Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

பன்னிரண்டாம் அத்தியாயம்

சரித்திர நிபுணர்

"ஸ்ரீமதி தாரிணி தேவி அவர்களுக்கு; இன்று தாஜ்மகாலில் என்னால் தங்களுக்கு நேர்ந்த இன்னலைக் குறித்து வருந்துகிறேன். தங்கள் நெற்றியில் காயப்படுத்தி இரத்தம் வருவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அணுவளவும் இருந்ததில்லை. அத்தகைய சந்தேகம் தாங்களும் கொண்டிருக்க மாட்டீர்கள். பேசும்போது உணர்ச்சி வேகத்தினால் தூண்டப்பட்டுக் கையிலிருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தேன். அது சுக்குநூறாயிற்று; இதைப் பற்றி நான் வருந்தவில்லை. அசல் தாஜ்மகாலும் ஏதேனும் ஒரு காரணத்தினால் இம்மாதிரி நொறுங்கிப் போயிருந்தாலும் அதற்காக நான் சிறிதும் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். யாரோ ஒரு மௌடீகக் கிழவனுடைய கையில் இந்தப் பெரிய தேசம் ஒரு காலத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. வயோதிகத்தினால் அறிவு மங்கி வந்த நாளில், அந்த அரசன் காதல் என்னும் மூடப்பிரமை காரணமாக ஒரு பெரிய பொம்மை செய்தான். செத்துப்போன தன்னுடைய காதலியின் ஆத்ம திருப்திக்காக என்றெண்ணிக் கோடி கோடி ரூபாய்ச் செலவிட்டு அந்தப் பொம்மையைச் செய்தான். இதைத் தான் 'தாஜ்மகால்' என்னும் உலக மகா அதிசயங்களில் ஒன்று என்பதாக அறிவற்ற சிந்தனா சக்தியில்லாத, மனித மந்தைகள் ஆச்சர்யத் துடன் பார்க்கின்றன; வியந்து கொக்கரிக்கின்றன! இது என்னுடைய உறுதியான அபிப்பிராயம்.

ஆனால் எப்போதோ இருந்து இறந்துபோன கிழவன் ஷாஜஹான் தாஜ்மகால் கட்டியதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் பேரில் எனக்குக் கோபம் கிடையாது. கோபம் காரணமாக வேண்டுமென்று அந்தப் பொம்மைத் தாஜ்மகாலை நான் எறியவில்லை. அதன் துகள் தங்கள் நெற்றியில் பட்டுக் காயமாகும் என்றாவது, இரத்தம் வரும் என்றாவது கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. இப்படி எதிர்பாராமல் நேர்ந்த காரியத்திற்காக மறுபடியும் தங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். ஆனால் இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் இன்னொரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். தங்களைக் காயப்படுத்த விரும்பவில்லையென்று சொன்னேனல்லவா? ஆனால் தங்களுடைய நெற்றியில் ஒரு சிறு காயம் பட்டுவிட்டதற்காக அப்படித் தங்களைச் சூழ்ந்து கொண்டு, 'ஆ ஹூ' என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களே, அவர்களை எல்லாம் தலையில் இரண்டு குட்டுக் குட்டிக் கன்னத்திலும் இரண்டு அறை கொடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது! என் கையில் பிரம்பு இருந்தால் தலைக்கு நாலு அடி முதுகில் கொடுத்து இழுத்து அப்பால் விட்டிருப்பேன். அறிவற்ற நிர்மூடர்கள்! ஒரு சின்ன விஷயத்துக்கு எத்தனை கூச்சல்? எத்தனை குழப்பம்? எவ்வளவு ஆர்ப்பாட்டம்? பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்குள்ளே இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ மகத்தான கஷ்டங்களைச் சகித்தாக வேண்டும்; லட்சக் கணக்கான ஜனங்கள் உயிரைப் பலி கொடுத்தாக வேண்டும்; கண்ணைத் திறந்து கொண்டு நெருப்பிலே குதித்தாக வேண்டும். சுதந்திரமடைந் திருக்கும் வெளி நாடுகளைப் பாருங்கள்!

நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போர் புரிந்து எத்தனை பேர் கையிழந்தும், காலிழந்தும் கண்ணிழந்தும் அங்கஹீனர்களாக வாழ்நாள் முழுவதும் காலம் கழிக்கிறார்கள். முகமெல்லாம் பயங்கரமான காயங்களின் அடையாளங்களுடன் எத்தனை பேர் உயிர் வாழ்கிறார்கள்? இந்த நாட்டில் நாமோ ஒரு நெற்றிக் காயத்திற்காக ஒரு துளி ரத்தம் வந்துவிட்டதற்காக இவ்வளவு தடபுடல் படுத்துகிறோம்! இப்படிப்பட்ட கோழைகளையும் பயங்கொள்ளிகளையும் 'ஹிஸ்டீரியா' நோயாளிகளையும் வைத்துக்கொண்டு இந்தப் பாரததேசம் எப்படித்தான் சுதந்திரம் அடையப் போகிறதோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். இந்த வீரபூமியில் நம்முடைய முன்னோர்கள் இப்படியெல்லாம் இருக்கவில்லை. வீர இராஜபுத்திர நாட்டுக்கு நாளை நீங்கள் போவீர்கள். அங்கே எத்தகைய வீர புருஷர்களும் வீர வனிதைகளும் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள்! 'கோட்டை விழுந்து விட்டது; எதிரிகள் உள்ளே புகுந்து விட்டார்கள்!" என்று கேட்டதும், தயாராக வளர்த்து வைத்திருந்த பெருந்தீயில் நூற்றுக்கணக்கான நாரீமணிகள் விழுந்து உயிரை விட்ட நாடல்லவா இது! ராணாடங்கிராமசிங் என்று ஒரு மகாவீரன் இருந்தான். அவனுடைய தேகத்தில் போர்க்களத்திலே பெற்ற தொண்ணூற்றாறு காயங்களின் வடுக்கள் இருந்தனவாம்! முத்துக்களும் ரத்தினங்களும் பதித்த ஆபரணங்களைக் காட்டிலும் அந்தக் காயங்களின் வடுக்களையே சிறந்த பூஷணமாக அந்த மகாவீரன் கருதினானாம். அப்படிப்பட்ட வீரர்கள் வாழ்ந்த தேசத்தில் இன்றைக்கு ஒரு சிறு காயம் நம்மையெல்லாம் நிலை கலங்கச் செய்துவிடுகிறது. பெண்களை மட்டுமல்ல; புருஷர் களைக்கூட 'ஹிஸ்டீரியா' வுக்கு உள்ளாக்கி விடுகிறது! இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்; எங்கள் நாட்டுக் கவி 'நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாரதியார் பாடல் சீதாவுக்குத் தெரியும்; பாடச் சொல்லிக் கேளுங்கள். இங்ஙனம், சூரியா.

இந்தக் கடிதத்தை ஆக்ராவிலிருந்து ரஜினிப்பூருக்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் வைத்துத் தாரிணி படித்துக் கொண்டிருந்தாள். ஒரு தடவை படித்து இரண்டாந் தடவையும் படித்து விட்டு அந்தக் கடிதத்தைத் தன்னுடைய கைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினாள். இதைப் பார்த்த ராகவன், "கடிதத்தை இவ்வளவு பத்திரமாய் வைத்துப் பூட்டுகிறீர்களே? அது என்ன காதல் கடிதமா?" என்று கேட்டான். "பிதற்றல்!" என்றாள் தாரிணி; ராகவனுடைய கேள்வியைப் பற்றி மேற்கண்ட அபிப்பிராயத்தை அவள் தெரிவித்தாள். ஆனால் ராகவன் அதைத் தெரிந்து கொள்ளாததுபோல், "பிதற்றலைப் பெட்டியில் வைத்துப் பூட்டுவானேன்!" என்றான். அன்று காலையில் தாரிணியும் அவள் தோழியும் வந்து ரயில் ஏறியபோது எற்கெனவே வண்டியில் ராகவனும் சீதாவும் மட்டும் ஏறியிருப்பதைக் கவனித்தார்கள். தாரிணியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது "சூரியா எங்கே?" என்றாள். "அவன் வரவில்லை டில்லிக்குப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன். "நேற்றிரவுச் சம்பவத்துக்காக அவரைச் சண்டை பிடித்துத் துரத்தி விட்டீர்களா, என்ன!" என்று தாரிணி கேட்டாள். "நாங்கள் ஒன்றும் சண்டை பிடிக்கவில்லை. அவனுக்கே அவமானமாயிருந்தது போலிருக்கிறது. பிடிவாதமாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்!" என்றான் ராகவன். சீதா தன்னுடைய அம்மாஞ்சியின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டி, " அவனுக்கு ஏதோ அவசர ஜோலியாம். ஆக்ராவுக்கு மட்டும் வருவதாகத்தான் முன்னே சொல்லியிருந்தான். உங்களுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் கூட கொடுத்திருக்கிறான்?" என்று கூறினாள். பிறகு தன் கணவனைப் பார்த்து, "கடிதத்தை அவரிடம் கொடுங்களேன்!" என்றாள். "வண்டி புறப்படட்டும்; இப்போது என்ன அவசரம் அந்தக் கடிதத்திற்கு?" என்றான் ராகவன். தாரிணி, "மன்னிப்பாவது, கடிதமாவது? ஒரு சின்ன விஷயத்துக்காக நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவரைச் சண்டை பிடித்துத் துரத்திவிட்டீர்கள். எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கிறது" என்றாள்.

இது சீதாவுக்குத் திருப்தியாயிருந்தது, ஆனால் ராகவன் கோபமாக, "சின்ன விஷயமா அது! நெற்றியில் பட்டதுபோல் கண்ணில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இருந்தாலும், மனிதராய்ப் பிறந்தவர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது?" என்றான். அவனுடைய அபிப்பிராயத்தை நிருபமா ஆதரித்து, "ஆமாம்; அந்தப் பையன் சுத்தப் பட்டிக் காடாகத்தான் நடந்து கொண்டான்!" என்றாள். "பட்டணங்களில் உள்ளவர்கள் ரொம்ப நாகரிகமாக நடந்து கொள்வதாக உங்களுடைய எண்ணம் போலிருக்கிறது. பட்டணங்களில் வசிப்பவர்கள் எப்படிச் சில சமயம் புலி கரடிகளாகவும், பேய் பிசாசுகளாகவும் மாறு கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!" என்றாள் தாரிணி. வண்டி புறப்பட்டுச் சற்று நேரத்துக்கெல்லாம், "அந்தக் கடிதம் எங்கே?" என்று தாரிணி கேட்டாள். "ஏது? ஏது? அதைப் பார்க்காவிட்டால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படாது போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். "அது என்ன காதல் கடிதமா?" என்று ராகவன் கேலியாகப் பேசியபோது, அவர்கள் எல்லாருக்கும் கடிதத்தை முழுவதும் படித்துக் காட்டிவிட வேண்டும் என்று தாரிணிக்குத் தோன்றியது. மறுகணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அந்தக் கடிதத்தில் அடங்கியுள்ள விஷயங்களை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். மேலும் ஏதாவது பரிகாசமாகப் பேசுவார்கள். இவ்விதம் எண்ணிச் சீதாவைப் பார்த்து, "நீங்கள் மறுபடியும் உங்கள் அம்மாஞ்சியைப் பார்க்கும் போது, 'இவ்வளவு நீளமான மன்னிப்புக் கடிதத்துக்கு அவசியமே இல்லை' என்று நான் சொன்னதாக அவரிடம் தெரியப்படுத்துங்கள்! என்றாள்.

ஆயிரம் ஆண்டுகளாக வீர புருஷர்களின் இரத்தமும் தீர மாதரசிகளின் கண்ணீரும் சிந்திப் புனிதமான இராஜபுத்திர நாட்டுக்குள் அவர்கள் ஏறியிருந்த ரயில் வண்டி பிரவேசித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வறண்ட பூமி; அல்லது மொட்டைப் பாறைகள்; ஆங்காங்கே இடிந்த கோட்டைச் சுவர்கள்; சிதைந்த மண்டபங்கள்; பாழடைந்த மசூதிகள்; பசுமை என்பதையே பார்க்க முடியவில்லை அடர்த்தியான காடுகள் இல்லை; பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற நெல் வயல்கள் இல்லை; பொன்னிறம் கொண்ட கோதுமைப் பயிர்களும் இல்லை; சிற்சில இடங்களில் தானாக மண்டிய முட்புதர்கள் மட்டும் காணப்பட்டன. "நாம் போகிற வழி நெடுகிலும் இப்படித்தான் இருக்குமா?" என்று சீதா கேட்டாள். "இல்லை; ரஜினிபூர் சேர்ந்துவிட்டால் வேறு விதமாயிருக்கும். ஆனால் அங்கே போய்ச் சேருகிற வரையில் இந்த லட்சணந்தான். 'சுதந்திரம், சுதந்திரம்' என்று அடித்துக் கொள்ளுகிறார்களே; இராஜபுத்திர வீரர்கள் அந்த நாளில் சுதந்திரத்துக்காகப் போரிட்டதன் பலன்தான் இது! இராஜஸ்தானத்தில் பெரும் பகுதி பாலைவனமாகப் போய்விட்டது!" என்று ராகவன் சொன்னான். "இராஜபுத்திரர்கள் சுதந்திரத்துக்காகப் போரிட்டதனால் இராஜஸ்தானம் பாலைவனமாகவில்லை. ஒருவருக்கொருவர் சகோதரச் சண்டையிட்டதினால் இப்படியாயிற்று.

அண்ணன் சுதந்திரத்துக்காகச் சண்டை போட்டால் தம்பி எதிராளியோடு சேர்ந்து கொண்டான். எத்தனை ராஜபுத்திரர்கள் மொகலாயர்களுக்கு அடிமையாகி ஏவல் செய்து வாழ்ந்தார்கள்! இந்திய தேசம் நாசம் அடைந்தது சகோதரச் சண்டையினால்தான். இதில் வேடிக்கை என்னவென்றால், இவற்றை எல்லாம் சரித்திரத்தில் படித்திருந்தும் நமக்குப் புத்தி வந்தபாடில்லை. இன்னமும் சகோதரச் சண்டைகள் போட்டுக் கொண்டுதானிருக்கிறோம்" என்றாள் தாரிணி. "அம்மணி! நீங்கள் என்ன பெரிய சரித்திர நிபுணரைப் போல் பேசுகிறீர்களே!" என்று ராகவன் பரிகாசக் குரலில் கேட்டான். "என்ன சொன்னீர்கள்?" என்று சொல்லிவிட்டு நிருபமா இடியிடி என்று சிரித்தாள். அவளுடைய சிரிப்பின் காரணம் என்னவென்று விளங்காமல் ராகவன் திகைத்தான். "எதற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்றான். "என்ன சொன்னீர்கள்? 'பெரிய சரித்திர நிபுணரைப் போல்' என்றா? 'போல்' என்று சொன்னதற்காகத்தான் சிரித்தேன்" என்றாள் நிருபமா. "அப்படிப் 'போல்' என்ற வார்த்தையில் நகைச்சுவை என்ன இருக்கிறது? எனக்கு விளங்கவில்லையே?" "உங்களுக்கு விஷயம் தெரியாதென்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. தாரிணியைப் பழைய தேச சேவிகை தாரிணி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. பீஹார் பூகம்பத்துக்குப் பிறகு அவள் காலேஜில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று இப்போது யூனிவர்சிடி உதவிச் சம்பளம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள். இது உங்களுக்குத் தெரியுமென்று எண்ணியிருந்தேன். பின்னே எதற்காக என்னையும் இழுத்துக்கொண்டு ஊர் ஊராக அலைகிறாள் என்று நினைத்தீர்கள்? தற்போது இராஜஸ்தானத்துச் சரித்திரத்தில் விசேஷ ஆராய்ச்சி நடைபெறுகிறது!"

நிருபமா இவ்விதம் சொன்னதும் ராகவனுடைய உள்ளம் ஒரே ஒரு நிமிஷத்தில் என்னவெல்லாமோ கற்பனை செய்யத் தொடங்கியது. ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். ஆஹா! படிப்பின் மேல் உள்ள ஆசையினால் அல்லவா இவள் கலியாணத்தை வெறுத்திருக்கிறாள்? இந்த உண்மையை நம்மிடம் முன்னமேயே தெரிவித்திருக்கக் கூடாதா? தெரிவித்திருந்தால் இவளுடைய படிப்புக்கு நாம் குறுக்கே நின்றிருப்போமா? என்று அவன் மனம் எண்ணமிட்டது. தாரிணி பி.ஏ. பட்டம் பெற்றுச் சரித்திர ஆராய்ச்சி செய்து வருகிறாள் என்னும் செய்தியைச் சொல்லிவிட்டு நிருபமா படுத்துத் தூங்கிப் போனாள். தாரிணியிடம் அவளுடைய காலேஜ் வாழ்க்கையைப் பற்றி ராகவன் பல கேள்விகள் கேட்டான். அவளோ பாரா முகத்துடன் ஏனோதானோவென்று பதில் சொல்லி வந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் ராகவனும் தூங்கிவிட்டான். பிறகு தாரிணி சீதாவின் அருகில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "உங்கள் அம்மாஞ்சி சூரியாவைப் பற்றிச் சொல்லுங்கள், அவர் எப்போதுமே இப்படித்தான் படபடப்பாயிருப்பாரா? என்று கேட்டாள். முந்தைய சம்பாஷைணையின் போதெல்லாம் சீதாவுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் கோபம் வளர்ந்து வந்தது. முதல் நாள் தாரிணியைச் சந்தித்தது முதல், நிருபமா - தாரிணி சம்பாஷணைகளைக் கேட்டதிலிருந்தும் தன்னுடைய சொந்த ஊகத்தினாலும் அவள் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்தாள். ராகவனும் தாரிணியும் பழைய சிநேகிதர்கள் என்பது நிச்சயம். பத்மாபுரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசிய வம்புப் பேச்சுகளில் ஏதோ உண்மை இருக்கத்தான் வேண்டும். ராகவனுக்குத் தாரிணியின் மேல் இன்னும் அபிமானம் இருந்தது என்பதும் ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது. தான் இருக்கும்போது இதையெல்லாம் அவர்கள் காட்டிக் கொள்ளாததை நினைத்து நெஞ்சம் கொதித்தது. சீச்சீ! என்ன வெட்கங்கெட்ட ஸ்திரீ இவள்!

நம்மை எதற்காக இப்படித் தொடர்ந்து வருகிறாள்? வேறு எங்கேயாவது போய்த் தொலைவதுதானே? சூரியாவும் நிருபமாவின் கணவனும் இந்தக் கோஷ்டியில் சேர்ந்து கூட்டமாக இருந்தபோது ஒரு மாதிரி கலகலப்பாக இருந்தது. இப்போது அவர்களும் இல்லை; அதனால் கலகலப்பும் இல்லை. இந்த மாதிரி நேரும் என்று தெரிந்திருந்தால், இந்தப் பிரயாணத்துக்கு வரவில்லையென்றே சொல்லியிருக்கலாம். இப்பொழுதுதான் என்ன 'அவள் வந்தால் நான் வரவில்லை; அவளையே அழைத்துக்கொண்டு போங்கள். நான் டில்லிக்குத் திரும்பிப் போகிறேன்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டியதுதான்... இவ்விதம் எண்ணி எண்ணிப் பலமுறை பேசுவதற்குச் சீதாவின் உதடுகள் துடித்தன.ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. அப்படிச் சொன்னால் அதன் பலன் என்ன ஆகுமோ என்று உள்ளத்தின் ஒரு பகுதி அஞ்சியது.இத்தகைய மனோநிலையில் சீதா இருந்த போது தாரிணி அவளிடம் நெருங்கி உட்கார்ந்து, "சூரியாவைப் பற்றி சொல்லுங்கள்" என்றதும் சீதாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. "சூரியாவைப்பற்றி இப்போது என்ன விசாரணை வேண்டிக் கிடக்கிறது? என்னைப் போல் அவனும் ஓர் அசடு; அனாதை!" என்றாள். "சகோதரி! ஏன் இவ்வளவு வெறுப்பாகப் பேசுகிறாய்? என் நெற்றியில் காயப்படுத்தி விட்டதற்காகச் சூரியா ரொம்பவும் மனம் நொந்து எழுதியிருக்கிறார், உத்தம குணம் படைத்தவர். ஆனால் கொஞ்சம் படபடப்புக்காரர் என்று தோன்றுகிறது. காயம் சரியாய்ப் போய் விட்டது. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று உன்னிடம் சொல்லியனுப்ப விரும்பினேன். உனக்கு அவரைப் பற்றிப் பேச இஷ்டமில்லை யென்றால் வேண்டாம்!" என்றாள் தாரிணி.

இதைக் கேட்டதும் சீதாவின் மனம் மாறிவிட்டது. "இல்லை, இல்லை எனக்கு வெறுப்பு ஒன்றுமே இல்லை. சூரியா உத்தமமான பிள்ளைதான், அவ்வளவு ஒன்றும் படபடப்பாக அவன் பேசுவதும் கிடையாது. என் மாமா குடும்பத்திலேயே சூரியாதான் நிதானத்துக்கும் பொறுமைக்கும் பெயர் போனவன். நேற்று அவன் படபடப்பாகப் பேசியதும் தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்து உடைத்ததும் எனக்கே ஆச்சரியமாயிருந்தது. பாவம்! அவனுக்கு என்ன மனக் கஷ்டமோ? மொத்தத்தில் அதிர்ஷ்டக் கட்டை; இல்லாவிட்டால் இப்படிவந்து திண்டாடுவானேன்? படித்துப் பாஸ் செய்து எவ்வளவோ நல்ல நிலைமைக்கு வந்திருக்கலாம்!" என்றாள். "அதிர்ஷ்டக்கட்டை என்று எதனால் சொல்கிறாய்?" என்று தாரிணி கேட்க, சீதா கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியாவின் கதையைச் சொன்னாள். அவனுடைய தகப்பனார், தமையன், அம்மா, தங்கை ஆகியவர்களைப் பற்றி சொன்னாள். தமையனோடும் ஊராரோடும் அவனுக்கு நேர்ந்த தகராறுகளைப் பற்றியும் விரிவாகச் சொன்னாள். ஆனால் தன்னுடைய பிறப்பு, வளர்ப்பு, கலியாணம் இவற்றைக் குறித்து மட்டும் எதுவும் சொல்லவில்லை.
 
பதின்மூன்றாம் அத்தியாயம்

ரஜினிபூர் ஏரி

ரஜினிபூர் சமஸ்தானத்தின் திவான் ஸர்.கே.கே. ஆதிவராகாச்சாரியாருக்குப் புத்தி கூர்மையுள்ள வாலிபர்களிடம் பொதுவாக அபிமானம் உண்டு. சௌந்தரராகவன் இங்கிலாந்துக்குப் பிரயாணம் செய்தபோது கப்பலில் அவரைச் சந்தித்துப் பழக்கம் செய்து கொண்டான். ராகவனுடைய புத்தி கூர்மையும் சாதுர்யமான சம்பாஷணையும் திவான் ஆதிவராகாச்சாரியாரின் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அதோடு புதுடில்லி செகரட்டேரியட்டில் உத்தியோகம் பார்ப்பவர்களில் எத்தனை பேரைத் தெரிந்திருக்கிறதோ அவ்வளவுக்குப் புருஷார்த்தம் கைகூடுவது எளிதாகும் என்ற நம்பிக்கையும் ஸர் ஆதிவராகாச்சாரியாருக்கு இருந்தது. அவருக்குச் சந்தான பாக்கியத்தைப் பகவான் பரிபூரணமாக அளித்திருந்தார். பெரிய உத்தியோக பதவிகளை வகிக்கத் தகுந்தவர்களாக அவருக்குப் புதல்வர்களும் மாப்பிள்ளைகளும் பலர் இருந்தார்கள். இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்ததும் ரஜினிபூருக்கு ஒரு தடவை வரவேண்டும் என்றும், வரும்போது மனைவியையும் அழைத்து வரவேண்டும் என்றும் ஆதிவராகாச்சாரியார் சௌந்தரராகவனிடம் சொல்லியிருந்தார். அந்த அழைப்புக்கு இணங்க இப்போது சௌந்தரராகவன் சீதாவுடன் திவான் மாளிகைக்குச் சென்றான். தாரிணியும் அவளுடைய தோழியும் வேறு ஜாகைக்குச் சென்றார்கள். துரதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் திவான் ஆதிவராகாச்சாரியார் முக்கியமான ராஜாங்கக் காரியமாக வெளியூருக்குப் போயிருந்தார். எனினும் ராகவனுடைய தந்தியைப் பார்த்து விட்டு அவனையும் அவனுடைய மனைவி யையும் கவனித்துக் கொள்ளும்படியாகத் தம்முடைய புதல்விகளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அவர்கள் அவ்விதமே ராகவ னையும் சீதாவையும் வரவேற்றார்கள்.

ஆதிவராகாச்சாரியின் புதல்விகளான பாமா, தாமா இருவரும் இங்கிலாந்து சென்று திரும்பியவர்கள், ஆங்கில நாகரிகத்தில் முழுகியவர்கள். ஒருத்தி ஒல்லியாயும் உயரமாயும் இருந்தாள். இன்னொருத்தி குட்டையாயும் பருமனாயுமிருந்தாள். இரண்டு பேரும் தலை மயிரை 'பாப்' செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொண்டுதான் வெளியில் புறப்படுவார்கள். எப்பொழுதும் இங்கிலீஷில்தான் பேசுவார்கள். அதுவும், ஆங்கில நாவலாசிரியர் வோட் ஹவுஸின் கதாபாத்திரங்கள் பேசுகிற இங்கிலீஷ் நடையைக் கையாண்டு பேசுவார்கள். பியானோ வாத்தியத்தில் இங்கிலீஷ் சங்கீதம் வாசிக்கவும், "பால் ரூம் டான்ஸ்" ஆடவும் கற்றுக் கொண்டு திறமையும் பெற்றிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களிடையே அகப்பட்டுக் கொண்டு சீதா ரொம்பவும் விழித்தாள். அவர்கள் சீதாவிடம் முதலில் இங்கிலீஷில் ஏதாவது கேட்பார்கள். சீதா ஒன்றும் புரியாமல் திகைப்பதைக் கண்டு தட்டுத் தடுமாறித் தமிழில் அதையே சொல்வார்கள். அவர்கள் இங்கிலீஷ்காரி களைப்போல் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்துப் பேசியபடியால் சீதாவுக்குத் தெரிந்திருந்த கொஞ்சம் நஞ்சம் இங்கிலீஷும் அங்கே பயன்படவில்லை. ஆகையால் குளத்துத் தண்ணீரிலிருந்து எடுத்துக் கொதிக்கின்ற சட்டுவத்தில் போடப்பட்ட மீனைப் போல் சீதா அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டு தத்தளித்தாள்.

சீதாவுடன் பழகினதைக் காட்டிலும் ராகவனுடன் அவர்கள் சரளமாகப் பேசிப் பழகினார்கள். ராகவனும் அவர்களுடன் உற்சாகமாகப் பேசினான். அவன் அப்போது வீசிய நகைச்சுவைத் துணுக்குகளையும் ஹாஸ்ய சிலேடைகளையும் கேட்டு அவர்கள் இடி இடி என்று சிரித்தார்கள். இதெல்லாம் சீதாவுக்கு ஓரளவு அருவருப்பாயிருந்தாலும் அவளுக்குக் கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. அந்தப் பெண்கள் இருவரும் அவ்வளவு அழகாயில்லை என்பதுதான் இதற்குக் காரணமோ அல்லது அவர்கள் விஷயத்தில் ராகவனுக்குக் கொஞ்சமும் மதிப்புக் கிடையாது என்பது சீதாவின் உள்மனதுக்குத் தெரிந்ததோ, நாம் சொல்ல முடியாது. இடையிடையே சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ராகவன் சீதாவிடம் தனியாக அந்தப் பெண்களின் அவலட்சணத்தைப் பற்றியும் குரங்கு சேஷ்டைகளைப் பற்றியும் சொல்லி வந்தான். "ஆனாலும் இவர்களிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது நிரம்ப இருக்கிறது. புதுடில்லியில் சமூக வாழ்க்கை நடத்துவதற்குச் சிற்சில நடை உடை பாவனைகள் அவசியம்!" என்று ஒரு தடவை ராகவன் சொன்னான். "இவர்களிடம் நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டுமாம்? உதட்டில் சிவப்புப் பசை தடவிக் கொள்ளவா?" என்று சொல்லி விட்டுச் சீதா சிரித்தாள். "ஆமாம்; அதுகூடத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். 'லிப்ஸ்டிக்' உபயோகிப்பதில் பிசகு என்ன இருக்கிறது?

நம்முடைய நாட்டில் வெற்றிலை போட்டுக் கொள்ளவில்லையா? அதனால் உதடு சிவப்பதில்லையா? கதாநாயகிகளின் உதடுகளைப் பவழத்துக்கும் கோவைப் பழத்துக்கும் மாதுளை மொட்டுக்கும் ஒப்பிட்டுக் கவிகள் வர்ணித்தால் மட்டும் 'ஆஹா' என்று பிரமாதப்படுத்து கிறோமே?" என்றான் ராகவன். "அதெல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும்" என்றாள் சீதா. "இயற்கை யாவது, மண்ணாங்கட்டியாவது? இயற்கையாக இருந்தால் ஆப்பிரிக்கா தேசத்துக் காட்டுமிராண்டிகளைப் போல் இருக்க வேண்டி யதுதான். வகிடு எடுத்துத் தலை வாரிக் கொள்வதும், நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வதும், கண்ணுக்கு மை தீட்டிக் கொள்வதும், கைக்கு மருதாணி இட்டுக் கொள்வதும் இயற்கையா? காதிலும் மூக்கிலும் தொளையிட்டு நகை போட்டுக் கொள்வதுதான் இயற்கையா? எல்லாவித அழகும் அலங்காரமும் செயற்கையில் சேர்ந்ததுதான்!" என்று ராகவன் அடித்துப் பேசியபோது சீதாவினால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏதாவது சொல்லவேண்டுமே என்பதற்காக "அலங்காரத்துக்கும் ஒரு அளவு வேண்டும். தாரிணியைப் பாருங்கள்; அவளும் இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்றவள்தானே? அவள் 'லிப்ஸ்டிக்' தடவிக் கொள்கிறாளா?" என்று சொல்லி வைத்தாள். "சில பேருக்குப் பிறவியிலேயே அழகு உண்டு; அவர்கள் ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாவிட்டாலும் நன்றா யிருப்பார்கள். அந்த மாதிரி எல்லாரும் இருக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போலாகும்!" என்று சொன்னான் சௌந்தரராகவன். சீதாவுக்குத் தாரிணியின் பேச்சை எதற்காக எடுத்தோம் என்று இருந்தது.

இந்தியாவில் உள்ள சுதேச சமஸ்தானங்களின் தலைநகரங்களுக்குள்ளே ரஜினிபூர் மிக அழகான ஒரு பட்டணம். மறுநாள் முழுவதும் ராகவனும் சீதாவும் அந்தப் பட்டணத்தைச் சுற்றிப் பார்ப்பதில் கழித்தார்கள். ரஜினிபூர் ராஜாவின் பழைய அரண்மனை, புதிய அரண்மனை, வஸந்தோத்ஸவம் கொண்டாடும் பளிங்கு மாளிகை, நந்தவனங்கள், பிராணிக் காட்சிச் சாலைகள், பட்டணத்துக்குச் சற்றுத் தூரத்திலிருந்த பழைய கோட்டை, கொத்தளங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் களித்தார்கள். ஆனால் ஒரு இடத்திலாவது அதிக நேரம் அவர்கள் நிற்கவில்லை. எந்த இடத்திற்குச் சென்றாலும் ராகவன் நெருப்பில் காலை வைத்து விட்டவன்போல் அவசரப்பட்டான். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் சீதாவும் ராகவனுடைய அவசரத்திற்கேற்ப அங்கங்கே பார்க்க வேண்டியதைச் சட்டென்று பார்த்து விட்டுக் கிளம்பினாள். திவானுடைய பங்களாவுக்குச் சாயங்காலம் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, "அவர்கள் இரண்டு பேரையும் இன்றைக்கெல்லாம் காணவேயில்லையே?" என்றாள் சீதா. இப்படிச் சொல்லிவிட்டு ஏன் சொன்னோம் என்று உதடுகளைக் கடித்துக் கொண்டாள். "அதைப் பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு டெலிபோன் பண்ணுவதாகச் சொன்னார்கள்; பண்ணவில்லை!" என்றான் ராகவன். இவ்விதம் சொல்லி இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் ராகவன் திவானுடைய டிரைவரிடம், "டஹரோ!" என்று கத்தினான். யாரும் தன்னை இவ்விதம் அதட்டிப் பேசி அறியாத அந்த மோட்டார் டிரைவர் சடக்கென்று பிரேக்கைப் போட்டு வண்டியை நிறுத்தியபோது, ீசீதாவைத் தூக்கிப் போட்டுவிட்டது. விஷயம் என்னவென்று பார்த்ததில், பக்கத்தில் ஒரு வீட்டுக்கு அருகில் டங்கா வண்டியிலிருந்து தாரிணியும் நிருபமாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ராகவன் தாரிணியைப் பார்த்து, "இதென்ன நீங்கள் இப்படி ஏமாற்றிவிட்டீர்கள்?' என்று கடுமையான குரலில் கேட்டான். "ஏமாற்றுவது என்ன? உங்களுடன் ஊர் சுற்றப் போனால் ஒன்றுமே பார்க்க முடியாது. விவாதம் செய்வதற்குத்தான் சரியாயிருக்கும். அதனால்தான் நாங்கள் இருவரும் தனியாகப் போய் வந்தோம்" என்றாள் தாரிணி. "நாளைக்கும் இப்படிச் செய்வதாகத்தான் உத்தேசமா?" என்று ராகவன் கேட்டான். "நாளைக்கு ஏரிக்குப் போவதாயிருந்தால் நாங்களும் வருகிறோம். இங்கே வந்து எங்களை அழைத்துக் கொண்டு போக முடியுமா?" என்றாள் தாரிணி. "பேஷாக முடியும் ஆனால் இன்று மாதிரி ஏமாற்றி விடாதீர்கள்; எனக்கு ரொம்பக் கோபம் வரும்!" என்றான். ராகவன் அன்றைக் கெல்லாம் ஏன் அவ்வளவு பரபரப்பாக இருந்தான் என்னும் விஷயம் சீதாவுக்கு இப்போது நன்கு விளங்கியது. அன்றிரவு அவள் சேர்ந்தாற்போல் அரை மணிக்கு மேல் தூங்கவில்லை. காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந்த போது தலையை ஒரே கனமாய்க் கனத்தது. இரண்டு பொட்டுக்களிலும் சம்மட்டியால் அடிப்பதுபோல் வலித்துக் கொண்டிருந்தது. "நான் இன்றைக்கு ஏரி பார்க்க வரவில்லை. டில்லிக்கே திரும்பிப் போய் விட்டாலும் நல்லதுதான்!" என்று ராகவனிடம் சொன்னாள்.
 
பதிநான்காம் அத்தியாயம்

ரஜினிபூர் ஏரி

அன்று பிற்பகலில் ராகவன் சீதாவைப் பார்த்து, "அப்படியானால், உனக்கு நிஜமாகவே தலையை வலிக்கிறதா?" என்று கேட்டான். "பின்னே பொய்யாகவா தலைவலிக்கும்? இது என்ன கேள்வி?" என்றாள் சீதா. "சரி நான் போய்வருகிறேன்!" என்று ராகவன் கிளம்பினான். "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டாள் சீதா. "புறப்படுகிறபோது, 'எங்கே போகிறீர்கள்?' என்று கேட்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா? வேறு எங்கே போவேன்? ஏரிக்குத்தான்!" "என்னை விட்டுவிட்டுத் தனியாகவா போவீர்கள்?" "தனியாக என்ன? தாரிணியும் அவளுடைய தோழியும் தான் வருவதாகச் சொல்லியிருக்கிறார்களே?" "என்னை இங்கே ஒண்டியாக விட்டுவிட்டு அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு போவீர்களா?" "இங்கே நீ ஒண்டியாக இருப்பானேன்? இது என்ன காடா? வீடுதானே? தாமாவும் பாமாவும் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள்." "அவர்களோடு என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது." "அப்படியானால் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிரு." "எப்படியாவது நீங்கள் போய்த்தான் தீரவேண்டும்?" "போய்த்தான் தீரவேண்டும்; போட்ட திட்டத்தை உன்னுடைய தலைவலிக்காக மாற்ற முடியாது?" "நான் செத்துப் போனால் அப்போதாவது போட்ட திட்டத்தை மாற்றுவீர்களா?" "செத்துப் போய்ப் பார்! அப்போது தெரிகிறது!"

சீதாவுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. ஆயினும் அப்போது ராகவனோடு தகராறு செய்வதில் பயனில்லை என்று உணர்ந்தாள். "பெண் ஜென்மம் எடுத்தாகிவிட்டது, தலைவலி என்று சொன்னால் என்ன பிரயோஜனம்? இங்கே தனியாகக் கிடந்து சாவதைக் காட்டிலும் உங்களுடன் வந்தே பிராணனை விடுகிறேன்!" என்று சொன்னாள். "விடுகிற பிராணனைச் சீக்கிரமாக விட்டுத் தொலைக்கலாம் புறப்படு உடனே" என்றான் ராகவன். காரில் போகும்போது இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சீதா மட்டும் அடிக்கடி கைக்குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். தாரிணியும் நிருபமாவும் இறங்கியிருந்த ஜாகையின் வாசலில் வண்டி நின்றது. மேல் மாடியின் முகப்பில் நிருபமா வந்து நின்று கையைத் தட்டி அழைத்து "கொஞ்சம் இப்படி வந்து உட்காருங்கள்; தாரிணிக்கு இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்று சொன்னாள். "நான் வரவில்லை காரிலேயே இருக்கிறேன். எப்போதாவது நான் புறப்பட ஒரு நிமிஷம் தாமதமானால் பிரமாத கோபம் வந்துவிடும் இப்போது மட்டும்?" என்றாள்."ஏதாவது உளறிக்கொண்டிராதே! தெரியுமா?" என்று ராகவன் கோபமாகச் சொல்லிவிட்டுக் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றான்.

சீதாவுக்கு காரில் உட்கார்ந்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாக இருந்தது. அத்தகைய பல நிமிஷங்களுக்குப் பிறகு மேலே கலகலவென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சிரிப்புச் சத்தம் சீதாவின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. தலையைச் சிறிது காருக்கு வெளியே நீட்டி மேலே அண்ணாந்து பார்த்தாள். சிறிது நேரம் வரையில் பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமும் கேட்டதே தவிர கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. சட்டென்று பலகணிக்கருகே ஒரு காட்சி தென்பட்டது. ராகவன் ஏதோ ஒரு கவரை கையில் பிடித்துக்கொண்டு தாரிணியிடம் அதைக் கொடுக்கப் போனான். அவள் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தாள். ராகவன் சட்டென்று அவளுடைய கரத்தைப் பிடித்துப் பலாத்காரமாக அந்தக் கவரைத் திணிக்க முயன்றான். அப்புறமும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் தாரிணி தன்னை விடுவித்துக் கொண்டு ஓடினாள். ராகவன் அவளைத் தொடர்ந்து பின்னால் ஓடினான். அரை நிமிஷ நேரமே நீடித்திருந்த இந்தக் காட்சி சீதாவின் உள்ளமாகிய காமிராவில் படமாகப் பதிந்துவிட்டது. சிறிது நேரம் சிந்தனா சக்தியையே இழந்திருந்தாள். பின்னர் ஏதேதோ சந்தேகங்கள் உதித்து மனதை அரிக்கத் தொடங்கின. உடம்பெல்லாம் விடவிடவென்று நடுங்கும்படியாக மனதில் ஆத்திரம் பொங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் ராகவனும் தாரிணியும் மட்டும் கீழிறங்கி வந்தார்கள். தாரிணியைப் பின்னால் சீதாவுக்குப் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு ராகவன் காரின் முன்புறத்தில் அமர்ந்தான். நிருபமா பின்னால் வருவாள் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவள் வராமலே கார் புறப்பட்டதைக் கண்டதும் துணுக்குற்றாள். அதைப்பற்றி விசாரிக்க விரும்பினாலும் பேசுவதற்கு நா எழவில்லை.

தாரிணி சீதாவின் முகத் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படி ஒரு மாதிரியாயிருக்கிறாய், சீதா! உடம்பு ஏதாவது சரிப்படவில்லையா, என்ன?" என்று கேட்டாள். "ஆமாம்; காலையிலிருந்து தலைவலி!" என்று சீதா முணுமுணுத்தாள். "அடடா! ரொம்பத் தலைவலி போலிருக்கிறதே! குரல் கூட எப்படியோ ஆகிவிட்டதே! இதோடு வெளியில் புறப்படாவிட்டால் என்ன? நாளைக்குப் போயிருக்கலாமே? ஏரி எங்கே ஓடியா போகிறது!" என்று தாரிணி கூறியது சீதாவின் மனதில் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனை அளித்தது. "வரவில்லையென்று சொன்னால் கேட்டால்தானே!" என்றாள். சற்றுப் பொறுத்துத் தாரிணி, "உடம்பு சரியில்லையென்று தான் நிருபமா கூட வராமல் நின்றுவிட்டாள். இப்போது கூட மோசம் போய் விடவில்லை, திரும்பிப் போய்விடலாம்! என்ன, மிஸ்டர் ராகவன்!" என்றாள். அதற்கு ராகவன், "அவ்வளவு ஒன்றும் அவளுக்குப் பிரமாதமான தலைவலி இல்லை. ஏரியில் படகிலே போனால் தலைவலி தீர்ந்து விடும்!" என்றான். நீல வானத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துப் பூமியில் வைத்தது போலிருந்தது ரஜினிபூர் ஏரி. அதன் இரு பக்கங்களில் இரண்டு மலைத் தொடர்கள் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் மதில் சுவர்களைப் போல் உயர்ந்து நின்றன. மற்ற இரு புறங்களில் பசுமையான மரங்கள் அழகிய நீல வர்ணச் சித்திரத்துக்குப் பச்சை வர்ணச் சட்டங்கள் போட்டது போல் நின்றன. அங்கே நள்ளிரவின் நிசப்தம் நிலவியது. வைகறையில் சலனமற்ற சாந்தம் குடிகொண்டிருந்தது. மாலை நேரத்தில் மனோகரம் பரவி இருந்தது.

அந்த விஸ்தாரமான நீல நிற நீர்ப்பரப்பைப் பார்த்தால் ஞானிகள் எங்கும் நிறைந்த பரம்பொருளைத் தங்களுக்குள்ளே காணும்போது அடையும் ஆனந்தத்தைப் பாமர ஜனங்களும் அடைவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகளின் கண்களுக்குள்ளே தங்கள் பிரதி பிம்பத்தைக் காணும்போது அடையும் களிப்பை அந்த ஏரி நீரில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் எவரும் பெறுவார்கள். முதன் முதலில் பெற்றெடுத்த குழந்தையின் இதழ்களில் இலேசாக அரும்பும் புன்னகையைப் பார்க்கும்போது அன்னைக்கு உண்டாகும் மகிழ்ச்சி, அந்த ஏரி நீரின் சிற்றலைகள் விரியும் காட்சியைப் பார்க்கும் அனைவருக்கும் உண்டாகும். தும்பை மலரைப் போல் வெண்ணிறத்துடன் விளங்கிய ஆயிரக்கணக்கான பறவைகள் அந்த ஏரி நீரின் மீது கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் காட்சியை ஒரு முறை பார்த்தவர்கள் என்றென்றைக்கும் மறக்க மாட்டார்கள். அத்தகைய ஏரிக்கரையில் வந்து ராகவன், சீதா, தாரிணி மூவரும் காரிலிருந்து இறங்கினார்கள். ஏரியின் காட்சியைப் பார்த்துவிட்டுத் தாரிணி, "ஆகா! என்ன அழகு! என்ன அழகு! நானும் இயற்கைக் காட்சிகள் எவ்வளவோ பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி பார்த்ததில்லை!" என்றாள். "அதனால்தான் உங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு வற்புறுத்தி அழைத்து வந்தேன். ஸ்விட்ஸர்லாந்தில் உலகப் பிரசித்தமான ஏரிகளை இதன் காலிலே கட்டி அடிக்க வேண்டும். ஆயினும் இதைப் பார்ப்பதற்கு உங்கள் இருவரையும் அழைத்து வருவதற்குள் என் பிராணனில் பாதி போய் விட்டது!" என்றான் ராகவன்.

சீதா மட்டும் ஒன்றும் சொல்லாமல் ஏரியை நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்த கடுகடுப்பைப் பார்த்து விட்டுத் தாரிணி, "ஏரி என்னமோ அழகாய்த்தானிருக்கிறது, ஆனால் இரண்டு பேராக வந்திருந்தால் இன்னும் நன்றாக இதைப் பார்த்து அனுபவிக்கலாம் அல்லது நாலு பேராக வந்திருக்க வேண்டும்!" என்று கூறினாள். அவள் மனதில் நினைத்துச் சொன்னது சீதாவும் ராகவனும் மட்டும் வந்திருக்கலாம் என்று. ஆனால் சீதா அதைத் தப்பர்த்தம் செய்து கொண்டு, "நான் வரவில்லை என்று ஆனமட்டும் சொன்னேன்; கேட்டால் தானே?' என்று முணுமுணுத்துவிட்டு ஏரிக்கரையை நோக்கி விடுவிடு என்று நடந்தாள். கரை ஓரமிருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து ஏரியைப் பார்க்கலானாள். ஆனால் அவளுடைய கண்கள் ஏரியைப் பார்த்தனவே தவிர, மனது வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஏரியின் குளிர்ந்த நீரில் அளாவிக் கொண்டு வந்து உலாவிய காற்று அவளுடைய உடம்பெல்லாம் அக்கினி ஜுவாலையை மூட்டியது. அவள் விடுவிடு என்று நடந்து போனதைக் கவனித்த தாரிணி, ராகவனைப் பார்த்து, "உங்கள் மனைவி என்ன இன்றைக்கு இப்படி இருக்கிறாளே? இது தலைவலி மட்டும் அல்ல; உள்ளக் கோளாறும் ஏதோ இருக்கும் போலிருக்கிறது" என்று சொன்னாள். "இந்த மாதிரி செய்வாள் என்று தெரிந்திருந்தால் அவளை அழைத்து வந்திருக்கவே மாட்டேன்" என்றான் ராகவன். "பெண்களின் மனதை அறியும் சக்தி உங்களுக்கு இல்லவே இல்லையென்று தெரிகிறது. உங்கள் மனைவிக்கு உங்களுடன் தனியாக வந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போக வேண்டும் என்று எண்ணம்!"

"அவளைத் தனியாக அழைத்துக்கொண்டு வந்து என்ன செய்கிறது? அவளோடு எந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது? எங்களிரு வருக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. அவளுடைய பேச்சு என் மனதில் ஏறவே ஏறாது. நான் பேசுகிற விஷயம் அவளுக்குப் புரியாது." "அது யாருடைய தப்பு அவளை நீங்கள் படிப்பித்து உங்கள் நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுடன் சமதையான படிப்பில்லாதவளை மணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்போது தப்புச் செய்து விட்டு இப்போது இப்படிப் பேசுவதில் என்ன பயன்?" "தப்பு என் பேரில் இல்லை, தாரிணி! உங்கள் பேரில்தான் உங்களால் வந்த வினைதான் இதெல்லாம்!" "வெகு அழகு! இப்படியெல்லாம் பேசாதீர்கள், உங்கள் மனைவி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நாமும் போகலாம் வாருங்கள்! இல்லாவிட்டால் அவளுடைய கோளாறு இன்னும் அதிகமாகிவிடும்." "அதிகமானால் ஆகட்டும்; அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை" என்றான் ராகவன். ஆயினும் தாரிணி போகத் தொடங்கியதும் அவளைப் பின்பற்றி அவனும் போனான். இருவரும் ஏரி ஓரம் சென்று சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். ஏரிக்கரையில் படகு ஒன்றும் இல்லை. ஆனால் ஏரியில் சில படகுகள் மிதந்து சென்று கொண்டிருந்தன. அவை ஏரியின் நடுவில் இருந்த சோலை சூழ்ந்த ஒரு சிறு தீவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அந்தத் தீவின் உயரமான மரங்களின் மத்தியில் ஒரு பெரிய மாளிகை காணப்பட்டது. "அந்த மாளிகை யாருடையது?" என்று தாரிணி கேட்டாள்.

"சரித்திர நிபுணராகிய தங்களுக்கு இது தெரியாதா, என்ன? பழைய சரித்திரத்தைத்தான் ஆராய்வீர்கள் போலிருக்கிறது. இந்த சமஸ்தான ராஜாவின் அரண்மனைதான் இது. காலம் சென்ற பெரிய ராஜா உயிரோடிருந்தபோது இந்த மாளிகையில் அடிக்கடி வசிப்பாராம். அவருடைய உல்லாசக் கேளிக்கைகள் எல்லாம் இதிலேதான் நடக்குமாம்! உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ? ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இந்த நாட்டின் ராஜாவைக் கொல்வதற்குப் பம்பாயில் ஒரு முயற்சி நடந்தது, கொல்ல முயற்சித்தவள் ஒரு ஸ்திரீ. பத்திரிகைகளிலே கூட பிரமாதப்பட்டது ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்த ஸ்திரீ இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனை அடைந்ததுதான் லாபம். கத்திக் காயம் கூடப் படாமல் அப்போது ராஜா தப்பிவிட்டார். இரண்டு வருஷத்துக்கு முன்பு அதிகக் குடி காரணமாகச் செத்தொழிந்தார்." "இப்போதுள்ள ராஜா யார்? அவருடைய குணம் எப்படி?' என்று தாரிணி கேட்டாள். "இப்போதுள்ள ராஜா சிறு பையன், டேராடூனில் படிக்கிறான். நாம் இறங்கியிருக் கிறோமே, அந்த வீட்டில் வசிக்கும் திவான் ஆதிவராகாச்சாரியார்தான் இப்போது ராஜ்ய நிர்வாகம் செய்து வருகிறார். "அப்படியானால், இப்போது ராஜ்யம் நன்றாக நடந்து வருகிறதாக்கும்." "ஏதோ சுமாராய் நடந்து வருகிறது ஆனால் பழைய ராஜாவின் துர்மந்திரியாயிருந்த விநாயகராவ் மதோங்கர் இன்னும் உயிரோடிருக்கிறான். அரண்மனையிலும் சரி, சமஸ்தானத்திலும் சரி, அவனுடைய அட்டூழியங்கள் அதிகம். திவானும் அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருந்து வருகிறார். இல்லா விட்டால், ஏதாவது இல்லாதது பொல்லாததைக் கிளப்பி விட்டுத் திவானுடைய வேலைக்கே உலை வைத்து விடுவான்!"

ஆரம்பத்தில் வேறு கவனமாக இருந்த சீதா, பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்லும் முயற்சி நடந்ததைப் பற்றிக் காதில் விழுந்ததும், அவர்களுடைய பேச்சில் கவனம் செலுத்தலானாள். ராகவன் மதோங்கரைப் பற்றிச் சொல்லி முடித்ததும், "பம்பாயில் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "ஓகோ! நீ கூடக் கவனித்துக் கொண்டிருக்கிறாயா? அந்த ஸ்திரீ யாரோ தெரியாது. சிலர் அவளை ஹிந்து ஸ்திரீ என்றார்கள். சிலர் அவளை முஸ்லீம் ஸ்திரீ என்றார்கள். ஒரு சிலர் அவளைத் தென்னாட்டைச் சேர்ந்தவள் என்றும் சொன்னார்கள். யாராயிருந்தால் என்ன? பெரிய ராட்சஸியாயிருக்க வேண்டும்! பட்டப்பகலில் கொலை செய்ய முயற்சிப்பதற்கு அவளுக்கு எத்தனை தைரியம் இருந்திருக்க வேண்டும்?" என்றான் ராகவன். "புருஷர்கள் மட்டும் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம்; ஸ்திரீகள் அதற்குப் பழிவாங்க முயற்சிப்பதுதான் பிசகோ?" என்றாள் சீதா. "ஏது ஏது? கொலைகாரிக்கு ரொம்பப் பரிந்து பேசுகிறாயே? இப்படிப் பேச எங்கே கற்றுக் கொண்டாய்?" என்றான் ராகவன். தாரிணி குறுக்கிட்டு, "அந்த ஸ்திரீ பிறகு என்ன ஆனாளாம், தெரியுமா?" என்று கேட்டாள். இத்தனை நேரம் மௌனமாயிருந்த அவளுடைய குரலில் இப்போது அதிசயமான மாறுதல் காணப்பட்டது. முன்னே சீதாவின் குரல் நடுங்கியது போல் இப்போது தாரிணியின் குரலும் நடுங்கிற்று. ஆனால் ராகவன் அதைக் கவனியாமல், "யாருக்குத் தெரியும்? இரண்டு வருஷம் சிறையில் இருந்து விட்டு வெளிவந்த பிறகு எங்கே போய்க் கெட்டலைகிறாளோ? அதைப்பற்றி நமக்கென்ன கவலை!" என்றான்.

சீதாவின் மனதில் பம்பாயை விட்டுத் தான் ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்குச் சில நாள் முன்பு கையில் கத்தியுடனேயே ஒரு ஸ்திரீ வந்திருந்த சம்பவமும், ரயில் ஏறும்போது பத்திரிகையில் படித்தறிந்த விஷயமும், அப்போது தன் மனதில் ஏற்பட்ட சந்தேகமும் இப்போது டில்லிக்கு வந்த பிறகு அன்றொரு நாள் சாலை முனைக்கு அதே ஸ்திரீயைக் கையில் கத்தியுடன் பார்த்த விஷயமும் நினைவுக்கு வந்தன. அதையெல்லாம் பற்றிப் பிரஸ்தாபியாமல் வாயை மூடிக்கொண்டிருந்தாள். அவளுடைய மனம் ஸ்திரீ வைத்திருந்த கத்தியின் மேல் அடிக்கடி சென்றது. அவள் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயன்றதற்குத் தக்க காரணம் இருந்திருக்க வேண்டும். என்ன அக்கிரமம் செய்தானோ, என்னமோ? ஆனால் புருஷர்கள் மட்டுந்தானா அக்கிரமம் செய்கிறார்கள்? ஸ்திரீகளுந்தான் செய்கிறார்கள். உதாரணமாக இந்தத் தாரிணியைப் போன்ற வெட்கங்கெட்ட ஸ்திரீயைப் பற்றி என்ன சொல்வது? இப்படிப்பட்டவர்களைக் குத்திக் கொன்றால் கூடப் பாதகம் இல்லை. தன்னிடம் மட்டும் இப்போது ஒரு கத்தியிருந்தால்?...

தன்னுடைய எண்ணம் எவ்வளவு பயங்கரமான காரியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த சீதா திடுக்கிட்டுத் தாரிணியின் முகத்தை நோக்கினாள். அவளுடைய நெற்றியிலிருந்த இரத்தக் காயம் கண்ணில் பட்டது. ஆகா; நல்ல வேலை செய்தான் சூரியா! அவன் மட்டும் இப்போது இங்கிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? தன்னை விட்டு ஒரு நிமிஷ நேரமும் அகலாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான் அல்லவா? அவன் இங்கே இருந்தால், இவர்கள் இருவரையும் நாம் இலட்சியம் செய்ய வேண்டியதேயில்லையே! இந்தச் சமயத்தில் படகு ஒன்று கரையை அணுகியது. படகில் ஏறிக்கொண்டு வந்தவர்கள் கரையில் இறங்கினார்கள். "இந்தப் படகை அமர்த்தட்டுமா? ஏரியில் போய் வரலாமா?" என்று ராகவன் கேட்டான். தாரிணி, "நான் தயார்; போகலாம் ஆனால் உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாளோ?" என்றாள். "அவளும் தானே வருகிறாள் அப்படி அவள் வர இஷ்டப்படாவிட்டால் இங்கேயே கரையில் இருக்கட்டும்; நாம் இருவரும் போய் வரலாம்." இப்படிச் சொல்லிவிட்டு ராகவன் வாடகைப் படகு அமர்த்திக் கொண்டு வருவதற்காகச் சென்றான். ராகவன் அப்பாலே சென்றதும், தாரிணி சீதாவைப் பார்த்து, "சீதா! உனக்கு ஏதாவது என் பேரில் கோபமா? ஒரு மாதிரியாயிருக்கிறாயே?" என்று கேட்டாள். "ஒரு மாதிரி என்ன, ஒருமாதிரி, எப்போதும் இந்த இலட்சணந்தான்!" என்று சீதா முணுமுணுத்தாள். "மறுபடியும் கோபமாகவே பேசுகிறாயே! நான் உன்னோடு சிநேகமாயிருக்க விரும்புகிறேன் சீதா" என்றாள் தாரிணி. "எதற்காக? நீயும் நானும் முன்பின் பார்த்தது கூட இல்லையே?" என்று சீதா சொன்னாள்.

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தாரிணி திகைத்துப் போனாள். சற்றுப் பொறுத்து, "சீதா! உன் கழுத்தில் ஒரு ரத்தின ஹாரம் போட்டிருக்கிறாயே? அது ஏது?" என்று தாரிணி கேட்டாள். சீதா திடுக்கிட்டாள் அவள் மனதில் என்னவெல்லாமோ உருத்தெரியாத சந்தேகங்கள் உதித்தன. இந்தப் பாதகி எந்த விதத்திலாவது நம்மைக் கெடுத்து விடுவது என்று தீர்மானித்திருக்கிறாள் போலிருக்கிறது. ஒருவேளை நம் பேரில் திருட்டுக் குற்றம் சாட்டப்போகிறாளோ, என்னவோ? ஐயோ?! இந்த நேரத்தில் சூரியா இங்கு இல்லாமற் போய்விட்டானே! தாரிணி மறுபடியும், "சீதா! நான் கேட்டது உன் காதில் விழவில்லையா? கழுத்தில் ஒரு ரத்ன ஹாரம் போட்டுக் கொண்டிருக்கிறாயே அது ஏது என்று கேட்டேன்!" என்றாள். "என்! அம்மா எனக்குக் கொடுத்தாள்! நீ எதற்காகக் கேட்கிறாய்? ஒருவேளை நான் அதைத் திருடிவிட்டேன் என்று உனக்கு எண்ணமோ?" என்றாள் சீதா. "ஐயோ! என்ன கொடூரமாகப் பேசுகிறாய்? அந்த ரத்தின ஹாரம் ரொம்ப அழகாயும் வேலைப்பாடாயும் இருக்கிறபடியால், எங்கே செய்தது என்று தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன் . அதற்கு ஏன் இத்தனை கோபப்படுகிறாய்?" "எனக்கு ஒன்றும் கோபமில்லை?" "கோபமில்லையென்றால் சரி, உன் அம்மாவுக்கு எந்த ஊர் சீதா! உன் பிறந்தகம் எங்கே?" "அதையெல்லாம் பற்றி இப்போது ஒன்றும் என்னைக் கேட்க வேண்டாம் என் மனது சரியில்லை." "அது ரொம்ப நன்றாய்த் தெரிகிறது!" என்றாள் தாரிணி.

ராகவன் வாடகைக்குப் படகு அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்தான். "சீக்கிரம் படகில் ஏறுங்கள் ஏற்கெனவே நேரம் ரொம்ப ஆகிவிட்டது?" என்றான். "அவசியம் படகில் ஏறத்தான் வேண்டுமா? பேசாமல் திரும்பிப் போய்விடலாமே" என்றாள் தாரிணி. "அழகாயிருக்கிறது! இந்தப் படகோட்டியுடன் எவ்வளவோ வாதாடிப் படகு கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் இப்போது தகராறு செய்யாதீர்கள் சீதா எழுந்திரு! சீக்கிரம் வந்து படகில் ஏறிக்கொள்." சீதா எழுந்து வந்தாள் அவளுடைய கையைப் பிடித்துப் படகிற்குள்ளே ஏற்றி விட்டான் ராகவன். பிறகு தாரிணி தயக்கத்துடன் வந்து தானாகவே படகில் ஏற முயன்றாள்! அது சாத்தியப்படவில்லை படகு நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது. "சொன்னால் கேட்கிறீர்களா? இங்கே கையைக் கொடுங்கள்!" என்று கூறி ராகவன் தாரிணியின் கையையும் பிடித்துப் படகிற்குள் ஏற்றிக்கொண்டான். தாரிணி சீதாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். ராகவன் அவர்களுக்கு எதிரேயிருந்த படகுச் சட்டத்தின் மீது உட்கார்ந்தான். படகு நகரத் தொடங்கியது. இதற்கிடையில் திடீரென்று வானம் கருத்து மேக மண்டலங்கள் திரளுவதையும், காற்று பலமாக அடிக்கத் தொடங்கியிருப்பதையும் அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. ஏரிக்கரைக்கு அவர்கள் வந்த சமயம் ஏரியின் நீர்ப்பரப்பில் கடற்கரை மணலில் தோன்றுவது போன்ற பூ அலைகள் எழுந்து சத்தமின்றி விரிந்து பரவி மீண்டும் ஜலத்திரளில் மௌனமாகக் கலந்து கொண்டிருந்தன. இவர்கள் ஏறிய படகு புறப்பட்ட சமயத்திலோ அலைகள் ஒரு அடி உயரம் எழும்பி விழுந்தன. ஆங்காங்கு அலைகளின் நுனியில் வெண்ணுரை காணவும் ஆரம்பித்திருந்தது. அலை அடிக்கும் ஓசை 'கும்' என்று கேட்கத் தொடங்கியது.

ஏரிக்கரையிலிருந்து அதன் நடுவில் இருந்த சோலைத் தீவு சுமார் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும். தீவை நோக்கிப் படகு போகலாயிற்று. அரை பர்லாங் தூரம் போவதற்குள் காற்றின் வலிவு அதிகமாகி விட்டது. அலைகள் திரைத்தெழுந்து நுரை பொங்கி ஒரு கஜம் உயரம் வரையில் எழுந்து விழுந்து அலைகளின் சத்தம் 'ஹோ!' என்ற பெரும் ஓசையாகிவிட்டது. படகு அப்படியும் இப்படியும் பலமாக ஆடி எழுந்து விழுந்தது. படகுக்காரன் அவனுடைய பாஷையில் ஏதோ சொன்னான். "தாரிணி, இதென்ன? காற்று இவ்வளவு பலமாகி விட்டதே! திரும்பிப் போய்விடலாமா!" என்றாள். "முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது. உயிருக்கு அவ்வளவு பயப்பட வேண்டுமா!" என்றான் ராகவன். சீதா நாலா பக்கமும் திரும்பிப் திரும்பிப் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள். திடீரென்று, "ஐயோ! அம்மா! எனக்குப் பயமாயிருக்கிறதே!" என்று கூச்சலிட்டுவிட்டு விம்மத் தொடங்கினாள். ராகவன் மிகக் கடுமையான குரலில், "சீதா இது என்ன மடத்தனம்? அழுகையை உடனே நிறுத்துகிறாயா, இல்லையா?" என்றான். சீதாவின் வெறி இன்னும் அதிகமாயிற்று. "ஐயோ அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போய்விட்டதே; அலையில் விழுந்து நான் சாகப் போகிறேனே!" என்று அலறினாள்.

இந்த எதிர்பாரா நிலைமை ராகவனைக் கலங்க அடித்துவிட்டது. அவன் பெரும் மனக் குழப்பத்துடன் தாரிணியை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தான். "இந்தச் சனியன்களையெல்லாம் இதற்குத்தான் வெளியில் அழைத்துக்கொண்டு புறப்படக் கூடாது என்கிறது. நீங்கள் கொஞ்சம் சமாதானப்படுத்திப் பாருங்களேன்!" என்றான். "மிஸ்டர் ராகவன்! சமாதானப்படுத்திப் பயனில்லை. உங்கள் மனைவிக்கு 'ஹிஸ்டீரியா' மாதிரி இருக்கிறது. படகுக்காரனை உடனே கரைக்குத் திருப்பச் சொல்லுங்கள் வேறு வழியில்லை!" என்றாள். ராகவனும் படகுக்காரனை இரைந்து கூப்பிட்டு, "கரைக்குத் திருப்பு!" என்று உத்தரவிட்டான். படகுக்காரன் "குச் டர் நஹி, சாகிப்!" என்றான். "எப்படியிருந்தாலும், சரி! கரைக்கு உடனே படகைத் திருப்பு!" என்று ராகவன் கத்தினான். "படகுக்காரன் திருப்பமாட்டான்; அவனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!" என்று கூறிவிட்டு, சீதா மேலும் விம்மினாள். "ஏதாவது பிதற்றாதே, சீதா! வாயை மூடு!" என்று ராகவன் அதட்டிவிட்டு, படகுக்காரனை மறுபடியும் பார்த்து, "திருப்பு உடனே! திருப்பு கிறாயா, இல்லையா?" என்று கத்தினான். "டீக், ஸாகிப் டீக்!" என்றான் படகுக்காரன்.

உண்மையென்னவென்றால், படகுக்காரன் படகைத் திருப்பத்தான் பார்த்தான். ஆனால், காற்றினாலும் அலையினாலும் அது அவ்வளவு சுலபமாயில்லை. படகுக்காரன் எவ்வளவு பலமாகக் கழியைப் போட்டாலும், படகு சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதற்குள் சீதாவின் விம்மல் சத்தம் அதிகமாயிற்று. இடையிடையே, "அம்மா! அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போயிற்று!" என்று அலறிக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த தாரிணி, "மிஸ்டர் ராகவன்! 'ஹிஸ்டீரியா' அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் இங்கே பக்கத்தில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் ஒரு கையைத் தான் கெட்டியாகப் பிடித்தாள். தாரிணி பிடித்த கையைச் சீதா பலமாக உதறி விடுவித்துக் கொண்டு ஒரு துள்ளு துள்ளிப் படகில் எழுந்து நின்றாள். படகு பேயாட்டம் டிக்கொண்டிருந்தது. "ஓகோ! எனக்கு 'ஹிஸ்டீரியா' என்று சொல்லி ஜலத்தில் தள்ளிவிடப் பார்க்கிறாயோ? எனக்கு ஒன்றும் 'ஹிஸ்டீரியா' இல்லை! நான் விழமாட்டேன்!" என்று கூவினாள். "சீக்கிரம்! இவளை வந்து உடனே பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று தாரிணி கத்தினாள்.
 
Contd...

ராகவன் எழுந்து சீதாவை நெருங்கி வருவதற்கு ஒரு அடி எடுத்து வைத்தான். அந்தச் சமயத்தில் படகை ஒரு பெரும் அலை மோதியது. படகு ஒரே ஆட்டமாகத் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்போல் ஆடியது. ராகவன் படகுக்குள்ளே கால் தடுமாறி விழுந்தான். சீதா, "வீல்!" என்று கத்திக்கொண்டு தண்ணீரில் விழுந்தாள். தாரிணி, "ஐயோ! கடவுளே!" என்று அலறினாள். படகுக்காரன் தன்னுடைய பாஷையில் ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். கவிழ்ந்து விடும் போலிருந்த படகு எழுந்து நிமிர்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சீதா மேலே வந்து கொண்டிருந்தாள். நிமிர்ந்த படகு சீதாவை விட்டு அகன்று போய்க் காண்டிருந்தது. சீதா ஒரு தடவை தலையைத் தண்ணீருக்கு மேலே தூக்கி, "அம்மா!" என்று அலறினாள். அந்த அலறல் சத்தம் காற்றின் பேரொலிக்கும் அலைகளின் பெரும் ஓசைக்கும் மேலே கேட்டது. தாரிணி ராகவன் இவர்களுடைய நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் அந்த அபயக்குரல் பாய்ந்தது. தாரிணி, "என்ன சும்மா நிற்கிறீர்களே! தண்ணீரில் குதித்து அவளைக் காப்பாற்றுங்கள்!" என்று கூவினாள்.

படகிற்குள் தடுமாறி விழுந்த ராகவன் அப்போதுதான் சமாளித்து எழுந்தான். "ஐயோ! எனக்கு நீந்தத் தெரியாதே!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் தலை தெரிந்த இடத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். ராகவனுடைய அந்தரங்கத்தில் அப்போது ஒரு கணம் ஒரு பயங்கரமான எண்ணம் உதயமாயிற்று. "ஒருவேளை இதுதான் விதி போல் இருக்கிறது. சீதா இறந்து போனால்... மேலே அந்த பயங்கர நினைவுக்கு இடங்கொடுக்க விரும்பாமல் "படகுக்காரா! அடே படகுக்காரா..." என்று ராகவன் கூவினான். முழுகிக் கொண்டிருந்தவளின் பக்கத்தில் படகைக் கொண்டு போகும்படி சொல்ல அவன் உத்தேசித்திருந்தான். ஆனால், அதற்குள்ளே தாரிணி படகிலிருந்து தண்ணீரில் குதித்துச் சீதா முழுகிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி வெகு லாவகமாக நீந்திப் போய்க் காண்டிருந்தாள்! அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக வருணனும் வாயுவும் அமைதியாக நின்றார்கள்.
 
பதினைந்தாம் அத்தியாயம்

புனர் ஜென்ம

'ஹோ' என்ற பேரோசை கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வரையில் அந்த ஓசையைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. வேறு நினைவு ஏதும் ஏற்படவில்லை. அது என்ன சத்தமாயிருக்கும், என்று சீதா யோசித்தாள். நெடு நேரம் வரை அதே யோசனையாயிருந்தாள்.சட்டென்று நினைவு வந்தது, அம்மா அடிக்கடி எச்சரிக்கை செய்திருந்த அலை ஓசையாகத்தான் இருக்கவேண்டும். ஆம், ஆம்; அலை ஓசைதான்! காதே அடைத்துப் போனது போலக் கேட்கிறது. இந்தச் சத்தம் கேட்கத் தொடங்கியது எப்போதிருந்து? எப்போதிருந்து? எப்போதிருந்து - இதோ நினைவு வருகிறது! தண்ணீரில் மூழ்கியதிலிருந்து; தண்ணீரில் முழுகி மூச்சு முட்டிப் போனதிலிருந்து. மூச்சு முட்டும் தருணத்தில், 'தண்ணீருக்கும் மேலே இருந்தபோது இவ்வளவு சத்தம் இல்லையே? தண்ணீருக்குள் இவ்வளவு அதிக சத்தமாயிருக்கிறதே?' என்று எண்ணியது இப்போது சீதாவுக்கு நினைவு வந்தது. அதைத் தொடர்ந்து, 'சரி, இனி பிழைக்கப் போவதில்லை' என்று எண்ணியதும், 'அம்மா! உன் பேச்சைக் கேட்காமல் போனேனே?' என்று வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தன. அந்த ஆபத்தான தருணத்தில் கையில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. பிறகு, அப்படித் தட்டுப்பட்டதும் ஒரு கைதான் என்று தெரிந்தது. அது யாருடைய கை? வளையல் அணிந்திருந்தபடியால் ஒரு ஸ்திரீயின் கை தான் அது! அந்த ஸ்திரீ யார்? ஆபத்துக் காலத்தில் தன்னை வந்து காப்பாற்றுவதாகச் சொல்லி இப்படியெல்லாம் எண்ணமிட்டது வரையில், சீதாவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது, கண்ணை மட்டும்தான் திறக்க முடியவில்லை. ஒரே இருட்டாயும் வெளிச்சமாயுமிருக்கிறது. ஆம், இருட்டாயுமிருக்கிறது; வெளிச்சமாயுமிருக்கிறது. இருட்டில் வெளிச்சமாயிருக்கிறது; வெளிச்சத்தில் இருட்டாயிருக்கிறது. ஆனால் கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் கண் இமைகளைத் திறக்க முடியவில்லை....

ஏதோ குரல் கேட்கிறதே, அது என்ன? யார் குரல்? யார் என்ன சொல்கிறார்கள் இந்த நாசமாய்ப் போன அலைச் சத்தம் மட்டும் அடங்கினால்?.. அலைச் சத்தம் கொஞ்சம் இப்போது குறைந்துதானிருக்கிறது! யாரோ இரண்டு பேர் பேசுகிறார்கள்; என்ன பேசுகிறார்கள்? கண் தெரியாவிட்டாலும் நல்லவேளையாகக் காது கேட்கிறது; கவனித்துக் கேட்கலாம். "உங்கள் மனைவிக்கு நினைவு வந்து கொண்டிருக்கிறது. கண்ணிமைகள் கொஞ்சம் அசைகின்றன. சீக்கிரத்தில் கண்ணை விழித்துக் கொள்வாள்." "இன்றைக்குச் சீதாவுக்குப் புனர் ஜென்மம்தான். உன்னாலேதான் சீதா பிழைத்தாள் நீதான் அவளுக்கு இரண்டாவது தாயார்!" "சீதா தாயில்லாப் பெண் என்று கேள்விப்பட்டேன் அது உண்மையா?" "தாய் இல்லாமல் பெண் எப்படி வருவாள்? இராமாயண சீதையைப்போல் பூமியிலிருந்தே வந்து விடவில்லை. தாயார் வயிற்றில்தான் பிறந்தாள் ஆனால் இப்போது அவளுக்குத் தாய் உயிரோடில்லை. இனிமேல் நீதான் அவளுக்குத் தாயார்." "அப்படியே ஆகட்டும் சீதாவுக்கு நான் தாயார் என்றால், நீங்கள் எனக்கு மாப்பிள்ளையாக வேண்டும். அழகான மாப்பிள்ளை நீங்கள்! கட்டிய மனைவி தண்ணீரில் முழுகிக் கொண்டிருக்கையில், படகிலிருந்து இறங்காமலிருந்த மாப்பிள்ளை!" "அதற்கு நீதான் காரணம்! பலாத்காரமாக இரண்டாயிரம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்துவிட்டாய்! அதைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு எப்படித் தண்ணீரில் திடீரென்று குதிக்க முடியும்? அந்த முட்டாள் படகுக்காரன் உளறியதை நீ புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. இந்த ஏரியில் எங்கேயும் கழுத்துக்கு மேல் தண்ணீர் கிடையாதாம், சீதா தற்கொலை செய்து கொள்ள எண்ணியிருந்தால் கூடச் சாத்தியமாகியிராது."

"போதும், நிறுத்துங்கள்! சீதாவுக்குப் பிரக்ஞை வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் உங்களுடைய மடியில் எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அவளுக்கு நல்ல நினைவு வரும் போது, என்னுடைய மடியில் அவள் படுத்திருப்பதையும், உங்களுடைய உடுப்புக் கூட நனையாமல் இருப்பதையும் பார்த்தால் ஒரு நாளும் உங்களை மன்னிக்க மாட்டாள்!" "உனக்குத் தெரியாது, தாரிணி! உனக்குத் தெரியாது. எங்கள் ஊர்ப் பெண்களுக்கு எவ்வளவு தூரம் மன்னிக்கும் சக்தி உண்டு என்பது உனக்குத் தெரியாது!" மேலே கண்ட சம்பாஷணையில் எல்லா விவரங்களும் சீதாவின் மனதில் பதியவில்லை, சில சில வார்த்தைகள்தான் பதிந்தன. ஆனால் அவற்றிலிருந்து தான் முழுகுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் எல்லாம் நன்றாக நினைவுக்கு வந்துவிட்டன. ஏரியில் விழுந்து தத்தளித்து முழுகிக் கொண்டிருந்த தன்னைக் காப்பாற்றியது தாரிணி என்பதைத் தெரிந்து கொண்டாள். தான் அப்போது தாரிணியின் மடியில் படுத்திருப்பதையும் உணர்ந்தாள். ராகவன் 'மன்னிக்கும் சக்தி'யைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது தாரிணி தன்னை அலுங்காமல் எடுத்து ராகவன் மடியில் போட்டதையும் அவள் உணர்ச்சியினால் அறிந்தாள்.

"சீதா! சீதா!" என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் அவளுடைய கண்ணிமைகளைத் தொட்டான், உடனே கண்கள் திறந்து கொண்டன. திறந்த கண்கள் ராகவனுடைய முகத்தை உற்று நோக்கின. அந்தக் கண்களின் மூலமாகச் சீதா என்ன செய்தி கூறினாளோ நமக்குத் தெரியாது. "ஆம்; நீ எவ்வளவு கிராதகராயிருந்தாலும் உம்மை மன்னிக்கும் சக்தி என்னிடம் இருக்கிறது!" என்றுதான் சொன்னாளோ, அல்லது, "என்னுடைய மன்னிக்கும் சக்திக்கும் ஒரு வரம்பு உண்டு" என்று எச்சரிக்கை தான் செய்தாளோ, நாம் அறியோம். "சீதா! நான் யார் தெரிகிறதா, நன்றாகப் பார்த்துச் சொல்!" என்றான் ராகவன். சீதா ஈனஸ்வரத்தில், "தெரியாமல் என்ன? தாங்கள் மிஸ்டர் சௌந்தரராகவன் எம்.ஏ." என்றாள். "பலே! பலே! அப்படிச் சொல்லு!" அதோ உன் எதிரில் இருக்கிறது யார் தெரிகிறதா? சொல் பார்க்கலாம்." "தெரியாமல் என்ன? என் அம்மாவை எனக்குத் தெரியாமல் இருக்குமா!" "இதைக் கேட்ட ராகவன் சிறிது திடுக்கிட்டான். தானும் தாரிணியும் சற்று முன் பேசியது அவள் காதில் விழுந்ததா என்ன? மூளை கலங்கிப் போய்விட்டதா? சீதா ராகவனுடைய மடியிலிருந்து சட்டென்று எழுந்தாள். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று மற்ற இருவரும் யோசிப்பதற்கு முன்பு தாரிணிக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். "நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள்; எனக்கு இது புனர் ஜன்மம். இந்தப் புது ஜன்மத்துக்கு நீங்கள்தான் என் அம்மா!" என்றாள்.

தாரிணி அதை மறுக்க எண்ணி, "சீதா! நீ தவறு செய்கிறாய்! உன்னைக் கப்பாற்றியது நான் அல்ல; உன்னுடைய கணவர்..." என்பதற்குள், சீதா, "எல்லாம் எனக்குத் தெரியும்; அவருடைய உலர்ந்த உடுப்பையும் உங்களுடைய ஈரப்புடவையையும் பார்த்தாலே தெரியவில்லையா?" என்றாள். இதற்குள், ராகவன் குறுக்கிட்டு, "இல்லை சீதா? தாரிணி சொல்கிறது பொய், நீ ஊகித்ததுதான் உண்மை. தாரிணிதான் உன்னைக் காப்பாற்றினாள். எனக்கு நீந்தத் தெரியாது என்பது தான் உனக்குத் தெரியுமே! உன்னை நான் தனியாக அழைத்து வந்திருந்தால் நம்முடைய கதி அதோகதிதான். அடுத்த தடவை உன்னைப் படகில் ஏற்றி அழைத்துப் போவதற்குள்ளே நீந்தக் கற்றுக் கொண்டு விடுகிறேன்!" என்றான். "எனக்காக நீந்தக் கற்றுக் கொள்ள வேண்டாம்; நான் இனிமேல் தண்ணீருக்குச் சமீபத்தில் கூடப் போகப் போவதில்லை" என்று கூறினாள் சீதா. சீதாவின் உள்ளத்தில் என்றுமில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆனந்தம் அவளுடைய உடம்பின் நரம்பின் ஒவ்வொரு அணுவிலும் வெளியாகிக் கொண்டிருந்தது. யமலோகத்தின் வாசலிலிருந்து தான் திரும்பி வந்த விஷயத்தை அவள் நன்கு உணர்ந்தாள். கொஞ்சம் தாமதித்திருந்தால் உயிர் போயிருக்கும். இது தனக்குப் புனர் ஜன்மம்; மறுபிறப்பு, தான் இன்னும் ஜீவித்திருப்பது உண்மை. எதிரே தோன்றிய நீல நிற ஏரி, பசுந்தளிர் விருட்சம், வெண்ணிறப் பறவைகள் இவையெல்லாம் உண்மை. தூரத்தில் இருண்டு வந்த இடத்தில் வானம் குனிந்து பூமியைத் தழுவுவதும் உண்மை.

தான் ராகவனுடைய மடியில் படுத்திருப்பதும் உண்மை. எதிரே ஈரப் புடவையுடனும் கருணை நிறைந்த முகத்துடனும் தாரிணி உட்கார்ந்திருப்பதும் உண்மை. படகும் உண்மை; மோட்டார் காரும் உண்மை. புதுடில்லி பங்களாவில் மாமியாரிடம் விட்டு வந்திருக்கும் தன் அருமைக் கண்மணியும் உண்மை. ஆகா! இந்த உலகம் எவ்வளவு ஆனந்த மயமானது? உயிரோடு வாழ்வது எவ்வளவு இன்பகரமானது? இந்த வாழ்க்கையைத் துன்பமயமாக்கிக் கொள்வது போல் மூடத்தனம் வேறு உண்டா? மூன்று பேரும் அன்றிரவு திவானுடைய வீட்டுக்குப் போனபோது வெளியூருக்குப் போயிருந்த திவான் வந்து சேர்ந்திருந்தார். ஏரியில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவரும் அவருடைய குமாரிகளும் மிக்க கவலைக்கும் பரபரப்புக்கும் உள்ளானார்கள். தாரிணியின் தைரியத்தைப் பெரிதும் பாராட்டினார்கள். தாரிணியைத் திவானுக்குப் பெரிதும் பிடித்துப் போய்விட்டது. அவள் தன் தோழியையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்து விட வேண்டும் என்றும், எல்லாரும் தன் வீட்டில் இரண்டு நாள் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும் என்றும் சொன்னார். அதை அவருடைய குமாரிகளும் ஆமோதித்தார்கள் சீதாவோ மிகவும் வற்புறுத்தினாள். ஆகவே, தாரிணியும் நிருபமாவும் திவானுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். திவான் வீடு அந்த இரண்டு நாளும் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்த இரண்டு நாளைக்கு சீதாவும் தாரிணியும் இணை பிரியாத அத்தியந்த சிநேகிதிகள் ஆகிவிட்டார்கள். ராகவன் இதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான். சீதாவின் மனதில் ஏற்பட்டிருந்த களங்கம் அடியோடு நீங்கி விட்டதாகக் காணப்பட்டது.

டில்லிக்குப் போவதற்கு முதல் நாள் தாரிணியும் சீதாவும் தனியாக இருக்க நேர்ந்தபோது, "சீதா! அன்றைக்கு உன்னிடம் ஒரு விஷயம் கேட்டேன். அதற்கு நீ சரியாகப் பதில் சொல்லவில்லை. நீ கழுத்தில் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப் பற்றித்தான். இப்போதாவது அதைப்பற்றிச் சொல்லலாமா?" என்றாள் தாரிணி. "அக்கா! அன்றைக்கு எனக்கு ஏதோ பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். யாரைப் பார்த்தாலும் அகாரணமாகக் கோபம் வந்தது. நீங்கள் கூடப் படகில் 'ஹிஸ்டீரியா' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். உண்மையில் எனக்கு 'ஹிஸ்டீரியா' தானோ என்னமோ? இல்லாவிட்டால் உங்கள் பேரில் எனக்கு எதற்கு அப்படிக் கோபம் வரவேண்டும்? நினைத்துப் பார்த்தால் வெட்கமாயிருக்கிறது!" என்றாள் சீதா. "அதைப்பற்றி நினைக்க வேண்டாம், சீதா! காரணம் எதுவாயிருந்தாலும் ஏரியில் அதற்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டாய்! அடியோடு பழைய கதையெல்லாம் மறந்துவிடு!" என்றாள் தாரிணி. "ஆகட்டும்; மறந்துவிடப் பார்க்கிறேன். நான் அணிந்திருக்கும் ரத்தின ஹாரத்தைப்பற்றி நானே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அதுவே நினைவாக இருக்கிறது." "அது என்ன? இந்த ஊருக்கும் உன்னுடைய ரத்தின ஹாரத்துக்கும் என்ன சம்பந்தம், சீதா!" "நேரான சம்பந்தமில்லைதான் ஆனாலும் ஒன்றுக்கொன்று தொடர்பாக ஞாபகம் வந்து கொண்டிருந்தது; சொல்கிறேன், கேளுங்கள்!"

இந்த முகவுரையுடன் சீதா ரத்தின ஹாரம் தனக்குக் கிடைத்த கதையைச் சொல்லத் தொடங்கினாள். தன்னுடைய தாயார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்தபோது முகமூடி அணிந்த அந்த ஸ்திரீ திடுதிடுவென்று மச்சுப்படி ஏறி வந்தது. தாயாரிடம் இந்த ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துத் தன்னுடைய கலியாணத்துக்காக என்று சொன்னது, கத்தியை மறந்து வைத்துவிட்டுப் போனது, திரும்பி வந்து கத்தியை எடுத்துக் கொண்டு தன்னைக் கட்டி முத்தமிட்டுப் போனது ஆகிய எல்லா விவரங்களையும் சொன்னாள். பிறகு தானும் அம்மாவும் கிட்டாவய்யருடன் கிராமத்துக்குப் புறப்பட்டபோது ரயில்வே ஸ்டேஷனில் பத்திரிகைச் சிறுவர்கள் கூறியதையும், பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியைப் படித்தவுடன் தனக்கு உண்டான சந்தேகத்தையும் பற்றிக் கூறினாள். "அக்கா! பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ எனக்கு இந்த ரத்தின ஹாரத்தைக் கொடுத்தவள் தானோ என்கிற சந்தேகம் என் மனதில் அப்போதே உதித்தது. இந்த ஊருக்கு நாம் வந்து சேர்ந்தது முதல் அந்த ஸ்திரீயைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் இவரும் ஏரிக்கரையில் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேச்சு எடுத்தார். அக்கா! உங்களுக்கு அதைப்பற்றி என்ன தோன்றுகிறது?" என்றாள் சீதா.

"உன்னுடைய சந்தேகத்தில் உண்மை இருக்கலாம். ஆனாலும் நீ யாரிடமும் இதைப்பற்றிச் சொல்லாமலிருப்பதே நல்லது. உன் கணவரிடம் இதைப்பற்றி எப்போதாவது சொல்லியிருக்கிறாயா?" என்றாள் தாரிணி. "சொல்லவில்லை சொன்னால் அவர் காது கொடுத்துக் கேட்கமாட்டார்" என்றாள் சீதா. "சொல்லாமலிருப்பதே நல்லது; புருஷர்களுடைய மனப் போக்கு விசித்திரமானது. ஒரு சமயம் அலட்சியமாய் விட்டாலும் விடுவார். இன்னொரு சமயம் 'இந்த ரத்தின மாலை என்னத்திற்கு?' என்று எடுத்து ஏரியில் எறிந்தாலும் எறிந்து விடுவார்." "அந்தப் பயத்தினாலேதான் நானும் அவரிடம் சொல்லவில்லை." "உன் தாயார் கொடுத்த சீதனத்தை நீ பத்திரமாய்க் காப்பாற்ற வேண்டும் . உன் தாயார் பெயர் என்ன, சீதா?" சீதாவின் தாயார், தகப்பனார் பெயர் முதலிய விவரங்களைக் கேட்டுத் தாரிணி தெரிந்து கொண்டாள். பிறகு, "உன் அப்பா இப்போது எங்கே இருக்கிறார்? அவர் உன்னைப் பார்க்க வருவதுண்டா?" என்று கேட்டாள். "அப்பா என்னை வந்து பார்த்து எத்தனையோ நாளாயிற்று. அம்மா செத்துப் போய்விட்டாள், அப்பா உயிரோடிருக்கிறாரோ, இல்லையோ, தெரியாது. கடிதம் கூட வெகு நாளாய் வரவில்லை. அக்கா! நான் அனாதை, தேவ பட்டணத்தில் என் மாமா பெண் லலிதா இருக்கிறாள். என் அருமைத் தோழி, இப்போது நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். உங்கள் இருவரையும் தவிர எனக்கு வேண்டியவர்களே கிடையாது."

சற்றுப் பொறுத்துத் தாரிணி, "சீதா! ரத்தின மாலை கொடுத்த அந்த ஸ்திரீ யார் என்று உன் தாயார் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா?" என்று கேட்டாள். "இல்லை; ஒருவேளை அம்மாவுக்கும் அது தெரிந்திராது தெரிந்திருந்தாலும் என்னிடம் சொல்லவில்லை." "சீதா! அந்த ஸ்திரீயை அப்புறம் நீ பார்த்ததேயில்லையே? "ஒரு தடவை பார்த்திருக்கிறேன்." "எங்கே? எப்போது?" சீதா புதுடில்லியில் தான் குடியிருந்த வீட்டுக்குத் திரும்பவும் நாற்சந்தில் ஒரு நாள் கத்தியும் கையுமாக அந்த ஸ்திரீயைப் பார்த்தது பற்றிச் சொன்னாள். "அடாடா! அவளைப் பார்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் என் கண்ணில் படவில்லை." "அப்படியா, அக்கா! அவளை எதற்காக நீங்கள் தேட வேண்டும்? உங்களுக்கு அவளைத் தெரியுமா என்ன?" "தெரியும், சீதா!" "எப்படித் தெரியும்?" "அவள் என் தாயார்!" ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனாள் சீதா. தாரிணியை வெறிக்கப் பார்த்தாள். "இப்போது தெரிகிறது உண்மை! தங்களுடைய முகஜாடை எங்கேயோ பார்த்த ஞாபகத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது எதனால் என்று இப்போது தெரிகிறது" என்றாள். "சீதா! நீ நினைப்பது தவறு; அந்த ஸ்திரீ என்னுடைய சொந்தத் தாயார் அல்ல; என்னை வளர்த்த தாயார். என்னுடைய சொந்தத் தாயாரும் தகப்பனும் யார் என்பதும் இன்று வரையில் எனக்குத் தெரியாது. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகத் தான் ரஸியாபேகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்." "அவள் பெயர் ரஸியாபேகமா? அவள் முஸ்லிம் ஸ்திரீயா?"

"ஆம்; என்னை வளர்த்தவள் முஸ்லிம் ஸ்திரீதான். நாலு வருஷத்துக்கு முன்னால் நான் பீஹாருக்குப் போயிருந்தேன். அங்குப் பூகம்ப விபத்துக்கு உள்ளானவர்களுக்குத் தொண்டு செய்வதற்காக. அந்தச் சமயம் ரஸியாபேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்ததற்காக இரண்டு வருஷம் சிறைக்குப் போய்விட்டாள். விடுதலையடைந்த பிறகு எவ்வளவோ தேடியும் பார்க்க முடிய வில்லை. சீதா! நான் எப்பேர்ப்பட்ட துர்ப்பாக்கியசாலி என்று தெரிந்து கொண்டாயல்லவா?" சீதாவின் கண்களில் நீர் ததும்ப, "அக்கா! அந்த ஸ்திரீயை மறுபடியும் நான் பார்த்தால் அவசியம் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்" என்றாள். "அதோடு நான் அவளை அவசியம் பார்க்க வேண்டும் என்று சொல்லு. அப்படிப் பார்க்க முடியாவிட்டால் நான் என்னுடைய உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் சொல்லு!" "அக்கா! அப்படியெல்லாம் நீங்கள் தீர்மானிக்கக்கூடாது. உங்களைத்தான் நான் முழுவதும் நம்பியிருக்கிறேன்" என்றாள் சீதா.
 

New Threads

Top Bottom