Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

பதின்மூன்றாம் அத்தியாயம்

"பதிவிரதையானால்...?"

வாசல் வரையில் சூரியாவைக் கொண்டு போய் விட்டு விட்டுச் சீதா திரும்பி உள்ளே வந்தாள். உட்கார்ந்திருந்த ராகவன் ஆக்ரோஷத்தோடு எழுந்து நிற்பதைக் கண்டாள். "அவனிடம் என்னடி இரகசியம் பேசினாய்?" என்று ராகவன் கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான். இன்னது சொல்கிறோம் என்பதை நன்கு உணராமலேயே "நான் என்ன பேசினால் உங்களுக்கு என்ன?" என்றாள் சீதா. "என்ன சொன்னாய்?... எனக்கு என்னவா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான். சீதா பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு, "இவ்வளவுதானா? இன்னொரு கன்னம் பாக்கி இருக்கிறது!" என்றாள். "ஓகோ அப்படியா? காந்தி மகாத்மாவின் சிஷ்யை ஆகிவிட்டாயாக்கும்! இந்தா! வாங்கிக்கொள்!?" என்று இன்னொரு கன்னத்திலும் அறைந்தான். சீதா அவனை வெறிக்கப் பார்த்துவிட்டுச் சமையலறையை நோக்கிப் போனாள். "எங்கே அவசரமாய்ப் போகிறாய்? இங்கே வா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ!" என்று ராகவன் கத்தினான். சமையல் உள்ளேயிருந்த டம்ளரில் ஓவல்டின் எடுத்துக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். "வெறும் ஓவல்டினா? அல்லது விஷத்தைக் கலந்து கொண்டு வந்தாயா?" என்று ராகவன் கேட்டான். "ஆமாம்!" என்றாள் சீதா. "அப்படியானால் நீயே சாப்பிடு...! வேண்டாம்; உனக்கும் இந்த உலகத்தில் வேலை கொஞ்சம் பாக்கியிருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் உலகத்தை விட்டுப் போய்விடாதே!" என்று சொல்லிக்கொண்டே ராகவன் டம்ளரைக் கையிலெடுத்து அதிலிருந்த ஓவல்டின் பானத்தை ஜன்னல் வழியாக வீசிக் கொட்டினான்.

"இப்பேர்ப்பட்ட கொலை பாதகியை வீட்டில் வைத்துக் கொண்டு நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நாளைக்கு நான் புறப்பட்டுப் போய்விடுகிறேன்" என்றாள் சீதா. "எங்கே போவதாக உத்தேசம்?" என்றான் ராகவன். "போகிறவள் எங்கே போனால் உங்களுக்கு என்ன? நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?" என்றாள் சீதா. "உனக்கு நான் தாலி கட்டிய புருஷனா யிருக்கிறபடியால் தான் கேட்டேன். முன்னே நான் போகச் சொன்னபோதெல்லாம் 'போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாய். இப்போது நாளைக்கே போகிறேன் என்கிறாயே? எங்கே போவதாக உத்தேசம்? யாருடன் போவதாக உத்தேசம்? சூரியாவுடனா?" "சூரியா அழைத்துக்கொண்டு போனால் அவனுடன் போகிறேன்; இல்லாவிட்டால் தனியாகப் போகிறேன்" என்றாள் சீதா. "சூரியா உன்னை எங்கே அழைத்துப் போகப் போகிறான்! அவன்தான் நித்திய கண்டம் பூரணாயுசாகப் போலீஸுக்குப் பயந்து ஒளிந்து திரிகிறானே! நீ தனியாகத் தான் போகும்படி இருக்கும், எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?" "எங்கேயாவது தொலைந்து போகிறேன்; நீங்கள்தான் வாய் ஓயாமல் தொலைந்து போ என்கிறீர்களே?" "இப்போதும் அதைத்தான் சொல்கிறேன், திவ்யமாய்த் தொலைந்து போ! போவதற்கு முன்னால் நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போ!" "தொலைந்து போகப் போகிறவளிடம் கேள்வி என்ன கேட்பது? பதில் என்ன சொல்வது?" "பதில் சொல்லத்தான் வேண்டும் உன்னையும் சூரியாவையும் பற்றி எனக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது." "என்ன சந்தேகம்?" "என்ன சந்தேகமா? உங்களுடைய நடத்தையைப் பற்றிய சந்தேகந்தான்." "ரொம்ப சந்தோஷம்." "சந்தோஷமா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் ஒரே கன்னத்தில் இன்னும் இரண்டு பலமான அறை கொடுத்தான்.

சீதா அவ்விடமிருந்து நகரவும் இல்லை; கண்ணீர் விடவும் இல்லை; முகத்தைச் சுருக்கக்கூட இல்லை. "ரொம்ப சந்தோஷம் என்னை ஒரே அடியாக அடித்துக் கொன்று விடுங்கள்!" என்றாள். "எதற்காக உன்னைக் கொல்ல வேண்டும் என்கிறாய்?" என்றான் ராகவன். "கொன்று விட்டால் நாளைக்கு நான் ஓடிப் போக வேண்டிய அவசியமிராது" என்றாள் சீதா. "உன் மனதில் ஏதோ களங்கம் இருக்கிறது. குற்றமுள்ள நெஞ்சு அடித்துக் கொள்கிறது ஆகையால் தான் 'ஓடிப் போகிறேன்' என்று சொல்கிறாய்." "என் மனதில் களங்கமும் இல்லை; நெஞ்சில் குற்றமும் இல்லை." "பின் எதற்காக 'ஓடிப் போகிறேன்' என்கிறாய்? கட்டிய புருஷனை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்?" "உங்களுடைய மனது வேற்றுமைப்பட்டுவிட்டது. இனிமேல் நமக்குள் ஒட்டாது மனது ஒட்டாதவர்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?" "என் மனது வேற்றுமைப்பட்டுவிட்டது என்றால், அதற்குக் காரணம் உன்னுடைய நடத்தை தான். நான் இல்லாத சமயம் பார்த்து சூரியா எதற்காக உன்னைப் பார்க்க வருகிறான்? இதோ பார்! நீ உண்மையில் பதிவிரதையாக இருந்தால்...?" "பதிவிரதையாக இருந்தால்..? கடவுளே! இது என்ன விசித்திர உலகம்?" என்றாள் சீதா.

"மாயா உலகத்தைப் பற்றிய வேதாந்தப் பேச்செல்லாம் அப்புறம் இருக்கட்டும். நீ பதிவிரதையாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிறதைச் செய்ய வேண்டும் செய்வாயா?" என்றான் ராகவன். சீதா மௌனமாக இருந்தாள். "நான் சொல்வதைச் செய்வாயா, மாட்டாயா? சொல்லு பதில்!" என்று ராகவன் அதட்டினான். "இன்ன காரியம் என்று தெரியப்படுத் தினால், என்னால் முடியும் முடியாது என்று சொல்லுகிறேன்!" "காரியத்தை முதலில் சொல்ல முடியாது நான் எது சொன்னாலும் நீ செய்யத் தயாராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த வீட்டை விட்டு நடந்து விட வேண்டும்." "நான்தான் போகத் தயார் என்று சொல்லிவிட்டேனே? இந்த நிமிஷமே வேண்டுமானாலும் கிளம்பி விடுகிறேன்." "ஆனால் நான் சொன்னதை மட்டும் செய்ய மாட்டாயாக்கும்?" "இன்ன காரியம் என்று சொல்லாமல் எப்படிச் செய்வதாக ஒப்புக்கொள்ள முடியும்?" "ஏன் முடியாது? புருஷன் சொல்வது எதுவானாலும் செய்ய வேண்டியது மனைவியின் கடமையல்லவா?" "அன்யோன்ய தம்பதிகளாயிருந்தால் சரிதான் ஆனால் உங்கள் மனம் பேதலித்துவிட்டது. என் பேரில் உங்களுக்குச் சந்தேகம்; உங்கள் பேரில் எனக்குச் சந்தேகம். அப்படியிருக்கும் போது காரியம் இன்னதென்று தெரியாமல் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?"

"என் பேரில் உனக்குச் சந்தேகமா? அழகாய்த்தானிருக்கிறது. அப்படியே இருக்கட்டும்; நீ செய்ய வேண்டியதைச் சொல்கிறது. இப்போதே - இந்த நிமிஷமே போலீஸ் ஸ்டேஷனை நீ டெலிபோனில் கூப்பிட்டு, சூரியா இங்கு வந்து விட்டுப் போனதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்." "ஒரு நாளும் மாட்டேன்." "ஏன் மாட்டாய்? சூரியா பேரில் உனக்கு என்ன அத்தனை கரிசனம்?" "சூரியா என்னுடைய மாமாவின் பிள்ளை. நம் இருவருக்கும் கலியாணம் பண்ணி வைத்ததே அவன்தான். இப்போது சூரியா தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறான். என்னிடமும் உங்களிடமும் நம்பிக்கை வைத்து, நாம் காட்டிக் கொடுக்க மாட்டோ ம் என்று உறுதியாக நம்பி, அவன் என்னைப் பார்க்க வந்தான். அவனைப் போலீஸுக்குக் காட்டிக் கொடுப்பது துரோகம்; மகா பாவம்." "உன்னுடைய அம்மாஞ்சி சூரியாவினால் எனக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. புரட்சி வேலைகளில் அவன் ஈடுபட்டவன். அப்படியிருந்தும் சர்க்கார் உத்தியோகஸ்தனாகிய என் வீட்டுக்கு அவன் வந்தது பெரும் பிசகு. அதனால் எனக்கு உத்தியோகத்தில் பிரமோஷன் தடைப்பட்டு விட்டது. எனக்குக் கீழே இருந்தவர்கள் எல்லாரும் எனக்கு மேலே போய் விட்டார்கள். இன்றைக்குத் தகவலாவது கொடுக்காவிட்டால், என்னுடைய உத்தியோகம் போய்விடும்." "போனால் போகட்டும், உத்தியோகத்துக்காகச் சிநேகிதத் துரோகமான இந்தக் காரியம் செய்ய வேண்டாம். நான் வீடு வீடாகப் பிச்சை எடுத்தாவது ஏதோ கொண்டு வருகிறேன்."

"சீ! நாயே! உன்னுடைய பிச்சைக் காசை எதிர்பார்த்து நான் ஜீவிக்க வேண்டுமாக்கும்! அதெல்லாம் முடியாது. உன்னுடைய மூடத்தனத்துக்காக இரண்டாயிரம் ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்தை விட்டுவிடச் சொல்கிறாயா? ஒரு நாளும் மாட்டேன். இந்தச் சங்கடம் குறுக்கிடாவிடில் சீக்கிரத்தில் இன்னும் பெரிய உத்தியோகம் எனக்குக் கிடைக்கும். மாதம் மூவாயிரம் நாலாயிரம் சம்பளம் வரும். அதையெல்லாம் விட்டு விடச் சொல்கிறாயா? உன்னுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்." "அப்படியே இருக்கட்டும் ஆனால் நான் போலீஸுக்கு ஒரு நாளும் தகவல் சொல்லமாட்டேன்; அதைக் காட்டிலும் உயிரையே விட்டு விடுவேன்." "எனக்குத் தான் தெரியுமே? உன்னுடைய யோக்கியதை வெளியாகட்டும் என்று உன்னை 'டெலிபோன்' பண்ணச் சொன்னேன் வெளியாகிவிட்டது. இங்கே நிற்காதே! போ! தொலை!" என்று சீதாவின் கழுத்தைப் பிடித்துப் படுக்கை அறைப் பக்கமாக அவளை ராகவன் தள்ளினான்! சீதா படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். கண்களில் ஒரு சொட்டு ஜலம் கூட வரவில்லை. கன்னத்தில் கணவன் அடித்த இடத்தில் விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது. இன்று நடந்ததெல்லாம் உண்மையா அல்லது தூங்கும்போது கனவு கண்டோ மா என்று வியந்தாள்.

ராகவன் இருந்த அறையில் டெலிபோன் கருவியை 'டயல்' செய்யும் சத்தம் கேட்டது. உடனே சீதாவின் காதுகள் கூர்மையாயின; அவளது உள்ளம் ஒருமுகப்பட்டது. "ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா?" என்று ராகவனுடைய குரல் காதில் கேட்டதும் சீதா பளிச்சென்று எழுந்து ஓடி வந்தாள். டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த ராகவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "யாருக்கு டெலிபோன் செய்கிறீர்கள்?" என்று கேட்டாள். கோபத்தினால் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து கொடூரமாய் விழித்த ராகவன், "உனக்கு என்ன அதைப்பற்றி?" என்றான். "எனக்கு ஏன் சம்பந்தம் இல்லை? நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணப் போகிறீர்கள் சூரியாவைப் பற்றி. அதற்கு நான் ஒருநாளும் விடமாட்டேன். என்னைக் கொன்றுவிட்டு டெலிபோன் செய்யுங்கள்" என்றாள் சீதா. "நாளைக்கு நான் ஆபீஸிலிருந்து டெலிபோன் பண்ணினால் என்ன செய்வாய்?" என்றான் ராகவன். "அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என் காதில் விழாதிருந்தால் சரி " என்றாள் சீதா. "சூரியாவிடம் உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? உனக்கும் அவனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை, என்று சொன்னாயே!" "அப்படி நான் சொல்லவில்லை இந்த உலகத்திலேயே சூரியா ஒருவன் தான் என் பேரில் அபிமானம் உள்ளவன். எனக்காக எது வேணுமானாலும் செய்யத் தயாராயிருப்பவன். அவனை நீங்கள் காட்டிக் கொடுப்பதை நான் எப்படிப் பார்த்துக் கொண் டிருக்க முடியும்?" என்று சீதா கேட்டாள். "அடி பாதகி! சூரியாவின் மோகம் உன்னை எவ்வளவு தூரம் பைத்தியமாக்கி யிருக்கிறது என்று இப்போதல்லவா தெரிகிறது?" "ரொம்ப சந்தோஷம்." "என்னடி சந்தோஷம்? என்ன சந்தோஷம்?" என்று சொல்லிக்கொண்டு கையை ஓங்கினான் ராகவன். "இவ்வளவு படுபாதகமான விஷயத்தைச் சொல்லியும் உங்கள் நாக்கு அறுந்து விழாதது பற்றிச் சந்தோஷம்."

"என் நாக்கு அறுந்து விழவேண்டுமா? சாபம் வேறு கொடுக்கிறாயா?" என்று சொல்லிக்கொண்டே மிதமிஞ்சிய கோபாக்கிரந்தனாகியிருந்த ராகவன், டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த கையினாலேயே ஓங்கி ஒரு அடி அடித்தான். அந்த அடி சீதாவின் காதின் மேல் விழுந்தது. அவ்வளவுதான்; சீதாவின் முகத்தில் திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது; கண்களில் நீர் ததும்பிற்று. அடித்த காதைக் கையினால் பொத்திக் கொண்டாள். "அம்மா! அம்மா! அலை ஓசை கேட்கிறதே! அம்மா! என்னை அழைத்துக் கொண்டு போ அம்மா!" என்று விம்மலும் அழுகையுமாகக் கதறினாள். முகத்திலும் கண்களிலும் வெறி தாண்டவமாடியது! சீதாவுக்கு 'ஹிஸ்டீரியா' வந்துவிட்டது என்று ராகவன் உணர்ந்தான். உடனே அவளை மெதுவாகப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தான். தானும் பக்கத்தில் உட்கார்ந்தான், "வேண்டாம் சீதா! வேண்டாம்? நான் உன்னைச் சோதனையல்லவா செய்தேன்? உண்மையென்று நினைத்துக்கொண்டாயா?" என்று சாந்தமான குரலில் பேசிக் கொண்டே முதுகிலே இலேசாகத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் சீதா சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டாள். விம்மலும் அழுகையும் நின்றன சீதா நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்.

வீட்டுக்கு வெளியிலே சென்ற சூரியா, காம்பவுண்டு கேட்டின் கதவைத் திறந்து மூடிவிட்டு, மறுபடியும் தோட்டத் துக்குள் நுழைந்து வீட்டின் ஒரு ஓரமாகச் செடிகள் மரங்களின் மறைவில் சத்தமின்றி நடந்து வந்தான். ராகவனும் சீதாவும் இருந்த அறையின் ஜன்னலுக்கு அருகில் மறைவாக நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தான். பேசிய விஷயங்கள் எல்லாம் நன்றாகக் காதில் விழவில்லை. ஆனால் கண்கள் எல்லாவற்றையும் நன்கு பார்த்தன. ராகவன் டெலிபோன் கட்டையால் சீதாவை அடித்ததையும் அவள், "அம்மா! அம்மா!" என்று அலறியதையும் பார்த்த பிறகு சூரியாவால் பொறுக்க முடியவில்லை. கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் அது தவறு என்றும் பல முக்கியமான காரியங்கள் பாக்கி இருப்பதால் இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தான். அடுத்த காட்சியையும் பார்த்துவிட்டுச் சூரியா அங்கிருந்து நடையைக் கட்டினான்.

நள்ளிரவுக்குப் பிற்பட்ட பின்னிரவில் பழைய டில்லி நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூரியாவின் உள்ளம் அன்று வரை இல்லாத மாதிரிக் கொந்தளித்தது. "தேசம் எப்படி போனால் என்ன? சுதந்திரம் எக்கேடு கெட்டால் என்ன? தேசத்தையும் சுதந்திரத்தையும் கவனிக்க எத்தனையோ பேர், ஆனால் சீதா அனாதை, திக்கற்றவள். அவளைச் சந்தோஷமாக வைப்பதுதான் என்னுடைய முதல் கடமை. அந்தக் கடமையை எப்படி நிறைவேற்றுவது? நாளைக்குத் தாரிணியைக் கேட்டுக்கொண்டு தீர்மானிக்க வேண்டும். அதுவரையில், பாவம் அந்த ராட்சதனிடம் அகப்பட்டுக் கொண்ட என் அத்தங்காள் உயிரோடு இருக்க வேண்டுமே!" இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் சூரியா நடந்தான். போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்து படுத்துக்கொண்ட பிறகும் தூக்கம் வந்தபாடில்லை அன்று அவனுக்குச் சிவராத்திரியாயிற்று.
 
பதினான்காம் அத்தியாயம்

இருண்ட மண்டபம்

மறுநாள் மாலை நேரத்தில் சூரியா மீண்டும் வெள்ளி வீதியின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பெரிதும் கலக்கமடைந்திருந்தது. முதல் நாள் இரவு உறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன. அன்று காலை பதினோரு மணிக்குச் சூரியா சீதாவுக்கு டெலிபோன் செய்தான். இரண்டு தடவை டெலிபோனில் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தபடியால் கிடைக்கவில்லை. மூன்றாவது தடவை சீதாவின் குரல் கேட்டது. "சூரியா! சற்று முன்னால் நீ என்னைக் கூப்பிட்டுப் பேசினாயா?" என்றாள் சீதா. "இரண்டு தடவை கூப்பிட்டேன்; ஆனால் நீ கிடைக்கவில்லை?" என்றான் சூரியா. "அரைமணிக்கு முன்னால் டெலிபோன் மணி அடித்தது. நீயாகத் தான் இருக்கும் என்று எடுத்தேன். ஆனாலும் முன் ஜாக்கிரதையாக 'யார்?' என்று கேட்டேன். 'நான்தான் சூரியா! எப்போது சந்திக்கலாம்'? என்று குரல் கேட்டது. அது உன் குரல் இல்லையென்று சந்தேகித்து டெலிபோனை வைத்து விட்டேன். இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றாள் சீதா. "ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படி யார் கேட்டிருப்பார்கள்? எதற்காக? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே? ஒருவேளை உன் அகத்துக்காரர் தானோ என்னமோ?" என்றான் சூரியா. "இல்லை; என் அகத்துக்காரர் குரல் இல்லை; இருந்தால் எனக்கு உடனே தெரிந்திருக்கும். அது போனாற் போகட்டும்; நான் இன்றைக்கு உன்னை அவசியம் சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்கலாம்?" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள்.

"எங்கே சந்திக்கிறது? சந்தித்தால் உன் வீட்டில் தான் சந்திக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வருகிறேன்!" என்றான் சூரியா. "முடியாது! முடியாது! இன்றைக்கு என்னைப் பார்க்காவிட்டால் அப்புறம் என்னை உயிருடன் பார்க்க மாட்டாய். இங்கே நீ வரவேண்டியதும் இல்லை வந்தால் பெரிய ஆபத்தாக முடியும். நான் பழைய டில்லிக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்?" "இது என்ன யோசனை, சீதா! நீ தனியாகப் புறப்பட்டு வருவாயா? அவருக்குத் தெரியாமல் இருக்குமா? அப்படித் தெரிந்தால் ஏற்கெனவே வீண் சந்தேகப்படுகிறவர்..." "யார் என்ன சந்தேகப்பட்டாலும் சரிதான், இன்று சாயங்காலம் உன்னை நான் பார்த்தேயாக வேண்டும். இவருக்கு இன்றைக்குப் பார்ட்டி இருக்கிறது. நேரங்கழித்துத்தான் வருவார்? அதற்குள் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவேன்." "அப்படியானால் நானே அவ்விடம் வந்துவிடுகிறேன்?" "கூடவே கூடாது இந்த வீட்டுப் பக்கமே இனிமேல் நீ வரக்கூடாது. சாயங்காலம் ஆறு மணிக்கு நான் பழைய டில்லி வந்து சேருகிறேன். எனக்குப் பயம் ஒன்றுமில்லை உன்னை எங்கே பார்க்கிறது?" சூரியாவுக்கு, டவுன் ஹாலுக்குப் பின்னால் உள்ள மைதானந்தான் உடனே நினைவுக்கு வந்தது; அங்கே வரும்படியாகச் சொன்னான். சீதாவும் சரியென்று சொல்லி டெலி போனைக் கீழே வைத்துவிட்டாள். அது முதல் சூரியாவின் உள்ளம், 'சீதாவிடம் ஏன் அப்படி சொன்னோம்.பிடிவாதமாக வரக்கூடாது என்று சொல்லாமற் போனோமே இதனால் சீதாவுக்கு மேலும் என்ன கஷ்டம் நேருமோ என்னமோ?' என்று கவலைப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தபடி தாரிணியையும் மற்ற நண்பர்களையும் பார்த்தாக வேண்டும்! அதற்காகத் தான் இப்போது சூரியா வெள்ளி வீதியில் போய்க்கொண்டிருந்தான். தாரிணியைப் பற்றி எண்ணியதும் முதல் நாள் மூன்று பேர் தாரிணியைப் பிடித்துக் கொடுத்தால் லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது நினைவு வந்தது. இந்த ஞாபகம் சூரியாவின் மனக்குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது. 'இரத்த வாசல்' என்று பெயர் பெற்ற பயங்கர சரித்திர சம்பவங்கள் நடந்த இடத்தைத் தாண்டிச் சென்றதும், ஆஜானு பாகுவான முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் பச்சைச் சட்டைக்காரர் சூரியாவின் பேரில் மோதிக் கொண்டு, "மாப்கீஜீயே! குவாதே ஆஜம் ஜிந்தாபாத்!" என்றார். அந்த ஆசாமி வேண்டு மென்றே தன் பேரில் மோதிக்கொண்டு விஷமத்துக்காக மன்னிப்புக் கோருகிறார் என்று எண்ணிய சூரியா கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான். ஆசாமியின் கண் சிமிட்டலைக் கண்டதும் நேற்று போலீஸ் உடையில் காட்சி தந்தவரே தான் என்று அறிந்து, "இதென்ன இன்றைக்கு இந்த வேஷம்?" என்றான் சூரியா. "தினம் ஒரே வேஷம் போட்டா பிழைப்பது எப்படி? உன்னைக் கூட ஜாக்கிரதை செய்யும்படி தலைவர் சொன்னார். நீ நேற்று மாதிரியே இன்றும் இருக்கிறாயே?" என்றார் முஸ்லீம் லீக் தொண்டர். "அதனால் என்ன? இங்கே என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லுவதற்கில்லை; உன்னைப்பற்றி சி.ஐ.டி. விசாரணை பலமாயிருக்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது." "தலைவர் ஜாகையில் இருக்கிறாரா?" "இருக்கிறார், நீ எனக்கு ஐம்பது அடிக்குப் பின்னால் தொடர்ந்து வா! ரொம்ப நெருங்கியும் வராதே; ரொம்பத் தூரமாகவும் போய்விடாதே!" என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமி விடுவிடு என்று மேலே நடந்தார்.

அவர் கூறியபடியே சூரியா பின் தொடர்ந்தான். ஜும்மா மசூதியின் வலது பக்கத்து வீதியிலிருந்து குறுக்கே பிரிந்து சென்ற ஒரு குறுகிய வீதியில் முஸ்லீம் தொண்டர் பிரவேசித்தார். அந்த வீதியிலிருந்து மறுபடியும் பிரிந்து சென்ற சந்துகளின் வழியாக மடக்கி மடக்கித் திரும்பி நடந்தார். கடைசியில், சூரிய வெளிச்சம் என்பதையே அநேகமாகக் கண்டிராத ஒரு குறுகிய தெருவில், முஸ்லீம் லீக் கொடி பறந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றார். சூரியா வந்து சேர்ந்ததும் இருவரும் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். முன் முகப்பு அறையில் முஸ்லிம் மௌல்வி போல் காணப்பட்ட ஒருவர் குரான் ஷெரிப்பைப் போல் தோன்றிய அரபு எழுத்துப் புத்தகம் ஒன்றைத் தடவித் தடவிப் படித்துக் கொண்டிருந்தார். வந்தவர்களை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌல்வி சாகிப் மறுபடியும் புத்தகம் படிப்பதில் ஆழ்ந்தார். 'இந்த மௌல்வி யார்? எங்கேயோ பார்த்திருக்கிறோமே?' என்று சூரியா எண்ணமிடுவதற்குள்ளே முஸ்லிம் தொண்டர் அவனுடைய கையைப் பிடித்து, ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வைத்திருந்த பழைய புத்தக அலமாரிக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார். அலமாரிக்கும் சுவருக்கும் மத்தியில் ஒருவர் சிரமப்பட்டு நுழைய இடைவெளி இருந்தது. அங்கே சுவரில் ஒரு கதவும் இருந்தது. தொண்டர் அந்தக் கதவைத் திறந்து சூரியாவை உள்ளே பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். சூரியா ஒரு நிமிஷம் இருட்டில் தடுமாறினான். அடுத்த நிமிஷம் ஒரு மிருதுவான பெண்ணின் கரம் அவனுடைய கையைப் பற்றியது. தாரிணியின் குரல், "என்னுடன் வாருங்கள்" என்று அவனை அழைத்தது. தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு இருளில் நடந்து சென்ற போது சூரியாவுக்குப் பழைய காலத்து இராஜமாளிகைக்குள்ளே இரகசிய குகை வழியாகப் பிரவேசிப்பது போல் உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள் அவன் மனம் அதிசயமான ஆகாசக் கோட்டைகளை எல்லாம் நிர்மாணித்தது.

மிக மங்கலான வெளிச்சமுள்ள ஒரு பழைய காலத்து மண்டபத்துக்குள்ளே சூரியா வந்து சேர்ந்தான். அந்த மண்டபத்தின் கல் தூண்கள் பழமையைக் குறிப்பிட்டன. மேல் தளம் மிகவும் தாழ்வாக, ஆள் நின்றால் மேலே ஒரு அடிதான் பாக்கியிருக்கும்படி அமைந்திருந்தது. ஆனால் மண்டபம் விஸ்தாரமாக இருந்தது. நாதிர்ஷா, ஆமத்ஷா முதலிய கொடிய கொள்ளைக்காரர்களுக்கு டில்லி அடிக்கடி இரையாகி வந்த காலங்களில் வெள்ளி வீதியின் செல்வம் மிகுந்த வியாபாரிகள் சிலர் இந்த மண்டபத்தில் தங்களுடைய விலை உயர்ந்த பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்தி வந்தார்கள். அந்த இருண்ட மண்டபம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கு வழி தெரிந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பது மிகவும் பிரயாசையான காரியமாதலால், அதில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டன. அந்தப் பழைய இரகசிய மண்டபம் இப்போது புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைமை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கியது. மண்டபத்தில் அச்சமயம் சுமார் இருபது பேர் இருந்தார்கள். சிலர் தனியே படுத்துப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கும்பல் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் படுத்துத் தூங்கினார்கள். அவர்களுடைய உடைகள் விதவிதமாக இருந்தன. சுவரில் ஒரு ஆணியில் போலீஸ் தலைப்பாகையும் உடைகளும் தொங்குவதைச் சூரியா கவனித்தான். நேற்றுத் தன்னைத் தாரிணி இருக்குமிடம் அழைத்துச் சென்ற ஆசாமி அணிந்திருந்த உடை தான் அது என்பதையும் தெரிந்து கொண்டான்.

தனியே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஒருவரைத் தாரிணி சுட்டிக்காட்டி, "அதோ தலைவர்!" என்றாள். சூரியா அவரிடம் சென்று, "இன்குலாப் ஜிந்தாபாத்!" (புரட்சி வாழ்க) என்று கோஷித்தான். புது ஆசாமி வந்திருப்பதைக் கண்டதும் எல்லாரும் வந்து கும்பலாகத் தலைவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். "எங்கெங்கே போயிருந்தீர்? போன இடங்களில் எல்லாம் நாட்டின் நிலைமை எப்படியிருக்கிறது?" என்று சூரியாவைத் தலைவர் கேட்டார். "மத்திய மாகாணத்துக்கும், ஆந்திர தேசத்துக்கும் மதராசுக்கும் போயிருந்தேன். கிட்டத்தட்ட மதுரை வரையில் போனேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஜனங்களின் உள்ளம் எரிமலை போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்த நிமிஷமும் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கத் தொடங்கலாம். அந்த அக்கினிப் பிரவாகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி சாம்பலாகப் போகப் போகிறது." "உம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமென்ன? எதைக் கொண்டு சொல்லுகிறீர்?" "சென்னையில் பென்ஷன் வாங்கும் மாஜி சப் ஜட்ஜ் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஹிட்லர் ஜயித்து இந்தியாவுக்குள் பிரவேசிக்கப் போகும் தினத்தை நிர்ணயிக்க ஜோசிய சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். தேவபட்டணத்தில் திவான் பகதூர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நெடுங்காலம் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்திருந்தவர். 'ஜப்பான் காரன் வந்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம்' என்றார். எங்கெங்கே போனாலும் சாதாரண ஜனங்கள் 'இங்கிலீஷ்காரன் யுத்தத்தில் கட்டாயம் தோற்பான்; இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து போகும்' என்ற ஆசையுடன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்."

"ஆசையும் நம்பிக்கையும் இருந்து என்ன பிரயோஜனம்? பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதற்கும் சுயராஜ்யம் அமைப்பதற்கும் ஜனங்கள் எந்த விதத்தில் உதவி செய்யத் தயாராயிருக்கிறார்கள்? சென்ற வருஷத்தைப் போல இந்த ஆகஸ்டு 9-ந் தேதி தேசமெங்கும் புரட்சி இயக்கம் சுடர் விட்டு ஓங்கும் என்று எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லையே!" "அந்த விஷயம் தான் ஏமாற்றமாயிருக்கிறது ஜெர்மெனியோ, ஜப்பானோ படை யெடுத்து வந்து இந்தியாவுக்கு விடுதலை கிட்டும் என்று பெரும்பாலோர் ஆசைப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இன்னும் பலர் சுபாஷ் பாபு மலாய் நாட்டிலிருந்து சைன்யம் திரட்டிக் கொண்டு பர்மா வழியாக வரப் போகிறார் என்று எதிர் பார்க்கிறார்கள். சுதந்திரத்துக்காக நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் பெரும்பாலோர் மனதில் படவில்லை. பெயரும் செல்வாக்கும் இல்லாத தொண்டர்கள் சிலர் அங்கங்கே புரட்சிக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேல் போலீஸார் பிரயோகிக்கும் பயங்கர முறைகள் பொது ஜனங்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன. போலீஸ் பயங்கரத்துக்கு ஓர் உதாரணத்தை நானே பார்த்தேன்.." தேவபட்டணத்தில் வக்கீல் ஆத்மநாதய்யர் வீட்டில் ஆண்டு நிறைவுக் கலியாணத்தின் போது நடந்த போலீஸ் அட்டூழியத்தைப்பற்றிச் சூரியா விவரித்துக் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் புரட்சித் தலைவர் சொன்னார்: "மற்ற நாடுகளில் சுதந்திரப் போர் நடத்தியவர்கள் இதைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு பயங்கரங்களை அனுபவித்திருக்கிறார்கள். நீண்ட அன்னிய ஆட்சியின் பயனாக நம் ஜனங்கள் அடியோடு தீரத்தை இழந்து கோழைகளாகி விட்டார்கள். ஆனாலும் அங்கங்கே ஒரு சிலராவது பிடிவாதமாயிருக்கும் வரையில் நம்பிக்கை உண்டு. மக்களின் மனதிலுள்ள மனக்கசப்பு திடீரென்று ஒரு சமயம் பொங்கி எழாமற் போகாது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் வரையில் புரட்சித் தீ அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியா! உன்னுடைய வருகையைப்பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விசாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீ இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது. கல்கத்தாவுக்குப் போகிறாயா? அங்கே முக்கிய காரியம் இருக்கிறது?" என்றார் தலைவர். "ஓ! போகிறேன்!" என்றான் சூரியா. ஒருவேளை சீதா பிடிவாதம் பிடித்தால் அவளையும் கல்கத்தாவில் கொண்டுபோய் விடுவதற்குச் சௌகரியமாயிருக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். கல்கத்தாவில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தலைவர் அவனுக்கு விவரமாகக் கூறினார்.
 
பதினைந்தாம் அத்தியாயம்

"இன்னொருவர் இரகசியம்"

மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில் கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். "கல்கத்தாவுக்கு எப்போது கிளம்புவதாக உத்தேசம்?" என்று தாரிணி கேட்டாள். "இன்றைக்கே புறப்பட்டாலும் புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா?" என்று சூரியா வினவினான். "இல்லை; நான் பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின் அடிச்சுவடு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார் நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம். அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது. ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலே நடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்."

"ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்?" "தனியாகப் போனால் என்ன? யார் என்னை என்ன செய்து விடுவார்கள்?" "அப்படியா நினைக்கிறீர்கள்? ஒரு சமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலே போய்விட்டீர்கள் அல்லவா? நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! முதலில் என் காதுகளை நான் நம்பவில்லை.அப்புறம் அவர்கள் உண்மையாகவே அப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்." "இது என்ன விந்தை? எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள்? அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார்? போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கே ஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே? ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப் பார்களோ!" "அதெல்லாம் இல்லை; அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்க வேண்டும்."

தாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, "நல்ல வேடிக்கை சூரியா! ஒரு யோசனை! நம் இயக்கத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழி கிடைத்திருக்கிறதே? அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப் பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்" என்றாள். "இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சி நடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!" என்றான் சூரியா. "எதனாலே அவ்வாறு சொல்கிறீர்கள்? கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லுவானேன்? அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள்? நான் என்ன சிறு குழந்தையா? அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா?" "அப்படிக் கூடச் செய்வார்கள்தான்! ஏன் செய்ய மாட்டார்கள்? தாரிணி! இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள் உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது.

சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது!" "அது என்ன விஷயம்? முன்னாலேயே நான் கேட்காமல் போனேனே? நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா? சீதா என்ன சொன்னாள்? ராகவனைப் பற்றி ரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றாள் தாரிணி. "சீதா சொல்லி நான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகு தான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்." பிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னான். கதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும் குடிகொண்டன. "இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர் என்று நான் நினைக்கவே இல்லை." "யார் தான் நினைத்தார்கள்? இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடைய கலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா? சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா?" "பிறத்தியாருடைய காரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின் தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா? அதில் நீங்கள் தலையிட்டிருக்கக் கூடாது."

"இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது? என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டான் சூரியா. "சீதாவின் வாழ்க்கையில் நீங்கள் தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா? மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம். நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்" என்றாள் தாரிணி. "இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்?" என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன. "அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இது என்ன விபரீதம்! உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்?" "என் பெயரில்தானே புகார் இருக்கிறது? ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவி எனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான் பம்பாய்க்குப் பிரயாணமாவேன்."

"உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டு சி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன." "நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேக நிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும் அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்." "சோல்ஜர்களும் சிப்பாய்களும் மட்டுந்தானா? சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தாரிணி! நீங்களும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்." "என்னை நான் பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவு செய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி." "அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப் பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்!" "எனக்கு மட்டும் ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா? சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப் போகிறேன்." "தாரிணி! ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா? சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன?" "அவள் புரட்சி வீரர் சூரியாவின் அத்தங்காள் என்னும் காரணம் போதாதா?"

"என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்றத் தோன்றி யிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்." "உங்களுடைய ஊகம் உண்மை தான்! அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்க வேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச் சொல்லக் கூடாது" என்றாள் தாரிணி. "போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும் போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவது தகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின் நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்." "சூரியா! ஆச்சரியப்பட வேண்டாம்! சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால் அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச் சீதா அறிந்தால் சந்தோஷப் படவும் மாட்டாள்." சீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியா நினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத் தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது. "தாரிணி! கீழே ஒரு மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் வாசித்துக் கொண்டிருக்கிறாரே? அவர் யார்? சொல்ல முடியுமா?" என்று கேட்டான். "சொல்ல முடியும் சூரியா! அந்த மௌல்வி சாகிபுதான் என்னுடைய தகப்பனார்!... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா?" என்றாள் தாரிணி.
 
பதினாறாம் அத்தியாயம்

சீதாபஹரணம்

அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் ஒரே மாதிரி குறுகலாயும் அசுத்தம் நிறைந்துமிருந்த சந்துகள் வழியாகச் சூரியாவை முஸ்லீம் லீக் தொண்டர் அழைத்துச் சென்று சற்று தூரத்தில் ஜும்மா மசூதி தெரியும் இடம் வந்ததும், "அதோ! ஜும்மா மசூதி! இனிப் போய் விடுவீர் அல்லவா?" என்றார். "வந்தனம்! இவ்வளவு தூரம் கூட நீங்கள் வந்திருக்க வேண்டிய தில்லை" என்று சொல்லிவிட்டுச் சூரியா மைதானத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போதே அவனுடைய கால்கள் தடுமாறின. டில்லி நகரமே அவனைச் சுற்றிச் சுழல்வது போலிருந்தது. தாரிணி ஒரு முஸ்லீம் மௌல்வியைத் தன்னுடைய தகப்பனார் என்று சொன்னது அவ்வளவு தூரம் அவனுக்கு அதிர்ச்சி உண்டு பண்ணி விட்டது. அந்தச் செய்தியினால் அவனுடைய ஆகாசக் கோட்டைகள் பல தகர்ந்து இடிந்து அவன் தலை மீது விழுந்து கொண்டிருந்தன. ஆம்; அந்தச் செய்தி உண்மையானால் அவனுடைய வாழ்க்கையின் போக்கே மாற வேண்டியதுதான். ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துகொள்ள வேண்டுமானால் தானும் ஒரு முஸ்லீம் ஆக வேண்டும். ஆயிரமாயிரம் வருஷங்களாக நிலைபெற்று உலகத்துக்கெல்லாம் வழி காட்டும் ஜோதியாக விளங்கும் சநாதன ஹிந்து தர்மத்தைத் துறந்துவிட அவன் தயாராயில்லை.

"ஒருவேளை பொய்யாயிருக்குமோ? நமக்குப் போக்குக் காட்டுவதற்காக அப்படிச் சொல்லியிருப்பாளோ?" என்ற எண்ணம் தோன்றியவுடனே, இன்னொரு விதமான சிந்தனைப் போக்கில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஆகா! அந்தப் பெண்ணை எந்த விதத்திலும் நம்புவதற்கில்லை. ஒரு பக்கத்தில் புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தீவிர புரட்சிக்காரியாக விளங்கு கிறாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடன் சிநேகம் வைத்துக்கொண் டிருக்கிறாள். ஆங்கில நவீனங்களிலே யுத்த காலத்தில் அழகு வாய்ந்த பெண்கள் ஒற்று வேலை செய்வதைப் பற்றிப் படித்திருக்கிறோ மல்லவா? அவர்கள் எந்தக் கட்சிக்காக ஒற்று வேலை செய்கிறார்கள் என்பதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடிகிற தேயில்லை. இந்தத் தாரிணியையும் அந்த ரகத்தில் சேர்க்க வேண்டியதுதான். "என்னைப் பிடித்துக் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள்!" என்று எவ்வளவு சர்வ சகஜமாகக் கூறினாள். வைஸ்ராய் நிர்வாக சபை அங்கத் தினர்களுடன் சாதாரணமாகப் பழகக்கூடியவள் தன்னைப் போன்ற ஏழை வாலிபனிடம் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்வதை எப்படி நம்புவது? சௌந்தரராகவனிடம் அவளுக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றி நினைத்தாலும் பலவித சந்தேகங்களுக்கு இடம் ஏற்படுகிறது. சீதா விஷயத்தில் இவளுடைய உண்மையான மனப்பாங்கு தான் என்ன? சீதாவின் க்ஷேமத்தில் அவள் அக்கறை கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இருக்குமோ? அப்படியானால் அந்த நோக்கம் என்ன?

அந்தப் பேதைப் பெண் சீதாவை இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஏறக்குறைய பைத்தியமாக அடித்து விட்டார்கள்? தாரிணியின் வார்த்தையை நம்பி அந்த அனாதையை கைவிட்டுத் தான் கல்கத்தாவுக்குப் போய்விடுவது சரியா? இவ்வித மெல்லாம் யோசனை செய்து கொண்டே ஜும்மா மசூதியைத் தாண்டி அப்பால் வெள்ளி வீதிக்குள் சூரியா பிரவேசித்தான். டவுன் ஹாலை அடைந்ததும் அங்கே வீதி ஓரத்தில் சீதா தன்னந்தனியாக நிற்பதைக் கண்டான். விரைந்து அவளிடம் சென்று, "சீதா! நீ இங்கே வந்து ரொம்ப நேரமாகி விட்டதா?" என்றான். "கால் மணி நேரந்தான் ஆயிற்று; ஆனாலும் சாலையில் போகிறவர்கள் என்னை உற்று உற்றுப் பார்த்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்துக்குள் நீ வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவது என்று எண்ணி கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய்!" என்று சொன்னாள் சீதா. சூரியாவின் மனதில் அப்போது, ஐந்து நிமிஷம் கழித்து 'வராமற் போனோமே!' என்று தோன்றியது. அப்படித் தாமதித்திருந்தால் சீதா திரும்பிப் போயிருப்பாள். தனக்குப் பொறுப்பு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். மறுகணம் சூரியாவுக்குத் தன்னுடைய சுயநல எண்ணம் வெட்கத்தை அளித்தது. அனாதை சீதாவுக்கு யாருமே சிநேகம் இல்லை; அனுதாபத்துடன் அவளுக்கு உதவி செய்வாரும் கிடையாது. நாமும் இப்படி அவளைக் கைவிட எண்ணினால்?...

இருவரும் டவுன் ஹாலுக்குப் பின்புறமுள்ள சாலையின் வழியாகக் காந்தி மைதானத்தை நோக்கி நடந்தார்கள். முதல் நாள் தாரிணியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அதே மரத்தடிக்குச் சூரியா சீதாவை அழைத்துச் சென்றான். வழியில் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் நடக்கும் போது சூரியாவின் மனம் சீதாவின் விஷயத்தில் தன்னுடைய கடமை என்ன என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் சென்று உட்கார்ந்ததும் சீதா அக்கம் பக்கம் பார்த்து விட்டு, "அம்மாஞ்சி! நீ உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடு! உன்னைப் போலீஸார் பிடிப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெலிபோனில் உன் மாதிரி பேசி என்னிடம் விஷயம் தெரிந்து கொள்ள முயன்றவர்கள் போலீஸார் தான். இதை எப்படியாவது உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் நான் முக்கியமாக இங்கே வந்தேன். டெலிபோனில் சொல்வதற்கும் பயமாயிருந்தது. நடுவில் யாராவது டெலிபோனில் பேச்சை ஒட்டுக் கேட்டாலும் கேட்கக் கூடுமல்லவா? இன்றைக்கு ராத்திரியே புறப்பட்டுப் போய்விடு, சூரியா!" என்று படபடவென்று பேசினாள் .

"அத்தங்கா! என்னைப் பற்றி உனக்கு ஏன் இவ்வளவு கவலை? போலீஸார் என்னைப் பிடித்துவிட்டால் தான் என்ன? எந்த நிமிஷமும் கைதியாகிச் சிறைக்குப் போவதற்கு நான் தயாராகத் தான் இருக்கிறேன். உன்னுடைய விஷயத்தைப் பற்றிப் பேசு சீதா! நேற்றிரவு நான் வாசலில் போவதாகப் போக்குக் காட்டி விட்டுத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னை ராகவன் கை நீட்டி அடித்ததைப் பார்த்தபோது எனக்கு இரத்தம் கொதித்தது. கைத்துப்பாக்கியால் சுட்டுவிடலாம் என்று கூட எண்ணினேன். நீ உன் அகத்துக்காரர் மீது புகார் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை. ஸ்திரீகளுடைய சுபாவமே புகார் சொல்வதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் ராகவன் உன்னை நடத்திய விதத்தைப் பார்த்த பிறகு சந்தேகமில்லாமல் போய் விட்டது. இப்பேர்ப்பட்ட ராட்சதன் உனக்குப் புருஷனாக வாய்த்தானே, நான் அதற்குக் காரணமாயிருந்தேனே என்று எண்ணி எண்ணி நேற்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. இப்படிப்பட்ட புருஷனை விட்டு விட்டு நீ ஓடிப் போக எண்ணினால் நான் உன் பேரில் குற்றம் சொல்லமாட்டேன். நானே உன்னை அழைத்துப் போகத் தயாராயிருக்கிறேன். என்னுடன் நீயும் வா! அமரநாத்தின் வீட்டில் உன்னை ஒப்புவித்து விட்டுப் பிறகு நான் என் காரியத்தைப் பார்க்கிறேன். அமரநாத்தும் அவன் மனைவி சித்ராவும் எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் உன்னை வைத்துக் காப்பாற்றுவார்கள்...."

இவ்வளவு நேரம் அரைமனதாகக் கேட்டுக் கொண்டிருந்த சீதா இப்போது குறுக்கிட்டு, "சூரியா! அந்த யோசனை யெல்லாம் இனி வேண்டாம். நான் என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்!" என்று சொன்னாள். "அத்தங்கா! அந்த மாதிரி முடிவு செய்ய வேண்டாம். நீ எதற்காக உயிரை விடவேண்டும்? ராகவனைப் போன்ற ஈவிரக்கமில்லாத கிராதக னுக்காகவா? என்னுடைய உடம்பில் மூச்சு உள்ள வரையில் உன்னை நான் சம்ரக்ஷிப்பேன். இந்த உலகமெல்லாம் உனக்கு விரோதமாயிருந் தாலும் நான் உன்னுடைய கட்சியில் இருப்பேன். ஏதாவது கெட்ட பெயர் வருகிறதாயிருந்தால் அந்தக் கெட்ட பெயரை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். உயிரை விடுகிற எண்ணத்தை மட்டும் நீ விட்டு விட வேண்டும்!" என்று சூரியா உணர்ச்சி பொங்கக் கூறினான். "சூரியா! உயிரை விடுவது பற்றி யார் பேசினார்கள்? உயிரை விடும் உத்தேசம், என் அகத்துக்காரரை விட்டுப் போகும் உத்தேசம் இரண்டையும் நான் கைவிட்டு விட்டேன். அவருடைய மனம் போல் நடந்து அவருடைய திருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு ஒருவேளை வியப்பாயிருக்கும். நேற்று இராத்திரி சம்பவத்துக்குப் பிறகு இத்தகைய தீர்மானம் நான் எப்படிச் செய்தேன் என்று ஆச்சரியப்படுவாய். ஒருவேளை நம்பக்கூட மாட்டாய், ஆனாலும் நான் சொல்வது உண்மை. இன்றைக்கு மத்தியானம் ஒரு பத்திரிகையில் கஸ்தூரிபாய் காந்தியின் சரித்திரத்தை வாசித்தேன். அதுதான் என் மனதை மாற்றி விட்டது. கஸ்தூரிபாய் காந்தி எப்படி யெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாள் தெரியுமா? எழுபதாவது வயதில் ஜெயிலுக்குப் போயிருக்கிறாள்! அவள் அல்லவா உத்தமி; நானும் என் கணவர் இஷ்டப்படி இனிமேல் நடந்து கொள்கிறது என்று தீர்மானித் திருக்கிறேன்."

சூரியாவின் தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போலத் தோன்றியது. சீதாவின் முடிவு அவனுடைய இருதயத்துக்கு உகந்ததாயிருந்தது. ஆனால் அவனுடைய அறிவு அந்த முடிவை ஆட்சேபித்தது. சீதாவைப் பார்த்து அவன் கூறியதாவது; "ஸ்திரீகளின் மனதைக் கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார்களே, அது வாஸ்தவமாகத்தானிருக்கிறது. பெண்களின் சஞ்சலப் புத்தியைப் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பதிலும் தவறில்லை. இரண்டுக்கும் நீயே உதாரண மாயிருக்கிறாய். நேற்று இரவு எப்படிப் பேசினாய்? இன்றைக்கு எப்படிப் பேசுகிறாய்? புருஷன் என்ன கொடுமை செய்தாலும் மனைவி பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கட்சியை நான் ஒப்புக்கொள்ள முடியாது. அதெல்லாம் பழைய காலம்; பெண்களை அடிமைப்படுத்தப் புருஷர்கள் எழுதி வைத்த சாஸ்திரங்கள் சொல்லும் கடமை. 'ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம்' என்பது இந்தக் காலத்துத் தர்மம். கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றிக் கூறுகிறாயே? கஸ்தூரிபாயின் கணவர் உலகம் போற்றும் உத்தமர். மகாத்மா காந்தியோடு மற்றவர்களை இணை சொல்ல முடியுமா?"

"சூரியா! காந்திஜியின் இஷ்டத்தைப்போல் கஸ்தூரிபாய் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது அவர் மகாத்மா ஆகியிருந்தாரா? இல்லையே? ரொம்ப சாதாரண மனிதராகத் தானே இருந்தார்? அப்போது முதல் கஸ்தூரிபாய் கணவரைத் தெய்வம் என்று நினைத்து நடந்தபடியால் தான் காந்திஜி மகாத்மா ஆனார். பெண்களின் சுதந்திரத்தைப் பற்றியும் நான் யோசித்துப் பார்த்தேன். சூரியா! எனக்கு இவர் எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்துத் தான் இருந்தார்! நான் எங்கே போனாலும் ஏன் போனாய் என்று கேட்பதில்லை. யாரோடு பேசினாலும் ஏன் பேசினாய் என்று கேட்பதில்லை. நான் தான் அவரை அப்படியெல்லாம் கேட்டு அவருடைய வாழ்க்கையை நாசமாக்கினேன். எனக்கு அவர் பூரண சுதந்திரம் கொடுத் திருந்தார். நான் அவருக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்கவில்லை. யோசிக்க யோசிக்கத் தப்பெல்லாம் என் பேரில் தான் என்று உணர்கிறேன். என்னுடைய மூளை எப்படியோ கெட்டுப் போயிருந்தது. இப்போது நிச்சயமாக முடிவு செய்து விட்டேன். இனிமேல் நீ என் மனதை மாற்ற முயல்வதில் பயனில்லை" என்றாள் சீதா.

சூரியா திகைத்துப் போய்விட்டான் "நான் உன் மனதை மாற்ற முயலவேயில்லை. எப்படியாவது நீ ராகவனுக்கு உகந்த மாதிரி நடந்து அவனைச் சீர்திருத்தினால் சரிதான். நீயும் ராகவனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறில்லை. புறப்படு, போகலாம்! இருட்டி விட்டது. உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு என் காரியத்தைப் பார்க்கப் போகிறேன்" என்றான். "நீ என்னுடன் வரவேண்டாம்; ஒரு டாக்ஸி பிடித்து என்னை அதில் ஏற்றிவிட்டால் போதும். இல்லாவிடில் நானே பிடித்துக் கொள்கிறேன்" என்று சீதா சொன்னாள். "அது மாத்திரம் முடியாது, சீதா! என்னுடைய கடமையை நான் செய்தே தீருவேன். இப்போதெல்லாம் டில்லியில் எங்கே பார்த்தாலும் அபாயம் அதிகமாகி வருகிறது. ஸ்திரீகள் தனியாகப் போவது உசிதமல்ல அதிலும் இருட்டிய பிறகு போகவே கூடாது." "எனக்கு என்ன அபாயம் வந்துவிடும், சூரியா! நீ எதற்காக என்னைப் பற்றி வீணில் பயப்படுகிறாய்?"

"உனக்குத் தெரியாது, நேற்றுச் சாயங்காலம் தாரிணியும் நானும் இதே மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தோம்.." "தாரிணியோடு இந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தாயா? என்னிடம் சொல்லவே இல்லையே?" என்று கேட்ட சீதாவின் குரலில் இத்தனை நேரம் இல்லாத ஈருஷை தொனித்தது."உன்னிடம் சொல்லச் சந்தர்ப்பம் ஏற்படாதபடியால் சொல்லவில்லை; அதனால் என்ன?""அதனால் என்ன? ஒன்றுமில்லை; நீயும் தாரிணியும் எதைப் பற்றிப் பேசிக் கொண்டி ருந்தீர்கள்? இந்த மரத்தின் அடிக்கு எதற்காக வந்தீர்கள்?" "தனியாகப் பேச வேண்டியிருந்தது; அதனால்தான் வந்தோம் இன்றைக்கு நாம் இருவரும் வரவில்லையா?" "தனியாக நீங்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டேன்." "பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். முக்கியமாக, புரட்சி இயக்கத்தை மேலே நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், உன்னைப் பற்றியும் பேசினோம்." "என்னைப் பற்றி என்ன பேசினீர்கள்? தாரிணியுடன் நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவசியம் என்ன?" என்று சீதா கேட்டாள். "உன்னுடைய உடல்நிலையும் உள்ளத்தின் நிலையும் சரியாயில்லாதது பற்றிப் பேசினோம். உனக்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தோம்."

"எனக்கு ஒரு உதவியும் தேவையில்லை. என்னமோ சொல்ல வந்தாயே அதைச் சொல்! நீயும் தாரிணியும் இங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள் அப்புறம்?" "தாரிணி போன பிறகு நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மூன்று ஆசாமிகள் வந்தார்கள். வந்து லோகா பிராமமாகக் கொஞ்ச நேரம் பேசினார்கள். பிறகு தங்கள் நோக்கத்தை வெளியிட்டார்கள். அதாவது தாரிணியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு போவதற்கு நான் உதவி செய்தால் எனக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! நன்றாயிருக்கிறதல்லவா?" "இது என்ன அநியாயம்? அப்படிப்பட்ட மனிதர்கள் யாராயிருக்கும்?" என்றாள் சீதா. "ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தோன்றியது. இந்த 1943-ஆம் வருஷத்தில் வைஸ்ராய் வேவலின் ஆட்சியின் கீழ் டில்லி நிலைமை இப்படி இருக்கிறது. இருட்டிலே உன்னைத் தனியாக அனுப்ப எப்படி எனக்கு மனம் வரும்?" "சூரியா! என் விஷயத்தில் அந்த மாதிரிக் கவலை உனக்கு வேண்டாம். தாரிணியைப் போன்ற அழகிக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னால், எனக்கும் அப்படிச் சொல்வார்களா? என் மூஞ்சி இருக்கிற லட்சணத்துக்கு என்னை ஏலம் போட்டாலும் ஒரு லட்சம் பைசாக்கூட யாரும் கொடுக்க மாட்டார்கள். என் அகத்துக்காரர் தாரிணியை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டாரே, அதை நினைத்தால் அவருக்கு எவ்வளவோ நான் நன்றியோடிருக்க வேண்டும்."

"அப்படி நீயிருப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று உன்னை உன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அது என்னுடைய கடமை இல்லாவிட்டால் என் மனது அடித்துக் கொண்டேயிருக்கும்." "சூரியா! உன்னை வரவேண்டாம் என்று நான் சொல்லுவது உனக்காகத் தான். எங்கள் வீட்டுக்கருகில் போலீஸார் வட்டமிட்டுக் கொண்டிருக் கிறார்கள். நீ அவ்விடம் வந்தால் உடனே உன்னை அரெஸ்டு செய்து விடுவது என்று காத்திருக்கிறார்கள்..." "அரெஸ்டைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை என்றுதான் முன்னமே சொன்னேனே?" "உனக்குக் கவலையில்லை என்பது சரிதான். நீ எப்போது கைதியாவோம், ஜெயிலுக்குப் போய் நிம்மதியாயிருப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால் என் அகத்துக்காரர் சர்க்கார் உத்தியோகஸ்தர் என்பதை நீ கவனித்தாயா? எங்களுடைய வீட்டில் உன்னைக் கைது செய்யும்படி நேர்ந்தால் அவருடைய நிலைமை என்ன ஆகும்? அவருடைய உத்தியோகத்துக்கு ஆபத்து வராதா?" சூரியா ஒரு நிமிஷம் திகைத்து ஸ்தம்பித்துப்போய் விட்டான். பிறகு "மன்னிக்க வேண்டும், சீதா! அந்த விஷயத்தை நான் எண்ணிப் பார்க்கவேயில்லை. போகட்டும்; நான் உன் வீடு வரையில் வரவில்லை. வீட்டுக்குக் கொஞ்ச தூரம் வரையில் வருகிறேன். அப்புறம் நீ தனியே போய்விடு இவ்வளவாவது செய்தால் தான் என் மனம் நிம்மதியடையும்" என்றான் சூரியா. "நல்லது; அப்படியே செய் உன் மனது நிம்மதி அடையட்டும்" என்று சீதா சம்மதித்தாள்.

இருவரும் அந்த மரத்தடியிலிருந்து புறப்பட்டார்கள். மைதானத்திலிருந்து வெள்ளி வீதிக்குப் போகும் சாலை ஜன நடமாட்டம் இல்லாமலிருந்தது. அந்தச் சாலையில் ஓரிடத்தில் ஒரு பெரிய மோட்டார் நின்று கொண்டிருந்தது. அதனுடைய பின்புறத்திலிருந்த 1111 என்னும் நம்பர் சூர்யாவின் மனதில் பதிந்தது. வண்டிக்குள் இரண்டு பேர் இருந்தார்கள். வண்டிக்கு வெளியில் சாலை ஓரத்து வேலிக்கருகில் நின்று இருவர் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். வண்டியைத் தாண்டிச் சென்ற போது சூரியாவின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆனால் அதைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அதுவல்ல என்பதை உணர்ந்தான். பின்னர் கொஞ்சம் வேகமாகவே நடந்தான். சூரியாவும் சீதாவும் வெள்ளி வீதியை அடைந்து மணிக்கூண்டுக்கு அருகில் ஒரு டாக்ஸியைப் பிடித்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புதுடில்லியை நோக்கிப் போயிற்று. அவர்கள் ஏறிய டாக்ஸியைப் பின்னால் ஒரு மோட்டார் வண்டி தொடர்ந்து வருகிறது என்று சூரியா சந்தேகித்தான். அதை நிச்சயம் செய்துகொள்ள முடியவில்லை! புது டில்லிச் சாலையில் மோட்டார் வண்டிகள் முன்னும் பின்னும் போகாமலா இருக்கும்? வண்டி வேகமாய்ச் சென்றது; ஜந்தர் மந்தர் என்னும் வான சாஸ்திர ஆராய்ச்சிக் கூடத்தைக் கடந்ததும் சீதா, "இங்கேயே வண்டியை நிறுத்திவிடலாம். எங்களுடைய வீடு இன்னும் கொஞ்ச தூரந்தான் இருக்கிறது" என்றாள்.

"சரி என்று சொல்லிச் சூரியா வண்டியை நிறுத்தச் செய்தான். "நான் இவ்விடம் இறங்கிக் கொள்ளட்டுமா? நீ வீட்டுக்குப் போய் வண்டியை அனுப்பிவிடுகிறாயா?" "வேண்டாம்! டாக்ஸிக் காரில் போய் இறங்கினால் வேலைக்காரர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். நடந்து போனால் வழக்கம்போல் உலாவப்போய் வருவதாக எண்ணிக் கொள்வார்கள். இங்கிருந்து நடந்தே போய்விடுகிறேன். இரண்டு பர்லாங்கு தூரம் கூட இராது" என்றாள் சீதா. "சரி" என்றான் சூரியா. சீதா வண்டியிலிருந்து இறங்கியதும், "இன்று ராத்திரியே கல்கத்தா போகப் போகிறாயல்லவா? கட்டாயம் போய்விடு, சூரியா!" என்றாள். "போகத்தான் போகிறேன், சீதா?" "நாம் மறுபடியும் எப்போது சந்திக்கிறோமோ என்னமோ? ஆனால் என்னிடம் உனக்குள்ள அபிமானத்தையும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவியையும் ஒருநாளும் நான் மறக்கமாட்டேன்" என்றாள் சீதா. "நானும் உன்னை ஒருநாளும் மறக்க முடியாது, அத்தங்கா!" சீதா சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சூரியா வண்டியிலிருந்து இறங்கி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். வெண்ணிலா துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளின் தோட்டங்களிலிருந்து இரவு பூக்கும் மலர்களின் சுகந்தம் வந்துகொண் டிருந்தது. காற்று மிருதுவாக வீசிற்று; பக்கத்து வீடு ஒன்றிலிருந்து, "ஸோஜா ராஜ குமாரி! ஸோஜா!" என்னும் கிராமபோன் கீதம் கேட்டுக் கொண்டிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் சீதா மேலே மேலே அந்தச் சாலையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாப் படத்தில் வரும் காட்சியைப் போல் தோன்றியது. சீதாவின் வருங்கால பாக்கியம் எப்படியோ? அவளுடைய மன மாறுதலைப்பற்றி அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா? அல்லது நம்மிடம் அவ்விதம் சொல்லிவிட்டுச் சென்று, விஷத்தை அருந்திச் சாகப் போகிறாளா? அப்படி நேர்ந்தால் அந்தச் சாவில் நமக்கு பொறுப்பு இல்லாமல் போகுமா?" என்று சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கார் சூரியாவைத் தாண்டிப் போயிற்று. அதனுடைய நம்பர் 1111 என்பது மறுபடியும் அவனுடைய கண்ணில் பட்டுக் கவனத்தில் பதிந்தது. வேகமாகச் சென்ற அந்த மோட்டார் கார் பட்டென்று பிரேக் போடப்பட்டுச் சீதாவின் அருகில் நின்றது. வண்டியிலிருந்து இரண்டு பேர் குதித்தார்கள். சீதாவைப் பலவந்தமாகக் காருக்குள் தள்ளினார்கள். தாங்களும் ஏறிக்கொண்டார்கள், கதவு சாத்தப்பட்டது. வண்டி 'கிர்' என்ற சத்தத்துடன் திரும்பி சூரியா நின்ற வழியாகவே மறுபடியும் வரத் தொடங்கியது.

இவ்வளவும் சுமார் அரை நிமிஷத்துக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிட்டது. சூரியாவின் மூளை சற்று நேரம் செயலிழந்து போயிருந்தது. ஆனால் அந்த வண்டி நின்ற இடத்தைத் தாண்டிச் சென்றபோது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. வண்டிக் குள்ளிருந்து 'அம்மாஞ்சி' என்ற தீனக்குரல் வந்தது போலத் தோன்றியது. சூரியா தன் கால்சட்டைப் பையிலேயே வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த வண்டியின் டயர்களை நோக்கிச் சுட்டான். டயர் மீது குண்டு படவில்லை. சட்டென்று பக்கத்தில் நின்ற டாக்ஸிக்குள் ஏறிக்கொண்டு, "அதோ அந்த வண்டிக்குப் பின்னால் விடு! உனக்கு வேண்டியதைத் தருகிறேன்! இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றான். "பெட்ரோல் குறைவாக இருக்கிறது, சாகிப்!" என்றான் வண்டியின் டிரைவர். "அதனால் பரவாயில்லை பெட்ரோல் இருக்கிறவரையில் வண்டியை ஓட்டு சீக்கிரம்!" என்றான் சூரியா. இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் அங்கு வந்து "சுட்டது நீதானா? அந்தத் துப்பாக்கியை இப்படிக் கொடு!" என்று கேட்டான். சூரியா அந்தப் போலீஸ்காரனைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினான். போலீஸ்காரன் தூரப் போய் விழுந்தான். "ஜாவ்! ஜாவ்!" என்று சூரியா அதட்டினான். டாக்ஸி டிரைவரும் மூளை குழம்பிப் போய் வண்டியை அதி வேகமாக விட்டுச் சென்றான். விழுந்த போலீஸ்காரன் எழுந்து மூன்று தடவை விசில் ஊதினான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் நாலு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இந்தப் போலீஸ்காரனும் அதில் ஏறிக்கொண்டு ஏதோ சொன்னான். ஜீப் வண்டி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து அதிவேகமாகச் சென்றது.
 
பதினேழாம் அத்தியாயம்

யமுனை தடுத்தது

சீதாவை ஏற்றிக்கொண்ட மோட்டார் புது டில்லியிலிருந்து ஷாஜஹான் புரத்தை நோக்கி அதிவிரைவாகச் சென்றது. வெள்ளி வீதி வழியாகப் போய், ஜும்மா மசூதியைத் தாண்டி, செங்கோட்டையை வலப் புறத்தில் விட்டு, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து அப்பால் சென்று, யமுனைப் பாலத்தை நெருங்கிற்று. முதலில் சிறிது நேரம் சீதா திக்பிரமை கொண்டிருந்தாள். பின்னர் சூரியாவின் எச்சரிக்கை நினைவு வந்தது. தன்னைப் பின் தொடர்ந்து சூரியா வருகிறான் என்ற எண்ணத்தினால் சற்றுத் தைரியமாயிருந்தாள். எப்படியும் சூரியாவின் கார் இந்தக் காரைப் பிடித்துவிடும் என்று நம்பியிருந்தாள். ஆனால் யமுனைப் பாலத்தைக் கார் நெருங்கியதும் அவளுடைய மனதில் 'திக்' என்றது. அது மிகவும் குறுகலான பாலம், வண்டிகள் ஒரு வரிசை தான் அதில் போகலாம். இரண்டு பக்கத்திலிருந்தும் வரும் வண்டிகள் ஒரே சமயத்தில் அந்தப் பாலத்தில் போக முடியாது. பாலத்தின் இரு முனைகளிலும் போலீஸ்காரர்கள் நிற்பார்கள். ஒரு பக்கத்துக் கார்களை விடும்போது மற்றொரு முனையில் உள்ள போலீஸ்காரர்கள் அங்கு வரும் கார்களையெல்லாம் தடுத்து நிறுத்தி வைப்பார்கள். பிறகு இந்த முனையிலிருந்து கார்களை விடும்போது அந்த முனையிலிருந்து வரும் வண்டிகளை நிறுத்தி வைப்பார்கள். இது சீதாவுக்கு நினைவு வந்தது. தான் ஏறியுள்ள வண்டியைப் பாலத்தில் போக விட்டு விட்டு, பின்னால் வருகிற சூரியாவின் காரை நிறுத்திவிட்டால் என்ன செய்கிறது என்ற துணுக்கமடைந்தாள். சூரியாவின் வண்டியோ பின்னால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் வந்து கொண்டிருந்தது.

சீதா பயந்தவண்ணமே ஆயிற்று; அவள் ஏறியிருந்த வண்டி பாலத்தில் சென்றதும், பின்னால் வருகிற வண்டிகள் நிற்க வேண்டும் என்று போலீஸ்காரன் கையைக் காட்டி விட்டான். சீதாவின் வண்டி பாலத்தைக் கடந்தவுடனே அந்த முனையில் காத்திருந்த வண்டிகள் பாலத்தில் விடப்படுவதைச் சீதா கவனித்தாள். உடனே ஒரு பெரும் பீதி சீதாவை பற்றிக் கொண்டது. அவளுடைய வயிற்றிலிருந்து குடல் மேலே கிளம்பி மார்பை அடைத்தது போலவும் மார்பிலிருந்து நெஞ்சு கிளம்பித் தொண்டையை அடைத்தது போலவும் இருந்தது. தலைக்குள்ளே வெடிகுண்டு வெடித்து நாலாபுறமும் சிதறிச் சென்றது போலத் தோன்றியது. தன்னையறியாத ஆக்ரோஷத்துடன் 'வீல்' என்று ஒரு தீர்க்கமான கூச்சல் போட்டுக் கொண்டு சீதா ஓடுகிற காரிலிருந்து குதிக்க முயன்றாள். பக்கத்திலிருந்த மனிதன் அவளுடைய முகத்தைப் பார்த்து ஓங்கி ஒரு அறை கொடுத்தான் உடனே சீதாவின் கூச்சல் நின்றது. காரிலிருந்து குதிக்கும் முயற்சியும் நின்றது. வண்டிக்குள் நிசப்தம் குடிகொண்டது. எதிர்ப்புறமாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளிலிருந்து சிலர் இந்த வண்டியிலிருந்து ஏதோ கூச்சல் வந்ததைக் கவனித்துக் காரை உற்றுப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாதபடி சீதாவை ஏற்றிக் கொண்டிருந்த மோட்டார் வண்டி அதிவேகமாகச் சென்றது.

அந்த முரட்டு மனிதன் முகத்தில் கொடுத்த அறை சீதாவுக்கு தன் சுய புத்தியைத் திருப்பிக் கொடுத்தது. ஒரு நொடியில் அவள் மனம் அமைதி அடைந்தது. தன்னுடைய நிலைமையைப் பற்றிச் சீதா நிதானமாக யோசிக்கத் தொடங்கினாள். சாயங்காலம் சூரியா தனக்கு எச்சரிக்கை செய்தபோது தான் அலட்சியமாகப் பேசியதை ஞாபகப்படுத்திக் கொண்டாள். இப்போது தனக்கு உண்மையிலேயே ஆபத்து வந்து விட்டது. யார் தன்னைக் கொண்டு போகிறார்கள்? எதற்காகக் கொண்டு போகிறார்கள்? வட இந்தியாவில் அவ்வப்போது நடந்த நர கோரங்களைப் பற்றியும் பெண் விற்பனையைப் பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த வரலாறுகள் அலையலையாக நினைவுக்கு வந்தன. எங்கேயாவது கொண்டுபோய்த் தன்னை விற்று விடுவார்களோ என்று எண்ணிய போது அவளுடைய தேகம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் நடுங்கியது. அல்லது ஒருவேளை யாராவது ஒரு துர்த்தனான மகாராஜா அல்லது நவாபின் அந்தப்புரத்தில் கொண்டு போய்த் தன்னைச் சேர்த்து விடுவார்களோ? இந்த மாதிரிச் சம்பவங்களைப் பற்றியும் அவள் கேட்டிருந்தாள்; கதைகளிலும் பத்திரிக்கைகளிலும் படித்திருந்தாள். தன் விஷயத்தில் அப்படியெல்லாம் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை ஆனால் இப்போது...? ஒரு விஷயம் நிச்சயம் வெறும் கூச்சல் போடுவதினாலோ பலாத்காரத்தினாலோ இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முடியாது.

தான் படித்திருந்த நாவல்களில் இம்மாதிரியான அபாயத்துக்குள்ளான பெண்கள் என்னென்ன விதமான தந்திரங்களைக் கையாண்டு தப்பினார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். ஞாபகத்துக்கு வந்தது ஒன்றும் தன் விஷயத்தில் காரியத்துக்கு உதவும் என்றும் தோன்றவில்லை. தெய்வாதீனமான உதவிகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்ததினாலேயே அவர்கள் தப்பியிருக் கிறார்கள். தனக்கோ, வந்த உதவியையும் தெய்வம் குறுக்கே நின்று தடுத்துவிட்டது! ஆகா! யமுனா நதியே! கண்ணன் விளையாடிய புண்ணிய யமுனா நதியே! உனக்கு நான் என்ன அபசாரம் செய்தேன்? ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாய்? நல்ல சமயத்தில் சூரியாவைத் தடுத்து நிறுத்தி விட்டாயே? எத்தகைய பயங்கரமான படுகுழியில் விழப் போகிறேனோ தெரியவில்லையே? ஆனால் அதற்குள்ளாக ஏன் நிராசை அடைய வேண்டும்? சூரியா எப்படியும் தொடர்ந்து வராமல் இருந்து விடுவானா? கால் மணி தாமத மாயிருக்கும் அவ்வளவுதானே? அதற்காகத் தன்னைப் பின் தொடர்வதை விட்டு விடுவானோ? ஒருநாளும் மாட்டான் வந்து கொண்டு தானிருப்பான். ஆகையால் இந்தக் காரை எங்கேயாவது தாமதப்படுத்தினால் நல்லது; அது ஒன்றுதான் வழி எப்படிக் காரைத் தாமதப்படுத்துவது? ஆம்; எங்கேயாவது ஊர் கண்ட இடத்தில் 'தாகமாயிருக்கிறது' என்று சொல்லலாம். அப்புறம் 'பசிக்கிறது' என்று சொல்லலாம். அதற்கு அந்த மனிதர்களோடு நல்லதனமாகப் பேசி முன்னாடியே சிநேகம் செய்து கொள்ள வேண்டும்.

இப்படிச் சீதா தீர்மானித்து எப்படிப் பேச்சுத் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்த மனிதனே பேசினான். "மகளே நீ கூச்சல் போடாமலும் தொந்தரவு கொடுக்காமலும் இருந்தால் உமக்கு ஒரு கஷ்டமும் ஏற்படாது. நன்மைதான் ஏற்படும் உன்னை அடிக்க நேர்ந்ததற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன்!" என்றான். அந்த மனிதன் நடுப்பிராயத்தைக் கடந்த முதிய மனிதன் என்பதைச் சீதா கவனித்திருந்தாள். அவனுடைய குரலும் பேச்சின் பாணியும் உண்மையாகவே அவன் அன்புடனும் அனுதாபத்துடனும் பேசுகிறான் என்று தெரியப்படுத்தின. ஆகையால் சீதா மனதைத் திடப்படுத்திக் கொண்டு "நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துக்கொண்டு போகிறீர்கள்?" என்று கேட்டாள். "அப்படிக் கேள், சொல்கிறேன்! உன்னை உன் மாதாஜியிடம் அழைத்துப் போகிறோம்" என்று அந்த மனிதன் சொன்னான். சீதாவுக்கு குபீர் என்று சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. அவளுடைய மாதாஜி இறந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. அகண்ட காவேரிக் கரையில் அன்னையின் உடம்பு எரிந்து சாம்பலாகி எவ்வளவோ காலம் ஆயிற்று. அதற்குப் பிறகு சென்ற காலம் ஒரு யுகம் போலத் தோன்றியது. இப்போது இந்த வடக்கத்தியான் "உன்னை உன் தாயாரிடம் அழைத்துப் போகிறேன்" என்கிறான் இது என்ன பைத்தியக் காரத்தனம்?

ஒருவேளை கனவு காண்கிறோமா? அல்லது தனக்கு மரணமே சம்பவித்து விட்டதா! மரணத்துக்குப் பிறகு நடப்பதா இது? இவர்கள்தான் யம தூதர்களா? உண்மையிலேயே மறு உலகத்தில் உள்ள தன் தாயாரிடம் தன்னை அழைத்துச் செல்கிறார்களா....அப்படி இருக்க முடியாது மறு உலகப் பிரயாணம் மோட்டாரில் நடைபெறும் என்று கேட்டதே இல்லையே? இந்த மனிதர்களும் ஆவி வடிவத்தினராகத் தோன்றவில்லையே? சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளச் சீதா தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். கிள்ளிய இடத்தில் வலித்தது தான் உயிரோடும் உடலோடும் இருப்பது நிச்சயம். பின்னர், இந்த மனிதன் இப்படிச் சொல்லுவதின் அர்த்தம் என்ன? அவன் சொன்னதைத் தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் சீதாவுக்கு உதித்தது. "என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?" என்று அந்த மனிதனைப் பார்த்து மறுபடி கேட்டாள். "அதுதான் சொன்னேனே? உன் தாயாரிடம் அழைத்துப் போகிறோம். சகோதரரும் உன்னைப் பார்க்க ஆவலாயிருக் கிறார்!" என்று அம்மனிதன் சொன்னான். சீதாவின் திகைப்பு அதிகமாயிற்று சகோதரன்! தன்னுடைய சகோதரன்! சீதாவுக்கு முன்னால் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி அவளுடைய தாயார் சில சமயம் கூறியதுண்டு. ஆனால் பிறந்து மூன்று மாதத்திற்குள் அந்தக் குழந்தை செத்துப் போயிற்று. அதைக் குறித்து அடிக்கடி அவள் தாயார் புலம்புவாள். "அவன் முகத்திலே பால் வடிந்தது, ராஜகளை சொட்டியது சிரித்தால் ரோஜா மொட்டு மலருவதைப் போல இருக்கும்.

அவன் உயிரோடிருந்தால் எனக்கு ஒரு கவலையும் இல்லை. உன் தகப்பனார் இந்த மாதிரி இருப்பதைப் பற்றிக் கவலைப் படவே மாட்டேன். எனக்கும் உனக்கும் கொடுத்து வைக்கவில்லை!" என்று ராஜம்மாள் அடிக்கடி புலம்பியது சீதாவுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அந்தக் குழந்தை தான் பிறப்பதற்கு இரண்டு வருஷம் முன்பே செத்துப் போயிற்று. வேறு சகோதரன் தனக்குக் கிடையாது. ஆகா! உண்மையிலேயே ஒரு சகோதரன் மட்டும் தனக்கு இருந்திருந்தால்?.... இத்தகைய கஷ்டங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமா? இந்த மனிதன் தன்னைப்பார்க்க சகோதரன் காத்துக்கொண்டிருப்பதாக உளறுகிறான்! எதற்காக இம்மாதிரி இவன் பொய் சொல்ல வேண்டும்?..... சீதாவின் எண்ணப் போக்கில் திடீரென்று ஒரு தடை ஏற்பட்டது. ஏதோ ஒரு நிழல் போன்ற எண்ணம் ஆச்சரியமான சந்தேகம் சாத்தியமென்று நம்புவதற்கு முடியாத அபிலாஷை... தோன்றியது. ஆனால் ஏன் உண்மையாயிருக்க முடியாது? இந்த மனிதன் எதற்காக இப்படிப்பட்ட பொய்யைக் கற்பனை செய்து சொல்ல வேண்டும்? தன்னுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஒரு மர்மம் இருக்க வேண்டும் என்று சில சமயம் தான் பகற்கனவு கண்டது உண்மையாயிருக்குமோ? "கல்யாணத்தை நிறுத்தி விடவும்" என்று தன் தகப்பனார் தந்தி அடித்ததின் காரணத்தை அவர் சொல்லவே இல்லை. அதைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஏதேனும் உண்மை இருக்குமோ? சீச்சீ! என்ன அசட்டுத்தனம்! ஓயாமல் கற்பனைக் கதைகளும் மர்மம் நிறைந்த நாவல்களும் படித்ததின் பலனே இந்தப் பிரமையெல்லாம் என்று பல தடவை அவற்றை ஒதுக்கித் தள்ளியிருக்கிறோமே? மறுபடியும் அந்தப் பிரமைகளுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

ஆனால் இப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் கற்பனைக் கதைகளையெல்லாம் மிஞ்சியதாயிருக்கிறதே! துப்பறியும் நாவல்களில் வரும் மர்மத்தைக் காட்டிலும் பெரிய மர்மமாயிருக்கிறதே! உண்மையில் இந்த மனிதர்கள், யார்? எதற்காகத் தன்னைக் கொண்டு போகிறார்கள்? போகுமிடத்தில் என்னுடைய கதி என்ன ஆகப் போகிறது!... கொஞ்ச தூரத்தில் தீப வரிசைகள் தெரிந்தன. ஏதோ ஒரு பட்டணத்தை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியான சந்தடி கேட்டதுடன் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஒருவேளை சூரியா பின்தொடர்ந்து வருவதாயிருந்தால் அவனுக்கு இந்தக் காரைப் பிடிக்க அவகாசம் ஏற்படுவதற்கு யுக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் சீதாவின் மனதில் உதித்தது. "எனக்கு வயிற்றைப் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது சாப்பிடுவதற்காவது குடிப்பதற்காவது ஏதாவது கிடைக்குமா?" என்று சீதா கேட்டாள். காரைத் தாமதப்படுத்த வேண்டும் என்றுதான். "ஆகட்டும்; பார்க்கலாம்" என்றான் அந்த மனிதன். சீதாவுடன் இதுவரையில் ஹிந்தியில் பேசி வந்தவன் காரின் முன் பகுதியில் இருந்தவர்களிடம் வேறொரு பாஷையில் ஏதோ பேசினான். அந்த பாஷை பஞ்சாபியாகவோ அல்லது மார்வாரியாகவோ இருக்க வேண்டும் சீதாவுக்கு நன்றாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பட்டணத்தின் குறுகலான வீதிகளின் வழியாகக் கார் சென்றது. கடைத் தெருவில் ஒரு ஹோட்டலுக்கு எதிரில் நின்றது. அந்த ஹோட்டல் வாசலில் பூரிகள், லட்டுகள் மற்றும் தித்திப்புப் பண்டங்கள் விற்பதற்கு வைத்திருந்தன.அந்தப் பண்டங்களின் மீது ஆயிரம் கோடி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடுப்பில் சட்டுவத்தில் கொதித்துக் கொண்டிருந்த பழைய நெய்யின் மணம் சாக்கடை நாற்றத்தோடு கலந்து வந்து மூக்கைத் தாக்கியது. வாய் அகன்ற பெரியதொரு பித்தளைச் சட்டுவத்தில் கெட்டியான பால் காய்ந்து கொண்டிருந்தது. காரிலிருந்து ஒருவன் இறங்கி அந்தக் கடையண்டை போனான்.

சீதாவுக்கு ஒரு கணம் அங்கே கூச்சல் போட்டு ரகளை செய்யலாமா என்று தோன்றியது. உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். தெருவிலே போய்க் கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்ததும், "இங்கே கூச்சல் போடுவது ஒரு ஆபத்திலிருந்து இன்னொரு ஆபத்தில் தாண்டிக் குதிப்பதாகும்" என்று அவளுக்குத் தோன்றியது. அது மட்டுந்தானா காரணம்? அவளுடைய உள்ளத்தின் அந்தரங்கத்தில், இந்தப் பிரயாணத்தின் முடிவுதான் என்ன? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் குடிகொண்டிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். மனித உள்ளத்தின் விசித்திரங்களைப் பூரணமாகக் கண்டறிந்தவர்கள் யார்? இறங்கிய மனிதன் பூரியும் மிட்டாயும் பொட்டணம் கட்டி எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய மண் சட்டியில் கொதிக்கின்ற பாலும் வாங்கிக் கொண்டு காரில் வந்து ஏறினான். வண்டியைத் தாமதப்படுத்தலாம் என்கிற சீதாவின் நோக்கம் அவ்வளவாக நிறைவேறவில்லை. ஏனெனில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் அந்த இடத்தில் வண்டி நிற்கவில்லை. அந்தப் பட்டணத்தைக் கடந்து கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் சாலையின் இருபுறமும் ஒரே பொட்டல் திடலாகக் காட்சியளித்தது. குட்டை குட்டையான கருவேல மரங்களையும் குத்துக் குத்தான புரசஞ் செடிகளையும் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. கொஞ்ச தூரம் அந்தச் சாலையில் சென்ற பிறகு கார் மறுபடியும் நின்றது. சீதாவைப் பார்த்து அந்த மனிதன், "பூரியும் மிட்டாயும் சாப்பிடுகிறாயா?" என்று கேட்டான். பூரி மிட்டாயின் பேரில் மொய்த்திருந்த ஈக்களின் ஞாபகம் வரவே சீதா, "வேண்டாம்" என்றாள். "பசிக்கிறது என்று சொன்னாயே?" என்று அந்த மனிதன் கேட்டான். "பூரி மிட்டாய் பிடிக்காது, அரிசிச் சாதம்தான் எனக்குப் பிடிக்கும்" என்று சொன்னாள் சீதா. "ஆகா; இந்தப் பெண்ணின் பேச்சைப் பார்! அரிசிச் சாதம் வேண்டுமாம்!" என்று சொல்லி அந்த மனிதன் சிரித்தான். பிறகு, "கொஞ்சம் பாலாவது சாப்பிடு" என்றான். அதையும் வேண்டாம் என்று சொல்லுவது சந்தேகத்துக்கு இடமாகும் என்று சீதா எண்ணி, "சரி சாப்பிடுகிறேன்" என்றாள். மண் சட்டியிலிருந்து டம்ளரில் பாலை ஊற்றிச் சீதாவிடம் கொடுத்தார்கள். பால் கமகமவென்று ஏலக்காய், குங்குமப்பூ மணம் வீசிக்கொண்டி ருந்தது. சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் இருந்தது.

சீதா பால் சாப்பிட்டவுடன் கார் மறுபடியும் கிளம்பிற்று. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. இது தூக்கம்தானா? அல்லது மயக்கமா? ஒருவேளை பாலில் எதையாவது கலந்து கொடுத்திருப் பார்களா? சீதா உடம்பு சுரமாய்க் கிடந்தபோது ஒவ்வொரு நாள் மருந்து சாப்பிட்ட பிறகு இப்படித்தான் மயக்கமும் தூக்கமும் கலந்து வந்தது என்பது ஞாபகம் வந்தது. "ஐயோ! மயக்க மருந்து எதற்காகக் கொடுத்தார்கள். தன்னைக் கொன்று விடுவார் களோ? கொன்று அந்த வனாந்தரத்தில் எறிந்து விடுவார்களோ? ஐயோ! இந்தக் கதிக்கா ஆளாகப் போகிறேன். என் அருமைக் கண்மணியைப் பார்க்காமல் போகிறேன்? ஆகா! அவருக்கு நன்றாய் வேண்டும்! நான் கொலையுண்டு செத்துப் போனதை அறிந்து அவர் சந்தோஷப்படட்டும்! ஒரு கணம் கூச்சல் போடலாமா என்று சீதா நினைத்தாள். ஆனால் கூச்சல் போட முடியவில்லை. கண்ணைச் சுழற்றியது தலை சுற்றியது; உடம்பு சோர்ந்தது. சாலையில் மறுபடியும் வண்டி நின்றது போலத் தோன்றியது. எதிரில் வந்த ஒரு வண்டி பக்கத்தில் நின்றது ஏதோ தெரியாத பாஷையில் பேசிக் கொண்டார்கள். கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது. புதிதாக வந்த காரிலிருந்து ஒரு மூதாட்டி இறங்கி வந்து சீதா இருந்த வண்டியில் அவள் பக்கத்தில் ஏறிக் கொண்டது போலிருந்தது. அப்புறம் சீதா அடியோடு நினைவை இழந்து நித்திரையில் ஆழ்ந்தாள்.
 

New Threads

Top Bottom