Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாயாஜாலக்கதை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
BK32 மாயாஜாலக்கதை

அதிகாலை கடல்காற்று இவ்வளவு ஆனந்தமாய் இருக்குமென்று இப்போதுதான் தெரிகிறது. இதுவரை இவ்வளவு சீக்கிரமாய் நான் இங்கே வந்ததில்லை. பெரும்பாலும் சாயந்திரவேலைகளில் அப்பாவுக்கு நேரம் இருந்தால் கூட்டி வருவார். தனியாக அனுப்பியதில்லை. நான் எட்டாவது படிக்கும் பெரியவானாகிவிட்டேனென்று அவருக்கு தோணுவதேயில்லை. இன்னமும் நான் குழந்தைதான் அவருக்கு.

இன்று எழுந்ததே அம்மாவுக்கு ஆச்சரியம்தான்.

“என்ன ரகு… ஆறுமணிக்கெல்லாம் படுக்கை விட்ருச்சா….” என்று ஆச்சரியப்பட்டார்.

எட்டு மணிக்கு முன் எழாதவன் நான். ஆனால் இன்று அதிகாலை நான்கு மணியில் இருந்து நான் விழித்துக்கொண்டிருப்பது அவருக்கு தெரியாது.

“ ஷகீல் போய் பாக்கணும்மா… நேத்து டியூசன் போகல ல்ல… அவங்கிட்ட போய் என்ன நடத்திருக்காங்க.. ஹோம்வொர்க் என்னன்னு கேட்டுட்டு, கொஞ்சம் விளையாடிட்டு வரேன்.”

“சரிதான் .. இரு மழை வருதா எட்டிபாக்கறேன்…” என்று கிண்டல் செய்தார். நான் கண்டுகொள்ளவில்லை. சில விஷயங்களை இவர்களிடம் பேசமுடியாது. இன்று பல் விளக்கிவிட்டு பாலும் பிஸ்கட்டும் சாப்பிட, அதையும் ஆச்சரியமாக பார்த்தார் அம்மா. நல்ல விஷயங்கள் நம்பமுடியாதுதான். ஆனால் அழகாகவும் இருக்கிறது. அவசர அவசரமாக கிளம்பினேன்.

“இந்த செவப்பு டிஷர்ட் உனக்கு பிடிக்காதேடா…?” என்று அம்மா கேட்டபோதுதான் கவனித்தேன். அதே இரண்டு பாக்கட் வைத்த டிஷர்ட்… ஜீன்ஸ் துணியிலான டிராயர். இது எப்படி அதிசயமாக அமைந்தது என்பதும் ஆச்சரியமாயிருந்தது.

ஷகீல் அகமதுவை பார்க்க நான் போகவில்லை. நிஜத்தில் கடற்கரைக்கு போவதுதான் திட்டம். ஏன், என்ன என்றெல்லாம் சரியாக தெரியவில்லை. அங்கே போகவேண்டும் என்று காலைமுதல் மனம் முழுக்க தூண்டுதல்.

கடற்கரை என்றவுடன் நீங்கள் சென்னை மெரீனா போல் நினைத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் ஊர், சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான ஒரு கிராமம். பெயரளவில்தான் கிராமம். உண்மையில் சென்னையில் கிடைக்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும். கொஞ்சம் அதிக காசு கொடுக்கவேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சைக்கிளை அழுத்தினேன். ஒரு நான்கு கிலோமீட்டர் தூரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு வந்துவிடும். அதனுள் நுழைந்து இடப்பக்க தெருவில் சென்றால் ஷகீலின் வீடு. வெளியே ரோடு தாண்டி, சற்று உள்ளடங்கிய பள்ளமான இடத்தில் ஜோசப் இருக்கிறான். ஆனால் நான் யாரையும் பார்க்கவில்லை. நேரே குடியிருப்பின் அகன்ற சாலையில் ஆனந்தமாக சைக்கிளை செலுத்தினேன். கொஞ்சம் போனதும் கடலை மறித்து கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் வந்தது. முன்பொருமுறை சுனாமி வந்தபோது கட்டியதாக அப்பா சொல்லியிருக்கிறார். அந்த காம்பவுண்ட் அருகில் சைக்கிளை நிறுத்தினேன். சுவரை ஒட்டி மேலே ஏற படி இருந்தது. ஏறி அந்த பக்கம் இறங்க, ஆளில்லாத முழு சுதந்திரமான கடற்கரை. சுவருக்கு அந்தப்பக்கம் கேட்கும் அவ்வளவு இரைச்சலும் இங்கே சுத்தமாக அடங்கி, கடலின் ஆழமான, ஒருவித கர்ஜனை போன்ற சத்தம் மட்டும் கேட்டது. மற்ற நாளாயிருந்தால் தனியாக இருக்க பயந்திருப்பேன். இன்று ஏதோ மனதில் சுத்தமாக பயம் போய், ஒருவித வீரமான, தைரியமான உணர்வு பரவியிருந்ததை என்னால் உணரமுடிந்தது.

அமைதியாக மணலில் அமர்ந்தேன்.

நீலப்பெருங்கடலின் தூரம் வரை பார்வை சென்றது. வெறும் தண்ணீர். பூமியின் முக்கால் பங்கு தண்ணீராம். உலக உயிரெல்லாம் தண்ணீரில் தோன்றிதான் பின் நிலத்துக்கு வந்ததாம். அப்படியானால் இந்த கடல் எங்கள் அனைவருக்கும் தாய் என்று தோன்றியது. மனிதர்கள்தான் எல்லை போட்டு, ஒரு அடையாளத்துக்கு பெயர் குடுத்திருப்பார்கள் போல. உண்மையில் கடலுக்கு தனிப்பெயர் என்பதே தேவையில்லைதானே.

உலகம் முழுதும் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே கடல்தான். இங்கே இறங்கி உலகின் எந்த மூலைக்கும் நான் போகமுடியும். இந்த கடலில்தான் எவ்வளவு உயிர்கள்?.. கண்ணுக்கு தெரியாத சின்ன பூச்சி முதல், உலகின் மிகப்பெரும் உயிரான நீலத்திமிங்கலம் வரை அனைத்தும் அடங்கி ஒன்றுமே தெரியாத மாதிரி அமைதியாக இருப்பது பெருமையாக இருந்தது. என் மனதிலும் பலசமயம் பல்வேறு ஆசைகள், கோபங்கள், எல்லாம் வந்ததுண்டு. ஆனால் இன்று காலைமுதல் மனம், இந்த கடல்போல மிகப்பெரும் சக்தி பெற்று, இதுபோலவே ஆழ்ந்த அமைதியை பெற்றார்போல் உள்ளது. என் வயதுக்கு மீறி நான் சிந்திப்பதையும் என்னால் உணரமுடிந்தது. இதெல்லாம் அம்மாவிடமோ, அப்பாவிடமோ சொல்ல முடியாது. பையனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்துவிடுவார்கள்.

வந்து அரைமணி நேரம் ஆகியிருக்கும். எதை எதிர்பார்த்து வந்தேன் என்பது ஞாபகம் வரவில்லை. ஷகீலும், ஜோசப்பும், ரம்யாவும் அவர்களுடன் பிரகதியும் கண்ணுக்குள் வந்தார்கள். அவர்களும் இதே மனநிலையில் இருப்பார்கள் என தோன்றியது.

இன்னொரு உருவம் மனதின் ஓரத்தில் வந்துவந்து போனது. அது தோன்றும்தோறும் ஒருமாதிரியான சந்தோஷமான உணர்வு ஏற்பட்டது. மனம்விட்டு சிரிக்கவேண்டும் போல் இருந்தது.

கண்களை மூடி மௌனமாக இருந்தேன். கைகள் மணலை மெதுவாக கோதி, அள்ளிக்கொண்டிருந்தது. அடி மணலின் ஈரம், கைகளை தடவி கொடுப்பதாய் உணர்ந்தேன்.

காற்றில் அழகான சுகந்த வாசம் கலந்திருந்தது. சிறுபறவைகளின் கீச்சுக்குரல்கள் காதுகளில் வருடியது. இதெல்லாம் மீறி கடலின் மௌனத்தின் சத்தம் என் உள்மனம் வரை ஊடுருவியது. எவ்வளவு நேரமோ தெரியவில்லை.

ஒரு சிறு அதிர்வு ஏற்பட்டதாய் தோன்றியது. கண்களை விழிக்கவா, வேண்டாமா என மனம் தத்தளிக்க, மெதுவாக கண்ணை திறக்க, அந்த ஒளியைக்கண்டேன். கடலின் நடுவே ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டதாய் தோன்றியது. அது வண்ணகலவையாக இருந்தது. உலகின் அத்தனை வண்ணங்களையும் அள்ளிகொட்டி, கலக்கியதாய், ஒரு வெள்ளை சார்ட்டில் இருக்கும் வண்ணமனைத்தும்… ஒரு குழந்தை கொட்டி கைகளால் தேய்த்துவிட்டார்போல். அதன் மையத்தில் அந்த பிரகாசமான ஒளி தோன்றியது. அது கண்ணை கூசச்செய்தது. இரு கைகளாலும் கண்ணை மறைத்து… விரலினிடையே சிறு திறப்பு கொடுத்து பார்த்தேன். அந்த ஒளி மென்மையாக பரவி, அந்த வண்ணங்களை தன்னுள் இழுத்துக்கொண்டது.

உண்மையில் அந்த பிரகாசம் வளர்ந்து பெரிதாக ஆகிவருவது தெரிந்தது. சற்றும் பயம் வரவில்லை. துணிந்து கைகளை எடுத்துவிட்டு அதை உற்று கவனித்தேன். ஆனாலும் விழியை மறைத்த ஒளியின் வெண்மையில் ஏதும் தெரியவில்லை. திடீரென்று ஒரு வினாடி அந்த இருள் தோன்றி மறைந்தது.



அத்தியாயம் ஒன்று...
தொடரும்
தங்கள் கருத்துகளை பதியவும் நண்பர்களே


​
 
Last edited:
BK32 மாயாஜாலக்கதை
அத்தியாயம் 2

“என்னடா இது அதிசயம்…?” என்றான் ஜோசப்.

“டேய் நீ எப்ப வந்த….?” என்றேன்.

“லூசா நீ…. நாம எல்லாம் ஒண்ணாதானே வந்தோம். புதுசா கேக்கற…”

என்று அவன் சொன்னபோதுதான் கவனித்தேன். ஆமாம். என்னைச்சுற்றி அவர்கள் நான்கு பேரும் இருந்தார்கள். அனைவர் கண்ணிலும் தெரிந்த ஆச்சரிய கேள்விகள் என் கண்ணிலும் எதிரொலித்திருக்கும். அந்த இருள் ஒரு வினாடிதான் இருந்தது. சட்டென்று சூழல் முன்போலவே மாறிப்போனது. ஆள் அரவமில்லா கடற்கரையில் நாங்கள் மட்டும். ஏதும் பேசாமல் ஒருமாதிரியான பிரமையில் இருக்க, அந்த சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் சத்தம். சுற்றி பார்க்க யாருமே இல்லை. ஆனால், மணலில் கால் அழுந்த நடந்து வரும் சத்தம் தெளிவாக கேட்க, பிரகதி அழ ஆரம்பித்தாள். அவளை வெறிக்க பார்த்த முகமது ஷகீல் திடீரென்று கத்தினான்.

“ டேய்… அங்க பாருடா….”

அவன் கைநீட்டிய இடத்தில் அந்த காலடிகள் தெரிந்தது. எங்கள் கண்முன்னால் பதிந்து நடந்து வந்து கொண்டிருந்த காலடிகள். அது கடலில் இருந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பயம் தொண்டையை அடைக்க பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தோம். நாங்கள் அழ, அந்த அடிச்சுவடு தயங்கி நின்றது போல் இருந்தது. கொஞ்ச நேரம்தான்.. அந்த குரல் கேட்டது. அடித்தொண்டையில் இருந்து மனதுக்குள் ஊடுருவும் குரல்.

“பயப்படாதே….”

“வந்து… பயமில்லை… ஆத்தா துணையிருக்கா….” என்று அரற்ற ஆரம்பித்தாள் ரம்யா.

அந்த குரல் சிரித்தது போல் இருந்தது. ஜோசப் மயங்கி படுத்தேவிட்டான். ஷகீல் ரம்யாவின் கைகளை பிடித்துக்கொண்டான்.

“நான் உங்களைப்போலதான் பிள்ளைகளா, பயப்படாதீங்க…..”
கொஞ்சம் தைரியம் வர,

” நீ என்ன இரும்புக்கை மாயாவியா…. கரண்ட் தொட்டா மாயமா மறைஞ்சு வருவியா…?” என்றேன்.

“ அதெல்லாமில்லை. உங்களுக்கு என்னை பாக்கணுமா….”

“ ஆமா…”

“ சரி கொஞ்சம் கண்ணை மூடி திறங்க….”
நாங்கள் கண்களை மூடினோம். சில நொடிகள்தான், பக்கத்தில் யாரோ அமரும் உணர்வு ஏற்பட்டது. லேசான பயத்துடன் கண்களை திறந்தேன். அவர் இருந்தார். உண்மையில் அவன் என்றும் சொல்லலாம். என் சித்தப்பாவின் மகனான மோகனை ஒத்திருந்தது அவர் உருவம். மோகன் போலவே கட்டம் போட்ட சட்டையும், ஜீன்சும். நான் தயக்கமாய் அவரை தொட முயல, அவர் வலுக்கட்டாயமாக என் கரங்களை பற்றி குலுக்கினார். கைகளின் குளிர்ச்சி என்னை மயங்க வைத்தது.

“நீங்க யாரு….? சாமியா… இல்ல…?”

“ தோ… அவனையும் எழுப்புங்க…. அவனுக்கு அப்புறம் தனியா சொல்லணும்….” என்று ஜோசப்பை கைகாட்ட, நான் ஜோசப்பை எழுப்பினேன். பரபரத்து எழுந்தவன்,

“பரமபிதாவே… எங்களை காப்பாற்றும்….” என்று கத்தியபடியே என்னை கட்டிக்கொண்டான். பின்னர் அவரை கவனித்தவன், யாரென்பது போல் என்னை பார்த்தான்.

“தெரிஞ்சவர்தான்….”

“ஓ… அங்கிள்…. இங்க இப்ப ஒரு பேய் மாதிரி ஒண்ணு வந்து……”

நான் அவனை பேசாதே என்று அடக்கினேன். ஷகீல் வைத்தகண் வாங்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். பிரகதியும், ரம்யாவும் நெருக்கி உட்கார்ந்து மனதில் ஏதோ மந்திரங்களை உச்சரிப்பது தெரிந்தது.

“உன் பேரென்ன… நீங்க வரிசையா சொல்லுங்க….” என்றார் அவர்.

“நான் ரகுராமன். எட்டாவது படிக்கறேன். இது என்ஃப்ரெண்ட்ஸ்… இவன் பேரு….” கையமர்த்தி நிறுத்தியவர் ஷகீல் பக்கம் கை காட்டினார்.

ஷகீல் தயங்கி தயங்கி பேசினான். அவன் கைகளில் லேசான நடுக்கம் தெரிந்தது.

“என் பேர் ஷகீல் அகமது… நானும் எட்டாவதுதான்”

“நான் ரம்யா , இவ பிரகதீஸ்வரி எல்லாரும் ஒரே கிளாஸ்தான்… இங்க விளையாட வந்தோம்.”

“ ஏன் அந்த பாப்பா பேசாதா….” என்றார் மோகன். அவரை மோகன் என்றே நினைக்க ஆரம்பித்து விட்டேன்.

“வந்து நான் ….. பிரகதி…. நாங்க நேத்துகூட சாமி கும்பிட்டோம். அம்மா செஞ்சுவச்ச இனிப்பு போண்டாவை சாமி கும்பிடறதுக்கு முன்ன சாப்பிட்டது தப்புதான்… எங்களை மன்னிச்சுடுங்க….” என்று அழ ஆரம்பித்தாள்.

அவளை பார்த்து சிரித்த அவர், “நீங்கதான் சாமி… நீங்க சாப்பிட்டா சாமியும் சாப்பிடும் “என்று சொல்ல அவளின் அழுகை அடங்கி முகம் பிரகாசமானது. எல்லாவற்றையும் கேள்வியாய் பார்த்துக்கொண்டிருந்த ஜோசப் அடுத்து பேசினான்.

“ தாத்தா, நான் வந்து ஜோசப் பெர்னாண்டஸ்… நான் கொஞ்சம் தூங்கிட்டேன் போல… நீங்க யாரு….?” என்றான்.

எங்களை பார்த்து அவர் சிரித்த சிரிப்பில் அவ்வளவு அழகு.
“குழந்தைகளா… நானும் உங்களைப்போலதான். கொஞ்சம் விளையாட வந்தேன். உங்களை பார்த்து ஆசையா வந்து உட்கார்ந்துட்டேன். என்ன விளையாடலாம்?”

நாங்கள் திருதிருவென்று விழிக்க, அவர் தொடர்ந்தார்.

“சரி இன்னிக்கு போய் ரெஸ்ட் எடுங்க, இந்த வாரம் முழுக்க உங்ககூடதான் இருப்பேன். ஜாலியா விளையாடலாம். என்ன சரியா….” என்று கேட்க சரியென்று தலையாட்டிவிட்டு விட்டால் போதுமென்று ஓடினோம். ஜோசப் மட்டும் என்கூடவே கைகோர்த்து வந்தான். அந்த கடற்கரையை தாண்டி, மெயின் ரோடு அருகில் இருந்த பார்க்கில் வந்து அப்பாடாவென்று உட்கார்ந்து மூச்சு வாங்கினோம். ஜோசப் என்னை பார்த்து,

“ ஏண்டா, அந்த தாத்தாகூட கொஞ்சம் விளையாடிட்டு வந்திருக்கலாமில்ல…” என்றான்.

“டேய் …என்னடா, அவரை பார்த்து தாத்தான்ற… எங்க மோகன் அண்ணன் வயசுதான் இருக்கும் போல…”

“லூஸா நீ… அவர் முடியெல்லாம் நரைச்சு, காதெல்லம் தொங்குது. அவர் போட்ருக்க ட்ரெஸ்கூட எங்க சின்ன தாத்தா போட்ட வெள்ளை ஜிப்பா… எப்படியும் ஒரு எண்பது வயசிருக்கும்” என்று அவன் சொல்ல எனக்கு திகீரென்றது.

பிரகதியும், மற்றவர்களும் எங்கெங்கோ சுற்றி எங்களை வந்தடைந்தார்கள்.

“யேய் பிரகதி… அவர் பார்க்க எப்படி இருந்தார்….”

“அவர் நம்ம மேத்ஸ் சார் போல் அழகா இருந்தார். அவர் போலவே குழந்தைங்ககிட்ட அழகா பேசினார்”

“ உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு.. அது எங்க தயிர்கார பாட்டிதான். அதை போய் ஆளுன்றீங்க. அங்கேயே எனக்கு ஒரு குழப்பம்தான். ஆனா என்னால சரியா பேச முடியலை…” என்றான் ஷகீல்.

எங்கள் அனைவரையும் கைகாட்டி அடக்கினாள் ரம்யா, அவள் எப்போது அப்படிதான். ஏதாவது ஒரு பிரச்சினை என்றாள் அவள்தான் இறுதி முடிவெடுப்பாள். பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.

“ ஒரு முக்கியமான விஷயம். வந்தது ஒரு ஒளி மாதிரி இருந்து பேசிச்சு. உருவம் தெரியலை. கண்மூடி திறக்க ஒரு உருவமா வந்தது. அது நமக்கு ரொம்ப பிடிச்சவங்க உருவம். அப்ப நாம நினைக்கிறாபோல அது வருது.. அதனால தான் இந்த குழப்பம்..”

“ அப்படியா… உனக்கு என்ன மாதிரி தெரிஞ்சது…? என்றாள் பிரகதி.

“சிரிக்ககூடாது…”

“சொல்லு…”

“அது டிவில வர டோரா….”

டபக்கென்று சிரித்துவிட்டோம். ஜோசப் மட்டும் திகிலாய் பார்த்தான்.

“நாளை வரச்சொல்லிருக்கு. போலாமா… வேணாமா… “ என்றேன் நான்.

“கண்டிப்பா போறோம்… ஆனா நமக்கு பொதுவா பிடிச்ச உருவம் நினைக்கணும். அப்பதான் ஒரேபோல பேச முடியும்..”

“ சரி…இப்ப எல்லாரும் போலாம்… வீட்ல, ஸ்கூல்ல எதுவும் சொல்லக்கூடாது… சரியா…”

“ ஓகே….” என்றார்கள் அனைவரும். ஜோசப் என் காதில் மெதுவாக, “ நிஜமாவே பேயாடா? “ என்றான்.

தொடரும்...
 

3....


நேற்று நடந்தது குழப்பமாகவே இருந்தது. நேற்று அதிகாலை பீச்சுக்கு போனேன். ஆனால் வீடு திரும்ப இரவாகியிருந்தது. போய் சாப்பிட்டு நன்றாக போர்த்து படுத்துக்கொண்டேன். ஒரு முழு நாளா அங்கே இருந்தோம் என்று தடுமாற்றம் ஏற்பட்டது. நான் தனியாக இருந்த போது பயம் இருந்தாலும், ஐந்து பேர் சேர, கொஞ்சம் தைரியம் வந்தது.

வகுப்பறையில் தனித்தனியாக இருந்தாலும் எங்கள் மனம் ஒரேபோல் சிந்தித்தது. திரும்பிதிரும்பி பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தோம். பள்ளி எப்போது முடியும் என்று காத்திருந்து , அவசர அவசரமாக கிளம்பினோம்.


சாயந்திரம் அதே இடத்தில் நாங்கள் குழுமினோம். பிரகதி எங்கள் கைகளில் ஒரு கறுப்பு நிற கயிறை கட்டினாள். சாமி படத்துக்கு முன் வைத்து எடுத்ததாம். ஷகீல் மட்டும் அதை வாங்கி பாக்கட்டில் வைத்துக்கொண்டான். அவர்கள் வீட்டில் பார்த்தால் திட்டுவார்கள். அனைவரும் கடலை பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம். ஏதும் வெளிச்சம் வரும் அறிகுறிகூட இல்லை.

“என்ன உருவம் நினைச்சீங்க…?” என்றான் ஷகீல்.

“வந்து…. நான் நம்ம கிளாஸ்ல இருந்து போனவருஷம் உடம்பு சரியில்லாம இறந்துட்டானே.. ஜீவா, அவனை நினைச்சேன்” என்றாள் பிரகதி.

“நானும்தான் “ என்றான் ஜோசப்.

உண்மையில் என் மனதிலும் அவன் உருவம்தான் தோன்றியது. அவன் ரொம்ப நல்ல பையன். சாது. அதிகம் பேசமாட்டான். ஆனால் படிப்பில் வெகு சுட்டி. ஏதோ இதயத்தில் பிரச்சினை என்றும் மிக செலவாகும் என்றும் பேச்சு இருந்தது. கடைசிநாள் வரை வகுப்புக்கு வந்துகொண்டிருந்தான். படித்து டாக்டர் ஆகி இதுபோல இருப்பவர்களுக்கு இலவச ஆஸ்பிடல் கட்டுவேனென்று அடிக்கடி சொல்லுவான். ஆஸ்பிடலில் மிகவும் செலவாகியிருக்கும் போல. அவர்கள் கொஞ்சம் கஷ்டப்படும் குடும்பம்தான். முடிந்தவரை அவன் அப்பா முயற்சித்தார். மயக்கம் தெளியாமலேயே இறந்துவிட்டான். இன்று சொல்லிவைத்தார்போல் அவன் ஞாபகம் எங்கள் எல்லோருக்குமே வந்தது அதிசயமாக இருந்தது.

“சரி… எல்லாரும் அவனையே நினைச்சாச்சு.. வருமா பாக்கலாம்..” என்றான் ஷகீல்.

“எனக்கு இது எல்லாமே நம்ம கற்பனையோன்னு தோணுது. ஏதாவது படம் பாத்தோமா நேத்து. அது பாத்து கற்பனை பன்ணிட்டோமான்னு நினைக்கிறேன்..” என்றேன் நான்.

“நானும் அப்படிதான் நினைக்கிறேன் “ என்று எங்கள் பின்புறம் இருந்து குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பினோம். அதிர்ந்து போனோம்.

அங்கே ஜீவா இருந்தான். போனவருஷம் பார்த்த அதே ஜீவா. அதிர்ச்சியில் பிரமித்து இருக்க, பிரகதி ஜீவாவின் கால்களில் விழுந்து வணங்கினாள்.

“ சாமி… உங்களை தப்பா நினைச்சிட்டோம்… மன்னிச்சு எங்களுக்கு நல்ல படிப்பு குடுங்க….” என்றாள் அவள். ஜீவா வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

“உங்களுக்கு எல்லாம் ஏதாவது கம்பேர் பண்ணியே பழக்கமாச்சு… இல்லியா…” என்றான் ஜீவா.

நாங்கள் திருதிருவென்று முழிக்க,

“ஒரு விஷயம் பார்த்தா அதை ஏற்கனவே நம்ம மனதில் பதிச்சு வச்சிருக்கிற ஏதாவது ஒரு சம்பவமோ இல்லைனா, கற்பனையோ அதுகூட சம்மந்தபடுத்தி பாக்கறது. நேத்து உங்களை சந்திக்க கொஞ்சம் ஆர்ப்பாட்டமா வந்திட்டேன். உடனே இது உங்க கற்பனையில் இப்படிதான் இருக்கும்னு முடிவு பண்ணிடறீங்க…” என்று சிரித்தபடியே ஜீவா சொல்ல,

“அப்ப நீ…. வந்து… நீங்க யாரு….” என்று மெதுவாக கேட்டான் ஜோசப்.

“அது ரகசியம்… ரகசியம்கூட சரியான வார்த்தை இல்லை. குழம்பிடுவீங்க. நான் உங்களைபோல் ஒரு ஜீவன்தான்… அதான் ஜீவா வா வந்திட்டேன்…” என்று ஏதோ பெரிய நகைச்சுவை சொன்னது போல சிரித்தான் ஜீவா. நாங்கள் சிரிக்காமல் இருக்க, கொஞ்சம் ஓவராக போனதாய் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

“எங்களை ஏன் சந்திக்கணும்.. ஏதாவது எங்களுக்கு முக்கியத்துவம் இருக்கா….?”என்றேன் நான். எனக்கு அவன் ஜீவாவாக இருக்க கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.


“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் உங்களுக்கு கொஞ்சம் தைரியம், நம்பிக்கை வரணும். என்னோட பழக உங்களுக்கு மனசில இருக்கிற பயம் போகணும். அதுதான் என் முதல் வேலை . உங்க ஆசை ஏதாவது இருந்தா சொல்லுங்க” என்றான் ஜீவா. அவன் முகத்தில் அந்த மர்மபுன்னகை அப்படியே பதிந்து இருக்கும் போல. அது எங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது.

“நாங்க ஒண்ணும் பயப்படலை. திடீர்னு ஒரு … பே…..ய்… மாதிரி வந்தா நீயும்தான் பயப்படுவ….” என்றான் ஷகீல். அவன் கைகளில் நேற்றைய தினம் இருந்த பயத்தின் மெல்லிய நடுக்கம் இன்னும் குறையாமல் இருப்பதை ஓரக்கண்ணால் பார்த்து ஜீவா மெல்லிய சிரிப்புடன் தொடர்ந்தான்.

“ ஹாஹா….. தெரியுது ஷகீல் பையா… நீ ரொம்ப தைரியசாலிதான். நேத்துபிரகதி கையை எவ்வளவு பயமா பிடிச்சிருந்தன்னு பாத்தேனே… இப்பயும் உன் பாக்கட்டில் அவ கொடுத்த கறுப்பு கயிறை யாருக்கும் தெரியாம தொட்டு தொட்டு பாத்துக்கறியே… ஹாஹா…..” என்று சிரித்தான். கறுப்பு கயிறு கொடுத்தது இவனுக்கு எப்படி தெரியும் என்று வியப்பு ஏற்பட்டாலும், இவனின் சக்தி எங்களை மீறியது என்பது எனக்கு புரிந்தது. அவன் மேலும் தொடர்ந்தான்.

“ நான் ஏற்கனவே சொன்னதுதான். ஒரு குழந்தை என்னை பார்த்தால், அது நான் வந்த விதத்தை ரசிக்கும், என்னோட விளையாடும். சிரிக்கும். அதுக்கு பயம் கிடையாது. புதிய விஷயங்களை ஆர்வமாக பார்க்கும். ஆனா நீங்க கொஞ்சம் வளர்ந்துட்டீங்க. உங்க மனசில் சில விஷயங்கள் பதிச்சிட்டீங்க. அதை ஒப்பிட்டு என்னை அளக்க நினைக்கறீங்க. அது இல்லாமல் புதுசா உங்களால யோசிக்க முடியல. அதில்லாம இன்னும் பெரிய ஆளா ஆகிட்டா, இன்னும் பல விஷயங்கள் உங்களுக்கு பதியும். இன்னும் வேலை, குடும்பம்னு மாற உங்களுக்கு புதிதாக எதையும் கற்றுக்கொள்ள, யோசிக்கவே முடியாது. உங்க மனசு அது தாண்டி போக முடியாது. இப்ப கொஞ்சம் குழந்தைத்தனம் மீதி இருப்பதால்தான் என்னை மறுபடி சந்திக்கணும்னு வந்திருக்கீங்க. இதுவே உங்க அப்பாக்கள் முன்னால் வந்திருந்தா இன்னேரம், கோயில் மசூதி, சர்ச்னு போய் நடுக்கமா வேண்டிட்டிருப்பாங்க….”

“அது தப்பா….” என்றான் ஜோசப்.

“தப்பில்ல… மனிதருக்கு ஏதாவது ஒரு நம்பிக்கை தேவைப்படுது. சில பயங்களை, எதிர்பார்ப்பை கொண்டுபோய் கொட்டிட்டு, நிம்மதியா இருக்க அது உதவியா இருக்கு. அதுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழி வச்சிக்கறாங்க..... ம்..ம்… நீங்களே பாருங்க… பிரகதி கொடுத்த ஒரு கறுப்பு கயிறு இல்லன்னா இன்னும் உங்களுக்கு பயம் வந்திருக்கும்.”

“நான் காலைல ஏசுவை நினைச்சுட்டுதான் வந்தேன். எனக்கு கயிறு தேவையில்லை…இதோ ஷகீலும் அவங்க சாமிட்ட ப்ரே பன்ணிட்டுதான் வந்திருக்கான்…” என்றான் ஜோசப்.

“ஆமா… நானும்தான் “ என்றேன் நான்.

“எல்லாம் சரி…. இதுல யாருக்கு பவர் அதிகம்? “ என்றான் ஜீவா.

“ வந்து… எல்லாருமே பவர்தான்… சிலதுக்கு ஜீசஸ் சக்தி தருவார். சில நேரம், எங்க அம்மன் பாதுகாக்கும். அவங்கவங்க எப்பப்ப வரணுமோ அப்ப வருவாங்க.” என்றாள் ரம்யா.

“ ஆனா, அவங்க உங்க கூடயேதான் இருக்காங்கன்னு உங்களுக்கு தோணலையா… அப்பப்ப வர அவங்க என்ன ஜாப்லயா இருக்காங்க?” என்று ஜீவா கேட்க, அவன் கேட்ட தொனியை கண்டு நாங்கள் சிரித்துவிட்டோம்.

“ இதான்… இந்த சிரிப்பின் காலம்தான் உங்களை பார்க்க சரியான நேரம். அதான் வந்தேன். பெரியவங்களாயிட்டா, இந்த சிரிப்பும் போயிடும். இன்னேரம், எங்க சாமிதான் பெரிசுன்னு ஆரம்பிச்சிருப்பீங்க. உண்மையில் அந்த சக்தி என்பது எங்கயும் இல்லை. உங்க மனசுதான். உலகையே படைத்த சாமின்னு சொல்வீங்க. சில சாமிகள் சில எல்லைகளையே தாண்டறது இல்லை. பிரபஞ்சம் வரை ஒரே நாள்ல படைச்சார்னு பேசுவீங்க. ஆனா பக்கத்து நாட்ல இருக்கற மனிதனை சாமி எதிரியா பாக்க சொல்லுதுனு பேசுவாங்க. வேடிக்கையா இல்ல?”

“எங்களுக்கு புரியலை…. “ என்றேன் நான்.

“ சொன்னதை மனசில் வச்சிக்கோ. கொஞ்ச நாள் ஆனா புரியும். எது உண்மைன்னு. எல்லா சக்தியும் உங்க மனசுதான். அது உருவாக்கறதுதான் அத்தனை சாமியும், பூதங்களும். ஒரு குழந்தைக்கு, மிருகங்களுக்கு, பறவைகளுக்கு மீனுக்கு, உன் கையில் இருக்கற பேனாவுக்கு இந்த பயமோ, நம்பிக்கையோ தேவைப்படறதில்ல. அது வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு அனுபவிக்கிறாங்க. இது புரிய கொஞ்சம் நாளாகணும்."

“ குழப்பமாதான் இருக்கு. இப்ப நாங்க என்ன செய்யறது…” என்றாள் ரம்யா.

“குழப்பத்தை தூக்கி சின்னதா ஒரு குழிதோண்டி இப்போதைக்கு புதைச்சு வைங்க. அது ஒரு பக்கம் கிடக்கட்டும். இந்த நிமிடம், என்ன ஆசைன்னு சொல்லுங்க. அவ்ளோதான்.” என்றான் ஜீவா.

“எனக்கு பசிக்குது… ஏதாவது சாப்பிட்டே பேசலாமே….” என்றான் ஜோசப். அவன் பசி தாங்கமாட்டான். எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பான்.

“ ஆமா, நம்ம ஐயங்கார் பேக்கரில கேக் சாப்பிடலாமா… “ என்றாள் ரம்யா.

“எனக்கு சூடா ஸமோசா…” என்றான் ஷகீல்.

“ ஆனா நான் காசு எடுத்து வரலையே “ என்றாள் பிரகதி. பெரும்பாலும் அவள்தான் அதிகமாக வங்கிதருவாள். அவளின் பாக்கட் மணி தினமும் இருபது ரூபாயாவது இருக்கும். இன்று ஜீவா வேறு இருக்க, அவன் எவ்வளவு சாப்பிடுவானோ என்ற பயமும் அவளுக்கு வந்துவிட்டது.

“சரி… முதலில் சாப்பிட போலாம்… எழுந்திருங்க…. “ என்று ஜீவா எழுந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் மணலில் தடமே இல்லை என்பதை நான் கவனித்தேன். மனதில் அடங்கி இருந்த பயத்தை, இப்போது தோன்றிய ஆர்வம் அடக்கிவிட்டதையும் கவனித்தேன். ஜீவா சொன்னதுபோல், புதியதை கவனித்து ரசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று தோன்றியது. நாங்கள் அனைவரும் எழ, எங்களை கைகளை கோர்த்துக்கொள்ளச்சொன்னான். கண்களை மூடச்சொன்னான். அடுத்த நொடி என்ன நிகழ்ந்தது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை. அது ஒரு பரவச நிலை போல் இருந்தது. கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ பறப்பதுபோல் இருந்தது. ஒரு சில விநாடிகள்தான். மெதுவாக கண்களை திறக்க, நாங்கள் ஐயங்கார் பேக்கரியின் உள்ளே இருந்தோம்.

***********

ஐயங்கார் பேக்கரி என்பது எங்களுக்கு கனவுப்பிரதேசம். என் அப்பா ஒரு நகராட்சி ஊழியர். ஜோசப்பின் அப்பா ஒரு ஏஜென்சியில் கணக்கு எழுதுவார். ரம்யாவின் அம்மாவும், அப்பாவும் கிழங்குமில்லில் வேலைக்கு போகிறார்கள். அடிக்கடி, சீவிய வரவள்ளிக்கிழங்கோ, அல்லது வேகவைத்தோ, அவள் கொண்டுவருவாள். நசூரின் தந்தைக்கு சின்ன மளிகை கடை உள்ளது. சிலநேரம் அவன் கடையில் இருந்து பிஸ்கட்டுகள் அல்லது சின்ன சின்ன மிட்டாய்களை அப்பாவிடம் கேட்டு எடுத்து வருவான். பிரகதிதான் கொஞ்சம் வசதி. அவளின் அப்பா மின்சாரத்துறையில் லைன்மேனாக இருப்பவர், ஆனாலும் அவர்களின் பூர்வீக வீடுகளின் வாடகை மூலம் நல்ல வருமானம் உண்டு. எங்களின் பெரும்பாலான தீனி செலவுகளைஅவள்தான் பார்த்துக்கொள்வாள். அவரவர் வீட்டில் இருந்துதான் ஸ்னாக்ஸ் எடுத்து வருவோம். தினப்படி கிடைக்கும் பாக்கட் மணியை செலவு செய்யாமல் எடுத்து வைத்து, வார இறுதி நாளிலோ அல்லது லீவிலோ இந்த பேக்கரிக்கு வருவோம். ஏதாவது குறிப்பிட்ட இனிப்பு கார வகை, ஒரு ஜூஸ், அல்லது ஐஸ்க்ரீம் உடன் அன்றைய பொழுது கழியும். அடுத்த வாரம் என்ன வாங்கலாம் என்று திட்டமிடுவோம். கண்கள் அங்கு அழகாக அடுக்கியிருக்கும் இனிப்புகளை அளந்து வைக்கும். சிலவற்றை விலை கேட்க, மயக்கம் வரும். முந்திரி கேக் வாங்கித்தின்ன வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு தடவை ஊரில் இருந்து வந்திருந்த ஒரு அண்ணா வாங்கிவந்திருந்தார். என் பங்காக கொஞ்சமாக தான் கிடைத்தது. ஆனால் அது நூறுகிராமே ஐம்பது ரூபாயோ என்னவோ. அது போல அவரவர்க்கும் சின்னசின்ன ஆசைகள். பெரியனாகி இதுபோல் ஒரு பேக்கரி திறந்து முழுதும் நாம் சாப்பிடவே வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஜோசப் சொல்லுவான்.

“ஜீவா… இது என்ன மாயம்… எப்படி கண்மூடி கண் திறக்க இங்க வந்தோம்…? “ என்றாள் ரம்யா.

“ எனக்கு கொஞ்சம் மாயாஜாலமும் தெரியுமில்ல…” என்று கண்ணை சிமிட்டினான் ஜீவா. அதை கேட்டதும் ஜோசப் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தான். சரியான டான்ஸ். குதித்து குதித்து ஆடினான். அவனால் அதை நிறுத்தவே முடியவில்லை. எங்களுக்கு வெட்கமாக போய்விட்டது.

“ டேய்… நிறுத்துடா…. எல்லாரும் பாக்க போறங்க….” என்றேன்.

“ ஆடட்டும் விடு… யாரும் பாக்கலை” என்றான் ஜீவா. அப்போதுதான் கவனித்தேன். அங்கே நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், இனிப்புகளை வாங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்துடன் கடைக்கார ஊழியர்கள் என்று யாருமே எங்களை கவனிக்கவில்லை. அவரவர் அவர்களது வேலையில் கவனமாக இருந்தார்கள். நாங்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்து இருப்பது புரிந்தது. நம்பமுடியாமல் ஜீவாவை பார்க்க, அவன் எப்போதும் போல அந்த மர்மபுன்னகையை வீசினான்.

யாரும் கவனிக்கவில்லை என்றவுடன், ஜோசப்புக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. நேராக லட்டு இருக்கும் இடத்துக்கு போனான். ஒரு நான்கைந்து லட்டுகளை எடுத்துக்கொண்டு அருகில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்து அவன் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தான். திடீரென்று என்ன தோன்றியதோ ஜீவாவை பார்த்து அனுமதி கேட்பதுபோல பார்வையால் கேட்க, ஜீவா தன் கையால் சைகை காட்ட, ஜோசப் திருப்தியாக வாய் நிறைய திணித்துக்கொண்டான். நான் நேராக முந்திரி கேக் இருந்த இடத்துக்கு ஓடினேன். அழகழகாய் அடுக்கி வைத்திருந்தது. அதிலிருந்து அப்படியே அள்ளி அங்கே நின்றபடியே சாப்பிட ஆரம்பித்தேன். ஷகீல் அந்தப்பக்கம் சென்று சமோசாவில் ஆரம்பித்தான். அது அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ரம்யா ஐஸ்க்ரீம் இருந்த குளிர்பெட்டியை திறந்தாள். கலர்கலராக இருந்த ஐஸ் குச்சிகள், சில கேக் வகை ஐஸ்க்ரீம்கள், அப்புறம் ப்ளாக் ஃபாரஸ்ட் ஒரு டப்பா எல்லாம் எடுத்து அருகில் இருந்த ஒரு ட்ரேயில் அடுக்கி அள்ளிவந்தாள். அதை ஒரு டேபிளில் வைத்துவிட்டு மறுபடி ஓடினாள். என்னவென்று நான் பார்க்க, என்னை அருகில் கூப்பிட்டு காட்டினாள். அந்த குளிர்சாதன பெட்டியில் ஒரு பாதி நிறைய சாக்லேட்டுகள். வகைவகையாக, விதவித வடிவில். சிலது மிகவும் விலை அதிகம். நாங்கள் இருவரும் சேர்ந்து இன்னமும் அள்ளிக்கொண்டு அந்த டேபிளில் ஒதுங்கினோம். பாதி தின்றவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு அலமாரியில் அடுக்கி இருந்த ஜிலேபி, மைசூர்பா பக்கம் திரும்பினோம். ஜோசப் இன்னொரு பக்கம் லட்டை பாதியிலேயே விட்டுவிட்டு வட இந்திய இனிப்புகளான மில்க் ஸ்வீட்களை அள்ளிக்கொண்டிருந்தான்.

பிரகதியை காணாததை நான்தான் கண்டுபிடித்தேன். ரம்யாவிடம் கேட்க, அவளும் நானும் எழுந்து பிரகதியை தேடினோம். அவள் ஜீவாவின் பின்புறம் நின்று எங்கள் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நாங்கள் கைகாட்டி கூப்பிட, அவள் வரவில்லை. நான் எழுந்து சென்றேன்.

“ஏன்பா… வா… வந்து ஜாலியா சாப்டு….”

“போடா… இவ்வளவு பேர் இருக்காங்க… கூச்சமா இருக்கு.”

“ அட…. இப்ப பாரு….” என்ற நான் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு அண்ணாவின் முன் தட்டில் இருந்த ஒரு பப்ஸை எடுத்து வந்தேன். அந்த அண்ணா வுக்கு இது எதுவுமே தெரியவில்லை. அதை பிரகதி இன்னும் ஆச்சரியமாக பார்த்தாளே தவிர வரவில்லை. நான் செய்ததை பார்த்து, ஜோசப்புக்கு இன்னும் ஜாலியாகிவிட்டது. அங்கே அலமாரியில் இருந்த ஒரு பெரிய கேக்கை எடுத்து கவுண்ட்டரின் நடுவில் இருந்த ஒரு ஊழியரின் தலைமேல் கவிழ்த்தான். அது க்ரீம் கேக் வேறு. அந்த ஊழியரின் முகமெல்லம் வழிந்தது. உடையெல்லாம் கேக்கின் சிதறல்கள். அவர் அதை சட்டை செய்யாமல் நடந்து ஓடி… வியாபாரத்தை கவனிக்க எங்களுக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது.

“ஏன்… ஜோசப்…. பாவம்பா….” என்றான் ஷகீல்.

“போடா… போனவாரம் நான் வந்தப்ப இந்தாள் என்னை திட்டிட்டான். அதான் பழிக்குப்பழி… வஞ்சத்துக்கு வஞ்சம்….” என்று சொல்லியபடி, தூரத்தில் இருந்து கேக்குகளை குறிவைத்து அவரை பார்த்து எறிந்து கொண்டிருந்தான்.

ஜீவா பிரகதியை பார்த்தான். பின் தன் கையை லேசாக ஆட்டினான். என்ன ஆச்சரியம். அந்த பேக்கரியில் இருந்த அத்தனை பேரும் காணோம். நான் ஓடிப்போய் தெருவில் எட்டிப்பார்த்தேன். அங்கேயும் அவர்கள் இல்லை. அத்துடன் தெருவில் எந்த மனிதரோ, போக்குவரத்தோ இல்லை. உள்ளே வந்து பார்க்க அசந்து போனேன். இதுவரை அமைதியாக இருந்த பிரகதி, ஆவேசம் வந்தவள் போல அத்தனை வகைகளையும் வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளைச்சுற்றி உட்கார்ந்து அவள் சாப்பிடும் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஓரளவு ஆசை அடங்கியதும். மீதமுள்ள இனிப்புகளை ஒருவர்மீது ஒருவர் எறிந்து விளையாட ஆரம்பித்தோம். ஐஸ்க்ரீம்கள் எங்கள் மேல் வழிந்து ஓடியது. பாதுஷாக்கள் பந்துகளாக பறந்தன. டிவியில் பார்த்ததுபோல் சின்ன சின்ன சாக்லேட்டுளை கீழே கொட்டி அள்ளி வீசிக்கொண்டிருந்தோம். அந்த பேக்கரியே ஏதோ பூகம்பம் வந்து. சூறாவளியில் மாட்டிய இடம் போல் இருந்தது.

“டேய், ஜீவாவை சாப்பிட சொல்லவேயில்லையே. அவனும் நம்மளைப்போலதானே” என்றான் ஷகீல்.

“ஆமால்ல…. அடடா…ஜீவா…. நீ சாப்பிடலையா…” என்றான் ஜோசப்.

எங்கள் அருகில் வந்து அமர்ந்த ஜீவா, “ நீங்க சாப்பிட்டது நான் சாப்பிட்ட மாதிரி” என்றான்.

“அதெப்படி…” என்றான் ஜோசப்.

“உணர்ந்துக்கறதுதான். நீ லட்டு சாப்பிட்ட… ஆசையா ஒண்ணுதான். அதுக்கப்புறம், அந்த மில்க் ஸ்வீட்ஸ் எடுத்து ஆரம்பிச்ச… ஒண்ணு ரெண்டுதான் சாப்பிட்ட. அது உனக்கு திகட்ட ஆரம்பிச்சிட்டது..”

“ ஆமாப்பா. அது கலர்கலரா இருக்கே தவிர எல்லாம் ஒரே மாவு… ஒரே இனிப்பு… முடியல…” என்றான் ஜோசப்.

“இவங்க ஐஸ்க்ரீம், ஆரம்பத்தில் முழுசா ஒண்ணு ரசிச்சு காலி பண்ணினாங்க. அதுக்கப்புறம் இருக்கற வகைகளை எல்லாம் எடுத்து விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. பெரும்பாலும் சாப்பிட்டது கம்மிதான். வீண் செய்ததுதான் அதிகம்” என்று ஜீவா சொல்ல எங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. எங்கள் முகம் மாறியதை கண்ட ஜீவா,

“ அது தப்பில்ல. இயற்கை அதுதான், உங்களுக்கு தேவைக்கு கிடைக்காதப்ப கொஞ்சமா கிடைச்சாகூட போதும்னு ஒரு வேகம் இருக்கும். ஒரு முந்திரி கேக் கிடைச்சா கூட ரசிச்சு சாப்பிட தோணும், அதுவே நெறைய குடுத்தா அது மேல ஒரு அலட்சியம் வந்துடும்”
என்னை பார்த்தே சொன்னது போலிருந்தது. தின்றது போக மீதம் வைத்து நான் ஒரு சீட்டுகட்டு மாளிகை போல அடுக்கி விளையாடியிருந்தேன்.

“இது பரவாயில்லை. பெரியவர் ஆனதும், வாழ்வதற்காக பணம் சேர்க்க ஓடுவார்கள். தேவைக்கு கிடைக்க, சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்கள். ஒரு சிலர் பாத்தீங்கன்னா தேவைக்கு அதிகமா சேர்த்து அதுக்கப்புறம் அதை வைத்து என்ன பண்றதுன்னு தெரியாம இப்படிதான் நிறைய வேஸ்ட் செய்வார்கள். அவர்களும் சாப்பிடாமல், சாப்பிட முடியாமல் இருந்தாலும் மத்தவங்களுக்கு குடுக்கவும் மனசு வராது. ஆனா இந்த வயசில் உங்களுக்கு அதிகமா இருக்கறதை மத்தவங்களுக்கு குடுக்க தோணும். அதான் இந்த சிறு வயதின் அழகு.”

“ அது சரி, நாங்க போனதும் இந்த பேக்கரி இப்படி பன்ணிருக்கமே, கடைக்காரருக்கு நஷ்டம்தானே. இப்பதான் எங்களுக்கு நிஜமாவே கஷ்டமா இருக்கு…” என்றாள் பிரகதி.

“அது நீங்க கவலைப்பட வேண்டாம். நான் பாத்துக்கறேன்” என்று எப்போதும்போல் கண்ணடித்தான் ஜீவா.

“அவனுக்குதான் மாயாஜாலம் தெரியுமில்ல… கண்ணு ராஜா… அது எப்படி மாயமா இங்க வந்தோம்.. அது சொல்லேன்….” என்றான் ஜோசப்.

“ஹா… ஹா… மாயாஜாலம்னு எதுவுமே இல்ல ஜோ…. வந்து… உங்களுக்கு அறிவியல் பாடம் இருக்கா…?” என்று கேட்டான் ஜீவா.
“இருக்கு…இருக்கு…” என்றோம் கோரசாக. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜோசப் சென்று ஒரு தட்டு நிறைய உருளைக்கிழங்கு சிப்ஸும், சில குளிர்பான பாட்டில்களும் கொண்டு வந்தான். அந்த டேபிளில் அவற்றை அடுக்க, ஒரு பெரிய மீட்டிங் நடக்கும் சூழல் தெரிந்தது.

“ம்ம்… அதில் க்வாண்டம் மெக்கானிக்ஸ்னு ஒரு பாடம் வருதா…”

“அப்படியா… அது கேட்டதேயில்லையே….” என்று நான் சொல்ல, “ இந்த பேர்ல எங்க அண்ணன் ஒரு புக் வச்சிருக்கான்” என்றான் ஷகீல்.

“ஒகே… அப்ப அது பெரியவங்க படிக்கற பாடம்தான். நிஜம்தான். இப்ப உங்களால புரிஞ்சுக்க முடியாதுதான். புரியறமாதிரி சொல்றேன். இப்ப நாம் சக்தின்னு ஒண்ணு சொல்றோமில்லையா… அது முழுசா இல்லன்னா என்ன ஆகும்?”

“சோர்ந்து போவோம்… கொஞ்சம் சிப்ஸ் சாப்ட்டா தெம்பாவோம்” என்றான் ஜோசப். அவனை செல்லமாய் முறைப்பது போல் பார்த்த ஜீவா தொடர்ந்தான், “ சரிவிடு… சக்தின்னா எல்லா இடத்திலயும் இருக்கு. சக்தியே இல்லாம ஒரு இடம் இருக்கும். அதை ஸீரோ ன்னு வச்சுக்கலாம். அதுக்கு கீழ ஏதாவது இருக்கான்னா…. இருக்கு. அதை நெகடிவ் சக்தின்னு சொல்வாங்க. அதை பயன்படுத்தி, காலம் இடம் எல்லாத்தையும் சுருங்க வைக்கலாம். அதான் இங்க நடந்தது. அது பயன்படுத்தினேன். ஒரு நொடியில இங்க வந்தாச்சு. இதுபோல எங்க வேணா போகலாம்”

“ஹை, அது எப்படின்னு எங்களுக்கும் சொல்லிக்குடேன்….” என்றள் ரம்யா.

“இல்லபா, அது சொல்லித்தந்து வரதில்ல.. அது மனிதருக்கு இப்போதைக்கு எட்டாத விஷயம்தான். சொல்லப்போனா இப்படி இருக்கலாம்னு க்வாண்டம் மெக்கானிக்ஸ்ல கற்பிதமா படிக்கற அளவில்தான் இருக்கு. ஆனா நிஜம்ங்கிறதை மாற்ற முடியாது இல்லையா. இந்த பூமி , பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் இருந்ததை நெகடிவ் சக்தின்னு சொல்லலாம். “

“ இதைதான் சினிமால, பழைய கதைகளிலே மறைஞ்சு வரமாதிரி காட்டறாங்களா…” என்றேன் நான்.
“அதெல்லாம் மனிதனின் ஜாலியான கற்பனை, சரிவிடு… இப்ப அடுத்து எங்க போலாம்…?” என்றான் ஜீவா.

“ரொம்ப நேரமாச்சு… அம்மா தேடும்.. வீட்டுக்கு போகணும். நாலை வரோம்” என்றோம்.

ஜீவா எழுந்தான். கையை மெதுவாக ஆட்டினான். சட்டென்று அந்த சூழல் மறைந்து பீச்சில் இருந்தோம். மிக நேரம் ஆனதால் ஆளாளுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தோம். நாளை ஜீவாவிடம் சொல்லி பறப்பதுபோல் ஏதாவது மந்திரம் சொல்லவேண்டும் என்று தோன்றியது. நான் செல்லும் வழியில் ஐயங்கார் பேக்கரியை பயமாய் எட்டிப்பார்த்தேன். ஆனால் மனம் முழுக்க ஆச்சரியம் ஏற்பட்டது. நாங்கள் வந்த சுவடே இல்லாமல் அது முழு சுத்தமாக இருந்தது. அப்படியானால் இதெல்லாம் வெறும் பிரமையா என்று தோன்றியது. ஆனால் வாயில் இன்னும் மறையாத தித்திப்பு அது பொய்யில்லை என்று காட்டியது. அந்த முந்திரி கேக் இருந்த இடத்தில் நான் எடுத்து சாப்பிட்ட ஒரு பீஸ் குறைந்திருப்பதை கண்டேன்.

மௌனப்புன்னகையுடன் வீட்டுக்கு வர,

“என்னடா… போனதும் வந்திட்ட… விளையாட உன் ஃப்ரெண்ட்ஸ் வரலியா…?” என்று அம்மா கேட்க, என் கையில் இருந்த எலெக்ட்ரிக் வாட்சை பார்த்தேன். பிரமிப்பில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். நான் வீட்டில் இருந்து சென்று நிற்காமல் திரும்பி வரும் அதே இருபது நிமிடங்கள்தான் ஆகியிருந்தது.

மாயாஜாலம் தொடரும்…
​
 
அத்தியாயம் 4

மறுநாள் பிரகதி பள்ளிக்கு வரவில்லை. ஏதோ லீவு. நாங்கள் நால்வரும் இடைவே நேரத்தில் பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய நிகழ்வின் காலம், அந்த ஜீவா உண்மையில் யார் என்றெல்லாம் எங்கள் பேச்சு இருந்தது. அவன் கண்டிப்பாக சாமிதானென்றும் அல்லது சாமியின் தூதனாய் இருக்கலாம் என்றும் ரம்யா சொன்னாள். சாமிக்கு உருவம் கிடையாது என்று ஷகீல் அதை மறுத்தான். அவன் ஏதாவது வேறு கிரகத்தில் இருந்து வந்த ஏலியனாக இருக்கவேண்டும் என்பது அவனின் வாதம். இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்க, எதிரில் பிரகாஷின் கோஷ்டி வந்தது. அவனின் குழுவில் எப்போதும் ஒரு ஐந்தாறு பேர் இருப்பார்கள். பிரகாஷ் நிறைய காசு கொண்டு வருவான். எப்போதும் அந்த குரூப்பின் தீனி செலவுகள் அவனுடையது. அதனால் அவனைச்சுற்றி எப்போதும் அவர்கள் ஒட்டிக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் எப்போதும் அவனிடம் ஒட்டுவதில்லை, ஆதலால் எங்கள் மேல் அவனுக்கு ஒரு பகை உண்டு.

“இங்க பாருடா… ஜால்ரா கோஷ்டி…” என்று நக்கல் செய்தான் பிரகாஷ்.

“ஆமாடா… பத்து ரூபா வச்சுகிட்டு பந்தா பண்ற கும்பல்டா இவங்க… “ என்றான் செந்தில். அவன் பிரகாஷின் செம ஜால்ரா. எனக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. ஆனால் உருவத்தில் அவர்கள் சற்று பெரியவர்கள், பின் பெஞ்சில் உட்காரும் அளவுக்கு பலசாலிகள். அதனால் கொஞ்சம் தயக்கம் வந்தது. ஆனால் ரம்யா சட்டென்று கத்தினாள்.

“அதுகூட உன்கிட்ட இல்லியே…. நீயே இவன்ட்டதானே பிச்சை எடுக்கற….” என்றாள்.

நாங்கள் சிரித்துவிட செந்திலுக்கு சரியான கோபம் வந்துவிட்டது. நாங்கள் சும்மாயிருக்க ரம்யா பேசியது, அதில்லாமல் அவன் காசுக்காக ஜால்ரா போடுவதை சொல்லிக்காட்டியது என்று அவனின் கோபம் உச்சத்துக்கு சென்றுவிட்டது. வேகமாய் வந்து ரம்யாவை அடிக்க கை ஓங்கினான். நான் கொஞ்சம் பயந்துபோனேன். ஆனால் ரம்யா கொஞ்சமும் பயப்படவில்லை. செந்திலின் கையை பிடித்து சட்டென்று முறுக்கினாள். அவன் திமிற முயற்சித்து முடியாமல் முகத்தை வீரமாக வைத்துக்கொண்டு தைரியமாக இருப்பதைபோல் காட்ட முயற்சித்தான். ஆனால் வலி பொறுக்க முடியாமல் அழ ஆரம்பித்தான். “ டேய் பிரகாஷ்… காப்பாத்துடா…” என்று அவன் கத்த பிரகாஷும் அவன் நண்பர்களும் ஓடி வந்தார்கள். நானும், ஷகீலும் அவர்களை தடுக்க முயல, என் கைகள் அவன் மேல் படும்முன்னே தூரப்போய் விழுந்தார்கள். என்ன நடந்தது என்று நாங்கள் குழம்பி போய் இருக்க, அவர்கள் எங்களை பார்த்து பயந்து ஓடினார்கள், செந்திலும் தன் கையை தேய்த்துக்கொண்டே அழுதபடி ஓடினான். நாங்கள் ரம்யாவை கொஞ்சம் பயத்துடனே பார்த்தோம்.

“என்ன ரம்யா, இவ்வளவு கோபம்… நீ இப்படியெல்லாம் நடந்துக்கமாட்டியே…”

என்றான் ஷகீல். அவள் திருதிருவென்று விழித்தபடி,

“ எனக்கும் அதான் தெரியல, நான் ஏதுமே சொல்லலை, ஆனா என்னை மீறி வார்த்தை விழுது… அவன் கையை எப்படி பிடிச்சேன், என்ன பண்ணினேன்னே தெரியலை. ஆனா ஏதோ சக்தி வந்தது போல இருக்குடா…” என்றாள்.

“உண்மைதான் ரகு, நீயும் நானும்கூட ஏதும் பண்ணலை, ஆனா சினிமால வர மாதிரி அவனுங்க எங்க போய் விழுந்தானுங்க பாரு….. எப்படி இதெல்லாம்….”

“ஒரே விடைதான்…. ஜீவா இங்கயும் வந்துட்டான்…” என்றான் ஜோசப்.

“வெரிகுட் ஜோ… சரியா சொல்லிட்ட “ என்று ஜீவாவின் குரல் கேட்டது. நாங்கள் சுற்றிமுற்றியும் பார்க்க, பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து குதித்தான் ஜீவா. குதித்தான் என்பது கொஞ்சம் அதிகம். அவன் மயிலிறகு மென்மையாய் பறந்து கீழே இறங்குவது போல அழகாக இறங்கி வந்தான்.

“எப்படி ஜீவா… இங்க வந்த….” என்று ஆச்சரியமாய் கேட்டேன்.

“ஏன் வரக்கூடாதா…..?”

“இல்ல, நீ பீச்சிலதானே இருப்ப…..”

“அட நண்பர்களா…நீங்க என்னை முதல்ல பாத்தது பீச்சில. ஆனா நான் ரொம்ப நாளா இங்க கூடவேதான் இருக்கேன். அது உங்களுக்கு தெரிய அன்னிக்கு ஆச்சு..” என்று சொல்ல, நாங்கள் பிரமிப்பாய் பார்த்தோம்.

“அட்டா… பெல் அடிச்சு இவ்ளோ நேரமாச்சு. போச்சு…. இங்கிலீஷ் மிஸ் வந்திருப்பாங்க… செமயா மாட்டபோறோம்… அப்புறம் பாக்கறோம் ஜீவா… “ என்று சொல்லியபடி ரம்யா ஓட, அவளை பின்தொடர்ந்து நாங்களும் ஓடினோம். ஜீவாவும் எங்கள் பின்னாடியே ஓடிவர… அவனை தடுக்கும் நேரம்கூட இல்லாமல் ஓடினோம். அந்த மிஸ்ஸின் கண்டிப்பு அப்படி. வகுப்பை நெருங்கி, உள்ளே போக எங்களுக்கு ஆச்சரியம் காத்துக்கிடந்தது. மிஸ் வகுப்புக்குள் வந்துவிட்டார். என் இடத்தில் நான் இருந்தேன். ஷகீலும் ரம்யாவும் ஜோசப்பும் கூட. ஆனால் நாங்கள் ஜீவா உடன் வாசலில் இருந்தோம். ஜீவாவை பார்க்க, அவன் சிரித்தபடி உள்ளே போகச்சொன்னான்.

நாங்கள் போனதும், உள்ளிருந்த எங்கள் பிரதி எங்களுடன் இரண்டற கலந்து உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி நிலை பெற்றது. பின்னால் திரும்பி பார்க்க ஜோசப் இன்னமும் அவனின் பிரதியில் புகாமல் அந்த பிரகாஷை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பிரகாஷோ முன் பெஞ்சில் இருந்த என்னை முறைத்துக்கொண்டிருந்தான். நான் பார்க்க, ‘வெளிய வாடி… உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்பதுபோல் கைகாட்டினான்.

சட்டென்று அவன் தலையில் படாரென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு ஜோசப் அவன் உடலில் புகுந்துகொள்ள, பிரகாஷ் “ஆத்தாடி” என்று தலையில் கைவத்து கத்தினான். திரும்பிய மிஸ், அவனை பார்த்து “என்னாடா…. ஆரம்பிச்சுட்டியா…” என்று கேட்க, “யாரோ கொட்டிட்டாங்க மிஸ்.. “ என்றான் பிரகாஷ்.

“ம்ம்… எல்லாரும் கவனிச்சுட்டு இருக்காங்க .. உன்னை பேய் வந்து கொட்டிட்டு போயிருக்கும்போல” என்று சொல்ல வகுப்பில் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

இதெல்லாம் வாசலில் நின்று கவனித்துக்கொண்டிருந்த ஜீவா, சிரித்தபடி உள்ளே வந்து மிஸ்ஸின் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான். எங்களுக்கு பயமாய் போய்விட்டது. ஆனால் அவன் எங்களை தவிர யார் கண்களுக்கும் தெரியவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தோம்.

வகுப்பு முடிந்து நாங்கள் வெளியே வரும் முன்னே பிரகாஷ் கும்பல் ஓடிவிட்டது. பயம் வந்திருக்கும் போல. ஜீவாவுடன் நாங்கள் வெளி மைதானத்தில் குழுமினோம். இன்று எங்கே போகலாமென்று பேசிக்கொண்டிருந்தோம்.

“எங்க போலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா….” என்றான் ஜீவா.

“ வந்து… ஏதாவது புக் ஷாப் போலாமா… நெறைய காமிக்ஸ் புக் வேணும். படிக்கணும். விலையெல்லாம் பாத்தா அதிகமா இருக்குன்னு எங்கப்பா வாங்கிதர மாட்டேன்றார்.” என்றான் ஷகீல்.

“ஆமாமா… எனக்கும் அதான் ஆசை “ என்றேன் நான்.

“எனக்கு படம் வரையற ஏதாவது ஆர்டிஸ்ட்டுகிட்ட போய் கத்துக்கணும்னு ஆசை” என்றாள் ரம்யா.

ஜோசப் மட்டும் ஏதும் சொல்லவில்லை. “எங்க வேணா போங்க, சாப்பிட ஏதாவது ரெடி பண்ணி குடுத்திடுங்க….” என்றான் அவன். அவன் பசி தாங்க மாட்டான்.

“ சரி … போலாம். அது முடிஞ்சதும் உங்களுக்கு ஒரு சின்ன வேலை இருக்கு… செய்றீங்களா “ என்றான் ஜீவா.

“நீதான் எல்லாமே செய்றியே… அப்புறம் ஏன் எங்க உதவி” என்றேன் நான்.

“ அதுவும் சரிதான். ஆனால் நானே எல்லாமே செய்துவிடக்கூடாது. நீங்களும் கத்துக்கணுமில்ல.” என்று அவன் சொல்ல, அவன் மாயாஜாலம்தான் கற்றுக்கொடுக்கப்போகிறான் என்று எங்களுக்குத்தோன்றியது. அந்த எண்ணமே மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவன் கூட்டிச்சென்றது ஒரு லைப்ரரி போலவே இல்லை. அது ஒரு பார்க் போல இருந்தது. அங்கே யாருமே இல்லை. ஒரு வெட்டவெளி மைதானம். கீழே எல்லாம் வெறும் புல்தரை. அங்கங்கே சின்னச்சின்ன பூக்களுடன் செடிகள். அலமாரிகள் அழகழகாக மரத்தால் செய்யப்பட்டு வண்ணப்பூச்சின்றி இயற்கை அழகுடன் இருந்தது. அவற்றில் முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், ப்ரெஞ்ச் என உலகில் உள்ள அத்தனை காமிக்ஸ் புத்தகங்களும் அங்கே இருந்தன. எங்களின் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியவில்லை. ஆனால் இதையெல்லாம் கொஞ்ச நேரத்தில் படிக்க முடியாதே என்று ஆதங்கம் ஏற்பட்டது. நானும் ஷகீலும், தமிழ் காமிக்ஸ் இருந்த அலமாரியை நெருங்கினோம். வரிசையாக எடுத்துப்பார்க்க, அதை பார்த்தவுடன் அதன் கதை, படங்கள் அனைத்தும் ஏற்கனவே படித்த ஞாபகம் ஏற்பட்டது. இத்தனைக்கும் அதை இன்றுதான் முதல் தடவை பார்க்கிறேன். ஷகீல் அஹமது பார்க்க அவனும் என்னை பார்த்து விழித்தான்.

“ என்னடா …. எல்லாமே படிச்ச போல இருக்கு…?”

“அதானே… இரு அந்த ஆங்கில வரிசையை பார்ப்போம்…” என்று அடுத்த அலமாரியை நெருங்கினோம். பக்கத்தில் போகும்போதே அதில் அடுக்கி இருக்கும் வரிசை, கதைகள் முழுக்க ஞாபகம் வந்தது. சோர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்தோம். எங்கள் அருகில் வந்து அமர்ந்தான் ஜீவா.

“என்ன ஜீவா இது.. எல்லாமே படிச்ச மாதிரி இருக்கு…”

“நீதானே நினைச்ச… இதெல்லாம் கொஞ்ச நேரத்தில படிக்க முடியாதேன்னு. அதான் அத்தனையும் உங்களுக்குள் கொண்டுபோயிட்டேன். இனி வரும் புத்தகங்கள் மட்டும்தான் பாக்கி இருக்கு….”

“அட … அதுகூட உன்னால கொண்டு வர முடியுமா….”

“முடியும்… ஆனா வேணாம். உங்க வாசிப்பு இன்பத்தை தடை பண்றமாதிரி ஆகிடும். இப்போதைக்கு எல்லா காமிக்ஸும் படிச்ச திருப்தி இருக்கில்ல. அது போதுமில்ல..?”

“அதுவும் சரிதான்… நீ சொல்றதுதான் கரெக்ட். எல்லாமே கையில் இருந்தால், அப்புறம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாம ஆகிடும்தான்.”

“அட… பாரேன்… நீ இப்ப பெரியவங்க மாதிரி தத்துவமெல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட…”

“இயற்கைதானே ஜீவா அது?” என்றேன் நான்.

“ம்… வந்து… எது இயற்கை….” என்றான் ஜீவா.

“இயற்கைனா … அதுவா இருக்கறது எல்லாமே இயற்கைதான். உலகில், கடல், மலை, மரம்….. அப்புறம் பறவைகள் இதுபோல இருப்பதெல்லாம் இயற்கை.” என்றான் ஷகீல்.

“சாப்பிடுவதும் இயற்கை…” என்றான் ஜோசப். அவன் கையில் அந்த பெரிய பிஸ்கட் பாக்கட் இருந்தது. ஜீவா உபயம்.

“அப்ப செயற்கைன்னா….? “

“இந்த பிஸ்கட் பாக்கட், ப்ளாஸ்டிக் பொருட்கள், மக்காத பொருட்கள் நம்ம பில்டிங் இதெல்லாம் செயற்கை.” என்றேன் நான்.

“அதெப்படி… ஒரு பறவை அது தங்கிக்க சின்னசின்ன குச்சிகளை வச்சு கூடு கட்டினா இயற்கை, அதுவே நீங்க கட்டினா செயற்கையா…”

“அது அப்படிதான்… தப்பா…” என்றேன் நான். எனக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது.

“உண்மையில் செயற்கைன்னு எதுவுமேயில்லை. இந்த உலகில் இருக்கும் அனைத்தும் இயற்கைதான். பூமி தோன்றியதில் இருந்து இங்கே உயிர்னு தோன்ற ஆரம்பிச்சது. அதில் வாழ உயிர்கள் அவைகளுக்கேத்த மாதிரி இங்க இருக்கும் எல்லா பொருட்களையும் பயன்படுத்த ஆரம்பிச்சுதுங்க. மனிதனும் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்தான். நல்லா கவனிங்க, அவன் கண்டுபிடிக்க பயன்படுத்திய அனைத்து பொருட்களும் இந்த பூமியில் இருந்து எடுத்ததுதான். அதை மிக்ஸ் பண்ணிதான் பல விஷயங்களை செய்யறான். ப்ளாஸ்டிக் உள்பட. அப்ப அது அனைத்தும் இங்க இருந்து எடுத்த இயற்கை பொருள்தானே. எனக்கு என்ன தோணுதுன்னா மனிதன் செய்யற பொருட்கள் தவிர மத்ததை இயற்கைன்னு வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். சரியா….?” என்றான் ஜீவா.

“அப்படிதான் தோணுது” என்றான் ஜோசப்.

“ஆனா… மனிதன் யூஸ் பண்ற பொருட்களால்தானே சுற்றுச்சூழல் பாதிக்குது. பெட்ரோல் அதிகமா பயன்படுத்தறோம். அதனால ஒரே புகை. ப்ளாஸ்டிக் பொருட்கள் மக்கறதேயில்லை. அதுவும் செயற்கைனு வச்சிருக்கோம். இன்னும், புதுபுது கண்டுபிடிப்புகளால் பலவிதத்தில் பாதிப்பு… இந்த பாதிப்பு செய்யறது எல்லாமே செயற்கைன்னு வச்சாதான்… கொஞ்சம் விழிப்புணர்வு வரும்.” என்றேன் நான். எனக்கு சரியாக பேசுவதாகவே தோன்றியது.

“பூமிக்கு உயிர் இருக்கா….?” என்று திடீரென்று கேட்டான் ஜீவா. ஒரு நிமிடம் எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ அது வந்து … பிறந்து வளர்ந்து வாழ்ந்து அப்புறம் இறந்துபோனாதான் உயிர் இருக்குன்னு அர்த்தம்..” என்றேன் நான்.

“நடுநடுவில பசிக்கணும்… சாப்பிடணும்… அதில்லாம நோய் வரும்… சரி பண்ணனும்… ஓடியாடி விளையாடணும்… ம்..ம்…மரமெல்லாம் ஓடறதில்ல… அதனால ஓடாததும் சிலது இந்த உயிர் லிஸ்ட்ல சேத்துக்கலாம்.….” என்றான் ஜோசப்.

“ ஆனா பாரேன். ..ஒண்ணுமேயில்லாத சூனிய வெளியில், வெளிச்சம், இடம் எதுவுமே இல்லாத இடத்தில் திடீர்னு ஒரு சின்ன தீக்குச்சி வெளிச்சம் போல, அதைவிட சின்னதா ஒரு பொட்டு வெளிச்சம் வருது. அது அப்படியே வெடிச்சு பரவுது… எவ்வளவு வேகமான்னா … வந்து அப்பதான் ஓளியும் பிறந்துச்சா… அதோட வேகத்தில பரவுது. அடக்கி இருந்த வெற்றுவெளியில் இடம் உருவாகுது. எல்லாம் ஒரு புகைபோல திரண்டு வருது. இறுக்கமா இருந்த புகைப்படலம் கொஞ்சம் கொஞ்சமா இடம் கிடைக்க… பரவுது. சின்ன சின்ன பொட்டலமா சேர்ந்து பரவி இன்னும் போய்ட்டே இருக்கு. இந்து சின்ன புகைப்படலம் என்னன்னு தெரியுதா…?”

“ஏதோ பட்டாசு வெடிச்சு புகை மண்டலம் பரவற மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டேன்.”என்றேன் நான்.

“ அதெல்லாம் மேகமா…” என்றான் ஷகீல்.

“இல்லை. அதான் நட்சத்திரங்கள்…” என்ற ஜோசப் தொடர்ந்து சொன்னான்..” இதை நான் டிஸ்கவரி சேனலில் பாத்துருக்கேன்..”

“ஓரளவு ஜோ.. சொல்றது சரிதான். அதெல்லாம் நட்சத்திர கூட்டங்கள். அதில் ஈர்ப்பு விசை இருக்கும் மையத்தை சுற்றி ஒரு சங்கு சக்கர வடிவமா சேர்ந்து ஒரு கூட்டமா உருவாகுது. அதுக்கு பக்கமா இருக்கறதெல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு குடும்பமாகுது…இதுபோல பலகோடி நட்சத்திர குடும்பங்கள்… நல்லா பாருங்க… இதில் ஒரு நட்சத்திர குடும்பத்துக்கு நாம வரலாம். அதில் எண்ணமுடியாத கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்… அதில் ஒரு துளியூண்டு தூசி போல ஒண்ணு… அதான் நம்ம சூரியன்..”

ஆவென்று வாய் பிளந்தோம். சூரியனே தூசி என்றால், நாமெல்லாம் என்று தோன்றியது எங்களுக்கு. ஜீவா தொடர்ந்தான்.

“ அது அதோட புகை மண்டலங்களை சுத்தி சுத்த விடுது. அந்த துகளெல்லாம் சின்ன சின்ன குழுவா சேர்ந்து குளிர்ந்து சின்ன சின்ன பந்து வடிவமா மாறுது. அதெல்லாம் தாயான சூரியனை சுத்திவருதுங்க. இதெல்லாம் நடந்து பலகோடி வருஷங்களை கடந்து இதே புராசஸ் இங்கயும் நடக்குது. சின்ன சின்ன கண்ணுக்குத்தெரியாத உயிர்கள் கடலில் உருவாகி , மெதுவாக நிலத்தில் நடந்து… அது கோடிக்கணக்கான ஜீவராசிகளா மாறி அதில் ஒரு சின்னூண்டு பகுதியா மனிதன்னு ஒருத்தன் உருவாகி…நெனைச்சுபாரு…. கணக்கிலேயே வைக்காத ஒரு சின்ன பொருள், இந்த பூமியை அழிக்க முடியுமா…?”

“பூமி சும்மாவா இருக்கு.? உயிர்னு சொன்னியே ஜீவா…” என்றேன் நான்.

“ஆமா, அதுவும் ஒருநாள் பிறந்தது… இப்ப வாழுது… இன்னும் பலகோடி வருஷங்கள் போய் அது சூரியனோட இணைஞ்சு அழிஞ்சுடும், அதாவது செத்துடும். நீங்க பயப்படாதீங்க. அது நடக்கறப்போ இப்ப இருக்கிற மனித இனம் அப்படீங்கறதே இருக்காது. நடுவில் வரக்கூடிய உயிர்னு சொல்லக்கூடிய நாமெல்லாம் வாழ்றதுக்காக சில மாறுதல்களை செய்யறோம். கண்டுபிடிப்புகள் செய்து பயன்படுத்தறோம். இது இந்த பூமியை பாதிக்குதுன்னு நாமே பேசிக்கறோம். ஆனா கொஞ்சம் யோசிச்சீங்கன்னா அது பூமியில் வாழக்கூடிய உயிரினங்களைதான் பாதிக்கும்னு தெரியும். ஓஸோன் படலத்தில் ஓட்டைன்னா அதனால இந்த உயிரினங்களுக்குதான் பாதிப்பு. நீங்க செய்யற ஒவ்வொரு பாதிப்பும், செயல்களும் தன்னிச்சையா செய்யறது இல்லை. அது இந்த பூமியொட, பிரபஞ்சத்தோட செயல்களின் கூட்டு முயற்சிதான். இன்னும் சொல்லப்போனா இந்த பிரபஞ்சத்தின் கூட்டு இயக்கத்தின் செயல்பாடுகளின் சிறுதுளிதான் மனிதனின் செயல்கள். எதுவும் இந்த அகன்ற பிரபஞ்சத்துக்கு தெரியாம நடக்காது. அதை தெரிஞ்சுக்காம ஏதோ மனிதர்கள் எல்லாம் ஜெயிச்சமாதிரி, ஏதோ இயற்கையை மாத்தின மாதிரி பேசிக்கிட்டிருக்காங்க. நீ அசைஞ்சா இந்த பிரபஞ்சத்தின் ஒரு சின்ன அசைவுதான் அது.”

கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிண்டான் ஜீவா.

அவனும் மூச்சுவிடுகிறான் என்பதே எங்களுக்கு அதிசயமாகத்தான் இருந்தது. ஆனால் ஜீவாதானே இவன்?

“ அதான் சொல்றேன். இதெல்லாம் சயின்ஸ்தான். சயின்ஸ்னா ஏதோ பாடம் மட்டுமில்லை. தமிழில் அழகா சொல்லியிருக்காங்க, அறிவு இயல். நான் கொஞ்சம் உங்களுக்கு புரிய கொஞ்சம் எளிதா சொல்லிருக்கேன். ஆனா விஷயம் ஒண்ணுதான். கொஞ்சம் வேடிக்கையா சொன்னா, இந்த பூமியும் ஒரு உயிர்னு புரிஞ்சுகிட்டா, நாமெல்லாம் அதன் மீது ஒட்டி வாழும் சிறு கிருமிகள். பாக்டீரியாக்கள். நாம் பயணம் செய்ய, இந்த பூமிமேல சுத்திலும் ரோடு போடறோம். அது பாட்டுக்கு இயல்பா இருக்கு. மூச்சு விட்டுகிட்டு. இந்த ரோடெல்லாம் சேர்ந்து அதை ஒரு நூலால் கட்டினமாதிரி அதுக்கு லேசா திணறுது. அதோட நல்ல கனமா எல்லா இடத்திலயும் காங்க்ரீட் கட்டிடங்கள். சில நேரம் உடம்பை குலுக்கி இந்த பூமி சரி செய்துக்குது. பூகம்பம் போல. மனிதனோ அல்லது வேறெதாவது உயினமோ கணக்கு மீறி வளரும்போது அதை சரி செய்ய, சமன்படுத்த வெவ்வேறு நோய்கள், சில போர்கள் அப்படி இப்படின்னு அது ஏதாவது செய்து சமப்படுத்திக்குது. பூமிக்கு தெரியாம எதுவும் இல்லை. அது இயல்பா இருக்கணும்னா, நாமதான் நம்ம பாதுகாப்பை சரி பண்ணிக்கணும். கண்ட குப்பைகள்னு சொல்றதை நிறுத்தணும்னு உங்களுக்கு தோணறது கூட அந்த பூமியின் எண்ணம்தான். பூமி தன்னால சிந்திக்காது. உங்கமூலம்தான் ‘பாத்துக்கோப்பா…’ன்னு சொல்லும். புரிஞ்சா பிஸ்தா…” என்றான் ஜீவா.

“கொஞ்சம் பயமா இருக்கு…” என்ற ஷகீல்..” அப்ப இப்ப நாம ஒரு உயிரை மிதிச்சுக்கிட்டுதான் இருக்கோமா… அதுக்கு வலிச்சா நம்மை அடிக்குமா…” என்றான்.

“ஹா..ஹா… அதெல்லாமில்ல. நீயெல்லாம் சேர்ந்துதான் பூமி. அது தனியா இல்லை. உன்னை நீ நல்லபடியா பாத்துகிட்டா… பூமியை பாத்துகிட்டமாதிரி…அவ்ளோதான். எல்லாமே இயற்கைதான். அதான் சொன்னேன்.” என்றான் ஜீவா.

கொஞ்ச நேரம் எல்லோரும் அமைதியாக இருந்தோம். ரம்யாவின் ஞாபகம் வந்தது அவளை எட்டிப்பார்த்தோம். அவள் அந்த பார்க்கின் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். அங்கே சென்றோம். அவள் ஒரு பெரிய சார்ட்டை வைத்து வரைந்து கொண்டிருந்தாள். அந்த சார்ட் கிட்டத்தட்ட ஒரு பத்தடிக்கு பத்தடி இருந்தது. அவ்வளவு பெரிய சார்ட் இதுவரை நான் பார்த்தது இல்லை. அதில் ஒரு பெரிய பூமியை வரைந்திருந்தாள். அதில் அதை சுற்றி ரோடுகளால் கட்டப்பட்டதைபோல் இருந்தது. அந்த பூமிக்கு கண் மூக்கு வாய், வரைந்து ஒரு மனித முகம் போல் இருந்தது.

“என்ன ரம்யா இது…?” என்றான் ஷகீல்.

“இங்க இப்ப ஒருத்தர் வரைஞ்சிட்டு இருந்தார்டா.. எனக்கு சொல்லிக்குடுக்க சொன்னேன். எனக்குதான் வாட்டர்கலர் வரைய வராதே.. ஆனா ஆசை. அவர் சொல்லிக்குடுத்து போனார். இதுபார் … இதான் பூமி. அது தன்னை பத்திரமா பாத்துக்கோங்கன்னு நம்மை பாத்து சொல்றமாதிரி வரைய தோணுச்சி. ஏதோ திடீர்னு தோண இதுபோல வரஞ்சேன்… நல்லாருக்கா?” என்றாள் ரம்யா.

நாங்கள் ஜீவாவை பார்க்க, அவன் எப்போதும் போல அந்த கள்ளப்புன்னகையை வீசினான்.

மாயாஜாலம் தொடரும்…
​
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom