் பாதுகாப்பு குழுவோடு டெல்லியில்தான் தங்க வேண்டும். ஆனால் கழுவிய கை காயும் நேரத்திற்குள் அவருடைய பயணத்திட்டங்கள் அனைத்தும் திடீரென்று மாறிவிட்டது. காரணம் புரியாமல் திகைத்தவருக்கு விளக்கம் கேட்கும் அவகாசம் கூட கொடுக்கப்படவில்லை. அவருடைய மீட்டிங் நேரமாற்றம் செய்யப்பட்டு துரிதமாக முடிக்கப்பட்டது. அவர் மீட்டிங்கில் இருக்கும் நேரத்தில் புக் செய்யப்பட்டுவிட்ட விமான டிக்கெட்டுகள், மீட்டிங் முடிந்ததும் அவரை உடனடியாக விமான நிலையத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தன.

“என்னப்பா.. என்ன அவசரம்?” என்று பதறியவரிடம், “செக்கியூரிட்டி ரீசன்ஸ்” என்றதோடு வார்த்தையை கத்தரித்துக் கொண்டான் அர்ஜுன்.

இரண்டு மணி நேர வான்வழிப் பயணம்.. ஒடிசா மண்ணில் இறங்கியதும் சுக்லாவை பாதுகாவலர்கள் பொறுப்பில் அவருடைய மாளிகைக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஆழியிலிருந்து சுழன்றுக் கிளம்பி ஊருக்குள் வந்து மோதும் சூறாவளியை போல் அத்தனை வேகமாக மிராஜபாடாவில் வந்து மோதினான் அர்ஜுன் ஹோத்ரா.

காலடி ஓசையில் கவனம் ஈர்க்கப்பட்டு வாயில் பக்கம் திரும்பிய மிருதுளாவின் கண்கள் வியப்பில் விரிந்தன. டேவிட்டின் புருவம் சிந்தனையில் சுருங்கியது.

இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வர வேண்டியவன் இன்றே வந்துவிட்டதன் காரணம் என்னவாக இருக்கும் என்கிற சிந்தனையோடு, “ஹேய்.. அர்ஜுன்!” என்றான் டேவிட்.

அவனை சட்டைசெய்யாமல் மிருதுளாவின் முகத்தை பார்த்தபடியே உள்ளே வந்தான் அர்ஜுன்.

கடைசி நாள் அவள் உருகிக் கரைந்ததெல்லாம் மின்னல் போல் மனதில் தோன்றி மறைந்தது. போனில் கேட்டதெல்லாம் உண்மை அல்ல.. நாம்தான் தவறாக நினைத்து குழப்பிக்கொள்கிறோம் என்று வரும் வழியெல்லாம் உருப்போட்டுக் கொண்டே வந்தான். நமக்காக காத்திருப்பாள் என்கிற எதிர்பார்ப்பை இழுத்துப் பிடித்து வைத்திருந்தான். அனைத்தையும் சற்றுமுன் அவன் கண்ட காட்சி தரைமட்டமாக்கிவிட்டது.

‘அவள் ஊட்டுவதென்ன! அவன் வாயை பிளந்துக்கொண்டு வாங்குவதென்ன! ஹா..!’ - உள்ளே அரக்கன் ஒருவன் ருத்ர அவதாரமெடுத்து ஆடினான். இரத்தம் சீறிப்பாயும் வேகத்தில் நரம்புகளெல்லாம் புடைத்து முகம் சிவந்துவிட்டது. கண்களில் கனல் தெறித்தது. மிருதுளா துணுக்குற்றாள். அவனுடைய கோபத்திற்கான காரணத்தை துல்லியமாக உணர்ந்தவளுக்கு அவன் கண்களை சந்திக்க முடியவில்லை. உள்ளே ஒரே படபடப்பு.. மனசாட்சி குத்தியது.. அவசியமே இல்லாத பதட்டம்தான்.. டேவிட்டோடு அவள் தவறு செய்யவும் இல்லை.. அர்ஜுனோடு கமிட் ஆகவும் இல்லை.. அப்படியிருந்தும் அந்த பதட்டத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

பொங்கப்போகும் பெருங்கடல் உள்வாங்குவது போல உணர்வுகள் அனைத்தையும் உள்ளே அடக்கிக் கொண்டு அமைதியாக வந்து டைனிங் டேபிளில் அவளை உரசிக்கொண்டு அமர்ந்தான் அர்ஜுன்.

அத்தனை நாட்களும் அவனுக்காகவே காத்துக் கொண்டிருந்தவளுக்கு, அந்த நேரத்தில் அவனை வரவேற்பது என்ன.. நிமிர்ந்துப் பார்த்தது ஒரு ‘ஹாய்’ சொல்லக் கூட முடியவில்லை. திகைத்துப்போய், மெழுகு பொம்மை போல் அசைவற்று அமர்ந்திருந்தாள்.

“மிஸ்ட் மீ.. டார்லிங்?” – ‘டார்லிங்’ - ல் அழுத்தம் கொடுத்து தோளோடு தோள் இடித்து, நக்கலாக சிரித்தான்.

அவனுடைய ஏளன குரலும் மலிந்த பார்வையும் மிருதுளாவை காயப்படுத்தியது. கையிலிருந்த ஃபோர்க்கை அழுத்திப் பிடித்துக்கொண்டு, மேலும் கீழும் தலையசைத்து “எஸ்..” என்று காற்றுக்குரலில் கூறினாள்.

“ஆ..ங்..?” - அவளுடைய பதில் காதில் விழவில்லையாம். காதை அவள் வாயருகே கொண்டுச் சென்று கத்தினான்.

“ஐ.. மிஸ்ட் யு” - புன்னகைக்க முயன்றாள் மிருதுளா.

அவன் அவளிடம் காட்டும் நெருக்கமும்.. உரிமையும்.. அதற்கு அவளின் இசைவும், நெஞ்சுக்குள் கத்தியை இறக்குவது போல் இருந்தது டேவிட்டிற்கு. அவர்களிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு, “என்ன ஆச்சு அர்ஜுன்? திடீர்ன்னு வந்துட்ட?” என்றான் உணர்வற்ற குரலில்.

“ஏன்? ஏதாவது இடைஞ்சலா வந்துட்டேனா? அப்படியா மிருதுளா..?” - கோணல் புன்னகையுடன் புருவம் உயர்த்தினான். சுருக்கென்றது அவளுக்கு. அழுந்த மூடிய உதடுகளுக்குள் வலியை மறைத்துக் கொண்டாள்.

அவளுடைய முகவாட்டத்தில் சங்கடப்பட்டு, “இல்லல்ல.. முக்கியமான வேலையா போயிருந்தியே.. ஒரு வாரம் ஸ்கெடியூல்.. சீக்கிரம் வந்துட்டியேன்னு கேட்டேன்” என்றான் டேவிட்.

வெடுக்கென்று நிமிர்ந்தாள் மிருதுளா. ‘அர்ஜுனின் பயணத்தை பற்றி எதுவுமே தெரியாது என்றானே! சிரித்துக் கொண்டே இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்திருக்கிறான்!’ - மீண்டும் ஒரு முள் தைத்தது அவள் இதயத்தில்.

‘ஹெல்..’ - தன் குட்டு உடைபட்டு போய்விட்டதை உணர்ந்து கண்களை மூடி பெருமூச்சை வெளியேற்றிய டேவிட், மிருதுளாவை பாவமாக பார்த்தான். கண்கள் மன்னிப்பை இறைஞ்சின.

அரை நொடி பார்வை பரிமாற்றம் என்றாலும் அர்ஜுன் ஹோத்ராவின் கண்களிலிருந்து தப்பிவிடுமா என்ன? - நாசி விடைத்தது.. தாடை இறுகியது.. ரத்தத்தில் அழுத்தம் கூடியது.. – ‘இல்லை.. அல்ப உணர்வுகளுக்கு ஆட்பட்டு காரியத்தை கோட்டைவிட்டுவிடக் கூடாது’ - அறிவு எச்சரித்தது. நாற்காலியில் நன்றாக சாய்ந்து, கால்களை நீட்டி, தலையை பின்னுக்கு சாய்த்து, கண்களை மூடி அமர்ந்து சுவாசத்தை சீராக்க முயன்றான். ம்ஹும்.. பிரயோஜனமில்லை, மனநிலை மட்டுப்பட மறுத்தது.

“அப்பறம்? எனக்கு ஏதாவது செய்தி இருக்கா டேவிட்?” - கண்களை மூடிய நிலையிலேயே கரகரத்தான்.

“என்ன.. என்ன செய்தி?” - டேவிட்டிற்கு அவனுடைய கேள்வி புரியவில்லை.

“ஏதாவது நல்லது.. இல்ல.. கெட்டதாவது? ம்ம்ம்?” என்றபடி சட்டென்று நிமிர்ந்து அமர்ந்து அவனை நிலைத்துப் பார்த்தான். அவனுடைய பார்வையிலும் குரலிலும் தெரிந்த வித்தியாசம், அவன் வம்பை கொக்கிப்போட்டு இழுக்க முயல்கிறான் என்பதை எடுத்துக் கூறியது.

டேவிட் தணிந்தான். “இல்ல.. அப்படில்லாம் எதுவும் இல்ல” - அமைதியாக பதிலளித்தான்.

“குட்.. வெரி குட்” - எள்ளல் தெறித்தது.

அதை புறந்தள்ளி, “பாபிம்மா, அர்ஜுனுக்கு ஒரு பிளேட் கொண்டு வாங்க” என்று உள்நோக்கி குரல் கொடுத்தான் டேவிட்.

“ம்ம்ம்! ஸ்பெஷல் டின்னர்! ஏதாவது விசேஷமா.. இல்ல.. கொண்டாட்டமா?” - கேள்வியை டேவிட்டிடம் கேட்டுவிட்டு பார்வையை அவள் புறம் திருப்பி, ஏளனமாக சிரித்தான். அதற்குள் பாபிம்மா தட்டோடு வந்துவிட்டார்.

“வாங்க தம்பி.. நல்லா இருக்கீங்களா?”

“அடடே! பாபிம்மா, நீங்க வீட்லதான் இருக்கீங்களா! உங்களுக்கு லீவ் கொடுத்து அனுப்பிட்டானோன்னு நெனச்சேன்..” - பாபிம்மாவுடன் பேசும் போதும் கூட அவர்கள் இருவரையும் குத்த தவறவில்லை அவன்.

“இல்லைங்க தம்பி இங்கதான் இருக்கேன்.”

“உள்ளேயே என்ன பண்றீங்க? வேலை ஜாஸ்த்தியோ! சமையலெல்லாம் கலக்குறீங்க போலருக்கு!”

“டேவிட் தம்பிதான் வந்ததுலேருந்து சமைக்குது.. நா கூடமாட நிக்கிறதோட சரிங்க”

“ஓ! அப்படியா! ரியலி!” - மூவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு, “ராக் பண்ற மேன்.. இன்னும் என்னென்னலாம் பண்ணினான் மிருதுளா?” - இருபொருள்பட பேசினான். அவளுக்கு உயிரே போவது போலிருந்தது.

அர்ஜுனின் விளிம்புநிலை மனநிலை டேவிட்டிற்கு நன்றாகவே புரிந்து போய்விட, “சாப்பிடு அர்ஜுன்” என்று பொறுமையாக கூறியபடி அவனுக்கு பரிமாற எத்தனித்தான்.

“ஐம் ஃபுல் மேன்.. யு என்ஜாய். நீயும் தான் மிருதுளா.. என்ஜாய் யுவர் டின்னர்” - அவள் தட்டில் கூடுதலாக உணவை அள்ளி வைத்தான்.. வைத்தான்.. வைத்துக் கொண்டே இருந்தான். அத்தனை வெறுப்பிருந்தது அவன் செயலில்.

“போதும் அர்ஜுன்..” - நலிந்து ஒலித்தது அவள் குரல்.

“நோ நோ.. சாப்பிடும்மா.. உனக்காகத்தானே இதெல்லாம்.. நீ சாப்பிடு” - மேலும் மேலும் அவள் தட்டை நிரப்பினான். மது அருந்தியவன் போல் நிதானத்தை இழந்துக் கொண்டிருந்தான். ஏதோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த மிருதுளாவின் உடலில் நடுக்கம் பிறந்தது.

டேவிட் மிகவும் சங்கடப்பட்டான். மிருதுளாவின் முகவாட்டத்தை சகிக்க முடியவில்லை அவனால். வேறு வழியே இல்லாமல், “அர்ஜுன்” என்று அழுத்தமாக அழைத்து அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

“எஸ்” - பரிமாறுவதை நிறுத்திவிட்டு திரும்பினான். மிருதுளாவிற்கு ஆதரவாக பேசப் போகிறான் என்கிற எண்ணத்தில் கொடூரமாக மாறியது அவன் முகம். வாயைத்திற.. உன் முகரையை பெயர்த்துவிடுகிறேன் என்றது பார்வை.

“எல்லாத்தையும் அங்கேயே வச்சசுட்டா எப்படி? எனக்கும் வேணும்ல..” - மிருதுளாவிற்கு சாதகமாக வாய் திறந்தால்தானே என் முகரையை பெயர்ப்பாய் என்கிற எச்சரிக்கை இருந்தது அவனிடம்.

அர்ஜுனின் முகத்திலிருந்த கடுமை நக்கலாக மாறியது. “கம்மான் மேன்.. இவ்வளவு எஃபோர்ட்டும் மிருதுளாவுக்காகத்தானே.. லெட் ஹர் என்ஜாய்” - அவள் தட்டு நிறைந்து, நூடுல்ஸ் டேபிளில் நழுவிவிடும் போலிருந்தது.

“அர்ஜுன் ப்ளீஸ்” - டேவிட்.

“என்னடா?”

“என்ன பண்ற நீ?”

“தெரியல? சர்விங்..”

“அவளுக்கு போதுமாம்.. விடு”

நங்கென்று பாத்திரத்தை டேபிளில் போட்டுவிட்டு, “உன்கிட்ட சொன்னாளா?” என்று அமர்ந்திருந்த சேரை பின்னால் உதைத்து தள்ளிவிட்டு எழுந்தான். பயந்து போன மிருதுளா, “அர்ஜுன்-அர்ஜுன்.. அர்ஜுன்..” என்று தவிப்புடன் இருவருக்கும் இடையில் புகுந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைப்புடன் ஒதுங்கி நின்றார் பாபிம்மா.

டேவிட் எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை. அவனும் களம் கண்டவன் தானே.. அழுத்தமாக அமர்ந்திருந்த நிலையிலேயே, “என்கிட்ட சொல்லல அர்ஜுன்.. உங்கிட்ட சொன்னா.. உனக்குத்தான் காதுல விழல” என்றான்.

கொதிப்புடன், “அதுக்கு..? நீ இடையில புகுந்துடுவியாடா..?” என்று சீறிக் கொண்டு அர்ஜுன் அவனிடம் பாய, அடிதடியாக போகிறது என்று நடுங்கிப் போன மிருதுளா, “ஐயோ.. அர்ஜுன்.. ப்ளீஸ்..” என்றபடி என்று அவனை கட்டிப்பிடித்து டேவிட்டிடம் நெருங்கவிடாமல் தடுத்தாள். அட்டை போல் ஒட்டிக் கொண்டவளை தன்னிடமிருந்து பிய்த்து தள்ள முயன்றபடி, “பேசு.. ஸ்பீக் அவுட் யு டாஷிங் டாஷ்” என்று கட்டிடமே அதிரும் வகையில் கெட்ட வார்த்தைகளை உதிரவிட்டபடி அவன் சட்டையை பிடித்தான்.

“வி ஆர் ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் அர்ஜுன்.. ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ். அவ்வளவுதான்.. ப்ளீஸ்.. விட்டுடு. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. விட்டுடு. ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்” - அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் கத்தினாள். உடல் வெடவெடத்தது.. கண்ணீர் அவன் சட்டையை ஈரமாக்கியது.. அவன் உடல் இறுக்கம் மெல்ல தளர்ந்தது.

அடிபட்ட வேதனையுடன் முகம் சுருங்க தன் சட்டையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்ட டேவிட் நெஞ்சை நீவினான். அவன் நிச்சயமாக சட்டையின் சுருக்கத்தை நீவவில்லை.

தொலைந்து மீண்ட குழந்தை போல் உடல் நடுங்க அர்ஜுனின் மார்பில் முகம் புதைத்து, கண்களை இறுக்கமாக மூடியபடி, ‘ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்.. ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்..’ என்று மீண்டும் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டிருப்பவளை ஓரிரு நொடிகள் நிலைத்துப் பார்த்த டேவிட், டைனிங் டேபிளில் இருந்த தட்டை கோபத்துடன் விசிறியடித்துவிட்டு வெளியே சென்றான். இறுகிய முகத்தோடு அவளை தன்னிடமிருந்து விளக்கி தள்ளிவிட்டு உள்ளே சென்றான் அர்ஜுன். தலையை பிடித்துக் கொண்டு தளர்ந்து போய் அங்கேயே அமர்ந்தாள் மிருதுளா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 34

மேடும் பள்ளமும் நிறைந்த கரடுமுரடான பூமி, அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருக்கும் லட்சக் கணக்கான மரங்கள், குளிர்ந்த காற்று, சலசலக்கும் ஓடை, இயற்கையின் வாசம், கூவும் குயில், ஆடும் மயில், துள்ளி குதிக்கும் முயல், தாவி ஓடும் மான், கூடவே கொடூர மிருகங்கள்.. அனைத்தையும் உள்ளடக்கிய கம்பீரமான காடுதான் அவன். அர்ஜுன் ஹோத்ரா.. அவன் அர்ஜூனாக மட்டும் இருந்தால் அமைதியான ஓடை.. கூட ஹோத்ரா சேர்ந்துவிட்டால் ஆர்ப்பரிக்கும் ஆழி.. கட்டுப்படா காட்டுத்தீ.. ஆழம் பார்க்க எண்ணி காலை வைத்தாலோ, அழகாய் ஜொலிக்கிறதே என்று எண்ணி தலையை கொடுத்தாலோ காணாமல் போக வேண்டியதுதான் - பெருமூச்சுடன் புரண்டுப் படுத்தாள் மிருதுளா.

கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய் என்று சொல்லுவார்கள். இன்று அவன் கண்ட காட்சி சற்று எசகுபிசகானது தான் என்றாலும், அவளை தனியே அழைத்து அவன் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதற்கெல்லாம் அவனிடம் பொறுமை இல்லை. ‘ஆ-ஊ’ என்றால் துப்பாக்கியை வேறு எடுத்துவிடுகிறான்.

அன்று அவள் கண் எதிரிலேயே ஒருவனை குருவியை சுடுவது போல் சுட்டுப் பொசுக்கினானே! என்னதான் அவன், அவளை கொலை செய்ய முயன்றவனாக இருந்தாலும், அவனும் மனிதன் தானே! ஒரு மனித உயிரை பறிப்பதென்பது அவ்வளவு எளிதா! சிறு தயக்கம் கூட இல்லாமல் மரத்தை வெட்டி சாய்ப்பது போல் ஒரு நொடியில் அவனை மண்ணில் சாய்த்துவிட்டானே! - அன்று நடந்த சம்பவத்தின் பயங்கரத்தை இன்றுதான் முழுமையாக உணர்ந்தாள்.

‘எப்படி அந்த கொடூரத்தை புறந்தள்ளி.. அவனை மனதில் வரித்தோம்! கொலை என்பது அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா நமக்கு!’ - சுயஅலசலில் கிடைத்த பதில் அவளுக்கு உவக்கவில்லை.

அன்று இருந்த ஹைப்பர் மனநிலையில், ‘அவன் நமக்காக எதை வேண்டுமானாலும் செய்வான்.. கொலை கூட..’ என்று பெருமையாக எண்ணினாள். அவனுடைய செயலில் பாதுகாப்பை உணர்ந்தாள். ஆனால் இன்று அந்த உணர்வு அப்படியே தலைகீழாகிவிட்டது.

அன்று நடந்தது போலவே இன்றும் துப்பாக்கியை எடுத்துவிடுவானோ.. டேவிட்டை ஏதேனும் செய்துவிடுவானோ என்று துடித்த துடிப்பு இன்னும் அடங்கவில்லை அவளுக்கு - உடல் சிலிர்த்துத் தூக்கிப் போட பொசுக்கென்று எழுந்து அமர்ந்தாள். மன உளைச்சல் உறக்கத்தை ஓடஓட விரட்டிவிட்டது.

அந்த கொலை அவளுக்காகத்தான் நடந்தது என்றாலும் அது அவன் உணர்வின் உச்சத்தில் நடந்துவிட்ட ஒரு அசம்பாவிதம் அல்ல.. அவனுடைய வழக்கமே அதுதான்.. அவனுடைய தொழிலே அதுதான் என்பதை, அறிவைத் தாண்டி இன்று அவள் மனமும் உணர்ந்தது.

‘அர்ஜுனின் உலகம் வேறு.. நம்முடைய உலகம் வேறு.. இரண்டும் ஒன்று சேர முடியாது. நாம் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம்’ - உண்மை உள்ளத்தை நெருஞ்சிமுள்ளாக குத்தியது.

‘இது சரிவராது.. நிச்சயம் சரிவரவே வராது..’ - மொத்தமாய் குழம்பிப்போனவள் விருட்டென்று கட்டிலிலிருந்து எழுந்து மின்விளக்கின் விசையை அழுத்தினாள். அறையில் படர்ந்த வெளிச்சம் அவள் மனதில் படரவில்லை.

ஏதேதோ சிந்தனையுடன் அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்தவளுக்கு நாவறண்டது. தண்ணீர் பாட்டில் காலியாக இருந்தது. நடந்த களோபரத்தில் அருந்த தண்ணீர் கூட எடுத்து வரவில்லை என்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. நிமிர்ந்து சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. அர்ஜுனோ டேவிட்டோ விழித்திருக்க வாய்ப்பில்லை என்கிற தைரியத்துடன் அறையிலிருந்து வெளியேறினாள். விடிவிளக்கின் வெளிச்சம் தெளிவாக வழிகாட்ட கூடத்தை தாண்டி சமையலறைக்குள் நுழைந்தாள்.

கையிலிருந்த பாட்டிலை உயர்த்திப்பிடித்து பில்டரை திறந்துவிட்டாள். தண்ணீர் விழும் சத்தம் சூழ்ந்திருந்த நிசப்தத்தை கிழித்து அறையை நிறைத்தது. அவள் அந்த கவனத்தில் இருக்கும் வேளையில் திடீரென்று யாரோ அவள் பின்னாலிருந்து இடுப்பை வளைத்துப் பிடித்து, கழுத்துவளைவில் முகம் புதைத்தார்கள்.

அதிர்ந்து போன மிருதுளா, “ஹே.. யாரு..” என்றபடி துள்ளிக்குதிக்க அவள் கையிலிருந்த பாட்டில் தரையில் விழுந்து தண்ணீர் தெறித்தது சிதறியது.

“ஷ்ஷ்ஷ்.. காம் டௌன் ஹனி.. நான்தான்” - மிகச் சாதாரணமாக காதோரம் கிசுகிசுத்தது அந்தக் குரல். அர்ஜுன் ஹோத்ராவின் குரல்.

அதுவரை துள்ளித் திமிறிய மிருதுளா மெல்ல அடங்கினாள். சற்று நேரத்திற்கு முன் உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தது.. மூளையை கசக்கியது.. சிந்தித்து குழம்பியது.. சுய அலசல் செய்தது.. எதுவுமே அவள் நினைவிற்கு வரவில்லை.

“அ..ர்..ஜுன்..!” - நடுக்கத்துடன் காற்றாய் வெளியேறியது அவள் குரல்.

அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக அணைப்பில் இறுக்கமும், மூச்சுக்காற்றில் வேகமும் கூடியது. மிருதுளாவின் பெண்மை விழித்துக் கொண்டது.

“அ..அர்ஜுன்.. ப்ளீஸ்.. என்ன.. என்ன இது..” - திக்கித் திணறியபடி திமிறினாள். முன்பக்கம் கிட்சன் கவுண்டர், பின்பக்கம் அர்ஜுன்.. விலக வழியில்லாமல் சிறைபட்டுப் போனவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.

“விடுங்க.. ப்ளீஸ் அர்ஜுன்.. லீவ்.. மீ..” - சிக்கிக் கொண்ட வார்த்தைகளை தொண்டைக் குழியிலிருந்து பிடுங்கி வெளியே எறிந்தாள். குரல் நடுங்கியது.. உடல் வெடவெடத்தது.

“ஸ்டே காம் ஹனி.. ப்ளீஸ்..” - கரகரத்த அவன் குரலில் என்ன இருந்தது! கெஞ்சலா! - மூளை செய்த ஆராய்ச்சியில் மீண்டும் அவள் எதிர்ப்பு சற்று குறைந்து போக, கழுத்து வளைவிலும் காது மடலிலும் சூடான மூச்சுக்காற்றையும் சின்ன ஈரத்தையும் உணர்ந்து வெலவெலத்து போனாள்.

உடலின் சக்தியெல்லாம் வடிந்துவிட்டது.. கால்கள் வலுவிழந்து துவண்டன.. நெஞ்சே வெடித்துவிடும் போல் இதயம் அடித்துக் கொண்டது.

“அ..ர்..ஜு..ன்..” - அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவனுடைய இதழ்கள் எல்லை மீறின. தடுக்க முடியாமல் தளர்ந்தாள் மிருதுளா.

“ஐம் சாரி.. ஐம் சாரி.. வெரி சாரி” - இதழொற்றல்களுக்கு இடையே முணுமுணுத்தான். தொண்டை அடைத்துக் கொண்டது போல்.. கறகறப்பது போல்.. அழுகிறானா! - நம்ப முடியாத ஆச்சரியத்துடன், அவன் கைவளைவில் இருந்தபடியே ஒருவாறு அசைந்து முன்பக்கம் உடலை திருப்பி அவன் முகத்தை பார்க்க முயன்றாள். காட்ட மறுத்து மீண்டும் அவள் கழுத்துக்குள் புதைந்துக் கொண்டான்.

அப்போதுதான் அவள் இன்னொன்றையும் உணர்ந்தாள். அவன் வெறும் சபலத்தில் அவளை கட்டிக்கொண்டிருப்பது போல் தோன்றவில்லை. எதற்காகவோ உணர்ச்சிவசப்பட்டவன் போல் தெரிந்தான். ஆத்திரம் அடைப்பது போல் தொண்டை கூட கரகரத்ததே! என்னவாக இருக்கும்? நம் சம்மந்தமாகதான் எதையாவது கற்பனை செய்துக் கொண்டு மனதை குழப்பிக் கொள்கிறானா! - அதுவரை அவனிடமிருந்து விலகும் நோக்கத்தோடு திமிறிக் கொண்டிருந்தவள், மெல்ல கைகளை அவன் முதுகில் படரவிட்டு அவனை அரவணைத்துக் கொண்டாள்.

“அர்ஜுன்..” - மெல்லிய குரலில் அழைத்தாள்.

“ப்ளீஸ் ஹனி.. எதுவும் பேசாத.. ஜஸ்ட் ஸ்டே காம்” வார்த்தைகள் தடுமாற சற்று குளறலாக கூறியபடி அவளோடு மேலும் ஒண்டிக்கொண்டான்.

ஏதோ தாயின் அணையில் பிணங்கிக்கொள்ளும் குழந்தை போல் இருந்தது அவனுடைய செய்கை. மெல்லிய புன்னகையுடன் அவன் முதுகை மெல்ல மெல்ல வருடி, பின்னந்தலையை கோதினாள் மிருதுளா. அவனுடைய இறுக்கம் மெல்ல தளர்ந்தது.

“அர்ஜுன்..” - மீண்டும் அழைத்தாள்.

“ம்ம்ம்” - முனகலாக ‘ம்ம்ம்’ கொட்டினான்.

“ஆர் யு ஓகே?”

“நோ”

“என்ன ஆச்சு?”

“ஐம் கன்ஃபியூஸ்ட்.. டிஸ்டர்ப்ட்..” (நான் குழம்பிப் போயிருக்கிறேன்.. என்னுடைய அமைதி குலைந்து போயிருக்கிறது) என்றான் துக்கத்துடன்.

மிருதுளாவிற்குள் சின்னதாய் ஓர் அதிர்வு தோன்றியது. அவனால் தான் பட்ட மனவேதனை.. அவன் நடந்துக்கொண்ட விதம் அனைத்தும் மறந்து போனவளாக, என்னால தானே?” என்றாள் வருத்தத்துடன்.

அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்துவிட்டது.. அதை அவளால் உணர முடிந்தது.

அவன் துன்பத்தை தனதாக உணர்ந்தவள், “பார்க்கறதெல்லாம் உண்மை ஆயிடுமா அர்ஜுன்? ஐ கேன் எக்ஸ்பிளைன்” என்றாள் அமைதியாக.

“நோ.. நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என்றபடி மெல்ல அவளிடமிருந்து விலகினான் அர்ஜுன். பார்வை அவள் முகத்தில் நிலைத்திருந்தது. அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முகம் ஜிவு-ஜிவுவென்று சிவந்திருந்தது.. கண்கள் மிதந்தன.. குடித்திருக்கிறானா! ஆமாம் தான் போலிருக்கிறது.. ஏதோ வாடை கூட வந்ததே! - அவள் விழிகள் பெரிதாக விரிந்தன.

‘கொலையே செய்கிறவன் குடிக்க மாட்டானா?’ என்கிற எண்ணம் அவளுக்கு தோன்றவே இல்லை. இதுவரை அவன் புகை பிடித்தோ போதையில் இருந்தோ அவள் பார்த்ததே இல்லை.. அதனால்தான் அந்த வியப்பு.

அவளுடைய விரிந்த கண்களையும், ‘ஓ’வென்று பிளந்த வாயையும் பார்த்து புன்னகைத்த அர்ஜுன், “நீ ரொம்ப அழகு மிருதுளா” என்றான்.

அவள் முகத்தை நாணம் மேலும் அழகாக்கியது. அதை ஆசையோடு பார்த்தவனின் முகம் ஏதோ நினைவில் வாடியது. பிறகு, “இது உன்னோட உலகம் இல்ல.. போயிடு..” என்றான் நிதானமாக.

“என்ன!” - அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

விளக்கம் கொடுக்க முடியாமல் உதடுகளை அழுந்த மூடினான். முகத்திலிருந்த உணர்வுகளெல்லாம் வடிந்து.. உடல் விறைத்து நிமிர, ஏதோ கல்லில் செய்த சிலை போல் தோற்றமளித்தான். மிருதுளா அவனை புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க அவன் வாய் திறந்தான்.

“இப்போ.. இந்த நிமிஷம் நா உனக்கு ஒரு சான்ஸ் தரேன் மிருதுளா. நீ என்கிட்டேருந்து விலகி போயிடு.. தப்பிச்சு போயிடு.. இதோ.. இங்க.. பக்கத்து ரூம்ல தான் டேவிட் தூங்கறான். அவனை எழுப்பி கூட்டிட்டு போ.. உன் அம்மாகிட்ட.. இல்ல அப்பாகிட்ட.. எங்கேயாவது.. நா உன்ன ஃபாலோ பண்ணி வரமாட்டேன். போயிடு.. என் மனசு மாறுறதுக்குள்ள போயிடு” - படபடவென்று வார்த்தைகளை கொட்டியவன் அவளிடமிருந்து பார்வையை விளக்கி முகத்தை திருப்பிக் கொண்டான்.

மிருதுளா அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். ‘நிஜமாகவே நமக்கும் டேவிட்டிற்கும் ஏதோ சீரியஸான ரிலேஷன்ஷிப் என்று நினைத்துவிட்டானா!’ - ஏனோ அந்த எண்ணமே அவளை வதைத்தது.

சுற்றிவந்து அவனை நேருக்கு நேர் பார்த்தாள். “டேவிட் என்னோட ஃபிரண்ட்.. ஜஸ்ட் ஃபிரண்ட். புரியில உங்களுக்கு?” என்றாள் ஆத்திரத்துடன்.

அவன் சிரித்தான்.. உயிர்ப்பற்ற சிரிப்பு. “எனக்கு தெரியும் மிருதுளா.. நீ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல” என்றான்.

உண்மைதான்.. ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு பழகும் மட்டரகமான பெண் மிருதுளா அல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் டேவிட்டோடு அவளை மகிழ்ச்சியாக பார்க்கும் போது அவனுக்கு கோபம் வந்தது. கட்டுப்படுத்த முடியாத கோபம்.. - பெருமூச்சு விட்டான்.

“அப்புறம் ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” - கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தப்பித்து ஓடாமல் குழந்தை போல் எதிர்கேள்வி கேட்டுக் கொண்டு அவள் நின்ற விதம் வழக்கம் போல் அவனை வசீகரித்தது.

கனிந்த முகத்துடன் அவளிடம் நெருங்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு கண்களுக்குள் பார்த்து, “யு ஆர் எ பியூட்டிஃபுல் ஸோல். நா உன்ன புண்படுத்த விரும்பல.. நீ காயப்படறதை பார்க்க விரும்பல.. போயிடு..” என்றான்.

அவன் கண்களில் தெரிந்த வலி மிருதுளாவை மொத்தமாய் சாய்த்துவிட்டது. அவள் சிந்தனையை மழுங்கடித்துவிட்டது.

‘உன்ன புண்படுத்த விரும்பல.. நீ காயப்படறதை பார்க்க விரும்பல’ என்று சொல்கிறானே.. அப்படியென்றால் காயப்படுத்தும் நோக்கம் இருக்கிறதா என்கிற கேள்வியே அவளுக்குள் எழவில்லை. அதுமட்டுமல்ல.. பெற்ற தாயை கூட அவள் நினைக்கவில்லை. ஹிப்னாட்டிஸத்தில் சிக்கிக்கொண்டவள் போல் அவனைத்தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாதவளாக, “நோ.. நா எங்கேயும் போகல..” என்றாள் அடத்துடன்.

அர்ஜுனின் பார்வை அவள் முகத்தில் அழுத்தமாக பதிந்தது. “வெறும் வார்த்தைக்காக என்கிட்ட எதையும் சொல்லாத.. உன்னோட ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு சத்தியம்” - உறுதியாகக் கூறினான்.

“சத்தியம் தான்.. எனக்கு உங்களை விட்டு எங்கேயும் போக வேண்டாம்.”

“நல்லா யோசிச்சுக்கோ மிருதுளா.. பிறகு நீயே போகனும்னு நினைச்சாலும் முடியாது. என்னால உன்ன விட முடியாது.. விட மாட்டேன்” - ஒருவித பிடிவாதத்துடன் கூறினான்.

மேலும் கீழும் தலையசைத்து சம்மதம் என்றாள். அவனுக்கு அந்த பதில் போதுமானதாக இல்லை.

“வாய்விட்டு சொல்லு.. என் கூட இருப்பியா?”

“எஸ்”

“கடைசி வரைக்கும்..?”

“எஸ்”

“என்ன பிரச்சனை வந்தாலும்?”

“எஸ்”

“இன் வர்ட்ஸ்”

“என்ன பிரச்சனை வந்தாலும்.. கடைசி வரைக்கும்.. உங்கக் கூடவே.. இருப்பேன். ஹாப்பி..?” - பல்வரிசை பளீரிட அழகாகச் சிரித்தாள்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 35

விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது. படுக்கையிலிருந்து எழவே மனமில்லை அவனுக்கு. நேற்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நினைவுகளாக அசைபோட்டபடி படுத்திருந்தான். இந்த சோம்பல் புதிது.. சிந்தனை புதிது.. முடிவுகள் புதிது.. மிருதுளா! - பெருமூச்சுடன் எழுந்து கண்ணாடிக்கு முன் வந்து நின்றான்.

நேற்று அருந்திய மதுவின் தாக்கம், வீங்கியிருந்த அவன் முகத்தில் இன்னும் மிச்சமிருந்தது. மேல் சட்டை அணியாத அவன் அகண்ட மார்பில் இடதுபுறமிருந்த அந்த வட்டத் தழும்பில் பதிந்தது அவன் பார்வை. வலது கை தானாக உயர்ந்து அந்த தழும்பை தொட்டு வருடியது.. முகம் உணர்வுக்குவியலாய் மாறியது.. அந்த குண்டு இன்னும் இரண்டு இன்ச் இறக்கி பாய்ந்திருந்தால் அன்றே அவன் உயிர் பிரிந்திருக்கும். விதி! யார் கையால் யார் சாக வேண்டும் என்று இருக்கிறதல்லவா? - ஏளனச் சிரிப்பில் உதடு வளைந்தது.

சில வருடங்களுக்கு முன் நடந்த அந்த தாக்குதலுக்குப் பிறகு குடிக்கவே கூடாது என்கிற முடிவை எடுத்திருந்தான். நேற்று அவன் முடிவு தகர்ந்துவிட்டது.

அசோசியேட்ஸை பயன்படுத்திக்கொள்வதும் பிறகு வேலை முடிந்ததும் வெட்டிவிடுவதும் இயல்பு.. அப்படித்தான் அவளை பயன்படுத்திக்கொள்ள விரும்பினான். அந்த எல்லையில்தான் அவளை வைத்திருக்க நினைத்தான். ஆனால் அது நடக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் அவனுடைய சிந்தனைகளும் செயல்களும் ஒருங்கிணைய மறுத்து முரண்பட்டுக் கொண்டே இருந்தன. காரணம் அவள்.. மிருதுளா!

எப்போது? எப்படி? - எதுவும் புரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே சிறிது சிறிதாக அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். நேற்றுதான் முழுமையாக உணர்ந்தான். உணர்ந்த விஷயம் அப்படி ஒன்றும் மகிழ்ச்சிக்குரியதல்ல.

சுயத்தை இழக்கிறோமே என்கிற எச்சரிக்கையும்.. இழக்கச் செய்கிறாளே என்கிற கோபமும் தான் வந்தது. சரி, ஆரம்பத்திலேயே அவளை ஒதுக்கிவிடலாம் என்று எண்ணினான். எண்ணமே பெரும் பாரமாய் அவனை அழுத்தியது. வருடக்கணக்கில் தொடாமல் தள்ளி வைத்திருந்த மதுவை மீண்டும் கையில் எடுத்தான்.

எதிர்பார்த்த அளவுக்கு போதையும் பெரிதாக உதவிடவில்லை. மதுவின் தாக்கத்தில் மனம் திடப்படுவதற்கு பதில் மேலும் நெகிழத்தான் செய்தது. அப்படியும் அவன் நினைத்ததை செய்தான். விலகிச்செல்ல அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தான். அவள் மறுத்துவிட்டாள். இறுதிவரை விலகமாட்டேன் என்று வாக்கும் கொடுத்துவிட்டாள். ஆஹா! எத்தனை சுலபமாக சுவாசிக்க முடிகிறது! மூச்சுக்காற்றை சுதந்திரமாக உள்ளிழுத்து வெளியேற்றியபடி மீண்டும் மீண்டும் அவளிடம் உறுதி செய்து கொண்டான். இனி அவளால் பின்வாங்க முடியாது.. அதற்கு அவன் விடப்போவதும் இல்லை.. இனி அவன் கட்டுக்குள் - அவன் விருப்பப்படி அவள் - மகிழ வேண்டிய மனம், ஏனோ எதிலோ சிக்கிக் கொண்டது போல் முரணாக உணர்ந்தது. தலையை உலுக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றவன் சற்று நேரத்தில் டிராக் சூட்டுடன் வெளியே வந்தான்.

அவன் அறையிலிருந்து வெளியேறிய போது பாபிம்மா எதிர்பட்டார். “எழுந்துக்க லேட் ஆயிடிச்சுங்களா தம்பி.. சாப்பாடு எடுத்து வைக்கவா?” - அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல தோன்றாமல் விழிகளை சுற்றும் முற்றும் சுழலவிட்டவன், “மிருதுளா எங்க?” என்றான்.

“தண்ணி பக்கம் போயிருக்கும். அங்கதான் அதுக்கு பிடிக்கும்.”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே வந்துவிட்டான். தூரத்தில் கடல் போல் பரந்திருக்கும் ஏரியில், குளிர்காற்றையும் காலை வெயிலின் மிதமான வெப்பத்தையும் உள்வாங்கியபடி, முழங்கால் நனையும் வரை நீருக்குள் செல்வதும் வெளியே வருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளை பார்த்த கணத்திலேயே அவன் முகத்தில் எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டது புன்னகை.

“ஹேய்..” - அவனுடைய ரசனையில் குறுக்கிட்ட குரலுக்கு சொந்தக்காரன் வேறுயாருமல்ல.. டேவிட் தான்!

திரும்பிப் பார்த்தான் அர்ஜுன். வியர்வையில் நனைந்த ஆடையுடன் அவன் எதிரில் நின்றான் டேவிட்.

நேற்றுவரை மிருதுளாவை விட்டு இம்மியும் அசையாமல் அடைகாத்தவன் இன்று அதிகாலையிலேயே ஜாகிங் சென்றுவிட்டான்.

முதல் நாள் இரவு உணவின் போது நடந்த சம்பவத்திற்குப் பிறகு கோபமாக வெளியேறியவன் திரும்பி வந்த போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. அர்ஜுன் வெளி வராண்டாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் உள்ளே வந்துவிட்டான் டேவிட்.

அர்ஜுன் எத்தனையோ குரூரமான சம்பவங்களை பார்த்திருக்கிறான். கொடூரமான கொலைகளை செய்திருக்கிறான். அப்போது கூட உறக்கத்திற்காக என்று சிறிதளவில் கூட மதுவை நாடாமல் உறுதியோடு இருந்தவன் இன்று இப்படி குடிக்கிறான் என்றால் மிருதுளா அவனை எந்த அளவுக்கு பாதிக்கிறாள் என்பதை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதே சமயம் அவனுடைய நோக்கமும் சரியில்லாதது போல் தோன்றுகிறது. இவன் மிருதுளாவை என்ன தான் செய்ய காத்திருக்கிறான் என்று எண்ணியவனுக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது.

போதையில் இருப்பதால் உறங்கிக் கொண்டிருப்பவளை எழுப்பி கூட ஏதேனும் தொந்தரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதற்கும் அவன் உறங்கும் வரை கண்ணை மூட கூடாது என்கிற முடிவோடு, உறங்குவது போன்ற பாவனையில் விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு வெளியே அமர்ந்திருக்கும் அர்ஜுனை நோட்டம்விட்டபடி இருட்டில் அமைதியாக அமர்ந்திருந்தான் டேவிட்.

அந்த நேரத்தில்தான் மிருதுளா சமையலறை பக்கம் போனாள்.

‘இவள் இன்னும் உறங்காமல் என்ன செய்கிறாள்!’ - பகீரென்றது அவனுக்கு. அர்ஜுன் இவளை பார்த்துவிடக் கூடாதே என்கிற பதட்டத்தோடு அமர்ந்திருந்தவனுக்கு ஏமாற்றம் தான் கிட்டியது. அர்ஜுன் அவளை கவனித்துவிட்டான். கவனித்தோடு நிற்காமல் அவளை பின்தொடரவும் செய்தான்.

அதற்கு பிறகும் அவனால் இருளுக்குள் பதுங்கியிருக்க முடியுமா என்ன.. வெளியே வந்தான். ஆனால் அவன் சமையலறையை அடைவதற்கு முன்பே அர்ஜுன் மிருதுளாவை பின்னாலிருந்து அணைத்திருந்தான்.

திடுக்கிட்டுப்போன டேவிட், வந்தது வரட்டும் என்று எண்ணி அவனை துவம்சம் செய்ய துணிந்துவிட்டான். ஆனால் மிருதுளாவின் எதிர்வினை அவனை செயலற்ற நிலைக்குத் தள்ளியது.

அவள் அர்ஜுனை எதிர்க்கவே இல்லை.. தெரிந்த விஷயம்தான்.. அவளுக்கு அர்ஜுனின் மீது பிரியம்.. ஆனால் அதை நேரில் பார்க்கும் போது.. அதுவும் இப்படி பார்க்கும் போது அவனால் தாங்க முடியவில்லை. நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போல்.. அலற வேண்டும் போலிருந்தது.. அந்த உணர்வு விடியும்வரை குறையவேயில்லை.

ஓடி களைத்து திரும்பி வந்திருக்கிறான். இப்போதும் கூட உள்ளுக்குள் ஒரு வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நேற்று இரவு போல் மரண வலி இல்லை. சமாளித்துக்கொள்ளும் அளவிற்கு குறைந்திருந்தது. அதனால் தான் அர்ஜுனை அவனால் இயல்பாக எதிர்கொள்ளவும் முடிந்தது.

“மாலிக் கால் பண்ணியிருந்தான். நீ எங்க இருக்கேன்னு கேட்டான். உன்கிட்ட பேசணுமாம்” - டேவிட்.

“ம்ம்ம்.. புது நம்பர் மாத்திட்டேன். என்ன விஷயம்னு சொன்னானா?”

“சொல்லல.. ஆனா சுமன்.. இல்லன்னா சுஜித் சம்மந்தப்பட்ட விஷயமா இருக்கலாம்னு நினைக்கிறேன்” என்றான் தன்னுடைய ஊகத்தை.

அதற்கு பிறகு சற்று நேரம் இருவரும் சுஜித்தை பற்றியும் தொழில் தொடர்பான மற்ற சில விஷயங்களை பற்றியும் பேசினார்கள்.

தனிப்பட்ட முறையில் இருவருக்கும் மனத்தாங்கல் இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் ஒன்றுபட்டுவிடுவார்கள். அந்த தொழில் பக்தி தான் இப்போதும் அவர்களுக்கிடையில் பாலம் போட்டது.

பேச்சு முடிந்து டேவிட் விலகி வீட்டுக்குள் சென்ற பிறகு மிருதுளாவிடம் நெருங்கினான் அர்ஜுன். இப்போது அவள் அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காமல் போனை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

“என்ன பண்ணிக்கிட்டிருக்க?” - பூனை போல் வந்து திடீரென்று பின்னாலிருந்து பேசினான்.

திடுக்கிட்டு திரும்பியவள், “ப்பா.. இப்படித்தான் பயமுறுத்தறதா?” என்றாள் கடிந்துகொள்ளும் விதமாக.

சிரித்தவன், “என்ன பண்றேன்னு கேட்டேன்?” என்றான் மீண்டும் அழுத்தமாக.

“அம்மாவுக்கு ட்ரை பண்ணலாம்னு பார்த்தா சிக்னல் இல்ல.”

“சரி, நம்பர் சொல்லு” என்றபடி தன்னுடைய போனை எடுத்தான்.

“உங்க போன்ல டவர் இருக்கா!”

“சேட்டிலைட் போன். நம்பரை சொல்லு” - அதட்டி வாங்கி அவள் அன்னைக்கு முயன்று பார்த்துவிட்டு, “சுவிட்ச் ஆஃப்” என்றான்.

அவள் முகத்தில் கவலை சூழ்ந்தது. “என்ன ஆச்சுன்னு தெரியல.. ஏன் போன் ஆஃப்லேயே இருக்குன்னு தெரியல.”

“ஒன்னும் ஆயிருக்காது. டோன்ட் ஒர்ரி. சீக்கிரமே நீ உன் அம்மாவை பார்க்கலாம்” என்றபடி அவள் தோள் மீது கை போட்டு அருகே இழுத்துக் கொண்டான். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. அவன் கையணைவில் இன்னும் அணைந்து கொண்டாள்.

அவளுடைய தாய் எங்கிருக்கிறாள்.. என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்கிற விபரத்தையெல்லாம் கேட்டான். அவளும் அவனுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னாள். இன்னும் ஏதேதோ பேசியபடி, பாதம் நனையும் அளவிலான தண்ணீரில் கரையோரமாகவே நடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

“எங்க போறோம்?”

“சும்மா.. அப்டியே ஒரு வாக்” - அவனோடு சேர்ந்து நடப்பது அவளுக்கும் சுகமாகத்தான் இருந்தது.

ஒரு மணி நேரம் ஒரு நொடி போல் கரைந்துவிட்டது.

“ரொம்ப தூரம் வந்துட்டோம். திரும்பிடலாமா?” - மிருதுளா.

“இல்ல.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. வா என்கூட” - இன்னும் சற்று தூரம் அழைத்துச் சென்றான். அங்கே படகு நிறுத்தத்தில் இருந்த ஒரு படகில், “ஏறு” என்று அவளை கைப்பிடித்து ஏற்றிவிட்டு அவனும் ஏறினான். பார்க்க மீன் பிடி படகு போல் தெரிந்தது. வலை கூட இருந்தது.

படகில் அவர்களை தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டு, “போட்-மேன் எங்க?” என்றாள்.

“உன் கண்ணு முன்னாலதானே இருக்கேன்.”

“ஆங்!”

“ஏன்? இப்படி கண்ணை விரிக்கிற?” என்றபடி இன்ஜினை ஸ்டார்ட் செய்தான்.

“சீரியஸ்லி! என்னை உயிரோட கரைக்கு கொண்டு போய் சேர்த்துடுவீங்களா?”

அவன் சிரித்துவிட்டு, “அந்த லைப் ஜாக்கெட்டை எடுத்து போடு” என்றான். சொன்னபடியே அவள் செய்ததும், “வா இப்படி” என்று அழைத்து படகின் திருப்பங்கள் மற்றும் அசைவுகளை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், முன்னோக்கி பின்னோக்கி செலுத்துவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தான். படகு பாதுகாப்பான பகுதியை அடைந்த போது அவளை முயற்சி செய்து பார்க்க சொன்னான்.

புது அனுபவம் பேரின்பமாக இருந்தது அவளுக்கு. கார் ட்ரைவ் செய்வது போலத்தான் இருந்தது. ஆனால் படகின் அசைவுகளை கட்டுப்படுத்தும் போது, ஏதோ தானே நீரில் மிதப்பது போன்றதொரு உணர்வு அவளை சிலிர்க்கச் செய்தது.

“வாவ்! சூப்பர்.. ஆஸம்” என்று அவனை பாராட்டிக் கொண்டே அவனுடைய வழிகாட்டுதலின் படி படகை செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சந்தோஷத்தையும் தாண்டி சிறு களைப்பு தெரிந்தது. அப்போதுதான் அவனுக்கு அந்த சந்தேகம் வந்தது.

“மார்னிங் சாப்பிட்டியா?”

“ம்ம்ம்” - முணுமுணுத்தாள். சாப்பிடுவதாக பெயர் பண்ணியது என்னவோ உண்மைதான். ஆனால் அவள் சரியாக உண்ணவில்லை. காலை எழுந்ததிலிருந்து அர்ஜுன், டேவிட் இருவரையுமே பார்க்க முடியவில்லை.. நேற்றைக்கு பிறகு அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும்.. என்று ஏதேதோ சிந்தனைகளில் அவளுக்கு உணவு இறங்கவில்லை. இப்போது பசிக்க துவங்கிவிட்டது. அதை அவனிடம் சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டு ‘ம்ம்ம்’ என்று முணுமுணுத்தாள்.

அவள் சொல்லவில்லை என்றாலும் அவளுடைய பசியை அவன் புரிந்துக்கொண்டான். படகை நடு ஏரியிலேயே நிறுத்திவிட்டு, பாட்டிலில் இருந்த குடிநீரை எடுத்து அவளுக்கு பருகக் கொடுத்தவன், வலையை எடுத்து தண்ணீரில் விசிறிவிட்டான்.

பத்து நிமிடத்தில் மீண்டும் வலையை சுருக்கி எடுத்தான். உள்ளே மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. படகில் இருந்த வாளி ஒன்றில் தேவையான அளவு மீன்களை அள்ளிப் போட்டுக் கொண்டு மீதியை தண்ணீரிலேயே வீசியெறிந்துவிட்டு, கத்தியை எடுத்து பரபரவென்று மீன்களை சுத்தம் செய்தான். ஏரி தண்ணியை வாளியில் மொண்டு மீன்களையும், மீன் சுத்தம் செய்த இடத்தையும் கழுவினான். பிறகு, படகில் உள்ள வலைப்பள்ளத்திற்குள் இறங்கினான். அங்கே ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ், சில பாத்திரங்கள், மலாசா மற்றும் எண்ணெய் பேக்கெட்டும் இருந்தது. ஸ்டவை பற்ற வைத்து மீனை மசாலாவில் முக்கி, பொறித்து எடுத்து சுடச்சுட தட்டில் அடுக்கி அவளிடம் நீட்டினான்.

மிருதுளா அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தனை சுலபமாகவும் சுத்தமாகவும் அவன் வேலை செய்தான்.

“ஓய்!” என்று சொடக்குப் போட்டவன், “ஹேவ் இட்” என்று தட்டை அவள் கையில் திணித்துவிட்டு அருகிலேயே அமர்ந்துக் கொண்டான். ஒரே தட்டில்தான் இருவரும் உண்ண வேண்டும். மிருதுளாவிற்கு என்னவோ போல் இருந்தது. சந்தோஷமும் தயக்கமும் கலந்த கலவையான உணர்வு. மனதிற்கு இதமான உணர்வுதான். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“ம்ம்ம்.. சாப்பிடு” - தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளை புன்சிரிப்புடன் உந்தினான். அவனும் அந்த சூழ்நிலையை ரசிக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

ஒரு மீனை கையில் எடுத்து சூடு போக ஊதி, லாவகமாக முள்ளையும் சதைப்பற்றையும் தனியாகப் பிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனை வியந்து பார்த்தவள், “நீங்க மீன் சாப்பிடுவீங்களா?” என்றாள்.

“ஏன் மாட்டேன்? நல்லா சாப்பிடுவேன்.. அதுவும் இந்த மாதிரி பிரெஷ் மீன் சாப்பிட யாருக்கு பிடிக்காது?”

“இல்ல.. பேரு ஹோத்ரான்னு முடியுதே..” - அவள் சந்தேகத்தை கேட்டு முடிப்பதற்குள் அவன் விரல்கள் அவள் இதழ்களை தொட்டு நின்றன. விஷயம் புரிய சில நொடிகள் பிடித்தது அவளுக்கு. தித்திக்கும் உள்ளத்தோடு வாய் திறந்து அவன் ஊட்டிய மீனை பெற்றுக்கொண்டாள். இதைவிட சுவையான உணவை யாராலும் சமைக்க முடியாது என்று தோன்றியது.

காற்றில் மிதப்பது போன்ற உணர்வில் அவள் லயித்திருந்த போது அவன் பேசினான்.

“நான் ஹோத்ரா ஃபேமிலிதான்.. ஆனா அசைவம் நல்லா சாப்பிடுவேன்” - அடுத்த மீனை எடுத்து முள்ளையும் சதைப்பற்றையும் பிரிக்கத் துவங்கினான். அவளும் தன் பங்கிற்கு ஒரு மீனை கையிலெடுத்தாள். பத்து நிமிடத்தில் தட்டு காலியாகிவிட்டது. சாதம் ரொட்டி என்று எதுவும் இல்லாமல் மீனை மட்டும் வயிறு முட்ட உண்பது இதுதான் முதல் முறை அவளுக்கு. திகட்டவே இல்லை.. ரசித்து உண்டாள்.

அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. சுற்றும் முற்றும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் மட்டும்தான் தெரிந்தது. எப்படி திசை தெரிந்து படகை செலுத்துகிறான் என்கிற சந்தேகத்துடன் அவள் அவனை பார்க்க, அவன் படகில் பொருத்தப்பட்டிருந்த, ‘ஜிபிஎஸ்’ கருவியை கை காட்டினான்.

இப்போது படகு ஒரு குறுகலான கால்வாயில் சென்றுக் கொண்டிருந்தது. இருபுறமும் கரையோரம் நிறைய மரங்கள் இருந்தன. ‘கீச்-கீச்’ என்று பறவைகள் கூச்சலிட்டன. அணில்கள் மரங்களில் தாவியோடின. சில குரங்குகள் கூட கண்ணில் பட்டது.

“இந்த பக்கம் வந்த மாதிரியே தெரியலையே அர்ஜுன்! வழி மாறிட்டோமா?” - சந்தேகத்துடன் கேட்டாள் மிருதுளா.

“ஷ்ஷ்ஷ்..” - வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி கூறினான் அர்ஜுன்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன?’ என்பது போல் சைகை செய்தாள்.

அவன் எதுவும் பேசாமல் கரையில் சுற்றி சுற்றி எதையோ தேடுவது போல் பார்வையை சுழலவிட்டபடி படகை மெதுவாக செலுத்திக் கொண்டிருந்தான்.

அவளுக்கு பயமாக இருந்தது.. யாரேனும் ஒளிந்திருப்பதாக நினைக்கிறானோ! தாக்கப்போகிறார்களோ! - மிரட்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தவளின் விழிகள் விரிந்தன.

“அர்ஜுன்”- குரலே எழும்பாமல் அழைத்தாள். அவன் திரும்பினான்.

“அது.. அது என்ன?” - அவள் கைகாட்டிய திசையில் பார்த்தவனின் முகம் பிரகாசமானது.

“எஸ்.. தேர் இட் இஸ்..” என்றபடி படகை நிறுத்தியவன் அவளிடம் திரும்பி, “உப்புத் தண்ணி முதலை.. ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ட்ரை பண்ணலாமா?” என்றான் மின்னும் கண்களுடன்.

தூக்கிவாரி போட்டது அவளுக்கு. “என்னது!” என்றாள் அலறாத குறையாக.

அவன் கண்கள் குறும்பு சிரிப்பில் சுருங்கின. அதை கண்டு கொண்டவள், “சீட்டர்” என்று சிரித்துக்கொண்டே அவன் முதுகில் போட்டுவிட்டு, “ட்ரை பண்ணி பாருங்க.. அப்புறம் இன்னைக்கு நீங்கதான் அதோட லன்ச்” என்றபடி மீண்டும் அந்த முதலையை பார்த்தாள்.

மர நிழலில், சின்ன பள்ளத்தில் தேங்கி கிடந்த நீரில் அசைவே இல்லாமல் படுத்திருந்தது. பார்க்க மண்ணின் நிறத்தில் கல் போலவே இருந்தது. மூடி மூடி திறக்கும் கண்களை மட்டும் கவனிக்கவில்லை என்றால் மிருதுளாவும் கண்டுபிடித்திருக்க மாட்டாள்.

அந்த முதலையின் தலையில் ஏறி துள்ளித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு அணில்.

“தூங்குதா? அந்த அணில் இப்படி விளையாடுதே!” - வியப்புடன் கேட்டாள்.

“அப்படிதான் தூங்கற மாதிரியே இருக்கும்.. சரியான நேரத்துல இரையை டக்குன்னு கேட்ச் பண்ணிடும்” - அவன் சொல்லி முடிப்பதற்குள் லபக்கென்று அந்த அணிலை கவ்விவிட்டது.. ஒரு நொடிதான்.. துள்ளிக் கொண்டிருந்த அணில் முதலையின் வயிற்றுக்குள் அரைபடத் துவங்கிவிட்டது.

மிருதுளாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவள் வாடிய முகத்தைக் கண்டு, “என்ன?” என்றான் அர்ஜுன்.

“பாவம்..” - சோகமாகக் கூறினாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம மீன் சாப்பிட்டோமே.. அதெல்லாம் பாவம் இல்லையா?” - புருவம் உயர்த்தினான்.

அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. “இதுதான் இயற்கை.. ஒன்ன ஒன்னு அடிச்சு சாப்பிட்டுத்தான் வாழ்ந்தாகனும்..” என்றான் சுலபமாக.

அவன் சொன்ன நியதி உண்மை என்றாலும் அதை அவன் இலகுவாக கூறிய விதம் அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் செய்யும் தொழில் அவனை அப்படி பேச வைக்கிறது என்று எண்ணியபடி அமைதியாகிவிட்டாள்.

அவளுடைய திடீர் அமைதிக்கு காரணம் புரியாமல், “ஆர் யு ஓகே?” என்றான் அர்ஜுன்.

“லேசா தலை வலிக்குது” - அவள் கூறுவதை உண்மை என்றே நம்பினான்.

“ரொம்ப நேரமா தண்ணிலேயே இருக்கோம். வெயில் வேற.. அதான் அப்படி இருக்கும். சீக்கிரம் கரைக்கு போயிடலாம். கண்ணை மூடி கொஞ்ச நேரம் சாஞ்சுக்கோ” - தன் மீது அவளை சாய்த்துக் கொண்டு படகை செலுத்தினான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 36

மிருதுளாவை உறங்க வைக்கும் வரை இயல்பாக இருந்த அர்ஜுனின் முகம் அதன் பிறகு கருங்கல் போல் இறுகியது. அவன் கண்கள் கழுகு போல் சுற்றும் முற்றும் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன. ஆம்.. மிருதுளாவின் கணிப்பு சரிதான். தங்களை யாரோ பின்தொடர்வதாக அவன் சந்தேகப்பட்டது உண்மைதான். அவள் முகத்தில் மிரட்சியைக் கண்டதும், இலகுவாகி சூழ்நிலையின் தீவிரத்தை குறைத்து அவளை உற்சாகப்படுத்தினான்.

அதன் பலனாகத்தான் இப்போது அவன் தோளில் சாய்ந்து நிம்மதியாக அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அதீத எச்சரிக்கையோடு மிக மெதுவாக படகை செலுத்திக் கொண்டிருந்தவனின், புலன்கள் வெகு கூர்மையாக சுற்றுப்புறத்தை கவனித்துக் கொண்டிருந்தன.

டெல்லியிலிருந்து நேராக மிருதுளாவை பார்க்க வருவதில் அவனுக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. நாயக் குழு ஒரு வேளை டெல்லியில் அவனை அடையாளம் கண்டிருந்தால் நிச்சயம் பின்தொடர கூடும். அவர்களுடைய மோப்ப சக்தி மிருதுளாவை பற்றி அறிந்துக்கொள்ளும் அளவிற்கு வலுவானதாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த வரவின் மூலம், தானே அவளை பற்றி அவர்களுக்கு துப்புக் கொடுத்ததாகிவிடுமே என்று எண்ணினான். ஆனாலும் அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. மிருதுளாவுக்கு காவலாக டேவிட்டை வைத்தது, பாலுக்கு பூனையை காவல் வைத்தது போல் அவன் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டே இருந்ததில் ஓடோடி வந்துவிட்டான்.

இப்போது அவளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம். இரண்டு காரணத்திற்காக. முதல் காரணம் நாயக் ஆட்கள்.. இரண்டாவது காரணம் டேவிட். இந்த இருவருமே அவளிடம் நெருங்குவதை அவன் விரும்பவில்லை.

இரவே எங்கு செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டுத்தான் படுத்தான். வெளிப்படையான பயணம் மேலும் ஆபத்தைத்தான் கொண்டுவரும் என்பதால் மிராஜ்பாடாவைவிட்டு வெளியேறுவதற்கு, நிழல் கூட பின்தொடர தயங்கும்.. முதலைகள் நிறைந்த இந்த கால்வாயில் பயணம் செய்ய துணிந்தான். எதிரிகள் சுதாரிப்பதற்குள் காற்றில் கரைந்துவிடலாம் என்பது அவன் கணக்கு. ஆனால் கணக்கில் ஏதோ பிழை இருப்பது போல் இப்போது தோன்றுகிறது.

பறவைகளின் கிரீச்சிடலில், சருகுகளின் சரசரப்பில், காற்றின் வாசத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பது போல் தோன்றிக் கொண்டே இருந்தது. அவன் உயிரை பற்றி கவலையில்லை.. மிருதுளாவை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். அதுதான் அவனுக்கு மிக முக்கியம். இதோ.. இன்னும் சற்று தூரம்தான்.. பத்து பதினைந்து நிமிடத்தில் பக்கத்து தீவை அடைந்துவிடலாம். நிதானம் இழக்காமல் எதற்கும் தயார் நிலையில் இருந்தபடியே படகை செலுத்திக் கொண்டிருந்தான். நல்லவேளை.. அஞ்சியபடி எந்த பிரச்சனையும் வரவில்லை. குறைந்தபட்சம் அப்போதைக்கு.

படகு கரையோரம் வந்து சேர்ந்த பிறகும் மிருதுளா கண்விழிக்கவில்லை. அர்ஜுன்தான் அவளை தட்டி எழுப்பினான். சுருக்கிய கண்களுடன் சுற்றுப்புறத்தில் தெரிந்த வித்தியாசத்தை கவனித்துவிட்டு, “எங்க வந்திருக்கோம்?” என்றாள் முழுமையாக உறக்கம் கலையாமல்.

“சொல்றேன்.. வா” - அவளை கைப்பிடித்து அழைத்து கொண்டு கீழே இறங்கினான். மாலை வெயில் முகத்தில் வந்து குத்தியது.

“பிதர்கானிகா..”

“என்ன!” என்று வியந்தவளுக்கு உறக்கம் நன்றாகவே கலைந்துவிட்டது. “மிராஜ்பாடா போகலையா? ஏன் இங்க வந்திருக்கோம்?” - குழப்பத்துடன் கேட்டாள்.

“சொன்னேனே.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” - கண்சிமிட்டி புன்னகைத்தான்.

“அப்படி என்ன சர்ப்ரைஸ் கொடுக்க போறீங்க?” - பதில் புன்னகையோடு அடுத்த கேள்வியை கேட்டாள்.

“அதை காட்டும் போது தெரிஞ்சுக்கோ.. இப்போ வா” - இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான். சிறிதளவும் சந்தேகப்படாமல் அவன் சொன்னதை அப்படியே நம்பினாள் மிருதுளா.

அன்று இரவு அவர்கள் தங்கியது ஒரு மண் குடில்.. முற்றிலும் மூங்கில்களாலும், மாட்டுச்சாணம் பூசப்பட்ட மண் சுவர்களாலும் கட்டமைக்கப்பட்டிருந்த சிறு குடில்.

அவளுக்கு எதுவுமே புரியவில்லை. தூங்கி எழுந்து சாதாரணமாக வெளியே வந்து நின்றவளை வாக்கிங் போகலாம் என்று சொல்லிவிட்டு தீவுவிட்டு தீவு கடத்திக்கொண்டு வந்து மண் குடிசையில் தங்க வைத்திருக்கிறான். அதுவும் தனியாக.

“இது யாரு வீடு அர்ஜுன்?” - குடிலை கண்களால் வட்டமடித்தபடி கேட்டாள்.

“நம்ம வீடுதான். நகரு அந்த பக்கம்” - சுவரோரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நாடாக்கட்டில் ஒன்றை நிமிர்த்திப் போட்டபடி அவளுக்கு பதில் சொன்னான்.

அந்த கட்டிலையும் சுவரோரமிருந்த மண் அடுப்பையும் ஓரிரு பாத்திரங்களையும் தவிர வேறொன்றும் இல்லை அங்கு.

“யாரையும் காணுமே!”

“அதான் நாம இருக்கோமே”

“நாம இப்ப இருக்கோம். இதுக்கு முன்னாடி இங்க யாரு இருந்தா?”

“பூட்டை நான்தானே திறந்தேன். வேற யாரு இருந்திருக்க முடியும்?” - விதண்டாவாதமாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அதில் எரிச்சலுற்றவள்,

“அடிக்கிற காத்து கொஞ்சம் வேகமா அடிச்சா குச்சி கூட மிஞ்சாது. இந்த குடிசலுக்கு கதவே ஓவர்.. இதுல பூட்டு வேறயா?” என்று முதன்முறையாக அவனிடம் பகடி பேசினாள்.

அதை ரசித்து சிரித்தவன், “பக்கத்துலதான் ஹனிமூன் ரிசாட் இருக்கு. அங்க வேணா கிளம்பிடுவோமா?” என்றான் தன் முறைக்கு.

‘அடப்பாவி!’ - குபீரென்று புது இரத்தம் பாய்ந்தது போல் முகம் சிவந்து சூடானது அவளுக்கு. வெட்கத்துடன் உள்கன்னத்தை கடித்தாள். அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவிற்கு கூச்சம் ஆட்கொண்டது. முயன்று தன்னை இயல்பாக காட்டிக் கொண்டு, “அதுக்கு கல்யாணம் ஆயிருக்கனும்” என்றாள்.

அவளிடம் ஏற்பட்ட திடீர் மாற்றங்களை வியப்புடன் கண்டவன் அவளை கண்களாலேயே விழுங்கியபடி, “நான் ரெடி” என்றான்.

‘கடவுளே!’ - அவளால் பதில் பேச முடியவில்லை. வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் பட்டாம்பூச்சி படபடத்தது. சின்ன குடில்.. அவளோடு அவன்.. சூரியன் மங்கி வெளிச்சம் குறைந்துக் கொண்டிருக்கிறது.. மின்விளக்கு..? சுவிட்ச்..? - அவள் கண்கள் வட்டமடித்தன.

“என்ன ஆச்சு?” - திடீரென்று அவள் காதோரம் ஒலித்தது அவன் குரல்.

“ஆங்! ப..பசி.. பசிக்குது” - பதட்டத்தில் சம்மந்தமில்லாமல் பேசினாள்.

அவன் கைகளை உயரே தூக்கி நெளிவெடுத்தபடி, “எனக்கும்.. ரொம்..ப.. பசிக்..குது..” என்று கூறிவிட்டு படக்கென்று கண்ணடித்தான்.

குப்பென்று வியர்த்துவிட்டது அவளுக்கு. “வே..ர்..க்குது..ல்ல? ஃபேன் இல்ல.. லைட் கூட இல்லையே! கரண்ட் கனக்ஷனே இல்லையா?” - உளறி கொட்டினாள்.

“இந்த குடிசலுக்கு கதவே ஓவர்.. கரண்டு எதுக்குன்னு விட்டுட்டேன். சரி வா. முழுசா இருட்டறதுக்குள்ள சாப்பாட்டுக்கு ஏதாவது வழி பண்ணுவோம்” - வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தபடி அடுப்புக்கு அருகே இருந்த தட்டுமுட்டு சாமான்களை உருட்டினான்.

என்ன செய்கிறான் என்று அருகில் சென்று பார்த்தாள் மிருதுளா. அங்கே இருந்த அரிக்கன் விளக்கை ஏற்றி தாழ்வாரத்தில் மாட்டிவிட்டு, சுவற்றில் மாட்டியிருந்த பை ஒன்றை எடுத்தான். அதில் பிரெஷாக காய்கறிகள் இருந்தன. அவர்கள் வருவார்கள் என்று தெரிந்து யாரோ வாங்கி வைத்திருப்பது போல் தோன்றியது.

“இதெல்லாம் யார் இங்க வாங்கி வச்சது அர்ஜுன்?” - மனதில் தோன்றியதை வாய்விட்டே கேட்டாள்.

“உனக்கு தெரியாதவங்க” - காய்கறிகளை கழுவி நறுக்கியபடியே பதில் சொன்னான்.

இதுதான் அவளுக்கு பிடிக்கவில்லை. எவ்வளவு நெருக்கமாக காட்டிக் கொண்டாலும் அவன் அவளிடம் நெருங்கவே இல்லை. சரசமாக பேசினாலும்.. இழைந்தாலும் எல்லாம் மேலோட்டமாகவே தெரிந்தது. அவனிடம் ஆழமான அன்பை அவளால் உணர முடியவில்லை. ஏதோ ஒன்று குறுக்கே நிற்கிறது. தொழிலா? அல்லது அவன் குணமே இதுதானா? முகம் வாட கட்டிலில் சென்று அமர்ந்துவிட்டாள்.

அர்ஜுன் அவளுடைய கோபத்தை பொருட்படுத்தவில்லை. தானாக வரட்டும் என்று விட்டுவிட்டு விறகடுப்பை பற்றவைத்து பத்தே நிமிடத்தில் சமையலை முடித்தான். அவனுடைய வேகம் அவளை ஆச்சரியப்படுத்தியது.

ஆர்வத்துடன் தன் மீது அடிக்கடி படிந்த அவள் பார்வையை கவனித்தவன், தன்னுடைய கணக்கு சரிதான் என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்தபடி, “கமான் ஹனி.. டின்னர் ரெடி. இரண்டு பிளேட் இருக்கு.. ஆனா நமக்கு ஒன்னு போதும் இல்ல..?” என்று அவளை சீண்டினான்.

சட்டென்று சுதாரித்த மிருதுளா கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு அழுத்தமாக அமர்ந்திருந்தாள். அதையும் புன்சிரிப்புடன் கவனித்தபடி, இரண்டு தட்டுகளில் உணவை பரிமாறி அவளிடம் ஒன்றை கொண்டுவந்து நீட்டினான்.

காய்கறி, பருப்பு, அரிசி அனைத்தையும் ஒன்றாக போட்டு ஏதோ செய்திருந்தான். வாசனை தூக்கியது.

“தேங்க்ஸ்” - முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே நன்றி கூறி தட்டை வாங்கிக் கொண்டாள்.

“ஸ்பூன் இல்ல.. கைலதான் சாப்பிடனும். மேனேஜ் பண்ணிடுவியா.. இல்ல நா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” - கண்களில் குறும்புடன் புருவம் உயர்த்தினான். அவளுடைய மனநிலையை மாற்ற சின்னதாக ஒரு முயற்சி செய்து பார்த்தான்.

அவள் இறங்கி வரவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டு, “நா ஒன்னும் அமெரிக்கன் ரிட்டன் இல்ல..” என்றாள். குழந்தை கோபம்.. தோள்களை குலுக்கிக் கொண்டு உணவில் கவனமானான் அர்ஜுன்.

அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது என்பதும் அவளை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவன் விரும்புவதும் உண்மைதான் என்றாலும், ‘இதை செய்தால் இது கிடைக்கும்’ என்கிற கால்குலேட்டிவ் மனப்பாங்கிலிருந்து அவன் வெளியே வரவில்லை. அதனால்தான் அவளுடைய கோபத்தினால் தானக்கு எந்த பாதிப்பும் வராது என்று உணர்ந்துவிட்ட பிறகு அவளை சமாதானம் செய்ய அவன் விழையவில்லை.

உணவிற்கு பிறகு, மிருதுளா கட்டிலில் படுத்துக்கொள்ள அர்ஜுன் தரையில் சாய்ந்துவிட்டான். போர்வை தலையணை எதுவும் இல்லாமல் கட்டாந்தரையில் அவன் படுத்திருப்பதை பார்க்க பரிதாபமாக இருந்தது அவளுக்கு. அவ்வளவு பெரிய மாளிகையில் வசிக்கிறவன் எப்படி எந்த வசதியும் இல்லாத இந்த குடிலில் இயல்பாக இருக்கிறான் என்கிற வியப்பும் கூடவே எழுந்தது.

இந்த குடிலில் இருக்கும் ஒரே வசதி மேல்கூரை.. அதுவும் இல்லாத காட்டில் கூட நாள் கணக்கில் அவனால் பொருந்தி வாழ முடியும் என்கிற உண்மை அவளுக்கு புரியவில்லை.

இரவெல்லாம் அவளால் உறங்கவே முடியவில்லை. ஒரே கொசு.. கூடவே குளிர்.. அவ்வளவு நேரம் பாடுபட்டுவிட்டு அப்போதுதான் கண்ணயர்ந்தாள். உடனே எழுப்ப துவங்கிவிட்டான் அர்ஜுன்.

“ப்ளீஸ்.. அர்ஜுன்.. கொஞ்ச நேரம். இன்னும் விடியவே இல்ல..” - கண்களை பிரிக்கவே முடியவில்லை அவளுக்கு.

“அதெல்லாம் நல்லா தான் குறட்டை விட்ட.. எழுந்திரு..” - அதட்டினான்.

கொசு கடிக்கிறது.. குளிர்கிறது என்று புலம்பித்தள்ளி அவனை தான் அவள் உறங்கவிடவில்லை. அவளுடைய குளிருக்காக, மண்சட்டியில் விறகுகளை உடைத்துப் போட்டு தீமூட்டி கதகதப்பாக கட்டிலுக்கு அருகில் வைத்துவிட்டு, தீ வேறெங்கும் பரவிவிடக் கூடாதே என்று விடியவிடிய அவன் தான் உறங்கவில்லை.

“மிருதுளா..” - குரலை உயர்த்தினான்.

“ம்ம்ம்” - உறக்கம் கலையாமல் முனகினாள்.

“கெட் அப் பேபி”

“சன் வரட்டும் அர்ஜுன்”

“சன் வந்துடிச்சுன்னா என்னோட சர்ப்ரைஸ் பிளான் ஸ்பாயில் ஆயிடும் ஸ்வீட்டி.. எழுந்திரு” - தோள்களை பிடித்து தூக்கினான். துவண்டு விழுந்தவளை கன்னத்தை தட்டி பிடிவாதமாக விழிக்கச் செய்தான்.

இவ்வளவு சுகமான தூக்கத்தை தியாகம் செய்யும் அளவுக்கு உண்மையிலேயே அந்த சர்ப்ரைஸ் ‘ஒர்த்தானா’ என்கிற சந்தேகத்துடனேயே எழுந்தாள் மிருதுளா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 37

“ஓஓஓஓ!” - வாயை குவித்து அடிவயிற்றிலிருந்து உற்சாகமாக கூச்சலிட்டாள் மிருதுளா.

அது ஒரு ஸ்கூட்டர் பயணம். ஸ்கூட்டர் என்றால் சாலையில் ஓடும் சாதாரண ஸ்கூட்டர் அல்ல.. தண்ணீரில் பறக்கும் வாட்டர் ஸ்கூட்டர். அலைகளில் துள்ளித் துள்ளி எழுந்து சீறிப்பாய்ந்தது. அவன் முதுகை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பயத்தை மிஞ்சிய குதூகலத்தில் தன்னை மறந்து கத்தித் தீர்த்தாள். அவளுடைய அந்த அதீத உற்சாகத்திற்கு காரணம் வாட்டர் ஸ்கூட்டர் மட்டும் அல்ல.. அதில் அவர்கள் வந்திருந்த இடம்.

சிலிக்கா ஏறி கடலோடு கலக்கும் முனை.. அந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு.. டால்பின்கள்! அவர்களுடைய ஸ்கூட்டரை சுற்றி சுற்றி எத்தனை டால்பின்கள் வட்டமடிக்கின்றன! அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அதிகாலையில்தான் இவைகள் இந்த பகுதியில் விளையாடுமாம். அதனால்தான் விடிவதற்கு முன்பே இழுத்துக் கொண்டு வந்துவிட்டான். இந்த காட்சியை - இந்த விதத்தில் - இவனோடு அனுபவிப்பதற்கு தூக்கம் என்ன.. எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்.

“ஓஓஓஓ!” - மீண்டும் கத்தினாள். துள்ளித் துள்ளி குதிக்கும் டால்பின்களை கட்டித்தழுவி தண்ணீருக்குள் உருள வேண்டும் போல் தோன்றியது. அவற்றின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும் போலிருந்தது. அவைகளோடு போட்டி போட்டுக் கொண்டு நீந்த வேண்டும் போல் ஆசை வந்தது. நிறைவேறாத ஆசைகள் தான்.. ஆனால் டால்பின்கள் நீர்மட்டத்திற்கு மேலே எழும்பி டைவடிக்கும் போது தெறிக்கும் நீர் துளிகளின் சில்லிப்பில் அத்தனை சந்தோஷத்தையும் அனுபவித்துவிட்டது போல் பரவசப்பட்டாள்.

மிருதுளாவின் ஆசை தீருமட்டும் டால்பின்களோடு வட்டமடித்து விளையாடிவிட்டு, ஸ்கூட்டரின் வேகத்தை அதிகரித்தான் அர்ஜுன். ஆனால் அவர்களுடைய பயணம் கரையை நோக்கி இல்லாமல் எதிர் திசையை குறிவைத்திருந்தது. எங்கே போகிறோம் என்று அவள் கேட்டாள். வழக்கம் போல் அவன் பதில் சொல்லவில்லை.

அன்று அதிகாலையில் பிதர்கானிகாவில் புறப்பட்டவர்கள் காலை உணவு வேளையில் வேறொரு ஊரில் கரையேறினார்கள். கடற்கரையிலிருந்து நடைபயண தொலைவிலேயே கடைத்தெரு இருந்தது. மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. பெருநகரங்களைப் போல் பேருந்துகளும் ஆட்டோக்களும் இருசக்கர வாகனங்களும் வடம் பிடித்தன.

மிருதுளாவின் கையை பிடித்தபடி அந்த கூட்டத்தில் கலந்த அர்ஜுன் சற்று நேரத்தில் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தான்.

ஓரளவுக்கு வசதியான ஹோட்டல்தான் என்றாலும் கூட்டம் அதிகமில்லை.

“ரெஸ்ட்ரூம் அந்த பக்கம். ரெஃப்ரெஷ் பண்ணனுன்னா போயிட்டு வா” - அவளுடைய தேவையறிந்து தானாகவே கூறினான்.

ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு அவன் கைகாட்டிய திசையில் சென்ற மிருதுளா சற்று நேரத்தில் திரும்பி வந்த போது அவன் நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருப்பதை கண்டு வியந்தாள்.

“என்ன ஆச்சு! ஏன் இங்கேயே நிக்கிறீங்க? உள்ள போய் உட்கார்ந்திருக்கலாமே!”

“ம்ம்.. வா” - அவளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தான் என்பதை வெளிப்படுத்தாமல் சின்ன முணுமுணுப்புடன் அவளை இழுத்துக் கொண்டு டைனிங் ஏரியாவிற்கு சென்றான்.

ஆடர் எடுக்க வந்த சர்வரிடம், அவளுக்கு ஒரு செட் ரொட்டி குருமாவும் தனக்கு ஒரு பிஸ்லரி வாட்டர் பாட்டிலும் கொண்டுவர சொன்னான்.

“நீங்க சாப்பிடலையா?” - அக்கறையாக கேட்டாள் மிருதுளா.

“நீ சாப்பிடு” - ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கு முன்பு வரை நன்றாக இருந்தவனுக்கு இப்போது திடீரென்று என்னவாயிற்று? ஏன் இப்படி இறுகிப்போயிருக்கிறான் என்கிற சிந்தனையோடு உணவை முடித்தாள் மிருதுளா.

முதலை கால்வாயில் தோன்றியது போல், கடைத்தெருவுக்குள் நுழைந்ததிலிருந்தே அவனுடைய உள்ளுணர்வு உறுத்த துவங்கிவிட்டது என்பதையும், தங்களை யாரோ கண்காணிப்பதாக அவன் சந்தேகப்படுகிறான் என்பதையும் அப்போது அவள் அறியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது.

பில் கௌண்ட்டரில் பணம் செலுத்திவிட்டு நகர்ந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில்.. என்ன நடந்தது என்று புரிந்துக்கொள்ள கூட முடியாத வேகத்தில் திடீரென்று நடந்து முடிந்துவிட்டது அந்த சம்பவம்.

அவன்.. அந்த புதியவன் தனியாக நின்றுக் கொண்டிருந்த மிருதுளாவை நோக்கித்தான் வந்தான். மிகவும் சாந்தமாக.. சாதாரணமாக..

அவனை பார்த்தால் வித்தியாசமாக எதுவும் தோன்றாததால் அவளும், அவன் அருகில் நெருங்கி வரும் வரை எந்த சலனமும் இல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பில் செலுத்திவிட்டு நகர்ந்த அர்ஜுன் அந்த புதியவனை கண்டதும் அரை நொடிப்பொழுதில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணித்து விருட்டென்று இருவருக்கும் இடையில் புகுந்தான்.

அடுத்து நடந்ததுதான் பயங்கரம்.. வீடியோவில் பாஸ்ட் ஃபார்வர்ட் செய்யப்பட்ட காட்சி போல் இருந்தது இவருடைய தாக்குதலும். யார் யாரை தாக்குகிறார்கள்.. அடிப்பது யார்.. அடி வாங்குவது யார் என்று கவனிப்பதற்குள் காட்சி மாறியது. அந்த புதியவன் தலைதெறிக்க தப்பித்து ஓட, அர்ஜுன் தடுமாறி கீழே விழுந்தான். இல்லையில்லை.. அர்ஜுன் தடுமாறி கீழே விழுந்த நேரத்தில்தான் அவன் தப்பித்து ஓடியிருக்க வேண்டும்.

அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் மலங்க விழித்துக் கொண்டிருந்தது மிருதுளா மட்டும் அல்ல.. சுற்றியிருந்த பொதுமக்களும் தான்.. அவளுடைய பார்வை தூரத்தில் புறமுதுகிட்டு ஓடும் அந்த புதியவனிடமிருந்து மீண்டு, “நா வருவேன்.. உன்னை தேடி வருவேன்” என்று உரக்க கத்திய அர்ஜுனிடம் வந்தது. அடிபட்ட வேங்கை போல் தரையிலிருந்து எழுந்தவன் கையில் இரத்தம் வழிவதை கூட உணராமல் பெருங்குரலில் கர்ஜித்தான்.

“அர்ஜுன்!” - பதட்டத்துடன் அவனிடம் பாய்ந்தோடினாள் மிருதுளா. காயப்பட்ட அவன் கையை எடுத்து, “மை காட்! இரத்தம்!” என்று பதறினாள்.

“மூவ்..” என்று அங்காரத்துடன் அவளை ஒதுக்கிவிட்டு மிக மும்மரமாக தரையில் எதையோ தேடியவன், தேடிய பொருள் கிடைத்துவிட்ட திருப்தியுடன் கீழே குனிந்து அந்த புல்லட் கேஸை எடுத்தான்.

“வாட் இஸ் திஸ்! ஓ மை காட்! ஆர் யு ஷாட்? சுட்டுட்டானா அவன்? அர்ஜுன்!” - மிரண்டு போன மிருதுளா அவன் கையை பிடித்துக் கொண்டு படபடத்தாள்.

‘எப்போது! எப்படி! சத்தமே கேட்கவில்லையே! ஆனால் இரத்தம் வழிகிறது..’ - அவன் பயன்படுத்தியது சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி என்பதையெல்லாம் யோசித்து புரிந்துக்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை. பயந்துபோய், “யாராவது ஹெல்ப் பண்ணுங்க..” என்று கத்தினாள்.

அர்ஜுனின் ஆக்ரோஷ உடல்மொழி உதவி தேவைப்படுபவன் போல் இல்லாமல் அருகில் நெருங்குவபவர்களுக்கு ஆபத்து என்று எச்சரிப்பது போல் இருந்ததால் சுற்றியிருந்தவர்கள் தள்ளியே நிற்க, அவளுடைய புலம்பலில் எரிச்சலடைந்து “ஷ்ஷ..ட்-அப்..” என்று குரலை உயர்த்தி அதட்டினான் அர்ஜுன்.

சட்டென்று அடங்கியவள் அடுத்த நிமிடமே “யு ஆர் ப்ளீடிங்” என்றாள் தவிப்புடன். முகத்தில் கலவரம் அப்பியிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

அர்ஜுனின் பார்வை அவள் முகத்தில் ஆழப்பதிந்தது.. அவளுடைய பெரிய கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீரில் அவன் கொந்தளிப்பு சற்று மட்டுப்பட்டது. அந்த நொடி அவன் பார்வையில் அவள் மிருதுளாவாக தெரியவில்லை. அவனுடைய காயத்தை கண்டு கலங்கும் ஜீவன்.. அவனுடைய வலிக்காக துடிக்கும் உயிர்.. அவனுக்காக கண்ணீர் விடும் ஆத்மா.. உள்ளத்தில் ஏதோ ஈரமான உணர்வு சுரப்பதை உணர்ந்தான். இதுவரை அவளிடமிருந்த ஈர்ப்பையும் அவனிடமிருந்த அதிகாரத்தையும் விஞ்சிய உணர்வு அது.

அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு, “ஐம்.. ஆல்ரைட்” என்றவன், பாக்கெட்டில் இருந்த கர்ச்சிப்பை எடுத்து காயத்தில் கட்ட முனைந்தான். தோள்பட்டைக்கு கீழே அடிபட்டிருந்ததால் ஒற்றை கையால் கட்டு போட முடியாமல் அவன் சிரமப்பட, உடனே உதவிக்கு வந்தாள் மிருதுளா.

அவளிடம் கையையும் கர்ச்சிப்பையும் கொடுத்துவிட்டு அவள் முகத்தையே பார்த்தபடி அமைதியாக நின்றான். மயிலிறகோ பூவிதழோ என்பது போல் மிக மென்மையாக அவன் காயத்தை சுற்றி கட்டினாள்.

அர்ஜுன் அங்கிருந்து உடனடியாக கிளம்ப எண்ணினான். அது சிசிடிவி இல்லாத உணவகம்தான். குப்பையை சுத்தம் செய்யும் வேலை மிச்சம். சுற்றியிருந்தவர்களில் யாரேனும் வீடியோ எடுத்திருக்கக் கூடுமோ என்று எண்ணி பார்வையை சுழலவிட்டான். நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிட்ட சண்டையை, வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூட யாருக்கும் அவகாசமில்லை. திகைப்பு நீங்காமல் விக்கித்து நின்றவர்கள் யார் கையிலும் அலைபேசி தென்படவில்லை. அதற்கு மேலும் வீடியோ வெளியானால் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி மிருதுளாவை இழுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

“ஹாஸ்பிட்டல் போகலாம் அர்ஜுன்.. பிளட் போயிட்டு இருக்கு.. ப்ளீஸ்..” என்று தொடர்ந்து கொண்டிருந்த மிருதுளாவின் கெஞ்சல்களை ஒதுக்கிவிட்டு, கண்ணில் தென்பட்ட ஒரு மெடிக்கல் ஷாப்பில், சில மெடிக்கல் டூல்சும் மருந்துகளும் வாங்கி கொண்டு ஆட்டோ பிடித்து, அவளோடு ஒரு உயர்தர ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான்.

அங்கே ஏற்கனவே அறை புக் செய்யப்பட்டிருந்தது. எப்போது யார் செய்தார்கள் என்கிற கேள்வியெல்லாம் அவளுக்கு எழவில்லை. அவனுடைய காயமும், இரத்தப்போக்கும் மட்டுமே மூளையை முற்றிலும் ஆக்கிரமித்திருந்தது.

அறைக்கு வந்ததும் கீசரை ஆன் செய்துவிட்டு, கையில் கட்டியிருந்த கர்ச்சீப்பை பிரித்து எறிந்துவிட்டு சட்டையை கழட்டி காயத்தை ஆராய்ந்தான். அவனுடைய சிவந்த மேனிக்கு பயங்கரமாய் தெரிந்த அந்த இரத்தத்தையும் ஆழமான காயத்தையும் கண்ட மாத்திரத்தில் அவளுக்கு நெஞ்சை அடைத்தது. “ஸ்ஸ்ஸ்.. ஐயோ!” என்றாள் அதிர்ச்சியுடன்.

அவளை நிமிர்ந்து பார்த்த அர்ஜுன், “நீ தள்ளி போ” என்றான் அவள் பயத்தை உணர்ந்து.

“இல்ல.. நா இருக்கேன்.. உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்” - வறண்டு போன உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு உமிழ்நீரை கூட்டி விழுங்கினாள்.

அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் பஞ்சை எடுத்து காயத்தை சுற்றி படிந்திருந்த ரத்தத்தை துடைத்தான். மிருதுளா ஓடிப்போய் தண்ணீர் சூடாகிவிட்டதா என்று சோதித்து, கப்பில் வெந்நீர் பிடித்துக் கொண்டு வந்தாள்.

அதை வைத்து அர்ஜுன் காயத்தை சுத்தம் செய்து முடித்த போது பொட்டு வைத்தது போல் ஒரு புள்ளி மட்டும்தான் காயமாக இருந்தது. ஆனால் அதற்குள் தோட்டா இருக்கும் போலிருக்கிறதே! எப்படி வெளியே எடுக்கப் போகிறான்! வலிக்குமே! - நினைக்கும் போதே அவளுக்கு வலித்தது. உள்ளங்காலெல்லாம் கூசியது.. அடிவயிற்றை பிசைந்தது.

“ஹாஸ்பிட்டலுக்கு போயிடலாம் அர்ஜுன்.. ப்ளீஸ்” - கெஞ்சினாள். ஆத்திரத்தில் குரல் கரகரக்க தொண்டையை அடைத்தது.

அவளை சட்டை செய்யாமல் காயம்பட்ட இடத்தை கத்திரிக்கோலால் வெட்டினான் அர்ஜுன். இரத்தம் குபுகுபுவென்று பொங்கியது. மிருதுளாவின் கண்கள் தெரித்து விழுவது போல் விரிந்தன. மூச்சே நின்றுவிடுவது போல் சுவாசக்குழலுக்குள் ஏதோ அடைத்தது.

“அர்..ஜு..ன்!” - அதிர்ச்சியுடன் கூவினாள்.

“ஷட்-அப்” - பல்கலை கடித்துக் கொண்டு இடுக்கி போன்ற ஏதோ ஒரு சிறு உபகரணத்தால் தோட்டாவை பிடுங்கிவிட்டு பஞ்சை வைத்து அழுத்தி ரத்தக்கசிவை கட்டுப்படுத்தினான்.

கண்களை இருட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

மூக்கு வளைந்த அந்த கொடூரமான ஊசியில் நரம்பை அவன் விரல் நடுங்க கோர்க்கும் போதே இவளுக்கு வயிறெல்லாம் கலங்கியது. இரத்தம் கசிய கசிய சதையில் ஊசியை குத்தி இழுக்கும் போது இவள் இதயம் வலியில் துடித்தது.

அவன் தையல் போட்டு முடிக்கும்வரை மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றவள், அவன் நரம்பை முடிச்சிட்டு கத்தரித்து ஊசியை கீழே வைத்த நொடியில் முகத்தை மூடிக் கொண்டு தரையில் சரிந்து கதறிவிட்டாள்.

ஓரிரு நிமிடங்கள் மெளனமாக அவளை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் பிறகு எழுந்து அவளிடம் நெருங்கினான். அருகில் அமர்ந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, “ஷ்ஷ்ஷ்” என்றான்.

“ஏன்? ஏன் இவ்வளவு வலி? இதெல்லாம் எதுக்கு?” - அவனோடு ஒண்டிக்கொண்டு குலுங்கியழுதாள்.

“ஐம் ஓகே”

“நோ.. யு ஆர் நாட் ஓகே. யு ஆர் டெஃபனட்லி நாட் ஓகே. யு ஆர் க்ரூயல்.. மரப்பு மருந்து கூட எடுக்கல. எதுக்காக அவ்வளவு வலியையும் தாங்கினீங்க? தனக்குத்தானே எப்படி இந்த கொடுமையை செய்ய முடிஞ்சுது உங்களால?” - ஆற்றாமை கோபமும் கண்ணீருமாக வெளிப்பட்டது.

அவள் கோபத்தில் இதயம் இனிக்க அணைப்பில் இறுக்கம் கொடுத்தவன், “ஸ்டாப் க்ரையிங். பேபி” என்றான் களைப்பையும் மீறிய மென்புன்னகையுடன். ‘அழாதே’ என்று கூறினாலும் அவனுக்காக வெளியேறும் அந்த கண்ணீரை அவன் மனம் ரசித்தது.

“யார் அவன்? என்னைத்தானே டார்கெட் பண்ணி வந்தான்? எதுக்காக? கோர்த்தா ஆளா? சுக்லா தான் அனுப்பினாரா?” - கேள்விகளை அடுக்கினாள்.

அவன் முகத்திலிருந்த மென்மை துணி கொண்டு துடைத்து போல் முற்றிலும் மறைந்து போனது. இறுகிய பாவத்துடன், “நா கொஞ்ச நேரம் கண்ணை மூடி படுத்திருக்கேன். நீ ரூமைவிட்டு எங்கேயும் போகக் கூடாது.. யார் வந்து கதவை தட்டினாலும் திறக்கக் கூடாது” - அவளுக்கு பதில் சொல்வதை தவிர்த்து எழுந்து சென்று மெத்தையில் சாய்ந்தான்.

அவன் உறங்குவதையே கண்கொட்டாமல் பார்த்தபடி பக்கத்தில் அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவன் காலையிலிருந்து எதுவுமே உண்ணவில்லை என்பது மனதை வருத்தியது. ‘அவ்வளவு இரத்தம் போய்விட்டது.. உணவும் உண்ணவில்லை.. உடல் எப்படி தாங்கும்?’ - கவலையோடு அமர்ந்திருந்தாள். சரியாக மதிய உணவு நேரத்திற்கு கதவு தட்டப்பட்டது. சட்டென்று கண் விழித்தான் அர்ஜுன்.

மிருதுளா அவனை வியப்புடன் பார்த்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் படுத்திருந்தான்.. லேசாக கதவு தட்டப்பட்டதும் உடனே விழித்துவிட்டான்! உறங்கவே இல்லையா! - மனதில் தோன்றியதை வாய்விட்டே கேட்டாள்.

“தூங்கவே இல்லையா நீங்க?”

“ஐம் நாட் எ டீப் ஸ்லீப்பர்” (நான் ஆழ்ந்து உறங்குபவன் அல்ல) என்றபடி எழுந்துச் சென்று டோர் வியூவர் வழியாக வந்திருப்பது யார் என்று பார்த்துவிட்டு துப்பாக்கியை ஏந்தியபடி எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தவன், அவனை பின்தொடர்ந்து யாரும் வரவில்லை உறுதி செய்துக்கொண்டு அவனை உள்ளே அனுமதித்தான்.

வந்திருந்தவன் அர்ஜுனிடம் சில ஷாப்பிங் பைகளையும் ஒரு கார் சாவியையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.

ஷாப்பிங் பைகளில் அவர்களுக்கு தேவையான ஆடைகளும் ஒரு உணவு பொட்டலமும் இருந்தது. மிருதுளாவிற்கு அதை கொடுத்துவிட்டு, கதவின் லாக்கை ஒருமுறை சரிபார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான் அர்ஜுன்.

அவன் வெளியே வரும்வரை காத்திருந்த மிருதுளா, அவன் வந்ததும், “நீங்க காலையிலிருந்து எதுவும் சாப்பிடல..” என்றாள் ஏதோ அவன் பெரிய குற்றம் இழைத்துவிட்டது போல்.

“என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும். நீ சாப்பிடு.”

“எப்படி? எப்படி மேனேஜ் பண்ண முடியும்? எவ்வளவு இரத்தம் போயிருக்கு. மயக்கம் வந்துடும்” - அதட்டினாள்.

“நா பார்த்துக்கறேன்”

“முடியாது..” - பிடிவாதம் பிடித்தாள்.

“மிருதுளா..” என்று கண்டிக்கும் தொனியில் அழைத்தவன், “பச்சத்தண்ணியை மட்டும் குடிச்சுக்கிட்டு பத்து நாள் கூட என்னால திடமாவே தாக்குப்பிடிக்க முடியும். குழந்தை மாதிரி அடம் பிடிக்காம சாப்பிடு.. நாம உடனே இங்கிருந்து கிளம்பனும். ம்ம்ம்.. சீக்கிரம்..” - விரட்டினான்.

அவள் முடியவே முடியாது என்று உறுதியாக நின்றாள். ஏன் அவன் சாப்பிட மறுக்கிறான் என்று காரணம் கேட்டாள்.

“நா சாப்பாட்டு விஷயத்துல யாரையும் நம்பறது இல்ல மிருதுளா. கொஞ்சம் இன்செக்யூர் ஃபீல் இருக்கும். அதிகமா வெளியே எங்கேயும் சாப்பிட மாட்டேன்.” என்றான் இறங்கிய குரலில்.

மிருதுளா அவனை வியப்புடன் பார்த்தாள். இது என்ன வாழ்க்கை என்கிற ஆயாசத்துடன், “அப்போ வீட்ல? அங்கேயும் சமையல்காரர் தானே சமைக்கிறார்?” என்றாள்.

“வீட்ல எல்லா இடத்துலயும் எனக்கு கண்ணு இருக்கு. அங்க யாராலயும் என்னை எதுவும் செய்ய முடியாது. அதோட அங்க இருக்க சமையல்காரர் எனக்காக உயிரையும் கொடுப்பார். அவரை மீறி என்னோட சாப்பாட்டில் யாராலும் கைவைக்க முடியாது.”

“அப்படின்னா நீங்க வெளியே சாப்பிட்டதே இல்லையா?”

“வெளியே வந்தா பெரும்பாலும் நானே சமைச்சுதான் சாப்பிடுவேன். தவிர்க்க முடியலைன்னா ராண்டமா எங்கேயாவது.. யாரும் கெஸ் பண்ண முடியாத ஹோட்டல்ல சாப்பிடுவேன்..” - ஆசிரியருக்கு பதில் சொல்லும் சிறுவன் போல் அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவன் உணரவே இல்லை.

“சரி.. அப்படின்னா இப்பவும் ஏதாவது ஒரு ராண்டம் ஹோட்டல்லேயே சாப்பிடுவோம் வாங்க” என்று கூறியவள் துரிதமாக குளியலறைக்குள் சென்று திரும்பி, அவனை அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறினாள்.

ஆம், அவள்தான் அவனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள். தன் பிடியை.. அதிகாரத்தை.. தெரிந்தே அவளிடம் இழந்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 38

போக்குவரத்து நெரிசல் இல்லாத நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட முப்பது மணி நேர கார் பயணம். ஒரிஸாவிலிருந்து ஆந்திராவை கடந்து கர்நாடகாவில் நுழைந்து மங்களூரை வந்து சேர்ந்திருந்தார்கள். ஊருக்குள் நுழையும் போதே கண்டு பிடித்துவிட்டாள் மிருதுளா.

“அர்ஜுன்!” - ஆனந்த அதிர்ச்சியோடு அவனை நோக்கினாள்.

சாலையில் பதித்த பார்வையை அவள் பக்கம் திருப்பாமலேயே கேட்டான். “பிடிச்சிருக்கா? என்னோட சர்ப்ரைஸ்?”

“எதிர்பார்க்கவே இல்ல..” - உணர்ச்சிவசத்தில் குரல் நடுங்கியது.

“நா உனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்.”

“தேங்க் யூ..” - கண்ணீருடன் பாய்ந்து அவனை கட்டிக்கொண்டாள்.

காயம்பட்ட கை விண்ணென்று தெறிக்க, “ஸ்ஸ்..” என்ற முனகலுடன் விலகியவனின் கார் சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கி ஏற சட்டென்று பிரேக் அடித்து நிறுத்தினான்.

“ஐயோ.. சாரி அர்ஜுன்.. சாரி.. ரொம்ப வலிக்குதா.. கடவுளே!” - தாயை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் அவனுடைய காயத்தை மறந்துவிட்டவள் குற்ற உணர்வுடன் நூறு முறை மன்னிப்பு கேட்டபடி அவன் காயத்தை மென்மையாக வருடிவிட்டாள்.

“இட்ஸ் ஓகே. காம் டௌன்.. எனக்கு ஒன்னும் இல்ல. ஐம் ஆல்ரைட்” என்று அவளை அமைதிப்படுத்தியவன், “ஊரை மட்டும்தானே சொன்ன. வீட்டுக்கு எப்படி போகனும். வழி சொல்லு” என்றான்.

மிருதுளாவிடம் உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொண்டது. பரபரப்புடன் வழியை காண்பித்தாள். ‘எத்தனை நாட்களாகிவிட்டது அம்மாவிடம் பேசி.. எப்படி இருக்கிறார்களோ! நம்மை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்வார்களோ!’ - பரபரக்கும் உள்ளத்துடன் சாலையிலேயே பார்வையை பதித்திருந்தாள். யாராவது தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று தேடியது அவள் பார்வை. தாயின் நலனை விசாரிக்க மனம் துடித்தது.

காரிலிருந்து இறங்கி ஓடிப்போய் அன்னையை கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தான் எவ்வளவு தூரம் அம்மாவை மிஸ் செய்திருக்கிறோம் என்பதை அப்போதுதான் அவள் முழுதாக உணர்ந்தாள்.

மிருதுளா சொன்ன வளைவுகளிலெல்லாம் வளைந்து குறுகிய சாலையிலெல்லாம் புகுந்து, மேடு பள்ளங்களையெல்லாம் கடந்து மங்களூரை அடுத்துள்ள அந்த சின்ன கிராமத்திற்குள் நுழைந்தது அவனுடைய கார்.

தாய் இந்த ஊருக்கு வந்த பிறகு இரண்டோ அல்லது மூன்றோ முறைதான் இங்கு வந்திருக்கிறாள் மிருதுளா. ஊருக்குள் வருவதற்கு சுலபமாக வழிகாட்டிவிட்டவளுக்கு வீட்டை கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருந்தது. சாலை போடுகிறேன் என்று இருந்த மரங்களையெல்லாம் வெட்டி மொட்டையடித்திருந்தார்கள். ஊரே மாற்றமாக தெரிந்தது. வீட்டு ஓனரின் பெயரை சொல்லி வழி கேட்டுக் கொண்டே வந்து வீட்டை அடைந்தார்கள்.

அவ்வளவுதான்.. பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் மிருதுளாவின் உற்சாகமெல்லாம் அடங்கிப்போய்விட்டது. கதவில் தொங்கி கொண்டிருந்த பூட்டையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றவளின், கண்களில் கண்ணீர் மட்டும் கரகரவென்று வழிந்துக் கொண்டிருந்தது.

“இட்ஸ் ஓகே.. இங்கதான் பக்கத்துல எங்கேயாவது போயிருப்பாங்க. நாம வெயிட் பண்ணலாம்” - அவளை தோளோடு அணைத்து தேற்றினான் அர்ஜுன்.

அவளுடைய முகம் தெளியவில்லை. தாயை பார்க்க வேண்டும் என்று ஆசையோடு ஓடி வந்தவள் இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் துவண்டு போனாள்.

அது ஒரு கிராமம்.. வீடுகள் நெருக்கமாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும் என்றாலும், ஊருக்குள் புது மனிதர்களின் வரவு வெள்ளை துணியில் வைத்த கலர் புள்ளி போல் அனைவருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்துப்போகும்.

அப்படித்தான் பக்கத்து தெருவில் வசித்த வீட்டு ஓனருக்கும் அவர்களுடைய வரவு தெரிந்தது. உடனே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்துவிட்டார்.

“யாரு நீங்கல்லாம்.. என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று கன்னட மொழியில் தூரத்தில் வரும் போதே குரல் கொடுத்தவர், அருகில் வந்ததும் மிருதுளாவை அடையாளம் கண்டுகொண்டார்.

“அடடே! நீ அந்த அம்மாவோட பொண்ணுதானே?” - ஆர்வமும் நிம்மதியும் இருந்தது அவர் குரலில்.

தாய் பல வருடங்களாக கர்நாடகாவில் வசித்ததாலும் அவரை பார்க்க மிருதுளா அடிக்கடி அங்கு வந்து சென்றதாலும் அவளுக்கு கன்னடா பரிச்சயமான மொழிதான். ஓரளவுக்கு பேசவும் தெரியும். எனவே அவன் கேட்டதை புரிந்துக்கொண்டு,

“ஆமாம் ஐயா. அம்மா எங்க போயிருக்காங்க?” என்றாள் கன்னடாவை உடைத்துக் கோர்த்து.

அவர் முகத்தில் அதிர்ச்சி.. “என்னம்மா இப்படி கேட்கற! அப்போ உனக்கும் தெரியாதா?” என்றான்.

அர்ஜுன் ஹோத்ராவின் புருவங்கள் நெரிந்தன. “என்ன சொல்லறீங்க?” என்றபடி முன்னால் வந்தான்.

“அந்த அம்மாவை நான் பார்த்து ஒரு மாசம் ஆகுதுங்க.. திடீர்ன்னு எங்க போனாங்கன்னு தெரியல. வீடு பூட்டியே கெடக்கு. எனக்கு இந்த மாசம் வாடகை பணம் வேற வரல.. இந்த அம்மாவுக்கு வீட்டை கொடுத்ததுக்கு தென்னந்தோப்புக்காரருக்கே கொடுத்திருக்கலாம்.. ஒண்ணாந் தேதியானா டான்னு வாடகை கொடுக்கற மனுஷன். குடோனு கிடைக்காம அலைஞ்சுக்கிட்டு இருக்காரு. வீடு வீணா போயிடுமே, புழக்கமா இருக்கட்டும்னு இவங்களுக்கு கொடுத்தேன். இப்படி பூட்டிப் போட்டுட்டு போய்ட்டாங்களே!” - தன் கவலையை புலம்பினார் அந்த முதியவர்.

“ஒரு மாசமா காணுமா! ஐயோ!” - கலவரத்துடன் அர்ஜுனின் கையைப் பிடித்தாள் மிருதுளா.

“ப்ச்.. எதுவும் ஆயிருக்காது.. பயப்படாத” என்று அவளிடம் கூறியவன் அவர் பக்கம் திரும்பி, கடைசியாக அவர் எப்போது மிருதுளாவின் தாயை பார்த்தார்.. என்ன பேசினார்.. அவர்களுடைய நடத்தையில் வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றம் தெரிந்ததா.. பதட்டமாக இருந்தார்களா.. என்றெல்லாம் குடைந்து குடைந்து விசாரித்தான். பிறகு வீட்டின் மாற்று சாவியை கேட்டான். அவர் இல்லை என்று மறுத்தார். பூட்டு அவர்களுடையது.. சாவியும் அவர்களிடம்தான் இருக்கும் என்றார்.

அடுத்த கணமே சிறிதும் யோசிக்காமல் பூட்டை உடைத்தான். வீட்டு ஓனர் அதிர்ந்து, “என்ன தம்பி இது!” என்றார்.

“அந்த அம்மாவோட பொண்ணு தானே இவங்க.. இவங்களுக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு.. கிளம்புங்க” என்று அவரை விரட்டியவன், சற்று நிதானித்து “ஒரு நிமிஷம்” என்று கூறியபடி தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து வாடகை கணக்கை தீர்த்து அனுப்பினான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மிருதுளாவின் பதட்டம் மேலும் அதிகமானது. போட்டது போட்டபடி என்பார்களே. அப்படித்தான் இருந்தது அந்த வீடு. சமைத்த உணவு பாத்திரத்திலேயே பூசணம் பூத்துக் கிடந்தது. துவைத்துப்பிழிந்த துணி காய வைக்காமல் வாளியிலேயே முறுகலாக இருந்தது. பீரோ திறந்து கிடந்த விதத்தில் அவசரமாக துணிமணிகளை பையில் அள்ளி திணித்திருப்பதை ஊகிக்க முடிந்தது. யாருக்கோ.. எதற்கோ பயந்து, பேய் துரத்துவது போல் அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடியிருப்பது புரிந்தது.

தன் மனதில் தோன்றியதை வாய்விட்டு கூறியபடி மிருதுளாவை திரும்பிப் பார்த்தான் அர்ஜுன். துக்கத்துடன் சுவற்றில் சாய்ந்து நின்றவள், ‘இல்லை’ என்பது போல் குறுக்காக தலையை அசைத்தாள். பேய் துரத்தி ஓடவில்லை பேய் போல் ஒருவரை துரத்திக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் என்றாள்.

அவன் புரியாமல் பார்த்தான். “அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் மேல பைத்தியம்” - அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது.

“யார் மேல?” - சட்டென்று அடுத்த கேள்வியை கேட்டான். பெற்ற மகளை விட அப்படி யார் மீது ஒரு பெண் பையித்தியமாக இருக்க முடியும்!

அவனுடைய கேள்விக்கு மிருதுளா உடனே பதில் சொல்லவில்லை. ஓரிரு நொடிகள் மெளனமாக நின்றவள் பிறகு, “என்னோட அப்பா மேல” என்றாள். தொடர்ந்து “இது புதுசு இல்ல.. அவர் எங்கேயாவது இருக்காருன்னு நியூஸ் வந்தா இப்படித்தான்.. எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு அவரை தேடி ஓடிடுவாங்க” என்றவள், “ஆனா நா காணாம போய்ட்டேங்கறதை கூட பொருட்படுத்தாம அவரை தேடி ஓடியிருக்காங்கங்கறதை தான் நம்ப முடியல.. அதுவும் ஒரு மாசம்..” என்று வெகுவாய் குழம்பினாள்.

பிறகு அவளே, “ஒரு வேளை நா அவர்கிட்ட போய்ட்டேன்னு நெனச்சு அவரை தேடி போயிருப்பாங்களோ!” என்றாள். சற்று யோசித்துவிட்டு, “ஆமாம்.. அப்படித்தான் இருக்கும்” என்று அந்த ஊகத்தையே முடிவாக பிடித்துக் கொண்டாள்.

அவளுடைய சிந்தனைகளையும் ஊகங்களையும் அவள் போக்கிலேயே விட்டுவிட்டு மேலும் வீட்டை பார்வையால் அலசிய அர்ஜுனின் கண்களில், கதவில் மேலிருந்து கீழ் வரை கூடுதலாக பொருத்தப்பட்டிருந்த தாழ்ப்பாள்களும் பூட்டுகளும் தென்பட்டன.

“என்ன இது!” என்றான் வியப்புடன்.

“அவர் எங்களை விட்டுட்டு போனதிலிருந்து இப்படித்தான்.. அதிக பயம்.. அதிக எச்சரிக்கை.. நிறைய மாறிட்டாங்க.”

அவன் புருவம் சுருங்கியது. “உன்னோட அப்பா விட்டுட்டு போனதுக்குப் பிறகு வருமானத்துக்கு என்ன செஞ்சீங்க? உன்னோட படிப்பு செலவையெல்லாம் எப்படி சமாளிச்சீங்க?”

“அம்மா ஒரு அதலட்.. பக்கத்துல இருக்க சின்ன பசங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ட்ரைனிங் கொடுப்பாங்க. அப்புறம் கராத்தே, டேக்-வான்-டோ கூட சொல்லி கொடுப்பாங்க, என்னோட படிப்பு செலவு ஸ்காலர்ஷிப்ல கவராயிடும். ரூம் ரெண்ட் மட்டும் அம்மாகிட்டருந்து வாங்கிப்பேன். மத்த செலவெல்லாம் பார்ட் டைம் ஜாப்ல கிடைக்கிற சம்பளத்துல சமாளிச்சுப்பேன்” - விளக்கமாகக் கூறினாள்.

அவளுடைய தாய் தற்காப்பு கலை தெரிந்தவள். ஆனால் வீட்டுக்கு பத்து பூட்டுப் போட்டு பூட்டிக்கொள்கிறாள். அதில் இருந்த முரண்பாடு உறுத்த அதையும் அவளிடம் கேட்டான்.

தந்தை விட்டு சென்றதிலிருந்துதான் இந்த அதீத பயம் தன் தாயை துரத்துகிறது என்றாள். ஆண் துணை இல்லாததால் யாரேனும் தவறாக நடந்துவிடக் கூடுமோ என்கிற பயமாக இருக்கலாம் என்று காரணத்தையும் ஊகித்துக் கூறினாள். எல்லாமே ஊகம் தான்.. அவளுக்கும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ஹாஸ்டல் வாசம் அவளை பெற்றோரிடமிருந்து அத்தனை தூரத்திற்கு தள்ளி வைத்திருந்தது.

அவள் சொல்வதையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டான் அர்ஜுன். பிறகு, அவளை அழைத்துக்கொண்டு அனந்த்பூரை நோக்கிப் புறப்பட்டான். மிருதுளாவின் ஊகம் தவறாக கூட இருக்கலாம். மகளைத் தேடி அந்த பெண்மணி அங்குகூட சென்றிருக்கலாமே!

அர்ஜுன் சொன்ன பிறகுதான் மிருதுளாவிற்கு அப்படியும் நடந்திருக்கலாம் என்று தோன்றியது. ஒரு வேளை மிருதுளாவை காணவில்லை என்று செய்தி கிடைத்ததும் அவளை தேடி கூட அவசரமாக கிளம்பி இருக்கலாம் தானே? அதற்கும் வாய்ப்பு உள்ளதே. இப்போது இதுதான் உண்மையாக இருக்கக் கூடும் என்று அவள் மனம் நம்பியது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 39

அனந்த்பூருக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. அந்த வீட்டை பார்த்ததுமே மிருதுளாவிற்குள் சின்ன நடுக்கம் தோன்றியது. அன்று இரவு உயிர் பயத்தில் ஓடிவந்து, இந்த இடத்தில் தான் அர்ஜுனின் காரில் ஏறினாள். அன்று மட்டும் அவள் அந்த காரில் ஏறாமல் இருந்திருந்தால் இன்று இப்படி அன்னையை தேடி தவிக்காமல் இருந்திருக்கலாம் என்று எண்ணும் போதே அர்ஜுனையும் சந்தித்திருக்க முடியாது என்கிற எண்ணமும் கூடவே எழுந்தது. கனத்த மனதை பெருமூச்சால் சீராக்க முயன்றபடி அவன் தோளில் சாய்ந்தாள். கராஜில் காரைவிட்டு எஞ்சினை நிறுத்தியவன் அவள் பக்கம் திரும்பி, “என்ன ஆச்சு?” என்றான் கனிந்த குரலில். அவள் எதுவும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

“உள்ள போகலாமா?”

“ம்ம்ம்” என்று முணுமுணுத்தவள் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். நாள் கணக்காக அடிபட்ட கையேடு தொடர்ந்து வண்டி ஒட்டிக் கொண்டிருந்தாலும் அர்ஜுனிடம் அந்த கலைப்பு தெரியவில்லை. ஷாப்பிங் பைகளோடு அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான்.

நவீன வசதிகளுடன் கூடிய ஒற்றை படுக்கையறை கொண்ட சின்ன வீடு. மிருதுளாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. காடு மேடெல்லாம் அலைந்தது திரிந்துவிட்டு வீடு திரும்பியது போல் மிகவும் இதமாக உணர்ந்தாள்.

“அதுதான் பெட்ரூம். உள்ளேயே ரெஸ்ட்ரூம் இருக்கு. ஃப்ரீயா இரு.. இது உன்னோட வீடு. ஓகே?” - அவளுடைய உணர்வை அப்படியே பிரதிபலிப்பது போல் அவன் பேசினான்.

மிருதுளாவின் முகத்தில் மென்புன்னகை மலர்ந்தது. ஆமோதிப்பாக தலையை அசைத்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

“மிருதுளா..” - அவன் குரல் இடையிட நின்றது திரும்பினாள். அவளை தொடர்ந்து அவனும் உள்ளே வந்தான். கையிலிருந்த ஷாப்பிங் பைகளை அவளிடம் கொடுத்துவிட்டு கீசரை ஆன் செய்தான். “வாட்டர் ஹீட் ஆக பத்து நிமிஷம் ஆகும்.. டவல் சோப் எல்லாம் இங்க இருக்கு.. வேற ஏதாவது வேணுமா?” என்று அவளுடைய தேவைகள் ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினான்.

மனதின் நெகிழ்வை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல், “இல்ல.. வேற எதுவும் வேண்டாம்” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

மிருதுளா குளித்துவிட்டு வெளியே வரும் பொழுது படுக்கை விரிப்பும், தலையணை உறைகளும் புதிதாக மாற்றப்பட்டிருந்தது.

அறையைவிட்டு வெளியே வந்தாள். அர்ஜுன், ஹால் சோபாவில் அமர்ந்து தன் கையில் போடப்பட்டிருந்த கட்டை பிரித்து காயத்தை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான்.

“இப்போ பரவால்லையா?” - அருகில் நெருங்கி காயம் ஆறியிருக்கிறதா என்று பார்த்தாள் மிருதுளா. பயணத்தின் போது இடையில் இரண்டு முறை, சில மணி நேரங்கள் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போதெல்லாம் அர்ஜுன் தன் கைக்கு வைத்தியம் செய்துக்கொள்ள தவறவில்லை. அதனால் தானோ என்னவோ காயம்பட்ட கையேடு அவன் அவ்வளவு ஸ்ட்ரெயின் செய்தும் காயம் நன்றாகவே ஆறியிருந்தது.

“ம்ம்ம்.. சின்ன காயம்.. சதையில பட்டதுதானே” - நிமிர்ந்து அவள் முகம் பார்த்துக் கூறியவன், சிகப்பேறியிருந்த அவள் கண்களைக் கண்டுவிட்டு, “ரொம்ப டயர்டா இருக்க.. டைனிங் டேபிள்ள க்ரீன் டீயும் பிரெட்டும் வச்சிருக்கேன். சாப்பிட்டு போய் படு” என்றான்.

அவள் மறுத்து, “இல்ல.. நா உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன். இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றாள்.

“இனி கட்டு தேவையில்லை. சின்னதா பேண்டெய்ட் ஓட்டினா போதும். இதெல்லாம் எனக்கு பழக்கம் தான்.. நா மேனேஜ் பண்ணிப்பேன். நீ சாப்பிட்டு படு. நா குளிச்சிட்டு வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனித்தவன், நின்று திரும்பி, “வெயிட் பண்ண கூடாது..” என்று கண்டித்து கூறிவிட்டுச் சென்றான்.

மிருதுளா ஹாஸ்டலிலேயே வாழ்க்கையை கழித்தவள் இப்படிப்பட்ட அக்கறையையும் உபச்சாரத்தையும் அவள் தாயிடம் கூட அனுபவித்ததில்லை. இந்த மூன்று நாட்களில் அவள் பார்வையில் அர்ஜுன் மிகவும் உயர்ந்துவிட்டான். மனதிற்குள் ஆழமாய் இறங்கிவிட்டான்.

மறுநாள் காலை மிருதுளா கண்விழிக்கும் போது எங்கிருக்கிறோம் என்பதை உணரவே சில நொடிகள் பிடித்தது. அந்த அளவிற்கு ஆழ்ந்து உறங்கியிருந்தாள். எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு அறையிலிருந்து அவள் வெளியேறிய போது அர்ஜுன் ஹெட்போனை மாட்டிக் கொண்டு லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான்.

இரவு மிருதுளா உறங்கச் செல்வதற்கு முன் அவன் படுக்கவில்லையா என்று கேட்ட போது தனக்கு வேலை இருப்பதாகவும் முடித்துவிட்டு படுப்பதாகவும் கூறியவன் படுக்கவே இல்லை என்று அவன் அமர்ந்திருந்த நிலையிலேயே தெரிந்தது.

அவள் அருகில் வரும் பொழுதே, “மார்னிங்..” என்றான் நிமிர்ந்து பார்க்காமலே.

காதில் ஹெட்போன்.. கண்களுக்கு லேப்டாப்.. அப்படியிருந்தும் அவளுடைய வருகையை உணர்ந்துவிட்டானே! - மிருதுளாவின் புருவங்கள் மேலேறின.

“தூங்கவே இல்லையா?” - வருத்தத்துடன் கேட்டபடி அருகில் வந்து அவன் தோள் தொட்டாள்.

“ப்ச்.. கொஞ்சம் வேலை..”

‘கொஞ்சம் வேலையா! இப்படி கூட ஒரு மனிதன் வேலை செய்வானா! அப்படி என்ன தான் வேலை! துப்பாக்கி பிடிக்கிற கை லேப்டாப்பில் என்ன செய்துக்கொண்டிருக்கிறது!' என்கிற சிந்தனையுடன் கணினி திரையை பார்த்தாள்.

நூற்றுக்கணக்கான ஆடியோ பைல்கள் வரிசைக்கட்டி நின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்டு ஏதோ கோட் வர்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

‘இரவு முழுக்க இதைத்தான் செய்து கொண்டிருந்தானா! கடவுளே!’ - பரிதாபமாக இருந்தது. எப்படி அவனுக்கு மண்டை வெடிக்காமல் இருக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது.

“அர்ஜுன்” - தன்னை மீறி அவள் குரல் உயர்ந்தது. ஹெட்போனையும் மீறி அது அவன் செவியை எட்டிவிட்டது போலும்.

“ம்ம்ம்” என்றபடி கணினியிலிருந்து கண்களுக்கும் காதுகளுக்கும் விடுதலை கொடுத்துவிட்டு நிமிர்ந்தான்.

வீங்கியிருந்த அவன் முகத்தையும் கோவைப்பழம் போல் சிவந்திருந்த கண்களையும் கண்டு திகைத்தாள் மிருதுளா.

“குண்டடி பட்டு இரண்டே நாள் தான் ஆச்சு.. அந்த இரண்டு நாளும் தொடர்ந்து ட்ரைவ் பண்ணிட்டிருந்தீங்க. வீட்டுக்கு வந்த பிறகாவது ரெஸ்ட் எடுக்கக் கூடாதா? வொய் டூ யு டூ திஸ்?” - கடுமையான கோபம் வெளிப்பட்டது அவளிடம்.

உருட்டி விழிக்கும் அந்த நீள்வட்ட கண்களையும், துடிக்கும் செர்ரிப்பழ இதழ்களையும் ரசனையுடன் பார்த்தவன், “ப்ரிட்டி..” என்றான் கிறக்கமாக.

“வாட்!” - அவளால் நம்பவே முடியவில்லை. சரியாகத்தான் கேட்டோமா என்று கூட தோன்றியது. ஆனால் அவனுடைய சிவந்த.. சோர்ந்த.. விழிகளில் தெரிந்த குறும்பும் நெருக்கமும் அவளுக்கு உண்மையை உரக்கக் கூறியது.

“திரும்ப கேட்கணுமா?” - தடித்த அவன் இதழ்களில் மென்புன்னகை எட்டிப்பார்த்தது.

சட்டென்று திரும்பிக் கொண்டாள் மிருதுளா. ‘பேச்சை பாரு.. திருடன்.. ரெஸ்ட் எடுக்கக் கூடாதான்னு கேட்டா ப்ரிட்டியாம். மேனிப்புலேட்டர்..’ - முணுமுணுத்து கொண்டே சமையலறைக்கு சென்று பாத்திரங்களை உருட்டினாள்.

அடுத்த சில நிமிடங்களில் அர்ஜுன் தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த போது இரண்டு கைகளிலும் பீங்கான் கப்புகளோடு அவன் முன் வந்து நின்றாள்.

“பால் இல்ல.. அதான் திரும்பவும் க்ரீன் டீ.. ம்ம்.. குடிங்க” - தனக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அவனிடம் ஒன்றை நீட்டினாள்.

சட்டென்று இறுகிய அர்ஜுனின் முகம் உடனே இயல்பாக மாறியது. ஒரு நொடி தான் என்றாலும் அவனிடம் தோன்றி மறைந்த மாற்றத்தை கவனித்துவிட்டாள் மிருதுளா.

காரணத்தை அவள் யோசிப்பதற்கு முன்பே, “சா..ரி..” என்று ராகம் போட்டபடி எழுந்தவன், அவள் நெற்றியோடு நெற்றியை லேசாக முட்டி, “நாட் இன் மூட்” என்றான்.

“டீதானே! இதை குடிக்க என்ன மூட் வேணும்? நைட்டெல்லாம் தூங்கலை.. தலை வலி போகுமே!”

“தலைவலி போக, டீ குடிக்கனும்னு யார் சொன்னது? பத்து நிமிஷம் மெடிட்டேட் பண்ணினா இரண்டு மணி நேரம் தூங்கின மாதிரி. தலைவலியெல்லாம் பறந்துடும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

ஒன்றும் புரியாமல் அவன் முதுகை வெறித்துக் கொண்டு நின்றவள் மனதில், ‘சமையலில் யாரையும் நம்புவதில்லை என்றானே!’ என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

‘மிராஜ்பாடாவில் டேவிட் கூட பாபிம்மாவை சமைக்க விடவில்லையே! இந்த கூட்டத்தில் எல்லோருமே இப்படித்தானா?’ என்று யோசித்த போதுதான், ‘ஐயோ! டேவிட்டிடம் சொல்லிவிட்டு வரவில்லையே! எத்தனை சிரத்தையாக நம்மை பார்த்துக் கொண்டான்! ஒரு நன்றி கூட சொல்லவில்லையே!’ என்று பதறினாள்.

உடனே அர்ஜுனை தேடிக் கொண்டு அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.

குளிக்க செல்வதற்கு உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவன், “அர்ஜுன்” என்று குரல் கொடுத்தபடி அவள் வேகமாக உள்ளே வருவதை கண்டு, “என்ன ஆச்சு?” என்று முன்னே வந்தான்.

“அர்ஜுன், நாம டேவிட்கிட்ட சொல்லாமலே கிளம்பிட்டோம்..” - அவள் குரலில் பதட்டம் தெரிந்தது.

“நாம அங்கிருந்து கிளம்பி நாலு நாள் ஆச்சு. இன்னைக்கு என்ன திடீர்ன்னு இவ்வளவு டென்ஷன்?”

அவள் சங்கடத்துடன் மௌனமானாள். அவ்வளவு உதவி செய்தவனை ஒரு முறை கூட நினைக்கவில்லை என்று சொல்லவே அவளுக்கு வாய் வரவில்லை.

“நாம எவ்வளவு டென்ஷன்ல இருந்தோம்.. யாரோ நம்மள ஃபாலோ பண்ணி வந்து ஷூட் பண்ணிட்டாங்க.. அம்மாவை காணும்.. எங்க போனாங்கன்னு எதுவும் தெரியல.. இவ்வளவுக்கும் நடுவுல.. டேவிட்.. எனக்கு நியாபகமே வரல அர்ஜுன்” - அவள் குரல் வெகுவாய் இறங்கிவிட்டது.

அவள் கூறியது அத்தனையும் உண்மை என்றாலும் முதல் நாள் முழுக்க அவளுக்கு எந்த பிரச்சனையும் தெரியாது.. மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஆனாலும் டேவிட்டின் நினைவு அவளுக்கு வரவில்லை. அந்த அளவுக்கு அவனுடைய அருகாமை அவளை பாதிக்கிறது.. வாவ்! - அர்ஜுனின் மனம் துள்ளியது.

“தட்ஸ் ஓகே. அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை” - இலகுவாகக் கூறினான்.

“இல்ல அர்ஜுன்.. பாபிம்மாகிட்ட கூட எதுவும் சொல்லல. இரண்டு பேரும் பயந்திருப்பாங்க.. கண்டிப்பா தேடியிருப்பாங்க. ப்ளீஸ் அர்ஜுன்.. போன் பண்ணுங்க. நாம சேஃபா இருக்கோம்னு சொல்லுங்க” - வற்புறுத்தினாள்.

“அவனை இப்போ காண்டாக்ட் பண்ண முடியாது.”

“ஏன்?”

“டெல்லி போயிருக்கான். நான் விட்டுட்டு வந்த வேலையை முடிக்க.”

“நாம எங்க இருக்கோம்னு தெரியுமா?”

“எங்க இருக்கோம்னு தெரியாது. சேஃபா இருக்கோம்னு தெரியும்.”

“ஓ!” - அவர்கள் இருவரும் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் நிம்மதியடைவதற்கு பதில் மனம் இன்னும் கவலைப்பட்டது. அர்ஜுன் தப்பித்துவிட்டான். மொத்த குற்றமும் இப்போது அவள் பக்கம் திரும்பிவிட்டது. அவளும் தான் இவ்வளவு நன்றி கெட்டவளாக இருந்திருக்க வேண்டாம் - மனசாட்சி குத்த முகம் வாடிப்போனாள் மிருதுளா.
 
Top Bottom