Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 30

சில நிகழ்வுகள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும் ! அப்படித் தான் திகழொளி ,மிகன் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.


மிகன், திகழொளி வாழ்க்கையை துரோகத்தால் தன்னால் முடிந்தளவு கெடுத்த நீரனுக்கு உடல் நலம் சீராக பத்து நாள் ஆனது.



ஒருவழியாக நீரன் மருத்தவமனையிலிருந்து வீடு திருமபினான்.வீடு வரும் வரை மிகன் ,திகழொளிப் பற்றி எதுவும் நினைக்கவில்லை..


நாம் பிழைப்போமா? என்ற பெரும் பயமே அவனை சூழ்ந்திருந்தது. அதனால், எதைப்பற்றியும் அவன் சிந்திக்கவில்லை..


ஆனால் ,வீட்டிற்கு வந்த அன்றே வெறிச்சோடிக் கிடந்த திகழொளியின் வீடு அவனின் கவனத்தை ஈர்த்தது.


மிகனுடன் எப்போது தனிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவன் ,அது கிடைத்தவுடன் திகழொளிப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டான்.

நீரன் மனதிற்குள் தான் நினைத்தது நடந்து விட்டது என்று மகிழ்ந்தான்


வீட்டுப் பெரியவர்களும் விஷயம் கேள்விப் பட்டதும் நொந்து போனார்கள்.மிகனிடம் தனித்தனியாக விசாரித்தவர்களால் அவனை கடிந்து கொள்ளத் தான் முடிந்தது.


உலகமாறனுக்கு அன்று தான் மகனின் நேசமே தெரியவந்தது.மகனின் நிலையை நினைத்து சொல்லிடங்கா துக்கத்தை மனதிற்குளேயே வைத்து குமறினார்.


உண்மை தெரிந்த மணியரசியோ எதையும் காட்டிக் கொள்ளாமல் தவித்தார்.புத்திர பாசம் அவரின் வாயை அடைத்தது.


மிகனோ, நடைபிணமாக இருந்தான்.அவனால், அங்கே இருக்க முடியாமல் வேலைக்கு மாற்றால் வாங்கிக் கொண்டு புனே சென்றான்.


ஒருவனின் சூழ்ச்சியால் இருவரின் வாழ்க்கையும் நரகமானது.

மணியரசியோ, அதன்‌பிறகு தான் வெகு தீவிரமாக மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.
கணவருடன் கலந்தாலோசித்து மகனின் கெட்ட பழக்கங்களை நீக்க‌ மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார்.

உலகமாறனுக்கும், மிகனுக்கும் இது எதுவும் தெரியாது. அவர் மகன் வெளியூர் சென்ற பின் தன் அலுவலக வேலை உண்டு தான் உண்டு என்று தன் வட்டத்தை மிகவும் சுருக்கிக் கொண்டார்.


மிகனோ, தந்தையிடம் தினமும் பேசுவான்..தன் அத்தை வீட்டாரிடம் வாரம் ஒரு முறை பேசுவான்.

மிகன் அடிக்கடி ஊரூக்கு வராவிட்டாலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து இரண்டு நாள் மட்டும் தங்கி தந்தையை பார்த்துச் செல்வான்.


நாள்கள் இப்படியே நகர்ந்து கொண்டிருந்தது. மணியரசியோ, மகனின் மனநிலை கொஞ்சம் சீரானதும், மகனுக்கு திருமணம் செய்து வைக்கனும் என்று முடிவு செய்து கணவனுடைய தூரத்து சொந்தத்தில் பெண்ணும் பார்த்தார்.


தங்களைவிட வசதி குறைவாக இருந்தாலும், மணியரசிக்கு கயல்விழியை ரொம்ப பிடித்திருந்தது.


நீரனும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக திருமணத்தை மிக எளிமையாக முடித்தார்.


மிகனும், திருமணத்திற்கு வந்து கலந்து கொண்டான்.அவன் மனமோ எப்படியோ நீரன் பழையதை மறந்து நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தது.

நீரனுக்கு திருமணம் முடிந்த பின் உலகமாறன் மெதுவாக மகனிடம் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.


மிகன் தன் மனதை எதையும் பெரியவர்களிடம் காட்டிக் கொண்டதே இல்லை..அதனால் அவன் திகழொளியை மறந்து விட்டான் என்று பெரியவர்களும் நினைத்திருந்தனர்.


ஆனால், அவன் தான் மறக்கவே இல்லையே.. அவனுள் ஓர் உயிராக கலந்துவிட்டவளை எப்படி மறப்பான்.


தந்தை திருமணத்தை பற்றி கேட்டாலே மிகன் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்து வந்தான்.

இப்படியே நாள்கள் நகர கயல்விழி கருவுற்றாள். நீண்ட நாள்கள் கழித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

நீரனோ தன்னால் இருவரின் வாழ்வு போனதே என்று சிறிதும் குற்றயுணர்வு இல்லாமல் நிம்மதியாக அவன் வாழ்வை வாழ்ந்தான்.


கயல்விழிக்கு ஏழு மாதம் ஆனாதும், சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தினார்கள்.


எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.
ஆனால் விதி வழியது என்பது பொய்யல்ல.. நன்றாக சென்று கொண்டிருந்த நீரனின் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.

கயல்விழிக்கு சரியான நேரத்தில் பிரசவ வலி வரவும் அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த கயல்விழிக்கு பிரசவகால ஜன்னி கண்டது.அது அவளின் உயிரையே பறித்து விட்டது.

ஒரே நாளில் மணியரசியின் குடும்பத்தை அந்த நிகழ்வு புரட்டிப் போட்டது.பச்சை குழந்தையை வைத்துக் கொண்டு செய்வதிறியாமல் அழுது கரைந்தார்.

நீரனும் உடைந்து போனான்.விஷயம் கேள்விப்பட்டு உடனே விமானம் பிடித்து ஊரூக்கு வந்த மிகன் தான் எல்லாருக்கும் முடிந்தளவு ஆறுதலாக இருந்தான்.

மணியரசியோ, கயல்விழியின் குடும்பத்தாரிடம் குழந்தையை தராமல் தானே வளர்ப்பதாக சொல்லிவிட்டார்.

ஏற்கனவே கஷ்டத்தில்ருக்கும் அவர்களை மேலும் கஷ்டத்தில் தள்ள அவர் விரும்ப வில்லை..

குழந்தையை கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் தன் கவலைகளை மனதிற்குள் அடக்கிக் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டார்.

நீரனோ, மறுபடியும் தன் பழைய வாழ்க்கையை தேர்ந்தெடுத்தான்.பழைய படி குடி ,போதைப் பழக்கம் என்று தன் உலகில் மூழ்கினான்.


தன் குழந்தையைக் கூட கண்டுகொள்ளவில்லை..மிகன் தான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஊரூக்கு வந்துவிடுவான்..

தன் அத்தை குடும்பத்துக்கும், குழந்தைக்கும் பெறும் துணையாக இருந்தான். அவன் தான் குழந்தைக்கு மகிழினி என்று பெயர் சூட்டினான்.

மிகனோ ஒரு நாள் நீரன் கெட்டு சீரழிந்து போவதை காண முடியாமல் அவனைக் கண்டித்தான்.

ஆனால் ,அவனோ" மிகா என்னால் எதையும் மறக்க முடியலைடா ..கிடைத்த வாழ்வை எப்படியோ வாழ்ந்தேன். ஆனால் எனக்கு அதுவும் நிலைக்கவில்லை..எல்லாத்தையும் மறக்கத் தான் நான் குடிக்கிறேன்.." என்று வியாக்கியானம் பேசினான்.


"டேய் மனசை தேத்திக்கோடா.. உனக்கு ஒரு குழந்தை இருக்கு..அதுக்காகவாவது நீ நல்லா இருக்கனும் டா..அதை நல்லபடியா வளர்க்கும் பொறுப்பு உனக்கு இருக்குடா.." என்ற மிகனிடம்..

"புத்திக்கு அது புரியுது! ஆனால் ,மனதிற்கு புரியவில்லையே நான் ஆசைப்பட்டவளை கல்யாணம் செய்ய முடியலே .. சரி இது தான் தலை எழுத்து என்று கயலுடன் வாழ்ந்தால் அந்த வாழ்வும் நிலைக்கலே.."என்று தன் தப்புக்கு நியாயம் சொன்னான்.


மிகனோ, என்ன சொல்வதென்றே தெரியாமல் மெளனமாக நின்றான்.

நீரனோ, தொடர்ந்து, "ஒருவேளை நான் திகழொளியை கல்யாணம் செய்திருந்தால், நல்லா இருந்திருப்பேன் தானே மிகா..ஏன்டா அவளுக்கு என்னைப்பிடிக்காமல் போச்சு.." என்று நாடகமாடினான்.


திகழொளியின் பேரை எடுத்தால் தான் மிகன் எதைப்பற்றியும் பேசமாட்டான் என்று அவனை நன்கு புரிந்து வைத்திருந்த நீரன்.

அப்போதும் தன் கொடூர புத்தியைக் காட்டினான்.


நீரன் நினைத்தது போல் திகழொளி பெயரை கேட்டபின் மிகன் நீரனிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டான்.


ஆனால் மகழினியின் மீது உயிராக இருந்தான்.தாயும் இல்லை..தந்தையும் ஒழுங்கில்லை என்றான‌ பின் குழந்தை மீது அளவுகடந்த பாசத்தைப் பொழிந்தான்.


எல்லா கெட்டதும் முடிவுக்கு வர ஒரு நேரம் வரும் என்பது போல நீரனுக்கும் நேரம் வந்தது.


அந்த நேரம் அவனுடைய உயிரைப் பறித்தது.
ஒரு நாள் இரவு அளவுக்கதிகமான குடி போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நீரன்! போதை மயக்கத்தில் எதிரில் வந்த லாரியில் மோதியவன் சம்பவ இடத்திலேயே தன் உயிரை விட்டான்.



விஷயம் கேள்விப்பட்டு மிகன் ஓடோடி வந்தான்.இடிந்து போய் உட்கார்ந்து இருந்த மணியரசிக்கும், காஞ்சித்துரைக்கும் மகனாக முன் நின்று அனைத்தும் செய்தான்.

தன் தங்கையின் நிலையை காணமுடியாமல் உலகமாறனும் நொறுங்கி போனார்.

சோகத்தில் புத்திர சோகம் தான் பெரியது.அதிலிருந்து மீண்டுவருவது என்பது பெரிய சவால் தான்.


மணியரசியோ, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தார் . அதற்கு காரணம் மிகனும், மகிழினியும் ஒரு புறம் என்றால் மிகப்பெரிய காரணம் நீரன் தான்.


அவனின் மோசமான குணமும், நடவடிக்கையுமே ஒரு கட்டத்தில் அவன் போய் சேர்ந்ததே பராவாயில்லை என்று நினைக்கும் அளவு அவர் மனம் வெறுத்துப் போய் இருந்தது.

மகனின் வாழ்க்கையை சீர்படுத்த அவரும் என்னென்னவோ செய்தார்.ஆனாலும் எதுவும் நிலைக்கவில்லை..

தன் அண்ணன் மகனின் வாழ்க்கையை கெடுத்ததை கூட தெரிந்திருந்தும், புத்திர பாசத்தில் மிகனிடம் எதையும் சொல்லாமல் மகனுக்காவே அமைதியாக இருந்தார்.


எப்படியாவது அவனை சீர்படுத்த மறுவாழ்வு மையம் வரை அழைத்துச் சென்று அவன் வாழ்வை மாற்ற போராடினார்.

ஆனால், அவனோ கடைசிவரை திருந்தவே இல்லை..கயல் இறந்ததும் இது தான் சாக்கு என்று மறுபடியும் கெட்டு அழிந்தான்.


அது மட்டுமா? அவனை தட்டிக்கேட்ட தன் அண்ணன் மகனிடம் வேண்டுமென்றே திகழொளியை மீண்டும் இழுத்து வச்சு பேசி அவன் வாயை அடைத்ததை கேட்டவருக்கு மனசு சுத்தமாக வெறுத்து விட்டது.

எதர்ச்சியாக மகனை காணச் சென்றவருக்கு மிகனிடம் மகன் பேசியதை கேட்கும் சூழ்நிலை அமைந்தது.


மனதார விரும்பிய இருவரை பிரித்தது பத்தாதென்று இப்போதும் மகன் எப்படி நடகமாடுகிறானே என்று நினைத்தவருக்கு எல்லாமே வெறுத்து விட்டது..


இன்றுவரை பெற்ற மகனாக தங்களுக்கு எதுவுமே செய்ததில்லை.ஆனால் தான் பெறாத அண்ணன் மகன் தான் தங்களை இன்றும் பார்த்துக் கொள்கிறான் என்று நினைத்தவருக்கு மனசாட்சியே அவரை கொல்லாமல் கொன்றது.

அதனால் தான் வேகமாக அவர் மகனின் இழப்பில் இருந்து மீண்டார்.இனி மகிழினிக்காகவும், மிகனுக்காவும் வாழ வேண்டும். என்று முடிவெடுத்தார்.



காஞ்சித்துரையுமே, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டார்.


என்ன தான் மகன் மீது வெறுப்பு வந்த போதும் சில சமயம் மணியரசி மகனை நினைத்து உடைந்து தான் போவார்.ஆனால் ,அப்பொழுது எல்லாம் மகிழினி தான் அவருக்கு ஆறுதலாக இருந்தாள்.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே.. மனம் ஒரு முறை இல்லாவிட்டாலும் ஒரு முறை ஏங்கித் தான் தவிக்கும்.

எப்படியோ மனதிற்குள் அனைத்து துக்கத்தையும் அடக்கிக் கொண்டு பேத்திக்காக வாழ்ந்தனர்.

மிகனையும், நீரனின் இறப்பு புரட்டிப் போட்டது. அவன் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று கலங்கித் தவித்தான்.

திகழொளியைப் பற்றி நீரன் சொன்னது அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒருவேளை திகழொளியை திருமணம் செய்திருந்தால் நீரன் நல்லா வாழ்ந்திருப்பானோ! என்று அவன் மனம் சந்தேகப்பட்டது.


நீரன் வாழ்க்கை இந்த திகழொளியால் தான் வீணானது என்று வழக்கம் போல் அவளையே தவறாக நினைத்தான்.


அவன் மனதில் அந்த கோவத்தின் தீ இன்று வரையில் குறையவே இல்லை..

உண்மை தெரியும் போது தான் அவனின் நிலை என்னாகுமோ..?

ஆனாலும் ,அவனால் திகழொளியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..

புனேவில் இருந்து மும்பை மாறிய போதும் அவனிடம் எத்தனையோ பெண்கள் தங்கள் காதலை சொன்னார்கள்.

ஆனால் அவனுள் சரிபாதியாக மாறியவளைத் தவிர வேறு யாரையும் அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை..


அவனோ ,திகழொளியை நினைக்காத நாள் இல்லை .ஒவ்வொரு நாளும் தன் மனதுடனேயே போராடி களைத்துப் போனான்.

இப்பிடியே அவன் வாழ்வும் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் தான் அவன் மாற்றலாகி மீண்டும் தன் ஊரூக்கே வந்தான்.

அங்கே எதிர்பாராமல் தன்னவளை சந்தித்தான்..அவளைப் பார்க்கும் பொழுது எல்லாம் அவளை கடித்து குதறியவன், அவளை ஏற்கவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் அனுதினமும் தனக்குள்ளேயே போராடினான்.

காதல் கொண்ட மனசு அவளைத் தான் திருமணம் செய்யவேண்டும் என்று எண்ணியது.ஆனால் அவள் துரோகம் செய்து விட்டாள் என்ற நினைவு வரும் போது அவளை பழிவாங்கத் துடித்தது.

இரண்டு மனதுடன் போராடியவன்.தீர்வாக அவளை திருமணம் புரிந்து அவள் தப்புக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவனால் அவளை வேறு ஒருவருடன் திருமணகோலத்தில் பார்க்க முடியாது..

அவள் தனக்கு மட்டுமே என்ற எண்ணமே அவளை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று அவளையே திருமணம் செய்ய வைத்தது.


ஆனால் அது அவனுக்கே இப்போது தண்டனையாக மாறியது.

மனதாக விரும்பியவளை ஏற்கவும் முடியாமல் ,தள்ளி வைக்கவும் முடியாமல் துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறான்.


திகழொளியோ, தான்‌ மனதார விரும்பியவன்னுடனேயே தன் வாழ்வு இணைத்து விட்டது என்று நிம்மதி அடைய முடியாமல் ,காரணமே இல்லாமல் அனு தினமும் அவனுடைய கோபத்தில் பொசுங்கிக் கொண்டு இருக்கிறாள்.


விடியும் வரை தூங்காமல் மிகனும்,திகழொளியும்
பழைய நிகழ்வுகளை அசை போட்டபடியே படுத்திருந்தனர்..


இருவருக்கும் பழைய நினைவுகளின் ஞாபகங்கள் பச்சைப் புண்ணாக வலித்தது.

உறங்காத இரவுகளின் மிச்சம் காலையில் அவர்களின் விழிகளில் சிவப்பாக மிளிர்ந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்தில் மனைவியுடன் பொருந்திக் கொண்டிருந்தவன் பழைய நினைவுக
ளின் வலிகளால் மீண்டும் மனைவியிடம் கோபத்தை காட்டத் தொடங்கினான்.


ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடிவு வந்து தானே தீரும்..அவர்கள் பிரச்சினையும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 30 பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி புதன்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 31


மிகனுக்கும், திகழொளிக்கும் பழைய நினைவுகள் மீண்டும் ஒரு இறுக்கத்தைக் கொடுத்தது.



மிகனோ, திகழொளியை நேரம் கிடைக்கும் போது எல்லாம் தேளாய் கொட்டித் தீர்த்தான்.




அவன் என்ன பேசினாலும் திகழொளி அமைதியாகவே இருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் அமைதியைக் கண்டு மிகனே பேசுவதை நிறுத்தினான்.



அதன் பின் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் குறைந்தது. தேவைக்கு மட்டும் அதுவும் பெரியவர்கள் முன்னர் மட்டும் ,இயல்பாக பேசுவது போல் நடித்தார்கள்.



மகிழினிக்கு காலின் காயம் சரியானதும் மீண்டும் திகழொளி வேலைக்குச் சென்றாள். மிகனுடன் சென்றாலும் இருவரும் வேலை விஷயம் தவிர எதுவும் அங்கும் பேசிக் கொள்ளாமல் தான் நாள்களை கடத்திக் கொண்டு இருந்தார்கள்.



இப்படியே நாள்கள் கழிந்த நிலையில் நீரனின் இறந்த நாள் வந்தது.. . அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமை! வீட்டில் நீரனுக்கு படையல் போட்டு சாமி கும்பிட்டார்கள்.



திகழொளி மணியரசிக்கு சமையலில் உதவி செய்தாலும், சாமி கும்பிடும் நிகழ்வில் தள்ளியே இருந்தாள்.



அவளால் மனமொத்து அதில் கலந்து கொள்ள முடியவில்லை..என்னதான் வெறுப்பு இருந்தாலும் ,அதை இறந்தவர்கள் மீது காட்டுவது சரியில்லை என்று அவள் மூளை சொன்னாலும், மனது அதை ஒப்பவில்லை..அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை..



திகழொளியோ, ஒட்டாத மனநிலையுடன் இருந்தால் என்றால், மிகனோ அதைவிட குற்றயுணர்வில் தவித்தான்.



தன் சகோதரன் போல் எண்ணியவன் விரும்பிய பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டோமே! அதுவும் அவன் வாழ்வை அழித்தவளை மணந்திருக்கிறேனே! என்று அவனுள் திகழொளி மீது வெறுப்பும் ,கோபமும் அதிகரித்தது.




அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை..மனம் அலைபாய்ந்தது. சாமி கும்பிட்ட பின் பேருக்கு சாப்பிடுகிறேன் என்று கொரித்து விட்டு, தங்கள் அறைக்குச் சென்று அடைந்து கொண்டான்.



திகழொளியோ, அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் பாத்திரங்களை ஒதுக்கி, கழுவி வைத்தாள்.



காலையிலிருந்தே கணவனின் முகமே சரியில்லை என்று நினைத்தவள் ! தங்கள் அறைக்குச் செல்வதை முடிந்தளவு தள்ளிப்போடுவதற்கு என்ன.. என்ன, செய்ய முடியுமோ! அது அத்தனையும் செய்தாள்.



மிகனோ, அறையில் கூண்டுப் புலியாக நடந்து கொண்டிருந்தான்.அவன் மனம் எரிமலையாய் குமறிக் கொண்டிருந்தது. மனைவியை எதிர் நோக்கி காத்திருந்தான்.



ஒருவழியாக திகழொளி வேலை எல்லாம் முடித்து விட்டு இனி செய்வதற்கு எதுவுமில்லை என்று ஆனபின் ! வேறு வழியில்லாமல் தங்கள் அறைக்குத் தயங்கி தயங்கிச் சென்றாள்.



அவளுக்கு தலைவலி வேறு உயிர் போனது..என்ன தான் வேலை செய்தாலும் ,மனது கண்டதையும் நினைத்து கலங்கித் தவித்ததின் விளைவாக தலைவலி வந்து விட்டது.



கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் எனறு எண்ணியபடி தயக்கத்துடன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.



உள்ளே வந்தவளை பார்ததவுடன் மிகனோ, வெறியுடன் அவளின் தோளைப்பற்றியவன் "இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கா டீ..?எப்படியோ அவன் வாழ்க்கையும் அழித்துவிட்டு என் வாழ்க்கையையும் அழிக்க வந்திருக்கே..! ஒவ்வொரு நொடியும் உன்னால் நான் நிம்மதி இல்லாமல் சாவறேன்.ஆனால், நீ நிம்மதியா இருக்கே..நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவனுக்கு உன்னால் இன்று நினைவுதினம் கும்பிடறோம் .."என்று அளவில்லாத கோபத்துடன் சீறினான்.


அவளோ அவனை உயிர்ப்பே இல்லாமல் பார்த்தாள்..


அவனோ ஆவேசம் தீராமல், "உன் முகத்தை பார்க்கவே பிடிக்கலே..எப்படித் தான் எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒண்ணும் தெரியாதவள் போல் அப்பாவியா முகத்தை வச்சுக்கிறீயோ தெரியலே..!

உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு.." என்றவனை..



சொல்ல முடியா வலியுடன் "போதும் நிறுத்துங்கள் ! நான் என்ன சொன்னாலும் ! எத்தனை முறை சொன்னாலும்! என்னை நம்ப மாட்டீங்க..! உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்யுங்க.. !முடிந்தால் என்னை கொன்னு போட்டுடுங்க அப்பவாவது நிம்மதியா இருப்பீங்க..! "என்றாள் மனம் ஒடிந்து..



அவனோ அப்போதும் கோபம் தீராமல்.."உன்னை கொன்னால் மட்டும் எல்லாம் சரியாகுமா..?என் மனதில் புழுவா அரிக்கும் வலிக்கு என்றுமே மருந்தில்லை.உன்னை என்று சந்தித்தேனோ அன்றே என் வாழ்வு முடிந்துவிட்டது.." என்றான் கட்டுக்கடங்காத கோபத்துடன்..



அவளோ "இன்னும் என்னென்ன பழி என்மேல் போட முடியுமோ..? போடுங்கள்.." என்றவளுக்கு மனம் தாளவே இல்லை..ஒரு முறை கூட தன்னிடம் இதுவரை என்ன நடந்தது என்று கேட்டதும் இல்லை.. நம்பவும் இல்லை ! இவன் மெய்யாலுமே தன்னை நேசித்தானா? என்ற சந்தேகம் அவளுக்கு முதல் முறை தோன்றியது..



"எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் மிகன்! உண்மையாளும் நீங்கள் என்னை நேசித்தீர்களா?என்று கேட்டவளை திகைப்புடன் பார்த்தான்.




அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மிகன் சில நொடிகள் அசையாமல் அப்படியே சிலையாக நின்றான்.



அவன் எதுவும் பேசாது நிற்பதைக் கண்டு " இத்தனை நாளும் நீங்களும் என்னை உண்மையா நேசித்து இருக்கீங்கன்னு நினைத்தேன்! ஆனால் , இப்போது தான் தெரியுது ! நீங்க என்னை நேசிக்கவே இல்லை.பழிவாங்க தான்‌ கல்யாணம் செஞ்சு இருக்கீங்கன்னு .."என்றவளுக்கு தாள மாட்டாமல் அழுகை பொங்கியது..



மிகனோ, பேச்சற்ற சிலையாக நின்றான்.அவள் கேட்டதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது.



திகழொளி பொங்கி வந்த கண்ணீரை அடக்கிய படி "போதும் மிகன் ..! இதற்கு மேல் என்னால் உங்களோடு வாழ முடியாது.. தினம் தினம் உங்க சூடு சொல்லை தாங்க எனக்கு தெம்பும் இல்லை..நான் நேசித்த மிகன் நீங்க இல்லை! " என்றவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் அவன் நெஞ்சிலேயே சாய்ந்து கதறினாள்.



மிகனோ அப்போதும் அமைதியாகவே நின்றான்.அவன் மனம் முதல் முறையாக அவள் மீது தப்பு இல்லையோ! என்று எண்ணியது..



திகழொளியோ, ஒருவாறு அழுது முடித்து விட்டு அவனிடமிருந்து நகர்ந்து தன் கண்களை துடைத்தபடியே.. "இதற்கு மேல் என்னால் முடியாது..நாம் பிரிந்திடலாம்..நான் எங்க வீட்டுக்கே போறேன்.. என் மேல் இத்தனை வெறுப்புடன் இருக்கும் உங்களுடன் எப்படி சேர்ந்து வாழ்வது ..இரண்டு பேருக்கும் வாழ்க்கை நரகமாயிடும்..நீங்களாவது நிம்மதியா இருங்க.." என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் தன் அலைபேசியை எடுத்து தன் தம்பியை அழைத்து வரச் சொன்னாள்.




அவள் சொன்னதைக் கேட்டு மிகன் பித்து பிடித்தது போல் நின்றான்.அவன் மனமோ அவளை தடுப்பதற்கு துடித்தது!ஆனாலும், அவள் தன் உடமைகளை எடுத்துவைப்பதை சலனமே இல்லாமல் பார்த்தபடி அப்படியே சிலையாக நின்றான்.



மிகன் சரியாக உண்ணவில்லையே என்று டம்ளரில் பாயாசம் எடுத்து வந்த மணியரிசி! கணவன், மனைவியின் உரையாடலை அறைக்கு வெளியிலிருந்து கேட்டவர் அப்படியே சிலையாக நின்றார்.



தன் மகனால் தவறே செய்யாத இருவரின் வாழ்க்கையும் வீணாகிக் கொண்டிருக்கிறேதே !என்று அவர் உள்ளம் அழுதது.என்ன செய்வதென்று‌ அறியாமல் தான் வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.



அமுதன் தன் தமக்கை அழைத்த அரை மணி நேரத்தில் என்னவோ? ஏதோ? என்று அடித்து பிடித்து வந்துவிட்டான்.



திகழொளியோ , அமுதனைக் கண்டதும் தன்‌ துக்கத்தை அடக்கிக் கொண்டு "அமுதா நான் கொஞ்ச நாள் நம்ம வீட்லே வந்து இருக்கலாம்ன்னு இருக்கேன் என்னை கூட்டிட்டு போடா.." என்றாள் வேறு எதுவும் சொல்லாமல்..



அமுதனோ ,புரியாமல் மிகனைப் பார்த்தான்.மிகனோ இறுகிப் போய் நின்று இருந்தான்.



போகும் போது பெரியவர்களிடம் "அம்மா வீட்டில் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்.." என்று மட்டும் சொன்னாள்.



உலகமாறனுக்கோ, இது கண்டிப்பா மகனின் திருவிளையாடல் தான் என்று தெரிந்தது. ஏதோ இருவருக்குள்ளும் சண்டை என்று மட்டும் அவருக்கு புரிந்தது! ஆனால் , மருமகளை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவருக்கும் புரியவில்லை..



மணியரசியோ ,செய்வதறியாமல் மெளனமாக நின்றார். அவர் மனமோ அவரைக் கொல்லாமல் கொன்றது.




இருவருக்கும் சண்டை என்று அமுதனுக்கும் புரிந்தது.வீட்டிற்கு சென்று அக்காவிடம் கேட்டுக்கலாம் என்று நினைத்தான்.



பெரியவரிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன் திகழொளி "போயிட்டு வரேன் .."என்று பொதுவாக சொல்லிவிட்டு தம்பியுடன் கிளம்பி விட்டாள். கணவனிடம் பேச்சுக்கு கூட சொல்லவும் இல்லை..அவனை ஏறெடுத்தும் பார்க்கவும் இல்லை.. அவளுள் ஏதோ ஒன்று செத்துக் கொண்டிருந்தது..



கண்களில் கண்ணீர் இப்பவோ? அப்பவோ? என்று தத்தளித்துக் கொண்டிருந்தது.



திகழொளி சென்றதும் மிகனோ உலகமே அழிந்தது போல் துடித்தான்.சொல்ல முடியாத வலியுடன் படுக்கையில் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான்.



மணியரசியோ, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் மிகனைக் காணவந்தவர் , இடிந்து போய் அமர்ந்திருந்த அண்ணன் மகனிடம் "மிகா உண்மை தெரியாமல் தப்பு செய்துட்டீயே! ஒரு தப்பும் செய்யாமல் திகழொளியை குற்றவாளி ஆகிட்டீயே! நானும் எல்லாம் சரியாகும் என்று இத்தனை நாள் பொறுமையா இருந்தேனே..நடந்தது தெரியாமல் அவசரப்பட்டு பேசிட்டீயே .."என்றவர் அழுதபடி அத்தனையையும் சொன்னார்.




அவர் சொன்னதைக் கேட்டு மிகன் அதிர்ச்சியின் விழிம்பிற்கே சென்றான். அவனால் இயல்பாக மூச்சுக் கூட விட முடியவில்லை..நெஞ்சை சம்மிட்டியால் அடித்தது போல் தாள முடியாத வலியை அனுபவித்துக் கொண்டிருந்தான்.



"மிகா தப்பு எல்லாம் நீரன் மீது தான்! திகழொளி ரொம்ப நல்ல பொண்ணுப்பா..என் மகனை திகழொளி ஒரு நாளும் விரும்பவில்லை ..அவள் உன்னைத் தான் விரும்பினாள்.." என்றவர் ஒரு நெடிய பெருமூச்சுடன்.



"நீரன் உன் மீது இருந்த பொறாமையில் திகழொளியை உன்னிடமிருந்து பிரிக்க பொய் சொல்லி இருக்கான்..போதைப் பழக்கம் அவனை மிருகமா மாத்திடுச்சு..அவனைத் தவிர யாரும் சந்தோஷமா இருக்க கூடாது என்று நினைத்தான். அது தான் உங்க வாழ்க்கையில் விளையாடிட்டான்.."என்றவருக்கு அதற்கு மேல் துக்கம் தாங்க முடியாமல் கதறினார்.




என்ன சொல்வது என்று தெரியாமல் தன் அத்தையையும் சமாதானப்படுத்தவும் முடியாமல் மிகன் தவித்தான்.



ஒரு வழியாக அவரே தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு "நீரன் என்னிடம் திகழொளியை விரும்புவதாக சொன்னவுடன், நான் திகழொளியை அழைத்துக் கேட்டேன். ஆனால், அவள் அப்போதே உன்னைத் தான் விரும்புவதாகவும், நீரனிடம் தான் பேசியது கூட இல்லை என்று சொல்லிவிட்டாள்.உடனே நான் நீரனிடம் இதை சொன்னேன்.அன்றிலிருந்து வந்தது தான் வினை!" என்று ஒரு நொடி தன் கண்களை மூடித் திறந்தவர் ..



"நீரனுக்கு தன்னை வேண்டாம் என்று திகழொளி சொல்லிவிட்டு, உன்னை காதலிக்கிறாளே! என்ற ஆத்திரம் தான் உங்களை பிரித்தே தீரவேண்டும் என்று அவன் இத்தனை வேலை செய்திருக்கிறான்.பிள்ளை மனம் கல்லு பெத்த மனம் பித்து என்று சொல்லுவார்களே! அது போல் ஒரு நாள் அவன் மாறுவான் என்று நினைத்து தான் உன்னிடம் நான் எதையும் சொல்லாமல் நானே அவனை திருத்த படாதபாடு பட்டேன்.." என்றவரை பார்ததபடி அவரே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான் மிகன்.





அவனால் என்ன பேசமுடியும்..தன் அத்தை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் பொழுது!



மெளனமாக இருந்தவனிடம் "அவன் போதை பழக்கத்தை மறக்கடிக்க மறுவாழ்வு சீர்திருத்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவமும் பார்த்தோம்..ஓரளவு திருந்தி வந்த பின் தான், உடனே கயல்விழியை பார்த்து திருமணம் செய்து வைத்தோம் . ஆனால், அந்த வாழ்வும் இவனுக்கு நிலைக்க வில்லை.." என்று கலங்கியவர் கண்ணீருடன் மீண்டும் பேசினார்.



"விஷம் குடிப்பது போல் நடித்து! உன் மனதை கெடுத்து! உங்களை பிரிச்சவன் அத்துடன் நிம்மதியடையாமல் , அவன் கெட்டு சீரழிவதைப் பொறுக்க முடியாமல் நீ அவனிடம் 'ஏன்டா இப்படி குடிக்கிறேன்னு கேட்டதற்கு' அப்போதும் திகழியை பற்றி உன்னிடம் தப்பாக சொன்னதை நான் கேட்டேன் பா! அப்பவே என் மனம் விட்டுப் போச்சு! இனி இவன் திருந்தவே மாட்டான்னு முடிவுக்கு வந்துட்டேன்.."என்றவரை திகைப்பாக பார்த்தான் மிகன்.



இத்தனையும் இவருக்கு தெரிந்திருந்தும் தன்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே என்று நினைத்தான்.



அவரோ ,அவன் மனதை சரியாக கணித்தவர் "இத்தைனை தெரிந்திருந்தும் அத்தை ஒன்னுமே சொல்லலையேன்னு நினைக்கிறாயாப்பா .? என்ன தான் இருந்தாலும் நான் அவனை பெற்றவளா போய்ட்டேனே..உனக்கு தெரியாமலேயே அவனை சரிபண்ணிடலாம்ன்னு நினைத்தேன்.ஆனால் எல்லாம் போச்சு..இனியும் நான் வாயை மூடிட்டு இருந்தால் உன் வாழ்க்கை வீணா போய்டும் ..திகழொளி நல்ல பெண்பா ..அவள் உன்னை மட்டும் தான் விரும்பினாள்.நீரன் சொன்னது அத்தனையும் பொய்.. நீரனின் சாவுக்கு அவள் எந்த வித்த்திலும் பொறுப்பு இல்லை..அவன் விதியை அவனே தான் முடித்துக் கொண்டான்.." என்றவர் விழியில் தேங்கிய நீரை உள்ளிழுத்த படி ..



"இனியாவது எல்லாத்தையும் மறந்துட்டு அவளுடன் நிம்மதியா சந்தோஷமா வாழுப்பா..நீயும் நான் பெறாத என் மகன் தான்! உன் முகம் வாடினால் என்னால் தாங்க முடியாது.தானாக சரியாகும்ன்னு இத்தனை நாள் உங்கிட்ட உண்மையை மறைத்த இந்த அத்தையை மன்னித்து விடுப்பா.." என்றவர் தாள முடியாமல் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அழுது கரைந்தார்.


மிகனோ ,தன் துக்கத்தையும் ,அதிர்ச்சியையும் விழுங்கிக் கொண்டு மணியரசியை சமாதானப்படுத்தினான்.



தன் துக்கத்தை எல்லாம் அண்ணன் மகனிடம் சொல்லி அழுது தீர்த்துக் கொண்ட மணியரிசி.. " இத்தனனை வருடங்கள் கழித்து இன்னைக்கு தான் குற்றயுணர்வு இல்லாமல் நிம்மதியாக நான் தூங்கப் போறேன்.இன்றும் நான் உண்மையை சொல்லவில்லை என்றால் என் மனசாட்சியே என்னை கொன்று விடும் பெற்ற தந்தைக்கு மேல் நீ மகிழினியைக் கூட நல்லா பார்த்துட்டு இருக்கே..உன் வாழ்வு கெட்டுப்போக நான் விடமாட்டேன் பா..இத்தனை நாள் அத்தை உங்கிட்ட சொல்லாமல் இருந்தது பெரிய தவறு தான் அதுக்காக என்னை வெறுத்து விடாதே !உன்னை விட்டா எங்களுக்கு வேறு நாதி இல்லை.." என்று நா தழு தழுக்க சொன்னவரிடம்..




" அத்தை எனக்கு எப்போதும் உங்களை வெறுக்க முடியாது.. என்னை பெற்ற தாயாக இத்தனை நாள் பார்த்துக் கொண்ட உங்களை நான் வெறுப்பேனா?" என்ற அண்ணன் மகனின் தலையை வருடியபடி" நீ என் வயித்துலே வந்து பிறந்திருக்க கூடாதா என் தங்கமே? என்றவர் துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினார்.



"அத்தை பெற்றால் தான் பிள்ளையா! நான் எப்போதும் உங்க பிள்ளை தான்.."என்றவனிடம்..



" மிகா முதல்லே போய் திகழொளியை கூட்டிட்டு வாப்பா ..நீ அவ கூட சந்தோஷமா வாழ்றதை பார்த்தால் தான் என் மனம் நிம்மதி அடையும்.."என்றவர் "அத்தையை மன்னிசுடுப்பா..!" என்று கையெடுத்துக் கும்பிட்டார்.



அவனோ பதறிப்போய் அவரின் கைகளைப் பற்றி " என்ன அத்தை இது! என்ன காரியம் செய்யறீங்க ..!இனி இப்படி எல்லாம் செய்யாதீங்க! எனக்கு கஷ்டமா இருக்கு அத்தை..!" என்றவனை வாஞ்சையாக பார்த்தபடி எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றார்.



இத்தனை நாள் இருந்த அவரின் மனப்பாரம் எல்லாம் குறைந்து மனம் லேசானது. வெகு நாளாக மனதில் சுமந்த சுமையை இறக்கி வைத்த நிம்மதி மணியரசிக்கு கிடைத்தது.



அவர் சென்ற பின் மிகனோ விவரிக்க முடியாத மனநிலையில் இருந்தான். திகழொளி தன்னை மட்டும் தான் விரும்பி இருக்கிறாள் என்று செய்தி ஒரு புறம் அவனுள் பெரும் இன்பத்தை கொடுத்தாளும், மறுபுறம் அவளை நம்பாமல் தான் பேசிய பேச்சை நினைத்து வெட்கப்பட்டான்.



இனி எப்படி அவள் முகத்தில் விழிப்பான்.அவள் சொன்னது போல் ஒரு முறையாவது என்ன நடந்தது என்று அவளை கேட்காமல் போனோமே! இனி அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தவித்தான்.



சொல்ல முடியாத வார்த்தைகளால் அவளை நோகடித்து வதைத்தோமே..வேறு ஒரு பெண்ணாக இருந்தால் 'போடா' என்று போய் இருப்பாள்.



ஆனால் ,என் ஒளி அத்தனையும் எனக்காக பொறுத்துக் கொண்டு நான் நம்புவேன்! மாறுவேன் ! என்று காத்திருந்தாளே! அவளை இப்படி காயப்படுத்தி அனுப்பிவிட்டேனே என்று நினைத்தவனுக்கு இதயமே வெடித்து விடும் போல் வலித்தது.



எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் அவளை பார்ப்பது என்று நினைத்தவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது.அவன் மனமோ அவனை கொல்லாமல் கொன்றது..




அவளை குற்றவாளியாக பார்த்த போது இருந்த மனவலியை விட. அவள் குற்றமற்றவள் என்று தெரிந்த பின் வந்த மனவலியை அவனால் தாங்க முடியவில்லை..



அமிலத்தை குடித்தது போல் அவன் மனம் சொல்ல முடியாத பெரும் வலியை அனுபவித்தது.



அவளைப்பற்றி புரிந்து கொள்ளாமல் வார்த்தையால் அவள் மனதை கொன்றோமே? நமக்கு மன்னிப்பே இல்லை என்று ஊமையாக அழுதான்.





என்ன செய்வது என்று அறியாமல் துடியாய் துடித்தான்..



தீயவனின் பேச்சை நம்பி தன் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிட்டோமே! என்று நினைத்து தவித்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை..


தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 31 போட்டு விட்டேன்..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அடுத்த யூடி சனிக்கிழமை
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Unmai therinjidichi....ippo poyi mannipu kettu kuttitu vandha ....pichidiven pichi...
Konjam naal kashtapadu.... Oli avan kupitan nu vandhudatha....nice intresting ud sis ❤️
 

New Threads

Top Bottom