Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மலர்மதி - 9

அத்தியாயம் - 9



அந்த விழாவிற்குப் பின் மலர்மதியின் நிலையோ மிகவும் மோசமாகிவிட்டது. விடுதியில் வீணாவை பார்க்கும் பொழுதெல்லாம், அன்று நடந்ததே நினைவிற்கு வந்தது. அப்படி வருகையில்... அவள்... அவளது முகம், அவள் கண்களில் வந்து சென்றது. அப்போதும் அவன் அவளது இடையைப் பற்றியிருப்பது போல் ஒரு பிரம்மை... கோபம், வெறுப்பு...ஆக்ரோஷம்... இதுதான் என்று சொல்ல முடியாத ஒரு அருவெறுப்பு அவள் மனதில் பொங்கி எழுந்தது. இத்தனை நடந்து விட்டதே. அவனை தன் கால் செருப்பால் அடிக்காமல் எப்படி விட்டாள் என்று அவளுக்கே ஆச்சர்யம்தான். ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் உண்மை சிரித்தது. நீயாகத்தானே அவனை ஆட அழைத்தாய் அன்று. அது உண்மைதான். இருப்பினும் அவன் எப்படி தவறாக எண்ணலாம்? அதுவும் அவள் மறுக்க... மறுக்க... முத்.... அதற்கு மேல் சிந்திக்கவும் அவளுக்கு அச்சமாக இருந்தது.



இவளது நிலை புரியாமல் வீணா வேறு,

“புளியங்கொம்பாய் பிடித்துவிட்டாய் போல.” என்று புகழ்வது போல் வயிறெரிந்தாள்.



இவள் கெட்ட கேட்டிற்கு மதுசூதனனே அதிகப்படி. ஆனால் இவளுக்கு தன்யன் கேட்கிறதோ என்று புழுங்கினாள்.



“புளியங்கொம்புமில்லை, வேப்பங் கொம்பும் இல்லை. அந்தப் பணக்கார கும்பலைப் பார்த்தாலே குமட்டுகிறது... இதெல்லாம் உன்னோடு நிறுத்திக் கொள்.’’ ஏனோ அக்கா என்று கூற அவளுக்கு நா எழவில்லை.



போயும் போயும் இந்த நடத்தை கெட்டவளைப் போய், அக்கா என்பதா? உடனே மனம் அவளைச் சாடியது... நடத்தை கெட்டவள் என்று எப்படி யோசிக்கலாம். ஒருவேளை வீணா மதுசூதனனை காதலிக்கலாம். திருமணம் செய்து கொள்ள விரும்பலாம்.



அதனாலேயே தன்னை அவளிடமிருந்து தூர நிறுத்த முனைந்திருக்கலாம். இருக்கலாம் என்ன? இப்படித்தான். அதற்காக அவளை தவறாக நினைப்பது தவறுதானே, இருப்பினும் வீணாவை முன்பு போல் அக்கா என்று அவளால் இயல்பாய் கூப்பிட முடியவில்லை. ஏதோ மதுசூதனனுக்கு இருவருமே வாழ்க்கைப்பட்டு, மூத்தாளை அக்கா என்று இளையவள் கூப்பிடுவது போல் ஒரு பிரமை எழுந்து அருவறுப்பை அதிகப்படுத்தியது.



ச்சு.... இது என்ன மடத்தனம் மறக்க வேண்டிய சாக்கடையை திரும்பத் திரும்ப நினைப்பது. மற மனமே மற, எல்லாவற்றையும் மற. என்று உரு போட்டபடி தன் வேலைகளில் கவனம் செலுத்த முனைந்தாள். அவளது நிலை தெரியாமல் அவளுக்கென்று தன்யனின் தலைமையில் உள்ள கிளைகளின்... ஃபைல்களையே கொடுத்தார் வாஞ்சிநாதன்.



வேலையிலும் மனம் லயிக்காமல் சண்டித்தனம் செய்தது. இருப்பினும், கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி, அவளது வேலைகளை முடிக்கையில் அவளது விழிகள் அகல விரிந்தன.



மற்ற மூவரைக் காட்டிலும் தன்யனின் தலைமையில் நடக்கும் கம்பெனிகளின் லாபம் அதிகமாகவே இருந்தது. இவனது பேச்சும் சரியில்லை. செயலும் சரியில்லை. ஆனால் தொழில் மட்டும் எப்படி? என்கின்ற சிந்தனை அவளுள் கனன்று கொண்டேயிருந்தது.



ஏனென்றால் மலர்மதியின் தந்தை அவ்வப்பொழுது ஒரு வாக்கியம் சொல்வதுண்டு. பெண்களை மதிக்காதவன் வாழ்வில் ஒருக்காலும் முன்னேற முடியாது. இவனோ... பெண்களை மதிப்பது இருக்கட்டும், ஒவ்வொரு பெண்ணிற்கும் என்ன விலை என்று கேட்கின்ற ரகம். பிறகு எப்படி தொழில் வெற்றி சாத்தியம்...? தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான்.



அவ்வப்பொழுது தன்யனைப் பற்றி வாஞ்சிநாதனிடம் சந்தேகம் எழா வண்ணம் விசாரித்ததில், அவருக்கு அவன் மீத எல்லை இல்லா பாசமும் - மரியாதையும் இருப்பது தெரிந்து மேலும் குழம்பினாள்.



இப்படிப்பட்ட ஒரு குழப்பமான சூழ்நிலையில் தான் வாஞ்சிநாதனின் அறுபதாம் பிறந்த நாள் வெகு விமரிசையாக, கொண்டாடப்பட போவதாக அறிவிக்கப்பட்டது.
 
Last edited by a moderator:

New Threads

Top Bottom