Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மலர்மதி - 2

அத்தியாயம் - 2

அந்த மகளிர் விடுதியில் ஓர் அறையை இரண்டு பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டாம் பெண்ணை நட்போடு பார்த்த மலர்மதிக்கு, அந்தப் பெண் வீணாவின் பார்வை தன்னை ஆராய்ச்சியாய் பார்ப்பது போலவே இருந்தது. இவளது உதடுகள் சினேகமாய் புன்னகை புரிவதை பார்த்ததும் வீணாவும் லேசாக சிரித்தேன் என்று பெயர் பண்ணும்படியாயிற்று.



கல்லூரி இறுதியாண்டில் இருந்த மலர்மதிக்கு படிப்பிலேயே அதிக நேரம் கரைந்தது. அப்போதுதான் படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்திருந்தாள் வீணா. அவளும் வேலை விட்டு வர தாமதமாகும். அதுபோக மிச்சமிருக்கும் சொர்ப்ப நேரத்தில் இவர்கள் இருவரும் பேச முயற்சித்தார்கள். வேறு என்ன செய்வது. ஒரே அறைக்குள் இருந்து கொண்டு முகத்தைத் திருப்பவும் வழியில்லைதான். ஆனால் இருவருக்குமே பல வேறுபாடுகள் இருந்தது... அது வளர்ப்பு முறையால் வருவதுதான்.



மலர்மதியின் அலமாரிகளும், கட்டிலும் எப்போதும் திருத்தமாக இருக்கும். எடுத்த பொருள் எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கம். அவளது காலனிகள் வரிசையாக கட்டிலுக்கடியில் அடுக்கப்பட்டிருக்கும் ஒன்று ஹாஸ்டலுக்குள் அணிய இலகுவாய் ரப்பர் செருப்பு. இன்னொன்று கழிப்பறை பயன்பாட்டிற்கு. வழுக்கி விழாமல் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டது. இன்னொன்று கல்லூரிக்குச் செல்லும் போது பயன்படுத்த கைப்பை, கல்லூரிப்பை என்று எல்லாம் அது அதன் இடத்தில் அணிவகுப்புச் செய்யும்.



ஆனால் வீணாவின் பகுதி நேர்மாறாக இருக்கும் கட்டிலில் மடிக்கப்படாத கம்பளியும், எண்ணெய்க் கறையுடன் தலையணை உறையும், திருத்தப்படாத படுக்கை விரிப்பும், அதன் மேலேயே அழுக்குத் துணி, தோய்த்த துணி என்ற வேறுபாடே இல்லாமல் எல்லாம் கலந்த கலவையாய் மடிக்காமல் கிடக்கும். அவள் அலமாரி உள்ளே கை வைத்தால் தேள் கடித்து விடுமோ என்று மலர்மதி அஞ்சும் வகையில் அது குப்பையாக கிடக்கும்.



கட்டிலுக்கடியில் ஒரு டஜன் செருப்பு தாறுமாறாய் கலைந்தே கிடக்கும். தலை வாரீய சீப்பு எப்போதும் முடியுடனேயே இருக்கும். அது கூட பரவாயில்லை அதிலிருக்கும் அழுக்கும் அப்பப்பா பார்த்தாலே மலர்மதி இரண்டு நாளைக்குச் சாப்பிட மாட்டாள். ஆனால் ஒன்று வீணாவிடம் பாராட்டியே ஆக வேண்டும். அவள் அலுவலகம் செல்லும் போது தயாராவதை, அத்தனை நேர்த்தியாக தன்னை அலங்கரித்துக் கொண்டு ஒயிலாக காட்டுவதில் அவளுக்கு ஒரு ஆர்வம்.



அவள் அவ்வாறு டிப்டாப்பாக வேலைக்குக் கிளம்பிப் போனதும் அவளது கட்டில், அலமாரியை பார்த்து ஏளனமாய் பல முறை சிரித்திருக்கிறாள். இதைத்தான் “ஒய்யார கொண்டையாம் தாழும்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும், பேணும்.” என்பது போலும் என்று தனக்குத் தானே நினைத்துக் கொள்வாள்.



சில நேரங்களில் அவளுக்கே அருவருப்பு பொறுக்காமல் கலைந்து கிடக்கும் அவளது பொருட்களை பல முறை சரி செய்து வைப்பாள். வேலை முடிந்து வந்தவுடன் அதனை கேள்வியாய் பார்க்கும் வீணாவிடம்,



“படித்து முடித்து விட்ட பின் ரொம்பவும் போர் அடித்தது அக்கா, அதுதான் உங்களுக்கு உதவலாமே என்று....!” இழுத்தவளிடம்,



“நன்றி” என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு முடித்துக் கொண்டாள் வீணா.
 

New Threads

Top Bottom