Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu -1

பூஞ்சிட்டு

~~~~~~~~~~~


அத்தியாயம் - 1



சென்னையின் அந்த அதிகாலை பொழுதில் ஆதவன் தன் கரங்களை நீட்டி கடலன்னையை அணைத்துக் கொண்டிருக்க அவளோ தன் மேனியெங்கும் செம்மையை பூசி ஜொலித்துக் கொண்டிருந்தாள். வெட்கம் அலையாய் ததும்பி தத்தளித்துக் கொண்டிருந்தது. கடற்காற்று முகத்தில் மோத தன் உடற்பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தான் நிரஞ்சன். அவன் நனைந்த மேலாடை அவனது கடுமையான உடற்பயிற்சியை பறைசாற்றியது. ஆறடிக்கும் சற்றே அதிகமான உயரம். தமிழனுக்கே உரிய நிறத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருந்தான். அவன் உடலைப் போலவே அவன் முகமும் இறுகிக் கிடந்தது. அவனை கடந்து செல்லும் பெண்கள் ஒரு முறை பெருமூச்சு விட்டு செல்வதை எல்லாம் இவன் கண்டு கொண்டதாய் கூட தெரியவில்லை.



சற்று தள்ளி கடலை ரசித்தபடி மணலில் படுத்திருந்தான் அழகர் பாண்டி. எல்லோருக்கும் பாண்டி. நிரஞ்சனின் நண்பன். கல்லூரி நாட்களில் இருந்து நிரஞ்சனின் குணம் அறிந்து அழகர் பாண்டி அனுசரித்து அவனது இயல்பிலேயே இருப்பதாலேயே இவர்களின் நட்பு தொடர்கிறது.


"டேய் பாண்டி காலைல பீச் வர்றது உடற்பயிற்சி செய்ய இப்படி வந்து படுத்துட்டு இருக்க இல்ல. ஒழுங்கா எழுந்து வந்து செய்.." என்று நிரஞ்சன் அதட்டினான்.


"இங்க பாரு ஏற்கனவே நாற்பது நிமிசம் செஞ்சாச்சு நான் என்ன ஆணழகன் போட்டிக்கா போறேன் இருபத்து நாலு மணி நேரமும் இதையே செய்ய... ஒரு நாளாவது ஏழு மணிவரை தூங்க வுடுறியாடா நீ. எப்ப பாரு அஞ்சு மணிக்கு எழுப்பி கூட்டிட்டு வந்து உசிரை வாங்கறதே பொழப்பா வெச்சிருக்க. நீயே செய்யி எனக்கு ரெஸ்ட் வேணும்.." என்றபடியே திரும்பி படுத்துக்கொள்ள



"ஹாய் ஹேண்ட்சம்.." என்ற குரல் இடையிட்டது. நிரஞ்சன் தன் உடற்பயிற்சியை நிறுத்தாமலே திரும்பி பார்த்தான். அவளே தான்.



அந்த அதிகாலையிலும் அந்த அதீத ஒப்பனையோட ஒயிலாய் அவனருகே நின்றிருந்தாள் ஒருத்தி. ஒரு வாரமாக தினமும் அவனை தொடர்கிறாள். இவளும் ஒரு பெண்ணா என்ற நினைப்புடனே அவளை அலட்சியம் செய்தான் நிரஞ்சன்.


அவளுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. 'தன் பார்வை படாதாவென எத்தனை பேர் தன் பின்னால் சுற்றிவர இவனுக்கென்ன அத்தனை அலட்சியம்..' என கருவியவள்... 'உன்னை என் பக்கம் திருப்பறதென்ன அவ்ளோ கஷ்டமா நீ மட்டும் என் பக்கம் திரும்பு அப்பறமா உன்னை பேசிக்கிறேன்..' என மனதினுள் எண்ணியபடியே


"ஹேய் யு லுக் சோ ஹேண்ட்ஸம் மேன்.." என்றபடியே அவன் மார்பினில் கை வைக்க அந்த குரலில்



'யார்ராது..' என்று திரும்பி பார்த்த பாண்டி 'ஓஓ இவளா என்னைக்கு இவ வாங்க போறாளோ...' என்று நினைத்த

அடுத்த நொடி பளாரென்ற அறையில் அந்த கடற்கரை மணலில் கிடந்தாள் அவள்.



'இந்தா வாங்கிட்டால்ல...' என்று நினைத்தாலும் 'அய்யோ பொது இடத்தில் ஒரு பொண்ணை அடிச்சிட்டானே..' என்று பதைபதைப்புடன் எழுந்து அவர்கள் அருகில் வந்தவன் "டேய் என்னடா நிரஞ்சா... ஒரு பொம்பள புள்ளைய போய்..."


"பொம்பளபுள்ளையா இவளை பார்த்தா பொண்ணு மாதிரியா இருக்கு. ஒரு பெண்ணை அவ அனுமதி இல்லாம தொடறது எவ்ளோ தப்போ அதே போல் ஒரு ஆணோட அனுமதி இல்லாம அவனை தொடுவதும் தப்பு தானே..." என்றான் நிரஞ்சன் கோபத்தோடு.


நிரஞ்சனின் ஓர் அறையில் கீழே விழுந்தவளை அவளோடு வந்த தோழிகள் தூக்கிவிட ஆக்ரோஷத்தோடு "ஏய்... யூ இடியட்.." என்று கத்தியபடியே அவனை நோக்கி வந்தாள்.



"ஏய்.. வேணா வாடி.." என்று அவள் தோழிகள் அவளை பிடித்து இழுக்க அவர்களை அலட்சியமாய் நோக்கியவன்


"கெளம்பலாம்டா.." என்றபடியே பாண்டியோடு அங்கிருந்து கிளம்பினான். அவர்களை திரும்பி பார்த்தபடி பாண்டி நடக்க அப்படி ஒரு விசயமே நடக்கவில்லை போன்றதொரு பாவனையில் அவன் சென்றுகொண்டிருந்தான்.



அவன் பின்னே அவனை அர்ச்சித்து கேட்ட குரல்கள் அத்தனையும் அந்த கடற்கரை காற்றில் கரைந்து போனது.


"உனக்கு ஒரு பாடம் கத்துகுடுக்கல நான் வர்ணிகா இல்லடா.." என்ற ஆக்ரோஷ குரலை அவன் லட்சியம் செய்யவேயில்லை.


'இவன் ஏன் தான் இப்படி இருக்கானோ...' "பிடிக்கலேன்னா அதை தன்மையா சொல்லிருக்கலாம்ல டா.." என்றான் முனகலாய்.


'என்ன... 'என்று அவன் புருவமுயர்த்த



"ஒன்னுல்ல ராசா நீ வா..." என்றபடியே அந்த இடத்தைவிட்டு அகன்றனர். இதுதான் நிரஞ்சன். பெண்களை பார்த்து வழிகின்ற ரகமல்ல‌. ஏன் ரசிக்கின்ற ரகம் கூட இல்லை எனலாம். அவனிடம் பேச முற்படும் பெண்களை அத்தனை அலட்சியமாய் பார்வையாலேயே எட்ட நிறுத்துவான். அவன் பணி நிறுவனத்திலும் கூட அப்படியே. அவன் குணம் தெரிந்தவர்கள் அவனை விட்டு ஒரு படி எட்டியே நிற்பார்கள். அநாவசியமாக எவரோடும் வம்பு செய்பவன் இல்லை நிரஞ்சன். பெண்கள் என்றால் மட்டும் அவனுக்கு ஏனோ எட்டிக்காய். பணியிடத்தில் பெண்களோடு பணிபுரியும் நிலையில் வேலை என்னவோ அதை மட்டும் சொல்லிவிட்டு விலகி விடுவான். மற்றவை எல்லாமே மெயிலில் மட்டுமே.


ஐடி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன். கல்லூரி கேம்பஸ்ஸிலேயே பாண்டியும் நிரஞ்சனும் ஒரே கம்பெனியில் தேர்வாகி நான்கு வருடம் சென்னையில் ஒன்றாகவே பணிபுரிந்தனர். யு எஸ்ஸில் ஐந்து வருடம் இருந்துவிட்டு கடந்த ஆண்டு தான் மீண்டும் சென்னைக்கு வந்திருந்தான் நிரஞ்சன்.


அழகர் பாண்டி நிரஞ்சனின் கல்லூரி நண்பன். அவன் வெளிநாடு சென்ற ஐந்து ஆண்டுகள் தவிர்த்து கல்லூரி முதல் அவனோடு பயணிப்பவன்.


வெளிநாட்டில் இருந்தால் கூட அவன் பேச கூடிய ஒரே நபர் பாண்டி மட்டுமே. வீட்டிற்கு ஒற்றை பிள்ளையாய் இருந்த நிரஞ்சன் தாய் தந்தை இருவரின் ஒருமித்த மரணத்திற்கு பின் தனித்துவிடப்பட்டான். ஏற்கனவே காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு பெரிதாய் உறவென்று யாரும் போக்குவரத்து இல்லாமலே போனது. ஜாதி விட்டு ஜாதி திருமணத்தை எதிர்த்த இரு குடும்பமும் கடைசி வரை அவர்களை ஏற்றுக்கொள்ளமாலே முத்த தலைமுறைகள் இருந்துவிட உடன்பிறந்தோடும் அவர்களை மறந்தே போயிருந்தனர்.


தேடி சென்று உறவு கொண்டாட நிரஞ்சனின் பெற்றோர் இருவருக்குமே மனமில்லை. அப்படியே வாழ்ந்துவிட்டனர். அவர்களின் மறைவுக்கு பின் நிரஞ்சன் தனித்து விடப்பட்ட போது இறப்பில் கூட கலந்து கொள்ளாத உறவுகள் எல்லாம் என்ன உறவு என்று உறவுகள் மீது இன்னும் வெறுத்து போனான். அன்றும் அழகர் பாண்டியும் உடன் பணிபுரிந்த நண்பர்கள் சிலரும் உடனிருக்க அவர்களோடு மட்டும் எப்போதும் இணக்கமாயிருந்தான். அவர்களைத் தவிர அவனை அவ்வளவு எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது. அதிலும் பாண்டியோடு மட்டும் அவன் நட்பு ஆழமாயிருந்தது. மற்றவர்களும் இதை அறிவர். ஆனாலும் அதெயெல்லாம் அவர்கள் பெரிது படுத்தியதில்லை.



அவனை நெருங்கி பழகிய நண்பர்களுக்கு மட்டுமே அவனது குணம் தெரியும் வெளியில் இருந்து பார்க்கும் எல்லோருக்கும் அவன் ஒரு முரட்டு பிடிவாதக்காரன். அப்படித்தான் அவன் செயலும் இருக்கும். தேவையில்லாத வம்புகளுக்கு செல்பவனும் அல்ல, தேடி வரும் வம்பை விடுபவனும் அல்ல இரண்டில் ஒன்று பார்த்து விடுவான். அவன் முரட்டுத்தனமும் கோபமும் அவன் அலுவலகத்தில் கூட யாரும் நெருங்கா வண்ணம் எட்டியே நிறுத்தி இருந்தது.


வேகமாய் காரை இயக்கிக் கொண்டிருந்த நிரஞ்சனை "டேய் இப்ப என்ன நடந்துச்சுன்னு இவ்வளவு கோவமா இருக்க வண்டியை கொஞ்சம் மெதுவா தான் ஓட்டு.. உன் கூட கார்ல வரதுக்கே எனக்கு பயமா இருக்கு.." என்றான் பாண்டி.


காரை இயக்கியபடியே திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் போக்கில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.


'சும்மாவே இவன் ஆடுவான் இவனுக்கு சலங்கை வேற கட்டி விட்டுட்டா அவ.. இன்னிக்கு பொழுதுக்கும் யார் யார் என்னென்ன ஆகப் போறாங்களோ..' என்று உயிரை கையில் பிடித்து படி அமர்ந்திருந்தான்.


வேகமாக இயக்கினாலும் யாருக்கும் எந்தவித தீங்கும் இல்லாமல் லாவகமாய் வாகனம் இயக்குவதில் வல்லவன் நிரஞ்சன். வேகமாய் இயக்குவது தவறு என்று எப்பொழுதுமே பாண்டி அவனை அறிவுறுத்தி கொண்டே இருப்பான். அப்படி அவன் இயக்கும் நேரங்களில் எல்லாம் 'இறங்கு...' என்று அவனை இறக்கிவிட்டு அவன் வாகனம் ஓட்டுவதே வாடிக்கை.


அப்படித்தான் இன்றும் அவனை நிறுத்தினான். "நீ முதல்ல இறங்கு நான் ஓட்டுறேன்.." என்றவனை எரித்து விடுவது போல் பார்த்தான் நிரஞ்சன்


"முதல்ல நிப்பாட்டுடா.." என்று பாண்டியின் குரலில் சற்றே வேகம் குறைத்து வாகனத்தை ஒரு ஓரமாக நிப்பாட்டினான் நிரஞ்சன்.


"இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி செஞ்சிட்டு இருக்க நீ.. எவ்வளவு ஒருத்தி என்னவோ பேசினான்னு இப்படி கோபப்படுவியா, எல்லாத்துக்குமே இப்படி கோபப்பட்டுட்டே இருந்தா இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.."


"ஓ.... அப்போ அவ செஞ்சது சரிங்கறயா..?" என்றான் நிரஞ்சன்


"அவ செஞ்சது சரின்னு நான் சொல்லல ஆனா அதுக்கு நீ இவ்ளோ கோபப்பட தேவை இல்லைன்னு தான் சொல்றேன்."


"வேற என்ன செய்திருக்கனுங்கற அவளை கொஞ்சி இருக்கணும்னு சொல்றியா.."


"திரும்ப ஏண்டா அதை பேசுற.. அவ செஞ்சது சரி, இன்னும் நீ அவளை அடிச்சது தப்புன்னு நான் சொல்லல.. அவ செஞ்சதுக்கு நீ அங்கேயே ரியாக்ட் பண்ணிட்டு வந்துட்ட, ஆனா அதே கோபத்தை இழுத்து பிடித்து இன்னைக்கு முழுக்க வைத்திருக்க போறியா..? இவ்ளோ வேகமா கார் ஓட்டுற எதிர்ல எவனாவது வந்து அடிச்சா என்ன ஆகும்னு யோசிச்சியா... இல்ல கோவத்துல நீயே போய் யார் மேலயாவது விட்டா கூட என்ன ஆகும்.." என்று பொறுமையாக கேட்டான் பாண்டி.


"அப்படியெல்லாம் நான் யார் உயிரையும் வாங்கிட மாட்டேன். ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு எனக்கு தெரியும்.." என்றான் ஆத்திரத்தோடு


"எப்பா உனக்கு தெரியும் நான் இல்லைன்னு சொல்லல ஆனா என்ன கோவமா இருந்தாலும் அது அங்கே விட்டுடுவது நல்லது என்று தான் சொல்கிறேன். உன்கிட்ட போய் சொன்னேன் பாத்தியா என்னைய சொல்லணும். முதல்ல நீ இறங்கி இந்த பக்கம் வா.." என்று காரை விட்டு இறங்கி மறுபுறமாய் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.


எதுவும் கூறாமல் அவனை முறைத்தபடியே மறுபுறம் சென்று ஏறினான் நிரஞ்சன்.

[adsense][/adsense]


"சரி சரி இந்த விஷயத்தை இதோட மறந்துடு நாளைக்கு டூர் பிளான் பண்ணி இருக்கோம், இந்த ஒரு வாரத்துக்கு உனக்கு கோபமே வரக்கூடாது. உனக்கு கோவம் வர்ற மாதிரி எதுவும் நடக்காம நான் பார்த்துக்கிறேன் அப்படியே ஏதாவது நடந்தாலும் அதை நான் பாத்துக்குறேன். இந்த ஒரு வாரம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரணும் சரியா..? என்ற பாண்டியிடம்.


"யாரெல்லாம் வராங்க... ?"


"நம்ம செட் மட்டும் தான். ரெண்டு வண்டி அவங்க நாலு பேர் ஒரு வண்டி, நாம நாலு பேர் ஒரு வண்டி ஓகேயா..?"


நேராய் சாலையை பார்த்தவாறே முகத்தில் எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் "ம்ம்ம்..." என்றவனை


"அது எப்படிடா இந்த மகேஷ்பாபு மாதிரியே எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன் குடுக்கற.." என்றவனை திரும்பி அவன் முறைக்க.


"ம்க்கூம் ஆ ஊன்னா முறைச்சிடு.." என்று முனகியபடியே வீடு வந்து சேர்ந்தான்.



அப்போது அவனுக்கு தெரியாது, இரவு ஏழரை மணி ரயிலில் ஏழரை ஒன்று சென்னைக்கு வரப்போகிறதென்று.



வரும்....
 

New Threads

Top Bottom