Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL அகலில் அமிழ்ந்த ஆன்மா - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் ஐந்து​

அந்த சத்தத்தை கேட்டு அவளுக்கு தூக்கமே போய்விட்டது. ஆலமரத்தை பத்தி கேட்டதும் ஏன் இதயம் இப்படி பதைபதைக்கிறது என்று எழுந்தவள் அதே நினைவிலே வெளியே வந்து சாளரத்தைத் திறந்து பார்த்தாள்.



அந்த செய்தியை சாட்டியவர் அவளின் தெருவை தாண்டி அடுத்த தெருவுக்கு சென்று விட்டார்... மனம் பாரமாக இருக்க அப்படியே அங்கேயே நின்றுவிட்டாள் அகல்யா.



அங்கே சக்தியும் அதைக் கேட்டுதான் எழுந்தமர்ந்தான். அவனுக்கு ஆலமரத்தை அங்கிருந்து அகற்றுவது சரியென்று தோன்றவில்லை. ஏற்கனவே இரவு நடந்தது வேறு மனதை போட்டு உறுத்திக் கொண்டு இருந்தது.



இரவில் ரத்னாவின் தோட்டத்திற்குள் அகல்யாவும் இவனும் நுழைந்து நடந்து கொண்டிருக்க சக்தி அவளின் அருகாமையில் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.



அவளோ நேராக அவனை அழைத்து வந்து தண்ணீர் தேங்கியிருக்கும் அந்த தொட்டியின் அருகே நின்றாள்.



அவனும் அவள் பின்னால் வந்து நிற்க சக்தி என்று அவள் கழுத்தைப் பிடித்தவள் வேகமாக அவனை தண்ணீருக்குள் முக்கினாள்.



மூச்சு விட முடியாமல் தண்ணீருக்குள்ளயே சக்தியின் உயிர் ஊசலாடத் தொடங்கியது. அவளது கரத்தைப் பிடித்தவன் மேலே வர முயற்சி செய்ய அவளது கரம் இன்னும் இன்னும் இறுக்கத்தை அவனுக்குப் பரிசளித்தது.



"நீ இருந்தாத்தான அகல்யாவுக்கும் எனக்கும் இடையே வருவ. நீயே இல்லாம போய்ட்டா யார் வருவா..." என்று கத்தியபடி அவனைப் போட்டு முக்கியெடுக்க "நான் வருவேன்" என்ற சத்தம் கேட்டது அந்த இரவில் படுபயங்கரமாக...



அவனது கழுத்தில் இருந்து கரத்தை எடுத்தவள் திரும்பி பார்க்க மாரியப்பன் வந்து கொண்டிருந்தார்..‌ அவரைப் பார்த்ததும் அகல்யாவின் உருவத்தில் இருந்த அந்த பேய் தனது கோர வடிவத்துக்கு மாறியது. மாரியப்பனும் வேலம்மாவாய் மாறி நின்றார்.



"என் பையனை அழிக்க உன்னால முடியாது. அவனுக்கு துணையா நான் இருக்கேன்" என்று வேலம்மா சொல்ல



"நாளைக்கு மறுநாள் நான் நினைச்சது எல்லாம் நடக்கப் போகுது. அது நடந்த பிறகு மொத காவு உன் பையன் தான்... அவனோட சாவு தான்.." என்று உக்கிரமாக அந்த பேய் கத்த..


"யார் யாரை அழிக்கப் போறாங்கன்னு பார்க்கலாம்" என்று சொன்னதும் அந்த உருவம் கோபமாக வேலம்மாளை முறைத்துவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டது...


தண்ணீர் தொட்டியை பிடித்தபடி மூச்சு வாங்க நின்றிருந்த சக்தி தன் அம்மாவை பார்த்ததும் புதுவித உணர்வு தாக்கியதில் அப்படியே தன் நிலை மறந்து அங்கே நின்றான். அதன் பிறகே அவனை மாரியப்பன்(வேலம்மாள்) வீட்டுக்கு அழைத்து வந்தார். அதையே நினைத்தவனுக்கு இப்போது தன் அம்மா உடன் இருப்பது சற்று தைரியமாக இருந்தது.


ரத்னா வேகமாக மாரியப்பனிடம் வந்து "நேத்து என்ன நடந்தது மாமா" என்று கேட்டான்.


"என்ன நடந்ததா என்னடா கேக்குற" என்றார் மாரியப்பன் புரியாமலே.


"மாமா... நேத்து நைட் சக்தியை காணோம்னு நாங்க கிளம்புனப்போ நீங்கதான வந்து நான் கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்க. இப்போ என்ன நடத்ததுன்னு என்கிட்டயே கேக்குறீங்க"


"என்னடா சொல்லுற... சக்தியை காணோமா..." என்று பதட்டத்துடன் கேட்க


"மாமா சக்தி வந்துட்டான் நீங்கதான கூட்டிட்டு வந்தீங்க" என்று ரத்னா சொன்ன அந்த கணம் தான் மாரியப்பனுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது.


"நான் தூங்குனதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு ரத்னா. அடுத்து என்ன நடந்ததுன்னு தெரியலை. ஆனா இது எல்லாம் வேலம்மா வேலைன்னு தான் எனக்கு தோணுது"


"அத்தையா" என்றான் அவன் ஆச்சர்யமாக


"ஆமாடா" என்று அவர் சொல்ல "அப்போ அத்தை எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொன்னாங்களா. ஆனா மாமா இந்த ஆலமரத்தை இப்போ அங்க இருந்து எடுத்துட்டா விளைவுகள் விபரீதமாத்தான இருக்கும். நாம எப்படியாவது அதை தடுக்கணும்" என்றான்.


"எப்படிடா முடியும் இது ஊர்க்காரர்கள் எல்லாரும் சேர்ந்து எடுக்கப் போற முடிவு. இதை தடுக்க நம்மால முடியாது."


"இன்னைக்கு சாயந்திரம் நாம கூட்டத்துல இதைப் பத்தி பேசலாம் மாமா. எப்படியாவது தடுக்க முயற்சி பண்ணலாம். அங்க இருந்து ஆலமரத்தை எடுத்துட்டா அந்த பேயோட ஆட்டத்தை நம்மளால தடுக்க முடியாதுன்னு தான் தோணுது..." என்றான் ரத்னா.



ஆளாளுக்கு ஆலமரத்தைப் பற்றிய நினைவிலே சுற்றிக் கொண்டு இருந்தனர். சக்தி சமையலை முடித்துவிட்டு ரத்னாவுடனும் அப்பாவுடனும் சாப்பிட அமரப் போகும் போது வாசலில் சக்தி என்ற குரல் கேட்டது.



"அகல்யா" என்று வேகமாக எழுந்தவன் "வா உள்ள எதுக்கு வெளியவே நின்னுட்டு இருக்க" என்றான். ஆனால் அவளோ பள்ளி செல்லுவதற்காக கிளம்பி வந்திருந்தாள்.



"சக்தி ஸ்கூல் பஸ் போயிருச்சு. அப்பாவும் தோட்டத்துக்குப் போயிட்டாங்க. வேலை இருக்காம். என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணிடுறயா ப்ளீஸ்" என்றாள் அகல்யா.



"சாவி எடுத்துட்டு வர்றேன்" என்று அவன் சொல்லி உள்ளே சென்று வண்டி சாவியை எடுத்து வந்து அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.



"எப்பவும் பஸ் மிஸ் பண்ண மாட்டயே இன்னைக்கு என்னாச்சு" என்றான் சக்தி



"காலையில அந்த மரத்தைப் பத்திக் கேட்டதும் ஒரு மாதிரி ஆகிடுச்சு. அந்த யோசனையில கிளம்ப மனசு வரவே இல்லை சக்தி. மனசுக்கு ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு தோணுது"



"அதெல்லாம் ஒன்னும் ஆகாது"



"இல்லை சக்தி. அந்த ஆலமரம் அங்க இருந்தா கோவில் சுவர்மேல விரிசல் வரும் அதனால கோபுரத்தை இடிக்கும்னு அம்மா அப்பா பேசிட்டு இருந்தாங்க"



"அது இப்போதைக்கு சின்ன மரமாத்தான் இருக்கு அகல்யா. மொத கோவில் சின்னதா கட்டுற மாதிரித்தான் ப்ளான். ஆனா இப்போ அந்த இடத்துக்குள்ள பெருசா கட்டலாம்னு முடிவு பண்ணிருக்காங்க. அப்போ கோவிலோட சுத்து சுவர் இன்னும் தள்ளி வரும். அப்போ இந்த மரம் பெருசா வளர்ந்ததும் இடிக்க சான்ஸ் இருக்கு..." என்றான் சக்தி.



"என்ன பேசுற சக்தி"



"விழுதுகள் கீழ வேர் போட்டா அது அப்பறம் அந்த சுவரைத்தான் வந்து இடிக்கும் அகல்" என்றான் சக்தி.



"அப்போ நீங்க நினைக்குற மாதிரி தான் நடக்கப் போகுது.. அப்படித்தான"



"என்ன பேசுற எனக்கு புரியல"



"இல்லை நீங்க எல்லாரும் நினைக்குற மாதிரி அந்த மரம் அங்க இருந்தா கோபுரத்தை இடிக்கும்... கட்டிடத்தை பாதிக்கும். அதனால நீங்களே எடுக்கப் போறீங்க. அப்போ உள்ளே ஒருத்தி இருக்காளே அவளுக்கு எந்தவித மதிப்பும் இல்லையா. அவமேல யாருக்கும் நம்பிக்கை இல்லையா"



"அகல்யா என்ன என்னென்னவோ பேசுற"



"உண்மையைத்தான் பேசுறேன். கோவிலுக்குள்ள இருக்க மாரியாத்தாவுக்கு சக்தியே இல்லாத மாதிரி இல்ல நீங்க எல்லாரும் பேசுறீங்க"



"இப்போ அப்படி என்னத்த நான் பேசிட்டேன்னு நீ ரொம்ப எமோசனல் ஆகுற" என்றான் சக்தி கடுப்புடன்.



"எல்லாமே அவ கையில இருக்கும் போது அவ கோவில் கோபுரத்தை இடிக்காம அந்த மரத்தைப் பாத்துக்க மாட்டாளா"



"பாத்துக்கலாமே..." என்றான் அவன் சின்னச் சிரிப்புடன்.



"சக்தி நான் சீரியசா பேசுறேன்"



"இங்க பாரு அகல்..இதுல நாம சொல்லுறதுக்கு எதுவும் இல்லை இன்னைக்கு பெரியவங்க முடிவு பண்ணி சொல்லுவாங்க அப்பறம் நடக்க வேண்டியது தன்னால நடக்கும்"



"ஒருவேளை அந்த ஆலமரத்தை அங்க இருந்து எடுத்துடலாம்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டா..." என்று அகல்யா கேட்க



"அதனால வர்ற விபரீதத்தை பாத்துட்டு அதே மாரியாத்தா சும்மா இருப்பான்னு உனக்கு தோணுதா" என்றான் அவன் சாதாரணமாக.



"ச்சே ச்சே இல்லை" என்று வேகமாக அவள் மறுத்தாள்.



"அப்பறம் என்ன அவ மேல இருக்குற நம்பிக்கையை விடாம எப்பவும் போல கெட்டியா புடிச்சுக்கோ...எல்லாமே நல்லபடியாத்தான் நடக்கும்"



"சக்தி உண்மையை சொல்லு. நம்மளை சுத்தி ஏதோ மர்மமான விசயம் நடக்குது தான" எனக் கேட்டாள் அகல்யா.


"இருக்கலாம்" என்றான் சக்தி.


"சக்தி" என்று அவள் அதிர்ச்சியாக கத்த


"அகல்யா உங்க ஸ்கூல் வந்துடுச்சு இறங்கு" என்றான் அமைதியான குரலில் சக்தி. அவள் இறங்காமல் அவனையேப் பார்த்துக் கொண்டு இருக்க


"என்ன பாக்குற இறங்கு அகல் உன்னோட ஸ்டூடன்ட் எல்லாரும் ஒரு மார்க்கமா பாக்குறாங்க..." என்று சொன்னதும் அவள் இறங்கினாள்.


"பயமா இருக்கு சக்தி"


"நான் கூடவே இருப்பேன் எப்பவும். அதனால பயப்படாம உன்னோட வேலையை பாரு சரியா அப்பறம் இந்தா சாப்பாடு" என்றான் அவன்.


"அம்மா கொடுத்து விட்டுருக்காங்க சக்தி"


"நேத்து என்னோட சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டேல அதான் எடுத்துட்டு வந்தேன். சாப்பிடு... நான் வரட்டா" என்று கேட்க சரியென்று அவள் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.


அகல்யா ரொம்ப பயப்படுறா அவளை இவ்வளவு யோசிக்கவும் விடக் கூடாது அடிக்கடி அவ கூட பேசிட்டு அவளை டைவர்ட் பண்ணிட்டே இருக்கணும். அப்போத்தான் அவ நார்மலா இருப்பா. அந்த பேய் நம்மளை போட்டுத் தள்ளுற அளவுக்கு போயிடுச்சு. இனி ஆலமரத்தையும் எடுத்துட்டா கன்பார்ம்மா மர்டர் தான். அதுக்கு முன்னாடி அந்த இடத்தைப் பத்தியும் அந்த மரத்தை பத்தியும் எப்படியாவது நியூஸ் கலெக்ட் பண்ணனும் என்றவனின் யோசனை தீவிரமானது...


பள்ளியில் கம்ப்யூட்டர் அறையில் சோர்வாக அமர்ந்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பசங்கள் வந்துவிடுவார்கள் என்பதால் இன்றைக்கு எடுக்க வேண்டிய பாடத்தினை ஒருமுறை பார்த்தபடியே இருந்தவளின் முகம் யோசனையில் இருக்க அதைக் கண்ட நிவேதா "மேம் என்ன ஆச்சு உங்களுக்கு எதுக்கு டல்லா இருக்கீங்க. உடம்பு சரியில்லையா" எனக் கேட்டாள்.


"அப்படிலாம் இல்லை நிவேதா"


"அப்போ டுவல்த் க்ளாஸ்ஸா இப்போ" என்றாள் நிவேதா.


"டுவெல்த் க்ளாஸ் தான். ஆனா அது காரணம் இல்லை. வீட்டுல கல்யாணம் பேசிட்டாங்க"


"வாவ் சூப்பர் மேம் அப்போ அண்ணா ஓகே சொல்லிட்டாங்களா.."


"சொல்லிட்டான் ஆனா திடீர்னு அவன் சொன்னது எனக்கு மனசுக்கு என்னவோ மாதிரி இருக்கு. ஏதோ நடக்குது நிவேதா அதை என்கிட்ட இருந்து அவன் மறைக்குறான்" என்றாள் அகல்யா.


"அய்யோ.. அப்படிலாம் இருக்காது மேம். அண்ணாவால உங்களை பிரிந்து அவ்வளவு நாள் இருக்க முடியாதுன்னு இப்போத்தான் தோணிருக்கும். அதனால சொல்லிருப்பார்"


"இல்லை நிவேதா எனக்கென்னவோ அப்படி தோணலை... "


அதற்குள் பெல் அடித்துவிட நிவேதா "சரி மேம் லஞ்ச் அவர்ல பேசலாம் எதைப்பத்தியும் நினைக்காதீங்க நான் க்ளாஸ்க்கு போயிட்டு வர்றேன் பாய்" என்று கிளம்பிவிட்டாள்.


அதன்பின் மாணவர்கள் வந்து தங்களுக்கான சிஸ்டத்தை ஆன் செய்து அமர்ந்துவிட அன்று என்ன ப்ரோகிராம் போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள் அகல்யா. அதைக் கேட்டவர்கள் அப்படியே போட்டுக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் எழுந்து "மேம் இங்க ஒரு நிமிசம் வாங்க நான் ப்ளாஷ் அப்பிளிக்கேஷன் யூஸ் பண்ணி ஒரு ஸ்டோரி கிரியேட் பண்ணிருக்கேன்.. பாருங்க மேம்" என்றான்.


"நான் போடச் சொன்னது C++ ஆனா நீ எதுக்கு வேற சாப்ட்வேர் யூஸ் பண்ணுற. ஒழுங்கா அதை க்ளோஸ் பண்ணிட்டு C++ ஓபன் பண்ணு பவன்" என்றதும்


"சரி மேம் நான் இதுல என்னோட நேம் போட்டு சேவ் பண்ணி வைக்குறேன். நீங்க அப்பறமா பாருங்க" என்று சொல்லிவிட்டு பவன் அகல்யா சொன்ன கான்செப்ட்டில் ப்ரோகிராம் போடத் தொடங்கினான்.


வந்த எரர்ரை கிளியர் பண்ணிவிட்டு அனைவருக்கும் அடுத்த கான்செப்ட் சொல்லிக் கொடுத்தாள் அவள். பெல் அடித்ததும் அவர்கள் கிளம்பிவிட அது ப்ரீ ஹவர் தான் என்பதால் அங்கிருந்த சிஸ்டத்தில் தன் பார்வையை பதித்திருந்தாள்... அப்போதுதான் அவளுக்கு அந்த பையன் சொன்னது ஞாபகம் வந்தது.



அவன் கிரியேட்டிவா யோசிப்பான் என்ன பண்ணிருக்கான்னு தெரியலையே என்று அவன் அமர்ந்திருந்த சிஸ்டத்தை உயிர்ப்பித்து Flash software க்குள் நுழைந்தாள். அவன் பெயரை க்ளிக் செய்து ஓபன் பண்ண அந்த வீடியோ ப்ளே ஆனது...



அதைப் பார்த்தவளின் விழிகள் இரண்டும் தெறித்து விடும் அளவிற்கு விரிந்தது. இந்த மாதிரி எப்படி இவனால பண்ண முடிஞ்சது... என்றவள் வேகமாக வெளியே வந்து அருகே சென்று கொண்டிருந்த பையனை அழைத்து "டுவல்த் க்ளாஸ்ல பவன் அப்படின்னு ஒரு அண்ணா இருப்பான் அவன்கிட்ட சிஎஸ் மேம் கூப்பிட்டாங்கன்னு சொல்லுறயா" என்றாள்.



"சரிங்க மேம்" என்று அந்த பையன் சென்ற சிறிது நேரத்தில் அவன் வந்து நின்றான்.


"மேம் என்னங்க மேம் கூப்பிட்டீங்களா" என்றான் பவன்.


"என்ன டா இது.." என்று சிஸ்டத்தைக் காட்டி பவனிடம் கேட்க


"மேம் பாத்திட்டீங்களா.. எப்படி மேம் இருக்கு" என்றான் அவன்.


"இது என்னன்னு மொத சொல்லு டா பவன்" என்று அவள் அவனைப் பார்த்து கேட்டாள். மனதுக்குள் அவன் தான் நினைத்த காரணத்தை சொல்லிவிட கூடாது என்றும் வேண்டிக் கொண்டாள். ஆனால் எதை சொல்லக் கூடாது என்று அவள் வேண்டினாளோ அவன் அதைத்தான் சொன்னான்..



"இது ஆலமரம் மேம்... இன்னைக்கு நம்ம ஊருல ஆலமரத்தை எடுக்குறதைப் பத்தி எல்லாரும் பேசிட்டு இருந்தாங்கள்ல மேம்.. இங்க லேப் வந்து உக்காந்ததும் எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது. அதான் அதை வச்சே நான் லேயர் செட் பண்ணி கிரியேட் பண்ணேன்... ஆலமரத்தை அங்க இருந்து எடுக்கும் போது அதுக்குள்ள இருந்து ஒரு பேய் வெளிய வருது... அந்த பேய் ஒரு ஆள அந்த விழுதாலயே கட்டித் தூக்குது...கூடவே அந்த பேய் ஒரு பொண்ணையும் பாலோ பண்ணுது எப்படி மேம் என்னோட கிரியேட்டிவிட்டி... இன்னும் பண்ணியிருப்பேன் நீங்கதான் அதுக்குள்ள சி++ போடச் சொல்லிட்டீங்க" என்றான் அவன்.


மண்ணாங்கட்டி... உன்னோட கிரியேட்டிவிட்டி சென்ஸை காட்ட வேற கான்செப்ட்டே கிடைக்கலையா... இதுதான் கிடைச்சதா பாவி என்று அவனை மனதுக்குள் போட்டு திட்டியவள் "போடா டேய் உன்னால மறுபடியும் எனக்கு டென்சன் தான்" என்றாள்.


"இன்னும் இருக்கு மேம் அப்பறமா நான் கிரியேட் பண்ணிட்டு காமிக்கிறேன். இதுலாம் சும்மா தான மேம். இதுனால உங்களுக்கு என்ன டென்சன். பேய்னா உங்களுக்குப் பயமா மேம்" என்றான் பவன்.


"அதெல்லாம் இல்ல நீ கிளம்பு... ஆனா நல்லா இருக்கு டா... நான் நல்ல மனநிலையில இல்லை டா.. இல்லைன்னா இன்னும் கிரியேட் பண்ணிருக்கலாம்... உன்னையும் பண்ண சொல்லிருப்பேன்" என்றாள் அவள்..



"சரி மேம் இன்னொரு நாள் இன்னும் லேயர் ஆட் பண்ணி பெருசா கிரியேட் பண்ணலாம். பாய் மேம்" என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.



கிளம்பியதும் அவள் திரும்பி அந்த சிஸ்டத்தைப் பார்க்க அந்த விழுதினால் தூக்கி நிறுத்தப்பட்டிருந்த அந்த ஆளின் முகம் சக்தியின் முகமாய் மாறியது... கூடவே அந்த பெண்ணின் முகம் அகல்யாவாக தெரிந்ததில் அவள் அப்படியே உற்று நோக்க உடனே பட்டென்று சிஸ்டம் அணைந்து போனது...



அந்த நேரத்தில் பின்னால் வந்த நிவேதா "என்ன மேம் எதுக்கு அந்த சிஸ்டத்தை முறைச்சு பாத்துட்டே இருக்கீங்க.. கண்ணு வலிக்கப் போகுது... ஆப் பண்ணுங்க மேம் இல்லைன்னா தள்ளி உக்காருங்க" என்றாள்.



"ஆஃப்பாகி தான இருக்கு நிவேதா" என்றாள் அவள் பயத்துடன்.



"என்ன மேம் கலாய்க்கிறீங்களா" என்று அவள் சொல்ல இப்போது அவள் தான் அகல்யாவை கலாய்ப்பது போல இருந்தது.



உடனே அவள் சிஸ்டத்தை விட்டு நகர்ந்து வந்துவிட்டாள். அவளுக்கு அடுத்து யாரிடமும் எதுவும் பேசக் கூடிய மனநிலை இல்லை. ஆனால் அவளது காதுக்குள் மட்டும் "நான் வரப் போறேன். வரப் போறேன். நாளைக்கு அந்த இடத்தைவிட்டு வெளிய வரப் போறேன்" அப்படியே மெதுவாக அந்த குரல் தேய்ந்து மறைந்துவிட்டது.



அன்று மாலை...

ஊர்மக்கள் அனைவரும் கட்டிக் கொண்டிருந்த கோவிலின் முன் கூடியிருந்தார்கள். ஒரு ஓரத்தில் மாரியப்பன், சக்தி, ரத்னா, சாமிநாதன் அமர்ந்திருந்தனர்.



ஊர்த்தலைவர் அனைவரையும் பார்த்து "இந்த ஆலமரம் இப்போ இங்க இருக்குறது நல்லதில்லைன்னு படுது. அதான் அது விசயமா பேசலாம்னு உங்க எல்லாரையும் வரச் சொன்னேன்" என்றார்.


உடனே நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி வேகமாக "அதெப்படி ஐயா சில வருசமாவே இங்க இருந்த மரத்தை உடனே எப்படி அப்புறப்படுத்த முடியும். அதுக்குள்ள மாரி குடியிருக்கான்னு தான் நாம கும்பிட்டு வர்றோம் அதை எப்படி எடுக்க முடியும்" என்றார்.

"அந்த மரம் இருக்குறதால கோபுரம் கட்டும் போது இடையூறா இருக்கும் அதான் இப்போ நாம பேசிட்டு இருக்கோம்" என்றார் தலைவர்.

"அவ்வளவு தூரம் அது வராது" என்றார் அந்த பெண்மணி.

"அதை நாம எப்படி உறுதியா சொல்ல முடியும்"

"ஐயா கட்டுறது கோவில். உள்ள குடியிருக்குறது அம்மன். அவளோட சக்தி நாம நினைச்சே பார்க்க முடியாத அளவு பெருசு. அப்படி இருக்கும்போது நாமளா ஒரு முடிவுக்கு வர்றது தப்பு..." என்று அந்த பெண்மணி சொன்னதும் அனைவரும் அப்படியே அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.



அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு வயதான ஆள் வந்து
"அந்த மரத்தை எடுத்துதான் ஆகணும்" என்றார்.

"என்ன கந்தையா தாத்தா நீங்களா இப்படி சொல்லுறீங்க" என்றான் ரத்னா.

"ஆமா அந்த மரம் அங்க இருக்க வேணாம். அமிழ்ந்து போனது மீண்டு வந்தாத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். இல்லைன்னா இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்" என்றார்.

"ரத்னா இவர் சொல்லுறதை பாத்தா இவருக்கு ஏதோ தெரியும்னு தோணுது டா..." என்றான் சக்தி.

"இருக்கலாம் மச்சி... ஆனா நாம இந்த மரத்தை எடுக்குறதை மட்டும் நடக்க விடக் கூடாது மச்சி" என்று சொன்னதும் சக்தி எழுந்து...


"இந்த மரத்தால கோபுரத்துக்கு ஆபத்துன்னு நாம சொல்லுற விசயம் சரிதான். எடுத்துரலாம்" என்றான் பட்டென்று. உடனே அவனைப் பிடித்து இழுத்த ரத்னா

"யோவ் மச்சி என்னதிது இப்படி சொல்லுற" என்றான்.

"டேய் என்னாதான் இருக்கும்னு நாமளும் பாக்கலாம்" என்றான் சக்தி.

"எம்புட்டு நல்ல எண்ணம் உனக்கு. அது வெளிய வராமலே எல்லாரையும் போட்டுத் தள்ளலாம்னு ப்ளான் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கு. ஆனா நீ வெளிய வரவைச்சு வாலண்டியரா போய் தலையை குடுக்கலாம்னு சொல்லுறயே"

"எதிரி ப்ரீயானாத்தான் நமக்கும் ஜாலியா பொழுது போகும்" என்றான் சக்தி.

"கூடவே உயிரும் போகும் மச்சி"

"போனாப் போகட்டும் போடா" என்றான் சக்தி.


இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டு இருக்க அந்த நேரத்தில் அங்கிருந்த தலைவர் "நான் இதனால தான் கோவில் பூசாரிகிட்ட கேட்டேன் அவரும் பூசை செஞ்சு பாத்து ஆத்தாவோட தலவிருட்சம் கோவிலுக்கு மேற்கு மூலையில இருக்க வேப்பமரம் தான். அதனால அவளோட அருள் அதுல தான் நிறைஞ்சு இருக்கு. இந்த மரம் இங்க இருக்க வேணாம்னு சொன்னார்.. ஒரு மரத்தை அழிக்குறது ஈசியான விசயம். ஆனா அந்த மரத்தை வளர்க்குறது எவ்வளவு கடினமான வேலைன்னு எனக்கும் புரியுது. அதனால இதை நாம அப்படியே புடுங்கி இன்னும் கொஞ்சம் தள்ளி வைக்கப் போறோம். மரம் சின்னதா இருக்குறதால அது எப்படியும் தளிர்த்து வந்துடும்" என்றார்



அனைவரும் ஆளுக்கொரு கருத்தைப் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த வயதான கந்தையா வந்து "மரத்தை எடுத்தே ஆகணும். ஆகணும் டா.. அப்போத்தான் எல்லாருக்கும் நல்லது நான் சொல்லுறதை எல்லாரும் கேளுங்க இது தான் நடக்கணும்.. சக்தி உனக்குப் புரியுதா இது நடந்தாத்தான் நல்லது... இந்த அகல் மரம் (ஆல மரம்) கோவிலை விட்டு அப்பால போனாத்தான் உன்னோட அகலுக்கு நல்லது. உங்களை சுத்தி சுத்தி வர்றது சுத்தமா அழியணும். அழியணும் சக்தி... அதுக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது" என்று சொல்ல அவரின் கண்கள் சிவப்பாக மாறியிருந்தது.



சம்பந்தமில்லாமல் அவர் பேசுவதாக அங்கிருந்த மற்றவர்களுக்கு தோன்றியது. ஆனால் சக்தி அவர் பேசுவதை புரிந்து கொண்டான்.



கடைசியில் அனைவரும் சரி அங்கிருந்து அந்த மரத்தை எடுத்துடலாம் என்று ஏகமனதாக முடிவு செய்தனர்...



அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட சக்தி மட்டும் அந்த ஆலமரத்தை நோக்கி நடந்தான். ஆலமரத்தின் முன் சென்று சக்தி நிற்க தொங்கிக் கொண்டிருந்த விழுது வேகமாக அவன் கழுத்தை நோக்கி வந்தது.



அவன் அசையாமல் அப்படியே நிற்கவும் அந்த விழுது அவனது கழுத்தைச் சுற்றியது. கூடவே அதனுள் இருக்கும் அந்த ஆன்மாவின் குரல் கேட்டது.

"என்ன சக்தி தோத்துடுவோம்னு பயம் வந்துடுச்சா"

"பயம் இருந்தா நான் இந்தப் பக்கமே வந்துருக்க மாட்டேன். நாளைக்கு இந்த இடத்துல இந்த மரம் இருக்காது இல்ல. அதான் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்"என்றான் சக்தி.

"இன்னைக்கு மட்டும் தான் உன்னால இப்படி பேச முடியும். நாளைக்கு இந்த மாதிரி உன்னால பேச முடியாது. வெளிய வந்த பிறகு யாராலும் என்னை தடுக்க முடியாது சக்தி"

"வெளிய வந்த பிறகு என்ன செய்யுறன்னு நானும் பாக்கிறேன்... இப்போ கிளம்புறேன்" என்றதும் அந்த விழுது அவன் கழுத்தில் இருந்து இறங்கி எப்போதும் போல் அசையாமல் நின்று விட்டது.


அதை தூரத்தில் இருந்து பார்த்த கந்தய்யா இது இப்படி நடக்கணும்னு தான் நான் எதிர்பார்த்தேன் சக்தி என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்... கண்களில் இருந்த சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது அவருக்கு....



அமிழ்ந்தது மீளுமா...​



கதைக்கான கருத்துதிரி
👇👇
👇

Thread 'அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments' https://www.sahaptham.com/community/threads/அகலில்-அமிழ்ந்த-ஆன்மா-comments.440/
 
Last edited:
அத்தியாயம் ஆறு​

அன்றைய இரவு ரத்னசாமி தன் வீட்டிற்கே சென்று விட்டான். அப்போது அவனது கைப்பேசிக்கு அகல்யா அழைத்திருந்தாள்.

"என்ன அகல்"

"உன்கிட்ட பேசணும் எங்க இருக்க வீட்டுக்கு வர முடியுமா" என்றாள் அவள்.

"இப்பவா"

"ஆமா டா"

"சரி வர்றேன்" என்று சொன்னவன் வேகமாக கிளம்பி வீட்டுக்கு வந்தான்.

அப்போதுதான் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு எழுந்தாள் அகல்யா.

"வா டா" என்று அவனை அழைத்தவள் "சாப்பிடு" என்றாள்.

"இல்லை வேண்டாம் அகல் இப்போத்தான் நான் சாப்பிட்டு வந்தேன்"

"பரவாயில்ல சாப்பிடு டா" என்றார் துர்கா.

"இல்லைம்மா சாப்பிடலைன்னா நானே சாப்பிட்டுருப்பேன். இப்போத்தான் சாப்பிட்டேன்" என்று அவன் மறுத்ததும்
"சரி வாடா" என்று அவள் மாடிக்கு கூட்டிச் சென்றாள்.


அவளது முகத்தில் இருந்த தீவிரத்தைக் கண்டவன் "என்ன அகல் என்னாச்சு ரொம்ப சீரியசா எதையோ யோசிச்சுட்டு இருக்க போல. உனக்கு அந்த அளவுக்கு மூளை இருக்கா என்ன?" என்றான் ரத்னா.

"அப்படி நினைச்சுத்தான என்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைக்குறீங்க" என்றாள் அவள்.

"அப்படி என்ன மறைச்சோம்"

"நடிக்காத டா"

"யாரு நானா"

"நீயும் உன் மச்சாவும் தான்"

"அம்மா நிறைய செஞ்சு போட்டுட்டாங்களா. சாப்பிட்டது செரிக்காம இருக்குறதால தான் என்னை வம்பிழுக்கிறயா" என்றான் ரத்னா...

"நான் வம்பு இழுக்கலை நீங்க தான் என்ன அப்படி பேச வைக்குறீங்க"

"கொஞ்சம் புரியுற மாதிரி தான் பேசேன்" என்றான் ரத்னா.

"இப்போ ஒருத்தன் வருவான் அப்பறம் இருக்கு இரண்டு பேருக்கும்" என்று அவள் சொல்லும் போதே சக்தி "அகல்யா" என்று அழைத்தபடி மேலே வந்தான்.


"வாங்க" என்று அவள் ஒரு மாதிரியான குரலில் அழைக்க அவனோ அவளைப் பார்த்துவிட்டு ரத்னாவை புரியாமல் பார்த்தான்.


"அப்படி பாக்காத மச்சி. எனக்கும் உன் பொண்டாட்டி பேசுறது புரியவே இல்லை. அநேகமாக அவளுக்கே ஏதோ ஆகிடுச்சு போல" என்று ரத்னா சொல்ல


"எப்படிடா இப்படி நடிக்கிறீங்க" என்றாள் அவள் இருவரையும் பார்த்து.

"அகல் என்ன இது எதுக்கு வரச் சொன்ன" என்று சக்தி கேட்க

"இரண்டு நாளா என்ன நடந்துட்டு இருக்கு" என்றாள் அவள்.

"ஒன்னுமே நடக்கலையே"

"பொய் சொல்லாதீங்க சக்தி... அப்பறம் உங்ககிட்ட பேசவே மாட்டேன்"

"நான் போய் பொய் பேசுவேனா" என்றான் சக்தி அப்பாவியாக.


"பேசுவ சக்தி.. ஏன்னா நீ இப்போ இவன் கூட தான கூட்டு வச்சுருக்க. அப்போ கண்டிப்பா பேசுவ"

"அடிப்பாவி... உன் ஆளு அப்படியே பச்சை குழந்தை.. எங்ககூட சேர்ந்து பொய் பேசுறதுக்கு..." என்றான் ரத்னா.

"பேச்சை மாத்தாதீங்க இரண்டு பேரும். உண்மையை சொல்லுங்க" என்றாள் அகல்யா.

"அப்படிலாம் எதுவும் இல்ல ம்மா இருந்தா மச்சான் சொல்லிருப்பேன்ல" என்றான் சக்தி.

"இல்லை எனக்கு நல்லாவே தெரியுது நீ மறைக்கிறது. தயவு செய்து இன்னும் இன்னும் அதை மூடி மறைக்காம தெளிவா என்கிட்ட சொல்லுங்க"

"ஏதாவது விசயம் இருந்தாத்தான மறைக்க முடியும். எதுவுமே இல்லை டா" என்றான் சக்தி.

"அப்போ இதுக்கு என்ன பதில் சொல்லப் போற" என்று அவள் மொபைலை எடுத்து அந்த வீடியோவை காட்ட

"ஏய் இது எப்படி...உன் கம்ப்யூட்டர் அறிவை இப்படியா காட்டுவ..." என்றான் சக்தி அதிர்ச்சியாக.


"இதுல உனக்கு என்ன தெரியுது"

"உன் முகமும் என் முகமும் தெரியுது. நீதான் இப்படி பண்ணயா"

"நான் பண்ணது இல்ல... பவன் பண்ணது... அவன் சாதாரணமாத்தான் பண்ணியிருந்தான். ஆனா நான் அவன் போன பிறகு பாக்குறேன்.. நம்ம இரண்டு பேர் முகம் தெரியுது. சரின்னு அதை மொபைலுக்கு ஏத்திட்டு பாக்கிறேன் அப்பவும் அப்படித்தான் தெரியுது... இப்போ உனக்கும் அப்படி தெரியுதுன்னு சொல்லுற. அப்போ ஏதோ விசயம் இருக்குது தான. எனக்கு இன்னைக்கு ஃபுல்லா இந்த ஆலமரமே மண்டையை போட்டு குடைஞ்சுட்டு இருக்கு. ப்ளீஸ் மச்சான் என்ன நடந்தது.. இனி என்ன நடக்கப் போகுதுன்னு என்கிட்ட சொல்லேன்" என்றாள் அவள்.

அதன்பிறகும் அவனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உடனே நடந்தவற்றை சொல்லிவிட்டான்.

"இவ்வளவு நடந்ததால தான் என்னை கல்யாணம் பண்ணனும்னு நீ முடிவு எடுத்தயா" என்றாள் அவள்....

அவள் அப்படிக் கேட்டதும் அவளை முறைத்தவன் "சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்ததுக்கு இதுதான் காரணம் " என்றான் கோபமாக.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள் "அப்போ வேணாம் இந்த கல்யாணம்" என்றாள்.

"வேணாம்னு நீ சொல்லிட்டா அப்பறம் இந்த வீட்டுக்கு நான் வர்றது இதுதான் கடைசி தடவையா இருக்கும்..." என்றான் சக்தி.

"இல்லை எனக்கு தான் ஆபத்து... நீ எனக்காக வந்து ஆபத்துல சிக்கிடாத..."

"அப்போ நான் அப்படியே உன்னை விட்டு போயிடணுமா. இதை நீயா சொல்லுற... அதுவும் என்னைப் பாத்து..."

இவர்களின் சண்டை கொஞ்சம் சீரியசாக போய்க் கொண்டிருக்க ரத்னா எழுந்து தள்ளிப் போய் நின்றுவிட்டான்.

மூடியிருந்த சாளரத்தைக் கண்டவன் அதை திறந்து விட்டு தெருவை வேடிக்கை பார்க்கலானான்...

மனி ஒன்பதை நெருங்கிய சமயம் என்பதால் ஆங்காங்கே ஒரு சில மனிதர்கள் தான் நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் கந்தையா அந்த பக்கமாக சென்று கொண்டிருந்தார். இவரைப் பிடிச்சா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம் என்று நினைத்தவன் வேகமாக திரும்பி மச்சி என்று அழைக்க அப்போதுதான் அகல்யாவை பேசி சமாதானப்படுத்தி ஆறுதலாக அணைந்திருந்த சக்தி அவளை தன் பிடியில் இருந்து விடுவித்தான்...


அவன் அருகில் வந்தவன் "மச்சி அந்த தாத்தா போறாரு. வா போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்துடலாம்..." என்றான்.

"சரி அகல்யா நாங்க போயிட்டு வந்துடுறோம். நீ கவனமா இரு. எதுக்கும் அத்தைகூட போய் படுத்துக்கோ" என்றே சொன்னவன் ரத்னாவுடன் வேகமாக கிளம்பி போனான்.

ஊரை விட்டு வெளியே இந்த நேரத்தில் செல்லும் கந்தையாவை கண்டு இருவரும் சப்தம் எழுப்பாமல் பின்னாலே சென்று கொண்டிருந்தார்கள்.
வளைந்து வளைந்து செல்லும் அந்த பாதையே இருட்டில் அவர்களை மிரட்ட எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் செல்லும் கந்தையாவை காண காண இவர்களுக்கு ஆச்சர்யம் வந்துவிட்டது. கூடவே இந்த பாதை அவருக்கு புதிது இல்ல என்ற எண்ணமும் வந்தது.


அப்படியே நடந்து சென்று கொண்டிருக்கும் போதே தூரத்தில் சிறியதாய் வெளிச்சம் கசிந்து வந்திருப்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள்.


கந்தையாவும் அந்த இடத்தை நோக்கி தான் நடந்தார். அருகே வர வர அது ஒரு குடிசை என்று அவர்களுக்குத் தெரிந்தது. அந்த குடிசை வீட்டினுள் கந்தையா நுழைந்தார்.

யாரோ உள்ளே நுழையும் அரவம் கேட்டதும் அங்கே கட்டிலில் படுத்து கிடந்த ஒரு வயதானவர் "யாரு கந்தாவா" என்றார்.

"ஆமா ஐயா"

"என்னாச்சு கந்தா" என்று அவர் எழுந்தமர்ந்தபடி கேட்டார்.

"அந்த ஆலமரம் நாளைக்கு அங்க இருக்காது" என்றார் ஒரு மாதிரியான குரலில்.

"எல்லாரும் ஒத்துக்கிட்டாங்களா"

"ஆமாய்யா. கூடவே சக்தியும் எதிர்க்காமல் ஒத்துக் கொண்டது வேற எனக்கு ஆச்சரியமா இருக்கு" என்றார் கந்தையா.

"சக்தியா... ஓ அகல்யாவோட வருங்காலமா"

"ஆமா"

"அவனுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம் தான். அதுசரி நீயே அந்த ஆலமரத்தை எடுக்க கூடாதுன்னு தான் மொத சொல்லிட்டு இருந்த"

"என்ன செய்ய அது அங்கேயே இருக்குறது ரொம்ப பெரிய பிரச்சனையா மாறும்னு தெரிஞ்ச பிறகும் அங்கயே விட்டு வைக்கச் சொல்லுறீங்களா..." என்றார் கந்தையா.

"இப்பாவது உனக்கே அதைப் பத்தி புரிஞ்சதே..." என்று சிரித்தார் அந்த முதியவர்.

"புரிஞ்சதால தான் நானே அதே எடுக்கணும்னு ஊர் முன்னாடி சொன்னேன்... "

"அப்போ நாளைக்கு அது வெளிய வந்துடும் இனி என்ன நடக்கப் போகுதோ... என்ன நடந்தாலும் முடிவு நல்லதா நடந்தா நல்லது தான்" என்றார் அந்த முதியவர்.

"என்ன நல்லது நடக்குமா" என்று உள்ளே வந்த சக்தியின் கேள்விக்கு இருவருமே ஒரு கணம் திகைத்து நின்றார்கள்.

"கேக்குறேன்ல என்ன நல்லது நடக்கும்... அகல்யாவுக்கு ஆபத்து வரும். அவ உயிர் போகும். கூடவே என்னோட உயிர் போகும்... ஆனா அது உங்களுக்கு நல்லதா" எனக் கேட்டான் ஆவேசமாக.

"நல்லது தான் சக்தி.."

"எனக்குப் புரியலை தாத்தா..
நீங்க பேசுற எதுவுமே"

"புரியலையா..."என்று சிரித்தவர் "அப்போ நீயும் சேர்ந்து ஆலமரத்தை எடுக்கணும்னு ஏன் சொன்ன" எனக் கேட்டார்.

"அது அந்த பேய் ரொம்ப ஓவரா பேசுச்சு. அதான் வெளிய வந்தா அப்படி என்ன தான் பண்ணும்னு ஓர் ஆர்வத்துல எடுங்கடா ஆலமரத்தைன்னு சொன்னேன்" என்றான் சக்தி.

"நான் சொல்லலை இவனுக்கு தைரியம் அதிகம்னு" என்றார் கந்தையாவைப் பார்த்து...

"சக்தின்னு பேர் வச்சுட்டு இது கூட இல்லாம இருக்க முடியாதே"

"அதுவும் சரிதான் நீங்க இப்போ எதுக்கு இங்க வந்தீங்க"

"என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம்"

"மொத உக்காரு சக்தி" என்று அந்த தாத்தா சொன்ன அதே நேரம் அந்த ஊரிலிருந்து சரியாக பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த காட்டுப்பகுதியில் ஒருவன் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தான்.

அவன் கண்களில் தீவிரம் குடி கொண்டிருந்தது. வேகமாக ஓடியவனின் காலடி சத்தத்தைக் கேட்டு பதுங்கியிருந்தவைகள் எல்லாம் பாதையில் பாயத் தொடங்கியது...

எதற்கும் பயமில்லாதவன் போல் அவன் ஓடியவன் இறுதியில் ஓரிடத்தில் வந்து நின்றான். நின்றவன் மூச்சு வாங்க அந்த மூச்சு சத்தத்தையும் மீறி அந்த இடத்தில் மெல்லியதாய் மந்திரங்கள் உச்சாடனம் செய்யும் ஒலி கேட்டது. அதைக் கேட்டதும் அவனுக்கு சிலிர்க்கத் தொடங்கியது.

உடனே சற்று தயங்கி அந்த இடத்தில் இருந்த கதவின் அருகே வந்தான். இப்போது சற்று தெளிவாகவே மந்திரங்கள் சொல்லும் ஒலி கேட்டது...
பயத்துடன் கதவின் மேல் கையை வைக்க கதவு பட்டென்று திறந்து கொண்டது. உடனே அவன் பதறி உள்ளே நுழைய கதவு மூடிக் கொண்டது...


உள்ளே பயங்கர இருட்டு. அவன் கண்கள் இருட்டுக்கு புதுசு இல்லை என்பதால் மெது மெதுவாக உள்ளே இருந்தவை தெரிய ஆரம்பித்தது. அங்கே பெரியதாக எந்த பொருளும் இல்லை. மூலையில் தண்ணீர் குடம் ஒன்று... இந்தப்பக்கம் ஒரு தூண்... தூணைப் பிடித்தவன் அப்படியே நடந்து உள்ளே நுழைய இப்போது திடீர் என துர்நாற்றம் வீசத் தொடங்கியது...


என்னதிது என்று அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டு வேகமாக உள்ளே நடக்க அப்படியே அவன் முகத்துக்கு முன் எதுவோ வந்து நின்றது. அதில் திகிலடைந்து அவன் பின்னால் நகர அங்கு ஒரு பிணம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

தொங்கிக் கொண்டிருந்த அந்த உடலில் சில பாகங்கள் அழுகியிருந்தது.
அதன் துர்நாற்றம் தான் அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது. மந்திர உச்சாடனம் இன்னும் பலமாய் அவன் செவியை வந்து அடைய அவன் அந்த பிணத்தைத் தாண்டி உள்ளே நுழைய முற்பட்டான்.

அப்போது அவனது கரத்தை யாரோ பற்றி இழுக்க திரும்பியவனின் கண்கள் அப்படியே திகிலை சுமந்து கொண்டது.

எதிரே தொங்கிக் கொண்டிருந்த அந்த பிணத்தின் அழுகிய கரமே அவன் கரத்தைப் இறுகப் பற்றியிருந்தது.

பயமே தெரியாதவன் முகம் சிறிது சிறிதாய் பயத்தில் வேர்க்கத் தொடங்கிவிட்டது. இருந்தும் தன் மற்றொரு கரத்தால் அந்த கரத்தை அவன் பற்றி விடுவித்துக் கொள்ள முயல இறுக்கம் அதிகமானதே தவிர விட்டபாடில்லை.

உடனே அவன் நிமிர்ந்து பார்க்க அதுவரை மூடியிருந்த அந்த பிணத்தின் கண்ணிமைகள் சட்டென்று திறந்தது...

இருளிலும் செங்கதிரவன் போல் அந்த இரண்டு கண்கள் ஜொலித்துக் கொண்டிருந்தது.. அதை கண்டு அவன் கண்களை மூடிக் கொண்டான்...

"அழுகிப் போன என்னைப் பாத்து அழியப் போற நீ பயப்படுறயா" என்று கேட்ட அந்த நொடியில் அது ஆ என்ற அலறலுடன் கீழே விழுந்தது...

அதன் விழிகள் திறந்த வண்ணம் இருக்க அதனுள் சீற்றமே நிறைந்திருந்து. அதே சீற்றத்தோடு அது அவனுக்கு பின்னால் தனது பார்வையை செலுத்த அங்கே இருந்து புயல் வேகத்தில் மற்றொருவன் வந்தான்...

வந்தவன் உறுத்து அந்த பிணத்தைப் பார்த்து "யார்கிட்ட உன் வேலையை காமிக்கிற... அவன்கிட்டயா... அது ரொம்ப பெரிய தப்பு...அவனை அழிக்க உன்னால முடியுமா... அது நான் இருக்குற வரை நடக்காது.. உன்னை இனியும் இங்க வச்சுருக்க கூடாது... எங்க இருந்து உன்னை கூட்டிட்டு வந்தேனோ அந்த இடத்துக்கே உன்னை அனுப்பி வைக்கிறேன். அங்க அந்த பேய்ங்களோட பேயா நீயும் அடைஞ்சு கிட..." என்று சொன்னவன் தன் கண்களை மூடி எதையோ முணுமுணுக்க உடனே அந்த அழுகிய உடல் அங்கிருந்த இழுத்துச் செல்லப்பட்டு அருகே இருந்த மயானத்தில் புதைந்து போனது...

அது புதைந்த இடத்தில் இன்னும் பல உடல்கள் அழுகி எலும்புகளாய் கிடந்தது..

அதனோடு இந்த உருவமும் சென்று விழுந்தது...
"உன்னையும் அவன் விட்டு வைக்கலையா" என்று ஓர் உருவம் கேட்க பதில் பேசாமல் கோபத்துடன் அந்த அழுகிய உடலில் இருந்து வெளியே வந்தது அந்த கோரமான உருவம்.....

அங்கே இது போல் பலவித உருவங்கள் அமைதியாய் அடங்கியிருந்தது. புதிதாய் வந்த அந்த உருவத்தின் கோபத்தை பார்த்து "நாம நினைச்சாலும் இங்க இருந்து வெளிய போக முடியாது. அந்த மந்திரவாதிக்கு நாம அடிமையா காலம் முழுவதும் இருக்கணும். அதுதான் நம்மளோட தலையெழுத்து... அவன் சொல்லுற வேலையை செஞ்சுட்டு இந்த சிறையில அடைஞ்சுட்டு இருக்குறதுக்கு பதிலா சாகாமலே இருந்திருக்கலாம்னு இப்போ தோணுது..." என்று மற்ற உருவங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்க அந்த உருவத்தின் கோபம் எல்லாம் அந்த மந்திரவாதியின் மீது திரும்பியது...

நான் சாகும் போது கூட இவ்வளவு வேதனைப்படலை ஆனா என்னை இங்க அடைச்சு வச்சு அதிகமான வேதனையை தந்துட்ட... உன்னை அழிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போகும். அப்போ என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்குவ.... என்று தனக்குள்ளயே சொல்லிக் கொண்டது அந்த கோர பிசாசு...


அந்த இடத்தில் நின்றிருந்தவனைப் பார்த்து மந்திரவாதி "எத்தனை தடவை சொல்லிருக்கேன் இந்த இடத்துக்கு வரக் கூடாதுன்னு. இப்போ ஏன் வந்த மாதவா..." எனக் கேட்டான்.

"அது வந்து அண்ணா... நாளைக்கு நீங்க நினைச்சது நடக்கப் போகுது. அதான் நான் உங்களைப் பாக்கலாம்னு வந்தேன். ஆனா இந்த இடம் என்ன இன்னைக்கு இவ்வளவு பயங்கரமா இருக்கு" என்றான் மாதவன்.

"இதுவே பயங்கரம் அப்படின்னு நீ நினைச்சா நாளைக்கு அந்த ஆலமரத்துல இருந்து ஆன்மா வெளிய வந்ததுக்கு அப்பறம் நடக்கப் போறதை எல்லாம் என்ன சொல்லுவ... அதனால இதைப்பத்தி எல்லாம் குழப்பிக்காம விபரீதமா நடக்குறதை வேடிக்கை மட்டும் பாரு மாதவா..." என்றான் அவன். அவன் தான் சத்யருத்திரன்...


இருபத்து நான்கு வயதான மாதவனை விட பதினொரு ஆண்டுகள் பெரியவன் தான் அந்த சத்யருத்திரன்... அவன் உலகமே இந்த மாய மந்திரங்கள் நிறைந்தது தான். ஆனால் அதில் தன் தம்பியை நுழைக்க அவன் முயற்சி செய்ததே இல்லை.

தம்பி பாசம் என்பதை தவிர அவனிடமே வேறு எந்த நற்குணமும் இல்லை. அவன் சிந்தை முழுவதும் துர் மந்திரங்களும் துர் சக்தியும் மட்டுமே நிறைந்திருக்கும்...


அவன் தான் அந்த ஆலமரத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று முதலில் இருந்தே நினைத்தது. அதற்காகத்தான் யோசித்து யோசித்து ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்தான். இப்போது அது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.... உள்ளே புதைந்து கிடப்பது வெளியே வரட்டும் அப்போது தெரியும் இந்த ருத்திரன் யார் என்று அவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ள அவன் முகம் பயங்கரமாக மாறியது...



அமிழ்ந்தது மீளுமா....​

கருத்துத் திரி 👇👇👇

Thread 'அகலில் அமிழ்ந்த ஆன்மா - Comments' https://www.sahaptham.com/community/threads/அகலில்-அமிழ்ந்த-ஆன்மா-comments.440/
 
Last edited:
அத்தியாயம் 7
​
மறுநாள் ஊரே மாரியம்மன் கோவிலின் முன் தான் திரண்டிருந்தது. சற்று பரந்து விரிந்த அந்த ஆலமரம் இனி அங்கு இருக்கப் போவதில்லை என்பதை அறிந்து அனைவரும் ஒருவித ஆர்வத்துடன் நின்றிருந்தனர்.

சக்தியும் ரத்னாவும் நடப்பதை அமைதியுடன் வேடிக்கைப் பார்த்தார்கள். நேற்றைய இரவின் தாக்கம் இருவரது முகத்திலும் மிச்சம் இருந்தது.

விரிந்திருந்த அந்த ஆல மரத்தின் கிளைகளை முதலில் வெட்டினார்கள். அடைந்து கிடந்த அந்த ஆன்மா வெளியே வரப் போகிறோம் என்று சந்தோசத்தில் இருந்தது.

பின்னர் அந்த இடத்தில் இருந்த மண்ணை எல்லாம் தோண்டி எடுக்க ஆரம்பித்தார்கள். பள்ளமான அந்த இடத்தில் இப்போது ஆலமரத்தின் வேர்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தது.

சற்று நேரத்தில் ஜேசிபி இயந்திரம் வந்து அப்படியே அந்த இடத்தை இன்னும் ஆழமாக தோண்ட ஆரம்பித்தது. வேர்கள் எல்லாம் கோரமாக மண்ணைப் பிளந்து வெளியே வந்த காட்சியைக் கண்டு ஊரே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது.


சட்டென்று வானத்தில் ஒரு மாற்றம். பகலவன் வெளியே வந்து வெயில் சுள்ளென்று அடித்தப் பின்பும் கூட சட்டென்று மேகங்கள் திரண்டு வர ஆரம்பித்து விட்டது.

என்னாச்சு என்றபடி அனைவரும் வானத்தையே உற்று நோக்கினார்கள். சக்திக்கு புரிந்து விட்டது என்ன நடக்கப் போகிறது என்று. அவனும் ஆர்வமாக அதை எதிர்பார்த்து நின்றிருந்தான்.

மழை சடாரென்று பெய்யத் தொடங்கியது... மழை இங்கே வலுக்கத் தொடங்கிய வேளையில் பள்ளியில் இருந்த அகல்யாவுக்கு தலைக்குள் பல்வேறு நினைவுகள் வந்து குடையத் தொடங்கிவிட்டது.

பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தவளால் அதை தொடர முடியவில்லை. அவள் முகத்தைக் கண்ட மாணவர்கள் "என்னாச்சு மேம்" என்று பதற்றமாக கேட்கத் தொடங்கினார்கள்.

"நந்திங்" என்று சொன்னவள் மீண்டும் முயற்சி செய்து பாடத்தை நடத்த ஆரம்பித்தாள்.

அப்போது ஒருவன் எழுந்து "மேம் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன் நாம நாளைக்கே பாடத்தை நடத்தலாமே" என்று சொல்ல
"எனக்கு ஒன்னும் இல்ல" என்று சொன்னவளுக்கு கண்கள் இருட்டு கட்டிக் கொண்டு வந்தது...


தன் முன் இருந்த டேபிளை பிடித்தவள் தன் சமாளித்துக் கொள்ள பெரும் முயற்சி செய்தாள். உடனே ஒரு மாணவி மட்டும் எழுந்து சென்று பக்கத்தில் இருந்த ஸ்டாப் ரூமுக்கு சென்றாள். அங்கு தற்போது கெமிஸ்ட்ரி ஸ்டாப் சதீஷ் மட்டும் இருக்க "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்றாள் அந்த பெண்.

"எஸ்" என்று அவன் நிமிர
"சார் சிஎஸ் மேம்க்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன் நீங்க கொஞ்சம் க்ளாஸ்க்கு வாங்க சார். அவங்க போய் ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றாள் அந்த பெண்.

"வர்றேன்" என்று சொன்னவன் வேகமாக பன்னிரண்டாம் வகுப்பிற்குள் நுழைய அங்கே தன் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள் அகல்யா...

"மேம் ஆர் யூ ஓகே" என்றான் சதீஷ்.

"எஸ் சார்..."

"நீங்க போங்க நான் க்ளாஸ்ஸை பாத்துக்கிறேன்..." என்றான் சதீஷ்.

"தாங்க்யூ சார்..."

"இட்ஸ் ஓகே மேம் நீங்க போங்க" என்று அவளை அனுப்பி வைத்தான் அவன்.

வேகமாக லேப்பை நோக்கி நடந்தாள். மனம் தடதடத்துக் கொண்டு இருந்தது. உள்ளே நுழைந்தவளுக்கு தலை வலி தாங்க முடியவில்லை. தலையைப் பிடித்து கொண்டு அப்படியே தரையிலே படுத்து விட்டாள்.

அங்கோ அந்த எந்திரம் அப்படியே மெதுவாய் அந்த மரத்தை அடியில் இருந்து தூக்க முயற்சி செய்தது... மழையில் அந்த இடம் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருந்தது.

கூடியிருந்த மக்கள் இப்போது கலைந்து விட்டனர். சக்தியும் ரத்னாவும் மட்டுமே அங்கே இருந்தார்கள்... கூடவே சற்று தள்ளி ருத்திரன் இருந்தான்...

வேர்கள் எல்லாம் வெளியே வந்துவிட்ட நிலையில் இருந்த அந்த மரத்தை எளிதாக தூக்கி விடலாம் என்று அந்த ஓட்டுனர் நினைத்திருக்க ஆனால் அசைக்க கூட முடிவில்லை.

மழை இன்னும் வலுக்க சரியாக பார்க்க முடியவில்லை அவரால். அப்போது அங்கே கந்தையா வர அவரைக் கண்ட ருத்திரனின் பார்வை இன்னும் பயங்கரமாக மாறியது.

கந்தையா ருத்திரனைப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையை மட்டும் பரிசாய் அவனுக்கு அளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

மீண்டும் அந்த இடத்தில் இருந்த மண்ணை அள்ளி வெளியே கொட்டிவிட்டு முயற்சி செய்தார். சத்ய ருத்திரன் அதை பார்த்த பின்பு கூட அசராமல் அங்கயே நின்றான். அவன் உடலை கருப்பு நிற வேட்டி சுற்றியிருந்தது. கழுத்தில் இருந்த துண்டை எடுத்து தலையில் கட்டியிருந்தான். கண்கள் கனலைப் போல் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தது. மழைநீர் அவன் மேனியில் வழிந்து கொண்டிருந்த போதும் கண்கள் தீர்க்கமாக அந்த இடத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தது.


வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சக்தி ஏதேச்சையாக பார்வையை அந்த பக்கம் திருப்ப அங்கிருந்தவனைக் கண்டு யோசனை வந்துவிட்டது. யாரது புதுசா இருக்கான் என்று நினைத்தவன் அருகே இருந்த ரத்னாவின் இடையில் குத்தி "டேய் அங்க பாரு" என்றான்.

"என்ன மச்சி" என்று பார்த்தவன்
"யார் மச்சி உன் ப்ரண்டா" என்றான் சாதாரணமாக.

"உன் மூஞ்சி... டேய் அவனைப் பாரேன் ஆளே பாக்க வித்தியாசமா இருக்கான்ல. அவன் கண்ணைப் பாருடா அதுல கோபம் தெரியுது" என்றான் சக்தி.

"எனக்குத் தெரியலை மச்சி" என்றான் ரத்னா.

"கண்ணு தெரியலையா டா"

"அய்யோ மச்சி கோபம் தெரியலைன்னு சொன்னேன்"

"விளையாடாத ரத்னா... "

"நான் சீரியசா தான் பேசுறேன் மச்சி ஆனா நீதான் விளையாடிட்டு இருக்க"

"சரி அதை விடு. இதுவரைக்கும் இவனை நாம பாத்ததே இல்லை இவன் இங்க என்ன பண்ணுறான். அதுவும் மரத்தையே உத்துப் பாத்துட்டு இருக்கான். எனக்கென்னவோ இவன் மேல சந்தேகமாக இருக்கு"

"அப்படியா சொல்லுற"

"ஆமா டா ரத்னா. நாம இந்த மரத்தை எடுக்குறதை எதிர்பார்க்குறது பிரச்சனை முடிவுக்கு வரும்னு ஆனா இவனோட எதிர்பார்ப்பு ஏதோ ஓர் ஆரம்பத்தை தேடி வந்துருக்கு டா" என்றான் சக்தி.

"அப்படியும் இருக்குமோ மச்சி"

"அப்படித்தான் இருக்கும் எதுக்கும் அவனை பாலோ பண்ணலாம் நமக்கும் இன்னும் ஏதாவது தெரிய வரும்"

"மச்சி நேத்து ஃபாலோ பண்ணிட்டு அவங்க சொன்ன விசயத்தைக் கேட்டு இன்னும் நெஞ்சுக்குள்ள பக்குன்னு இருக்கு. இதுல இவனை ஃபாலோ பண்ணி மேற்கொண்டு என் ஹார்ட்டுல ஓட்டை போட்டுடாத. தாங்க முடியாது" என்று அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே மழை சட்டென்று நின்றுவிட்டது.

திரும்பி அவர்கள் அந்த மரம் இருந்த இடத்தைப் பார்க்க மரத்தை வேரோடு அப்படியே தூக்கியிருந்தது அந்த இயந்திரம்.
அங்கோ அகல்யாவும் வேரறுந்த மரமாய் தரையில் வீழ்ந்து மயங்கியிருந்தாள்...


அதுவரை அந்த ருத்திரனையே பார்த்திருந்த இருவரது பார்வையும் அங்கே சென்றுவிட்டது. மண்ணில் இருந்த மரம் அப்படியே அந்தரத்தில் மிதந்தபடி இருந்தது.


அதை உற்று நோக்கிய சக்தியின் கண்களுக்கு அந்த வேரில் ஒரு சிவப்பு நிற துணி முடிச்சுடன் காணப்பட்டது தெரிந்தது. அது என்னவாக இருக்கும் என்று சக்தி உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போதே அவன் தோளை தட்டிய ரத்னா "மச்சி மச்சி அங்க பாரு" என்றான்...


சலிப்புடன் திரும்பி அவனும் அதிர்ச்சி அடைந்தான். இதுவரை அந்த மரத்தையே உற்று நோக்கி கோபத்துடன் நின்று இருந்த அவன் அங்கே இல்லை. என்னடா எங்க போனான்... என்று ரத்னாவிடம் கேட்டபடி திரும்ப அந்த ஆலமரத்தின் வேரில் இருந்த அந்த சிவப்பு நிற துணியையும் காணவில்லை...


குழப்பத்துடன் பீதியும் சக்தியை சூழ்ந்து கொண்டது. இப்போ வந்தவனுக்கும் இந்த மரத்துக்கும் நிச்சயமா சம்பந்தம் இருக்கு என்று நினைத்தவன் அருகில் இருந்த தகரம் போட்டிருந்த இடத்தைப் பார்த்தான்.

மாரியை நினைத்தவன் மனதுக்குள் சற்று தைரியம் வந்தது. சரி இனி என்னதான் நடக்குதுன்னு நாமளும் பாக்கலாம் என்று நினைத்து கொண்டே ரத்னாவை அழைத்து கொண்டு வெளியே வந்தான்...
அப்போது அவனது மொபைல் அடிக்க ஆரம்பித்தது.


"அகல்யாதான் கூப்பிடுறா" என்று ரத்னாவிடம் சொன்னவன் அகல் என்ன என்றான்.

"அண்ணா நான் நிவேதா பேசுறேன்" என்றது மறுபக்கம்.

"சொல்லும்மா"

"அது அண்ணா... மேம் மயங்கி விழுந்துட்டாங்க"

"என்ன சொல்லுறம்மா.."

"ஆமா அண்ணா... நான் தண்ணியை முகத்துல அடிச்சு கூட பாத்துட்டேன். ஆனா எந்தவித ரெஸ்பான்ஸூம் இல்ல... மேடம்கிட்ட இப்போத்தான் சொல்லிட்டு வந்தேன். அவங்க பக்கத்துல டாக்டரை வரச் சொல்லிருக்காங்க.. வீட்டுக்கு இன்பார்ம் பண்ண சொன்னாங்க. அதான் அண்ணா உங்களுக்கு போன் பண்ணேன்..." என்றாள் நிவேதா பரிதவிப்புடன்.

"இதோ நான் உடனே கிளம்பி வர்றேன்" என்று சொன்னவன்
"மாப்பிள்ள உன் ப்ரண்ட் மயங்கி விழுந்துட்டாளாம்.. ரொம்ப பயந்துருப்பான்னு நினைக்கிறேன். நான் போய் அவளை கூட்டிட்டு வர்றேன்" என்று சொன்னவன் தனது வண்டியை எடுத்து கொண்டு அங்கிருந்து விரைந்தான்.


ரத்னாவின் மனம் அவனைப் போட்டு பிராண்டி எடுத்தது. புதிதாய் முளைத்திருக்கும் இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று எப்படி கண்டுபிடிப்பது என்று அவன் யோசித்துக் கொண்டே நடந்து வீடு வந்து சேர்ந்தான்.


சக்தி பள்ளியை அடைந்து வெளியே வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக வாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வந்து "அகல்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது. அதான்" என்று சொல்ல அவரும் சைன் வாங்கிவிட்டு அவனை உள்ளே அனுமதித்தார்.


நேராக ரிசப்ஷனை நோக்கி அவன் செல்ல அங்கே இருந்த இருக்கையில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள் அகல்யா...

"அகல் ம்மா" என்று அவன் அழைத்தபடி அவளை நெருங்க "சக்தி" என்றாள் சோர்வாக...

"என்னாச்சு டா"

"தெரியலை ரொம்ப டயர்டா இருக்கு... யாரோ தலையில ஏறி உக்காந்து ஊசியால குத்துற மாதிரி வலிக்குது..."

"சரி சரி ஒன்னும் இல்ல" என்று அவன் சொல்ல நிவேதா அவன் அருகே வந்தாள்.

"அண்ணா இது மருந்து சீட்டு... இதை வாங்கிக் கொடுங்க சொன்னாங்க அண்ணா"

"ரொம்ப தாங்க்ஸ் ம்மா. டாக்டர் வேற என்ன சொன்னாங்க ம்மா"

"பெருசா எந்த ப்ராப்ளமும் இல்லையாம் அண்ணா.. தூக்கம் இல்லாம அதிகமாக யோசிச்சுட்டே இருந்ததால தான் இந்த மயக்கம் வந்துருக்காம். நேத்து இருந்தே இப்படித்தான் எதையோ யோசிச்சுட்டே இருந்தாங்க... நான் கேட்டாலும் சரியா பதில் சொல்லவே இல்லை.. எதுவா இருந்தாலும் இனி நீங்க தான் பாத்துக்கணும்..." என்றாள் நிவேதா.

"சரிம்மா நான் இவளை கூட்டிட்டுப் போறேன். மேம்கிட்ட சொல்லணுமா"

"சொல்லியாச்சு அண்ணா கேட்பாஸ் சைன் பண்ணிட்டாங்க. அதை வாங்கிட்டு கேட்ல கொடுத்துட்டு கிளம்பலாம் அண்ணா. இரண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வரச் சொல்லுங்க" என்று அவள் சொல்ல "அகல்யா நான் போய் உங்க மேம்கிட்ட சொல்லிட்டு வர்றேன்" என்று அவளை நிவேதாவின் அருகே அமரவைத்து விட்டு சென்றான் சக்தி.


சற்று நேரத்தில் வந்தவன் முகம் என்னவோ போல் இருந்தது. அகல்யா அவனைப் பார்க்க "வா போகலாம். வர்றேன் ம்மா" என்றான் சக்தி நிவேதாவைப் பார்த்து.

அகல்யாவும் நிவேதாவிடம் சொல்லிவிட்டு அவனுடன் சென்றாள்.

வண்டியில் செல்லும் போது இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

வீட்டில் அவன் இறக்கிவிட்டு உள்ளே நுழைய துர்காவும் சாமிநாதனும் வாசலிலே நின்று அவளை அழைத்துச் சென்றனர்.

"சக்தி அவளுக்கு"

"ஒன்னும் இல்ல மாமா. வேலை டென்சன் அதான். ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்... சரி நான் போய் மருந்து வாங்கிட்டு வர்றேன்" என்று கிளம்பி மருந்தை வாங்கி கொண்டு வெளியே வர சட்டென்று தன்னை யாரோ பிடித்து தள்ளுவது போல் இருந்தது.

முயன்று தன்னை நிலை நிறுத்தியவன் முன் இப்போது சட்டென்று ஒரு முகம்... அதுவும் அழகான முகம்...
ஒரு நிமிடம் அகல்யாவே வந்துவிட்டாள் என்றே அவனுக்குத் தோன்றியது...


"அகல்யா" என்று அவன் இதழசைக்க அந்த உருவம் மறைந்து போனது... அந்த உருவத்தைத் தேடி சுற்றும் முற்றும் பார்த்தவனை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க அங்கிருந்து நகர்ந்தான்.


வீட்டினுள் அமர்ந்திருந்த ரத்னா தன் கையில் இருந்த காபியை குடித்துக் கொண்டிருந்தான். டிவியில் சேனல்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தான்.

எதிலும் மனம் லயிக்கவில்லை. ஏதாவது பண்ணனும் நேத்து அவங்க சொன்ன மாதிரி நடந்தாலும் அகல்யாவை முழுசா காப்பாத்தணும்னா நாமளும் நம்ம பங்குக்கு ஏதாவது பண்ணியே ஆகணும். அதுக்கு என்ன பண்ணலாம் என்று நினைத்தவன் "ரத்னா" என்ற குரலில் கலைந்தான்.


"யாரு" என்று அவன் வெளியே வந்து பார்க்க அங்கே யாருமே இல்லை. "யாரு கூப்பிட்டது" என்று அவன் அங்கயே சுற்றிப் பார்க்க மீண்டும் "ரத்னா" என்ற குரல் கேட்டது.


"யாரது முன்னாடி வந்து நில்லுங்கள்" என்றான் அவன்.


"ரத்னா சீக்கிரமா கிளம்பு" என்று அவன் காதோரம் கேட்ட குரலில் அவன் "நீங்க யாரு" என்றான்.
"நீ இங்க இருக்குற ஒவ்வொரு நொடியும் ஆபத்து. அதனால மொத இங்க இருந்து கிளம்பி போய்டு...இந்த ஊருக்குள்ளயே இருக்காத" என்று சொன்ன அந்த குரல் மெதுவாய் மறைந்து தேய்ந்தது..


அவளுக்கு உதவி பண்ணனும் நினைச்சதால வந்த மிரட்டலா இருக்குமோ என்று நினைத்தவன் கூடவே கண்டிப்பாக நாம இங்கதான் இருக்கணும் என்று முடிவு எடுத்தான்...


அங்கோ தனது இருப்பிடத்தில் அமர்ந்திருந்தான் சத்ய ருத்திரன். அவன் கையில் அந்த சிவப்பு நிற முடிச்சு இருந்த துணி இருந்தது...
அதைப் பார்க்க பார்க்க அவன் உள்ளம் வேதனையில் துடிக்க ஆரம்பித்தது.

சத்யா என்று மெல்லிய முணங்கல் அதனுளிருந்து வெளிப்பட்டது.
"அம்மா" என்று கதறிவன் அதை இறுக பிடித்துக் கொண்டான்.

"அழாத சத்யா இது அழ வேண்டிய நேரம் இல்ல"

"அம்மா என்னால முடியல... ஒரு வருசமா இரண்டு வருசமா இருபத்தி நாலு வருசமா நீங்க அதுக்குள்ள இருந்தீங்க. உங்க வேதனை எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியும் அம்மா.. இதை என்னால ஏத்துக்கவே முடியலல அம்மா" என்றான் அவன்.

விழிகளில் பெருகிய கண்ணீர் அவன் கன்னத்தை தாண்டி கரத்தினில் பட்டது. அவன் கரத்தினில் இருந்த சிவப்பு நிற துணியிலும் அவன் கண்ணீர் பட்டு நனைத்தது.

அதன்பின் அவன் மெதுவாக அந்த சிவப்பு நிறத் துணியில் இருந்த முடிச்சினை அவிழ்க்க முற்பட்டான். பல ஆண்டுகளாக மண்ணுக்குள் இருந்ததால் அது இறுகி போய் இருந்தது.


கஷ்டப்பட்டு அதை அவன் விடுவிக்க அதனுள் இருந்த பொருளை கண்டவன் அதைக் கையால் தடவிப் பார்த்தான். விழிநீர் இன்னும் இன்னும் வழிந்து கொண்டு இருந்தது.


அப்போது அவன் கண்ணீரை துடைக்க ஒரு கரம் வந்தது. அதன் தொடுகையில் சிலிர்த்தவன் திருப்ப அவனின் அருகே அவன் அம்மா அமர்ந்திருந்தாள்...

"அம்மா"

"ஷ்ஷ் எதுக்கு இந்த அழுகை சத்யா. நான் வந்துட்டேன்ல"

"நீங்க பக்கத்துல இருக்குறதை நினைச்சா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அம்மா. ஆனா இனி நடக்க வேண்டியதை நினைக்கும் போது பயங்கர வெறி உள்ளுக்குள்ள கிளம்புது.. உங்களை இந்த கதிக்கு ஆளாக்குனவங்களை நான் சும்மா விட மாட்டேன் அம்மா" என்றான் அவன். அவன் முகத்தில் இருந்த ரௌத்திரம் குரலிலும் தெறித்தது...


"அதுக்காகத்தான் நான் வெளிய வர்றதுக்குள்ள உன்னை வச்சு அந்த அகல்யாவை நெருங்குனேன். ஆனா அந்த சக்தி எல்லாத்தையும் கெடுத்துட்டான். இதுல அந்த வேலம்மாள் வேற நீ பண்ணுற எல்லாத்தையும் தடுத்து சக்திக்கு காவலா இருக்கா... இல்லைன்னா அவனை எப்பவோ முடிச்சுருக்கலாம்" என்றவளிடமும் அதே ஆத்திரம்..

"ஒன்னும் அவசரம் இல்லை அம்மா... இனி நாம பாத்துக்கலாம்" என்றான் அவன்...

"சத்யா இப்போ நான் அகல்யாவை போய் பாத்துட்டு வர்றேன். அவளை பயமுறுத்துனாத்தான் சக்தியும் பயப்படுவான்... அப்போத்தான் அவன் என்ன செய்யுறதுன்னு யோசிக்கவே முடியாம குழம்பி போய் தவிப்பான். நாமளும் நம்ம வேலையை எந்த தொந்தரவும் இல்லாம சரியா செய்யலாம்" என்றாள்.


அதைக் கேட்ட சத்ய ருத்திரனும் சரியென்று தலையாட்ட அவளோ அங்கிருந்து அகல்யாவின் வீட்டை நோக்கி புறப்பட்டாள்...

மீண்டது அமிழ்ந்துவிடுமா...​


கதைக்கான கருத்துத்திரி... தங்களின் கருத்துக்களை இதில் சென்று தெரிவியுங்கள்....
 
அத்தியாயம் எட்டு​

மருந்து மாத்திரைகளை வாங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தவன் அதை தன் அத்தையிடம் கொடுத்துவிட்டு மேலே சென்றான். அகல்யா அங்கே படுத்திருக்க அவள் அருகே சென்று அமர்ந்தான் சக்தி..​


களைப்பில் களையிழந்து இருந்த அந்த முகத்தைக் காணும் போதே வேதனை அவன் இதயத்தில் குடி கொண்டது.​


"அகல்" என்று அவள் தலையை அவன் மெதுவாக வருடிவிட அகல்யா அந்த தொடுகையின் சிலிர்ப்பில் கண்விழித்தாள்.​


"சக்தி" என்று மெதுவாக அவள் முணங்க "இரண்டு நாளைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம். நல்லா ரெஸ்ட் எடு" என்றான் அவன்.​


"ஏதாவது நடந்துருமா சக்தி"​


"ஆமா நடக்கும்" என்று அவன் சொல்ல "சக்தி" என்றாள் இவள் பதட்டமாக.​


அவள் பதட்டத்தை ரசித்தவன் "நம்ம கல்யாணம் நடக்கும் அகல்" என்றான் சிரிப்புடன்.​


அதை நம்பாமல் அவள் பார்க்க "என்ன பாக்குற நம்ப மாட்டயா நான் வேணும்னா இப்பவே உன் கழுத்துல தாலி கட்டட்டா" என்றான் உறுதியான குரலில்.​


"நீதான அதை பண்ணிட்டு தான் மறுவேலை பாக்கப் போவ... போ டா" என்றாள் சற்று மாறிய குரலில்.​


"அடியேய் என்னயவா போடான்னு சொல்லுற. அப்பறம் நான் போயிடுவேன்"​


"நீ நான் என்னை விட்டு போக மாட்டேல அப்பறம் என்ன"​


"இந்த நம்பிக்கை தான் எனக்கு வேணும். எனக்கு என்ன நடந்தாலும் நான் உன்னை காப்பாத்தாம விடமாட்டேன். அதனால பயப்படாம நிம்மதியா இரு" அவன் சொன்னதற்கு தலையை ஆட்டியவள் "பிரின்சிபால் மேடத்தைப் பாத்தயே அவங்க என்ன சொன்னாங்க" எனக் கேட்டாள்.​


"சிஎஸ் மேமை பத்திரமா பாத்துக்க சொன்னாங்க. அவங்க நல்லா இருந்தாத்தான் பசங்க எல்லாரும் நல்லா இருக்க முடியும்னு சொன்னாங்க" என்றான் சீரியசான குரலில்.​


"அப்படிலாம் சொல்லிருந்தா பதினைஞ்சு வருசமா தண்ணீர் வராத நம்ம ஆத்துல வெள்ளமே வந்துருக்கும். பொய் சொல்லாம உண்மையை சொல்லுங்க" என்று அவள் சிரித்தபடி கேட்க அவனால்தான் அப்போது சிரிக்க முடியவில்லை.​


ஏனென்றால் அந்த மேம் சொன்னது அப்படிப்பட்ட ஒரு விசயம். மயங்கி விழுந்த அவளை பரிசோதித்த டாக்டர் ஊசி போடப் போகும் போது அவள் அருகே கண்கள் இரத்த நிறத்தில் சிவந்து பற்கள் நீண்ட ஓர் உருவம் காட்சியளித்ததைக் கண்டு பயத்தில் நடுங்கிப்போய்விட்டார் அந்த மேடம். அதைத்தான் சக்தியிடம் அவர் கூறியிருக்கிறார்.​


கூடவே "சக்தி நீங்க அவளை கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க. எதுக்கும் உங்க குலசாமி கோவிலுக்கு கூட கூட்டிட்டுப் போயிட்டு வாங்களேன். ஒரு மாறுதலாவும் உங்களுக்கான ஆறுதலாவும் அந்த பயணம் இருக்கும். ஏதாவது ஒரு நல்ல மாற்றம் நிச்சயமா தெரியும்" என்று சொல்லவும்​


"கண்டிப்பா மேம். அதுவரைக்கும் அவ ஸ்கூல்க்கு வர மாட்டா" என்றான் சக்தி.​


"நோ ப்ராப்ளம் சக்தி. எனக்கு அவங்க நல்லபடியா ஆனப்பிறகு வந்தா போதும். அதுவரைக்கும் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். கிளாஸை நிவேதாவை வச்சு நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என்று சொன்னதும் நன்றி சொல்லிவிட்டு வந்தான் சக்தி. அது ஞாபகத்துக்கு வந்ததும் அவன் அகல்யாவைப் பார்த்து சற்றே உள்ளே இறங்கிய குரலில் "நிவேதாவை வச்சு கிளாஸை ஹேண்டில் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க அகல்.வேற ஒன்னும் சொல்லல" என்றான்.​


"சரி நேத்து நீங்க அந்த தாத்தாவைப் பாக்க போனீங்க தான. அவரு என்ன சொன்னாரு. ஏதாவது தெரிஞ்சதா"​


"அவருக்கே அதைப் பத்தி ஒன்னும் சரியாத் தெரியலை அகல். ஆனா திடீர்னு அவருக்கு அந்த மரம் மட்டும் அங்க இருக்கக் கூடாதுன்னு தோணுச்சாம்"​


"நீ சொல்லுறதை என்னோட ஸ்டூடண்ட் கூட நம்ப மாட்டான். என்னை நம்பச் சொல்லுறயா"​


"அப்போ அவங்க அவ்வளவு புத்திசாலியா இருக்காங்களா... பாரேன்.. நீ போய் கிளாஸ் எடுத்துமா அவங்க இப்படி இருக்காங்க" என்று அவளை கிண்டலடித்தான் சக்தி.​


"என்ன கிண்டல் பண்ணுறதுன்னா உனக்கும் அந்த இடியட்டுக்கும் அப்படியே பிரியாணி சாப்பிடுற மாதிரி சுகமா இருக்குமே" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ரத்னா "பிரியாணியா எங்க பிரியாணி" என்றபடி வந்து நின்றான்.​


"பேயை நினைச்சா அதுவே வந்து நிக்குமாம்" என்று அவள் சொல்ல​


"ஏய் பக்கி நான் ஒன்னும் பேய் கிடையாது. நீதான் பேய்" என்றான் ரத்னா.​


"நானா டா பேய்"​


"ஆமா நீதான் பேய் எங்க உசுரை எடுக்க வந்த பேய்" என்றான் ரத்னா விளையாட்டாக.​


"ஆமா நான் பேய் தான். உங்க உசுரை எடுக்கத்தான் போறேன்..." என்று அவள் பேச அவள் மூச்சு சீற்றமாய் வெளிவந்தது...​


"பக்கி அதோட வேலையை காட்ட ஆரம்பிச்சுடுச்சு பாரு மச்சி. நல்லா காமெடி பண்ணுறா இல்ல" என்று சிரித்துக் கொண்டே சக்தியின் பக்கம் திரும்பி அவன் சொல்லும் போதே தலையில் அடி இடி போல் இறங்கியது.​


"அம்மா" என்று கத்தியவன் திரும்பி பார்க்க சக்தியும் அதிர்ச்சியுடன் பேச்சற்று நின்றிருந்தான்.​


"மச்சி" என்று அவன் முணங்க​


"அடேய் அவ நிசமாவே பேயா மாறிட்டா டா" என்றான் சக்தி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.​


"அது அடிவாங்கும் போதே புரிஞ்சுடுச்சு மச்சி. மூளை இப்போ கலங்கி ஓடுது" என்றான் கண்களில் கலக்கத்துடன்.​


"நம்புறயா இப்போ நம்புறயா. நான் உங்க உசுரை எடுக்கத்தான் வந்துருக்கேன்" என்று ரத்னாவின் முகத்துக்கு நேராக வந்து அவள் கத்த அவனைத் தள்ளிவிட்டு அருகே வந்த சக்தி "உசுரை வேணும்னா எடுத்துக்கோ. நான் எதுவும் சொல்லமாட்டேன்" என்றான் தைரியமாக..​


"உசுரை எடுத்த பின்னாடி நீயே நினைச்சாலும் ஒன்னும் சொல்ல முடிய்து மச்சி" என்றான் ரத்னா பட்டென்று.​


"டேய் வாயை மூடு டா... ஒரு ப்ளோல போகும் போது குறுக்க குறுக்க புகுந்து ஏன் கேட் போடுற"​


"இனி போடலை..." என்று அமைதியாகிவிட்டான் ரத்னா.​


"இங்க பாரு என் உயிர் வேணும்னா தராளமா எடுத்துக்கோ. ஆனா என் அகல்யாவுக்கு மட்டும் எதுவும் ஆகக் கூடாது. அவளை விட்டுரு"​


"விடுறதுக்கா இத்தனை வருசம் கழிச்சு இவளைத் தேடி நான் வந்துருக்கேன் ..."​


"அவ பாவம். அவளுக்கு எதுவும் தெரியாது.அகல்யா ரொம்ப நல்லவ"​


"பாவம் யாரு பண்ணாங்கன்னு தெரியாம பேசாத சக்தி. உன் நிலைமையில இருந்து இது சரியான வாதமா இருக்கும். ஆனா என்னோட பிடிவாதத்துக்கு முன்னாடி எதுவும் செல்லுபடியாகாது. அகல்யாவுக்காகவே வந்தவ நான். அதனால அவளை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது உன்னால... இதுவரைக்கும் வேணும்னா உன் அம்மா உனக்கு காவலா இருந்துருப்பா. ஆனா இனி அவளும் வரமாட்டா" என்று அந்த பேய் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கந்தையன் உள்ளே நுழைய அவனைக் கண்டதும் அகல்யாவின் விழிகள் சீற்றத்துடன் காணப்பட்டது.​


"தெரியும் நீ இங்கதான் வருவன்னு... அதான் நான் இங்க வந்தேன்" என்றார் கந்தையா.​


"உன்னை நானும் எதிர்பார்த்தேன் கந்தையா... "​


"வேணாம் தப்பு பண்ணாத. ஏற்கனவே நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்" என்றவரின் சிரிப்பில் எள்ளல் இருந்தது.​


"ஏற்கனவே நடந்த தவறைத்தான் இப்போ நான் சரி பண்ணுறேன். என்னோட வழியில நீ வராத" என்றது அது கோபமாக.​


"நான் வருவேன் நீ செய்யுற எல்லாத்தையும் தடுப்பேன். ஆலமரத்தை எடுக்கச் சொல்லி எல்லாரும் சொல்லிட்டு இருக்கும் போது கூட நான் எடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருந்தா உன்னால வெளிய வந்துருக்கவே முடியாது. அதனால நீ இனிமேல் இங்க வரவே கூடாது... வந்தா என்ன நடக்கும் அப்படின்னு நான் சொல்ல வேற செய்யணுமா" என்றார் அவர் கோபமாக.​


"இப்போ போறேன். ஆனா எல்லா நேரத்துலயும் இதுவே நடக்கும் அப்படின்னு நீ நினைச்சு பாக்காத" என்று சொன்ன மறுநொடி அகல்யா பட்டென்று அங்கயே வீழ்ந்து விட்டாள்.​


"சக்தி எதிரி நம்மளை விட வேகமாக இருக்காங்க. அவங்க திட்டத்தை நாம முறியடிக்கணும்.." என்றார் கந்தையா அகல்யாவின் நெற்றியில் விபூதி பூசிவிட்டபடி.​


"அதுக்கு என்ன பண்ணனும் தாத்தா"​


"நேத்து சொன்ன மாதிரி தான் பண்ணனும்" என்றார் கந்தையா.​


"பண்ணலாம் அவளுக்காக நான் இதைப் பண்ணுறேன்" என்றான் சக்தி.​


"சரி நான் இப்போ கிளம்புறேன். நீங்க ராத்திரி அங்க வந்துடுங்க" என்று அவர் கிளம்பி சென்றதும் சக்தி போகும் அவரையே துளைப்பது போல் பார்க்கத் தொடங்கினான்.​


"ஏய் மச்சி என்னாச்சு. எதுக்கு அவரை இப்படி எரிக்குற மாதிரி பாக்குற"​


"ஒன்னும் இல்லை அவரைப் பாக்கும் போது சின்னதா ஒரு சந்தேகம்" என்றான் சக்தி.​


"என்ன சந்தேகம்"​


"அவர் எதையோ மறைக்குறாரு டா"​


"மச்சி" என்று ரத்னா குழப்பமாக அவனை ஏறிட​


"ஆமா ரத்னா. அவருக்கு எல்லாமே தெரிஞ்சுருக்கு.. ஆனா நேத்து நம்மகிட்ட வெளிய வந்த பின்னாடி என்ன செஞ்சா அந்த ஆன்மாவை அகல்யா கிட்ட வராம தடுக்கலாம் அப்படின்னு சொன்னாரே தவிர அந்த ஆன்மாவுக்கும் அகல்யாவுக்கும் என்ன சம்பந்தம்னு சொல்ல மாட்டேன்னுட்டார். திருப்பி நாம கேட்ட போதும் அந்த இரண்டு பேர் கிட்டயும் சரியான பதில் இல்லை. ஏதோ சரியில்ல ரத்னா. நாம இந்த நேரத்துல யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப முடியாது. என்னதான் கந்தையா தாத்தா நமக்கு உதவுறேன்னு சொன்னாலும் அதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இல்லாம இருக்காது மாப்ள " என்றான் சக்தி.​


"உண்மைதான் மச்சி ஆனா நானும் இதைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தப்போ நீ இங்க இருந்து போயிடுன்னு யாரோ பக்கத்துல இருந்து சொன்னாங்க... அந்த குரல் இப்பவும் கூட கேக்குற மாதிரியே பிரம்மை மச்சி... கண்டிப்பா இதுல நாம அகல்யாவை காப்பாத்தை ரொம்ப போராட வேண்டியிருக்கும் போல.. "​


"அதெல்லாம் இருக்கட்டும் ரத்னா. மொத நாம இதைப்பத்தி அம்மாகிட்ட பேசலாம். அவங்களுக்குத் தான் என்ன பண்ணனும் அப்படின்னு தெரியும்" என்றான் சக்தி.​



"இந்த மொட்ட வெயில்ல சுடுகாட்டுக்கு போகப் போறோமா"​



"சுடுகாட்டுக்கு இல்ல வா நாம வேறோரு இடத்துக்கு போகலாம்.." என்று சொன்னவன் அகல்யாவின் மேல் போர்வையை போர்த்திவிட்டு அவள் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு ரத்னாவை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.​


சக்தி உன்னால எதையும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. முட்டாள்தனமாக முடிவு எடுத்துட்டு போற நீங்க அழியத்தான் போறீங்க என்று குரல் அகல்யா படுத்திருந்த அந்த இடம் முழுவதும் கேட்க ஆரம்பித்தது...​


"மச்சி இது" என்று கேட்க "பழைய வீடு... நம்மதுதான் வா உள்ள" என்று சொல்லி அந்த வீட்டினுள் அழைத்துச் சென்றான் சக்தி. பூட்டிய இருந்த அறைகளை ஒவ்வொன்றாக திறந்தவன் கடைசியாக ஒரு அறையின் அருகே வந்து நின்றான். அந்த இடத்தின் அருகே வந்ததும் அவன் உடல் அவனையும் அறியாமல் நடுங்க ஆரம்பித்தது.​


"மச்சி எதுக்கு இப்படி நடுங்குற" என்று அவன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டான் ரத்னா.​



அவனை ஏறிட்டு பார்த்தவனின் கண்கள் கலங்கிப் போயிருந்தது.​


"இங்க தான் அம்மா உடம்பு சரியில்லாம படுத்திருந்தாங்க ரத்னா. ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அப்படியே இருந்தவங்க திடீர்னு ஒருநாள் இறந்துட்டாங்க.. அன்னைக்கு இருந்து இங்க வரவே மாட்டேன். வந்தா அம்மா இறந்து போன அந்த கடைசி நிமிடங்கள் மட்டும் தான் ஞாபகத்துக்கு வரும். அதுக்கப்பறம் அப்பாவுக்கும் இங்க இருக்கப் பிடிக்கலை.. வேற வீட்டுக்கு வந்துட்டோம். அன்னைக்கு இருந்து நான் இதுவரை வந்தது இல்லை. இப்போ இங்க வரணும்னு தோணுச்சு அதான் வந்தேன்‌" என்றான்.​


"ஏன் மச்சி"​


"அம்மா இங்க இருப்பாங்கன்னு தோணுது" என்று சொன்னவன் "அம்மா" என்றான்.​


"அம்மா அம்மா" என்று மீண்டும் மீண்டும் கத்த அவன் கதறலுக்கு எந்த வித எதிர்வினையும் அந்த வீட்டில் இருந்து வரவில்லை.​


"அத்தை ஏன் வரலை" என்று சந்தேகமாக கேட்க "தெரியலை" என்றான் சக்தி.​

"ஒருவேளை அந்த ஆன்மா வெளிய வந்ததால அத்தையால நம்மகிட்ட வர முடியலையோ"

"இல்லை ரத்னா அப்படி இருக்காது சரி எதுக்கும் நாம அப்பறமா வரலாம்" என்று சக்தி சொன்னதும் இருவரும் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள்... அவர்கள் சென்ற மறு நிமிடம் அந்த வீட்டில் அந்த அறையில் நின்றார் வேலம்மா...

"சக்தி இப்போதைக்கு இது உனக்குத் தெரிய வேண்டாம். அது உனக்குத் தான் ஆபத்து. அதான் நான் உன் முன்னாடி வரலை. ஆனால் கவலைப்படாத அம்மா எப்பவும் உன்கூடதான் இருப்பேன்" என்றபடி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தே போய்விட்டது வேலம்மாவின் ஆன்மா..

"அம்மா என்னாச்சு" என்று தன் முன் இருந்தவளிடம் கேட்டான் சத்யருத்திரன்.

"அந்த கந்தையா இடையில வந்துட்டான்" என்று சொல்ல "ஆரம்பத்துலிருந்தே அவனும் நம்மளை தொந்தரவு பண்ணிட்டு தான் இருக்கான். அவனை வித்தியாசமா ஏதாவது பண்ணி சாகடிக்கணும். அவன் கோரமான சாவைப் பார்த்து எவனும் நம்மகிட்ட மோதவே கூடாது" என்றான் அவன்.

"இல்ல சத்யா அவனை நாம அவ்வளவு சீக்கிரம் எதுவும் பண்ணிட முடியாது"

"அம்மா நீங்களா இப்படிச் சொல்லுறீங்க"

"ஆமா சத்யா என்னைத் தடுத்து நிறுத்த அவனால முடியுதுன்னா அவனோட பலத்தைப் பத்தி நீ யோசிச்சு பாத்துக்கோ.."


"அப்போ அவனுக்குப் பயந்துட்டு இங்கயே இருக்கப் போறீங்களா. இதுக்கு எதுக்கு நீங்க உள்ள இருந்து வெளிய வரணும்" என்றான் அவன் கோபமாக.

"சத்யா சட்டுன்னு எல்லாத்தையும் பண்ணிட முடியாது. காலம் நேரம் மாறும் போதுதான் நமக்கானதை நாம கைப்பற்றிக் கொள்ள முடியும். அதுவரைக்கும் அவன் என்ன செய்யுறான்னு கவனிச்சுட்டு இருக்கணும் சத்யா" என்று சொல்ல அதைக் கேட்டுக் கொண்டிருந்த சத்ய ருத்திரனுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று அவனைப் பார்க்கும் போதே புரிந்து போனது அவனின் அம்மாவிற்கு. ஆனாலும் இப்போது அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்து அவள் பேசாது இருந்தாள்.
​



மாரியம்மன் கோவில் வேலையை பார்த்துக் கொண்டே இருந்த சக்தியின் மனதுக்குள் தங்களை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் மட்டுமே ஓடிக் கொண்டே இருந்தது...​



கோவில் சுவரை எழுப்பிக் கொண்டே இருந்த அவனின் கண்கள் அடிக்கடி ஆலமரம் இருந்த இடத்தையே உற்று நோக்கியது. அந்த சிவப்பு துணியை பாத்தோம் ஆனா அது திரும்பி பாக்கும் போது அங்க இல்லை. அந்த புதுசா வந்தவனும் இல்ல. ஒன்னு அந்த துணிக்குள்ள என்ன இருக்குதுன்னு கண்டுபிடிக்கணும் இல்லைன்னா அந்த புதியவன் யாருன்னு கண்டிபிடிக்கணும். அதை தெரிஞ்சுகிட்டா நாம என்ன பண்ணலாம்னு ஒரு ஐடியா கிடைச்சுரும் என்றவனுக்குள் அடுக்கடுக்காய் யோசனைகள் வந்தபோதும் அவனது கை செங்கலையும் சிமெண்ட் கலவையும் மாறி மாறி எடுத்துவைப்பதிலே இருந்தது.​



சுள்ளென்றே ஆதவன் சுட்டெரித்தாலும் வேர்வை மழையாய் மாறி பொழிந்தாலும் அவன் வேலையை அவன் செய்து கொண்டு தான் இருந்தான். மாலை மயங்கும் நேரம் வந்தபோது மற்ற சிற்பிகள் சித்தாள்கள் மற்றும் நிமிந்தாள்கள் அனைவரும் வேலையை முடித்துவிட்டு கிளம்பியிருக்க மாரியப்பனும் கை கால்களை கழுவிவிட்டு சக்தியை நோக்கி வந்தார்.​



அவன் அப்போதுதான் தண்ணீர் தொட்டி நோக்கி வந்தான்.​

"சக்தி"

"அப்பா"

"வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு சக்தி நான் முன்னாடி போறேன் நீ வர்றயா. ஆங் அப்பறம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாமி கும்பிட வந்தவங்க தகர செட்டை பூட்டாம போயிட்டாங்க. அதனால அதையும் பூட்டிட்டு சாவி பக்கத்துல இருக்குற துணைத்தலைவர் வீட்டுல குடுத்துடுறயா"

"சரிங்கப்பா" என்று சொன்னவன் முகத்தை கழுவிவிட்டு துண்டை எடுத்து துடைத்தபடி அங்கே சென்றான். சற்று முன்னர் ஏற்றப்பட்ட விளக்கின் ஒளியின் பிரகாசத்தில் அம்மனின் உருவம் நன்றாக தெரிந்தது. கோவிலில் கொலுவீற்ற போகும் அம்மனின் மாதிரி வடிவம் அங்கே இருக்க அதையே பார்த்தவனின் கைகள் அனிச்சையாக தலைக்கு மேல் உயர்ந்தது.



பக்தியுடன் அவன் நா அசைந்து "அம்மா மாரி... சின்னதா ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சாக் கூட போதும். நான் அதை வச்சு கண்டுபிடிச்சுடுவேன். இப்படி திக்குத் தெரியாம நிக்க வைக்குறயே... உன்னை நம்பித்தான் நாங்க எல்லாரும் இருக்கோம்...நீதான் எங்களுக்கு வழிகாட்டியா இருந்து வழியை காமிச்சு தரணும். ப்ளீஸ் ம்மா நான் என்ன பண்ணனும்" என்று கேட்க அந்த கல் தூணில் ஏற்றப்பட்டிருந்த திரியின் சுடர் மேல் நோக்கி எறியாமல் அப்படியே நேராக நின்றது...​

"அம்மா" என்று அதிர்ச்சியுடன் அதையேப் பார்க்க அந்த ஒளி நேராக சென்று கோவிலுக்கு எதிர்திசையில் இருந்த ஒருவீட்டின் முன் சென்று மறைந்து போனது.



உடனே பேச்சிழந்து அங்கே வீழ்ந்தவன் எழுந்து கதவை பூட்டிவிட்டு அந்த வீட்டை நோக்கி நடந்தான்.​

அந்த வீட்டின் கதவை

பட்டென்று திறந்தவனை கண்டு எதிரே இருந்தவன் அதிர்ச்சியடைந்து விட்டான்...​

"இதை நான் எதிர்பார்க்கலை " என்று அவன் சொல்ல

"நானும் தான் நீ இங்க இருப்பன்னு எதிர்பார்க்கலை. என்ன நடக்குது"

"இது உனக்குத் தேவையில்லாத விசயம்"

"கோவிலுக்கு எதிர்ல உள்ள வீட்டுலயே உன் வேலையை ஆரம்பிச்சுருக்கன்னா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். நீ என்ன நினைச்ச... நீ பண்ணுறது யாருக்கும் தெரியாதுன்னா... இப்போ எனக்கு தெரிஞ்சுடுச்சே என்ன பண்ணப் போற" என்று அவன் கேட்க

"என்னப் பண்ணப் போறேன்னா கேக்குற... வேற என்ன... சரண்டர் ஆகுறது தான்" என்றவன் "மச்சி சாரி" என்றான் பட்டென்று...



மீண்டது அமிழ்ந்துவிடுமா...​
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom