Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL பொன் வசந்தமே - Tamil Novel

Status
Not open for further replies.
4.பொன் வசந்தமே

அந்த
ஞாயிற்றுக்கிழமை தமிழ்நேசன் ஒரு முக்கிய விடயத்திற்காக வெளியே சென்றிருந்தார்.எப்போதும் போல் அரக்க பரக்க வெந்ததும் வேகாததுமாக உண்டு விட்டு கல்லூரிக்கு ஓடும் அவசியம் இல்லாத காரணத்தால் இன்று நிதானமாகவே எழுந்தாள், பவதாரிணி.அவள் எப்போதுமே அதிகாலையில் எழுபவள் தான்.ஆனால் வாக்கிங், உடற்பயிற்சி மற்றும் காலைப்படிப்புக்கு பின் கல்லூரி கிளம்பவதென்றால் ஒலிம்பிக் ஓட்டம் தான்.ஞாயிறு மட்டும் விதிவிலக்கு.பொதுவாகவே மகள் உரிய நேரத்தில் தூங்கி உரிய நேரத்தில் எழுபவள் என்பதால் தந்தையும் இந்த விடயத்தில் ஏதும் கூறுவதில்லை.

பொறுமையாகவே எண்ணெய் தேய்த்து தலைக்குளித்தவள், ஆற அமர ஈர கூந்தலை உலர்த்தினாள்.தமிழ்நேசன் இருந்தால் அவர் மகளின் அடர்த்தியான கூந்தலுக்கு சாம்பிராணி போடுவது வழமை.இருப்பதிலேயே இலகுவாக உணர வைக்கும் உடையை அணிந்து கொண்டாள்.பெரிதாக ஒன்னும் இல்லை; கடல்வண்ண டீசர்ட் மற்றும் கருப்பும் வெள்ளையுமாக பூக்கள் கொண்ட த்ரீ போர்த் பேன்ட்.நடுத்தர உடல்வாகு கொண்ட அவளை அந்த உடை கொஞ்சம் பப்ளியாக காட்டியது.தந்தை தயார் செய்து வைத்திருந்த சப்பாத்தி குருமாவை ஒரு வெட்டு வெட்டி விட்டு கொஞ்ச‌ நேரம் டிவியில் டாம் அண்ட் ஜெர்ரியை ரசித்தாள்.


பின் சிறிது நேரம் வீட்டை ஒழுங்குபடுத்தியவள் , மதிய உணவிற்கான சமையலில் இறங்கினாள்.நேற்று அதிசயமாக கிடைத்த நீலம் மாங்காய்களை வைத்து சேலத்து மாங்காய் குழம்பையும் தொட்டு கொள்ள பருப்பு துவையலும் செய்ய திட்டமிட்டாள்.வேண்டுமானால் கூட கொஞ்சம் அப்பளமும் வடகமும் பொரித்து கொள்ளலாம்‌.மாங்காய் துண்டுகளை குழம்பில் போடும் போது அழைப்பு மணி அழைத்தது.அதுவும் விடாமல் அடித்தது.

கொதிக்கும் குழம்பை மூடி வைத்து விட்டு வீட்டு கதவை திறந்தாள், பவதாரிணி.அவள் கிச்சனிலிருந்து வாயிலுக்கு வருவதற்குள் கதவும் வேகமாக தட்டப்பட்டது. ' அப்பா இதுபோல் செய்யமாட்டாரே.யாராக இருக்கும் ' என்ற ஆவல் இருந்தாலும் கதவை திறக்க அவளுக்கு தயக்கமாக இருந்தது.எனினும் தனக்கு தான் தற்காப்பு கலை தெரியுமே என்ற தைரியத்தில் கதவை திறந்தாள். எதிரே ஒரு உயரமான சிடுமூஞ்சி நின்று கொண்டிந்தான்.அவனது பெயர் சர்வேஸ்வரன் என்று அவளுக்கு பின்னால் தெரிந்தது. அவன் முகம் கோபத்தில் எள்ளுமாய் கொள்ளுமாய் வெடித்து கொண்டிருந்தது. ' யாரிவன்? அப்பா மீது எவருக்கும் கோபமே வராதே.அப்படி அவர் நடந்து கொள்ள மாட்டாரே? பின்னே இவன்' என புரியாமல் பார்த்தாள், பவதாரிணி.அவன் முகத்தில் இருந்த கடுமை சிறிதும் குறையவில்லை.


வந்தவனின் கரம் தன்னை அறைய வருவதை கண்டு அந்த ஆத்திரக்காரனின் கையை வலுவாக பிடித்து நிறுத்தினாள்.அவனது கண்களில் சிறு வியப்பு தெரிந்தது. சாதாரணமாக வந்திருந்தால் மரியாதையாக பேசியிருப்பாள்.அடாவடியாக வந்தவனிடம் அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணத்தில்" யார்டா நீ ? அப்பா இல்லாத நேரத்துல வம்பு பண்ணன்னே வந்திருக்கிறியா" என்றாள், மிடுக்காகவே.அவளின் ' டா' இன்னும் கொதிப்பூட்ட, " ஏய் என்னடி கொழுப்பா? முன்னே பின்னே தெரியாத ஆம்பளயை 'டா' போட்டு பேசுறே " என்றான், பற்களை கடித்த வண்ணம்.
" நீ மட்டும் யாரோ ஒரு பொண்ணை கைநீட்டி அடிக்க வரலாமா டா ? " என்றாள் சூடாகவே, 'டா' வில் அழுத்தம் கொடுத்து." ஏய் " என அவன் ஏதோ பேச துவங்கும் போது சமையலறையில் விசில் சத்தம் கேட்டது.

அவனை பொருட்படுத்தாமல் அவள் உள்ளே போகவும் அவனும் ஆத்திரமாக அவளை பின்தொடர்ந்தான்.பவதாரிணியுடனே கிச்சனிற்குள் நுழைய முயன்ற சர்வாவின் கால்கள் தயங்கி நின்றன.ஆயிரம் இருந்தாலும் அனுமதி இல்லாமல் அடுத்தவர் வீட்டு அடுக்களைக்குள் நுழைய கூடாது என்ற எண்ணம் அவனை தடுத்து நிறுத்தியது‌.அடுப்பை அணைத்து விட்டு வந்தவள் " ஹே மரியாதையா வெளியே போ‌ " என்று கத்தினாள், பவதாரிணி.
" முடியாதுன்னா என்னடி பண்ணுவ " என்று அலட்சிய பாவத்துடன் கூறியவனை அற்பமாக நோக்கி " எனக்கு டேக்வான்டோ தெரியும் " என்றாள். கூடவே அட்டாக் பொசிசனுக்கும் சென்றாள்.ஒருகணம் அவனிடம் கொஞ்சம் பிரமிப்பு தெரிந்தாலும் அடுத்த கணமே கேலியாக சிரித்தான்.அவள் ' என்ன' என்பது போல் நோக்கவும் " ஐ நோ கராத்தே" என்றான் புன்னகைத்த வண்ணம்.அக்கணம் மாயக்கண்ணனின் மறுஉருவம் போல் நின்று கொண்டிருந்தவனை நோக்கி சில கணங்கள் லயித்தாள், பவதாரிணி.



" என்ன மோதி பாக்கலாமா " என்றவனை நோக்கி " நான் ரெடி" என்றாள் முதுகு தண்டை நேராக வைத்தபடி." ஆனா சமபலம் இல்லாதவங்க கிட்ட மோதுற பழக்கம் எனக்கு கிடையாது " என்றான் காலரை தூக்கி விட்டபடி." நான் ஒன்னும் உனக்கு சளைச்சவ இல்லை" என்றவளை இடைமறித்து " இதோ பார்.இப்போ நீ என் கூட வரணும்.அவ்ளோ தான் " என்றான் உத்தரவு இடும் குரலில்.' எதுக்கு? ' என்றவளை வெறுப்பாக பார்த்து " எப்படிடி அவ்ளோத்தையும் பண்ணிட்டு உங்களால அப்பாவி மாதிரி இப்படி கேட்க முடியுது " என்றான், கசந்த குரலில்.அவனது முகத்தில் எரிச்சலும் வெறுப்பும் அப்பட்டமாக தெரிந்தது.

அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.இதுவரை அவளிடம் யாரும் இப்படி பேசியதில்லை.காதல் தொல்லை தந்திருக்கிறார்கள்; வாலாட்ட முயற்சித்திருக்கிறார்கள்.அதற்கு உரிய வகையில் அவள் பதிலும் தந்திருக்கிறாள்.ஆனால் இவன் என்ன திடீரென புயல் போல் வந்து தாக்குகிறான்? அநியாயமான பிதற்றல் வேறு.ஓங்கி ஒன்று கொடுக்கலாம் என்று பார்த்தால், ஒரு அடியில் ஒதுங்கி போகிறவனாகவும் தெரியவில்லை.கரோத்தே வேறு தெரியுமாம்.இவனை வாய்வார்த்தையாகவே திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

" என்னால எங்கேயும் வரமுடியாது " என்றாள் திடமாக." உன்கிட்ட யாரும் அனுமதி கேட்கலை" என்றவனை நோக்கி " பின்னே" என்றாள்.அடுத்து அவன் கள்வனை போல் சிரித்ததற்கு அர்த்தம் அவன் அவளை மதுரை வீரன் பொம்மியை தூக்கியது போல் தூக்கிய பின்தான் தெரிந்தது.எதிர்பாராத இந்த தாக்குதலில் தடுமாறியவள் சுதாரித்து அவனிடம் இருந்து திமிறினாள்.ஆனால் அவனோ ஒரு வெள்ளை கைக்குட்டையை அவள் மூக்கில் வைத்து அழுத்தினான்.தங்கள் ஊகம் சரிதான்.மயக்க மருந்தை சுவாசித்த பவதாரிணி அப்படியே அவன் தோளில் தொய்ந்தாள்.அவளை அப்படியே ஜாக்கிரதையாக யார் கண்ணிலும் படாமல் தூக்கி சென்றான்.பவதாரணி மயக்கம் தெளிந்து கண்விழித்த போது......

கைப்பேசி அழைக்கும் சத்தம் காரணமாக கடந்த கால நினைவிலிருந்து விடுபட்டாள், பவதாரிணி.முக்கிய அழைப்பு ஏதும் இல்லை.வெறும் கம்பெனி கால் தான்.கடிகாரத்தை பார்த்தால், மணி நான்கு.இவ்வளவு நேரமாகவா இப்படியே அமர்ந்திருக்கிறாள்.சரிதான்.கொஞ்சம் வீட்டு வேலைகளை பார்த்து விட்டு படிக்க அமர்ந்தாள், பவதாரிணி.

சர்வேஸ்வரன் கிளம்பி சென்ற இடம், தான் காலையில் சண்டையிட்ட ஹீரோவின் வீடு தான்.ஹீரோ சார் வீட்டில் இருக்கிறாரா என உறுதிப்படுத்திக் கொண்டு அங்கே சென்றான்.சர்வா அடிக்கடி வந்து போகிறவன் என்பதால் காவலாளி இலகுவாக உள்ளே அனுமதித்தான்.வேலையாட்களும் மரியாதைகவே நடத்தினர். ஆனால் கதாநாயகனின் மேலாளர், சர்வாவை தடுத்து நிறுத்தினான்." போங்க சார்.உங்களை பாத்தா சார் இன்னும் டென்ஷன் ஆகிடுவாங்க.எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான்.இதை சொல்லும் சாக்கில் மேலாளர் சர்வாவின் சர்ட் மீது கை வைத்து லேசாக பின்தள்ளினான்.சர்வா ஒரு பார்வை தான் பார்த்தான்.மேலாளர் விலகி நின்று வழி கொடுத்தான்.

சர்வாவிற்கு உள்ளூர தன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது.அது தந்த திடத்தில் தைரியமாக உள்ளே சென்றான்.உள்ளே கதாநாயகன் கையில்லாத டீசரட் மற்றும் சார்ட்ஸ் அணிந்து கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தான்.கைகள் மொபைல் கேமில் பிஸியாக இருந்தன.சர்வா மெதுவான குரலில் " ஹலோ " என்றான்.

ஏதோ தோன்ற கம்பீரமான குரலில் மீண்டும் " ஹலோ " என்றான்.இப்போது ஹீரோவிடம் அசைவு இருந்தது.சர்வா " சாரி" என்ற போது அதிசயமாக அதே வார்த்தைகளை கதாநாயகனின் உதடுகளும் உதிர்த்தன.இருவரும் மிகுந்த ஆச்சர்யத்தோடு ஒருவரை ஒருவர் நோக்கினர்.சர்வா நட்பாக கைநீட்டவும் ஹீரோவும் அதை ஏற்றுக் கொண்டான்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபமாக கிளம்பி வந்த கதாநாயகன் நிறைய சிந்தித்தான்.இயக்குனர் புதியவன் தான்.ஆனால் வலுவான கதைக்களம் அது.நிச்சயம் ஹிட் ஆகும்.தற்போதைய ட்ரெண்டில் வேறு இருக்கிறது.கூடவே கதாநாயகி வெற்றி படங்களில் பங்காற்றியவள்.தமிழ்நாடு அளவில் விருதுகளை வாங்கியவள்.அது போல் தயாரிப்பாளரும் பிரபலமானவர்; சினிமா துறையில் வல்லமை வாய்ந்த ஒருவர்.அவர் பெயருக்கே சினிமா உலகில் தனிமதிப்பு இருக்கிறது.அவர் படப்பிடிப்பு நின்ற ஆத்திரத்தில் எதும் செய்யலாம்; சட்டம் கூட தன் மீது பாயலாம்.பொருளாதார நஷ்டத்தை முன்வைத்து வழக்கு பதிய முடியும் தான்.இதனால் தன் பெயர் தான் பாழாய் போகும்.

அவனது எண்ண ஓட்டம் அதே போக்கில் தொடர்ந்தது.சர்வாக்கு பெரிய இழப்பு ஒன்றும் இல்லை.இப்போது தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறான், அவன்.வைத்த காலை திரும்ப பத்திரமாக விலுக்கென்று எடுத்து கொள்ள இயலும்.அப்படியே அவன் பேர் ரிப்பேர் ஆகி அவன் படம் பண்ணாமல் போவதில் எனக்கென்ன இலாபம்? அதேசமயம் நான் இந்த பிரச்சினையால் இத்துணை காலம் காபந்து பண்ணியது எல்லாம் என்னாகும்? தாமதமாக சென்றது தவறில்லை தான்.ஆனாலும் இயக்குனர் சர்வாவிடம் அப்படி நடந்திருக்க கூடாது.கொஞ்சம் பொறுத்து போயிருக்கலாம்.இந்த எண்ணம் வந்ததும், சர்வாவை சாயங்காலம் அழைத்து பேசலாம் என நினைத்திருந்தான்.அதற்கேற்றாற் போல் சர்வா வந்ததும், அவன் இன்னும் இளகிவிட்டான்.

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.பின் கொஞ்ச நேரம்
இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர்.சூடாக வந்த காபியை பருகியவர்கள் தயாரிப்பாளரை சந்திக்க அவரது இல்லம் நோக்கி கிளம்பினர்‌.இதில் மொக்கை வாங்கியது, மேலாளர் தான்.

முதலில் கோபமுகம் காட்டினாலும் சற்று நேரத்தில் இருவரையும் ஏற்று கொண்டார், தயாரிப்பாளர்.நல்ல படத்தை பாதியில் விட அவருக்கு மட்டும் வேண்டுதலா என்ன? அதேசமயம் தன் வருத்தத்தை வெளிக்காட்டிய பின் இயல்பாக பேசினார்.இவர்களின் வருகையை அவர் எதிர்ப்பார்த்திருந்தது போல் நடந்து கொண்டது ஹீரோ நவீன்பிரசாத் மற்றும் நம் சர்வாவிற்கு வியப்பை அளித்தது.அவரும் பல படங்களை தயாரித்து இருக்கிறார் அல்லவா?
இது போன்ற நிகழ்வுகள் அவருக்கு
புதிது அல்ல.அவர்களின் சண்டையினால் ஏற்பட்ட மறைமுக நன்மையையும் எடுத்து கூறினார்.

"புயலோடு கிடைக்கும் மழை ன்னு சொல்லுவாங்க.இன்னிக்கு நடந்த களேபரத்துனால பைசா செலவு இல்லாம நம்ம படத்துக்கு விளம்பரம் கிடைச்சிருக்கு.நீங்க போட்ட சண்டை தான் இன்னிக்கி சோசியல் மீடியா ல்ல டிரெண்ட்.படுவைரல்" என்று சிரித்தார், தயாரிப்பாளர்.மற்ற இருவரும் அசடு வழிந்தனர்; மன்னிப்பும் கேட்டனர்.

" சண்டை வருவது சகஜம் தான்.ஆனா அது படப்பிடிப்பை பாதிக்க கூடாது.இனிமே எதுனாலும் நமக்குள்ளேயே முடிச்சிக்கணும் " என்றார். சர்வாவும் நவீனும் அதை ஆமோதித்தனர்.

மூவரும் ஒன்றாக சுய புகைப்படங்கள் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்தனர்.இயக்குநர் மற்றும் கதாநாயகன் சண்டையிட்டது எந்தளவிற்கு வைரல் ஆனது அதைவிட அவர்கள் மீண்டும் இணைந்த செய்தி ட்ரெண்ட் ஆனது.மறுநாளிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்ற செய்தி குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது.தயாரிப்பாளர் தன் வீட்டில் டின்னர் சாப்பிட சொன்னதை இயல்பாக மறுத்துவிட்டு மகிழ்ச்சியாக மனைவியை காண சென்றான்.செல்லும் வழியில் இனிப்பும் பூவும் வாங்கி கொண்டான்.அவன் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பியிருந்தது.வழி நெடுக இனிய கற்பனைகளில் மிதந்தபடி சென்றான்.ஆனால் அங்கே....



-தொடரும்​
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom