Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

எட்டாம் அத்தியாயம்

மரத்தடியில்

இரும்பையொத்த கையினால் தன் கையை அவ்விதம் பிடித்தவன் ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரன் என்பதைக் கண்டான். ஒரு கணநேரத்துக்குள் சூரியாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்து சென்றன. இத்தனை நாட்கள், இத்தனை தூரம் பிரயாணம் செய்தபோதெல்லாம் பிடிபடாமல் வந்து கடைசியாக இந்த டில்லி நகரின் முழுச் சோம்பேறிப் போலீஸ்கார னிடந்தானா சிக்கிக்கொள்ள வேண்டும்? அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில பாக்கியிருக்கும் போது? இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக் கிடைத்திருக்க கூடாதா? இவ்விதம் ஏற்பட்ட மனக் கலக்கத்தைச் சூரியா வெளியில் காட்டிக்கொள்ளாமல், "யார் நீ? எதற்காக என் கையைப் பிடிக்கிறாய்?" என்று அதட்டலாகக் கேட்டான். போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்!" என்று சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று. "உன் இன்ஸ்பெக்டர் சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை? நான் வர முடியாது!" என்று சொன்னான். அதற்கு அந்தப் போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப்பை பார்த்தால் இப்படிச் சொல்ல மாட்டாய் சீக்கிரம் வா" என்று கூறினான்.

இதை அவன் கூறிய குரல் சூரியாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை உண்டாக்கியது. குரலைக் காட்டிலும் அதிகமாக அந்தப் போலீஸ்காரனுடைய முகத்தில் தோன்றிய புன்னகையும் கண்சிமிட்டலும் சூரியாவின் மனதில் குழப்பத்தை உண்டாக்கின. இதற்குள் ஜும்மா மசூதியின் படிகளில் அவர்கள் நின்ற இடத்துக்கு அருகில் கூட்டம் அதிகமாகச் சேர ஆரம்பித்தது. சிலர் போலீஸ்காரனுக்கும் சூரியாவுக்கும் நடந்த விவாதத்தைக் கவனிக்கவும் தொடங்கியிருந்தார்கள். இதையெல்லாம் ஒரு வினாடி நேரத்துக்குள் எண்ணிப் பார்த்து, எப்படியிருந்தாலும் அந்தப் போலீஸ்காரனுடன் போவதே நல்லது என்று சூரியா தீர்மானித்தான். "சரி; வருகிறேன் இன்ஸ்பெக்டர் சாகிப் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டான் சூரியா. "பேசாமல் என்னுடன் வா! ஆனால் ரொம்ப நெருங்கி வராதே! கொஞ்ச தூரத்திலேயே என் பின்னால் வந்து கொண்டிரு! இன்ஸ்பெக்டர் சாகிப்பிடம் நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் நடந்தான். சூரியாவுக்கு இப்போது தைரியம் அதிகமாயிற்று. தான் தப்பித்துக் கொள்வதற்குச் சௌகரியமாகப் போலீஸ்காரன் முன்னால் சென்றதினாலும், அவன் திரும்பிக் கூடத் தன்னைப் பார்க்காததினாலும் சூரியாவின் மனதில் ஏற்கனவே தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. போலீஸ்காரன் போன வழியே அவனைத் தன் கண் பார்வையிலிருந்து தவற விடாமல், பின்னால் நடந்து சென்றான். போலீஸ்காரன் ஜும்மா மசூதியைச் சுற்றி ஜேஜே என்று நெருங்கி நின்ற ஜனக்கூட்டத்தின் வழியாகப் புகுந்து நடந்து வெள்ளி வீதிக்குச் சென்று மணிக்கூண்டை அடைந்தான். பிறகு டவுன் ஹால் காம்பவுண்டுக்குள் புகுந்து போய் அதன் பின்புறத்தில் கொஞ்ச தூரத்தில் இருந்த விசாலமான மைதானத்தை அடைந்தான்.

இன்று 'காந்தி மைதானம்' என்ற பெயர் பெற்று விளங்கும் அந்த மைதானத்தில் ஆங்காங்கே சில மரங்களும் செடிகளும் இருந்தன. மைதானத்தின் விளிம்பை அடைந்ததும் போலீஸ்காரன் நின்று திரும்பிப் பார்த்தான். சூரியா சமீபத்தில் வந்த உடனே அவன் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி, "அந்த மரத்துக்குப் பின்னால் இன்ஸ்பெக்டர் சாகிப் இருக்கிறார், போய்ப் பார்த்துக் கொள்! இன்ஸ்பெக்டர் சாகிப்பும் நீயும் பேசும்போது நான் அருகில் இருப்பது நன்றாயிராது. உங்களுக்குள் எத்தனையோ இரகசியங்கள் இருக்கும்!" என்று சொல்லி மறுபடியும் புன்னகை புரிந்தான். சூரியா பொங்கி வந்த வியப்புடனே போலீஸ்காரன் சுட்டிக்காட்டிய மரத்தை நோக்கிச் சென்றான். மரத்தின் அருகில் போகும்போது அதன் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஆழ்ந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. "அவள் யார்?" என்ற எண்ணம் சூரியாவின் உள்ளத்தில் உதயமாவதற்குள், அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அந்தப் பெண் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தாரிணி என்று கண்டதும் சூரியாவுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. "வருக! வருக! வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்றாள் தாரிணி. "ஓகோ! இன்ஸ்பெக்டர் சாகிப் நீங்கள்தானா? அந்தப் போலீஸ்காரர் என் கையைப் பிடித்ததும் ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டேன்!" என்று சொல்லிக்கொண்டே சூரியா தாரிணிக்கு எதிரில் உட்கார்ந்தான். மேலும் தொடர்ந்து, "உங்களுடைய சாமர்த்தியம் எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆயினும் ஒரு போலீஸ்காரனையே உங்கள் வலையில் சிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை," என்று சொன்னான்.

"போலீஸ்காரனைப் பார்த்து எதற்காக அவ்வளவு பயம்? புரட்சி வீரர் சூரியாவே போலீஸ்காரனுக்குப் பயப்பட்டால் மற்றவர்களின் கதி என்ன?" என்று தாரிணி கேட்டாள். "பயம் என்று நான் சொன்னேனா? எத்தனையோ இடங்களில் எவ்வளவோ வேஷம் போட்டு எத்தனையோ தந்திரம் செய்து போலீஸாரிடம் தப்பி வந்தேன். புனிதமான சந்நியாசி வேஷங்கூடப் போட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்து இத்தனை தூரம் டில்லிக்கு வந்துவிட்டுத் தங்களைச் சந்திக்காமல், விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல், போலீஸ் 'லாக் - அப்'புக்குப் போகிறதென்றால் திகைப்பாயிராதா?" "போன காரியமெல்லாம் பூர்த்தியாயிற்றா?" என்று தாரிணி கேட்டாள். "எப்படி பூர்த்தியாகும்? அதற்குள்ளே தான் தலை போகிற காரியம் என்று தங்களிடமிருந்து கடிதம் வந்து விட்டதே? அந்தக் கடிதத்தினால் தேவப்பட்டணத்தில் நேர்ந்த விபரீதங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எதற்காக அப்படிக் கடிதம் எழுதினீர்கள்? சீதாவுக்கு அவ்விதம் என்ன நேர்ந்துவிட்டது? உண்மையில் சீதாவை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது. ஒரு தனிப்பட்ட மனுஷிக்காக எவ்வளவோ முக்கியமான தேசீய காரியங்கள் தடைப்பட்டுப் போகிறதென்றால்?..." "நான் அவ்விதம் நினைக்கவில்லை; கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று நினைத்துக்கொள்வது போல நம்மாலேதான் தேசத்தின் காரியங்கள் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறோம். தெய்வ சித்தம் ஒன்று இருக்கிறது; அதன் சட்டப்படி எல்லாம் நடக்கின்றன. தேசத்தை நாம் காப்பாற்ற முயல்வதைவிட நமக்குத் தெரிந்திருக்கும் ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு" என்றாள் தாரிணி.

"கடைசியாக நாம் சந்தித்த பிறகு தத்துவ ஆராய்ச்சி பலமாகச் செய்திருக்கிறீர்கள். முன் தடவை நாம் பேசிய போது தனி மனிதர்களுடைய சுக சௌகரியங்களைக் காட்டிலும் தேச நன்மையே பெரிது என்று முடிவு செய்தோம். இந்த மாறுதலுக்கு காரணம் என்னவோ தெரியவில்லை." "உங்கள் அத்தங்காதான் காரணம் தேசம் எந்தக் கேடாவது கெட்டுப் போகிறது சீதாவின் கஷ்டம் நீங்கினால் போதும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது." "சீதாவின் பேரில் உங்களுக்கு அளவில்லாத கருணை உண்டாகியிருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை." "ஒருவரிடம் ஒருவர் பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டுமா என்ன?" "வேண்டியதில்லைதான், பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டியதில்லை என்பதினாலேதான் ஸ்திரீகள் முதல் நம்பர் அயோக்கியர்கள் பேரில் காதல் கொள்ளுகிறார்கள்?" "நீங்கள் சொல்வது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. ஸ்திரீகள் அயோக்கியர்கள் மீது மட்டுமே காதல் கொள்ளுகிறார்கள் என்றா சொல்லுகிறீர்கள்? அப்படியானால் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஸ்திரீகள் காதல் கொள்ளக்கூடிய யோக்கியர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட யோக்கியர் ஒருவரைத் தெரியும்" என்று தாரிணி கூறிவிட்டு எங்கேயோ பார்த்தாள். சூரியா எரிச்சலுடன், "அப்பேர்ப்பட்ட தனிப் பெரும் யோக்யன் யார் என்று எனக்கும் தெரியும். அவன் பெயர் சௌந்தரராகவன், இல்லையா?" என்றான். "நான் சௌந்தரராகவனை நினைத்துக் கொண்டு பேசவில்லை. என்றாலும் அவரையும் நான் அயோக்கியர் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில தவறுகள் அவர் செய்யக் கூடும். ஆனால் சீதாவிடம் அவருக்கு எவ்வளவோ அன்பு உண்டு என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சீதா தன்னுடைய வீண் சந்தேகங்களினால் அவருடைய அன்பையெல்லாம் விஷமாகச் செய்து விடுகிறாள்" என்றாள் தாரிணி. "போகட்டும்; ராகவனுடைய அந்தரங்கத்தைச் சீதாவை விட நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?"

"சில சமயம் ஒரு பொருளுக்கு மிகவும் சமீபத்திலிருப்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் தூரத்திலிருப்பவர்களுக்கு அதன் சொரூபம் நன்றாய்த் தெரிகிறது. அதனால் சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்தை என்னால் நன்றாய் அறிந்து கொள்ள முடிந்தது." "யார் கண்டார்கள்? சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்துக்கு நீங்கள் அதிக சமீபத்தில் இருக்கலாமல்லவா?" "சூரியா! நீங்கள் ஏதோ விகல்பமாகப் பேசுகிறீர்கள், இத்தனை நேரமும் அறியாமற் போனேன். இப்படிப் பேசுவதானால் நான் உங்களுடன் பேசுவதற்கே இஷ்டப்படவில்லை, நீங்கள் எழுந்து போகலாம்!" "இந்த மைதானம் உங்களுக்குச் சொந்தமா என்ன?" "சரி; அப்படியானால் நான் எழுந்து போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு தாரிணி எழுந்தாள். "சூரியா பரபரப்புடன், "தாரிணி! நான் சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் கூறியது பிசகு தான்; தயவு செய்து உட்காருங்கள்! சீதா விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போங்கள்" என்றான். தாரிணி மறுபடி உட்கார்ந்து "திடீரென்று உங்களிடம் இந்த மாறுதல் காணப்படுவதன் காரணம் தெரியவில்லை. யாரோ ஏதோ சொல்லி உங்கள் மனதைக் கெடுத்திருக்கிறார்கள். சீதாவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தீர்களா?" என்றாள். "இல்லை; ஸ்டேஷனில் இறங்கியதும் நேரே இங்கு வந்தேன். என்னுடைய அறைக்குக் கூடப் போகவில்லை சீதா எப்படி இருக்கிறாள்? அவள் விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்." "அவள் மனதில் ஏதோ ஒரு விஷம் புகுந்திருக்கிறது. ஏதோ ஒரு சந்தேகம் குடிகொண்டிருக்கிறது. அதனாலேயே அவளுடைய குடும்ப வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆயுளுக்கே அபாயம் வந்துவிடும் போலிருக்கிறது. நீங்கள் உடனே போய் விசாரித்து அவளுடைய மனதிலுள்ளதைத் தெரிந்து கொள்ள முயல வேண்டும். சில நாளைக்கு அவளை எங்கேயாவது அனுப்பி வைத்தாலும் நல்லது."

"அவள் எந்த ஊருக்குப் போவாள்? போவதற்கு எந்த ஊர் இருக்கிறது? நான் சொல்கிறேன், தாரிணி! சீதா இனிமேல் சுகமடைவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது; அவள் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் ஆனால் ஹிந்து சாஸ்திரமும் பிரிட்டிஷ் சட்டமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆகையால் துன்பப்பட்டுச் சாகவேண்டியது தான்." "நான் கூடச் சில சமயம் நினைத்ததுண்டு. சீதா விவாகரத்து செய்துவிட்டு உங்களைக் கலியாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருப்பாள் என்று." "ஒரு நாளும் இல்லை; நீங்கள் நினைப்பது பெருந்தவறு. சீதாவிடம் என்னுடைய அபிமானம் அந்த விதமானது அன்று. அத்தையிடம் நான் கொண்ட அபிமானம் அவளுடைய பெண்ணின் க்ஷேமத்தில் அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. மற்றபடி அவளுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் பொருந்தவே பொருந்தாது. சீதா பட்டுப்பூச்சி இனத்தைச் சேர்ந்தவள். பட்டிலும் பகட்டிலும் பளபளப்பிலும் படாடோ பத்திலும் பிரியம் கொண்டவள். பார்ட்டிகளுக்குப் போவதே ஜன்ம சாபல்யம் என்று எண்ணியிருக்கிறவள்..." "சீதா பிறக்கும்போதே இந்த மாதிரி குணங்களுடனே பிறந்தாளா? எல்லாம் பின்னால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் தானே?" "அது எப்படி இருந்தால் என்ன? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தேவப்பட்டணம் போலீஸாரிடமிருந்து தப்புவதற்காக நான் சந்நியாசி வேஷம் பூண்டேன். அந்த வேஷத்திலேயே நான் சில நாள் இருக்க நேர்ந்தது. அப்போது உண்மையாகவே நான் சந்நியாசி ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மதராஸில் காமாட்சி அம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகு அந்த எண்ணம் பலம் பெற்றுத் தீர்மானம் ஆயிற்று."

"தங்களுடைய தீர்மானத்தை நான் மிகவும் மெச்சுகிறேன்." "எல்லா விஷயத்திலும் நம்முடைய கருத்துக்கள் ஒத்திருப்பது பற்றிச் சந்தோஷம்" என்றான் சூரியா. "எனக்கும் சந்தோஷந்தான்; ஆனால் காமாட்சி அம்மாள் தங்களுடைய குருநாதரானது எப்படி?" "சீதாவைப் பற்றி விசாரிப்பதற்காக அந்த அம்மாளிடம் போயிருந்தேன். சீதாவுக்கு டைபாய்ட் சுரம் வந்தது பற்றியும் நீங்கள் அவளுக்குச் சிசுரூஷை செய்து பிழைக்க வைத்தது பற்றியும் தெரிவித்தாள்." "அவ்வளவுதானா! அதிலிருந்து எப்படிச் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும் உறுதி ஏற்பட்டது?" "காமாட்சி அம்மாள் இன்னும் சில விஷயங்களும் சொன்னாள். ராகவனுடைய இளம்பிராயத்தில் அவன் வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டதைப் பற்றியும் அவளும் அதற்கு ஆவலாயிருந்தது பற்றியும் சாதி வித்தியாசம் காரணமாகத் தான் அதற்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது பற்றியும் சொன்னாள். தாயாருடைய வாக்கை இவ்வளவு பக்தியாக நிறைவேற்றி வைத்த சௌந்தரராகவனை நான் மனதார மெச்சினேன்." "நீங்கள் இன்றைக்கு ஒரு மாதிரி பேசி வந்ததின் காரணம் இப்போது தெரிகிறது. ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணின் இப்போதைய அபிப்பிராயத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாள் சொன்னாளா?" "இல்லை; அவளுக்கு எப்படி அது தெரியுமா? ஆனால், 'ராகவன் அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை சந்தோஷமாயிருந்திருப்பான்' என்று சொன்னாள்."

தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "இதற்கும் தங்களுடைய சந்நியாசத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டாள். "நான் எப்போதாவது கலியாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால், அவள் இன்னொரு ஆசாமியிடம் காதல்கொண்டிருப் பதாகத் தெரிந்தால் நான் சந்நியாசம் வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?" "நீங்கள் நினைப்பது முற்றும் தவறு; அந்தப் பெண்ணின் இதயத்தில் ராகவனுக்கு இப்போது கொஞ்சம் கூட இடமில்லை. நீங்கள் சந்நியாசி ஆனதாகத் தெரிந்தால் அவளும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி கன்னிகா மடத்தைச் சேர்ந்து விடுவாள்." சூரியா ஆர்வத்துடன் தாரிணியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, "இது உண்மைதானா?" என்று கேட்டான். "தங்களுடைய இருதயத்தையே கேட்டுப் பார்க்கிறதுதானே?" என்று சொன்னாள் தாரிணி. "என் இருதயம் சொல்லியதை நம்புவதற்கு இதுவரை எனக்குப் பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய பாக்கியம் இந்த துரதிர்ஷ்டசாலிக்கு எப்படிக் கிடைக்கும் என்றும், இருதயம் நம்மை ஏமாற்றுகிறது என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்." "இருதயம் ஏமாற்றவில்லை; சலன சுபாவமுள்ள அறிவு தான் ஏமாற்றிற்று. சீதாவையும் அதே அறிவு தான் ஏமாற்றுகிறது. நீங்கள் உடனே சென்று அவளுடைய நிலையைத் தெரிந்து கொண்டு வாருங்கள். சீதாவை நான் பார்த்து இருபது நாள் ஆகிவிட்டது எப்படியிருக்கிறாளோ என்று கவலையா இருக்கிறது?" "அப்படியே ஆகட்டும், நாளைக்கு நாம் இந்த இடத்திலேயே சந்திக்கலாமா?"

"கூடவே கூடாது; சுற்றுமுற்றும் பாருங்கள் நம்மை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். நாளைக்கு ஜாகையில் சந்திக்க வேண்டியது தான். நம்முடைய நண்பர்கள் உங்களுடைய அனுபவங்களைக் கேட்க ஆவலுள்ளவர் களாயிருக்கிறார்கள். நாளைக்கு இதே நேரத்துக்கு மணிக்கூண்டுக்கு அருகில் வாருங்கள். போலீஸ்காரன் இந்துலால் உங்களைச் சந்தித்து ஜாகைக்கு அழைத்துக் கொண்டு வருவான். இப்போது என்னுடன் தொடர்ந்து வரவேண்டாம். நான் அந்தப் போலீஸ்காரன் அருகில் போய்ச் சேரும் வரையில் தாங்கள் அந்த மரத்தடியிலே உட்கார்ந்திருப்பது நல்லது." இவ்விதம் கூறிவிட்டுத் தாரிணி எழுந்து நடந்தாள். சூரியா அங்கேயே உட்கார்ந்து தாரிணியும் போலீஸ்காரனும் மறையும் வரையில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
ஒன்பதாம் அத்தியாயம்

இதயம் நின்றது

தாரிணி கண்ணுக்கு மறைந்ததும் சூரியா அங்கிருந்து எழுந்து செல்லலாம் என்று நினைத்தான். அச்சமயம் இத்தனை நேரமும் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த மூன்று மனிதர்கள் தன்னை நோக்கி வருவதைச் சூரியா பார்த்தான். அவர்கள் அருகில் வரட்டும் என்று காத்திருந்தான். மூன்று மனிதர்களும் வந்து சூரியாவைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். "தம்பி! உனக்கு எந்த ஊர்?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான். "எனக்கு மதராஸ்!" என்றான் சூரியா. "ஆ! மதராஸ்!" என்று மூன்று பேரும் சேர்ந்து சொன்னார்கள். சற்றுப் பொறுத்து, "இங்கு ஒரு பெண் உட்கார்ந்திருந்தாளே, அவள் உனக்கு என்னமாக வேணும்?" என்று ஒருவன் கேட்டான். "அவள் என் சிநேகிதி!" என்றான் சூரியா. "ஆகா! அவள் உன் சிநேகிதி!" என்றார்கள் மூன்று பேரும் சேர்ந்தாற்போல். அதற்குப் பிறகு சற்று நேரம் சம்பாஷணை நகரவில்லை. சூரியா பொறுத்துப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான். "பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றான் ஒருவன். "பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றார்கள் மற்ற இருவரும். அவர்கள் ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம் என்று ஏற்கனவே சந்தேகித்தான். இப்போது அவர்கள் பல்லவி, அனுபல்லவி முறையில் பேசுவதிலிருந்து அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது.

"சொல்லுங்கள்; கேட்பதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா. "அந்தப் பெண்ணின் சிநேகம் உனக்கு வேண்டாம்!" என்று ஒருவன் சொன்னான். மற்ற இருவரும் அதையே திருப்பிச் சொன்னார்கள். "ஏன் அந்தப் பெண்ணிடம் என்ன கெடுதல்? அவளிடம் சிநேகம் செய்தால் என்ன?" என்று சூரியா கேட்டான். "பெரிய இடத்துச் சமாசாரம்!" என்றான் ஒருவன். "ஆமாம் ரொம்பப் பெரிய இடத்துச் சமாசாரம்" என்றார்கள் மற்ற இருவரும். "அப்படியானால் அந்த ரொம்பப் பெரிய இடத்திலே போய்ச் சொல்லுங்கள் என்னிடம் ஏன் சொல்லவேண்டும்?" என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்த்தார்கள். "எனக்கு நேரமாகிறது; நான் போய் வருகிறேன்" என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, "சொல்லி விடலாமா?" என்று கேட்டான். "சொல்லிவிடலாமா?" என்று அவர்களும் கேட்டார்கள். முதல் மனிதன் சூரியாவைப் பார்த்து, "தம்பி! உனக்குப் பணம் வேணுமா?" என்றான். "எவ்வளவு?" என்று சூரியா கேட்டான். முதல் மனிதன் மற்றவர்களைப் பார்த்து, "எவ்வளவு என்று கேட்கிறான்; சொல்லட்டுமா?" என்றான். "சொல்லு!" என்றார்கள். "தம்பி! உனக்கு லட்சம் ரூபாய் பணம் வேண்டுமா? ஒரு லட்சம் ரூபாய்!" என்றான் முதல் மனிதன். சூரியா கொஞ்சம் திகைத்துப் போனான். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, "கள்ள நோட்டா? நிஜப் பணமா?" என்றான். "ஆகா! கள்ளநோட்டு!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். பிறகு முதல் மனிதன், தம்பி! நிஜப் பணம்! ஒரு லட்சம் ரூபாய் நோட்டு வேண்டாமென்றால் தங்கமாகத் தருகிறோம்!" என்றான்.

"ஆமாம் தங்கமாகத் தருகிறோம்!" என்றார்கள் மற்றவர்கள். "கொடுங்கள்" என்று சூரியா கையை நீட்டினான். "கெட்டிக்காரப் பையன்; பணத்துக்குக் கையை நீட்டுகிறான்!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். கடைசியில் ஒருவன் மென்று விழுங்கிக்கொண்டு, "ஒரு லட்சம் ரூபாய் சும்மாக் கிடைக்குமா? எங்களுக்கு ஒரு உதவி செய்தால் கிடைக்கும்!" என்றான். "என்ன உதவி?" என்றான் சூரியா. "சற்று முன்னால் நீ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாயே? அவளைக் கொண்டு வரும்படி எங்களுக்குப் பெரிய இடத்து உத்தரவு கிடைத்திருக்கிறது. அதற்கு நீ உதவி செய்தால் லட்சம் ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்!" சூரியா இம்மாதிரி ஏதோ வரப்போகிறது என்று எதிர் பார்த்தான். ஆயினும் அதைக் காதால் கேட்டதும் சொல்ல முடியாத கோபம் வந்தது. கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டான். இப்போது கோபித்துக்கொண்டு என்ன பயன்? அவர்கள் மூன்று பேர்; முரட்டுத் தடியர்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதால் பல காரியங்கள் கெட்டுப் போகும். மேலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்று அவனுக்கு இன்னும் சந்தேகமாயிருந்தது.

கொஞ்ச நேரம் யோசிப்பதுபோலப் பாசாங்கு செய்துவிட்டு, "இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்; யோசித்துப் பதில் சொல் கிறேன்" என்றான். "எப்போது எங்கே சந்திக்கலாம்!" என்று முதல் மனிதன் கேட்டான். "இதே இடத்தில் இதே நேரத்தில் நாளை மறுநாள் சந்திக்கலாம்!" என்றான் சூரியா. "உன்னுடைய ஜாகை எங்கே?" என்று ஒருவன் கேட்டான். "ஜாகை எங்கே?" என்று மற்ற இருவரும் கேட்டார்கள். "தற்போது எனக்கு ஜாகை எதுவும் இல்லை; இனிமேல் தான் தேட வேண்டும்!" என்று சொல்லிக்கொண்டு சூரியா எழுந்தான் அவர்களும் எழுந்தார்கள். சூரியா எங்கே போனாலும் அவர்களும் சற்றுத் தூரத்தில் பின் தொடர்ந்து வந்தார்கள். காரியம் இல்லாத இடங்களுக்கெல்லாம் சூரியா சென்று அந்த மூன்று பேருடைய பார்வையிலிருந்து தப்புவதற்கு இரவு வெகுநேரமாக ஢விட்டது. ஆயினும் சீதாவை அன்று இரவு எப்படியும் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்துடன் நடந்தான். சீதா தன்னுடைய வீட்டில் அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தாள். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 'டிக் டிக், டிக், டிக்' என்று அடித்துக் கொண்டி ருந்தது. சீதாவின் இதயம் கடிகாரத்தின் 'டிக்' சத்தத்தோடு ஒத்து அடித்துக் கொண்டிருந்தது. கடிகாரத்தின் ஒவ்வொரு 'டிக்'கும் தன்னுடைய வாழ்நாளின் இறுதியை அருகில் கொண்டுவந்து கொண்டிருக்கிறது என்பது சீதாவுக்குத் தெரிந்துதானிருந்தது. கடிகார முள் நள்ளிரவின் பன்னிரண்டு மணியை நெருங்க நெருங்க, சீதாவின் இதயத்தில் குத்தியிருந்த துன்ப முள்ளின் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது.

மணி பதினொன்றரை ஆகிவிட்டது, அவளுடைய ஆயுளில் இன்னும் அரை மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. அதற்குள் எத்தனையோ காரியங்கள் செய்தாக வேண்டும். குழந்தைக்குக் கடிதம் எழுத வேண்டும்; இவருக்கும் நாலு வரி எழுதத்தான் வேண்டும். ஆனால் எத்தனை முயன்றாலும் ஒன்றும் எழுத வரவில்லையே, என்ன செய்கிறது. சரியாக மணி பன்னிரண்டுக்குக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு செத்துப் போவது என்று சீதா முடிவு செய்திருந்தாள். அதற்குத் தயாராவதற்காக ஒன்பது மணிக்கே ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டாள். சாகிறபோது அவலட்சணமாக எதற்குச் சாகவேண்டும்? நாலு பேர் வந்து பார்க்கிறவர்கள், "அடடா! இப்பேர்ப்பட்ட அழகியை மனைவியாகப் படைத்தும் இந்த ராகவனுக்கு அவளை வைத்துக்கொண்டு வாழக் கொடுத்து வைக்கவில்லையே?" என்று சொல்ல வேண்டாமா? அதற்காகவே ஆடை ஆபரணங்களைப் பூண்டு அழகு செய்துகொண்டு வந்து எழுதுவதற்கு உட்கார்ந்தாள். வஸந்திக்கு முதலில் கடிதம் எழுதி வைக்க எண்ணினாள். ஆனால் குழந்தையை நினைத்துக் கொண்டதும் அழுகை அழுகையாக வந்தது. அவளைப் பார்க்காமல் செத்துப் போகிறோமே என்ற எண்ணத்தினால் நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. குழந்தைக்கு என்ன எழுதுவது? "உன் அப்பா என்னைக் கொன்று விட்டார்! அவரை நீ எனக்காகப் பழி வாங்கு" என்று எழுதலாமா? சீச்சீ! இது என்னை பைத்தியக்கார எண்ணம்? முதலில் லலிதாவுக்குக் கடிதம் எழுதலாம் என்று ஆரம்பித்தாள். "என் ஆருயிர்த் தோழி லலிதாவுக்கு..." என்பதற்கு மேல் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. லலிதாவை நினைத்ததும் பழைய ஞாபகங்கள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்தன.

ஆகா! ராஜம்பேட்டையில் கலியாணத்துக்கு முன்னால் லலிதாவும் தானும் கூடிக் குலாவி அந்தரங்கம் பேசிய நாட்கள் எவ்வளவு ஆனந்தமாக இருந்தன? அப்புறம் இவர் பெண் பார்க்க வந்த போதும், லலிதாவுக்குப் பதிலாகத் தன்னை மணப்பேன் என்று சொன்னபோதும் தான் அடைந்த களிப்பு என்ன? இப்போது அனுபவிக்கும் நரக வேதனை என்ன? தான் அப்போது லலிதாவுக்குச் செய்த துரோகந்தான் இப்போது தன்னை வந்து இப்படிப் பீடித்திருக்கிறதோ? லலிதாவுக்கு என்ன எழுதுவது? "என்னை மன்னித்துவிடு!" என்று எழுதுவதா? அப்படி எழுதினால் அவளுக்கு அர்த்தமே ஆகாதே! எதற்காக மன்னிப்பு என்று கேட்பாளே? தன்னுடைய துயரத்தைச் சொன்னால் கூட அவளுக்கு விளங்காது. அவள் ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். சந்தோஷமாய் இருக்கிறவர்களுக்குத் துக்கப்படுபவர்களின் துக்கத்தை அறிந்து கொள்ளக் கூட முடியாது. "என் புருஷன் என்னைக் கஷ்டப்படுத்துகிறான்!" என்றால், "வெறுமனே ஒரு புருஷன் கஷ்டப்படுத்துவானா? உன்னுடைய நடத்தையில் ஏதாவது கெடுதல் இருக்கும்!" என்று சொல்வார்கள். அதிலும் இல்வாழ்க்கையில் சந்தோஷமாயிருப்பவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். லலிதாவுக்கு இப்போது என்ன எழுதி என்ன பிரயோஜனம்? சந்தோஷமாயிருக்கிறவளிடம் போய்த் தன்னுடைய துக்கத்தைச் சொல்லிக் கொள்வானேன்? அப்படிச் சொல்லிக்கொண்டு அவள் பரிதாபப்படுவதாக வைத்துக் கொள்ளலாம்.

அதனால் சாகப் போகிற தனக்கு என்ன உபயோகம் ஏற்படப் போகிறது? இவருக்குக் கடிதம் எழுதலாம் என்றால், அதைப் பற்றி நினைக்கும்போதே அவளுடைய இதயம் வெடித்து விடும் போலிருந்தது; என்னத்தை எழுதுவது? "இந்த உலகத்தில் தங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை. தாங்களே என்னை வெறுத்து விட்டீர்கள் இனி இந்தப் பூமியில் இருந்து தான் என்ன பயன்!" என்று எழுதலாமா? "ஓயாமல் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அதன்படி இதோ தொலைந்து போகிறேன்" என்று எழுதி வைக்கலாமா? இவ்விதம் எண்ணியதும் சீதாவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் உதிர்ந்தது. ராகவன் தன்னை எத்தனையோ விதத்தில் கொடுமைப்படுத்தியதெல்லாம் சீதாவின் மனதை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சில காலமாக அவன் அடிக்கடி சொல்லி வந்தது அவளை எல்லையில்லாத துன்பத்துக்கு ஆளாக்கியது. எங்கே தொலைந்து போகிறது? தன்னை அழைத்துக் கொள்ள யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? தாயில்லை; தகப்பனாரைப் பற்றித் தகவல் இல்லை; வேறு எங்கே தொலைந்து போகிறது? ஒரு வழியாகச் செத்து தொலைந்து போக வேண்டியது தான்! ஆகா! சீதையைப் பூமாதேவி அழைத்துக் கொண்டது போல் தன்னையும் அழைத்துக் கொள்ளக்கூடாதா? சகுந்தலையை அவள் தாயார் அழைத்துக்கொண்டு போனது போல் தன்னைத் தன்னுடைய தாயார் அழைத்துக் கொண்டு போகக்கூடாதா?

அப்படியெல்லாம் கதைகளிலே தான் நடக்கும், உண்மை வாழ்க்கையில் நடைபெறாது. தானே சுட்டுக்கொண்டு செத்துப் போனால் தான் போனது! நல்ல வேளையாக இவர் கைத் துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்! அதற்காகத் தன் கணவருக்கும் நன்றி செலுத்த வேண்டியது தான். கடிதத்தில் அவ்விதம் நன்றி செலுத்துவதாக எழுதி வைக்கலாமா? ஐயோ! இந்தக் கடிகாரத்துக்கு என்ன இத்தனை அவசரம்? ஏன் இவ்வளவு வேகமாக இது ஓடுகிறது? ஏன் இவ்வளவு துரிதமாக இருதயம் அடித்துக் கொள்கிறது. இதோ மணி பன்னிரண்டுக்கு நெருங்கி வந்துவிட்டதே இன்னும் சில நிமிஷந்தானே பாக்கி இருக்கிறது? பன்னிரண்டு மணி அடித்ததும் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாகச் சீதா தீர்மானம் செய்திருந்தாள். பன்னிரெண்டரை மணிக்கு அவர் வருவார். வருவதற்குள்ளே காரியம் முடிந்து போய்விட வேண்டும். அவர் வீட்டிலிருக்கும்போது இந்தக் காரியம் தான் செய்தால், வீணாக அவர் பேரில் பழி விழுந்தாலும் விழும். "இருந்தும் கெடுத்தாள்; இறந்தும் கெடுத்தாள்!" என்ற அபகீர்த்தி தனக்கு ஏன் ஏற்பட வேண்டும். குழந்தை வஸந்தி தாயில்லாப் பெண்ணானால், தகப்பனாராவது அவளுக்கு இருக்க வேண்டாமா? அந்த இரண்டு நிமிஷமும் ஆகிவிட்டது கடிகாரம் டிங், டிங், டிங் என்று பன்னிரண்டு மணி அடித்தது. மணியை மனதில் எண்ணிக்கொண்டே வந்த சீதா, பன்னிரண்டு மணி அடித்து முடிந்ததும் கைத் துப்பாக்கியைக் கையில் எடுக்க எண்ணினாள். அந்தச் சமயத்தில் அறையில் அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. சீதாவின் இதயத்தின் துடிப்புச் சட்டென்று நின்றது; அவளுடைய கை செயலற்றுப் போயிற்று. வருகிறவர் யார்? அவர்தானா? சீக்கிரம் வந்துவிட்டாரா? மனத்துக்கு மனது விஷயம் தெரிந்து போய்த் தன்னைக் காப்பாற்றுவதற்காக வருகிறாரா? கைத் துப்பாக்கியைப் பார்த்ததும் தான் செய்ய எண்ணிய காரியத்தை ஊகித்து அறிந்து கொள்வாரா? தன்னுடைய மனவேதனையைத் தெரிந்து கொள்வாரா? தன்னிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வாரா?
 
பத்தாம் அத்தியாயம்

ஒரே வழிதான்!

காலடிச் சத்தம் வெகு சமீபத்தில் வந்த பிறகும் சீதா திரும்பிப் பார்க்கவில்லை. எதற்காகத் திரும்பிப் பார்க்க வேண்டும்? தான் என்ன செய்ய எண்ணியிருந்தாள் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும்; அருகில் வந்து கைத் துப்பாக்கியைப் பார்த்துத் திடுக்கிடட்டும்; தன்னை ஏதாவது கேட்கட்டும், பிறகு பதில் சொல்லிக் கொள்ளலாம். வந்த ஆசாமி சீதாவுக்குப் பின்புறம் வந்து சமீபமாக நின்றான். சட்டென்று கையை நீட்டிக் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான்; பிறகு "சீதா!" என்றான். குரல் ராகவனுடைய குரல் அல்ல என்பதை அறிந்ததும் சீதா வியப்புடன் திரும்பிப் பார்த்தாள். வந்திருப்பவன் சூரியா என்பதைத் தெரிந்து கொண்டாள். இதனால் அவள் மனதில் அளவற்ற ஏமாற்றம் உண்டாயிற்று. அதே காலத்தில் ஓர் விந்தையான மாறுதல் அவள் மனப்போக்கில் ஏற்பட்டது. தான் உயிரை விட்டு விடுவது என்கிற தீர்மானத்தைச் சீதா அந்தக் கணத்தில் மாற்றிக் கொண்டாள். உயிரோடு எவ்வளவு நாள் இருக்கலாமோ இருந்து ராகவனுக்கு எவ்வளவு மனக்கிலேசம் அளிக்கலாமோ அவ்வளவும் அளிக்க வேண்டுமென்று எண்ணினாள். இந்தத் திடீர் நோக்கம் நிறைவேறுவதற்கு சூரியாவின் உதவி தனக்குத் தேவை. அதற்குத் தகுந்தபடி அவனிடம் நடந்து கொள்ளவேண்டும்.

"அம்மாஞ்சி! நீயா? நல்ல சமயத்தில் தான் வந்தாய்; வா!" என்று வரவேற்றாள். "அப்படி ஒன்றும் நல்ல சமயமாக எனக்குத் தோன்றவில்லையே? நீ செய்ய உத்தேசித்திருந்த காரியத்துக்குத் தடங்கலாக அல்லவா நான் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது?" "நான் என்ன செய்ய உத்தேசித்ததாக எண்ணினாய்!" "நள்ளிரவில் கைத்துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது எதற்காக இருக்கும்?" "ஏன்? திருடன் வந்தால் அவனைச் சுடுவதற்குத் தயாராக வைத்திருக்கலாம்." "புது டில்லியில் திருடன் வந்தால் அவ்வளவு சுலபமாய் வந்து விடுவானா? வாசற் காவற்காரன் இருக்கிறானே?" "காவற்காரன் இருந்தால் உன்னை எப்படி உள்ளே விட்டான்?" "அவன் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறான் நான் சத்தம் செய்யாமல் உள்ளே வந்துவிட்டேன்." "ஆம்; இந்த ஊர் வேலைக்காரர்களே இப்படித்தான். ஓயாமல் தூங்கி விழுவார்கள்... பின்னே, கைத் துப்பாக்கி எதற்காக வைத்திருக்கிறேன் என்று நினைத்தாய்? என்னைச் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக என்று நினைத்தாயா?" "அப்படியில்லையென்றால் மிக்க சந்தோஷமடைவேன். உன் முகத்தையும் கண்ணீர் ததும்பும் கண்களையும் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. எனக்கு இவ்விடமிருந்து வந்த கடிதமும் அவ்விதம் எண்ணும்படி செய்தது." "கடிதம் யார் எழுதியது." "அதைப்பற்றி உனக்கு என்ன கவலை, சீதா! யாரோ எழுதினதாக வைத்துக் கொள்ளலாம்." "கடிதத்தில் என்ன எழுதியிருந்தது? அதையாவது எனக்குச் சொல்லலாமா?"

"நீ மிகவும் மனக் கஷ்டத்துக்கு உள்ளாகியிருப்பதாக எழுதியிருந்தது. என்ன மனக் கஷ்டம் என்பதை நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். உண்மையில் உனக்குக் கஷ்டம் ஒன்றுமில்லையா, அத்தங்கா! அப்படியானால், என் கவலை தீர்ந்தது. நான் உடனே திரும்பிப் போய் என்னுடைய வேலையைப் பார்ப்பேன்." "சூரியா! உன்னிடம் உண்மையை மறைப்பதில் என்ன பயன்? உன்னுடைய உதவி எனக்குத் தேவையாயிருக்கிறது. அதனால்தான் 'நல்ல சமயத்தில் வந்தாய்' என்றேன். நான் சுட்டுக்கொண்டு சாகத் தயாராயிருந்தேன். சூரியா! ஆனால் சாவதற்கு முன்னால் என் ஆசைக் கண்மணிக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஒன்றும் எழுதவே தோன்றவில்லை. உன்னிடம் சொன்னால் நீ நேரிலே போய்த் தெரிவித்து விடுவாயல்லவா? மதராஸுக்கு எப்போதாவது போகாமலா இருக்கப் போகிறாய்?" என்று சீதா பரிதாபம் நிறைந்த குரலில் கூறினாள். "அத்தங்கா! கொஞ்ச நாளைக்கு முன்பு நான் மதராஸுக்கும் தேவப்பட்டணத் துக்கும் போயிருந்தேன்." "அப்படியா? மதராஸில் வஸந்தியைப் பார்த்தாயா!" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள். "பார்த்தேன், உன் மாமனார் மாமியாரையும் பார்த்தேன்!" "வஸந்தி எப்படியிருக்கிறாள்? உன்னிடம் பேசினாளா?" "உடம்பு நன்றாக இருக்கிறாள்; ஆனால் குழந்தையின் மனம் குன்றிப்போயிருக்கிறது; அப்பா அம்மாவைப் பார்ப்பதற்கு ஏங்கிப் போயிருக்கிறாள். அப்படிப்பட்ட குழந்தையை விட்டு விட்டுச் சுட்டுக் கொண்டு சாவதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது."

"இதிலிருந்தே என்னுடைய நிலைமையை நீ தெரிந்து கொள்ளலாமே, சூரியா! பெற்ற பெண்ணைத் தூரதேசத்துக்கு அனுப்பிவிட்டு அவளைப் பார்க்காமல் சாவதற்கு இலேசில் மனம் துணியுமா? அப்படிப்பட்ட நரக வேதனையை வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டிருகிறேன்." "அத்தங்கா! நரக வேதனையும் சொர்க்க சுகமும் நாமே செய்து கொள்வதுதான். 'கடவுளுடைய ராஜ்யம் உனக்குள்ளே' என்பதை நீ கேட்டதில்லையா?" "அந்த வேதாந்தமெல்லாம் என் விஷயத்தில் இனிமேல் உபயோகமில்லை, அம்மாஞ்சி! என்னுடைய நரகத்தை நானே சிருஷ்டி செய்து கொள்ளவும் இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் என்னை இந்த நரகத்திலே தள்ளினீர்கள். இவரை நான் கலியாணம் செய்து கொண்டது பெரும் பிசகு, சூரியா! எங்கள் இருவருக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லை. இவர் யாராவது ஒரு வெள்ளைக்காரிச்சியையோ பார்ஸிக் காரியையோ கலியாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். உன்னுடைய சினேகிதி தாரிணி இருக்கிறாளே அவளைப்போல ஒருத்தியையாவது..." "பிறரைப்பற்றி நாம் எதற்காகப் பேசவேண்டும் சீதா!" "பேசாமல் என்ன செய்வது? என்னுடைய வழிக்கு அவர்கள் வராமலிருந்தால் நானும் பேசவேண்டியதில்லை. அந்தத் தாரிணியும் என் மாமியாரும் சேர்ந்து எனக்கு விஷம் கொடுத்துக் கொல்லப் பார்த்தார்கள், சூரியா? அதுவும் நான் படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது என் மாமியாரைப்பற்றி எவ்வளவோ மேலாக நான் எண்ணியிருந்தேன். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி என்று கொஞ்ச நாளைக்கு முன்புதான் தெரிந்தது." "உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா, சீதா! நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள். அவர்களைப் பற்றி இவ்வளவு கொடுமையாகப் பேசுகிறாயே!"

"அவர்கள் பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றியது உனக்கு எப்படித் தெரியும்? அவர்கள் சொல்லித்தானே தெரியும்? நான் அவ்வளவு அறிவற்றவள் அல்ல. ஒரு நாள் இரவு தாரிணியும் மாமியாரும் கூடிக்கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, டாக்டர் வழக்கமாகக் கொடுத்த மருந்தில் இன்னொரு வெள்ளைப் பவுடரை தாரிணி கலந்து கொடுத்தாள். நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு செய்தாள். எனக்கும் அப்போது உண்மை தெரியாது; மருந்தைச் சாப்பிட்டு விட்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் கண்ணைச் சுற்றிக்கொண்டு மயக்கமாய் வந்தது. கொடுத்த விஷம் போதவில்லை போலிருக்கிறது. காலையில் எப்படியோ பிழைத்து எழுந்தேன். அது முதல் ஜாக்கிரதையாகி விட்டேன். தாரிணி மருந்து கலந்து கொடுத்தால் அதைச் சாப்பிடுவதாக ஜாடை செய்து எச்சில் பாத்திரத்தில் கொட்டி விடுவேன். அப்போது இன்னும் என் மனதில் கொஞ்சம் சபலமிருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நான் சாவது உனக்குப் பிடிக்காவிட்டால் தாரிணியைக் கேட்டு கொஞ்சம் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடு!" "அத்தங்கா! உண்மையிலேயே உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு படுபாதகமான வார்த்தையைச் சொல்லியிருக்கமாட்டாய். உனக்குச் சுரமாக இருக்கும் போது தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிறாயே என்பதற்காக அவர்கள் யோசித்துத் தூக்க மருந்தைக் கொடுத்திருப்பார்கள்.."

"ஆமாம்; ஒரேயடியாய்த் தூங்குவதற்குத் தான் மருந்து கொடுத்தார்கள். ஆனால் அதற்கு வேண்டிய அளவு கொடுக்கவில்லை ஆகையால் விழித்துக்கொண்டு விட்டேன்!" "அப்படி உனக்கு சந்தேகமாயிருந்தால் உடனே உன் புருஷனிடம் சொல்லியிருக்கலாமே?" "சொல்லியிருக்கலாம்; ஆனால் அவர் நம்பியிருக்க மாட்டார், உன் அருமை அத்தங்காளின் பேச்சை நீயே நம்பவில்லையே? திரும்பித் திரும்பிப் பேசிப் பயன் இல்லை. நான் அனாதை; திக்கற்றவள்! என் பேச்சை யாரும் நம்பப்போவதில்லை. நீ எதற்காக வந்தாய்? உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு நீ போ!" என்று சீதா சொல்லிக் கலகலவென்று கண்ணீர் உதிர்த்தாள். "என் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறதாயிருந்தால் நான் எவ்வளவோ முக்கியமான காரியங்களை விட்டுவிட்டு ஆயிரம் மைல் பிரயாணம் செய்து வந்திருக்க மாட்டேன்; என்னுடைய காரியத்தை மட்டுமல்ல; தேசத்தின் காரியத்தைக் கூட விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு என்ன வழி என்று சொல். உன் புருஷனிடம் உனக்கு என்ன குறை என்று சொன்னால், அவனையே கேட்டு விடுகிறேன். என் தலையை அவன் இறக்கிவிடமாட்டான் அவனிடம் எனக்குப் பயம் ஒன்றும் கிடையாது..." "உனக்கு பயமில்லை; ஆனால் எனக்குப் பயமாயிருக்கிறது. அவரிடம் நீ பேசுவதினால் எனக்கு நல்லது ஒன்றும் விளையாது. உன் பேரில் வரும் கோபத்தை என் பேரில் வைத்துத் தாக்குவார். எனக்கு அவர் பேரில் என்ன குறை என்று கேட்கிறாய். என்னுடைய மனக்குறையைச் சொன்னால் உனக்குப் புரியவே புரியாது. பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கே புரியவில்லை! உனக்கு எப்படிப் புரியும்? 'பார்ட்டிக்கு வா!' என்று சொல்லி அழைத்துப் போகிறார்.

அங்கே முப்பது ஸ்திரீகளுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்துகிறார். நான் எவ்விதமாக நடந்து கொண்டாலும் அது தப்பாகப் போய்விடுகிறது. நான் கலகலப்பாக நாலு பேரிடம் பேசிக்கொண்டிருந்தால் 'சுத்த அதிகப்பிரசங்கி! உன் அசட்டுத்தனத்தை எதற்காக இப்படிக் காட்டிக்கொள்கிறாய்? வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக் கூடாதா? என் மானம் போகிறதே!' என்கிறார். இப்படி இவர் சொல்கிறாரே என்பதற்காகப் பேசாமலிருந்தால், 'ஏன் இப்படி ஏதோ பறிக்கொடுத்தவளைப் போல இருந்தாய்? நாலு பேரிடம் கலகலப்பாகப் பேசத் தெரியாத ஜன்மத்தைக் கலியாணம் செய்து கொண்டேனே?' என்கிறார். சிரிக்காவிட்டால் 'நகைச்சுவையை அறியாத நிர்மூடம்!' என்கிறார். துக்கம் தாங்காமல் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால், 'இங்கேயிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்? எங்கேயாவது தொலைந்து போ!' என்கிறார். 'தொலைந்து போ!' என்ற வார்த்தையைக் கேட்டுக் கேட்டு என் மனது புண்ணாகிவிட்டது! நான் எங்கே தொலைந்து போவேன்? எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது? ஒரேயடியாக இந்த உலகத்திலிருந்து தொலைந்து போவதைத் தவிர வழி ஒன்றுமில்லை. அம்மாஞ்சி, அந்தத் துப்பாக்கியை கொடுத்து விட்டுப்போ!"

"அத்தங்கா! உயிரை விடுகிற பேச்சை மறந்து விடு! அப்படி நீ அனாதையாகப் போய்விடவில்லை. நான் ஒருவன் இருக்கும் வரையில் உன்னை 'அனாதை'யாக விட்டுவிடமாட்டேன். எப்பேர்ப்பட்ட கஷ்டமாயிருந்தாலும் அதற்குப் பரிகாரம் ஏதாவது இல்லாமற் போகாது. கொஞ்ச நாள் நீ பொறுத்துக் கொண்டிரு! நான் யோசித்து ஏதாவது ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கிறேன்." "ஒரு நாள் கூட என்னால் இனிமேல் பொறுக்க முடியாது. நான் உயிரோடு இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது ஆனால் அந்த வழி உனக்குச் சம்மதமாயிராது." "அது என்ன வழி என்று சொல்! என்னால் முடியுமா என்று பார்க்கிறேன்." "என்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போ! இந்த டில்லி நகரம் எனக்கு நரகமாகிவிட்டது; இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போ! இந்த வீடு எனக்கு சிறைச்சாலையாகி விட்டது; இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போ! நீ பார்த்து என்னை எங்கே அழைத்துப் போனாலும் நான் வருகிறேன், பம்பாய்க்கு, கல்கத்தாவுக்கு, லாகூருக்கு, இலங்கைக்கு, லண்டனுக்கு, அமெரிக்காவுக்கு எங்கே வேணுமானாலும் உன்னோடு புறப்பட்டு வரத் தயாராயிருக் கிறேன்...!" "அத்தங்கா! அப்படி ஒரு காலம் வந்தால், அதற்கு அவசியம் ஏற்பட்டால், அங்கேயெல்லாம் உன்னை அழைத்துப் போகிறேன். ஆனால் அதற்கு இப்போது சமயம் அல்ல. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் வேறு காரியத்தில் பிரவேசிப்பதில்லை' என்று பல நண்பர்களின் மத்தியில் சபதம் செய்திருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையட்டும்! அதற்குப் பிறகு..."

"சூரியா! இந்தியாவின் சுதந்திரப் போரில் ஸ்திரீகளுக்குப் பங்கு எதுவும் இல்லையா? தாரிணி செய்து புரட்டுகிறதை நான் செய்து புரட்டமாட்டேனா? நான் ஒன்றுக்கும் லாயக்கற்றவள் என்று இவரைப்போல் நீயும் நினைக்கிறாயா? நீ மட்டும் என்னை அழைத்துக் கொண்டு போ! நான் எப்பேர்ப்பட்ட காரியம் எல்லாம் செய்கிறேன் என்று பார்! 'சுதந்திரம்', 'சுதந்திரம்' என்று சொல்லிக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சந்திலும் பொந்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். வேஷம் போட்டுக் கொண்டு ஊரையும் பேரையும் மாற்றி வைத்துக் கொண்டு இராத்திரி வேளை பார்த்து அங்குமிங்கும் அலைகிறீர்கள். என்னை மட்டும் நீ அழைத்துக் கொண்டு போ! ஜான்ஸி ராணியைப்போல் கையில் வாள் பிடித்துக் குதிரை மீதேறி யுத்தகளத்துக்குச் சென்று யுத்தம் செய்கிறேன். தேசமெல்லாம் திரிந்து சுதந்திரப் போருக்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்களைத் திரட்டுகிறேன்; கோழைகளை வீரர்களாக்குகிறேன். பிரான்ஸ் தேசத்து ஜோன்ஆப்ஆர்க் என்னும் வீரப் பெண்மணியைப் போல் இந்தியாவின் சுதந்திரத்தை நான் நிலைநாட்டுகிறேனா இல்லையா, பார்!" "சீதா! ஜான்ஸிராணியைப் போலும் ஜோன்ஆப்ஆர்க்கைப் போலும் சுதந்திரப் போர் செய்யும் காலம் இது அல்ல. ஆகாசவிமானத்திலிருந்து குண்டு போட்டு ஆயிரம் பதினாயிரம் ஜனங்களைக் கொல்லும் காலம் இது. இங்கிலீஷ் சர்க்காரோடு பகிரங்கமாகச் சண்டை போட்டுச் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது. இந்தத் தேசத்தில் இப்போது பகிரங்கமாக ஒரு பொதுக் கூட்டம் கூட்ட முடியாது. 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று கோஷிக்க முடியாது. எப்படிப் படை திரட்டுவது? யுத்தகளத்துக்கு போவது? காலத்துக்குத் தகுந்த முறையை அனுசரிக்க வேண்டும்."

"அப்படியானால் ஒன்று செய்! என்னை அழைத்துக் கொண்டு போய்க் காந்தி மகாத்மாவின் ஆசிரமத்தில் விட்டு விடு! அங்கே என்னைப்போல் கஷ்டப்பட்டவர்களும் அனாதைகளும் பலர் இருப்பதாக அறிகிறேன். சீமையிலிருந்து வந்த வெள்ளைக்காரி கூட ஒருத்தி இருக்கிறாளாம்! முஸ்லீம் பெண் ஒருத்தி இருக்கிறாளாம்! அவர்களைப்போல் நானும் மகாத்மா இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு என்னை வந்து அழைத்துக் கொண்டு போ!" "அத்தங்கா! மகாத்மா சிறையில் இருக்கிறார். அவருடைய ஆசிரமத்தில் இப்போது யார் இருக்கிறார்களோ தெரியாது. புதியதாக யாரையும் ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்." "அப்படியானால் ஒன்று செய், சூரியா! என்னை எங்கேயாவது ஒரு நல்ல சினிமாக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு! சினிமாவில் நான் எப்படி நடித்துப் பெயர் வாங்குகிறேன், பார்! எத்தனையோ தமிழ் சினிமாவும், ஹிந்தி சினிமாவும் பார்த்திருக்கிறேன். ஒன்றிலாவது சோகமான கட்டங்களில் நடிக்க யாருக்கும் தெரியவில்லை. சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் சோக நடிப்பில் இணையற்ற நட்சத்திரம் என்று பெயர் வாங்கி விடுவேன்! என்ன சொல்கிறாய், சூரியா!"

சூரியா எதுவும் சொல்ல முடியாமல் திகைத்துப் போயிருந்தான். ஜான்ஸிராணி எங்கே, மகாத்மாவின் ஆசிரமம் எங்கே, சினிமா நட்சத்திரம் எங்கே! சேர்ந்தாற்போல் இந்த மூன்று காரியங்களிலும் ஆசை செலுத்தும் தன் அத்தங்காளின் மனோநிலை அவனுக்கு அளவில்லா வியப்பை அளித்தது. சீதாவுக்கு உண்மையிலேயே கொஞ்சம் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆகையால் இன்றைக்கு ஏதாவது சமாதானமாகச் சொல்லிவிட்டு போகலாமென்றும், நாளைக்கு தாரிணியைக் கேட்டுக் கொண்டு தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தான். "அத்தங்கா, எனக்குச் சினிமா விஷயம் ஒன்றும் தெரியாது; சினிமாக்காரர்களையும் தெரியாது. ஆகையால் நீ கடைசியாகச் சொன்னதும் முடியாத காரியம். ஆனால் சில நாளைக்கு நீ வேறு எங்கேயாவது போயிருக்க வேண்டும் என்றால், அதற்கு இடமில்லாமற் போகவில்லை. ராஜம்பேட் டயில் நீ போய் இருக்கலாம் என்று சொல்வேன். என் அம்மா சமாசாரம் எனக்குத் தெரியும். உன்னை அவளுக்குப் பிடிக்காது; ஆகையால் ராஜம்பேட்டையை நான் சொல்லவில்லை. தேவபட்டிணத்தில் லலிதா இருக்கிறாள், அல்லவா? உன்னை நினைத்து நினைத்து அவள் உருகிப் போகிறாள். இந்த உலகத்தில் லலிதாவைப்போல் உன்னிடம் அன்பு கொண்டவர்கள் யாருமே இருக்க முடியாது. நீ சந்தோஷமாயில்லை என்று தெரிந்து அவள் படுகிற வருத்தத்தைச் சொல்லி முடியாது.லலிதாவின் புருஷன் இப்போது சிறையில் இருக்கிறான்.அவனும் என் அத்தியந்த சிநேகிதன் என்பது உனக்குத் தெரியுமே.லலிதாவின் மாமனார் ரொம்ப நல்ல மனுஷர்.நீ தாராளமாகத் தேவபட்டிணத்துக்குப் போய்ச் சில மாதம் இருக்கலாம்.உன் குழந்தையையும் அங்கே வரவழைத்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.

"லலிதா என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவள் என்பது எனக்குத் தெரியாதா, சூரியா! அவள் சந்தோஷமா யிருக்கிறாள் என்பதை நினைத்தால் எனக்கும் சந்தோஷமாயிருக்கிறது. லலிதாவுக்குத் துரோகம் செய்து இவரை நான் கலியாணம் செய்து கொண்டதாக ஒரு காலத்தில் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவளுக்குப் பெரிய நன்மை செய்ததாக அறிந்து சந்தோஷப்படுகிறேன். இவரை அவள் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இப்போது நான் படுகிற கஷ்டத்தையெல்லாம் அவள் பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் லலிதா வீட்டில் போய் நான் இருக்க மாட்டேன். என்னுடைய எண்ணம் என்னவென்பதை இன்னமும் நீ அறிந்து கொள்ளவில்லை. நான் எங்கே போனேன் என்ன ஆனேன் என்பது இவருக்குத் தெரியக் கூடாது. தேவபட்டணத்துக்குப் போனால் இரண்டு நாளில் இவருக்குத் தெரிந்து போய்விடுகிறது. அதில் என்ன பிரயோஜனம்? இவர் என்னைத் தேடி அலையும்படியாகவும், கவலைப்படும்படியாகவும் எங்கேயாவது தூரதேசத்துக்கு, சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு நான் போக விரும்புகிறேன். அப்படிப்பட்ட இடத்துக்கு என்னை நீ அழைத்துக் கொண்டு பேவதாக இருந்தால் சொல்லு! இல்லாவிட்டால் உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போ!" "அந்த மாதிரி நாம் இருவரும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனால் உன் புருஷனும் சரி, மற்றவர்களும் சரி, என்ன நினைத்துக் கொள்வார்கள்?

ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ள மாட்டார்களா? வீண் சந்தேகத்திற்கு இடமாயிராதா? இதைப்பற்றி நீ யோசித்துப் பார்த்தாயா?" என்றான் சூரியா. "தப்பாக எண்ணிக் கொண்டால் எண்ணிக் கொள்ளட்டும்; சந்தேகப்பட்டால் படட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்று மாதத்திற்கு முன்னால் இவர் என்ன செய்தார் தெரியுமா? யாரோ ஒரு பெண்ணுடன் காரில் ஏறிக் கொண்டார். பானிபெட்டுக்குச் சமீபத்தில் இவருடைய காரும் ஒரு மிலிடெரி லாரியும் மோதிக்கொண்டன. இவருக்குக் காயம் ஒன்றுமில்லை; ஆனால் அந்தப் பெண்ணுக்குக் காயம். இந்த விஷயம் புது டில்லியெல்லாம் சிரிப்பாய் சிரித்தது. அதற்காக அவரை யார் என்ன செய்துவிட்டார்கள்? புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எந்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது?" "அத்தங்கா! அந்த மாதிரிச் சட்டம் ஒன்றும் கிடையாது. தப்பான காரியத்தைப் புருஷன் செய்தாலும் பிசகு தான்; பெண் செய்தாலும் பிசகு தான். ஆகையினால் தான் நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள ஢ல்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அதைச் சொல்லுகிறேன், கேள். தேவபட்டணத்தில் எனக்கு இரண்டு சிநேகிதர்கள் உண்டு என்று உனக்குத் தெரியும் அல்லவா? ஒருவன் தான் லலிதாவின் கணவன் பட்டாபிராமன். இன்னொருவன் பட்டாபிராமன் வீட்டுக்கு எதிர்வீட்டு அமரநாதன். அவனும் அவனுடைய மனைவி சித்ராவும் கல்கத்தாவில் இருக்கிறார்கள். நான் தேவபட்டணம் போயிருந்தபோது அவர்களும் தற்செயலாக வந்திருந்தார்கள். அமரநாதனும் அவன் மனைவியும் ரொம்ப நல்லவர்கள். சித்ராவுக்கு உன்னைப்பற்றி லலிதா எல்லாம் சொல்லியிருக்கிறாள்.

என்னுடைய யோசனை என்ன தெரியுமா? உன்னைப் பக்கத்து ஸ்டேஷன் எதற்காவது அழைத்துப் போய் ரயில் ஏற்றி விட்டு விடுகிறேன். நீ கல்கத்தாவுக்கு போய், அமரநாத் - சித்ரா வீட்டில் சில காலம் நிம்மதியாக இரு. இதற்குள் உன் புருஷன் இங்கே என்ன செய்கிறான் என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால் நீ போயிருக்கிற இடத்தைச் சொல்லுகிறேன்." "அதுதான் கூடாது; அவருக்குத் தெரியவே கூடாது! எனக்கு இஷ்டமானபோது தெரிவித்துக் கொள்வேன் சூரியா. நான் கல்கத்தாவுக்குப் போகத் தயார். ஆனால் இன்றைக்கோ நாளைக்கோ என்னை நீயே அழைத்துப் போகவேண்டும். இங்கே நாளைக்குப் பிறகு என்னால் இருக்க முடியாது. தனியாகப் போகவும் முடியாது. ஒருவேளை நீ என்னை அழைத்துப் போவது உன்னுடைய சிநேகிதி தாரிணிக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவளிடம் உனக்குப் பயமாயிருந்தால் அதையும் இப்போதே சொல்லிவிடு!"

"சீதா! என்னென்னமோ விசித்திரமான எண்ணங்கள் உன் மனதில் குடிகொண்டிருக்கின்றன. எனக்கு யாரிடத்திலும் பயம் கிடையாது. நாம் செய்கிற காரியம் நமக்கே சரியாயிருக்க வேண்டுமல்லவா? ஆகையால் கொஞ்சம் யோசிப்பதற்கு அவகாசம் கொடு!" என்றான் சூரியா. "பேஷாக யோசித்துச் சொல்! செய்கிற யோசனையை இங்கேயே செய்துவிடு! இத்தனை நாள் கழித்து அம்மாஞ்சி வந்திருக்கிறாய்; தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமா என்று கூட நான் கேட்கவில்லை. இதோ உள்ளே போய்க் கொஞ்சம் ஓவல்டின் கலந்து கொண்டு வருகிறேன். அது வரையில் யோசனை செய்து கொண்டிரு!" என்று சொல்லிவிட்டுச் சீதா சமையலறைக்குள் போனாள். சூரியாவின் உள்ளம் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தது. 'இது என்ன! இவ்வளவு பயங்கரமான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோ மே! இது சரியாக முடியுமா? அல்லது கேடாக முடியுமா?' என்று அவன் மனம் தத்தளித்தது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள முடியுமா என்று யோசித்தான். இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது. வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவின் மனதில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலே யார் டெலிபோனில் பேசுவார் என்ற யோசனை கூடத் தோன்றவில்லை. ரிஸீவரை கையில் எடுத்துக்கொண்டு, "ஹலோ! யார் அது!" என்று கேட்டான். டெலிபோன் மணிச் சத்தத்தைக் கேட்டுவிட்டுச் சீதா சமையல் அறை உள்ளேயிருந்து பரபரப்புடன் வந்தாள். சூரியா ரிஸீவரைக் கையில் எடுத்துப் பேசுவதைப் பார்த்ததும் அவள் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது.
 
பதினொன்றாம் அத்தியாயம்

ராகவன் மனக் கவலை

ரஜினிபூர் மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் புதுடில்லியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். சுதேச சமஸ்தான மன்னர்களுக்குச் சட்ட சம்பந்தமான யோசனை சொல்லும் உத்தியோகம் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த உத்தியோகத்தில் வேலை கொஞ்சம்; வருமானமும் செல்வாக்கும் அதிகம். எனினும் அவருடைய புதல்விகள் தாமாவுக்கும் பாமாவுக்கும் மட்டும் இன்னும் கலியாணம் ஆனபாடில்லை. புதுடில்லி சமூக வாழ்க்கையில் அவர்கள் மிக்க பிரபலம் அடைந்திருந்தார்கள். வைஸ்ராய் மாளிகையிலும் மற்றும் சுதேச மன்னர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் கொடுக்கும் பார்ட்டிகளிலும் தாமா பாமா சகோதரிகளைத் தவறாமல் காணலாம். இன்றைக்கும் அவர்கள் தந்தையுடன் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அதே பார்ட்டிக்குச் சென்றிருந்த சௌந்தரராகவனும் அவர்களுடன் வந்தான். அவர்கள் நாலு பேரும் சீட்டு விளையாடத் தொடங்கினார்கள். ஆட்டம் சிறிது நகர்ந்ததும் பாமா, "மிஸ்டர் ராகவன்! உங்கள் மனைவியை ஏன் பார்ட்டிக்கு அழைத்து வரவில்லை? இன்னும் உடம்பு சரியாகவில்லையா?" என்று கேட்டாள். "உடம்பு ஒரு மாதிரி சரியாகிவிட்டது ஆனால் சுரம் அடித்துக் கிடந்ததிலிருந்து அவளுடைய மனது பேதலித்துப் போயிருக்கிறது. வீட்டுக்குப் போனால் ஓயாத புகாரும் ஒழியாத அழுகையுந்தான்!" என்றான் ராகவன். "அவ்வளவு கடுமையாகச் சுரம் அடித்துக் கிடந்தவளுக்கு நீங்கள் கொஞ்ச நாள் இடமாறுதல் கொடுக்க வேண்டும் இங்கேயே வைத்துக் கொண்டிருப்பது தவறு!" என்றாள் தாமா.

"அது எனக்கு தெரியாமலா இருக்கிறது? ஆனமட்டும் நான் சொல்லிப் பார்த்தாகி விட்டது. மதராஸுக்குப் போய் என் அம்மாவுடன் சில நாள் இருந்துவிட்டு அவளுடைய பந்துக்களையும் பார்த்துவிட்டு வரும்படி எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. அவள் சம்மதம் கொடுத்தால்தானே? என் பாடு ரொம்பவும் சங்கடமாயிருக்கிறது. ஆபீஸுக்குப் போனால் அங்கே ஒருவிதக் கஷ்டம்; வீட்டுக்குப் போனால் இன்னொருவிதக் கஷ்டம். என்ன செய்கிறதென்று தெரியவில்லை. ஒரு சமயம் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாமா என்று தோன்றுகிறது. இங்கே எப்போதாவது வந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே இம்மாதிரி சந்தர்ப்பங்களிலேதான் கொஞ்சம் மன நிம்மதி ஏற்படுகிறது." "வீட்டிலே உள்ள கஷ்டம் சரி; ஆபீஸில் உங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று தாமா கேட்டாள். "உங்கள் தகப்பனாரைக் கேட்டுப் பாருங்கள், சொல்லுவார். திவான் சாகிப்! நான் முஸ்லிம் ஆகிவிடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் ராகவன். ஆதிவராகாச்சாரியார் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். "இது என்ன கூத்து? நீர் எதற்காக முஸ்லிம் ஆக வேண்டும்?" என்று பாமா ஆச்சரியம் ததும்பக் கேட்டாள்.

"இப்போதெல்லாம் முஸ்லிமாயிருந்தால்தான் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் பிரமோஷன் கிடைக்கிறது. எனக்கு நாலு வருஷத்துக்குப் பிறகு உத்தியோகத்தில் சேர்ந்தவனை எனக்கு மேலே தூக்கிப் போட்டிருக்கிறார்கள். போன வருஷம் எனக்குக் கீழே வேலை பார்த்தவனுக் கெல்லாம் 'எஸ் ஸார்!' சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படியாவது அவன் மகா மேதாவியா? மூளை உள்ளவனா? ஒன்றும் இல்லை. 'மகா மூடன்' என்ற பட்டத்துக்கு மிகவும் தகுதியுள்ளவன். அவன் கீழே நான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. திவான் சாகிப்! எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விடட்டுமா? அல்லது இந்த உத்தியோகத்தை ராஜினாமா செய்து விடட்டுமா?" என்று ராகவன் கேட்டான். "இரண்டும் வேண்டாம்; கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரும்!" என்று ஆதிவராகாச்சாரியார் முதல் முறையாகத் திருவாய் மலர்ந்தார். "பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடும்? இந்த நிலைமையில் மாறுதல் ஏதாவது ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?" "ஏற்படலாம் என்றுதான் நினைக்கிறேன் இந்த காங்கிரஸ் தலைவர்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தால் நிலைமை கட்டாயம் மாறிவிடும். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்காரர்களின் தவறு தான். யுத்தத்தில் ஒத்துழைப்பதாகச் சொல்லிக் கொண்டு ஜில்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் சிறைக்குள் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த யுத்த சமயத்தில் காங்கிரஸ்காரர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் வைஸ்ராய் நிர்வாக சபையின் பாதிக்கு மேற்பட்ட ஸ்தானங்கள் கிடைத்திருக்கும். காங்கிரஸ்காரர்கள் செய்யும் தவறு முஸ்லிம் லீகர்களுக்குச் சௌகரியமாய்ப் போயிருக்கிறது. முக்கியமான உத்தியோகங்களில் எல்லாம் முஸ்லிம்கள் வந்து நன்றாக உட்கார்ந்து கொள்கிறார்கள்..."

"காங்கிரஸ்காரர்கள் வந்துவிட்டால்தான் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள், திவான் சாகிப்! அவர்களும் முஸ்லிம்களுக்குத் தான் சலுகை கொடுப்பார்கள். 'சிறுபான்மையோருக்கும் நியாயம்' வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு பெரும்பான்மையோர் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்! எனக்கு என்னமோ ஹிந்து மகாசபையின் கொள்கைகள் தான் பிடித்திருக்கிறது. இங்கிலீஷ்காரர்களோடு சண்டை போடுவது கூட அவ்வளவு முக்கியமில்லை. முதலில் முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவேண்டும். எட்டுக் கோடி முஸ்லீம்களை இந்தியாவில் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் வந்துதான் என்ன பிரயோஜனம்?" "என்ன மிஸ்டர் ராகவன்! சற்று முன்னால் முஸ்லிம் ஆகிவிடப் போவதாகச் சொன்னீர்; இப்போது முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறீரே?" என்று பாமா கேட்டாள். "பின்னே என்ன செய்கிறது? ஒன்று முஸ்லிம்களைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும்; அது முடியாவிட்டால் எல்லோரும் முஸ்லிம் ஆகிவிடுவதே நல்லது. அப்போது உத்தியோகங்களில் இந்தப் பாரபட்சம் காட்ட முடியாதல்லவா? எங்கேயாவது சுதேச சமஸ்தானத்தில் ஒரு உத்தியோகம் வாங்கிக் கொடுங்கள் என்று உங்கள் தகப்பனாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அவர் கவனிக்கிற வழியாயில்லை. திவான் சாகிப் சொன்னால் உடனே இந்த தரித்திரம் பிடித்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்யத் தயாராயிருக்கிறேன்."

"அப்பா! ராகவனுடைய கோரிக்கையை நீங்கள் கொஞ்சம் கவனிக்கிறதுதானே?" என்றாள் பாமா. "எல்லாம் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் ராகவன் ராஜினாமா செய்து விடக் கூடாது. ஒரு வேலையில் இருக்கும் போதே இன்னொரு வேலை கிடைத்தால் தான் கிடைத்தது; விட்டுவிட்டால் கிடைக்காது!" என்றார் மாஜி திவான். "இப்படித் தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் பார்க்கிறேன்" என்றான் ராகவன். "அது கிடக்கட்டும், ராகவன்! நீர் முஸ்லிம் அல்ல - ஹிந்து என்பது ஒன்றைத் தவிர உத்தியோகத்தில் 'பிரமோஷன் கிடைக்காததற்கு வேறு காரணம் எதுவும் இல்லையா?" என்று தாமா கேட்டாள். "மதராஸி என்ற காரணமும் இருக்கத் தான் இருக்கிறது. என்னுடைய துரை வரவு செலவு மந்திரியாயிருந்த காலத்தில் முக்கியமான வேலைகளுக்கெல்லாம் மதராஸியைத் தேடிப் பொறுக்கிப் போடுவார். இப்போது மதராஸி என்றால் புது டில்லியில் வேப்பங்காயாக இருக்கிறது. இவர்களுக்கு முதலாவதாக யாராவது மகம்மதியர் வேண்டும். மகம்மதியர் இல்லாவிட்டால் மதியில்லாத மகாமூடனாயிருக்க வேண்டும். ஆனால் மதராஸி மட்டும் உதவாது. இந்தியாவைத் தற்சமயம் ஆளும் முகமது துக்ளக்குகள், அறிவுக்கு அமித லாப வரி போட்டாலும் போடுவார்கள்!"

இப்போது ஆதிவராகாச்சாரியார் சம்பாஷணையில் மீண்டும் கலந்துகொண்டு, "பாமா அதைச் சொல்லவில்லை ராகவன்! உம் பேரில் இன்னொரு புகார் இருப்பதாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறதே? உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார். "தெரியாதே! அது என்ன புகார்?" என்றான் சௌந்தரராகவன். "புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு மாதம் நீர் உம்முடைய வீட்டில் ஒளித்து வைத்திருந்தீராமே? அது உண்மையா?" "தாரிணியைப் பற்றிச் சொல்கிறீர்களாக்கும். அவள் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பது கட்டுக்கதை. அவளை நான் என் வீட்டில் ஒளித்து வைத்திருக்கவும் இல்லை. சீதாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாயிருந்தபோது, கிட்ட இருந்து பணிவிடை செய்து அவள் உயிரைக் காப்பாற்றினாள். தாரிணி எவ்வளவு சாது! எவ்வளவு புத்திசாலி! என்பதுதான் உங்கள் புதல்விகளுக்குத் தெரியுமே?" என்றான் ராகவன். "சாதுவாயும் புத்திசாலியாயும் இருக்கலாம் அதனால் புரட்சிக்காரியாயிருக்கக் கூடாது என்று ஏற்படாது?" என்றாள் பாமா. "அப்படியே வைத்துக்கொண்டாலும் அதற்கு நான் எப்படி பொறுப்பாளி? அவள் புரட்சிக்காரி என்பது எனக்கு எப்படித் தெரியும்? அது போகட்டும் இந்தப் புதுடில்லியில் அசல் புரட்சி இயக்கத் தலைவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகஸ்தர்களின் வீடுகளில் மறைந்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கருணாவதிதேவி எங்கே ஒளிந்திருந்தாள்? சந்த்ரகாந்த் ஸின்னா யார் வீட்டில் மூன்று மாதம் ஒளிந்திருந்தான்? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை என்ன செய்து விட்டார்கள்? என் பேரில் மட்டும் புகார் சொல்லுவானேன்?"

"அவர்கள் எல்லோரும் ரொம்பப் பெரிய பதவிகளில் உள்ளவர்கள். ஆகையால் யாரும் புகார் செய்யத் துணியமாட்டார்கள். உம்முடைய விஷயம் அப்படியில்லையே, ராகவன்! நீ உத்தியோகத்தில் பிரமோஷனை எதிர்பார்க்கிறவராயிற்றே!" "அதுமட்டுமல்ல, அப்பா! இவர் ஒரு புரட்சிக் காரியை ஒளித்து வைத்திருந்தார் என்று புகார். இவருடைய மனைவி சீதா ஒரு புரட்சிக்காரனுக்கு உதவி செய்வதாகப் புகார். இந்த ஊரிலிருந்து சென்னை மாகாணத்திற்குப் போன ஒரு கடிதத்தில் இவர் மனைவி சீதாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாம். அந்தக் கடிதம் சூரியா என்பவருக்கு எழுதப்பட்டதாம். நேற்று ஒரு பார்ட்டியில் ஒரு சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் என்னிடம் சீதாவையும் சூரியாவையும் பற்றி விசாரித்தார். அவர்களுக்குள் ஏதாவது உறவு உண்டா?" என்று பாமாதேவி கேட்டாள். "உறவு உண்டு, அவர்கள் அத்தங்காவும் அம்மாஞ்சியும் ஆகவேண்டும்" என்றான் ராகவன். "அப்படியானால் சரிதான்! அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தர் கொஞ்சம் விரஸமாகக் கூடப் பேசினார்...." "அது என்ன?" என்று ராகவன் பரபரப்புடன் கேட்டான். "அவர்கள் இரண்டு பேரும் 'லவர்ஸ்' (காதலர்கள்) என்பதாக ஏதேனும் வதந்தி உண்டா என்று கேட்டார். எனக்குச் சீதாவை நன்றாகத் தெரியுமாதலால் 'அதெல்லாம் சுத்தப் பொய்; அவதூறு' என்று சொல்லி, அந்த சி.ஐ.டி.காரர் தமது வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்தேன்."

"நீங்கள் செய்தது ரொம்ப சரி ஆனாலும் அந்தச் சூரியா ஒரு காலிப் பயல் என்பது உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்பு சந்நியாசி வேஷம் போட்டுக்கொண்டு மதராஸில் என் தாயார் வீடு சென்று பார்த்தானாம். என்னென்னமோ அனாவசியமான கேள்வியெல்லாம் கேட்டானாம். அவன் மறுபடியும் என் கண்ணில் தென்பட்டால் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு மறுகாரியம் பார்ப்பேன். அவன் பேரில் ஏதாவது அரெஸ்ட் வாரண்ட் இருக்கிறதா, உங்களுக்குத் தெரியுமா?" "தெரியாமல் என்ன? மதராஸ், பம்பாய், மத்திய மாகாணம் ஆக மூன்று மாகாணங்களில் அவன் பேரில் வாரண்ட் இருக்கிறதாம்!" "நல்ல காரியம்! சூரியாவைப் போன்றவர்களைச் சிறையிலே தள்ளினால் தேசத்துக்கே க்ஷேமம். சுதந்திர இயக்கம் தூய்மை அடையும்!" என்று ராகவன் சொல்லிக்கொண்டே டெலிபோன் அருகில் சென்றான். "இந்த நேரத்தில் யாருடன் டெலிபோன் பேசப் போகிறீர்கள்?" என்று பாமா கேட்டாள். "வீட்டில் என் மனைவி தூங்கிவிட்டாளா என்று தெரிந்து கொண்டு தான் நான் செல்வது வழக்கம். அவள் விழித்துக் கொண்டிருக்கும்போது சென்றால் தேள் கொட்டுவதுபோல் கொட்டி விடுவாள். இராத்திரியெல்லாம் இரண்டு பேருக்கும் சிவராத்திரிதான்!" என்றான் ராகவன். "ஐயோ! பாவம்! உங்களுடைய நிலைமை பரிதபிக்கத்தக்கது தான்" என்று சொன்னாள் பாமா. சௌந்தர ராகவன் டெலிபோனில் தன்னுடைய வீட்டு நம்பரைக் கூப்பிட்டான். அதற்குப் பதில் உடனே வந்தது. டெலிபோனில் பேசிய குரலைக் கேட்டதும் ராகவனுடைய முகத்தில் ஆச்சரியமும் ஆத்திரமும் பொங்கி கோரத்தாண்டவம் புரிந்தன.
 
பன்னிரண்டாம் அத்தியாயம்

"சூரியா! போய்விடு!"

டெலிபோனில் ராகவனுடைய குரலைக் கேட்ட அதே சமயத்தில் சீதாவின் முகத்தையும் சூரியா பார்த்தான். ஏதாவது தவறு நேர்ந்து விட்டதோ என்ற எண்ணத்தில் அவன் உள்ளம் குழம்பிற்று. ராகவன், "யார்? சூரியாவா?" எப்போது வந்தாய்!" என்று கேட்டதற்கு, "இன்றைக்குத் தான்!" என்று பதில் அளித்தான். "ஓகோ! நான் வருகிற வரையில் இருப்பாயல்லவா?" என்று ராகவன் கேட்டான். "ஆகா! இருக்கிறேன்!" என்றான் சூரியா. பிறகு, "அத்தங்கா! மாப்பிள்ளை பேசுகிறார்!" என்று சொல்லி டெலிபோன் ரிசீவரைச் சீதாவின் கையில் கொடுத்தான். ரிஸீவரைக் காதில் வைத்துக் கொண்டபோது சீதாவின் முகம் மேலும் பீதியைக் காட்டியது. ராகவன் என்ன கேட்டான் என்பது சூரியாவின் காதில் விழவில்லை. சீதா, "இல்லையே! இன்றைக்குத்தானே வந்திருக்கிறான்!" என்று சொன்ன போது அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளித்ததைச் சூரியா பார்த்தான். பிறகு, "சரி, சரி இருக்கச் சொல்கிறேன்!" என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை வைத்து விட்டாள். "அத்தங்கா! மாப்பிள்ளை என்ன சொன்னார்? எதற்காக உன் கண் இப்படி கலங்கியிருக்கிறது?" என்று சூரியா கவலையுடன் கேட்டான்.

சீதா சிறிது நேரம் எங்கேயோ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாள். பிறகு திடீரென்று விம்மிக்கொண்டே, "சூரியா! நீ போய்விடு! உடனே போய்விடு!" என்றாள். "அத்தங்கா! இது என்ன? எதற்காக என்னைப் போகச் சொல்கிறாய்? மாப்பிள்ளை இருக்கச் சொல்லியிருக்கிறாரே?" என்றான் சூரியா. "அதனாலே தான் உன்னைப் போகச் சொல்கிறேன். என்னிடமும் உன்னை இருக்கப் பண்ணும்படிதான் சொன்னார். ஆனால் எனக்கு என்னமோ பயமாயிருக்கிறது. சூரியா! நீ இன்றைக்கு இங்கே இருந்தால் ஏதாவது அபாயம் நேரிடும் என்று தோன்றுகிறது போய்விடு!" "நான் அவசரப்பட்டுக்கொண்டு போனால்தான் அபாயம் வரும். அவர் இரு என்று சொல்லியிருக்கும்போது நான் போகலாமா? வீண் சந்தேகத்துக்கு இடமாகாதா?" "சந்தேகம் இனிமேல்தானா வரப்போகிறது? உனக்கு ஒன்றுமே தெரியவில்லை, சூரியா! பச்சைக் குழந்தையாய் இருக்கிறாய்! நம் இருவர் பேரிலும் தகாத சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னை அவர் படுத்துவதெல்லாம் அதற்காகத் தான்." "சுத்த மூடத்தனம்; என் பேரில் மாப்பிள்ளைக்குச் சந்தேகமாவது! அவர் இப்போது வரட்டும்; நேரிலே கேட்டு விடுகிறேன். அவருக்கு உன்னைக் கலியாணம் செய்து வைத்ததே நான் தானே?" என்றான் சூரியா.

"நீதான்! நீ செய்த பெரிய தவறு அது தான்! நேரில் பார்த்துப் பேசுவதினால் அவருடைய சந்தேகத்தை நீ போக்கி விட முடியாது. ஏதாவது நீ பதில் சொன்னால் அவருடைய கோபம் அதிகமாகும். நீ இன்றைக்கு இங்கே இருந்தால் நிச்சயமாகக் கொலை விழும்! அந்தப் பாவத்துக்கு என்னை ஆளாக்காதே! தயவு செய்து போய்விடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!" சீதாவின் வெறி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகி வருவதைச் சூரியா கவனித்தான். ஆனாலும் அவனுக்குப் போக மனம் வரவில்லை. "சீதா! பதட்டம் வேண்டாம்! கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்! நான் இப்போது போய்விட்டால் அவருடைய சந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆகாதா?" என்றான். "உறுதிப்பட்டால் படட்டும் அவரையே தெய்வம் என்று நானெண்ணிக்கொண்டிருந்தும் எப்போது சந்தேகப்படுகிறாரோ, அப்போது அவருடைய சந்தேகத்தை உண்மையாக்கி விட்டால்தான் என்ன? அதனாலேயே என்னை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகும்படி உன்னைக் கேட்டேன்; ஆனால் நீ பயங்கொள்ளி, கோழை, ஸ்திரீகளின் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுவாயே தவிர, அதற்காக ஒரு துரும்பு எடுத்துப் போடமாட்டாய். உன்னை நான் நம்பியிருக்கவும் இல்லை. ஒரு நாளைக்கு இவரை விட்டு விட்டு ஓடவே போகிறேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்; என்னை வீண் கஷ்டத்துக்கு ஆளாக்காமல் உடனே போய்விடு. உன்னால் எனக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் அபகாரமாவது இல்லாமல் இருக்கட்டும்."

இனிமேல் தான் அங்கு இருந்தால் சீதாவின் இரத்த நரம்புகள் வெடித்து அவள் மூர்ச்சையாகி விடுவாள் என்று சூரியா பயந்தான். போய்விட வேண்டியதுதான்; ஆனால் அப்புறம் என்ன? சீதாவின் நிலையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? ஆம்; டெலிபோன் ஒன்று இருக்கிறதே! டெலிபோன் மூலம் நாளைக்கு விசாரித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு இராத்திரி நடக்கிறது நடக்கட்டும். நாளை தாரிணியுடன் யோசித்துக் கொண்டு சீதா விஷயமாக என்ன செய்கிறது என்று தீர்மானிக்கலாம். "சரி அத்தங்கா! நீ இவ்வளவு வற்புறுத்துகிறபடியால் நான் போகிறேன். அப்புறம் நாம் எப்போது சந்திப்பது? நாளைக்கு டெலிபோன் பண்ணட்டுமா?" "ஆமாம்; நாளைக்குப் பதினொரு மணிக்கு மேல் டெலிபோனில் பேசு எல்லாம் சொல்கிறேன்." "அத்தங்கா! ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். உனக்கு உண்மையில் உதவி தேவையாயிருந்தால் நான் அதற்கு பின்வாங்க மாட்டேன். உன்னுடைய மனதைத் திடப்படுத்திக்கொண்டு சொல்லு. என்ன சொல்கிறாயோ, அந்தப்படி செய்யத் தயாராயிருக்கிறேன். உன்னுடைய க்ஷேமந்தான் எனக்குப் பெரிது; தேச விடுதலை கூட அப்புறந்தான்!" என்றான் சூரியா.

இப்படிச் சூரியா சொன்னபோது அவனுடைய மனதில் உண்மையாக எண்ணியதையே சொன்னதாகக் கூற முடியாது. அவசரப்பட்டுச் சீதா ஏதாவது செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தினால் அவளைத் தைரியப்படுத்துவதற்காகவே சொன்னான்.ஆனால் சீதா, சூரியா சொன்னதை நூற்றுக்கு நூறு பங்கு உண்மையாகவே எடுத்துக்கொண்டு, "ரொம்ப வந்தனம், அம்மாஞ்சி! அபாய காலத்தில் உன்னுடைய உதவியைக் கோரும்படி அம்மா எனக்குச் சொல்லியிருந்தாள்; அவளுடைய வாக்கு வீண் போகவில்லை.நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே டெலிபோனில் பேசு. நானும் அதற்குள் நன்றாக யோசித்து வைக்கிறேன். அவசரப்பட்டு ஒரு காரியத்தைச் செய்தோம் என்ற பெயர் வேண்டாம். இல்லாவிட்டால் இப்போதே என்னை அழைத்துக்கொண்டு போகும்படி சொல்லியிருப்பேன்!" என்றாள் சீதா. சூரியா புறப்பட எழுந்தான் சீதாவிடமிருந்து எடுத்துக் கொண்ட கைத்துப்பாக்கியை முன்னமேயே கால்சட்டையின் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். 'இந்தப் பித்துக்குளிகளின் வீட்டில் துப்பாக்கி இருப்பது ஆபத்து. நம்மிடம் இருந்தால் ஒரு சமயம் பயன்படும்' என்று முடிவு செய்திருந்தான். அதன்படி கைத்துப்பாக்கியுடன் கிளம்பிச் செல்ல ஆயத்தமானான். அப்போது வாசலில் 'பாம்' 'பாம்' என்ற சத்தம் கேட்டது.

மோட்டார் கார் 'விர்' என்று வேகமாக வந்து வீட்டு வாசலில் நின்றது சீதாவும் சூரியாவும் திகைத்து நின்றார்கள். ராகவன் வண்டியை வீட்டு முகப்பில் நிறுத்திவிட்டு இறங்கி 'விடுவிடு' என்று உள்ளே வந்தான். சூரியாவையும் சீதாவையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்த்தான். அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த குரோதம் அவனுடைய பார்வையில் ஒருவாறு தெரிந்தது. ஆனால் வாய் வார்த்தையில் குரோதத்தைக் காட்டிக் கொள்ளாமல், "என்ன சூரியா? புறப்படத் தயாராக நிற்கிறாய் போலிருக்கிறதே?" என்றான். "ஆமாம், மாப்பிள்ளை! போக வேண்டும் மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதல்லவா? நீங்கள் வந்ததும் புறப்படலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்" என்றான் சூரியா. "அதென்ன இத்தனை நேரம் கழித்து எங்கே போவாய்? பெரிய 'நைட் பர்ட்' (இராத்திரி சஞ்சாரப் பறவை) ஆகிவிட்டாய் போலிருக்கிறதே!" "நீங்களும் என் தோழனாகத் தான் இருக்கிறீர்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே?" என்று சூர்யா கொஞ்சம் துடுக்காகப் பதில் சொல்லி ராகவனுடைய கோபத்தைக் கிளறிவிட்டான். "நான் ஓரிடத்தில் மிக முக்கியமான வேலையாகப் போக வேண்டியிருந்தது."

"நானும் முக்கிய வேலையாகத் தான் போகவேண்டியிருக்கிறது. இன்று இராத்திரி சில சிநேகிதர்களைச் சந்திப்ப தாகச் சொல்லியிருக்கிறேன்." "அழகுதான்! இத்தனை நேரம் கழித்துச் சிநேகிதர்களைச் சந்திக்கவாவது! சந்தித்து? என்ன செய்வீர்கள் எங்கேயாவது கொள்ளையடிக்கப் போகிறீர்களா, என்ன?" "கொள்ளையடிக்கப் போகிறவர்களும் இராத்திரியில் போவார்கள்; அவர்களைப் பிடிக்கப் போகிறவர்களும் இராத்திரியிலே தான் போய் ஆக வேண்டும்? இந்தியா தேசத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் உங்களுக்குத் தெரியாதா, மாப்பிள்ளை? "எனக்கு எப்படித் தெரியும்? உன் அத்தங்காளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவளை நீ அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போகிறாய் அல்லவா...!" "அடிக்கடி நான் வந்து பார்ப்பதில்லையே? மூன்று மாதத்துக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தேன். அப்போது நீங்கள் வெளியூருக்கு போயிருந்தீர்கள், உங்கள் தாயார் இருந்தார் அவரைத் தரிசித்து விட்டுப் போனேன்." "அது கிடக்கட்டும், அப்பா! இப்போது நீ எங்கெங்கேயோ போய்விட்டு வந்தாயாம். மதராஸுக்குக் கூடப் போயிருந் தாயாம். அவ்விடத்து விஷயங்கள் எல்லாம் உன்னிடம் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன்? நீ போக வேண்டும் என்கிறாயே? இராத்திரி இங்கே தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகக்கூடாதா?"

"இல்லை ஸார்! நான் அவசியம் இப்போதே போக வேண்டும். மதராஸில் உங்கள் தாயாரையும் குழந்தையையும் பார்த்தேன். குழந்தை இங்கே வரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் வழியில் எனக்குப் பல ஜோலிகள் இருந்தபடியால் அவளை நான் அழைத்து வரவில்லை. மற்ற விவரங்கள் எல்லாம் இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்லுகிறேன். "இன்னொரு நாள் என்றால் என்றைக்கு?" என்று ராகவன் கேட்டான். "சௌகரியப்பட்டால் நாளைக்கே வருகிறேன்; இல்லாவிட்டால் மறுநாள் வருகிறேன். என்னுடைய பிரயாண விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் சொல்கிறேன்." "சரி; அப்படியானால் போய் வா! நாளைக்கு வருகிறதாயிருந்தாலும் இரவிலே தான் வருவாயாக்கும்!" "ஆமாம்; போலீஸ்காரர் கண்ணுக்குப் படாமல் வருவதாயிருந்தால் இராத்திரியில் தான் வரவேண்டியிருக்கிறது. என்னுடைய காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொந்தரவு எதுவும் விளைவதை நான் விரும்பவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? அதுவும் சாமானிய உத்தியோகமா?" "ஓஹோ! அவ்வளவு தயவு என் பேரில் வைத்திருக்கிறாயா? போகட்டும்! ராஜம்பேட்டை கிட்டாவய்யர் குமாரன் தலையில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்?"

"என் தலையில் எப்படி எழுதியிருக்கிறது; எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்!" "இப்படிப் போலீஸ்காரர்களுக்குப் பயந்து திருடனைப் போல் இராத்திரியில் ஒளிந்து திரிய வேண்டியிருப்பதைப் பற்றித் தான். இருக்கட்டும், சூரியா! உன்னுடைய சிநேகிதி தாரிணி எங்கே இருக்கிறாள்? அவளை நீ பார்ப்பதுண்டா?" சூரியா சீதாவின் முகத்தைப் பார்த்தான் அவளுடைய முகம் கொடூரமாவதைக் கவனித்தான். "தாரிணி இந்த ஊரிலேதான் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஒருவேளை பார்த்தாலும் பார்ப்பேன் ஆனால் நிச்சயம் சொல்வதற்கில்லை." "பார்த்தால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்றும் அவளை நான் சந்திக்க விரும்புவதாயும் சொல்லு; அவளுடைய இருப்பிடம் உனக்குத் தெரியுமா?" "பழைய இருப்பிடம் தெரியும் ஆனால் இப்போது தாரிணி அங்கே இல்லை. வேறு ஜாகைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறாளாம்." "பழைய ஜாகை எனக்குத் தெரியும்; புது இடம் தெரியாது. ஒரு நாள் பழைய டில்லியில் ஜும்மா மசூதிக்குப் பக்கம் நான் போய்க்கொண்டி ருந்தபோது தாரிணி மாதிரி ஒருத்தி போவது தெரிந்தது. அவளே தான் என்று நினைத்துப் பார்த்துப் பேசுவதற்காகப் போனேன். திடீரென்று அவள் குறுகலான சந்து ஒன்றில் புகுந்து அவசரமாகச் சென்று அங்கே ஒரு வீட்டுக்குள் புகுந்தாள். எப்படியும் அவளைப் பார்த்துவிடுவது என்று வீட்டுக் கதவை இடித்தேன். அந்த வீதி துருக்க வீதி போலிருக்கிறது.

நூறு முஸ்லீம்கள் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பி வருவது பெரும் பாடாகி விட்டது சூரியா! முதலில் நீங்கள் இந்த நாட்டிலிருந்து துருக்கர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லா விட்டால் நம் இந்திய தேசம் உருப்படப் போவதில்லை."நாங்கள் அப்படி நினைக்கவில்லை; முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்; நம் சகோதரர்கள் அவர்களை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்? வெள்ளைக்காரர்களை அடித்து விரட்டி விட்டால், அப்புறம்..." "அப்புறம் நீங்கள் வைத்ததுதான் சட்டமாயிருக்கும் அரசாங்கமே உங்கள் கையில் வந்துவிடும்." "அது எனக்குத் தெரியாது, மாப்பிள்ளை! சுதந்திரப் போரில் நாங்கள் எல்லாம் உயிர் துறக்க நேரிட்டாலும் நேரிடலாம். ஆனால் ஒன்று நிச்சயம் இந்த நாட்டு ஜனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவைக் கூடிய சீக்கிரம் ஆளப் போகிறார்கள். நேரமாகிவிட்டது; நான் போய் வருகிறேன்" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டுச் சென்றான். அவன் போவதைப் பொருட்படுத்தாமல் ராகவன் சோபாவில் உட்கார்ந்தபடி இருந்தான். ஆனால் சீதா சூரியாவின் பின்னோடு வாசல் வரையில் போனாள். வாசற்படிக்கு அருகில் வந்ததும், "சூரியா! என் தலை மேல் ஆணை! நாளைக்குக் கட்டாயம் எனக்கு டெலிபோன் பண்ணு!" என்று மெதுவான குரலில் கூறினாள். "சரி, அத்தங்கா!" என்றான் சூரியா.
 

New Threads

Top Bottom