ஏழாம் அத்தியாயம்
மகேந்திர ஜாலங்கள்
காஞ்சி மாநகரில், பிரதான மந்திராலோசனை மண்டபத்தில் சபை கூடியிருந்தது. மந்திரி மண்டலத்தாரும் அமைச்சர் குழுவினரும் பிரசன்னமாகியிருந்தார்கள். சக்கரவர்த்தியும், குமார சக்கரவர்த்தியும் சிம்மாசனங்களில் நடுநாயகமாக வீற்றிருக்க, அருகே ஒரு தனிப் பீடத்தில் சேனாதிபதி கலிப்பகையும் அமர்ந்திருந்தார். தளபதி பரஞ்சோதியை மட்டும் அவ்விடத்திலே காணவில்லை. கோட்டைப் பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தபடியால் அவரால் மந்திராலோசனைக்கு வரமுடியவில்லை போலும்.
சபையில் கூடியிருந்தவர்களின் முகத்திலெல்லாம் இலேசாகக் கவலைக் குறி தோன்றியது. எல்லோரையும் காட்டிலும் அதிகமான கவலை, சபையில் எழுந்து நின்ற பண்டகசாலை அமைச்சர் பராந்தக உடையார் முகத்தில் காணப்பட்டது. "உடையாரே! முற்றுகை ஆரம்பிக்கும் சமயத்தில் நீர் உறுதியாகச் சொன்னீரல்லவா? குறைந்தது பதினைந்து மாதத்துக்கு வேண்டிய தானியங்களை நம் பண்டகசாலைகளில் பத்திரப்படுத்தியிருப்பதாக! முற்றுகை ஆரம்பித்து ஏழு மாதந்தானே ஆகிறது? இன்னும் எட்டு மாதத்துக்கு இருக்க வேண்டுமே? மூன்று மாதத்துக்குத் தான் தானியம் இருக்கும் என்று சொல்கிறீரே? அது எப்படி?" என்று சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர பல்லவரின் குரல் மிகக் கடுமை பெற்றிருந்தது. அவருடைய முகத்தில் சுருக்கங்கள் அதிகமாயிருந்தன.
பராந்தக உடையார் குரலில் கலக்கத்துடனும், சொல்லில் தடுமாற்றத்துடனும் கூறினார்; "பல்லவேந்திரா! நான் எதிர்பார்த்தபடி சில காரியங்கள் நடக்கவில்லை. எதிர்பாராத காரியங்கள் சில நடந்து விட்டன. நகரை விட்டு வௌியேறிய ஜனங்கள் பலர், புள்ளலூர்ச் சண்டைக்குப் பிறகு நகருக்குத் திரும்பி வந்து விட்டார்கள். தொண்டை மண்டலத்திலுள்ள சிற்பிகள் அனைவரையும் தலைநகருக்குள்ளே கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று தங்களுடைய ஆக்ஞை பிறந்தது. இதனால் ஐயாயிரம் பேர் அதிகமானார்கள். நமது கடிகைகள்-கல்லூரிகள் எல்லாவற்றையும் மூடி ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் வௌியே அனுப்பி விடலாமென்று முதலில் யோசனை செய்திருந்தோம். கடைசி நேரத்தில் தாங்கள் அவ்விதம் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டுயிட்டீர்கள்."
"இவ்வளவுதானா? இதனாலேயே ஐந்து மாதங்களுக்குரிய உணவு குறைந்து போய்விட்டதா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "அடியேனும் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். நகரில் உள்ள புருஷர்கள், ஸ்திரீகள், குழந்தைகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டு, பதினைந்து மாதத்துக்கு உணவு இருப்பதாகச் சொன்னேன். கறவைப் பசுக்கள், கோயில் மாடுகள், குதிரைகள் இவற்றைக் கணக்கில் சேர்க்கவில்லை. மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் வைக்கோலும் புல்லும் கிடைக்காதபடியால் தானியத்தையே தீனியாகக் கொடுக்க வேண்டியதாகி விட்டது" என்றார் அமைச்சர். "நல்லது, பராந்தகரே! தொண்டைமான் இளந்திரையன் வம்சத்தில் பிறந்த காஞ்சி மகேந்திர பல்லவன், வாதாபிப் புலிகேசியிடம் சரணாகதியடைய நேர்ந்தால் அந்தப் பழியைக் கோவில் மாடுகள் மீதும், தேர்க் குதிரைகள் மேலும் போட்டு விடலாமல்லவா?" என்று கூறி விட்டுச் சக்கரவர்த்தி சிரித்தார். அந்தச் சிரிப்பில் கோபம் அதிகமாய்த் தொனித்ததா, ஏளனம் அதிகமாய்த் தொனித்ததா என்று சொல்வதற்கு முடியாமல் இருந்தது.
அப்போது நரசிம்மவர்மர் துள்ளி எழுந்து, "அப்பா! என்ன வார்த்தை சொன்னீர்கள்? வாதாபிப் புலிகேசியிடம் மகேந்திர பல்லவர் சரணாகதியடைவதா? ஒரு இலட்சம் பல்லவ வீரர்கள் ஏழு மாதமாக மூன்று வேளை உண்டும், உறங்கியும் இந்தக் கோட்டைக்குள்ளே எதற்காக அடைபட்டுக் கிடக்கிறார்கள்? தந்தையே! நமது பண்டகசாலை அமைச்சரின் கணக்குப் பிழையும் ஒருவிதத்தில் நல்லதாகவே போயிற்று. இப்போதாவது கட்டளையிடுங்கள், கோட்டைக்குள்ளே ஏழு மாதம் ஒளிந்து கொண்டிருந்தது போதும். உலகமெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரித்தது போதும். அப்பா! இப்போதாவது வாதாபிப் படைகளைத் தாக்கி நிர்மூலம் செய்யும்படி அடியேனுக்குக் கட்டளையிடுங்கள்!" என்று ஆத்திரமும் அழுகையுமாய்க் கூறி விட்டு, மகேந்திர பல்லவரின் முன்னால் தரையில் விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டார். மகேந்திர பல்லவர் தமது கண்களில் துளித்த நீர்த் துளியை மறைப்பதற்காக முகத்தைப் பின்புறமாகத் திருப்பினார்.
ஒரு நொடி நேரத்தில் சக்கரவர்த்தி மீண்டும் சபையின் பக்கம் திரும்பியபோது, அவர் முகத்தில் பழையபடி கடுமையும் ஏளனப் புன்னகையும் குடிகொண்டிருந்தன. தம் பாதங்களைப் பற்றிக் கொண்டு தரையில் கிடந்த மாமல்லரை அவர் தூக்கி நிறுத்தி, "மாமல்லா! உன்னை வெகு காலம் நான் அந்தப்புரத்திலேயே விட்டு வைத்திருந்தது பிசகாய்ப் போயிற்று. மூன்று தாய்மார்களுக்கு மத்தியில் நீ ஒரே மகனாக அகப்பட்டுக் கொண்டிருந்தாயல்லவா? அதனாலேதான் பெண்களுக்குரிய குணங்களான ஆத்திரமும் படபடப்பும் உன்னிடம் அதிகமாய்க் காணப்படுகின்றன. உலகில் வீரச் செயல்கள் புரிய விரும்பும் ஆண் மகனிடம் இத்தகைய படபடப்பும் ஆத்திரமும் இருக்கக் கூடாது. நரசிம்மா! மல்யுத்தத்தில் மகா நிபுணனான உனக்கு இதை நான் சொல்ல வேண்டுமா?" என்றார். மாமல்லருடைய உதடுகள் துடித்தன; தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்ல அவருடைய உள்ளத்திலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன. ஆனால், அதிக ஆத்திரத்தினாலேயே அவரால் பேச முடியாமற் போய் விட்டது.
மகனுடைய நிலையைக் கண்ட மகேந்திர பல்லவர், "குழந்தாய்! நீண்ட காலமாகப் பொறுத்து வந்திருக்கிறாய், இன்னும் சில நாள் பொறு. நீயும் நமது பல்லவ வீரர்களும் உங்களுடைய வீர தீரத்தை எல்லாம் காட்டுவதற்குரிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப் போகிறது. வாதாபிப்படை, இன்னும் சில தினங்களுக்குள் கோட்டையைத் தாக்குமென்று எதிர்பார்க்கிறேன். அந்தத் தாக்குதல் வெகு கடுமையாயிருக்கும் என்றும் எண்ணுகிறேன். அதைச் சமாளிப்பதற்கு நாமும் நமது பூரண பலத்தையும் பிரயோகிக்க வேண்டியதாயிருக்கும். பல்லவர் வீரத்துக்கு மகத்தான சோதனை வரப் போகிறது. அதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும்!" என்றார். இவ்விதம் மாமல்லனைப் பார்த்துக் கூறிய பிறகு, பண்டகசாலை அமைச்சரைப் பார்த்து மகேந்திர பல்லவர், "பராந்தகரே! இன்று முதல் காஞ்சி நகரில் உள்ளவர் அனைவரும், மாடுகளும் குதிரைகளும் உட்பட சமண நெறியை மேற்கொள்வோமாக!" என்றதும், சபையில் இருந்த அனைவருக்குமே தூக்கிவாரிப் போட்டது.
"ஒரே ஒரு காரியத்தில் மட்டும்தான் சொல்கிறேன்; அதாவது, இரவில் உணவு உட்கொள்வதில்லையென்ற சமண முனிவர்களின் விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த உணவுப் படியில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து விடுங்கள். அரண்மனைக்கும் ஆலயங்களுக்கும் உள்படச் சொல்லுகிறேன். இனிமேல் காஞ்சி நகரில் உள்ளவர்களுக்கெல்லாம் தினம் இரண்டு வேலைதான் உணவு. இதன்மூலம் கைவசமுள்ள தானியத்தை நாலரை மாதம் நீடிக்குமாறு செய்யலாமல்லவா? மந்திரிமார்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று சக்கரவர்த்தி கேட்கவும், முதன்மந்திரி சாரங்கதேவர், "பிரபு! கோட்டை முற்றுகை நாலரை மாதத்துக்கு மேல் நீடிக்காதென்று தாங்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது" என்றார்.
"இல்லை! நாலரை மாதம் கூட நீடிக்குமென்று நான் நினைக்கவில்லை. முன்ஜாக்கிரதையாக உணவை மூன்றில் ஒரு பங்கு குறைக்கலாமென்று சொன்னேன். புலிகேசி இன்னும் ஒரு வாரத்தில் கோட்டையைத் தாக்கத் தொடங்குவான் என்று எதிர்பார்க்கிறேன்..." "பிரபு! அப்படித் தாங்கள் எதிர்பார்ப்பதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தான் வேண்டும்" என்றார் சாரங்க தேவர். "ஆம்; அவற்றை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்! சபையோர்களே! உணவு நெருக்கடியைப் பொறுத்தவரையில் நம்மைக் காட்டிலும் புலிகேசியின் நிலைமை ஆபத்தானது. வாதாபிப் படையினர் மூன்று மாத காலமாக அரை வயிறு உணவு உண்டுதான் ஜீவித்து வருகிறார்கள். புலிகேசி வாதாபியிலிருந்து புறப்பட்ட போது ஐந்து இலட்சம் வீரர்களுடனும், பதினையாயிரம் யானைகளுடனும் புறப்பட்டான். இப்போது வாதாபிப் படையில் மூன்றரை இலட்சம் வீரர்கள்தான் இருக்கிறார்கள். பதினாயிரம் யானைகள் மட்டுமே இருக்கின்றன. சபையோர்களே! இன்னும் ஒரு மாதம் போனால் இவர்களிலும் பாதிப் பேர் பஞ்சத்திலும் நோயிலும் மடிந்து போவார்கள். யானைகளின் கதி என்ன ஆகுமோ தெரியாது. ஆகையால், புலிகேசி சீக்கிரத்தில் கோட்டையைத் தாக்கித்தான் ஆகவேண்டும். இந்தத் தாக்குதல் வெகுமூர்க்கமாய் இருக்குமென்பதிலும் சந்தேகமில்லை."
முதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர், "பல்லவேந்திரா! இந்த மாதிரி அதிசயத்தை இவ்வுலகம் எப்போதும் கேள்விப்பட்டதில்லை. முற்றுகைக்கு உள்ளானவர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி மடிவதுண்டு. எதிரியிடம் சரண் அடைந்ததும் உண்டு. ஆனால் முற்றுகை இடுகிறவர்கள் பட்டினிக்கு ஆளானார்கள் என்று கதைகளிலே கூடக் கேட்டதில்லை!" என்றார். "ஆம் பல்லவராயரே! திரிபுரம் எரித்த பெருமானின் அருளினால் அம்மாதிரி அதிசயம் நடக்கிறது. தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் உள்ள ஜனங்கள் எதிரிகளுக்கு ஓர் ஆழாக்கு அரிசியோ, ஒரு பிடி கம்போ கொடுக்கவும் மறுத்திருக்கிறார்கள். கையிலுள்ள தானியத்தையெல்லாம் வெகு பத்திரமாகப் புதைத்து வைத்திருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் கூட நமக்குப் பெரிய உதவி செய்திருக்கின்றன. சென்ற தை மாதத்தில் எக்காரணத்தினாலோ நம் நாட்டு ஏரிகள் எல்லாம் திடீர் திடீரென்று உடைத்துக் கொண்டு விட்டன. அப்படி ஏற்பட்ட உடைப்பு வெள்ளத்தினால் வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் எல்லாம் பாழாயின. கோடைக் காலத்துச் சாகுபடியும் நடக்கவில்லை. இதனாலெல்லாம் புலிகேசியின் போர் வீரர்களுக்கும் போர் யானைகளுக்கும் உணவு கிடைக்கவில்லை."
சேனாபதி கலிப்பகை எழுந்து, "சபையோர்களே! தொண்டை மண்டலத்து ஏரிகள் நமது கட்சியில் சேர்ந்து உடைத்துக் கொண்டு பகைவர்களைப் பட்டினிக்குள்ளாக்கியது உண்மைதான். ஆனால், அவை தாமாக உடைத்துக் கொள்ளவில்லை; விசித்திர சித்தரான நமது மன்னரின் மகேந்திர ஜால வித்தையிலேதான் ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொண்டன" என்றார். "நான் செய்தது ஒன்றுமில்லை; சத்ருக்னனுடைய தலைமையில் நமது ஒற்றர் படை வெகு நன்றாய் வேலை செய்திருக்கிறது. தொண்டை மண்டலத்திலுள்ள கோட்டத் தலைவர்களும் வெகு திறமையுடன் காரியம் செய்திருக்கிறார்கள். நாட்டில் பஞ்சம் வந்தாலும் வரட்டும் என்று ஏரிகள், அணைக்கட்டுகள் எல்லாவற்றையும் அவர்கள் வெட்டி விட்டிருக்கிறார்கள். சபையோர்களே! தொண்டை மண்டலத்துப் பிரஜைகள் இந்த யுத்தத்தில் செய்திருக்கும் உதவிக்கு நூறு ஜன்மம் எடுத்து நான் அவர்களுக்குத் தொண்டு செய்தாலும் ஈடாகாது" என்று சக்கரவர்த்தி கூறிய போது அவருடைய குரல் உணர்ச்சியினால் தழுதழுத்தது.
சற்று நேரம் சபையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு முதல் மந்திரி சாரங்கதேவர், "பல்லவேந்திரா! புலிகேசி, பாண்டியனைச் சந்திக்கக் கொள்ளிடக் கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறதே! பாண்டியன் ஒருவேளை வாதாபிப் படைக்கு வேண்டிய உணவுப் பொருள் கொடுக்கலாம் அல்லவா?" என்றார். "ஆம் மந்திரி! பாண்டியனிடம் உணவுப் பொருள் உதவி கோருவதற்காகத் தான் புலிகேசி தெற்கே போயிருக்கிறான். ஆனால் அந்த உதவி அவனுக்குக் கிடைக்கும் என்று நான் கருதவில்லை. தவிரவும், புலிகேசி சீக்கிரத்தில் வாதாபிக்குத் திரும்ப வேண்டிய காரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சபையோர்களே! ஒவ்வொரு நிமிஷமும் தெற்கேயிருந்து முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே மகேந்திர பல்லவர் மண்டபத்தின் வாசற் பக்கம் பார்த்தார். பார்த்த உடனே "ஆ இதோ செய்தி வருகிறது!" என்றார்.
காவலன் ஒருவன் உள்ளே வந்து, சக்கரவர்த்திக்கு அடி வணங்கி, அவருடைய காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். சாதாரணமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆச்சரியமான அறிகுறியைக் காட்டாத மகேந்திர பல்லவரின் முகம், மேற்படி காவலன் கூறியதைக் கேட்டதும் எல்லையற்ற வியப்பைக் காட்டியது. "சபையோர்களே! நீங்களாவது நானாவது சற்றும் எதிர்பாராத அதிசயமான செய்தி வந்திருக்கிறது. என்னாலேயே நம்ப முடியவில்லை. விசாரித்து உண்மை தெரிந்து கொள்ளப் போகிறேன். இப்போது சபை கலையட்டும், இன்றிரவு மறுபடியும் சபை கூட வேண்டும். அப்போது எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். மாமல்லா! நீயும் அரண்மனைக்குப் போய் உன் தாய்மாரைப் பார்த்து விட்டு வா!" என்று கூறிக் கொண்டே மகேந்திர பல்லவர் எழுந்து சபா மண்டபத்தின் வாசலை அடைந்து, அங்கு ஆயத்தமாய் நின்ற குதிரையின் மீது தாவி ஏறினார்.
எட்டாம் அத்தியாயம்
யோக மண்டபம்
நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் மறுபடியும் கண்ணபிரானுடைய வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது, அங்கே 'குவா குவா' என்ற சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிடுகிறோம். வாசற்படியில் சிறிது தயங்கி நின்று விட்டு உள்ளே சென்றோமானால், அஸ்தமன வேளையின் மங்கிய வௌிச்சத்தில் அங்கே ஓர் அபூர்வமான காட்சியைக் காண்கிறோம். விபூதி ருத்ராட்சமணிந்து கனிந்த சிவப்பழமாய்த் தோற்றமளித்த ஒரு சைவப் பெரியார் நிற்கிறார். அவருடைய நீட்டிய இரு கரங்களிலும் ஒரு பச்சைக் குழந்தை - ஆறு மாதத்துக் குழந்தை காணப்படுகிறது - மூக்கும் முழியுமாக வெண்ணெய் தின்ற கண்ணனைப் போல் கிண்ணென்றிருந்த அந்தக் குழந்தைதான் 'குவா குவா' என்று அழுகிறது. அந்தச் சைவப் பெரியாருக்கு எதிரில் கண்ணபிரானும், கமலியும் நின்று புன்னகை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரியவர், குழந்தையைக் கமலியின் கைகளில் விட்டு விடப் பார்க்கிறார். கமலி குழந்தையை வாங்கிக் கொள்ள மறுத்துப் பின்வாங்குகிறாள். "நான் என்ன செய்வேன்? பாட்டனைக் கண்டால் பேரனுக்கு அவ்வளவு ஆசை, என்னிடம் வர மாட்டேனென்கிறான்" என்று சொல்கிறாள் கமலி. இதையெல்லாம் பார்த்துக் கண்ணபிரான் சந்தோஷப்பட்டுக் கொண்டே நிற்கிறான். குழந்தை 'குவா குவா' என்று கத்திக் கொண்டே காலையும் கையையும் உதைத்துக் கொள்கிறது. கிழவர்..."கமலி! உன்னுடைய பொல்லாத்தனம் உன் குழந்தையிடமும் இருக்கிறது!" என்கிறார்.
அச்சமயம், வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து அதாவது அரண்மனைத் தோட்டத்திலிருந்து மணி அடிக்கும் சப்தம் கேட்கிறது. பெரியவர் அதைக் கேட்டதும் அதிக பரபரப்பை அடைகிறார். அப்பால் இப்பால் பார்க்கிறார், குழந்தையைத் திடீரென்று தரையில் விட்டு விட்டுத் தோட்டத்தைப் பார்க்க ஓட்டம் பிடிக்கிறார். கமலி தன் கண்களில் தீப்பொறி பறக்க, "பார்த்தாயா, உன் தகப்பன் சாமர்த்தியத்தை? பச்சைக் குழந்தையைத் தரையிலே போட்டு விட்டு ஓட எப்படித்தான் மனம் வந்ததோ?" என்றாள்.
"கமலி! அப்பாவின் பேரில் குற்றம் இல்லை. நாதப் பிரம்மம் நேரிலே வந்து கூப்பிடும் போது அவர் என்ன செய்வார்?" "நாதப் பிரம்மமும் ஆச்சு! நாசமாய்ப் போனதும் ஆச்சு! வெறும் ஆஷாடபூதி. அவ்வளவு வைராக்கிய புருஷராயிருந்தால், காட்டுக்குத் தபசு செய்யப் போவதுதானே? அரண்மனைத் தோட்டத்தில் சிங்கார மண்டபத்தில் என்ன வேலை? சமாதி கட்டிக் கொள்ள இங்கேதானா இடம் அகப்பட்டது? அது போகட்டும், என் பொல்லாத்தனமெல்லாம் என் குழந்தைக்கும் வந்திருக்கிறதாமே! கிழவரின் வாய்த் துடுக்கைப் பார்த்தாயா? இவருடைய மகன் மட்டும் ரொம்பச் சாதுவாம்! பார்! நான் போய் விடுகிறேன். என் தங்கை சிவகாமியைப் பார்க்க வேண்டுமென்று எனக்குக் கூட ஆசையாய் இருக்கிறது. கோட்டைக் கதவு திறந்ததும் இந்தப் பொல்லாத பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போய் விடுகிறேன்! இந்த அரண்மனைச் சிறையில் யார் இருப்பார்கள்?"
இப்படி கமலி மூச்சு விடாமல் பேசிக் கொண்டே தரையில் கிடந்த குழந்தையை எடுக்கப் போனாள். கண்ணனும் அதே சமயத்தில் குழந்தையை எடுப்பதற்காகக் கீழே குனிந்தான். இருவருடைய தலைகளும் மோதிக் கொண்டன. "இந்தப் பொல்லாதவனை நீ ஒன்றும் எடுக்க வேண்டாம்!" என்றாள் கமலி. "அப்படித்தான் எடுப்பேன்; நீ என்ன சொல்கிறது?" என்றான் கண்ணன். இப்படி இவர்கள் குழந்தையைத் தரையிலிருந்து யார் எடுப்பது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே, வாசலில் குதிரைச் சப்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் யாரோ உள்ளே வந்தார்கள். யார் என்று திரும்பிப் பார்த்த கண்ணபிரானும் கமலியும் அப்படியே பார்த்தது பார்த்தபடி பிரமித்து நின்றார்கள்.
ஏனெனில், அவ்விதம் திடீரென்று வந்தவர் சாஷாத், மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான்! "ஓஹோ! இங்கேயும் ஒரு யுத்தமா? நாட்டிலே யுத்தம் நின்று விடும் போல் இருக்கிறது. ஆனால், உங்கள் வீட்டு யுத்தம் மட்டும் நிற்கவே நிற்காது போலிருக்கிறதே!" என்று சக்கரவர்த்தி கூறியதும் தம்பதிகள் இருவரும் பெரிதும் வெட்கமடைந்து மறுமொழி சொல்ல முடியாமல் நின்றார்கள். பிறகு மகேந்திர பல்லவர், "கமலி! உன் குழந்தை சௌக்கியமாயிருக்கிறதா?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து குழந்தையின் முகத்தைப் பார்த்து விட்டு, "கண்ணனை அப்படியே உரித்து வைத்திருக்கிறது! சின்னக் கண்ணன் என்றே பெயர் வைத்து விடலாம். மாமல்லனுக்கும் கலியாணமாகி இந்த மாதிரி ஒரு குழந்தை பிறந்தால், அரண்மனை கலகலவென்று இருக்கும். அரண்மனையில் குழந்தை அழுகைச் சப்தம் கேட்டு வெகுகாலம் ஆயிற்று!" என்று தமக்குத் தாமே பேசிக் கொள்கிறவர் போல் சொல்லி விட்டு, "கண்ணா உன் தகப்பனார் எங்கே?" என்று கேட்டார். "இப்போதுதான் வசந்த மண்டபத்துக்குப் போனார், பிரபு!" என்றான் கண்ணன்.
"ஆ! மகரிஷி யோக சாதனைக்குப் போய் விட்டாரா!" என்று மகேந்திரர் கேட்டபோது, கமலி இலேசாகச் சிரித்தாள். "கமலி சிரிக்கிறாள்! உங்களைப் போல் இளம் வயதாயிருப்பவர்களுக்கு யோகம், சமாதி என்றால் சிரிப்பாய்த்தான் இருக்கும். வயதாகி உலகத்தில் விரக்தி ஏற்பட்டால் அப்புறம் நீங்களும் போகும் வழிக்குக் கதி தேடலாமென்று யோசிப்பீர்கள். போகட்டும்; உங்களுடைய யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துங்கள். நான் யோகியைப் பார்த்து விட்டுப் போகிறேன்" என்று சொல்லிக் கொல்லைப்பக்கம் நோக்கிச் சென்றவர், வாசற்படியண்டை சற்று நின்று, "கமலி! உன் சிநேகிதி சிவகாமியைக் கூடிய சீக்கிரத்தில் நீ பார்க்கலாம்!" என்று கூறி விட்டு மேலே நடந்தார்.
சக்கரவர்த்தி மறைந்ததும், கமலி, "கண்ணா! இதென்ன சக்கரவர்த்தி திடீரென்று வந்து நம் மானத்தை வாங்கி விட்டார்! சிவகாமி கூடிய சீக்கிரம் வருவாள் என்று அவர் சொன்னதைக் கேட்டாயா, கண்ணா? யுத்தம் சீக்கிரத்தில் முடிந்து விடப் போகிறதா? சளுக்கர்கள் தோற்று ஓடிப் போய் விட்டார்களா?" என்று ஏதேதோ கேட்டாள். அந்தக் கேள்விகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய்க் கண்ணபிரான் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று யோசனையை நிறுத்தி, "கமலி! கொஞ்ச நாளாகவே எனக்கு ஒரு மாதிரி சந்தேகம் இருந்தது. அது இன்றைக்கு ஊர்ஜிதமாயிற்று!" என்றான். "என் பேரில் சந்தேகம் வந்து விட்டதா? அது என்ன சந்தேகம்?"
"உன் பேரில் எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை. சந்தேகம் என் தகப்பனார் பேரில்தான். அவர் ஏதோ யோகம், தியானம் நாதப்பிரம்ம உபாசனை என்றெல்லாம் சொல்லிக் கொண்டு நந்தவன மண்டபத்துக்குப் போய் இரவு பகலாய் உட்கார்ந்திருக்கிறாரே, அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டுமென்று சந்தேகித்தேன். அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று இன்று." "என்ன சந்தேகம்? எப்படி ஊர்ஜிதமாயிற்று?" "கிட்ட வா, சொல்கிறேன்; ரொம்ப ரொம்ப அந்தரங்கமான விஷயம். இந்தப் பயலின் காதிலே கூட விழக் கூடாது! கமலி, அப்பாவின் யோக மண்டபத்தில் ஒரு சுரங்க வழி இருக்கிறது. அது கோட்டைக்கு வௌியே போகிறது. சக்கரவர்த்தியின் ஒற்றர்கள் அதன் வழியாக அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பார்த்தாயா? இந்தப் பயல் நான் சொல்வதை எப்படி ஒற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறான்...!" என்று கண்ணபிரான் சொல்லிக் குழந்தையின் கன்னத்தை இலேசாகக் கிள்ள, குழந்தை வீர் என்று கத்த ஆரம்பிக்க, கமலி கண்ணபிரானைச் சண்டை பிடிக்க, கண்ணபிரான், 'அவனும் என் கன்னத்தை வேணுமானால் கிள்ளட்டும்!' என்று கூற, கமலி குழந்தையைப் பார்த்து, 'என் கண்ணே!' என்று அதற்கு முத்தம் கொடுக்கப் போக, குறுக்கே கண்ணபிரான் கன்னத்தை நீட்ட, கமலி அவனைச் சண்டை பிடிக்க, இப்படி ஏகப் பூசலாகி விட்டது.
இதற்கிடையில் மகேந்திர சக்கரவர்த்தி அரண்மனைத் தோட்டத்திற்குள் புகுந்து வசந்த மண்டபத்துக்குச் சென்றார். காலடிச் சப்தத்தைக் கேட்டதும், சிவனடியாராக விளங்கிய அசுவபாலர் வௌியில் தலையை நீட்டி, "பிரபு, தாங்கள்தானே; நல்ல சமயத்தில் வந்தீர்கள்; இப்போதுதான் மணி அடித்தது!" என்று கூறி, மண்டபத்தின் நடுமத்தியில் இருந்த சிவலிங்கத்தை அப்பால் நகர்த்தவும், சிவலிங்கம் இருந்த இடத்தில் ஒரு பள்ளமும் அதற்குள் மங்கிய இலேசான வௌிச்சமும் தெரிந்தன. சில விநாடிகளுக்கெல்லாம் அந்தப் பள்ளத்திலிருந்து சத்ருக்னனுடைய தலை எழுந்தது. பிறகு சத்ருக்னனின் முழு உருவமும் வௌியில் வந்தது.
"சத்ருக்னா? உனக்காகக் காத்திருந்து காத்திருந்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஏன் இவ்வளவு தாமதம்? போன காரியம் என்ன? காயா? பழமா?" என்று மகேந்திர பல்லவர் கேட்டார். "பல்லவேந்திரர் எடுத்த காரியம் ஏதாவது காயாவது உண்டா? பழந்தான். சுவாமி! எல்லாம் தாங்கள் போட்ட திட்டப்படியே நடந்தது. வேங்கித் தூதனுடன் போன சளுக்க வீரர்களிடம் குண்டோதரன் அகப்பட்டுக் கொண்டான். இருவரும் கொள்ளிடக் கரையில் புலிகேசியின் முன்னிலைக்குக் கொண்டு போகப்பட்டார்கள்."
"குண்டோதரனை அப்புறம் பார்த்தாயா? அல்லது அவனிடமிருந்து ஏதேனும் செய்தி உண்டா?" "அதுதான் இல்லை; அவனுக்காகத்தான் இத்தனை நேரம் காத்துப் பார்த்தேன். புலிகேசி மகா மூர்க்கன் என்று கேள்வியாச்சே, சுவாமி! குண்டோதரனுடைய கதி என்ன ஆயிற்றோ என்று சிறிது கவலையாயிருக்கிறது." "குண்டோதரனுக்கு ஒன்றும் நேர்ந்திராது, சத்ருக்னா!" "எப்படிச் சொல்லுகிறீர்கள்? பிரபு?" "நம்முடைய யுக்தி நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மகத்தான பலனை அளித்துவிட்டது. கேள், சத்ருக்னா! புலிகேசி சமாதானத் தூது அனுப்பியிருக்கிறான்! இந்த நேரம் அவனுடைய தூதர்கள் என் மறு மொழிக்காகத் தெற்குக் கோட்டை வாசலில் காத்திருக்கிறார்கள். நான் உன்னைச் சந்தித்து விட்டுப் பிறகு முடிவாக மறுமொழி சொல்லலாம் என்றெண்ணி அவசரமாக இங்கே வந்தேன்."
"பிரபு! புலிகேசியை நம்பலாமா? மகா வஞ்சகன் என்று சொல்லுகிறார்களே?" என்றான் சத்ருக்னன். "அவநம்பிக்கை கொள்வதற்கு இடமே இல்லை, சத்ருக்னா! ஆனாலும், குண்டோதரன் திரும்பி வந்தால் அவனைச் சில விஷயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன்." இவ்விதம் மகேந்திரர் சொல்லிக் கொண்டிருந்தபோதே சத்ருக்னன் எந்தப் பள்ளத்திலேயிருந்து வௌிவந்தானோ, அந்தப் பள்ளத்திற்குள் இருமல் சப்தம் கேட்டது. பேசிக்கொண்டிருந்த இருவரும் திடுக்கிட்டார்கள். அடுத்த வினாடி அந்தப் பள்ளத்தில் குண்டோதரனுடைய தலை தெரியவே, அளவிறந்த வியப்போடு ஓரளவு அமைதியும் அடைந்தார்கள்.
"குண்டோதரா! உனக்கு நூறு ஆயுசு! இப்போதுதான் உன்னைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நீ எப்படித் திடீரென்று முளைத்தாய்?" என்று சக்கரவர்த்தி கேட்க, "பிரபு! தாங்கள் அடிக்கடி 'சத்ருக்னரைப் பின்பற்றி நட! சத்ருக்னரைப் பின்பற்றி நட!' என்று சொல்லுவீர்களே, அது மிகக் கடினமான காரியம். இந்த இருட்டுச் சுரங்க வழியில் இவரைப் பின்பற்ற முயன்று நான் ஓடோடி வந்தும் இவரைப் பிடிக்க முடியவில்லை!" என்றான் குண்டோதரன். "உன் வேடிக்கையெல்லாம் அப்புறம் ஆகட்டும்; நீ போன இடத்தில் என்ன நடந்ததென்று விவரமாகச் சொல்லு" என்று மகேந்திர சக்கரவர்த்தி கேட்க, குண்டோதரனும், நாம் முன்னமே அறிந்த அவன் வரலாற்றை விவரமாக கூறி முடித்தான்.