Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

இரண்டாம் அத்தியாயம்

ரயில்வே சந்திப்பு

டில்லி ரயில்வே நிலையத்துக்குள் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பிரவேசித்தபோது பக்கத்துப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஜனங்களின் முகங்கள் சீதாவின் கண்களில் தோன்றி மறைந்தன. ஆனால், அவளுடைய கண்களிலோ, கவனத்திலோ அந்த முகங்கள் ஒரு கணமும் நிற்கவில்லை. ஒரே ஒரு சுந்தர முகத்தை, தன் உள்ளத்தில் உறைந்து ஆத்மாவுடன் கலந்த முகத்தை, சீதாவின் கண்கள் ஆர்வத்துடன் தேடின. அந்த முகம் தெரிந்ததும், "வஸந்தி அதோ அப்பா!" என்று சீதா கூச்சலிட்டது ரயில்வே ஸ்டேஷன் சத்தங்கள் அவ்வளவுக்கும் மேலாகக் 'கிறீச்' என்று கேட்டது. சௌந்தரராகவனைப் பார்த்த பிறகும் கூட இந்தச் சனியன் பிடித்த ரயில் எதற்காக மேலே நகருகிறது என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவன் நின்ற இடத்துக்கு அப்பால் சுமார் முப்பது அடி தூரத்தில் சீதா இருந்த வண்டி போய் நின்றது. "வஸந்தி! அதோ பார், அப்பா வருகிறார்!" என்று குதூகலித்தாள் சீதா. "அப்பா எங்கே? காத்து அம்மா!" என்றாள் குழந்தை. கூட்டத்தில் இடிபடாமல் நாஸுக்காகப் புகுந்து விலகிக் கொண்டு சீதா இருந்த வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த ராகவன் திடீரென்று பாதி வழியில் நின்றான்.

சீதா இருந்த வண்டிக்கு எதிர்ப்புறத்தில், பிளாட்பாரத்தின் மறுபக்கத்திலிருந்து, ஒரு ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது. சௌந்தரராகவன் அந்த வண்டியை நோக்கினான். ஒரு கணம் அங்கேயே தயங்கி நின்றான். பிறகு சீதாவை நோக்கி வருவதற்குப் பதிலாக, எதிர்ப்புறத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த வண்டியை நோக்கி அவசரமாகச் சென்றான். இந்தச் சமயம் அவன் கூட்டத்தையும் நெருக்கத்தையும் பொருட்படுத்தவில்லை. முட்டி மோதிக் கொண்டும் இடித்து பிடித்துக் கொண்டும் சென்றான். ராகவன் இலக்கு வைத்துப்போன ரயில் வண்டியில் பலகணிக்கு அருகில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து ராகவன் ஏதோ கேட்டான். அவள் ஏதோ பதில் கூறினாள், இவன் திரும்ப ஏதோ சொன்னான். இதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. கடைசி கார்டு வண்டி போகிற வரையில் ராகவன் அங்கேயே நின்று போகும் ரயிலையும் பலகணிக்கு வெளியே தெரிந்த அந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு, திரும்பி, சீதா இருந்த வண்டியை நோக்கி வந்தான்.

மேலே கூறிய நிகழ்ச்சியைச் சீதா கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள். தன்னையும் குழந்தையையும் பார்த்த பிறகு சௌந்தரராகவன் நேரே தங்களிடம் வராமல் எதிர்ப்பக்கத்து ரயிலை நோக்கிப் போனது சீதாவுக்குச் சிறிது ஏமாற்றம் அளித்தது. இன்னொரு ரயிலில் இருந்த பெண்கள் யார் என்பது அவளுக்குத் தெரியாது. எனினும் தன்னைவிட அவர்களை முக்கியமாகக் கருதி ராகவன் அங்கே போய்ப் பேசியது சீதாவின் உள்ளத்தில் 'சுருக்' என்ற வேதனையை உண்டாக்கியது. மேற்சொன்னதெல்லாம் அவளுடைய உள்ளத்தின் ஒரு நிமிஷ நேரத்து அனுபவம் தான். ராகவன் அருகில் வந்ததும் மனது ஒரே குதூகலமடைந்தது. "வஸந்தி! அப்பா கிட்டப்போ!" என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பலகணி வழியாக வெளியே எடுத்து விட்டாள். குழந்தை தாவிக்கொண்டு அப்பாவிடம் சென்றது. ராகவனும் ஆசையோடு வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவனுடைய மனது குழந்தையிடம் லயிக்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

பிளாட்பாரத்தில் நடந்த மேற்படி ஒரு நிமிஷ நாடகத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் சாமான் வகையறாக்களைச் சரி பார்த்து வண்டியிலிருந்து இறக்குவதில் முனைந்திருந்தாள். "சீதா முதலில் நீ கீழே இறங்கு! சாமான்களை எல்லாம் இறக்கிய பிறகு நான் இறங்குகிறேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். சீதா வண்டியிலிருந்து இறங்கினாள், போர்ட்டர்களுக்குக் கட்டளை போட்டுக் கொண்டிருந்த சௌந்தரராகவனுக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவனாக ஏதாவது சொல்லுவான், கேட்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் ஒன்றும் பேசுகிற வழியாகக் காணவில்லை. "நீங்கள் ஸ்டேஷனுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா என்று நானும் அம்மாவும் பந்தயம் போட்டுக் கொண்டு வந்தோம்!" என்றாள் சீதா. ராகவன் காதில் அது விழுந்ததாகவே தோன்றவில்லை. அவன் மனம் வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. "புறப்படுவதற்கு இரண்டு நாளைக்கு முன்பு வஸந்திக்கு உடம்பு சரியில்லை. புறப்பட முடியுமோ, என்னமோ என்று பயமாய்ப் போய்விட்டது!" என்றாள் சீதா. கொஞ்சம் ராகவனுடைய கவனம் திரும்பியது "வஸந்திக்கு என்ன உடம்பு?" என்று கேட்டான். "அஜீரணம் மாதிரி இருந்தது?" குழந்தைகளுக்கு அஜீரணமே வரக்கூடாது. குழந்தைகளுக்கு என்னவிதமாக உடம்பு வந்தாலும் அது வளர்ப்பவர்களுடைய தப்பிதந்தான்?" என்று ராகவன் கடுமையான குரலில் கூறினான்.

தான் ஆரம்பித்த பேச்சு பிசகாய்ப் போய்விட்டதென்பதை அறிந்து சீதா மௌனமானாள். சாமான்கள் இறக்கப்பட்ட பிறகு காமாட்சி அம்மாள் பெஞ்சுகளுக்கு அடியில் குனிந்து பார்த்துவிட்டு ரயிலிலிருந்து இறங்கினாள். ராகவனை அருகில் வந்து பார்த்து, "ஏண்டா அப்பா!" இப்படி இளைத்துப் போயிருக்கிறாயே?" என்றாள். "ஆமாம், அம்மா! இளைத்துத்தான் போய்விட்டேன். இத்தனை நாள் உங்களையெல்லாம் பார்க்காத கவலையினாலே தான்!" என்றான் ராகவன். இந்தச் சமயத்தில் அதே ரயிலில் வேறொரு வண்டியிலிருந்து இறங்கிய சூரியா அவர்கள் நிற்குமிடத்துக்குச் சமீபமாய் வந்து சேர்ந்தான். ராகவன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை போர்ட்டர்களைப் பார்த்துச் "சாமான்களை எடுங்கள்" என்றான். சூரியாவுடன் ராகவன் பேசாதது சீதாவுக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. சூரியாவைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

பிறகு மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு, "சூரியாவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்று கேட்டாள். "எந்தச் சூரியாவை?" என்றான் சௌந்தரராகவன். "எந்தச் சூரியாவை என்கிறீர்கள்? லலிதாவின் அண்ணா சூரியாதான்!" "மாப்பிள்ளை! அடியோடு என்னை மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது!" "ஓகோ! கலியாணத்தின்போது ஒரே கோபமாக இருந்தானே, அந்தப் பையனா? இங்கு எங்கே வந்தான்?" என்று ராகவன் கேட்டான். இதனால் சீதாவின் மனக் கஷ்டம் மேலும் அதிகமாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயம் காமாட்சி அம்மாள் அவர்களுடைய பேச்சில் தலையிட்டாள். "வழி நெடுகச் சூரியாதான் எங்களுக்கு ஒத்தாசையாயிருந்து வந்தான்; அவன் வந்திராவிட்டால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போயிருக்கும்" என்றாள். "இந்த வண்டியிலேயே இவன் வந்தானா, என்ன? இறங்குகிறபோது நான் பார்க்கவில்லையே?" என்றான் ராகவன். "இல்லை, மாப்பிள்ளை ஸார்! நான் மூன்றாம் வகுப்பு வண்டியில் வந்தேன். அப்படி ஒன்றும் இவர்களுக்கு நான் பிரமாதமான ஒத்தாசை செய்துவிடவில்லை!" என்றான் சூரியா. "அதனால் பாதகமில்லை ஆனால் என்னை மட்டும் மாப்பிள்ளை சார் என்று கூப்பிடாமல் இருந்தால் சரி. கொஞ்சம் அநாகரிகமாகத் தோன்றுகிறது" என்றான் ராகவன். இதற்குள் போர்ட்டர்களின் தலையில் சாமான்கள் ஏறிவிட்டன. ராகவன் கையிலிருந்த குழந்தையைக் காமாட்சி அம்மாள் வாங்கிக் கொண்டாள். ராகவன் முன்னால் வழிகாட்டிச் செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள்.

"இதுதானா நமக்கு வாங்கியிருக்கிற மோட்டார் கார்?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது. அதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. சாமான்களைக் காரில் ஏற்றியானதும் காமாட்சியம்மாளையும் சீதாவையும் குழந்தையுடன் பின் ஸீட்டில் உட்காரச் செய்தான். தான் முன் புறத்தில் டிரைவருடைய ஸீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்து ஸீட் காலியாகத்தானிருந்தது. சூரியா விடைபெற்றுக் கொள்வதற்காக நின்றான். காலி இடத்தில் சூரியாவை ஏறிக்கொள்ளச் சொன்னால் என்ன என்று சீதாவுக்குத் தோன்றியது. ராகவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள் அவன் சொல்லவில்லை. சீதா ஏமாற்றத்துடன் சூரியாவைப் பார்த்தாள். அவளுடைய மனோ நிலையைத் தெரிந்துகொண்ட சூரியா முகபாவத்தினால் தன் அனுதாபத்தைத் தெரிவித்து கொண்டான். வண்டி புறப்படலாயிற்று சீதா மெல்லிய குரலில், "அம்மா சூரியா உங்களிடம் சொல்லிக் கொள்கிறான் போலிருக்கிறது!" என்றாள். காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, சூரியா! போய் வருகிறாயா? ஊருக்குப் போவதற்குள்ளே ஒரு நாளைக்கு ஆத்துக்கு வந்துவிட்டுப் போ!" என்று சொன்னாள். "சீதாவுக்கு மாமியாரிடம் நன்றி உணர்ச்சி பொங்கியது. சூரியா, "ஆகட்டும், மாமி! அவசியம் வந்துவிட்டுப் போகிறேன். மாப்பிள்ளே! உங்களுடைய விலாசம் என்ன?" என்று கேட்டான்.

ராகவனுடைய குணம் ஒருவாறு சூரியாவுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. அதற்காக அத்தங்காளின் உறவை விட்டு விடுவதாக அவனுக்கு உத்தேசம் இல்லை, மாப்பிள்ளை தன்னை அழைக்காவிட்டால் அவர்களுடைய ஜாகையில் போய்ப் பார்த்து விடுகிறது என்று தீர்மானித்திருந்தான். "நம்பர் எட்டு, நாதிர்ஷா ரோடு?" என்று சொல்லிவிட்டு ராகவன் மோட்டாரை விட்டான். மோட்டார் போகத் தொடங்கியதும் சீதா மறுபடியும் உற்சாகம் கொண்டாள். "வஸந்தி பார்த்தாயா? அப்பா மோட்டார் ஓட்டுகிறார்!" என்றாள். "நானும் மோட்டார் ஓத்துவேன்!" என்றாள் வஸந்தி. சீதா கலகலவென்று சிரித்தாள், "கேட்டீர்களா அம்மா உங்கள் பேத்தியின் பேச்சை! இவளும் கார் ஓட்டுவாளாமே?" என்றாள். "ஓட்டினாலும் ஓட்டுவாள்; இவள் பெரியவளாகும் போது உலகத்திலேயே இன்னும் என்னவெல்லாம் அதிசயம் நடக்கப் போகிறதோ!" என்றாள் காமாட்சி அம்மாள். ராகவன் அப்போது பேச்சில் தலையிட்டு, "அம்மா! பொம்மனாட்டிகள் கார் ஓட்டுகிறது, வரப்போகிற அதிசயம் இல்லை! இப்போதே எத்தனையோ ஸ்திரீகள் கார் ஓட்டுகிறார்கள். அதனால் வீதிகளில் ஒரே அபாயமாய்ப் போய் விட்டது பெண்பிள்ளை ஓட்டுகிற மோட்டார் கார் வருகிறதென்றால் வீதி உடனே காலியாகி விடுகிறது! ஜனங்கள் அப்படிப் பயந்து நாலாபுறமும் ஓடி ஒதுங்குகிறார்கள்!" என்று சொன்னான்.

ராகவனுடைய நகைச்சுவையை ரசித்துச் சீதா சிரித்தாள். பழைய அனுபவத்திலிருந்து, ராகவனுடைய ஹாஸ்யத்தைப் புரிந்து கொண்டு சிரிக்காவிட்டால் அவனுக்கு கோபம் வரும் என்பதைச் சீதா அறிந்திருந்தாள். ஏதாவது புரியாவிட்டால் ராகவன் விளக்கிச் சொல்லமாட்டான். "உன்னிடம் வந்து சொல்லப் போனேனே?" என்று முடித்துவிடுவான். இதனால் அவன் பேச்சுப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் சீதா சமயோசிதம் பார்த்துச் சிரித்து விடுவது வழக்கம். சீதாவின் சிரிப்பு நிற்பதற்குள் 'டர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. ராகவன் சட்டென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். வயதான முஸ்லிம் ஸ்திரீ ஒருத்தி உயிர் தப்பினாள். இன்னும் அரை அங்குலம் வண்டி நகர்ந்திருந்தால் அந்த முஸ்லிம் ஸ்திரீயின் பேரில் வண்டி மோதி அவளைக் கீழே தள்ளி இருக்கும். முதலில் காமாட்சி அம்மாளுக்கும் சீதாவுக்கும் விஷயம் இன்னதென்று தெரியவில்லை. தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு அடி வயிற்றில் நெருப்புச் சுட்டது போலிருந்தது. "ஏம்மா, மோத்தார் நின்னுத்து?" என்று கேட்டாள் வஸந்தி. மறுபடியும் கார் போக ஆரம்பித்ததும் காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, மோட்டார் ஓட்டுவதற்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லையா? நீயே எதற்காக ஓட்ட வேண்டும்!" என்றாள். "டிரைவர் வைத்துக்கொண்டால், சம்பளம் கொடுக்க வேணுமே? மாதாமாதம் பணத்துக்கு எங்கே போகிறது? இந்த ஊரிலே டிரைவர்களுக்கு ரொம்பக் கிராக்கி!" என்றான் ராகவன்.

அப்போது சௌந்தரராகவனுக்கு மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் என்பது அவன் தாயார், மனைவி இருவருக்கும் தெரியும். ஆகையால், 'பணத்துக்கு எங்கே போகிறது' என்று அவன் கேட்டது பரிகாசத்துக்காக என்றே நினைத்தார்கள்! சீதா சிரித்தாள். "எதற்காகச் சிரிக்கிறாய்! நான் சொல்கிறது வேடிக்கை என்று நினைத்தாயா?" என்றான் ராகவன். "ஆமாம்!" என்றாள் சீதா. "எதனால் வேடிக்கை என்று உனக்குத் தோன்றுகிறது?" என்று ராகவன் கேட்டான். "மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் வருகிறது; டிரைவருக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் யாராவது நம்புவார்களா? உங்கள் செல்வக் குமாரி வஸந்திகூட நம்பமாட்டாளே!" என்றாள் சீதா. "பெண்ணையும் உன்னைப் போலவே வளர்த்துக் கொண்டு வருகிறாயாக்கும்!" என்றான் ராகவன். அதற்கும் சீதா சிரித்துக்கொண்டே, "என் மாதிரி வளர்க்காமல் வேறு யார் மாதிரி வளர்க்க வேண்டுமாம்!" என்று கேட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தில் ராகவன் ஓட்டிய கார் தனக்கு இந்து முஸ்லீம் வேற்றுமைப் புத்தி கிடையாது என்று நிரூபித்தது. இப்போது ஒரு ஹிந்து ஸ்திரீ மீது அது ஏறப் பார்த்தது! நல்ல வேளையாக ஏறிவிடவில்லை. "ஏண்டாப்பா ராகவா! இன்னும் மோட்டார் நன்றாய் விடுவதற்கு நீ கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறதே! அதற்குள்ளே என்ன அவசரம்? நன்றாய்க் கற்றுக்கொள்ளுகிற வரையிலாவது டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா?" என்றாள் காமாட்சி அம்மாள்.

"எனக்கு நன்றாய் மோட்டார் விடத் தெரியும் அம்மா! ஆனால் இன்றைக்கு மனது கொஞ்சம் குழம்பியிருக்கிறது அதனால்..." "இன்றைக்கு மனது எதற்காகக் குழம்ப வேண்டும்?" "செத்துப் போனதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று உயிரோடு வந்து நின்றால், மனக் குழப்பம் ஏற்படாதா? அதிலும் தான் தானில்லை என்று சாதிக்கப் பார்த்தால்?...." "என்ன சொல்கிறாய், ராகவா! எனக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமில்லையே? நாலு நாளைக்கு இன்புளூயன்ஸா சுரமாயிருந்தது! அவ்வளவுதான். ஏண்டி சீதா! நீ ஏதாவது எனக்கு உடம்பு ரொம்ப அதிகமாயிருந்தது என்று கடிதம் எழுதிவிட்டாயோ!" "உங்களுடைய உடம்பைப்பற்றி நான் எழுதவே இல்லையே?" என்றாள் சீதா. "நானும் உங்களைச் சொல்லவில்லை, அம்மா! உங்களுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்த விஷயமே எனக்கு இது வரைக்கும் தெரியாது வேறொருவரைப்பற்றிச் சொன்னேன்." "அப்படி யார் செத்துப் பிழைத்து உயிரோடு வந்தது?" "ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் பார்க்கவில்லையா?" "நான் பார்க்கவில்லையே? எந்த ரயில்வே ஸ்டேஷனில்?" "டில்லி ஸ்டேஷனில்தான் உங்கள் வண்டி வந்து நின்றதும் எதிர்ப்புறத்தில் ஒரு வண்டி புறப்பட்டது அதிலே பார்க்கவில்லையா?" "நான் ஒன்றும் பார்க்கவில்லை அதில் யார் போனது?" "அப்புறம் சொல்கிறேன்" என்றான் ராகவன்.

காமாட்சி அம்மாள் எதிர்ப்புறத்து ரயிலைப் பார்க்கவில்லைதான்; ஆனால் சீதா பார்த்துக்கொண்டிருந்தாள். ராகவன் ஓடிப்போய் யாரோ ஒருத்தியிடம் இரண்டு வார்த்தை பேசியதையும், அதற்குள்ளே வண்டி போய் விட்டதையும் ராகவன் ஒரு மாதிரி முகத்துடன் திரும்பி வந்ததையும் சீதா பார்த்துத் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள். "அந்த ரயிலில் போனது யார் என்று கேளுங்கள், அம்மா!" என்று மாமியாரைத் தூண்டினாள்.இதற்குள் மூன்றாவது தடவையாக மோட்டார் வண்டி நின்றது. சடக்கென்று நின்றபடியால் மறுபடியும் மாமியாருக்கும் மருமகளுக்கும் பயம் உண்டாயிற்று. "என்ன? என்ன?" என்றார்கள். "ஒன்றும் இல்லை; வீடு வந்துவிட்டது!" என்றான் ராகவன். சீதா வீட்டைப் பார்த்தாள்; அழகான சின்னஞ்சிறு பங்களா. முன்புறத்திலும் இரு பக்கங்களிலும் பூஞ்செடிகள் இளமரங்கள். சீதாவின் உள்ளத்தில் இன்பம் பொங்கித் ததும்பியது. "வஸந்தி! உன் வீட்டைப் பாரடி, எவ்வளவு அழகாயிருக்கிறது?" என்றாள். "இது அப்பா கத்திய வீதா, அம்மா? நம்பளுக்காகக் கத்தியிருக்காளா?" என்றாள் வஸந்தி.
 
மூன்றாம் அத்தியாயம்

துயரத்தின் வித்து

கலியாணம் நடந்த உடனேயே சௌந்தரராகவன் சீதாவைத் தன்னுடன் புதுடில்லிக்கு அழைத்துப் போனான். இங்கிலீஷ் ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாக அவர்கள் தங்கினார்கள். ஒரு மாத காலம் கந்தர்வலோகத்தில் சஞ்சாரம் செய்து காண்டிருந்தார்கள். புதுடில்லியின் அழகான சாலைகளிலும் சதுக்கங்களிலும் பழைய டில்லியின் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகள், மசூதிகளிலும் அவர்கள் கைகோத்துக் கொண்டு உலாவி வந்தார்கள். இம்மாதிரி சில வருஷங்களுக்கு முன்னால் இன்னொரு பெண்ணுடன் கைகோத்துக்கொண்டு இதே இடங்களில் உலாவியது பற்றி ராகவனுக்கு அவ்வப்போது நினைவு வருவதுண்டு. ஆனால் அந்த நினைவை அலட்சியமாக உதறி எறிந்து விட்டுப் பக்கத்தில் நின்ற தன் தர்மபத்தினி சீதாவின் கரத்தை ராகவன் கெட்டியாகப் பிடித்துக்கொள்வான். பிறகு ராகவன் இங்கிலாந்துக்கு அவசரமாகப் புறப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பேரில் சீதாவைச் சென்னைக்கு அழைத்து வந்து தன் பெற்றோர்களிடம் விட்டான். தானும் சில நாள் தங்கியிருந்து, சீதாவுக்கு ஆயிரம் விதமாகத் தேறுதல் கூறினான். அச்சமயம் சீமைக்குப் போவதால் தன்னுடைய உத்தியோக வாழ்க்கைக்கு ரொம்ப அனுகூலம் ஏற்படும் என்றும், அப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பம் மறுபடி கிடைப்பது அரிது என்றும், அதை நழுவவிடுதல் மிக்க அறிவீனமாகும் என்றும் எடுத்துச் சொன்னான்.

மனதாரத் தெரிந்தெடுத்து ஆசையுடன் மணந்து கொண்ட மனைவியை அவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வதில் தனக்கு மட்டும் வருத்தமில்லையா என்று கேட்டான். வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்றத்திற்கு அவள் குறுக்கே நிற்கலாமா என்றான். அடுத்த தடவை தான் வெளிநாட்டுக்குப் பிரயாணமாகும்போது அவளையும் அவசியம் அழைத்துப் போவதாக உறுதிமொழி கூறினான். சீதாவுக்கு ஒரு பக்கத்தில் தன்னுடைய இதய நாயகனை இவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்கிறதே என்று துக்கம் துக்கமாய் வந்தது. இன்னொரு பக்கத்தில் ராகவன் சீமைக்குப் போவது பற்றிப் பெருமையாகவும் இருந்தது. அழுது கொண்டே சிரித்தாள், சிரித்துக் கொண்டே அழுதாள். ஒரு நிமிஷம் 'போகவேகூடாது' என்று பிடிவாதம் பிடித்தாள். அடுத்த நிமிஷம், "கட்டாயம் போக வேண்டும்" என்று வற்புறுத்தினாள். கடைசியாக விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் திரும்பி வருவதற்கு பதினைந்து மாதத்துக்கு மேலாயிற்று. அதற்குள் சீதாவின் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகள் நேர்ந்தன. அவளுடைய அருமைத் தாயார் பம்பாய் ராஜம்மாள் தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தோம் என்ற மனத்திருப்தியுடன் இந்த மண்ணுலகை நீத்துச் சென்றாள். தன்னுடைய புருஷர் துரைசாமி அய்யரின் மடியின் மீது தலையை வைத்துக்கொண்டு கடைசி மூச்சை விடும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்தது. அதோடு அவள் பெரிதும் ஆசை வைத்திருந்த அகண்ட காவேரிக் கரையில் அவளுடைய உடல் தகனமாகும் பேறும் கிடைத்தது.

தாயார் இறந்து பல தினங்கள் வரையில் சீதா கண்ணீரும் கம்பலையுமாயிருந்தாள். மாமியார் எத்தனை ஆறுதல் சொல்லியும் அவளுடைய துக்கம் தீரவில்லை. மாமனார் பகவத் கீதையிலிருந்து எவ்வளவு சுலோகங்கள் சொல்லி வியாக்யானம் செய்து காட்டியும் அவளுடைய மனம் நிம்மதியடையவில்லை. இப்பேர்ப்பட்ட துக்கம் தனக்கு நேர்ந்த சமயத்தில் தன் அருமைக் கணவர் பக்கத்தில் இல்லாமற் போனது அவளுடைய துயரத்தை அதிகமாக்கியது. உண்மையான அன்பு, சினேகம் இவற்றின் பெருமை அதுதான் அல்லவா? அன்புடையவர்களிடமும் சிநேகிதர் களிடமும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் துக்கம் குறைந்து சீக்கிரத்திலேயே மனச்சாந்தி ஏற்படுகிறது. அன்புள்ளோரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டால் அந்தச் சந்தோஷம் பொங்கிப் பெருகுகிறது. சீதாவுக்கு நேர்ந்த பெருந்துக்கத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ளச் சௌந்தரராகவன் அருகில் இல்லை.இதனால் அவளுடைய துக்கம் வெகு காலம் நீடித்திருந்தது.சீதாவின் வாழ்க்கையில் இன்னொரு முக்கிய சம்பவம் - சந்தோஷமான சம்பவம் - நேர்ந்த பிற்பாடுதான், அந்தத் துக்கம் மறைந்தது.

சீதா தன் உயிருக்கே நேர்ந்த அபாயத்திலிருந்து கடவுள் அருளால் பிழைத்து எழுந்து தான் பெற்ற செல்வக் கண்மணியைப் பார்த்த பிறகு மற்றதெல்லாம் அவளுக்கு மறந்தே போய்விட்டது. தாயாரை நினைத்துக்கொண்டு துக்கப்படுவதற்கு இனிமேல் அவளுக்கு நேரம் ஏது? அதோடு கூடக் காமாட்சி அம்மாளும் மற்றும் அக்கம் பக்கத்து மூதாட்டிகளும், "உன் அம்மாவே உன் வயிற்றில் பெண்ணாய் வந்து பிறந்து விட்டாள்!" என்று அடிக்கடி சொன்னதனால் சீதாவுக்கு அத்தகைய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தன் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதில் உண்டான ஆனந்தத்தில் தன்னைப் பெற்ற தாயின் முகத்தை மறந்தாள். சீமைக்குப் போயிருக்கும் கணவன் திரும்பி வந்ததும் குழந்தையை அவரிடம் காட்டி ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்யும் நேரத்தை எண்ணி எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தாள். சீமைக்குப் பயணமாகும்போது ராகவன் சீதாவைக் கான்வெண்ட் ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லிப் பெற்றோர்களிடமும் ஏற்பாடு செய்துவிட்டுப் போனான். அதன்படி சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகவில்லை என்று அறிந்ததும் அவன் மிக்க கோபம் கொண்டு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்துக்குப் பதிலாக அவனுடைய தகப்பனார், "உன்னுடைய சீமந்தக் கலியாணத்துக்கு அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறது; உடனே புறப்பட்டு வந்து சேரவும்" என்று எழுதினார்.

சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாத காரணம் இப்போது ராகவனுக்குப் புலனாயிற்று. அதனால் அவன் சந்தோஷமடைந் தானா, அதிருப்தி கொண்டானா என்று சொல்ல முடியாது. பதில் கடிதத்தில் பரிகாசமாக, சீமந்தக் கலியாணத்தை ஆறு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளவும்; தள்ளி வைக்க முடியாவிட்டால் பர்த்தி வைத்து நடத்தி விடவும்!" என்று எழுதியிருந்தான். சீதாவுக்கு இந்தக் கடிதம் அளவில்லாத கோபத்தை அளித்தது. ராகவனுடைய கடிதங்களை விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தைப் போல் போற்றிப் பத்திரப்படுத்தும் வழக்கமுடைய சீதா மேற்படி கடிதத்தைச் சுக்கலாகக் கிழித்தெறிந்தாள். ராகவன் அவ்வாறு பரிகாசமாகப் பதில் எழுதியது பற்றி மாமியாரிடம் புகாரும் சொன்னாள். மாமியாரும் மருமகளும் வெகு ஒற்றுமையாகவும் அன்யோன்னியமாகவும் இருந்து வந்தார்கள். "மருமகள் மெச்சிய மாமியார் இல்லை" என்னும் பழமொழி அவர்கள் விஷயத்தில் பொய்யாயிற்று. "அம்மா! உங்களிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாதென்று என் 'ஓர்ப்படி' பிறந்த வீட்டோடு போய் விட்டாளாமே? அவள் எவ்வளவு பெரிய ராட்சஸியா இருக்க வேண்டும்?" என்றாள். அக்கம் பக்கத்து வீடுகளில் தன் மாமியார் தன்னை அன்புடன் நடத்துவது பற்றிப் பெருமையுடன் சொல்லிக் கொண்டாள். காமாட்சியம்மாளின் மனோரதம் நிறைவேறி விட்டது. அந்த அம்மாள் பத்மாபுரத்தின் வீதிகளில் கம்பீரமாகப் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்தான். வஸந்தியைப் பார்த்து அகமகிழ்ந்து முகமலர்ந்தான். சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாததினால் ஏற்பட்ட கோபத்தையும் மறந்தான். புதுடில்லியில் ஜாகை கிடைத்ததும் கடிதம் எழுதி அவர்களைத் தருவித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் போனான். நல்ல ஜாகை கிடைப்பதற்கு இத்தனை காலம் ஆகிவிட்டது. சீதா புதுடில்லிக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று; அந்த ஏழு நாளும் புது ஜாகை போடும் ஏற்பாடுகளில் எல்லாரும் முனைந் திருந்தார்கள். இந்த நாற்காலியை எடுத்து அந்த அறையில் போடுவது, அந்த அலமாரியைத் தூக்கி இந்த அறைக்குக் கொண்டு வருவது, கட்டில்களை மாற்றி மாற்றிப் போடுவது, சமையல் வேலைகளுக்கு ஏற்பாடு செய்வது, அம்மிக் குழவியும் கல்லுரலும் சம்பாதிப்பது, கிராமபோனும் ரேடியோவும் வைப்பது ஆகிய காரியங்களில் சதா ஈடுபட்டிருந்தார்கள். சாயங்காலம் வந்ததும் சீதா முன்போல அதாவது கலியாணம் ஆனவுடனே வந்திருந்த நாட்களைப்போல் ராகவனுடன் வெளியில் உலாவச் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுவாள். காரியம் அதிகமாக இருந்தபடியால் அந்த ஆசையை அடக்கிக் கொள்வாள்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் காலை ராகவனைப் பார்த்து, "இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள். வெளியில் எங்கேயாவது அழைத்துப் போங்கள்!" என்றாள் சீதா. "நான் அழைத்துப் போவது என்ன? உனக்கு இஷ்டமான போது இஷ்டமான இடத்துக்குப் போய் வருவதுதானே!" என்றான் ராகவன். "அழகாயிருக்கிறது; நான் மட்டும் தனியாகப் போவதாக்கும்?" "போனால் என்ன? உன்னை யாராவது வழிப்பறி செய்து கொண்டு போய் விடுவார்களா? இங்கே இன்னும் பிரிட்டிஷ் ராஜ்யம் நடக்கிறது; காங்கிரஸ் ராஜ்யம் பூராவும் வந்து விடவில்லை!" என்றான் ராகவன். "என்னை ஒருவரும் கொண்டுபோய் விடமாட்டார்கள்; வாஸ்தவந்தான். ஆனாலும் தனியாகத்தான் போக வேண்டும் என்றால், நான் போகவே மாட்டேன்." "தனியாகப் போக வேண்டாம்; உன் மாமியாரையும் கூட அழைத்துக் கொண்டு போயேன்?" "மாமியாரை நான் கூட அழைத்துக் கொண்டு போவதற்கு உங்களுடைய அனுமதி வேண்டுமாக்கும்!" என்று சீதா பொய்க் கோபம் வருவித்துக் கொண்டு சொன்னாள். "சரி; சரி! கோபித்துக்கொள்ளாதே! இன்று சாயங்காலம் சீக்கிரம் வந்து உன்னை 'வாக்கிங்'க்கு அழைத்துப் போகிறேன்," என்று சொல்லிவிட்டு ராகவன் சென்றான். அவ்விதமே அன்று மாலை சீக்கிரமாக ராகவன் திரும்பி வந்தான். சீதாவைப் பார்த்து "மோட்டாரில் 'வாக்கிங்' போகலாமா? அல்லது கால்நடையாகப் போகலாமா?" என்று கேட்டான்.

வழக்கப்படி சீதா ராகவனுடைய ஹாஸ்யத்துக்காகச் சிரித்துவிட்டு, "மோட்டாரில் 'வாக்கிங்' எப்படிப் போவது? நடந்தே போகலாம்!" என்றாள். காமாட்சியம்மாள் தான் 'வாக்கிங்' வரவில்லையென்றும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாள்; சீதா விரும்பியதும் இதுதான். ஆகையால் ராகவனுடன் உல்லாசமாக கிளம்பினாள். இருவரும் கன்னாட் சர்க்கிளுக்கு வந்து ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு 'இந்தியா கேட்'டை நோக்கிச் சென்றார்கள். இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் உள்ள செயற்கை நீர் ஓடைகளில் ஒன்றுக்கு அருகில் பச்சைப் பசும்புல் தரையில் உட்கார்ந்தார்கள். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்து வரும் சமயம். நானா திசைகளிலும் வரிசை வரிசையாக வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு இந்தியத் தலைநகரின் மின்சார தீபங்கள் பிரகாசித்தன. "கந்தர்வலோகம் என்று சொல்கிறார்களே! அந்த கந்தர்வலோகம் இதைவிடவா அழகாயிருக்கும்?" என்றாள் சீதா. "நான் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; அதனால் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை" என்றான் ராகவன். சீதா சிரித்துக்கொண்டே நானும் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; ஆனால் கந்தர்வலோகத்தைப் பற்றிப் பாரதியார் 'ஞான ரதம்' என்ற புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்திருக்கிறேன். புதுடில்லியைவிடக் கந்தர்வலோகம் அவ்வளவு ஒன்றும் ஒசத்தியில்லையென்று எனக்குத் தோன்றுகிறது!" என்றாள். "நான் 'ஞான ரத'த்தில் ஏறினதில்லை; அதனால் அபிப்பிராயம் சொல்ல முடியாது" என்றான் ராகவன்.

ஞான ரதம் வெறும் கற்பனை ரதம். ஆனால் நீங்கள் வான ரதத்தில் ஏறி ஆகாசத்தில் பறந்திருக்கிறீர்கள். ஞான ரதத்தைப் போல் கந்தர்வலோகமும் கற்பனை லோகந்தான். நீங்களோ லண்டன், பாரிஸ் முதலிய உண்மை நகரங்களுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள். ஏன்னா? புதுடில்லியைவிட லண்டனும் பாரிஸும் அழகுதானே?" என்று சீதா கேட்டாள். "ஏன்னா என்று இனிமேல் என்னை அழைப்பதில்லை என்று நீ சபதம் செய்தால் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்" என்றான் ராகவன். "ஆகட்டும்; இனிமேல் 'ஏன்னா' என்கவில்லை; 'ஏன் ஸார்?' என்கிறேன். லண்டன் அழகா, டில்லி அழகா? ஏன் ஸார்?" என்றாள் சீதா. "லண்டன் ஒரு விதத்தில் அழகு; டில்லி இன்னொரு விதத்தில் அழகு" என்றான் ராகவன். சீதாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகவனுடைய கண்கள் அங்குமிங்கும் சுழன்று பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சமயம் சாலையோடு இரண்டு பெண்கள் நடந்து போனார்கள். சாய்ந்து படுத்திருந்த ராகவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவர்களை உற்றுப் பார்த்தான்; மறுபடியும் புல் தரையில் சாய்ந்து கொண்டான். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. "ஏன் ஸார்! அன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒருத்தியைப் பார்த்துப் பேசினீர்களே? அவள் யார்? என்று சீதா கேட்டாள். "அவள் யாராயிருந்தால் உனக்கென்ன?" என்று ராகவன் கேட்ட குரலில் கடுமை தொனித்தது.

"யார் என்று சொன்னால் என்ன!" "சொல்ல முடியாது." "ஏன் சொல்ல முடியாது?" "எனக்கு இந்த ஊரில் எத்தனையோ பேரைத் தெரியும். அவர்களையெல்லாம் யார் யார் என்று உனக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?" "உங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் எனக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே?" "உனக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் தெரிந்தால் போதும். ஊரில் உள்ளவர்களை எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை." பொங்கி வந்த கோபத்தைச் சீதா அடக்கிக் கொண்டாள். சற்று நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். "ஏன் ஸார்? அவள் யார் என்று சொல்லமாட்டீர்களா!" மௌனம். "நம்ம பக்கத்து மனுஷியா? இந்த ஊர்க்காரியா?" மௌனம். "என்னோடு ஏன் பேசப் போகிறீர்கள்? இதற்குத்தான் 'வாக்கிங்' அழைத்து வந்தீர்களாக்கும்?" என்று கூறிய சீதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. இதற்குத்தான் அழைத்துவர மாட்டேன் என்று சொன்னேன். பெண்களின் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டாயல்லவா? சனியன்!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் பசும்புல் தரையிலிருந்து எழுந்தான். "நான் ஒன்றும் சனியன் இல்லை" என்று சீதா கூறி இன்னும் முணுமுணுத்தாள். சீதாவின் குற்றமற்ற இளம் உள்ளத்தில் துன்பத்தின் வித்து விதைத்தாகிவிட்டது. அது முளைத்து வளர்ந்து மரமாகி என்னென்ன பலன்களைத் தரப் போகிறதோ, யார் கண்டது?
 
நான்காம் அத்தியாயம்

சாலை முனையில்

உலாவச் சென்று திரும்பி வந்த அன்றிரவு சீதா வெகு நேரம் தூங்கவில்லை. புதுடில்லியில் புதுக் குடித்தனம் போட்ட பிறகு முதன் முதலாகத் தன் பிரிய நாயகன் தன்னை உலாவ அழைத்துச் சென்ற தினத்தில், தான் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு அவனுக்கு எரிச்சல் உண்டாக்கியதை நினைத்து நினைத்து வருந்தினாள். இருந்தாலும் அவர் எதற்காக, 'அவள் யார் என்பதைச் சொல்ல மறுக்க வேண்டும் என்ற எண்ணம் ஊசியினால் நெஞ்சைக் குத்துவதுபோல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. சென்னை பத்மாபுரத்தில் மாமனார் வீட்டில் வசித்த போது, சில கோள் - சொல்லிப் பெண்கள் ராகவனுடைய பழைய காதலைப் பற்றி ஊரில் ஏற்பட்டிருந்த வதந்தியை அவளிடம் பிரஸ்தாபித்தார்கள். அப்போது அவள் அதை நம்பவில்லை. பொறாமையினால் சொல்கிறார்கள் என்றே எண்ணினாள். அந்த வம்புப் பேச்சு இப்போது ஞாபகத்துக்கு வந்தது. 'ரயிலில் பார்த்த பெண் அவள்தானோ, என்னமோ? தினம் தினம் ஆபீஸுக்குப் போகிறதாகச் சொல்லி விட்டுப் போகிறாரே, அவளைப் பார்க்கத்தான் போகிறாரோ என்னமோ?' என்று தோன்றியது. "என்ன மூடத்தனம்? அவள்தான் எங்கேயோ போய்விட்டாளே?

மேலும், ரயிலில் அவளைப் பார்த்துவிட்டு இவர் அதிசயப்பட்டதிலிருந்து அவ்வளவு பழக்கப்பட்டவளாகவே தோன்றவில்லை. அப்படி இருக்க நாமாக மனத்தை ஏன் புண்படுத்திக் கொள்கிறோம்? 'பெண் புத்தி பேதைமை' என்று சொல்லுவது வாஸ்தவந்தான்!" என்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள். "லலிதாவைப் பார்க்க வந்த இடத்தில் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லி என்னை வலியக் காதலித்து மணந்து கொண்டாரே; அப்படி என்னை ஆட்கொள்ள வந்த உத்தம புருஷரைப் பற்றி வீண் சந்தேகம் கொள்வது எவ்வளவு பிசகு? கூடவே கூடாது!" என்று தனக்குதானே புத்தி சொல்லிக் கொண்டாள். இனிமேல் அன்று சாயங்காலம் நடந்தது போல் நடப்பதற்கே இடங்கொடுக்கக் கூடாது என்றும், அவருக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றிக் கேட்கவே கூடாது என்றும் சங்கல்பம் செய்து கொண்டாள். இவ்வளவு திடமான தீர்மானத்துக்கு வந்த பிறகும், "ஏதோ நான் தெரியாத்தனமாகக் கேட்டு விட்டதாகவே இருக்கட்டும்; 'அவள் யார்' என்று சொல்லியிருந்தால் என்ன? எதற்காக மறுக்க வேண்டும்?" என்ற நினைவு தோன்றி வேதனை செய்தது.

இந்த வேதனை நிறைந்த சிந்தனையெல்லாம் மறுநாள் பொழுது விடிந்ததும், தூக்கத்தில் கண்ட துர்சொப்பனம் விழித் தெழுந்ததும் மங்கி மறைவது போல், சீதாவின் மனத்திலிருந்து மறையத் தொடங்கியது. ராகவனுக்குக் காலை காப்பி கொண்டு கொடுத்த போது அவன் அவளைப் பார்த்துச் செய்த புன்னகையில் அடியோடு மறைந்துவிட்டது. வழக்கம்போல் ராகவன் ஆபீஸுக்கு புறப்பட்டபோது சீதா வஸந்தியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். ராகவன் அவளைக் கையில் வாங்கிக் கொண்டு கொஞ்சினான். தோளில் சாத்திக் கொண்டு தட்டிக் கொடுத்தான்; கன்னத்தை மெதுவாகக் கிள்ளினான். "வஸந்தி! என்னோடு நீ ஆபீஸுக்கு வருகிறாயா?" என்று கேட்டான். "வதேன் அப்பா! இப்பவே வதேன்!" என்றாள் வஸந்தி. "சரிதான்; உன்னை அழைத்துக் கொண்டு போனால் நான் வேலை செய்தாற் போலத்தான்!" என்றான். சமையல் அறையிலிருந்து வந்த காமாட்சி அம்மாள், "வஸந்திக்கும் வயதாகும்போது உன்னைத் தோற்கடித்து விடுவாள், பார்! உன்னைவிடப் பெரிய உத்தியோகம் பார்ப்பாள்!" என்றாள். "அதைப் பற்றிச் சந்தேகம் என்ன? அவளுடைய அம்மா யார்? சீதாவுக்குப் பிறந்த பெண் சோடையாகப் போய் விடுவாளா?" என்றான் ராகவன். சீதாவுக்குப் பெருமை தாங்கவில்லை.

"நான் என்ன அவ்வளவு கெட்டிக்காரியா? வஸந்தி முழுக்க முழுக்க என் மாமியாரைக் கொண்டிருக்கிறாள். அதனால்தான் இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாள். நீங்கள் வேணுமானால் இரண்டு பேருடைய முகத்தையும் ஒத்திட்டுப் பாருங்கள்!" என்றாள் சீதா. காமாட்சி அம்மாளுடைய சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. "ஆகக் கூடி உங்கள் இரண்டு பேருக்குள்ளேயே வஸந்தியின் சமர்த்தைப் பங்கு போட்டுக் கொள்ளப் பார்க்கிறீர்கள். எனக்குக் கொஞ்சம் கூடக் 'கிரெடிட்' கொடுக்க நீங்கள் தயாராயில்லை!" என்று ராகவன் சொல்லி வஸந்தியை அம்மாவிடம் ஒப்புவித்து விட்டு ஆபீஸுக்குப் புறப்பட்டான். மேலும் ஒரு வாரம் சென்றது ராகவனாகத் தன்னை 'வாக்கிங்' போக மறுபடி அழைப்பான் என்று சீதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக் கிறதாகக் காணப்படவில்லை. ஆகையால் சீதாவே அந்தப் பேச்சை எடுக்க வேண்டியதாயிற்று. "வெளியே போய் அதிக நாளாயிற்றே? இன்றைக்குப் போகலாமா?" என்று சீதா கேட்டாள். "போகலாம் ஆனால் நீ அன்றைக்குக் கேட்டது போல் அசட்டுத்தனமான கேள்வி ஒன்றும் கேட்கக் கூடாது. கேட்கிறதில்லை என்று ஒப்புக்கொண்டால் போகலாம்!" என்றான் ராகவன்.

"நான் கேட்கவில்லை; அப்படி ஏதாவது நான் தப்பித் தவறிக் கேட்டாலும் நீங்கள் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லுங்களேன்!" என்றாள் சீதா. "அதெல்லாம் முடியாது நீ அசட்டுத்தனமாக ஏதாவது கேட்டால் எனக்குக் கோபந்தான் வரும்! அதைவிட வெளியே போகாமலிருப்பதே நல்லது" என்றான் ராகவன். "நான் ஒன்றும் கேட்கவில்லை; ஊமையைப் போல் இருக்கவேண்டும் என்றாலும் இருக்கிறேன்" என்றாள் சீதா. "பார்த்தாயா இங்கேயே ஆரம்பித்து விட்டாயே? நான் வரவில்லை!" என்றான் ராகவன். சீதா பயந்துவிட்டாள்; "நான் சாதாரணமாகத்தான் சொன்னேன் கோபித்துக் கொண்டு சொல்லவில்லை வாருங்கள், போகலாம்" என்றாள். இன்றைக்கு வேறொரு பக்கம் போனார்கள்; போகும்போது பேச்சு அதிகமில்லை. தப்பாக ஏதாவது பேசிவிடக் கூடாது என்று சீதா சர்வ ஜாக்கிரதையாக இருந்தாள். ராகவனும் அக்கம் பக்கம் அதிகமாகப் பார்க்கவில்லை. சீதா தான் எதிரில் வந்த ஸ்திரீகளை எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டு போனாள். பச்சைப் புல் வட்டம் ஒன்று வந்தது; அதன் இடையிடையே அழகிய பூஞ்செடிப் புதர்கள் சில இருந்தன. "நடந்தது போதும்; இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம்" என்றாள் சீதா.

பசும்புல் வட்டத்தைச் சுற்றிச் சில பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் சிலர் உட்கார்ந்திருந்தார்கள்; ராகவனும் சீதாவும் ஒரு பூஞ்செடிப் புதரின் அருகில் அமர்ந்தனர். பெஞ்சிகளில் ஒன்றில் ஒரு பார்ஸி கனவானும் அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய இரு குழந்தைகளும் புல் தரையில் ஓடியாடுவதைப் பார்த்து அவர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்! "வஸந்தியையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம் இங்கே ஓடி விளையாடுவாள்!" என்றாள் சீதா. "இவ்வளவு தூரம் அவளால் நடக்க முடியுமா? அல்லது அவளைத் தூக்கிக் கொண்டுதான் வர முடியுமா? காரிலேதான் அழைத்துக் கொண்டு வரவேண்டும்!" என்றான் ராகவன். "ஆமாம்" என்றாள் சீதா; சற்றுப் பொறுத்து, "அம்மாவையும் குழந்தையையும் அழைத்துப்போய் டில்லி அதிசயங்களை எல்லாம் காட்ட வேண்டாமா?" என்று கேட்டாள். "காட்ட வேண்டியதுதான் ஆனால் வஸந்திக்கு இந்த வயதில் ஒன்றும் தெரியாது. அம்மாவுக்கு ஊர் சுற்றுவதில் ஆசை கிடையாது. 'கோயில் இல்லை, குளம் இல்லை, மசூதியையும் மண்ணாங்கட்டியையும் பார்த்து எனக்கு என்ன ஆக வேண்டும்?' என்கிறாள். ஆனாலும் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையாதலால் குதுப்மினாருக்கும் கோட்டைக்கும் உங்கள் எல்லாரையும் அழைத்துப் போகலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்றான் ராகவன்.

இதைக் கேட்ட சீதா, வீட்டிலிருந்து புறப்படும்போது ஏற்பட்ட மனச் சோர்வு நீங்கிக் குதூகலமடைந்தாள். "ஆமாம், தாஜ்மகாலுக்கு எப்போது போகிறது? முதல் முதல் நாம் இங்கு வந்தபோதே அழைத்துப் போவதாகச் சொன்னீர்கள். அதற்குள் சீமைப் பிரயாணம் வந்துவிட்டது; ஞாபகம் இருக்கிறதா?" என்றாள் சீதா. "ஞாபகம் இல்லாமல் என்ன? அதைப் பற்றியும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். தாஜ்மகாலுக்குப் போவதாயிருந்தால் பௌர்ணமியன்று போகவேண்டும். அப்போதுதான் அதன் அழகை நன்றாய் அனுபவிக்கலாம்!" என்றான் ராகவன். "நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலைப் பார்த்தால் தேவலோகத்து மேனகையின் மாளிகை மாதிரி இருக்கும் என்று ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள்." "ஆமாம்; பகலிலே தாஜ்மகாலைப் பார்த்தால் பளிங்குக்கல் மாளிகையாகத் தோன்றும்; நிலா வெளிச்சத்தில் பார்த்தால் பூரண சந்திரனுடைய கிரணங்களைக் கொண்டே கட்டியதாகத் தோன்றும்!" "ஏன், ஸார் அடுத்த பௌர்ணமியன்று போய் வரலாமே? என்ன சொல்கிறீர்கள்!" "பார்க்கலாம்!" "அம்மாவையும் வஸந்தியையும் அழைத்துக்கொண்டு தானே போக வேண்டும்?" இதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. அவனுடைய மனது வேறு எங்கேயோ அதற்குள் போய்விட்டதாக தோன்றியது.

சூரியாஸ்தமனமாகி இருள் சூழ்ந்து வந்தது. புதுடில்லிக்குச் சோபை அளித்த ஆயிரக்கணக்கான மின்சாரத் தீபங்கள் ஒளிரத் தொடங்கின. நாலாபுறத்திலும் பச்சைப் பசும் மரங்களின் இடையிடையே அந்த மின்சார தீபங்கள் ஒளிர்ந்தது அற்புதமான காட்சியாயிருந்தது. அப்போது பனிக்காலம் முடியும் சமயம். இலேசாகப் பனி விழத் தொடங்கியது. சீதாவின் உள்ளம் அச்சமயம் குளிர்ந்திருந்ததுபோல் உடம்புக்குக் குளிர்ந்தது. இருவரும் பசும்புல் தரையிலிருந்து எழுந்து வீடு நோக்கி நடந்தார்கள். திரும்பி வரும்போது தூரம் அதிகமாயிருப்பது போலத் தோன்றியது. கிட்டத்தட்ட வீட்டுக்குச் சமீபம் வந்துவிட்டார்கள். வீட்டுச் சாலைக்குத் திரும்ப வேண்டிய இடத்தில் சாலை ஓரத்து மேடையில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த சீதா திடுக்கிட்டு மிரண்டு ஒரு கணம் நின்றாள்; ஒரு அடி பின் வாங்கினாள். இதன் காரணம் அவளுக்கு எதிரில் ஒரு பெரிய மரத்தோரமாகக் கையில் பிடித்த கத்தியுடன் ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருந்ததுதான். இலேசான பனிப்படலம் சல்லாத் திரையைப் போல் அந்த ஸ்திரீயை மூடியிருந்தது.

சாலை ஓரத்து தீபஸ்தம்பத்தில் லாந்தர் போல் கூடு அமைந்து விளங்கிய மின்சார விளக்கின் பரந்த ஒளி பனிப்படலத்தின் வழியாகப் புகுந்து அந்த ஸ்திரீயின் வெளிறிய முகத்தை மங்கலாக எடுத்துக் காட்டியது. நாடக மேடைகளில் சில சமயம் மெல்லிய வெள்ளைச் சல்லாவினால் மூடிய ஆவி உருவங்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்களே, அதைப் போல் அந்த ஸ்திரீயின் உருவம் காட்சி அளித்தது. கையில் கத்தி பிடித்த பெண் உருவத்தைக் கண்டதும் சீதா தயங்கிப் பின்வாங்கினாள். பின்னால் அடி எடுத்து வைத்த அதே நேரத்தில் அந்த ஸ்திரீயை முன்னால் ஒரு சமயம் பார்த்திருப்பதாகச் சீதாவுக்கு நினைவு வந்தது. ஈனமான மெலிந்த 'ஓ' என்ற சப்தம் ஒன்று அவள் வாயிலிருந்து வந்தது. பின்னால் வந்த ராகவன் சீதாவைக் கையினால் தாங்கிக்கொண்டு, "என்ன?" என்றான். 'அதோ' என்று கையைக் காட்டினாள் சீதா. ராகவன் பார்த்த போது அந்தப் பெண் உருவம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. அரை நிமிஷத்துக்குள் இருளிலும் பனியிலும் மறைந்துவிட்டது.இந்தச் சம்பவம் எந்தவிதமான உணர்ச்சியையோ கிளர்ச்சியையோ ராகவன் மனதில் உண்டாக்கவில்லை. "அசடே! புதுடில்லிச் சாலையில் எத்தனையோ பேர் வருவார்கள்; போவார்கள், நீ எதற்காகப் பயப்படுகிறாய்?" என்றான் ராகவன். "நான் பயப்படவில்லை" என்றாள்; ஆயினும் அவளுடைய உள்ளத்தில் இன்னதென்று சொல்லமுடியாத பீதி குடிகொண்டு விட்டது. அந்தப் பீதியினால் அப்போது அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. இராத்திரி படுக்கப் போகும் சமயத்தில் ராகவனிடம் சாவகாசமாக அந்த ஸ்திரீயைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
 
ஐந்தாம் அத்தியாயம்

ஹரிபுரா காங்கிரஸ்

ராகவனும் சீதாவும், வீட்டு வாசலுக்கு வந்தபோது உள்ளே கலகலவென்று குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் சூரியா வஸந்திக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்கப் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். "ஓகோ! அம்மாஞ்சியா? எப்போது வந்தாய்?" என்று சீதா குதூகலத்தொனியில் கேட்டாள். "வந்து அரைமணியாச்சு, அத்தங்கா! நீங்கள் திரும்பி வருவதற்கு ரொம்ப நாழிகையாகுமோ என்னமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். மாப்பிள்ளை, ஸார்! வஸந்தி உங்கள் பேரில் குறை சொல்கிறாள்! பாட்டியை ஒண்டியாக விட்டு விட்டு நீங்கள் எங்கேயோ தொலைந்து போய் விட்டீர் களாம்! பாட்டியைப் பார்த்துக் கொள்வதற்காக வஸந்தி வீட்டிலேயே இருக்கிறாளாம்! எப்படி இருக்கிறது கதை!" என்றான் சூரியா. ராகவனுக்குக் குபீர் என்று சிரிப்பு வந்து விட்டது. வஸந்தியைத் தூக்கிக் கொண்டு, "துஷ்டப் பெண்ணே! அப்படியா நீ சொன்னாய்?" என்று பொய்க் கோபத்துடன் கேட்டான். "அப்பதித்தான் சொன்னேன்! பின்னே என்னை ஏன் ஆத்திலே வித்துத்துப் போனே?" என்றாள் வஸந்தி. "அம்மாஞ்சி! காங்கிரஸ் எப்படி நடந்தது?" என்று சீதா கேட்டாள். "பிரமாதமாக நடந்தது!" என்றான் சூரியா.

"உன் அம்மாஞ்சி போயிருக்கிறபோது பிரமாதமாக நடக்காமல் பின் எப்படி நடக்கும்?" என்றான் ராகவன். "காங்கிரஸ் நடந்ததைப்பற்றிக் கதை கதையாகச் சூரியா சொல்கிறான். முதல்லே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுங்கள்; சமையல் ஆறிப்போகிறது. சாவகாசமாக உட்கார்ந்து கதையைக் கேட்கலாம்!" என்றாள் காமாட்சி அம்மாள். சாப்பிட்டு விட்டு உட்காரும் ஹாலுக்கு வந்த பிறகு சூரியா ஸ்ரீ சுபாஷ்சந்திரபோஸின் தலைமையில் நடந்த ஹரிபுர காங்கிரஸ் விமரிசைகளை வர்ணித்தான். ராகவன் கூட வழக்கமான அலட்சியமோ வெறுப்போ காட்டாமால் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். கதையை முடித்துவிட்டுச் சூரியா, "எல்லாம் நன்றாய்த்தான் நடந்தது, ஆனால் எங்களுக்கு மட்டும் அவ்வளவு திருப்தி இல்லை!" என்றான். "எங்களுக்கு மட்டும், என்றால், என்ன அர்த்தம்? நாங்கள் என்பது யார்?" என்று ராகவன் கேட்டான். "சோஷலிஸ்ட் பார்ட்டியைச் சொல்கிறேன் நான் அந்தப் பார்ட்டியைச் சேர்ந்தவன்" என்றான் சூரியா. "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் என்ன?" என்று சீதா கேட்டாள். சூரியா பதில் சொல்வதற்குள் ராகவன், "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் பணக்காரன், ஏழை, புத்திசாலி, மடையன் நல்லவன், கெட்டவன், மனிதன், மாடு எல்லாவற்றையும் சரி மட்டமாக்கிச் சமுத்திரத்தில் அமுக்கிவிடுவது என்று அர்த்தம்!" என்றான். "அத்தங்கா! நீ பயந்துபோய் விடாதே! மாப்பிள்ளை தமாஷுக்காகச் சொல்கிறார்?" என்றான் சூரியா. "போகட்டும்; காங்கிரஸில் இப்போது மகாத்மா காந்தியின் செல்வாக்கு எப்படியிருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவின் செல்வாக்குக்கு என்ன குறைவு?

அவருடைய செல்வாக்கினால் தானே எங்கேயோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இந்த வருஷம் காங்கிரஸ் இவ்வளவு சிறப்பாக நடந்தது!" "காந்தியின் போக்கிலேயே விட்டால் இந்திய தேசத்தில் ஆண்டிப் பரதேசிகள்தான் மிஞ்சுவார்கள். எல்லாரும் கையில் கப்பறையை எடுக்க வேண்டியதுதான். ஆனால் பிச்சை போட யாரும் இருக்க மாட்டார்கள். காந்தியின் செல்வாக்கு இருக்கிற வரையில் இந்தியா ஒரு நாளும் உருப்பட போவதில்லை" என்று ராகவன் கோபமாகப் பேசினான். "வேண்டாமடா, ராகவா! காந்தியைப் பற்றி நீ இப்படியெல்லாம் பேசாதே! காந்தியை மகான் என்றும் அவதார புருஷர் என்றும் ஜனங்கள் சொல்கிறார்களே?" என்றாள் காமாட்சி அம்மாள். "ஜனங்கள் சொல்வதற்கென்ன? குருட்டுத்தனமாக எதை வேணுமானாலும் சொல்வார்கள்! மகாத்மாவின் செல்வாக்கைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவைப்பற்றி உங்களைப்போல் நான் நினைக்கவில்லை. அவர் மகான்! இந்திய தேசம் எவ்வளவோ அவரால் நன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் சில விஷயங்களில் அவருடன் மாறுபடுகிறோம். உதாரணமாக, சுதேச மன்னர்களின் விஷயத்தில் மகாத்மா மிக்க பிற்போக்காக இருக்கிறார். அவர்களைப் பற்றிக் காங்கிரஸில் பேசவே கூடாது என்கிறார். நாங்களோ சுதேச மன்னர்கள் எல்லோரையும் அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் சொல்லுகிறோம்" என்றான் சூரியா.

"தயவு செய்து நீங்கள் இரண்டு பேரும் மகாத்மா காந்தியைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள் எனக்குக் கேட்க கஷ்டமா யிருக்கிறது. 'மகாத்மா காந்திதான் தெய்வம்' என்று என் அம்மா சொல்லி இருக்கிறாள். அதற்கு விரோதமாக யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்" என்றாள் சீதா. "நீயும் கூட அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேச வந்து விட்டாயா?" என்றான் ராகவன். "அத்தங்கா! மகாத்மா காந்தி தெய்வமாகவே இருக்கட்டும். தெய்வத்திடம் வரம் கேட்பது உண்டல்லவா? அந்த மாதிரிதான் நாங்களும் மகாத்மாவிடம் கோரிக்கை செய்கிறோம்" என்றான் சூரியா. "தெய்வம் என்று ஒப்புக்கொண்டால் அப்புறம் வரம் கேட்பது என்ன? எந்தச் சமயம் கொடுக்க வேண்டும் என்று தெய்வத்துக்குத் தெரியாதா? நாம் கேட்டுத்தானா தெய்வம் கொடுக்க வேண்டும்?" என்றாள் சீதா. இந்தக் கேள்வி ராகவனுக்கு வியப்பையளித்தது."சூரியா! உனக்கும் உன் அத்தங்காவுக்கும்தான் சரி. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லு, பார்க்கலாம்!" என்றான்."அத்தங்காளின் சாமர்த்தியம் எங்களுக் கெல்லாம் அப்போதே தெரியுமே! அதனாலேதான் லலிதா 'அத்தங்கா அத்தங்கா' என்று உயிரை விட்டுக்கொண்டிருக்கிறாள். இராத்திரி தூக்கத்திலே கூட அத்தங்காளைப் பற்றி உளறுகிறாளாம்!" என்றான் சூரியா.

இதிலிருந்து ராஜம்பேட்டையிலும் தேவபட்டணத்திலும் உள்ள பந்து ஜனங்களைப்பற்றி பேச்சு ஏற்பட்டுச் சிறிது நேரம் நடந்தது. "சூரியா! ஹரிபுராவுக்கு நீ பம்பாய் வழியாகப் போயிருக்கலாமே? டில்லி வழியாக வந்தது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் அல்லவா இருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "உங்கள் தாயாரிடம் நான் வடக்கே போகப் போவதாகச் சொன்னேன். 'எங்களை டில்லியில் கொண்டு விட்டு விட்டுப் போயேன்' என்று சொன்னார் அதனால்தான் வந்தேன்!" "நான் என்னத்தைக் கண்டேன்? வடக்கே என்றால் டில்லிக்குப் பக்கத்திலே இருக்கும் என்று நினைத்தேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இங்கே உள்ளவர்களும் அப்படித்தான் மதராஸ்காரன் என்றால் இராமேஸ்வரத்தைப் பற்றி விசாரிப்பார்கள். சென்னை மாகாணம் முழுவதும் இராமேசுவரத்துக்குப் பத்து மைல் சுற்றளவில் இருப்பதாக இவர்களுக்கு எண்ணம்!" என்றான் ராகவன். "ராமேஸ்வரம் என்றதும் ஞாபகம் வருகிறது. ஏண்டா, அப்பா ராகவா! என்னைக் காசிக்கு எப்போ அழைத்துக் கொண்டு போகிறாய்?" என்று காமாட்சியம்மாள் கேட்டாள். "ஆகட்டும், ஆகட்டும் மெள்ள மெள்ளப் பார்க்கலாம். முதலில் டில்லியைப் பார்த்து வைப்போம். நாளைக்கு உங்களை எல்லாம் அழைத்துப் போய் டில்லி நகரத்தைச் சுற்றி காட்டலாம் என்று எண்ணி யிருக்கிறேன்." "சூரியா! நீ டில்லியைச் சுற்றிப் பார்த்திருக்கிறாயா?" என்று சீதா கேட்டாள். "இன்னும் பார்க்கவில்லை, நாளைக்குத்தான் சுற்றிப் பார்க்கலாமென்று திட்டம் போட்டிருக்கிறேன்." "பழம் நழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. எங்களுடன் நீயும் வந்து சேர்ந்துகொள்! பேச்சாவது சுவாரஸ்யமாயிருக்கும்!" என்றான் ராகவன்.

அன்றிரவு சீதா ஒரே உற்சாகமாக இருந்தாள். சூரியாவிடம் ராகவனுக்கு இருந்த அலட்சிய பாவமும் வெறுப்பும் நீங்கி அவனுடன் சுமுகமாகப் பேசியதையும் அவனை டில்லி சுற்றிப் பார்க்க வரும்படி அழைத்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்தாள். தூங்குவதற்கு முன்னால் அவள், சாலை முனையில் பார்த்த ஸ்திரீயைப் பற்றி ராகவனிடம் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தாள். ஆகையால், "இன்றைக்கு ஒரு பொம்மனாட்டியைப் பார்த்தோமே!..." என்று ஆரம்பித்தாள். "மறுபடியும் உன் பொம்மனாட்டி கதையை ஆரம்பித்து விட்டாயா?" என்றான் ராகவன். அப்போது சீதாவின் மனத்தில் இருந்த ஸ்திரீ வேறு; ராகவன் எண்ணிக்கொண்ட ஸ்திரீ வேறு. ஆனாலும் ராகவன் அவ்விதம் வெடுக்கென்று பேசியதும் சீதா சிறிது தயங்கி தனக்குள் சிந்தித்துப் பார்த்தாள். 'சந்தோஷமா இருக்கிற சமயத்தில் வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பேசித் தொந்தரவை விலைக்கு வாங்கிக் கொள்வானேன்?' என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டாள். எனினும் அவளுடைய மனதிலிருந்து கையில் கத்தியுடன் சாலை முனையில் நின்ற ஸ்திரீயின் தோற்றத்தை அடியோடு அகற்ற முடியவில்லை.
 
ஆறாம் அத்தியாயம்

பாதிக் கல்யாணம்

"வெள்ளைக்காரன் ரொம்பக் கெட்டிக்காரன் என்றல்லவா இத்தனை நாள் எண்ணிக் கொண்டிருந்தேன்? அவனிடத்தில் அசட்டுத்தனம் இருக்கிறது! இல்லாவிட்டால் எங்கே பார்த்தாலும் பாழும் கோட்டையும், மயானமும் மசூதியுமாயிருக்கும் இந்த ஊருக்குத் தலைநகரத்தைக் கொண்டு வருவானா? சிவனே என்று கல்கத்தாவிலேயே இருக்கக் கூடாதோ?" இவ்விதம் டில்லியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது காமாட்சி அம்மாள் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள். "என்ன, அம்மா, இப்படிச் சொல்கிறீர்களே? செங்கோட்டையிலே பார்த்தோமே ஷாஜஹானின் அரண்மனை? அது ஒன்று போதாதோ? என்ன அழகு! என்ன அழகு! இந்த டில்லி அரண்மனையே இவ்வளவு அழகாயிருக்கிறதே! இன்னும் ஆக்ரா அரண்மனையும் தாஜ்மகாலும் எப்படியிருக்குமோ?" என்றாள் சீதா. "எனக்கு மோத்தாகார் வாந்தாம்! தோங்கா வந்திதான் வேணும். சூரியா மாமா! என்னை நேத்திக்குத் தோங்காவிலே ஏத்திந்து போதயா?" என்றாள் வஸந்தி. ஹிந்தி பாஷையில் உள்ளது போல், வஸந்தியின் மழலை மொழியிலும் நேற்றும் நாளையும் ஒன்றாக இருந்தன. "ஆகட்டும் வஸந்தி! உன்னை டோங்கா வண்டியில் நேற்றைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்; நாளைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்!" என்றான் சூரியா.

எல்லோரும் வீட்டுக்குள் பிரவேசித்து ஹாலில் போட்டிருந்த சோபாக்களில் உட்கார்ந்தார்கள். "இங்கிலீஷ்காரன் ஏதோ தெரியாத்தனமாய் டில்லிக்கு வந்து விட்டான். இங்கிலீஷ்காரனை விரட்டி விட்டுச் சுயராஜ்யம் ஆளவேண்டும் என்று சொல்லும் சூரியா கூட இந்த ஊருக்கே வந்து சேர்ந்திருக்கானே, அம்மா! இந்த வேடிக்கைக்கு என்ன சொல்லுகிறது?" என்றான் ராகவன். "இங்கிலீஷ்காரனை விரட்டுகிறதற்கு வேறு எங்கே போகிறது. அவன் இருக்கிற இடத்துக்குத்தானே வரவேண்டும்?" என்று சூரியா கேட்டான். "அப்படியென்றால் நீ அதற்காகத்தான் டில்லிக்கு வந்திருக்கிறாய் என்று சொல்லு; இங்கிலீஷ்காரனை விரட்டிஅடிக்கப் போவது நிச்சயந்தானாக்கும்!" என்றான் ராகவன். "நாம்தான் இன்றைக்குப் பார்த்து விட்டு வந்தோமே; கோரிமுகம்மது காலத்திலிருந்து எத்தனை ராஜ்யங்கள் இந்த டில்லியில் இருந்திருக்கின்றன? அவை எல்லாம் போனது போல் இங்கிலீஷ் ராஜ்யமும் போக வேண் டியது தானே? இங்கிலீஷ்காரன் மட்டும் இங்கே சாசுவதமா இருக்கப் போகிறானோ?" என்றான் சூரியா. "யார் கண்டது இந்தப் பாழடைந்த பட்டணத்திலேதான் இருக்க வேண்டும் என்பது இங்கிலீஷ்காரனுடைய தலைவிதியாயிருந்தால்?" என்றாள் காமாட்சி அம்மாள்.

"ஏன், அம்மா! இப்படி டில்லியைப் பற்றிக் குறை சொல்கிறீர்களே? பிரிதிவிராஜனுடைய கோயிலும் அரண்மனையும் இருந்த இடம் எவ்வளவு நன்றாயிருந்தது? எனக்கு அந்த இடத்தை விட்டு வருகிறதற்கு மனதே இல்லை!" "சிவ சிவா! கோயிலை இடித்து மசூதி கட்டியிருக்கிறது! அதைப் பார்க்கிறதற்கு என்னை வேறே அழைத்துக்கொண்டு போய் விட்டீர்கள். இந்த ஊரைப் பார்த்த பாவம் காசிக்குப் போய்க் கங்கையிலே ஸ்நானம் பண்ணினால்தான் தீரும்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இந்த ஊரில் யமுனை இருக்கிறதே, மாமி! யமுனையும் புண்ணிய நதிதானே? யமுனையில் ஸ்நானம் செய்தால் பாவம் போய்விடாதோ?" என்றான் சூரியா. "அதென்னமோ, இந்த ஊரில் யமுனை, யமுனையாகவே எனக்குத் தோன்றவில்லை. பாகவதத்திலே சொல்லியிருக்கிற யமுனை நதி இதுதான் என்றா சொல்கிறாய்?" "சாக்ஷாத் அந்த யமுனையேதான் இது; பின்னே எப்படியிருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? யமுனைக் கரையில் கடம்ப மரத்தின் கீழே நின்று கிருஷ்ண பகவான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தீர்களோ? அது துவாபரயுகம், இது கலியுகம்" என்றான் ராகவன்.

"கலியுகம் என்றுதான் நன்றாய்த் தெரிகிறதே! அடாடா! உன் தகப்பனார் பாகவதம் தசமஸ்கந்தத்திலிருந்து படித்துக் காட்டி அர்த்தம் சொல்வார். யமுனையில் கிருஷ்ண பகவானும் கோபிகா ஸ்திரீகளும் நம் கண் முன்னால் நிற்பதுபோல் இருக்கும். கிருஷ்ணனும் கோபிகைகளும் வேண்டாம். கிருஷ்ணன் மேய்த்த பசு மாட்டைக் கூடக் காணோமே. மந்தை மந்தையாய் எருமை மாடு யமுனையில் விழுந்து கிடக்கிறதே?" "கிருஷ்ணன் பசு மாடு மட்டுந்தான் மேய்த்தாரோ, எருமை மாடும் சேர்த்து மேய்த்தாரோ! நமக்கு எப்படி நிச்சயமாய்த் தெரியும்?" என்று ராகவன் சொன்னான். "கிருஷ்ணன் ஒருநாளும் எருமை மாடு மேய்த்திருக்க மாட்டார். பசு மாடு தான் மேய்த்திருப்பார்? பாகவதத்தில் சொல்லியிருப்பதெல்லாம் பொய்யா இருக்குமா!" "ஒருவேளை பாகவதத்தில் வரும் கிருஷ்ண பகவான் பசு மாடு மேய்த்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் சினிமாக்களில் வரும் கிருஷ்ண பரமாத்மாக்கள் எருமை மேய்க்கத்தான் லாயக்கானவர்கள்!"

"சினிமாவும் கினிமாவும் நான் என்னத்தைக் கண்டேன்?.. அது எப்படியாவது இருக்கட்டும் என்னைக் காசிக்கு எப்போது அழைத்துக் கொண்டு போகிறாய், ராகவா!" "காசிக்குப் போனால் இதைவிட அதிகமாய்க் குறை சொல்லுவீர்கள்! கங்கை நதி கூடப் பார்க்கிறதற்கு ஒரு மாதிரியாகவே இருக்கும்? நம்ம காவேரி தீரத்தைப்போல் இரண்டு பக்கமும் ஒரே சோலையாயிருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!" "ஏன் ஸார்! காசிக்குப் போவது இருக்கட்டும்! ஆக்ராவுக்கு எப்போது போகிறது?" என்று சீதா கேட்டாள். "ஆக்ராவைப் பார்க்காவிட்டால் நீ தூங்கமாட்டாய் போலிருக்கிறது. வருகிற பௌர்ணமியன்று போகலாம். சூரியா! நீயும் வருகிறாய் அல்லவா!" என்றான் ராகவன். "கட்டாயம் வருகிறேன் எங்கே நீங்கள் என்னைக் கூப்பிடாமல் இருந்து விடுவீர்களோ என்று என்னுடைய நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொண்டிருக்கிறது!" என்றான் சூரியா. அன்று டில்லியைப் பார்க்கச் சூரியாவையும் அழைத்துக் கொண்டு சென்றது ராகவனுக்குச் சில விஷயங்களில் மிகவும் சௌகரியமாயிருந்தது. சீதா தன்னையே எல்லாக் கேள்விகளும் கேட்பதற்குப் பதிலாக மாற்றி மாற்றிச் சூரியாவையும் சில கேள்வி கேட்டாள். மிக உற்சாகமாகச் சூரியா பதில் சொல்லிக் கொண்டு வந்தான். வேடிக்கை பார்க்கப் போகும் இடங்களில் ஸ்திரீகளுடன் பேசுவதற்கும் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதற்கும் ஒரு தனிப் பொறுமையும் சாமர்த்தியமும் வேண்டும். ராகவனுக்கு அந்த ஆற்றல் இல்லை; சூரியாவுக்கு இருந்தது. இது ராகவனுக்கு மிகவும் சௌகரியமாயிற்று.

பழைய அரண்மனையையோ, மசூதியையோ, கோட்டையையோ, பார்க்கப் போனால், ராகவன் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, "நீங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!" என்று சொல்லிவிடுவான். அவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் இவன் தன்னுடைய தனிப்பட்ட சிந்தனைகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டிருப்பான். அப்படித் தனிப்படச் சிந்தனை செய்வதற்கு என்ன இருந்தது என்று கேட்டால், ஆம், ஒரு விஷயம் இருக்கத்தான் இருந்தது. அந்த இடங்களுக்கெல்லாம் முன்னொரு சமயம் யாரை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தானோ, அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனைதான்! அன்றைக்கு டில்லி ரயில்வே நிலையத் தில் தான் பார்த்தவள் தாரிணியா, இல்லையா? இல்லையென்றால், அவ்வளவு தத்ரூபமாகத் தாரிணியைப் போலவே எப்படி உருவம் பெற்றிருக்க முடியும்? இரண்டு பெண்களுக்குள் அவ்வளவு அபூர்வமான உருவ ஒற்றுமை இருக்க முடியுமா? தாரிணியாக இருந்தால், அவள் இறந்த செய்தி பொய்யாகத் தானே இருக்க வேண்டும்? தாரிணியாகவே இருக்கட்டும், அல்லது அவளைப் போல அபூர்வ உருவ ஒற்றுமையுள்ளவளாக இருக்கட்டும். அந்தப் பெண்ணை மறுபடியும் ஒரு தடவை சந்தித்து விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டாலன்றித் தனக்கு மனநிம்மதி ஏற்படாது என்று ராகவனுக்குத் தோன்றியது. ஆனால் அவளை எப்படிச் சந்திப்பது? எங்கேயென்று தேடுவது? ஆக்ரா பக்கம் போகும் பாசஞ்சர் ரயிலிலேதான் அவள் ஏறியிருந்தாள் என்பது ராகவனுடைய நினைவில் இருந்தது. ஒருவேளை ஆக்ராவிலேயே அவள் இருந்தாலும் இருக்கலாம். அல்லது ஆக்ரா போகும் போது வழியில் எங்கேயாவது அவளைச் சந்திக்கலாம். யார் கண்டது? உலகத்தில் இதைக்காட்டிலும் அதிசயமான எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கவில்லையா? இம்மாதிரியான பற்பல நோக்கங்களுடனே ராகவன் அடுத்த பௌர்ணமியன்று ஆக்ராவுக்குப் போவதென்று திட்டம் போட்டான்.

சூரியா வருகிறதாகச் சொன்னதும், "நீங்களும் வருகிறீர்களா அம்மா?" என்று ராகவன் கேட்க, "போதும்! போதும்! இன்றைக்குப் பார்த்தது ஏழு ஜன்மத்துக்குப் போதும்! பிருந்தாவனம், வடமதுரை, காசி இப்படிப் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போவதானால் சொல்லு! வருகிறேன். பாழும் கோட்டையையும், இடிந்த மசூதியையும் பார்க்கப் போவதாயிருந்தால் நான் வரவில்லை! குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறேன்" என்றாள் காமாட்சி அம்மாள். "ரொம்ப சரி! நானும் அம்மாதிரிதான் எண்ணினேன். இந்தத் தடவை நாங்கள் ஆக்ராவுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுகிறோம். அப்புறம் ஒரு தடவை சூரியாவையும் உங்களையும் சேர்த்து க்ஷேத்திர யாத்திரைக்கு அனுப்பி விடுகிறேன். ஏன், சூரியா! என்ன சொல்லுகிறாய்? அம்மாவை அழைத்துக் கொண்டு போய் வருகிறாயா?" என்று ராகவன் கேட்டான். "அதற்கென்ன ஆட்சேபணை? இந்தியாவின் புராதன க்ஷேத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆசை எனக்கும் இருக்கிறது. மாமியைப் போல் பக்தியுள்ளவர்களை அழைத்துப் போகக் கொடுத்து வைக்க வேண்டாமா?" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டான். அவன் போன பிறகு, "ராகவா! சூரியா தங்கமான பிள்ளை, எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது; என் தங்கை பெண் அம்புஜத்துக்கு இரண்டு வருஷமாய் வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களே? நம்ம சூரியாவுக்குக் கொடுத்தால் என்ன?" என்றாள் காமாட்சி அம்மாள். "கொடுத்தால் என்ன? திவ்யமாகக் கொடுக்கலாம். நீங்கள் எப்போது தீர்மானித்து விட்டீர்களோ, அப்போது பாதி கலியாணம் நடந்தது போலத்தான்! சூரியா சம்மதித்தால் பாக்கிப் பாதி கலியாணம் செய்துவிடலாம்."

"எல்லாம் தானே சம்மதித்துவிடுகிறான்; அம்புஜத்துக்கு என்ன குறைச்சல்? கொஞ்சம் கறுப்பாயிருந்தாலும் முகத்தில் நல்ல களை. சூரியாதான் காங்கிரசில் சேர்ந்தவனாயிற்றே! அவன் அப்படியெல்லாம் ஒன்றும் தகராறு பண்ணமாட்டான்." "சூரியா சம்மதித் தால் எனக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை. நான் குறுக்கே நிற்கவில்லை தாராளமாக அம்புஜத்தைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணி வையுங்கள்!" "நம்ம சீதாவும் கொஞ்சம் என்னுடன் சேர்ந்து சொன்னால் சூரியா சம்மதித்து விடுவான்" என்றாள் காமாட்சி அம்மாள். "அதென்னவோ, அம்மா! சூரியாவுக்குக் கலியாணப் பேச்சு அவ்வளவு பிடிக்கவில்லைபோல் தோன்றுகிறது. சூரியாவின் அம்மா யாரோ ஒரு பெண்ணை அவனுக்குப் பார்த்திருந்தாளாம். அது பிடிக்காமல் தான் சூரியா வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான் என்று பிரஸ்தாபம். என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தை மட்டும் அவரவர்களுக்கே விட்டு விடுவது நல்லது என்பேன். தாயார் தகப்பனார் தலையிடவே கூடாது. இஷ்டப் பட்டவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்குத் தடை செய்யவும் கூடாது; இஷ்டப்படாதவர்களைக் கலியாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவும் கூடாது. அப்படி வற்புறுத்துகிற தாயார் தகப்பனாரைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விட வேண்டும்!" என்று சீதா ஆத்திரமாகப் பேசினாள். இவ்விதம் சீதா கூறியது இது இரண்டாவது தடவை. அதைக் கேட்டு காமாட்சி அம்மாளின் முகம் சுருங்குவதை ராகவன் கவனித்தான்.
 

New Threads

Top Bottom