Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Maraadha nesam _6

மாறாத நேசம்!


அத்தியாயம் 6


பஞ்சு மிட்டாய் கடைக்காரனிடம் பெண்கள் கூட்டம் வழிந்தது.



சீர்மதியனுக்கு அங்கு கூட்டத்தில் நின்றிருந்த ஒருத்தி மட்டும் அவனின் கவனத்தை ஈர்த்தாள்.


அவளின் அருகில்


செல்லும் போது மணிச்சுடர் தண்மதியிடம் ,"தணு நீ பஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வா!நான் அதுக்குள்ள தக்காளியே வாங்கிட்டு வந்துறேன்.." என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.


தண்மதி தனக்கு முன்னாடி நின்றவர்கள் பஞ்சு மிட்டாய் வாங்கிய பின் பஞ்சு மிட்டாய் வாங்க காத்திருந்தாள்.


சீரமதியன் சத்தமில்லாமல் அவள் அருகில் சென்று நின்றான்.தண்மதி அவனை கவனிக்கவில்லை.


சீர்மதியன் பஞ்சு மிட்டாய் கடைக்காரனிடம் , "அண்ணே எனக்கு ரெண்டு கொடுங்க.."என்றான்.


தண்மதி சீர்மதியனின் குரலிலைக் கேட்டு பதட்டத்துடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.


சீர்மதியன் கடைக்காரரிடம் பேசினாலும் அவனின் விழிகள் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.


தண்மதிக்கு மனதிற்குள் பக்கென்று இருந்தது. அவன் பார்வையின் வேறுபாடு அவளை என்னமோ செய்தது. பஞ்சுமிட்டாயை வாங்கி கொண்டு விரைவாக அங்கிருந்து போக வேண்டும் என்று எண்ணினாள்.


சீர்மதியனோ, வேண்டுமென்றே ஏழிசையிடம் பேசுவது போல் .."கன்னததைப் பார்..மல்கோவா மாம்பழமாட்ட இருக்குது. அப்படியே கடிச்சு சாப்பிடலாம் போல்.." என்றவன் அவளைப் பார்த்துக்கொண்டே ஏழிசையின் கன்னங்களில் அழுந்த முத்தமிட்டான்.


அவனின் செயலைக் கண்ட தண்மதிக்கு ஜீவ்வென்று கோபம் தலைக்கேறியது. அவனைப் பார்க்கும் பார்வையில் அனலைக் கக்கினாள்.


அவன் அதற்கெல்லாம் அசறுபவனா?அவளின் கோபம் அவனுக்கு மேலும் அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆர்வத்தைக் கொடுத்தது.


"ஹப்பா என்ன பார்வை பாப்பா இது! சும்மா ஆளையே விழுங்குதே! இப்படியெல்லாம் பார்த்தால் நான் உண்மையாளுமே கன்னத்தை கடிச்சுடுவேன்.." என்று அவன் கூறி முடிப்பதற்குள்,


"இங்க பாருங்க இந்த மாதிரி ஜாடை பேச்சு பேசற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.."


"ஹலோ மேடம் நான் ஜாடை யெல்லாம் பேசுல.. நிஜமாவே நேரடியாகத் தான் பேசுறேன்..நான் சொன்ன மாதிரி ஒரு நாள் நடக்கத் தான் போகுது பாரு.."


"அது உங்க கனவிலும் நடக்காது.. ஞாபகம் வச்சுக்கோங்க.."


"அப்படியா ? அதையும் பார்ப்போம். அப்படி நடந்துருச்சுன்னா என்ன தருவே.."


"அதுக்கு வாய்ப்பே இல்லை.."என்றவள் பஞ்சுமிட்டாயை வாங்கிக் கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.


சீர்மதியனோ, அவள் ஓடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டான். அவன் மனதிற்குள் ஒரு நிம்மதி பிறந்தது. இனி ரெண்டு நாளைக்கு என்னையே திட்டிக் கொண்டே இருப்பாள்..அவளின் மாமன் மகனை மறந்து விடுவாள் என்று எண்ணினான்.


அவன் எண்ணம் போல் தான் தண்மதியும் மனதிற்குள் சீர்மதியனை வறுத்தெடுக் கொண்டிருந்தாள். அடிக்கடி தன் கன்னத்தை வேறு தொட்டு பார்த்துக் கொண்டாள்.


'உடம்பு முழுவதும் திமிர்.. அது தான் தைரியமா நம்முகிட்டே இப்படியெல்லாம் பேசறான்..இதெற்கெல்லாம் சீக்கிரம் முற்றுப் புள்ளி வைக்கனும்' என்று எண்ணினாள்.


ஆனால் ,அதை தொடர் புள்ளியாக மாற்ற அங்கே ஒருவன் திட்டம் போட்டு வேலை செய்து கொண்டு இருப்பதை அவள் அப்போது அறியவில்லை.


சீர்மதியன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாளும் நெருங்கி வந்தது.


கோவழகன் குடும்பமே தை முதல் நாளான பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். அதுவும் மகள் தூயமுல்லையும்,கனியமுதனும் வந்ததும் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் போனது.


அதே ஆனந்தத்துடன் அடுத்த நாள் வந்த மாட்டுப் பொங்கலையும் விமர்ச்சியாக கொண்டாடினார்கள்.


விடியற்காலை பண்ணைக்குப் போய் வேலையாட்களுடன் மாட்டுப் பட்டியை சுத்தம் செய்து,மாட்டு கொம்புக்கு வண்ணம் தீட்டி..மூக்கணாங்கயிறு மாற்றி..மாடுகளை மிக அழகாக அலங்கரித்தார்கள்.

சீர்மதியன் தனக்கு அன்னமிடும் பசு மாடுகளுக்கு பார்த்து பார்த்து ஒவ்வொன்றும் செய்தான்.


மாலை சர்க்கரைப் பொங்கல் வைத்து ,மாடுகளை வணங்கி,பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி விட்டனர்..

அன்றைய நாள் மிக இன்பமாக முடிந்தது.


கனியமுதன் சீர்மதியனிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைத்ததும், "சீரா நாளைக்கு சல்லிக்கட்டில் கலந்துக்கப் போறீயா.." என்று கேட்டான்.


"ஆமாம் மாமா நான் முடிவு பண்ணிட்டேன்..கலந்தே ஆகவேண்டும்..இதை தவிர வேறு வழி இல்லை.."


"சீரா மாமா இதற்கு ஒத்துக் கொள்வாரா?"


"கண்டிப்பா மாட்டார்..ஆனால் இரு குடும்பமும் சேர இதைவிட வேறு வழியில்லை..அது மட்டுமின்றி எனக்கு தண்மதி வேண்டும் மாமா.."


"ம்..! "என்ற கனியமுதன் கண்களில் கனிவுடன்.. "கண்டிப்பா நீ போட்டியில் வென்று, மகிழ்ச்சியான செய்தியுடன் தான் வீட்டுக்கு வரனும்..நானும் கூட வரட்டுமா?"


"வேண்டாம் மாமா..இது என்னோடு போகட்டும் .நான் மட்டும் போனால் பிரச்சினை இல்லை..நீங்க வந்தால் தேவையில்லாமல் உங்கள் மீதும் வெறுப்பு வர வாய்ப்புண்டு.." என்று கனியமுதன் வருவதை தடை செய்தான்.


ஓவ்வொருவரும் ஓவ்வொரு மனநிலையுடன் அன்றைய இரவை கழித்தனர்.


சீர்மதியன் காணும் பொங்கல் அன்று நேரமாக எழுந்து குளித்துவிட்டு ,தன் தாய் பொன்மணியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, அசதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த தந்தையின் கால்களையும் தொட்டு வணங்கி விட்டு சல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு சென்றான்.


சல்லிக்கட்டு மிகச் சிறப்பாகவே தொடங்கியது.காளைகள் சீறிப் பாய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதை அடக்க பயமறியா இளைஞர் பட்டாளம் பார்ப்போரை கதிகலங்கச் செய்தார்கள்.


சீர்மதியனோ சல்லிக்கட்டை பார்வையாளர்கள் இடத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான்.


போட்டி நடைபெறும் மைதானத்தில் மாடு பிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.


மேடையில் அந்த தொகுதி எம் .எல் .ஏவும், பஞ்சாயத்து தலைவர் அருமை நாயகமும்,காளைகளின் சொந்தக்காரர்கள்‌ மற்றும் ஊர் பெரியவர்களுடன் முறைவழுதியும் அமர்ந்திருந்தான்.


போட்டி தொடங்கியதும், முதலில் கோவில் காளை மாடுகள் மைதானத்திற்குள் வரவழைக்கப்பட்டது. அதற்குப் பின்பே மற்ற காளைகள் வரத் துவங்கியது.


மாடுபிடி வீரர்களின் சாகசங்களும்,அவர்களுக்கு போக்கு காட்டும் காளைகளின் அட்டகாசங்களும் பார்ப்போரை கவர்ந்திழுத்து.


ஒலிப்பெருக்கியில் மைதானத்திற்குள் வரும் காளைகளின் பெயர்களையும்..அதன் சொந்தாக்கராங்களையும் பற்றி அறிவித்து கொண்டே இருந்தார்கள்.அதுமட்டுமின்றி காளைகளை அடக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளை சுவாரசியமாக சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.


பல வீரர்கள் காளைகளின் ஆக்ரோசத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் விழுந்து 'புரண்டு .. காளைகளின் கூர்மையான கொம்புகளால் காயத்தை பரிசாக வாங்கினார்கள்.


நல்ல வேளை மருத்துவ குழு தயார் நிலையில் இருந்ததால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.


சில வீரர்கள் விடாமுயற்சியுடன் காளையின் திமிளை பிடித்துக் கொண்டே சில‌மீட்டர்‌தூரம் சென்று, காளைகளை அடக்கி வெற்றியும் பெற்றார்கள்.


சீர்மதியன் தன் நேரத்திற்காக காத்திருந்தான்..அவன்‌‌ மனம் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நேரமும் வந்தது.


அருமை நாயகத்தின் காளை வீராவும் மைதானத்திற்குள் வந்தது. வீராவை அடக்குவது மாடுபிடி வீரர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. யாருமே அடக்க முடியாமல் திணறினார்கள்.அதில் அருமைநாயகத்திற்கு பெருமையும் ,கர்வமும் கூடியது.


கர்வம் கொடுத்த செருக்கில் அருமை நாயகம், மைக்கை வாங்கி, "தன் காளையை அடக்குவதற்கு ஒரு வீரன்‌கூடவா இல்லை.."என்று நக்கலாக கேட்டார்.


கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.வேடிக்கை பார்க்க நின்ற மக்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர்.


அப்போது சரியாக சீர்மதியன் மேடைக்கு அருகில் சென்று, " ஏன் இல்லாம நான் அடக்குகிறேன்.. அப்படி உங்க காளையை அடக்கிட்டா என்ன தருவீங்க.." என்று கேட்டான்.



சீர்மதியனைப் பார்த்ததும் அருமைநாயகம் ஒரு நொடி திகைத்தார். 'இவன் நமக்கு பிரச்சினை கொடுப்பதையே வேலையா வச்சு இருக்கான் போல' என்று நினைத்துக் கொண்டவர், தன் காளை மீதிருந்த நம்பிக்கையில், " என்ன வேணும் கேள் தரேன். ஆனால், அதற்கு முன் நல்லா யோசிச்சுக்கோ..உன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.." என்றார் அவனை பயமுறுத்தும் பொருட்டு.


அவர் சொன்னதைக் கேட்டு சீர்மதியன் நக்கல் சிரிப்பை உதிர்த்தவன்,"அதை நான் பார்த்துக்கிறேன்.நீங்க போட்டியில் ஜெயிச்சா என்ன கேட்டாலும் தருவீங்களா? அப்புறம் பேச்சு மாறக் கூடாது.."


"எனக்கு வாக்கு தவறி பழக்கமில்லை ..என்ன பரிசு வேண்டும் பணமா?பொருளா?"


"அதெல்லாம் வேண்டாம்.. உங்க பேத்தி தண்மதியை எனக்கு கல்யாணம் செய்து கொடுக்கனும் .."என்று அவன் கேட்டவுடன் அந்த இடமே ஒரு நிமிடம் பேரமைதியை தத்தெடுத்து.


அருமைநாயகம் சிலையாக நின்றார். மற்றவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போனார்கள்.


ஆனால் ,ஒருவன் மட்டும் அந்த அமைதியை கிழித்துக் கொண்டு, ஆக்ரோசமாக மேடையிலிருந்து குதித்து வந்து, சீர்மதியினின் சட்டையை வெறித்தனமாக பிடித்து இழுத்து ," உனக்கு என்ன தைரியம் இருந்தா? என் தங்கையை கேட்பே..! மாட்டுக்காரப் பையலுக்கு எங்க வீட்டு பொண்ணு கேட்குதா? "என்று கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் முறைவழுதி காட்டுக் கத்து கத்தினான்.




சீர்மதியன், கொஞ்சம் கூட முகம் மாறாமல் , வழுதியின் கைகளிலிருந்த தன்‌சட்டையை விடுவித்த படியே.. "மச்சான் எதுக்கு இத்தனை கோபம். இது எனக்கும் உன் தாத்தாவுக்கும் உள்ள பிரச்சினை! இதில் நீ தலையிடாமல் ஓர் ஓராமாய் போய் நின்று வேடிக்கை மட்டும் பார்.."


"டேய் ! இன்னைக்கு உன்னை கொன்னு போடலைன்னா நான் வழுதி இல்லைடா.." என்று பற்களை கடித்தபடி சீர்மதியனின் குரல்வலையில் கை வைத்தான்.


அப்போது அருமைநாயகம் "வழுதி நீ முதலில் மேடைக்கு வா" என்று கர்ஜித்தார்.


"தாத்தா இவன் பேசிய பேச்சுக்கு இவனை சும்மா விடுவதா? இவனுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் நான் விடப் போறதில்லை.."


"வழுதி இப்போ என் பேச்சை கேட்கப் போறீயா இல்லையா?"என்று அருமைநாயகம் சொன்னவுடன் .


"ச்சை !"என்று சீர்மதியன் கழுத்திலிருந்து கை எடுத்தவன், நேராக தாத்தாவிடம் சென்றான்.


அருமைநாயகம் "சீர்மதியனைப் பார்த்து நீ என் சொத்தையே கேட்டிருந்தால் கூட நான் எழுதி கொடுத்திருப்பேன். ஆனால், என் பேத்தியை கேட்கிறாய்.. ஒரு போட்டிக்காக எங்க வீட்டுப் பெண்ணின் சுயமரியாதையை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.." என்று அழுத்தமாக சொன்னார்.


"தலைவரே! இதையெல்லாம் நீங்க வாக்கு கொடுக்கும் முன் யோசித்து இருக்க வேண்டும். நான் அதுக்குத் தான் என்ன வேண்டுமானாலும் கொடுப்பீங்களான்னு அழுத்திக் கேட்டேன்.."


"உன் பேச்சில் இப்படி ஒரு உள்ளர்த்தம் இருக்கும்ன்னு அப்போ எனக்கு தெரியலையேப்பா.."


"என்னமோ உங்க காளையை யாராலும் அடக்க முடியாதுன்னு வீரவசனம் பேசுனீங்க. இப்போ பின் வாங்குறீங்க..என்னைக் கண்டு பயந்துட்டீங்களா?"


"இப்போதும் சொல்றேன் என் காளை வீராவை அடக்குவது அவவளவு எளிதல்ல..என் காளை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. ஆனால், அதற்கு என் பேத்தியை பணயம் வைக்க நான் தயாராக இல்லை.."


"தலைவரே ! உங்க பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருக்கு. அவ்வளவு நம்பிக்கை உங்க வீரா மேல் இருந்தால்? எதற்கு பயப்படறீங்க.." என்று சீர்மதியன் கேட்டவுடன் அருமைநாயகம் செய்வதறியாமல் தடுமாறினார்.


அதுவரை அமைதியாக இருந்த ஊர் பெரியவர்கள் "இங்க பாருப்பா நீ கேட்பது கொஞ்சம் கூட சரியில்லை..ஏதோ குடும்ப பிரச்சினை என்று இதுவரை பேசாமல் இருந்தோம்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக நீ கேட்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.."என்றவர்களிடம்,


அங்கே வந்திருந்த எம் .எல். ஏ அருமை நாயகத்தின் மீது ஏற்கனவே இருந்த முன் பகையை மனதிற்குள் வைத்துக் கொண்டு " அந்த தம்பி கேட்பதில் என்ன தப்பு.." என்றார்.



எம் எல் ஏவின் ஆதரவு பேச்சில் சீர்மதியன் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியுடன், " நான் ஒன்றும் வழக்கத்திற்கு மாறாக எதுவும் கேட்கவில்லையே..நம்மூரில் மாட்டை அடக்கி பெண்ணை கல்யாணம் செய்யும் வழக்கம் இருந்தது தானே..!ஏன் நம் கோவில் அறங்காவலர் கூட மாட்டை அடக்கித் தானே அவர் சம்சாரத்தை கல்யாணம் செய்தார்.."என்றவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் ஊர் பெரியவர்கள் பேச்சற்று நின்றார்கள்.


சீர்மதியன் கூறுவது உண்மை என்பதால் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றார்கள்.இன்னும் கூட சில கிராமங்களில் அந்த வழக்கம் இருக்கத் தான் செய்கிறது.

சில நிமிடங்கள் அங்கே பேரமைதி நிலவியது.



அந்த அமைதியை உடைத்து வழுதி பேச்சற்று நின்ற தன் தாத்தா அருகில் சென்று " தாத்தா இவன் உங்களை குழப்ப பார்க்கிறேன்.இந்த போட்டியே வேண்டாம் ..நம் வீராவை நாம் வீட்டுக்கே கூட்டிட்டு போய்டுவோம்‌.."என்று கெஞ்சியவனைப் பார்த்து சிரித்தான் சீர்மதியன்.


அவனின் சிரிப்பு அருமைநாயகத்திற்கு ரோசத்தைக் கொடுத்தது. உடனே ,"நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன்..இந்த போட்டியில் என் காளை வீராவை நீ அடக்கி விட்டால், நான் என் பேத்தியை உனக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன்.." என்று உறுதியாக சொன்னார்.


வழுதியோ, " தாத்தா என்ன காரியம் செய்துட்டீங்க." என்று தாளாமுடியாத கோபத்தில் கேட்டான்.


அருமைநாயகம் தன் பேரனின் தோள்களை தட்டிக் கொடுத்தபடியே ,"வழுதி நம் வீராவை அடக்க இன்னும் எந்த கொம்பனும் பிறக்கவில்லை நீ தைரியாமா இரு." என்றார்.


சீர்மதியனோ, அவரைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தபடியே மைதானத்திற்குள் தன் வேட்டியை மடித்து கட்டியபடியே நுழைந்தான்.


நேசம் தொடரும்..
 

New Threads

Top Bottom