மாறாத நேசம் !
அத்தியாயம் 11
கீழ் வானிலிருந்து செங்கதிரவன் தன் முகத்தை மெல்ல மெல்ல உலகுக்கு காட்டினான்.
தண்மதி மெல்ல சோம்பல் முறித்த படியே கண்களைத் திறந்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை .இது தன் அறை இல்லையே? என்று திருதிருவென விழித்தவளுக்கு கொஞ்சம் ..கொஞ்சமாக நடப்பு நினைவுக்கு வந்தது.
ஒரு பெரு மூச்சுடன் எழுந்து அமர்ந்து படியே கணவனைத் தேடினாள். அவன் படுத்து இருந்த இடம் வெறுமையாக இருந்தது.
'ஓ! எழுந்து விட்டானா?' என்று நினைத்த படியே தன் போர்வையை மடித்து வைத்து விட்டு,படுக்கை விரிப்பையும் சரி செய்து விட்டு கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.
பொன்மணி காய்களை நறுக்கி கொண்டு இருந்தார்.தூய முல்லை சமையல் அறையில் ஏதோ உருட்டிக் கொண்டு இருந்தாள்.கனியமுதனும் கோவழகனும் அன்றைய நாள் இதழைப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
மருமகளைக் கண்டவுடன் பொன்மணி, "எழுந்துட்டியாம்மா போய் பல் துலக்கிட்டு வா காபி கலந்து தருகிறேன்.." என்றார்.
அவளோ தலையை மட்டும் ஆட்டி விட்டு குளியலறை நோக்கி சென்றாள். அவளுக்கு அந்த வீட்டிலேயே பிடிக்காத ஒன்று இந்த குளியலறையும் கழிவறையும் தான். வீட்டிலிருந்து தள்ளி வாசலில் இருந்தது.அவள் வீட்டில் படுக்கை அறையிலேயே இருக்கும்.
இங்கே ஆண்கள் பார்க்க செல்ல வேண்டும். வேறு வழி இல்லையே என்று மனதிற்குள் குமறிக் கொண்டே தான் தங்கி இருந்த அறைக்கு திரும்பி வந்தாள்.
தண்மதிக்கு முன்தினத்திலிருந்து ஒரே புடவையில் இருப்பது கசகசவென இருந்தது. குளித்து உடை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மீண்டும் குளியலறைக்குச் சென்றாள்.
தண்மதிக்கு குளித்து முடித்த பின்பு தான் குளியலறையிலேயே நின்று எப்படி புடவை உடுத்த முடியும் என்ற எண்ணமே வந்தது.
ஆனால், வேறு வழி இல்லை .புடவையை மேலே சுத்திட்டு அறைக்கு போக முடியாது.திண்ணையில் மாமனார் ,நாத்தனார் வீட்டுக்காரர் இருக்காங்களே, அவர்களை தாண்டி எப்படி போக முடியும் என்று நினைத்தாள்.
நடப்பது நடக்கட்டுமென்று ஈரத்தில் நின்றே புடவையை எப்படியோ கட்டிக் கொண்டு, தங்கள் அறைக்கு சென்று நன்றாக கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தபடி வேகமாக தங்கள் அறையை நோக்கி சென்றவள், அறையிலிருந்து வெளியில் வந்த கணவனை கவனிக்காமல் அவன் மீது மோதினாள்.
சீர்மதியன் தன் மேல் மோதி தடுமாறிய மனைவியை கீழே விழாமல் பற்றி நிறுத்தினான்.
தண்மதி அவனிடம் இருந்து நாசூக்காக விலகி நின்றாள். அவன் கேள்வியாக அவள் முகத்தை பார்க்க,
அவளோ, வாய்க்குள்ளேயே "சாரி ஏதோ ஞாபகத்தில் அவசரமா வந்ததில் கவனிக்கலே.." என்றபடி அறைக்குள் சென்றாள்.
தண்மதிக்கு தன் மீதே கோவம் வந்தது..'எதிரில் வருபவனைக் கூட கவனிக்காமல் இப்படி போய் மோதினோமே..அவன் என்ன நினைப்பான் 'என்று மனதிற்குள் தன்னையே கடிந்து கொண்டாள்.
குளித்து புத்தம் புது பூவாக தன் மீது மோதிய மனைவியின் அழகை மனதிற்குள் ரசித்தபடியே சீர்மதியன் குளிக்கச் சென்றான்.
பொன்மணி மருமகளை காணாமல், காபியுடன் அறைக்கு தேடி வந்தார். மருமகள் குளித்து முடித்து வேறு புடவையில் இருப்பதைக் கண்டு,
"ஏம்மா பச்சை தண்ணீரிலா குளித்தாய்..உடம்புக்கு ஒத்துக்குமா?சொல்லி இருந்தால் சுடு தண்ணீர் கொல்லையில் காஞ்சுட்டிருக்கு ..எடுத்துக் கொடுத்து இருப்பேனே.." என்று மனசு கேட்காமல் சொன்னார்.
அவளோ, " பரவாயில்லை நான் பச்சை தண்ணீரில் குளித்து பழக்கம் இருக்கு.." என்றாள்.
தண்மதி அத்தை என்று அழைப்பதை தவிர்த்து வந்தாள்.ஏனோ இன்னும் எதையும் அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பொன்மணியும் மருமகள் தன்னை அத்தை என்று அழைப்பதை தவிர்ப்பதை புரிந்து கொண்டார். மனதிற்குள் வலித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அன்பாகவே பேசினார்.
சின்னப் பெண்! போகப் போக மாறுவாள் என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டார்.
தான் கொண்டு வந்த காஃபியை அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு, " காஃபி ஆறுவதற்குள் குடித்துவிடுமா.." என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
தண்மதிக்கும் குளித்ததும் லேசாக வயிறு பசிக்க தொடங்கிருந்தது. சூடாக இருந்த காஃபியை எடுத்து ரசித்து ருசித்து குடித்தாள்.
சீர்மதியனும் சிறிது நேரத்தில் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு அறைக்குள் வந்தான்.
எப்போதும் அறையில் வந்து உடை மாற்றுபவன்.தண்மதிக்காக குளியலறையிலேயே மாற்றிக் கொண்டு வந்தான்.அவளுக்கு தன்னால் எந்த சங்கடமும் நேர்ந்து விடக் கூடாதென்று நினைத்தான்.
கணவனைக் கண்டதும் மெதுவாக அந்த அறையை விட்டு வெளியில் வந்தாள்.என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவளைக் கண்டு பொன்மணி "இங்கே வா தணு .."என்று சமையலறையில் இருந்து அழைத்தார்.
தண்மதியும் இது தான் சமயமென்று அங்கே சென்றாள்.தூயமுல்லை அவளைக் கண்டதும் சிநேகமாக சிரித்தாள் எதுவும் பேசவில்லை.
தண்மதியும் கீற்றாக பதிலுக்கு சிரித்து விட்டு சமையலறையை நோட்டமிட்டாள்.தன் வீட்டை விட ரொம்பவே சின்னது.வசதிகளும் குறைவு. என்று மனதிற்குள் அவள் யோசித்துக் கொண்டிருந்த பொழுது.
"தணு உனக்கு என்ன என்ன பிடிக்கும் சொல்லே.. மதியம் சாப்பாட்டிற்கு அதையே செய்துடறேன்.." என்று இயல்பாக பொன்மணி அவளை பேச வைக்க கேட்டார்.
"எனக்காக எதுவும் நீங்க செய்ய வேண்டாம். எல்லாருக்கும் எது பிடிக்குமோ அதையே செய்யுங்க.." என்று முகத்தில் அடிப்பது போல் பதில் கூறிவிட்டு சமையலறையை விட்டு வெளியில் வந்தாள்.
பொன்மணிக்கு தண்மதி பேசியது வருத்தமாக இருந்தது.அவளிடம் இயல்பாக பேசி அவள் தயக்கத்தை போக்க நினைத்தார்.ஆனால் ,அவளோ ஒட்டாமலேயே பேசினாள்.
தன் தாய்யின் முகம் வாடியதைக் கண்டு தூய முல்லை தான் "விடுங்கம்மா போகப் போக எல்லாம் சரியாகும்.புது இடம் பொருந்த கொஞ்ச நாள் ஆகும்.." என்று தம்பி மனைவிக்காக தாயிடம் பரிந்து பேசி சாமாதானம் செய்தாள்.
சமயலறையில் இருந்து வெளியில் வந்த தண்மதி என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே கொல்லைப்புறம் சென்றாள். அவளுக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது. 'இவர்கள் எல்லாம் தனக்காகப் பார்த்துப் பார்த்து.. இப்படிச் செய்தால் நான் எப்படி நினைத்து வந்ததை செய்ய முடியும்..' என்று மனதிற்குள் பேசியபடியே அருகில் இருந்த கிணற்று திட்டில் அமர்ந்து கிணற்று நீரை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
சிறிது நேரத்தில் அவள் காதருகில் "என்ன! கிணற்றுக்குள் குதித்து விடலாம்ன்னு யோசிக்கிறீயா..?"என்ற குரலைக் கேட்டு தூக்கிவாரிப் போட நிமிர்ந்தவள், அங்கே சீர்மதியனைப் பார்த்து விழித்தாள்.
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, "வீட்டிற்குள் உட்கார இடமா இல்லை.. இங்கே வந்து எதற்கு கிணற்றைப் பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கிறே .."என்று வெடித்தவனிடம்.
"காத்தாட வந்து உட்கார்ந்தேன் அது தப்பா?"
"காத்தாட உட்கார வேற இடமா கிடைக்கலை? கொஞ்சம் கால் தவறினால் கிணற்றில் தான் விழனும்.."
"ஏற்கனவே பாலும் கிணற்றில் விழுந்தாச்சு ..இனி புதுசா விழ என்ன இருக்கு.." என்று அவளும் கோபமாக பதில் சொன்னாள்.
சீர்மதியனுக்கு, அவள் சொன்னது மனதிற்குள் சுருக்கென்று வலித்தது.தன்னுடன் நடந்த திருமணத்தை தான் சொல்கிறாள் என்று புரிந்தது. ஒரு நொடி அவன் முகம் கூம்பிப் போனது.
ஆனாலும் அவளுக்கு பதில் உரைக்க வேண்டுமென்று, " யார் யாருக்கு.. யாருன்னு தலையில் எழுதி இருக்கோ ? அதை மாற்றவா முடியும். பிடித்தாலும் பிடிக்காட்டியும் வாழ்ந்து தானே ஆகனும்.."என்றான்.
"விதி எழுதி இருந்தால் பரவாயில்லை..ஆனால் என் தலை எழுத்தை சில ஆசாமிகள் தானே தங்கள் விருப்பப்படி எழுதி இருக்கிறார்கள்.நான் அதில் விளையாட்டு பொம்மை ஆகிவிட்டேன்.."
"தணு ஏன் இப்படி எல்லாம் பேசறே ..நடந்தது நடந்தாச்சு .இனி நடப்பது நம்கையில்! நாம நினைச்சால் நம்ம வாழ்க்கையை நல்லா வாழ முடியும்.." என்று தன்மையாக சொன்னவனிடம்.
"பிடிக்காத ஆளுடன் எப்படி நல்லா வாழ முடியும். அதற்கு இந்த கிணற்றில் குதித்து உயிரை விட்டு விடலாம்.." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்..
"தண்மதி..!" என்று பற்களை கடித்தபடி அளவு கடந்த கோபத்துடன், " இதுதான் உன் வாழ்க்கை..நான் தான் உன் கணவன் அதை மனசுலே வச்சுக்கோ.. இன்னொருவாட்டி இப்படி பேசுனே நான் மனுசனாக இருக்க மாட்டேன்.." என்றவனின் கோபத்தைக் கண்டு அசையாமல் கற்சிலையாக நின்றாள்.
அவனோ ஆத்திரம் அடங்காமல், " எனக்கு நெக்கடீவ்வா பேசறதே பிடிக்காது. எதுவா இருந்தாலும் முட்டி மோதி பார்த்துடனும். இனி உன் மனசுலே இந்த மாதிரி நெகட்டிவ் தாட்ஸ்சே வரக்கூடாது.எங்கே நீ போனலும் உன் பின்னே நான் வந்துடுவேன் ஞாபகம் வச்சுக்கோ.." என்று கூறியவனிடம்.
"எனக்குன்னு ஒரு மனசு இருக்கு.அதிலும் ஆசைகள் இருக்கும்ன்னு உங்க யாருக்குமே புரியாதா?"
"அது புரிந்ததால் தான் உன்னை எந்த விதத்திலும் நேற்று தொந்தரவு செய்யாமல் நடந்து கொண்டேன்.உன்மனம் என்னை ஏற்கும் வரை நான் காத்திருப்பேன்.."
"அது இந்த ஜென்மத்தில் நடக்காது.."என்று முகத்தில் அடித்தது போல் கூறியவளிடம்,
"அடுத்த நொடியே என்ன நடக்குதுன்னு தெரியாது. இதில் நீ ஜென்மத்திற்கு போய்ட்டே.."
"என் மனம் எனக்கு தெரியும்.."
"ஓ!அப்படியா? அதையும் பார்ப்போம்.நீ மாறுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என் அன்பு பொய்யல்லா ..அது உன்னை மாற்றும்.."
"ஓ.. அவ்வளவு கர்வம்.. "
"இதுக்குப் பெயர் கர்வம் இல்லை. நான் என் அன்பின் மீது வைத்த நம்பிக்கை.."
"அன்பு!.. எது மாட்டுக்கு ஈடாக பெண்ணை கேட்பதா அன்பு ! கொஞ்சமாவது அன்பு இருந்தால் அப்படி செய்வீங்களா?"என்று தன் மனதில் அரித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டே விட்டாள்.
அவனோ, மனைவி கேட்ட கேள்வியில் சில விநாடிகள் திகைத்து நின்றவன், அடுத்த நொடி தன்னை சுதாரித்துக் கொண்டு , "தணு இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியலை..நம்ம கல்யாணம் தான் இரு குடும்பத்தையும் ஒண்ணு சேர்க்கும்ன்னு நினைச்சேன்.."
"ஓ..! அப்போ இரு குடும்பத்தை ஒண்ணு சேர்க்க என் வாழ்வை பலிக்கடவாக்கீட்டீங்களா..?"
"அப்படி இல்லை.எனக்கு உன்னை பிடிக்கும் ! உன்னை கல்யாணம் செய்ய எனக்கு வேறு வழி தெரியலே .அது தான்.."
"உங்களுக்கு பிடித்தால் போதுமா? எனக்கு பிடிக்க வேண்டாமா..?உங்களை பார்த்தாலே பிடிக்கவில்லை.." என்று வார்த்தைகளை அமிலமாக கொட்டினாள்.
அவனோ மனதிற்குள் நொந்து போனான். அவளிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் சில நொடிகள் மவுனம் காத்தான்.
அவனின் மெளனம் அவளுக்கு தைரியத்தை கொடுக்க இன்னும் அவனை கூறு போட வார்த்தைகளை விட்டாள்.
"நாம் அவளுக்கு பொருத்தமா? என்று ஒரு முறையாவது நினைச்சு பார்த்தீங்களா.. ?உங்க கலருக்கும் என் கலருக்கும் கொஞ்சமாவது பொருத்தம் இருக்கா?மாடு மேய்ப்பவர்க்கு நான் கேட்குதா? மாட்டுககாரனுக்கு தகுந்த பெண்ணை போய் பிடிக்க வேண்டியது தானே.." என்றவளிடம்..
"தண்மதி.!" என்று கட்டுப்படுத்த முடியாத சினத்துடன், " என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசு. ஆனால் ,என் தொழிலைப் பற்றி கேவலமாக பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்..உனக்கு இங்கு இருக்க இஷ்டம்ன்னா இரு! இல்லைன்னா நான் கட்டிய தாலியை கழற்றி வீசி விட்டு உன் வீட்டுக்கு போ..நான் எந்த விதத்திலும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.." என்று கண்கள் சிவக்க கூறியவன் அடுத்த நொடி அங்கிருந்து சென்றான்.
தண்மதி அவனின் வார்த்தைகளைக் கேட்டு மண்ணோடு மண்ணாக வேரூன்றி போய் விட்டாள். தாலியை கழற்றி வீசுவதா ?என்ன வார்த்தை சொன்னான். இவனுக்கு வேண்டும்மென்றால் தாலி கட்டுவான்.வேண்டாம் என்றால் கழற்றி வீசி விட்டு போகனுமா..? உள்ளதை சொன்னால் கோபம் வருகிறதா? 'என்று நினைத்தவளுக்கு கண்களில் நீர் தாரை தாரையாக வடிந்தது.
தண்மதிக்கு சீர்மதியனை பிடிக்காது தான்! ஆனால் திருமணமான அடுத்த நாளே அவன் கூறிய வார்த்தைகள் அவளை அந்த நொடி காயப்படுத்தியது. புது இடம் வேறு! அதுவே அவளின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
தண்மதி மட்டுமன்றி இன்னொரு ஆளும் சீர்மதியன் பேசியதை கேட்டு கற்சிலையாக ஸ்தம்பித்தார்.
நேசம் தொடரும்..