Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Maraadha nesam _18


மாறாத நேசம்!


அத்தியாயம் 18


தண்மதி பிறந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் முடிவடைந்துவிட்டது.


தூயநாச்சியும் தன்னால் முடிந்தளவு பேத்திக்கு புத்திமதி கூறிக் கொண்டே தான் இருந்தார்.


ஆனால் ,அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தான் இருக்கு! காலம் தான் தன் பேத்தியின் மனதை மாற்றனும் என்று நினைத்து க் கொண்டார்.


சீர்மதியன் தண்மதி எப்போது தான் வருவாள் என்று காத்துக் கிடந்தான்.ஆனால்

மறந்தும் கூட மனைவியை அழைத்து பேசவில்லை..



மனைவி மீது அளவுகடந்த நேசத்தை வைத்திருந்தாலும், அதை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்தான்.



தன் மனவேதனையை போக்க தன் தொழிலையே‌ மருந்தாக மாற்றிக் கொண்டான்.

அதுவே அவனுக்கு மிகப் பெரிய வளர்ச்சியை கொடுத்தது.



பட்டி தொட்டி எல்லாம் அவனின் 'கோமணி' தயாரிப்புகள் பிரபலம் அடைந்தது.


அதிலும் சுத்தமான கலப்படமற்ற பசும்பால் தாய்மார்களின் விருப்ப பாலாக மாறியது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற பாலாக 'கோமணி' பால் மாறியது.



அத்துடன் 'கோமணி' தயாரிப்புகள் அனைத்தும் பிரபலம் ஆனது.

சீர்மதியனின் தொழில் வளர்ச்சியே அவனுக்கு பல எதிரிகளையும் அவனுக்கு சம்பாதித்து கொடுத்தது.



அதிலும் முக்கியமாக ஆளும் கட்சி மந்திரியின் பால் பண்ணையின் பொருட்கள் சீர்மதியனின் 'கோமணி' தயாரிப்பு பொருட்களால் ஓரங்கட்டப்பட்டது.


அவனின் தயாரிப்பு பொருட்களின் குறைந்த லாபமும், தரமான பொருட்களும் தான் அதற்கு முக்கிய காரணம்.



அதனால் மந்திரியின் நேரடி பார்வைக்குள் சீர்மதியன் வந்தான்.ஆனால் இது எதுவுமே தெரியாமல் சீர்மதியன் மனைவியின் வரவை எதிர்பார்த்து தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.



தண்மதி கணவனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பத்து நாள் கழித்து தன் அண்ணன் வழுதியுடன் புகுந்த வீடு வந்து சேர்ந்தாள்.



பிறந்த வீட்டு சுகபோகங்களுக்கு பத்து நாள் பழகிய தண்மதியால் மறுபடியும் புகுந்த வீட்டில் ஒன்ற முடியவில்லை..



ஆனால் கோவழகன், பொன்மணியும் அவளை எந்த மாற்றமும் இல்லாமல் அதே அன்போடு தான் பார்த்துக் கொண்டனர்.


அன்று பண்ணையிலிருந்து சோர்வாக வந்த சீர்மதியன் வீட்டில் மனைவியை கண்டதும் மனதிற்குள் அளவுகடந்த மகிழ்ச்சியில் பூரித்துப் போனான்.

ஆனால் ,அதை மனைவி முன் காட்டிக் கொள்ளவில்லை.


தண்மதியோ கணவனை பத்து நாள்கள் கழித்து கண்ட போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.


பாட்டி தூய நாச்சியின் அறிவுரைகள்‌ எதுவுமே அவளுக்குள் போகவில்லை..


தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்ற பிடிவாதத்திலேயே இருந்தாள்.கணவன் மீது கடுகளவு கூட நேசம் வந்த மாதிரி இல்லை.


அவளையும் அறியாமல் கணவன் மீது மனதிற்குள் நேசம் இருந்தால் கூட அதை உணரும் நிலையிலும் அவள் இல்லை..


தண்மதியை தவிர அவள் வீட்டில் எல்லாருமே சீர்மதியனை அறிந்தும் , புரிந்தும் இருந்தனர்.


புரிந்து கொள்ள வேண்டியவளோ அந்த சிந்தனையே இல்லாமல் வலம் வந்தாள்.



இருவருக்கும் அக வாழ்க்கையில் எந்த வித மாற்றமும்‌ இல்லாமல் பழையபடியே வாழ்க்கை நகர்ந்தது.


வழக்கம் போல் சீர்மதியன் தாமதமாக வீடு வருவதும்,மகனுக்காக பொன்மணி விழித்து இருந்து உணவு பறிமாறுவதும்,கணவனிடம் மருமகளைப் பற்றி புலம்புவதுமாகவே வாழ்க்கை சென்றது.



தண்மதியின் ஒட்டாத தன்மை கொஞ்சம் கொஞ்சமாக பொன்மணியிடம் மருமகள்‌ மீது கோபத்தை வரவழைத்தது.


தன்னுடன் தான் இயல்பாக நேந்து கலந்து வேலை செய்யாவிட்டாலும், மகனிடமாவது பழகனும் என்று இல்லாமல் இப்படியே இருந்தால் எப்படி என்று பெற்ற மனம் கலங்கியது.



ஓடாக உழைத்து ஓய்ந்து வரும் மகனின் முகம் பார்த்து நல்ல பேச்சும் பேசுவதில்லை..அவனுக்கு உணவும் கொடுப்பதில்லை..ஏன் அவனுக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்று மனதிற்குள் கலங்கியவர் ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணவரிடம் கூறி பொன்மணி கண் கலங்குவார்.


"எல்லாம் சீக்கிரம் சரியாகும்‌ நீ‌ கவலைப்படாதே..!" என்று கோவழகன் மனைவிக்கு ஆறுதல் சொல்லுவார்.



அவருக்குமே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.



தண்மதி தன்னிடம் மட்டும்‌ தான் முகம் கொடுத்து பேசுகிறாள்.மனைவியிடம் கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தான் சொல்கிறாள்.மகனிடம் அதுவும் இல்லை என்பதை அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.



ஆனால், இதற்கு என்ன தீர்வு என்று தான் அவருக்கும் புரியவில்லை.

தன் மகன் அவனே தேடிக் கொண்ட வாழ்க்கை இது!எப்படி மருமகளை மாற்றுவது என்றும் அவருக்கும் தெரியவில்லை.




அண்ணன்‌‌ மகள் தான் தனக்கு மருமகளாக வரவேண்டும் என்று கோவில் கோவிலாக சென்று வேண்டிய பொன்மணியின் மனதிற்குள் இப்போது தண்மதி மீது அளவுகடந்த வருத்தம் தான் மேலோங்கி இருந்தது.



தனக்கு எதுவும் செய்யாவிட்டாலும் தன் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும் என்று பெற்ற மனம் தவித்தது.


ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு அல்லவா ..!பொன்மணி அன்று தன் பொறுமையை கைவிட்டார்.



வழக்கம் போல் அன்று சாப்பிட்டு விட்டு தண்மதி தங்கள் அறைக்குச் செல்லும் போது.."தணு ஒரு நிமிஷம் மா ..!'என்று தடுத்த பொன்மணி..

" எனக்கு ஏனோ தலை இன்னைக்கு ரொம்ப வலிக்குது .தைலம் போட்டுட்டு கொஞ்சம் சீக்கிரம் படுக்கப் போறேன்.சீரா வந்தா பார்த்து கொஞ்சம் நீயே சாப்பாடு எடுத்து வச்சுடு மா..!" என்றவர் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் தங்கள் அறைக்குச் சென்று விட்டார்.



தண்மதிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை..

மனதிற்குள் முனங்கியபடி தங்கள் அறைக்குச் சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டு கணவனை மனதிற்குள் வசைபாடியபடியே கணவனுக்காக காத்திருந்தாள்.


சீர்மதியன் மனைவியின் பொறுமையை எவ்வளவு சோதிக்க முடியுமோ அவ்வளவு சோதித்து முடித்து விட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தான்.



தங்கள் அறைக்கு வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சியாக மனைவி விழித்து இருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன் " ஏன் தணு இன்னும் தூங்கலையா..?" என்று கேட்டவனிடம்.



முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க" ம்! உங்க அம்மாவுக்கு தலைவலியாம் !அதனால் உங்களுக்கு என்னை சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லிட்டு போய் படுத்துட்டாங்க..அப்புறம் என்ன செய்ய அது தான் உட்கார்ந்திருந்தேன் .." என்று மனைவி கூறியதைக் கேட்டு மனதிற்குள் சீர்மதியன் வருந்தினான்.



'தன்னைத் தான் பிடிக்காது தன் அம்மா இவளுக்கு என்ன செய்தாங்க அத்தைன்னு சொல்றாளா பாரு..உங்க அம்மாவாம்..' என்று நினைத்தவன் மனைவியிடம் பதில் சொல்லாமல், கை கால் முகம் கழிவிட்டு தாயைத் ‌தேடிச் சென்றான்.



பொன்மணி அசந்து தூங்குவதைப் பார்த்து விட்டு சத்தம் எழுப்பாமல் திரும்பி வந்தவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள் அவனின் அருமை மனைவி.



தன் தாயைப் போல் இல்லாமல் கடனே என்று உணவை பறிமாறியவளைக் கண்டு மனதில் வேதனையுடன் உண்டு முடித்தான்.



அவன் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த தண்மதி அவன் உண்டு முடித்தவுடன்.." இங்க பாருங்க இனிமே நைட் சீக்கிரம் வரலைன்னா என்னால் எல்லாம் இப்படி தூக்கம் கெட்டு உங்களுக்காக வெய்ட் பண்ண முடியாது..பண்ணையில் இவ்வளவு நேரம் அப்படி என்ன தான் வேலை உங்களுக்கு இருக்குதோ? எனக்கு தெரியலேப்பா!.." என்று கூறியவளிடம்..



"நீ வேணா ஒரு நாள் வந்து பாரே தணு.."


"ஆமாம் அது பெரிய ஐடி கம்பெனி! அதை வேறு நான் வந்து பார்க்கனும்.." என்று முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்லியவளிடம்.


"தண்மதி நான் பலமுறை சொல்லிட்டேன்! என் தொழிலைப் பற்றி கேவலமா பேசாதேன்னு..அது தான் நமக்கு சோறு போடுது.படிச்சவ தானே நீ..எந்த தொழிலும் கேவலம் இல்லைன்னு உனக்கு புரியவே புரியாதா..?"


"ஆமாம் எனக்கு புரியாது..உங்களுக்கு புரியுது தானே ! அதே போதும்.நான்‌ புரியாத மரமண்டையாவே இருந்துக்கிறேன்.." என்றவள்‌ காலி பாத்திரங்களை எடுத்துச் சென்று சமையலறையில் வைத்தாள்.


என்ன சொன்னாலும் இவளுக்கு புரியவே புரியாது என்று மனதிற்குள் நினைத்தவன் ஒரு பெரிய பெருமூச்சுடன் தங்கள் அறைக்கு சென்றான் சீர்மதியன்.



சாப்பிட்டவுடன் படுக்க கூடாது என்று நினைத்து தன் அலமாரியில் இருந்த பெரியார் சிந்தனைகள் நூலை எடுத்துப் படிக்க தொடங்கினான்.


பார்வை தான் புத்தகத்தில் இருந்தது.ஆனால் மனம் மனைவியையே சுற்றி வந்தது.

'பண்ணையில் என்ன வேலை என்று கேட்கிறாளே! வந்து பார்த்தால் தானே தெரியும்.இவள் வீட்டிலும் மாடு வைத்து இருக்காங்களே! அப்படி இருந்தும் ஏன் தான் இவள் இப்படி மாடுகளை வெறுக்கிறாள்..' என்று எண்ணினான்.


அவனுக்கு தெரியவில்லை..அவள் மனைவிக்கு கிராம வாழ்க்கையை விட, நகர வாழ்க்கையின் மீது தான் மோகம் என்று!அது தான் இப்படி பேச காரணம் என்றும்!


தண்மதி அடுக்களையை ஒதுக்கிவிட்டு தங்கள் அறைக்கு வந்தவள் கணவன் புத்தகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து 'ஆமாம் பெரிய சீர்திருத்தவாதி..செய்யறது எல்லாம் ஆணாதிக்கம்! படிப்பது பெரியார் புத்தகம்! ஒரு சதவீதம் அவரின் கருத்தை மதிப்பவனாக இருந்தால் தன்னை மாட்டுக்கு ஈடாக கேட்டு திருமணம் செய்திருப்பானா? எல்லாம் வேஷம்!' என்று மனதிற்குள் கருவிக் கொண்டே சென்று படுத்தாள்.


சீர்மதியன் சிறிது நேரம் புத்தகம் படித்துவிட்டு அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.


நிற்க நேரமில்லாமல் உழைப்பவனுக்கு அந்த நாலு மணி நேரம் தான் இப்போதெல்லாம் உறக்கம்.


திருமணத்திற்கு முன் முடிந்தவரை பத்துக்குள் வீடு வருபவன் இப்போது பன்னிரெண்டு மணிக்கு தான் வீடு வருகிறான்.


கோமணி தயாரிப்புகளின் உற்பத்தி இப்போது அதிகரித்துக் கொண்டே இருப்பதும் ஒரு காரணம்.


அடுத்து வந்த நாள்கள் சில மாற்றங்களுடன் நகர்ந்தது.

அதில் மிக முக்கியமானது சீர்மதியனுக்கு இரவு உணவை தண்மதி தான் பறிமாற வேண்டும் என்று எழுதப்படாத சட்டமாக பொன்மணி செயல்படுத்தினார்.



அப்போது தான் கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் வரும்.சண்டை போட்டுக் கொண்டாலும் நாளடைவில் பிடிப்பு வரும் என்று எண்ணினார்.



அது மட்டுமின்றி சீர்மதியனின் உடைகளையும். தண்மதியிடமே துவைத்து மடித்து வைக்கச் சொன்னார்.


தண்மதிக்கோ பொன்மணி யின் இந்த மாற்றம் மனதிற்குள் மாமியார் மீது கோபத்தை மூட்டியது. மாமியார் அதிகாரத்தை தன்னிடம் காட்டுகிறார் என்று நினைத்தாள்.



பொன்மணியோ மருமகளுக்கு சீர்மதியன் தன் கணவன் என்ற எண்ணம் வரவேண்டும் என்று தான் மகனின் வேலைகளை செய்யச் சொன்னார்.


ஆனால், தண்மதியோ வழக்கம் போல் தவறாகவே எண்ணினாள்.


இப்படி மாமியார் மருமகளுக்கிடையில் புகைச்சல் கிளம்பிய தருணம் அவளின் தோழி மணிச்சுடரின் திருமணச் செய்தி வந்தது.

மணிச்சுடர் தன் தாயுடன் வந்து தண்மதியை திருமணத்திற்கு அழைத்து இருந்தாள்.


மாப்பிள்ளை சென்னை என்றும், ஐடி நிறுவனத்தில் நல்ல வேலை என்றும், மணிச்சுடரின் அம்மா அவளிடம் பெருமையாக சொல்லிச் சென்றார்.


தண்மதிக்கு அதைக் கேட்டதிலிருந்து மனதிற்குள் ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது.



மணிச்சுடரை விட தான் எந்த விதத்தில் குறைந்தவள் தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒருவனுடன் திருமணம் நடந்தது.தன் வாழ்க்கையை இவன் கெடுத்துவிட்டான் என்று கணவன் மீது அளவு கடந்த கோபம் ,வெறுப்பு எல்லாமே அதிகரித்தது.


இக்கரைக்கு அக்கரைக்கு பச்சை என்பதை அறியாமலேயே தன் மனநிலையிலேயே தண்மதி சுழன்றாள்.



மனதிலிருந்த கோபத்தை உழைத்து ஓய்ந்து வரும் கணவனிடம் தீயாய் காய்ந்தாள்.


சீர்மதியனால் என்ன சொல்லியும் மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை..ஒரு கட்டத்திற்கு மேல் அவளிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தான்.


உயிராக நேசித்தவள் அவனுக்கு அனுதினமும் காயத்தைக் கொடுத்தாள்.

அதுவும் மணிச்சுடரின் திருமணத்திற்கு சென்று வந்தபின் தண்மதி இன்னும் மாறினாள்.


தன் வாழ்க்கையை நினைத்து தன்னுள்ளே மருகினாள்.தன் வாழ்வே வீணாக போய்விட்டது என்று மனதிற்குள் அழுது கரைந்தாள்.



இரவு கணவனுக்கு தட்டில் சாப்பாட்டை போட்டு வைத்துவிட்டு வந்து படுத்துக் கொள்வாள்.

அவனின் ஆடைகளை துவைக்க முடியாது என்று அவனிடம் தூக்கி எறிந்தாள்.


சீர்மதியனோ அனைத்தையும் பொறுத்து போனான். தன் ஆடைகளை தானே துவைத்துக் கொண்டான்.


தண்மதியிடம் அதைப்பற்றி கேட்ட மாமியாரிடம் "நான் துவைத்தால் அவருக்கு பிடிக்கவில்லையாம்.." என்று பழியை கணவன் மீது போட்டாள்.


கிடைத்த அழகான வாழ்க்கையை அவளே நரகம் ஆக்கிக் கொண்டிருந்தாள்!



நேசம் தொடரும்..

























 

New Threads

Top Bottom