Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிவகாமியின் சபதம் - பாகம் - 2 :காஞ்சி முற்றுகை

பத்தொன்பதாம் அத்தியாயம்

வந்தான் குண்டோதரன்

படைகளின் முழக்கத்தைக் கேட்டதும் சற்றுப் பின்னால் வந்துகொண்டிருந்த ஆயனரும் புத்த பிக்ஷுவும் வேகமாக நடந்து வண்டியை நெருங்கி வந்தார்கள். முன்னணிப் படை கண்ணுக்குத் தெரிந்ததும், வண்டி சாலையில் ஒதுக்குப் புறமாக நின்றது. சிவகாமியும் அத்தையும் வண்டியிலிருந்து இறங்கி நின்றுகொண்டார்கள். படை வரும் முழக்கம் அத்தையின் காதில் விழாதபடியால், மற்றவர்களைப் போல் அவளிடம் பரபரப்பு இல்லை.

புத்த பிக்ஷு சாலை ஓரத்து மரத்தின் பின்னால் தெரிந்தும் தெரியாததுமாக நின்றுகொண்டார். அவர் இராஜ வம்சத்தினரைக் கண்ணாலும் பார்ப்பதில்லை என்பது போன்ற விரதங்கள் கொண்டவர் என்பது தெரியுமாதலால் அவர் மறைந்து நிற்பது பற்றி மற்றவர்களுக்கு வியப்பு ஏற்படவில்லை. ஆனால், எல்லோருக்கும் மனம் ஒருவாறு கலக்கமடைந்து தான் இருந்தது. வருகிறது என்ன படை? எங்கே போகிறது? எதற்காக? தெற்கே இருந்து வருகிறபடியால் அது வாதாபிப் படையல்ல என்பது நிச்சயம், பின்னே யாருடைய படை?

காஞ்சியிலிருந்து கிளம்பி வருகிற வழியில் நம் பிரயாணிகள் பெரும்பாலும் யுத்தப் போக்கைப்பற்றியும், யுத்த முடிவு என்ன ஆகும் என்பதைப்பற்றியும் பேசிக்கொண்டு வந்தார்கள். யுத்தத்தை நினைவூட்டும் காட்சிகளே எங்கெங்கும் தோன்றி வந்தன. சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்தது. எல்லோரும் தெற்கு நோக்கிப் போகிறவர்களாகவே இருந்தார்கள். அநேகமாக அவர்கள் அனைவரும் காஞ்சி நகரிலிருந்தும் காஞ்சிக்குச் சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்தும் யுத்த நிலைமையை முன்னிட்டுப் புறப்பட்டவர்கள். அப்படிப் புறப்பட்டு வந்தவர்களிலே ஸ்திரீகள், குழந்தைகள், வயோதிகர்கள், ஆண்டிப் பரதேசிகள், கூனர், குருடர், காபாலிகர் முதலியோர் அதிகமாகக் காணப்பட்டார்கள்.

முக்கியமாகக் காபாலிகர்கள் வழியெல்லாம் பல்லவ இராஜ குலத்தைச் சபித்துக் கொண்டு போனார்கள். காஞ்சி நகரில் கள்ளுக் கடைகளை மூடித் தங்களை நகரைவிட்டுத் துரத்திய குமார சக்கரவர்த்தியின் பேரில் அவர்கள் தங்களுடைய சாபங்களுக்குள்ளே மிகக் கடுமையான சாபங்களைப் பொழிந்து கொண்டு போனார்கள். நராதமர்களுக்குள்ளே அதமனான மாமல்ல நரசிம்மன் என்னும் சண்டாளனை ரணபத்திர காளிக்குப் பலி கொடுத்து, தாங்கள் மதுபானம் செய்யும் மாட்டுக் கொம்பிலே அவனுடைய இரத்தத்தை ஏந்திக் குடித்துத் தங்களுடைய பயங்கரமான மரண தாகத்தைத் தணித்துக் கொள்ளப் போவதாக அவர்களில் பலர் உரத்த சத்தம் போட்டுச் சபதம் செய்தார்கள். இன்னும் சிலர், மாமல்ல நரசிம்மனையும் தளபதி பரஞ்சோதியையும் சேர்த்துக் கட்டி மயான ருத்திரனுக்குப் பிரீதியாக உயிரோடு கொளுத்தி அவர்களுடைய எலும்புச் சாம்பலைத் தங்கள் உடம்பெல்லாம் பூசிக்கொண்டு உஷ்ணம் தணியப் போவதாகச் சபதம் செய்தார்கள். இந்தச் சாபங்கள், சபதங்கள் எல்லாம் பிராகிருத பாஷையிலும் வேறு கலப்பு மொழிகளிலும் செய்யப்பட்டதானது, அந்தக் காபாலிகர்கள் வடதேசத்திலிருந்தும் மேற்குப் பிராந்தியத்திலிருந்தும் வந்தவர்கள் என்பதைத் தெரியப்படுத்தியது.

சிவகாமிக்கு ஆங்காங்கு வண்டியில் பிரயாணம் செய்தபடியாலும் அவளுடைய உள்ளம் வேறு வேறு உலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபடியாலும், அவளுடைய காதில் அந்தப் பயங்கர சாபங்கள் ஒன்றும் விழவில்லை. ஆனால் ஆயனருடைய காதில் அவை எல்லாம் கர்ண கடூரமாக விழுந்தன. அவற்றைக் கேட்கச் சகிக்காமல் அவர் காதைப் பொத்திக் கொண்டார். புத்த பிக்ஷுவின் செவிகளுக்கு மட்டும் அந்தச் சாபங்கள் எவ்வித அருவருப்பையும் அளித்ததாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக, அவருடைய முகத்தின் கடூரத்தை இன்னும் கடூரமாக்கிக் கொண்டு சில சமயம் புன்னகை தோன்றியது.

பிக்ஷு ஒரு தடவை காபாலிகர் கூட்டத்தில் புகுந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, வௌிவந்து ஆயனரை அணுகியதும், "ஆயனரே! எப்போதாவது நான் புத்த சமயத்தைத் துறந்து சைவனாகும் பட்சத்தில், காபாலிகத்திலேயே சேர்வேன்!" என்றார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆயனர், "சுவாமி! அத்தகைய எண்ணம் தங்களுக்கு ஏன் வரவேண்டும்? புத்த சமயத்தின் மீது தங்களுக்கு என்ன கோபம்? யுத்தங்களினால் ஏற்படும் சங்கடங்களையும் துன்பங்களையும் பார்க்கப் பார்க்க, புத்த பகவான் காட்டிய அஹிம்சா மார்க்கமே உத்தமமான மார்க்கம் என்றல்லவா எனக்கே இப்போது தோன்றி வருகிறது!" என்றார். "அதனாலேதான் நானும் சொல்லுகிறேன், நீங்கள் கால சம்ஹார மூர்த்தியைக் கைவிட்டுப் புத்த பகவானை அடைவதாயிருந்தால், அதற்குப் பிரதியாகக் காபால ருத்திரமூர்த்திக்கும் ஓர் அடியார் வேண்டுமல்லவா?" என்று நாகநந்தி கூறியது ஆயனருக்கு மேலும் மனக் குழப்பத்தை உண்டாக்கிற்று.

சாலைகளில் அபூர்வமாய்த் தெற்கேயிருந்து வரும் பிரயாணிகள் சிலர் காணப்பட்டபோது அவர்களைக் காஞ்சிக்குப் பக்கமிருந்து வருகிறவர்கள் நிறுத்தி "தெற்கே என்ன விசேஷம்?" என்று கேட்பார்கள். அவர்கள் மறுமொழி சொல்லி விட்டுக் காஞ்சி நிலைமையைப் பற்றி விசாரிப்பார்கள். இத்தகைய பேச்சுக்களையெல்லாம் நாகநந்தி ஆங்காங்கு நின்று வெகு சுவாரஸ்யமாகக் கவனிப்பார். இப்படி ஒரு தடவை கூட்டத்தில் நின்று பேச்சு கேட்ட பிறகு, நாகநந்தி, ஆயனர் சிவகாமி இருவர் காதிலும் விழும்படியாக, "நாம் ஒன்று நினைக்க யுத்ததேவன் வேறொன்று நினைக்கிறான் போலல்லவா தோன்றுகிறது? உத்தேசித்தபடி நமது பிரயாணம் நடைபெறாது போலிருக்கிறதே!" என்றார். "அப்படியா? புத்த தேவர் என்ன கருணை செய்கிறார்? அவருடைய திருவுள்ளம் என்ன?" என்றார் ஆயனர். "அத்தையைப் போல் அப்பாவுக்கும் காது மந்தமாகி வருகிறது!" என்று கூறிச் சிவகாமி புன்னகை புரிந்தாள்.

அந்த நகைச்சுவையை அனுபவித்த நாகநந்தி செவிடருடன் பேசுவது போன்ற உரத்த குரலில், ஆயனரே! நான் புத்த தேவரைச் சொல்லவில்லை: யுத்த தேவனைச் சொல்கிறேன்" என்றார். "அப்படியா? யுத்த தேவன் என்ன சொல்கிறார்? நம்மை வழி மறிக்கப்போகிறாரா?" "அப்படித்தான்!" என்று சொன்ன நாகநந்தி மறுபடியும் மெல்லிய குரலில் கூறினார்; "பல்லவ இராஜ்யத்துக்கு எதிர்பாராத ஆபத்துக்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. மேற்கே இருந்து கங்க நாட்டுச் சைனியம் படை எடுத்து வந்து எல்லைப் புறத்தில் நிற்கிறதாம். தெற்கே பாண்டிய மன்னர் பெரும்படை திரட்டிக் கொண்டு வருகிறாராம். பாண்டியர் சைனியம் கிழக்குச் சோழ நாட்டு எல்லைக்கே வந்துவிட்டதாம், வடதிசையிலிருந்து வரும் வாதாபி சைனியத்தைப் பற்றித்தான் உங்களுக்கே தெரியும். பல்லவ சைனியம் தப்பிப் பிழைப்பதற்கு இன்னும் ஒரே திசைதான் பாக்கியிருக்கிறது...!" "எந்தத் திசையைச் சொல்லுகிறீர்கள்?" என்று ஆயனர் கேட்டார். "கிழக்குத் திசையைத்தான் சொல்லுகிறேன்: கிழக்கே சமுத்திர ராஜனிடம் வேணுமானால் மகேந்திர பல்லவர் அடைக்கலம் புகலாம்." "சமுத்திரத்திலே விழுந்து சாகலாம் என்கிறீர்களா? அடிகளே! உங்களுடைய இருதயம் இப்படி ஈரப்பசையே இல்லாத பாலைவனமாக எப்போது ஆயிற்று? என்று ஆயனர் கோபக்குரலில் கூறினார்.

"ஓ! மகா ஸ்தபதியே! என்னை அவ்வளவு நீச குணமுள்ளவன் என்று ஏன் தாங்கள் கருதவேண்டும்? பல்லவ குலம் கடல் தந்த குழந்தையிலிருந்து தோன்றியதாயிற்றே? இப்போது அந்த வம்சத்துக்கு ஆபத்து வந்திருக்கும் சமயத்தில் அந்தக் கடல் அடைக்கலம் தராதா என்று சொன்னேன். கடலில் அடைக்கலம் என்றால் கடலில் முழுகிவிடுதல் என்றுதான் பொருளா? கப்பல் ஏறி இலங்கைக்குப் போய்த் தப்பலாமல்லவா? ஆனால், அதற்கும் ஓர் ஆபத்து இருக்கிறது. இலங்கையில் இப்போதுள்ள அரசன் மகேந்திர பல்லவரின் அருமைச் சிநேகிதன்தான். ஆனால், அவனை இலங்கைச் சிம்மாசனத்திலிருந்து தள்ளிவிட ஒரு பெருங்கலகம் அங்கே நடக்கிறதாம். பாவம்! பல்லவர்களுக்கு வந்திருக்கும் கஷ்ட காலம் அவர்களுடைய சிநேகிதர்களைக் கூடப் பீடிக்கிறதே" என்று கூறிவிட்டுப் புத்த பிக்ஷு ஒரு கோரச் சிரிப்புச் சிரித்தார்.

ஆயனர் அப்போதும் விட்டுக்கொடுக்காமல், "எதற்காக மகேந்திர பல்லவர் இலங்கைக்கு ஓட வேண்டும்? காஞ்சிக் கோட்டை இருக்கிறதல்லவா?" என்றார். "ஆமாம்; காஞ்சிக் கோட்டை இருக்கிறது அதில் எட்டு மாதத்துக்கு முன்பு பயங்கொள்ளிப் பல்லவன் ஒளிந்து கொண்டதுபோல் இப்போது அவனுடைய தந்தையும் ஒளிந்து கொள்ளலாம். வாதாபிப் படை வழி தங்காமல் வந்திருந்தால் கோட்டை ஒரு நொடியில் தகர்ந்து போயிருக்கும். இப்போது கோட்டை பலப்பட்டுவிட்டது. ஆகையால், சில காலம் கோட்டைக்குள் பத்திரமாயிருக்கலாம். வாதாபிப் படை ஆறு மாதமாக வட பெண்ணைக் கரையில் என்ன செய்து கொண்டிருந்தது என்றுதான் தெரியவில்லை!" என்றார் புத்த பிக்ஷு.

இந்த வார்த்தைகள் எல்லாம் சிவகாமியின் செவிகளில் புண்ணில் கோல் இடுவதுபோல் விழுந்தன. 'கடவுளே! நாக்கிலே விஷமுள்ள இந்த நாகநந்தியின் கர்வத்தை அடக்கமாட்டாயா?' என்று வேண்டிக் கொண்டாள். புத்த பிக்ஷுவின் விஷயத்தில் சிவகாமியின் மனநிலை சஞ்சலமுள்ளதாயிருந்தது. அவரிடம் காரணமில்லாத அருவருப்பும் இன்னதென்று தெரியாத பயமும் அவள் மனத்தின் ஆழத்தில் குடிகொண்டிருந்தன. மாமல்லரைப்பற்றி அவர் கூறிய செய்திகளைக் கேட்டபின் அவரிடம் அவளுடைய அருவருப்பு அதிகமாயிற்று.

இன்னொரு பக்கம் புத்த பிக்ஷுவின் விசாலமான உலக அனுபவமும், ஆழ்ந்த கலைஞானமும் அவரிடம் அவளுக்குப் பக்தியையும் மரியாதையையும் உண்டு பண்ணியிருந்தன. மேலும், தூர தூர தேசங்களெல்லாம் சென்று அங்கங்கே மகாசபைகளில் நாட்டியம் ஆடி, 'பரத கண்டத்தின் ஒப்பற்ற நடன ராணி' என்று பெயரும் புகழும் பெறுவதுபற்றிப் பிக்ஷு அடிக்கடி கூறி அவளுடைய உள்ளத்தில் திக்விஜயப் பகற் கனவுகளை உண்டு பண்ணியிருந்தார். அதெல்லாம் அவருடைய உதவியினாலேதான் சாத்தியமாகக் கூடும் என்பதும் உலகமறியாத சாதுவான தன் தந்தையினால் ஆகாது என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தன. எனவே புத்த பிக்ஷுவிடம் தன் மனத்தில் குடிகொண்டிருந்த அருவருப்பைப் போக்கிக்கொண்டு அவரிடம் சிநேகபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று அவள் முடிவு செய்திருந்தாள். ஆனாலும், புத்த பிக்ஷு பல்லவ குலத்தைப் பற்றியும் மாமல்லரைப் பற்றியும் அடிக்கடி கூறிய வசைமொழிகள் அவளுடைய சிநேக முயற்சிக்குக் குறுக்கே நின்று அருவருப்பை வளர்த்து வந்தன.

வாதாபிப் படை வடபெண்ணைக் கரையில் ஆறு மாதமாக இருந்ததுபற்றிப் புத்த பிக்ஷு குறிப்பிட்டதும் சிவகாமி ஆத்திரமான குரலில், "சுவாமி! வடபெண்ணைக்குப் போய் வாதாபிப் படைகளை நீங்களே கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே! பல்லவ குலத்தின் மேல் உங்களுக்கு என்ன அவ்வளவு கோபம்?" என்று கேட்டாள். பிக்ஷு சாந்தமான குரலில், "பல்லவ குலத்தின் மேல் எனக்கு என்னத்திற்கு அம்மா கோபம்? அவர்களுடைய கையாலாகாத்தனத்தினால் இப்போது நாம் நினைத்து வந்தபடி பிரயாணம் செய்ய முடியாமலிருக்கிறதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது. சிதம்பரத்துக்குப்போய் அங்கிருந்து கீழைச் சோழ நாட்டு ஸ்தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு நாகப்பட்டினத்தில் நடக்கப்போகும் மகா புத்த சங்கத்துக்கு உங்களை அழைத்துப் போவதாகச் சொன்னேனல்லவா? இப்போது பாண்டிய சைனியம் கீழைச் சோழ நாட்டில் படையெடுத்து வருவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சமயத்தில் நாம் சோழ நாட்டுக்குப் போவது உசிதமா என்றுதான் யோசிக்கிறேன்" என்று கூறினார்.

"பின்னே, நாம் என்னதான் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று ஆயனர் கேட்டார். "கெடில நதிக்கரையில் ஒரு அமைதியான இடம் இருக்கிறது. தங்களுடைய சிற்பவேலைகளை நடத்துவதற்கும் அங்கே நிறைய வசதி உண்டு. குன்றுகளும் பாறைகளும் ஏராளமாய் இருக்கின்றன. இந்த யுத்தக் குழப்பமெல்லாம் முடியும் வரையில் நீங்கள் அங்கே இருக்கலாமென்று நினைக்கிறேன்" என்றார் பிக்ஷு. பிக்ஷுவிடம் வரவரச் சந்தேகம் அதிகம் கொண்டுவந்த ஆயனர் "போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம், சுவாமி!" என்றார்.

இப்படியெல்லாம் அவர்களுக்குள் இரண்டு தினங்களாகச் சம்பாஷணை நடந்திருந்தபடியால், எதிரே படைவரும் சத்தம் கேட்டதும் ஒருவேளை படையெடுத்து வரும் பாண்டிய சைனியந்தானோ அது என்று ஆயனரும் சிவகாமியும் ஐயுற்றார்கள். ஆனால் முன்னணியில் பறந்த கொடியில் ரிஷபத்தைப் பார்த்ததும் பல்லவர் படை என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. படை வீரர்கள் எழுப்பிய கோஷங்கள் இதை உறுதிப்படுத்தின. "வாதாபி அழிக!" "தலைக்காடு வாழ்க!" "புலிகேசிக்கு நாசம்!" "துர்விநீதனுக்குத் துர்மரணம்!" என்னும் கோஷங்களையும், "காஞ்சி வாழ்க!" "மகேந்திர பல்லவர் வாழ்க!" "மாமல்லரின் வீரத் தோள் வெல்க!" என்னும் முழக்கங்களையும் மாற்றி மாற்றி அந்த வீரர்கள் எழுப்பிக் கொண்டு கம்பீரமாக நடந்தார்கள்.

இந்தக் குரல் ஒலிகளுக்கு இடை இடையே பேரிகை முதலிய யுத்த வாத்தியங்கள் எட்டுத் திக்கும் எதிரொலி எழும்படி ஆர்த்தன. மேற்படி கோஷங்கள் எழுந்தபோது மரத்தின் பின்னால் மறைந்திருந்த நாகநந்தியடிகளின் முகத்தை யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், படமெடுத்து ஆடும் நாக சர்ப்பத்தின் தீக்ஷண்யமான கண்களிலிருந்து தீப்பொறி கிளம்புவதுபோல் அவருடைய கண்களிலிருந்தும் பொறி கிளம்பிக் கொண்டிருந்ததைக் கவனித்திருக்கலாம். படை சின்னப் படைதான்; நாற்பது ஐம்பது குதிரைகளும் இரண்டாயிரம் காலாட்களும் இருக்கலாம். எனவே, அரை நாழிகைக்குள் நமது பிரயாணிகள் நின்றிருந்த இடத்தைத் தாண்டி படை சென்றுவிட்டது. சற்று முன் கலகலப்பாக இருந்த சாலையில் நிசப்தம் குடிகொண்டது. பெரிய நகரத்திலிருந்து திடீரென்று நிர்மானுஷ்யமான காட்டுக்குள் வந்துவிட்டதுபோல் தோன்றியது.

படை வீரர்கள் எழுப்பிய கோஷங்களில் "மாமல்லர் வாழ்க!" "மாமல்லரின் வீரத் தோள் வெல்க!" என்னும் கோஷங்கள் சிவகாமியின் உள்ளத்தில் பெருங்கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. மாமல்லர் பயங்கொள்ளியாயிருந்தால் பல்லவ வீரர்கள் அவரைப்பற்றி இம்மாதிரி வீர கோஷங்களைச் சொல்வார்களா? "ஆயனரே போகலாமா? அசோகபுரம் இன்னும் ஒரு நாழிகை தூரம் இருக்கிறது!" என்று நாகநந்தியின் குரல் கேட்டது. "ஆகா! போகலாமே! சிவகாமி! வண்டியில் ஏறிக்கொள், அத்தையையும் ஏறச்சொல்" என்றார் ஆயனர்.

சிவகாமி வண்டியில் ஏறாமலே, "அப்பா! இந்தப் படை வீரர்கள் எங்கே போகிறார்கள்?" என்று கேட்டாள். "எனக்குத் தெரியவில்லை, அம்மா! பார்த்தால், யுத்தத்துக்குப் போகும் படையாகத் தோன்றுகிறது. அந்த வீரர்கள் செய்த யுத்த கோஷங்களைக் கேட்டபோது எனக்குக்கூடக் கல்லுளியைப் போட்டு விட்டுக் கத்தியை எடுத்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றியது. எதற்காக இப்படிப் பயந்து ஊரைவிட்டு ஓடுகிறோம் என்று வெட்கமாயிருக்கிறது" என்றார் ஆயனர்.

"ஆயனரே! இத்தகைய சஞ்சலம் உமக்கு எப்போது வந்தது? சற்று முன்னால் அஹிம்சா மூர்த்தியான புத்த பகவானிடம் உமது அபார பக்தியைத் தெரிவித்துக் கொண்டீரே?" என்றார் புத்த பிக்ஷு. அந்தச் சமயத்தில் சாலையில் படை மறைந்த திக்கிலிருந்து ஒரு தனிக்குதிரை வரும் சத்தம் 'டக்டக்' டக்டக்' என்று கேட்டது வர வர அது சமீபித்து வந்தது. வருகிறது யார் என்று தெரிந்துகொள்வதில் அவர்கள் எல்லாருக்குமே ஆவல் இருந்தபடியால் நின்ற இடத்திலேயே நின்றார்கள்.

குதிரை அவர்களுடைய அருகில் வந்தது. குதிரையின் மேல் இருந்தது இன்னார் என்று தெரிய வந்தபோது ஆயனருக்கும் சிவகாமிக்கும் உண்டான வியப்புக்கு அளவேயில்லை. ஏனெனில், குதிரைமேல் இருந்தவன், அவர்களுடைய அரண்ய வீட்டிற்குப் பரஞ்சோதி வந்த தினத்தில் அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே மாயமாய் மறைந்த குண்டோதரன்தான். "குருவே! நான் என்ன தவறு செய்தேன்! என்னை இப்படி அநாதையாய்க் கைவிட்டு விட்டுச் சொல்லாமல் புறப்பட்டு வந்து விட்டீர்களே!" என்று அலறினான் குண்டோதரன்.
 
இருபதாம் அத்தியாயம்

குண்டோதரன் கதை

குண்டோதரன் குதிரையிலிருந்து குதித்து இறங்கி வந்து, சாலையில் நின்ற ஆயனரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். பின்னர், எழுந்து நின்று, "ஐயா! என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள். தங்களுடைய திருவருளினால்தான் நான் உங்களை தேடிக் கண்டுபிடித்தேன்" என்று சொன்னான். "ரொம்பவும் சந்தோஷம், குண்டோதரா! நீ தேடிக் கொண்டு வந்து சேர்ந்ததில் எனக்கு வெகு சந்தோஷம். ஆனால் உன்னைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்துவிட வில்லையே? நீ அல்லவா திடீரென்று எங்களைக் கைவிட்டு விட்டு மாயமாய் மறைந்து விட்டாய்?.. எங்கே அப்பா போயிருந்தாய்?" என்று ஆயனர் கேட்க, குண்டோதரன், "குருவே! நான் என்ன செய்வேன்! காஞ்சியிலிருந்து அன்றைக்கு ரதம் ஓட்டிக்கொண்டு கண்ணபிரான் வந்தானல்லவா? அவன் ஒரு சமாசாரம் சொன்னான். என் பாட்டி எனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதற்காகப் பெண் பார்த்து வைத்திருக்கிறாள் என்றும், உடனே வரச் சொன்னாள் என்றும் தெரிவித்தான். அப்புறம் காரியம் மிஞ்சிவிடப் போகிறது என்று உடனே போய் பாட்டியிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வருவதற்காகக் காஞ்சிக்கு ஓடினேன். உங்களிடம் சொல்லிக் கொண்டு போகலாமென்று பார்த்தால், வீட்டில் உங்கள் இரண்டு பேரையும் காணவில்லை. ஒருவேளை தாமரைக் குளக்கரையில் இருப்பீர்களோ என்று ஓடிப்போய்ப் பார்த்தால், அங்கேயும் உங்களைக் காணவில்லை. இந்தப் புத்த பிக்ஷு தான் தாமரைக் குளக்கரையில் நின்று கொண்டிருந்தார்..' என்று சொல்லிக் குண்டோதரன் நாகநந்தியடிகளை ஏறிட்டுப் பார்த்தான்.

"என்னைச் சொல்கிறாயா, தம்பி? இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ள புத்த பிக்ஷு நான் ஒருவன்தானா? வேறு யாரையாவது பார்த்திருப்பாய்!" என்றார் நாகநந்தி அடிகள். "இல்லை, சுவாமி, இல்லை! தங்களைத்தான் பார்த்தேன். கையிலே ஏழெட்டு ஓலைச் சுருள்களை வைத்துக்கொண்டு, ஒரு ஓலையைப் படித்துக் கொண்டிருந்தீர்கள். நாகப்பாம்பு சீறுவதைப்போல் சீறிக் கொண்டிருந்தீர்கள்.."

சிவகாமியின் மனத்தில் அப்போது சுறுக்கென்றது. மரப் பொந்திலே அவள் வைத்திருந்த மாமல்லரின் ஓலைகள் காணாமற்போனது அவளுக்கு நினைவு வந்தது. அப்போது நாகநந்தி, "என்ன அப்பா உளறுகிறாய்? நானாவது தாமரைக் குளக்கரையில் நின்று ஓலை படிக்கவாவது?" என்றார். ஆயனரும், "வேறு யாராவது இருக்கும் குண்டோதரா! அப்புறம் உன் கதையைச் சொல்!" என்றார். "இல்லை, குருவே! இவரையேதான் பார்த்தேன். இவருடைய முகத்தையும் இவர் சீறுவதையும் பார்த்ததும் எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? ஆ! அதைச் சொல்லக்கூடாது சொன்னால், பிக்ஷுவுக்குக் கோபம் வரும். கோபம் வந்து என்னைக் கடித்தாலும் கடித்து விடுவார்!" என்றான்.

நாகநந்தியின் கண்களில் தீப்பொறி பறந்தது. ஆயனரோ நிலைமை விரஸமாய்ப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, "பாருங்கள் சுவாமி! இப்பேர்ப்பட்ட புத்திசாலி சிஷ்யனை வைத்துக் கொண்டு என்ன சிற்ப வேலையைச் செய்வது? அதனால்தான் எட்டு மாதமாக நான் ஒன்றும் செய்யவில்லை.... போகட்டும் குண்டோதரா! அப்புறம் உன் கதையைச் சொல்லு! உன் பாட்டி பேசிவைத்த பெண்ணின் கதி என்ன?" என்றார். "குருவே! பாட்டியிடம் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டேன். 'பாட்டி, பாட்டி! நம்முடைய மகேந்திர சக்கரவர்த்தியின் குமாரர் மாமல்லர் எத்தனை எத்தனையோ ராஜாக்கள் பெண் கொடுப்பதாக வந்தும் இன்னும் கலியாணம் பண்ணிக் கொள்ளாமல் பிரம்மச்சாரியாயிருக்கிறார். என் குருநாதருடைய செல்வப் புதல்வி சிவகாமிக்கு இன்னும் கலியாணமாகவில்லை. அவர்கள் எல்லாம் அப்படி இருக்கும்போது எனக்கு மட்டும் கலியாணம் என்னத்திற்கு, பாட்டி? நீ வேணுமானால் கலியாணம் பண்ணிக்கொள் நான் கிட்ட இருந்து நடத்துகிறேன்' என்று சொன்னேன்...."

குண்டோதரன் இவ்வாறு கூறியதும், எல்லாரும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள். சிவகாமியின் அத்தையும் கூடச் சிரித்துவிட்டு, "என்னத்திற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்று சிவகாமியைக் கேட்டாள். "குண்டோதரனுக்குக் கலியாணமாம்!" என்றாள் சிவகாமி. ஆயனர், "சரி தம்பி! நாங்கள் இங்கே கிளம்பி வந்தது உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார். குண்டோதரன் சொல்கிறான்; "குருவே! பாட்டியிடம் அவசரமாகச் சொல்லிவிட்டு ஓட்டம் ஓட்டமாய் நமது வீட்டுக்கு வந்து பார்த்தால், வீடு பூட்டிக் கிடந்தது! நம்முடைய குருநாதரே நம்மைக் கைவிட்டு விட்டார். இனிமேல் கடவுள்தான் நமக்குத் துணை என்று தீர்மானித்து அப்படியே மரத்தடியில் படுத்துத் தூங்கிப் போய்விட்டேன். "அப்போது பாருங்கள்! கடவுளே பார்த்து அனுப்பியதுபோல் நமது குமார சக்கரவர்த்தியும் புதிய தளபதி பரஞ்சோதியாரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்!"

"யார் வந்தது!" என்று ஆயனர், சிவகாமி இரண்டு பேரும் ஏக காலத்தில் கேட்டார்கள். "மாமல்லரும் தளபதி பரஞ்சோதியாரும் வந்தார்கள். குதிரை மேல் வந்தார்கள்! ஆகா! குதிரை என்றால், அதுவல்லவா குதிரை..." "அப்புறம்!" என்றார் ஆயனர். "அவர்களுக்குப் பின்னால் இன்னும் பல குதிரை வீரர்கள் வந்தார்கள். கண்ணபிரான் ரதம் ஓட்டிக் கொண்டு வந்தான். "சரி, அப்புறம் என்ன நடந்தது?" என்றார் ஆயனர்.

மாமல்லர் வந்தார் என்று கேட்டதும் சிவகாமிக்குத் தலை சுற்றியது, தேகமெல்லாம் நடுங்கியது. என்னவெல்லாமோ கேட்க வேண்டுமென்று உள்ளம் துடித்தது, உதடுகளும் துடித்தன. எனினும், "யார் வந்தது?" என்று கேட்டதற்குப் பிறகு அவளுடைய வாயிலிருந்து வார்த்தை எதுவும் வரவில்லை. ஆனால், விஷயத்தைச் சொல்லாமல் குண்டோதரன் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்ததில் அவளுக்குக் கோபமாய் வந்தது.

குண்டோதரன் சொல்கிறான்; "குருவே! வீடு பூட்டிக் கிடந்ததைக் கண்டதும் எனக்கு எவ்வளவு கோபம் வந்ததோ அதைவிட மூன்று மடங்கு கோபம் நமது குமார சக்கரவர்த்திக்கு வந்துவிட்டது. மாமல்லர் குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு போன வேகத்தைப் பார்க்க வேண்டுமே? அடே அப்பா! நமது குமார சக்கரவர்த்திக்கு இவ்வளவு மூக்குக்கு மேல் கோபம் வரும் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. குமார சக்கரவர்த்தியின் குதிரை திரும்பியதும், மற்றக் குதிரைகள் சட சடவென்று திரும்புவதற்குப் பட்டபாட்டைப் பார்க்க வேண்டுமே... என்ன அவசரம்? என்ன தடபுடல்?.. நான் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து மரத்தின் பின்னாலிருந்து வௌியே வருவதற்குள்ளே அவ்வளவு குதிரைகளும் காற்றாய்ப் பறந்து மறைந்து போய் விட்டன..."

சிவகாமியின் உள்ளத்தில் அப்போது மகிழ்ச்சி, பயம், கோபம், கவலை முதலிய உணர்ச்சிகள் ததும்பி, புயற்காற்று அடிக்கும்போது சமுத்திரம் கலங்குவது போல் கலங்கச் செய்து கொண்டிருந்தன. மாமல்லர் தன்னைத் தேடி வந்தார் என்பதில் மகிழ்ச்சி; அவருக்கு வந்த கோபத்தைக் கேட்டதில் பயம்; அவர் வருவதற்கு முன்னால் கிளம்பும்படி செய்த நாகநந்தியின் மேல் கோபம்; செய்த தவறை எப்படித் திருத்துவது என்பது பற்றிக் கவலை இப்படிப்பட்ட பலவகை உணர்ச்சிகளுக்கிடையே ஒரே ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல் துடிதுடித்தது. ஒருவாறு நெஞ்சை உறுதிப்படுத்திக்கொண்டு, "அப்பா! குண்டோதரன் சொல்வது எனக்கு நிஜமாகத் தோன்றவில்லை. குமார சக்கரவர்த்தியாவது, நம் வீட்டுக்கு வரவாவது? அவர்தான் யுத்தத்துக்குப் பயந்துகொண்டு கோட்டையில் ஒளிந்து கொண்டிருந்தாரே!" என்றாள். ஆயனர் அதற்கு மறுமொழி சொல்லத் தெரியாதவராய் குண்டோதரனைப் பார்க்க, அவன், "குருவே! இப்படிப்பட்ட நாராசமான வார்த்தைகள் சிவகாமி அம்மையின் வாயிலிருந்துதானா உண்மையில் வௌிவந்தன? வீராதி வீரரான மகாமல்லவராவது, யுத்தத்துக்குப் பயந்து கோட்டையில் ஒளிந்து கொண்டிருக்கவாவது? இப்பேர்ப்பட்ட கொடிய அவதூறை எந்தப் பாவி சிவகாமி அம்மையின் காதில் போட்டது? சக்கரவர்த்தியின் கட்டளைக்காக அல்லவா மாமல்லர் இத்தனை நாளும் கோட்டைக்குள்ளே இருந்தார். சக்கரவர்த்தியின் ஆக்ஞை வந்தவுடனே மாமல்லர் நேரே போர்க்களத்துக்கல்லவா புறப்பட்டுப் போகிறார்!"

"போர்க்களத்துக்கா? எந்தப் போர்க்களத்துக்கு?" என்று ஆயனர் கேட்க, "தெரியாதா, குருவே? நாடு நகரமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே? மகேந்திர சக்கரவர்த்தி வடபெண்ணைக் கரையில் முடக்கப்பட்டிருக்கும் தைரியத்தினால், கங்க நாட்டுத் துர்விநீதன் காஞ்சியின் மேல் படையெடுத்து வரும் செய்தி தங்களுக்குத் தெரியாதா? அவனையும் அவனுடைய படையையும் எதிர்த்துத் துவம்ஸம் செய்வதற்குத்தான் மாமல்லர் திருக்கழுக்குன்றத்திலிருந்து நமது தற்காப்புப் படையுடன் போயிருக்கிறார். சற்று முன்னால், இந்தச் சாலையில் ஒரு படை போயிற்றே, நீங்கள் பார்க்கவில்லையா? அந்தப் படை தென் பெண்ணைக் கரையிலேயே காவலுக்கு இருந்த படை; போர்க்களத்திற்குப் போகும் மாமல்லருடனே சேர்ந்து கொள்ளத்தான் போகிறது. இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா?" என்றான் குண்டோதரன்.

வெகு சாதுவாகவும், பேசவே தெரியாத மந்தனாகவும் இத்தனை நாளும் தோன்றிய குண்டோதரன் இப்போது இவ்வளவு வாசாலகனாய் மாறியிருந்தது ஆயனருக்கு ஒரே ஆச்சரியத்தை அளித்தது. அவனிடம் இன்னும் ஏதோ அவர் கேட்கப் போனார். அந்தச் சமயம், நாகநந்தி கலக்கமடைந்த குரலில், "ஆயனரே! நன்றாய் இருட்டி விட்டதே? மிச்ச வழியையும் கடந்து இரவு தங்குவதற்கு அசோகபுரிக்குப் போய்விட வேண்டாமா! குண்டோதரன் நம்முடன் வருகிறானே, எல்லா விவரங்களும் சாவகாசமாய் அவனிடம் கேட்டுக் கொண்டால் போகிறது!" என்றார்.

உண்மையிலேயே அப்போது நன்றாய் இருட்டிவிட்டிருந்தபடியால், நாகநந்தியின் முகத்தை யாரும் நன்றாய்ப் பார்க்க முடியவில்லை. பார்க்க முடிந்திருந்தால், அந்தக் கோரமான முகம் அப்போது இன்னும் எவ்வளவு சர்வ கோரமாயிருக்கிறதென்று அறிந்து பயந்து போயிருப்பார்கள். ஆயனர் சிவகாமியைப் பார்த்து "குழந்தாய்! அடிகள் கூறுவது உண்மைதான்; வண்டியில் ஏறிக்கொள்! குண்டோதரனிடம் எல்லாம் பிறகு விவரமாய்க் கேட்கலாம்" என்றார். சிவகாமியின் உள்ளத்தில் குண்டோதரனைக் கேட்பதற்கு எத்தனையோ கேள்விகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவள் ஒரு கேள்வி கேட்க விரும்பினாள். அதாவது, குண்டோதரனுக்குக் குதிரை எப்படிக் கிடைத்தது? ஒருவேளை குமார சக்கரவர்த்தியின் கோபம் தணிந்து தங்களைப் போய்த் திருப்பி அழைத்து வருவதற்காக அவர்தான் குண்டோதரனுக்குக் குதிரை கொடுத்து அனுப்பியிருக்கிறாரோ என்று அவள் மனத்திற்குள்ளே ஒரு சபல நினைவு தோன்றியது. எனவே "அப்பா! அத்தை வண்டியில் ஏறிக் கொள்ளட்டும் நான் சற்று நேரம் உங்களுடன் நடந்து வருகிறேன்" என்றாள்.
 
இருபத்தோராம் அத்தியாயம்

குதிரை கிடைத்த விதம்

அத்தை வண்டியில் ஏறிக்கொண்டதும் வண்டி புறப்பட்டது மற்றவர்கள் பின்னால் நடந்து சென்றார்கள். குண்டோதரனும் தன் குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்து நடத்திக் கொண்டு வந்தான். "அப்பா! குண்டோதரனுக்குக் குதிரை எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லும்படி கேளுங்கள்!" என்றாள் சிவகாமி. "குண்டோதரனுக்குக் குதிரை ஏறத் தெரியும் என்றே எனக்குத் தெரியாது, அம்மா! குண்டோதரா, நீ எப்போது குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டாய்?" என்று கேட்டார் ஆயனர். "குருவே! உலகத்தைத் துறந்து காவித் துணி புனைந்த புத்த பிக்ஷுக்கள்கூட இந்த நாளில் குதிரை ஏறுகிறார்களே! இந்தக் குதிரை கூட ஒரு இளம் புத்த பிக்ஷு ஏறிக்கொண்டு வந்ததுதான். குருவே! அந்த இளம் பிக்ஷுவை ஏரியிலே தள்ளிவிட்டு நான் குதிரை மேல் ஏறி வந்துவிட்டேன்!" என்று குண்டோதரன் கூறிக் கலகலவென்று சிரித்தான்.

குண்டோதரன் சொல்லுவதெல்லாம் நாகநந்திக்குக் கோபம் மூட்டுவதாயிருப்பதைக் கண்ட ஆயனர், "குண்டோதரா! இது என்ன? என் சிஷ்யன் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா? கொஞ்சமும் நன்றாயில்லையே?" என்றார். சிவகாமி "அப்பா! குண்டோதரன் அப்படியெல்லாம் ஒன்றும் செய்திருக்கமாட்டான், வேடிக்கைக்காகச் சொல்கிறான்" என்றாள். "இல்லை, இல்லை! நிச்சயமாகத்தான் சொல்கிறேன். இங்கேயிருந்து இரண்டு காத தூரத்தில் சாலை ஓரமாக ஒரு ஏரி இருக்கிறதே, நீங்கள் பார்க்கவில்லையா? அந்த ஏரியிலே தான் அந்த இளம் பிக்ஷுவைத் தள்ளினேன்' என்றான் குண்டோதரன்.

நாகநந்தி பெரிதும் கலக்கமடைந்த குரலில் ஆயனருக்கு மட்டும் கேட்கும்படியாக, "சிற்பியாரே! என்ன நடந்தது என்று விவரமாய்க் கேளுங்கள்!" என்றார். ஆயனர் அவ்விதமே விவரமாய்ச் சொல்லும்படி கேட்டதன் மேல் குண்டோதரன் சொன்னான்; "உங்களை வீட்டில் காணாமல், "அடடா! நம்முடைய குரு இப்படி நம்மைக் கைவிட்டு விட்டுப் போய்விட்டாரே!" என்று நான் கவலையுடன் மரத்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். பல குதிரைகள் வரும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு மரத்தடியில் மறைவிலிருந்தபடி பார்த்தேன். வந்தவர்கள் அனைவரும் அவசரமாய்த் திரும்பிப் போய் விட்டார்கள், 'அடடா! இவ்வளவு குதிரைகளில் நமக்கு ஒரு குதிரை கிடைத்தால் நமது குருவைப் போய்ப் பிடித்து விடலாமே? கால்நடையாகப் போய்ப் பிடிக்க முடியுமா?' என்று நான் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், ஒரு இளம் புத்த பிக்ஷு சற்று தூரத்திலிருந்த இன்னொரு மரத்தடியின் மறைவிலிருந்து வௌியே வந்தார். அந்த வீட்டுக்கு நாகநந்தி அடிகள் வந்திருந்தாரா என்று என்னைக் கேட்டார். அப்போது தாமரைக் குளக்கரையில் இந்த அடிகளைப் பார்த்த நினைவு எனக்கு வந்தது. 'அவர் பெயர் என்னவோ எனக்குத் தெரியாது, ஒரு பிக்ஷுவைத் தாமரைக் குளக்கரையில் கண்டேன்' என்றேன். இளம் பிக்ஷு சற்று யோசித்து விட்டுக் கிளம்பினார். வழித்துணை கிடைத்தது என்ற சந்தோஷத்துடன் நானும் அவருடன் கிளம்பினேன். ஆனால் அந்த இளம் பிக்ஷு என்னை ஏமாற்றிவிட்டார். கொஞ்ச தூரம் போனதும் காட்டின் மறைவில் கட்டியிருந்த இந்தக் குதிரைமேல் ஏறிக்கொண்டு என்னிடம் சொல்லிக் கொள்ளக்கூடச் செய்யாமல் வேகமாகப் போய்விட்டார். ஆகா! யாரை நம்பினாலும் நம்பலாம்; புத்த பிக்ஷுக்களை மட்டும் நம்பக்கூடாது! இதோ நம்முடன் வரும் அடிகள் நீங்கலாகச் சொல்கிறேன்" என்றான் குண்டோதரன். ஆயனர், "குண்டோதரா! பெரியோர்களாகிய புத்த பிக்ஷுக்களைப்பற்றித் தூஷணை சொல்லாதே! பிறகு நீ என்ன செய்தாய் என்று சொல்லு!" என்றார்.

"நானா? நான் என்ன செய்வது, குருவே! 'நமக்குக் குதிரை இல்லாமற்போனால் போகட்டும்; கடவுள் கொடுத்த இரண்டு கால்கள் இருக்கிறதல்லவா?" என்று எண்ணிக்கொண்டு கிளம்பினேன். இரண்டு நாள் பிரயாணம் செய்ததில் கால் வலி கண்டு இன்று மத்தியானம் ஏறிக் கரையில் சாலை ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது பாருங்கள், அதே இளம் பிக்ஷு குதிரை மேல் வந்தார். 'அடிகளே! இதென்ன, எனக்கு முன்னால் கிளம்பினீர்கள் பின்னால் வருகிறீர்களே!' என்று கேட்டேன். என்னைப் பார்த்ததில் அவருக்கு அதிக ஆச்சரியமாய்ப் போய்விட்டது. 'ஆமாம், அப்பா! இந்தக் காலத்தில் கால்நடைப் பிரயாணத்தை விடக் குதிரைப் பிரயாணம்தான் அதிக ஆபத்தாயிருக்கிறது. பல்லவ ராஜாங்கம்தான் தரித்திரம் பிடித்த ராஜாங்கமாயிருக்கிறதே? எங்கேயாவது குதிரையைக் கண்டால் யுத்தத்துக்கு வேண்டுமென்று கைப்பற்றிக் கொள்கிறார்களாமே? அதற்காகப் பயந்து பயந்து வரவேண்டியதாயிருந்தது!" என்றார். அப்புறம் பிக்ஷு குதிரை மேலும் நான் கால்நடையாகவும் கொஞ்சதூரம் வந்தோம். அப்போது பிக்ஷு அடிக்கடி 'தாகமாயிருக்கிறது' 'தாகமாயிருக்கிறது' என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மேல் எனக்கு மிகவும் பரிதாபம் உண்டாகி விட்டது. 'அடிகளே! இந்தத் திவ்யமான ஏரியில் தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்ளுங்களேன்!' என்று சொல்லி அவரைக் குதிரை மேலிருந்து ஒரு தள்ளுத் தள்ளினேன் பிக்ஷு ஏரியில் விழுந்தார். அடடா! என்ன ஆனந்தமாக அவர் ஏரித் தண்ணீர் குடித்தார் தெரியுமா..."

இதைக்கேட்ட சிவகாமியினால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆயனர், "அம்மா, இதென்ன அசந்தர்ப்பமான சிரிப்பு?" என்று அதட்டிவிட்டு, "அட பாவி! அப்புறம் என்னடா செய்தாய்?" என்று குண்டோதரனைப் பார்த்துக் கேட்டார். "குருவே! புத்த பிக்ஷுவுக்குத் தண்ணீர் கொடுத்துத் தாகத்தைத் தணிப்பது பாவமா?" என்றான் குண்டோதரன். "அப்புறம் என்ன செய்தாய், சொல்!" என்று ஆயனர் மிகவும் கடுமையான குரலில் கேட்டார்.

"என்ன செய்தேனா? பிக்ஷுவுக்கு நீந்தத் தெரியாதென்று தெரிந்ததும் கரையிலே கிடந்த அவருடைய மேல் வஸ்திரத்தை எடுத்து அதன் ஒரு முனையைக் கரையிலிருந்த மரத்தின் வேரில் கட்டினேன். இன்னொரு முனையை அவர் பிடித்துக்கொண்டதும், 'பிக்ஷுவே! மெதுவாகக் கரையேறிவந்து சேருங்கள்! நான் போகிறேன்!' என்றேன். அப்போது அவர், 'ஐயோ! ஓலை! ஓலை!' என்று அலறினார். 'என்ன ஓலை?' என்று கேட்டேன். 'நாகநந்திக்குக் கொண்டுவந்த ஓலை! கரையிலே கிடக்கிறதா, பார்!' என்றார். கரையிலே பார்த்தேன் ஒரு ஓலை கிடந்தது. அதை எடுத்து அவருக்குக் காட்டி, 'ஓலை பத்திரமாயிருக்கிறது கவலை வேண்டாம்' என்று சொல்லிவிட்டுக் குதிரை மேல் ஏறிக் கொண்டேன். அவ்வளவுதான்; இங்கே வந்து சேர்ந்தேன்" என்று குண்டோதரன் தன் கதையை முடித்தான். குரோதம் நிறைந்த குரலில் நாகநந்தி, "ஆயனரே! தயவு செய்து உமது சீடனிடமிருந்து ஓலையை வாங்கிக் கொடுங்கள்!" என்றார்.

ஆயனரும் கலக்கத்துடன், "குண்டோதரா! என் பெயரைக் கெடுக்கவா நீ என் சீடனானாய்? நல்ல காரியம் செய்தாய்! போகட்டும், இவர்தான் நாகநந்தியடிகள், அந்த ஓலையைக் கொண்டு வந்திருக்கிறாயா? இப்படிக் கொடு!" என்றார். "குருவே! அப்படியா? நான் நினைத்தது நிஜமாய்ப் போயிற்றே? இவர்தானா நாகநந்தியடிகள்! சுவாமி! இதோ ஓலை!" என்று குண்டோதரன் நாகநந்தியடிகளிடம் ஓலையைக் கொடுத்தான். அதை அவர் மௌனமாக வாங்கிக் கொண்டு சாலை மரங்களின் வழியாக வந்து கொண்டிருந்த நிலாக் கிரணங்களின் உதவியினால் படிக்க முயன்றார் ஆனால் படிக்க முடியவில்லை என்று தெரிந்தது. பிக்ஷுவின் நடை முன்னைக் காட்டிலும் வேகத்தையடைந்தது. அந்தச் சாலையில் வண்டிச் சத்தத்தையும் குதிரையடிச் சத்தத்தையும் மனிதர் காலடிச் சத்தத்தையும் தவிர மற்றபடி நிசப்தம் குடிகொண்டது. மனிதரின் பேச்சுச் சத்தம் அடியோடு நின்றது.
 
இருபத்திரண்டாம் அத்தியாயம்

அசோக புரத்தில்

காஞ்சி மாநகரத்திலிருந்து ஏழு காததூரத்தில், தில்லைப்பதிக்குப் போகும் மார்க்கத்தில், அசோகபுரம் என்னும் ஊர் இருந்தது. இந்த ஊரின் மத்தியில் பரத கண்டத்தை ஒரு குடை நிழலில் ஆண்ட சக்கரவர்த்திகளுக்குள்ளே ஒப்புயர்வற்ற தர்ம சக்கரவர்த்தியான அசோகவர்த்தனர் தேசமெங்கும் நிலை நாட்டிய ஸ்தம்பங்களில் ஒன்று கம்பீரமாய் நின்றது. ஒரு காலத்தில் இந்த அசோக ஸ்தம்பத்தைச் சுற்றியிருந்த புத்த விஹாரங்களில் ஓராயிரம் புத்த பிக்ஷுக்கள் வாசம் செய்தார்கள். புத்த மதத்தைச் சேர்ந்த கிரகஸ்தர்கள் வாழ்ந்த ஆயிரக்கணக்கான வீடுகளும் இருந்தன. மாலை நேரத்தில் புத்த சைத்தியங்களில் பகவான் புத்தருக்கு ஆராதனை நடக்கும்போது தூபங்களிலிருந்து எழும் நறுமணப் புகையானது ஊரெல்லாம் கவிந்திருக்கும். நூற்றுக்கணக்கான பூஜை மணிகள் கணகணவென்று ஒலித்துக்கொண்டிருக்கும். புத்தரின் சந்நிதியில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். பிக்ஷுக்களும், கிரகஸ்தர்களும் கையில் புஷ்பம் நிறைந்த தட்டுக்களை ஏந்திக்கொண்டு பத்தி பத்தியாகச் சைத்தியங்களுக்குப் போய்க்கொண்டிருப்பார்கள்.

அத்தகைய அசோகபுரமானது இப்போது பாழடைந்து நிர்மானுஷ்யமாய்க் கிடந்தது. சைத்தியமும் விஹாரமும் சேர்ந்தமைந்த ஒரே ஒரு கட்டிடத்திலே மட்டும் ஒரு சிறு தீபத்தின் ஒளி காணப்பட்டது. மற்றக் கட்டிடங்கள் இடிந்து தகர்ந்து பாழாய்க் கிடந்தன. இடியாத கட்டிடங்களில் இருள் சூழ்ந்திருந்தது. தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அசோக சக்கரவர்த்தியால் நிலைநாட்டப்பட்ட தர்மபோதனை ஸ்தம்பம் மாத்திரம் தாவள்யமான சந்திரிகையில், "தர்மத்துக்கு என்றும் அழிவில்லை" என்பதை ஸ்தாபித்துக் கொண்டு தலைதூக்கி நின்றது. இத்தகைய அசோக புரத்துக்கு இருட்டி இரண்டு நாழிகைக்குப் பிறகு ஆயனரும் சிவகாமியும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் அசோகருடைய ஸ்தம்பத்தின் அருகில் வந்த போது ஆயனர் வானை நோக்கி நெடிதோங்கி நின்ற அந்த ஸ்தம்பத்தை அண்ணாந்து நிலா வௌிச்சத்தில் பார்த்தார். அதுவரை அவர்களுக்குள் நிலவிய மௌனத்தைக் கலைத்துக் கொண்டு, "ஆஹா! அசோக சக்கரவர்த்தி எத்தகைய சர்வோத்தமர்! உலகத்திலே தோன்றும் அரசர்கள், சக்கரவர்த்திகள் எல்லாம் அசோகரைப் போன்றவர்களாயிருந்தால், இந்தப் பூவுலகம் எவ்வளவு ஆனந்தமயமாயிருக்கும்? யுத்தம் என்னத்திற்கு? பகைமை என்னத்திற்கு? ஒருவருடைய இரத்தத்தை ஒருவர் சிந்துவது என்னத்திற்கு? பூவுலக மாந்தர்கள் எல்லாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்து கொண்டு அஹிம்சையை மேற்கொண்டு ஆனந்தமாய் வாழலாகாதா?" என்றார்.

அப்போது சிவகாமி குறுக்கிட்டு, "அப்பா! இதென்ன! சற்று முன்னாலேதான் உங்களுக்கும் கத்தி எடுத்துக்கொண்டு யுத்தம் செய்ய ஆசை உண்டாவதாய்ச் சொன்னீர்கள். இப்போது அன்பு, அஹிம்சை, ஆனந்தம் என்கிறீர்களே. உங்களுடைய மனது இப்படிச் சஞ்சலம் அடைந்து நான் பார்த்ததேயில்லை!" என்றாள். "உண்மைதான், சிவகாமி! என் மனது இப்போதெல்லாம் ஒரு நிலையில் இல்லை. புத்த பகவான் இந்த உலகத்தில் அன்பின் ஆட்சியை நிலைநாட்டப் பார்த்தாரே? அவருடைய பிரயத்தனம் ஏன் வீணாகப் போயிற்று என்பதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது" என்றார் ஆயனர். பிக்ஷு அப்போது வாய் திறந்து, ஆயனரே! புத்த பகவானுடைய போதனையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனித குலத்துக்கு இன்னும் ஏற்படவில்லை! அதற்கு என்ன செய்வது?" என்றார்.

யாரும் எதிர்பாராதபடி குண்டோதரன் சம்பாஷணையில் கலந்து கொண்டு, "மனித குலம் என்று பொதுப்படையாகச் சொன்னால் என்ன பிரயோசனம், அடிகளே? பிராணிகளிலே புலியும் இருக்கிறது; பசுவும் இருக்கிறது. ஜந்துக்களிலே பாம்பும் இருக்கிறது; அணிலும் இருக்கிறது. அது போலவே மனிதர்களுக்குள்ளும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. மௌரிய வம்சத்து அசோகவர்த்தனரைப் போலவேதான் நமது மகேந்திர பல்லவரும் தம் ராஜ்யத்தில் அன்பு மதத்தை ஸ்தாபிக்க முயன்றார். யுத்தம் என்பதே வேண்டாம் என்று நினைத்தார். அதைக் கெடுப்பதற்கு ஒரு புலிகேசியும், ஒரு துர்விநீதனும், ஒரு பாண்டியனும் புறப்பட்டு வந்தால் மகேந்திர பல்லவர் என்ன செய்வார்? பூலோகத்தில் பாம்பு இருக்கும் வரையில் கீரிப்பிள்ளையும் இருக்க வேண்டியதுதான். கீரிப்பிள்ளை இல்லாவிட்டால், மனிதனாவது தடியை எடுத்துப் பாம்பை அடித்துத்தானே தீர வேண்டும்?" என்றான்.

"அடே அப்பா நமது குண்டோதரன் இவ்வளவு வாசாலகன் என்று எனக்குத் தெரியவே தெரியாதே!" என்றார் ஆயனர். புத்த பிக்ஷுவோ அருவருப்புடனும் ஆத்திரத்துடனும் அவனை நோக்கினார். சிவகாமி, "குண்டோதரன் சொல்வது நியாயம், அப்பா! உலகத்தில் பொல்லாதவர்கள் இருக்கும் வரையில் அவர்களை அடக்கக்கூடிய புருஷர்களும் வேண்டும் அல்லவா?" என்றாள். "ஆம் சிவகாமி, ஆமாம்! அது மட்டுமல்ல; உலகத்தில் எல்லாம் அன்புமயமாய்ப் போய்விட்டால், வீரம் என்பதே இல்லாமற் போய்விடும். வீரம் இல்லாத உலகம் என்ன உலகம்? அப்புறம் கதை ஏது, காவியம் ஏது, கலைதான் ஏது?" என்றார் ஆயனர்.

குண்டோதரன், "குருவே! நான் ஒன்று சொல்லட்டுமா? இந்த அசோகர் ஸ்தம்பம் இங்கே வெறும் ஸ்தம்பமாக நின்று கொண்டிருப்பதில் யாருக்கு என்ன பிரயோசனம்? இதிலுள்ள உபதேசத்தைப் படித்து அதைப் பின்பற்றி நடப்பார் யார்? இந்த ஸ்தம்பத்தை என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்லட்டுமா?.." என்று கூறிக்கொண்டே குண்டோதரன் ஸ்தம்பத்தைக் கையினால் தட்ட அது 'டாண்! டாண்!' என்று ஒலி செய்தது. பின்னர், "நல்ல எஃகினால் செய்திருக்கிறது; இதைக் கொல்லன் உலையில் போட்டு உருக்கி, வாள்களாகவும் வேல்களாகவும் செய்யவேண்டும். இந்த ஸ்தம்பத்தை உருக்கினால், குறைந்தபட்சம் பத்தாயிரம் வாள்களும் வேல்களும் செய்யலாம்!" என்றான் குண்டோதரன்.

அசோக ஸ்தம்பத்தினருகில் மேற்கண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில் நாகநந்தி சற்று முன்னாலேயே நடந்து சென்று அருகிலே இருந்த புத்த விஹாரத்தை அடைந்தார். அதேசமயம் விஹாரத்துக்குள்ளேயிருந்து வயோதிக பிக்ஷு ஒருவர் கையில் தீபத்துடன் வாசலில் வந்தார். அந்தத் தீபத்தின் வௌிச்சத்தில் விஹாரத்தின் வாசலிலே நின்றுகொண்டு, பிக்ஷு குண்டோதரன் கொண்டு வந்த ஓலையைப் படித்தார். அப்போது அவருடைய முகத்தில் உண்டான மாறுதல்களைத் தீபச் சுடரின் சிவந்த ஒளியில் பார்த்துக் கொண்டிருந்த வயோதிக பிக்ஷுவே பயந்து போனார் என்றால், மற்றவர்கள் பாராததே நல்லதாய்ப் போயிற்று என்று சொல்லவேண்டும்.

நாகநந்தி ஓலையைப் படித்து முடித்ததற்கும் ஆயனர் முதலியோர் விஹாரத்தின் வாசலில் வந்ததற்கும் சரியாயிருந்தது. உடனே அவர் தமது முகத்திலும் குரலிலும் அமைதி வருவித்துக் கொண்டு, மற்றொரு பிக்ஷுவைப் பார்த்து, "சுவாமி! இவர்கள் எல்லாம் ஐந்தாறு தினங்கள் தங்கியிருக்கும்படி நேரிடலாம். அதற்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துகொடுக்க வேண்டும்" என்று கூறினார். பின்னர் ஆயனரைப் பார்த்துச் சொன்னார்; "ஆயனரே! உம்முடைய சீடனுக்கு உண்மையில் நான் நன்றி செலுத்தவேண்டும். இந்த ஓலையில் மிகவும் முக்கியமான விஷயந்தான் அடங்கியிருக்கிறது. இதைக் கொண்டு வந்தவனை ஏரியிலே தள்ளிவிட்ட போதிலும் ஓலையைக் கொண்டு வந்தானல்லவா? இந்த ஓலையில் அடங்கிய விஷயத்தைக் கவனிப்பதற்காக நான் அவசரமாய்ப் போகவேண்டியிருக்கிறது. திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று நாள் ஆனாலும் ஆகலாம். அதுவரையில் நீங்கள் இங்கேயே சுகமாகத் தங்கி இருங்கள். இந்தப் பிக்ஷு உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார். மேலும் உங்களுக்கு ஒத்தாசையாகக் குண்டோதரனும் வந்து சேர்ந்து விட்டானல்லவா?"

இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது குண்டோதரனுடைய மார்பையே கீறி உள்ளே பார்ப்பது போல் பார்த்த நாகநந்தி மறுகணம் சிவகாமியை நோக்கி, கனிவு ததும்பிய குரலில், "சிவகாமி! உங்களை அழைத்துக் கொண்டு வந்து இப்படி நடுவழியில் விட்டுவிட்டுப் போகிறேனே என்று நினைக்காதே! மிகவும் அவசர காரியமானபடியாலேதான் போகிறேன். சீக்கிரத்தில் திரும்பி வந்து உங்களுடன் சேர்ந்துகொள்வேன்" என்றார். அநேகமாக எல்லாப் புத்த விஹாரங்களிலும் உள்ளதுபோல் இந்தப் பாழடைந்த விஹாரத்திலும் நடுவில் புத்தர் சந்நிதி இருந்தது. இரண்டு பக்கத்திலும் பிக்ஷுக்கள் வசிப்பதற்குரிய அறைகள் இருந்தன. ஒரு பக்கத்து அறைகள் ஆயனருடைய குடும்பத்துக்காக ஒழித்துக் கொடுக்கப்பட்டன. அவர்கள் தங்களுடைய அறைகளுக்குச் சென்ற பிறகு, இன்னொரு பக்கத்திலிருந்த இருண்ட அறைகளுக்கு நாகநந்தி சென்றார்.
 
இருபத்துமூன்றாம் அத்தியாயம்

தோற்றது யார்?

சிவகாமிக்கு அன்றிரவு வெகு நேரம் வரையில் தூக்கம் வரவில்லை; அன்று குண்டோதரன் கூறிய விஷயங்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள். குமார சக்கரவர்த்தியைப் பற்றி நாகநந்தி கூறிய அவதூறுகளைத் தான் முழுதும் நம்பிவிட்டதை நினைந்து வெட்கினாள். நாகநந்தியின் பேரில் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. அவருடைய பொய் மொழிகளைக் குறித்துக் கேட்டு, அவரை ஏளனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது.

இத்தகைய எண்ணங்களுக்கிடையில் மாமல்லரின் விருப்பத்தின்படி தான் அரண்ய வீட்டில் இல்லாமற் போனது பற்றி அவருடைய கோபம் எத்தகையதாயிருக்குமோ என்ற கவலையும் தோன்றிக் கொண்டிருந்தது. அதை அவ்வளவு மன்னிக்க முடியாத பெருங்குற்றமாக மாமல்லர் கொள்ள மாட்டார் என்று அவள் தன்னைத்தானே ஆறுதல் செய்து கொண்டாள். இவ்விதம் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்து கடைசியில் தன்னையறியாது மேலிட்டு வந்த களைப்பினால் கண்ணயர்ந்தாள்.

அவள் அரைத் தூக்கமாயிருந்தபோது சமீபத்தில் எங்கேயோ பெருங் கூக்குரலைக் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தாள். கவனித்துக் கேட்ட போது, 'குய்யோ முறையோ' என்று குண்டோதரன் ஓலமிடும் சத்தமும், அத்துடன், டக் டக் டக் டக் என்று குதிரை பாய்ந்து செல்லும் சத்தமும் கலந்து கேட்டன. அயர்ந்து தூங்கிய ஆயனரைச் சிவகாமி எழுப்பினாள். இருவரும் வாசலில் வந்து பார்த்தபோது அங்கே ஓலமிட்டுக் கொண்டிருந்த குண்டோதரன், "ஐயோ! குருவே; என்னுடைய குதிரையைப் பிக்ஷு திருடிக் கொண்டுபோய் விட்டார்!" என்று கூச்சலிட்டான். ஆயனர் அவனுக்கு, "அப்பனே! அந்தக் குதிரை உன்னுடையதல்லவே!" என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார்.

குண்டோதரன், "அப்படித்தான் நாகநந்தி குதிரையைத் திருடிக்கொண்டு போனாரே? என் மேல் என்னத்திற்காகப் பாம்பைப் போடவேண்டும்!" என்று அலறினான். "அது என்ன சமாசாரம்?" என்று ஆயனர் கேட்டதற்கு குண்டோதரன் கூறிய விவரமாவது; புத்த பிக்ஷு இரகசியமாய் எழுந்து வந்து வாசலில் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து அதன் மேல் ஏறிக்கொண்டார். அதே சமயத்தில் தற்செயலாகக் கண் விழித்த குண்டோதரன் ஓடிப்போய்க் குதிரையைப் பிடித்தான். பிக்ஷு தம் கையிலிருந்த ஒரு பையை அவிழ்த்து அதற்குள்ளிருந்து எதையோ எடுத்து அவன் மேல் வீசினார். அது ஒரு நாகப்பாம்பு என்று கண்டதும், குண்டோதரன் அலறிக் கொண்டு அப்பால் ஓட, குதிரையை விட்டுக்கொண்டு பிக்ஷு போய்விட்டார்.

குண்டோதரனுடைய வார்த்தையில் ஆயனருக்கும் சிவகாமிக்கும் நம்பிக்கை உண்டாகவில்லை. ஏதோ உளறிக் கொட்டுகிறான்; ஒருவேளை கனவு கண்டானோ என்னவோ என்று நினைத்தார்கள். குண்டோதரன், "குருவே! என்னுடைய அருமைக் குதிரையை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது. எப்படியாவது திரும்பப் பிடித்துக் கொண்டு வந்து சேர்வேன்!" என்று சொல்லிவிட்டு, குதிரை போன திசையில் அவனும் ஓடி மறைந்தான்.

ஆயனரும் சிவகாமியும் அசோகபுரத்துக்கு வந்து புத்த விஹாரத்தில் வசிக்கத் தொடங்கி ஐந்து தினங்கள் ஆயின. முதல் மூன்று நாள் விசேஷம் ஒன்றும் நடைபெறவில்லை. சிவகாமிக்குப் பொழுதுபோவது கஷ்டமாயிருந்தது. ஆயனருக்கோ அதைவிடக் கஷ்டமாயிருந்தது. ஆனால், புத்த பிக்ஷுவின் துணையை நம்பி வந்தவர்களாகையால், அவருடைய யோசனை இல்லாமல் மேலே எங்கே போவது என்பதை ஆயனரால் நிச்சயிக்கக் கூட முடியவில்லை. குண்டோதரன் கூறிய விவரங்களைக் கேட்ட பிறகு சிவகாமிக்கு 'மேலே போகும் ஆவலே இல்லாமல் போய் விட்டது. "திரும்பிக் காஞ்சிக்குப் போனால் என்ன?" என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது.

இந்த நிலைமையில், அவர்கள் அசோகபுரத்துக்கு வந்த நாலாம் நாள் இரவு சில அபூர்வ சம்பவங்கள் நடைபெற்றன. அன்று அஸ்தமன நேரத்தில் எங்கேயோ வெகு தூரத்தில் வான முகட்டின் அருகில், இடைவிடாமல் இடி இடிப்பது போன்ற சத்தம் முதலிலே வெகு இலேசாகக் கேட்டது. உற்றுக் கேட்கக் கேட்க, சத்தம் அதிகமாகி வந்ததாகத் தோன்றியது. சற்றுநேரத்துக்கெல்லாம் அதுவே சமுத்திர கோஷம்போல் தொனிக்கத் தொடங்கியது. முதலில் தூரத்திலிருந்த சமுத்திரம் வரவர நெருங்கி வருவது போலவும் இருந்தது. திடீரென்று சத்தம் பெரிதாகி அருகிலே நெருங்கி, பல்லாயிரம் பேர் தடதடவென்று ஓடி வருவது போன்ற சத்தமாக மாறிற்று.

ஆயனரும் சிவகாமியும் உள்ளேயிருந்து வாசற் பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். சற்றுத் தூரத்தில் மரங்களின் இடுக்கு வழியாகச் சிதம்பரம் சாலை தெரிந்தது. அதிலே அநேகம் பேர் தலைகால் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்த காட்சி புலப்பட்டது. அந்தக் கூட்டத்தின் நடுவே அம்பாரி வைத்த பெரிய யானை ஒன்று அதிவிரைவாக நடந்து சென்றது. அதைச் சூழ்ந்து ஏழெட்டுக் குதிரைகளும் சென்றன. குதிரைகள் மேல் ஆயுதபாணிகளான ஆட்கள் இருந்தார்கள். அதே கூட்டத்தில் ஒரு புறத்தில் உயரமான கொடிமரம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிய சிலர் காணப்பட்டார்கள். அந்தக் கொடி தாறுமாறாய்க் கிழிந்திருந்தது. அதற்குப் பிறகு அன்றிரவெல்லாம் பத்துப் பத்துப் பேராகவும், ஐம்பது நூறு பேராகவும், அதற்கு மேற்பட்ட கூட்டமாகவும் அடிக்கடி சாலையில் மனிதர்கள் தடதடவென்று ஓடிய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

சில சமயம் அசோக ஸ்தம்பத்தைச் சுற்றிக்கொண்டு புத்த விஹாரம் இருந்த பாழும் வீதி வழியாகவும் சிற்சில கூட்டத்தார் ஓட்டமும், நடையுமாகச் சென்றதைச் சிவகாமி கவனித்தாள். இதையெல்லாம் பற்றிச் சிவகாமி ஆயனரைக் கேட்க, அவர், "எங்கேயோ யுத்தம் நடந்திருக்கிறது, அம்மா! யுத்தத்தில் ஒரு கட்சி தோற்றுவிட்டதாகத் தெரிகிறது. தோற்றவர்கள்தான் இப்படி நிலை குலைந்து ஓடுவார்கள்" என்றார். "அப்பா! தோற்றவர்கள் பகைவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஓடுகிறவர்களைப் பார்த்தால், பல்லவ வீரர்களாகத் தோன்றவில்லையல்லவா?" என்றாள் சிவகாமி. "நாம் என்னத்தை அம்மா கண்டோம்? இருட்டிலே என்ன தெரிகிறது! மாமல்லர் படைத் தலைமை வகித்த கட்சி ஜயித்திருக்க வேண்டுமென்றுதான் நானும் கருதுகிறேன்" என்றார் ஆயனர்.

இவ்வளவு தடபுடலும் இரவு முடிந்து பொழுது விடிவதற்குள்ளாக நின்றுவிட்டது. சூரியோதயத்துக்குப் பிறகு சத்தம், சந்தடி, ஓட்டம் ஒன்றுமேயில்லை. சிவகாமி புத்த விஹாரத்தின் வாசலில் நின்று சாலையை நோக்கிய வண்ணம் இருந்தாள். யாராவது அந்தப் பக்கம் வரமாட்டார்களா? வந்தால் நேற்று இரவு நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்களிடம் விசாரிக்கலாமே என்று காத்திருந்தாள். சூரியன் உதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். காலையிலிருந்து குடிகொண்டிருந்த நிசப்தம் சட்டென்று கலைந்தது. சாலையோடு குதிரைகள் பாய்ந்து வரும் சத்தம் கேட்டது.

அடுத்தாற்போல் குதிரைகளும் காணப்பட்டன; அப்பா! எவ்வளவு குதிரைகள்? பத்து, ஐம்பது, நூறு, ஆயிரம்கூட இருக்கும் போலிருக்கிறதே? அவ்வளவு குதிரைகள் மீதும் வேலும் வாளும் பிடித்த வீரர்கள் எவ்வளவு உற்சாகமாக அமர்ந்திருக்கிறார்கள்? அந்தக் குதிரைப் படையின் மத்தியில் ஒரு கம்பீரமான கருநிறக் குதிரையின் மேல் ஒரு வீரன் ரிஷபக் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், சிவகாமியின் உள்ளமும் தோள்களும் பூரித்தன. அவள் நினைத்தபடியே பகைவர்கள் தான் தோற்று ஓடுகிறார்கள் என்றும் பல்லவ சைனியந்தான் ஓடும் பகைவர்களைத் தொடர்ந்து செல்கிறதென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.

அந்தப் பெரிய குதிரைப்படை சாலையோடு போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு தனிக் குதிரைகளும், அவற்றின் பின்னால் ஒரு ரதமும் விரைந்து வருவது காணப்பட்டது. இதென்ன விந்தை? அந்த இரு குதிரைகளும் ரதமும் சாலையிலிருந்து குறுக்கே திரும்பி அசோக ஸ்தம்பத்தையும் சிவகாமி இருந்த புத்த விஹாரத்தையும் நோக்கி வருகின்றனவே? குறுக்கு வழியாக அந்தத் தெருவில் புகுந்து சென்று சாலை ஏறி முன்னால் போன குதிரைப் படையைப் பிடிப்பதற்காக இவர்கள் இப்படி வருகிறார்கள் போலிருக்கிறது!

ஆஹா! அந்த முதல் குதிரைமேல் வருகிறது யார்? தன் கண்கள் காண்பது உண்மையா? சிவகாமியின் இருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது! ஆம்; அதன்மேல் வந்தவர் மாமல்ல நரசிம்மர்தான்! விஹாரத்தின் வாசலில் நின்ற சிவகாமி திடீரென்று மாமல்லரைக் குதிரை மீது பார்த்ததும், எங்கிருந்தோ, எதனாலோ அவளுடைய கண்களில் கண்ணீர் வந்து நிறைந்து விட்டது. உணர்ச்சி மிகுதியினாலும், காரணந்தெரியாத நாணத்தினாலும், சிவகாமி சட்டென்று திரும்பி, உள்ளே போவதற்குக் காலை எடுத்து வைத்தாள். அதே சமயத்தில் 'ஆ!' என்ற குரல் ஒலியும், வேகமாக வந்த குதிரையைத் திடீரென்று இழுத்துப் பிடித்து அது தட் தட் என்று கால்களைத் தட்டிக் கொண்டு நிற்கும் சத்தமும் கேட்டன. சிவகாமி வீதிப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

மாமல்லருடைய கண்கள் தீவிரமான நோக்குடன் அவளுடைய நெஞ்சையே ஊடுருவது போல் பார்த்தன. அந்தப் பார்வையில் சொல்ல முடியாத வியப்பும் மகிழ்ச்சியும் அளவிடக் கூடாத அன்பும் ஆத்திரமும் கலந்திருந்தன. இதெல்லாம் ஒரே ஒரு கணந்தான்; மறுகணத்தில் குதிரை மீண்டும் காற்றாய்ப் பறந்து சென்றது. மாமல்லருக்குப் பின்னால் வந்த தளபதி பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்த போதிலும் அவருடைய குதிரை ஒரு கணமும் நிற்காமல் மேலே சென்றது. அவர்களுக்குப் பின்னால் வந்த ரதத்தைக் கண்ணபிரான் தான் ஓட்டி வருகிறான் என்று தெரிந்ததும் சிவகாமி மீண்டும் வாசற்புறத்துத் தூணண்டை வந்து நின்று, ரதத்தை நிறுத்தும்படி கையினால் சமிக்ஞையும் செய்தாள்! கண்ணபிரான் குதிரைகளை இழுத்துப் பிடித்து ரதத்தை நிறுத்தினான். குதிரைகள் திடீரென்று நின்றபடியால், அச்சு முறிவது போன்ற சடசட சத்தத்துடன் ரதம் 'தடக்' என்று நின்றது.
 

New Threads

Top Bottom