Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu - 2

அத்தியாயம் 2


ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?

ஏறு மயிலேறு.. என்று அலைபேசி ஓங்கி ஒலிக்க


குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பாண்டி 'அய்யோ ஆத்தீ...' என்று அவசரமாய் அரைகுறை குளியலோடு துண்டை மட்டும் உடுத்திக்கொண்டு ஓடி வர


ஈசனிடம் நாடு... இன்முகம் காட்டவா நீ...

ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன்... என்னுடன் ஓடிவா நீ... என்னுடன் ஓடிவா நீ... என்று கே பி சுந்தராம்பாள் உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார்.


டிராவல்பேகில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த நிரஞ்சன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.



'ஒரு போன் அடிச்சது குத்தமா டா அதுக்கும் முறைக்கிறானே...' என்றபடியே ஓடிச் சென்று அலைபேசியை எடுக்கும் முன் அது ஓய்ந்திருந்தது.


ஈஈஈ... என்று லேசாக இளித்தவாறு அவன் உடைகளை எடுக்க


"முதல்ல அந்த ரிங்டோனை மாத்து இன்னொரு தடவை உன் போன்ல அந்த ரிங்டோன் வந்துச்சு..." என்று நிரஞ்சன் உரும


"இதென்னடா வம்பா போச்சு ரிங்டோன் வெக்கறது குத்தமாடா.." என்று அவன் முனகும் போதே மீண்டும் சுந்தராம்பாள் பாட ஆரம்பித்தார்.


"அய்யைய்யோ என் போனு.." என்று அதை உயிர்பித்தபடியே வெளியேறிய பாண்டி


"எதே..."


........



"எப்போ..."


....


"இப்பவா.."



.....


"இங்கயா ..."என்று தலையில் கைவைத்து உக்கார்ந்தவன். நிரஞ்சனை எட்டி பார்க்க இவன் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அவனும் இவனையே பார்த்திருந்தான்.


இவன் பேசிய தொனியில் என்னவென்று புருவத்தை உயர்த்த


"என்ன சொல்லாமகொல்லாம...."


......


"சரி இரு வர்றேன்..." என்று அலைபேசியை துண்டித்தான்.



கேள்வியாய் அவனை ஏறிட்ட நிரஞ்சனிடம் "நீ ரெடியாகு நான் கீழே போய்ட்டு வர்றேன்.." என்றபடி அவசரமாய் உடைமாற்றினான்


"நாம ரெடி அரைமணி நேரத்துல வண்டி எடுக்கனும். ஆல்ரெடி எல்லாரும் ரெடி நீதான் லேட்... நான் லக்கேஜ் எடுத்துட்டு வந்துடுறேன் நீ கீழே வெய்ட் பண்ணு.." என்றபடி அவன் வேலையை தொடர்ந்தான்.



'அரைமணி நேரத்துலயா...? முடியுமா....? கீழே ஒரு சுனாமி ரயிலேறி வந்திருக்கு.. அதை சரி பண்ணவே அஞ்சாறு நாளாகும். இதுல அரைமணி நேரத்துல நான் என்ன பண்ணுவேன்.' என்று புலம்பியபடி லிப்டை நோக்கி ஓடினான்.


லிஃப்ட் கீழே வரும் வரை இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு. ஆறாவது மாடியில் இருந்து கீழே வந்தவன் வேகமாய் கேட் அருகே வர அங்கே யாருமில்லை. ஒரு வேளை கனவோ... என்ற சந்தேகத்தோடு தன் கையில் இருந்த அலைபேசியை உயிர்பித்து பார்த்தவன் 'போன் வந்தது நிஜம் அப்போ எங்கே..' என்று தேடியவன் அங்கிருந்த வாயிற் காவலரிடம் விசாரித்தான். அடக்க மாட்டாத புன்னகையுடன் அவர் கையை நீட்டி காட்டினார். அவர் சுட்டிய திசையை நோக்கியவன் அங்கே மாடி படிகட்டுகளின் கைப்பிடி கம்பியில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்.


ஐந்து அடிக்கு ஒன்று இரண்டு அங்குலம் கூடுதலோ குறைவோ என்பது போன்ற உயரம் சற்றே ஒடிசலான தேகம். துறுதுறுப்பான கண்கள். தொலதலப்பான கறுப்பு நிற முக்கால் பான்ட். அதைவிட லூசான இளம் நீல நிற டி-ஷர்ட். அடர்ந்து சுருண்ட கூந்தலை அள்ளி அப்படியே கிளிப் போட்டிருந்தாள்.


"டேய் பம்பரகட்ட ..." என்று கூவியபடியே இவனை நோக்கி ஓடி வர


பின்னால் செக்யூரிட்டி வாய்விட்டு சிரிப்பது கேட்டது.




'வானரம் தன் வேலையை ஆரம்பிச்சுருச்சு.. ஐயையோ எப்படியாவது நிரஞ்சன் கண்ணுல படுவதற்கு முன்னாடி இதை அனுப்பியாகனுமே..' என்று எண்ணியவாரே


"ஏய் சிட்டு.. இங்க ஏன்டி வந்த... யாரும் உன்னை பார்த்தா என்னாகும். வந்ததும் வராதாதுமா உன் வேலைய ஆரம்பிச்சுட்டயா.? இங்க வா.." என்று அவள் கையை பற்றி ஓரமாக தரதரவென இழுத்துச் சென்றான் பாண்டி.


"ஏன்டா இத்தனை நாள் கழிச்சு பார்க்கிற எப்ப வந்தன்னு கேட்டு சந்தோஷப்படுவேன் பார்த்தா.. ஏன் வந்தேன்னு கேட்கற.. ஓஹோ சார் அவ்ளோ பெரிய ஆள் ஆயிட்டீங்களா..? ஏன் என்னை யாரும் பாத்தா உனக்கு என்ன பிரச்சனை...? இவரு பெரிய ஆண் அழகரு இவர கட்டிக்கலாம்னு நாங்க அப்படியே ஓடோடி வந்து இருக்கோம். டே பம்பர கட்ட ஒரு வயசு பிள்ளை ஊருல இருந்து வந்திருக்கே பத்திரமா வந்தியா..? ஏதும் பிரச்சனை ஆகாம பாதுகாப்பா வந்தியா..? அப்படின்னு எல்லாம் கேட்க தோணல..?


"யாரு வயசுபுள்ள.. நீயா... ? உனக்கு பாதுகாப்பா..? அது சரி உன்கிட்ட இருந்து மத்தவங்களுக்கு இல்ல பாதுகாப்பு வேணும். உனக்கு பிரச்சனை வராதுமா.. உன்னால தான் மத்தவங்களுக்கு பிரச்சனை வரும். இது தெரியாதா எனக்கு.." சொன்னவன் சற்றே சமாதானமாய்


"சரி சரி என்ன திடீர்னு கிளம்பி வந்து இருக்க நாலு அஞ்சு நாள் முன்னாடி கூட போன் பண்ண அப்ப கூட ஒன்னும் சொல்லல திடீர்னு சென்னை கிளம்பி வந்து என்னை பயமுறுத்துற.." என்றான்


"பயமுறுத்துறனா பயமுறுத்த நான் என்ன பேயா பிசாசா.." என்று இடுப்பில் கை வைத்து முறைத்தவளை


"நீ பேய் பிசாசு எல்லாம் இல்ல குட்டிசாத்தான். உன்னை கூட வச்சிருக்கறதும் பூனையை மடியில் வைத்திருக்கிறதும் ஒன்னு தான். சரி சரி சீக்கிரம் சொல்லு இந்நேரத்துக்கு வந்து இருக்க என்ன விஷயமா வந்த... ஏன்டி வரேன்னு ஒரு போன் பண்ணி சொல்ல தெரியாதா.. இப்படி திடீர்னு வந்து இறங்குனா எப்படி.." என்றான் சற்றே கடுப்புடன்


"துரைக்கு போன் பண்ணி வேற சொல்லனுமோ ஏன் சொல்லாம வந்தா உன் வீட்டுகுள்ள என்னை சேர்த்துக்க மாட்டியா.."


"எதே.. வீட்டுக்குள்ள சேத்துக்கறதா... அதுவும் என் கூடவா." என்றான் அதிர்ச்சியாக


"ஆமா இங்க தான். அதுவும் உன் கூட தான். ஏன்..? நீ சென்னையில் இருக்கும் போது நான் வேற எங்க போவேன்.." என்றாள் அசட்டையாய்


"ஏய் என்னடி வந்ததும் குண்ட தூக்கி போடுற என் கூட தங்கறதா பைத்தியமா நீ.." என்றான்


"உனக்கு தான்டா இந்த ஊருக்கு வந்து பைத்தியம் பிடிச்சிருச்சு.. ஏன்டா நீ இங்க இருக்கும்போது நான் வேற எங்கடா தாங்குவேன். ஏன் இதுக்கு முன்னாடி நாம ஒன்னா தங்குனது இல்லையா..? சிறுசுலேருந்து ஒண்ணா தானே வளர்ந்தோம். இப்ப என்ன பிரச்சனை உனக்கு..? அதெல்லாம் முடியாது நான் எங்கேயும் போக மாட்டேன் உன் கூட தான் இருப்பேன். அதுவும் உன்னோட ப்ளாட்ல தான்.நீ இங்க இருக்கறதால தான் வள்ளி என்னை சென்னைக்கு வேலைக்கே விட்டுச்சு. சரி ..வா போலாம்.." என்றபடி அவள் படி ஏற ஆரம்பித்தாள்


"ஏய் ஏய் இரு இரு..." இந்நேரத்தில இவ ஒருத்தி.. ஏன்டி உசிர வாங்கற ... சரி சொல்லு என்ன விஷயமா வந்த இப்படி திடீர்னு வந்தா நான் என்ன செய்ய.."


"சரி நான் வேணா போயிட்டு உனக்கு லெட்டர் போட்டுட்டு ஒரு மாசம் கழிச்சு வரவா ஆளும் மூஞ்சியும் ஊர்ல இருந்து கிளம்பி வந்து எவ்வளவு டயர்டா இருக்கேன் வாடா போலாம்.." என அவன் கைகளைப் பற்றி இழுத்தாள்


'ஐயோ இவள எங்க கூட்டிட்டு போவேன் அதுவும் இப்ப..' என யோசித்தவன்


"ஏய் சிட்டு நான் இங்க என் பிரண்டோட இருக்கேன்னு உனக்கு தெரியுமில்ல ரெண்டு ஆம்பளைங்க இருக்குற வீட்ல உன்னை எப்படி நீ தங்க வைக்கிறது? லூசு மாதிரி பேசுற என்றான்.


"அவனை வேணா ஒரு ஓரமா இருந்துக்க சொல்லு எனக்கு ஒரு அப்ஜக்சனும் இல்ல.." என்று தோளைக் குலுக்கினாள்.


"ப்ளாட்டே அவனது..." என்றான் முறைத்தவாறே


"சோ வாட்... இருக்கட்டும்... இருக்கட்டுங்கறேன். நீ இருக்கேல்ல.. அப்ப அது உன்னோடது. உன்னோடதுன்னா அது என்னோடது வா வா வா...‌" என்று மீண்டும் அவன் கை பற்றி இழுக்க


அவன் தலையில் கைவைத்தவாறே படியில் அமர்ந்து விட்டான்.



"அடியே... அவனுக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்காது. அதுவும் உன்னை பார்த்தான்னா என்னையும் தொரத்தி விட்ருவான். அதுவுமில்லாம நாங்க இப்ப டிரிப் கிளம்பிட்டு இருக்கோம். ஒரு வாரம் ஆகும் ட்ரிப் முடிஞ்சு வர இப்ப என்ன செய்யறது..."



"வாவ் .... டிரிப் போறியா டா சூப்பர் டா... அடுத்தவாரம் தான் கம்பெனில ஜாய்ன் பண்றேன். அதுவரை ஊரை சுத்தலாம்னு தான் ஒரு வாரம் முன்ன வந்தேன். அதுவும் நல்லதா போச்சு. நானும் வர்றேன்டா. டப்பு டிப்புன்னு பத்தே நிமிஷத்துல ப்ரெஸ்ஷப் ஆகிடுறேன். வா வா போலாம் என படபடவென அவளே முடிவெடுத்து பரபரக்க


பாண்டிக்கோ தலை சுற்றியது. சிட்டு அவன் பால்ய சிநேகிதி. பிறந்தது முதல் இரண்டு பேரும் அருகருகே வசித்து ஒரே பள்ளியில் படித்தவர்கள். பாண்டியை விட சிட்டு எட்டு வயதுக்கு மேல் இளையவள். கல்லூரிக்கு அவன் வெளியூர் செல்ல அவள் பள்ளியை தொடர்ந்தாள். அவளும் பள்ளி முடிந்து அதே ஊரில் கல்லூரியை தொடர்ந்தாள். வேறு வேறு ஊர்களில் இருந்தாலும். ஊருக்கு வரும் பொழுதெல்லாம் அவனோடே சுற்றுவாள். அவனுக்கும் அதே போல் தான் எத்தனை நண்பர்கள் இருந்தாலும் சிட்டு எப்போதும் அவனுக்கு தனி சிறப்பு தான்.


அவள் குழந்தையாய் இருக்கும் பொழுது அவள் பெயரை கேட்டு ஆசையாய் அவளை கொஞ்சியவனுக்கு அவள் வளர வளர தோழியாய் நல்லதொரு சிநேகிதியாய் தன் வீட்டு பெண்ணாய் எப்போதும் உணர்வான். வீட்டில் வளரும் பூனைக்குட்டி எப்படி காலைச் சுற்றிக்கொண்டே இருக்குமோ அப்படியேத்தான் இவள் இருப்பாள்.


'பூஞ்சிட்டு..' ஆம் அதுதான் அவள் பெயர்.


"ஏத்த... ஏன் இவளுக்கு பூஞ்சிட்டுன்னு பேர் வெச்ச.." சிறியவானாய் இருந்தபோது பாண்டி கேட்க


"அதுவா இந்த பூஞ்சிட்டு குருவி இருக்குல்ல அது எப்பவும் சுறுசுறுப்பா துறுதுறுன்னு என்னத்தையாவது செய்துட்டே இருக்கும். பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும்டா பாண்டி‌. இவளும் பொறந்துலேர்ந்து துறுதுறுன்னு கைய கால ஆட்டிட்டே கண்ணை உருட்டிட்டு கெடந்தாளா அதான் அந்த பேரையே வெச்சுபுட்டேன்.." என்றாள் அவளை பெற்ற வள்ளி.


குண்டு கன்னங்களோடு அவனை பார்த்து தன் பொக்கை வாய் சிரிப்பை சத்தமாக உதிர்த்த பூஞ்சிட்டை அன்று பிடித்தது தான்‌. அவள் வளர வளர அவளின் சேட்டைகளும் குரும்புகளும் வளர... அதை சமாளிப்பதே அவனுக்கும் வாடிக்கையாகி போனது.


கல்லூரிக்காக அவன் ஊரைவிட்டு வந்தாலும் கூட இவளால் அங்கு நடக்கும் கலவரங்கள் அவன் காதுக்கு தான் முதலில் வரும். அவள் சேட்டைகளை எண்ணி முகம் தானாய் புன்னைகையை ஏந்திக்கொள்ள இவளன்னு .... மனதுக்குள் எண்ணிவாறே அவளுக்கு போன் செய்தால் அவள் அப்படி ஒரு விசயமே நடக்காதது போல் வேறு வேறு கதை பேசியே அதை மறக்கடித்து விடுவாள். எதையும் இலகுவாய் அதன் போக்கில் அணுகி தானும் மகிழ்ந்து மற்றோரையும் மகிழ்வித்து செல்வாள் பூஞ்சிட்டு. சிலருக்கு அவள் தொல்லை. பலருக்கு அவள் பொல்லாப்பிள்ளை. அவளை புரிந்தோருக்கு அவள் அழகான மழலைமனம் கொண்ட தேவதை.


பூஞ்சிட்டின் வருகை நிரஞ்சனை என்ன செய்யும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்



வருவாள்...
 

New Threads

Top Bottom