1
“என் விருப்பத்தை யாருமே பொருட்படுத்தவில்லை மகிமா, எல்லாம் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே நடத்தி முடித்து விட்டனர் என்னை மன்னிப்பாயா?” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சர்வசாதரணமாக பேசும் கிருபாகரனை விழிவிரிய பார்த்தாள் மகிமா
ஒரு நொடி அங்கே நடப்பது எல்லாம் என்னவென்றே அவளுக்கு புரியவில்லை. சுற்றுபுறத்தை ஒரு முறை பார்த்தாள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அறை படுக்கை முழவதும் மல்லிகை பூ சிதறல்கள், நடுவில் ரோஜா இதழ்களால் இதய வடிவ அலங்காரம். ரூம் ஸ்ப்ரேயின் மணமும், ஊதுவத்தியின் மணமும் சேர்ந்து ஏதோ சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது. ஆனால் இன்று காலை 6.௦௦ - 7.௦௦ முகூர்த்தத்தில், அக்னியை சாட்சியாக வைத்து நானூறு பேர் அட்சதை தூவ, திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டியவனின் பேச்சு, அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் ஒட்டாமல் ஒலித்ததை அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
விருப்பமில்லை என்று சொல்ல, நல்ல முகூர்த்தம் பார்த்து , சந்து முகூர்த்தத்தில் சொல்கிறாரா? இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் கதரியழுது ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமா? அல்லது பெரியவர்களை அழைத்து பேச வேண்டுமா? கண்கள் தானாக கரித்துக் கொண்டு வந்தது ச்சே...ச்சே,, இந்த அழுகை எந்த பிரச்சனையையும் போக்காது என்று மகிமா சிந்திக்கும் பொழுதே கிருபாகரன் தொடர்ந்தான்.
“எனக்கே ரொம்பவும் அசிங்கமாகத் தான் இருக்கிறது மகிமா. ஆனால் என் நிலைமை அப்படி, என்னை மன்னிப்பாயா? என்னைப் பொருத்த வரையில் இந்தத்’ திருமணம் நடந்திருக்கக் கூடாது”
அவன் பேசப் பேச அவளுக்கு கோபம் அதிகரித்தது. ஆத்திரத்தில் தவறாக எதுவும் பேசக்கூடாது என்று ஆழ்ந்த சல மூச்சுகளை எடுத்தவள் முதல் முறையாக வாய் திறந்தாள்.
“காரணம்”
“காரணத்தை நிச்சயமாய் நீ தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கான உரிமை உனக்கு இருக்கிறது”
உரிமை!! எந்த உரிமையைப் பற்றி இவன் பேசுகிறான். கட்டிய தாலியையே விருப்பமில்லாமல் கட்டினேன் என்கிறவர். உரிமையைக் கொடுக்க மட்டும் முன் வந்திருக்கிறாரா? ம்..ஹும்.. என்று உள்ளுக்குள் குமைந்தவள். அவனது பேச்சை கவனிக்கலானாள்.
“நான் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளைத் தவிர வேறு பெண்ணை நினைத்துப் பார்க்கவும் எனக்கு விருப்பமில்லை”
தெளிவாகவே பேசினான், என்ன ஆண்மகன் இவன். காதலை வீட்டில் சொல்லத் தைரியமில்லாத கோழை. அந்த கோழைத்தனத்தை மறைக்க, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கிறோமே என்ற எண்ணமில்லாமல், இப்போது இருக்கும் இந்த தெளிவு பெண் பார்க்கும் போது இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும் என்று நினைத்தவள், அதைக் கேட்டும் விட்டாள்.
:இந்த காதல் என்னை பெண் பார்க்க வந்த பொழுது இல்லையா? அல்லது அப்பொழுது சொல்ல மறந்துவிடு இப்போது நினைவு வந்ததால் சொல்கிறீர்களா?”
குத்தலாகவே தான் கேட்டாள்.
“மகிமா ப்ளீஸ்... என்னை மேலும் கொல்லாதே. ஏற்கனவே பத்தி உயிர்தான் என்னுள் இருக்கிறது. முன்பே சொல்லி இருக்க வேண்டும்தான். ஆனால் அப்போது நியாயமான காரணம் எதுவும் இல்லை”
அவன் பதிலில் எரிச்சல் அதிகரித்தது அவளுக்கு
“வேறு ஒரு பெண்ணை காதலிப்பது உங்களுக்கு காரணமாக தெரியவில்லையா?’
“அதுதான் புவிக்கு... அதாவது நான் காதலித்த பெண்ணிற்கு திருமணமாகிவிட்டதெ. பிறகு எந்த காரணத்தைச் சொல்லி நம் திருமணத்தை நிறுத்த முடியும்” என்றவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள் மகிமா, திருமணமாகிவிட்ட பெண்ணிற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம். அவனவன் திருமணத்திற்கு முன்னால் நிறைய காதலை வைத்துக் கொண்டு, அதை மனைவிடம் மூச்சுக்கூட விடாமல் வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். இவர் என்ன இத்தனை வெகுளியாய் இருக்கிறார் என்று யோசித்தவள், கொஞ்சம் தோழமை கலந்த குரலில் பேசினாள்.
“நா.. நான் உங்களை கிருபா என்று அழைக்கலாமா?” என்றவளுக்கு சரியென்பது போல் தலையசைத்தான்.
“இங்கே’ பாருங்கள் கிருபா... உலகத்திலுள்ள அத்தனை பேருக்கும்,ஒரு முதல் காதல் நிச்சயமாய் இருக்கும். நூற்றில் ஒருவருக்குத்தான் அது வெற்றிபெறும். அதனால் எல்லோரும் தேவதாஸாக ஆகிவிடுகிறார்களா என்ன? இல்லையே”
“என்னால் என் புவியை மறக்க முடியாது”
பிடிவாதம் பிடிக்கும் குழந்தையின் முகம் போல்தான் மகிமாவிறகு தோன்றியது.
“கிருபா.. இதுதான் நிதர்சனம். நீஎங்கள் வேண்டுமானால் ஒரு நாலுபேரிடம் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாய் எல்லோருக்குள்ளும் ஒரு காதல் பிளாஷ்பேக் இருக்கத்தான் செய்யும். அதற்காக யாரும் திருமணம் செய்யாமல் இருப்பதில்லையே?”
“அப்படியானால் உங்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறதா?” என்று எந்தவித உணர்வுமில்லாமல் கேட்டவனை பார்க்கையில் சிரிப்பதா இல்லை அழுவதா என்று கூட அவளுக்கு புரியவில்லை. அவள் சொல்ல வந்தது என்ன! அவன் புரிந்து கொண்டதென்ன? இருப்பினும் அவனது கேள்விக்கு பதிலளிக்கலானாள்.
“ஆம்.. நிச்சயமாய் இருக்கிறது எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தப் பொழுது, முதலில் ஒரு பையனின் போட்டோவை காட்டினார்கள். எனக்கு அந்த போட்டோவிலேயே அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது கண்டதும் காதல் என்று கூட சொல்லலாம்” நிறுத்தினாள்.
“பிறகு ஏன் அந்த சம்மந்தம் கை கூட வில்லை?” என்று ஆர்வமாக கேட்டான்
“கைகூடவில்லை என்று யார் சொன்னது, அந்த போட்டோவில் இருந்தது நீங்கள்தான்” என்று எந்தவித ஏற்ற இறக்கமும் இல்லாமல் சொன்னவளை ஒரு நொடி விழியகலப் பார்த்தவன், உடனே...
“அது.. தான் நீ என்னை திருமணம் செய்து கொண்டாயே பிறகு எப்படி அது பிளாஷ்பேக் ஆகும்”
“எது.. திருமணம் இந்த மஞ்சள் கயிற்றை எனக்கு கட்டினீர்களே அதுவா?... என்ன அப்படி பார்க்கிறீர்கள். விருப்பமில்லாமல் கட்டியது என்று நீங்கள் சொன்ன பிறகு இது வெறும் கயிறாகத்தான் தோன்றுகிறது. அதனால் எல்லோரையும் போலவே எனக்கும் ஒரு பிளாஷ்பேக் வந்துவிட்டது”
அவள் எளிதாய் சொல்வதுபோல் பேசினாலும், அது கிருபாகரனை அதிகமாக பாதித்தது போலும்..
“இதற்கு நீ என்னை ஓங்கி அறைந்திருக்கலாம் மகிமா”
அவன் வார்த்தைகளில் வலி தெரிய உடனே சமாதானம் பேசினாள்.
“கிருபா ப்ளீஸ், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதற்கு மேல் இந்த மனநிலையில் நம் பேச்சை தொடர வேண்டாம். அது வேறுவிதமாய்த்தான் முடியும். காலையிலிருந்து அதிக சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று இருவருமே களைத்திருப்போம், இப்போது தூங்கலாம், மற்றதை காலையில் பேசலாம்” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல், குளியலறையினுள் நுழைந்து பட்டுச் சேலையை மாற்றிக் கொண்டு முகம் கழுவி விட்டு வந்தாள். பிறகு எல்லா நகைகளையும் கழற்றிவிட்டு, பீரோவில் பத்திரப்படுத்தினாள்.
மற்ற நகைகளைப் போல் எளிதாக, கழட்ட முடியாத தாலியை சற்றுநேரம் உற்றுப் பார்த்தாள். இதற்கு இந்த நிமிடம் வரை எந்த அர்த்தமும் இல்லை என்ற உண்மை சுட்டது. இருப்பினும் மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்ற தத்துவத்தின் மேல் அதிக நம்பிக்கை கொண்ட மகிமா அந்த கிங் சைஸ் கட்டிலில் ஒரு ஓரமாக படுத்து கண் மூடினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கியும் விட்டாள்.
தூக்கம் வராமல் தவித்தவன் கிருபாகரன் தான். அவன் நினைத்தது வேறு. இங்கு நடந்தது வேறு இந்த பேச்சு வார்த்தைக்காக கடந்த மூன்று நாட்களாக ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்படிப் பேசினால் தன் நிலைமையை மகிமாவிடம் சரிவர எடுத்துச் சொல்ல முடியும் என்று யோசித்து, யோசித்து வாக்கியங்களை வார்த்தைகளையும் தேடிபிடித்துகோர்த்து என்று எத்தனை சிரமப்பட்டான். தன் விருப்பமின்மையை சொல்லும் பொழுது, மகிமா நிச்சயம் கண்ணீர் வடிப்பாள். அப்போது அவளை எப்படி சமாதானப்படுத்த வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலக், அம்மாவின் உடல்நிலையைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நிறைய யோசித்து வைத்திருந்தான்.
ஆனால் மகிமா வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாளே என்று யோசித்தவன். அம்மாவின் முதல் ஹார்ட் அட்டாக் பற்றி சொல்லாமலே விட்டு விட்டோமோ என்று தோன்றியது அப்படி அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் இருக்கும் பொழுது தான் அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியதே. அந்த சூழ்நிலையில் எதிர்த்து, அவனால் எதுவும் பேச முடியவில்லை.
அப்பாவும், அம்மாவும் காதலுக்கு எதிரிகள் அல்ல.. ஆனால் அப்போது காதல் தோல்வியில் இருந்தவனால் எப்படி காதலை வீட்டில் சொல்ல முடியும். கல்லூரி காலத்திலிருந்தே வளர்ந்து தழைந்த காதல், எட்டு வருட காதல். சேலத்தில் இருக்கும் பாட்டியை பார்த்து வரப்போவதாக சொல்லிவிட்டுச் சென்ற புவனா. ஒரு வாரம் கழித்து அழுகையோடு செல்லில் பேசினாள்.
“என்னை கட்டாயபடுத்தி என் தாய்மாமனுக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் கரன். என்னால் தடுக்கக் கூட முடியவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. இனி நீங்கள் எனக்காக காத்திருப்பது வீண் தான். எல்லாம் என் தலையெழுத்தின்படி நடந்து முடிந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் கரன். அப்படியே என்னை மறந்துவிடுங்கள், உங்களுக்கேற்ற ஒரு பெண்ணாகப் பார்த்து மணந்து கொள்ளுங்கள். இனி என்னை தொடர்பு கொள்ள நினியாக்க் வேண்டாம்” என்று மூச்சு விடாமல் அழுதுக்கொண்டே பேசியவள், இவன் நிலைமையை புரிந்து கொண்டு பேசும்முன் தொடர்பை துண்டித்துவிட்டாள். தலையில் இடி விழுந்தது போல் இருந்தது அவனுக்கு. அவளை தொடர்பு கொள்ள எந்த வழியும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அப்படி அவன் சோகத்தில் காலம் கழிக்கையில் தான் அவனது தாய்க்கு உடம்பு சரியில்லாமல் போனதும், இவனுக்கு திருமணம் நடந்ததும் எல்லாமே.
டாக்டர் தெளிவாகச் சொல்லிவிட்டார். அம்மாவிற்கு கொஞ்சமும் மனஅழுத்தம் வந்துவிடக் கூடாது என்று. எவ்வளவுக்கு அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களோ அவ்வளவு நல்லது என்று எடுத்துச் சொன்ன பிறகு அம்மாவின் விருப்பத்திற்கு மாறாக, எது பேசவும் அவனுக்கு தைரியம் வரவில்லை. அதனால் தான் சுயநலமாக தாயின் உடல்நிலைக்காக ஒரு பெண்ணை மணந்தான்.
இப்போது மகிமாவிடம் எப்படி பேசி புரிய வைப்பது. அம்மாவின் உடல் நலம் பற்றி நிச்சயம் பேச வேண்டும். இன்று நடந்ததை நினைத்துக் கொண்டு , ஒருவேளை அவள் அம்மா வீட்டிற்குச் சென்று விட்டால்? நினைக்கவே பயமாக இருந்தது. நாளை காலை அவள் எழுந்ததும் அவளிடம் விளக்கமாக பேச வேண்டும் என்று நினைத்தவன் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.