Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இரும்பின் இதயம் - 16

அத்தியாயம் - 16

"யார் நீங்க... என்ன வேணும்...?" ஜெயச்சந்திரனின் அலுவலகத்தில் காவலுக்கு நிற்கும் கான்ஸ்டபில் விறைப்பாக தன் எதிரில் வெள்ளையும் சொள்ளையுமாக நின்ற பெரியவரை பார்த்துக் கேட்டார்.



"என் பேர் சிதம்பரம். ASP ஜெயச்சந்திரனை பார்க்கணும். நான் அவரோட மாமனார்..." உடனே அந்த போலிஸ்காரரின் அணுகுமுறை மாறியது.



"ஓ... அப்படியா சார்... கொஞ்சம் இப்படி உக்காருங்க சார். நான் உள்ளே போய் சார்கிட்ட கேட்டுட்டு வந்துடறேன்.



உள்ளே சென்ற அந்த காவலர் உடனே வெளியே வந்து " சார் உங்களை வர சொன்னாங்க... நீங்க உள்ளே போய் பாருங்க சார்..." என்றார் மரியாதையாக.



உள்ளே நுழைந்த சாருமதியின் தந்தையை பார்த்து "வாங்க... உக்காருங்க..." என்று எதிரில் இருந்த நாற்காலியை காட்டிவிட்டு "என்ன இவ்வளவு தூரம்... வீட்டுக்கு வந்திருக்கலாமே... " என்றான்.



"வீட்டுக்கு வந்தேன் மாப்ள... உங்கள பார்க்க முடியல... அதான் இங்க வர வேண்டியதா போச்சு..."





"என்ன விஷயமா பார்க்க வந்திங்க..."



அவர் ஒரு நிமிடம் தயங்கினார். பின் "மாப்பள... சாரு சின்ன புள்ள... விவரம் தெரியாம ஏதாவது தப்பு பணியிருந்தா நீங்க தான் பெரிய மனசுபண்ணி மன்னிச்சு ஏத்துக்கணும்."

"............."

"இப்போ வாயும் வயிறுமா வேற இருக்கு. முகமே சரியில்ல. உங்கள பார்த்தா தான் சரியாகுமுன்னு நினைக்கிறேன். ஒரு எட்டு வீட்டுக்கு வந்து சாருவ நீங்க பார்க்கணும் மாப்ள..." அவர் சாருமதியின் அம்மா சொல்லி கொடுத்து பேச சொன்னதை சரியாக பேசிக்கொண்டிருந்தார்.

................."

"எப்போ மாப்ள வீட்டுக்கு வர்ரீங்க...? இன்னுக்கு சாய்ங்காலம் வர்றீங்கன்னு நான் வீட்டுல சொல்லிரட்டுமா..?" அவர் ஆர்வமாக கேட்டார்.



"இதோ பாருங்க... நான் வெளிப்படையா சொல்றேன்னு வருத்தப்படாதீங்க. நீங்க பிக்ஸ் பண்ற டைம்கெல்லாம் நான் உங்க வீட்டுக்கு வர முடியாது. சாருமதியை நான் வீட்டை விட்டு போக சொல்லல... அவளா தான் போனா. திரும்ப எப்ப வரணும் என்று அவளுக்கு தோணுதோ அப்போ வரட்டும். எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...." என்று முடிக்காமல் இழுத்தான். அவன் சாருமதியின் மேல் இருந்த கோபத்தை அவளுடைய தந்தையிடம் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் லேசாக காட்டிவிட்டான்.



"அப்போ நான் கெளம்புறேன் மாப்பிள்ளை..." அவர் எழுந்து வெளியே வந்துவிட்டார். அவர் குடிப்பவராக இருந்தாலும் அடுத்தவனிடம் ஒத்தை பைசாவிற்கு போய் நிற்க மாட்டார். இருந்த சொத்தையெல்லாம் குடித்தே அழித்தார். பின் மனைவி தையல் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு போவார். அடுத்தவன் "நில் " என்று சொல்லும் அளவுக்கு வைத்துக் கொள்ள மாட்டார்.



இப்போது அவரை ஜெயச்சந்திரன் அலட்சியப்படுத்தியது அவருக்கு மிகுந்த மன வலியாக இருந்தது. அவமானத்தில் குறுகி போய் வீட்டிற்கு வந்தார்.

-----------------------------------------------------------------------------------------------

"என்னங்க... போன காரியம் என்ன ஆச்சு...?"



"ம்ம்.. மன்னாங்கட்டியாச்சு... போடி போய் குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா..." அவர் மனைவியிடம் சீறினார்.



'கேக்க வந்துட்டா கேள்வி.. மனுஷ உள்ளே நுழையரதுக்குள்ள விழுந்து புடுங்க ஆரம்புச்சுடுவா...' முனுமுனுத்தார். அவருடைய மனைவி உள்ளே தண்ணி எடுக்கும் சாக்கில் ஓடிவிட்டார்.



பின் மத்திய உணவை அவருக்கும் சாருமதிக்கும் பரிமாறிவிட்டு அவர்களோடு ஊர் கதையெல்லாம் பேசி.. சாருமதி உணவை முடித்துக் கொண்டு அவளுடைய அறைக்கு சென்ற பின் மெதுவாக "என்னங்க ஆச்சு... மாப்பிள்ளை கோவப்பட்டாரா...?" என்று ஆரம்பித்தார்.



"கோவப்படாம என்ன செய்வாரு...? இவள 'சின்ன பிள்ளைன்னு' அங்க போய் சொல்ல சொல்றியே... சின்ன பிள்ளைய இடுப்புல தூக்கி வச்சு கொஞ்சவா அவருக்கு கட்டி கொடுத்த...? நானா இருந்தேன்னா சங்காத்தமே வேண்டாமுன்னு வெட்டி விட்டுருப்பேன். அவரு ஏதோ நல்ல மனுஷன்... 'அவளா வீட்டுக்கு வரும்போது வரட்டுமுன்னு' சொல்றாரு... ஆனா என்னை ஒத்த பைசாவுக்கு மதிக்கல... இப்படி ஒரு பொண்ண பெத்து வச்சிருந்தா எவன் மதிப்பான்..." என்று அவர் புராணத்தை ஆரம்பித்துவிட்டார்.



"சரி விடுங்க... நம்பள மதிக்காட்டி போயிட்டு போகுது... புள்ளைங்க நல்லபடியா வாழ்ந்தா சரிதான்..." என்று அவரை சமாதானம் செய்ய முயன்றார்.



"எப்படியாவது வாழ்ந்துக்கட்டும்... என்னை இனி அவர பார்க்க மட்டும் போக சொல்லாத... அவருகிட்ட மனஷன் பேச முடியாது போலருக்கு... சாருவும் பாவம் தான்... அந்த முசுட்டு மனுஷன்கிட்ட வாழறது கொஞ்சம் கஷட்டம் தான்..." என்று ஜெயச்சந்திரனுக்கும் ஒரு நொட்டை சொல் சொல்லி அந்த பேச்சை முடித்துக்கொண்டு மத்திய உறக்கத்திற்கு சென்று விட்டார். தாய் மனம் தூக்கத்தை துறந்து விட்டு மகளுக்கு எப்படி நல்வழி செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.

--------------------------------------------------------------------------------------

அன்று சாருமதிக்கு மருத்துவ பரிசோதனை இருந்தது. இதற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் அடங்கிய கோப்பு அவளுடைய வீட்டிலேயே இருந்ததால் "அம்மா அப்பாவ அவர் வீட்டுக்கு போய் என்னோட பைல்ல எடுத்துட்டு வர சொல்றியா..?" என்று கேட்டாள். இரண்டு நாட்களுக்கு முன் அவளுடைய தந்தை ஜெயச்சந்திரனை பார்க்க போய் அவனிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது அவளுக்கு தெரியாது.



"அவரெல்லாம் உன் வீட்டுக்கு போக மாட்டார். உனக்கு வேணுன்னா நீ போய் எடுத்துட்டு வா... " என்றார் அவளுடைய தாய் அழுத்தமாக. இப்போதெல்லாம் சாருமதியின் தாய் அவளிடம் தேவைக்கு மேல் பேசுவதில்லை.



சாருமதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஆனாலும் அவள் எப்படி அந்த வீட்டிற்கு போக முடியும்.... அவள் மருத்துவ கோப்பு இல்லாமலேயே மருத்துவமனைக்கு புறப்பட்டுவிட்டாள்.



"என்னம்மா.. நீ இன்னும் கிளம்பலையா...? டாக்டர்கிட்ட போகணும்."



"நான் எதுக்கு... எனக்கு துணி தைக்கிற வேலை இருக்கு. நீ போய்விட்டுவா... உன்னை மட்டுமே தாங்கிகிட்டு இருந்தா சாப்பாட்டுக்கு எப்படி வழி பண்றது....?" என்று தயவு தாட்ச்சண்யம் பார்க்காமல் தன்னுடைய செல்ல மகளிடம் கடுமையாக பேசினார்.



தாயின் வார்த்தைகளால் சாருமதிக்கு 'சுருக்'கென்று ஊசியால் குத்தியது போல் மனது வலித்தது. 'வழியில் மயக்கம் வாந்தி ஏதாவது வந்தால் என்ன செய்வது' என்ற பயம் இருந்தாலும், அவள் எதுவும் பேசாமல் மருத்துவமனைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள்.



"ந்தா.. நில்லு. பணம் எடுக்காமல் போனா உனக்கு ஓசியில வைத்தியம் பார்க்க அங்க என்னா தர்மாஸ்பத்திரியா நடத்துறாங்க...?" என்று கேட்டுக் கொண்டே வந்து அவள் கையில் ஒரு இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்.



சாருமதி, 'அம்மா அவளுடைய கஷ்டத்தில் பேசுகிறாள்' என்று நினைத்து மனதை சமாதானம் செய்ய முயன்றாலும் அது சமாதானம் ஆக மறுத்து உள்ளுக்குள் அழுதது.



'தாய் வீட்டில் சுகம் கண்டுவிட்டால் மகள் மருமகனின் அருமையை நினைக்க தவறிவிடுவாள்' என்று தாய் மனம் வேதனையை உள்ளுக்குள் விழுங்கிக்கொண்டு மகளை துன்பப்படுத்தியது.



மருத்துவமனைக்கு செல்லும் போது தாயின் வார்த்தைகள் சாருமதியை

கலங்க வைத்திருந்தது. ஆனால் மருத்துவமனையிலிருந்து திரும்பும் போது இதைவிட பெரிய கலக்கம் ஒன்று அவளுக்காக காத்திருந்தது.
 

New Threads

Top Bottom