Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Tamil Novels Poonjittu -13

13


மனம் லேசானால் உறக்கம் தானாய் வரும் என்பார்கள். சிட்டுவிற்கு பயப்பட ஏதுமில்லை என்று மருத்துவர் கூறியிருந்தாலும் அத்தனை உயரத்தில் இருந்து விழுந்து அடிபட்ட காயங்கள், அட்டை பூச்சிகளின் தாக்குதல்கள் என்று அத்தனை துன்பபட்டவள் எப்படி இருப்பாளோ அவளுக்கு மேலும் ஏதும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற பயமும் பழைய நினைவுகளுமாய் இரவு நிரஞ்சனை உறங்கவிடாது செய்தது.


அவளுக்கு ஆபத்து ஏதுமில்லை என்பது அவள் இருக்கும் அறையில் வந்து படுத்த போதே புரிந்து போனது அவனுக்கு. குஷனில் அமர்ந்து அவள் உறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உறக்கம் தானாய் கண்களைத் தழுவியது.

அமர்ந்த நிலையிலேயே தலையை பின்புறம் சரித்து உறங்குபவனைக் கண்டு மனம் உருகிப்போனான் பாண்டி.


'ஏன் தான் இப்படி வருத்திக்கொள்கிறானோ.' என்று நினைத்தான். 'நிச்சயமாய் இரவு உறங்கியிருக்கமாட்டான் அதனால் தான் இப்பொழுது அசந்து உறங்குகிறான்..' என்று எண்ணியவன் மற்றவர்களுக்கும் கண்களால் நிரஞ்சனை சைகையால் காட்டி சப்தம் செய்யாமல் குளித்து முடித்து வெளியேறினர்.


அனைவரும் உணவை முடித்துக்கொண்டு ரிசார்ட்டில் முன் தினம் விளையாடிய பார்க்கில் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

"என்னடா செய்யலாம் ரெண்டு பேரும் நல்லா தூங்கறாங்க... அடுத்து என்ன ப்ளான். சிட்டுவால நடக்க முடியுமா எப்படின்னு தெரியலயே..? என்று ரியாஸ் கவலைப்பட

"நைட் முழுக்க நிரஞ்சன் தூங்கலடா... நேத்து இன்சிடென்ட்ல பழைசையெல்லாம் நெனச்சுட்டு ரொம்ப கஷ்டபட்டான்.." என்றான் பாண்டி.

அதை கேட்ட அருண் "நைட் நீ அவனை கூட்டிட்டு வந்து படுக்க வச்சத பார்த்தோம் டா, ஆனா அப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்னு தான் எதுவும் கேட்டுக்கல. அதுக்கு பிறகும் கூட அவன் தூங்காம தான் இருந்திருப்பான் போல.. விடு கொஞ்ச நேரம் தூங்கட்டும்.." என்றான்.


"சரி அதுவரை நாம என்ன செய்யலாம்..." என்று சரண்யா கேட்க

"அதான் அந்த அறுந்தவாலு சொல்லிகுடுத்துட்டு போனாளே நேத்தே.. வாங்க இங்கேயே கொஞ்ச நேரம் விளையாடலாம். யோசிச்சு பாருங்க நாமல்லா எந்த வயசுல இதுல விளையாடிருப்போம். இதெல்லாம் பார்த்து விளையாடனும்னு ஆசைப்பட்டா கூட, யாராவது பார்த்தா என்ன நெனப்பாங்கன்னு பேசாம போய்டுவோம்ல.. ஆனா நேத்து சிட்டுவோட சேர்ந்து நாமளும் வெளையாடும் போது எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. யாருக்கு இருந்துச்சோ இல்லையோ எனக்கு இருந்துப்பா.." என்று உண்மையை மறைக்காது உடைத்து கூறினான் ரியாஸ்.


ரியாஸின் பேச்சு சரியென்பது போலவே "எஸ்... சென்ட் பர்ஷன் கரெக்ட்... ஒரே நாள்ல எல்லாரையும் மாத்திட்டாப்பா.." என்றாள் அலென்னா.

"அவ நம்மளை மட்டுமா மாத்தினா... நிரஞ்சனையே மாத்திட்டா பாண்டி.." என்று தீப்தி ஆச்சர்யமாய் கூறினாள்.

"அவ யாரையும் மாத்தல.. நாம தான் எல்லாத்தையும் மறைச்சுட்டு ஒரு போலியான முகமூடியோடு சுத்திருக்கோம். அவ அதெல்லாம் இல்லாம அவ இயல்புல இருக்கா... யார் என்ன சொல்வாங்கன்ற கவலை எல்லாம் அவளுக்கு இல்ல. அவளுக்கு புடிச்ச மாதிரி அவ இருக்கா.. அவளை பார்த்தபின் அதை நாமளும் செய்ய ஆரம்பிச்சிருக்கோம். ஆனா ஒன்னு இந்த ஒன்பது வருசத்துல நிரஞ்சன் சிரிப்பையே மறந்திருந்தான். இவளால் அவன் சிரிச்சிருக்கான். அதுக்கு நிச்சயமா அவதான் காரணம்.." என்று செல்வா கூற


"ஏய் அதெல்லாம் இல்லப்பா நிச்சயமா சிட்டு வராட்டி நாம இப்படி இருந்திருப்போமா சொல்லு... ஜாலியா இருந்திருப்போம். ஆனா நிரஞ்சன் என்ன சொல்வானோன்ற ஒரு பயத்தோட வெறுமனே இயற்கையை ரசிச்சிட்டு ஆளுக்கு நூறு போட்டோ எடுத்துட்டு போன் கேலரியை நிறைச்சிட்டு தான் போயிருப்போம். ஏன் இதுக்கு முன்னாடி போன ட்ரிப்ல எல்லாம் அதானே நடந்துச்சு.." என்று சரண்யா பதில் கூற

"அடடே சரண்யா உனக்கு இவ்ளோ அறிவா... பார்ரா புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குது.." என்று அவளை கலாய்த்தான் அருண்.

"டேய் விளையாடலாம்னு சொல்லிட்டு பட்டிமன்றம் நடத்திட்டு இருக்கீங்க வாங்கடா.. என்றபடி சறுக்கு மரத்தை நோக்கி பாண்டி ஓட மொத்த கூட்டமும் அந்த பூங்காவை ஆக்கிரமித்தனர். ஒரு இரண்டு மணிநேரத்திற்கு மேல் இவர்கள் விளையாடிவிட்டு சற்றே ஓய்வெடுக்க

"டேய் போய் டீ குடிப்போமா.." என்றான் அருண்.

"வாழ்க்கைலயே இப்பதான் உருப்படியா ஒரு ஐடியா குடுத்திருக்க மச்சி.." என்றாள் அலென்னா.

"எதே மச்சியா.." என்றான் ரியாஸ்

"ஆமாண்டா மாமே இனிமே இப்படித்தான்.." என்று தீப்தி கூற

"அப்படி போடு ... ஹேய் இதுவும் செம்மயா இருக்குடா." என்று அலென்னாவுக்கு தீப்திக்கும் ஹைஃபை கொடுத்தாள் சரண்யா.

ஆண்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு "ஒரு நாளைக்கே இத்தனை எஃபெக்ட் னா இந்த ஒரு வாரம் ட்ரிப் முடியும் போது இவிங்க அவங்கவங்க அப்பாவை என்ன மாமேன்னு கேட்காம இருந்தா சரி.." என்று செல்வா சிரித்தான்.

மொத்த கூட்டமும் கொல்லென்று சிரித்து விட்டு டீக்கடைக்கு நடையைக் கட்ட அங்கே சிட்டு தூக்கம் கலைந்து புரண்டு கொண்டிருந்தாள்.


ஒரு வழியாய் அவள் விழித்துப் பார்க்க குஷனில் அமர்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த நிரஞ்சனை கண்டாள். 'இவன் ஏன் இப்படி தூங்குறான் இவ்ளோ பெரிய பெட் இருக்கு இங்க வந்து படுக்க வேண்டியதுதானே? லூசு பைய...'என்று எண்ணியவாறே எழுந்து அவனையே பார்த்தபடி சற்று நேரம் அமர்ந்தாள்.

யாரையும் காணாது போகவே... சரி சாப்ட போயிருப்பாங்க என்று எண்ணியபடியே படுக்கையை விட்டு எழுந்தாள். பாண்டியும் மற்றவர்களும் கிளம்பும் போதே சிட்டுவின் பையை கொண்டுவந்து வைத்துவிட்டு போயிருக்க குளித்து முடித்து தயாராகி வந்து மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள் சிட்டு. "மணி வேற என்னான்னு தெர்லயே... ஒரு கடிகாரம் மாட்டி வெக்கறானுங்களா இந்த ரூம்லலாம். காசு மட்டும் வாங்கறானுங்க.." என்று சலித்ததவாறு முனுமுனுத்துக் கொண்டே தன் கை பேசியை தேடி எடுத்து நேரத்தை பார்க்க பதினொன்று இருவது என்றது அது.

'ஆத்தீ இவ்ளோ நேரமா தூங்கினோம்‌‌. அச்சச்சோ அப்போ நம்மளை வுட்டுட்டு இந்த கொரங்கு கூட்டமெல்லாம் ஊர் சுத்த போய்டுச்சா.. இந்த கங்காரு வேற இப்படி தூங்கறானே‌..' என்று அவனை பார்த்தபடியே கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டாள் சிட்டு.

மேலும் பதினைந்து நிமிடங்கள் ஓட அந்த ரிசார்ட்டினுள் டவரும் எடுக்காமல், பாண்டிக்கு அழைக்கவும் முடியாமல் நிரஞ்சனை எழுப்பவும் முடியாமல் அமர்ந்திருந்தாள். பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது சிட்டுவிற்கு.

இரவெல்லாம் உறங்காததும் வாகனம் ஓட்டியதுமான களைப்பில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நிரஞ்சனின் தோள் பகுதியில் இரண்டு விரலைக் கொண்டு யாரோ உசுப்புவது போல் தோன்ற சட்டென்று உறக்கத்தில் இருந்து விழித்தான் நிரஞ்சன்.

அவன் அருகே அமர்ந்தபடி சிட்டு தான் அவன் தோள்பட்டையில் சுரண்டிக்கொண்டிருந்தாள்.

அதிர்ந்து எழுந்தவன் "ஹேய் என்னாச்சு ஆர் யூ ஆல்ரைட்.." என்று பதறி கேட்க

"பசிக்குது..." என்றாள் அவள்.

"வாட்..."என்றான் நிரஞ்சன்.

"டேய் வளந்தவனே பசிக்குதுடா... எவ்ளோ நேரமா நீ தூங்குவதையே பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கிறது. நீயும் எழுந்திருப்ப, எழுந்திருப்பேன்னு நானும் வெயிட் பண்ற கும்பகர்ண மாதிரி தூங்குற.. எனக்கு பசி உசுரு போகுது.." என்றாள் பாவமாக.

கொஞ்சம் அவளை உற்று நோக்கி இருந்தால் அவள் குளித்து உடை மாற்றி அமர்ந்திருப்பதை கண்டுகொண்டிருப்பான். தூக்கத்தில் இருந்து விழித்தவனுக்கு அவளை அருகே கண்டதும் அவளுக்கு என்னவோ என்று பதறிப்போயிருந்தான்.


அவள் பசி என்றதும் தான் அவள் தயாராகி உக்கார்ந்திருப்பது தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்து யாரையும் காணாமே என்று அவன் யோசிக்க அவன் யோசனை உணர்ந்து

"எல்லா கொரங்கும் நம்ம ரெண்டு பேரையும் விட்டுட்டு போய்டுச்சுங்க போன் பண்ணேன் நெட்வொர்க் எடுக்கல.. ரொம்ப பசிக்குது டா.." என்றாள் சிட்டு.

"ஒரு நிமிஷம் இரு.." என்றவன் முகம் கழுவி சில நொடிகளில் தயாராகி வந்து "வா போகலாம்.. என்றவன் உன்னால நடக்கமுடியும்ல..‌" என்றான்‌. காலையில் அவன் அறைக்கு நடந்து தானே வந்தாள் என்பதைக் கூட மறந்து அவன் கேட்க

"ம்ஹூம்.. தட்டு தடுமாறி பாத்ரும் போய் குளிச்சிட்டு வர்றதுக்குள்ளயே வலி உயிர் போய்டுச்சு‌. என்னால ஒரு எட்டு கூட வெக்க முடியாது.." என்றாள் அவள்.

"சரி ரூம் சர்வீஸ் கூப்டுக்கலாம்ல.." என்று அவளை கேட்டுக்கொண்டே அவன் ரிசார்ட் ரூம்சர்வீஸூக்கு அழைக்க காலை உணவு மட்டுமே அங்கே கிடைக்கும் என்றும் பத்து மணியோடு உணவு முடிந்தது என்றும் பதில் வந்தது.

"சரி நீ இரு நான் போய் ஏதாவது வாங்கிட்டு வர்றேன்..." என்று கிளம்பபோனவனை

"ம்ஹூம் நான்லா இங்க தனியா இருக்க மாட்டேன். என்னையும் கூட்டிட்டு போ.." என்று அவள் அடம்பிடிக்க

"சரி வா.." என்று அவன் கைத்தாங்கலாக பிடிக்க போக தூக்கு என்கிற ரீதியில் இரு கைகளையும் நீட்டினாள் அவள்.

'என்ன இவ... இவளை தூக்கறதா..' என்று ஒரு நொடி யோசித்தவன்

"ரொம்ப பசிக்குது டா.." என்ற அவள் வார்த்தையில் எதையும் யோசிக்காமல் அலைபேசியையும் பர்சையும் எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அவளை பூங்குவியலாய் தூக்கினான்.

அவன் தோளை அவள் கைகளால் கோர்த்துக் கொள்ள இரு கைகளாலும் அவளை தூக்கிக்கொண்டு வெளியே வந்து அறையை பூட்டிவிட்டு வெளியே வந்தான். அவனை பொறுத்தவரை வலியோடு துன்பப்படுகிறாள் அதுவும் தன்னால்‌. பசியோடு வேறு இருக்கிறாள் கார் வரை கொண்டு போய் விட்டால் அருகில் ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றுவிடலாம் என்று எண்ணியிருந்தான்.

நிரஞ்சன் அவளை தூக்கிக்கொண்டு ரிசார்ட் விட்டு வெளியே வரவும் டீக்கடைக்கு சென்ற நண்பர்கள் கூட்டம் ரிசார்டின் உள்ளே வரவும் சரியாய் இருந்தது. சிட்டுவை கைகளால் ஏந்திக்கொண்டு வரும் நிரஞ்சனை கண்டு எல்லாரும் மலைத்து நின்றனர்.

ஒய்யாரமாய் அவன் கைகளில் இருந்தபடியே "ஹாய்..." என்று அவள் கைகளை அசைத்து சிரிக்க

"என்னாச்சு.." என்றபடியே ஓடிவந்தான் பாண்டி.

"பசிக்குதாம்டா..‌ வா பக்கத்துல ஹோட்டல் கூட்டிட்டு போகலாம்.." என்று பரபரத்தான் நிரஞ்சன்.

"சரி அதுக்கு ஏன் இவளை தூக்கிட்டு நிக்கற.." என்று ரியாஸ் கேட்கவும்

"ஏன்டா அவளுக்கு அடிபட்டிருக்கே அவ எப்படி நடப்பா..." என்று முடிக்கும் முன்னே அவள் காலையில் நடந்து வந்து படுக்கையில் விழுந்தது நினைவு வர அவளை அவன் பார்க்க குறுஞ்சிரிப்போடு
நிரஞ்சனின் கைகளில் இருந்து குதித்து இறங்கினாள் சிட்டு. தன் கைகளில் இருந்து குதித்து இறங்கியவளை கண்ட நிரஞ்சன்.

"ஹேய்... பொய் சொன்னியா.." என்று கேட்க

"அதுவா.. சும்மா.. இல்லேன்னா நீ எப்படி என்னை தூக்கிட்டு வருவ. நேத்து என்னை தள்ளிவிட்டேல்ல.. அது ஒரு சின்ன பனிஷ்மென்ட்.." என்றாள் சிட்டு.

"எது இதுவா.." என்று அலட்சியமாய் அவன் முகம் திருப்ப

"பின்ன இல்லையா என்னை தூக்கிட்டு வந்தேல்ல.." என்றவளை

"கொசு கூட கொஞ்சம் வெய்ட் டா இருக்கும்... பசிக்குதுன்னு சொன்னியே பாவம்னு தூக்கிட்டு வந்தேன் இல்ல.. நசுக்கிப்போட்ருவேன் ஓடிடு.." என்றான் நிரஞ்சன்.


"கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலயாம். சரி சரி வா பசிக்குது.." என்று அவனை இழுத்தவளை

"பாண்டி இந்த கொசுவை நீ கூட்டிட்டுப் போறியா இல்ல நசுக்கட்டுமா.." என்று நிரஞ்சன் கேட்க அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது.


வருவாள்....
 

New Threads

Top Bottom