Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Maraadha nesam _16


மாறாத நேசம் !


அத்தியாயம் 16


தண்மதி,ஏழிசையுடன் திண்ணையில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தாள்.அவளை எந்த வேலை செய்யவும் பொன்மணி விடுவதே இல்லை..


தண்மதியும் கூட சேர்ந்து செய்யனும் என்ற நினைப்பே இல்லாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாள்.


வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்கவும் ,சீர்மதியன் தான் வந்து இருக்கானோ ?என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தாள்.


அங்கே தன் அண்ணனும் ,சோர்ந்து போய் மாமனாரும் வருவதைக் கண்டு தண்மதி எழுந்து சென்று , "வாங்க அண்ணா.." என்றவள் ஓடிப்போய் மாமனார் கையில் இருந்த சாப்பாட்டுக் கூடையை வாங்கினாள்.


"என்னாச்சன்னா.." என்று கேட்டபடி அண்ணனுடன் சோர்ந்து வந்த மாமனாரை தானும் தாங்கி பிடித்து, அழைத்து வந்து திண்ணையில் அமர வைத்தாள்.


பொன்மணி குளித்துக் கொண்டு இருந்தார்..தூயமுல்லையோ குழந்தைக்கு பசி ஆற்றிக் கொண்டு இருந்தாள்.


தண்மதி மாமனாரின் சோர்ந்து முகத்தைக் கண்டு ஓடிப் போய் கோவழகனுக்கு தண்ணீர் எடுத்து வந்து முதலில் கொடுத்து விட்டு..அண்ணணுக்கும் அவருக்கும் முதன்முதலாக தன் புகுந்த வீட்டில் தேநீர் கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.


பொன்மணியும் குளித்து விட்டு வந்தவர். தன் கணவர் சோர்ந்து அமர்ந்து இருப்பதையும், அதிசயமாக வந்திருந்த வழுதியையும் பார்த்தவர், தன் அண்ணன் மகனை "வாப்பா நல்லா இருக்கீயா.." என்று கேட்டார்.


முறை வழுதி தலையை ஆட்டினான்.அப்போது, தண்மதி தேநீர் கொண்டு வந்து அவர்கள் இருவருக்கும் கொடுப்பதை பொன்மணி ஆச்சரியமாக பார்த்தார்.


மகனுக்கு சாப்பாடு கொடுக்கச் சென்ற கணவன் முகம் ,ஏன் வாடி இருக்கு? என்று எண்ணியபடி, " என்னாச்சுங்க முகம் சோர்வா இருக்கே.." என்று கேட்டபடியே அருகில் சென்றார்.


வழுதியோ, தன் அத்தையிடம் நடந்ததை சுருக்கமாகச் சொன்னான்.


" ஏங்க உங்களுக்கு இத்தனை பிடிவாதம். சீராவுடனேயே வண்டியில் வந்து இருக்கலாமே..நல்ல வேளையாக வழுதி பார்த்து அழைத்து வந்தான். இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும் .."என்று கணவனைக் கடிந்து கொண்டார்.


வழுதியோ சீர்மதியனை மனதிற்குள் திட்டித் தீர்த்தான்.'வயதானவர் தனக்கு சாப்பாடு எடுத்து வருகிறார் என்ற அறிவு கூடவா இல்லை அவனுக்கு..

அப்படி என்ன தலை போகிற வேலை .. அவனால் வர முடியவில்லை என்றாலும்,வயதான தந்தை தனக்காக இத்தனை தூரம் வந்தாரே அவரை பத்திரமாக யாருடனாவது அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கா? என்று நினைத்து கரித்துக் கொட்டினான்.


கோவழகன் கொஞ்சம் சோர்ந்து தான் தெரிந்தார்.வழுதிக்கு அவரை அப்படியே விட்டு போக மனம் வரவில்லை.அவரை வற்புறுத்தி மருத்தவரிடம் அழைத்துப் போனான்.



அவருக்கு கொஞ்சம் ரத்தக்கொதிப்பு அதிகமாக இருந்தது. அது தான் வெய்யிலில் நடந்து வரவும் தலை சுற்றி இருக்கிறது .அதை குறைப்பதற்கு மாத்திரை மட்டும் எழுதி கொடுத்தார் மருத்துவர்.


வழுதி மருந்து மாத்திரைகளை வாங்கி கொண்டு அவரையும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டில் விட்டுச் சென்றான்.



கோவழகனும், பொன்மணியும் வழுதிக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னார்கள்.



"இதற்கு எதற்கு நன்றி இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.." என்று கூறியவன் தங்கையிடம் சிறிது நேரம் பேசிவிட்டே வழுதி தன் வீட்டிற்குச் சென்றான்.



கோவழகனுக்கு முடியவில்லை என்றதும் வழுதிக்கு மனசு தாங்கலே..அவனுள் அவர் மீது இனம் புரியாத பாசம் உருவாகி இருந்தது.



தன் வீட்டிற்கு போனதும் கோவழகன் உடல் நிலை பற்றி தன் தாயிடம் சொன்னான்.



வழுதி சொன்னதும் சம்பந்தியை பார்க்க.. அன்று மாலை செம்பியன் தன் தாயையும்,மனைவியையும் அழைத்துக் கொண்டு கோவழகனின் வீட்டிற்கு வந்து விட்டார்.



தண்மதி தாய் தந்தை பாட்டியைப் பார்த்த மகிழ்ச்சியில் எல்லாருக்கும் அவளே டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.



கோவழகனுக்கு தன் சம்பந்தி வீட்டார் தன்னை மதித்து நலம் விசாரிக்க வந்தது அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.



இது எதுமே தெரியாமல் சீர்மதியன் தந்தை சொன்னதற்காக அன்று மாலை நேரமாக வீட்டிற்கு வந்தான்.



அங்கு மாமனார் குடும்பத்தை காணவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..இருந்தாலும், மரியாதைக்கு அவர்களை வரவேற்று நலம் விசாரித்து விட்டு அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து இருந்தான் .



அப்போது தான் தன் தந்தைக்கு உடம்பு முடியாமல் போனதே அவனுக்கு தெரிந்தது..தன்னிடம் யாருமே சொல்லவில்லை என்ற கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தான்.


தண்மதி முதன் முதலாக கணவனுக்கு தேநீர் போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.


அவனோ, மாமனார் வீட்டு முன்பு மறுக்க முடியாமல் வாங்கி குடித்தான். தேநீரின் ருசியைக் கூட உணராமல் குடித்தான்.


அவனுக்கு தன் மனைவி மீதும் அளவு கடந்த கோவம் வந்தது. இவளாவது சொல்லி இருக்கக் கூடாதா? என்று எண்ணினான்.


செம்பியன் குடும்பம் கிளம்பும் வரை அமைதி காத்தவன், அவர்கள் சென்ற பின், "இத்தனை நடந்து இருக்கு..என்னிடம் ஒரு வார்த்தை சொன்னீர்களா..?யாரோ மாதிரி நான் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கு.." என்று வருத்தத்துடன் சொன்னான்.


மகன் வருத்தபட்டது பொறுக்க முடியாமல் பெற்றவர்கள் மகனை சாமாதனப் படுத்தினார்கள்.


சீர்மதியன் மனதிற்குள் தன் தந்தையை தனியாக அனுப்பி இருக்க கூடாது என்று மிகவும் வருத்தப்பட்டான்.


அவனுக்கு மனம் மிகுந்த சோர்வாக இருந்தது.எதிலையும் மனம் ஒட்டாமல் போகவும் தலைவலி என்று சொல்லிவிட்டு வந்து பாய்யை விரித்துப் படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை..


கண்களை மூடி படுத்திருந்தவனுக்கு தன் திருமணத்திற்கு முன்பு தன் மாமன் கனியமுதன் சொன்னது அவன் காதுகளில் அப்போதும்‌ கேட்டது..


பிடிக்காதவளை கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்தால் இருவரும் வாழ்க்கையும் வீணாகி விடும் என்றாரே அது எவ்வளவு உண்மை!


மனம் ஒத்த தம்பதிகளாக இருந்திருந்தால், வீட்டில் இத்தனை நடந்திருக்கே! தனக்கு ஒரு போன் பண்ணி சொல்லி இருப்பாள் தானே, என்று எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை .


அவன் மனதை போட்டு குழப்பிக் கொண்டதில் தாங்க முடியாத தலைவலி வந்ததது தான் மிச்சம்.


கண்ணே திறக்க முடியாமல் படுத்து இருந்தவன் இரவு உணவுக்கு தண்மதி வந்து அழைத்த போது தான் கண்களை திறந்தான்.


அவன் கண்கள் ரத்தச் சிவப்பில் இருந்தது.தண்மதி பயந்தே போய் விட்டாள்."என்னாச்சு கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு.." என்று அவள் கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை..


அன்று மட்டுமின்றி அடுத்து வந்த நாட்களில் சீர்மதியன் யாரிடமும் சரியாக பேசவில்லை .. காலையில் நேரமாக பண்ணைக்கு சென்றால், இரவு பதினோரு மணிக்கு மேல் தான் வீடு திரும்புவான்.


தன் நினைவுகளிலிருந்து தப்பிக்க பண்ணை வேலையிலேயே முழ்கிப் போனான்.


சரியாக அந்த நேரத்தில் பக்கத்து ஊரில் ஒரு கோழிப் பண்ணை விலைக்கு வந்ததது.


சீர்மதியன் அதை வாங்கலாம் என்று யோசித்தான். தன் தந்தையிடம் அதைப் பற்றிக் கூறி ஆலோசனை கேட்டான்.


அவரோ, " சீரா பால் பண்ணை பார்க்கவே உனக்கு நேரம் போதவில்லை. இதில் இதை எப்படி பார்ப்பாய்.உனக்கு வீடு , ஒரு குடும்பம் இருக்குன்னு ஞாபகம் இருக்கா?"



"அப்பா இந்த வயதில் உழைக்காமல் எப்போது உழைப்பது.அதெல்லாம் நேரம் ஒதுக்கி பார்த்துக்கலாம்.." என்று‌ பிடிவாதம் பிடித்து தந்தையிடம் சம்மதம் வாங்கினான்.



"சீரா இருக்கிறதே போததா..?இப்பவே காலையில் போனா நைட் தான் வீட்டுக்கு வரே.. இதில் இதையும் வாங்கிட்டா, நீ அங்கேயே குடி இருப்பே..வீடுன்னு ஒண்ணு இருப்பதே உனக்கு மறந்து போகும்.." என்று பொன்மணியும் தன் பங்குக்கு மகனிடம் தன் பிடித்தமின்மையை சொன்னார்.


ஆனால் ,அவனோ பேசிப் பேசி தாயையையும் சம்மதிக்க வைத்தான்.


தண்மதி மட்டும் இவனுக்கு மாடு, கோழியைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாதா? என்று நினைத்தாள்.

ஆனால், அதை அவனிடம் சொல்லும் தைரியம் மட்டும் வரவில்லை..


சீர்மதியன் நினைத்ததை சாதித்தான்..கோழிப் பண்ணையை வாங்கியதும் எல்லாரும் பயந்த மாதிரி வீட்டிற்கு வருவது ரொம்பவும் குறைந்து விட்டது.


தூயமுல்லை பிறந்த வீட்டில் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டுத் தன் புகுந்த வீட்டிற்கு ஐந்தாம் மாதம் சென்றாள்.


அவள் போகும் முன், தண்மதி தூக்கி எறிந்த புடவையை அவளிடம் கொடுத்து, " நான் தான் உன் கோபம் குறையட்டும் என்று எடுத்து வைத்தேன்.என்றாவது உனக்கு தேவைப்படும்ன்னு நினனைத்தேன்.."என்று புதிர் போட்டாள்.


தண்மதி எதுவும் சொல்லாமல் அமைதியாக அதை வாங்கிக் கொண்டாள்.


" தணு உனக்கு என் தம்பியை பிடிக்குமான்னு எனக்கு தெரியலை..ஆனால் அவனுக்கு நீ என்றால் உயிர்..உன்னை எப்படியாவது திருமணம் பண்ண வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டான்.."என்று சொன்னவளை தண்மதி மெளனமாகப் பார்த்தாள்.


" நம்ம பாட்டி தான்‌ சல்லிக்கட்டு விழாவில் ,தாத்தாவிடம் காளையை அடக்கினால் உன்னை தருவாரான்னு தம்பியை கேட்கச் சொன்னாங்க.. அப்ப கூட தம்பி ரொம்ப யோசிச்சுத் தான்‌ சம்மதித்தான்.." என்று தூயமுல்லை‌ உண்மையைப் போட்டு உடைத்தாள்.


தண்மதி தூயமுல்லை கூறிய உண்மையைக் கேட்டு திகைப்பின் உச்சத்திற்கு சென்றாள்.


தூயமுல்லை அவளின் திகைப்பை பொருட்படுத்தாமல், "தம்பி ரொம்ப நல்லவன்..நீ அவனை வில்லனைப் போல் பார்க்காதே.. உங்களுக்குள் என்ன கருத்து வேறுபாடோ எனக்கு தெரியாது. ஆனால் ,அவன் உன்னை உயிராக நேசிக்கிறான். அந்த நேசத்தை தொலைச்சுடாதே.. அவன் இப்படி தொழிலே கதி என்று கிடப்பது நல்லதில்லை..இருவரும் மனம்‌ விட்டு பேசுங்கள் எல்லாம் சரியாகும்.." என்றாள் ஆதங்கத்துடன்.


தண்மதி பதிலே சொல்லாமல் நிற்பதைப் பார்த்து, அவள் கைகளை மென்மையாகப் பற்றிக் கொண்டு, " தணு நான் சொல்வதை எல்லாம் சொல்லிட்டேன்..இனி உன் விருப்பம்..நீயும்‌ தம்பியும் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வாங்க.." என்று கூறிவிட்டு தன் புகுந்த வீட்டிற்குச் சென்றாள்.


தூயமுல்லை சொன்னதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தண்மதி தவித்தாள்.அவள் கொடுத்த புடவையை தன் அறைக்குச் சென்று பிரித்துப் பார்த்தாள்.


சீர்மதியன் சொன்னது போல் புடவை மிக அழகாக தான் இருந்தது. அதை‌ மென்மையாக தடவிப் பார்த்தாள். அதனுடைய நயமே சொல்லியது அது விலை அதிகம் என்று.


பழைய படி புடவையை மடித்து தன் புடவைகளுக்கு அடியில் வைத்தாள்.


தண்மதியின் மனமோ குழம்பித் தவித்தது. 'அவன் தன்னை நேசித்தானா? நம்ப முடியவில்லையே.. எப்போது தன்னைப் பார்த்தாலும் நக்கலும் ,கேலியும் தானே செய்தான். ஒரு நாள் கூட என்னை மதித்துப் பேசியது இல்லையே..' என்று அவள் யோசிதத்தாள்.


பலமுறை சீர்மதியனே அவளிடம் காதலித்தேன் என்று சொல்லி இருந்தாலும் ஏனோ அவளுக்கு அவன் மீது நம்பிக்கையும் வரவில்லை...அவன் தன்னை காதலித்தான் என்று கூறுவதையும் அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..



தூயமுல்லை சொன்னது போல் அவனிடம் இதைப் பற்றி பேசலாமா?என்று நினைத்தாள். ஆனால், அவன் வீட்டில் இருந்தால் தானே பேச முடியும்! உண்மையை எப்படி தெரிந்து கொள்வது என்று குழ்மபினாள்.


தூய முல்லையும்,குழந்தைகளும் சென்ற பின் தண்மதிக்கு தனிமை ரொம்பவே வாட்டியது. தன் தாய் வீடாவாவது போகலாமா? என்று யோசித்தாள்.


சீர்மதியனிடம் கேட்க வேண்டும் என்பதற்காகவே அன்று அவன் வீடு வரும் வரை விழித்து இருந்தாள்.


சீர்மதியன் அதிசயமாக விழித்து இருந்த மனைவியை பார்த்து வியந்த படி தன் வேலைகளை செய்தான்.


அவளோ, பேசலாமா? வேண்டாமா?என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தாள்.?


சீர்மதியன் உடை மாற்றி வந்து பாயை எடுத்து போட்டு படுக்கப் போனான்.


அய்யோ அவன் படுத்தால் உடனே தூங்கிடுவேனே என்று மனதிற்குள் நினைத்த தண்மதி , " நான் உங்களிடம் பேச வேண்டும்‌.." என்றாள்.


அவனோ, அவளை திரும்பி பார்த்து "சொல்லு.." என்ற கூறியவன் படுக்கையில் படுத்தான்.


"வந்து. நான் ஒரு வாரம் அம்மா வீட்டில் போய் இருந்துட்டு வரட்டுமா?" என்று‌ கேட்டாள்.


அவனோ, "உன் விருப்பம்.." என்று சொல்லிவிட்டு கண்களை மூடிப் படுத்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.


தண்மதிக்கு அவனின் உதாசீனமான பதில் அவளை ரொம்பவும் பாதித்தது.




நேசம் தொடரும்..

 

New Threads

Top Bottom