மாறாத நேசம்!
அத்தியாயம் 15
சீர்மதியன் இவள் எதற்கு பக்கத்தில் வந்து நிற்கிறாள்.எதையாவது தூக்கிப் போட்டு கொல்லப் பார்க்கிறாளா? என்றெல்லாம் எண்ணிக் கொண்டு இருந்தவனின் மேல் ,சில நொடிகளில் அவளே விழவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..
விழிகளை திறந்து அதிர்ச்சியுடன் பார்த்தான். அவளின் கணம் அவனுக்கு சுகமான சுமையாக இருந்தது.
அவளோ, பேய் அறைந்தது போல் அவனைப் பார்த்து விழித்தாள்.அவளுக்கு பேச்சே மறந்துவிட்டது.
கணவன் மேல் இருந்து எழு முயன்றவளுக்கு எழ முடியவில்லை.பாவமாக அவனையே பார்த்தாள்.
சீர்மதியன் அவளின் பூ முகத்தை இவ்வளவு நெருக்கமாக பார்த்ததும், தன்னை மறந்து இமை தட்டாமல் தன்னுள் அவளை பொக்கிஷமாக நிரப்பிக் கொண்டு இருந்தான்.
தண்மதி செய்வது அறியாமல் வெட்கிச் சிவந்தாள். ஒருவழியாக சீர்மதியனுக்கு நிகழ்வு உறைத்தது. அவளால் எழ முடியவில்லை என்பதை உணர்ந்து, அவளை மெல்ல தன் இடமிருந்து பிரித்து அருகில் நகர்த்தினான்.
தண்மதிக்கு அப்போது தான் மூச்சே வந்ததது.அவனிடம் இருந்து சட்டென்று நகர்ந்து அமர்ந்தவள் ஒரு வழியாக வாயைத் திறந்தாள்.
"வந்து .. நா உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்! நான் சேலையை தூக்கி வீசியிருக்க கூடாது! நீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லியதையும் கேட்காமல் சேலையை என் மடி மீது வச்சதும் கோபத்தில் தூக்கி போட்டுடேன்..நான் செய்தது தப்பு தான்..அதுவும் அந்த நேரத்தில் அத்தை மாமா வருவாங்கன்னு நானும் எதிர்பார்க்கலை சாரி.." என்றாள்.
சீர்மதியன் பதிலே பேசாமல் வீட்டின் விட்டத்தை வெறித்த படி அமைதியாக படுத்து இருந்தான்.
அவனின் மெளனத்தை தாங்க முடியாமல் "நிஜமாளுமே நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன்..இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன்.." என்றவளுக்கு ஏனோ குரல் தழுதழுத்தது.
சீர்மதியன் பதிலே சொல்லாமல் அமைதியாகவே இருந்தான்.
தண்மதியோ, மனதிற்குள் 'நான் செய்தது தப்பு தான்..அதை உணர்ந்து தானே மன்னிப்பு கேட்கிறேன். ஆனாலும், எதுவுமே பேச மாட்டீங்கிறானே..
இவனை நான் சேலை கேட்டேனா? என் விருப்பம் இல்லாமல் சேலையை மடி மீது வைத்தால் கோபம் வராதா? ரொம்பத் தான் பண்றான்..இவங்கிட்ட எல்லாம் இறங்கியே போக கூடாது!' என்று மனதிற்குள் கணவனை வசைப்பாடிக் கொண்டிருந்தாள்.
அவனோ, அவளின் மனக்குழப்பம் புரியாமல் அவள் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டதையும், தனமேல் விழுந்த நிகழ்வையும் மனதில் அசைபோட்ட படி வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தான்.
தன் பதிலுக்காக ஒருத்தி காத்துக் கொண்டு இருப்பதை அவன் உணரவில்லை .
தண்மதி அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாததால், எழுந்து சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
கணவனை மனதிற்குள் கரித்துக் கொட்டிய படியே படுத்திருந்தவள், எப்போது உறங்கினாள் என்றே அவளுக்கு தெரியவில்லை..சீர்மதியனும் அவள் மன்னிப்பு கேட்டதில் மனம் லேசானதில் தன்னை மறந்து உறங்கினான்.
காலையில் எப்போதும் போல் முதலில் சீர்மதியன் தான் விழித்தான். தூக்க கலக்கத்தில் தன் படுக்கையை எடுத்து மடித்து வைத்து விட்டு மனைவியின் அருகில் சென்று பார்த்தான்.
அவளோ, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..கையை தலைக்கு கொடுத்து தன்னை குறுக்கிக் கொண்டு படுத்து இருந்தாள்.முகத்தில் மென்மையும் அமைதியும் வழிந்தது .
சிறிது நேரம் நின்று பார்த்தவனுக்கு மனம் லேசானது.அவள் தூங்கும் அழகை தன்னுள் நிரப்பிக் கொண்டு பண்ணைக்கு கிளம்பினான்.
தண்மதி துயில் கலைந்து விழித்ததும் தன் கணவனைத் தேடினாள்..அவனைக் காணாததால் பண்ணைக்கு சென்று இருப்பான் என்று நினைத்தவள் கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்று எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரம் படுக்கையிலேயே உருண்டவள், மெல்ல எழுந்து அறையை விட்டு வெளியில் வந்தாள். தூய முல்லை குழந்தைக்கு உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.பொன்மணி சமையலறையில் உருட்டும் சத்தம் கேட்டது..
தண்மதியோ எப்படி அனைவர் முகத்திலும் விழிப்பது.நேற்று தான் நடந்தது கொண்டது எல்லோர் மனதிலும் வெறுப்பை கொடுத்து இருக்கும்.யாரும் தன்னுடன் பேச மாட்டார்கள் என்று எண்ணிய படி நின்றிருந்தவளைப் பார்த்து, "தணு எழுந்துட்டீயா? போய் பல் தேய்த்துட்டு வா காபி குடிப்பீயாம் .."என்று இயல்பாக பேசிய தூயமுல்லையை வியந்து பார்த்தபடி நின்றாள்.
பொன்மணியோ, தூயமுல்லை பேச்சு சத்தம் கேட்டு வெளியில் வந்தவர் தண்மதியை கண்டதும், "தணு போய் பல் தேய்த்துட்டு வாம்மா காபி கலந்து எடுத்துட்டு வரேன். நைட் சாப்பிடாம படுத்துட்டே பசிக்கும் போம்மா.." என்று எதுவுமே நடக்காத மாதிரி பேசிய மாமியாரை பார்த்து விழித்தாள்.
தண்மதிக்கு அவர்கள் தன்னிடம் காட்டும் அக்கறை மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.
மாமியாரிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு பல் துலக்கச் சென்றாள்.
சீர்மதியன் பால் பண்ணையில் வேலை ஆட்களுடன் சேர்ந்து மாடுகளுக்கு தேவையானதை செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு எப்போதும் அந்த வாயில்லா ஜீவன்கள் மேல் கொள்ளைப் பிரியம்.
அவனின் வாழ்வாதாரமே அவைகள் தானே.அதனாலேயே மாடுகளுக்கு செய்யும் வேலைகளை விரும்பியே செய்வான்.வேலையாட்களிடமும் முதலாளி என்ற கவுரவத்தைக் காட்டாமல் இறங்கிச் செய்வான்.
சீர்மதியனே கூடச் சேர்ந்து செய்யும் போது வேலையாட்களும் விரும்பியே வேலை செய்வார்கள்.
அருகில் தன் தந்தை வந்து நின்றதைக் கூட கவனிக்காமல் சீர்மதியன் மும்மரமாக வைக்கப் போரிலிருந்து வைக்கப்புல்லை எடுத்து மாடுகளுக்கு போட்டுக் கொண்டிருந்தவனை "சீரா .."என்ற அழைப்பு அவசரமாக திரும்பி பார்க்க வைத்தது.
அங்கே தந்தையைக் கண்டதும்..ஆச்சிரியத்துடன் கையில் இருந்த வைக்கப்புல் கட்டை போட்டுவிட்டு அவரை நோக்கி வேகமாக சென்றான்.
"அப்பா நீங்க எங்கே இங்கே? இவ்வளவு தூரம் நடந்தா வந்தீர்கள்.." என்று கேட்ட மகனிடம்,
"ஆமாம் பா, உனக்கு டிபன் எடுத்து வந்தேன்.நைட்டும் சாப்பிடலே.. வேலையை காரணம் காட்டி வீட்டுக்கும் வரமாட்டே.. அது தான் நானே எடுத்து வந்தேன். கை கழுவி விட்டு வந்து சாப்பிடுப்பா.." என்றவாறு அவனின் அலுவலக அறைக்குச் சென்றார்.
சீர்மதியனோ வேகமாக கை கால் கழுவி விட்டு அறைக்குச் சென்றான்.
கோவழகன் மகனுக்கு உணவை எடுத்து பரிமாறி இருந்தார்.
"நீங்க ஏன்ப்பா இதெல்லாம் செய்றீங்க..நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா..?" என்று தந்தையிடம் கடிந்து கொண்டான் சீர்மதியன்.
மகன் கோபித்துக் கொள்வதைப் பொருட்படுத்தாமல், "உடல் தேய உழைக்கும் மகனுக்கு ஒரு வாய் சாப்பாடு போடுவதில் என்னப்பா தப்பு.." என்றவர், மகன் நெத்தியில் முத்து.. முத்தாக, வடிந்த வேர்வையை தன் கையிலிருந்த துண்டால் துடைத்து விட்டார்.
சீர்மதியன் அவரின் செயலில் ஒரு நிமிடம் நெகிழ்ந்து போய் அமர்ந்து இருந்தான்.
எப்போதுமே கோவழகன் மகனிடம் பாசம் காட்டுபவர் தான்! இருந்தாலும் இன்று அவரின் அக்கறை அவனின் விழிகளில் நீரை தேங்க வைத்தது.
தன் மனக்காயங்களுக்கு மருந்தாக இருந்தது.. மெல்ல தந்தையின் நெஞ்சில் உட்கார்ந்தவாறே சாய்ந்தவன் "தேங்க்ஸ் பா.." என்றான்.
அவரோ அவனின் தலையை பாசத்தோடு தடவியபடியே, "சீரா வாழ்க்கை ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும். எல்லாம் ஒரு நாள் சரியாகும்பா..காலம் தான் எல்லாவற்றிக்கும் சிறந்த மருந்து! நீ எதற்கும் கலங்காதே... நாங்க உனக்கு துணையாக எப்போதும் இருப்போம்.." என்று மறைமுகமாக மகனுக்கு ஆறுதல் சொன்னார்.
மகனுக்கும், மருமகளுக்கும் இடையில் ஒன்றும் சரியில்லை எனறு தெரிந்து இருந்தாலும், நேற்று கண்கூட பார்த்ததிலிருந்து அவருக்கு மனமே சரியில்லை..
இரவெல்லாம் தன்னிடம் புலம்பி தவித்த மனைவியை தன் வலியை மறைத்துக்கொண்டு ஆறுதல் படுத்தினார்.
கணவன் மனைவி இருவரும் உறங்கவே இல்லை.தன் மகன் வாழ்க்கை என்னாகுமோ? என்ற பயம் அவர்கள் மனதை நெருப்பாய் சுட்டது.
கோவழகன் மகனிடம் தனியாக பேச வேண்டும் என்று தான் ,மனைவி கொடுத்த உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.
மகன் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டு, நடமாடுகிறான் என்று அவருக்கு இப்போது உறுதியானது.
மகனை உண்ணச் சொல்லி விட்டு அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
இது மகனே தேர்ந்தெடுத்த வாழ்க்கை தான்.அதற்காக அப்படியே விடமுடியுமா?ஏதாவது செய்து இருவரையும் வாழ வைக்க வேண்டும் என்று எண்ணினார்.
மகன் உண்டு முடித்து வந்ததும். "சீரா நாம் நினைத்தபடி வாழ்க்கை அமையாதுப்பா.. ஆனால் ,கிடைத்த வாழ்க்கையை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வது தான் புத்திசாலித் தனம்.."என்றவர் மகனை ஆழ்ந்து பார்த்தார்.
அவனோ முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல் அசையாமல் நின்றான்.
"தண்மதியும் சின்னப்பெண்.. பிடிக்காத திருமணம்! மனம் மாற கொஞ்ச நாள் ஆகும். அதுவரை நீ தான் பொறுத்து போகனும் பா..அதற்காக இப்படி பண்ணையே கதி என்று இருந்தால் எப்படி? அவளுக்கு உன் முகமே மறந்து விடும்.." என்று சிரிப்புடன் நிறுத்தினார்.
சீர்மதியன் தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அமைதியாக நின்றான்.அவன் மனம் தன்னால் தன் குடும்பத்தினரும் கஷ்டங்களை அனுபவிக்கிறாங்களா? என்று கலங்கியது.
மகனின் கலங்கிய தோற்றத்தைக் கண்டு "சீரா நீ வருத்தப்படாதே எல்லாம் சரியாகும். அம்மாவும் நானும் பார்த்துக் கொள்கிறோம்.." என்றவரிடம்..
"என்னால் எல்லாருக்கும் சிரமம்.. உங்க எல்லோரையும் கஷ்டப்படுத்துறேன் என்னை மன்னிச்சிடுங்கப்பா.." என்றவனின் கைகளை ஆறுதலாக பிடித்துக் கொண்டார்.சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தனர்.
மகனின் கைகளை அழுத்திய படி "எங்களுக்கு என்ன கஷ்டம் ?நீ சந்தோஷமா இருக்கனும் அது மட்டும் தான் எங்கள் ஆசை.அதுவும் சீக்கிரம் நடக்கும்.நீ மனசை தளரவிடாமல் முன்னே மாதிரியே சந்தோஷமா இருந்தாலே போதும்.." என்று மகனை சமாதனப்படுத்தினார்.
சிறிது நேரம் பண்ணை விசயம் பற்றி மகனிடம் பேசி விட்டு, வீட்டிற்கு திரும்பினார்.சீர்மதியன் வண்டியில் கொண்டு வந்து விடுவதாக சொன்னதைக் கேட்காமல், நடந்தால் நல்லது என்று மகனிடம் பிடிவாதம் பிடித்து நடந்தே வந்தார்.
பாதி வழி வந்தவருக்கு வெய்யலின் தாக்கம் உடலை வாட்டியது.. வண்டியில் வந்து இருக்கலாமோ? என்று எண்ணத் தோன்றியது.
என்ன செய்வதென்றே தெரியாமல் அருகில் இருந்த மரத்தடியில் சற்று நேரம் சாய்ந்து நின்று கொண்டார்.
மனப்பாரமோ? உடல் தளர்வோ ?ஏதோ ஒன்று அவரை நடக்க விடாமல் செய்தது.
சரியாக அந்த சமயம் அந்த வழியாக வந்த முறைவழுதியின் கண்களில் அவர் பட்டார்.
அவர் நின்ற கோலம் அவனை தூக்கி வாரிப் போட வைத்தது. அவரிடம் அவனுக்கு எப்போதும் பெரிதாக பாசம் இருந்ததில்லை..தங்கை திருமணத்தில் இருந்து தான் அவனுக்கு அவரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் நல்ல குணமும் புரிந்தது.
அதனால், ஏனோ அவர் மேல் புதிதாக பாசம் வந்து ஒட்டிக் கொண்டது.
அவரை அந்த கோலத்தில் பார்த்ததும்,உடனே பதற்றத்துடன் அவர் அருகில் சென்று, அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு அவரிடம் சென்றான்.
அவரோ, இவனை உணரும் நிலையில் கூட இல்லாமல் மரத்தின் மேல் தலையை சாய்த்து கண்களை மூடி நின்று இருந்தார்.
இவன் அழைத்தைக் கூட உணராமல் நின்றவரின் தோள்களைத் தொட்டு, "மாமா ..மாமா.. என்ன செய்கிறது..ஏன் இப்படி நிற்கிறீங்க..வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்.." என்று உலுக்கினான்.
அவரோ மெல்ல கண்களை திறந்து வழுதியை பார்த்து வியந்தபடியே, " எனக்கு ஒன்றும் இல்லைப்பா..வெய்யலில் நடந்து வந்ததில் லேசா தலைசுத்துச்சு அவ்வளவு தான் .."என்றார் பேச முடியாமல்.
வழுதி அவரைக் கை தாங்கலாக அழைத்துச் சென்று, வண்டியில் ஏறவைத்தான். அவரும் மறுப்பு சொல்லாமல் ஏறி அமர்ந்தார்.
வழுதி நேராக அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.அவர் நின்ற தோரணை அவனை ஒரு நொடி மனசை கலங்க வைத்து விட்டது.
எதிரியாய் நினைப்பவர்களைக் கூட அன்பு என்னும் மாமருந்து மாற்றிவிடுகிறது. காலத்தின் கையில் அனைவரும் பொம்மைகள் தான்.
நேசம் தொடரும்..