Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update மயிலரசி

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
என் இனிய வாசகர்களுக்கு! தர்ஷினிசிம்பாவின் அன்பு வணக்கங்கள்!!
இது நான் எழுதும் பதினேழாவது நாவல்.
"மயிலரசி"
படிக்க செல்லும் இடத்தில் சிறு வயதில் இருந்து அன்பிற்கு ஏங்கும் பெண்ணவளின் மனதில் அவனே அறியாமல் இடம் பிடிக்கும் நாயகன். அவனோடு சேர்ந்து வாழ கனவு காணும் நாயகி. நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க போகின்றது என்பது போல் இவர்களின் வாழ்க்கை வெவ்வேறு திசையில் சென்று தடம் புரள்கிறது. இவ்விருவரின் வாழ்க்கையில் வரும் இடர்களை எதிர்கொண்டு இறுதியில் சேர்வார்களா என்பதே இக்கதை. படிக்கும் பொழுது பெரும்பாலும் நீங்கள் எதிர்பாரா திருப்பங்களுடன் ஒரு இனிய கதையாக பயணிக்கும்படி முடிந்த அளவு எழுதியிருக்கிறேன்.
நான் எழுத உறுதுணையாக இருக்கும் அனைத்து சகோதர சகோதிரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும்...
என்றும் அன்புடன்,
தர்ஷினிசிம்பா (மழைநிலா)
 
மயிலரசி 1:





"அப்பா எழுந்துட்டீங்களா உங்களுக்கு காபி போட்டு பிளாஸ்க்ல வச்சிருக்கேன் பிரஷ் பண்ணிட்டு குடிங்க. இட்லி ஹாட் பேக்ல வச்சிருக்கேன். சாம்பார், சட்னி சூடா இருக்கு நேரத்துக்கு சாப்பிட்டு டேப்லட் போடுங்க. என்னாச்சு உடம்பு ஏதும் சரி இல்லையா காலையில 5:30-க்கு எல்லாம் எழுந்து வாக்கிங் போயிடுவீங்க.. இன்னைக்கு என்னவோ இவ்வளவு லேட்டா எழுந்து வரீங்க?" என்று சந்தேகமாய் கேட்டாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா நேத்து நைட்டு என்னவோ தூக்கமே வரல அதனால கொஞ்சம் லேட்டா தூங்கினேன். அதான் காலைல எழுந்துக்க முடியல. சரி வீட்ல தானே இருக்க போறோம்னு கொஞ்சம் பொறுமையா எழுந்து வரேன் அவ்வளவு தான். பாப்பா எழுந்துட்டாளா?" என்றார் கணேசன்.

"காலைல எழுந்து ஒரு ஆட்டம் போட்டுட்டு திரும்பி தூங்கிட்டா. எப்படியும் லேட்டா தான் எழுந்துப்பா. நீங்க நேரத்துக்கு சாப்பிடுங்க. எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்." என்று ஹாண்ட்பேகை எடுத்து கொண்டு வெளியேறவும், "நீ சாப்பிடலையாடா?" என்று வாசல் வரை வந்து கேட்டதும் அவரின் அன்பில் நெகிழ்ந்தவள், "இல்லப்பா இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும். ஒரு மீட்டிங் இருக்கு முடிஞ்சதும் சாப்பிடுறேன். எடுத்துக்கிட்டேன்." என்று வேகமாய் வெளியேறினாள்.

அந்த தெருவை தாண்டி அடுத்த தெருவில் நடக்க, எதிரில் இருந்த டீ கடையில் வழக்கம் போல் பல பார்வைகள் அவளின் மேல் படிந்தது.

"பார்ரா இவ தான்டா நான் சொன்னது. எப்படி தங்கச் சிலை மாதிரி இருக்கா பார்த்தியாடா?" என்று கிசுகிசுக்க, "டேய் என்னடா சொல்ற? ஒரு குழந்தை இருக்குன்னு சொன்ன, பார்த்தா அப்டி தெரியவே இல்ல. செம ஸ்ட்ரக்ட்சர் டா. பார்க்கும் போதே ஆசையா இருக்குடா." என்ற உரையாடல் அவள் காதில் கேட்டாலும் முகத்தில் எந்த வித உணர்வையும் வெளி காட்டாமல் வேகமாய் சாலையில் இறங்கி நடக்கவும் அங்கேயும் பார்வைகள் பல தொடர்ந்தன. அவளுக்கு இதெல்லாம் பழகி விட்டது. உணர்வுகள் மரத்து போய் விட்டது.

"இந்த பொண்ணு தான் அது. புருஷன் செத்துட்டான். ஆனா அம்மா வீட்டுக்கு போகலை. அம்மா வீட்டோட உறவை முறிச்சுக்கிட்டு மொத்தமா வந்துட்டா. இப்போ கூட வீட்ல வயசான ஆளுக்கூட தனியா தான் இருக்கா. அப்பப்போ ஒரு பையன் வருவான் ரெண்டு நாள் தங்கிட்டு போவான். இதெல்லாம் நம்ம இருக்க ஏரியால இருக்க தகுதியில்லாத ஜென்மங்கள். என்ன பண்றது அவங்களோட சொந்த வீடு அது. ஒரு தடவை இங்க எல்லாரும் போய் இருக்க கூடாதுன்னு சத்தம் போட்டப்ப போலீஸ் கம்பளைண்ட் கொடுத்துட்டா இவ. பெரிய பத்தினின்னு நினைப்பு. ச்சே இது மூஞ்சுல முழிக்கணும்னு நமக்கு தலையெழுத்து. ராசி கெட்டவ." என்று காதில் படும்படியே பேச எதையும் வெளிக்காட்டாமல் பேருந்து நிலையத்தில் அமைதியாய் நின்றாள்.

"இதுல வேற அந்த குழந்தை அந்த வீட்ல இருக்க பெரிய மனஷனுக்கும் இவளுக்கும் பிறந்ததன்னு தெரிஞ்சு மனசு ஒடஞ்சு தான் இவ புருஷன் குடிச்சிட்டு வண்டி ஒட்டி ஆக்சிடென்ட்ல செத்துட்டான்னு பேசிக்கிறாங்க. இவ்ளோ பேசுறோமே உரைக்குதா பார்த்தியா? இந்நேரம் மானம் ரோசம் இருக்கிற பொண்ணா இருந்தா நாண்டுக்கிட்டு செத்துருப்பா. இந்த மாதிரி ஜென்மங்கள் எல்லாம் எதுக்கும் திருந்தாதுங்க." என்றாள் இன்னொரு பெண்.

அவள் செல்ல வேண்டிய பேருந்து வரவும் அமைதியாய் ஏறியவள் பின்னே செல்ல, அவளை சிநேகமாய் பார்த்து சிரித்த நடத்துனர் ரங்கன், "என்னம்மா இன்னைக்கு சீக்கிரமா கிளம்புற?" என்றார்.

"ஆமா ண்ணா. இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு சீக்கிரம் வர சொல்லிருக்காங்க." என்றவள் அவருக்கு முன் இருந்த இடம் காலியாகவும் அமர்ந்து கொண்டாள்.

"சாப்டியா மா." என்றார்.

"இன்னும் இல்லைண்ணா. இனி தான் எடுத்துட்டு வந்துட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா? வீட்ல அண்ணி எப்படி இருக்காங்க." என்றாள் லேசான புன்னகையோடு.

"நல்லா இருக்காம்மா உன்னை தான் வீட்டுக்கு ஒரு நாள் கூட்டிட்டு வர சொல்லிட்டே இருக்கா. வா மா ஒரு நாள்." என்றார்.

"சரிண்ணா சீக்கிரமே ஒரு நாள் வரேன்." என்றவள் டிபன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

"இந்த ஒருவேளை சாப்பாட்டுக்காக தானே இந்த ஓட்டம் ஓடுற... அப்டி இருந்தும் அரக்க பறக்க திங்குற பாரு. வீட்லயே நிம்மதியா ரெண்டு வாய் சாப்பிட்டு வரலாம் இல்ல.." என்று வருந்தினார் அவள் சாப்பிடும் வேகம் பார்த்து.

"ஆமாண்ணா. உள்ள போய்ட்டா தண்ணி குடிக்க கூட நேரம் இருக்காது. அதான் இப்போவே சாப்பிடுறேன்." என்றவள் சாப்பிட்டு முடித்து தண்ணீரை அருந்தி முடிக்கவும் அவள் இறங்கும் இடம் வரவும் சரியாக இருந்தது.

"வரேண்ணா." என்று இறங்கி மீண்டும் வேகமாய் நடந்தாலும் மனம் நேற்று வேலை இடத்தில் பேசிய பேச்சுக்களே யோசித்தது.

"எல்லா ஸ்டாப்சையும் நாளைக்கு காலைல சீக்கிரம் வர சொல்லிருக்காங்க. என்னன்னு தெரியலை ஏதோ மீட்டிங் இருக்காம்." என்றனர்.

‘நமக்கு தெரியாம அப்படி என்ன மீட்டிங்?’ என்று யோசித்தவள் நடந்து கொண்டே தன் அலைபேசியை எடுத்து ஏதோ பார்க்க தொடங்கினாள்.

வேகமாய் மருத்துவமனை உள்ளே நுழைந்தவள் உடை மாற்றும் அறையில் நுழைந்து பணி உடையை மாற்றி கொண்டு தான் பணிபுரியும் அறைக்குள் நுழைந்தாள்.

இவ்வளவு நேரம் இருந்த மன பாரம், கவலை, இறுக்கம் எல்லாம் ஒரு நொடியில் கரைந்து போகும் அவளுக்கு.

"குட் மார்னிங் அபிம்மா" என்ற கோரசான குரலில் இதழ் அளவுக்கு மீறி விரிந்தது.

"குட் மார்னிங் பட்டூஸ். எல்லோரும் நல்லா தூங்கினீங்களா? பிரஷ் பண்ணீங்களா?" என்று கேட்டு கொண்டே முதல் குழந்தையிடம் சென்றாள்.

"அபி நான் நல்லா தூங்கினேன். அப்புறம் பிரஷ் கூட பண்ணிட்டேன். யூ க்நொ ஐம் ஆ குட் பாய்." என்றான் ஐந்து வயது சிறுவன் சந்தோஷ்.

"அப்டியா சந்து. வெரி குட் எனக்கு தான் தெரியுமே என் பேபி ரொம்ப சமத்து. ஓகே இப்போ அம்மா கொடுக்கிற சாப்பாட்டை அடம் பண்ணாம சாப்பிடணும். சாப்பிட்டா எல்லோருக்கும் பிடிச்ச கதை சொல்லுவேன்." என்றாள் விழிகள் சுருக்கி பல வித அபிநயம் காட்டியபடி.

"எனக்கு நீ பாடணும்." என்றது தூரத்தில் இருந்த தேனு குட்டி.

"அதுக்கென்ன பாடிட்டா போச்சு. இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் திரும்பி வரதுக்குள்ள எல்லோரும் சமத்தா சாப்பிட்டிருக்கணும். அப்போ தான் கதை, பாட்டு எல்லாம் ஓகேவா.." என்றாள் அபி என்கிற அன்பிற்கரசி.

"ஓகே" என்றனர் குழந்தைகள்.

"பார்த்துக்கோங்க மீட்டிங் முடிஞ்சதும் வரேன்." என்று தனக்கு கீழ் பணி புரியும் மேரியிடம் கூறிவிட்டு வெளியேறியவள் கான்பிரன்ஸ் ரூமிற்குள் நுழைந்தாள்.

நாற்பது பேர் அமர கூடிய அறை அது இருபத்தி ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அவளும் சென்று முன் வரிசையில் கடைசி நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

தங்களுக்குள் எல்லோரும் பேசி கொண்டாலும் இவளுடன் யாரும் பேச வில்லை இவளும் அதை கண்டு கொள்ளாதவள் தங்கள் முன் இருந்த ஆங்கில தினசரி பத்திரிகையை எடுத்து புரட்டத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் டீன் மற்றும் டாக்டர்கள் வர மீட்டிங் ஆரம்பம் ஆனது.

மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் சிகிச்சைகள் பற்றிய உரைகளும் கலந்துரையாடல்களும் நடந்து கொண்டிருந்தது.

திடிரென்று வேகமாய் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த தாதியின் விழிகள் தேடி அலைந்து அபியை கண்டதும் சீரான மூச்சு விட, "அபி சிஸ்டர், பேபி நேத்ரா இன்னைக்கு வந்துருக்காங்க. இன்னைக்கு அவங்க கண்டிஷன் மோசமா இருக்கு. உங்களை கேட்டு தான் அடம் பிடிக்கிறாங்க. எமெர்ஜெனசி நீங்க வந்தா தான் அவங்களுக்கு ட்ரீட்மென்ட் தர முடியும்னு டாக்டர் உங்களை உடனே கூட்டிட்டு வர சொன்னாங்க." என்றதும் பரபரப்பாய் எழுந்தவளின் விழிகள் ஒரு நொடிக்கும் குறைவாய் டீனின் விழிகளை கண்டு பின் வெளியேறினாள்.

பெருமூச்சொன்றை வெளியிட்ட டீன் சத்தியமூர்த்தி பேச்சை தொடர சிறிது நேரத்தில் மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேறினார்கள்.

யாரையும் கவனம் கொள்ளாமல் வேகமாய் ஓடியவள் எதிரில் வேகமாய் வந்தவனை கவனியாமல் இடித்து விழ பார்த்தும் நிற்காமல், "சாரி சார்." என்று ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நேத்ராவின் முன் மூச்சு வாங்க நின்றாள்.

அவள் எதிர் பாராதது அவள் இடித்தவனும் அவளை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை தான்.

"நீத்து குட்டி. என்னாச்சு எதுக்கு என் பேபி அழறாங்க?" என்று கேட்ட குரலில் இவ்வளவு நேரம் தொண்டை கிழிய கத்தி அழுத அழுகை மாயமாய் மறைந்து போனது.

"அபி பேபி" என்று அவளை தாவி அணைத்துக் கொண்டது அழகாய்.

இங்கே நடந்த கூத்தை பின்னால் வந்தவன் கண்டு திகைத்து நின்று விட்டான்.

அவள் தந்தை இல்லாத நேரங்களில் தன் ஒருவனை தவிர யாருக்குமே அடங்காதவள் இன்று யாரோ ஒரு தாதியிடம் உருகி நிற்பதில் வந்த அதிர்ச்சி அது.

"என்னாச்சு பேபிக்கு?" என்றதும் உதட்டை பிதுக்கியது, "அய்ச்சுக்கீம் சாப்தேன். அதுக்கு ஊச்சி போதடாங்க..." என்றது.

"அச்சோ என் நீத்து செல்லத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு பீவர் வந்துட்டா. அதான் ஊசி போடறாங்களா?" என்றதும், இடது கரத்தால் முகத்தை துடைத்துக்கொண்டே தலையாட்டியது.

"சரி போன முறை வரும் போதே என்ன சொன்னேன். ஐஸ் சாப்பிட கூடாது. பேபிக்கு சேராது சொன்னேன்ல ஏன் சாப்டிங்க?" என்றாள் பொய் கோபமாய்.

"ச்சாரி..." என்றது மழலை.

"அச்சோ பேபி சாரி சொல்ல வேண்டாம். ஆனா ஊசி போட்டா தான் சரியாகும் என்ன பண்ணலாம்." என்று குழந்தையை தூக்கி கொண்டு மறு கையால் ஊசியை மறைமுகமாய் வாங்கினாள்.

"ஊசி வேணாம் வலிக்கும்." என்று அழ தொடங்க, "உனக்கு ஒரு மேஜிக் தெரியுமா பேபி... அபி போட்டா ஊசி வலிக்காது. சின்னதா ஒரே ஒரு செகண்ட் மட்டும் தான் கொசு கடிக்கும் அவ்ளோ தான். அபி போடவா?" என்றதும், "அபி பேபி போட்டா வலிக்காதா?" என்று விழிகள் விரித்து கேட்டது.

"ஆமா இப்போ என்ன பண்ணலாம் அபி போடவா இல்ல மேரி ஆன்ட்டிய போட சொல்லவா?" என்று கேட்டாள்.

"அபி போடு" என்றதும் அங்கிருந்த மெத்தையில் அமர வைத்து, "நான் ஊசி போடறேன் பேபிக்கு என்ன வேணும்." என்றதும், "அபி வேணும்." என்றதும் ஒரு நொடி உள்ளுக்குள் அதிர்ந்தவள், "அதான் அபி இங்க இருக்கேனே... வேற என்ன வேணும்?" என்று கேட்டு கொண்டே குழந்தை யோசிக்கும் தருணம் மெதுவாய் ஊசியை போட்டுவிட்டு தேய்த்து விட்டாள், "பேபிக்கு அபி எப்போவும் கூட வேணும் ஆனா இப்போ அபி பாடணும்." என்றது.

"அபி எப்பவும் உன் கூட இருக்க முடியாது தங்கம். ஆனா பேபிக்கு எப்போவெல்லாம் உடம்புக்கு முடியலையோ அப்போவெல்லாம் இங்க வந்தா அபி உன்கூடவே இருப்பேன் சரியா? பாடணுமா இப்போ எப்படி பாடறது? டாக்டர் வந்தா திட்டுவாங்களே?" என்றாள்.

"ஹுஹும் நீ பாடினா தான் நான் ஊசி போடுவேன்." என்றதும் சிரித்தாள்.

"எல்லோருக்கும் டிஸ்டர்பென்ஸ்சா இருக்கும் குட்டி. அபி இன்னொரு நாள் பாடவா?" என்றதும் அந்த அறையில் இருந்த குழந்தைகள் அனைத்தும், "அபி பாட்டு வேணும் வேணும்..." என்றதும், "ஷு..." என்று இதழ் மீது விரல் வைத்தவள், "சத்தம் போட கூடாது. அப்புறம் அபினால தான் நீங்க எல்லோரும் சத்தம் போடறீங்கன்னு என்னை வர வேணாம்னு சொல்லிடுவாங்க." என்றதும் தலையை தொங்க போட்டு அமைதியாகின.
 
மயிலரசி 2:


அவள் என்ன கூற போகிறாள் என்ற ஆர்வத்தில் அனைத்து குழந்தைகளும் அவளையே பார்க்க,

"நீத்து குட்டி சமத்து ஊசி போட்டுக்கிட்டா அதனால ஒரு பாட்டு பாடலாம்..."

"ஹை ஜாலி" என்றதும் பொய்யாய் முறைக்க, அனைத்து மழலைகளும் வாய் மேல் விரல் வைத்து கொண்டன, பார்ப்பதற்கு விழி அசைவில் அனைத்து மழலைகளையும் ஆட்டி வைக்கும் தேவதையாய் தெரிந்தாள் அவள்.

"குழந்தை என மீண்டும்
மாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே!
சிறந்த சில நொடிகள்
வாழ்ந்து விட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே!

மலர்களே மலர்களே
மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவுமே
இன்று இல்லை ஓய்வெடுங்கள்..."

என்று பாடியபடி மயில் போல் உடல் வளைத்து ரசித்து ஆட மூச்சு விட மறந்து ரசித்தன குழந்தைகள்.

"போதுமா அவ்ளோ தான்..." என்றதும், "நோ நோ இன்னொரு பாட்டு..." என்று கூச்சலிட, "ஷ்..." என்றவள்,

***
"நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

தென்றல் போகின்றது
சோலை சிரிக்கின்றது
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும்
உன்னை தீண்டும்…

காற்று வீசும் வெய்யில்
காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே…
ஆஆ.. வானும் மண்ணும்
நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லையே
என்றென்றும் வானில்… (நிலா காய்கிறது…)

ஆஅ..ஆஆ…
க க ம நி நி த சா நி த ப ம
க க ம நி நி த சா நி த ப ம

அதோ போகின்றது
ஆசை மேகம்
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்

இதோ கேட்கின்றது
குயிலின் பாடல்
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களை தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உந்தன் தேவையை கேளுங்கள் (நிலா காய்கிறது…)

என்று அபிநயம் பிடித்து ஆடி பாட குழந்தைகள் மட்டும் அல்ல பெற்றோரும் அங்கிருந்த அனைவருமே மெய் மறந்து ரசித்து நின்றனர்.

ஆடி முடித்து திரும்பியவளின் பார்வையில் வாசலில் கரங்களை கட்டி கொண்டு தன்னையே அழுத்தமாய் பார்க்கும் ஆடவனை கண்டதும் அதிர்ந்து நின்று விட்டாள்.

அனைவரும் கை தட்ட நீத்து, "அபி பேபி" என்று அழைத்ததும், "எஸ் நீத்து மா. ஹாப்பியா நீ கேட்டா மாதிரி பாட்டு பாடிட்டேன். இனி ஐஸ்க்ரீம் சாப்பிடும் போது உங்க அப்பா, அம்மா சொல்றபடி கொஞ்சமா சாப்பிடணும் சரியா செல்லம்." என்றாள்.

"அப்பா சரி பேபி, அம்மா யாரு?" என்றதும் அதிர்ந்து அவள் அருகில் இருக்கும் வயதான பெண்மணியை காண, "அவங்க அம்மா இல்ல… அதான் அப்படி கேட்கிறா." என்றார் மெதுவாய்.

"ஓஹ் சாரி... சரி பேபி அப்போ நீத்து குட்டி இன்னும் குட் கேர்ளா இருந்து டேடி சொல்படி கேட்கணும்." என்று நீத்துவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

வாயிலில் நின்றவனை கண்டதும், "மாமு" என்று கூவி ஓடியது குழந்தை.

நீத்துவின் மாமன் அவன் என்று அறிந்ததும் லேசாய் புன்னகைத்தவள், நீத்துவின் மாமு என்ற அழைப்பில் நீண்ட நாள் தொலைந்து மறைந்து போயிருந்த பொக்கிஷம் நினைவு வந்தது போல் மனதில் ஏதோ ஒரு உணர்வு தாக்க, மறுநொடி தன்னை நிலைப்படுத்தி கொண்டு, "ஓகே எல்லோரும் சாப்டாச்சு டேப்லெட் போட்டாச்சு இப்போ கொஞ்ச நேரம் அமைதியா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். படுத்துக்கோங்க லடூஸ்." என்று ஒவ்வொரு குழந்தையிடமும் சென்று அணைத்து முத்தமிட்டு படுக்க வைத்தாள்.

"அபி" என்று பதட்டமாய் தன் அருகில் வந்து நிற்கும் மேரியை புருவம் நெரிய பார்த்தவள், "என்னாச்சு மேரி?" என்றாள்.

"உன் போன் எங்க?" என்றதும், "அது பேக்லையே இருக்கு மேரி எடுக்கலை. ஏன் என்னாச்சு?" என்றாள் லேசான பதட்டத்துடன்.

"அது உங்க பக்கத்து வீட்லர்ந்து போன் பண்ணாங்க, உங்க அப்பா திடிர்னு மயங்கி விழுந்துட்டாராம். உங்க வீட்டு பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க." என்றதும் விழியில் ஒரு துளி நீர் எட்டி பார்க்க சட்டென துடைத்தவள், "சரி மேரி நான் சொல்லிட்டு கிளம்புறேன் நீ பார்த்துக்கோ." என்று வேகமாய் கிளம்பியவள் வாசலில் இருந்த நீத்துவை பார்த்ததும், "பேபி! சமத்தா இருங்க. பாட்டியும் டேடியும் சொல்றத கேட்கணும். அபி இப்போ போகணும் சரியா குட்டி பை." என்று வெளியேறினாள்.

மருத்துவமனை வாசலை தாண்டியதும் அவளின் விழிகள் நீரை கொட்ட தொடங்கின, மனம் வெறுத்து நின்ற பொழுது தோள் கொடுத்த தெய்வம் இன்று உடல்நிலை முடியாது இருக்கிறார் என்றதும் மீண்டும் தனித்து விடுவோமோ என்று ஏனோ ஒரு பயம் கவ்வ தொடங்கியது.

அந்த மருத்துவமனையில் இருந்து தனக்கு தெரிந்த மருத்துவமனைக்கு தோழனின் மூலம் மாற்றியிருந்தாள். வேகமாய் மருத்துவமைக்குள் நுழைந்து விசாரித்து அவரின் அறைக்குள் நுழைந்தவுடன் அங்கே அமர்ந்திருந்தவனை கண்டதும், "நீ இங்க என்ன பண்ற?" என்றாள் அபி அதட்டலாய்.

"அண்ணி அப்பாக்கு உடம்பு முடியலைன்னு சொன்னாங்க அதான் பார்க்க வந்தேன்." என்றான் வேதன் மெதுவாய்.

"ஹ்ம் நான் பார்த்துக்கறேன் அப்பாவை. நீ காலேஜ் கிளம்பு இது பைனல் இயர் கவனத்தை படிப்புல வை. கிளாஸ் கட் அடிக்கக் கூடாது. கேம்பஸ்ல செலக்ட் ஆகணும் உன் பியூட்சர் இதுல தான் இருக்கு புரியுதா?" என்றாள் கண்டிப்புடன்.

"சரி அண்ணி. நான் கிளம்புறேன்." என்று வெளியேற போகவும், "நில்லு சாப்டியா?" என்றாள்.

"இல்ல அண்ணி அது டென்சன்ல சாப்பிடல." என்றதும்,

தன் பையில் இருந்த டிபன் பாக்சை நீட்டி, “முதல்ல உட்கார்ந்து சாப்பிட்டு போ. நேரத்துக்கு சாப்பிடணும்னு எத்தனை முறை சொல்லிருக்கேன். படிக்கணும் தான் அதுக்கு முதல்ல நீ நல்லா இருக்கனும். உன் ஹெல்த்தையும் ஒழுங்கா பார்த்துக்கணும்." என்றாள் கோபமாக.

"சாரி அண்ணி."

"சரி பொறுமையா சாப்பிடு நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்." என்று டாக்டரிடம் பேச வெளியேறினாள்.

"இப்போ அப்பாக்கு எப்படி இருக்கு டாக்டர்." என்றாள் அபி கலக்கமாய்.

"அபி நான் உனக்கு டாக்ட்ரா? அடி வாங்குவ? வீட்டு பக்கம் வா உங்க அத்தைக்கிட்ட சொல்றேன்." என்றார் ராகவன் பொய்யாய் முறைத்து.

"பழைய வாழ்க்கையை மொத்தமா தலை முழுக்கிட்டேன் சார். அதுலர்ந்து எதுவுமே வேண்டாம்னு நினைக்கிறன். அப்படியே நான் பழையபடி பேசினா என்னால உங்களுக்கு தான் ப்ராப்லம். என்னால யாருக்கும் கஷ்டம் வரதை நான் விரும்பல. அதனால இந்த பேச்சை இதோட நிறுத்திட்டு இப்போ எங்க அப்பாவை பத்தி மட்டும் பேசலாம்." என்றாள் முகத்தில் லேசான இறுக்கத்தோடு.

"நீ என்ன சொன்னாலும் என்னால உன் மேல கோபப்பட முடியாதுடா. அது உனக்கே தெரியும். ஹ்ம்ம் யாரும் எதிர்பார்க்காம உன் வாழ்க்கைல என்னென்னமோ நடந்திட்டு. அதனால நாங்க எல்லாம் உனக்கு அன்னியம் ஆகிடுவோமா... உன் மேல கோபமா இருக்கேன்னு ஒருத்தன் இங்க வர மாட்டேன்னு போய் ஆஸ்திரேலியால உட்கார்ந்துட்டு இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். என்ன சொல்றதுன்னு தெரியல அபிம்மா." என்று பெருமூச்சு விட்டார் ராகவன்.

(ராகவன் அபியின் அம்மாவுடைய கல்லூரி சிநேகிதர். அவரின் மகன் ஹரி அபியின் தோழன். அபியின் மீது சிறு கோபம் கொண்டு வெளிநாடு சென்று வேலை புரிகிறான்.)

"சரி அப்போ நான் கிளம்புறேன்." என்று எழுந்தவளை முறைத்தவர், "கோபம் மட்டும் உங்க அம்மா மாதிரி அப்படியே இருக்கு. பேசண்ட்டை பத்தி பேசணும் உட்காரு " என்றவர்,

"அவருக்கு இப்போ வந்துருக்கிறது மைல்ட் ஸ்ட்ரோக். அவர்கிட்ட இதை பத்தி சொல்லிக்க வேண்டாம். இன்னும் டென்ஷன் கூடும். மன அழுத்தம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. ஏதோ ஒரு விஷயம் அவரை நிம்மதியில்லாம செய்திட்டு இருக்கு. இப்படியே விட்டா அவரோட ஹெல்த்கு அது நல்லது இல்ல. சோ, இனி அவரை கவனமா பார்த்துக்கம்மா." என்றார் மருத்துவர்.

"சரி டாக்டர். அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என்றாள்.

"இன்னைக்கு நைட் இங்க இருக்கட்டும் மார்னிங் கூட்டிட்டு போகலாம். உன் குழந்தை எப்படி இருக்கா?" என்று கேட்டார்.

"ஹ்ம் ரொம்ப நல்லா இருக்காங்க." என்று வெளியேறினாள்.

அவளின் துரு துரு இயல்பிலிருந்து முற்றிலும் மாறி இன்று வேறு யாரோ ஒருத்தி போல் மாறி இருக்கும் தன் சிநேகிதியின் மகளை காணும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. தன் தோழியின் மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென இறைவனை வேண்டி கொள்ள மட்டும் தான் முடிந்தது அவரால்.

காதில் இருக்கும் போனில் பேசி கொண்டிருந்தாலும் கவனம் எல்லாம் வேதனை முறைப்பதிலேயே இருந்தது.

"ஹ்ம்..."

"ஹ்ம்... சரி சரி.... நான் பார்த்துக்கிறேன்." என்று வைத்தவள்,

"சாப்பிட்டியா?"

"சாப்பிட்டேன் அண்ணி." என்றவன் மெதுவாய், "அண்ணி நான் கிளம்புறேன்."

"ஒரு நிமிஷம் இரு" என்று தன் கைப்பையில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தாள்.

"வேண்டாம் அண்ணி என்கிட்டே இருக்கு." என்றான்.

"எனக்கு தெரியாம படிக்கிற நேரம் போக, நீ பார்ட் டைம் ஜாப் போறது எனக்கும் தெரியும் வேதா. உடம்பை கெடுத்துக்காத. இப்போ எக்ஸாம் தான் முக்கியம் நல்லா படி. எக்ஸாம் முடிஞ்சதும் வேலைக்கு ட்ரை பண்ணு. இது எக்ஸாம் பீஸ்." என்று மீண்டும் ஒரு ஆயிரம் ருபாய் கொடுத்து, "இது உன் செலவுக்கு. பார்த்து பத்திரமா போய்ட்டு வா. ஏதாவது வேணும்னா தயங்காம என்கிட்டே கேளு." என்றாள் அன்பாய்.

"சரிங்க அண்ணி." என்று புன்னகைத்து வெளியேறினான்.

மெதுவாய் கண் விழித்து பார்க்கும் அப்பாவை பார்த்தவள், "எழுந்துட்டீங்களா? இப்போ பரவால்லையா பா." என்று அருகில் அமர்ந்தாள்.

"இப்போ கொஞ்சம் பரவால்லம்மா. வீட்டுக்கு போகலாமா? இங்க நல்லாவே இல்ல... பாப்பா எங்கம்மா?" என்றார்.

"பாப்பாவை விக்கி வச்சிருக்கான்ப்பா. இன்னைக்கு நைட் இங்க இருந்துட்டு தான் போகணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. சின்ன புள்ள மாதிரி அடம்பிடிக்காம அமைதியா இருங்க. மார்னிங் டாக்டர் சொன்னதும் போய்டலாம்." என்றவள் அவருக்கு கொடுத்த சாப்பாட்டை பிசைந்து ஊட்டி விட்டாள்.
 
மயிலரசி 3

அவருக்கு கண்கள் கலங்கவும், "ஏன் பா பிடிக்கலையா? இது ஹாஸ்பிடல்ல கொடுத்தது. இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க." என்றாள் கவலையாய்.

"அதில்லமா நான் தான் உன்னை பார்த்துக்கணும். ஆனா இங்க நீ என்னை குழந்தை மாதிரி தாங்குற?" என்றார்.

"இதுல என்னப்பா இருக்கு? எனக்கு உடம்பு முடியலைன்னா நீங்க பார்த்துக்கிறது இல்லையா? அது போல தான் இதுவும். நீங்க எதை நினைச்சு கவலை படறீங்க? வேதன் பத்தி கவலையா? ஏன் மனசை போட்டு தேவை இல்லாம யோசிச்சு அழுத்திக்கிறிங்க?" என்றாள் வருத்தமாய்.

"வேற என்னம்மா இருக்க போகுது எல்லாம் உன்னை பத்தி தான். அவன் ஆண்பிள்ளை அவனை நினைச்சு எனக்கு என்ன கவலை... வாழ வேண்டிய வயசுல நீ இப்படி வாழ்க்கையை தொலைச்சுட்டு தனியா நிக்கிறதை பார்க்கும் போது வருத்தமா இருக்கும்மா." என்றார் கணேசன் கண்கள் கலங்க.

"என் வாழ்க்கைக்கு என்னப்பா? எனக்கு தான் நீங்களும் பாப்பாவும் இருக்கீங்களே... இன்னும் என்ன வேணும்... வேதன் இந்த வருஷத்தோட படிப்பு முடிஞ்சு வேலைக்கு போக போறான். அப்புறம் அவனுக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கணும். அப்புறம் பாப்பாவை நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும். அவளை நல்லபடியா வளர்க்கணும். நல்லா படிக்க வச்சு நல்ல இடத்துல கட்டி கொடுக்கணும்." என்றாள் முகம் முழுவதும் கனவோடு.

"இது எல்லாமே சரி தான் மா. ஆனா இதுல எங்கையும் நீயோ உன் வாழ்க்கையோ வரலையேம்மா." என்றார் ஆதங்கமாய்.

"இனி எனக்குன்னு தனியா ஒரு வாழ்க்கை என்ன இருக்குப்பா. பாப்பா தான் என்னோட முழு வாழ்க்கையே. அவ நல்ல இருந்தாலே எனக்கு போதும்." என்று அழகாய் சிரித்தாள்.

'நான் கண்ணை மூடறதுக்குள்ள உனக்குன்னு ஒரு துணையை அமைச்சு கொடுத்தே தீருவேன் அபிம்மா.' என்று நினைத்து கொண்டவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் புன்னகைத்தார்.

"சிரிக்காதீங்கப்பா. உங்க ஹெல்த் விஷயத்துல உங்களுக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்ல. இனி கொஞ்ச நாளைக்கு என்னோட டையட் தான்." என்றதும் அப்பாவியாய் முகம் சுருக்கியவர், "இந்த அப்பாவை பார்த்தா பாவமா இல்லையாடா?" என்றார்.

"இல்லை." என்றாள் வெடுகென்று முறைத்து.

"ஏன்டா முறைக்கிற?"

"பின்ன உங்களை முறைக்காம கொஞ்சுவாங்களா? இதெல்லாம் நீங்களே இழுத்து போட்டுக்கிறது. எங்களுக்கு உங்களை தவிர யாரு இருக்கா? உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா நான் என்ன பண்ணுவேன் அதை கொஞ்சமாச்சும் யோசிக்கிறீங்களா?" என்றாள் கண்ணீருடன்.

"சரி சரி அழாதடா இனி நான் என்னை நல்லா பார்த்துக்றேன்." என்றவரை வெட்டவா குத்தவா என்று முறைக்கவும் வாயை மூடிக் கொண்டார்.

*****

"பாட்டி!"

"என்னடா செல்லம்?" என்றார் தாமரை. தன் மடியில் அமர்ந்திருக்கும் பேத்தியின் தலையை வாஞ்சையாய் தடவி கொடுத்தபடி.

"ப்பா எப்போ வருவாரு?"

"போன வேலை இன்னும் முடியலையாம்டா, ஒன் வீக்ல வரேன்னு சொல்லிருக்காரு." என்றார் அன்பாய்.

"எனக்கு இப்போவே அப்பா வேணும். எப்போ போனாரு ஏன் இன்னும் வரலை என்னை பாக்க... பாப்பாவை பிடிக்கலையா ப்பாக்கு..." என்று உதடு பிதுக்கி அழ தொடங்கவும்.

"செல்லம் நான் தான் சொன்னேன்ல டாடிக்கு பாப்பாவை ரொம்ப பிடிக்கும். ஆனா உன்ன மாதிரி நிறைய குட்டி பாப்பாவோட அப்பா ல்லாம் நம்ம கம்பெனில வேலை செய்றாங்கல்ல... அங்க ஏதோ பிராப்ளமாம். அப்பா போனா தான் சரியாகும்னு பாப்பாவை பத்திரமா என்கிட்டே பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்கார். அப்பா போகலைன்னா அங்க பேபிஸ்லாம் அவங்க டாடிஸ் கேட்டு அழுவாங்களே... சரி அவங்க அழட்டும் நான் வேணா டாடியை நாளைக்கே வர சொல்லிடறேன்." என்றார் தாமரை வருத்தமாய்.

"நோ நோ பாட்டி. அந்த பேபிஸ்க்கும் என்னை போல் அவங்க டேடி வேணும்ல. என்னை போல தானே அவங்க டேடியை தேடுவாங்க. சோ, டேடி அவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு வரட்டும்." என்றது பெரிய மனுஷி போல.

"எனக்கு தான் தெரியுமே என் செல்லம் சொன்னா கேட்டுப்பா. குட் கேர்ள்." என்று கன்னத்தில் முத்தமிட,

"ஆனா பாட்டி எனக்கு அபிய பார்க்கணும்." என்றது.

தன் மடியில் இருந்த லேப்டாப்பில் இருந்து தலையை நிமிர்த்தி என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு குழம்பினான் மேகவர்மன்.

"நீ இப்படி கேட்பன்னு தெரியுமே.. அதான் பாட்டி அவங்களை வீடியோ எடுத்துட்டு வந்துட்டேன். சரி உனக்கு ஏன் அபியை அவ்ளோ பிடிக்குது?" என்று கேட்டார்.

"அபி சோ ஸ்வீட். அபி தான் என் பேபி." என்றது விழிகள் மின்ன.

"நீ எப்பயாவது தானே அபியை பார்க்கிற அப்புறம் எப்படி உனக்கு அபியை இவ்ளோ பிடிக்குது." என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டார்.

"இங்க வாங்களேன்." என்று மெதுவாய் கூப்பிட்டு அவரின் காதில், “ஏன்னு எனக்கு தெரியாது ஆனா அபியை அவ்ளோ பிடிக்கும். அதான் அபியை அடிக்கடி பார்க்கணும்னா என்ன பண்றதுன்னு யோசிச்சேன்." என்று விழிகளை சிமிட்ட.

இவர்களின் உரையாடலை சுவாரஸ்யமாய் பார்த்து கொண்டிருந்தவனுக்கும் ஆச்சர்யம் எப்படி ஒரு செவிலி குழந்தையின் மனதில் இப்படி இடம் பிடிக்க முடியும்.

"அதனால..." என்றார் அவரும் சிரித்து... பேத்தி செய்யும் குறும்புகளை அறிந்தவர் போல்.

"யாருக்கும் சொல்ல கூடாது.. டேடிக்கு சொல்லவே கூடாது அப்படின்னா தான் சொல்லுவேன்." என்றதும் தன் போனில் அவர்கள் பேசுவதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தான் மேகவர்மன்.

“சரி யாருக்கும் சொல்ல மாட்டேன் நீ எனக்கு மட்டும் சொல்லுடா.” என்றார் அவரும் மெதுவாய்.

"நீங்க தானே எப்போ பாரு ஐஸ்கிரீம் சாப்பிட்டா சளி பிடிக்கும் ஜுரம் வரும்னு சொல்விங்க..." என்றதும்,

"ஆமா? ஐஸ்க்ரீம் சாப்பிட்டா சளி பிடிக்கும் அதான் சொன்னேன். அதுக்கு..." என்றார் ஏதும் புரியாமல்.

"என் அபி டார்லிங்க பார்க்கணும் கேட்டா கூட்டிட்டு போக மாட்டிங்கல்ல, அதனால தான் நேத்து நீங்க தூங்கிட்டு இருக்கும் போது மூணு ஐஸ்கிரீம் பிரிட்ஜ்லர்ந்து உங்களுக்கு தெரியாம எடுத்து சாப்பிட்டேன்." என்று விழிகள் சிமிட்டி அழகாய் சிரித்தது.

"அடிப்பாவி..." என்று அதிர்ந்து வாயில் கரம் வைத்தார்.

மருமகளின் குறும்புத்தனத்தில் ஒரு நொடி அதிர்ந்தாலும் புன்னகையை இதழுக்குள் மறைத்தவன் மேலும் அவர்களின் பேச்சை கவனித்தான்.

"அதுக்காக இப்படியா பாப்பா செய்வ? உனக்கு ரொம்ப உடம்பு முடியலைன்னா என்ன செய்றது? அப்பா என்னை நம்பி தானே உன்னை விட்டுட்டு போயிருக்கார். அப்புறம் என்னை திட்ட மாட்டாரா?" என்றார் வருத்தமாய்.

"சாரி பாட்டி. நான் டாடிகிட்ட சாரி சொல்லிடறேன். இனி இப்படி செய்ய மாட்டேன்." என்று விழிகள் சுருக்கி மன்னிப்பு கேட்டது.

"இனி இது போல செய்ய கூடாது செல்லம். உனக்கு அபியை பார்க்கணும்னா நேர்ல போய் பார்க்கலாம் சரியா?" என்று கேட்டார்.

"சரி பாட்டி" என்றது.

"சரி உனக்கு அபியை பிடிக்குமா? எவ்ளோ பிடிக்கும்?" என்றதும் தனது இரு கரங்களையும் விரித்து காட்டியது.

"இவ்ளோ பிடிக்கும் ஏன்னு தெரியாது. ஆனா அவங்க என்கூடவே இருந்தா நல்லா இருக்கும்ல..." என்றது ஏக்கமாய்.

குழந்தையின் ஏக்க குரலை கேட்டு இருவரும் திட்டுக்கிட, உடனே சுதாரித்து,

"சரி சரி இந்தா இதை பாரு அபி இன்னைக்கு உனக்காக பாடினது இருக்கு." என்று கொடுத்தார்.

"ஐ என் செல்ல பாட்டி." பாட்டியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு போனில் இருந்த வீடியோவை பார்க்க தொடங்கியது.

இங்கே தன் மொபைலில் எடுத்த விடியோவை தன் நண்பனுக்கு அனுப்பியவன் மீண்டும் லேப்டாப்பில் விட்ட வேலையை தொடர்ந்தான்.

சில நிமிடங்களில் அவனுக்கு வீடியோ காலில் அழைப்பு வர புன்னகைத்து எடுத்தவன், "என்னடா நல்லவனே எங்க ரெண்டு பேரையும் இங்க உன் பொண்ணுகிட்ட மாட்டி விட்டுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நீ பாட்டுக்கு அங்க போய் உட்கார்ந்துருக்க... உன் மக பேசினதை கேட்டியா?" என்றான் இதழில் விரிந்த புன்னகையுடன்.

"ஹ்ம் பார்த்தேன் யாருடா அது அபி? பாப்பா இவ்ளோ அட்டாச்டா இருக்கா? இது நல்லதுக்கு இல்லையே..." என்றான் யோசனையாய்.

"அது பாப்பாக்கு ஊசி போட கூட்டிட்டு போற ஹாஸ்பிட்டல் டா. அங்க இருக்க பிடியாட்ரிக் நர்ஸ் தான் அவங்க. எப்படி இவ்ளோ அட்டாச்ட் ஆனான்னு தெரியல." மேகவர்மன் கூறியதும்,

"உஷாரா இரு மேகா. கொஞ்சம் அந்த நர்ஸ் பத்தி விசாரி. நமக்கு எதிரி எங்க இருந்து வருவான்னு நமக்கே தெரியாது. நமக்கு குறி வெக்குறேன்னு பாப்பாவை டார்கெட் பண்ணிட கூடாது." என்றான்.

"ஆல்ரெடி விசாரிக்க சொல்லிட்டேன் டா. அவ அந்த ஹாஸ்பிடல்ல வேலை செய்ற நர்ஸ் தான். நம்ம பாப்பாகிட்ட மட்டும் இல்ல அங்க வர எல்லா குழந்தைங்களுக்கும் அவ ஸ்பெஷல் தான் போல. கல்யாணம் ஆகிடுச்சு. இரண்டரை வயசுல ஒரு குழந்தை இருக்கு. ஹஸ்பண்ட் இறந்துட்டாரு. அதான் இங்க வேலை பார்க்கிறாங்க. இப்போ கூட உன் பொண்ணு அவங்க அவளுக்காக பாடின வீடியோவை தான் பார்த்துட்டு இருக்கா." என்றதும்,

"யாருடா அது? எங்க போனை பாப்பா பார்க்கிற வீடியோ கிட்ட எடுத்துட்டு போ." என்றான் மயில் வீரா ஆர்வமாய்.

போனை அருகே எடுத்து செல்லும் பொழுதே, "சரிடா எனக்கு இம்போர்ட்டண்ட் மீட்டிங்க்கு அழைப்பு வந்துருச்சு. நீ எனக்கு வாட்ஸாப் பண்ணு. நான் நேரம் கிடைக்கும் போது பார்த்துக்கறேன்." என்று துண்டித்தான்.

குழந்தையுடன் சேர்ந்து அப்பாடலை கேட்டவன் முடிந்ததும் தன் அலைபேசிக்கு அந்த விடியோவை அனுப்பிக் கொண்டான்.

*****

"ஏம்மா அப்பாவை இவ்ளோ பாசமா பார்க்கிற?" என்றார் கணேசன் பாவமாய்.

"உங்களுக்குத் தான் சுகர் இருக்கு டீ நிறைய குடிக்க கூடாதுன்னு சொல்லிட்டு தானே போனேன். அதுவும் இல்லாம நீங்க குடிக்க சுகர்பிரீ டீ போட்டு வச்சுட்டு போனா அதை குடிக்காம எனக்கு தெரியாம சுகர் அதிகமா போட்டு டீ குடிச்சுட்டு அந்த கிளாசை கழுவி வைக்கிற அளவுக்கு அறிவாளியாகிட்டிங்க நீங்க இல்ல. இப்படி சொல் பேச்சு கேட்காத உங்களை என்ன பண்ணலாம்?" என்றாள் தன் முன் இருப்பது சிறுபிள்ளை எனும் தொனியில்.

அவரும் தன் குட்டு வெளிப்பட்டதை உணர்ந்து மாட்டி கொண்டோம் என்று எதுவும் பேசாமல் திரு திரு வென முழித்தார்.

"செய்யறது எல்லாம் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி முகத்தை அப்பாவியா வச்சுக்கிறது. எனக்கு வர கோவத்துக்கு உங்களுக்கு இனி டீ யே கிடையாது மீறி தொட்டிங்க அவ்ளோ தான் சொல்லிட்டேன்." என்றாள் கடுப்பாய்.

"போதும் விடும்மா அப்பா பாவம். எனக்கே உடம்பு முடியலை எனக்கு ஆறுதல் சொல்லாம இப்படி திட்றயே உனக்கே இது நல்லா இருக்கா."

“நல்லா இல்ல தான் என்ன பண்றது என்னை நீங்க தான் இப்படி செய்ய வைக்கிறிங்க.” என்று வெளியே சென்றவளின் பார்வை அலைபேசியில் இருக்க எதிரில் வந்தவரின் மீது மோதி விட்டாள்.
 
மயிலரசி 4

"சாரி சாரி சார்." என்று நிமிர்ந்து பார்த்தவுடன் முகம் இறுக்கத்தை தத்து எடுத்து கொண்டது போல் கோபத்தில் ஜொலித்தது.

வெளியே போகாமல் அப்பாவின் அறை வாசலிலேயே வழி விடாமல் தடுத்து நின்றாள். எதிரில் வந்த சத்யமூர்த்தி அவர்களின் அறை நோக்கி வரவும் அழுத்தமான குரலில், "உங்களுக்கு யார் வேணும்...?" என்றாள் அந்நிய தன்மையோடு.

"என்னடா யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுற?" என்றார் சத்யமூர்த்தி கவலையாய்.

"எனக்கு உங்களை யாருன்னு தெரியாது. தெரியாதவங்க கிட்ட இப்படி தானே பேச முடியும்..." என்றாள் முகத்தில் ஏந்த உணர்ச்சியும் காட்டாது. ஆனால் உள்ளத்தில் செந்நீர் வழிந்து கொண்டு தான் இருந்தது.

"நான் உன்னோட அப்பா டா. என்னம்மா யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுற? இன்னும் உன் கோவம் தீரலையா?" என்றார் வருத்தமாய்.

"என்னோட அப்பா உள்ள இருக்கார். நீங்க என்னை வேற யாரோன்னு நினைச்சு பேசிட்டு இருக்கீங்க." என்றாள்.

"இந்த அப்பாவை மன்னிக்க மாட்டியா? சம்மந்திக்கு உடம்பு முடியலைன்னு கேள்விப்பட்டேன் அதான் உடனே பார்க்கலாம்னு வந்தேன்." என்றார் பார்வையை அறை வாசலில் வைத்து.

"எனக்கு தெரிஞ்சு அவருக்கும் உங்களை யாருன்னு தெரியாது. அதுவும் இல்லாம உங்களோட தகுதிக்கு எங்களை மாதிரி லோ க்ளாஸ் பீபிள் பார்த்தா உங்க மனைவி திட்டுவாங்க. ஒவ்வொரு நீமிஷமும் உங்களுக்கு எவ்ளோ வேல்யூ இல்லையா? சோ எங்ககூட இருந்து உங்க நேரத்தை வீணாடிக்காம முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. உங்களுக்காக உங்க குடும்பம் வீட்ல காத்திட்டு இருப்பாங்க." "குடும்பம்" என்பதில் அழுத்தம் கொடுத்து கூற அவரோ உடைந்து விட்டார்.

"யாரும்மா இவ்ளோ நேரம் வெளியே நிக்க வச்சுட்டு பேசிட்டு இருக்க?" என்று உள்ளே இருந்து கணேசன் கேட்கவும், "யாரோ தெரியாதவங்கப்பா வழி கேட்கிறாங்க." என்றதும், இனி மகள் உள்ளே செல்ல விடமாட்டாள் என்று புரிந்து கொண்டவர் மகள் எதிர் பாரா தருணம் வேகமாய் உள்ளே நுழைந்தார்.

சத்தியமூர்த்தியை கண்டதும் வேகமாய் எழுந்து உட்கார போகவும், "அப்பா" என்றாள் அழுத்தமாய் முறைத்து.

"நீங்க ஒன்னும் இங்க டூர் போக வரலை. உடம்பு முடியாம சேர்த்துருக்கு. கொஞ்சம் அந்த நினைப்பு இருக்கட்டும். இப்போ என்ன ப்ரைம் மினிஸ்டரா வந்தாரு? எதுக்கு இவ்ளோ வேகமாய் எழறீங்க?" என்று கோபமாய் கத்தினாள்.

சொந்த தந்தையின் முன் தன்னை உயர்த்தி முக்கியமாகவும் அவரை தாழ்த்தியும் பேசுவது கணேசனுக்கு சங்கடத்தை கொடுத்தது.

கோபம் கொள்வாள் என்று தெரிந்தே, "என்ன தான் இருந்தாலும் அவர் உன்னை பெத்த அப்பா இல்லையா? ஏன்டா இப்படி வெடுக்கு ன்னு பேசுற... வருத்தப்படுவாரு இல்லையா..." என்றதும் அவரை ஏகத்துக்கும் முறைத்தவள், "எனக்கு அப்பான்னா அது நீங்க மட்டும் தான். உங்களுக்கும் என்னை பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நானும் என் பெண்ணும் வெளிய போய்டுறோம். சொந்தம் இருந்தும் அனாதையா இருக்கிறது எனக்கு ஒன்னும் புதுசு இல்ல." என்றவள் விருவிருவென வெளியேறினாள்.

சத்தியமூர்த்தியை சங்கடமாய் பார்த்தவர், "மன்னிச்சுக்கோங்க சம்மந்தி பாப்பா ஏதோ கோவத்துல பேசுறா. நீங்க எதுவும் பெருசா எடுத்துக்காதிங்க வாங்க உட்காருங்க." என்றார் கணேசன்.

"பரவால்ல விடுங்க சம்பந்தி. அவளோட கோவம் நியாயமானது. என் மேல தப்பு இருக்கு என்ன செய்றது? அவ என்னைக்கு தான் என்னை மன்னிப்பாளோ தெரியல. அவ என்னை அப்பான்னு கூப்பிட்டு எவ்ளோ வருஷம் ஆகுது. ஆசையா இருக்கு.. ஆனா அது இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு நல்லா தெரியுது. எல்லாம் நான் செஞ்ச பாவம்." என்று கலங்கினார்.

"ஆரம்பம்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா அதுக்கு முடிவும் இருக்கு சம்பந்தி. எல்லாம் சீக்கிரமே சரியாகும். கடவுள வேண்டிப்போம். வேற என்ன செய்யறது." என்றார் ஆறுதலாய்.

"அதை விடுங்க என்ன ஆச்சு உங்களுக்கு.. உடம்பு சரியில்லைன்னு இப்படி ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்திருக்க அளவுக்கு?" என்றார் சத்தியமூர்த்தி.

"லேசான மயக்கம் தான் அதுக்கே பயந்து அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்து இங்க கூட்டிட்டு வந்து உட்கார வச்சுருக்கா உங்க பொண்ணு." என்று லேசாக புன்னகைத்தார்.

"மயக்கத்துல என்ன லேசான மயக்கம் உடம்ப பாத்துக்கோங்க சம்மந்தி. ஏதாவது வேணும்னா தயங்காம என்கிட்ட கேளுங்க உங்க பொண்ணு மிரட்டுறா அப்படின்னு பயந்துட்டே எதுவும் கேட்காமல் இருக்காதீங்க." என்றார் சத்யமூர்த்தி அன்பாக.

தன் இடத்தில் இன்னொருவரை வைத்து தனக்கு கிடைக்க வேண்டிய அன்பு அவருக்கு கிடைக்கிறதே என்ற பொறாமை இல்லை. தனக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லையே என்று தான் இந்த வருத்தம்.

சரி என்று புன்னகைத்தபடி தலையாட்டினார் கணேசன்.

சத்தியமூர்த்தியின் போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தவர் முகம் இருண்டது.

"என்னாச்சு ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்றார் பதட்டமாக.

"அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க முக்கியமான ஒரு போன் கால் அதான். சரி நான் கிளம்புறேன் நீங்க உடம்ப பாத்துக்கோங்க.. முடிஞ்சா நேரம் கிடைக்கும்போது நான் வந்து பார்க்கிறேன்." என்று கூறிவிட்டு வேகமாய் வெளியேறினார்.

சத்யமூர்த்தி சென்ற சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவள் முடிந்தவரை எதிரில் இருக்கும் தன் அப்பாவை முறைத்து கொண்டிருந்தாள்.

"என்னடா தங்கம் இன்னைக்கு வந்ததுல இருந்து அப்பாவை அடிக்கடி ரொம்ப பாசமா பாத்துக்கிட்டே இருக்கீங்க." என்று கேட்டு சிரித்தார் கணேசன்.

"எனக்கு வர்ற கோபத்துக்கு.. நல்லா உங்க மண்டையிலே நங்கு நங்கு நங்குன்னு நாலு கொட்டு கொட்டனும் போல இருக்கு." என்று அவரிடம் நெருங்கியவள் பின் லேசாய் கண் கலங்க, "உங்களுக்கு என் வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு முழுசா தெரியலப்பா அதனால் தான் அவரை மன்னிக்க சொல்றீங்க. நான் சாகர வரைக்கும் கூட என்னால அவரை மன்னிக்கவே முடியாது." என்றாள்.

"அம்மாடி இருக்கிறது ஒரு ஜென்மம் டா.. நம்ம இப்படியே திரும்பி பெறப்போமா தெரியாது. அதுவும் அவர் தான் உனக்கு அப்பாவா வரப்போறான்னு தெரியாது. அவர் செஞ்ச தப்பு மன்னிச்சு ஏத்துக்கலாம் இல்லடா.." என்றார் பாசமாய்.

"நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன். மன்னிச்சு ஏத்துக்க கூடிய அளவுக்கு அவரு சின்ன தப்பா செய்யலப்பா. சரி விடுங்க அவர பத்தி பேசி நமக்குள்ள இனிமே பிரச்சனை வேணாம். நீங்க டென்ஷனாக கூடாது உடம்பு மொதல்ல நல்லா பாத்துக்கோங்க. திரும்பி எதையாவது யோசிச்சு உடம்பு முடியாம போச்சு... ஹாஸ்பிட்டலுக்கு உள்ளயே ஒரு பெட்ட வாங்கி அங்கே படுக்க வைச்சுருவேன் பார்த்துகோங்க. அப்புறம் உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டேன்." என்று பொய்யாய் மிரட்டினாள்.

"இல்ல இல்ல எனக்கு உடம்பு முடியாம போற மாதிரி நான் பாத்துக்க மாட்டேன். என்னைய முதல்ல எங்கயாவது கூட்டிட்டு போ மா எனக்கு இங்க இருக்க பிடிக்கவே இல்லை."

"சரிப்பா நீங்க சமத்தா இருந்தா நாளைக்கு கண்டிப்பா நம்ம வீட்டுக்கு போயிடலாம் இப்ப எதையும் நினைச்சு மனசு போட்டு குழப்பிக்காம அமைதியா தூங்குங்க." என்று அவரிடம் மாத்திரைகளை நீட்டியவள் அவரை போட வைத்து தூங்கிய பின் விளக்கை அணைத்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விழிகளை மூடிக்கொண்டாள்.

அவளின் மொத்த வாழ்க்கையும் அவள் முன் வந்து மிரட்டி விட்டு சென்றது. அனைத்தையுமே மறந்து இனி நிம்மதியான ஒரு வாழ்க்கையை தன் மகளுடன் மட்டும் வாழ பேராசை கொண்டு கனவு காண்கிறாள். அந்த உலகில் அவள் மகளை தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்ற முடிவுடன் உலா வருகிறாள். நாம் நினைப்பது மட்டும் நடந்து விட்டால் இறைவனின் திருவிளையாடல் என்னவாவது...

****
"பாட்டி ப்ளீஸ்.." விழிகளை சுருக்கி அழகாய் கேட்கும் பேத்தியிடம் இல்லை என்று மறுக்க முடியவில்லை.

"சரி இந்த ஒரு முறை தான். இது மட்டும் உங்கப்பனுக்கு தெரிஞ்சுது அவ்ளோ தான் என்னை இந்த வீட்டை விட்டு துரத்தி விட்டுடுவான்." என்றார் தாமரை பாவமாய்.

"இல்ல பாட்டி நான் கேர்புல்லா பண்ணுவேன் ப்ளீஸ் பாட்டி. டாடிக்கு நானே செய்யணும். இந்த ஒரு முறை மட்டும்." என்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

"உன்னை பார்க்கவும் பாவமா தான் இருக்கு.. ஆனாலும்..." என்று இழுக்கவும் விழிகள் சுருக்கி முறைத்து, "இப்போ மட்டும் நீங்க தரல நான் உங்க பேச்சு கா." என்று இரு கரங்களையும் கட்டி கொண்டு திரும்பி நின்றது.

இவர்களின் அலப்பறையை பார்த்துக் கொண்டு வழக்கம் போல் தன் அலைபேசியில் காணொளியாக எடுத்து கொண்டிருந்தான் மேகவர்மன்.

"பாவமா இருக்கே கொடுக்கலாம்னு பார்த்தேன் ஆனா இத்துனுண்டு இருந்துக்கிட்டு நீ என்னையே முறைக்கிற? அதனால நான் தர மாட்டேன். என் மகனுக்கு சமைக்க போறேன்." என்று பேத்தியிடம் வம்பிழுத்து கொண்டிருந்தார்.

புசுபுசு வென கோபம் கொண்டு மூச்சு வாங்கியபடி தன் பாட்டியை முறைத்தவள், "என் டேடி பாவம். உனக்கு சமைக்கவே தெரியல. அவர் எப்படி சாப்பிடுவார்..." என்றது சின்ன வாண்டு.

"என்னது எனக்கு சமைக்க தெரியலையா? உங்க அப்பனை பெத்தவ நான். அவனுக்கு என் சமையல் பிடிக்காதுன்னு உனக்கு யார் சொன்னது. அதெல்லாம் இல்ல என் பிள்ளைக்கு என் சமையல் தான் பிடிக்கும். உன்னை மாதிரி சுண்டைக்கா செஞ்சதை எல்லாம் சாப்பிட மாட்டான்." என்று மேலும் வெறுப்பேற்றினார்.

"போ பாட்டி நான் உன் பேச்சு டூ. என் டேடி வரட்டும் உன்கிட்ட பேச வேண்டாம்னு சொல்றேன். நீ பேட் பாட்டி. சின்ன பாப்பாகிட்ட சண்டைக்கு வர." என்றது.

அவர்களின் சேட்டையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மேகவர்மன் தன் தோளில் ஒரு கரம் விழவும் யார் என்று திரும்பிப் பார்த்தான். தன் நண்பனை கண்டதும் வா என்று ஆரம்பிக்கும் முன் அவன் வாயை பொத்தியவன் அமைதியா இரு என்று சைகை செய்து தன் தாயையும் மகளையும் பார்க்க தொடங்கினான்.
 

New Threads

Top Bottom