Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பெண்கள் டாட் காம்

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
பெண்கள் டாட் காம்
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
வாசக லட்டுகளுக்கு வணக்கம். நான் உங்கள் ஷிவானி செல்வம். முதலில் கதைத்திரி அமைத்துக் கொடுத்த நித்யா கார்த்திகன் அக்காவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'பெண்கள் டாட் காம்'

இது எனது எட்டாவது படைப்பு. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதில்லையா? இதுவரை நாவல்கள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த நான் முதல்முறையாக சுயபுனைவு எழுத முயன்றிருக்கிறேன். இதுக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

அத்தியாயம் 1



எனது மறுஜென்மமான நீ என்னுடன் சிறிதுகாலம் பயணிக்கவே இதை எழுதுகிறேன்.


வாசிக்கிறாயா? இப்போது நான் என்ன செய்கிறேன் தெரியுமா?


மூன்றாவது அத்தியாயத்தை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல், நீண்டநேரம் கைப்பேசியின் வெண்திரையையே வெறித்துக் கொண்டிருக்கிறேன். இத்தோடு, சின்னய்யா, சம்யுக்தா, ராகவ் கிருஷ்ணா, அவன், அவள், கோபமாக, சமையலறை என்று ஏழு வார்த்தைகளை தட்டச்சு செய்து அழித்துவிட்டேன். சலிக்காமல் மீண்டும் கர்சர் என்ன என்னவென்று கேட்கிறது.


ச்சே! நான் இப்படி திடீரென்று நாவல் எழுத குதித்திருக்கக்கூடாது. இல்லையில்லை, நானாக குதிக்கவில்லை. இதை நான் முதலில் தீவிரமாக எடுக்கவேயில்லையே. ஏதோ தெரியாத்தனமாக இரண்டு அத்தியாயங்கள் எழுதிவிட்டேன். அதை அந்த மகளிர் டாட் காமிற்கும் அனுப்பிவிட்டேன். அவர்கள் புகழ்ந்தது போல் எனது கதை ஆஹா ஓஹோவென்றெல்லாம் இல்லையென்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஏன் முழுக்கதையையும் முடித்துத் தருவதாக அவர்களுக்கு வாக்களித்தேன்? ஆசை; ஆர்வம்; இப்போது அனுபவிக்கிறேன்.


மீண்டும் மீண்டும் அந்த இரண்டு அத்தியாயங்களையுமே வாசிக்கிறேன். சுருக்கமாக அந்த அத்தியாயங்கள் சொல்லும் கதை இவை தான். தன் வீட்டிற்கு வேலை செய்ய வரும் ஏழை நாயகியை பணக்கார நாயகன் பிடித்து முத்தமிட்டு விடுகிறான். அதை நினைத்து நினைத்து அவளுக்கு குளிர்ஜுரம் வந்துவிடுகிறது.


எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அத்தியாயங்களை பதிவிட்டு இரண்டு நாளில் மட்டும் இரண்டாயிரம் பேர் வாசித்திருக்கிறார்கள். தொடக்கம் அருமையாக இருக்கிறது; ப்ளீஸ் தினமொரு அத்தியாயம் பதிவிடுங்கள் என்று சொன்னவர் எண்ணிக்கை நூற்றி அறுபது.


அதற்குள் மகளிர் டாட் காமிடமிருந்து ஒரு மெசேஜ். "நான் உங்களை எங்கள் வாட்ஸப் குரூப்பில் சேர்க்கலாமா?" என்கிறார்கள்.


வாட்ஸப் குழு என்றால் நிச்சயம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் இருப்பார்கள்; அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டும் என்பதால் "ம்ம் சேர்க்கலாம் மேம்" என்றேன் வேகமாக.


கிளிங்.. அடுத்த நிமிடம் சேர்க்கப்பட்டேன். குழுவின் பெயர் 'சைலெண்ட் பிடிஎஃப் ரீடர்ஸ்'. இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. முதல் வேலையாக அந்த குழுவின் நோக்கத்தை அறிய முயன்றேன். துரோகிகளுக்கு இங்கு இடம் கிடையாது என்றிருந்தது. 'துரோகிகள்?' யாரென்பது அப்போது எனக்கு விளங்கவில்லை.


குழுவில் மொத்தம் நூற்றி இருபத்தேழு பேர் இருந்தார்கள். சந்தேகமேயின்றி அனைவரும் பெண்கள். ஆனால், நான் நினைத்தது போல் எழுத்தாளர்கள் மட்டுமின்றி மகளிர் டாட் காம் வாசகர் சிலரும் கலந்திருந்தார்கள். அனைவரும் பேஸ்புக் வழியாக இணைந்தவர்களாம். ஃபேக் ஐடிக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


எது எப்படியோ நானும் ஒரு எழுத்தாளர் என்று ஃபார்ம் வாங்கி விட்டேன். இப்போது எப்படியாவது எனது மூன்றாவது அத்தியாயத்தை நான் எழுதியாக வேண்டும். ச்சே! இதை எப்படி மறந்தேன்? அத்தியாயம் மூன்று போடவேண்டும் முதலில்.


***************


அத்தியாயம் 3


ராகவ் கிருஷ்ணாவிற்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை. அறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.


நான் இருமுறை சொல்லியனுப்பியும் அவள் வரவில்லையென்றால் அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? எனக்கு கீழே வேலை பார்ப்பவள், என் வீட்டு வேலைக்காரி, நான் கூப்பிட்டும் வராமல் இருக்கிறாள் என்றால் இனி அவளுக்கு இவ்வீட்டில் இடமில்லை. இதை அவளிடம் சொல்வதற்காக நேரே அவளறை சென்றான் ராகவ் கிருஷ்ணா.


அப்படி என்ன காய்ச்சல் அவளுக்கு! எல்லாம் நடிப்பாக இருக்கும் என்று எண்ணி தான் அவன் அங்கு சென்றதே.


ஆனால், உண்மையில் குளிரை சமாளிக்க முடியாமல் தலைவரை கம்பளியை இழுத்து மூடிப்படுத்திருந்தாள் சம்யுக்தா.


அந்த அறையைச் சுற்றி கண்களை அலையவிட்டான் ராகவ் கிருஷ்ணா. அது ஒரு பழைய சாமான் போட்டு வைக்கும் அறை. தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டை ஒன்றை எடுத்து மூக்கை மூடியவன் அவள் பெயரைச் சொல்ல விரும்பாமல், தரையில் படுத்திருந்தவளை, ஹே! ஹே! என்று தனது ஷூக்காலால் தட்டி எழுப்பினான்.


அரக்கப்பறக்க விழித்தவள், எழுந்து உட்கார்ந்து பேந்தபேந்த விழித்தாள். பின், ராகவைப் பார்த்ததும் விலகியிருந்த தனது தாவணியை சரி செய்தாள்.


ராகவுக்கோ அவளது செய்கை வெறுப்பாக இருந்தது. மூக்கிலிருந்த கைக்குட்டையை எடுத்து, உனக்கென்ன மனசுல பெரிய உலக அழகின்னு நினைப்பா? வேகமா தாவணியை சரி செய்யுற? இது மாதிரி ஆயிரம் தாவணியை கிழிச்சுப்போட்டவன் நான் என்றான் வீராவேசமாக.


மிரண்டு பார்த்தவள் தட்டுத் தடுமாறி எழுந்து நின்றாள்.


நேற்று அவன் முத்தம் கொடுத்த கோவம்பழ உதடுகள் பயத்தில் துடித்துக் கொண்டிருந்தன. அவளை நெருங்கி வந்தவன், இங்கப்பாரு என் தேவைகளை கவனிச்சிக்கத்தான் என் அம்மா உன்னை இங்க வேலைக்கு வச்சிருக்காங்க. நான் உனக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளி. நான் சொல்றதையெல்லாம் நீ கேட்டு தான் ஆகனும். ஒருவேளை உனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா வேலையை விட்டு நின்னுடு என்றதும், இல்ல.. இல்ல சின்னய்யா என்று பதறினாள் சம்யுக்தா.


அப்போ உனக்கு வேலைல இருக்க விருப்பம் தான்? - இடக்காகக் கேட்டான் அவன்.


ஆமா சின்னய்யா என்று பம்மினாள் அவள்.


நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? எட்டுமணியானா எனக்கு டேபிள்ல காபி ரெடியா இருக்கணும்னு சொன்னேனா இல்லையா? நீ இப்படி எதுவும் செய்யாம இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தா எனக்கு எப்படி காபி வரும்? நீ எப்படி வேலைல இருப்ப? ம்ம்? என்று உறுமினான் ராகவ்.


அவனுக்கு இன்னும் கோபம் மட்டுப்படவில்லை. சொல்லு! இன்னும் ஏன் நீ எனக்கு காபிபோட்டு எடுத்துட்டு வரலை? என்றான்.


அதுவந்து சின்னய்யா மாலதி சித்தி தான் நான் போய் கொடுக்கிறேன்னு சொன்னாங்க என்றவள் சொன்னது தான் தாமதம், அவங்க இங்க தோட்ட வேலைக்காக வந்திருக்காங்க. சமையல் வேலைக்காக இல்ல என்று கத்தினான் ராகவ்.


மன்னிச்சிருங்க சின்னய்யா. இனி இப்படியொரு தப்பு நடக்காது என்று நகர முற்பட்டவளை, ஆமா நான் குடிக்கிறது; பொண்ணுங்களை என் ரூமுக்கு கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிறது; எல்லாத்தையும் என் அம்மாக்கிட்ட வத்தி வச்சியே, நேத்து நான் உனக்கு முத்தம் கொடுத்ததையும் சொல்லிட்டியா? என்றபடியே அவன் அவளிடையைப் பற்றி இழுக்க, அவன் அணைப்பிலிருந்து வெளிவர போராடியவள், இல்ல சின்னய்யா சொல்லல. இனி நான் எதையும் பெரியம்மாகிட்ட சொல்லமாட்டேன். ப்ளீஸ் சின்னய்யா! என்னை விட்டிருங்க என்று கெஞ்சினாள்.


காய்ச்சல் என்பதாலோ என்னவோ அவளுடலும் மூச்சும் ரொம்பவே சுட்டது அவனை. ம்ம் குட்கேர்ள், இப்படித்தான் இருக்கணும். இனி ஏதாவது அம்மாக்கிட்ட போச்சு, விளைவு மோசமா இருக்கும். போ! எனக்கு காபிபோட்டு எடுத்துட்டு வா! என்று அவளை விடுவித்தான்.


விடுபட்டதும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சமையலறை நோக்கி ஓடினாள் சம்யுக்தா.


அறையில் தனித்து நின்றவனோ, உன்னை இந்த வீட்லயிருந்து துரத்தினா தான் எனக்கு நிம்மதியென்று கருவிக்கொண்டான்.


உண்மையில் சம்யுக்தா வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் எல்லாம் அவனுக்குள் இவ்வளவு வெறுப்பு இல்லை. அவனது அம்மா கூறிய அவள் சோகக்கதை, அவள் மீது அவனுக்கு இரக்கத்தையே உண்டாக்கியிருந்தது.


ஆனால், கடந்த இரண்டு நாள் சம்பவம் அவள் மீதான அவன் அபிப்ராயத்தையே தலைகீழாய் மாற்றிவிட்டது. இதற்கு முன்பு வேலை பார்த்தவர்கள் யாரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை அவள் செய்துவிட்டாள்.


இவ்வளவு நாளும் அவன் தன் அன்னையிடம் உண்டாக்கி வைத்திருந்த 'நல்லவன்' பிம்பத்தையே அவள் சுக்குநூறாய் உடைத்துவிட்டாள்.


நான் எதைக் குடித்தால், யாரோடு கூத்தடித்தால் இவளுக்கென்ன? பெரிய அரிச்சந்திரன் பேத்திக் கணக்கா எல்லாத்தையும் அம்மாக்கிட்ட சொல்லியிருக்கா என்று கொதித்தான் அவன்.


ராகவின் அன்னை வசுந்தரா சாதாரணமாக இதைப்பற்றி விசாரித்திருந்தால் கூட அவன் இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான். அவன் நடத்தைக்கெல்லாம் காரணம் அவனது அப்பாவின் ஜீன் என்றது தான் அவனது ஆத்திரத்தின் அளவை அதிகரித்திருந்தது.


தன்னைப் பற்றி அவரிடம் கூறியது யாரென்று யோசித்தவன், புதிதாக வந்தவளான சம்யுக்தாவையே சந்தேகித்தான்.


நினைத்தது போலவே தூண்டித்துருவி விசாரித்ததில் அவளும் உண்மையை ஒப்புக்கொண்டாள். மேலும், தன்னை மன்னித்துவிடும்படியும் கெஞ்சினாள். ஆனால், அவனுக்குத்தான் அவளை மன்னிக்க மனமில்லை.


*****


தட்டச்சு செய்தவரை போதுமென்று கைப்பேசியை அணைத்தேன். மாலைவேளையில் ஏதோவொரு சக்தி வந்து ஆக்ரமிக்க, வேகவேகமாக மீதியையும் தட்டச்சு செய்து மகளிர் டாட் காமிற்கு அனுப்பினேன். கிர்... கிர்.. என்று உடனே மகளிர் டாட் காம் உரிமையாளரிடமிருந்து அழைப்பு வந்தது. முதல்முறையாக அவரிடம் பேசப்போகிறேன் என்பதால் மிகுந்த பதற்றமாக இருந்தது எனக்கு. பவ்யமாக ஏற்று "ஹலோ" என்றேன்.


"ஹலோ, ரைட்டர் ஷிவானியா?"


"சொல்லுங்க மேம், நான் தான் பேசுறேன்"


"ஷிவானி, உங்க வாய்ஸ் சின்னப்பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கும்மா. ஆமா நீங்க என்ன பண்றீங்க?"


"எம்எஸ்சி ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன் மேம்"


"ஓஹ்! எப்படி ஷிவானி உங்களுக்கு எழுத இன்டெரஸ்ட் வந்தது"


'அதானே எப்படித் தோன்றியது?' "என்னமோ தெரியல மேம். சும்மா தோணுச்சு, எழுதிட்டேன்"


"சூப்பர்ப்பா, உங்க கதையை நான் வாசிச்சேன், ரொம்ப நல்லாயிருந்தது. நீங்க கதையை முடிச்சதும் நம்ம பப்ளிகேஷன்லயே புக் போட்டிடலாம்"


"புக்கா! மேம், நான் இன்னும் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை மேம். முதல்ல கதையை முடிப்பேனான்னு கூட தெரியலை மேம்"


"அதெல்லாம் முடிப்பீங்க. முடிக்க வச்சிருவோம். இன்னும் உங்க ரைட்டிங்ல வர்ணனைகள்லாம் மிஸ்ஸிங்டா. அதெல்லாம் எழுத ட்ரை பண்ணுங்க. அப்புறம் ஒரு அத்தியாயத்துக்கு ஆயிரம் டூ ஆயிரத்தைந்நூறு வார்த்தையாவது இருக்கணும்டா"


"அய்யயோ! அவ்வளவு வார்த்தையா?"


"ஆமாடா, உங்களுக்கு ஸ்திரீ டாட் காம் தெரியுமா? அங்கல்லாம் அத்தியாயத்துக்கு ரெண்டாயிரம் வார்த்தை இருக்கணும். இல்லைன்னா வெப்சைட்காரி அடிச்சுத் துரத்திடுவா?"


"ஓகே மேம், இனி நான் எழுத ட்ரை பண்றேன். அப்புறம் நான் கேட்டவுடனேயே உங்க வெப்சைட்ல எழுத பர்மிஷன் தந்ததுக்கு தாங்க்ஸ் மேம். அப்புறம் உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும் மேம்"


"சொல்லுடா"


"ஏன் மேம் முதல்ல நான் சொன்ன தலைப்பு வேணாம்னு நீங்க ஒரு தலைப்பு வச்சீங்க?"


என்னால் இன்னும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதோவொரு உந்துதலில் கேட்டுவிட்டேன்.


"நீங்களே சொல்லுங்க 'காதல் நீ காயம் நீ' நல்லாயிருக்கா? இல்ல, 'சில்மிஷம் செய்யாதே சித்ரகுப்தா' நல்லாயிருக்கா? ரொம்ப கிலுகிலுப்பா தலைப்பு இருந்தா தான் ரீடர்ஸ் படிப்பாங்க ஷிவானி"


"பட், எனக்கந்த தலைப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது மேம். நீங்க மாத்தினதும் ரொம்ப கஷ்டமாயிருந்தது"


"நீங்க புதுசில்ல ஷிவானி? போகப்போக எல்லாம் புரிஞ்சிப்பீங்க. ஓகேடா இன்னொரு கால் வருது. தொடர்ந்து எழுதுங்க. ஏதாவது டவுட்னா வாட்ஸப்ல மெசேஜ் பண்ணுங்க, ஓகே?"


"ஓகே மேம். பை மேம்"


நீண்ட நேரத்திற்கு என் இதயத்துடிப்பு சீராகவில்லை. எவ்வளவு பெரிய எழுத்தாளரிடம் நான் பேசியிருக்கேன் என்று என் மனம் குதூகலித்தது. அப்போது எது எப்படியிருந்தாலும் சரி நாம் இந்தக் கதையை முடித்தே ஆகவேண்டும் எனும் தீர்மானம் பிறந்தது எனக்குள்.

 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

பொங்கவும், என் மனதில் தங்கவும் கீழே உள்ள கருத்துத்திரியை உபயோகிக்கவும்🙂

https://www.sahaptham.com/community/threads/comment-thread-for-shivanis-novels.356/
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 2



வர்ணனை? வர்ணனை? இப்போ நான் அந்த வர்ணனைக்கு எங்கேப்போவேன்? என்று புலம்பிய நான் முயற்சி செய்தபோது, நானே எதிர்பாராத அளவுக்கு அது அவ்வளவு அழகாக வந்திருந்தது. எனக்குள்ளும் ஒரு குட்டிக் கம்பன் இருப்பதை அப்போது தான் நான் தெரிந்துகொண்டேன்.


தட்டச்சு செய்ததை மிக ஆவலாக அந்த மகளிர் டாட் காமிற்கு அனுப்பி வைத்தேன்.


ஒரு மாபெரும் பாராட்டுப் பத்திரத்துக்காக நான் காத்திருந்த அவ்வேளையில் தான் வாட்ஸப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்தது. உண்மையில் அதைக் கேட்டதும் எனது ஆர்வமனைத்தும் வடிந்துவிட்டது.


"ஷிவானி, நாலாவது அத்தியாயத்தை வாசிச்சேன். ரொம்ப எழுத்துப்பிழை இருக்கு. சரி பண்ணுங்க. அப்புறம் டயலாக்ஸ் வர இடமெல்லாம் கொட்டேஷன்குள்ள வரணும்மா"


ஒரு வார்த்தைக்கூட நான் எழுதிய வர்ணனை பற்றி இல்லை. அதுக்கூட பரவாயில்லை. அதெப்படி அவர் என் எழுத்தில் பிழை காணலாம்? "மேம், மறுபடியும் நான் வாசிச்சிப் பாத்தேன். நீங்க சொல்ற மாதிரி எழுத்துப்பிழை எதுவும் எனக்குத் தெரியலையே மேம்" என்றேன்.


தொடர்ந்து இருவரும் வாய்ஸ் மெசேஜிலேயே பேசிக்கொண்டோம்.


"ஷிவானி, லாஸ்ட் பேரால திணறினான் போடணும். நீங்க திணரினான்னு சின்ன 'ர' போட்டிருக்கீங்க பாருங்க"


"அய்யயோ! ஆமா மேம், சாரி மேம். நாலு தடவை செக் பண்ணினேன். அப்படியும் எப்படி கவனிக்காம விட்டேன்னு தெரியல. இப்போ கரெக்ட் பண்ணிடுறேன் மேம்"


"நீங்களாவது பரவாயில்ல ஷிவானி. ரைட்டர் லயாக்கு சின்ன'ரா' பெரிய'றா' வித்தியாசம் கூட தெரியல. அது இங்கிலீஷ் மீடியம்ல படிச்சதாம். நாம இது வராது அதான் வரும்னு சொன்னாக்கூட ஏன் அப்படின்னு கேட்குது"


"மேம், நீங்க ஏதோ டயலாக்ஸ்லாம் கொட்டேஷன்குள்ள வரணும்னு சொன்னீங்களே?"


"ம்ம் ஆமா, இப்போ உங்களுக்கு ஒரு வேர்ட் ஃபைல் அனுப்பியிருக்கேன் பாருங்க. அதுல இருக்குற மாதிரி தான் எழுதணும். ரைட்டர் மரியா இப்போ தான் புக்குப் போட அனுப்பிச்சது. அதை அப்படியே உங்களுக்கு அனுப்பியிருக்கேன். வேணும்னா கதையை வாசிச்சிக்கங்க. பட், வாசிச்சிட்டு டெலீட் பண்ணிடனும், ஓகே? வேற யாருக்கும் அனுப்பிடாதீங்கப்பா"


"ஓகே மேம்"


பேசி முடித்ததும் அந்தக் கதையை தரவிறக்கிப் பார்த்தேன். எழுத்தாளர் மரியாவின் கதை என்றால் எனக்கு உயிர். ஆனால், தற்போது என் மனம் அந்தக் கதையில் லயிக்கவில்லை. முதல்முறையாக ஒரு கதையில் கதை தவிர்த்து மற்றவற்றை கவனிக்கிறேன். எழுத்தாளர் மரியா ஒவ்வொரு உரையாடல் முடியும் போதும் மூன்று புள்ளிகள் வைத்திருந்தார், காரணமேயில்லாமல். ஒவ்வொன்றாக உள்வாங்கினேன். ஆனால், முதல் பக்கத்தோடு சரி; அதன்பின், அந்தக் கதையை வாசிக்கும் ஆர்வமே எனக்கு வரவில்லை. காரணமும் அப்போது புரியவில்லை.


நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் களமிறக்கும் விதமாக அந்த நான்காவது அத்தியாயத்தை மறுசீரமைத்தேன். அனுப்பி வைத்தால் எதிர்புறமிருந்து, "ஓகேப்பா" என்ற ஒற்றைப் பதிலே சாவதானமாக வந்தது.

இம்முறையும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், அதையும் தாண்டிய இன்னொன்று என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை. அது நான் இதற்கு முன்பு அனுப்பிய அத்தியாயங்களிலும் மேற்கோள் சேர்க்கத் துடித்தது.


ஆனால், ஒருமுறை பதிவிட்டால் மகளிர் டாட் காமில் மாற்றியோ திருத்தியோ மறுபதிவிட இயலாதாம். பெரிய மகாபாரதம், பைபிள் மாதிரி பண்ணினார்கள். எனக்குள் ஒரு வெறி, என் கதையில் பிழையேதும் இருக்கக்கூடாதென்று.

"அவற்றையெல்லாம் நீக்கி விடுங்கள், நான் முதலில் இருந்து அத்தியாயங்களை அனுப்புகிறேன்" என்றேன்.

மகளிர் டாட் காம் உரிமையாளரோ, "வீவ்ஸ் கவுண்ட் போயிடும் ஷிவானி" என்று பதறினார்.


இன்று வரையில் எட்டாயிரம் பார்வைகள் போயிருந்தது. நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. என் கதை பிழையாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே என் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.


அவரிடம், "போனால் போகட்டும் மேம்" என்றேன் அசட்டையாக.


அவருக்கு அது கோபத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். "புரியாம பேசாத ஷிவானி, வீவ்ஸ் கவுண்ட் அதிகமா இருந்தா தான் உன் கதையை இன்னும் நாலு பேர் வாசிப்பாங்க" என்றார் அதட்டலாக.


அதன்பின், என்னால் மறுத்துப் பேச முடியுமா என்ன? என்னிடம் இருக்கும் அத்தியாயங்களில் மட்டும் மேற்கோள்களை சேர்த்துவிட்டு வாலை சுருட்டிக்கொண்டேன்.


முதல்முறையாக அவர் என்னிடம் காட்டிய கோபம் இது. இதை நான் நாட்காட்டியில் எல்லாம் குறித்து பெரிதாக்கவில்லை. ஆனால், முதல் அத்தியாயம் அனுப்பியபோதே அவர் என்னிடம் இந்தப் பிழைகளை சுட்டிக்காட்டாதது ஏதோ போல் இருந்தது. ஒருவேளை முதல்நாளே இவற்றை அவர் சொல்லியிருந்தால் நான் கதையெழுதும் முடிவையே கைவிட்டிருப்பேனோ என்னவோ!


***********


தத்தி தத்தி இப்போது ஆறு அத்தியாயங்கள் வரையிலும் முன்னேறியிருக்கிறேன். இன்று காலையில் தான் அந்த ஆறாவது அத்தியாயத்தையும் அனுப்பி வைத்தேன். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் நிகழாத சங்கடம் ஒன்று இப்போது நிகழ்ந்திருக்கிறது. நான் எழுதிய அந்த ஆறாவது அத்தியாயத்தை மகளிர் டாட் காம் உரிமையாளர் எதற்கு வாட்ஸப் குழுவில் போட வேண்டும்? என்று நீண்டநேரமாக நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


அந்தக் குழுவில் சேர்ந்ததிலிருந்தே இதுவரை ஒருமுறைக்கூட நான் மெசேஜ் போட்டதில்லை. நடனப்போட்டி நடுவர் போல வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்திருக்கிறேன்.


தப்பித்தவறி யாராவது ஒருவர், 'சூப்பரான ஆன்டிஹீரோ ஸ்டோரீஸ் சொல்லுங்கப்பா' என்று கேட்டுவிட்டால் போதும், உடனே புதிதாக வெளியான அனைத்து குடும்ப நாவல்களின் பெயர்களும், பிடிஎஃப்களும் வரிசை கட்டி வந்துவிடும்.


உண்மையாகவே அந்த பிடிஎஃப்பை அவர்கள் வாசிக்கிறார்களா? என்ற சந்தேகம், இரண்டு நாளுக்கொருமுறை ஒருவர், "சூப்பரான ஆன்டிஹீரோ ஸ்டோரீஸ் சொல்லுங்கப்பா" என்று கேட்டபோது தான் வந்தது.


புத்தகங்கள் மட்டுமல்லாது சில அரைநிர்வாண புகைப்படங்களும் அவ்வப்போது குழுவில் பகிரப்படும். அதற்கு குழுவில் உள்ளோர் சிலர் கவிதை எழுதுவர்.


பிறகு, காலையானால் மகளிர் டாட் காம் உரிமையாளர் எங்கிருந்தாவது ஒரு பூப்போட்ட குட்மார்னிங் படத்தை தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். முந்நூற்றி அறுபத்தைந்து நாட்களுக்குமே அவரிடம் அவ்வாறு ஒரு புகைப்படம் இருக்குமென்பது என் கணிப்பு.


இன்னொரு அம்மா இருக்கிறார். தினம் காலையில் தன் வீட்டில் பாடும் சுப்ரபாதத்தை அனுப்பி வைத்து இம்சிப்பார். அதற்கும் சிலர் மனசாட்சியேயின்றி, "தேன்சொட்டும் குரல்; சூப்பர்" என்று சிலாகிப்பர்.


குழுவில் ஒரே சமயத்தில் இருபது பேர் தட்டச்சு செய்வதைப் பார்த்தால் டெனட் படத்தை முதல்முறை பார்ப்பதுபோலவே இருக்கும்.


அதிலும் யாருக்காவது பிறந்த நாள் என்றால் குழுவே அமளிப்படும். "என்ன ட்ரெஸ்? என்ன பிளான்?" என்று யார்யாரோ வந்து துளைப்பார்கள். நியூயார்க்கில் இருக்கும் அம்மாவிற்காக நியூசிலாந்தில் இருக்கும் அம்மா பிரியாணி செய்து செல்ஃபி போடுவார்.


சிலநேரம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்; இவ்வளவு பேர் இருக்கும் ஒரு குழுவில் எப்படி தன் சொந்த விருப்பு வெறுப்புகளையெல்லாம் இவர்களால் கூச்சமேயின்றி பகிர்ந்துகொள்ள முடிகிறதென்று.


பின்பு, என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். அவர்களின் சலித்துப்போனதொரு வாழ்க்கை சுழற்சியில் இந்தக் குழு ஒரு வசந்தமாக தோன்றியிருக்கலாம். இல்லை, தங்கள் மனவடிகால்களுக்கு அவர்கள் இதை உபயோகித்திருக்கலாம். இஷ்! ஒரு நிமிடம், இவ்வளவு உளவியல் ஆராய்ச்சி செய்யும் நான் என் அம்மாவை இந்தக் குழுவில் சேர அனுமதிப்பேனா என்றால்… பெரிய நோ. அது 'அஜால் குஜால் ஆன்ட்டீஸ் குழு' என்பது என்னையறியாமலேயே எனக்குள் பதிந்துபோய் இருந்தது.


எனக்கு வியப்பெல்லாம் எப்படி மகளிர் டாட் காம் உரிமையாளர் இவர்கள் ஒவ்வொருவரையாக அடையாளம் கண்டு ஒன்றிணைத்தார் என்பது தான்.


தொடர்ந்து அறிவிப்புகளாக வர, ஒரு கட்டத்தில் அந்தக் குழுவை சைலெண்ட் மோடில் போட்டுவிட்டேன். இப்போது கூட மகளிர் டாட் காம் உரிமையாளர் கூறியிராவிட்டால் அந்த குழுவிற்குள் சென்று நான் பார்த்திருக்கவே மாட்டேன்.


வாட்ஸப் நான் படிக்க வேண்டியவையாக மொத்தம் நான்காயிரம் மெசேஜ்களை காண்பித்தது. அருகில் கீழ்நோக்கிய அம்புக்குறி இருந்ததால் நிம்மதிப் பெருமூச்சுடன் தற்போதைய உரையாடலுக்குச் சென்றேன்.


ஓஹ் மை காட்! எவ்வளவு பாராட்டுகள் எனக்கு. அங்கிருப்பவர்கள் அனைவரும் என்னைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


எனது ஆதர்ச எழுத்தாளர் ஒருவர், "சூப்பர் ஷிவானி" என்றபோது எனது உடல் காற்றில் மிதந்தது.


"அனைவருக்கும் நன்றி" என்று நான் தட்டச்சு செய்த சமயத்தில் தான் எனது ஆதர்ச எழுத்தாளர் தனி உரையாடலில், "ஹாய் ஷிவானி" என்றார்.


நானும், "ஹாய் மேம். நான் உங்களோட மிகப்பெரிய ஃபேன் மேம்" என்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேன்.


ஏனோ xxx என்ற வாசகர் ஐடியில் நீங்கள் பிளாக் செய்தது என்னைத்தான் என்று என்னால் அவரிடம் கூற முடியவில்லை.


அவர், "உங்கக் கதை நல்லாயிருக்கு ஷிவானி. தொடர்ந்து எழுதுங்க" என்று என்னை ஊக்கப்படுத்தினார்.


நான் நல்லப்பிள்ளை போல், "நன்றி மேம்" என்றுவிட்டு, அவர் என்னை பிளாக் செய்தபோது நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தேன்.


தொடர்ந்து அவரின் கதைகளை வாசித்து வந்த நான் அவருக்கு ஒரேயொரு மெசேஜ் அனுப்பி தான் ஜென்ம விரோதியானேன். ஒன்றுமில்லை, "மேம், நேத்து நீங்க பதிவிட்ட அத்தியாயம் சூப்பர். அதுல அவள் கதற கதற துடிக்கத் துடிக்க அவன் அவள் கற்பை சூறையாடினான்; விடியலின் துவக்கத்தில் ஒரு தாம்பத்தியம் நிகழ்ந்து முடிந்திருந்ததுன்னு எழுதியிருந்தீங்களே, தாம்பத்தியத்துக்கு அர்த்தம் செக்ஸா? ரேப்பா?" என்று கேட்டேன். உடனே பிளாக்.


பழையவற்றை அசை போட்டுக்கொண்டே வாட்ஸப் குழு சென்று பார்த்தபோது ஒருவர், "இந்தப்பொண்ணு உன்னை மிஞ்சிடும் போலயிருக்கு டார்லிங்" என்று மகளிர் டாட் காம் உரிமையாளரிடம் என்னை பாராட்டிக் கொண்டிருந்தார்.


அவரும் நான் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கொண்டு தனி உரையாடலுக்கு வந்தார். முதல் வாக்கியமே, "உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கும்மா" என்பது தான்.


நான் என்ன சொல்வதென்று தெரியாமல், "எல்லாம் உங்களால் தான் மேம்" என்றேன்.


உடனே கலர் கலராக பத்து ஹார்ட்டீன்ஸ் வந்தது அவரிடமிருந்து. அக்கணம் பத்து பேலே டான்சர்ஸ் என்னைச் சுற்றி பாட்டுப்பாடி நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.


மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி தான் என் மூளையை அமிலமாய் அரித்துக் கொண்டிருந்தது. 'அப்படி நான் என்ன எழுதிவிட்டேன்?'


எனக்கே மீண்டும் வாசிக்க வேண்டும் போல் இருந்ததால் அந்த அத்தியாயத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

--------------------

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

உங்களது கருத்துகளை நீங்கள் பதிவிட நம்பிக்கையான ஒரே இடம் கருத்துத்திரி🙂

https://www.sahaptham.com/community/threads/comment-thread-for-shivanis-novels.356/

 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

அத்தியாயம் 3



சில்மிஷம் செய்யாதே சித்ரகுப்தா-6



ராகவ் கிருஷ்ணா குளியலறைக்குள் சென்றிருந்த நேரம் பார்த்து அவன் அறைக்குள் நுழைந்திருப்பது நடுக்கத்தையே உண்டாக்கியது சம்யுக்தாவிற்கு.


ஆனால், இந்த வாய்ப்பை விட்டால் இனி அவனிடம் பேசுவது கடினம் என்பதால் காபிகோப்பையோடு அவனுக்காக காத்திருந்தாள் அவள்.


குளித்து முடித்து வெளியில் வந்தவனோ தனது அறையில் அப்படியொருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல் தன் காரியமே கண்ணாக அலங்காரக் கண்ணாடியை நோக்கி நடந்தான்.


அவனை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள் அவனுக்கு பின்னால் வந்து நின்றுகொண்டு, "நீங்க கண்டிப்பா வெளிநாட்டுக்குப் போய் தான் ஆகணுமா சின்னய்யா...?" என்றாள் மெதுவாக.


தலை வாருவதை நிறுத்தியவன் அவள்புறம் திரும்பிப் பார்த்தானே ஒரு பார்வை! சம்யுக்தா குலை நடுங்கி விட்டாள்.


"இல்ல நீங்க நம்ம கிராமத்துக்கு வருவீங்கன்னு பெரியம்மா எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க சின்னய்யா… இப்போப்போய் நீங்க வெளிநாடு போறது அவங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்..."


"கஷ்டம் அவங்களுக்கு மட்டும் தானா?... உனக்கில்லையா?... எனக்கில்லையா?..."


ராகவின் பார்வை தன்னை துளைத்தெடுக்க தலை குனிந்து கொண்டாள் சம்யுக்தா.


"சின்னய்யா, நீங்க நான் சொல்றதை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்க... நீங்க வேற, நாங்க வேற சின்னய்யா... உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது... பெரியம்மா உங்களுக்காக ஊர்ல பெரிய எடத்துல சம்பந்தம் பேசி முடிச்சிருக்காங்க... உங்களுக்கு நான் எந்த வகைலயும் பொருத்தம் கிடையாது சின்னய்யா..." என்று சற்றுமுன் தான் மனப்பாடம் செய்தது அனைத்தையும் கடகடவென்று அவனிடம் ஒப்பித்தாள் அவள்.


நெருங்கி வந்தவனோ கோபமாகக் கத்தினான். "எங்க என் கண்ணைப் பார்த்து சொல்லு... உனக்கு என்னைப் பிடிக்கலைன்னு...?"


சம்யுக்தாவின் குரலோ உள்ளேப்போனது. "என்னை இங்க நம்பி அனுப்பி வச்ச பெரியம்மாவுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது சின்னய்யா…"


இவ்வார்த்தைகளை சொல்லும் முன்னமே அவளது கண்களிரண்டும் கலங்கிவிட்டன. மனமோ சத்தமில்லாமல் கதறிக் கொண்டிருந்தது.


அவன் மிதமிஞ்சிய ஆத்திரத்தில் அவள் கொண்டு வந்த காபிகோப்பையை கண்ணாடியை நோக்கி வீசியெறிந்தான். பின், ஆங்காரமாகக் கத்தி அவளை தள்ளிவிட்டான். "போ இங்கயிருந்து!!!"


விழியிரண்டிலும் கண்ணீர் வழியவிட்ட சம்யுக்தா மெதுவாக தன் உள்ளக்கிடக்கை அவனிடம் சொன்னாள். "நீங்க இங்க இருந்து போயிட்டா நானும் திரும்ப எங்க கிராமத்துக்கே போயிருவேன் சின்னய்யா..."


ராகவோ சர்வ அலட்சியமாக, "ம்ம், அங்க தான் உன் மாமாப்பையன் இருக்கான் இல்ல?... அவனை கட்டிக்கிட்டு புள்ளக்குட்டியா பெத்துப்போடு, யாருக்கு கவலை?..." என்றான், காட்டுக்கத்தலாக.


சம்யுக்தா அதற்கு நிதானமாக பதிலளித்தாள். "உங்களை விரும்பிட்டு எப்படி சின்னய்யா அவரை கல்யாணம் பண்ணிக்கிறது...?"


"என்ன?... என்ன சொன்ன?... மறுபடியும் சொல்லு?..."


"இல்ல… ஒன்னும் இல்ல..."


"இல்ல… நீ சொன்ன... நான் கேட்டேன்..." என்றவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டு கேட்க, தன் வெட்கம் விட்டு மீண்டும் தான் சொன்னதை திருப்பிச் சொன்னாள் சம்யுக்தா.


ஆனால், சந்தோஷத்தில் கூத்தாட வேண்டியவனோ அவள் கைகளை விட்டுவிட்டு விலகி நின்றான்.


எதையெதையோ எதிர்பார்த்து அவன் முகத்தைப் பார்த்திருந்த சம்யுக்தா, ஏன் என்று பாவமாகப் பார்த்தாள்.


"என்ன சம்யுக்தா நான் வெளிநாடு போகக்கூடாதுன்னு பொய் சொல்றியா?... என் அம்மாவுக்கு விசுவாசியா இருக்கலாம்னு பார்க்குறியா?..." என்றவனின் வாள்பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் அவளை கூறுபோட்டது.


"உண்மையாவே நான் உங்களை விரும்புறேன் சின்னய்யா... என் மனசுப் பூரா இப்போ நீங்க தான் இருக்கீங்க... நீங்க என் தங்கச்சி படிப்புக்கு உதவி செஞ்சது, என் அக்கா புருஷனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது, என் அப்பா ஆபரேசனுக்கு உதவினதுன்னு எப்பவோ எனக்கு நீங்க குலசாமியா மாறிட்டீங்க... நீங்க வெளிநாடு போகக்கூடாது சின்னய்யா... போகவேக்கூடாது!! என்னால உங்களைப் பார்க்காம இருக்க முடியாது!!!" என்று முகத்தை மூடி அழுதாள்.


"இல்ல, எனக்கு நீ சொல்றதுல நம்பிக்கை இல்ல முக்தா... ஒருவேளை நீ என்னை உண்மையாவே விரும்பினா எனக்கு ஒரு முத்தம் கொடுத்து அதை கன்ஃபார்ம் பண்ணு..." என்று திமிராகக் கூறியவன் திரும்பிநின்று கொண்டான்.


முதலில் அவனை அதிர்ந்துப் பார்த்தவள் பின் தயங்கித் தயங்கியே அவனுக்கு முன்வந்து நின்றாள்.


கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனோ அவள் செய்யமாட்டாள் என்றெண்ணி விரைப்பாகவே நின்றிருந்தான்.


மென்பாதம் வைத்து அருகே வந்தவளோ மெள்ள எக்கி தலையை சரித்து அவன் கன்னத்தில் தன் முத்திரையைப் பதித்தாள்.


சம்யுக்தா முத்தம் கொடுக்கும் வரை நிதானித்தவன் அவள் முத்தம் கொடுத்தப்பின், "ஹேஹே... இது தான் பத்து வயசு பொண்ணுக்கூட கொடுக்குமே... இந்த கன்னத்து முத்தமெல்லாம் செல்லாது... நீ என் உதட்டுல முத்தம் கொடு, நான் நம்புறேன்..." என்றான் உறுதியாக.


விழிகளை அகல விரித்த சம்யுக்தா கைகளைப் பிசைந்துக்கொண்டு தற்போது என்ன செய்வதென்று திகைக்க, "சரி, நீ தர வேண்டாம்... நான் தர்றேன்... ஆனா, நான் முத்தம் தரும்போது நீ கண்ணை மூடினா நீ என்னை லவ் பண்ணலைன்னு அர்த்தம்... ம்ம்?..." என்றவாறே அவன் முன்னேற, எதையும் உணரமுடியாமல் அங்கேயே சமைந்துவிட்டாள் சம்யுக்தா.


முதலில் மலர்க்குவியலை ஏந்துவதுபோல் அவள் கன்னம் இரண்டையும் தன்னிருக்கைகளால் தாங்கியவன், மெள்ள உதட்டை நோக்கிக் குனிந்தான்.


நெஞ்சில் ஒரு குதிரைப் பந்தயமே நடந்தாலும் இமைமூடாமல் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.


தனது உதடுகளை நாவால் தடவி ஈரப்படுத்திக் கொண்டவன் அவளது இதழ்களை ஆசையுடன் நெருங்கினான்.


அவன் உதட்டுக்கும் தன் உதட்டுக்கும் ஒரு சென்டிமீட்டர் இடைவெளி இருந்தபோது வரை கண்களைத் திறந்து கொண்டிருந்தவள், அவன் உதடு தன் உதட்டின் மேல்பட்டதும் பயத்தில் விழிகளை மூடிக் கொண்டாள், பின்னால் அவன் அதை வைத்துப் பெரிய பிரச்சினை ஒன்றை செய்யப்போகிறான் என்பதை அறியாமல்.


வெதுவெதுப்பான இதழ் பட்டவுடன், அது தொட்டு விலகிவிடும் என்றவள் காத்திருக்க, அவனது திட்டம் வேறுமாதிரி இருந்தது. செவ்விதழின் சாயம் போக்க முயன்றான் அந்தக் கள்வன்.


தொடர்ந்து அவள் சதைப்பற்றுள்ள கீழுதட்டையே ரசித்து ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தவன், மெதுவாக தன் நாவால் அவள் இதழ்களைப் பிளந்தான். அவனுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அந்நொடி அவ்வுணர்ச்சிக்கு கட்டுப்பட்டாள் சம்யுக்தா. தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டு அவனுக்கு உடன்பட்டாள்.


மூச்சும் மூச்சும் கலந்து, நெஞ்சும் நெஞ்சும் மோதி, நாவும் நாவும் சண்டையிட்டு என அந்த முத்தம் அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.


சம்யுக்தாவால் அந்த புது உணர்ச்சியை எதிர்கொள்ளவே முடியவில்லை. பனிப்பிரதேசத்தில் இருப்பதுபோல் கிடுகிடுவென்று நடுங்கினாள். அவள் நிலையை நன்கு புரிந்து கொண்ட ராகவ், அவளை மூச்சுவிட அனுமதித்தபடியே மேலும் உரிமை எடுக்க ஆரம்பித்தான்.


முதலில் முத்தத்திலேயே மயங்கித் திளைத்துக் கொண்டிருந்தவள் பின்பு தான் அவன் அத்துமீறலை கவனித்தாள். அவனது இரும்புக்கைகள் தன் பின்புறத்தில் மேடான இடத்தில் இருக்க படபடப்பாக உணர்ந்தாள். ஆனால், அவளை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவிடாமல், நாவால் அவள் வாயில் இருந்த எச்சில் முழுவதையும் தான் உறிஞ்சிக்கொண்டான் அந்த சில்மிஷன்.


அவன் இதழ் வசியத்திற்கு கட்டுப்பட்டுக் கிடந்தவள் தன் உயிரையே அவன் இதழ் வழியே உறிஞ்சிக்குடிப்பது போல் இன்ப அவஸ்தைக்கு உள்ளானாள். முன்பு பயத்தில் சொருகிய அவளது கண்கள், இப்போது கிறக்கத்தில் சொருகிக் கிடந்தன.


அவன் அணைப்பில் அவளிடை ஏற்கனவே கன்றிப்போயிருக்க, இப்போது எலும்புகளையும் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான் அவன்.


தொடர்ந்து முத்தத்தில் புதுபுதுக்கலைகளை அவன் பயிற்றுவிக்க, அவனை எதிர்க்கவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் சோர்ந்து அவன் மீதே சாய்ந்தாள் சம்யுக்தா.


***************


ஆக, ஒரு முத்தக்காட்சிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம். இதுவரை ஒருவருக்குக்கூட நான் உதட்டு முத்தம் கொடுத்ததில்லை. ஆனால், என் விவரிப்பு ஒரு அனுபவசாலியை மாதிரி இருக்கிறது. அதுவும் எச்சிலை உறிஞ்சிறது எல்லாம், ச்சைக்! எப்படியிருக்குமோ? எங்கு இப்படியெல்லாம் வாசித்தேனோ அங்கேயே அவ்வளவையும் வாந்தியெடுத்து வைத்திருக்கிறேன். ஒருவேளை இப்படியெல்லாம் எழுத மறுப்பிருக்காது என்று தான் நான் மகளிர் டாட் காம்மை தேர்வு செய்தேனோ? இருக்கலாம்!


என்னை வாட்ஸப் குழுவில் உள்ளோர் புகழ்ந்ததாலோ என்னவோ மியூட்டில் போட்டிருந்த அறிவிப்பை இப்போது ஆனில் வைக்கத் தோன்றியது.


***************


எப்போதும் காலையில் பூப்போட்ட குட்மார்னிங் மெசேஜ் அனுப்பும் மகளிர் டாட் காம் உரிமையாளர் இன்று வழக்கத்திற்கு மாறாய் பமீலா ஷானு என்பவரை குழுவிலிருந்து நீக்கியிருந்தார். பமீலா ஷானுவை ஒருமுறை அவர் செல்ஃபி போட்டபோது பார்த்ததோடு சரி. அதற்கு மேல் எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அப்போது தலையில் சேலைத் தலைப்பைப் போர்த்தி பார்க்க அப்புராணி போல் இருந்தார் அவர்.


மேலே தலைப்புப் பட்டையில் மகளிர் டாட் காம் உரிமையாளர் டைப்பிங் என்று வந்ததால் அவரின் விளக்கத்திற்காக காத்திருந்தேன்.


கிளிங்… என்ற சப்தத்துடன், "அந்த துரோகியை நம்ம வெப்சைட்டை விட்டு விரட்டிட்டேன்ப்பா" என்றவர் சொன்னபோது, பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். எனக்கு புரியவில்லை.


ஒரு எழுத்தாளர், "மாதாஜி, நீங்க பண்ணின உதவியையெல்லாம் அவ மறந்திட்டாப் பாருங்க" என்றார்.


மகளிர் டாட் காம் உரிமையாளரோ, "ஆமா, அவக்கதையை நான் புத்தகம் போட்டிருக்கக்கூடாது. எவ்வளவு திமிர் இருந்தா அந்த மங்கை டாட் காம்ல அத்தியாயம் போடுவா?" என்று ஆத்திரப்பட்டார்.


"விடுங்க மாதாஜி, அவளைப் பத்தி இப்போவாவது தெரிஞ்சதேன்னு சந்தோசப்பட்டுக்கோங்க. நீங்க சொல்லி தான் அவளுக்கு நான் அமேசான் கிண்டில்ல எப்படி புக் போடணும்னு சொல்லிக் கொடுத்தேன். கையில ரெண்டு காசு பாக்க ஆரம்பிச்சதும் குணம் எப்படி மாறுது பாருங்க. நேத்து நைட் எனக்கு இந்த மாச கிண்டில் ராயல்டி வரலை; ஏன்னு தெரியலைக்கான்னு மெசேஜ் அனுப்பியிருக்கா. அவளுக்கு நான் இனி ரிப்ளை பண்ண போறதில்லை மாதாஜி. உங்களுக்கு வேணாம்னா இனி அவ எங்களுக்கும் வேணாம்"


"அந்த துரோகி இதுவரை பத்து அத்தியாயம் மங்கை டாட் காம்ல போட்டிருக்காப்பா. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல"


எனக்கு அந்த குழுவின் நோக்கம் ஞாபகம் வந்தது. அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்த துரோகி என்ற வார்த்தைக்கும் இப்போது தான் அர்த்தம் புரிந்தது.


திடீரென ஒரு எழுத்தாளர் என் பெயரை இழுக்கவும், என் கவனம் அதில் குவிந்தது.


"விஷம் மாதாஜி, உடம்பு பூரா விஷம் அவளுக்கு. முந்தா நேத்து என்கிட்ட ஷிவானி பத்தி கேட்டா. அந்தப்பொண்ணு எங்கயிருக்குது? என்ன பண்ணுது? மாதாஜிக்கு எப்படி தெரியும்னு"


"பொறாமை ஜில்லு, ஷிவானிக்கு ரீடர்ஸ் அதிகமா இருக்கிறதைப் பார்த்து அவளுக்குப் பொறாமை. ஷிவானிகிட்ட அவளைப் பத்தி சொல்லி எச்சரிக்கையா இருக்க சொல்லனும்"


"ஆமா, மாதாஜி"


எனக்கு ரொம்ப வேடிக்கையாக இருந்தது அவர்களது சம்பாஷணை. உண்மையில் அந்த பமீலா ஷானு செய்தது கூட எனக்கு தவறாகப் படவில்லை. அது அவருடைய கதை, அதை அவர் எங்கேப்போட்டால் இவர்களுக்கு என்ன என்று தான் எனக்குத் தோன்றியது.


இப்போது அவர்கள் மாறிமாறி கழுவி ஊற்றுவதைப் பார்த்தால் இவ்வளவு நாள் 'ஷானு ஷானு' என்று அவருடன் அவர்கள் கொஞ்சிக் குழாவியதுகூட நடிப்பு தானோ? என்றும் பட்டது. அசூயையுடன் மீண்டும் குழுவை மியூட்டில் போட்டேன்.


**************


கடந்த இரண்டு வாரங்களில் ஒருமுறைக்கூட நான் அந்தக் குழுவை எட்டிப் பார்க்கவில்லை. மாதாஜி… யாரை சொல்கிறேனென்று புரிகிறதல்லவா? எனக்கு செயற்கையாக அவ்வாறு அழைக்கப் பிடிக்கவில்லை. அவரிடம் பேசும்போதெல்லாம் 'மேம்' தான். அவர் இன்று ஃபேஸ்புக் குழுவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்ததால் தான் மீண்டும் அந்த குழுவிற்குள் சென்று பார்க்க வேண்டுமென்றே எனக்குத் தோன்றியது.


பார்ப்பதற்கு முன், அந்த அறிவிப்பு என்னை இரண்டுமுறை வாசிக்க வைத்தது. "இதுவரை எந்தப் பெண்கள் டாட் காம்மும் செய்ய முன் வராத ஒரு காரியத்தை மகளிர் டாட் காம் செய்யவிருக்கிறது, அன்பர்களே! ஆம், அது தன் உறுப்பினர்களுக்கு சன்மானம் அளிக்கப்போகிறது. புலவர்களுக்கு அரசன் பொற்காசுகளை அள்ளி வழங்குவது போல் மகளிர் டாட் காம்மும் அதன் எழுத்தாளர்களுக்கு ஊதியம் வழங்கப்போகிறது" என்பது தான் அந்த இனிய செய்தி.


வாசிக்க வாசிக்க பல கனவுகோட்டைகள் என்னுள் எழும்ப ஆரம்பித்தன. தற்போது அதிக வாசகர்களை கொண்டுள்ள கதைகளில் என் கதையும் ஒன்று என்பதால் ஜிவ்வென்று இருந்தது எனக்கு.


இதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வாட்ஸப் குழு சென்று பார்த்தேன். என் கனவுகோட்டை அனைத்திலும் இடி வந்து விழுந்தது. "செல்லங்களே! சும்மா உல்லுல்லாய்க்கு தான் ஃபேஸ்புக்ல அப்படியொரு போஸ்ட் போட்டேன்பா" என்பதுடன் ஏகப்பட்ட ஸ்மைலீஸ் அனுப்பியிருந்தார் மாதாஜி.


எனக்கு வந்த கோபம், ஆத்திரம் எதுவும் மற்றவர்களுக்கு வராதது எனக்கு வியப்பாக இருந்தது. அங்கே உரையாடல் பெட்டியில், "சூப்பர் மாதாஜி; யூ ஆர் கிரேட்" என்றவர்கள் அனைவரும் இங்கு கெக்கேபிக்கே என்றிருந்தார்கள். கோபத்தில் கைப்பேசியை அணைத்துவிட்டு படுத்துவிட்டேன். பிறகு, என்னால் வேறென்ன தான் செய்ய முடியும்?


*************


யோசித்துப் பார்த்தால் மகளிர் டாட் காம் ஃபேஸ்புக் குழுவும், கல்லூரி விடுமுறை நாட்களில் நான் உணர்ந்த தனிமையும் தான் என்னை எழுதத் தூண்டியிருக்க வேண்டும். மகளிர் டாட் காமில் இதுவரை பதினைந்து அத்தியாயங்கள் பதிவிட்டிருக்கிறேன். ஆனால், இப்போதுவரை அது குறித்து எதுவும் தெரியாது என் பெற்றோருக்கு. அடிக்கடி, "அப்படி அந்த செல்லுல என்ன தான் இருக்கோ? தூக்கி ஒடைக்கப்போறேன் பாரு" என்று மட்டும் என் அம்மா மிரட்டுவார். எனக்கும் இதை அவர்களிடம் சொல்ல ஆர்வமில்லை. சொன்னால் நிச்சயம் வெட்டிவேலை என்றே சொல்வார்கள்.


முதலில் வெறும் வாசகியாக இருந்த சமயமும் இப்படி தான் கையில் கைப்பேசியுடனே அலைவேன். தலையணை உயரமுள்ள பொன்னியின் செல்வனையும், வேள்பாரியையும் கூட நான் கைப்பேசியில் தான் வாசித்தேன். நிஜம், அப்படியானது எனது வாசிப்பு வெறி.


ஆனால், அப்போது விட இப்போது தான் கைப்பேசியை ரொம்ப உற்றுப் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். கண்களிரண்டும் சிலநேரம் வறண்டுவிட்டன போல் தோன்றுகின்றன. இமையை இறுக்கி மூடினால் வலி உயிர் போகிறது. இதில் எப்படி வாசித்துத் திருத்தினாலும் அத்தியாயத்திற்கு ஐந்து பிழையேனும் தப்பி விடுகின்றன.


எழுத ஆரம்பித்ததிலிருந்தே எனது நண்பர்களுடன் உரையாடும் நேரத்தையும் வெகுவாக குறைத்து விட்டேன். ஏன் என்று துருவியவர்களிடம் ஒருமுறை நான் உண்மையை சொன்னது தான் என்னை என் பேராசிரியர் வரை இழுத்துச்சென்று விட்டது.


விஷயத்தை கேள்விப்பட்டவர் என்னை தன்னறைக்கு வரச்சொல்லி அனுப்பியிருந்தார். நானும் தயங்கியபடியே சென்றேன். என்னை ஏறயிறங்க பார்த்தவர், "ஏதோ கதையெழுதுறியாமே" என்றபோது உண்மையில் நடுங்கிவிட்டேன்.


பிறகு, நான் கூச்சத்துடன் அனைத்தையும் விளக்கி முடிக்க, அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. "தமிழ் டிப்பார்ட்மெண்ட் செமினாருக்கு சரவணன்னு ஒரு ரைட்டர் சீப் கெஸ்ட்டா வந்திருக்காராம். எழுதுறது பத்தியும், அதை புத்தகமா வெளியிடுறது பத்தியும் பேசுறாராம். இது என் பீரியட் தானே? பெர்மிஷன் லெட்டர் தரேன், போறியா?" என்றவர் கேட்டபோது சொல்ல முடியாத உணர்ச்சிப் பேரலைகளால் மூழ்கடிக்கப்பட்டேன் நான்.


அனுமதி கடிதத்துடன் சென்றபோது கடைசி வரிசையிலேயே எனக்கு இடம் கிடைத்தது.


அமர்ந்து சிறப்பு விருந்தினர் பேசுவதனைத்தையும் குறிப்பெடுத்தேன். இடையில் அவர் ஒரு கேள்வி கேட்டார். எங்கள் யாருக்குமே அதற்கு விடை தெரியவில்லை. இறுதியில் அவரே சொன்னார், "தமிழில் அதிக பக்கங்கள் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன்" என்று.


அப்போது தான் முன்பே நான் அந்த எழுத்தாளரின் நாவல் ஒன்றை தரவிறக்கம் செய்தது ஞாபகம் வந்தது. நாவலின் தலைப்பு ஏழாம் உலகம். ஆனால், மூன்று பக்கத்திற்கு மேல் என்னால் அந்த நாவலை வாசிக்க முடியவில்லை.


அதன்பின் அவர் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பெருமாள் முருகன், மனுஷ்ய புத்திரன் என்று யார்யாரைப் பற்றியோ பேசினார். எனக்கு தொடர்ந்து கொட்டாவியாக வந்துகொண்டிருந்தது. திடீரென எனக்கொரு சந்தேகம், இவருக்கு மாதாஜியைப் பற்றி தெரியுமா?


அவரது விரிவுரையின் முடிவில், ஏதாவது சந்தேகமிருந்தாலோ உதவி தேவைப்பட்டாலோ அழைக்கும்படி அவரது தொலைபேசி எண்களை பகிர்ந்தார். அதை குறித்துக்கொண்டதோடு சரி, அதன்பின் அவரை அழைக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.


 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

சுயபுனைவு எழுதுகிறேன் என்று இலக்கண ரீதியாக இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் நான் குழப்புவது போல் தோன்றுகிறது. உங்களது ஆலோசனைகள் எதுவுமிருந்தால் சொல்லுங்கள் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
https://www.sahaptham.com/community/threads/comment-thread-for-shivanis-novels.356/
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 4




நாம் முதன்முறை சந்தித்தது போலவே ஒருவர் கடைசிவரை நம்மிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!


அதை நான் பின்பு தான் உணர்ந்தேன். மகளிர் டாட் காம் உரிமையாளர் மீது முதன்முறை நான் கொண்டிருந்த அபிப்பிராயம் வேறு, இப்போதிருப்பது வேறு.


முன்பு அவர், இந்த குடும்ப நாவல்களில் வருகிற நாயகர்கள் ஏன் தங்கள் மனைவிகளை கையருகில் வைத்துக்கொண்டு காயடிக்கப்பட்டவர்கள் போல் விலகியிருந்து வேடிக்கைப் பார்க்கிறார்கள்? என்றபோது அதிலொரு நியாயம் இருப்பதாகத் தோன்றியது.


ஆனால், இப்போதெல்லாம் அவர் எது சொன்னாலும் அதில் ஒரு சுயநலம் குடிக்கொண்டிருப்பதாகவேத் தோன்றுகிறது. ஒருவேளை நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம். ஆனால், எனது எண்ணங்களை மெய்ப்பிப்பது போலவே சில வேலைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.


அந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பை மகளிர் டாட் காம் ஃபேஸ்புக் குழுவில் தான் நான் முதன்முதலில் பார்த்தேன்.


"வாசக நெஞ்சங்களே! நாவல் உலகின் முடிசூடா மன்னன், காதல் கதைகளின் கண்ணன், திரு.பல்லவி மனோ நமது மகளிர் டாட் காமில் காதல் ரசம் சொட்டச்சொட்ட ஒரு புதிய கதை எழுதவிருக்கிறார். அவருக்கு உங்கள் கருத்துக்களையும், லைக்குகளையும் கஞ்சத்தனமில்லாமல் வாரி வழங்குங்கள்"


பல்லவி மனோவா? மீண்டும் நன்றாகப் பெயரை உற்றுப்பார்த்தேன். சந்தேகமேயில்லை! அவர் தான். பல்லவி மனோவின் கதைகளை மட்டும் நான் வாசித்திராவிட்டால் இன்னும் கட்டிப்பிடித்தாலே குழந்தை பிறந்துவிடும் என்று தான் நம்பிக் கொண்டிருந்திருப்பேன். பள்ளியில் பயோலஜி க்ரூப் எடுக்காத - நண்பர்கள் முதற்கொண்டு யாரிடமும் கலவி பற்றி பேச விரும்பாத - பார்ன் வீடியோ பார்க்க முயலாத - என்னைப் போன்ற ஒரு சாமியாரிணிக்கு அவரின் புத்தகங்கள் எல்லாம் ஒரு வரப்பிரசாதம் என்று ஆதியில் நான் எண்ணியதுண்டு.


அவர் இங்கு மகளிர் டாட் காமில் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. பரபரப்புடனே வாட்ஸப் குழு சென்று பார்த்தேன். என்னைப்போலவே பலரும் அதற்கு அதிர்ச்சி தெரிவித்திருந்தார்கள். ஆனால், மாதாஜி அதற்கு அளித்த பதில் தான் என்னால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. மீண்டும் என் கண்கள் அந்த பதிலையே வெறித்துக் கொண்டிருந்தன.


"ஆள் ரொம்ப கட்டுப்பெட்டிப்பா. நீங்க கேட்கிற அமௌண்ட் எல்லாம் தர முடியாது, இவ்ளோ தான் முடியும்னு அடிச்சிப்பேசி நம்ம வெப்சைட்டுக்கு கூப்ட்டுட்டு வந்துட்டேன். புதுக்கதை போடப்போகுது சிங்கம், என்ஜாய்"


இப்போது இதற்கு அவசியம் தான் என்ன? யாராவது கேட்கிறார்களா பார்! ஆஹா! ஜில்லு டைப்பிங் என்று வருகிறது.


"மாதாஜி, ரொமான்ஸ் ரொம்ப தூக்கலா இருக்கணும்னு சொல்லிருங்க. ஹிஹி"


"மொத நம்ம சிங்கம் எழுத ஆரம்பிக்கட்டும். பின்னாடி பேசி மடக்கி நமக்கு வேணுங்கிறதை வாங்கிறலாம்"


"மாதாஜி, ஆள் பாக்க எப்படி?"


"ஜில்லு, இன்னும் நானே ஆளைப் பாக்கல. போன்ல மட்டும் தான் பேசி பேங்க் அக்கவுண்ட் நம்பர் வாங்கியிருக்கேன்"


"எப்படியாவது போட்டோ வாங்குங்க மாதாஜி. பிரேம் பண்ணி என் வீட்டு பூஜை ரூம்ல மாட்டனும்"


"வாங்கிரலாம். வாங்கிரலாம்"


ச்சை! இப்பவும் எனக்கு தோன்றுவது ஏன் மற்றவர்களுக்கு தோன்ற மாட்டேங்கிறது? வெளியிலிருந்து ஒரு எழுத்தாளரை இப்போது காசு கொடுத்து அழைத்து வரும் அவசியம் தான் என்ன?


இறுதியாக ஒரு எழுத்தாளர் சொன்னார்: "மாதாஜி, இனி நம்ம சைட்ல தான் ரீடர்ஸ் பலாப்பழத்துல ஈ மொய்க்கிற மாதிரி மொய்க்கப் போறாங்க"


எனக்கும் அது உண்மை என்றேத் தோன்றியது.


***********************


பல்லவி மனோ வந்ததிலிருந்தே அவர் புராணம் தான் வாட்ஸப் குழுவில்.


யாராவது ஒருவர், "பல்லவி மனோ இன்னைக்கு எபிசோட்ல ரொமான்ஸ் சும்மா பின்னி எடுத்துட்டாரு, மாதாஜி" என்றால் போதும், உடனே அதற்கே காத்திருந்தாற்போல, "சும்மாவா, இதுக்கு மட்டும் ஆயிரம் ரூபா அனுப்பியிருக்கேன்." என்று தான் ரூபாய் அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டோடு வந்துவிடுவார் மாதாஜி.


அவரது தள விளம்பரத்திற்காக அவர் செலவு செய்கிறார். அதற்காக நாங்கள் வாயைப் பிளக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறாரா என்ன? அதிலும் அந்த ஸ்க்ரீன்ஷாட் உரையாடல்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கும். நேற்றுக்கூட ஒரு ஸ்க்ரீன்ஷாட் பார்த்தேனே, எப்படி?


"நேற்றைக்கும் இன்றைக்கும் சேர்த்து ரெண்டாயிரத்து நூறு ரூபாய் அனுப்பிவிட்டேன் சார். காதல் காட்சிகள் கொஞ்சம் அதிகமாக வேண்டுமென்று வாசகர்கள் கேட்கிறார்கள்."


அது சரி, வாசகர்கள் கோரிக்கையா அது?


அதற்கு ஸ்மைலியுடன், "அடுத்த அத்தியாயத்தில்" என்றிருந்தார், அந்தக் காதல் இளவரசர்.


மானக்கேடு! இன்றைய ஸ்க்ரீன்ஷாட் இன்னும் மோசம்.


"இன்றைய அத்தியாயம் படித்து பித்துப்பிடித்து அலைகிறார்கள் எங்கள் வாட்ஸப் குழு உறுப்பினர்கள். ஹாஹாஹா, அத்தியாயம் பெரிது? ஆயிரத்து முந்நூறு ரூபாய் அனுப்பிவிடுகிறேன்."


இதுவரை இதுபோல் ஐந்து ஸ்க்ரீன்ஷாட்டுகள் பகிரப்பட்டுள்ளன. எனக்கு வெறுப்பெல்லாம், நானும் பல்லவி மனோவும் ஒரே இடத்தில் எழுதுகிறோம். இருவரின் கதைக்கும் ஒரே அளவில் தான் பார்வைகள் வருகின்றன. ஆனால், அவர் பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார். நான் வாங்காமல் எழுதுகிறேன்.


இதற்குக் காரணம், அவர் கட்டிலறைக் காட்சிகளை தத்ரூபமாக கண் முன் கொண்டுவருவதென்றால்... ச்சை! பாழாய்ப்போன என் கைக்கு ஏன் உச்சியில் திராட்சை வைத்த இரு பனிக்கூழ் கிண்ணங்கள், முக்கோணப் பெட்டகம், பெட்டகத்தை திறக்கும் மந்திரக்கோல் என்றெல்லாம் எழுத வரமாட்டேங்கிறது? இல்லை, நான் இப்படி நிலையின்றி தவிப்பது முறையில்லை. மகளிர் டாட் காமிடம் பணத்தை எதிர்பார்த்து நான் சேரவில்லை. அப்போது நான் இப்படி புலம்புவதும் நியாயமில்லை. ஆனால், மற்றவர்களைப் போல் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லையே. இப்போது என் பிரார்த்தனையெல்லாம் நான் துரோகியாக எதையும் உளறிவிடக்கூடாது என்பது தான்.


**************


இன்று திடீரென்று ஒரு மாற்றம். இதுநாள் வரை அந்த ஃபேஸ்புக் குழுவில் நாங்கள் எல்லோரும் தான் புழங்கிக் கொண்டிருந்தோம். மொத்தம் பனிரெண்டாயிரம் பேர் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறோம்.


மகளிர் டாட் காமில் அத்தியாயம் பதிவிட்ட உடனேயே நான் அங்கு வந்து இத்தனையாவது அத்தியாயம் பதிவிட்டாயிற்றென்று டமாரமடித்து விடுவேன்.


ஆனால், இன்று குழுவின் தலைப்பான 'மகளிர் டாட் காம்'மை மாற்றிவிட்டு 'மாதாஜி நாவல்ஸ்' என்று வைத்திருக்கிறார் குழுவின் அட்மின்.


எப்போதும் போல யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒருவேளை பல்லவி மனோ வந்த மகிழ்ச்சி கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஆமாம், அடுத்து அந்தக் குழுவில் இணையப்போகும் அப்பாவிகளுக்குத் தெரியுமா? அது மாதாஜியின் நாவல்களுக்காக சேர்ந்த கூட்டமல்ல, மகளிர் டாட் காம் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உழைப்பில் சேர்ந்த கூட்டமென்று. முதலில் நான் இவ்வாறு ஒரு துரோகியைப் போல் யோசிப்பதை நிறுத்த வேண்டும்.


************


இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று புதிதாக ஒரு பிரச்சனை. இல்லையில்லை நானே அதை என் தலையில் எடுத்துப் போட்டுக்கொண்டேன். மாதாஜியின் நாவலை அந்த வாசகர் எப்படி விமர்சித்தால் எனக்கென்ன என்று தான் நானும் மற்ற பாவனை அப்புராணி எழுத்தாளர்களைப் போல் இருந்திருக்க வேண்டும். ஆனால், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். உங்களுக்கு அவர் நாவலை வாசிக்கப் பிடிக்கவில்லையென்றால் நிறுத்திவிடுங்கள்; அதை விட்டுவிட்டு இப்படித்தான் வயதில் பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவீர்களா? என்று எகிறிவிட்டேன்.


அந்தப்பெண் மீம் கிரியேட்டர் போலிருக்கிறது. முதலில் மாதாஜியை மட்டுமே கிண்டல் செய்து கொண்டிருந்தவள், பிறகு, என்னையும் சேர்த்து குதற ஆரம்பித்துவிட்டாள்.


இந்தப் பிரச்சனையின் சுழி என்னவென்பது ஆரம்பத்தில் எனக்கு விளங்கவில்லை. மாதாஜி ஸ்க்ரீன்ஷாட் அனுப்பியபோது தான் கொஞ்சம் புரிந்தது. அந்தப்பெண் யாரோ புது வாசகர் போலிருக்கிறது. மாதாஜியின் ப்ரொஃபைலில் எழுத்தாளர், பதிப்பாளர் என்றிருப்பதை பார்த்ததும் உள்பெட்டி வந்து, "உங்கள் நாவலை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். லிங்க் தருகிறீர்களா?" என்று கேட்டிருக்கிறாள்.

சில புத்திசாலிகள் இப்படித்தான்! எழுத்தாளரின் டைம்லைனில் இரண்டு பதிவுகளை நகர்த்தினாலோ, கூகுளை தட்டினாலோ கிடைத்துவிடும் சமாச்சாரத்திற்கு எழுத்தாளரை வந்து குடைந்துக் கொண்டிருப்பார்கள்.


மாதாஜியும் பின்விளைவை அறியாமல் உற்சாகமாக லிங்க் அனுப்பியிருக்கிறார். வெறும் மூன்றே மூன்று அத்தியாயங்களை மட்டும் வாசித்தவள் கடந்த நான்கு நாட்களாக இடைவெளியேயின்றி கதையையும், மாதாஜியையும் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறாள்.


என்ன தான் நான் ஒரு எழுத்தாளராக மாதாஜியின் பக்கம் நின்றாலும் ஸ்க்ரீன்ஷாட்டைப் பார்த்தபோது முதலில் வார்த்தை மீறியிருப்பது மாதாஜியே என்று அப்பட்டமாகத் தெரிந்தது.


அந்தப்பெண் அப்படி என்ன சொல்லிவிட்டாள்? குடும்ப நாவலென்று நினைத்து தான் உங்கள் நாவலை வாசித்தேன். ஆனால், உள்ளே இப்படி பச்சை பச்சையாக எழுதி இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் முதல் பக்கத்தில் 'இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கானது' என்றிருந்தால் கூட நான் கொஞ்சம் சுதாரித்திருப்பேன் என்றிருக்கிறாள்.


அதற்கு மாதாஜி எடுத்த எடுப்பிலேயே, மரியாதையின்றி பேசியிருக்கிறார்.


"நீ எந்த வெப்சைட்காரிடி? எவடி உன்னை என்கிட்ட சண்டையிழுக்க அனுப்பினா? என் வெப்சைட்ல நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன்! எப்படி வேணும்னாலும் தலைப்பு வைப்பேன். அதை கேட்க நீ யாருடி? உன்னை அனுப்பினவக்கிட்ட உன் பருப்பு என்கிட்ட வேகலைன்னு சொல்லுடி"


"ஏங்க, என்னங்க மரியாதையில்லாம பேசுறீங்க? அது சரி, சுத்தி விசாரிக்காமக் கொள்ளாம உங்கக் கதையை வாசிச்சது என் தப்பு தாங்க. யாரும் என்னைத் தூண்டிவிட்டு நான் அப்படி சொல்லல. உங்கக்கதையோட லட்சணம் தான் என்னை அப்படி சொல்ல வச்சது" என்றுவிட, மாதாஜிக்கு கோபம் எல்லைமீறி விட்டது.


"ஏய், ஏவல் நாயே! எவளோட ஃபேக் ஐடி டி நீ? நானே, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஏன்டி உங்க அரிப்புக்கு என்கிட்ட வர்றீங்க?" என்று சகட்டுமேனிக்கு திட்டியிருந்தார்.


பிடித்தது சனி, அந்தப்பெண் இப்போதுவரை அவள் வாசித்த அந்த மூன்று அத்தியாயங்களையுமே அக்குவேராய் ஆணிவேராய் பிரித்து மீம் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறாள்.


முதல் மீமின் போது இந்த உள்பெட்டிப்போர் எங்களுக்கு தெரியாதென்பதால் எங்களில் பலரும் அவளின் பதிவிற்கு லைக் போட்டு சிரித்து வைத்திருந்தோம். அவள் மாதாஜியின் தீவிர வாசகி என்றே நாங்கள் நினைத்தோம். பிறகு, மாதாஜி சொன்னபோது தான் எங்களுக்கு விஷயமே தெரிந்தது. உண்மையில் நாங்கள் சிரித்து வைத்த மீமைப் பார்க்கும் யார்க்கும் அது மாதாஜியை கேலி செய்யும் மீம் என்றேத் தெரியாது.


இந்தக் கொடுமையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக கட்டுரை ஒன்றை வேறு எழுதினேன் நான். எல்லாம் மாதாஜியின் மேலுள்ள விசுவாசம். ஃபேஸ்புக்கில் போடும் முன்பாக வாட்ஸப் குழுவிற்கு அனுப்பி எப்படி இருக்கிறதென்று விசாரித்தேன். மாதாஜி வாசித்துப் பார்த்துவிட்டு என் மீது அன்புமாரி பொழிந்தார்.


"ஷிவானிம்மா, நீ புதுசுடா. நீ இதுலயெல்லாம் தலையிடாத. அப்புறம் நாய்க உன் மேல பாய்ஞ்சிடும். இப்போ தான் தெரிஞ்சது, அந்த தமிழரசி டாட் காம்மோட ஏவல் நாய் தான் இவ. நானே இவளுங்களை போஸ்ட் போட்டு சமாளிச்சிக்கிறேன்டா" என்றார்.


இதுவும் நல்லதுக்குத்தான்! "சரிங்க மேம்"


ஆனால், அவர்களை எதிர்த்து மாதாஜிப் போட்ட பதிவுகள் எல்லாம் மூன்று தர வசவுகள். "அமேசான் கிண்டில்ல கறவை நின்னு போன மாடுக, தொடர்ந்து எழுத முடியாம மேல் மாடியில சரக்கு காலியான நாய்க, பொ**ரிப்புல என் பக்கம் வர்றீங்களாடி! உங்க ஐடி மேல எல்லாம் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துருக்கேன்டி. ஸ்டேஷனுக்குப்போக ரெடியா இருங்க" என்று ஏகபோகமாக திட்டியிருந்தார்.


இதில் 'பொ**ரிப்பு' என்கிற வார்த்தைப் பிரயோகத்தை பார்த்ததும் எனக்கு பக்கென்று இருந்தது. மாதாஜி இப்படியெல்லாம் பேசி ஏன் அவருடைய மாண்பை அவரே குலைத்துக்கொள்கிறார்? எனவும் கோபமாக வந்தது. இதை அவரும் உணர்ந்திருந்தாரோ என்னவோ, மறுநாளே ஒரு ஃபேஸ்புக் பதிவில் என்னையும், இன்னும் நான்கு புதிய எழுத்தாளர்களையும் டேக் செய்து, "என்னிடம் பயன் பெற்றவர்கள் அனைவரும் என்னைப்பற்றி போஸ்ட் போடுங்கப்பா" என்றார்.


ஓ! தனது இறங்கிப்போன பிம்பத்தை மேலேற்றிக்கொள்ளப் பார்க்கிறார். இது ஒரு அநாகரீகமான கோரிக்கையாகவே எனக்குத் தோன்றினாலும், அவர் அப்படி, இப்படி, தன் தளத்தில் நான் கேட்டதும் எழுத சம்மதித்த தங்கத்தாரகை, பிழை திருத்திய பிதாமகள், இன்னும் மானே தேனே என்றெல்லாம் போட்டு அவரை மகிழ்வித்தேன்.


ஆனால், அதிலும் ஒரு சங்கடம் நேர்ந்தது. எனது வகுப்புத்தோழி ஒருத்தி அந்தப்பதிவை பார்த்துவிட்டு, "ஷிவானி, நீ சொன்ன அந்த ரைட்டர் ஸ்டோரிய வாசிச்சிருக்கியா?" என்றாள்.


நான் வாசித்திருந்தாலும் கள்ளத்தனமாக பதிலளித்தேன்.

"இல்ல, வாசிச்சதில்ல. ஏன் கேட்கிற?"


"இல்லப்பா, நீ உன் ஸ்டோரி லிங்க் அனுப்புனியா? அப்போ தான் வெப்சைட்டுக்குள்ளப் போய் மத்த ஸ்டோரீஸ் படிக்க ட்ரை பண்ணினேன். யாரோ பல்லவி மனோவாம், ரொமான்ஸ் ஸீன் எல்லாம் ரொம்ப டீப்பா எழுதியிருந்தாங்க. நான் சொல்றது புரியுதா? டீப்பான்னா டீ...ப்பா. பட், உன் ஸ்டோரில எல்லாம் கம்மி தான். நான் தான் வாசிச்சிருக்கேனே! ஆக்சுவலி, உன் ஸ்டோரிய என் ஸ்கூல் ஃப்ரெண்டுக்கு அனுப்பி வாசிக்க சொல்லலாம்னு நினைச்சேன். பட், பல்லவி மனோ ஸ்டோரி இப்படியிருக்கவும், அவ என்னை தப்பா நினைச்சிருவாளோன்னு அனுப்பல. ஆமா, உனக்கெப்படி இந்த வெப்சைட் ஓவ்னர் கூட பழக்கமாச்சு?"


இதைத் தெரிந்துகொண்டு இந்த சண்டாளி என்ன செய்யப்போகிறாள்? எப்படி சிரித்துக்கொண்டே என் தலையில் பீக்கூடையை கவிழ்த்த முடிகிறது இவளால்? இனி இவளுடன் பேசவேக்கூடாது. பார்க்கிறாள்! பார்க்கிறாள்!


"என் ஃப்ரெண்ட் ஒருத்தவங்க மூலமாத் தெரியும்"


கடைசிவரை நான் தான் எனக்குத் தோழி என்பதை மட்டும் இவளிடம் சொல்லவேக்கூடாது.

_________________

கருத்துமழைப் பொழிந்து தேவர்களாக விரும்புகிறவர்கள் கீழே உள்ள சொர்க்கத்தை அணுகவும்🙂

கருத்துத்திரி,

சொர்க்கம்
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 5



வாட்ஸப் குழு, பமீலா ஷானு, பல்லவி மனோ என சில நிகழ்வுகள் மகளிர் டாட் காமில் எனக்கொரு ஒவ்வாமையை உண்டாக்கியிருந்தாலும், நினைத்ததை எழுதும் சுதந்திரம் அங்கிருப்பதை மறுக்க முடியாது.


மேலும், தனக்கு ஆதாயம் இருக்குமென்றாலும் எந்த தளஉரிமையாளர் ஒரு இளம் எழுத்தாளரை இந்தத் தாங்கு தாங்குவார்? அந்த வகையில் மாதாஜி ரொம்ப அபூர்வமானவர்.


எதிர்ப்பு எங்கிருந்து கிளம்பினாலும் சரி, அவர் அடிக்கடி சொல்வது, நாமென்ன முறைக்கெட்ட குடும்ப உறவையும், கள்ளக்காதலையுமா நியாயமென்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்? காதலையும், கலவியையும் தான் முறையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இங்கு ஃபேஸ்புக் வருபவர்கள் யாரும் குழந்தைகள் அல்ல எனும்போது, எதற்காக அத்தியாய அறிவிப்பிலும், கதைத் தலைப்பிலும் 18+ போட வேண்டும்? என்பார். மிக அழகான வியாக்கியானம் அது!


அவரோடு எனது மூன்றாவது அத்தியாயத்தின் போது பேசியதோடு சரி, அதன் பிறகு அவர் குரலை கேட்கும் சந்தர்ப்பமே எனக்கு வாய்க்கவில்லை. இன்று திடீரென அவர் அழைப்பு விடுத்ததும் எனக்கு தலைகால் புரியவில்லை. ஏற்று மெதுவாக ஹலோ என்றேன்.


"ஷிவானி, உங்க நாவலை எப்போ முடிக்கிறீங்கம்மா?"


அடிக்கடி வாட்ஸப்பில் கேட்கும் கேள்வி தான் இது. நான் உண்மையை சொன்னேன்.


"அது எனக்கே தெரியலையே மேம்"


"தெரியலையா? இப்போ இருபது அத்தியாயம் போயிருக்குல்ல?"


"ஆமா மேம்"


"நீங்களே போய் தானே அத்தியாயம் போடுறீங்க?"


"ஆமா மேம், பதினோராவது அத்தியாத்துலயிருந்தே சைட்டுக்குள்ள நானாப்போய் தான் மேம் அத்தியாயம் போடுறேன்"


"எதுக்கு இப்போ போன் போட்டேன்னா நீங்க கதையை முடிச்சதும் புத்தகம் போடணும் அதுக்குத்தான்"


இப்படி அடிக்கடி சொல்வது எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டும் என்றெண்ணி சொல்கிறாரோ என்னவோ? ஆனால், எனக்கிது எரிச்சலையே மூட்டுகிறது என்று யார் இவரிடம் சொல்வது?


"இப்போ கதை எப்படிப்போகுது ஷிவானி? ஹீரோயின் கர்ப்பமா இருக்காளா?"


"ஆமா மேம். ஆனா ஹீரோ அதுக்கு நான் காரணமில்லைன்னு சொல்றான். ஸோ, பெரிய பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு மேம்"


"அடுத்து எப்படி கொண்டு போகப்போறீங்க?"


"ஹீரோயின் ஹீரோகிட்ட சண்டை போட்டுட்டு வீட்டைவிட்டு வெளியப்போற மாதிரி..."


"இல்ல இல்ல ஷிவானி, அவ வீட்டைவிட்டு வெளியப்போகக்கூடாது"


"ஏன் மேம்?"


"வெளியப் போயிட்டா எப்படி ரொமான்ஸ் ஸீன் வைப்பீங்க?"


அவளுக்கு கள்ளக்காதலன் எவனையாவது உருவாக்கி வைப்பேன் என்று என் தோழியாக இருந்தால் நையாண்டி பேசியிருப்பேன். ஆனால், மாதாஜியிடம் அப்படி சொல்ல முடியுமா? நான் அப்படித் தான் யோசித்தேன் மேம் என்றேன் அடக்கமாக.


"இல்ல, அவ வீட்டை விட்டுப் போகக்கூடாது. வீட்டுக்குள்ளேயே இருந்து அவனை ஏங்க விடனும்"


கதை இப்படித்தான் இருக்க வேண்டும்; முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்குள் எந்தவொரு திட்டவடிவமும் இல்லாததால் அவர் சொல்வதற்கெல்லாம் இசைந்தேன். ரமணிச்சந்திரன் நாவல்கள் நான்கை புரட்டிவிட்டு எழுத வந்தால் இப்படித்தான். எங்கு சுற்றினாலும் சுபமுடிவு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்துவிடும்.


"எல்லாம் சரியா ஷிவானி?"


"சரி தான் மேம்"


"ம்ம் சீக்கிரம் முடிங்க. புக் போடுவோம்"


மறுபடியும் அதே சாம்பிராணிப்புகை.


ஓகே மேம் என்றதுடன் அழைப்பைத் துண்டித்த பின்பும் நான் வெகுநேரத்திற்கு யோசித்துக் கொண்டிருந்தேன், இது என் கதையா? இல்லை, அவர் கதையா? என்று.


****************


எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருக்கிறது என்று தான் நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த ஒருவர் இடைபுகும்வரை.


மாதாஜி ஏன் திடீரென்று அப்படி கூறவேண்டும்? யார் அந்த லிங்கம்? அவரிடம் ஏன் நான் எனது அத்தியாயங்களை அனுப்ப வேண்டும்? இவ்வளவு நாள் நான் தானே உள்ளே சென்று அத்தியாயம் பதிவிட்டுக் கொண்டிருந்தேன்! இப்போது என்ன கேடு வந்தது அந்த தளத்துக்கு? நான் அந்த லிங்கத்திற்கு அனுப்ப வேண்டுமாம்; அவர் தளத்திற்குள் சென்று பதிவிடுவாராம். ஒருவேளை அவர் என் கதையை அவர் எழுதியது போல் வேறெங்காவது போட்டு விட்டால்?


அட! இவ்வளவு சுதாரிப்பா என்னிடம்? இப்படி நடந்திருப்பதை முன்பே வாட்ஸப் குழுவில் சொன்னவர் மாதாஜி தான். ஸ்த்ரீ டாட் காம் அவ்வாறு செய்வதாக ஒருமுறை அவதூறுப் பேசினார். அது மட்டுமா? எழுத்தாளர் ஜோபி ஒரு ஆண் என்றும் கூறி எங்களை எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். இது போதாதென்று இரண்டு ஃபேஸ்புக் பதிவுகளை வேறு நான் பார்த்துவிட்டேனா? அடிக்கடி இப்படி எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.


அந்த ஃபேஸ்புக் பதிவுகளில் ஒன்று பிடிஎஃப் திருடர்கள் பற்றியது. எழுத்தாளர்கள் தளத்தில் கதையை பதிவிடும்போதே திருட்டுத்தனமாக நகலெடுத்து டெலெகிராம் குழுவில் போடுகிறதாம் ஒரு ஐவர் குழு. இதற்கு நான் ஆவேசப்படுவது எனக்கே சிலநேரம் வேடிக்கையாகத் தெரியும்.


ஒருமுறை, "ச்சே! எப்படித்தான் பிறர் உழைப்பைத் திருடி பிடிஎஃப் போட மனசு வருதோ? அதை வாசிக்கவும் மானங்கெட்ட ஒரு கூட்டம் அலையுது" என்று 'மாது டாட் காம்' உரிமையாளர் பதிவிட்ட போது, "ஆமாம் சிஸ், இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது." என்று குரல் கொடுத்தவர்களில் முக்கால்வாசி பேர் எங்கள் வாட்ஸப் குழுவைச் சேர்ந்தவர்கள்.


அங்கு அப்படி கருத்துப் பதிவிட்டார்களா? இங்கு வாட்ஸப் குழு வந்து, "ஏதோ ஏழு கதை எழுதிட்டாளாம். அதுக்கு இப்படி குதிகுதின்னு குதிக்கிறா" என்று சலித்துக்கொண்டார்கள்.


இரண்டாவது பதிவு, ஆடியோ நாவல்கள் பற்றியது. வீட்டுக்கு வீடு யூடியூப் சானல் ஆரம்பித்துவிட்டு, என்ன போடுவதென்றே தெரியாமல் இப்படி கதைகளைத் திருடி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறதாம் ஒரு கூட்டம்.


இவ்வாறு சுற்றி எங்கிலும் நல்லவர்களாகவே இருக்க, நான் எப்படி லிங்கத்தைப் பார்த்து பயப்படாமல் இருப்பேன்? ஆனால், இதை என்னால் மாதாஜியிடம் தைரியமாகச் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணம் நிச்சயம் பயமல்ல, மரியாதை!


*************


அந்த எழுத்தாளர் மகளிர் டாட் காமில் எழுதுகிறார் என்பது தவிர்த்து வேறு எதுவும் எனக்கு அவர் பற்றி தெரியாது. அவர் என்னிடம் பேசத்தொடங்கிய போது, நீயும் நானும் ஒரே சமயத்தில் தான் மகளிர் டாட் காமில் எழுத வந்தோம் என்றார். அப்படியா? என்று நானும் அவரிடம் இயல்பாக பேசத் தொடங்கினேன்.


அவர் தற்போது நியூயார்க்கில் வசிப்பதாக சொன்னார். தமிழகத்தில் சென்னையையே தாண்டியிராத எனக்கு அவருடன் பேசுவது பிரம்மிப்பாக இருந்தது. இதை நான் எனது பெற்றோர்களிடம் சொன்னால் கூட நம்புவார்களா தெரியாது.


அவரிடம் ரொம்ப நான் நெருக்கம் காட்டியதொரு சமயம் தான், உன் கதை எப்போது முடிகிறது? எப்போது புத்தகமாக வருகிறது? என்றார். உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும், இப்போதைக்கு அது பற்றி யோசிக்கவில்லை என்றேன்.


அப்படியா? என்றவர், அடுத்த வாரம் தனது புத்தகம் ஒன்று, 'பாவை டாட் காம்' உரிமையாளரின் புத்தகங்களோடு வெளிவருகிறது என்றார். இதுவரை மாதாஜியால் அவதூறு பேசப்படாத ஒரே டாட் காம் என்றால், அது பாவை டாட் காம் தான். அதற்கு காரணமும் இப்போது தான் புரிகிறது.


தான் எழுதியதை தானே மறுமுறை வாசிக்காத எழுத்தாளர் என்று 'பாவை டாட் காம்' உரிமையாளர் மீது எனக்கொரு சந்தேகம் உண்டு. மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையே வாசிக்காதவர் தன்னுடையதை எப்படி வாசிப்பார்? எந்த நூலையும், எந்த எழுத்தாளரையும் அவர் இதுவரை கொண்டாடிப் பார்த்ததில்லை. சிலாகித்துக் கேட்டதில்லை. தனது எழுத்துப் பயணத்தின் இரண்டாவது வருட முடிவில், முப்பதாவது நாவலை எழுதி முடித்த சமயத்தில், தனது தோழி ஒருவரின் பதிவில், அட! உரையாடல்களுக்கு மட்டும் தான் இரட்டை மேற்கோள்களிட வேண்டுமா? மனதிற்குள் பேசுவதற்கெல்லாம் ஒற்றை மேற்கோள்கள் தானா? நான் இதுவரை அனைத்திற்கும் இரட்டை மேற்கோள்கள் அல்லவா போட்டுக்கொண்டிருந்தேன்! என்று அதிர்ச்சி காட்டியிருந்தார் அவர்.


இந்தப் பின்னணியில் மாதாஜி எப்படி அவர் கதைகளை புத்தகம் போட சம்மதித்தார்? இல்லை, அவர் தான் இங்கு எதற்கு வந்தார்?


எனது கேள்விகளை புறந்தள்ளி, வாழ்த்துகள் பத்ராக்கா என்றேன். ஆம், அப்படித்தான் அழைப்பேன் அவரை. அவர் மூன்று முத்தம் தரும் ஸ்மைலிகளோடு அவரது புத்தகத்தின் அட்டைப்படத்தையும் அனுப்பி வைத்தார்.


எனக்கோ திடீரென்று ஒரு சந்தேகம். உங்கள் கதை நடக்கிற களம் கிராமம் தானே? இதென்ன அட்டைப்படத்தில் ஈஃப்பீள் டவர் முன்னால் நாயகன் நாயகி உதட்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று வாயிருக்காமல் கேட்டுவிட்டேன்.


அதற்கு அவர் அளித்த பதிலிருக்கிறதே? எனக்கு நெஞ்சுவலி வராத குறை தான். மாதாஜிக்கு மிகவும் பிடித்த அட்டைப்படம் என்பதால் போட்டிருக்கிறாராம். எப்படி இப்படி குற்றவுணர்வின்றி கூற முடிகிறது? ச்சே! அட்டைப்படங்களுக்கென்று பிரத்யேக வடிவமைப்பாளர்கள் இல்லாத பதிப்பகத்தை எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து புறக்கணித்தால் எப்படியிருக்கும்? இந்த சினிமாவில் பார்ப்பது போதாதென்று அட்டைப்படத்திலும் அதே முகத்தையா பார்க்க வேண்டும்?


இரண்டு நாட்களுக்கு முன், நான் ஃபேஸ்புக்கில் தீவிரமாக பின்தொடர்ந்து வரும் ஆங்கில எழுத்தாளர் ஒருவர் தனது புத்தகத்திற்கு அட்டைப்படம், பின்னட்டைக்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, நூல் குறிப்பு, சமர்ப்பணம் என்று எல்லாம் தயார் செய்வதில் நேரமின்றி அலைவதாக சலித்திருந்தார். அது ஒரு புலம்பல் பதிவாகவே இருந்தாலும், புத்தகத்தின் தலைப்பைக்கூட சொந்தமாக தேர்ந்தெடுக்க முடியாத எங்கள் நிலையை நினைத்தால் சுயபச்சாதாபம் எழுகிறது.


நான் கேட்கும் போது யோசிக்கவில்லை. கேட்ட பிறகு தான் அவ்வாறு கேட்டிருக்கக்கூடாதோ என்று நினைத்தேன். ஆனால், பத்ராக்கா அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. இல்லையென்றால் நான், உங்கள் புத்தகத்திற்கு மாதாஜி எவ்வளவு ரூபாய் ராயல்டி கொடுத்தார்? என்றதற்கு, பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றிருப்பாரா?


**************


"கொள்ளை.. கொள்ளை.. மாபெரும் கொள்ளை! மகளிர் டாட் காமில் அத்தியாயங்கள் கொள்ளை"


இப்படித்தான் முதல்வரியிலேயே என்னை ஈர்த்தார் மாதாஜி. முதலில் மிகத்தீவிரமாக வாசித்த நான் இறுதியில் அதுவொரு புரளிப்பதிவென்றே நம்பினேன். ஆகையால், இம்முறை வாட்ஸப் குழு சென்று பார்க்கவில்லை.


ஆனால், மாதாஜியே எனக்கு அழைப்பு விடுத்தபோது தான் நிலைமையின் தீவிரம் புரிந்தது.


யாரோ ஒரு வேண்டாத விஷஜந்து மகளிர் டாட் காமிற்குள் புகுந்து அத்தியாயங்களை எல்லாம் நீக்கியிருக்கிறதாம். உன்னுடைய அத்தியாயங்கள் எதுவும் அதில் சேர்த்தியா? என்றவர் கேட்டபோது நான் வேகமாக ஓடிச்சென்று மகளிர் டாட் காமிற்குள் பார்த்தேன். எனது நாவலில் அத்தியாயங்கள் ஏழு, எட்டு, பதின்மூன்று பதினேழு, மற்றும் இருபத்தியொன்று என மொத்தம் ஐந்து அத்தியாயங்கள் நீக்கப்பட்டிருந்தன. எனக்கு கோபமென்றால் தாங்கவில்லை.


மாதாஜி அடிக்கடி அவருக்கு விரோதிகள் உண்டு என்று சொல்வதுண்டு. 'தமிழரசி டாட் காம்' உரிமையாளரின் ஏவல் ஆள் தான் அந்த மீம் கிரியேட்டர் என்ற போது கூட நான் அதை பேத்தல் கணக்கிலேயே சேர்த்தேன். ஆனால், இந்த முறை அப்படி என்னால் சாதாரணமாக நினைக்க முடியவில்லை. தளத்திற்குள் வந்தே அத்தியாயங்களை நீக்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய வன்மவாதியாக இருப்பார்கள்.


வாட்ஸப் குழுவிற்குள் சென்று பார்த்தபோது என்னைப்போலவே பலரும் இச்சம்பவத்திற்கு கொந்தளித்திருந்தார்கள். மாதாஜி அனைவரையும் அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்.


மாலையில் மீண்டும் அவர் என்னிடம் வந்த போது என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. யார் இப்படி செய்வது? வாசகர்கள் அத்தியாயங்களை காணாமல் திண்டாடுகிறார்கள். நீங்கள் அந்த விஷஜந்துவை கண்டுபிடித்துவிட்டீர்களா? என்று ஆர்வமாகக் கேட்டேன்.


ஆனால், அவரோ என் மீது எரிந்து விழுந்தார்.


"ஷிவானி, வெப்சைட் என்னோடதும்மா. நானும் உங்களை மாதிரி தான், புரியுதா? சும்மா உங்க இஷ்டத்துக்கு என்னை கேள்வி கேட்காதீங்க" என்றார். எனக்கு வெக்கென்று ஆகிவிட்டது. நான் அப்படி என்ன தவறாகக் கேட்டுவிட்டேன்? அவரது தளத்தில் எழுதும் ஒரு எழுத்தாளராக இதைக்கூட நான் கேட்கக்கூடாதா? எனக்கு கண்களில் நீர் முட்டியது. ஆனாலும், அடுத்து என்ன செய்வது மேம்? என்றேன், மானங்கெட்டத்தனமாக.


எப்படியும் இடையில் போய் அத்தியாயங்களை சேர்ப்பது கடினம் என்பதால், அவர் யோசனை என்னவென்பதை அறியவே இவ்வாறு கேட்டேன். அவரோ, எல்லாம் லிங்கம் பார்த்துக்கொள்வார் என்றார்.


அவர் எப்படி பார்த்துக்கொள்வார்? இதையும் கேட்டால் வல்லென விழ வாய்ப்புண்டு. நான் வேண்டுமானால் முதலிலிருந்து அத்தியாயங்களை அனுப்புகிறேனே. நீங்கள் புது கதைத்திரி உருவாக்குங்கள் என்றேன். மேற்கோள்கள் எல்லாம் சரியாகப் போடப்பட்ட அத்தியாயங்களை போடலாம் என்பது என் விருப்பம்.


மேலும் மேலும் அவரது கோபத்தை நான் கூட்டிக்கொண்டே இருக்கிறேன் என்பது எனக்கு உரைக்கவே இல்லை.


அவர், "வீவ்ஸ் கவுண்ட்லாம் உங்களுக்கு விளையாட்டா போயிடுச்சில்ல ஷிவானி?" என்றபோது தான் பேச்சின் தொனியில் சற்று திடுக்கிட்டேன்.


மாதாஜியால் இப்படி என்னிடம் காட்டமாக பேசமுடியும் என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. நான் அதன்பின் எதுவுமே சொல்லவில்லை. ஆஃப்லைன் வந்துவிட்டேன்.


மறுநாள் காலையில் அவரே வலிய வந்து பேசினார். "அடுத்த அத்தியாயம் டைப் பண்ணிட்டீங்கன்னா லிங்கத்துக்கு அனுப்பிருங்க ஷிவானி" என்றார்.


நான் வேறுவழியேயின்றி கோபமாக, சரிங்க மேம் என்றேன்.

------------------
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும்.

கருத்துத்திரி,
கதவு


 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அத்தியாயம் 6



இதுவரை அந்த லிங்கத்தின் முகத்தைக்கூட நான் பார்த்ததில்லை. ஆனால், அவரின் பெயரை மாதாஜி கூறும் போதெல்லாம் எனக்குள் ஒரு அபஸ்வரம்.


'ச்சே! ச்சே! காரணமில்லாமல் ஒருவரை நான் வெறுக்கிறேனா?' என்று நினைத்தபோது தான் எனக்கு லட்டு மாதிரி அந்தக் காரணம் கிடைத்தது.


நான் அனுப்பிய இரண்டு அத்தியாயங்களில் ஒன்றை மட்டும் இரண்டு முறை பதிவேற்றி இருந்தார் லிங்கம். விசாரித்தபோது பத்ராக்காவினதையும் அப்படித்தான் செய்திருக்கிறார். இதை நான் மாதாஜி மூலமாகவும், தனியாகவும் இரண்டுமுறை சொல்லிவிட்டேன். ஆனால், இன்னும் அவர் அதை நீக்கியபாடில்லை. மாதாஜி தள நிர்வாக உதவிக்காகத்தான் அந்த லிங்கத்தை வைத்திருக்கிறார் என்றால் அவரின் இந்த பொறுப்பற்றத்தனத்தை சுட்டிக்காட்ட வேண்டாமா? இருந்தாலும் மாதாஜியிடம் சொல்வதற்கு முன் ஒருமுறை அந்த அத்தியாயம் நீக்கப்பட்டு விட்டதா? என்பதை சோதிப்பதற்காக நான் தளத்திற்குள் சென்று பார்த்தேன்.


ஆச்சரியம்! விஷஜந்துவால் நீக்கப்பட்டிருந்த அத்தியாயங்கள் அனைத்தும் சரியாக அதனதன் இடத்தில் இருந்தன. ஆனால், இருமுறை பதிவிடப்பட்டிருந்த, நான் நீக்க சொன்ன அத்தியாயம் மட்டும் இன்னும் நீக்கியபாடில்லை. ஆமாம், காணாமல் போன அத்தியாயங்கள் எப்படி மீண்டும் தளத்திற்குள் வந்தன? நான் வாட்ஸப்பில் முதல் ஏழு அத்தியாயங்கள் வரையிலும் தான் மாதாஜிக்கு அனுப்பியிருந்தேன். அதன்பின் நானே தளத்திற்குள் சென்று பதிவிட ஆரம்பித்துவிட்டேன். இருபத்தியொராவது அத்தியாயத்தின் போது தான் லிங்கம் குறுக்கே வந்தார். மாதாஜியின் வற்புறுத்தலால் புதிய அத்தியாயங்களை எல்லாம் அவரிடம் அனுப்பும் நிலை உண்டானது. அப்படியானால் இடையில் நீக்கப்பட்டிருந்த அத்தியாயங்கள் எப்படி நான் அனுப்பாமல் அவருக்கு கிடைத்திருக்க முடியும்?


ஊப்ஸ்! எனக்கு ரத்தஅழுத்தம் கூடியது. நேரே எங்கள் வாட்ஸப் குழு சென்று பார்த்தேன். எனக்கு முன்பே பலர் தங்கள் அத்தியாயங்கள் திரும்ப கிடைத்ததற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


ஆனால், எங்கள் காணாமல் போன அத்தியாயங்களை லிங்கம் எப்படி பெற்றார்? என்று நான் மட்டும் தான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனந்த குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த யாருக்குமே அந்த சந்தேகம் எழவில்லை. நிச்சயம் எனது இந்த யோசனை திறனாலே நான் துரோகியாவது உறுதி என்ற பயம் வந்தது எனக்கு.


திடீரென ஒரு திருப்பம்.


"எப்படி இது சாத்தியம் மாதாஜி?"


ஹப்பா! ஒரு ஜீவனாவது இதை கேட்டதே. மாதாஜியின் பதிலுக்காக நான் ஆர்வமாகக் காத்திருந்தேன். ஆனால், அவரின் பதில் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. 'உங்கள் புடவையை நீங்கள் எங்கே வாங்குனீர்கள் மாதாஜி?' என்ற கேள்விக்கு, 'என் பழைய புடவையை திருடியவள் சரோஜா' எனும் வகையில் தான் பதிலளித்துக் கொண்டிருந்தார் அவர்.


ஆமாம், "நமது வெப்சைட்டில் அத்தியாயங்களை திருடினது அந்த துரோகி பமீலா ஷானு" என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.


'ஏது அந்த சாது முகம் பமீலா ஷானுவா இதையெல்லாம் செய்தார்?' அந்த அதிர்ச்சி எனக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன். எல்லோருமே மாதாஜி சொன்னதை அப்படியே நம்பி பமீலா ஷானுவை வசைபாடத் தொடங்கிவிட்டார்கள். ஒருவர் தன் தளத்தில் முன்பு எழுதினார் என்ற ஒரு காரணத்திற்காகவே அவர் மீது குற்றம் சுமத்துதல் எந்த விதத்தில் நியாயம்? என்னால் இதை சகிக்கவே முடியவில்லை.


ஒருவர் ஒரு வாய்ப்பை வழங்கினார் என்பதற்காக அவர் என்ன சொன்னாலும் கேட்க வேண்டுமா? இல்லை சேவல் முட்டை போடாது என்று மறுத்துப் பேசினால் தான் என்ன வந்துவிடப் போகிறது? என்ன புத்தகம் போட மாட்டாரா? போகிறது.


நான் திரும்ப திரும்ப என் மூளையைப் போட்டுக் குடைந்தேன். துரோகியாகிவிடுவேன் என்பதையும் மறந்து குடைந்தேன். முன்பு சன்மானம் அளிக்கப்போவதாக சொன்னது, பிறகு பல்லவி மனோவை அழைத்து வந்தது, இப்போது பமீலா ஷானு அத்தியாயங்களை நீக்கி விட்டதாய் கூறுவது... ஆமாம் ஏன் மாதாஜி தன் தளத்தின் ப்ரொமோசனுக்காக இப்படி அத்தியாயங்கள் திருடுப்போய் விட்டதாக எங்களிடம் நாடகமாடியிருக்கக்கூடாது? ஆம், அப்படி தான் இருக்க வேண்டும். ச்சே! என்னவொரு கேவலமான திட்டம்! இதனால் தான் நான் விஷஜந்து யாராக இருக்கும் என்று கேள்வி கேட்டபோது என் மேல் பாய்ந்தாரா? இனியும் இப்படியொரு இடத்தில் நான் இருக்க வேண்டுமா? நாளை என்னையும் தூக்கியெறிந்து, இப்படி கூட்டமாக இணைந்து புறணிப்பேச எவ்வளவு நேரமாகும்? இனி இந்த ஆட்டுமந்தைக் கூட்டத்தில் நான் இருக்கக்கூடாது. ஆம், இருக்கவேக் கூடாது. அடிமையாக இருப்பதற்கு துரோகியாக இருப்பது எவ்வளவோ மேல்.


முதல் வேலையாக 'சைலெண்ட் பிடிஎஃப் ரீடர்ஸ்' குழுவிலிருந்து வெளியேறினேன். ஏனோ என் கைகள் அக்கணம் நடுங்கியது. இதயம் வேறு படபடவென்று அடித்துக் கொண்டது. ஏதோ 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' ஹாட் சீட்டில் உட்கார்ந்திருப்பது போலவே பதற்றம் எனக்கு.


இந்நேரம் ஆளாளுக்கு, "ஏன் ஷிவானி குழுவை விட்டு வெளியேறினா?" என்று மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கக்கூடும். எப்படியும் என்னை சமாதானப்படுத்த இருவராவது வருவார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், எனது எதிர்பார்ப்பனைத்தும் பொய்யாகியது. யாருமே என்னை புலன்விசாரணை செய்யவில்லை. நல்லது! ரொம்ப நல்லது!


'இப்போது நான் அவர்களில் ஒருத்தி அல்ல! நான் தனி மனிதி; சுதந்திரப்பறவை' என்பதை காட்டுவதற்காகவே எனது இருபத்தி நான்காவது அத்தியாயத்தை தனி ஒரு பிளாக் தொடங்கி பதிவிட்டேன்.


பிளாக்கைப் பற்றி அறியாதவர்கள், "ஓஹ்! நீ சொந்தமாக பிளாக் ஆரம்பித்துவிட்டாயா?" என்று வியக்கக்கூடும்.


ஆனால், கூகுளும், ஈமெயில் ஐடியும் வைத்துள்ள யார் வேண்டுமானாலும், பிளாக்கர் டாட் காமிற்குள் சென்று எளிமையாக பிளாக் உருவாக்கலாம் என்பது பெரும்பாலானோர்க்குத் தெரியாது. நான் எனது எதிர்ப்பைக் காட்டும் விதமாகவே இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருந்தேன், துரிதமாக.


நான் இருபத்தி ஆறாவது அத்தியாயத்தை பிளாக்கில் போட்டு ஃபேஸ்புக்கில் லிங்க் பகிர்ந்துபோதே பலருக்கும் புரிந்துவிட்டது, நான் மகளிர் டாட் காம்மை விட்டு வெளியேறிவிட்டேனென்று. வாசகர்கள் சிலர் ஏன் ஏன் என்று குடைந்தார்கள். 'பிடிக்கவில்லை' என்ற ஒரே பதிலோடு அவர்களை தூரத்தில் நிறுத்திவிட்டேன்.


என்ன தான் நான் வீரப்பாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ரொம்ப பலவீனமாகவே உணர்ந்தேன். இனி வாட்ஸப் குழு வாசகர்கள் யாரும் என் கதைக்கு லைக் போடமாட்டார்கள். விமர்சனம் எழுதி ஊக்குவிக்க மாட்டார்கள். மீம் போட்டு பிரபலப்படுத்த மாட்டார்கள். பிரச்சனையென்றால் "நம்ம ஷிவானி" என்று குரல் கொடுக்க மாட்டார்கள். இன்னும் எவையெல்லாம் நான் இழக்கப்போகிறேனோ? எனக்கேத் தெரியவில்லை.


எனக்கு நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது. நான் வெறுமனே வாசகராக மட்டும் இருந்திருக்கலாம். தொலைவிலிருந்தபடியே எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கு சில்லறையை சிதறவிட்டிருக்கலாம். நான் அழகான பாம்பை அருகில் சென்று பார்த்திருக்கக்கூடாது. கல்லூரிவிட்டு வீடு திரும்பும் வழியில் என்னையும் மீறி கண்களில் நீர் திரண்டுவிட்டது. இறுதியாக நான் எப்போது அழுதேன் என்பது எனக்கே ஞாபகமில்லை என்பதால், இதுவரை நான் சேமித்து வைத்த கண்ணீர் அனைத்தையும் வெளியேற்றும் விதமாக கரைந்துக் கொண்டிருந்தேன். எப்படியோ கைக்குட்டையை துணைக்கு வைத்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.


வீடு திரும்பியதும் அம்மாவுக்கு என் முகத்தை காட்டக்கூடாது என்பதற்காக வேகமாக எனதறைக்குள் நுழைந்தேன். அவர் கேட்டால் நிச்சயம் என்னால் உண்மையை மறைக்க முடியாது. ஆனால், நான் சொல்வதை அவரால் புரிந்துகொள்ளவும் முடியாது. எவ்வளவு எடுத்துச்சொன்னாலும், "ச்சே! இதுக்கா அழற? இனி அந்தப் பொம்பளக்கூட பேசாத, அவ்வளவு தானே? மொத இந்தப் போன நோண்டுறத நிறுத்து. அது தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்" என்பார், இறுதியில் வழக்கமான அறிவுரையுடன்.


நான் இதனாலேயே அம்மாவிடமிருந்து இந்தச் சம்பவத்தை மறைத்தேன். கட்டிலில் படுத்துக்கொண்டு மீண்டும் முதலிலிருந்து என் அழுகையைத் தொடர்ந்தேன். தள்ளிக் கிடந்த என் கைப்பேசியானது அதிர்ந்து என்னை எடு என்றது. ஏற்று காதிற்கு கொடுத்தேன். பத்ராக்கா தான் பேசினார். அவர் மாதாஜியின் தூதுவராகத்தான் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.


"என்னாச்சி ஷிவானி? ஏன் மாதாஜிக்கிட்ட கோவிச்சிக்கிட்ட? அவங்க ரொம்ப நல்லவங்கடா. நான் ஒரு ஹவுஸ் வைஃப் தான். மூனு குழந்தைகளுக்கு அம்மா. பட், இப்போ நான் ஒரு ரைட்டரா இருக்கேன்னா அதுக்கு மாதாஜி தான் காரணம். வெறுமனே வாசகரா மட்டும் இருந்த என்னை எழுத்தாளரா மாத்தியிருக்காங்க. அவங்கக்கிட்ட உங்களுக்கும் ஷிவானிக்கும் என்ன பிரச்சினை மாதாஜின்னு கேட்டதுக்கு, ஷிவானி ஏன் இப்படி பண்ணுதுன்னு எனக்கே தெரியலைம்மான்னு சொன்னாங்க. என்னை உன்கிட்ட பேசச்சொல்லியும் கேட்டுக்கிட்டாங்கடா" என்றவர் சொன்னபோது என் அழுகையை என்னாலயே கட்டுப்படுத்த முடியவில்லை.


அம்மாவை விட இவர் ஒன்றும் மோசமில்லை என்பதால் இதுவரை நடந்ததனைத்தையும் ஒன்றுவிடாமல் தேம்பிக்கொண்டே சொன்னேன். ஆனால், அவருக்கு நான் சொல்வது புரியவில்லை. இல்லை புரியாதது போல் நடித்தாரா தெரியவில்லை. "அப்போ நீ இனி மகளிர் டாட் காம்ல எழுத மாட்டியா?" என்றார்.


இதை அவரின் இறுதிகேள்வியாக எடுத்துக்கொண்டு, "ஆமாக்கா" என்றதோடு அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.


அதன்பின், அவர் மாதாஜியிடம் என்ன சொன்னாரோ தெரியாது. மாதாஜி போன்கால், மெசேஜ் என்று எதிலும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. விதி, நானே ஒரு வாரம் கழித்து அவரிடம் பேசும் சங்கடத்திற்கு தள்ளப்பட்டேன். வாட்ஸப் மூலமாகத்தான் என்றாலும் எப்படி என்ன ஆரம்பிப்பதென்றே எனக்கு ஓடவில்லை. ஆனாலும், சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதால் மெதுவாக 'என் கதையை உங்கள் தளத்திலிருந்து நீக்கிவிடுங்கள்' என்று தட்டச்சு செய்தேன். முதல்முறை அவரிடம் பேசும்போது இருந்த உணர்விற்கு தலைகீழ் உணர்விது.


என் பதற்றத்தை தணிக்கும் விதமாக, "சரி" என்ற ஒற்றைப்பதில் வந்தது அவரிடமிருந்து.


சரியாக மூன்றுநாள் கழித்து மீண்டும் நான் ஞாபகப்படுத்தினேன். அவர், "ம்ம், எங்க லிங்கத்துக்கிட்ட அறிவுறுத்துறேன் ம்மா" என்றார்.


'ச்சை! மீண்டும் அதே லிங்கம்' என்ற அருவருப்பு உண்டானது.


மேலும் இரண்டுநாள் கழித்து, "மேம், உங்க லிங்கத்துக்கிட்ட இன்னும் நல்லா அறிவுறுத்துங்க" என்றேன், கோபமும் நக்கலும் கலந்து.


அவர் சம்பந்தமேயில்லாமல், "நான் புது வெப்சைட் ஆரம்பிக்கப்போறேன்" என்றார்.


நான் அவசரப்பட்டு, வாழ்த்துகள் என்றுவிட்டேன்.


அடுத்த மெசேஜில், "என் புது சைட்ல உன் நிழல் கூட விழ விடமாட்டேன்" என்றபோது தான் வாழ்த்துகள் சொன்னதை நினைத்து நொந்தேன்.


இப்போது நான் அவர் தளத்தில் எழுதுகிறேன் என்றா கேட்டுக்கொண்டிருக்கிறேன்? இதை சும்மாவிடக்கூடாதென, "என்னால உங்களுக்கு எதுக்கு ப்ராஃபிட் கிடைக்கனும்ன்னு தான் மேம் ரிமூவ் பண்ண சொல்றேன். இதுவரை ரெண்டு லட்சம் வீவ்ஸ் போயிருக்குல்ல மேம்?" என்றேன்.


எதிர்புறமிருந்து பதில் சூடாக வந்தது.


"ப்ராஃபிட்டும் கிடையாது. ஒரு மயிரும் கிடையாது"


'இதான்.. இதான் நீங்க'


"அப்போ என்ன மயித்துக்கு இன்னும் என் கதையை எடுக்காம வச்சிருக்கீங்க மேம்?"


'கடைசில என்னையும் கத்தியெடுக்க வச்சிட்டீங்களேடா!' அடுத்து அவர் சுரணை உள்ள எவரும் செய்யும் ஒன்றை செய்தார். என்னை பிளாக் செய்தார். எனக்கு ஆச்சரியம் அதுவல்ல; அடுத்த அரை மணி நேரத்திற்குள் என் நாவல் மகளிர் டாட் காமிலிருந்து நீக்கப்பட்டது தான்.

______________________

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி,
கருத்தம்மாக்களுக்கான களம்😂
 
Top Bottom