உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 34
திகழொளி தன் தாய் வீட்டிற்கு வந்து ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.ஆனாலும், அவள் மனதில் எந்த மாற்றமும் நிகழவில்லை..
அமுதனுடன் பணிக்குச் சென்று வந்தாள்.அங்கே கணவனை கண்டாலும், வேலை விஷயத்திற்காக மட்டுமே அவசியம் என்றால் இருவரும் பேசிக் கொண்டார்கள்..
மிகனோ தன் மனைவி தன்னை மன்னிக்க மாட்டாளா ? என்று தவம் கிடந்தான்.ஆனாலும், அவளை வற்புறுத்தவில்லை..அவளாக மனதார மன்னிகனும் என்று காத்திருந்தான்.
ஒரு மாதம் கடந்த நிலையிலும் மனைவியிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற போது தான் அவனுள் பயம் தொற்றிக் கொண்டது.
எங்கே அவள் இனி மன்னிக்கவே மாட்டாளோ? என்று அவன் மனம் தவித்தது..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு ஏற்ப அவனின் முகத்திலும், கண்களிலும் ஒளியே இல்லாமல் வெறுமையே நிரம்பி இருந்தது.
உலகமாறனோ, மகனின் நிலையைக் கண்டு மனத்திற்குள் கலங்கித் தவித்தார்.நாளுக்கு நாள் மகன் யாருடனும் பேசாமல் இறுகிப் போவதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் வருந்தி தவித்தார்..
மகிழினி கூட மட்டுமே கொஞ்சம் இயல்பாக இருந்தான். மணியரசியோ தன் அண்ணனும், அண்ணன் மகனும் தவிப்பதை தாங்க முடியாமல், எப்படியாவது தப்பை சரி செய்ய நினைத்து திகழொளியைக் காணச் சென்றார்.
திகழொளியோ, அவரை இன்முகமாகவே வரவேற்றாள்..மகிழினியையும் அழைத்துச் சென்றார்.
மகிழினியோ, திகழொளியைக் கண்டதும் தாவி அணைத்துக் கொண்டவள் அவளிடமே பசை போல் ஓட்டிக் கொண்டாள்.
குழந்தையிடம் திகழொளி விளையாடுவதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்த மணியரசி "திகழி நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் மா.. நடந்த அத்தனை தவறுக்கும் என் பையன் தான் காரணம்.
ஆனால், எல்லாம் தெரிந்திருந்தும் நானும் அமைதி காத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்ன்னு இப்ப தான் மா புரியுது! " என்றவரை முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே பார்த்தாள் திகழொளி.
மணியரசியோ, தொடர்ந்து "திகழி மிகன் பாவம் மா..! நாங்க செய்த தப்புக்கு மிகனுக்கு தண்டனை கொடுக்காதே ! அவனை இந்த ஒரு மாதமாக கண்களில் பார்க்க சகிக்கவில்லை..அவன் முகத்தில் சிரிப்பே இல்லை.. கிட்டத்தட்ட நடைபிணமாக வாழ்றான் என்றவர் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய படி "தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறான் என்னால் அவனை அப்படி பார்க்க முடியலை டா.." என்று முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் சிந்தினார்.
திகழொளியோ, அப்போதும் தலைகுனிந்தபடி அமைதியாகவே இருந்தாள்.
அவரோ ஒருவாறு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு .." ஒரு பையனைத் தான் ஒழுங்கா வளர்காமல் வாழ்க்கையை வீணடித்தேன்..ஆனால், ஒரு பாவமும் அறியாத மிகன் வாழ்க்கை! என் கண் முன்னே வீணாவதை என்னால் பார்க்க முடியலே..திகழி மிகனைப் பற்றி நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை.. எத்தனை அருமையான பையன் என்று உனக்கே தெரியும்.. பாசமும், சூழ்நிலையும் அவனை அப்படி நடந்து கொள்ள வைத்துவிட்டது மா..அவனை மன்னித்து அவனுடன் வாழ வாம்மா.."என்றவரிடம்..
சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவள், "எனக்கு கொஞ்ச நாள் தனிமை வேண்டும் மா என்னை கட்டாயப்படுத்தாதீங்க !"என்றால் வேறு எதுவும் சொல்லாமல்..
"திகழி நீ இங்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறதும்மா..இனியும் பிரிந்து இருப்பது நியாமே இல்லை..அவன் உயிரே நீ தான் மா..அதிக பாசம், அதிக நம்பிக்கை இது எல்லாமே என்றுமே நல்லதில்லை..கண்டிப்பா அவன் செய்தது சரின்னு நான் சொல்லலே..ஆனால் அவன் அதை தப்புன்னு உணர்ந்த பின் அவனை மன்னிக்கலாம் தானே.."என்றவரிடம்..
"ம்மா எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் .."
"திகழி நீ புத்திசாலிப் பெண்! உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை..தப்பு செய்தவங்க அதை உணர்ந்து வரும் போது மன்னிப்பது தானே மனிதத்தன்மை..இத்தனைக்கும் காரணம் நான் தான் ..அப்போ நீ எனக்குத் தான் முதல் தண்டனை கொடுக்கனும்.." என்று வருந்தியவரை..
"மணியம்மா..!" என்று அதிர்ச்சியாக அழைத்தாள்.
அவரோ" "மிகன் மாதிரி ஒரு பையன் என் வயித்துலே பிறக்கலையேன்னு நான் வருந்ததாத நாள் இல்லை..பெற்றால் தான் பிள்ளையா? அவனும் என் பிள்ளைதான்! என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்! உங்கிட்ட கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறேன் . நான் பெறாத என் பிள்ளையின் வாழ்க்கை இப்போது உன் கையில் தான் இருக்குமா..!"என்று கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டவரின் கைகளை பதறிப் போய் பற்றியவள்..
"மணியம்மா என்ன காரியம் செய்யறீங்க.. இப்பிடி எல்லாம் செய்து என்னை சங்கடப்படுத்தாதீங்க.." என்றாள் கலக்கத்துடன்..
"எனக்கு வேறு வழி தெரியவில்லை திகழி..தயவுசெய்து என் மகனோடு சேர்ந்து வாழும்மா நீங்க சந்தோஷமா வாழ்ந்தால் நான் நிம்மதியாக இருக்க முடியும்..இல்லை என்றால் என் மனசாட்சியே என்னை கொன்று விடும்.. சீக்கிரம் ஒரு நல்ல முடிவு எடும்மா!" என்றவர் மகிழினியை அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்..
அவர் சென்ற பின் திகழொளி அப்படியே அமர்ந்து இருந்தாள்..கணவனைப் பிரிந்து அவளும் மகிழ்ச்சியாக இல்லை தான்.
இந்த ஒரு மாதமாக மனதிற்குள் அவளும் அழாத நாளில்லை..ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் அவளை எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுத்தது..குழப்பம், பயம் எல்லாம் அவளை தன்னுள்ளேயே மருக வைத்தது.
தன் தமக்கையின் நிலையை காணமுடியாமல் அமுதன் மிகனிடம் சென்று பேசினான்.."மாமா இப்படியே ஆளுக்கொரு பக்கம் வாழவ கல்யாணம் செய்தீங்க..எப்படியாவது அக்காவை சமாதானப்படுத்திக் கூட்டிட்டு போகமல் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று வருத்ததுடன் கேட்டவனிடம்..
"அமுதா நான் செய்த தப்புக்கு எப்படி உங்கக்காவை சமாதனப்படுத்துவது என்றே தெரியவில்லை..அவள் கோபத்தில் நியாயம் இருக்கு ..அது தான் அவள் கோபம் தீரட்டும் என்று அமைதியாக இருக்கேன்.."என்றவனிடம்..
"உங்கள் நிலையை புரிய வைத்து ! எப்படியோ சமாதானப்படுத்தினால் தானே கோபம் தீரும் ! இப்படி தள்ளி நின்றால் எப்படி தீரும்..?"
"அமுதா நமக்கு புடிச்சவங்க நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் நாம விலகி இருப்பது தப்பில்லை..அவ மனசு மாறும் வரை நான் காத்திருப்பேன்.."என்றான்.
"நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு சந்தோஷமாவ இருக்கீங்க.."
"இல்லை..தான்.. ஆனால் என் அன்பை எப்படி உங்க அக்காக்கு நிரூபிப்பதுன்னே தெரியலே..அவளோட ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது..என் மனசாட்சி என்னை கொல்லுது அமுதா.."
"மாமா உங்க தப்பை நீங்க எப்ப உணர்ந்தீங்களோ அப்பவே நீங்க மன்னிக்கப்பட வேண்டிய ஆள்..அக்கா உங்களை ஏத்துக்கனும்.நான் அக்கா கிட்ட பேசறேன் மாமா.."
"வேண்டாம் அமுதா திகழியை கட்டாயப்படுத்த வேண்டாம்.அவ என்னை மனதார உணர்ந்து மன்னிக்கனும்.அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்.."என்று அமுதனிடம் கூறினான்.
அமுதனோ, இரண்டு பேரையும் என்ன செய்வது? எப்படி சேர்த்து வைப்பதென்றே புரியாமல் தவித்தான்.இருவருமே ஒருவர் மீது ஒருவர் வைத்த அளவு மீறிய அன்பு தான் இதற்கு காரணம் ..அளவு மீறிய அன்பு கூட பிரச்சினை தான் போல என்று நினைத்தான்.
அமுதன் வந்து பேசி சென்ற பின் அழகாக வாழ வேண்டிய தன் வாழ்க்கையை ! தானே கெடுத்துக் கொண்டோமே? என்று நினைத்து நினைத்து.. மிகன் குற்றயுணர்வில் நொந்து போனான்.
தினமும் மனைவியை அலுவலகத்தில் பார்த்தும் யாரோ போல் நடக்க வேண்டி இருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. இப்படியே சென்றால் தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று அஞ்சினான்.இதற்கு ஏதோ ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று நினைத்தவன் இத்தனை நாள் அவளைக் கஷ்டடுத்தியது போதும் ! இனியாவது அவள் நிம்மதியாக இருக்கட்டும் என்று எண்ணினான்.
இப்படி தள்ளி நின்று அவளை கண்டு மனம் துடிப்பதை விட அவள் கண்ணிலேயே படாமல் எங்காவது போய் விடலாம்..அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று யோசித்தவனுக்கு அதற்கான வாய்ப்பும் வந்தது.
மிகனுக்கு மீண்டும் புனே
செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.சரியாக தன் பிரச்சினைக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்.
தன் தந்தையிடம் சென்று "நான் மீண்டும் புனேவே செல்கிறேன் ப்பா.." என்றவனை பார்த்து உலகமாறன் செய்வதறியாது கலங்கி போனார்..
மகனின் மனக்கவலையே இப்படி ஒரு முடிவு எடுக்க தூண்டி உள்ளது! என்பதை புரிந்து கலக்கியவர், ஒரு முடிவுடன் மருமகளைக் காணச் சென்றார்..
திகழியோ, மாமனாரைக் கண்டதும் சிறிது அதிர்ந்தாளும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இன் முகமாகவே வரவேற்றாள்.
உலகமாறனோ, சுற்றி வளைத்து பேசாமல் மகன் எடுத்த முடிவை போட்டு உடைத்தார்.
திகழியோ, கணவனின் முடிவைக் கேட்டு சிலையாக அமர்ந்திருந்தாள்.அவள் இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை! அவளுக்கே இது புது செய்தி!மிகன் அலுவலகத்தில் இதைப்பற்றி எல்லாம் எதையும் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை..
மாமனாருக்கோ விஷயம் மருமகளுக்கும் தெரியவில்லை என்று அவள் அதிர்ந்த முகத்தை கண்டே தெரிந்து கொண்டவர்.."திகழி நான் உங்கிட்ட என் மகனுக்காக தான் வந்து இருக்கேன் மா.. இத்தனை நாள் நீங்களே உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வீர்கள் என்று எண்ணினேன்..ஆனால், நான் தலையீடாமல் அது நடக்காது போல்.."என்றவர் ஒரு நெடிய பெருமூச்சுடன் பேசத் தொடங்கினார்.
"அம்மா என் மகன் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. அவன் செய்தது தப்புதான்.அதற்கான தண்டனையை உன்னை பிரிந்த இந்த ஒன்றரை மாதத்தில் நல்லாவே அனுபவித்து விட்டான்.இனியும் அவனை நீ விட்டு பிரிந்து இருந்தால் நான் என் பையனை முழுதாக இழுந்து விடுவேன் .."என்று குரல் தழுதழுக்க சொன்னவர்..
"நான் வாழ்வதே அவனுக்காகத் தான்.நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்வதை இனி பார்ப்பேனா? என்று எனக்கு பயம் வந்து விட்டது.உங்கிட்ட கெஞ்சிக் கேட்கிறேன் நீ தான் அவன் உயிர் ! நீ தான் என் பையனை எனக்கு திருப்பி தரனும்..உனக்கு என்ன கோவம் இருந்தாலும் நம் வீட்டுக்கு வந்துடுமா !அங்கே வந்து அவன் மீது நீ காட்டு..இல்லை என்றால் அவன் ஊரைவிட்டே போய்விடுவான்.."என்றவரை மிகுந்த அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
மிகன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று கொஞ்சம் கூட அவள் எதிர்பார்க்கவில்லை.
உலகமாறனோ, "எனக்காக நம் வீட்டிற்கு வாம்மா! தப்பு செய்தவர்களை மன்னித்து ஏற்பது தான் மனிதாபிமானம் ..இப்படி பிரிந்து இருந்தால் இருவருக்குள் மேலும் மேலும் விரிசல் தான் பெரிசாகும் .."என்று கலங்கிய படி கூறிச் சென்றார்.
திகழொளியோ, மாமனார் சொல்லி சென்ற செய்தியை நினைத்து முடிவெடுக்க முடியாமல் தவித்தாள்..
தொடரும்..
அடுத்த அத்தியாயம் முடிந்தவரை விரைவில் போடுகிறேன்..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்