Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேரின் தாகம்...

Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
அத்தியாயம் - 18
நெல்லை இறைத்தால் அள்ளி விடலாம். சொல்லை இறைத்தால் அள்ளி விட முடியாது என பெரியவர்கள் அப்படி ஒன்றும் போகிற போக்கில் பொருள் இல்லாமல் கூறி விடவில்லை. எதை வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுவிட முடியும். ஆனால் இறைத்த சொற்களையும், கடந்து விட்ட காலத்தையும் எப்பொழுதுமே திரும்பப் பெற்றுவிட முடியாது. அன்றும் அதுதான் நடந்தது.
எங்கே இருந்து வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? என்று தெரியவில்லை. கயலுக்கு அவர்கள் யார் என்று கூடத் தெரியவில்லை தன்னை ஏன் பேசுகிறார்கள் என்றும் புரியாமல் மிரட்சியுடன் வெடவெடத்துப்போய் வளவனின் மார்போடு ஒன்றினாள்.
"இவ்வளவு பேசியும், என்ன தைரியமா நம்ம முன்னாடியே அவனைக் கட்டிப்புடிச்சிட்டு நிக்கிறா பாரு..?" என அவள் கையைப் பிடித்து ஒருத்தி இழுக்க, அவளைப் பற்றிய கையைத் தட்டி விட்டு, அவளை விலக்கி அவளுக்கு முன் பாதுகாப்பு அரணாய் வளவன் நிற்க, அதிர்ச்சி விலகாமல் வளவனின் கையைப் பற்றியபடி அவன் தோளின் பின்புறம் அவள் மறைந்து நின்றாள்.
"நிறுத்துங்கண்ணா.." என்று வளவன் அடங்கிய குரலில் கர்ஜித்தபோதுதான் வந்தவர்கள் வளவனின் சொந்தம் என்று தெரிந்தது அவளுக்கு.
அதற்குள் எத்தனையோ கேவலமான வார்த்தைகளை உதிர்த்து விட்டது அவர்கள் நாக்கு.
"என்ன தம்பி நிறுத்துறது..? கல்யாணம் ஆகி புள்ள இருக்கு.. கல்யாணம் ஆகாத உன்னை மயக்கி, பார்க்கில் கூட்டிட்டு வந்து உட்கார்ந்திருக்கா.. இவ புருஷன் எப்படி செத்தானோ..? ஒருவேளை இவ நடத்தை சரியில்லாமல்தான் போய் லாரியில் விழுந்துட்டானோ என்னவோ..?" என ஒருத்தி பேச, மற்றொருத்தியோ "இவளே ஆள் வச்சு கொன்னுட்டாளோ என்னவோ..? யாரு கண்டா..? புடிச்சா நல்ல புளியங்கொம்பா பிடிக்கணும்னு திட்டம் போட்டு புடிச்சுட்டா போல..?" என நாக்கில் நரம்பில்லாமல் பேச, வளவனைப் பற்றி இருந்த கயலின் கை தானாய் விலகியது.
"அண்ணி.." என அதிர்ந்தவன், அவர்கள் கூறிய வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்து சினமுற்றவன் "என் அண்ணனோட மனைவிகள் நீங்க.. அந்த மரியாதையைக் காப்பாத்திக்கோங்க.. அவ நான் கட்டிக்கப் போறவ.. அவளைப் பேச உங்க யாருக்கும் உரிமை இல்லை.." என்றவன் அவளின் விடுபட்ட கரத்தினைத் திரும்ப வலுவோடு பற்றி, அருகே இழுத்துக் கொண்டான்.
“என்ன? கட்டிக்க போறாங்களா? யாரு, யாரைக் கட்டிக்கிறது? ஒரு விவஸ்தை வேணாம்? கண்ட கழுதை எல்லாம் நம் வீட்டுக்கு மருமகளாக முடியுமா? உனக்கு கல்யாணம் பண்ணனும்னா நம்ம தகுதி, தராதரத்துக்கு ஏத்த இடமா நாங்க பார்த்து செஞ்சு வைக்கிறோம். கண்ட கழுதைகளுக்கு எல்லாம் நம்ம வீட்டில் இடமில்லை என்றான் வளவனின் சகோதரன்.
வளவனுக்கு ஆத்திரம் பொங்கியது "நம்ம வீடா? அது இப்போதான் நினைப்பு வந்துச்சா? இத்தனை நாளா அந்த நினைப்பு உங்களுக்கு இருந்துச்சா..? என் கல்யாணத்தைப் பத்தி பேச உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதுவும் எனக்கு மனைவியாக போறவளைத் தொட உங்களுக்கு என்ன தைரியம் இருக்கணும்? யார் கொடுத்தா உங்களுக்கு இந்த அதிகாரத்தை? இவள் எனக்கு சொந்தமானவள்.. இவளை ஒரு வார்த்தை பேசவும் யாருக்கும் உரிமை இல்லை..” என்றபடியே அவள் கைகளை இறுகப் பற்றியபடி தன் அருகே கொண்டு வந்தான்.
ஆங்காங்கே இருந்தோர் இவர்களின் விவகாரத்தை வேடிக்கை பார்க்க கயலுக்கு சுற்றுப்புறத்தில் நடப்பது எதுவும் உறைக்கவில்லை. அவர்களின் வார்த்தைகள் அவள் நெஞ்சில் திராவகத்தை வீசி இருந்தது. அவள் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாள். எந்தக் காரணத்திற்காய் அவள் அவனை ஏற்க மறுத்தாளோ, அதே காரணம் இன்று அவளை பொதுவெளியில் எந்தப் பெண்ணும் கேட்கக்கூடாத கேவலமான சொற்களைக் கேட்க வைத்திருக்கிறது. தான் விலக்கிய கரத்தினை வளவன் இறுகப் பற்றி இருப்பதை உணர்ந்தாள். அவள் கைகளை விடுவிக்க முயன்று கொண்டே இருக்க, அவனும் மேலும் மேலும் இறுக்கி தன் கரத்தோடு பற்றிக் கொண்டு இருந்தான்
அங்கே மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதை அவள் புலன்கள் உணர மறுத்தன. எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ அதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது. அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது. சுற்றுப்புறம் புரியவில்லை. காதினுள் ஓவென்ற இரைச்சல். மனம் கலங்கி, உடல் சோர்ந்து, தடுமாறி, கால்கள் தொய்ந்து போனது. அவளின் நடுக்கத்தையும், அவள் தொய்வதையும் உணர்ந்தவன் அவளின் கரத்தினை மேலும் இறுகப் பற்றி தன் கை வளைவுக்குள் அவளை நிறுத்திக் கொண்டு "எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு வந்து பேசுங்க.. பொது இடத்தில் ஒரு பொண்ணைப் பேசுறது அநாகரிகம்.." என்று கர்ஜித்தவன், அவர்களின் பதிலை எதிர்பாராது கயலின் கையை விடுவிக்காமலேயே அவளைத் தன் அணைப்பிலேயே இருத்திக் கொண்டு, குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மளமளவென வெளியே வந்தான்.
இப்போதைக்கு அந்த இடத்தை விட்டு விலகுவதே சரி என்று எண்ணியவன் அருகே இருந்த ஒரு ஆட்டோவை அழைத்து "பிள்ளைகளை அதில் ஏற்றினான். பின்னாலே வந்து கூச்சலிட்ட தன் உறவுகளை அவன் பொருட்படுத்தவே இல்லை. அவளையும் ஏறச் செய்தவன், தானும் ஏறி அவளருகே அமர்ந்து, "வண்டியை எடுங்கண்ணா வழி சொல்கிறேன்.." எனக் கூற சூழ்நிலை உணர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் உடனே ஆட்டோவை கிளப்பிப் பறந்தார்.
"என்ன சார் ஏதாவது தகராறு பண்றாங்களா.. ஸ்டேஷன் எதுவும் போகணுமா.." என அவர் கேட்க,
"இல்லைண்ணா.. குடும்ப பிரச்சினைதான் நீங்க கொஞ்சம் தூரம் தள்ளி, ஐஸ்கிரீம் பார்லர் ஏதாவது இருந்தா, அங்கே போங்க” என்றவன், அதிர்ச்சியில் இருந்து மீளாதவளை, “கயல்” என கரத்தினை அழுத்தி கொடுக்க, சுற்றம் மறந்து உடைந்து அழலானாள் அவள்.
கயல் பாரு.. கண்ணை தொட.. ஒண்ணும் ஆகல.. எல்லாம் சரியாகும்..” என உறுதியான குரலில் கூறியவன், அழுவது கண்டு மிரண்ட குழந்தைகளிடம் “ஒண்ணும் இல்லடா தங்கங்களா..” என்று அவர்களையும் சமாளித்தான்.
ஏதோ சண்டை என்று அந்த குழந்தைகளுக்குப் புரிந்தது. அமைதியாய் அவர்கள் வர, சில நிமிடப் பயணத்திற்குப் பின்னே, ஆட்டோ ஒரு ஐஸ்கிரீம் பார்லர் முன் நின்றது. “கயல் முகத்தைத் துடைச்சிக்கோ” என அவளை சமனம் செய்ய அவகாசம் கொடுத்து விட்டு, குழந்தைகளை இறக்கி உள்ளே அழைத்துச் சென்றான். அவர்களை அமர வைத்து விட்டு அவர்களுக்கு வேண்டியது கொடுக்குமாறு அங்கிருந்த பணியாளர்களிடம் கூறிவிட்டு வெளியே வந்தவன், அப்பொழுதும் தன் உணர்வில்லாமல் கரைந்து கொண்டிருந்தவளைக் கை பற்றி இறங்கச் செய்தான். நிலைமை உணர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க, அதை வாங்கி அவளை முகம் கழுவச் செய்தான். ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து அவரை அனுப்பி விட்டு, தன் கைபேசியை எடுத்து முதலில் பிரகாசத்தை அழைத்தவன், தாங்கள் இருக்கும் இடம் சொல்லி அங்கே வருமாறு கூறி வைத்தான்.
தன் தாயை அழைத்தவன் நடந்தவைகளைக் கூறி முடிக்க எதிர்முனையில் கேட்டுக் கொண்டிருந்த செந்திலகம், "வளவா.. நீ கயலை சமாதானப்படுத்து.. அவங்கள நான் பாத்துக்கிறேன்.. நாளைக்கே பேசி கல்யாணத்தை உறுதி செய்திடுவோம்" என்று கோபத்தோடு கூறினார்.
"ம்மா.." என்ற மகனை,
"கண்ணா.. ஒரு பொண்ணோட மனம் கலங்குச்சுன்னா அது நம்ம குடும்பத்தையே அழித்து விடும். அவளை சமாதானப்படுத்திட்டு நீ வா.. நாளைக்கு கயல் வீட்டுக்கு நான் வந்து பேசுறேன்.." என்று முடித்தார்.
"இவளை எப்படிம்மா சமாதானப்படுத்துவேன்..?" என்று கலங்கிய மகனுக்கு, "அவ தான் உன் மனைவின்னு உறுதியா சொல்லு கண்ணா.. இதுக்கும் மேல எல்லோரோட சம்மதமும் வாங்கி திருமணம் செய்வது முக்கியமா..? இல்ல உன் வருங்கால மனைவி முக்கியமா..?" என்ற கேள்வியை முன் வைக்க
"கயல் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்மா.. ஆனா...." என்றவனை இடைமறித்தார் செந்திலகம்.
"இப்போ கயல்தான் ரொம்ப முக்கியம். இவர்களை நான் பாத்துக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் என் மகன் ஒரு பெண்ணை கைவிட மாட்டான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.." என்றபடி வைத்துவிட்டார்.
பெருமூச்சோடு அவன் அலைபேசியை வைக்க, அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். "ஒண்ணும் இல்லடி.. எல்லாம் சரியாகும்.." என ஆதரவாய் அவள் கரம் பற்றிக் கொண்டான். அவள் குரல் தழுதழுக்க ஏதோ பேச முற்பட, “இப்போ எதுவும் பேச வேணாம்.. கொஞ்சம் அமைதியா இரு..” என அவளை ஆசுவாசப்படுத்த முனைந்தான்.
அவள் உள்ளமோ மௌனமாய் கதறிக் கொண்டிருந்தது. கண்களும், செவிகளும், புலன்களும் வேறு எதையும் கேட்கவோ, பார்க்கவோ, உணரவோ மறுத்தன. விழிகள் அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டிருக்க, அவள் மனம் பொங்கி எழும் கடல் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
எதுவும் பேசினால் அவள் மீண்டும் காயப்பட்டு விடக்கூடும் என்று அமைதியாய் அவள் கையை வருடியபடி அந்த ஐஸ்கிரீம் பார்லரில் அமர்ந்திருந்தான் அவன். ஆனால் அவளோ தான் எங்கே இருக்கிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்று எதையும் உணரும் நிலையில் இல்லை.
ஒரு வழியாய் பிரகாசம் வந்து சேர, அவளை உள்ளேயே அமரச் செய்துவிட்டு அவன் மட்டும் வெளியே வந்தான். நேராக அவரிடம் வந்தவன் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு "முதலில் மன்னிச்சிடுங்க சார்.." என மன்னிப்பை வேண்டினான்.
அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை, "என்ன தம்பி ஆச்சு? ஏன் இப்படி மன்னிப்பு எல்லாம் கேக்குறீங்க..?" என பதறிப் போனார்.
தான் கயலை விரும்புவதையும், அவள் தயக்கத்தையும், இதுவரை நடந்த அத்தனையும் ரத்தினச் சுருக்கமாய் அவருக்கு புரியும்படி கூறியவன், இன்று கயலுக்கு நேர்ந்த துன்பத்தையும் அவன் விளக்க பதறிப்போனார் பிரகாசம்.
" இன்னைக்கு ஒரு நாள் கயல பத்திரமா பாத்துக்கோங்க.. காலையில அம்மாவோட நான் வரேன்.. இனி அவளை யாரும் கஷ்டப்படுத்த நான் அனுமதிக்க முடியாது. ஒரு நல்ல செய்தியோடு வர்றேன்.." என்று அவர் கை பற்றி தழுதழுத்தான்.
எத்தனை மகிழ்ச்சியோடு கேட்டிருக்க வேண்டிய செய்தி இது..? இவ்வளவு அதிர்ச்சியோடும், துன்பத்தோடும் கேட்க வேண்டி இருந்ததை எண்ணி நொந்து போனார் பிரகாசம். தன் மகளின் வாழ்வில்தான் ஏன் இத்தனை துயரங்கள்..? அவளும், வளவனும் நேசிப்பதை எண்ணி மகிழ்வதா இல்லை, இன்று அவளுக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணி வருந்துவதா என்று அறியாமல் கலங்கிப் போனார்.
அத்தியாயம் - 19
கயலின் மனதிற்குள் பெரும் பிரளயமே நடந்து கொண்டிருந்தது. இதெல்லாம் கூடாதென்றுதானே அவள் எதையும் நினைக்காமல் தன் மனதை கல்லாக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று?
"கயல்.. யாரு என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நம்ம கல்யாணம் நடந்தே தீரும். என் வாழ்க்கைல கல்யாணம்னா அது உன்னோட மட்டும்தான். ஜீவா நம்ம குழந்தைதான். இதுல எந்த மாற்றமும் இல்ல. இதை மனசுல நல்லா பதிய வெச்சிக்கோ, புரியுதா? என அழுந்தந்திருத்தமாய் அவள் கை பற்றி உறுதியோடு கூறிவிட்டு, நிலைகொள்ளாமல் தவித்த கயலை மனதே இல்லாமல் அவளின் வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பினான்.
கிளம்பும் முன் நேராய் பிரகாசத்திடம் வந்தவன் "அவளைப் பத்திரமா பாத்துக்கோங்க.. நான் ஒரு நல்ல செய்தியோட வர்றேன்.." என அவருக்கும் ஆறுதலாய்க் கூறி விட்டு தன் வீடு திரும்பினான்.
தன் மகன்கள், மகள்களை குடும்பத்தோடு உடனே வரும்படி உத்தரவிட்டார் செந்திலகம். அத்தனை பேரும் உடனே இங்கே இருக்க வேண்டுமென தாய் கூறியதுமே, அது வளவனின் திருமண விஷயமாகத்தான் இருக்கும் என்று அனைவருக்குமே உறுதியாயிற்று. மகன்கள் இருவரும் பேசாமல் மருமகள்களைப் பேச வைக்க, “எவ்வளவு நேரமானாலும் சரி உடனே எல்லோரும் வந்தாகணும். இன்னைக்கு இங்கே வரலேன்னா, இனி என்னைக்கும் இங்கே வரக்கூடாது” என்று கூறிவிட.. இன்று ஒரு முடிவெடுப்பது என்ற எண்ணத்தோடு எல்லோரும் வந்து சேர்ந்தனர்.
செந்திலகம் நேரடியாக விசயத்திற்கு வந்தார்.
"வளவனோட கல்யாணம் அவன் தனிப்பட்ட விஷயம். அதுல இங்க யாரும் தலையிட வேண்டாம். இத்தனை நாள் எப்படி இருந்தீங்களோ, அதே போலவே இனிமேலும் இருங்க..." என்று சற்று காட்டமான குரலில் கூறினார் செந்திலகம்.
"அதெப்படி அது அவன் தனிப்பட்ட விஷயமாகும்..? தாலியறுத்த ஒருத்தியை இவன் வீட்டுக்கு கூட்டிட்டு வருவான். அதை நாங்க வேடிக்கை பார்க்கனுமா..? என அவன் அண்ணன் தாயை எதிர்த்து குரலை உயர்த்தினான்.
மூத்த மகனின் வார்த்தைகள் செந்திலகத்தின் இதயத்தில் நெருப்பை அள்ளி வீச, வெகுண்டெழுந்தார்.
"நானும் தாலியறுத்தவ தான்டா.... நானும் இந்த வீட்ல தானே இருக்கேன்..? ஓ... அதனால்தான் நீங்க இங்க வர்றதில்லையோ? இத்தனை நாளா வேடிக்கைதானே பார்த்தீங்க? இப்போ என்ன புதுசா அக்கறை வந்திடுச்சு? உங்கப்பா விட்டுட்டு போன நாள்லேர்ந்து இந்த வீட்டுல துரும்பைக் கிள்ளிப் போட்டிருப்பீங்களா? இன்னைக்கு என்ன உங்களுக்கு கரிசனம் கட்டிகிட்டு அழுகுது..?
ஒரு பொம்பளப்புள்ளைய நாலு பேரு பாக்க தப்பா பேசறதே தப்பு. இதுல அந்த பொண்ணை உங்க வாய்க்கு வந்தபடி பேசிட்டு வந்திருக்கீங்களே.. உங்களை எல்லாம் என் வயித்துலயா பெத்தேன்னு வேதனையா இருக்கு. நீங்கல்லாம் வாத்தியாருக்கு பொறந்த புள்ளைங்களா... இதெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான் அவரு போய்ட்டாரு போல..? ச்சீ, என்ன மாதிரி கேவலமான வேலையைச் செய்திருக்கீங்க..? அந்த புள்ளைய பேச நீங்க யாருடா..? நீங்களும் அக்கா தங்கச்சிங்களோட பொறந்தவங்க தானே..? நாளைக்கு நம்ம வீட்டுல ஒண்ணுன்னா கூட இப்படித்தான் பேசுவீங்களா..?" என சாட்டையாய் சொற்களைச் சுழற்றினார் அந்த தாய்.
"ம்மா..." என மூத்த மகன் வாயைத் திறக்க..
"என்னடா அம்மா..? உங்களுக்கெல்லாம் புருசனை இழந்த ஒரு பொண்ணு படுற வேதனை புரியாதுடா.. உங்கப்பா போன பின்னாடி எங்கூட நீங்க இருந்திருந்தா கொஞ்சமாச்சும் அந்த வேதனை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். எங்களுக்கென்னான்னு விட்டுட்டுப் போன உங்களுக்கு எங்கேடா தெரியும் அந்த வேதனை..? இங்கே பாரு.. நாளைக்கு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா, உன் பொண்டாட்டிக்கும் இதே நிலைமைதான் தெரிஞ்சிக்கோ.." என செந்திலகம் கூற
"என்னத்த இப்படில்லாம் பேசறீங்க..?" என மூத்த மருமகள் குரல் உயர்த்தினாள்.
"ச்சீ வாயை மூடு... நீயெல்லாம் பொண்ணுதானா..? ஒரு பொண்ணா இருந்து ஒரு பொண்ணைத் தப்பா பேசிட்டு வந்திருக்க..? நாளைக்கு உனக்கே இப்படி ஒரு நிலை வந்தா நா ரெண்டாங் கல்யாணம் பண்ணி வெப்பேன்.." என செந்திலகம் கூறியதில் அதிர்ந்து போனாள் அவள்
"அத்தே.." என அதிர்ச்சியில் கூவ
"ஏன் கேட்கறபோதே வலிக்குதோ..? நீங்க எல்லாம் சேர்ந்து, பத்துப் பேரு முன்னாடி அந்த பொண்ணைப் பேசறபோது அந்த பொண்ணு மனசு என்ன பாடுபட்டிருக்கும்..? புருசனை இழந்தது அவ்ளோ பெரிய குற்றமா..? அப்படின்னா நானும் அந்த குற்றத்தைப் பண்ணிருக்கேனே..?
"எவ்வளவு சுலபமா சொல்லால அந்த பொண்ணைக் கொன்னுட்டு வந்திருக்கீங்க..? கொலைக் குற்றத்துக்குக் கூட மன்னிப்பு இருக்கு. ஆனா கணவனை இழந்த ஒரு பொண்ணை, மனசு நோக யாரு தவறா பேசினாலும், அவங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த பாவத்தைத் தீர்க்க முடியாது. நூறு கோவிலுக்குப் போய், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தா கூட நீங்க செஞ்ச பாவத்தைக் கழிக்க முடியாது.."
"இத்தனை வருசமா நீங்க பொறுப்பா உங்க கூடப் பிறந்த பெண் பிள்ளைகளைக் கரையேற்றலேன்னு நான் கவலைப்பட்டதில்ல. என்னை பாக்கறதில்லேன்னு வருத்தபட்டதில்ல.. அவங்கவங்க குடும்பத்தைப் பாக்கறீங்கன்னு இருந்தேன்."
"தன்னோட சுகத்தை மறந்து, உழைச்சு, நாலு பொண்ணுங்களை தகப்பனுக்குத் தகப்பனா இருந்து கரையேத்தினான் சின்னவன். அவனுக்கு மூத்தவங்களா அப்போ நீங்க அந்த உரிமையை நிலைநாட்டியிருந்தா இப்போ அவன் கல்யாணத்துல தலையிடலாம்‌. ஊரு, உறவோட நாலு பேருக்கு நடுவே வந்துட்டு போன நீங்க எந்த உரிமைல அவன் விசயத்துல தலையிடுறீங்க..?" என்று அவர் கேட்ட எந்த கேள்விக்கு அங்கிருக்கும் எவருமே வாய் திறக்கவில்லை.
ஏனெனில் வளவனின் தந்தை இறந்த பின்னே, பொறுப்பு தங்கள் மீது விழுந்து விடுமென்றே மூத்த இரண்டு மருமகள்களும் தந்திரமாய் தன் கணவர்களோடு தனிக்குடித்தனம் சென்று விட, அவர்களும் உடன்பிறந்தோரையோ, பெற்றவரையோ கவனிக்க வேண்டுமென்ற நினைப்பில்லாமல் தன் குடும்பமென்றே கதியாகினர். அப்படியே நினைவு வந்தாலும், குழந்தை குட்டி என்றான பின் தங்களின் குடும்பமே பிரதானமென்ற சுயநலமே மேலோங்கியது.
தந்தை இறந்த பின், சிறிது காலம் அடிக்கடி வந்து கொண்டிருந்தவர்கள் நாள் வாரமாகி, வாரம் மாசமாகி, மாசம் வருடம் என்று ஆகிப்போனது அவர்களின் வரத்து.
உடன் பிறந்த சகோதரிகளின் திருமணத்திற்குக் கூட உறவினராய் மட்டுமே கலந்து கொண்டு சென்றனர். அப்படி இருக்கையில் இப்பொழுது செந்திலகத்தின் இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் எப்படி பதில் கூறுவார்கள்..? செந்திலகத்தின் கேள்வி மகள்கள் புறமும் திரும்பியது.
"ஏன்டி? நீங்க எல்லாம் அவன் கூட பிறந்தவங்கதானே..? உங்களுக்கு உங்க அப்பா ஸ்தானத்திலிருந்து கல்யாணம் பண்ணி வச்சு, பிள்ளை பேறு பார்த்து, பிள்ளைகளுக்கு காது குத்தி, அத்தன சீர் செனத்தியும் செஞ்சி, இப்போ வரை கல்யாணமே பண்ணிக்காம உங்களுக்காகத்தானே வாழ்ந்தான்..? அவன் ஒருத்திய விரும்பறானு தெரிஞ்சதும் நீங்க என்ன பண்ணி இருக்கணும்..? உங்க புருஷன்கிட்ட சொல்லி அந்த பொண்ணு வீட்ல போய் பேசி இருக்கணுமா, வேண்டாமா? அதை விட்டுட்டு, இவங்களோட நீங்களும் சேர்ந்துட்டீங்களா.." என்று ஆத்திரப்பட
சகோதரிகள் நால்வரின் குரலாய் தாமரை பேசினாள்.. "ம்மா.. அண்ணா என் கல்யாணத்துக்கு அண்ணியைக் கூட்டிட்டு வந்தபோதே அவங்க கல்யாணம் எப்போன்னு நாங்க எதிர்பார்த்துட்டு இருக்கோம். அவங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கனுங்கறதுதான் எங்களோட வேண்டுதல்மா.. அண்ணி முழுமனதா அண்ணனோட வாழ கொஞ்சம் டைம் வேணும்தான் நாங்க காத்திருந்தோம். ஆனால் அதுக்குள்ள அண்ணனுங்களும், அண்ணிங்களும் இப்படி செய்வாங்கன்னு நினைக்கலம்மா.." என வருத்தத்தோடு கூறினாள் தாமரை.
மற்ற சகோதரிகளும் "அம்மா நாம போய் பேசலாம்மா.. எல்லாம் சரி செஞ்சு இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்துவோம்.." எனக் கூற, சற்றே ஆறுதலானார் செந்திலகம்.
ஆனாலும் கயல் இங்கு வந்த பின், இவர்கள் மறுபடி ஏதாவது பேசிவிட்டால் அவள் தாங்க மாட்டாள் என்பது உறுதியாகத் தெரியும் ஆதலால் தன் மகன்களிடம் மீண்டும் பேசினார். ஏற்கனவே, தாய் பேசியதில் இருந்த உண்மை அவர்களைச் சுட்டிருக்க குற்ற உணர்வில் இரு மகன்களும் அமைதியாய் இருந்தனர்.
"இங்க பாருங்கடா, இத்தனை நாளா நீங்க ஏன் வரல, ஏன் உங்க தங்கைகளுக்கு சீர் செய்யலன்னு ஒரு நாள் கூட நானோ, வளவனோ. ஏன் உங்க கூட பொறந்தவங்களோ கூட கேட்டதில்லை. ஏன்னா கேட்கிற அளவு வளவன் விட்டதில்ல. அப்படிப்பட்டவன் அவனுக்குப் பிடிச்ச பெண்ணைக் கல்யாணம் செய்துக்கறது எனக்கு மனப்பூர்வமான சம்மதம். அதுவும் அந்த பொண்ணு சின்ன வயசுலயே கணவனை இழந்தவன்னு தெரிஞ்சதும், இவதான் என் மருமக ன்னு நான் முடிவு செய்து ரொம்ப நாளாச்சு. எனக்கு உங்க யார் சம்மதமும் தேவையில்லை. கோயில்லயோ, இல்ல ரெஜிஸ்டர் ஆபீஸ்லயோ வச்சு சிம்பிளா கல்யாணத்தை செஞ்சு, கூட்டிட்டு வரத் தெரியும். ஆனால், அப்படி இந்த கல்யாணம் நடந்தா, அதுக்குப் பின்னாடி நீங்க யாருமே இந்த வீட்டு பக்கம் வரக்கூடாது. இதோட உங்க உறவு முடிஞ்சது. என் பொண்ணுங்களை வளவன்தான் கட்டிக் கொடுத்தான். அதனால, இருக்கிற இந்த வீடும், தோப்பும் எனக்குப் பிறகு வளவனுக்குத்தான். நான் இருக்கும்போதே என் பொண்ணுங்கள தகப்பனாய் இருந்து தாங்குறவன், எனக்குப் பின்னாடியும் பார்த்துப்பான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்குப் பின்னாடி, என் பொண்ணுங்களுக்கு பிறந்த வீடுன்னு வரும்போது நிச்சயமா கயல் நல்லாவே பாத்துப்பா.. நீங்க கிளம்பலாம்.." என்று முடித்தார் செந்திலகம்.
அங்கு எவர் முகத்திலும் ஈ ஆடவில்லை. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்து அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியத்தை அளித்தார் அந்த அன்னை. ஒரு நாள் சொத்து வரும் என்றிருந்த மருமகள்கள் எண்ணத்தில் மண்ணைப் போட்டது செந்திலகத்தின் பேச்சு. மகன்களுக்கோ, நெருங்கி உறவாடவில்லை என்றாலும் கூட, தாய், தம்பி, சகோதரி என்ற பாசம் இல்லாமல் இல்லை. தன் மனைவிகளின் போதனையில் சுயநலமாய் ஆண் என்ற பொது புத்தியும், இந்த சமுதாயத்தின் பெண்களின் மீதான கட்டுப்பாடுகளையும் கண்டு வளர்ந்ததாலுமே அவர்களின் நடத்தையில் மாற்றம் உண்டானது.
ஆனால் தங்கள் தாய் கூறிய சொற்கள் அவர்களின் உள்ளத்தைக் கூறு போட அமைதியாய் வெளியேறினர் இரு மகன்களும். தங்கள் கணவர்கள் ஒன்றும் கூறாமல் வெளியேறுவதைக் கண்டு அவர்களைப் பின் தொடர்ந்தனர் அவர்களது மனைவிகள்.
வளவனின் சகோதரிகள் தன் தாயை ஆதரவாய் சூழ்ந்து கொண்டு சமாதானம் செய்ய, வளவனுக்கோ எண்ணம் முழுவதுமாய் கயலே வியாபித்திருந்தாள். அவளின் கலங்கிய கண்களும் வெளிறிய முகமும் அவன் கண்முன்னே வந்து அவளை அவனைப் பாடாய்ப்படுத்தியது. கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். அவளது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாய்க் கூற மேலும் கலக்கமானான்.
இவனின் கலக்கத்தைக் கண்ட தாய்க்குப் புரிந்து போனது. "வளவா.." என அழைக்க, அது அவன் காதுகளை எட்டவே இல்லை. அவனுள் கயலின் நினைவுகள் மட்டுமே. அவளை விட்டுவிட்டு வந்திருக்க கூடாதென அவன் மனம் தவித்து மறுகியது.
 

Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
அத்தியாயம் - 20
வளவனின் உள்ளமும், உடலும் பதறி தவித்தது. அவள் கைபேசிக்குத் திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தான். அது அணைக்கப்பட்டே இருந்தது. அவன் உள்ளுணர்வு அவளுக்கு ஏதோவென துடிக்க ஆரம்பித்தது. இன்று வரை அப்படி ஒரு உணர்வை அவன் அனுபவித்ததே இல்லை.
வளவனின் கலக்கத்தை உணர்ந்த அவன் தமக்கைகள் அருகில் வந்து "என்ன ஆச்சுடா..?" என கேட்க,
அவன் தாய் "கயல் போன் எடுக்கலையா..? என கலங்கியபடி கேட்டார்.
‘ஆம்’ என தலையை மட்டும் அசைத்தவனிடம்,
"சரி அவங்க அப்பாவுக்கு போன் போடுப்பா.. நான் பேசணும்.." என்றார் செந்திலகம்.
"ம்மா.." என தவித்தவனை
"யார் சம்மதித்தாலும், இல்லை என்றாலும் அடுத்த முகூர்த்தத்தில் உனக்கும், கயலுக்கும் கல்யாணம். வாழப் போறது நீங்க ரெண்டு பேரும்தான்.. மற்ற யாரும் உங்களோட கடைசி வரை வரப்போறதில்ல.. கவலைப்படாமல் போன் போடு.." என்று கூற கலக்கத்துடனே பிரகாசத்தை அழைத்தான். சில நொடிகளுக்குப் பின் பிரகாசம் பேசினார்.
"சார் கயல்.." என கலக்கத்துடன் கேட்க
"அறையை விட்டு வெளியே வரவே இல்ல தம்பி.." என்றார் வருத்தத்தோடு
தான் பேசுவதாய் செந்திலகம் கூற, "சார் அம்மா உங்களோட பேசணும்னு சொல்றாங்க..' என்று விட்டு அலைபேசியை தன் தாயிடம் கொடுத்தான்.
அதை வாங்கி காதுக்கு கொடுத்தவர் எடுத்த மாத்திரத்திலேயே "நீங்க முதல்ல எங்கள மன்னிக்கணும்.." என்று கூற எதிர் முனையில் பிரகாசம் "அய்யோ என்னமா இது..?" என பதறினார்.
"நடந்த விஷயம் உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு தெரியல.. ஆனா கயல் மனசு காயப்படுற மாதிரி நம்ம வீட்டு பசங்களும், மருமகள்களும் நடந்துக்கிட்டாங்க.. இனி இதுபோல எப்பவும் நடக்காது."
பிரகாசம் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார் "நாளைக்கு காலையில் நாங்க உங்க வீட்டுக்கு வரோம். மற்றதை நேரில் பேசுவோம்.." என்று முடிக்க,
பிரகாசத்திற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை "அது வந்தும்மா.." என அவர் தன் மகளின் நிலையை எண்ணி தடுமாற,
"உங்க சூழ்நிலை எனக்கு புரியுதுங்க, அதனால்தான் காலையிலேயே வர்றோம்னு சொன்னேன். நல்ல விஷயத்தை இனி தள்ளிப் போட வேண்டாம். கயல் கஷ்டப்படுவதை இனி நாங்கள் அனுமதிக்க முடியாது. அங்க கயல் எப்படி தவிக்கிறாளோ.. அப்படித்தான் இங்கே என் மகனும் இருக்கான். நாங்க வர்றோம்.." என முடித்து விட்டு அலைபேசியை அவனிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்டவன் "சார் கயலிடம் பேசணும், கொஞ்சம் கொடுக்குறீங்களா..?" என்று தயக்கமாய் வினவ,
‘’இருங்க தம்பி’ என்றவாறு கயலின் அறை கதவை தட்டியபடி “கயல்.. கயல்.. கதவை திறடா.. வளவன் தம்பி போன் செய்திருக்கிறார். உன் போன் சுவிட்ச் ஆப்ல இருக்காமே.." என்று அழைப்பது கேட்டது எதிர்புறம் எந்த எதிரொலியும் இருப்பதாய்த் தெரியவில்லை. வளவனின் இதயம் படபடத்தது.
"கயல் என்னடா பண்ற..? ப்ளீஸ்மா.. பேசுடா.." என தவித்தான்.
"கயல்.. கயல்.." என வேகமாய்க் கதவைத் தட்டுவது கேட்டது அவனுக்கு. சில நிமிடங்களில் கழிந்தும் எந்த பதிலும் இல்லாமல் போகவே, "தம்பி கதவை திறக்க மாட்டேங்கறாப்பா.. எனக்கு பயமா இருக்கு தம்பி.." என்றவாறே அவர் கைபேசியை அணைக்காமலேயே வைத்து விட்டு, பதட்டத்துடன் கயலின் அறைக் கதவை வேகமாகத் தட்டுவது புரிந்து இங்கே வளவனின் கண்களில் குளம் கட்டியது.
அதிர்ந்து நின்றவனின் தோற்றம் கண்டு ஏதோ விபரீதம் என உணர்ந்த செந்திலகம் "தாமரை.. உடனே ஏதாவது வண்டியை ரெடி பண்ணுங்க.. நாம இப்பவே கிளம்பனும்.." என முடுக்கினார்.
"கயல்.. என்னடி பண்ண? கதவை திறடி.. பைத்தியமாடி நீ..? அவ்வளவு தூரம் சொல்லிட்டு வந்தேனே.. என்னடி செய்வேன் நான்..?" என அவன் உடைந்து தவிக்க
பிரகாசத்தின் பரிதவிப்பான குரல் அலைபேசி வழியே கேட்டுக் கொண்டிருந்தது. "மா கயல் என்னடா பண்ண..? கதவை திறடா.. ஜீவா.. ஜீவா.. மாமாவை கூப்பிடுறா.." என கதறும் சத்தம் இவனைக் குலை நடுங்கச் செய்தது.
"கயல்.. ம்மா.. கயல்.." என கரகர வென அவன் கண்களில் கண்ணீர் உதிர்க்க, அவன் நிலை அறிந்த தாய்,
"ஒன்றும் ஆகாதுடா கண்ணா.. நம்ம உடனே போகலாம்.." என அவன் தோள் பற்றி ஆறுதல்படுத்த முயன்றார்.
அங்கே கயல் வீடு அல்லோகலப்படுவது கைபேசி கூறிக் கொண்டிருக்க, அதற்கு முன் வளவன் பைக் சாவியோடு கிளம்பி இருந்தான்.
அவனைத் தடுத்த செந்திலகம் "இருடா கண்ணா கார் எடுத்துட்டு வர சொல்லிட்டேன். இப்போ வந்துடும் இந்த நிலையில நீ பைக்ல போக வேணாம்.." என அவனை தடுக்க முனைய,
"ம்மா.. அவளை நான் பார்த்தாகணும். இனி எதுக்காகவும் என்னால காத்திருக்க முடியாது.." என கிளம்பினான். அதற்குள் அருகில் இருந்த அவனது சகோதரியின் கணவன்.
"மச்சான் நம்ம கார் இருக்கு கிளம்பலாம் வாங்க.." என வளவனை அழைத்துக் கொண்டு பறந்தார் அவன் சகோதரியின் கணவர்.
தொடர்ந்து ஏதேதோ கூச்சல் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க சில நொடிகளில் அதுவும் நின்று போனது. வழி நெடுகிலும் உயிரைக் கையில் பிடித்தபடி பிரகாசத்திற்கும் அவளது அண்ணன் கணேசமூர்த்திக்கும் அழைத்துப் பார்க்க எவரது அலைபேசியும் எடுக்கப்படவேயில்லை.
வளவனின் உயிர் அவனிடத்தில் இல்லை. அவளுக்கு என்ன நேர்ந்ததோ என்ற நினைவு அவனை பெரிதாய்த் தாக்க, தலையை அழுந்தப் பற்றியபடி கண்ணை இறுக மூடி அமர்ந்து விட்டான். அவன் கண்களில் வழிகின்ற கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. வளவனுக்கு அழத் தெரியும் என்பதையே அந்த குடும்பம் அப்பொழுதுதான் கண்டது.
எத்தனை முயன்றும் கயல் வீட்டில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது போகவே, மேஸ்திரியை அழைத்து வளவன் கயல் வீட்டின் நிலையை அறிந்து, அழைக்க சொல்லி இருக்க, அவள் ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது தெரிந்து நிலைகுலைந்து போனான் வளவன்.
"கயல், ஏன்டி இப்படி பண்ண? என் மேல நம்பிக்கை இல்லாம போச்சா உனக்கு..? இனி எந்த துன்பமும் வர விடாமல் பார்த்துப்பேன்னு சொன்னேனே? ஆனால் நானே அதற்கு காரணமாகி விட்டேனே..?" என அரற்றினான்.
கண்ணால் காணும் வரை அவளைக் கண்டு விட மாட்டோமா எனத் தவித்தவன், அவளை மருத்துவமனையில் கண்டு துடிதுடித்துப் போனான். வேரறுந்த மரமாய், உயிர் சற்றே ஊசலாட அவசர சிகிச்சைப் பிரிவில் கிடந்தவளைக் கண்டவன் மனம் நொறுங்கிப் போனது.
உடலெங்கும் சிவந்து தடித்த திட்டுக்கள். உதடுகள் இரண்டும் வீங்கி இருக்க கண் இமைகள் இரண்டும் பலூனைப் போல் வீங்கி கழுத்தும் மார்பும் அளவுக்கு விரிந்து முகமே விகாரமாய் மாறிப்போயிருந்தது. மருத்துவ உபகரணங்களின் உதவியில் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் அவள். "இது கயலா..? கயலே தானா..?” அவனால் துளியும் நம்ப முடியவில்லை. என்னவாயிற்று அவளுக்கு..? விரல்கள் முதற்கொண்டு குளவி கொட்டியதைப் போல் உடலெங்கும் தடித்து மூச்சுக்குத் தவித்து சிரமப்பட்டு திணறிக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி மருத்துவ பணியாளர்கள் சில மணி நேரங்களாய்ப் போராடிக் கொண்டிருக்கின்றனர். வளவனின் உயிர் அவனிடத்தில் இல்லை.
"ஏன்டி..? என்னடி பண்ண..? ஐயோ.." என முகத்தில் அறைந்து கொண்டு கதற, செந்திலகமும், அவள் குடும்பமும் கலங்கிப் போனது. பசுந்தளிராய் அன்று கயலை மண்டபத்தில் கண்டது செந்திலகத்திற்கு நினைவு வந்தது. கண்ணுக்கு நிறைவாய்க் கண்ட முகம் மனதில் வந்து வாட்டியது. அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று வளவனால் யூகிக்க முடியவில்லை. அதை யாரிடமும் கேட்கும் தைரியமும் அவனுக்கில்லை. உயிர் உருக, கயல் சுவாசத்திற்கு போராடுவதைக் கண்டு துடித்துக் கொண்டிருந்தான்.
'இதற்காகவா இவளைக் கண்டேன்..? ஒதுங்கி, ஒதுங்கிச் சென்றவளை வலியச் சென்று நேசித்தேனே.. இப்படி குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கவா அவளைக் கரம் பற்ற எண்ணினேன்..?'
'கயல்.. என்ன தவிக்க விடாதடி.. ப்ளீஸ் வந்துடுடி.. என் உசுரு இருக்கிறவரை உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறேன் வந்துடு.. நீ இல்லனா நான் எப்படி இருப்பேன்..?' என கண்ணாடிக்கு அப்பால் இருக்கும் அவளிடம் மானசீகமாய் மன்றாடிக் கொண்டிருந்தான்.
அவளுக்கு என்னவாயிற்று என்று கேட்க அவனுக்கு விருப்பமில்லை. யாரையும் எதிர்கொள்ளும் துணிவும் அவனுக்கு இல்லை. அவனைப் பொறுத்தவரை அவளின் இந்நிலைக்கு காரணம் தான் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நின்றது. அவளின் சுவாசம் ஏறி இறங்குவதையும், துடித்துக் கொண்டிருக்கும் அவளது இதயத்தை அங்கிருக்கும் கருவிகள் அளவிட்டு, அவளின் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருப்பதையும் கண்ணாடி வழியே கண்டு கொண்டிருந்தவனுக்கு அந்த ஒவ்வொரு எண்ணும் அவளின் உயிரின் வலியை அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவளின் மூடியிருந்த இமைகளுக்கிடையே கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை கண்டவன் மனம், ‘ஐயோ’ எனக் கதறியது. வாய்விட்டு அழவும் வழியின்றி அவளையே பார்த்துக் கொண்டு நின்றவன் கால்களை இரு கரங்கள் கட்டிக்கொண்டு தன்னோடு ஒன்றுவதை உணர்ந்து திரும்ப, ஜீவா அவன் கால்களை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
'ஐயோ குழந்தை.. இவளை எப்படி மறந்தேன்..?' "ஜீவா.." பதறிப் போய் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான். அவள் பார்க்கும் முன் வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டவன், இந்த பிஞ்சு இந்நிலையில் தன் தாயைப் பார்த்தால் என்ன பாடுபடுவாள் என்று எண்ணி சட்டென அவ்விடத்தை விட்டு அகன்று, சற்று தொலைவில் வந்தான். அவன் முகத்தைப் பற்றி திருப்பிய குழந்தை,
"அங்கிள்.. அம்மாவும் செத்துடுவாங்களா.." என்று கேட்க நெஞ்சினுள் ஆயிரம் சம்மட்டியால் அடித்த வலியாய் துடித்து போனான்.
"இல்லடா.. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. சீக்கிரம் சரியாகிவிடும் குட்டிமா.." என அவளை ஆதரவாய் அணைத்துக் கொள்ள,
"வயித்துல இருக்குறப்போ உங்க அப்பன முழுங்கின.. இப்போ உங்க அம்மாவும சாகப் போறான்னு அத்தை சொன்னாங்களே..?" என அந்த மழலை அழ, கடும் கோபத்தோடு அவன் கண்கள் அந்த சொற்களுக்கு உரியவளை தானாய்த் தேடியது.
அதுவரை அங்கே யார் இருக்கிறார்கள் என்று கூட உணராது இருந்தவன், தூரத்தில் தெரிந்த கயலின் அண்ணி வேணியை நோக்கி எட்டு வைத்தான். அவன் வந்த வேகத்திலேயே ஏதோ என்று உணர்ந்த பிரகாசமும், கணேசமூர்த்தியும் "என்ன தம்பி..?" என எதிர்ப்பட, அவர்களை விலக்கிவிட்டு நேராய் வேணியிடம் வந்தவன்,
"ச்சீ.. நீங்க எல்லாம் என்ன மாதிரியான பிறவி..? ஒருத்தி உசுருக்கு போராடிட்டு இருக்கும்போது கூட இந்த குழந்தைகிட்ட உங்க வன்மத்தைக் காட்டி இருக்கீங்களே.. நீங்க எல்லாம் மனித ஜென்மம் தானா..? அவளும் உங்கள மாதிரி ஒரு பொண்ணு தானே..? உயிர் உள்ள ஒரு ஜீவன் தானே..? அவ உயிருக்குப் போராடும்போது கூடவா உங்க கேவலமான புத்தியை காட்டணும்..? அவ உயிரோடு எழுந்து வருவா.. உங்க கண் முன்னாடி எங்க கல்யாணம் நடக்கும்.." என உறுதியோடு கூறினான்.
வளவனின் வார்த்தைகளே வேணி என்ன செய்திருப்பாள் என்பதை அவள் கணவனுக்கு உணர்த்த "ச்சை திருந்தாத ஜென்மம்.. நீ இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. முதல்ல இங்க இருந்து கிளம்பு.." என வம்படியாய் அவளை மருத்துவமனையை விட்டு வெளியேற்ற எண்ணினான்
"ஒரு நிமிஷம்.." என அவர்களைத் தடுத்தவன், "ஜீவா என் பொண்ணு.. இனி அவ அப்பா செத்துட்டான்னு யாராவது சொன்னா, அவங்க உயிரோடு இருக்க முடியாது.." என முஷ்டியை இறுக்கினான்.
குழந்தை தோளோடு அணைத்து அவனைக் கட்டிக் கொண்டது. அவனது அந்த சொல் பிரகாசத்திற்கும், கணேசமூர்த்திக்கும் கயலின் மீதான அவனது அதீத நேசத்தை உணர்த்தியது. அதே நேரம் அவள் உயிரோடு மீண்டு வர வேண்டுமென்று இறைவனை வேண்டியது.
வளவனின் வாழ்க்கையில் அன்று அவன் பட்ட துயரம், கயலின் மீது அவனுக்கு இருந்த நேசத்தை எல்லோருக்கும் உணர்த்தியது. ஆனால், அதை உணரும் நிலையில் அவள் இல்லை.
அத்தியாயம் 21
கயலின் இந்த முடிவு வளவனை மிகவும் பாதித்தது. ஜீவாவை அணைத்தபடி அவன் ஓரமாய் ஓர் இருக்கையில் அமர்ந்து விட்டான். எவ்வளவு நேரம் என்றே தெரியாது அவன் அமர்ந்திருக்க, ஜீவா அவன் தோளிலேயே உறங்கிப் போயிருந்தாள். உறக்கத்தில் தலை சரிந்த குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, செந்திலகம் வற்புறுத்தி அருகில் இருந்த இருக்கையில் குழந்தையை கிடத்தச் செய்தார். குழந்தையை கிடத்தி விட்டு அருகிலேயே அமர்ந்து கொண்டான். சிலையாய் அமர்ந்து விட்டவனை யாரும் நெருங்க முடியவில்லை.
நள்ளிரவு கயலின் நிலை மிகவும் மோசமானது. தன்னைக் காப்பாற்றி விடக்கூடாது என்றே கயல் செயல்பட்டிருப்பதாக மருத்துவர் கூறுகையில் வளவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"கயலுக்கு மெடிசன் அலர்ஜி இருக்கு. ஒரு குறிப்பிட்ட வகை மருந்து அவங்க எடுக்கவே கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்கேன். முதல் முறை அவங்களுக்கு அலர்ஜி ஆன போதே, எங்கே போனாலும் உங்களுக்கு இந்த மருந்து அலர்ஜி இருக்கிறது என்று சொல்லிடுங்க.. ஒரு மாத்திரை போதும் உங்கள் உயிரை எடுக்கன்னு அவ்வளவு தூரம் எச்சரித்து இருந்தோம். ஆனால் அவங்க அந்த மாத்திரை நாலு, அஞ்சு போட்டு இருக்காங்க. சிவியர் அலர்ஜி.. கார்டியாக் அரெஸ்ட் ஆக கூட வாய்ப்பிருக்கு.. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.." என்று சென்றுவிட நொறுங்கிப் போனான் வளவன்.
'என் மீது நம்பிக்கை அற்றுப் போனாயா கயல்..? இத்தனை நாள் நேசத்தில் என் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் போனதா..? எல்லாவற்றையும் சரி செய்து திரும்ப வருகிறேன் என்று சொன்னேனே.. அதை ஒரு நிமிடம் கூட நீ யோசிக்கவே இல்லையா..?' என்று அவன் மனம் குமைந்து கொண்டிருந்தது.
மற்றொருபுறம் அவன் மனது வேறு விதமாய் யோசித்தது. 'அவள் என் மீது எத்தனை அன்பு வைத்திருந்தால் உயிரை விடும் அளவிற்கு சென்றிருப்பாள்..? இத்தனை தூரம் துன்பங்களைத் தாங்கி, கடந்து வந்த போது அவள் இம்முடிவை எடுக்கவில்லையே..? தன்னை எவ்வளவு தூரம் நேசித்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு சென்று இருப்பாள்..?' என்று அவளுக்காய் வாதாடியது.
அந்த இரவைக் கடப்பதற்குள் ஒரு பெரிய யுகத்தைக் கடந்திருந்தான் வளவன். கண்ணாடிக்கு அப்பால் இருக்கும் அவளோடு மானசீகமாய் உரையாடிக் கொண்டிருந்தான். 'கயல்.. வாடி.. நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நிச்சயமா வாழவே முடியாது. சந்தோசமா நம்ம வாழ வேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்கு.. நீ கனவு கண்ட வாழ்வை அனுபவிச்சு வாழணும். உலகம் முழுக்க சுற்றி வரணும்னு சொன்னியே, இப்போ என்னை தனியா அழ விட்டு இருக்கியே.. இது நியாயமா..?' என மனதுக்குள் அவளுடன் மன்றாடிக் கொண்டிருந்தான்.
அதிகாலை மீண்டும் மருத்துவர்களும் செவிலியர்களும் பரபரப்பாவது தெரிந்தது. மீண்டும் அவள் நிலைமை மோசமாகியது. நாடித்துடிப்பு சிறிது சிறிதாய்க் குறையத் தொடங்கியது. ஒரு முடிவோடு செந்திலகத்தை நாடினான்.
மகன் கூறியதைக் கேட்டு அந்த தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
"வளவா.." என அவள் பேச்சு வராமல் திணற,
"ம்மா ப்ளீஸ் மா.. எதுவும் சொல்லிடாத” என இருகைகளையும் கூப்பி வண்ங்கி அவரை வேண்டி நிற்க, அவர் கண்களை துடைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.
பரபரப்பான அந்த நொடிகள், நிமிடங்களாகி துளித்துளியாய்க் கரைந்து கொண்டிருந்தது. சில சிறப்பு மருத்துவர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டனர். அவள் பிழைக்கும் சதவீதம் மிகவும் குறைந்து விட்டதாய் கூறிய மருத்துவரிடம் வளவன் சொன்ன செய்தி மருத்துவரை மட்டுமல்ல அனைவரையும் அதிரசெய்தது.
"மிஸ்டர் நீங்க என்ன பேசுறீங்க..? அவங்க பிழைக்க ஒரு பர்சன்ட் சான்ஸ் தான் இருக்குன்னு சொல்றேன். இந்த நிலையில நீங்க என்ன பேசுறீங்கன்னு யோசிச்சுத்தான் பேசுறீங்களா..?" என கோபப்பட,
"நான் யோசிச்சுத்தான் டாக்டர் பேசுறேன். ப்ளீஸ்.. அவ கிட்ட என்னை போக அனுமதி கொடுங்க.. அவளை ஒரு முறை பார்த்துடறேன். அதன் பிறகு அவ இருப்பதும், போவதும் அவ விருப்பம்.." என்று இறைஞ்சினான்.
மருத்துவர் பிரகாசத்தை நோக்க, அவரும் 'அனுமதி கொடுங்கள்..' என கண்களாலேயே கெஞ்சினார். அவருக்கு எப்படியாவது அவள் தன் மகள் பிழைத்து விட மாட்டாளா என்று எண்ணம்.
"வெயிட் பண்ணுங்க வளவன். டாக்டர் ட்ரீட் பண்ணிட்டு இருக்காங்க.. நான் பேசிட்டு வரேன்.." என்றபடி உள்ளே செல்ல சில நொடிகளில் மொத்த மருத்துவக் குழுவும் அதிர்ந்து அவனை நோக்குவது தெரிந்தது. தலையை கோதி, கண்களைத் துடைத்து, கண்ணீரை அடக்கி தன்னை சமன்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.
ஓட்டமும், நடையுமாய் செந்திலகம் வந்து சேர்ந்தார். அவன் சகோதரிகளின் விசும்பல் அவன் காதுகளை இம்சித்தது.
"ம்மா ப்ளீஸ்.. யாரையும் அழ வேண்டாம்னு சொல்லு.. அவ வரணும்.. திரும்ப வரணும்.. அவ வருவான்ற நம்பிக்கை எல்லோருக்கும் வரணும்.. ப்ளீஸ்.. தயவு செய்து யாரும் அழாதீங்க.." என கை கூப்பினான்.
உறங்கிக் கொண்டிருந்த ஜீவாவை எழுப்பி அமர வைத்தான் "வா அம்மாவைப் பார்க்க போகலாம்.." என்றான். மலங்க மலங்க விழித்த ஜீவா, சரி என்று எழுந்து வந்தாள். அவளின் கலைந்திருந்த கூந்தலை சரி செய்தவன், அவளோடு கதவருகே வர மருத்துவர் அவனை மட்டும் உள்ளே வரும்படி சைகை செய்தார். ஜீவாவும் உடன் வரவேண்டும் என்று அவன் கேட்க, உள்ளே அனுமதித்தனர்.
அவள் அருகே செல்லச் செல்ல, அவன் கால்கள் தடுமாறின. கைகள் நடுங்கின. அந்த குளிரூட்டப்பட்ட அறையில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. அவளின் படுக்கையை அடையும் அந்த சில அடிகள், அவனுக்கு பல நூறு மைல்கள் நடந்த களைப்பை உண்டாக்கியது. அவள் அருகே வந்து நின்றான். நீர் மணிகள் அவன் பார்வையை மறைத்தன. கண்ணை இறுக மூடி, வழியக் காத்திருந்த கண்ணீரை கண்ணுக்குள்ளேயே நிறுத்தி, அடக்கி விட்டு அவளைப் பார்த்தான். அடையாளம் தெரியாத கோலத்தில் சுவாசம் சீரற்று இயங்கிக் கொண்டிருக்க, உள்ளே நுழையும்முன் தன் தாயின் கையில் இருந்து வாங்கிய அந்த மஞ்சள் கயிற்றை கையில் எடுத்தவன், ஜீவாவின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.
"ஜீவா அம்மா கழுத்துல நான் இந்த தாலிக் கயிற்றை கட்டணும். அவளை நான் கல்யாணம் செய்துட்டு, உன் அப்பாவா உன்னை நான் பார்த்துக்கணும். என் உசிர் இருக்கிற வரை கயல் மட்டும்தான் என் பொண்டாட்டியா இருக்கணும். எனக்கு யாருடைய சம்மதமும் தேவையில்லை. உன் சம்மதம் போதும். கட்டட்டா..?" என்றான்.
ஜீவா அறியா குழந்தை அல்லவே? அவளுக்கு அவன் இரவில் அப்பா என்றதுமே அவன் மனதில் அப்பா என்ற பிம்பத்தில் வளவனை பொருத்தி விட்டாளே..
"கட்டுப்பா.." என்றது குழந்தை. அவளது கரம் பற்றி நெற்றியில் முத்தமிட்டவன், எழுந்து கயலின் அருகே வந்தான்.
துடிப்பில்லாமல் கிடந்த, அந்த மூடியிருந்த கண்களைக் கண்டவன், 'கண்ணைத் திறடீ.. ஊரைக் கூட்டி எல்லோர் முன்னாடியும் என்னோட கரம் சேர நினைச்சியே, இப்போ என்னால அதை நிறைவேற்ற முடியல..' என்று மனதில் அவளிடம் மானசீகமாய் மன்னிப்பைக் கேட்டு உணர்வற்ற கிடந்தவளின் சங்கு கழுத்தில் மஞ்சள் கிழங்கு கட்டிய அந்த தாலிச்சரடினைக் கட்டினான்.
அவள் கைகளை இறுகப் பற்றி மண்டியிட்டு அவள் காலடியில் அமர்ந்தவன் "கயல் இப்போ நீ என் மனைவி.. உன் கழுத்தில் நான் கட்டிய தாலி இருக்கு. ஜீவா இனி என் மகள். நீ வரணும்.. திரும்ப வரணும்.. நீ என்னை நேசித்தது உண்மைன்னா திரும்பி வருவ. நம்ம குழந்தையோட நான் உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.." என்று சொல்லி எழுந்தான். அவளின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தான். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து காய்ந்த தடத்தை கண்டவன் மனம் கசிந்தது. "எழுந்து வா கயல். நம்ம வாழணும்டி.. உனக்காக நான் காத்திருப்பேன்.." என்று சொல்லி விட்டு அவளைப் பார்த்தபடியே ஜீவாவோடு வெளியேறினான்.
வெளியே இருந்து நடந்த திருமணத்தை பார்த்தவர்களின் இதயம் கனத்துப் போனது. முட்டிய கண்ணீரை அடக்கியபடி அனைவரும் கல்லாய்ச் சமைந்து நின்றனர். அவ திரும்பி வருவா.. நிச்சயம் வருவா.." என்று கூறியபடி ஜீவாவோடு சென்று இருக்கையில் இறுகிப்போய் அமர்ந்தான்.
எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று இருவரும் திட்டமிட்டிருந்த திருமணம், இன்று இங்கே மருத்துவமனையில் நடந்தேறியது. ஒரு நாள் முன்னதாக தங்களின் திருமணம் எப்படி எல்லாம் நடக்கவேண்டும் என இருவரும் திட்டமிட்டது அவன் நினைவுக்கு வந்தது. எதையுமே செய்ய இயலாமல் இப்படி ஓர் நிலை ஏற்பட்டதை எண்ணி, தலையைப் பிடித்தபடி அவன் அமர்ந்திருக்க "அப்பா.." என்று அவன் விரல் பற்றி அழைத்தாள் ஜீவா.
நிமிர்ந்து அவள் விரல் பற்றி இருந்த கரங்களை தன் கரங்களுக்குள் வைத்தவன் "சொல்லு குட்டிமா.." என்றான்
"கூப்பிடணும் போல இருந்துச்சுப்பா.." என்ற குழந்தையை அள்ளி மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு,
"கூப்பிடுடா தங்கம்.. இனி உனக்காக அப்பா இருக்கேன். இனி எல்லோருகிட்டையும் என் அப்பா வளவன்னு சத்தமா சொல்லுடா.. உன் அப்பா உனக்காக இந்த உலகத்தையே எதிர்ப்பேன்.." என்றான்.
"அப்பா, என்கூட ஸ்கூலுக்கு வருவீங்களாப்பா.."
"வருவேன்டா.."
"ஆனுவல் டே ஃபங்ஷனுக்கு..?"
"இனி என் ஜீவா குட்டி அப்பாவோட தான் எல்லா இடத்துக்கும் போவா.." என்றதும் மகிழ்ச்சியோடு அவனை இறுக கட்டிக் கொண்டது அம்மழலை.
இதையெல்லாம் கண்டு இனம்புரியாத கலவையான உணர்வில் கயலின் குடும்பமும், வளவனின் குடும்பமும் செய்வதறியாது நின்றது.
 

Megala Pazhaniyappan

Saha Writer
Team
Messages
70
Reaction score
86
Points
18
அத்தியாயம் 22
விதி ஒரு மனிதனின் வாழ்க்கையில் எங்கே, யாரை, எப்படி, எப்போது சேர்க்கும் என்பது அறியப்படாத விந்தை. விதியை மதியால் வெல்லலாம் என்ற ஒரு சொல் உண்டு. ஆனால் அந்த மதியையும் மீறி சில நேரங்களில் நம் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டுத்தான் போகிறது. கயலின் வாழ்க்கையிலும் அப்படித்தான்.. விதி விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த விதியை மதியால் வென்று விடலாம் என வளவன் மனக்கோட்டை கட்டியிருக்க, அவனின் அக்கோட்டையை தவிடுபொடியாக்கிச் சிரித்துக் கொண்டிருந்தது அவனின் விதி. ஆனாலும், வளவன் கயல் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி, அந்த விதியோடு போராடத் துணிந்திருந்தான். அவளின் மீது நம்பிக்கை வைத்து, அவளுக்காய், அவள் திரும்ப வரும் நிமிடங்களுக்காய் காத்திருந்தான்.
அவள் மீண்டு வருவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாய் மருத்துவர் கூற.. அந்த ஒரு சதவீத வாய்ப்பு என்பதே வளவனுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது. எப்படியாவது என் கயல் வந்து விடுவாள் என்று ஆணித்தரமாக நம்பினான். அவனது நம்பிக்கையைச் சோதிக்கும் விதமாய், இரண்டு நாட்கள் கழிந்து மீண்டும் அவளது உடலில் பின்னடைவு ஏற்பட்டது. இருந்த அந்த ஒற்றை சதவீத நம்பிக்கையில் உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருந்தான் வளவன்.
மருத்துவரிடம் அனுமதி பெற்று அவ்வப்போது அவளை உள்ளே சென்று பார்த்து வந்தான். அவன் செல்லும் ஒவ்வொரு முறையும், அவளின் கூந்தல் வருடி, நெற்றியில் முத்தமிட்டு "கயல் எழுந்து வாடி.. உன்னை விட்டு என்னால வாழவே முடியாது. நீ இங்க இருக்க ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகமா இருக்குடி அம்மூ... எழுந்து வா... இனி எப்பவும் நீ என் கூடவே இருப்பேன். நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நான் கட்டிய தாலி உன் கழுத்துல இருக்கு. இனி உன்னை யாரும் எதுவும் பேச முடியாது. இப்போ நீ என்னோட மனைவி. நம்ம குழந்தை என்னை அப்பான்னு கூப்பிடுறா. உனக்காக நாங்க எல்லாரும் காத்துட்டு இருக்கோம். சீக்கிரமா வாடி.. நமக்கான வாழ்க்கை காத்திருக்கு...." என அவன் ஒவ்வொரு முறையும் மந்திரமாய் உச்சரித்து, தவித்து உருகுவது அங்கே இருப்பவர்களை எல்லாம் நெகிழச் செய்தது.
வளவனின் மொத்தக் குடும்பமும் அவளுக்காய் இறைவனிடம் வேண்டுதல் வைத்து மருத்துவமனையில் பழியாய்க் கிடந்து காத்திருந்தது. ஆம் அவன் அண்ணன்கள் உட்பட.. அன்று செந்திலகம் பேசியதிலேயே அவர்கள் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருக்க, கயலின் நிலைமையைத் தன் சகோதரிகள் மூலம் அறிந்தவர்கள் அவளின் இந்நிலைக்கு தாங்களே காரணம் என மனம் வருந்தி பிரகாசத்திடமும், வளவனிடமும் மன்னிப்பு கோரி மன்றாடினர்.
என்றுமே தன் உறவுகளிடம் முகம் சுளித்திராத வளவன், தன் தமையன்களை மன்னிப்பதாய் இல்லை. சாதாரணமாய்க் கூட எந்த மனிதர்களும் காயப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவன் அவன். அதுவும் பெண்களிடத்தில் அக்கறையும், கண்ணியமுமாய் நடந்து கொள்பவன். அப்படி இருப்பவன் கயலின் இந்நிலைக்கு தன் தமையன்களே காரணம் என்ற கோபம், அவனுள் அவர்கள் மேல் அதீதமான வெறுப்பை விதைத்திருந்தது.
தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் என்றுமே கோபத்தைக் காட்டியிராத வளவன் தன் அண்ணன்களையும், அண்ணிகளையும் அங்கே இருக்கவே கூடாதென கடுமையாய்க் கூறினான். இத்தனை ஆண்டுகளில் அவனிடத்தில் அப்படி ஒரு கடுமையைக் கண்டிராத அவன் குடும்பத்தினருக்கு, அது கயலின் மீதான அதீத நேசத்தின் வெளிப்பாடென்பதை உணர்ந்தனர்.
செந்திலகத்திடம் வந்த மூத்தவர்கள் "ம்மா... எங்களை மன்னிசிடும்மா.. புத்தி கெட்டுப் போய் தப்பு பண்ணிட்டோம்..." என மன்றாடினர். ஆனாலும் அவர்களின் மனைவிகளிடத்தில் எந்த மாறுதலும் இருப்பதாய் செந்திலகத்திற்குத் தோன்றவில்லை. மகன்களின் நடத்தையில் உள்ள மாற்றத்தை உணர்ந்தவருக்கு, தன் மருமக்களின் போக்கை உணர முடியாதா என்ன..? ஆனாலும் அமைதியாய்,
"முதல்ல அவ பிழைச்சு வரட்டும்பா...." என்பதோடு முடித்துக் கொண்டார்.
மேலும் இரு நாட்களின் பெரும் போராட்டத்திற்குப் பின் கண் விழித்தாள் கயல். ஒரு வார காலத்தில் உருக்குலைந்து உடல் கறுத்து, நீர் காணா கொடியாய், வாடி வதங்கியிருந்தவளைக் கண் கொண்டு காண முடியவில்லை யாவருக்கும்.
பிழைத்ததே பெருவரமாய் இருக்க வேறு சிந்தனையெல்லாம் இல்லாது அவளின் அருகிலேயே பழியாய் கிடந்தவனைத்தான் அவள் விழிகள் முதலில் தேடின.
"அம்மூ...." என கண்ணீருடன் அவள் கரம் பற்றியவன், அவளை ஆதுரமாய்த் தாங்க... அவனை கண்டவள் ஏதோ கனவில் காண்பதாய் எண்ணி, கண்ணை மூடித் திறந்தாள். அவனைக் கண்டதே போதுமென்று எண்ணினாளோ என்னவோ, மீண்டும் அயர்ந்து உறங்கினாள்.
அதன் பின் அவளை விட்டுத் துளியும் நகராது கண்ணை இமை காப்பது போல் காத்தான். அவள் விழிக்கையில் எல்லாம் அனிச்சையாய் அவனைத் தேடியது அவள் கண்கள். அவன் கையைப் பற்றியபடியே உறங்கிப்போவாள். முழு ஓய்வு தேவை என்பதால், தொடர்ந்து மருந்துக்கள் கொடுக்கப்பட நிம்மதியான நித்திரை கொண்டாள். அவளின் மரணப்படுக்கையில் நடந்த திருமணத்தை உணராதவள், அடுத்த வந்த நாட்களில் செவிலியர்கள் அவளின் தேவைகளை கவனித்து, அவள் உடல் துடைத்து, உடைமாற்ற முற்படுகையிலேயே தன் கழுத்தில் இருந்த தாலிக் கயிற்றைக் கண்டாள். மெல்ல அதைக் கையில் எடுத்தவள், கண்களில் கண்ணீர் வழிய விசும்ப ஆரம்பிக்க.. அவளை கவனித்துக் கொண்ட செவிலியர்கள் நடந்ததைக் கூறினர்.
அவன் நினைத்ததை நடத்தி விட்டான். அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டான். அத்தனை பேர் எதிர்த்தும், அவள் பிழைக்கவே மாட்டாள் என்றபோதும் அவளை மணந்து கொண்டான். அவன் காதலை எண்ணி அவள் பெருமிதம் கொண்டாள். இப்படி ஒருவனை விட்டு உயிரை விடத் துணிந்த தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினாள்.
உடையை மாற்றும் வரை கூட அவளால் பொறுக்க முடியவில்லை அவளால். சாய்வாக அமர வைத்த செவிலியர்கள் அவளுக்கு உடையை மாற்றிவிட்டு, ‘ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க கயல்’ என்றபடியே வெளியே காத்திருந்த அவனை அழைக்க,
உள்ளே வந்தவனை ‘மாமா’ என்ற கேவலோடு தன் பலம் கொண்ட மட்டும் பற்றி இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
வளவனின் நேசம் எத்தகையது என்று ஏற்கனவே கண்ணால் கண்டிருந்த செவிலியர்கள், கயலின் நிலை உணர்ந்து நெகிழ்ச்சியோடு வெளியேறினர்.
தன்னவள் எழுவதற்காக காத்திருந்தவன், அவளின் "மாமா.." என்ற அழைப்பிலேயே உருகிக் கரைந்து விட, அவ்வளவு பலவீனமான நிலையிலும் கூட, அவனைப் பற்றி இழுத்து அவள் அணைத்த வேகத்தில், அவன் மீது அவள் கொண்ட நேசத்தின் ஆழத்தை உணர்ந்தான். அத்தனை நாட்களாய் அவன் தவித்த தவிப்பு அத்தனையும் வெளிப்பட, அவள் முகம் முழுக்க முத்தங்களாய்ப் பொழிய ஆரம்பித்தான்.
உயிர் உருக "அம்மு.. அம்மு.. என்ன என்னை விட்டுட்டு போயிடாதடி.." என்றபடியே அவளை ஆரத்தழுவிக் கொண்டான். நான் இவனது மனைவி என்ற கர்வத்தோடு, அவனின் அத்தனை துயரங்களையும் தன் முத்தங்களால் தீர்த்து விடுபவள் போல அவள் இதழ்களால் அவனுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தாள் அவனது காதல் மனைவி. வேரின் தாகத்தைத் தீர்க்கும் மழையாய் அவளின் அத்தனை துன்பத்தையும் தன் அணைப்பாலும், முத்தத்தாலும் போக்கிக் கொண்டிருந்தான்.
அவன் காதலே அவளுக்கு மருந்தாகிப் போக விரைவிலேயே, முழுவதுமாய்த் தேறி வீடு வந்தாள். ஆனால், ஒரு வார்த்தை கூட ஏன் இப்படி செய்தாயென அவன் கேட்கவில்லை. என் மீது நம்பிக்கை வைக்காமல் போனாயா என்று கேட்டு விடுவானென அவள் ஒவ்வொரு நாளும் அக்கேள்வியை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவன் எதையுமே கேட்கவில்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே அவன் காட்டிக் கொள்ள வில்லை. அதற்கு மாறாய் அவளை அணு, அணுவாய் தாங்கினான். திகட்டத் திகட்ட அன்பைப் பரிமாறினான். ஒரு நொடி கூட அவளை விட்டு பிரிந்திருக்க வளவன் தயாராய் இல்லை. அவளுக்காய் வளவன் அவள் வீட்டிலேயே தங்கி விட அவள் உடல் முழுதாய் தேறி வரும் நாளுக்காய்க் காத்திருந்தார் செந்திலகம்.
ஒவ்வொரு நொடியும் அவள் மீதான அளவற்ற நேசத்தை அவன் செயல்களில் காட்டிக் கொண்டிருந்தான். பிரகாசமும் கணேசமூர்த்தியும் அதை கண்டு கண்கள் பனித்தனர்.
தினமும் ஜீவாவைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப வீட்டிற்கு அழைத்து வருவதும் கூட வளவனே. பள்ளியில் உள்ள அத்தனை பேரிடமும் இவர் என் அப்பா; இவர் என் அப்பா என வாய் வலிக்க சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள் ஜீவா.
மேலும் இரண்டு மாதங்கள் நிறைவு பெற்று கயலின் உடல் முழுவதுமாய் தேறிவிட, செந்திலகம் பிரகாசத்திடம் கலந்து பேசி ஒரு நல்ல நாளை பார்த்திருந்தார்.
கயலும், வளவனும் தங்கள் திருமணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என அன்றைக்கு பேசினார்களோ அதை அப்படியே நடத்தி முடித்தனர். அவள் ஆசையாய் வர்ணித்த தாமரை வர்ண பட்டில் அவள் ஜொலித்துக் கொண்டிருக்க, அதே நிற பட்டு வேட்டி சட்டையில் வளவன் தன் மனையாளை ஆசை தீர பார்வையால் பருகிக் கொண்டிருந்தான். ஜீவாவிற்கும் அதே தாமரை வண்ண பட்டுப்பாவாடையும், நீல வண்ண சட்டையும் அணிந்திருக்க மற்ற அனைவருக்குமே நீல வண்ண உடையில் அத்தனை அழகாய் உடைகளை தேர்ந்தெடுத்திருந்தாள் அவன் காதல் மனையாள்.
மூன்றாவது முறையாக மீண்டும் பொன் தாலி பூட்டி, அவளோடான பந்தத்தை ஏழு ஜென்மத்திற்குமாய் உறுதியாக்கினான். ஊரும் உறவும் வியக்க, தங்கள் மகளை இடையில் அமர்த்திக் கொண்டு நடந்த அவர்களின் திருமணத்தைக் கண்டு ஊரே வியந்தது.
அவன் தமையன்கள் மன்னிப்பு வேண்டியும் அவர்களை அவன் மன்னிக்கவேயில்லை. அதே போல் வேணியையும் அவன் மன்னிக்கவில்லை. ஏனெனில் அன்று அவர்கள் சகோதரர்கள் பார்க் வந்து பேசியதற்கும் அதன் முன்னும் பின்னும் நடந்த அத்தனை சம்பவத்திற்கும் அவள்தான் காரணம் என்று அறிந்தும் அவளை மன்னிக்க அவன் ஒன்றும் மகான் அல்லவே. அவளுக்கு எதிரில் கயலோடு மகிழ்ச்சியாய் வாழ்வது ஒன்றே அவளுக்கான தண்டனை என்று முடிவெடுத்தான். மூன்றாம் மனிதர்களாய் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள அவன் அனுமதி அளித்ததே அவர்கள் அனைவரும் இந்த திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று மட்டுமே அனுமதித்தான்.
ஊரறிய நடக்கும் திருமணத்திற்காய்க் காத்திருந்தவன், அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் தன் கிடைக்கும் தனிமையில் எல்லாம் மனைவியின் இதழை முற்றுகையிட, அவனின் அதீதக் காதலில் சற்று திணறித்தான் போனாள் அவள்.
அவளின் முகச்சிவப்பை உணர்ந்த தாமரையும், மற்ற சகோதரிகளும் அவளைப் பார்த்து நகைக்க, அவன் கைகளைப் பற்றியபடி அவனின் முதுகுக்குப் பின்னால் அவள் நாணத்தோடு மறைய, அன்றைய நாள் நினைவு வந்து அவன் உடல் விரைத்தது.
அவன் உடல் விரைத்து நிற்பதைக் கண்டவள் எட்டி அவனை பார்க்க, அவளின் பூமுகத்தைப் பார்த்து மற்றவையெல்லாம் மறந்து மயங்கிப் போனான் அவன்.
அவர்களின் வாழ்க்கைப் பயணம் இனிதே துவங்க அச்சாரமாய் அவர்களைத் தனியறையில் விட்டுவிட்டு கலகலத்தபடி அனைவரும் வெளியேற, அத்தனை நாட்கள் அவன் காத்த விரதத்தையெல்லாம் அவளோடு சேர்த்து முடிக்க முனைந்தான்.
அவளின் மனமறிந்து பூவைத் தாங்குவது போல் அவளை மென்மையாய் கையாள, அவனது மொத்த காதலும் கிட்டிய துடிப்பில் அவள் வன்மையாய்த் துவங்கியிருந்தாள்.
"ஹேய் அம்மூ..." என்றபடியே அவளின் வன்மைக்குள் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான் அவன்.
துன்பத்தை மட்டுமே கண்டிருந்தவளின் வாழ்வில் இனி மகிழ்ச்சியை தவிர வேறொன்றுமில்லை என அவளை உள்ளங்கையில் தாங்கினான். அப்படி ஒரு நாளில் கயல் அவனிடம் கேட்டாள் "நான் ஏன் அப்படி செஞ்சேன்னு நீங்க கேட்கவே இல்லையே மாமா..?" என்றாள் வருத்தத்தோடு.
அவள் கேட்ட மாத்திரத்திலேயே அவனுக்கு அவள் பட்ட துன்பமெல்லாம் நினைவு வர, கண்கள் கசிய அவளை நோக்கினான்.
"இன்னொரு முறை அதை எனக்கு நினைவுபடுத்தாதேடீ.. என் உயிரே போய்டும். எப்பவும் அதை கேட்கவோ, நினைக்கவோ நான் தயாரா இல்லை. நீ பிழைக்கவே மாட்டேன்னு சொன்னப்ப உன் கழுத்துல தாலி கட்டிட்டு, எனக்காக வாடி.. நாம வாழணும்னு சொன்னேன். எனக்காக மறுபிறவி எடுத்து வந்த தேவதைடீ நீ... இந்த பிறப்புல உன்னை என் கண்ணுக்குள்ள வெச்சு தாங்கணும். அது மட்டும்தான் எனக்கு வேணும்.." என்றான். அவளென்ன சளைத்தவளா..? பொக்கிஷமாய்த் தன்னை தாங்குபவனுக்காய் அவள் மொத்த நேசத்தையும் கொட்டி "மாமா.. மாமா..." என அவன் பின்னேயே வலம் வந்தாள்.
அவர்கள் நேசத்தின் பரிசாய் கிடைத்த அரிய முத்து ஜீவாவைத் தன் நெஞ்சோடு அணைத்திருந்த பாட்டியிடம் "நான் சொல்ற பேர் தான் பாட்டி தம்பிக்கு வைக்கணும்.." என செந்திலகத்திடம் மல்லு கட்டிக் கொண்டிருந்தாள்.
அன்பை விதைத்து மகிழ்ச்சியை அறுவடை செய்வோம்..
முற்றும்.
 
Top Bottom