Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

அத்தியாயம் 5

நித்திலா சென்னை சென்று இறங்கிய போது....அவளை அழைத்துச் செல்வதற்காக...அவளது தோழி நந்தினி,பேருந்து நிலையத்திற்கே வந்திருந்தாள்.

"ஹே....நித்தி எரும....வெல்கம் டு சென்னை டி...!",என்று முதுகிற்குப் பின்னே ஒலித்த ஆர்ப்பாட்டமான குரலில் முகம் மலரத் திரும்பினாள் நித்திலா.

அவளது தோழி நந்தினிதான் வாயெல்லாம் புன்னகையாக நின்றிருந்தாள்.

"ஹாய்...!நந்தி குரங்கே....!எப்படி டி இருக்க...?",என்று ஓடிப் போய் தோழியைக் கட்டிக்க கொண்டாள் நித்திலா.

"சூப்பர் பா....!எப்படியோ உன் அம்மா முந்தானையை பிடிச்சிக்கிட்டு தொங்கறதை விட்டுட்டு இங்க வந்துட்ட....",என சிரிக்க,

"அதுதான் நீ இருக்கிறாயே.....உன் துப்பட்டாவை பிடிச்சுக்கலாம்னு வந்துட்டேன்....",எனக் கண்ணடித்தாள்.

"ஆக மொத்தம்....எதையாவது பிடிச்சுத் தொங்கறத மட்டும் விட மாட்ட....அப்படித்தானே.....?சரி சரி....வா....ஹாஸ்டலுக்குப் போய் பேசிக்கலாம்",என்றபடி தோழியை இழுத்துச் சென்றாள்.

தோழிகள் இருவரும் ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

வந்ததும் முதல் வேலையாக ஹாஸ்டல் வார்டனிடம் நித்திலாவை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவள்....பிறகு...அவளை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

நந்தினியின் அறை நான்கு பேர் தங்கக் கூடியதாக இருந்தது.ஏற்கனவே...இரு பெண்கள் அறையைப் பங்கு போட்டிருந்தனர்.நித்திலாவும் அவர்களுடன் தங்கி கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது.

அறைக்குள் நுழைந்ததும்,"ஹாய்....!வெல்கம் டு சிங்கார சென்னை...!",என்ற குரல் கோரஸாக ஒலித்தது.

"ஹே நித்தி...!இவங்களும் நம்ம பிரெண்ட்ஸ்தான்....இவ காவ்யா...!அண்ட் இவ வர்ஷினி....!நாம நாலு பேரும்தான் இந்த ரூமில் தங்கப் போறோம்...",என்று அறிமுகப் படுத்தி வைத்தாள் நந்தினி.

"ஹாய்...!",என்று பதிலுக்கு முறுவலித்த நித்திலாவை பார்த்ததுமே...மற்ற இரு பெண்களுக்கும் பிடித்துப் போனது.

நால்வரும் ஒத்த வயதினர் என்பதால்.....அவர்களுக்குள் நட்பு பாராட்டுவது கடினமாக இல்லை.

...........................................................................................................................................

அன்று காலை மிகுந்த உற்சாக மனநிலையோடு அலுவலகத்திற்கு கிளம்பினான் ஆதித்யன்.அன்றிலிருந்து அவன் தேவதை....அவனுடனேயே இருக்கப் போகிறாள் அல்லவா...!அந்த மகிழ்ச்சி.....அவன் முகத்திலும் பிரதிபலித்தது.

என்றும் கடுமையான முகத்துடன்...அலுவலகத்தில் வலம் வருபவன்....அன்று...உதட்டில் பூத்த சிறு புன்னகையோடு வந்து இறங்கினான்.

அனைவரும் சொன்ன 'குட் மார்னிங்கை' சிறு முறுவலோடும்...சின்ன தலையசைப்போடும்...ஏற்றுக் கொண்டு,தன் கேபினுக்கு விரைந்தவன்...முதல் வேலையாக கௌதமை வரச் சொன்னான்.

"ஹாய் டா ஆதி....!குட் மார்னிங்...!",என்றபடி வந்த கௌதமை "வெரி குட் மார்னிங் டா...!",என்ற விரிந்த புன்னகையுடன் வரவேற்றான் ஆதித்யன்.

வெகு உற்சாகமாக தன்னை வரவேற்ற தன் நண்பனை பார்த்தவன்,"என்னடா...!உன் முகத்துல 1000 வாட்ஸ் பல்பு எரியுது....சிரிக்கறதுக்கே கூலி கேட்கற ஆள் ஆச்சேடா நீ....",என்க,

அதற்கும் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தவனைக் கண்டு,"ம்ஹீம்....ஏதோ சரியில்ல....என்னடா மச்சான் மேட்டர்....?",எனக் கண்ணடிக்க,ஒரு கணம் ஆதித்யனின் மனதில் நித்திலாவின் முகம் மின்னி மறைந்தது.

"ஒரு மேட்டரும் இல்ல...சரி...என் செக்ரெட்டரி போஸ்டுக்கு ஆள் வேணும்னு விளம்பரம் கொடுக்க சொல்லிருந்தேன்ல...அதை கேன்சல் பண்ணிடு..."தன் கனவில் இருந்து வெளி வந்தவனாய் கூற,

"ஏன்டா...உனக்கு செக்ரெட்டரி வேண்டாம்னு முடிவு பண்ணிட்டயா....?", என்ற கௌதமிடம்,

"இல்ல டா....என் செக்ரெட்டரியா ஒரு பொண்ண நானே செலெக்ட் பண்ணிட்டேன்....ஸோ...நீ அத கேன்சல் பண்ணிடு....",

"என்ன....! ஒரு பொண்ண நீ செலெக்ட் பண்ணிட்டயா....?நம்பவே முடியலையே....?!!",என்று கெளதம் தன் தாடையைத் தடவ,

"ஆமா டா....ஒரு வகையில என் ரிலேட்டிவ் பொண்ணுதான்....",இதைக் கூறும் போதே அவன் முகம் மென்மையாக மாறியது.கெளதம் ஒரு மாதிரியாக தன்னைப் பார்ப்பதைக் கண்டு சுதாரித்துக் கொண்டவன்,. "ஒகே டா....லீவ் இட்....!அந்த R.V கம்பெனி ப்ராஜெக்ட் எந்த நிலைமையில இருக்குது....",என்று பேச்சை மாற்ற,அதன் பிறகு பேச்சு தொழிலுக்கு மாறியது.

"அல்மோஸ்ட் கம்ப்ளீட் டா....!அந்த சைட்டுக்கு போய் பார்க்கலாம்னு சொன்னாயே.....பதினோரு மணிக்கு கிளம்பலாமா...?"

"இல்ல....இன்னைக்கு வர முடியாது....நீ மட்டும் போயிட்டு வா....!", என்றவனின் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை வந்தமர்ந்தது.

அவனை வித்தியாசமாக பார்த்த கெளதம்,"ம்ஹீம்....!இன்னைக்கு நீ ஒரு மார்க்கமாத்தான் இருக்கற டா மச்சான்....ஒகே...!நீ என்னமோ பண்ணு....நான் போய் என் வேலையைப் பார்க்கறேன்...",என்றபடி கிளம்பினான்.

தன் முடியைக் கோதிக் கொண்டவன்,'சே..!கெளதம் பார்த்து கேட்கற அளவுக்கா என் முகத்தை வைச்சிருக்கிறேன்.....ஹ்ம்ம்....பேபி...!எல்லாத்துக்கும் நீதான் காரணம்....உன்னுடைய அழகான முகம் என் மனசுல தோணுனாவே நான் என் கண்ட்ரோல்லயே இருக்கறது இல்ல....இதுல...நீ என் பக்கத்துலயே இருந்தா அவ்வளவுதான்....",எனப் பெருமூச்சு விட்டவன்,

ரிசெப்ஷனுக்கு அழைத்து 'நித்திலா' என்று ஒரு பெண் வருவாள் என்றும்,அவள் வந்தால்...உடனே தன் கேபினுக்கு அனுப்பும் படியும் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

'பேபி...!எல்லாமே ரெடி....நீ வர்றது மட்டும்தான் பாக்கி....சீக்கிரம் வா...ஐ யாம் வெயிட்டிங் ஹியர் பார் யூ டியர்.....!' மனதுக்குள் அவளுடன் பேசிக் கொண்டிருந்தவனை வேலைகள் அழைக்க,ஒரு வழியாக அவள் நினைவுகளில் இருந்து பிரியா விடை பெற்று வெளியே வந்தவன்,அதன் பிறகு தன் அலுவலக வேலைகளில் மூழ்கினான்.

..............................................................................................................................................

ஒரு வழியாக....நந்தினியிடம் வழி கேட்டுக் கொண்டு...பேருந்து நெரிசலில் சிக்கித் தவித்து...நித்திலா...அலுவலகத்தை வந்தடைந்த போது மணி பத்தை தாண்டியிருந்தது.

'ச்ச்சே....முதல் நாளே லேட் ஆகிடுச்சு...',என்று சலித்தபடியே அலுவலகத்திற்குள் நுழைந்தவள்....ஒரு நிமிடம்...அதன் பிரம்மாண்டமான அமைப்பில் மயங்கிப் போய் நின்றாள்.

'ஹை...இவ்வளவு பெரிய ஆபிஸிலேயே ஒர்க் பண்ணப் போறோம்....அதுவும் M .D க்கு செக்ரெட்டரியா...சூப்பர் நித்தி...!', மனதிற்குள் வியந்து கொண்டே ரிசெப்ஷனுக்கு சென்றாள்.

"குட் மார்னிங் மேம்...!வாட் கேன் ஐ டூ பார் யூ...?,அழகாக சிரித்தாள் வரவேற்பறையில் இருந்த அந்தப் பெண்.

"குட் மார்னிங்...!ஐ யாம் நித்திலா...",அவள் முடிக்கும் முன்பே அந்தப் பெண்,

"வெல்கம் மேம்...நீங்க வந்தா உடனே கேபின்க்கு அனுப்ப சொல்லி M.D சொல்லியிருந்தாரு....நேரா போய்...ரைட் கட் பண்ணினா M .D யுடைய ரூம் வரும்...நீங்க போய் பார்க்கலாம்....",என்றாள்.

"தேங்க் யூ...!",என்று புன்னகைத்து விட்டு அந்தப் பெண் காட்டிய வழியில் சென்றாள் நித்திலா.

'ஆதித்யன் மேனேஜிங் டைரக்டர் ' என்ற பெயர் பலகைத் தாங்கிய கதவை,"எஸ்குயூஸ் மீ சார்...!",என்று ஒற்றை விரலால் நாசுக்காக தட்டி விட்டுக் காத்திருந்தாள்.

"யெஸ்....கம் இன்...!",என்று கம்பீரமாக ஒலித்தக் குரல் கேட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவளை,

"வாங்க மேடம்....!ஒரு வழியா பேரண்ட்ஸை சம்மதிக்க வைச்சு....சென்னை வரைக்கும் வந்தாச்சு...வெல்கம் டு அவர் ஆதித்யன் குரூப் ஆப் கம்பெனீஸ்....",என்ற குதூகலமான ஆதித்யனின் குரல் வரவேற்றது.

அவனைப் பார்த்து சிறு புன்னகையை சிந்தியவள்,"தேங்க் யூ சார்...நீங்க மட்டும் சொல்லலைன்னா...நான் சென்னை வர்ரதை பத்தி யோசிச்சுக் கூட இருக்க மாட்டேன்....தேங்க் யூ அகைன்....",என்றாள்.

அவளை ரசனையாகப் பார்த்தவன்,"உன் தேங்க் யூவை வேற விதத்தில...வேணும்ங்கற போது வாங்கிக்கறேன்....",என்றான் புரியாத குரலில்.

தன்னை ஒரு மாதிரியாக பார்த்தவளைக் கண்டு,"இல்ல...உன் தேங்க்யூவை வொர்க்கில் காண்பிக்க சொன்னேன்..."என்று சமாளித்தான்.

"ஷ்யூர் சார்....!என்னை நம்பி இவ்வளவு பெரிய போஸ்ட்டைத் தரும் போது....நிச்சயமா நல்லபடியாத்தான் செய்வேன்...."

"தென் நித்திலா....எந்த காலேஜ்ல படிச்ச அண்ட் எந்த ஏரியால இண்ட்ரெஸ்ட் இருக்கு...",

அவள்....அவள் படிப்பு பற்றிய விபரங்களை மும்முரமாகக் கூற ஆரம்பித்தாள்.ஆனால்....அந்தக் கள்வன் எங்கே அவள் கூறியதைக் கேட்டான்...?!!அவள் பேசப் பேசக் கூட இணைந்து கதை பேசிய அவள் விழிகளையும்....அவள் செயலுக்கு ஏற்றவாறு அபிநயித்த அவள்
இதழ்களையும்....நெற்றியில் தவழ்ந்த அவள் கருங்கூந்தலையும் தான்....அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.

அவன் மொபைல் ஒலித்ததில்...இவ்வுலகிற்கு வந்தவன்...நித்திலாவிடம்,"ஒன் மினிட்...",என்றபடி போனை எடுத்துப் பேசினான்.

மறுமுனையில் பேசியவருக்கு உரிய பதிலை அளித்துவிட்டு போனை அணைத்தவன்,மீண்டும் நித்திலாவைப் பார்த்து,"சொல்லு நித்திலா....எங்க படிச்ச...?",என மறுபடியும் ஆரம்பிக்க,

அவனைப் பார்த்து விழித்தவள்,"இவ்வளவு நேரம் அதைத்தானே சார் சொல்லிக்கிட்டு இருந்தேன்....",எனக் குழம்பவும்,

'அடேய் ஆதி...!அவ பேசும் போது அவ பேசறதைக் கேக்கணும்...அத விட்டுட்டு...இப்படி பேன்னு அவளையே பாத்துட்டு இருந்தா...இப்படித்தான் முழிக்கணும்....சரி...எப்படியாவது சமாளிப்போம்....',என்று மனதிற்குள் பேசிக் கொண்டவன்,

வெளியே,"ஒஹ்....யா..யா....!",என்று அசடு வழிந்து கொண்டிருந்தவன் கண்ணில்,அவள் கையில் இருந்த பைல் தென்பட,"நான் உன் சர்டிபிகேட்ஸை கேட்டேன்....",என்று ஒருவாறாக சமாளித்தான்.

மனதிற்குள் குழம்பியபடியே அவனிடம் தன் பைலை நீட்டினாள் நித்திலா.

அவள் சான்றிதழ்களைப் பார்த்தவன்,'பரவால்ல...நம்ம பேபி நல்லா படிக்கற பேபிதான் போல...',என நினைத்துக் கொண்டான்.

"ஒகே நித்திலா....ஆல் ஆர் வெல்....!நீ இன்னையில இருந்தே வேலையில ஜாயின் பண்ணிக்கலாம்....",என்றவன் தன் பழைய செக்ரெட்டரி லீலாவை அழைத்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் தன் முன் நின்றிருந்த லீலாவிடம்,"வாங்க லீலா...இவங்கதான் நித்திலா....என் புது செக்ரெட்டரி...!நீங்க ரிசைன் பண்றதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கல்ல....அதுக்குள்ள....உங்க வேலை எல்லாத்தையும் நித்திலாவுக்கு பழகிவிட்டுருங்க....உங்க கேபினுக்கு பக்கத்திலேயே இவங்களுக்கு டேபிள் ஏற்பாடு பண்ணியிருக்கு....தட்ஸ் ஆல்...யூ கேன் கோ...!",எனத் தலையசைத்தான்.

"தேங்க் யூ சார்...",என அவனிடம் விடைபெற்றவள்,நித்திலாவைப் பார்த்து சினேகமாக ஒரு புன்னகையை சிந்தி விட்டுச் சென்றாள்.

"அப்புறம் நித்திலா....எங்க தங்கியிருக்க...?எல்லாம் வசதியா இருக்கா....?",பொறுப்பாக அவளிடம் விசாரிக்க ஆரம்பித்தான் ஆதித்யன்.

"தளிர் லேடீஸ் ஹாஸ்டல் சார்....இந்த ஆபிஸில் இருந்து அந்த ஹாஸ்டல்தான் பக்கத்துல இருக்கு...அண்ட் என் பிரெண்டும் என்கூடதான் ஸ்டே பண்ணியிருக்கா...ஸோ...நோ ப்ராப்லம்...."

"ஓ...",என்று ஒரு நிமிடம் யோசித்தவன்,பிறகு,"ஒகே நித்திலா...!நீ போய் உன் வொர்க்ல ஜாயின் பண்ணிக்க....ஆல் தி பெஸ்ட்....",என்று புன்னகைத்தான்.

புன்னகையோடு அவனுக்குத் தலையசைத்து விட்டு வெளியேறினாள் நித்திலா.

அவள் சென்றதும் முதல் வேலையாக ஒரு புகழ் பெற்ற டிடெக்டிவ் ஏஜென்சிக்கு அழைத்தவன்....தளிர் ஹாஸ்டல் பற்றியும்....அதன் பாதுகாப்பு பற்றியும் விசாரிக்கச் சொன்னவன்...அதன் பிறகே...அலுவலக வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

இதுதான் ஆதித்யன்....தன்னவளை அவள் அறியாமலேயே அவன் வட்டத்திற்குள் வரவழைத்து விட்டான்...அவள் வாழ்க்கையை அவன் எப்போதோ கையிலெடுத்துக் கொண்டான்...!இனி....அவள் வாழ்க்கையில்...அவன் அறியாமல்...அவனது அனுமதி இல்லாமல்....எதுவும் நடக்காது என்பதை அறியாதவளாய்...பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டிருந்தாள் நித்திலா.....!!

பார்ப்போம்...!!அந்த பட்டாம்பூச்சி....காதல் என்னும் வலைக்குள் விழுமா...?விழாதா...??என்பதற்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்.....!!ஆனால்....இதில் என்ன ஆச்சரியம் என்றால்....அந்த வலையும் சுகமானதொரு வலையாக மாறிப் போகும்....!!அந்த ஒரு அதிசயத்தையும் காதல் நிகழ்த்தி வைக்கும்...!!!இதுதான் விந்தையிலும் விந்தை....!!!



அகம் தொட வருவான்....!!!
 
அத்தியாயம் 6 :
ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவை,லீலா அழைத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.முதல் பார்வையிலேயே.....சிநேகமாய் புன்னகைத்தவளை... பார்த்த அனைவருக்குமே பிடித்துப் போனது.

அறிமுகப் படலம் முடிந்ததும்,"சரி...வாங்க நித்திலா....!நம்ம இடத்துக்குப் போவோம்....",என்று லீலா அவளை அழைத்துச் சென்றாள்.

லீலாவின் டேபிளுக்கு அருகிலேயே,நித்திலாவுக்காக புது டேபிள் போடப்பட்டிருந்தது.நித்திலாவின் டேபிளை ஒட்டி....சுமித்ராவின் இடம் இருந்தது.

"அட....!இவங்களை அறிமுகப்படுத்த மறந்துட்டேனே.....நித்தி....!இவங்கதான் சுமித்ரா......கிட்டத்தட்ட நம்ம ஜெனரல் மேனேஜர் கெளதம் சார்க்கு P.A மாதிரி....",என சுமித்ராவை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

ஏனோ பார்த்த முதல் பார்வையிலேயே....சுமித்ராவுக்கும் நித்திலாவிற்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப் போனது.

"ஹலோ சுமித்ரா...!நைஸ் நேம்.....ராமாயணத்துல வர்ற சுமித்திரையைப் போலவே அமைதியா இருப்பீங்களோ.....?",என சிரித்துக் கொண்டே நித்திலா கேட்க,அதற்கு ஒரு அழகான புன்னகையை சிந்தினாள் சுமித்ரா.

"உண்மைதான் நித்திலா....இவங்க ரொம்ப அமைதிதான்....",என லீலா இடையில் புக,

"அப்படி எல்லாம் இல்ல நித்திலா....அதுதான்....ரெண்டு பேரோட டேபிளும் பக்கத்திலதான இருக்கு....என்னோடப் பழகிப் பார்த்து 'நான் அமைதியானவளா....?இல்லையான்னு தெரிஞ்சுகோங்க....",என சுமித்ரா புன்னகைத்தபடிக் கூற,

"அடடே...!சுமித்ரா....!நீங்க இவ்வளவு பேசியதே அதிகம்தான்....சரி...வாங்க நித்திலா....!நாம போய் நம்ம வேலையைப் பாப்போம்....",என லீலா அழைக்க,சுமித்ராவைப் பார்த்து தலையசைத்தபடி தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்திலா.

நித்திலாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகள் பற்றியும்....அதன் நுணுக்கங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள் லீலா.செயலாளர் வேலை...அதுவும் அவ்வளவு பெரிய நிறுவனத்தின் M.D யின் செக்ரெட்டரி எனும் போது வேலை சிறிது கடினமாகத்தான் இருந்தது.

நித்திலா....இயற்கையிலேயே புத்திசாலி என்பதால் அனைத்தையும் துடிப்புடன் கற்றுக் கொண்டாள்.அவளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பது,லீலாவிற்கு ஒரு பெரிய வேலையாக இருக்கவில்லை.அதை நித்திலாவிடம் கூறவும் செய்தாள்.

"இவ்ளோ ஸ்பீடா கத்துக்கிட்டா....மூணு மாசம் தேவைப்படாது...ஒரு மாசமே போதும்...",

அவள் கூறியதை சிறு புன்னைகையுடன் ஒதுக்கித் தள்ளியவள்,தனக்கு இருக்கும் சந்தேகங்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள்.

நித்திலாவின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதிலும்....அவளுக்குத் தேவையான விபரங்களைக் கூறுவதிலும் நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

மதிய நேரம் நெருங்கவும்,"சரி...வாங்க நித்திலா...!இது லன்ச் டைம்....சாப்பிட்டுட்டு வந்து வேலையைப் பார்க்கலாம்...",என லீலா அழைக்க,

"ம்ம்...போலாம் மேடம்....வாங்க....",என்றபடி தன் கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தவள்,அருகிலிருந்த சுமித்ராவைப் பார்த்து,

"நீங்களும் வாங்க சுமித்ரா....!சாப்பிடப் போகலாம்...",என அழைக்க,

"இல்ல...பரவால்ல...நீங்க போங்க....நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்...",எனத் தயங்கியவளை,

"அட வாங்க...!இனி லன்ச்சுக்கு எங்க கூட ஜாயின் பண்ணிகோங்க....",என விடாப்பிடியாய் அழைத்துச் சென்றாள்.

மூவரும் மேல்தளத்தில் இருந்த ஆபிஸ் கேன்டீனில் சென்று சாப்பிட அமர்ந்தனர்.

"அப்புறம் நித்திலா...உங்க ஊர் எது...?உங்க அம்மா அப்பா என்ன பண்றாங்க...?",எனப் பேச்சை ஆரம்பித்தாள் லீலா.

"சொந்த ஊர் கோயம்புத்தூர் மேடம்....அப்பா ஒரு பிரைவேட் கம்பெனில்ல அக்கவுண்டண்ட் அண்ட் அம்மா ஹவுஸ் வைஃப்...அப்புறம் என் அக்கா தீபிகா...!இப்போ அவளுக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு....",எனத் தன் குடும்பத்தைப் பற்றிக் கூறினாள்.

"நித்திலா...!நான் ஒண்ணு சொல்லட்டுமா....?இந்த 'மேடம்' எல்லாம் வேண்டாமே...ஜஸ்ட் கால் மீ லீலா...",

"அது எப்படி மேடம் பேர் சொல்லிக் கூப்பிடறது...?நீங்க என்னை விட வயசுல மூத்தவங்களா இருக்கீங்க....வேணும்னா 'அக்கான்னு' கூப்பிடட்டுமா...?",எனத் தயக்கத்துடன் வினவ,

"ஓ...ஷ்யூர்...!எனக்கும் ஒரு தங்கச்சி கிடைச்ச மாதிரி ஆச்சு...நானும் இந்த 'போங்க...!வாங்க...!' எல்லாம் கட் பண்ணிட்டு 'நித்தின்னே' கூப்பிடறேன்...",என்று புன்னகைத்தாள் லீலா.

"சூப்பர் க்கா....!அப்படியேக் கூப்பிடுங்க....சுமி...!நீயும் எனக்கு மரியாதை எல்லாம் தர வேண்டாம்...எப்படி பார்த்தாலும்....ரெண்டு பேருக்கும் ஒரே வயசாகத்தான் இருக்கும்...",என நித்திலா கூற,

"சரி டி நித்தி....இனி உனக்கு மரியாதை எல்லாம் தரலை டி...இது போதுமா டி...?",என சுமித்ரா குறும்பாகக் கண்ணடிக்க,

"போதும்...போதும்...!",என சிரித்தவளைப் பார்த்த லீலா,"சரி...சரி...!ரெண்டு பேரும் சாப்பிடுங்க...நமக்கு லன்ச் டைம் ஒரு மணி நேரம்தான்...",எனவும் மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்,

மூவரும் தங்களுக்குள் வழவழத்தபடி,தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை ஷேர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது,"ஹாய் லீலா அக்கா...!என்ன புதுசா ரெண்டு பேரைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க...?",என்றபடி ஒருவன் வந்து அமர்ந்தான்.

"ஹே பாலா...!வா...வா....!சாப்பிடலாம்...",என்று அவனை அழைத்த லீலா,"இவங்க ரெண்டு பேரும் நம்ம பிரெண்ட்ஸ்....இவ நித்திலா....!நம்ம M.D யோட புது செக்ரெட்டரி....அண்ட் இது சுமித்ரா...!நம்ம ஆபிஸ்லதான் வொர்க் பண்ணறாங்க....",என அவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தியவள்,

நித்திலா மற்றும் சுமித்ராவிடம் திரும்பி,"நித்தி அண்ட் சுமி...!இது பாலா...!ப்ரொடக்க்ஷன் மானேஜர்....!நம்ம M.D கன்ஸ்ட்ரக்க்ஷன் பிசினஸ் மட்டும் பண்ணல....பெரிய பெரிய மெஷின்களுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிற பிசினஸ்...எக்ஸ்போர்ட்....அப்படி இப்படின்னு...நிறைய பிசினெஸ் பண்ணறாரு... அதுல ப்ரொடக்க்ஷன் வொர்க்கையெல்லாம் மேற்பார்வை பார்க்கற வேலைதான் இவனுடையது...",என அறிமுகப்படுத்தினாள்.

"ஹாய் கேர்ள்ஸ்...!நைஸ் டூ மீட் யூ போத்....!",என இருவரைப் பார்த்தும் புன்னகைத்தவன்,நித்திலாவைப் பார்த்து,"நித்திலா....!நம்ம M.D யுடைய புது செக்ரெட்டரி....அவர் கூட நேரடியாப் பழகப் போறீங்க....நிறைய பொறுமைத் தேவைப்படுமே....?",எனப் பேச்சை வளர்த்தான்.

"நிறையப் பொறுமையா...?ஏன் அப்படி சொல்றீங்க...?",எனக் கேட்டவளிடம்,

"என்ன இப்படி கேட்கிறீங்க...?உங்களுக்கு விஷயமே தெரியாதா....?நம்ம M.D க்கு கோபம் ரொம்ப ரொம்ப அதிகமா வரும்....வேணும்னா நம்ம லீலா அக்காவைக் கேட்டுப் பாருங்க....!",என லீலைவைக் கை காட்டினான்.

நித்திலா சாப்பிடுவதை மறந்தவளாய் லீலாவைத் திரும்பிப் பார்க்க,அவளோ,"ஆமா நித்தி....!அவருக்குக் கொஞ்சம் கோபம் அதிகமாத்தான் வரும்....எந்த வேலையையும் கச்சிதமா முடிக்கணும்னு நினைப்பார்....நானே எத்தனை டைம் திட்டு வாங்கியிருக்கேன்....தெரியுமா....?",எனத் தன் அனுபவத்தை பகிர்ந்துக கொண்டாள்.

"என்னக்கா.....ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்கின மாதிரி சொல்றீங்க....",என நித்திலா வாயைப் பிளக்க,

"அவங்களுக்கு அது ஆஸ்கார் அவார்ட் வாங்கின மாதிரிதான் நித்திலா....நீங்க வாங்கும் போது உங்களுக்கேத் தெரியும்....",எனக் குறுக்கே புகுந்து பேசினான் பாலா.

அவன் கூறியதைக் கேட்டு சற்று பயப்படத்தான் செய்தாள் நித்திலா.அவள் முகத்திலிருந்தே....அவள் நிலையை அறிந்துக் கொண்ட லீலா,பாலாவிடம் திரும்பி,"சும்மா அவளை பயமுறுத்தாத பாலா....அவளே இன்னைக்குத்தான் வேலையில ஜாயின் பண்ணியிருக்கா....",என்று அவனைக் கடிந்தவள,

நித்திலாவைப் பார்த்து,"அப்படி ஒண்ணும் பயப்பட வேண்டிய அவசியமில்ல நித்தி....!என்ன....நாம செய்யற எல்லா வேலைகளிலேயும் ஒரு பெர்பஃஷன் எதிர்பார்ப்பாரு....அவ்வளவுதான்....நீ சாப்பிடு....!",என்று எடுத்துக் கூறினாள்.

இதை அனைத்தையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பாலா,"ஒகே கேர்ள்ஸ்....நீங்க சாப்பிடுங்க....நான் கிளம்பறேன் அண்ட் நித்திலா....வெல்கம் டூ அவர் ஆபிஸ்....பை....!",என்று அவளுக்கு வாழ்த்திவிட்டுக் கிளம்பினான்.

'இவை அனைத்திற்கும்....எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை...' என்பது போல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த சுமித்ராவைப் பார்த்த நித்திலா,"என்ன சுமி....!நீ மட்டும் அமைதியா இருக்க....நீயும் உன் M.D யைப் பத்தி உன் பங்குக்கு....ஏதாவது புகழ வேண்டியதுதானே....?",என்க,

"இல்ல நித்தி....!நான் அவரோட அவ்வளவா பேசியதில்ல.....ஸோ...எனக்கு நம்ம MD யைப் பத்தி ஒண்ணும் தெரியாது...",என்று தோளைக் குலுக்கினாள்.

இதைக் கேட்ட லீலா,"ஆமா....ஆமாம்...!அவளுக்கு நம்ம MD யைப் பத்தி ஒண்ணும் தெரியாதுதான்....இதுவே....நம்ம G.M யைப் பத்திக் கேட்டுப் பாரு....எல்லா விஷயத்தையும் பிட்டு பிட்டு வைப்பாள்....!",எனக் கண்ணடித்துச் சிரிக்க,

லீலா கூறுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்தது.கெளதம் அடிக்கடி...சுமித்ராவை தனது அறைக்கு அழைத்துக் கொண்டே இருப்பான்.அதற்கு ஏற்றார் போல்,அவளது வேலைகள் அனைத்தும் அவனது மேற்பார்வையின் கீழ்தான் வரும்....அவன் உண்மையிலேயே வேலைக்காகத்தான் அழைத்தானா...?இல்லை....வேறு எதற்காகவாவது அழைத்தானா....என்பதை அவன்தான் கூற வேண்டும்....!

ஆனால்....என்ன ஒரு விஷயமென்றால்....இவர்களது கண்ணாம்பூச்சி ஆட்டத்தை அலுவலகமே வேடிக்கைப் பார்க்கும்.அதனால்தான் லீலா அப்படி கிண்டலடித்தாள்.

இதைக் கேட்ட நித்திலா,சந்தேகமாக சுமித்ராவைப் பார்க்க,அவளோ,"நான் என்ன செய்யட்டும்....?என் வொர்க் எல்லாமே கெளதம் சார்க்கு கீழதான் வருது....இருந்தாலும்....லீலா அக்கா...நீங்க நினைக்கற மாதிரி...அவரைப் பத்தி எல்லாம்...எனக்கு ஒண்ணும் தெரியாது....",என்று அவசர அவசரமாக மறுத்தாள்.
"என்னவோ போ...ஒரு நாளைக்கு இருபது முறையாவது...அவர் உன்னை அவரோட ரூம்க்கு கூப்பிட்டறார்....இதுல 'அவர பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது'ன்னு நீ சொல்றது...நம்பற மாதிரி இல்லையே....?"

சுமித்ராவை,விளையாட்டாய்....வம்பிழுப்பதற்காகத்தான் லீலா அவ்வாறு கூறினாள்.
ஆனால்,சுமித்ராவோ...விட்டால் அழுது விடுபவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு,"இதுல நான் என்ன செய்ய முடியும்....?அவரு...வேலை விஷயமா பேசறதுக்காகத்தான் என்னை...அவரோட ரூம்க்கு கூப்பிடுவாரு....",என்றாள்.

"ஹே...சுமி!ஜஸ்ட் ஃபார் ஃபன்....!நீ இத சீரியஸா எடுத்துக்காத....",என்று லீலா அவளைத் தேற்ற,

"சரி...சரி....!விடுங்கப்பா.....லேட் ஆகிடுச்சு....!நாம கிளம்பலாம்....",என நித்திலா கூற,மூவரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பினர்.

மதிய உணவிற்கு பிறகும்....நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்வதில் நித்திலாவிற்கும்....லீலாவிற்கும் நேரம் போனது.
இப்படியாக அலுவலக நேரமும் முடிய,வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக அலுவலகத்தில் இருந்து கிளம்ப ஆரம்பித்தனர்.

"ஒகே நித்தி....!டைம் ஓவர்....நீ கிளம்பு....நாளைக்குக் காலையில மீட் பண்ணலாம்....",என்றபடி லீலா விடைப்பெற்றுச் செல்ல,நித்திலாவும் கிளம்ப ஆயத்தமானாள்.

சுமித்ராவும்,"பை நித்தி....!நான் போய் கெளதம் சார்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டுக் கிளம்பறேன்....",என்றபடி அவளும் சென்று விட்டாள்.

'சரி...நாமும் ஆதி சார்கிட்ட சொல்லிட்டுக் கிளம்புவோம்...' என்று எண்ணியபடி நித்திலா...ஆதித்யனின் அறைக்குச் சென்றாள்.அங்கு அவனுடன் கௌதமும் இருந்தான்.இவளைப் பார்த்ததும் ஆதித்யன்,"வா நித்திலா...!ஹவ் வாஸ் தி டே....?வேலை எல்லாம் உனக்கு பிடிச்சுதா....?",என உற்சாகமாக விசாரித்தான்.

"ம்ம்....சூப்பர் சார்...அண்ட் வேலையையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....புதுசு புதுசா....கத்துக்கறதுக்கு....நிறைய விஷயம் இருக்கு....!",என அவளும் ஆர்வமாகப் பதில் கூறினாள்.

இருவரையும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கௌதமைப் பார்த்த ஆதித்யன்,அப்பொழுதுதான் நினைவு வந்தவனாய்,"நித்திலா....இது கெளதம்!நம்ம கம்பெனி G.M அண்ட் மை பெஸ்ட் பிரெண்ட்.....",என்று அறிமுகப்படுத்தியவன்,

கௌதமிடம் திரும்பி,"கெளதம்....இது நித்திலா!என் புது செக்ரெட்டரி.....காலையில நீ இல்லாததுனால அறிமுகப்படுத்த முடியல....",என்று இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான்.

கௌதமிற்க்கு ஆச்சரியமாக இருந்தது.ஆதித்யன்...அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு பெண்ணையும்....ஒருமையில் அழைக்க மாட்டான்.இப்பொழுது...நேற்றுப் பார்த்த பெண்ணை......அவன் இன்று.....ஒருமையில் அழைக்கிறான் என்றால்....அவள் எந்த அளவிற்கு ஆதித்யனின் மனதில் இடம் பிடித்திருக்கிறாள் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

"ஹாய் நித்திலா....!வெல்கம் டூ அவர் ஆபிஸ்....",என்று கை நீட்டியவனிடம்,"ஹலோ சார்....!",என்று ஒரு புன்னகையுடன் கை குலுக்கியவள்,ஆதித்யனிடம் திரும்பி,"ஒகே சார்.....!நான் கிளம்பறேன்.....லேட் ஆகிடுச்சு...."என்றபடி தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க,

"ஒகே நித்திலா....!நீ கிளம்பு....நாளைக்குப் பார்க்கலாம்....",என்றபடி அவளை வழியனுப்பி வைத்தான் ஆதித்யன்.

அவள் போவதையே விழியிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை கவனித்த கௌதமிற்கு....எதுவோ புரிவது போல் இருந்தது....!இருந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,ஆதித்யனிடம் பேசி விட்டுக் கிளம்பிச் சென்றான்.

அகம் தொட வருவான்...!!!
 
அத்தியாயம் 7 :
"எக்ஸ்க்யூஸ் மீ சார்...!",என்ற இனிமையான குரலில்,பார்த்துக் கொண்டிருந்த மடிக் கணினியில் இருந்து தன் முகத்தை நிமிர்த்திய கெளதம்....தன் எதிரே சுமித்ரா நிற்பதைப் பார்த்து,தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
"வாங்க சுமித்ரா....!ரிப்போர்ட் ரெடியா...?",என்று கேட்டபடி கை நீட்டியவனிடம்,
"எஸ் சார்....!",என்றபடி ஃபைலைக் கொடுத்தாள் சுமித்ரா.
"வெல் சுமித்ரா....!உங்க பேச்சை எல்லாரும் கேட்கிறாங்களா....?இல்ல...யாரவது ஏதாச்சும் வம்பு பண்ணறாங்களா....?",என்று விசாரிக்க,
"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார்....எல்லோரும் நல்லாத்தான் பழகறாங்க...."
அன்று...மேற்பார்வை பார்க்கும் பொறுப்பை கெளதம்....சுமித்ராவிடம் ஒப்படைத்ததில் இருந்து,அவள் அந்த வேலையை மிகக் கச்சிதமாக செய்து கொண்டிருந்தாள்.அது சம்மந்தமாகத்தான் அவன் அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
"ம்ம்....குட்...!",என்றவன் அவள் கொடுத்த ரிப்போர்ட்டை ஆராய்ந்து விட்டு,"ஒகே சுமித்ரா....!எல்லாம் சரியா இருக்கு....ஏதாச்சு பிராப்ளம்னா உடனே எனக்கு கன்வே பண்ணுங்க....இப்போ நீங்க கிளம்பலாம்.....",என்று தலையசைக்க,
"ஒகே சார்....பை...!",என்றபடி வெளியேறினாள்.
இப்பொழுது அவள் போவதை விழியகலாமல் பார்ப்பது கௌதமின் முறையாயிற்று.
கௌதமின் மனதிலும் காதல்...மொட்டு விட்டு மணம் பரப்பத்தான் செய்தது.ஆனால்....அவன்தான் அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை.....சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட கௌதமையும்,அவளது தங்கை திவ்யாவையும்....அவர்களது தாய்தான் கஷ்டப்பட்டு உழைத்துப் படிக்க வைத்தார்.
பொறுப்பை உணர்ந்து கொண்ட இருவரும் நன்றாகக் படித்தனர்.கெளதம் படிப்பை முடித்தக் கையோடு தன் நண்பனின் அலுவலகத்திலேயே G.M ஆக பொறுப்பேற்றுக் கொண்டான்.அதன் பிறகுதான்....அவர்களது குடும்ப நிலை உயர்ந்து,இப்பொழுது....சொந்த வீடு...கார்....என்று வசதியாக வாழும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
சமீபத்தில் அவனது தாயும் மரணித்து விட....அவனது தங்கையைக் கவனிக்கும் முழுப் பொறுப்பும் இவனிடம் வந்தது.தற்போது B.SC மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் அவனது தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தராமல்...அவன் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.
எனவே....சுமித்ராவினால் அவன் மனதிற்குள் உருவாகும் புது வித உணர்வுகளை....காதல் என்று உணராமல்....அறிந்து கொள்ள விருப்பம் இல்லாமல்....பிடிவாதமாகத் தனக்குள் மறுத்துக் கொண்டிருந்தான்.
ஆனால்....காதலை மறைத்து வைக்க முடியாதல்லவா...?அது ஒருநாள்....பொங்கும் எரிமலையைப் போல் வெடித்துச் சிதறி விடும்.....அப்படி வெடித்துச் சிதறும் போது....அதன் சீற்றத்தில்....காதல் கொண்ட இரு உள்ளங்களும் என்னாகுமோ...?
.................................................................................................................................................................
'காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை' என்ற பழமொழிக்கேற்ப....காலம் விரைந்து சென்று கொண்டிருந்தது.சூரியன் நித்தமும் உதித்தும்....மறைந்தும் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.
அன்றோடு நித்திலா வேலைக்குச் சேர்ந்து இருபது நாட்கள் ஓடியிருந்தது.ஒருவாறாக....பேருந்தில் சில பல இடிமாடுகளிடம் இருந்து தப்பி அலுவலகம் வரக் கற்றுக் கொண்டாள்.அலுவலகத்திலும் லீலா,சுமித்ரா மற்றும் நித்திலா மூவருக்குள்ளும் அழகிய நட்பு உருவாகியிருந்தது.
இவர்களது நட்பு என்னும் கூட்டிற்குள் பாலாவையும் அனுமதித்திருந்தனர்.அவனது அலுவலகம் அதே பில்டிங்கில் வேறு தளத்தில் இருந்தாலும்....மதிய உணவிற்கு நால்வரும் ஒன்று சேர்ந்து விடுவர்.நால்வரும் ஒருவருக்கொருவர் ஒருமையில் அழைத்துக் கொள்ளும் அளவிற்கு....அவர்களது நட்பு இறுகியிருந்தது.
ஆதித்யனின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை....தன் மனம் கவர்ந்தவள்...தன் அருகிலேயே இருப்பதில்...அவனுக்கு ஒவ்வொரு காலையும் மிக அழகாகப் புலர்ந்து கொண்டிருந்தது.என்ன....அவன் காதல்தான் குளத்தில் எறிந்த கல்லாக....ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.தன்னவளிடம் நெருங்குவதற்காகத் தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
அன்று....லீலா விடுமுறை எடுத்திருந்ததால் நித்திலாவிற்கு வேலை அதிகமாக இருந்தது.அனைத்து வேலைகளையும் அவள் தனியாளாகப் பார்க்க வேண்டியிருந்தது.சுமித்ராவும் அமைதியாக அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மதிய உணவு வேளை நெருங்கவும்....இருவரும் சாப்பிடச் சென்றனர்.சரியாக பாலாவும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான்.
"என்ன நித்தி...!முகம் ஒரே டல்லா இருக்கு...?",என்றபடி அவர்களுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான்.
ஆமா பாலா....இன்னைக்கு லீலா அக்கா லீவா....ஸோ....வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு....அதுதான் கொஞ்சம் டல்லா தெரியறேன்....",என்றாள் சோர்வாக.
"ஆஹா....கொஞ்சம் வேலை அதிகமானதுக்கே சோர்ந்து போனா எப்படிம்மா...?நாளைக்கு லீலாக்கா ரிலீவ் ஆனதுக்கு அப்புறம்....நீதானே மொத்த வேலையையும் பார்க்கற மாதிரி இருக்கும்....ஸோ...இப்போ இருந்தே எல்லாத்துக்கும் பழகிக்கோ...!",என்றவன் தன் சாப்பாட்டைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான்.
"நீ சொல்றதும் சரிதான்....இப்போவே கொஞ்சம் ட்ரெய்னிங் கிடைச்ச மாதிரி இருக்கு...."
"ஹ்ம்ம்....குட் கேர்ள்....!இந்தா....உனக்கு பிடிச்ச உருளைக் கிழங்கு வறுவல்....சாப்பிடு!",என்றபடி தன் தட்டில் இருந்த உருளைக் கிழங்கு வறுவலை எடுத்து,நித்திலாவின் தட்டில் வைத்தான்.
"ஐ....தேங்க் யூ பாலா....ஐ லவ் இட்....!",என்றபடி அதை கபளீகரம் செய்ய ஆரம்பித்தாள் நித்திலா.
சுமித்ராவைப் பார்த்தவன்,"என்னங்க சுமித்ரா....!ரொம்பவும் அமைதியா இருக்கீங்க...?",என்க,
"கொஞ்சம் வொர்க் டென்சன் பாலா....",என்றவள் அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தாள்.
அப்பொழுதுதான் அவள் அமைதியாய் இருப்பதைக் கவனித்த நித்திலா,"என்னாச்சு சுமி...?காலையில இருந்து எதையோ யோசிச்சுக்கிட்டே இருக்க...?நானும் வொர்க் பிஸில உன்னைக் கவனிக்கல....இப்பவும் இவ்வளவு சீக்கிரமா சாப்பிட்டுவிட்ட....?எனி ப்ராப்ளம்....?",என அக்கறையுடன் வினவ,
"அதெல்லாம் ஒண்ணுமில்ல நித்தி....வொர்க்ல ஒரு சின்ன ப்ராப்ளம்...அவ்வளவுதான்...",என்றவள்,"சரி...நான் கிளம்பறேன்...கொஞ்சம் வேலை இருக்கு....நீங்க சாப்பிட்டுட்டு வாங்க...!",என்றபடி நகர்ந்து விட்டாள்.
அவளையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த நித்திலா பாலாவிடம்,"என்னாச்சுன்னு தெரியல பாலா....காலையில இருந்து கொஞ்சம் டல்லாத்தான் இருக்கா...",என்று வருத்தப்பட,
"விடு நித்தி....!அதுதான் வொர்க்ல ஒரு சின்ன ப்ராப்ளம்ன்னு சொன்னாங்கள்ல....சால்வ் பண்ணிடுவாங்க...யூ டோன்ட் வொர்ரி...!",என சமாதானம் கூறினான்.
"ஆமா பாலா...நானே கேட்கணும்னு இருந்தேன்....என்னை 'வா..!போ...!'ன்னு கூப்பிடற....சுமிக்கிட்ட மட்டும் மரியாதை கொடுத்துப் பேசிக்கிட்டு இருக்க....",என்று அவன் கொடுத்த உருளைக் கிழங்கு வருவலை வாயில் போட்டபடி கேட்க,
அவள் கேட்ட கேள்வியில் அவனுக்குப் புரை ஏறியது.என்னவோ தெரியவில்லை....சுமித்ராவிடம் அவனால் இயல்பாகப் பழக முடியவில்லை.இதுவே,நித்திலாவிடம் உரிமை எடுத்து மிக இயல்பாகப் பழக முடிந்தது...நட்பு என்பதையும் தாண்டி அவள் மேல்...அவனுக்கு ஒரு உணர்வு இருந்தது.
அவனது மனதில்....காதல் என்னும் சிம்மாசனத்தில்....மெல்ல மெல்ல....அவளைக் குடியேற்ற ஆரம்பித்திருந்தான்.இதுவரை....எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத...அவனது மனதிலும்....காதல் என்னும் சாரலைத் தூற ஆரம்பித்திருந்தாள் நித்திலா.....!
இப்படி இரு ஆண்களின் இதயத்திலும்...காதல் என்னும் விதையை விதைத்திருந்த நம் நாயகியோ....ஒன்றும் அறியாதவளாய்....உருளைக் கிழங்கு வருவலைக் கொறித்துக் கொண்டிருந்தாள்.
என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவன்,"என்னப்பா பாலா...கேள்வி கேட்டா பதில் சொல்லணும்ப்பா...",என்ற நித்திலாவின் கேள்வியில் சுதாரித்தவனாய்,
"அது...என்னவோ தெரியல நித்தி....உன்கிட்ட பழகர மாதிரி...சுமித்ராகிட்டப் பழக முடியல....சரி...அத விடு...இப்போ அதுவா முக்கியம்....சாப்பிடற வேலையைப் பாரு...",என அவளைத் திசை திருப்பினான்.
அவனது தயக்கத்திற்கான காரணத்தை அவள் அன்றே உணர்ந்திருந்தால்....பின்னாளில் ஏற்பட இருந்த பல பிரச்சனைகளை அவள்...அன்றே தவிர்த்திருக்கலாம்....!ஆனால்...விதி யாரை விட்டது...?
.....................................................................................................................................................................

சாப்பாட்டை முடித்து விட்டு தன் டேபிளுக்கு வந்த நித்திலாவை,அவளுக்காகக் காத்திருந்த வேலைகள் ஆக்கிரமித்துக் கொண்டன.மும்முரமாக தன் வேலையில் ஆழ்ந்திருந்தவளை,அவளது டேபிளின் மீதிருந்த தொலைபேசி ஒலித்து அவளது கவனத்தை ஈர்த்தது.
ரிசீவரை எடுத்தவளின் காதில்,"ரூமுக்கு வா..!",என்ற ஆதித்யனின் குரல் ஒலித்தது.அவள் மறுமொழி கூறுவதற்கு உள்ளேயே போனை வைத்தும் விட்டான்.
'என்ன இவன்...ஏதோ கட்டின பொண்டாட்டியைக் கூப்பிடற மாதிரி....இவ்வளவு உரிமையாவும்...அதிகாரமாவும்...கூப்பிடறான்...!'சரி' ன்னு சொல்றதுக்குள்ள போனை வைச்சாச்சு...',என்று எண்ணியபடியே ஆதித்யனின் அறைக்குள் சென்றாள்.
அவனைப் பார்க்கும் போதே தெரிந்தது...டென்ஸனாக இருக்கிறான் என்று."கூப்பிட்டீங்களா சார்...?"என்றபடி தன் முன் வந்து நின்றவளை நோக்கியவன்,
"நித்திலா...! நம்ம கம்பெனியைப் பத்தி ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ண வேண்டி இருக்கு....அதுக்கு இந்த வருஷத்தோட பேலன்ஸ் ஷீட் தேவைப்படுது....நீ அதை ரெடி பண்ணிடு அண்ட் உனக்குத் தேவையான டீடெய்ல்ஸை அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து வாங்கிக்க....நம்ம அக்கவுண்டண்ட் லீவ்ல இருக்கறதுனால....இந்த வேலை உனக்கு வந்திருச்சு....சீக்கிரம் ரெடி பண்ணி கொண்டு வா...!",விடுவிடுவென ஆணைகளைப் பிறப்பித்தவன் அதன் பிறகு அவளைக் கண்டு கொள்ளாமல்....தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் முகம் புதைத்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில்,ஒருவாறாக மண்டையை உடைத்து....இதுவரை பாடப் புத்தகத்தில் மட்டுமே படித்திருந்ததை செய்முறையாகக் கொண்டு வந்திருந்தாள்.
பிராக்டிக்கல் அனுபவம் இல்லை என்பதால் சற்று தடுமாறித்தான் போனாள்.ஆனாலும்,லீலா சொல்லிக் கொடுத்ததை வைத்து ஓரளவு சமாளித்துக் கொண்டாள்.
'இந்த லீலாக்கா இன்னைக்குன்னு பார்த்துதான் லீவ் போடணுமா...?',என்று புலம்பியபடியே ஒருவழியாக பேலன்ஸ் ஷீட்டை ரெடி பண்ணி,ஆதித்யனின் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
அவள் கொடுத்த பேலன்ஸ் ஷீட்டை ஆராய்ந்தவனுக்கு அதில் ஏதோ தவறு இருப்பது புரிந்தது.சில நொடிகளிலேயே அது என்ன தவறு என்பதையும் கண்டுபிடித்து விட்டான்.பார்த்ததும் அவனுக்கு சுர்ரென்று கோபம்தான் வந்தது.
அந்தக் கோபத்துடனேயே நிமிர்ந்தவன்,"என்ன நித்திலா...?என்ன பண்ணி வைச்சிருக்க....?",என அவளைக் கடிய அவள் திருதிருவென்று முழித்தாள்.
"எந்த வேலையிலும் கவனமா இருக்கணும்....உன்னை பேலன்ஸ் ஷீட் ரெடி பண்ண சொன்னா...கடைசி வருஷத்தை பேஸா எடுக்காம....அதுக்கு முந்தின வருஷத்தை பேஸா எடுத்துப் பண்ணி வைச்சிருக்க...டோட்டலா ராங்...உன் கவனமெல்லாம் எங்கிருக்கு...?ஐ வாண்ட் பெர்ஃபக்க்ஷன் இன் ஈச் அண்ட் எவ்ரி வொர்க் ",எனப் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான்.
அவன் கோபத்தை முதன் முதலில் பார்த்தவளுக்கு சிறிது பயம் வரத்தான் செய்தது."சாரி சார்...", என்று மென்று விழுங்கியபடிக் கூறியவளைப் பார்த்து,
"என்ன சாரி...?இந்நேரம் நான் இதைப் பார்க்காம அனுப்பி இருந்தா....என்ன ஆகியிருக்கும்?நீ M.COM படிச்சிட்டுதானே வந்த...?இல்ல....சும்மா மார்க் வாங்கிட்டு வந்தியா...?",எனக் கத்த ஆரம்பித்தான்.
ஆதித்யனைப் பொறுத்த வரையில்,எந்த வேலையிலும் சிறு தவறு கூட இருக்க கூடாது.அவனும் இதுவரை எந்த தவறும் செய்ததில்லை.அவன் தொட்டதெல்லாம் வேற்றியில்தான் முடிந்திருக்கிறது.அவனது வொர்க்கர்ஸ் யாராவது சிறு தவறு செய்திருந்தாலும் சாமி ஆடி தீர்த்து விடுவான்.
அதிலும் யாரவது 'சாரி' என்று கேட்டு விட்டால் அவ்வளவுதான்.'செய்யும் வேலையில் கவனமாக இருக்காமல்...'சாரி' என்று சொல்லி விட்டால் சரியாகி விடுமா?',என்று இன்னும் அதிகமாகக் கோபம்தான் வரும்.
இதை எதையும் அறியாமல்,நித்திலா 'சாரி' என்று கேட்டு வைக்க....அவன் கோபத்தில் வார்த்தைகளை விட ஆரம்பித்து விட்டான்.தொழிலைப் பொறுத்த வரையில் அவன் வேறு ஒரு ஆதித்யனாகத்தான் இருந்தான்.அவனது குடும்பமோ...காதலோ....எதுவும் அவனது தொழிலுக்குக் குறுக்கே வந்து விட முடியாது.
தன்னை அதிர்ந்து நோக்கியவளைக் கண்டு....என்ன நினைத்தானோ,"இன்னும் அரை மணி நேரத்தில்...இதை சரி பண்ணிக் கொண்டு வா...!",என்றுவிட்டு தன் மடிக் கணினியில் முகம் புதைத்துக் கொண்டான்.
வெளியில் வந்த நித்திலாவுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.'பேசாமல் வேலையை விட்டு சென்று விடுவோமா' என்று கூட எண்ணம் வந்தது.
'ச்சே...!என்ன நித்தி இது...?அதுதான்....லீலாக்கா ஏற்கனவே சொல்லி இருந்தாங்களே...நம்ம M.D க்கு கொஞ்சம் கோபம் அதிகம்னு....கொஞ்சம் என்ன கொஞ்சம்....ரொம்பவே அதிகம்தான்.அதுவும் இல்லாம...நாமும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்....நம்ம மேலேயும் தப்பு இருக்கு...',என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
சற்று மிரண்டு போய் தன் அறையை விட்டு வெளியேறிய நித்திலாவைக் கண்ட ஆதித்யனுக்குப் பாவமாகத்தான் இருந்தது.
'கொஞ்சம் அதிகமாத்தான் திட்டி விட்டோமோ...?பாவம்....மெதுவா எடுத்து சொல்லி இருக்கலாம்....ஆனாலும் ஆதி...உனக்கு இவ்ளோ கோபம் ஆகாது...',என்று அவன் காதல் மனம் அவனுக்கு எடுத்துக் கூற,
அவனது மூளையோ,'அதெல்லாம் ஒண்ணுமில்ல....நான் திட்டியது சரிதான்....என்னை என் இயல்பிலேயே அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்....!தொழிலைப் பொறுத்த வரைக்கும்...நான் வேறு ஒரு ஆதித்யன்தான் என்பது அவளுக்கும் புரிய வேண்டும்...',என்று அவனது மனதை அடக்கியது.
தன் இயல்பிலேயே தன்னை அவள் ஏற்க வேண்டும் என்ற அவனது பிடிவாதமும்...கோபமுமே....அவனது நாயகியின் கண்ணீருக்கும் காரணமாக இருக்கப் போகிறது....!அவளது காதலுக்கும் அச்சாரமாக இருக்கப் போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை....!!
அடுத்த ஒரு மணி நேரத்தில்,புது பேலன்ஸ் ஷீட்டோடு ஆதித்யன் முன் நின்றிருந்தாள் நித்திலா.
அதை சரிபார்த்தவன் அனைத்தும் கச்சிதமாக இருப்பதைக் கண்டு,சிறு புன்னைகையுடன்,"ஹ்ம்ம்....குட்!",என்றவன் "சரி நித்திலா....!நீ கிளம்பு...லேட் ஆகிடுச்சு...",என்றான்.
சற்று முன் கோபமாகப் பேசியது இவன்தானா...என்று சந்தேகப்படும் அளவிற்கு...அவனது குரல் மென்மையாக மாறி இருந்தது.
"ஒகே சார்...பை...!",என்றபடி தன் மேசைக்கு வந்தவள் அப்பொழுதுதான் சுமித்ராவைக் கவனித்தாள்.அவளது கணினியில் எதையோ அவசரமாகத் தேடியபடி பரபரப்பாக அமர்ந்திருந்தாள் சுமித்ரா.
"என்ன தேடிக்கிட்டு இருக்க சுமி...?",என்றபடி அவளருகில் சென்று அமர்ந்தவளைக் கவனிக்காமல்,தனது சிஸ்டமையே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
"ஏய்...சுமி...!என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு கேட்டேன்...?இன்னும் கிளம்பலையா...?",என்றபடி அவள் முதுகில் ஒரு அடி போட,
அதில் திரும்பி நித்திலாவின் முகத்தைப் பார்த்தவளின் முகத்தில் அப்படியொரு கலக்கம் சூழ்ந்திருந்தது.அவள் முகத்திலிருந்தே 'ஏதோ பிரச்சனை' என ஊகித்த நித்திலா அவளிடம்,"என்னப்பா சுமி ஆச்சு...?என்கிட்டே சொல்லு...?",என ஆறுதலாக வினவ,
தனது தோழியின் ஆறுதலான வார்த்தைகளில் அவளது முகம் நோக்கியவள்,"நித்தி....!நம்ம கம்பெனிக்கு ஒரு புது ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு....அதைப் பத்தி ரிப்போர்ட் ரெடி பண்ணித் தரச் சொல்லி...கெளதம் சார் என்கிட்ட கொடுத்திருந்தாரு...."
"ஓ....அதுதான் காலையில இருந்து பிஸியா இருந்தியா....?",எனக் குறுக்கே புகுந்து வினவிய நித்திலாவைப் பார்த்து,
"ம்ம்....",என்று தலையசைத்தவள்,"ஆனா...இப்ப அந்த ரிப்போர்ட்டைக் காணோம் நித்தி....!",என்று பாவமாகச் சொன்னாள்.
"ஹே...இரு....!தேடிப் பார்ப்போம்....வேற ஏதாச்சும் ஃபோல்டர்ல சேவ் பண்ணி வைச்சிருப்ப...",என்றபடி சுமித்ராவின் கணினியை ஆராய ஆரம்பித்தாள்.
"நான் எல்லாத்துலேயும் பாத்துட்டேன்....எங்கேயும் இல்ல....எப்படி டெலீட் ஆச்சுன்னு தெரியல....நான் இப்போ கெளதம் சார்கிட்ட என்ன சொல்லட்டும்....?",என்று புலம்பியத் தோழியைப் பார்த்தவளுக்குப் பாவமாக இருந்தது.
"வேணும்னா சுமி....கெளதம் சார்கிட்ட...நாளைக்குக் கொடுக்கறேன்னு டைம் கேட்டுப் பாரு....",என ஐடியா கொடுக்க,
"இல்ல நித்தி...!அவரு கோபப்படுவாரு....இப்போவெல்லாம்....நான் சின்ன தப்பு பண்ணினாக் கூட....என் மேல எரிஞ்சு விழறாரு....!இப்போ போய்...ரிப்போர்ட் ரெடி ஆகலைன்னு சொன்னா....நான் அவ்வளவுதான்....!",என்று பயப்பட்டவளைப் பார்த்து,
"இப்ப நமக்கு வேற வழி இல்ல சுமி....டைம் கேட்டுத்தான் ஆகணும்....!ஒண்ணும் சொல்லமாட்டாரு....நீ போ...!",என்று நித்திலா கூறிக் கொண்டிருக்கும் போதே,கௌதமிடம் இருந்து சுமித்ராவிற்கு அழைப்பு வந்தது.
"ஐயோ நித்தி....!அந்த ரிப்போர்ட்டைத்தான் கேட்பாரு...நான் என்னடி சொல்லட்டும்....?",என்று பயந்த தோழியை,
"போய் நடந்ததைச் சொல்லு....!ஒண்ணும் சொல்ல மாட்டாரு....என்ன தலையையா சீவிட முடியும்...?தைரியமா போடி....!",என அதட்டி அடக்கியவள்,"நான் வேணா இங்கேயே இருக்கட்டுமா....?நீ வந்ததுக்குப் பிறகு கிளம்பிக்கலாம்....",என ஆறுதலாகக் கேட்க,
அவளுடையப் பேச்சில் சிறிது தைரியமடைந்தவள்,"இல்ல...வேணாம் நித்தி...!நீ கிளம்பு...நான் பார்த்துக்கிறேன்....!",என்றபடி கௌதமின் அறைக்குச் சென்றாள்.
சென்ற தோழியையேப் பார்த்துக் கொண்டிருந்த நித்திலா,'இன்னைக்கு என்ன திட்டு வாங்கற நாள் போல...?மதியம்தான் ஆதி சார்கிட்ட நான் திட்டு வாங்கினேன்...இப்போ...சுமி....கெளதம் சார்கிட்ட திட்டு வாங்கப் போறா....!'என்று எண்ணியபடியே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
..........................................................................................................
கௌதமை எதிர் கொள்வதற்கே சுமித்ராவிற்கு பயமாகத்தான் இருந்தது.
இப்பொழுதெல்லாம்...அவன் எதற்கெடுத்தாலும் சுமித்ராவிடம் எரிந்து விழ ஆரம்பித்திருந்தான்.இதுநாள் வரை....வெற்றிகரமாக அவனால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காதல் உணர்வுகள்....அவனுடைய அத்தனைக் கட்டுப்பாடுகளையும் தகர்த்து எறிந்து விட்டு....சீறிப் பாய ஆரம்பித்திருந்தன....!
அந்த உணர்வுகளை....அந்த உணர்வுகளுக்கு காரணமானவளிடம் காட்ட முடியாத தன் நிலைமையை எண்ணி....அவனுக்கு ஏக்கம் வந்தது....அந்த ஏக்கம் கோபமாக மாறி...அந்தக் கோபம்....கடும் வார்த்தைகளாக உருவெடுத்து அவளைக் குத்திக் கிழிக்க ஆரம்பித்திருந்தன....!
அதிலும் சில சமயங்களில்....இவன் கோபத்தைக் கண்டு அவள்...சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட மான் போல் மருண்டு விழிப்பாள்.....அந்த சமயத்தில்....அவளை இழுத்து அணைத்து....தன்னை பயத்துடன் நோக்கும் அந்த விழிகளில் முத்தமிட வேண்டும்....என்பது போல் அவனுக்குள் தாபம் எழும்....!
பேயாட்டம் போடும் அந்த உணர்வுகளை அடக்கும் வழிவகை தெரியாமல்....அவனுக்கு இன்னும் கோபம் அதிகமாகத்தான் வரும்...!அவளால் தனக்குள் ஏற்படும் மாற்றங்களையும்....அவளைக் கண்டால் மட்டுமே தனக்குள் சிலிர்த்து எழும் காதல் உணர்வுகளையும்....அவன் ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான்....இதில் விந்தையிலும் விந்தை....!!
தன் முன் நின்றிருந்தவளை நிமிர்ந்து நோக்காமல்,கணினியில் இருந்து பார்வையை விலக்காமலேயே....தன் ஒரு கையை மட்டும் அவள் முன் நீட்டி,"ரிப்போர்ட்....?",என்க,
கையில் ரிப்போர்ட் இருந்தால்தானே அவனிடம் கொடுப்பாள்....?என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அவள் பாட்டிற்க்கு கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால்,அவளை நிமிர்ந்து பார்த்தவன்,"சுமித்ரா....!உங்ககிட்டத்தான் கேட்கிறேன்....ரிப்போர்ட்டைக் கொடுங்க....!",இம்முறை சற்று அழுத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
"சார்....அது வந்து....நான் ரிப்போர்ட்டை ரெடி பண்ணிட்டேன்....ஆனா...அது எப்படி டெலீட் ஆச்சுன்னே தெரியல....",ஒரு வழியாகத் திக்கித் திணறிக் கூறி முடித்திருந்தாள்.
அவ்வளவுதான்....கௌதமிற்கு வந்ததே கோபம்....!அவளை உறுத்து விழித்தவன்,"என்ன விளையாடிக்கிட்டு இருக்கிறயா....?சின்னக் குழந்தை மாதிரி டெலீட் ஆகிடுச்சுன்னு ரீசன் சொல்லிக்கிட்டு இருக்கிற....?எனக்குத் தெரியாது....எனக்கு இப்பவே அந்த ரிப்போர்ட் கையில் வந்தாகணும்....",என்று கத்த ஆரம்பித்தான்.
பேசி முடித்த பிறகுதான் அவளை ஒருமையில் அழைத்துப் பேசியது அவனுக்கு உறைத்தது.'ஸோ வாட்....?' என அசால்ட்டாக நினைத்தவன்,நிமிர்ந்து அவளைப் பார்க்க,
அவளும் இவனைத்தான் விழியகலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளது மனதிற்குள்ளும்,'என்ன...இவ்வளவு நாள்...'வாங்க...போங்க....!ன்னு மரியாதையாக் கூப்பிட்டிட்டு இருந்தாரு....இப்போ...அதுவும் போச்சா...' என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது.
அவளது விழிகளில் இருந்தே....அவள் நினைப்பதைப் புரிந்துக் கொண்டவன்....தன் தோளைக் குலுக்கியபடி," அதனால என்ன...?எப்படி இருந்தாலும்...நீ என்னை விட சின்ன பெண்ணாகத்தான் இருப்ப....ஸோ...கம் டூ தி மேட்டர்....ரிப்போர்ட்டுக்கு என்ன பதில் சொல்லப் போற...?",என்று மேலும் ஒருமையில் அழைத்துப் பேச ஆரம்பித்தான்.அதில் 'இனி....நான் உன்னை ஒருமையில்தான் அழைப்பேன்' என்ற செய்தி மறைந்திருந்தது,
முதலில் அவன் கூறியதைக் கேட்டு....இன்னும் அகலமாக விழி விரித்தவள்....அடுத்து அவன் கூறிய 'ரிப்போர்ட்' என்ற வார்த்தையில் விழி சுருங்க தன்னியல்புக்கு வந்தாள்.
அவனிடம் கெஞ்சலாக,"சார்....!ப்ளீஸ்.....நாளைக்கு ஒருநாள் மட்டும் டைம் கொடுங்க....நான் முடிச்சிடறேன்....",என்க,
அவனோ,"என்ன.... ஒரு நாள் டைமா....?ஏற்கனவே இந்த ப்ரொஜெக்ட்டை சீக்கிரம் முடிக்கச் சொல்லி மெயில் வந்திருக்கு....இதுல...இன்னும் ரிப்போர்ட்டே ரெடியாகலைன்னா.....?எனக்குத் தெரியாது....கம்ப்ளீட் பண்ணிக் கொடுத்துட்டு வீட்டுக்கு போ....",என்று உச்சஸ்தாயியில் கத்த ஆரம்பித்தான்.
அவனின் கோபத்தில் அவளுக்குக் கண்ணீரே வந்து விட்டது.முகம் சுருங்க....கண்ணீரோடு நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு....மனதுக்குள் ஏதோ பிசைந்தது.
"சரி....போ...!பட்....நாளைக்குக் காலையில 11 மணிக்கு அந்த ரிப்போர்ட் என் டேபிளில் இருக்கணும்....",என அதிகாரமாக உரைத்தவன்,மீண்டும் தன் கணினியைப் பார்வையிட ஆரம்பித்தான்.
"தேங்க் யூ சார்....!நாளைக்குக் கண்டிப்பா சப்மிட் பண்ணிடறேன்...."",என்று விட்டு வாசலை நோக்கித் திரும்பியவளை,
"ஒரு நிமிஷம்...!",என்ற கௌதமின் குரல் தடுத்து நிறுத்தியது.
'என்ன' என்பதாய் தன்னை நோக்கியவளிடம்,தன் சிஸ்டமில் இருந்து பார்வையைத் திருப்பாமலேயே,"கண்ணைத் துடைச்சிட்டுப் போ....!",என்றான்.அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று....அவளை என்னவோ செய்தது...!
'சரி' என்பதாய் தலையசைத்தவள்...தன் முகத்தை சரி செய்து கொண்டு வெளியேறினாள்.
வழக்கம் போல்...அவள் செல்வதையே வெறித்துக் கொண்டிருந்தவன் மனதில்,'என்னடா ஆச்சு கெளதம் உனக்கு...?அவ மேல ரொம்பவும்தான் உன் கோபத்தை காட்டற....நீ இப்படி எல்லாம் கோபப்படற ஆள் இல்லையே டா....வர வர அவளை அழுக வைக்கறதே உன் வேலையாய் போச்சு....அவ அழுகறதைப் பார்க்கறதுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு....' என்று ஏதேதோ எண்ணியவன்,பின் தன் நினைவுகளில் இருந்து மீண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
காதல் தரும் தாபத்தில்தான் அவன்....அவள் மீது கோபத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை.....யார் அந்த மடையனுக்கு எடுத்துச் சொல்வது.....?
இப்பொழுது காதலை அடக்கி வைக்கலாம்...!ஆனால்...அதுவே ஒருநாள் அனைத்து வேலிகளையும் தகர்த்தெறிந்து விட்டு பொங்கிப் பெருகும் போது.....அதைக் கட்டுப் படுத்த யாராலும் முடியாது....!!
கங்கை நீரை ஒரு செம்புக்குள் அடக்கி வைத்திட முடியுமா...?அப்படி....அடக்கி வைத்திட நினைத்தான்....அந்தக் காதல் மடையன்...!ஆனால்....காதல்....கங்கை நதி அல்ல....சுனாமியாய் சீற்றம் கொண்டு எழும் பெருங்கடல்...!!
கங்கை நதியையே அடக்கி வைக்க முடியாது எனும் போது.... பெருங்கடலையா அடக்கி வைக்க முடியும்...?


அகம் தொட வருவான்...!!!
 
அத்தியாயம் 8

அன்று மாலை.....ஹாஸ்டலுக்குத் திரும்பிய நித்திலாவை....அவளது தோழி காவியாவின் அழுகை ஒலியே வரவேற்றது.நந்தினியும்...வர்ஷினியும் அவளைச் சுற்றி நின்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

"காவ்யா...!என்னடி ஆச்சு...?எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு இருக்க...?",என்று கேட்டபடி அவளருகே வந்த நித்திலாவை நிமிர்ந்து பார்த்தவள்....மேலும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

நின்று கொண்டிருந்த தன் தோழிகளைப் பார்த்தவள்,"ஹே....நந்து!வர்ஷி...!நீங்களாவது சொல்லுங்க....எதுக்கு இவ அழுகறா...?",என்று விசாரிக்க,

"அவ லவ் மேட்டர் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சிடுச்சாமாடி.....?",வர்ஷிதான் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

"ஓ....இதுக்குத்தான் இப்படி அழுதுக்கிட்டு இருக்கிறாயாடி காவ்யா....?எப்ப இருந்தாலும்...உங்க வீட்ல சொல்லித்தானே ஆகணும்....?அது இப்போவே தெரிஞ்சிடுச்சுன்னு நினைச்சுக்க....",என்று தோழியை சமாதானப் படுத்தினாள் நித்திலா.

"இல்ல டி....அவங்க வீட்ல பெரிய பிரச்சன்னையாகி....இப்போ இவளுக்கு வேற பக்கம் மாப்பிளைப் பார்த்துகிட்டு இருக்காங்க....",தயங்கித் தயங்கி நந்தினி கூற,

இதைக் கேட்டு காவ்யாவின் புறம் திரும்பியவள்,"இந்த விஷயம் ரமேஷ் அண்ணாவுக்குத் தெரியுமா காவ்யா...?",என விசாரிக்க,

"அவருக்குத் தெரியும் நித்தி....!அவரு...நீ வீட்டை விட்டு வந்திடு....நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம வாழ்க்கையை வாழாலாம்ன்னு சொல்றாரு....",விசும்பல்களுக்கிடையே வந்து விழுந்தன காவ்யாவின் வார்த்தைகள்.

காவ்யா கூறியதைக் கேட்டு...கோபத்தில் முகம் சிவக்க நிமிர்ந்தவள்.... அவளை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டாள்.

"என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க...?ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா....?கஷ்டப்பட்டு உன்னைப் பெத்து...வளர்த்து....படிக்க வைச்சு ஆளாக்கின உங்க அம்மா அப்பாக்கு....நல்ல பரிசு கொடுக்கப் போற டி....அந்த ரமேஷ் அண்ணாவை உனக்கு ஒரு....ஒரு வருஷம் தெரியுமா...?மிஞ்சிப் போனா...ஒரு ஒன்றரை வருஷம்...?அவங்களுக்காக...22 வருஷம் உன்னைப் பெத்து வளர்த்தின...உன் அம்மா அப்பாவை விடப் போறியா...?".எனத் திட்ட ஆரம்பித்ததாள்.

நித்திலா திட்டியதைக் கேட்டு முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் காவ்யா.

"எனக்கு வே...வேற வழி தெரியல டி....அவரு இல்லாத ஒரு வாழ்க்கையை.... என்னால நினைச்சுக் கூ...கூட பார்க்க முடியல...",

பரிதாபமாக தன் முகத்தைப் பார்த்து அழுது கொண்டே கூறியத் தோழியைப் பார்த்தவளுக்குப் பாவமாக இருந்தது.அமைதியாக அவள் தலையை வருடிக் கொடுத்தவள்,"நல்லா யோசிங்க காவ்யா....!இதுக்கு வேற வழி இருக்கும்....ரமேஷ் அண்ணாவைக் குடும்பத்தோட வந்து பொண்ணுக் கேட்க சொல்லு....",எனப் பொறுமையாக எடுத்துக் கூறினாள்.

தேம்பிக் கொண்டே 'இல்லை' என தலையசைத்தவள்,"அவரு என் அப்பாட்ட பேசிட்டாரு டி....என் அப்பாதான் இரண்டு பேரும் வே...வேற ஜாதின்னு சொல்லி....அவர அவமானப்படுத்தி அனுப்பிட்டாரு....!அந்தக் கோபத்திலதான் அவரு...'உன் அப்பா அம்மாவை விட்டுட்டு வா...நாம கல்யாணம் பண்ணிக்கலாம்....உனக்கு நான் முக்கியமா...?இல்ல....உன் அப்பா முக்கியமான்னு கேட்கிறாரு....",என்றாள்.

"அதுக்காக....உங்க வீட்டை விட்டு வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்குவீங்களா....?இது தப்பு காவ்யா....!கொஞ்சம் யோசிச்சுப் பாரு....உன் மேல நம்பிக்கை வைச்சு இருக்கற...உங்க அம்மா அப்பாக்குத் துரோகம் பண்ற மாதிரி இல்ல...",அதற்கு மேல் நித்திலா என்ன சொல்லி இருப்பாளோ,அதற்குள் நந்தினி குறுக்கேப் புகுந்து பேச ஆரம்பித்தாள்.

"விடு நித்தி....!அவளே ஏற்கனவே குழப்பத்துல இருக்கா....இதுல...நீ வேற அவளை இன்னும் குழப்பற.....இது அவளுடைய வாழ்க்கை....!எதுவா இருந்தாலும்...அவளே முடிவு பண்ணட்டும்...!".

"அவ வாழ்க்கைதான் டி....நான் ஒத்துக்கிறேன்....!இந்த வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கக் காரணமா இருந்தது அவளைப் பெத்தவங்கதான.... அப்போ...அவங்களுக்கு இல்லாத உரிமையா...?",

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காவ்யா,தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு....ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.

"ஐயோ...!ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கறீங்களா....?நித்தி....!நீ சொல்றது எல்லாமே சரிதான்.....நான் ஒத்துக்கிறேன்....!இந்த வாழ்க்கை என் அம்மா அப்பா எனக்குப் போட்ட பிச்சைதான்....!நான் இல்லைன்னு சொல்லல....ஆனா....அதே சமயம் இது என்னோட வாழ்க்கையும் கூட.....என் சந்தோஷப்படி வாழ எனக்கு உரிமையில்லையா....?

நீ சொல்ற விஷயங்களை....நான் ரமேஷை லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்....இப்ப யோசிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல....!நீ சொல்ற மாதிரி....பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணாம....என் அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நான் அவங்க பின்னாடி போனா....அப்ப....நான் ரமேஷ்க்கு செய்யறதுக்குப் பேர் என்ன....?அவருடையக் காதலுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்....?",தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்ட காவியாவிற்கு என்ன பதில் சொல்வது என்று நித்திலாவிற்குத் தெரியவில்லை.

இந்தக் கோணத்தில் அவள் யோசிக்கவேயில்லை..... இருந்தாலும்... நித்திலாவினால் அவள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை....

காவ்யாவே மேலும் பேச ஆரம்பித்தாள்."எங்க அப்பா எதுக்காக எங்க காதலை மறுக்கறார்ன்னு தெரியுமா டி.....!ஏன்னா....நாங்க ரெண்டு பேரும்....வேற....வேற ஜாதியாம்....!இந்த உப்பு சப்பில்லாத காரணத்துக்காக நான் என் காதலை விட்டுக் கொடுக்கணுமா.....?"

"எனக்குப் புரியுது....!நான் எடுக்கப் போற முடிவால...என்னைப் பெத்தவங்க என்ன பாடுபடப் போறாங்கன்னு எ...எனக்குப் புரியுது...பட்....எனக்கு வேற வழி தெரியல நித்தி.....!எங்க குடும்பத்தை மதிச்சு நாங்க அவங்களுக்கு....எங்க காதல பத்தி சொன்னோம்....!ஆனா....அவங்க....",சிறிது இடைவெளி விட்டுத் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

"அவங்களுடைய வறட்டு கவுரவுத்துக்காக....என்னால என் காதலை விட முடியாது....!",தீர்மானமாகச் சொன்னவள் எழுந்து சென்று விட்டாள்.

நீளமாகப் பேசி முடித்த காவ்யாவின் உரையாடலில் மற்ற மூவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.முதலில் சுதாரித்து....நித்திலாதான் பேச ஆரம்பித்தாள்.

"என்னடி.....!இப்படி சொல்லிட்டுப் போறா.....?காதலுக்காகப் பெத்தவங்களை விடப் போறேன்னு சொல்றா....?",எனப் பல்லைக் கடித்தவளிடம்,

"சும்மா கோபப்படாத நித்தி....!காதலிக்கறவங்களுக்குத்தான் அதனோட அருமை தெரியும்....!காவ்யா ஒன்னும் சந்தோஷமா இந்த முடிவை எடுத்திருக்க மாட்டா.....!அவளுக்கும் அவளைப் பெத்தவங்க மேல பாசம் இருக்கும்ல....அதையும் மீறி இந்த முடிவு எடுத்திருக்கான்னா....அவளோட நிலைமையை நாம புரிஞ்சுக்கணும்.....அவளோட நிலைமையில் இருந்தும் நாம யோசிக்கணும்....!",என்று விட்டு சென்று விட்டாள் நந்தினி.

'அப்படி என்னதான் காதலோ....?அம்மா அப்பாக்குத் தலை குனிவு ஏற்படுத்தற அளவுக்கா.....காதல் இருக்கும்.....!இந்த லட்சணத்துல...காதலிச்சுப் பார்த்தாதான் அதனோட அருமை தெரியுமாம்.....இந்தக் கருமத்துக்காகவே காதல்ங்கிற வார்தையைக் கூட மனசுல நெருங்க விடக் கூடாது....!இப்படிப்பட்ட அவஸ்தையைத் தர காதல் தேவைதானா....?' என்று கசப்பாக எண்ணியவள் மனதில்.....காதலின் மேல் ஒரு வெறுப்பு தோன்றியிருந்தது.

அவளுக்குத் தெரியவில்லை.....!காதல் அவஸ்தைதான்.....!ஆனால்.....அது சுகமான அவஸ்தை என்று....!!

பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்வது என்பது தவறுதான்.....!ஆனால்....அங்கு உண்மையான....ஆழமான காதல் இருக்கும் பட்சத்தில்....தேவையில்லாத வறட்டுப் பிடிவாதத்திற்க்காக காதலை விட்டுத் தர வேண்டிய அவசியமில்லையே....?

அதைத்தான் காவ்யாவும் செய்தாள்.....!கேவலம் இருவரும் வேறு வேறு ஜாதி என்று அப்பா சொல்லும் காரணத்திற்காக....அவர் பேச்சைக் கேட்டு அவர் பின்னால் சென்றால்....ரமேஷ் என் மேல் வைத்திருக்கும் உண்மையான காதலுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டாள்.....?என்னை நம்பி....அவர் மனதை என்னிடம் கொடுத்திருக்கும் போது....எப்படி அவர் மனதுக்கு நான் துரோகம் செய்யட்டும்....?என்று கேட்டாள்.....!!

அவள் எடுத்த முடிவு ஒருவகையில் சரியானதுதான்....!தேவையில்லாத காரணத்திற்காக உண்மையான காதலை விட்டுத் தர வேண்டிய அவசியமில்லையே.....?ஆனால்.....நித்திலாவினால்தான் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....!!!

இப்பொழுது இப்படி யோசிப்பவள்....காதல் தேவன் தன் பூ வலையை அவள் மீது வீசியப் பிறகும்....இதே நிலையில் இருப்பாளா....?பார்ப்போம்...!!!

.................................................................................................

இறுதியாக ரமேஷ் மற்றும் காவ்யாவின் திருமணம் இன்னும் பத்து நாட்களில் என்று முடிவு செய்யப்பட்டது.ரமேஷ் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டதால்....திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.......

அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால்....தோழிகள் அனைவரும் நேரங்கழித்து எழுந்து....சோம்பலுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.நித்திலா,எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளித்து....முடியை உலர வைத்துக் கொண்டிருந்தாள்.

அவளருகில் வந்து அமர்ந்த காவ்யா,"என் மேல கோபமா நித்தி....?",என்று மெதுவாகக் கேட்க,

"சேச்சே....கோபமெல்லாம் இல்ல டி.....!",என்றவள் தன் செல்போனை எடுத்து விளையாட ஆரம்பித்தாள்.அவளது செய்கையே கூறியது....அவளுக்குக் கோபம்தான் என்று...!

அவளது செல்போனைப் பிடுங்கிக் கீழே வைத்தவள்,நித்திலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு,"எனக்குத் தெரியும் நித்தி....!உனக்கு என்மேல கோபம்ன்னு.....கொஞ்சம் என் நிலைமையையும் யோசிச்சுப் பாருடி....வேற ஜாதிங்கிறதைத் தவிர...வேற என்ன காரணத்தை சொல்லி இருந்தாலும்....கடைசி வரைக்கும் எங்க அப்பா கூட...அவர் மகளாகவே கூட இருந்து அவருக்கு என் காதலைப் புரிய வைச்சிருப்பேன்..... ஆனா....அவரு....ஏண்டி நீ கூட என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற....?இந்த முடிவை நான் சந்தோஷமாவா எடுத்திருப்பேன்னு நினைக்கிற....?",என்றவள் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

அவளது அழுகையில் தனது கோபத்தை உதறியவள்,எழுந்து காவ்யாவை அணைத்துக் கொண்டாள்.

"இல்ல காவ்யா....!அழுகாத.....எனக்கு உன் நிலைமை புரியுது டி....!எனக்கு எந்த கோபமும் இல்ல...ப்ளீஸ்.....அழாத டி....!",என்று அவள் தலையை வருடிக் கொடுத்தாள்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அங்கு நின்றிருந்த நந்தினியும்....வர்ஷாவும்,நிலைமையை மாற்றும் பொருட்டு, "ஹே.....கல்யாணப் பொண்ணு இப்படி அழலாமா.....?இப்படி அழுதுட்டே இருந்தா....முகம் வீங்கிடும்....!அப்புறம் ரமேஷ் அண்ணா,'என் டார்லிங்கை என்ன பண்ணுனீங்கன்னு' கேட்டா நாங்க என்ன பதில் சொல்றது....?",என்று கேலியில் இறங்கினர்.

அவர்களது கேலி கொஞ்சம் வேலை செய்தது.காவ்யாவின் அழுகைக் கொஞ்சம் மட்டுப்பட்டது.

அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வர எண்ணி,"கேர்ள்ஸ்.....!நாம ஷாப்பிங் போலாமா....?காவ்யா மேரேஜ்க்காக நிறைய பர்ச்சேஸ் பண்ணனும்....அவ கல்யாணத்தப்ப நாம எல்லாரும் பட்டுப் புடவைக் கட்டிக்கலாம்..... போலாமா...?",என நித்திலா கேட்க,

"ஓ....போலாமே.....!வாங்க....வாங்க....!எல்லாரும் ரெடி ஆகுங்க....!காவ்யா.....!கெட்டப்.....எழுந்திருச்சு கிளம்பு.....",என அவளை எழுப்பி குளிக்க அனுப்பிய வர்ஷா,மற்ற இருவரையும் பார்த்து,"நீங்களும் ரெடியாகுங்க....!",என விரட்டினாள்.

ஒரு வழியாக அனைவரும் கிளம்பி கடைவீதிக்குச் சென்றனர்.தோழிகள் அனைவரும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி....தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கி முடிக்க மதியம் ஆகியிருந்தது.

ஒரு பிரபல மாலில் சுற்றிக் கொண்டிருந்தனர்.அங்கிருக்கும் ஒரு கடையில் தொங்க விடப் பட்டிருக்கும் சல்வார் அழகாக இருக்கவும்....அதைப் பார்த்த நித்திலா,"ஏய்.....!அந்த சல்வார் அழகா இருக்கல்ல.....?வாங்கப்பா.....போய் அது என்ன விலைன்னு கேட்போம்....?",என்றபடி முன்னால் செல்ல,

அவளை இழுத்துப் பிடித்து நிறுத்திய நந்தினி,"ஏய்....!எரும மாடே...!இன்னும் எத்தனை கடைடி ஏறி இறங்குவீங்க....?முதல்ல என் வயித்துக்கு எதாவது வாங்கிக் கொடுத்துட்டு....எங்கேயோ போய்த் தொலைங்க....",என்று கத்தினாள்.

"அடிப்பாவி....!அதுதான் அப்பப்ப பாப்கார்ன்... ஜூஸ்...மில்க்ஷேக்.... ஐஸ்கிரீம்ன்னு உள்ள தள்ளிக்கிட்டே இருந்தயேடி.....இருந்தும் பசிக்குதுன்னா.... இது என்ன வயிறா...?இல்ல...வண்ணாந்தாழியா.....?",என்று காவ்யா கிண்டலடிக்க,

"ஹ.....அதெல்லாம் சைடு டிஷ்....நான் கேட்கறது மெயின் டிஷ்....!இப்போ வாங்கித் தர முடியுமா....முடியாதா....?",

"சரி....சரி...!வாங்க....!ஃபுட் கோர்ட் போய் சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்....", என்றபடி நித்திலா அழைத்துச் சென்றாள்.

தங்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்து,வயிறு முட்ட உண்டவர்கள்....ஹாஸ்டலுக்குத் திரும்பத் தயாரானார்கள்.நித்திலாவின் சித்தி வீடு அருகில் இருப்பதால்....அவள் மட்டும் அங்கு சென்று விட்டு மாலையில் ஹாஸ்டலுக்கு வருவதாக சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

அங்கு சென்று சித்தியிடம் கதையளந்து விட்டு.....அவரது குழந்தைகளிடம் விளையாடி விட்டு...அங்கிருந்து நித்திலா கிளம்பும் போது மாலையாகியிருந்தது.

நகத்தைக் கடித்துத் துப்பியபடி....பதட்டத்துடன் அந்த பஸ் ஸ்டாப்பில் ஒற்றை ஆளாக நின்று கொண்டிருந்தாள் நித்திலா.'பஸ் ஸ்டாப் வரை வந்து பஸ் ஏற்றி விடுகிறேன்...' என்று கூறிய சித்தியையும் மறுத்து விட்டு....இவள் மட்டும் தனியாகக் கிளம்பி விட்டாள்.

ஊருக்கு வெளியே இருந்த புறநகர் பகுதியில் அவளது சித்தி வீடு இருந்தது.இப்பொழுதுதான்....அங்கங்கே புது வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன.அதனால்,அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை.

'ச்சே....!பேசாம சித்தியைத் துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்.சித்திக்கு போன் பண்ணலாம்னா இந்த போன்ல சார்ஜே இல்ல....மழை வேற வர மாதிரி இருக்கு....ஒதுங்கி நிக்கறதுக்குக் கூட ஒரு இடம் இல்ல....'என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.

நித்திலாவிற்கு கழிவிரக்கத்தில் கண்ணீரே வந்துவிட்டது.நேரமாக ஆக மழை வழுத்துக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை.மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி அழுது கொண்டிருந்தவளின் அருகே சீறிக் கொண்டு வந்து நின்றது அந்த வெளிநாட்டுக் கார்....!

பயத்தில் முகம் வெளிறி ஓட நினைத்தவளை....காரின் உள்ளிருந்து நீண்ட....வலிய கரம் ஒன்று அவளை இழுத்து உள்ளே தள்ளி...கார்க்கதவை அறைந்து சாத்தியது.

பயத்தில் கத்தவும் மறந்தவளாய்....உடல் நடுங்க நிமிர்ந்து பார்த்தவள் சந்தித்தது ஆதித்யனின் அனல் கக்கும் விழிகளைத்தான்.....இனம் புரியா நிம்மதியில்...விழிகளை மூடி பெருமூச்சு விட்டவள்,"ஓ....காட் .....!சார்....!நீ....நீங்கதானா.....?",எனத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவளது முகத்தில் படர்ந்த நிம்மதியைப் பார்த்தும் பார்க்காமல் விட்டவன்,"உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா...?இப்போ மணி என்னன்னு தெரியுமா...?இந்த நேரத்துல இங்க வந்து நின்னுக்கிட்டு இருக்க....?",எனக் கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.

"இ...இல்ல....!என் சித்தி வீட்டுக்கு வந்தேன்....",என அவள் தடுமாற,

"மண்ணாங்கட்டி.....!இது சிட்டிக்கு அவுட்சைட்ல இருக்கிற ஏரியா.....இங்க ஆள் நடமாட்டம் அவ்ளோக்க இருக்காது....இந்த மாதிரி இடத்துக்கு வர்றதுன்னா....ஒண்ணு டாக்ஸி புக் பண்ணி அதுலேயே போய்ட்டு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும்....அதுவும் இல்லையா....துணைக்கு யாராவதை கூட்டிட்டு வரணும்...இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டு....பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கக் கூடாது....",என சரமாரியாக திட்ட ஆரம்பித்தான்.

ஆதித்யனின் நண்பன் வீடு அந்த ஏரியாவில்தான் இருந்தது.அவனைச் சென்று பார்த்து விட்டுக் காரில் திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொண்டது.சாலையோரத்தில் ஒரு பெண் நிற்பது போல் தோன்றவும்....'யார்...?இந்த நேரத்தில்...?' என்று எண்ணியபடி உற்றுப் பார்த்த போதுதான் தெரிந்தது அது நித்திலா என்று....!

மழையில் நனைந்தபடி பயந்து கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு நெஞ்சு பதறியது....'இவளை யார் இந்த நேரத்தில இங்கு வரச் சொன்னா....?' என்று எண்ணிக் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.அந்த கோபத்துடனேயே...அவளைக் காரில் இழுத்துத் தள்ளியவன் அவளிடம் கத்த ஆரம்பித்தான்.

"சாரி....!இப்படி பஸ் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியாது....ரொ...ரொம்ப தேங்க்ஸ்....!நீங்க மட்டும் வரலைன்னா....",என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள் உருண்டன.

கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்குக் கோபம் கொஞ்சம் குறைந்தது."சரி...அழுகாத....!மழை வர்ற மாதிரி இருக்கும் போதே உங்க சித்திக்கு போன் பண்ணி இன்பார்ம் பண்ணிருக்கலாம்ல.....",அவளை அந்த நிலைமையில் பார்த்தவனுக்கு முழுவதுமாக கோபம் குறைய மறுத்தது.

"இல்ல....என் மொபைல்ல சார்ஜ் தீர்ந்து போய்டுச்சு....",தயங்கித் தயங்கி கூறியவளைப் பார்த்தவனுக்குப் போன கோபம் திரும்பி வந்து சேர்ந்தது.

"உன்னையெல்லாம் என்ன செஞ்சா தகும்....?எங்கேயாவது வெளியில போகும் போது மொபைல்ல பேட்டரி ஃபுல் பண்ணிக்கணும்ங்கிற பேசிக் சென்ஸ் கூடவா இல்ல....?",என மீண்டும் பொரிய ஆரம்பித்தவனை கையமர்த்தித் தடுத்தவள்,

"போதும்...போதும் சார்....!நான் செஞ்சது தப்புன்னு எனக்குப் புரியுது.....அதுதான் போதும்ங்கிற அளவுக்குத் திட்டிட்டீங்களே.....நான் கண்டேனா....?உங்க ஊர்ல வெயில் அடிச்சாலும் மண்டை காயற அளவுக்கு அடிக்குது.....மழை பெய்தாலும் 'சோ'ன்னு கொட்டுது....",என்று முணுமுணுத்தவளைக் கண்டவனுக்கு சிரிப்புதான் வந்தது.

'எங்க ஊரா.....?இனி....உன் ஊரும் இதுதான் டி.....!',என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியே,"இனி இப்படி எதைப் பத்தியும் யோசிக்காம வெளில கிளம்பாத.....",என்றபடி காரைக் கிளப்பினான்.

வெளியே மழை பெரும் சத்தத்துடன் கொட்டிக் கொண்டிருக்க....காருக்குள் அதற்கு எதிமாறாக பெரும் அமைதி நிலவியது.

எதேச்சையாக அவள் புறம் திரும்பியவனின் பார்வை....பார்த்தது பார்த்தபடி அவள் மீதே நிலைத்து இருந்தது.

மழையில் நனைந்திருந்ததால்....உடலுடன் ஒட்டிய ஆடை அவளது மேனியழகை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்ட....ஈரக் கூந்தலுடன்....நெற்றியிலும்....கன்னங்களிலும் துளித் துளியாய் மழைத்துளி ஒட்டியிருக்க.....ஒரு தேவதை போல் அமர்ந்திருந்தாள் நித்திலா....!

இவை அனைத்திற்கும் முத்தாரம் வைப்பது போல்....ஒரு ஒற்றை மழைத்துளி ஒன்று....அவள் இதழின் மேல் ஒய்யாரமாய் வீற்றிருந்தது...!

அவள் முகத்திலிருக்கும் மழைத்துளிகளை தன் முகம் கொண்டு துடைத்து....அவள் இதழின் மேல் ஒய்யாரமாய் சயனித்திருக்கும் அந்த ஒற்றை மழைத்துளியை தன் இதழ் கொண்டு சுவைக்க வேண்டும் என்ற தாபம் எழுந்தது ஆதித்யனுக்குள்....!

அப்பொழுது....அவள் நெற்றியிலிருந்து வழிந்த மழைத்துளி அவள் கன்னத்தில் உருண்டோடி.....அவள் சங்கு கன்னத்தில் பயணித்து....அதற்கும் கீழே இறங்க....அவ்வளவுதான்....!அவன் காரை நிறுத்தி விட்டான்.....

"கிறீச்....!" என்ற சத்தத்துடன் கார் நிற்கவும் அவனைத் திரும்பிப் பார்த்தவள்,"என்னாச்சு சார்...?",என்று கேட்க,

அவள் விழிகளைப் பார்ப்பதை தவிர்த்தவன்,"தெ...தெரியல....!நான் போய் பார்க்கிறேன்....!",என்றபடி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கார்கதவைத் திறந்து இறங்கினான்.

ஆர்பரித்துக் கொண்டு மண்ணில் வந்து விழுந்த மழைத்துளிகளைப் போலவே....அவன் மனதிற்குள் உணர்வுகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன....!இதுவரை அவன் அறியாத உணர்வுகள்....எந்தப் பெண்ணைப் பார்த்தும்....கிளர்ந்து எழாத உணர்வுகள்....இன்று நித்திலாவினால் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன...!

கைகளால் தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தவன்,"ப்பா....என்ன உணர்வுடா இது....!இன்னும் கொஞ்ச நேரம் காருக்குள் இருந்திருந்தாலும்....அவளை முத்தமிட்டிருப்போம்.....!கூடிய சீக்கிரம்....என் காதலை அவகிட்ட சொல்லி....அவளை என்னவளாக்கிக் கொள்ள வேண்டும்...!",என்று நினைத்தவன் ஒருவாறாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காரில் ஏறினான்.

காரில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பியவனிடம்,"என்னாச்சு சார்...?",என்று நித்திலா மீண்டும் கேள்வி எழுப்ப,

அவளை ரசிக்கச் சொன்ன மனதை அதன் தலையில் கொட்டி அடக்கியவன்....முயன்று அவள் விழிகளைப் பார்த்து புன்னகைத்து,"ஒரு சின்ன ப்ராப்லம்....!சரி பண்ணிட்டேன்....",என்றவன்,

பின்னாடி சீட்டிலிருந்து ஒரு டவலை எடுத்து அவளிடம் நீட்டியபடி,"ரொம்ப நனைஞ்சிருக்க.....துவட்டிக்கோ....!",என்றான்.

அதை வாங்கி தன் தலையையும்....முகத்தையும் துடைத்தவள்,"நீங்களும்தான் நல்லா நனைஞ்சிட்டீங்க...!",என்றபடி டவலை அவனிடமே திருப்பிக் கொடுத்தாள்.

ஒரு கையால் அந்த டவலை வாங்கித் தன் முகத்தில் வைத்து....ஆழ்ந்து சுவாசித்தான்....!டவல் முழுவதும் அவள் வாசனைகள்...!பின் அதைக் கொண்டு தன் முகத்தை அழுந்தத் துடைத்தவன்....அதைப் பத்திரப்படுத்தவும் மறக்கவில்லை....!

கார் சீரான வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தது.பரபரவென்று தன் இரு கைகளையும் தேய்த்து....தன் கன்னத்தில் வைத்தவள்....,"ரொம்ப குளிரா இருக்கல்ல....?",என்று ஆதித்யனைப் பார்த்துக் கேட்க,

அவளை ஒரு மார்க்கமாக திரும்பிப் பார்த்தவன்,"ஹ்ம்ம்....!எனக்கு ரொம்ப சூடா இருக்கு....!",என முணுமுணுத்தான்.

"என்ன சார் சொன்னீங்க....?எனக்கு சரியா கேட்கல....?",என்றவளிடம்,

"ம்ம்....சூடா ஹீட்டரை ஆன் பண்ணறேன்னு சொன்னேன்....",என்று பெருமூச்சு விட்டபடி காரின் ஏ.ஸி யை நிறுத்திவிட்டு ஹீட்டரை ஆன் செய்தான்.

அதன் பிறகு காரில் அழகான மௌனமே ஆட்சி செய்தது.

ஹாஸ்டலின் வாசலில் அவளை இறக்கிவிட்டவன்,"எங்கேயும் தனியாப் போகாதே....!பிரெண்ட்ஸ் யாரையாவது கூட்டிட்டுப் போ....",என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

'சரி' என்பதாய் தலையாட்டியவள்.....கண்களில் நன்றி பெருக்குடன் அவனைப் பார்த்து,"தேங்க் யூ சார்....!",என்க,

அவனோ....கண்களில் காதல் பெருக்குடன் அவளைப் பார்த்து தலையசைத்தான்.

இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்த காதலோ....மயக்கும் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது....!!!



அகம் தொட வருவான்...!!!
 
அத்தியாயம் 9 :



ஆதித்யா குரூப் ஆப் கம்பெனீஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்-



வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க,நித்திலாவும் லீலாவும் தங்களுக்குள் வேலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"ஹப்பா.....!போதும் நித்தி.....!நீ டவுட் கேட்டு கேட்டு என் மூளை சூடாகிடுச்சு...... வா....!சில்லுன்னு ஒரு ஜூஸ் குடிச்சுட்டு வருவோம்....",என்று லீலா அழைக்க,

"ம்ம்....போலாம் க்கா...!",என்றபடி எழுந்தவள்,சுமித்ராவைப் பார்த்து,"நீயும் வா சுமி....!கேன்டீன் போயிட்டு வரலாம்....",என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

மூவரும் தங்களுக்குத் தேவையான ஜூஸை வாங்கிக் கொண்டு வந்து டேபிளில் அமர்ந்தனர்.லீலாதான் ஆரம்பித்தாள்,

"நித்தி....!இப்ப உனக்கு அல்மோஸ்ட் எல்லா வேலையும் தெரிஞ்சிடுச்சில்ல....ஒரு செக்ரெட்டரிக்கு என்னென்ன வொர்க் இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கிட்டல்ல....?",என்று கேள்வி எழுப்ப,

"ம்ம்....அதுதான் எல்லாமே எனக்குக் கத்துக் கொடுத்திருக்கீங்களே....?",தன் ஜூஸை உறுஞ்சிக் கொண்டே பதிலளித்தாள் நித்திலா.

"குட்...!நித்தி...!நான் ரிலீவ் ஆகலாம்னு ஒரு ஐடியால இருக்கேன்....உனக்கும் என் ஹெல்ப் இனித் தேவைப்படாது...",என்க,

கையில் வைத்திருந்த ஜூஸ் கிளாஸை மேசையில் வைத்தவள்,"என்னக்கா சொல்றீங்க...?நான் ஜாயின் பண்ணினப்ப மூணு மாசம் கழிச்சுத்தான் ரிலீவ் ஆகறன்னு சொன்னீங்க....?அப்படிப் பார்த்தால் இன்னும் இரண்டு மாசம் இருக்கே....?",என்று பதட்டத்துடன் கேட்டாள்.சுமித்ராவும் நித்திலா கூறியதை ஆமோதிப்பதைப் போல லீலாவைப் பார்க்க,

"அந்த பிளான்லதான் இருந்தேன் நித்தி....!பட்....இப்ப குடும்ப சூழ்நிலை...நான் ரிசைன் பண்ணிதான் ஆகணும்...நம்ம M.D கிட்ட இன்னைக்கு பேசலாம்னு இருக்கேன்...."

"நீங்க போய்ட்டா நான் எப்படித் தனியா சமாளிப்பேன்...?",என்று தயங்கியவளை,

"கமான் நித்தி ...!நான் இல்லாமலும் உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்...இப்போ நீ ஒரு பெர்ஃபக்ட் செக்ரெட்டரி....!",என்று ஏதேதோ கூறி அவளை சமாதானப்படுத்தினாள்.

அவளுடைய சமாதானத்தில் சிறிது மனம் தெளிந்தவள்,"ஒகே அக்கா....!உங்க குடும்பத்தையும் பார்த்துதானே ஆகணும்...இன்னும் எவ்ளோ நாள் ஆபிஸ் வருவீங்க....?",என மேற்கொண்டு விசாரித்தாள்.

"ஒரு டூ டேஸ்தான் வருவேன்னு நினைக்கிறேன்.....ஆதி சார்கிட்ட பேசிட்டுதான் முடிவெடுக்க முடியும்....",

"எனிவே....வீ வில் மிஸ் யூ அக்கா...!",என சுமித்ரா கூற,

"நானும்தான் சுமி....உங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்....",என்று வருத்தமாகக் கூறினாள் லீலா.

மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தங்கள் இடத்திற்கு திரும்பினர்.மதிய உணவு இடைவேளையின் போது,லீலா ரிசைன் செய்யப் போகும் விஷயம் பாலாவிடம் பகிரப்பட்ட...அவனும் தன் பங்கிற்கு தனது வருத்தத்தை தெரிவித்தான்.

இடைவேளைக்குப் பிறகு மூவரும் தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க,"நான் போய் ஆதி சார்கிட்ட பேசிட்டு வர்றேன்....",என்றபடி லீலா எழுந்து சென்றாள்.

சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தவள்,"கேர்ள்ஸ்....!நம்ம சார் ஒகே சொல்லிட்டாரு....இன்னும் ரெண்டு நாள்தான் ஆபீஸுக்கு வருவேன்..",என்ற தகவலைப் பகிர,

"அப்பாடா....!டூ டேஸ்க்கு பிறகு லீலாக்காவோட தொல்லை இருக்காது....",என்று நித்திலா கிண்டலடிக்க,அதன்பிறகு நேரம் கலகலப்பாக சென்றது.

நித்திலா தன் சந்தேகங்களை லீலாவிடம் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்வதிலேயே அடுத்த இரண்டு நாட்களும் கழிந்தது.

நித்திலா,சுமித்ரா,பாலா மற்றும் லீலா நால்வரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அன்றுதான் அந்த அலுவலகத்தில் லீலாவிற்கான கடைசி நாள்.இவ்வளவு நாட்கள் அனைவரும் ஒன்றாகப் பழகியதால்...அந்தக் கூட்டிலிருந்து ஒருவரைப் பிரிவது என்பது அனைவருக்குமே சிறிது வருத்தத்தைக் கொடுத்தது.

"ஹே....என்னப்பா....?எல்லாரும் இவ்வளவு அமைதியா இருக்கீங்க...?பிரிஞ்சு போனா என்ன....?அதுதான் நம்ம எல்லார்க்கிட்டேயும் மொபைல் இருக்கே....நாம நாலு பேரும் எப்பவும் கான்டாக்ட்லேயே இருப்போம்....",லீலாதான் மற்ற மூவரையும் தேற்றினாள்.

"என்ன இருந்தாலும்....நாங்க மூணு பேரும் உங்களை ரொம்பவும் மிஸ் பண்ணுவோம்க்கா....!" ,என்று பாலா வருத்தத்துடன் கூற,மற்ற மூவரும் அதை ஆமோதிப்பதைப் போல் தலையசைத்தனர்.

பிறகு சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு,"ஆனாலும் நித்தி...!உனக்கே இது நல்லாயிருக்கா....?மூணு மாசம் கழிச்சு ரிலீவ் ஆகறேன்னு சொன்னவங்கள....நீ உன் டவுட்டை கேட்டுக் கேட்டு...ஒரு மாசத்துலேயே ஓட வைச்சுட்டாயே...?",என்று பாலா கிண்டலடிக்க,

அவனைப் பார்த்து முறைத்த நித்திலா...அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்ட, சரியாக அந்த நேரம் பார்த்து....ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த ஆதித்யன் இவர்களைக் கவனித்து விட்டான்.

பார்த்த வேகத்தில் சுறு சுறுவென்று கோபம் ஏற,'இவன்கிட்ட இவளுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு....?அதுவும் இவ்வளவு க்ளோஸா....'என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தவனை....அவனது மொபைல் ஒலி கலைக்க...அவளை முறைத்தபடியே போனைக் காதுக்குக் கொடுத்த்தபடி வெளியேறிவிட்டான்.

அன்று மாலை...சில பல அணைப்புகளுடனும்....மிஸ் யூக்களுடனும் லீலாவை ஆபிசில் இருந்த அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.நித்திலா,சுமித்ரா மற்றும் பாலா மூவரும் இவர்களது நினைவாக ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.



......................................................................................



லீலா கிளம்பி விட்டதால்....அடுத்த நாளில் இருந்து நித்திலாவிற்கு நேரம் சரியாக இருந்தது.இதுவரை இருவர் இணைந்து பார்த்து வந்த வேலைகளை,இனி இவள் ஒருத்தியே கவனிக்க வேண்டும் என்பதால் வேலைப்பளு அதிகரித்திருந்தது.

ஆதித்யனுக்கோ நிமிடத்திற்கு ஐந்து முறை நித்திலா தேவைப்பட்டாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,'இந்த பைல் எங்கே....?அந்த லெட்டர் ரெடி பண்ணிக் கொண்டு வா....',என நிமிடத்திற்கு ஒரு முறை நித்திலாவை அழைத்துக் கொண்டிருந்தான்.

ஆதித்யனின் அறைக்கும்....தனது டேபிளுக்கும் நடந்து நடந்தே நித்திலாதான் ஒருவழி ஆகியிருந்தாள்.

அன்றும் அப்படிதான்....ஆதித்யனின் அறையிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்த சுமித்ரா,"நித்தி....!இப்படி அலையறதுக்குப் பேசாம நீ அவரோட ரூம்லயே குடியிருந்துக்கலாம்....",என்க,

"சரியா சொன்ன சுமி...!நடந்து நடந்து எனக்குதான் கால் வலிக்குது...",பொத்தென்று தனது சேரில் அமர்ந்தவளைப் பார்த்து,

"சரி....இப்போ எதுக்கு கூப்பிட்டாராம்....?",என்று சுமித்ரா நமட்டு சிரிப்புடன் கேட்க,

"ஏதோ முக்கியமான மெயில் வந்திருக்காம்...அதுக்கு ரிப்ளை பண்ணச் சொன்னாங்க...!",

"இதை போன்லேயே சொல்லியிருக்கலாமே....இதுக்காக உன்னை நேர்ல கூப்பிடணுமா...?",ஒரு மாதிரியாகத் தன்னைப் பார்த்த தோழியிடம்,

"ஏய்...எருமை...!இப்ப எதுக்கு என்னை இப்படி பார்க்கிற...?அந்த மெயில பத்தி டிஸ்கஸ் பண்ணணும்ல...?அதை போன்லயா பண்ண முடியும்....?அதுக்குத்தான் நேர்ல கூப்பிட்டாரு...இப்ப நீ உன் வேலையைப் பாரு...!கூடவே....என்னையும் என் வேலையைப் பார்க்க விடு...!",என்று படபடத்தாள்.

இப்போதைக்குத் தோழியிடம் எதையோ கூறி சமாளித்து விட்டாலும்.... நித்திலாவிற்குமே நெஞ்சம் படபடக்கத்தான் செய்தது.'இப்படி அடிக்கடி கூப்பிட்டுக்கிட்டே இருந்தா....ஆபிஸ்ல இருக்கறவங்க என்ன நினைச்சுக்குவாங்க...?இன்னைக்கு சுமி சந்தேகப்பட்ட மாதிரி...நாளைக்கு வேற யாராவது சந்தேகப்பட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...?'என்ற கேள்வி மனதினுள் எழுந்தது.

'அதிலேயும் இப்போவெல்லாம் ஆதி சாரோட பார்வையே சரியில்ல... என்னவோ... உரிமை இருக்கிற பொருளைப் பார்க்கிற மாதிரி பார்த்து வைக்கிறாரு...!',என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

உண்மைதான்...!இப்பொழுதெல்லாம் நித்திலாவைப் பார்க்கும் ஆதித்யனின் பார்வை மாறியிருந்தது.அவன்...அவளை விழுங்கி விடுவதைப் போலத்தான் பார்த்து வைத்தான்....!

ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவள்,இறுதியில்,'இல்ல...!அப்படி எல்லாம் இருக்காது...நாமதான் ஏதோ பைத்தியம் மாதிரி நினைச்சுக்கிட்டு இருக்கோம்...!',என்று தலையை உலுக்கிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தாள்.

அன்று மாலை...வேலை முடிந்துக் கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவளை...ஆதித்யன் தனது அறைக்கு அழைத்தான்.

"சார்....கூப்பிட்டிங்களா...?",என்றபடி வந்தவளை எப்பொழுதும் போல் அப்பொழுதும் ரசித்தவன்,

"யெஸ் நித்திலா....!உன் டேபிளை என் ரூமுக்கே ஷிஃப்ட் பண்ணச் சொல்லிட்டேன்.... நாளையில் இருந்து நீ என் கேபினிலேயே வொர்க் பண்ணலாம்...!"

"வாட்...?நோ சார்...!நான் எப்பவும் போலேயே இருந்துக்கிறேன்....ப்ளீஸ் சார்...",என்று அவசர அவசரமாக மறுத்தாள்.

அவளை அழுத்தமாக நிமிர்ந்து பார்த்தவன்,"நோ நித்திலா...!எவ்வளவு நாள்தான் என் கேபினுக்கும்...உன் டேபிளுக்கும் அலைஞ்சுக்கிட்டு இருப்ப...?நீ இங்கேயே வொர்க் பண்றதுதான் சரி...!",என்றான் முடிவாக.

"சார்...ப்ளீஸ்...!எனக்கு...நான் அங்க வொர்க் பண்றதுதான் வசதி...",என்று மறுக்க,

அவனோ,"பட்...எனக்கு நீ இங்கே வொர்க் பண்றதுதான் வசதி...!",என்றான் அசால்ட்டாக.

அப்பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாமல்,"சார்...ப்ளீஸ்...",என்று தயங்கியவளை நோக்கி அழுத்தமான பார்வையை வீசியவன்,"நித்திலா...!நாளையில் இருந்து நீ இங்க...என் கேபினிலேயேதான் வொர்க் பண்ணப் போற...!அவ்வளவுதான்....!இதுக்கு மேல எதிர்த்துப் பேசி உன் டைமோட...என் டைமையும் வேஸ்ட் பண்ணாத....!",தெளிவாக உரைத்தவன் அவளைக் கண்டு கொள்ளாது தன் வேலையில் ஆழ்ந்தான்.

அவனுடையப் பிடிவாதமானப் பார்வையும்....அதை விட அழுத்தமான குரலும்...,'இனி தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்...',என்பதை அவளுக்கு வலியுறுத்த....வேறு வழியில்லாமல்,அமைதியாக "சரி...!",என்று முணுமுணுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.

ஆதித்யனின் இதழோரம் ஒரு குறுஞ்சிரிப்பு வந்தமர்ந்தது.... 'இப்படித்தான் பேபி...உன்னையும் என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்துருவேன்.....!உனக்கு விருப்பம் இருக்குதோ....இல்லையோ...!',என்று அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.



அகம் தொட வருவான்...!!!
 

New Threads

Top Bottom