Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலும் இயற்கையும் - 2

மார்ச் மாதம் 31 ஆம் தேதி 2017 பெரியோர்களால் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பள்ளி கூடத்தில் தொடங்கிய அவர்களின் காதல் திருமணம் வரை தொட இருப்பதால் வருணும், நித்தியாவும் சந்தோஷ கடலில் நீந்தினார்கள். தாங்கள் காதலிக்கும் நேரத்தில் சென்ற இடத்திற்கு எல்லாம் சென்று தங்களது நினைவுகளை மீட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் அவர்களின் வீட்டில் திருமணத்திற்கான நல்ல நாள் பார்த்து திருமண தேதியை முடிவு செய்தார்கள்.

நான்காவது பிரிவு: திருமணம் தேதி முடிவான சந்தோசத்தில் மீண்டும் துபாய் நோக்கி பயணமானான். நாட்கள் ஓடியது. திருமண தேதியும் நெருங்கியது. வருண் தனது திருமண விடுமுறைக்காக அலுவலகத்தை அணுகும்போது வெறும் 22 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. இதனால் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே இந்தியா வருவதற்கான பயணத்தை திட்டமிட்டு இருந்தான். அதன்படி நவம்பர் 22 ஆம் தேதி இந்தியா திரும்பினான்.
திருமணத்திற்கு இன்னும் இரண்டு தினங்களை இருந்தாலும் தனது திருமணத்திற்காக நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்தான். நித்தியாவும் தனது தோழிகள், உறவினர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்து கொண்டு வந்தாள்.

நவம்பர் 24 இருவரின் பெற்றோர்களும், அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சூழ திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. இருவரும் திருமண வாழ்க்கை அடியெடுத்து வைத்தார்கள். முகநூலிலும் திருமண புகைப்படங்களை பறக்க விட்டார்கள். வருண் எப்போதும் எங்கு சென்றாலும் அந்த நிகழ்வுகளை முகநூலில் பதிவிறக்கம் செய்வதை மறப்பதே இல்லை. திருமணம் முடிந்து இரு வாரங்கள் ஓடியது. தனது காதல் மனைவியுடன் இன்ப சுற்றுலா எங்கு போலாம் என்று ஆலோசனையில் இறங்கினான். இருவரின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் மூணார், கொச்சி மற்றும் ஆலப்புழா போன்ற பகுதிகளுக்கு போகலாம் என்று தீர்மானித்தார். துபாயிலிருந்து குறுகிய விடுமுறையில் வந்ததால் நேரங்கள் அனைத்தையும் நித்தியாவுடன் கழித்தான். இன்ப சுற்றுலா தொடங்கியதிலிருந்து முடியும் வரை அனைத்து நிகழ்வுகளும் முகநூலில் புகைப்படங்களாக பதிவிறக்கம் ஆகியது. வருணின் விடுமுறையும் முடியப்போகிறது. மீண்டும் துபாய் நோக்கி பயணம் ஆகவேண்டும். பயணத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் நித்தியா தயார் செய்தாள். சென்னை விமான நிலையம் வரை வந்து வருணை வழியும் அனுப்பினாள்.

ஐந்தாவது பிரிவு: இந்த முறை மனைவி நிந்தியாவின் பிரிவை நினைத்து சோகத்துடன் பயணமான வருண் தொடர்ந்து 98 நாட்கள் பணியில் இருக்கிறான். வருண் இந்த நாட்களில் மனைவியை துபாய் அழைத்து வருவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்திருந்தான். தனது காதல் மனைவியை துபாயில் கூட்டி சுற்றுவதற்காக ஒரு புதிய காரையும் வாங்கியிருந்தான். இருவரும் தங்குவதற்கு ஒரு ஸ்டூடியோ பிளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தான். அவளை மார்ச் 28-ஆம் தேதி துபாய்க்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தான். அதற்கான முன் பணங்களையெல்லாம் கொடுத்துவிட்டு தனது நூறாவது திருமண நாளை மனைவியுடன் கொண்டாட மார்ச் 1 2018 இந்தியா திரும்பினான். வருணுக்கும், நித்தியாவிற்கும் விதி நிர்ணயித்த வாழ்க்கை இதுவரையிலும் சந்தோசமாக கடந்தாலும், இனிவரும் காலங்களில் விதி ஏற்படுத்தும் மாற்றங்களை தெரியாமல் மார்ச் 3 ஆம் தேதி தங்களது 100வது திருமண நாளை சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். இருவரும் கோயிலுக்கு சென்று விட்டு தங்களது மகிழ்ச்சி தருணங்களை முகநூலிலும் பகிர்கிறார்கள். வருணும், நித்தியாவும் தங்கள் 100 வது திருமண நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள். தங்களுடன் பள்ளியில் படித்த நண்பர்களை சேர்த்துக் கொண்டு மார்ச் 9 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்கு மலைக்கு பயணமாகிறார்கள். கதையின் தொடக்கத்தில் ஈரோட்டை பற்றி அறிந்தது போல் இந்த ஊரைப் பற்றி சில விஷயங்களை அறிந்துகொண்டு நமது கதையின் இறுதிக் கட்டங்களை தெரிந்து கொள்வோம்.

கொழுக்கு மலை என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் எல்லையுடன், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் தாலுக்காவில் உள்ள ஒரு மலை வாசத்தலம் ஆகும். அந்த மலைப்பகுதிக்கு அருகில் தான் குரங்கணி கிராமம் மற்றும் வனப்பகுதிகளும் காணப்படுகிறது. உலகின் மிக உயர்ந்த தேயிலை இங்குதான் வளர்க்கப்படுகிறது. மலையேற்றத்திற்கு பெயர் போன பகுதி. சரி வாங்க கதையைத் தொடர்வோம்.

மார்ச் 10 ஆம் தேதி வருண், நித்தியா மற்றும் அவர்களின் பள்ளிக்கூட நண்பர்களான செந்தில், கண்ணன் அவர்களுடன் இணைந்து ட்ரெக்கிங் செல்வதாக ஒரு செல்பி புகைப்படத்தை முகநூலில் பதிவிடுகிறான். அந்தப் புகைப்படத்தை தமிழ்நாடே திரும்பி பார்க்கப் போகிறது என்ற விதியின் விளையாட்டு அன்று அவனுக்கு அறியவில்லை.

ட்ரெக்கிங் என்பது மலையேறுதல். வருணும் நித்யாவும் தங்களது 100 வது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டுமென்று இந்த மலையேறுதல் தான் தீர்மானித்தார்கள். கொழுக்கு மலை அடிவாரத்திலிருந்து அதன் சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7130 அடி இருக்கும். இந்த ட்ரெக்கிங் செல்பவர்கள் அதன் உயரத்தை அடைந்த உடன் அங்கு கிடைக்கும் விலை உயர்ந்த தேநீரை பருகுவதை இவர்களின் நோக்கம். வருணின் குழு ஈரோட்டிலிருந்து ஒரு டிரவல்ஸ் நிறுவனத்தின் மூலம் வந்தான். இதேபோன்று சென்னையில் இருந்தும் ஒரு குழு வந்தது. இரு குழுவும் இணைந்து மலையேறுவதற்கு தயாரானார்கள். மதிய உணவுகளை எல்லாம் எடுத்துக்கொண்டு 36 மலையேறிகளும் 3 வழிகாட்டியும் பயணத்தைத் தொடங்கினார்கள். வருணும் நித்தியாவும் பல கனவுகளுடன் மலையேற தொடங்கினார்கள். அழகிய இயற்கை காட்சிகள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் காட்சிகளை ரசித்துக் கொண்டு குழு மலை ஏறி கொண்டே இருக்கிறது. மதிய உணவிற்காக ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு முகாம் இடுகிறார்கள். தங்களுடன் கொண்டு வந்த மதிய உணவுகளை உண்ண தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் யாருமே எதிர்பார்த்திராத அந்த நிகழ்வு நடந்தது. இங்கு கொண்டுவந்த உணவுகள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு சிரிப்புடனும் சந்தோஷத்துடன் உணவுகளை உட்கொண்டிருக்கிறார்கள். அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு மளமளவென்று பரவிக்கொண்டிருக்கிறது. பரவிய தீ முகாமிட்டு இருப்பவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் காட்டுத்தீ வேகமாக முகாமை நெருங்கியது. காட்டுத்தீயை கண்டவுடன் வருணும், நித்தியாவும் செய்வதறியாமல் திகைத்தனர். அங்கு இருந்தவர்களின் கூச்சல் சத்தமும், அழுகைச் சத்தமும் காட்டுத் தீயின் புகை சூழ இருந்தது. காட்டுத்தீ அவர்களை நாலாபுறமும் சுற்றிவளைத்தது. வருண் நித்தியாவை கூட்டிக்கொண்டு எப்படியாவது அந்த தீயிலிருந்து தப்பித்து ஓட வேண்டும் என்று முற்பட்டுக் கொண்டிருந்தான். வருணின் நண்பன் கண்ணன் அந்தக் காட்டுத் தீயில் இருந்து தப்பித்து முதலில் வெளியேறினான். மற்றவர்கள் செய்வதறியாமல் மலைப்பகுதியில் ஓடி குழியிலும், பள்ளத்தாக்கிலும் தவறி விழுந்தனர். கண்ணன் ஓடிவந்து திரும்பிப் பார்க்கும்போது தன்னுடன் யாரும் வரவில்லை என்று தெரிகிறது. தன்னுடன் வந்த நண்பர்களை காப்பாற்ற வேண்டுமென்று மீண்டும் முகாமிட்ட பகுதியை நோக்கி ஓடினான். அந்த நேரத்தில் காட்டுத் தீ பரவுவதை கண்ட குரங்கணி கிராமத்து மக்களும், வன அதிகாரிகளும் தீயை அணைக்க முற்பட்டார்கள். கண்ணன் வருணையும், நித்தியாவையும் சந்தித்து தப்பிக்க முயற்சிக்கும் வேலையில் கண்ணனின் உடம்பில் தீப்பற்றியது. அவனை தொடர்ந்து வருணின் உடம்பிலும், நிந்தியாவின் உடம்பிலும் பற்றியது. நண்பர்களை காப்பாற்ற வந்த கண்ணனை தீ பஸ்பமாக்கியது. வருணின் உடம்பில் பற்றி தீ அவனது உடைகளை முழுவதையும் எரித்து உடலையும் எரித்துக்கொண்டிருந்தது. அவனது காதல் மனைவி கண் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கண்டு யாராவது காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூச்சலிட்டான். குரங்கணி கிராம மக்கள் வந்து சுற்றியிருந்த தீயை அணைத்து நித்தியாவை மீட்டனர். வருணை சுற்றியிருந்த தீயை அணைத்தனர். வருண் சுற்றியிருந்தவர்களை பார்த்து தண்ணீர்! தண்ணீர்! என்று கெஞ்சினான். அங்கு வந்த ஒருவர் அவனின் அந்த இறுதித் தருணத்தை வீடியோவாக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதைக் கண்டு தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்தனர். அந்த மக்கள் உதவுவதற்குள் அவனின் இறுதி மூச்சாக அதுவே அமைந்தது. அந்த கிராம மக்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சிகளும் வருண் இட்ட கடைசி முகநூல் பதிவை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட வருணின் பெற்றோர்களும், நித்தியாவின் பெற்றோர்களும் தேனியை நோக்கி விரைந்தன. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். தனது காதல் மனைவியுடன் பல கனவுகளுடன் சென்ற வருணின் எரிந்த உடலை கண்டு அவனின் பெற்றோர்கள் ரத்த கண்ணீர் வடித்தனர். நித்தியாவின் பெற்றோர்கள் நித்தியாவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அடுத்த நாள் காலையில் கண் விழித்த நித்தியாவின் கண்கள் வருணை தேடிக் கொண்டு இருந்தது. அவனின் மரணம் கூட தெரியாமல் அவளின் வாய் வருணின் பெயரை உச்சிரித்து கொண்டு இருந்தது. அவளின் உடலில் 70 சதவிகிதம் தீக்காயங்கள் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உயிருக்கு போராடிய அவள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இந்த காதல் ஜோடியின் இறுதி பிரிவாக அமைந்தது. இந்த கோர விபத்தில் வருணுடன் சென்றவர்களின் மேலும் 18 பேரின் உயிரையும் காவு வாங்கியது.

காதலிலும் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்த இந்த காதல் ஜோடி இறப்பிலும் ஒன்று சேர்ந்தது அவர்களின் விதியின் முடிவே..!!



எழுத்துக்கள்

புதியவன்
 

New Threads

Top Bottom