மாறாத நேசம்!
அத்தியாயம் 8
கோவழகன் தன் மகனுடன் மாமனார் வீட்டிற்குள் நுழைவதையும்,அவர் பின்னாலேயே பொன்மணியும் ,கூடவே கனியமுதனும் வருவதைக் கண்டு வேலையாட்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் விழி பிதுங்க கற்சிலையாக நின்றார்கள்.
திருமணம் முடிந்து இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட இந்த வீட்டு மண்ணை மிதித்திடாதவர்கள், இன்று வந்திருப்பது அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் கொடுத்தது.
சல்லிக்கட்டில் நடந்தது வேறு அவர்களுக்கு அரசல் புரசலாக தெரிந்திருந்தது. அதனால் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக் கொண்டனர்.
வீட்டிற்குள் இருந்து முதலில் வெளியே வந்தது செம்பியன் தான்.அங்கே தன் தங்கை குடும்பத்தைக் கண்டு மலைத்து போய் பேச்சற்று நின்றார்.
பின்னாலேயே அருமைநாயகம் உட்பட அனைவரும் வந்தார்கள்.கோவழகனைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அனைவருமே திகைப்பில் பேசாமடந்தை ஆனார்கள்.
இதுவரை வராதவர் வந்திருக்கிறாரே! என்ன விசயமாக இருக்குமென்றே ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு கேள்வியும் யூகமும் தோன்றியது.
தன் மாமனார் குடும்பமே தங்களைப் பார்த்து சிலையாக நிற்பது அவருக்கொன்றும் அதிசயமாக இல்லை.
திருமணம் முடிந்த நாளிலிருந்து இங்கு வந்திராதவர் , இன்று வந்து இருக்கிறார் என்றால், அவர்களுக்கு பேரதிர்ச்சியாகத் தான் இருக்கும் என்று அதை எளிதாக கோவழகன் எடுத்துக் கொண்டார்.
கோவழகன் தன்னை ஒருநொடி சமநிலைப் படுத்திக் கொண்டு, "அய்யா சீர்மதியன் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.அதற்காகத் தான் இங்கே வந்து இருக்கோம்..வீர விளையாட்டை ! விளையாட்டாக பார்க்காமல் அதற்கு பதிலாக பெண்ணைக் கேட்பது மிகப் பெரிய தவறு.தெரியாமல் செய்து விட்டான் .."என்றவர் மகன் புறம் திரும்பி, "மன்னிப்பு கேள் !"என்று உத்தரவிட்டார்.
" அப்பா என்னால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது.."என்று சீர்மதியன் சொன்னவுடன் கோபத்தில் முதன் முதலாக தன் மகனை கை நீட்டி அடித்திருந்தார் கோவழகன்.
சீர்மதியன் உட்பட அனைவரும் உச்சகட்ட திகைப்பில் அவரைப் பார்த்தார்கள்.
கோவழகனோ மகனிடம்.. "சீரா உனக்கு இன்னுமா நீ செய்த தவறு புரியவில்லை..ஒரு பெண்ணை பணையமாய் கேட்பது எவ்வளவு பெரிய வருத்ததிற்கு உரிய செய்கை தெரியுமா..?அந்த பெண்ணின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்..அவள் உயிருள்ள மனுசி..அவளின் சுயமரியாதை இங்கே கேள்விக் குறியாவது உனக்கு தெரியவில்லையா?உன் அக்காவை இப்படி யாராவது பணையமாக கேட்டு இருந்தால் நீ ஒத்துக் கொள்வாயா?"என்றார்.
"அப்பா " என்று பதிலற்று நின்ற மகனிடம் மீண்டும்..
"வேண்டாம்ப்பா..உன்னை விரும்பி தான் ஒரு பெண் திருமணத்திற்கு சம்மதித்க்கனுமே தவிர, கட்டாயத்தில் வேறு வழியில்லாமல் மணந்து கொள்ளக் கூடாது..அது உன் ஆண்மைக்கே இழுக்குப்பா.."என்றார்.
அதுவரை நடப்பதை கடனே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த தண்மதி ! முதல் முறையாக தன் மாமனை வியப்பாக பார்த்தாள். தன் மனதை அப்படியே சொன்ன அவர் மீது அந்த நொடியிலிருந்து ஏனோ அவளுக்கு இனம் புரியாத பாசமும் மரியாதையும் வந்து மனதிற்குள் ஒட்டிக் கொண்டது.
சீர்மதியனோ ," என்னை மன்னிச்சிடுங்கப்பா.."என்றவன்,அருமை நாயகத்தை பார்த்து , "தலைவரே நான் காளையை அடக்கியதற்கு ஈடாக உங்க வீட்டு பெண்ணைக் கேட்டது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள்.."என்று கை எடுத்து கும்பிட்டான்.
அருமைநாயகம் உட்பட அனைவரும் என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றார்கள்.
தூயநாச்சியோ, 'அய்யோ எல்லாம் போச்சே..வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைந்த கதையா இந்த மாப்பிளை பண்ணிட்டாறே.." என்று மனதிற்குள் புலம்பித் தவித்தார்.
குடும்பம் ஒண்ணுச் சேர இருந்த வழியை தன் கணவரே இப்படி கெடுத்துட்டாரே என்று பொன்மணி கலங்கினார்.
கோவழகன் மகன் மன்னிப்பு கேட்டதும் நிம்மதி அடைந்தவர். "அய்யா நடந்ததை கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க.. இனி என் மகனால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.." என்றவர்..ஒரு நிமிடம் கண்களை இறுக மூடிக் திறந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
பின்பு தன் மாமனாரை நிமிர்ந்து பார்த்தவர், " அய்யா முப்பது வருடமாக நான் செய்த தப்புக்காக தினமும் குற்றவுணர்வில் தவிச்சுட்டு இருக்கேன்.உண்ட வீட்டுக்கே தூரோகம் செய்த எனக்கு மன்னிப்பே கிடைக்காது . ஆனாலும், உங்களிடம் மனதார மன்னிப்பை வேண்டுகிறேன்.."என்று நா தழுதழுக்க சொன்னவர் மகனின் கையைபிடித்து இழுத்த படி திரும்பி நடந்தார்.
செம்பியன் அதுவரை நடப்பதை வியந்து பார்த்துக் கொண்டு இருந்தவர் ,கோவழகன் திரும்ப போவதை பார்த்து "ஒரு நிமிடம்.." என்றார் சத்தமாக.
கோவழகன் அமைதியாக திரும்பி பார்த்தார்.
செம்பியனோ தன் தந்தையை ஒரு முறை அர்த்தத்துடன் பார்த்து விட்டு.. "உங்கள் முடிவை நீங்க சொல்லிட்டீங்க..எங்க முடிவையும் தெரிஞ்சுட்டு போங்க.."என்றவர் தன் குடும்பத்தை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தார்.
அனைவரும் அவரின் பார்வை புரியாமல் அவரை கேள்வியாக நோக்கினார்கள்.
"எது நடக்கனும்னு இருக்கோ அது நடந்து தான் தீரும்.. இன்னாருக்கு இன்னார்ன்னு போட்ட முடிச்சை யார் மாற்ற முடியும். என் அப்பா வாக்கு கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும்.நாங்க கொடுத்த வாக்கை திரும்ப பெறும் பரம்பரை இல்லை..ஊரார் மத்தியில் கொடுத்த வாக்கை காப்பது எங்கள் கடமை.சொன்னபடியே என் மகள் தண்மதியை உங்கள் மகன் சீர்மதியனுக்கு அடுத்து வரும் முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொடுக்க எங்களுக்கு பூரண சம்மதம் .."என்றபடி தன் தந்தையைப் பார்த்தார்.
"தம்பி இது உன் பொண்ணு வாழ்க்கை எனக்காக பார்க்காமல் உன் குடும்பத்தை கலந்துட்டு உனக்கு நல்லதுன்னு தோணுனதை செய்யப்பா.." என்றார் அருமைநாயகம்.
செம்பியன் தன் மனைவி பூந்தாழையை பார்த்தார். அவரோ, கணவனுக்கு தன் சம்மதத்தை கண்களாலேயே தெரிவித்தார்.
அடுத்து மகளை பார்த்தார். அவளோ எதுவும் பேசாமல் நிற்கவும், அவர் அருகே வந்து தண்மதியின் தலையை தடவியபடி , "அப்பா முடிவில் உனக்கு சம்மதமா..?" என்றவரிடம்..அந்த நேரத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் வெறும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
அவளின் நெஞ்சிலிருந்த பாரத்தை கோவழகன் இறக்கி வைத்து விட்டார். சீர்மதியன் மீது அவளுக்கு பெரிதாக எந்த விருப்பமும் இல்லை..ஆனால் தந்தையை மீறும் துணிவும் வரவில்லை..என்னமோ தன் தலை எழுத்துப் படி நடக்கட்டும் என்று அப்போது அமைதியாகி விட்டாள்.
செம்பியன் சொன்னதைக் கேட்ட கோவழகன்"நீங்க அவசரப்படாமல் யோசிச்சு சொல்லுங்க..உங்க முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதமே! அது மட்டுமில்லாமல் வாழப் போவது உங்க பொண்ணு! அதனால் இத்தனை பேர் முன்னாடி கேட்காமல் தனியா கேட்டுவிட்டு..பொண்ணு முழு மனதுடன் விருப்பட்டால் திருமண ஏற்பாடுகளை செய்யலாம்.." என்றவர் பொதுவாக அனைவரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு திரும்பி நடந்தார்.
தூயநாச்சிக்கும் ,பொன்மணிக்கும் அப்போது தான் நிம்மதியாக இருந்தது.
சீர்மதியனுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.என்ன தான் மனதுக்கு தவறு என்று பட்டு மன்னிப்பு கேட்டாலும் .. தண்மதியை மணக்கும் வாய்ப்பு கை நழுவி போய்விட்டதே என்று மிகுந்த வேதனையாக இருந்தது.
ஆனால், செம்பியன் அவன் ஆசைக்கு உயிர் கொடுத்து விட்டார். என்று மகிழ்ச்சியில் திளைத்தவனின் மனதை அறியாமல் கோவழகன் மீண்டும் தண்மதியிடம் தனியாக பேச சொல்லி விட்டாரே..தண்மதிக்கு தன்னைக் கண்டாலே ஆகாதே!அவள் ஒத்துக் கொள்வாளா? என்ற கவலையுடனே நடந்தவனின் தோள்கள் மீது சிநேகமாக கைகளை போட்டான் கனியமுதன்.
கனியமுதனை திரும்பி பார்த்த சீர்மதியன், "மாமா இந்த கல்யாணம் நடக்குமா.. ?அப்பா வேறு தண்மதியை கேட்டு முடிவு செய்யச் சொல்றார்.. அவளுக்கு என்னைக் கண்டாலே ஆகாதே.." என்று தாழ்ந்த குரலில் புலம்பினான்.
"சீரா உன் மனசுக்கு கண்டிப்பாக நல்லாதே நடக்கும்..எனக்கு என்னமோ அந்த பொண்ணு சம்மதம் சொல்லிரும்ன்னு தோனுது.. பிடிக்கவில்லை என்றால் இப்பவே சொல்லியிருக்கும்..ஆனால், எனக்கு வேறு ஒரு சந்தேகம்.. "என்றான் கனியமுதன்.
"என்ன மாமா?" என்று பதறிய சீர்மதியனிடம்
"இல்லே உன்னை பிடிக்காதுன்னு சொல்றேயப்பா.. நாளைக்கு கல்யாணத்திற்கு அப்புறமும் ஒரு வேளை உண்மையாளுமே பிடிக்கலைன்னா ? இரண்டு பேரு வாழ்க்கையும் வீணாகிடுமே அது தான் எனக்கு குழப்பமாக இருக்கு.."
"மாமா இப்ப அவுளுக்கு என்னப் பத்தி சரியா தெரியாது.அப்புறம் அவ என்னை எதிரியாகவே பார்த்து வளர்ந்துட்டா! நாளை கல்யாணத்திற்கு பிறகு என்னை நிச்சயமா புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.என் அன்பு அவளை மாத்தும் மாமா.."
"ம்..! இருந்தாலும் இது கொஞ்சம் ரிஸ்க் தான்.."
"ஏன் மாமா என் மேல் நம்பிக்கை இல்லையா?"
"அப்படி இல்லை சீரா..உன் மேல் முழு நம்பிக்கை இருக்கு. நான் பழகிய வரை உன்னிடம் எல்லா விசயத்திலும் ஒரு நிதானம் இருக்கும்.ஆனால் இந்த ஒரு விசயத்தில் மட்டும் நீ கலங்குவதை வைத்தே நீ அந்த பெண்ணை எந்தளவு விரும்பறீன்னு புரியுது. அதனால் தான் எனக்கு பயமே.."
"என்ன பயம் மாமா.."
"அந்த பெண் உன் அன்பை புரிஞ்சுக்கனுமே..மற்றவர்களின் கட்டாயத்தில் கல்யாணம் பண்ணிட்டு வந்து உன் வாழ்க்கையை கெடுத்து விடக் கூடாதே.."
"அப்படியெல்லாம் நடக்காது. கல்யாணம் மட்டும் நடந்தா போதும் மாமா.. கண்டிப்பா என் அன்பை அவளுக்கு நான் உணர்த்திடுவேன். நீங்க வேணா பாருங்க எல்லாரும் மெச்சும் படி நாங்க வாழ்வோம்.." என்று உச்ச கட்ட நம்பிக்கையில் பேசுபவனிடம் வேறு எதையும் சொல்லி கலவரப் படுத்த வேண்டாமென்று கனியமுதன் அமைதியானான்.
ஆனால், கனியமுதன் மனதிற்குள் சின்ன பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. ஒரு தலைக் காதல் எந்தளவுக்கு சரிவரும் என்று சொல்ல முடியாதே.. தங்களைப் போல் பெரியவர்கள் முடிவு செய்து நடக்கும் கல்யாணம் வேறு விதம் அது எப்படியோ பொருந்திவிடும்.
ஆனால், இந்த மாதிரி ஒருவர் மட்டுமே விரும்பி ..கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்திற்கு உத்தரவாதம் இல்லையே..எப்படியோ தன் மச்சுனனின் ஆசை நிறைவேறி நல்ல படியாக அவன் வாழ வேண்டும் என்று உளமார கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.
கோவழகன் சென்ற பின் தண்மதியிடம் செம்பியன் அவள் முடிவை கேட்டார்.
அவளோ , "அப்பா எனக்கு யோசிக்க ஒரு நாள் டைம் வேண்டும்.."என்று கேட்டாள்.
" சரி நல்ல முடிவா சொல்லு.." என்று சொன்னவர் அவளுக்கு தனிமை கொடுத்து விலகினார்.
செம்பியனுக்கு தன் தங்கை கணவரின் நியாமான பேச்சு மிகவும் பிடித்து இருந்தது.அதனாலேயே தற்போது மகளை கட்டாயப்படுத்தாமல் முடிவை மகள் கையில் ஒப்படைத்தார்.
மற்றவர்களிடமும் அவளை யாரும் எதற்கும் வற்புறுத்த வேண்டாம், அவளே முடிவெடுக்கட்டும் என்று கூறிச் சென்றார்.
அதன் பின் யாரும் அவளிடம் அதை பற்றி எதுவும் பேசலை. அவரவர் அவர் எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தார்கள்.
தண்மதி, தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தாள்.அவளுக்கு வீட்டிற்குள் மூச்சு முட்டுவது போல் இருந்தது.மனம் ஒரு நிலை இல்லாமல் தவித்தது.
கோவிலுக்காவது போய் வரலாம் என்றெண்ணி தன் அன்னையிடம் கேட்டாள்.
" நீ தனியா போகவேண்டாம்.. ஊரூக்குள் இதே தான் பேசிட்டு இருப்பாங்க..உன்னை பார்த்தால் யாராவது ஏதாவது சொல்லுவாங்க.." என்று தடுத்தார்.
ஆனால் தண்மதியோ பிடிவாதமாக, " ப்ளீஸ் மா அண்ணாவை வேண்டுமானால் கோவிலில் விடச் சொல்லுங்க..
நான் வண்டியில் போய்ட்டு வரேன்.." என்றாள்.
பூந்தாழையும் அதற்கு மறுப்பு சொல்லாமல், மகனுடன் கோவிலுக்கு போக அனுமதி வழங்கினார்.
"வழுதிக்கும் தங்கள் தோப்பு வரை செல்ல வேண்டிய வேலை இருந்தது. அதனால் மறுப்பு சொல்லாமல் தங்கையை கோவிலில் இறக்கி விட்டு விட்டு அவன் தோப்புக்குச் சென்றான்.
செம்பியன் அடித்ததில் இருந்தே வழுதி மிகவும் அமைதியாகிவிட்டான்.அதுவும் வீட்டை விட்டுப் போ என்று அவர் கூறியது அவனை மிகவும் காயப்படுத்தியது.அதனால் எதிலும் தலையிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.
தங்கையிடம் கூட எதையும் பேசவில்லை..
தண்மதி கோவிளுக்குள் சென்று அம்மனிடம் " அம்மா தாயே !என் குழப்பத்தை தீர்த்து வைத்து நீ தான் நல்ல வழி காட்டனும்.." என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள்.
அவள் குடும்பத்தின் கெளவரவத்திற்காகவும்,தந்தைக்காகவும் வேறு வழியில்லாமல் அனைவரும் முன்பும் தந்தை கேட்ட போது சரி என்று சொன்னாள்.
ஆனால் பெரிதாக சீர்மதியன் மீது எந்த வித பிடித்துமும் வரவில்லை.அதுவும் தன்னை பகடைக் காயாக வைத்தது அவளால் மன்னிக்கவே முடியவில்லை.
என்னதான் சீர்மதியன் மன்னிப்பு கேட்டாலும், அவன் தந்தைக்காகத் தான் கேட்டு இருப்பான்.மனதார வருந்தி கேட்டு இருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினாள்.
அவளின் இந்த எண்ணமே அவனை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் அவளின் ஆழ்மனதிற்குள் பதிந்து போனதை அவளும் அறியாமல் போய்விட்டாள்.
மங்கையவள் என்ன முடிவை எடுப்பாளோ? காலத்தின் கைகளில்...
மாறாத நேசம்!