Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

ரொம்ப நன்றி சகி 🥰🥰🥰
 
உயிரான உறவைத் தேடி..!

உறவின் தேடல் -01​


நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

- என்று அலைபேசியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை ஒரு வரி விடாமல் கேட்டவனது இதயம் இருமடங்கு வேகமாகத் துடித்து அடங்கியது. அந்தப் பாடலின் வரிகளுக்கு ஏற்ப தன் வாழ்வும் திசைமாறிப் போனதேனோ? இந்தப் பாடலில் வருவது போல் இந்தத் தனிமையும் தன்னைக் கொல்லாமல் கொல்வதேனோ? என்று எண்ணியவனின் எண்ணங்கள் யாவும் அவளே! ... அவள் ஒருவள் மட்டுமே.‌ அவளுக்காக எதையும் செய்யும் இதயம் கொண்டவன் அவளுக்காக அவளையே விட்டுக் கொடுத்துவிட்டு இப்போது தனிமையில் அவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறான்.
யார் இவன்? அவள் யார்? இவனது இந்நிலைக்குக் காரணமென்ன தெரிந்துகொள்ளப் பயணியுங்கள் உயிரான உயிரைத் தேடி.....

நியூயார்க் நகரம்..

இரவு மணி 11..00
ஆங்காங்கே பார்ட்டி நடப்பதற்காக மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும் ஊரில் ஒரு மயான அமைதி தென்பட்டது. அந்த அமைதி, அந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் ஒரு பிளாட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்துக் கொண்டு இருப்பவனுக்கு இல்லையோ, என்னவோ! அவனது நெஞ்சம் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது.‌ அவனது பெரும்பாலான தனிமையை இந்த மொட்டைமாடி தான் களவாடிக்கொண்டது. மீண்டும் எனக்கான பரீட்சை ஆரம்பமா? அல்லது ஏற்கனவே எழுதிய தேர்வின் முடிவா? அந்த ஊருக்கு நான் மீண்டும் செல்வதா? அதுவும் அவளைப் பார்க்கக் கூடாதென்ற என் முடிவை மாற்றிக் கொண்டு போகணுமா? அவளுக்காக அவளையே தள்ளி வைத்து விட்டு மீண்டும் அங்கே நான் செல்வதா? அவள் வாழ்விற்காக எல்லாத்தையும் இழந்துவிட்டு அநாதையாக வந்த நான் மீண்டும் அவளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் அந்த ஊருக்கு செல்ல வேண்டுமா? என்று எண்ணியவனுக்கு எவ்வளவு முயன்றும் தன் விழிகளில் இருந்து கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை..

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் கதறியவன் தான் அழும் சத்தம் வெளியே வராதவாறு, கையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதான். அழுதழுது ஓய்ந்து போனவன் கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டான். விழிகளை மூடினாலும் அவள் முகமே! விழிகளைத் திறந்தாலும் அவள் முகமே! கடந்துசென்ற இத்தனை வருடங்களில் ஒரு நொடி கூட அவளை அவன் மறந்தது கிடையாது ஆனால் அவள்? என் பெயரையாவது நினைவில் வைத்திருப்பாளா?

எண்ணங்களிலிருந்து மட்டுமல்ல அவள் வாழ்வில் இருந்தும் என்னை முற்றிலுமாகத் தூக்கி எறிந்து விட்டவளுக்காக மீண்டும் தான் அங்குச் செல்ல வேண்டுமா? உடைக்கப்பட்ட இதயம் மீண்டும் ஒட்டப்படுமா? அல்லது உடைந்து போனதும் உருத்தெரியாமல் அழிந்து போகுமா?

என்ன முடிவெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனிடத்தில்.. அவன் முடிவை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றத்தின் பிடியில் சிக்கி உறக்கத்தில் இருக்கும் அவன் பெற்றோர்கள். ஒரு ஊரே தன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழ்நிலை. அடுத்து என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.

எவ்வளவு சிந்தித்தும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தவன் தன்னை அறியாமல் அமர்ந்த நிலையிலேயே உறங்கிவிட்டான். காலையில் பறவைகளின் ரீங்காரத்தையும் மீறி பாட்டுச் சத்தம் செவியைத் துளைக்க உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான் அவன்..

‘யாருடா அது காலையிலையே இப்படிப் பாட்டைச் சத்தமா வச்சு டென்ஷனை ஏத்துறது’ என்று நினைத்தவாறு விழிகளை முழுதாகத் திறந்து எழுந்து நின்றவன், கைகளைக் குவித்துச் சூரியனுக்கு வணக்கம் வைத்து விட்டு உடலை இடது வலதுமாகத் திருப்பி நெட்டி முறித்தான். பின்பு கீழே இறங்கி செல்லலாம் என்று நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான்..

சற்று முன்பு வரை அவன் மட்டுமே இங்கு உறங்கி இருப்பதாக எண்ணியிருந்தான். ஆனால் தன் அருகில் படுத்திருந்த நபரை கண்டு அதிர்ந்தவன் மறுநிமிடமே இதழில் புன்னகை தேக்கியவாறு, “அம்முகுட்டி நீங்க எப்ப செல்லம் இங்க வந்து தூங்குனீங்க?” என்று கேட்டவாறு நான்கு வயதே நிரம்பிய பெண் குழந்தையைத் தூக்கி தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தவாறே கீழே இறங்கி சென்றான். குழந்தையோ இன்னும் வாகாக அவன் தோளில் சாய்ந்து உறக்கத்தை தொடர்ந்தது. அவன் அறையில் தூங்கிய குழந்தை நடு இரவில் தந்தையைத் தேடி அழவும்,‌அவனது தாய் தான் குழந்தையைக் கொண்டு வந்து மேலே விட்டு விட்டு சென்றிருந்தார்.

அவன் கீழே இறங்கி வருகையில் ஹாலில் அவனது தாய் தந்தையர் அமர்ந்திருக்க, குழந்தையுடன் தனது அறைக்குள் நுழைந்தவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பிள்ளையையும் விழிக்க வைத்து சுத்தப்படுத்தி வேறு உடை மாற்றி விட்டு தூக்கி கொண்டு வெளியே வந்தான். அவன் முகத்தினை எதிர்பார்ப்புடன் பார்த்தார் தந்தை. அதைக் கவனமுடன் தவிர்த்தவன் கிச்சனுக்குள் நுழைந்து ரெடிமேடாக இருக்கும் காப்பிப் பவுடரை பாலில் கலந்தான்.‌ பிள்ளைக்குப் பாலும், தனக்குக் காபியும் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தான்..

தன் தந்தை கண் ஜாடையால் தாயிடம் ஏதோ சொல்வது அவனுக்கும் புரிந்தது. இருந்தும் அவர்கள் வாயிலிருந்தே எதுவா இருந்தாலும் வரட்டும் என்று பொறுமை காத்தான்.‌முழு செய்தியும் அவனது செவியை வந்தடையவில்லை. ஆனால் அரசல் புரசலாக அவர்கள் இங்கு வந்திருப்பதற்கான நோக்கம் அவனுக்கும் தெரியும். அவர்கள் மேம்போக்காக விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே தவிர முழுமையாக எதையும் சொல்லாதது போலவே அவனுக்குத் தோன்றியது. அதனால் தான் அமைதி காத்தான்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட அவனது தாய் அஞ்சலை,
“கண்ணு..‌ உங்கிட்ட கொஞ்சம் பேசோணும்?” என்றிட.

சடாரென்று நிமிர்ந்து தன் தாயை பார்த்தவன், “இந்த மாதிரி நீங்க கூப்பிடறதுக்கு அஞ்சு வருஷம் ஆகிடுச்சுங்க அம்மா. இம்புட்டு நாளா தெரியலையோ நான் உங்க கண்ணுன்னு. நீங்க பெத்த மகன்னு? இப்பதான் கண்ணுக்கு தெரிஞ்சனாக்கும்?” என்று கேட்டவன் தாயின் வாடிய முகத்தைக் கண்டு தாங்க மாட்டாதவனாய் முயன்று தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான்.

பின்பு தன் மடியில் அமர்ந்திருந்த குழந்தையிடம், “அம்முகுட்டி நீங்க போய் உங்களோட ரூம்ல விளையாடுவீங்களாம். அப்பா, தாத்தா பாட்டிக்கிட்ட எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு அப்புறம் வந்து கூப்பிட்டுக்குவனாம் சரியா!”என்று கொஞ்சலாய் சொல்ல.
குழந்தையும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, “ஓகே டாடி..” என்று சொல்லி விட்டு அதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த விளையாட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியது.

மறுநிமிடம் விருட்டென்று எழுந்து நின்றவன், “நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு முழுசா தெரியாது. ஆனா என்னை உங்களோட கூப்பிடாதீங்க, என்னால மறுபடியும் அந்த ஊருக்கு வர முடியாது. நான் இன்னும் பழசை மறக்கலை. மறுபடியும் அந்த ஊருக்கு வர்ற அளவுக்கு என்னோட உடம்புலையும், மனசுலையும் தெம்பு இல்லை” என்று இறுக்கமான முகபாவனைகளோடு சொன்னான்.

“சின்னப் புள்ளைய வச்சுக்கிட்டு இப்படியே வாழ்க்கை முழுக்கத் தனியாளாவே இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டியாடே?’ என்று கடுமையான குரலில் கேட்ட தன் தந்தை சிவசுப்ரமணியத்தைக் கண்டு கடுப்பானான் அவன்‌

“எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டே ஏன் என்னைய வற்புறுத்துறீங்க. எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு என்னைய அங்க கூப்பிடுறீங்க? நான் செத்தாலும் சாவனே தவிர அந்த வீட்டுக்கு மட்டும் இல்ல, அந்த ஊருக்குமே என்னால வர முடியாது. வர முடியாதுன்னா முடியாதுதான் தேவையில்லாம என்ன கூப்பிடாதீங்க? அப்புறம் நான் பேசுற விதமே வேறையா இருக்கும்”

“என்னமோ உனக்குக் கல்யாணம் பண்ணி வெக்கிறதுக்குக் கூப்பிடுற மாதிரி எடுத்தெறிஞ்சு பேசாதடே தேவேஷ்வர்? எங்களோட சூழ்நிலை சரியில்லை, அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இதுவரைக்கும் வராத வீட்டுக்கு, எங்களைக் கூப்பிடாத, உன்னோட வீட்டுக்கு நாங்களா மானங்கெட்டு போய் வந்துருக்கோம்.‌”

“நான் ஒன்னும் உங்களை வாங்கன்னு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கலை”

“நாங்களும் உன்னோட வீட்ல உட்காந்து விருந்து சாப்ட வரலைடே. ஒரு அப்பாவா உன்னை அங்க வாடேன்னு சொல்றது என் கடமை. ஒரு மகனா அப்பனோட சொல்லைக் காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை, அதை நீ கண்டிப்பா நிறைவேத்தித்தேன் ஆகோணும்”

“நீங்க என்ன சொன்னாலும் சரி இப்ப என்னால ஊருக்கு வர முடியாது. நீங்க ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போறதுனாலும் போலாம், இல்ல இப்பவே கிளம்புறதா இருந்தாலும் கிளம்பலாம்” என்று தேவேஷ்வர் சொல்லி முடிக்கும் முன்பே அவனது தாய் அஞ்சலை நெஞ்சை பிடித்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்து விட ஓடிச்சென்று தன் தாயை தாங்கினான்.

பதற்றத்தோடு, “என்னாச்சுங்கம்மா? என்ன பண்ணுது?” என்று கேட்டவாறே அவரைச் சாய்த்து படுக்க வைத்து விட்டு பரபரவென்று அவரைப் பரிசோதிக்க ஆரம்பித்தான்.

தன் அறையில் எப்போதும் அவசரத்திற்கு உதவும் என்று வைத்திருந்த மருத்துவ உபகரணக் கிட்டை எடுத்துக் கொண்டு வந்து தன் தாயின் பிபி-யை பரிசோதித்தான். ரத்த அழுத்தத்தின் காரணமாகத் தான் அவர் மயங்கி சரிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவருக்கு முதல் உதவி செய்து, குடிப்பதற்குச் சற்று சூடாக இனிப்புச் சுவையுடன் கூடிய பழச்சாற்றைக் கொடுத்து அவருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதற்குப் பிறகே தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

பின்னர்த் தன் கோபதாபங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு,‌ அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்க முடிவு செய்தவனாய்,
“சொல்லுங்கப்பா எதுக்காக என்னைய ஊருக்கு கூப்பிடுறீங்க? நேத்து நீங்க என்ன சொன்னீங்கங்குறதை என்னால கவனிக்க முடியல. அங்கே ஏதோ பிரச்சனை அப்படின்னு சொன்ன மாதிரிதான் தெரிஞ்சுது.‌ சப்போஸ் நம்ம நிலத்தை எதையாவது விக்கிறதுக்காகத்தேன் என்னைய வர சொல்றீங்களா?” என்று கேட்டான்.

‘இல்லை' என்று சொல்ல வந்த தன் மனைவியைச் சொல்லாதே என்பது போல் விழிகளால் சைகை செய்து தடுத்து நிறுத்திய சிவசுப்ரமணியம், “இங்க பாரு தேவேஷ்வர் நாங்க உன்னைய கட்டாயப்படுத்தல. ஆனா நாங்க வந்த விடயத்தைச் சொல்லிடுறோம். எதுக்காக நீ ஊரை ஒரு விட்டு வந்தேன்னு முழுசா எங்களுக்குத் தெரியாதுடே.‌ ஆனா நடக்க இருந்த பெரிய வீட்டு நல்ல நிகழ்ச்சியை நிறுத்திட்டு வந்துட்டேன்னு மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்டே.‌ அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு, என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியாது. அதே போல நீ எங்க போனன்னு எங்களாலையும் கண்டு பிடிக்க முடியலைடே. ஏன் உன்னைக் கண்டுபிடிக்கிறதுக்கே எங்களுக்குக் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாகிடுச்சு. இதுக்கு மேலையும் எல்லாத்தையும் மறைச்சு வச்சு, எல்லாருக்கும் கஷ்டத்தைக் குடுக்காத தேவ் ‌ ஊரை விட்டு வந்த, இங்கையே கல்யாணம் பண்ணுன, குழந்தை இருக்கு இதெல்லாம் வேற விடயம். உன் புள்ளை பொறந்ததைக் கூட நீ மறைச்சுட்ட அந்தளவுக்கு நாங்க உனக்கு வேண்டாதவங்களா போயிட்டமாடே. சரிவிடு அதெல்லாம் முடிஞ்சு போனது. ஆனா இப்ப நாங்க கேட்குறது ஒன்னே ஒன்னுதேன்.‌ எங்கம்மா, அதான் உங்க அப்பத்தா அங்க சாகக் கெடக்கா. கடைசியா என் பேரன் முகத்தைப் பாக்கோணும், அவனைக் கூட்டியாந்து காட்டுங்கன்னு சொல்லி இழுத்துக்கிட்டு கிடக்கா. அதை ஒரே ஒரு தடவை வந்து பார்த்துட்டு வந்துருடே? அதுக்கப்புறம் நாங்க யாரும் உன்னைய தொந்தரவு பண்ண மாட்டோம். அதுக்கப்புறம் மத்ததை எல்லாம் நாங்களே பாத்துக்கிடுறோம், நீ பாட்டுக்கு உன் பிள்ளையோட மறுபடியும் இங்கையே வந்துடுடே அதை நாங்க தடுக்க மாட்டோம்” என்று சொன்னவர் மனைவியிடம் சைகையால் எதுவும் சொல்லாதே என்று சொன்னார்.

அஞ்சலையோ குழப்பத்துடனே தன் கணவரைப் பார்த்து வைத்தார். தந்தை சொன்னதை வைத்து பார்க்கும் போது தன்னைத் தூக்கி வளர்த்து, தன்னிடம் மிகவும் அன்பாக இருக்கும் அப்பத்தா உடம்பு முடியாம கெடக்குறாங்க என்ற செய்தியே அவனை வருத்தியது. அவன் அங்கிருந்து வந்து விட்டாலும் அங்கு நடப்பவற்றை ஒன்றைக் கூட அவன் தெரிந்து கொள்ள இதுவரை முயன்றது கிடையாது. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்‌ முடிந்து விட்டதென்று எண்ணி முடியுரை எழுதியதற்குப் பிறகு, அதற்கு ஏன் மீண்டும் முன்னுரை எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியதால், அவன் இதுவரை அந்த ஊரைப் பற்றிச் சிந்தித்தது கிடையாது.

ஆனால் கடந்து சென்ற இந்த ஐந்து வருடங்களில் அங்கே என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நினைத்தவனுக்கு முதலில் வந்து நின்றது அவனவளின் நினைவு தான்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவன் சிறிது நேரத்திற்குப் பிறகு, ”உங்களுக்காக இல்லை. என்னை ஆசையா எடுத்து வளர்த்த, என் மேல பாசமா இருக்க என்னோட அப்பத்தாவுக்காக வர்றேன். ஆனா வந்து பார்த்துட்டு அடுத்த நிமிஷமே கிளம்பிடுவேன், என்னை அங்க இருக்கணும்னு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது சொல்லிட்டேன். பாப்பாவ பாத்துக்குங்க, அவ எந்த இடைஞ்சலும் பண்ணமாட்டா. கொஞ்ச நேரத்துல பாப்பாவை பாத்துக்குறவங்க வருவாங்க, அதுக்கப்புறம் அவங்க அவளைப் பார்த்துக்குவாங்க, நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ஈவினிங் வந்து இதைப் பத்தி பேசலாம்” என்று சொல்லிவிட்டு அவனது நிறுவனத்திற்குக் கிளம்பினான்..

மகன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே பேத்தி இருந்த அறைக்குள் நுழைந்தனர் பெரியவர்கள் இருவரும். அங்கே தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அம்முக்குட்டி என்று தேவேஷ்வரால் அழைக்கப்பட்ட சுடர்மதி. குழந்தையை நெருங்கிய சிவசுப்ரமணியம்,
“பாப்புக்குட்டி தாத்தாக்கிட்ட வாங்க” என்று கை நீட்டி ஆசையாக அழைத்தார்.

குழந்தையோ நேற்று முதன்முதலாகத் தங்கள் வீட்டிற்கு வந்தவர்களை முதலில் மிரட்சியாகப் பார்த்தது. பின்பு தந்தை சொன்னதும் அவர்களிடம் பேசியது. ஆனால் வெளியில் சென்று விட்டு வரும்போது தன் தந்தை வாங்கி வருவதுபோல் தனக்குத் தின்பண்டங்களோ, பொம்மைகளோ வாங்கி வராமல் வெறும் கையோடு வந்த அவர்கள் இருவரையும் முறைத்த குழந்தை தன் மழலை குரலில்,
“நீங்க எனக்கு எதுவுமே வாங்கிட்டு வரல தான பேசாதீங்க போங்க” என்று சொன்னவாறு அவர்களுக்கு முதுகு காண்பித்து அமர்ந்து கொண்டது.
குழந்தையின் பாவனையில் தங்களையும் மீறி இருவரும் வாய்விட்டு சிரித்தனர் வெகு நாளைக்குப் பிறகு..

”சரிடா தங்கம். சாயங்காலம் கடைக்குப் போயி உனக்கு வேண்டியதை வாங்குவோம் சரியா! இப்ப பாட்டிக்கிட்ட வாங்கடி என் பட்டுத்தங்கக் குட்டி” என்று சொல்லியவாறு குழந்தையைத் தூக்கி கொஞ்சினார் அஞ்சலை.

பிறந்ததிலிருந்து தன் தாயைப் பார்த்திடாத அக்குழந்தை தன்னைத் தூக்கி கொஞ்சிய அஞ்சலையின் கழுத்தோடு தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டு அவரது கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து இழைந்து, “நீங்க இங்கையே இருப்பீங்களா பாட்டி? இப்படித் தினமும் என்னைத் தூக்கி கொஞ்சுவீங்களா? நான் அம்மாவை பார்த்ததே இல்லை, எனக்கு அம்மாவே இல்லை. அப்பா தான் எனக்கு எல்லாமே செய்வாங்க.‌ அப்பா சோ ஸ்வீட் தெரியுமா!. அந்தக் கரண், வினித், ஜோன் , சுஷ்மிக்கு எல்லாம் அம்மா இருக்காங்க. அம்மா தான் சோறு ஊட்டுவாங்க. எனக்கு ஏன் பாட்டி அம்மா இல்லை” என்று தனக்கு ஏன் அம்மா இல்லை என்ற கேள்வியோடு தன் ஏக்கத்தையும் விதைத்துக் கேட்டாள் தனக்குத் தெரிந்த விதத்தில்..

‘சரிடா குட்டி அம்மா இல்லனா என்ன, உனக்குச் சீக்கிரமே புது அம்மா வருவாங்க சரியா!’ என்று சொல்ல துடித்த தன் நாவைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார் அஞ்சலை‌. எங்கே குழந்தையிடம் தான் அதைச் சொன்னால், குழந்தையின் மூலம் தன் மகனின் காதுக்கு அந்தத் தகவல் சென்று விடுமோ? அப்படிச் சென்றால் மீண்டும் அவனை மலையிறக்க பெரும் பாடுபட வேண்டி இருக்குமோ? என்பதாலையே அவர் அந்த வார்த்தைகளைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டார்..

ஆனால் பிள்ளையை சமாதானப்படுத்தும் வகையில்,
“சீக்கிரமே நாமெல்லாம் ஒன்னா இருக்கலாம்டா” என்று சொன்னார் அஞ்சலை. குழந்தையும் அதைக் கேட்டு தலை சாய்த்து அழகாக புன்னகைத்தது.

இவர்கள் இருவரும் குழந்தையாய் மாறி அம்முக்குட்டியுடன் விளையாடி கொண்டிருக்கும் போது சிவசுப்பிரமணியனின் அலைபேசி இசைத்தது. அழைப்பை ஏற்றுக் காதல் பொருத்தினார். அந்தப்பக்கம் என்ன செய்தி சொல்லப்பட்டதோ கோபத்தில் கொதிக்க ஆரம்பித்து விட்டார்.

“என்னடே சொல்றீங்க நெஜமாவா? அம்புட்டு அவசர அவசரமா அவிங்க அப்புடி பண்றதுக்கு என்னடே அவசியம் வந்துச்சு. ஒருவேளை நாங்க ஊருக்கு வந்த விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா என்னடே?” என்று கேட்க, மீண்டும் அந்தப் பக்கம் ஏதோ சொல்லப்பட்டது.

“ஓகோ அந்தப் பயலுக நல்லது நடக்க விடக்கூடாதுன்னு நினைக்கிறாய்ங்களோ? இந்தச் சிவசுப்ரமணியம் உசுரோட இருக்க வரை அவிங்க நினைக்கறது நடக்காதுடோய். நான் சொல்றதைச் செய். நாளை பொழுது சாயறதுக்குள்ள என்ற மகனோட நான் நம்ம ஊருக்கு வந்தர்றேன்‌. அதுக்குள்ள அவிங்க எதுவும் பண்ணாம பார்த்துக்கிடு. நம்ம ஆளுங்களை எல்லாம் கூட்டிட்டுபோ. தேவைப்பட்டா சின்னவனையும் கூடக் கூட்டிக்கிடு சரியா! சூதானமா பண்ணுங்கடே இதுனால யாருக்கும் எந்தக் கெட்டப்பேரும் வரக்கூடாது அதையும் பார்த்துக்கிடு. நாங்க வார வரைக்கும் அதை அப்படியே ஒத்திப் போட வேண்டியது உன் னோட பொறுப்பு. இல்லையின்னா ஊருக்கு வந்து தோலை உரிச்சு போடுவென் பார்த்துக்க ” என்று கோவத்தோடு சொல்லிவிட்டு அலைபேசியைக் கீழே வைத்தவர்,
“இவிக சொன்னா கேட்க மாட்டானுவ அஞ்சலை. நாம எப்படியாவது நம்ம மவனை ஊருக்கு கூட்டிட்டுப் போனா தான் அம்புட்டும் சரிப்பட்டு வரும். இதுப்பத்தி நான் அவங்கிட்ட பேசுறேன் நீ பாப்பாவுக்குச் சோறு ஊட்டு” என்று சொன்னவாறு வெளியே வந்தார்.
சிவசுப்பிரமணியம்.

பெற்ற மகனைப் பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.‌இந்த ஐந்து வருடத்தில் எத்தனை நிகழ்வுகளை அவர் கடந்திருப்பார். எத்தனை அவமானங்கள், ஏச்சு பேச்சுகளைச் சந்தித்திருப்பார். அனைத்தையும் தூசு போல் தட்டி விட்டு சென்றவருக்குத் தற்போது நிகழும் நிகழ்வையும், இனி நிகழப் போகும் நிகழ்வையும் எண்ணி நெஞ்சு பதறியது. தான் மறைத்த விடயங்கள் மகனுக்குத் தெரிந்து விடுமோ? என்ற அச்சமே அவரைத் தவிப்புக்கு உள்ளாக்கியிருந்தது.

நேசத்திற்காக
உயிரைக் கொடுப்பது
ஒருவித காதலென்றால்..!
நேசித்தவளுக்காகத் தன் நேசத்தையே விட்டு
கொடுப்பதும் ஒரு வித
காதல் தான்...

- தேடல் தொடரும்.....

 
உறவின் தேடல் -02

தனது அலுவலகம் இருக்கும் சாலையில் காரைத் திருப்பினான் தேவேஷ்வர். மனம் ஏனோ தந்தை மற்றும் தாய் சொன்ன நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த ஊருக்கு செல்வது? என்ற நினைவு ஒரு புறம் தாக்கினாலும், மறுபுறம் தேவையற்ற நினைவுகளும் வந்தன. அவை அவனை அலைகடல் போல் பரவி விரிந்த, தவறி விழுந்தால் மீள முடியாத அளவுக்கு ஆழத்தைக் கொண்ட சோகத்தினுள்ளே மீண்டும் தன்னைத் தள்ளுவது போல் தான் உணர்ந்தான். அவனது நினைவுகள் எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் கவனம் முழுவதும் சாலையில் தான் இருந்தது.‌ ஒரு வழியாகத் தன் அலுவலகம் இருக்கும் கட்டிடத்திற்குள் காரை செலுத்தியவன் கதவை திறந்துவிட்டு சல்யூட் வைத்த காவலாளிக்குக் கார் கண்ணாடியை இறக்கி சின்னத் தலையசைப்பைக் கொடுத்து விட்டுப் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தினான்.

வழுவழுவென்று இருந்த தரையையும், அதன் நேர்த்தியும், அழகும்,‌மினுமினுப்பும் அவனது வளர்ச்சியையும், செல்வ செழிப்பையும் பறைசாற்றுவது போலிருந்தது. கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கியவன் குனிந்து காரின் உள்ளே இருந்த பைல்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நிமிரும் வேளையில் வியர்க்க விருவிருக்க அவன் முன்னால் நின்றிருந்தாள் அவள்.

பார்ப்பதற்கு மாம்பலத்தில் செய்து வைத்த செப்புச் சிலையென நின்றிருந்தாள். மஞ்சளும், இளஞ்சிவப்பு நிறமும் கலந்த நிறத்தில் உடலை இறுக்கிப் பிடித்திருந்த உடையோடும், மேக்கப்பின் தயவால் மிளிர்ந்த வெள்ளை முகத்துடனும் அவன் முன்னால் நின்றிருந்தாள்.

இதழில் அதிகளவு உதட்டுச்சாயம் பூசப்பட்டிருந்தது. அதன் விளைவு அவளது இதழ்கள் செக்கச் செவேலெனச் செர்ப்பழத்தைப் போல் கண்களுக்கு விருந்தளித்தன. கண்ட கண்ட மாவையும் கன்னத்திலும் முகமெங்கிலும் அப்பியிருந்ததன் விளைவு அவளைப் பனியில் செய்து வைத்துப் பொம்மை போலக் காண்போரின் கண்களுக்கு விருந்தாக்கியது.

அவ்வளவு நெருக்கத்தில் அவள் நிற்பாள் என்று எதிர்பார்த்திடாத தேவ்வோ ஒரு நிமிடம் அதிர்ந்து மறுநிமிடமே ஓரடி பின்னால் நகர்ந்து நின்றவன்,
“என்ன மிஸ். ஆஷ்விதா இப்படித்தான் இடிக்கிற மாதிரி க்ளோசா வந்து நிப்பீங்களா? நான் உங்கக்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன் என்கிட்ட பேசும் போதும் சரி, என்னோட ரூமுக்கு வரும் போதும் சரி நம்ம ரெண்டு பேத்துக்கு இடையில நாலடி டிஸ்டன்ஸ் இருக்கணும்னு. அப்படி இருக்கும் போது நீங்க இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம்? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?” என்று சற்றுக் கோபமான குரலில் சொன்னவன்,
“இப்ப எதுக்கு இந்த மாதிரி அவசர அவசரமா வந்து நிக்கிறீங்க?” என்று மீண்டும் எரிந்து விழுந்தான்.

அவளோ அவன் திட்டிய பிறகும் கூட அங்கேயே நின்றிருந்தவள்,
“இல்ல சார் அது வந்து..”என்று எதையோ சொல்ல முடியாமல் மழுப்பலாகப் பேசியவள் வளைந்து குனிந்து நெளிந்திட. அப்பட்டமாக அவள் அவனிடம் வழிவது போலவே அவனுக்குத் தோன்றியது.

‘ ச்சை நீயெல்லாம் ஒரு பொண்ணா?’ என்ற அர்த்தத்தில் ஒரு பார்வையை அவள் புறம் செலுத்தி விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்து அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

டி.எம்.வி சொல்யூஸன்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தவன் எதிர்ப்பட்ட பணியாளர்கள் வணக்கம் வைத்ததை ஏற்றுக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு இன்னும் கோபம் அடங்கிய பாடில்லை.

“இந்த ஆஷ்விதா பொண்ணு வர வர பண்றது கொஞ்சங்கூடச் சரியில்லை. பப்ளிக் ப்ளேஸ்ல இப்படிப் பண்றா? பாக்குறவங்க என்னையும் சேர்த்து தானே தப்பா நினைப்பாங்க. அது ஏன் அவளுக்குப் புரிய மாட்டேங்குது” என்று சொல்லி அவன் புலம்பிட.

‘அப்ப தனியா, ரூம்ல உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டா பரவாயில்லையா?’ என்று கேட்ட மனசாட்சியைக் காரித்துப்பித் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பியூனை அழைத்து வரச்சொன்னான்.உள்ளே வந்த பியூனிடம் சூடாக ஒரு காஃபி கொண்டு வரசொல்லி விட்டுக் காத்திருக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் காஃபியும் வந்தது. அதைக் குடித்து விட்டு சற்றே தன் மனநிலையைச் சகஜமாக்க முயன்றான்.

அடுத்தப் பதினைந்து நிமிடத்திற்குள் உள்ளே நுழைந்தாள் ஆஷ்மிதா. அவளது முகத்தில் சற்று முன்பிருந்த மேக்கப் அனைத்தும் துடைக்கப்பட்டிருந்தது. ஏன்? என்று நினைத்தாலும் வேறு எதுவும் அவன் கேட்கவில்லை. அவளோ நேராக அவனிடம் தன் கையிலிருந்த லெட்டரை நீட்டினாள். அவன் அவளை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு,
“என்ன மிஸ் ஆஷ்விதா? என்ன லெட்டர் இது?” என்று அவளிடமே கேட்டான்.

அதற்கு அவளும், “என்னோட ரெசிக்னேஷன் லெட்டர் சார்” என்றாள் அலட்டலின்றி.

“நீங்க வேலையை விட்டு நிக்கிறீங்களா? ஏன்?”

“நான் வந்த நோக்கம் நிறைவேறலை அதனால தான் வேலையை விட்டு நிக்க முடிவு பண்ணிட்டேன் சார்” என்று சொன்னவளைக் குழப்பமான முகத்துடன் பார்த்தவன்,
“என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க மிஸ்.ஆஷ்விதா” என்று அவன் கேட்டான்.

அவன் முகத்தைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பி நின்று கொண்டாள் ஆஷ்விதா. பிறகு,
“நீங்க நினைக்கிற மாதிரி நான் சாதாரணப் பேமிலியை சேர்ந்தவளும் கிடையாது. இங்க சம்பளத்துக்காக வேலைக்கு வரவும் கிடையாது” என்று சொன்னாள்.

“வேற... வேற.. எதுக்காக இங்க வேலைக்கு வந்தீங்க?” என்று கேட்டவனின் பார்வை கூர்மையாக அவளை நோக்கியது.

“அதைச் சொல்றதைப் பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல சார். எனக்கு எதையும் மறைச்சுப் பேசுற பழக்கம் கிடையாது” என்றவள் இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து, அவன் விழிகளை நேருக்கு நேராகச் சந்தித்து,“உங்களைப் பார்த்த முதல் நொடியில இருந்து நான் உங்களை விரும்புறேன் சார்.‌ உங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன். நான் எப்படி உங்களைப் பார்த்தேன், எங்க பார்த்தேங்குறது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நான் உங்களை முதல் தடவையா பார்க்கும் போது நீங்க இந்தக் கம்பெனியை ஸ்டார்ட் பண்ணவே கிடையாது. அப்ப நான் எப்ப உங்களைப் பார்த்திருப்பேன், எத்தனை வருஷமா உங்களை விரும்புறேங்குறதை நீங்களே கணக்கு போட்டுக்குங்க. ” என்றாள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக.

“என்ன சொல்றீங்க ஆஷ்விதா?” என்று கேட்டவாறு அதிர்ச்சியோடு எழுந்து நின்றவன், “நீங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருக்குது” என்றான் அவளுக்குப் புரிய வைத்து விடும் விதமாக.

“எனக்குத் தெரியும் உங்களுக்கு மேரேஜ் ஆகி, உங்க வைஃப் இறந்ததும் எனக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்குறதும் எனக்குத் தெரியும். அது மட்டும் கிடையாது இப்ப உங்க வீட்டுக்கு உங்க அப்பா அம்மா வந்திருக்காங்க அது வரைக்கும் எனக்கு எல்லாத் தகவலும் தெரியும். எப்படித் தெரியும், எதுக்காக இதெல்லாம் நான் சேகரிக்கிறேங்குறதை நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் நீங்க தெரிஞ்சுகிட்டா போதும்” என்றவள் அவன் அதிர்ந்து நின்றிருப்பதைக் கண்டு விட்டு ஒரு நிமிடம் அமைதி காத்தாள்.

பின்பு,‌“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை ஒரு பார்வை பார்த்தீங்க பாத்தீங்களே? அதை என்னால எப்பவும் மறக்கவே முடியாது.நீங்க என்னை அலட்சியமா பாத்துருந்தா கூட நான் இந்தளவுக்கு வருத்தப்பட்ருக்க மாட்டேன். ஆனா மத்த பொண்ணுங்க மாதிரி என்னையும் நெனச்சுட்டீங்கல்ல. இகழ்ச்சியா, அருவருப்பா ஒரு பார்வை பாத்துட்டு உள்ளே போனீங்க பாத்தீங்களா அந்த நிமிஷம் எனக்கு உயிரே போன மாதிரி இருந்துச்சு. உங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே உங்க முகம், இங்கே இந்த நெஞ்சுக்குள்ள வந்துருச்சு. இதுக்கு மேல என்ன நடந்தாலும் அதை என்னால வெளிய கொண்டு வர முடியாது. நான் செத்தாலும் அதுமட்டும் முடியவே முடியாது.

அதே போல நான் நேசிக்கிறவரோட கண்பார்வையில நான் தப்பானவளா தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன் அதனால தான் வேலையை ரிசைன் பண்ணிட்டு போறேன். ஆனா இப்ப போயிட்டாலும் திரும்பி வருவேன். எப்பன்னு கேட்குறீர்களா? நீங்க இன்னொரு மேரேஜ் பண்ணிக்க முடிவு பண்ணுவீங்க இல்லையா? அப்ப வந்து உங்க முன்னாடி நிப்பேன். அப்போ உங்களோட பதில் என்னவா இருக்கும்னு எனக்குத் தெரியாது, ஆனா அப்ப நீங்க எனக்கு என்ன பதில் சொல்றீங்களோ அதை வச்சு தான் என்னோட மீதி வாழ்க்கை எந்தப் பக்கம் போதும்னு நான் முடிவு பண்ணனும். அது வரைக்கும் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் பாய்” என்று சொன்னவள் விறுவிறுவென்று அந்த அறையிலிருந்து வெளியேறி சென்று இருந்தாள்.

அவள் சென்ற பின்பும் இவன் தான் பித்துபிடித்தவன்போல நின்றிருந்தான்.
வெகு நேரத்திற்குப் பிறகு அவனுக்கு வந்த அலைபேசி அழைப்பால் தான் தன்னிலை பெற்றவன்.‘கடவுளே இந்தப் பொண்ணு என்னை இப்படிச் சொல்லிட்டு போறா? எனக்கு இன்னொரு கல்யாணமா? ஏற்கனவே ஒருத்தியை மனசில வச்சிகிட்டு வாழவும் முடியாம சாகவும் முடியாம துடியா துடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும் போது இந்தப் பொண்ணு வேற என்னைக் குற்ற உணர்ச்சியில் தள்ளிடுவா போலையே? எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ?’ என்று தன்னைப் போலப் புலம்பி கொண்டிருந்தவன். சிறிது நேரத்திற்குப் பிறகே, அடித்து அடித்து ஓய்ந்து போன அலைபேசியை எடுத்து யார் அழைத்ததென்று பார்த்தான்.

அப்போது மீண்டும் அழைப்பு வரவும் அழைப்பை ஏற்றுப் பேசினான். அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ! கடுப்பானவன், “அப்பா சும்மா சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு என்ன ஊருக்கு வரணும் அவ்வளவுதானே! சரி ஊருக்கு வர்றேன், நாம ஈவ்னிங் கிளம்பலாம் போதுமா! பிளைட் டிக்கெட் புக் பண்ணிடுறேன் தயவு செஞ்சு போன் பண்ணி தொல்லை பண்ணாதீங்க. எதுக்குத் தான் காலையில என்னோட போன் நம்பரை உங்கக்கிட்ட குடுத்துட்டு வந்தனோ? தெரியலை” என்று கடுப்போடு சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

ஊருக்கு செல்ல முடிவெடுத்திருந்தாலும், அவனுக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அவனது தந்தை அலைபேசியில் எதை எதையோ சொல்லி அவனைக் கோபப்படுத்தியதால் ஈவ்னிங்கே கிளம்புவதென்று முடிவெடுத்தான்.

தான் அங்குச் சென்றால் வருவதற்கு எப்படியும் நான்கு நாட்களாவது ஆகும் என்பதால் அனைத்து வேலைகளையும் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தவன் இங்கே தனக்குக் கிடைத்த நண்பனை அலைபேசியில் அழைத்தான். இரண்டு முறையும் அழைப்பு முழுமையாகச் சென்றதே தவிர அழைப்பு ஏற்கப்படவில்லை. அதனால சற்றே கடுப்பானான் தேவ்.

‘கிரகம் புடிச்சவன் போன் பண்ணுனா மட்டும் எப்ப பார்த்தாலும் எடுக்கவே மாட்டான். நைட் எல்லாம் பப்புல போய்க் குடிச்சுட்டு பொண்ணுங்களோட ஆட வேண்டியது. காலையில விடிஞ்சது கூடத் தெரியாம இழுத்து போர்த்திகிட்டு தூங்க வேண்டியது. அப்புறம் லேட்டா எந்திரிச்சு அவசர அவசரமா கிளம்பி ஆஃபீஸ் வர வேண்டியது. ‘ஏன்டா இப்படிப் பண்றன்னு கேட்டா? அதெல்லாம் அப்படித்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்லுவான்.‌ இவனை எல்லாம் நண்பேங்குற பேர்ல என்னோட வாழ்க்கைக்குள்ள அனுப்பி கடவுள் என்னை ரொம்பவே சோதிக்குறாரு’ என்று அவன் புலம்பி தள்ளிய போது,“எக்ஸ் கியூஸ் மீ சார் நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டவாறு உள்ளே வந்தான் ஒருவன்.

அவ்வளவு நேரம் தேவ் எவனுக்கு அழைத்து அழைத்து அழைப்பை ஏற்கவில்லை என்றதும் கடுப்பில் இருந்தானோ அவனே நேரில் வந்து நிற்கவும் வேகமாக எழுந்து சென்று அவன் சட்டையைக் கொத்தாக பற்றி அவனைக் கீழே தள்ளினான் தேவ். அவன் மேல் ஏறியமர்ந்து நெஞ்சு நெஞ்சாக வலிக்காது போல் குத்தியவன்,
“ஏன்டா இப்படிப் பண்ற? உனக்கு எத்தனை தடவ போன் பண்றது? ஏன்டா போனை எடுக்கல” என்று கேட்டவாறு அவனது தலையில் நங்கு நங்கென்று கொட்டினான்.

“எருமமாடு, தடிமாடு, பன்னி கணக்கா வளர்ந்திருக்கடா. இந்தக் கணம் கணக்குற.‌கீழ இறங்கித் தலைடா முதுகெலும்பு உடையிற மாதிரி இருக்கு” என்று அலறியவன் அவனைக் கீழே தள்ளி இப்போது தேவாவின் மீது மெதுவாக ஏறி அமர்ந்து இருந்தான்.

“டிரைவிங்ல இருந்தேன்டா அதனால தான் போனை எடுக்க முடியல. எடுக்காததுக்காக நீ என்னை மனசுக்குள்ள என்னென்ன சொல்லி திட்டியிருப்பன்னு எனக்கு நல்லா தெரியும்டா.”

“திட்டாம தூக்கி கொஞ்சுவனா? நேத்து பப்புக்கு போயிட்டு வந்து லேட்டா தூங்கிருப்ப அதான் எழுந்திரிக்க நேரமாகியிருக்கும் அப்படித் தானே”

“பிசாசே பிசாசே.. சரியான லூசுடா நீ. நான் ஒன்னும் நேத்து பப்புக்கு போகவே இல்லைடா. அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல்லுக்குக் கூட்டிட்டு போயிருந்தேன்..” என்றதும் விளையாட்டைக் கைவிட்ட தேவ்,
“அம்மாவுக்கு என்னாச்சுடா?” என்று கேட்டவாறு அவனை விலக்கி விட்டு எழுந்து அமர்ந்தான்.

“ஒன்னும் இல்லடா அம்மாவுக்கு வீசிங் இருக்குன்னு உனக்கே தெரியும்ல. நேத்து எதையோ நெனச்சுக்கிட்டு கவலப்பட்ருப்பாங்க போல. லைட்டா மூச்சுத் திணறல் வரவும் ஹாஸ்பிடல் கெளம்பி போணோம், வேற ஒன்னும் இல்லடா இப்ப அம்மா நல்லாருக்காங்க. ஆமா உனக்கு என்னாச்சுடா. இன்னைக்கு ஏதோ மாதிரி இருக்க, என்னடா ஆச்சு?” என்று தானும் தன் விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டு விட்டு சீரியசாகக் கேட்டான் விஷ்வா, என்று எல்லோராலும் அழைக்கப்படும் விஷ்வ மூர்த்தி.‌

“உன்கிட்ட என்னன்னு சொல்றதுடா. ம்ம்ம் நிறைய விஷயங்களை உங்கிட்ட இருந்து நான் மறைச்சுருக்கேன் விஷ்வா. ஆனா அதையெல்லாம் மறைக்கணும்னு நான் இன்டென்ஷனா எதையும் செய்யலடா. சொன்னா நீ தாங்க மாட்ட அதான் சொல்லலை. அதே போல சில விஷயங்கள் யாருக்கும் தெரியாம இருக்கறது தான் நல்லது சரியா!”

“ம்ம்.. புரியுதுடா.‌நான் அதெல்லாம் பெருசா எடுத்துக்கல விடு‌.‌ ஆமா எதுக்காக எனக்கு இத்தனை தடவ கால் பண்ணுன? எதாவது முக்கியமான விடயமா?”

“ம்ம்ம்.. அர்ஜெண்டா ஊருக்கு போகணும்டா அம்மா, அப்பா வந்திருக்காங்க. அதனால ஒரு ஒன் வீக்குக்குக் கம்பெனியை நீ தான்டா பார்த்துக்கணும்.‌ இதுநாள் வரைக்கும் யாருக்கும் தெரியாத சைலன்ட் பார்ட்னரா எங்கூடத் துணையா இருந்த. இப்ப உண்மையாலுமே உனக்கு அந்த அத்தாரிட்டியை தரப்போறேன். அதுக்குண்டான பேப்பர்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வா, நான் சைன் பண்ணிட்டு தர்றேன், அப்படியே நீயும் சைன் பண்ணிடு. எதாவது டவுட் இருந்தா எனக்குக் கூப்பிடு நான் கிளியர் பண்றேன்” என்றான் தேவேஷ்வர்…

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த விஷ்வா,“டேய் என்னடா இது திடீர்னு இப்படிச் சொல்ற? நீ இல்லாம நான் என்னடா செய்யப் போறேன் இங்க? என்னால தனியா எதையும் சமாளிக்க முடியும்னு தோணலடா‌.” என்று பதறியவாறு சொன்னான் விஷ்வா.

அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்த தேவ்,
“ம்ஹூம் நீ சாமாளிச்சு தான் ஆகணும். சில விஷயத்தை விட்டு தள்ளி இருக்கணும்னு நினைச்சேன். ஆனா மறுபடியும் விதி என்னை அதுக்கிட்டையே இழுத்துக்கிட்டு போகுதுடா. ம்ஹ்ம் நடக்குறது நடக்கட்டும். அம்மாவை பத்திரமா பாத்துக்கடா அவங்களை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். அப்புறம் முக்கியமான விஷயம் ஆஷ்விதா வேலையை விட்டு போயிட்டாங்க. ஏன்னு என்கிட்ட கேக்காத, சில விஷயங்களை உன்கிட்ட சொல்ல முடியலடா.‌ அவ்வளவு தயக்கமா இருக்கு.‌தோணும் போது நானே சொல்றேன் சரியா! நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன் அவ்வளவு தான்.‌ சரி இப்ப போ, நான் சொன்னதைச் செய்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து விட்டு முக்கியமான பைல்கள் அனைத்தையும் எடுத்து கையொப்பமிட ஆரம்பித்தான் தேவேஷ்வர்.

குழப்பத்தோடு தன் அறைக்கு வந்த விஷ்வாவிற்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. ‘என்ன திடீர்னு ஊருக்கு போகணும்னு சொல்றான். இதுநாள் வரைக்கும் ஃபேமிலியைப் பத்தி அவன் எதுவுமே சொன்னதில்லை. நானும் கேட்டதில்லை. முதல் தடவை அவனைப் பாக்கும் போது கைக்குழந்தையோட நின்னான். அந்த நிலமையில அவங்கிட்ட எதுவும் கேட்க தோணலை. இப்ப திடீர்னு ஊருக்குப் போறேங்குறான். இவன் இல்லாம நான் எப்படி இருக்குறது, ரொம்பக் கஷ்டமா இருக்குமே’ என்று சிறிது நேரம் யோசித்தான்.

பின்பு, “நண்பனுக்காக இதைக் கூடச் செய்யவில்லை என்றால், நானெல்லாம் என்ன மாதிரியான நண்பன் ஆங்க்க்” என்ற நாடக பாணியில் தனக்குள்ளே சொல்லிக் கொண்டு தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

மதிய உணவு வேளையில் தேவ், விஷ்வா இருவரும் ஒன்றாகவே கேண்டீன் சென்று உணவுண்டு விட்டு வந்தனர். எப்போதும் எதையோ சிந்தித்தவாறே அமர்ந்திருந்த இந்த தேவேஷ்வர் விஷ்வாவுக்குப் புதிது. 5 ஆண்டுகளாக அவன் பார்த்த தேவேஷ்வர் இவன் கிடையாது. ஆனால் அதைப் பற்றி கேட்கவும் விஷ்வாவிற்குத் தயக்கமாகத்தான் இருந்தது.‌ தன்னிடம் சொல்ல வேண்டிய தகவல் என்றால் கண்டிப்பாகத் தன் நண்பன் சொல்லி இருப்பான். மறைக்கிறானென்றால் அதில் ஏதோ ஒன்று ரகசியமாகப் புதைந்து உள்ளது என்பதை உணர்ந்த விஷ்வா எதையும் கேட்கவில்லை.
தேவ் சொன்னதுக்கெல்லாம் சரி சரி என்று மண்டையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தான்.

அலுவலக வேலைகள் அனைத்தையும் விஷ்வாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினான் தேவேஷ்வர். அப்போது மீண்டும் ஒருமுறை காரை எடுக்கும் முன் தன் அலுவலகக் கட்டிடத்தைத் திரும்பிப் பார்த்தவன் அதில் மிளிர்ந்த டி.எம்.வி என்ற எழுத்தையே வைத்துக் கண் வாங்காமல் பார்த்தான்.

‘மறுபடியும் உன்னைப் பாக்க போறேன் கண்ணம்மா. என்னமோ மாதிரி ஃபீல் ஆகுதும்மா. நான் உன்னை இப்ப வரைக்கும் மறக்கலம்மா. அதே மாதிரி நீயும் என்னை மறக்காம இருப்பியா கண்ணம்மா’ என்ற தன் மனம் முழுவதும் நிறைந்திருப்பவளிடம் மானசீகமாகக் கேட்டவனுக்குப் பதில் சொல்லத்தான் அவள் இங்கில்லையே! தான் அங்குச் சென்று அளெதிரே நின்றால் அவளிடமிருந்து என்ன மாதிரியான எதிரொளிப்பு வருமோ? என்றெண்ணி இப்போதிருந்தே அவன் உள்ளத்தினுள் பதற்றமும், பதைபதைப்பும் ஏற்பட ஆரம்பித்திருந்தது. மனதில் எத்தனை நினைவுகள், எத்தனை இன்பங்கள், துன்பங்கள், கவலைகள், சோகங்கள், வருத்தங்கள் இருந்தாலும் தன் கண்ணம்மாவைக் காணப்போகிறோம் என்ற மகிழ்வும் ஒருபுறம் இருக்கிறது என்பதை அவன் மனது அறிந்தாலும், அதை அவனது மூளை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

நேசித்தவளுக்காக உன் காதலையே விட்டு விட்டு வந்த பிறகு, மீண்டும் அவளை நினைப்பது உன் தியாகத்திற்கே இழுக்கு என்று மூளை அறிவுறுத்தியது. ஆனால் அவன் மனமோ, ‘அதுக்காக முகத்தைக் கூடப் பார்க்க கூடாதா என்ன?’ என்று முரண்டு பண்ண ஆரம்பித்தது. எது நடந்தாலும் சரி விதிப்படியே நடக்கட்டும் என்று எண்ணியவனாய் நேரமாவதை உணர்ந்து வீட்டிற்க்கு கிளம்பினான் தேவேஷ்வர்..

நீ
வேண்டாமென்று
ஒதுங்கி வரவில்லையடி..
உந்தன் நெடுநாள் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்ற
எண்ணத்தில் தானடி
எந்தன் உயிரான உன்
உறவை முறித்துக்
கொண்டு நெடுந்தொலைவு
வந்து அநாதையாக
நடைபிணம் போல் வாழ்கிறேன்..!

- தேடல் தொடரும்…



 
உறவின் தேடல் -03

விஷ்வாவோ தன் அறையின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு அலுவலகத்தில் இருந்து சோகமாகச் செல்லும் தேவேஷ்வரையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவேஷ்வரின் ஏக்க பார்வையும், பல குழப்பங்களைத் தத்தெடுத்த முகமும் அவனுக்கு ஏதோ ஒன்றை புரிய வைக்க முயல்வது போல் இருந்தது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறியவன், 'சீக்கிரமே எதுவா இருந்தாலும் வெளியே வந்துரும். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும் பாத்துக்கலாம்' என்று நினைத்தவாறு தன் வேலையைக் கவனிக்கச் சென்றான்.

காலையில் வாகனத்தைச் செலுத்தியதை விடத் தற்போது சற்று வேகமாகவே காரை இயக்கினான் தேவ். அவ்வபோது அவனது விழிகள் இடது கரத்திலிருந்த கடிகாரத்தைப் தொட்டு தொட்டு மீண்டது. இடையே இரு முறை அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பது யார் என்று தெரிந்திருந்ததால் அழைப்பை ஏற்காமல் விரைவாக வீடு வந்து சேர்ந்தான்.

வாசலிலேயே அவனுக்காகக் காத்திருந்தார் அவனது தந்தை. தந்தையைக் கண்டதும் புன்னகைக்க முயன்று தோற்றவனாய்,“எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டீங்களாப்பா” என்று கேட்டவாறு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு படியேறினான்.

அவனோடு படியேறிய சிவசுப்பிரமணியம்,“எடுத்து வச்சுட்டோம்டே‌ ஆனாலும் உம்மவதேன் அப்பா வந்தாதேன் கெளம்புவேன்டு சொல்லிட்டு அடம் பிடிச்சுக்கிட்டு கெடக்கா. என்னதேன் பிள்ளைய வளர்த்து வச்சுருக்கியோ? உம்பேச்சைத் தவிர வேற யாரும் பேச்சையும் அம்புட்டு வெரசா கேட்கமாட்டுறா. இதெல்லாம் நல்லதுக்காடே? என்னமோ போ. அதே மாதிரி பாப்பாவ பாத்துக்க வந்த பொண்ணுக்கிட்ட அம்புட்டையும் சொல்லி அனுப்பிட்டோம்டே” என்று சொன்னவாறு படி ஏறியனார்.

அவருக்கு முன்னே இரண்டு படிகள் ஏறியிருந்தவன் நின்று திரும்பி நிதானமாக அவரைப் பார்த்தவன், “அந்தப் பொண்ணுகிட்ட என்ன சொல்லி அனுப்புனீங்கப்பா?” என்று கேட்டான். நிதானத்தையும் மீறி என்ன சொல்லி வைத்தாரோ என்ற பதற்றமும் அவனிடம் தெரிந்தது.

முதலில் உண்மைதான் செல்ல நினைத்தார்.‌ பின்பு மனைவி சொன்னது நினைவுக்கு வர,
“ஒரு வாரம் அவென் ஊருக்கு போறியான். வாரதுக்குத் தாமசமாகும், வந்ததும் அவனே உங்களைக் கூப்பிட்டுக்கிடுவியான்னுத்தேன் சொன்னேன். வேற எதுவும் சொல்லலைடே நீயேன் அதுக்கு இம்புட்டு பதட்டப்படுறவென்” என்றிட.

“ம்ம்.. வேற எதுவும் சொல்லாத வரைக்கும் சந்தோஷந்தேன்” என்று சொன்னவாறு பெருமூச்சொன்றை வெளியிட்டு விட்டு மேலே ஏறினான். அப்போதுதான் சிவசுப்பிரமணியத்துக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் மகனுக்குத் தெரிந்தால் நிச்சயமாகத் தங்களை மன்னிக்க மாட்டான் வார்த்தைகளால் வதைத்து விடுவான் என்று தெரிந்தும்‍ அவர்கள் ஏடாகூடமாகச் சில காரியங்களைச் செய்து வைத்திருக்கிறார்கள்‌. ஆனால் உண்மை தெரியவரும் போது அவன் கொடுக்கும் தண்டனைகள் எந்த அளவிற்குக் கொடூரமாக இருக்கும் என்பதை அவர்கள் மட்டுமல்ல அவனுமே அறிந்திருக்கவில்லை.

தன்னுடைய பிளாட்டிற்கு வந்தவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய ஊருக்கு செல்வதற்காக உடைமைகள் அனைத்தையும் தயார் படுத்திக் கொண்டிருந்தார் அஞ்சலை. மகனைக் கண்டதும் புன்முறுவல் பூத்தவர்,“காபித் தண்ணி போடவா கண்ணா”, என்று கேட்டார்.

“வேணாம்மா இப்பதான் அங்கன குடிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்தவன் அலைபேசியில் கார்டூன் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகளை வாரி எடுத்து அள்ளி அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டு,
“பாப்பு குட்டி குளிக்கலாமா?” என்று கேட்க.

“பாப்பு குட்டியை குளிக்க வெச்சு பாட்டி ரெடியாக்கிட்டாங்க அப்பா, இப்ப நீங்க தான் ரெடியாகணும், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு பாட்டியைத் தேடி ஓடி விட்டது குழந்தை. இவனும் குளியல் அறைக்குள் நுழைந்தவன் குளித்து முடித்து, அடுத்த 15 நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தான்.
ஒருமுறை சமையலறைக்குச் சென்று என்னென்ன பொருட்கள் வீணாகிவிடும் நிலையில் உள்ளது, எதையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் என்பதை ஒருமுறை சரிபார்த்துவிட்டு வெளியே வந்தவன் பின்பு ஏதோ தோன்ற மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தான். கப்போர்டைத் திறந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் உடைகளை விலக்கினான்.

ஐந்து ஆண்டுகளாக எதைப் பார்த்து பார்த்து உயிர் வாழ்ந்தானோ அதை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனின் விழிகளில் இருந்து கசிந்த இரு துளிக்கண்ணீர் கன்னம் தாண்டி கழுத்தை அடைந்தது.‌ அதைக் கவனமாகப் பெட்டியின் உள்ளே மறைத்துக் கொண்டவன் தன் மகளது விளையாட்டு பொருட்களையும் ஒரு பெட்டியில் எடுத்து அடிக்கிக் கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவாறு வெளியே வந்தான். அதே நேரம் உடமைகள் அனைத்தையும் கீழே கொண்டு சென்று இருந்தார் சிவசுப்ரமணியம்.

தாயிடம் அவரது உடமைகளை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு தன் மகளையும், தன்னுடைய ஒரு பெட்டியையும் கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன் பிளாட்டைப் பூட்டி சாவியை, தன் பெட்டியினுள் இருந்த சிறிய பாக்கெட்டுக்குள் போட்டவன் பக்கத்து பிளாட்டின் கதவைத் தட்டினான்.

அதைத் திறந்த ஒரு 45 மதிக்கத்தக்க மனிதரிடம்,
“பிலிப் சார் நான் ஊருக்குப் போறேன்.‌ வர்றதுக்கு எப்படியும் ஒன் வீக்காகும். யாராவது என்னைத் தேடி வந்தாங்கன்னா சொல்லிடுங்க, உடம்பப் பாத்துக்கோங்க, லீனாக்கிட்டையும் சொல்லிடுங்க” என்றான்.

“சரிப்பா சொல்லிடுறேன். நீயும் பாத்துப் பத்திரமா போயிட்டு வா, என்ன மதிக்குட்டியை தான் நாங்க ரொம்ப மிஸ் பண்ணுவோம்” என்று சொல்லி மதியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விடுவித்தார்.

“ஓகே சார் நாங்க கிளம்புறோம்” என்று சொல்லிவிட்டு கீழே வந்தான். அதேநேரம் விமான நிலையம் செல்வதற்காகத் தயாராகக் காத்திருந்தது வாகனம் ஒன்று. அதைக் கண்டு குழம்பியவன்,
“ஏங்கப்பா நம்பக் கார்லையே போயிருக்கலாமே! எதுக்கு நீங்க டாக்ஸியை புக் பண்ணுனீங்க?” என்று கேட்க.

“நான் ஒன்னும் பண்ணலடே இந்த வண்டி ரோட்டுல போச்சு. எங்க சார் போகணும்னு கேட்டாடே‌. நான் விமான நிலையத்துக்குப் போகணும்னுதேன் சொன்னேன். அவராத்தேதான் இங்கன நிக்கிறாரு” என்றார் சிவசுப்பிரமணியம்.

“சரி தான் என்னோட காரை அங்க பார்க் பண்ணிட்டு, அதுக்கப்புறம் ஒன்வீக்னா ஒன்னும் பண்ண முடியாது. சரி ஏறுங்க இதுவும் வந்தது நல்லதுக்குத்தான்” என்று சொன்னவன் ஒரு முறைக்கு இருமுறையாகத் தன் கார் லாக் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதித்து விட்டு பின்புறக் கதவைத் திறந்து கொண்டு ஏறினான். கூடவே அவன் தாயும், தந்தையும் ஏறி அமர்ந்தார்கள்.

அவர்கள் ஏறியதும் அடுத்த 20 நிமிடத்தில் விமான நிலையத்தின் முன்பு சென்று நின்றது வாகனம். கீழே இறங்கிய போது தான் ஏதோ நினைவு வந்தவனாக, “அப்பா ஃப்லைட் டிக்கெட்டை எடுத்துட்டு வந்தீங்களா?” என்று கேட்க.

“அதெல்லாம் உங்க அம்மா பத்திரமா எடுத்து வெச்சிட்டாடே” என்றார்.

“பரவால்லப்பா எடுத்து வெச்சிருந்தா சரிதான். ஆமா யார் கொண்டு வந்து கொடுத்தா” என்று கேட்டான்.

“மத்தியானம் ஒரு தம்பிதேன் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனான். நீதேன் வீட்ல கொடுக்கச் சொல்லியிருந்தியாம்” என்றார்.
‘பரவால்யே‌. இனிமே எங்க போறதா இருந்தாலும் இந்த ட்ராவல் ஏஜென்சிலையே டிக்கெட் புக் பண்ணிடலாம் கரெக்ட்டா கொண்டு வந்து கொடுத்துடுறாங்க. சர்வீஸ் நல்லாருக்கு’ என்று நினைத்தவனாய் டாக்ஸிக்கு பணத்தைக் கொடுத்து விட்டு தன் உடமைகளோடு விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.

அவனைப் பின் தொடர்ந்து அவனது தாய் தந்தையரும் வந்தனர். மகளைக் கையில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் மகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒருவாராகப் பதிலளித்தான்..

குழந்தையோ கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவன்,“அம்மு குட்டி நாம புது ஊருக்குப் போகப் போறறோம். புதுப் புது ஆளுங்களைப் பாக்க போறோம். அதனால எப்பவும் அப்பா கூடவே இருக்கணும் சரியா! யார் கூப்பிட்டாலும் போகக்கூடாது." என்று குழந்தைக்குப் புரிய வைக்கும் விதமாகச் சொன்னவன் மேலும், “அப்புறம் அங்க வந்து தேவையில்லாம மத்தவங்களைத் தொல்லை பண்ணக் கூடாது. தாத்தா பாட்டியையும் இம்சை பண்ண கூடாது சரியா!” என்றதற்குச் சரி என்று தலையாட்டிய குழந்தையும், “அப்ப நாம திரும்பி இங்க எப்ப வருவோம் ப்பா. என்னோட பிரெண்ட்ஸ்ஸை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்”, என்று கொஞ்சும் குரலில் சொன்னாள்.

அதைக்கேட்டு ரசித்தவன்,
“ஒன் வீக் தான்டா செல்லக்குட்டி அதுக்கப்புறம் நாம இங்கையே வந்துடலாம்” என்று சொல்லி மகளைச் சமாதானப்படுத்தினான்‌ . பின்பு செக்கிங் முடித்தவர்கள் தங்களுக்கான அழைப்பு வரும் வரை காத்திருந்தனர்.

பத்து நிமிடத்தில் அவர்கள் செல்லும் விமானத்திற்கான அழைப்பு வரவும் நால்வரும் அனைத்து செக்கிங்களையும் முடித்துக் கொண்டு விமானத்தில் வந்து அமர்ந்தனர்.

தேவேஷ்வரும் அவனது தந்தையும் அருகருகே அமர்ந்திருக்க. அடுத்த இருக்கையில் அஞ்சலை அமர்ந்திருந்தார். மகளைத் தன் மடியில் இருத்திக் கொண்டு, ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தேவேஷ்வர். ஏனோ அவனது மனம் ஊமையாய் அழுதது.

ஆனால் அதையறியாத குழந்தையோ முதல் முறை விமானப்பயணத்தை எண்ணி கலக்கம் கொள்ளாமல் கீழே தெரிபவற்றைப் பார்த்து விட்டு அவனிடம் கேள்விகளை அடிக்கியது. அவனும் தன் கவலையை ஒத்தி வைத்து விட்டு தன் செல்ல மகளுக்குப் பொறுமையாகப் பதிலுரைத்தான். சிறிது நேரத்தில் விமானம் கிளம்ப இருப்பதால் அனைவரும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ளுமாறு பணிப்பெண் கூறிவிட்டு செல்ல தனக்கும் தன் மகளுக்கும் சேர்த்துச் சீட் பெல்ட்டை அணிவித்துக் கொண்ட தேவ் தன் மகளைத் தட்டிக்கொடுத்து உறங்க வைத்தான்.

விமானம் ஓடுதரையில் ஓட ஆரம்பித்தது. இருபுறமும் அகல விரிந்திருந்த, பறவையின் தோற்றத்தை ஒத்த அந்த இயந்திர பறவை வானில் வேகமெடுத்து தன் பயணத்தைச் சீராகத் துவங்கி இருந்தது.

சிறிது நேரத்திலேயே அம்மு குட்டி உறங்கிவிடத் திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான்.‌ அவரும் உறக்கத்தின் பிடியில் இருப்பதை உறுதி செய்து கொண்டவனது விழிகள் தானாகக் கலங்க ஆரம்பித்தது.‌ ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது அவளைப் பார்த்து, இப்போது எப்படி இருப்பாளோ? என்ற நினைவும், கூடவே முதன் முதலில் அவளைப் பார்த்த நினைவும் ஞாபகத்தில் வந்து அவன் நெஞ்சை தாக்க, எச்சிலை கூட்டி விழுங்குவது போல் அந்நினைவுகளையும் விழுங்கி ஒதுக்கித் தள்ள முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் அவனால் அவற்றை ஒதுக்கித் தள்ள முடியவில்லை.‌ அது முடியாததால் கண்மூடி உறங்க முயன்றான் ஆனால் உறக்கமும் வந்தபாடில்லை. மாறாக அவன் நினைவுகள் தான் பின் நோக்கி பயணித்தன.


ஐந்து வருடங்களுக்கு முன்பு....

நேரம்.. அதிகாலை நான்கு..
ஊர்.. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொளத்துப்பாளையம்.

கிராமத்திற்கான மணம் ஊரெங்கும் விரவிக் கிடந்தது. காவித் தாயின் கரையோரம் இருப்பதால் காற்றின் ஈரப்பதம் கூட மழைச்சாரலைப் போல் அதிகமாக இருந்தது. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் இட 5 மணியைத் தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.‌ ஆனால் அந்த வீட்டில் மட்டும் அந்த நேரத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விடிய விடிய தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த அவள் எழுந்து அடர்ந்து நீண்டு இடைவரை வளர்ந்திருந்த தன் முடியை கொண்டை போட்டுக் கொண்டவள் கை,கால்,முகம் கழுவிக்கொண்டு ஒரு வாளி நிறையத் தண்ணீரோடு வாசலுக்கு வந்தாள்.

அதிகாலைக் குளிரானது அவள் உடலை ஊசி போல் குத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் வாளியைக் கீழே வைத்து விட்டு கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கொண்டாள்.

பின்பு பரபரவென்று தண்ணீரை வாசலில் தெளித்துக் கூட்டி, வாரி குப்பைகளை அள்ளிக் கொட்டியவள் தனக்குத் தெரிந்த அளவில் கோலமிட்டாள். பின்பு
தள்ளி நின்று தான் வரைந்த கோலத்தை ரசித்தாள்.‌
“ம்ம்... இப்ப தான் பாக்குற மாதிரி இருக்குது. இதைப் பார்த்தா பெரியம்மா சர்ப்ரைஸ் ஆவாங்களா?” என்று வாய்விட்டு சொன்னவள் மறுநிமிடமே, ‘அவங்களுக்குத் தான் என்னைப் பிடிக்கலையே அப்புறம் எப்படிச் சர்ப்பிரைஸ் ஆவாங்க. எப்படியும் திட்டத்தான் போறாங்க’ என்று வருத்தத்துடன் நினைத்தவளாய் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு வாளி, விளக்குமாறு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அதை அதன் இடத்தில் வைத்து விட்டு நேராகத் தான் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றவள் குளித்து முடித்துத் தான் எப்போதும் உரிமையோடு சண்டையிடும், திட்டும், கொஞ்சும் பாலமுருகனுக்குப் பூக்களைப் பறித்துச் சென்று பூஜை செய்தாள். பின்பு ஆரத்தி காட்டியவள் பலத்த வேண்டுதலை வைத்து விட்டு தன் அறையிலிருந்து வெளியறிய அதேநேரம் பால்காரர் பால் கொண்டு வந்து விட்டதை அறிவிப்பதற்காக மிதமான சப்தத்தில் தன் வாகனத்தின் ஹாரனை ஒலிக்க விட்டார்.. அதைக் கேட்டதும் பரபரப்புடன் பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தவள்,‌“நாலு லிட்டர் பால் ஊத்துக்க அண்ணா” என்றவாறு பாத்திரத்தை நீட்டினாள்.

அவளைக் கூர்மையாகப் பார்த்த பால்காரர் பரமசிவமோ, “என்ன பாப்பா எப்போதும் மூனு லிட்டர் தான வாங்குவ, இன்னைக்கு என்ன ஒரு லிட்டர் சேர்த்து வாங்குற?” என்று எதார்த்தமாகக் கேட்டார்.

“அது ஒன்னுமில்லைங்க அண்ணா பெரியம்மாவுக்கு இன்னைக்குப் பிறந்தநாள் இல்லையா, அதான் அவங்களுக்காகப் பால் பாயசம் வைக்க அனுமதி வாங்கியிருக்கேன். அதுவும் பெரியாத்தா தான் சரின்னாங்க பெரியம்மா எதுவும் சொல்லலை” என்றாள் வெள்ளந்தியாய்.

“கால் லிட்டர் சேர்த்தே ஊத்துறேன் நீ ஒரு டம்ளர் எடுத்து வெச்சுக் குடிம்மா. அத்தனையும் செஞ்சுப்புட்டு நீயேன் பட்டினியா கெடக்கோணும். உனக்காகத் தான் இந்தக் கால் லிட்டர் சரியா!” என்றவர் அப்போது தான் அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்தார்.

“என்னமா அப்படிப் பார்க்குற இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு வெளிய என்ன பேசிக்கிறாங்களோ அது எனக்குத் தெரியாதுமா. ஆனா எம்பொஞ்சாதி பக்கத்து ஊட்டுக்கு தான் பாத்திரம் தேய்க்க வர்றா. அவ சொன்னதை வெச்சே எனக்குத் தெரிஞ்சுருச்சு கண்ணு நீ நீங்க எப்படி இருக்கன்னு. நான் தெரியாமத்தேன் கேட்குறேன் உன்னைத் தான் இங்க இருக்க யாருக்கும் புடிக்கலையே அப்புறமும் ஏன் கண்ணு நீ இங்கேயே இருக்கணும் பேசாம வேற எங்கேயாவது போயிடலாம் இல்லையா!” என்று கேட்க.

கண்ணில் துளிர்த்த நீரை கீழே சிதறவிடாமல் உள்ளிழுத்துக் கொண்டவள், “ஊர் பேர் தெரியாத இடத்துக்குப் போயி பயந்து பயந்து வாழ்றதை விட, இங்க அவங்க கொடுக்குற கஷ்டத்தைத் தாங்கிக்கிட்டு பயமில்லாம வாழலாம்ல அண்ணா. அதனால தான் இங்கேயே இருக்கேன். சரி அண்ணா எனக்கு வேலை இருக்கு நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே ஓடினாள் வாணி... மதுரவாணி.

முழுப்பெயர் மதுர வாணி. எல்லாராலும் வாணி என்று அழைக்கப்படுபவள். அவளது தாய் தந்தையரால் மட்டும் மதுரா என்று செல்லமாக அழைக்கப்படுவாள்.. ஆயிரம் பேர் அன்புடன் அழைத்தாலும் பெற்றோர் அழைப்பது போல் வந்திடுமா? செல்வமும், செழிப்பும், வசந்தமாய்த் தழைத்தோங்கி குறைவின்றி இருந்தது அவளது வாழ்வில்..

திடீரென்று வீசிச்சென்ற பெரும் புயலொன்று பூக்கள் நிறைந்த பூந்தோட்டத்தைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி சென்றதைப் போல் சில பல தவிர்க்க முடியாது நிகழ்வுகள் நடக்கும் வரை அவள் வாழ்வும் அப்பூந்தோட்டம் போல் செழிந்தோங்கி தான் இருந்தது.

புதிதாக முளைத்திருக்கும் இறக்கைகள் கொண்டு சிறகடித்து வானில் உயர உயரப் பறந்து செல்லும் குருவியொன்றின் வாழ்வைப் போல் கவலையின்றி மகிழ்வென்ற வானில் பறந்துக் கொண்டிருந்தவளின் வாழ்வு ஒரே நாளில் சிறகொடிந்த பறவையைப் போல் மாறியது. சிறகொடிந்து வலியால் துடிக்கும் பறவையின் சிறகை ஒட்டவைத்து வலியைப் போக்க ஆளில்லை. மீண்டும் உன்னால் பறக்க முடியும் என்று தட்டிக் கொடுத்து ஆறுதலுரைக்க ஆளில்லை. மாறாக முடமான பறவைக்குப் பறக்க வேண்டுமென்ற ஆசை இருக்கக் கூடாதென்று வன்மமாய் சொன்னவர்களாலேயே முடக்கி வைக்கப்பட்டாள் ஒரு மூலையில்.
சொந்தம் என்ற பெயரில் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயநலத்தை அறியாத அப்பாவி பெண்னென்று காண்போர் என்னும் அளவிற்கு அத்தனை வெள்ளந்தியான குணம் கொண்டவள் மதுரவாணி.

ஆனால் அவளைப் பற்றி அவள் மட்டுமே அறிவாள். அந்த வெள்ளந்தி குணத்திற்குள் ஒளிந்திருக்கும் வைராக்கியம், பொறுப்பு, அக்கறை, பாசம், கோபம், ஏக்கம், வெறுப்பு, அன்பு, பிறரை எங்கே வைக்க வேண்டுமென்ற நிதானம் முதலியவற்றை அவளின்றி வேறெவராலும் அறிந்து கொள்ளவும் முடியாது.‌ அவ்வளவு எளிதாக அதை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் அவள் விடமாட்டாள்.‌‌

எளிமையின் தோற்றம் அவளெனில்..
எரிமலையின் பிம்பமும்
அவளே..!
அன்பின் அமைவிடம்
அவளெனில்..
ஆக்ரோஷ அலையின்
அம்சமும் அவளே..!
அன்பைக் காட்டுவதில்
வெண்மையின்
சாயல் அவளென்றால்..
கோபத்தைக் காட்டுவதில்
காளியின் மறுபிம்பமும்
அவளே..!


- தேடல் தொடரும்…




 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom