Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed Kanalvizhi Kadhal - Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 94

"தேவ்தர்ஷன்" - தேவ்ராஜ் தன் மகனுக்கு சூட்டிய பெயர். பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்திருந்த பெயர்சூட்டும் விழாவை மிக எளிமையாக குடும்பத்திற்குள்ளேயே முடித்துக் கொண்டான்.



மதுரா பாலி ஹில் வர மறுத்துவிட்டதால் நரேந்திரமூர்த்தியின் வீட்டிலேயே விழாவை ஏற்பாடு செய்தான். அது பாரதிக்கு தெரிந்த போது அவள் வருத்தப்பட்டாள். அவளை பொறுத்தவரை திலீப் இருக்கும் வீட்டில் அடி எடுத்து வைப்பது என்பது இயலாத காரியம். அப்படியானால் அவளை பற்றி கவலையேதும் இல்லாமல் விழாவை ஏற்பாடு செய்கிறார்களா! - மனம் புழுங்கியது.



தன்னுடைய வருத்தத்தை தாயிடமும் சகோதரியிடமும் தெரியப்படுத்தினாள். இருவருக்குமே அவளுடைய கஷ்டம் முழுமையாக புரியவில்லை. அவளைதான் சமாதானம் செய்தார்களே ஒழிய விழாவிற்கு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை.



மதுரா இங்கு வர விரும்பவில்லை என்றால் ஏதாவது ஒரு பொது இடத்தில்... ஹோட்டலில் ஏற்படு செய்யலாமே! இவள் எப்படி அந்த வீட்டு படியேறுவாள் என்று யோசிக்க மாட்டார்களா! - அவள் மனம் வெதும்பியது.



தாயும் சகோதரியும் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் விழாவில் கலந்து கொண்டவள், நெருப்பு மேல் நிற்பது போல் சற்று நேரம் இருந்துவிட்டு உடனே கிளம்பிவிட்டாள். மகளை வால் பிடித்துக் கொண்டு ஓடவும் முடியாமல், பேரனின் விழாவில் மகிழ்ச்சியோடு பங்கெடுக்கவும் முடியாமல் தவித்துப் போன இராஜேஸ்வரி, மனதை கட்டுப்படுத்திக் கொண்டு உணவுவேளை வரை தாமதித்தாள்.



மொத்த குடும்பமும் அங்கு சந்தோஷமாக இருக்கும் போது தன்னால் அவர்களுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை... அவர்களும் தன்னுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்பதில் பாரதியின் மனம் வேதனைப்பட்டது. வீட்டில் வந்து தனியாக அமர்ந்திருக்க பிடிக்கவில்லை என்பதால் மோனிகாவைத் தேடித் சென்றாள்.



மது போதைக்கு அடிமையானவன், சந்தோஷம் துக்கம் அனைத்திற்கும் அதையே தேடுவான் என்பார்களே... அது போல பாரதியும் தன்னுடைய சுகதுக்கங்களை பகிர்ந்துக்கொள்ள மோனிகாவைத்தான் நாடினாள். அவள்தான் தன்னை புரிந்துகொள்கிறாள் என்று எண்ணினாள். அதோடு தன்னனுடைய விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காத குடும்பத்திற்கு தான் ஏன் மதிப்பளிக்க வேண்டும் என்கிற வீம்பும் அவளை மோனிகாவின் வீட்டிற்கு துரத்தியது.



மகள் புறப்பட்டு சென்றதும் கிடைகொடுக்காமல், அவசர அவசரமாக உணவை முடித்துக் கொண்டு இன்னொரு முறை பேரனை தூக்கிக் கொஞ்சிவிட்டு வீட்டிற்கு ஓடிவந்த இராஜேஸ்வரி, அங்கே மகளை காணாமல் திகைத்தாள். உடனே அலைபேசியில் அழைத்து விபரம் கேட்டாள். தோழிகளோடு வெளியே வந்திருப்பதாக சமாளித்தாள் பாரதி. அதை அப்படியே நம்பி மகளின் வரவுக்காகக் காத்திருந்தாள் தாய்.



**********************



அன்று குட்டி தேவ் மிகவும் அழகாக இருந்தான். விதவிதமான ஆடை உடுத்தி புகைப்படம் எடுத்த போது, அழகழகான ரியாக்ஷன்ஸ் வெளிப்பட்டது அவனிடமிருந்து.



மனைவி தன் குழந்தைக்கு உடை மாற்றும் அழகு... உணவளிக்கும் அழகு... அதை அவன் துப்பித்துப்பி சேட்டை செய்யும் அழகு என்று அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவனுக்கு அவர்களைவிட்டு பிரியவே மனமில்லை. கூண்டுக்குள் அடைபட்டது போல் அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில், நாள் முழுவதும் அடைபட்டுக் கிடப்பது அவனுக்கு மிகவும் சிரமமான காரியம்தான். ஆனால் அந்த சிரமமேதும் இப்போது தெரியவில்லை. மனைவியோடும் குழந்தையோடும் கழிக்கும் நேரம் சொர்க்கத்தில் கழிவது போலிருந்தது.



வெகு நேரமாகியும் புறப்பட மனமில்லை அவனுக்கு. அங்கேயே தங்கிவிடலாம் என்கிற எண்ணம் கூட வந்தது. மதுரா ஒரு வார்த்தை சொல்லிவிடமாட்டாளா என்று எதிர்பார்த்து ஏங்கினான். ஆனால் அவளோ வாய் திறக்காத பதுமையாய் நடமாடிக் கொண்டிருந்தாள்.



"எனக்கு கிளம்பவே மனசு இல்ல... இவனை விட்டுட்டு போகவே முடியல" என்றான் கட்டுப்பாட்டை மீறி.



அதன் பிறகாவது 'இன்னிக்கு நைட் இங்கேயே தங்கிடுங்க' என்கிற வார்த்தை அவள் வாயிலிருந்து வெளிப்படுமா என்று அவள் முகத்தையே அடிக்கடி பார்த்தான். அவனுடைய எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக ஒன்றை சொன்னாள் மதுரா.



"வேணுன்னா பையனை இன்னைக்கு நைட் உங்க கூட வச்சிருந்துட்டு நாளைக்கு காலையில கொண்டு வந்து கொடுங்க. தூங்கிட்டான்னா அழ மாட்டான். இடையில ஒரு தரம் எழுந்து பால் ஆத்தி கொடுத்தா போதும்" என்று அதி தீவிரமாக அவள் சொல்லிக் கொண்டிருக்க, நறநறவென்று பல்லை கடித்தான் தேவ்ராஜ்.



அவனுடைய முகமாற்றத்தை கவனித்துவிட்டு, "என்ன?" என்றாள்.



"உன்னோட அறிவை எப்படி பாராட்டறதுன்னு பார்க்கறேன்" - எரிச்சலுடன் கடுகடுத்தான்.



"இல்ல நா நிஜமாதான்..." - "இனஃப்... இனஃப் யுவர் நான்சென்ஸ் ஓகே... கிளம்பறேன்... நீ மட்டும் அவனோட ச...ந்...தோ...ஷமா இரு..." - கடுப்புடன் கூறிவிட்டு எழுந்து விறுவிறுவென்று வெளியே நடந்தான்.



'ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை... ஸ்டே பண்ணுங்கன்னு சொன்னா முத்து உதிர்ந்துடுமா! நா என்ன அவளை கடுச்சு சாப்டுடவா போறேன்! ஹும்ம்ம்' - படபடவென்று மனம் பொறுமை ஏக்க பெருமூச்சு வெளிப்பட்டது அவனிடமிருந்து.



அவனுடைய மனநிலை மதுராவிற்கு நன்றாகவே புரிந்தது. அதனால்தானோ என்னவோ இந்த முறை அவனுடைய கோபம் அவள் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அன்று இரவு முதல் முறையாக அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.



சாதாரண 'குட் நைட்' மெசேஜ் தான். ஆனால் அது அவன் மனதில் எத்தனை பெரிய சந்தோஷத்தை கொண்டு வந்தது என்பதை அவள் அரியமாட்டாள்.



வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல ரெப்ரெஷ் செய்துவிட்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தவன், சாதாரணமாக அலைபேசியை எடுத்து தவறவிட்ட அழைப்புகள் குறுஞ்சேதிகள் ஏதேனும் உள்ளனவா என்று சோதித்தான். அப்போது மனைவி அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டு முகம் மலர்ந்தான். அவள் மீதிருந்த பிணைக்கெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளி போல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்ட, ஆனந்தத்துடன் அதை மீண்டும் மீண்டும் படித்தான்.



பிறகு "குட் நைட் மை லவ்" என்று அவளுக்கு பதில் அனுப்பிவிட்டு, அன்றைக்கு எடுத்த புகைப்படங்களை பார்க்காத துவங்கியவன், கண் அயர்ந்து போகும் வரை அவற்றை ரசித்துவிட்டு படுக்கையில் சாய்ந்தான்.



*****************



மோனிகாவை பார்க்க சென்ற பாரதிக்கு அன்று ஆறுதல் கிடைக்கவில்லை. மாறாக அவளுடைய மனவருத்தம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது. காரணம் எவ்வளவு சிக்கலான உறவுக்குள் தான் தலையை கொடுத்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது.



வழக்கம் போல பாரதியை பார்த்ததும் அவளை ஆரத்தழுவி நடுவீட்டில் அமரவைத்து அவளுக்கு பிடித்த பணத்தை தன் கையாலேயே தயார் செய்து கொடுத்துவிட்டு, "என்ன ஒரு மாதிரி இருக்க?" என்றாள் மோனிகா.



வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள் இளையவள். அதை அருகில் அமர்ந்துக் கேட்டுக் கொண்டிருந்த மோனிகாவின் தம்பி பொங்கினான்.



"இது என்ன அநியாயமா இருக்கு... உனக்கு பிடிக்கலைன்னா விட்டுட்டு போக வேண்டியதுதானே? எதுக்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போகணும்?" என்றான்.



"உன்ன வேண்டான்னு சொல்லி ஒதுக்கின வீட்டுக்கு உன்ன வலுக்கட்டாயமா கூட்டிட்டு போயி அவமானப்படுத்துறதுல அவங்களுக்கு என்ன அப்படி சந்தோஷம்" என்று சீறினான்.



பாரதி பதில் ஏதும் சொல்லவில்லை. அவள் மனத்திலும் அதே கோபம் இருந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் அவன் அடுத்து பேசிய வார்த்தை அவள் உயிரை பிடுங்கி வெளியே போட்டது.



"உங்க அண்ணன்தான் முரட்டு முட்டாள்... உங்க அம்மாவுக்காவது அறிவு இருக்க வேண்டாம்! அவங்க உனக்குத்தானே சப்போர்ட் பண்ணியிருக்கணும்" என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு.



வெடுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள் பாரதி. 'யாரை பார்த்து யார் என்ன பேசுவது!' - நுனிமூக்கு சிவந்து கோபத்தில் முகமே மாறிவிட்டது அவளுக்கு.



'கம்பீரத்தின் மறு உருவான நம் அண்ணனை இவன் முரடன்... முட்டாள் என்று அழைப்பதா!' - கடும் கோபத்திற்கு ஆளானவள், அடுத்து அவன், தன் அன்னையை... சுயமரியாதையின் திருவுருவை... சுயமாக தனித்து நின்று மூன்று பிள்ளைகளை சிறப்பாக வளர்த்த பெண் புலியை, அறிவற்றவள் என்று அழைத்ததில் கொதித்துப் போனாள்.



அவளுடைய பார்வை மோனிகாவின் பக்கம் திரும்பியது. அவள் முகேஷை கண்டிப்பாள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவளோ வாயையே திறக்காமல் தம்பியின் பேச்சை அங்கீகரிப்பது போல் அமர்ந்திருந்தாள்.



என்னதான் மோனிகா தன்னிடம் வழித்து குழைந்து பேசினாலும்... தான் அவளிடம் இழைந்து உருகி ஓட்டினாலும், இந்த சிக்கலான உறவை நீடிக்க முடியாது என்பதை, அவளுடைய பொட்டில் அறைந்து சுட்டிக்காட்டியது அந்த ஒற்றை சம்பவம்.



என்னதான் வெறுப்பும் கோபமும் இருந்தாலும், தன் அண்ணன் மீது தனக்கு இருக்கும் தனி மதிப்பையும், அவனை இகழ்ந்து யாரேனும் ஒரு வார்த்தை பேசினாலும் அதை தன் காது கொண்டு கேட்க முடியாது என்கிற உண்மையையும் அன்று தெள்ளத்தெளிவாக அறிந்துக் கொண்டாள்.



"ஒரு சின்ன பொண்ணோட மனசு கஷ்டப்படுமேங்கற அக்கறை அந்த வீட்ல யாருக்காவது ஒருத்தருக்கு ஒருத்தருக்காவது இருந்ததா பாரு! என்ன குடும்பம் அது!" - முகேஷின் அக்கறை(!) அதீதமாக அதிகரித்த போது தாங்கமுடியாமல் சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தாள் பாரதி.



"என்ன ஆச்சு பாரதி? ஏன் எழுந்துட்ட? ஏதாவது வேணுமா?" - பதறினாள் மோனிகா.



"இல்ல... ஒண்ணும் வேண்டாம்... எனக்கு... நா போகணும்..."

"ஏண்டா? என்ன திடீர்ன்னு கிளம்பற...! இரு... சாப்பிட்டுட்டு போகலாம். அங்கதான் ஒண்ணும் சாப்பிடாம வந்துட்டியே!" - அக்கறை காட்டினாள். சற்று நேரத்திற்கு முன் இருந்த பாரதியாக இருந்திருந்தால் அவளுடைய அன்பில் உருகியிருப்பாள். ஆனால் இப்போது எதிர்மறையாகத்தான் உணர்ந்தாள்.



"வேண்டாம்... பசிக்கல... கிளம்பறேன்" - அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது நிற்பது போல் தகித்தது. அவர்களிடமிருந்து தன்னை பிடிங்கி கொண்டு ஓடுவது போல் அங்கிருந்து வெளியேறி ஓடினாள்.



யாருமே இல்லை என்று இவளிடம் ஓடிவந்தாள் இவளும் நெருப்புக் கணையைக் கட்டிக் கொண்டு அணைக்கிறாள். என்ன செய்வாள் அந்த சிறு பெண். கனத்த மனதோடு வீட்டுக்குச் சென்றாள்.



கலையிழந்த முகத்தோடு வீட்டிற்குள் நுழையும் மகளை ஆதுரத்துடன் பார்த்த இராஜேஸ்வரி, "எங்கடா போயிட்ட... வா வந்து சாப்பிடு... உங்கக்காக... உனக்கு பிடிச்சதை சமைக்க சொல்லியிருக்கேன். வா..." என்று மகளின் கையை பிடித்தாள்.



உடனே உடைந்து போய் தாயின் தோளில் சாய்ந்தாள் மகள். தோளில் உணர்ந்த வெதுவெதுப்பான ஈரம் மகள் அழுகிறாள் என்பதை உணர்த்த அவளை அணைத்துப் பிடித்துக் கொண்ட தாய், "அழாத கண்ணா... உனக்கு என்ன குறைச்சல். நீ ஏன் பழசையே நினச்சு மனச குழப்பிக்கிற. நீ மட்டும் 'ம்ம்ம்'-ன்னு ஒரு வார்த்தை சொல்லு... தேவ் உனக்காக எந்த நாட்டு இளவரசனை வேணுன்னாலும் பிடிச்சு கொண்டு வந்துடுவான். இந்த திலீப் தான் பெரிய ஆளா...!" என்று ஆறுதல் கூறினாள். திலீப்பின் காரணமாகத்தான் மகள் அழுகிறாள் என்பது அவளுடைய ஊகமாக இருந்தது.



ஓரிரு நிமிடங்களில் தன்னை தேற்றிக் கொண்ட பாரதி, "சாரி ம்மா... இனி அழ மாட்டேன். என்ன சமைக்க சொல்லியிருக்கீங்க... ரொம்ப பசிக்குது" என்றாள் சின்ன புன்னகையுடன்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 95

மகளின் துன்பத்தைக் கண்டு கலங்கிய இராஜேஸ்வரி, மன ஆறுதலுக்காக மாயாவிடம் அதைப்பற்றி பேசினாள். தங்கையின் வலியை தனதாக உணர்ந்த மாயா மறுநாளே தாய் வீட்டிற்கு வந்தாள். பாரதியை தனியாக சந்தித்துப் பேசினாள். அவள் மனதிலிருக்கும் துன்பத்தை ஆறுதல் என்னும் துணியைக் கொண்டு துடைக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை... காரணம்... தனக்கென்று இந்த உலகத்தில் யாருமே இல்லை என்கிற எண்ணம் அவள் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது.



"உனக்கு ஒரு குடும்பம் இருக்கு... தேவ் பாய்க்கும் அதே மாதிரிதான்... மதுரா இருக்கா... அம்மாவுக்கு நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க... ஆனா எனக்கு? ஐம் அலோன்... என்னை பத்தி ஸ்பெஷலா திங்க் பண்ண... எனக்கு முதல் உரிமை கொடுக்க யாருமே இல்ல... நா எல்லாரையும் இழந்துட்டேன்... என்னால யார் கூடவும் இயல்பா பழக முடியல... எல்லாருமே எனக்கு எதிரியா தெரியிறாங்க... இதை நா விரும்பல... ஐ வாண்ட் மை ஹோம் பேக்... ஐ வாண்ட் மை ஃபேமிலி பேக்..." என்றாள் கண்ணீர் தளும்ப.



தங்கையின் உணர்வுகளை துல்லியமாக புரிந்துக் கொண்ட மாயா சட்டென்று அவளை அணைத்துக் கொண்டாள்.



"பைத்தியம்... இப்போ யாரை இழந்துட்ட நீ? நாங்க எல்லாரும் உன்கூட தான் இருக்கோம். உனக்காக எதை வேணுன்னாலும் செய்வோம். அம்மா உன்மேல உயிரையே வச்சிருக்காங்க. தேவ் பாய்க்கு உன்மேல எவ்வளவு பாசம்னு தெரியுமா?" - செல்லமாக கடிந்துக் கொண்டாள்.



"இல்ல... தேவ் பாய்க்கு மதுராதான் முக்கியம். என்னை பத்தி யோசிக்காமதானே அந்த வீட்டுல ஃபங்ஷன் அரேஞ் பண்ணினாங்க"



"அது பெரிய விஷயமே இல்ல பாரதி. அதோட தேவ் பாய் பொறுத்தவரைக்கும் மதுராவோட டிராக் வேற நம்ம டிராக் வேற. அவமேல பாசம் இருந்தா நம்மள வெறுத்துடுவாங்கன்னு அர்த்தமா? என்ன பேசுற நீ? நானும் தான் துருவன் மேல உயிரா இருக்கேன். அதுக்காக உன் மேல பாசம் இல்லைன்னு சொல்லுவியா? இது மாதிரியெல்லாம் யோசிக்கக் கூடாது பாரதி. நாங்க எல்லாருமே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணுமேன்னு போராடிகிட்டு இருக்கோம். நீ சம்மதிக்க மாட்டேங்கிறியேங்கற கவலைதான் எங்களுக்கு" என்று பலவற்றையும் எடுத்துக் கூறினாள். பாரதியின் முகம் சற்று தெளிந்தது.



"சரி சொல்லு... உண்மையிலேயே அந்த மோனிகா தம்பி மேல உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கா? உனக்காக நா யார் கால்ல வேணுனாலும் விழுவேன்... யாரை வேணுன்னாலும் கான்வெண்ஸ் பண்ணுவேன். சொல்லு... தேவ் பாய், அம்மா... யாரை பத்தியும் யோசிக்காம சொல்லு... அந்த இன்ட்ரெஸ்ட் தான் உன்ன இந்த பாடுபடுத்துதுன்னா என்கிட்ட மறைக்காம சொல்லு..." என்றாள்.



உடனே பாரதியின் முகம் அஷ்டகோணலாக மாறியது... "ச்சீ... ஆர் யூ மேட்?" என்றாள் எரிச்சலுடன். பெரிய இருட்டு சிறையிலிருந்து விடுதலை அடைந்தது போல் இருந்தது மாயாவிற்கு.



'அப்பாடா...' என்று சுதந்திர மூச்சை சுவாசித்தாள். தங்கைக்காக எதையும் செய்ய தயாராகத்தான் இருந்தாள். ஆனால் மனதிற்கு ஒவ்வாத செயலை செய்ய வேண்டியதாகப் போகிறதோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது. அந்த பயத்திலிருந்து விடுதலை அடைந்ததே பெரிய நிவாரணம். இனி எதையும் சமாளிக்கலாம் என்கிற உற்சாகம் பிறந்தது.



"உனக்குன்னு ஒரு லைஃப் அமையனும் பாரதி. அப்போதான் இந்த லோன்லினஸ் போகும். கல்யாணம் பண்ணிக்க" - மாயா.



பாரதியின் முகம் நொடியில் வாடியது. "ஏன்... கல்யாணம் பண்ணினாதானா? நீயெல்லாம் எனக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்க மாட்டியா?" - இறங்கிய குரலில் கேட்டாள்.



"யார் சொன்னது... நா எவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுத்தாலும் நீ திருப்தியாகமாட்ட" என்றாள். அவள் கூற்றிலிருந்த உண்மையை உணர்ந்து அமைதியானாள் பாரதி.



"தேவ் பாய்கிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா?" - மாயாவின் கேள்விக்கு தலையை இடம் வலமாக ஆட்டி மறுத்தால் பாரதி.



"ஏன்?"



"கல்யாணத்துல விருப்பம் இல்ல மாயா"



"என்ன சொல்ற நீ?" - அதிர்ந்தாள் மாயா. இறுகிய முகத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கும் தங்கையை பார்த்து, "அதெப்படி விருப்பம் இல்லாம போகும்.நீ என்ன சந்நியாசியா... இல்ல சாமியாரிணியா? அந்தந்த வயசுல செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சுதான் ஆகணும்" - சிறு பதற்றம் தெரிந்தது அவளிடம்.



'போடற குண்டையெல்லாம் பெருசு பெருசா போடுறாளே!' என்கிற கலக்கத்துடன் தங்கையின் பதிலுக்காக அவள் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். அவளிடமிருந்து பதில் வரவில்லை. தங்கையின் மனதிலிருக்கும் தடையை உடைக்க முடியாமல் போனாலும் என்ன தடை என்பதை ஊகித்தாள் மாயா.



"திலீப்பா?" - இறுகிய குரலில் கேட்டாள். அப்போதும் பாரதி வாய் திறக்கவில்லை. அவளுடைய மௌனமே காரணத்தை உறக்கக் கூறிவிட அடுத்து என்ன செய்வது என்கிற சிந்தனையோடு வீட்டுக்குப் புறப்பட்டாள்.



தங்கையை பற்றி வெகுநேரம் ஆழமாக சிந்தித்த மாயா, தேவ்ராஜை அணுகி பாரதியின் மனநிலையையும் தன்னுடைய யோசனையையும் கூறினாள்.



"வாட்!" - அதிர்ச்சியுடன் தங்கையைப் பார்த்தான் தேவ்ராஜ்.



"நாம எல்லாரும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டோம். அவ மனசு இருக்க ஏதோ ஒரு பிளாக் அவளை அடுத்த கட்டத்துக்கு மூவ் ஆகவிடாம தடுக்குது. அதை பிரேக் பண்ண இவனால முடியும்னு எனக்கு தோணுது"



"ஸ்டுப்பிட் ஐடியா... இது கண்டிப்பா நெகட்டிவ் ரிசல்ட்டை தான் கொடுக்கும்"



"இல்ல தேவ் பாய்... இது சரியா வரும்னு எனக்கு தோணுது"



"எப்படி சரியா வரும்? இவளை வேண்டாம்னு சொல்லிட்டு அவன் வேற கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டான். அவனை எப்படி இந்த விஷயத்துல இன்வால்வ் பண்ண சொல்ற? அவன் எதையாவது பேசி இவ மனசுல இன்னும் கொஞ்சம் ஆசையை வளர்த்துவிட்டுட்டு போயிட்டான்னா என்ன செய்வ? ஓணான்... வேலின்னு ஏதோ சொல்லுவாங்களே.... அதுமாதிரி ஆயிடப் போகுது. பேசாம போயி இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கு" எரிச்சல்பட்டான்.



"இல்ல தேவ் பாய்... அவன் திமிர் பிடிச்சவன்தான். ஆனா இந்த மாதிரி வில்லங்கமான வேலையெல்லாம் செய்ய மாட்டான். பாரதி அவன் மேல பைத்தியமா இருக்கா. அந்த பைத்தியத்தை அவனால மட்டும்தான் தெளிய வைக்க முடியும் தேவ் பாய். நான் அவன்கிட்ட பேசிப் பார்க்கறேன். சரியா வரும்னு தோணினா பாரதிகிட்ட பேச சொல்றேன். என்னை நம்பி இந்த ஒரு சான்ஸ் கொடுங்க"



"இதுனால உன்னோட லைஃப்ல எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது" - எச்சரித்தான்.



"எப்படி வரும்?"



"அந்த பொண்ணு... அவன் வைஃப்... பேர் என்ன?"



"தேஜா.."



"ஆங்... தேஜா... அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா பிரச்சனை வராதா? உன்ன தப்பா நினைச்சுட்டா என்ன செய்வ?"



"என்னைய தப்பா நினைச்சாலும் நினைக்கலன்னாலும் இந்த விஷயத்துல அவனை தப்பா நினைக்க முடியாது தேவ் பாய். அண்ணன் தம்பி ரெண்டு பேருமே மனைவிக்கு துரோகம் பண்ணற ஆளுங்க இல்ல. அந்த விதத்துல தேஜா சேஃப் தான்... சேஃபா இருக்கறவ என்கிட்ட எதுக்கு பிரச்சனை பண்ண போறா?"



"மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல பிரச்சனை வரலாம்"



"வராம நான் பார்த்துக்கறேன்"



"நோ... நீ பாரதிக்கு நல்லது செய்யணும்னு நினைக்கறது எனக்கு புரியாது. ஆனா எனக்கு உன்னோட வாழ்க்கையும் முக்கியம். ரிஸ்க் வேண்டாம். விட்டுடு... பாரதி மெல்ல மெல்ல தானாவே சரியாயிடுவா" - அறுதியாக மறுத்தான். ஆனால் மாயா விடவில்லை. மணிக்கணக்காக பேசி அவனை சம்மதிக்க வைத்தாள். தங்கையின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்கிற நோக்கமும்... மனதிலிருந்த ஏதோ ஒரு நம்பிக்கையும் அவளை வழிநடத்தியது.



**********************



அன்று குழந்தையின் பெயர்சூட்டு விழாவிற்கு வந்திருந்த பாரதி எதிலும் ஒட்டாமல் ஒருவித சங்கடத்துடன் ஒதுங்கியே இருந்தாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி என்பது கிஞ்சத்திற்கும் இல்லை. குடும்பத்திலிருந்து அவள் வெகுவாய் விலகியிருக்கிறாள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. அதை கண்ட திலீப்பின் மனம், 'தன்னை வேண்டாம் என்று நிராகரித்து அவமதித்தவள் தானே... அனுபவிக்கட்டும்' என்று எண்ணவில்லை. பாவம் என்று பரிதாபப்பட்டது.



வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்... எந்த நேரத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும் என்று தெரியாமல் தன்னைத்தானே சீரழித்துக்கொள்ளும் அந்த பேதையை பார்க்கும் போது அவன் மனம் வேதனைப்பட்டது. அவளுடைய இந்த நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ தானும் ஒரு காரணமாகிவிட்டோம் என்கிற வருத்தம் அவன் மனதில் இருந்தது.



பழைய சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு அவள் தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்... சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்பினான். இவன் இப்படி ஒரு மனநிலையில் இருக்கும் போதுதான் மாயா அவனைத் தேடி வந்தாள்.



'நம்மை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொண்டு போகிறவள் இன்று எதற்காக நம்மிடம் பேச வேண்டும் என்று சொன்னாள்! அதுவும் தனியாக...!' என்று யோசித்தபடி அவன் அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்க, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த மாயா அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.



"சொல்லுங்க... என்ன விஷயமா என்னை இங்க வர சொன்னீங்க?" - மரியாதையோடு கேட்டான்.



ஓரிரு நிமிடங்கள் தயங்கியவள் பிறகு, "எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். முடியுமா?" என்றாள்.



அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான் திலீப். 'தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி துருவனிடம் கூட உதவி கேட்க கெளரவம் பார்க்கும் மாயாவா இது!' என்கிற வியப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.



அவனுடைய வியப்பை தயக்கம் என்று எடுத்துக் கொண்ட மாயா சங்கடத்துடன் தலை குனிந்தாள். உண்மையில் இது அவளுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் தங்கைக்காக... பாரதிக்காக என்று தனக்குள் உருப்போட்டு தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.



"உனக்கு கஷ்டமா இருந்தா..." - "நோ நோ... நா... ஜஸ்ட்... ஐம் சாரி... சொல்லுங்க... நா என்ன செய்யணும். எனிதிங் ஃபார் யூ..." - அவசரமாக அவளை இடைமறித்து கூறினான்.



உடனே அவள் முகம் மலர்ந்தது. அந்த நொடியில் அவன் மீது அவளுக்கு சிறு அன்பு கூட துளிர்த்தது. அதன் பிறகு இறுக்கம் தளர்ந்து சற்று இலகுவாக உணர்ந்தவள் தன் தங்கையின் நிலையை அவனிடம் எடுத்துரைத்தாள்.



ஏற்கனவே அவளுக்காக இறக்கப்பட்டுக் கொண்டிருந்த திலீப், அவள் இன்னமும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் குற்றஉணர்ச்சிக்கு ஆளானான்.



"ஐம் சாரி" என்றான் வருத்தத்துடன்.



"இதுல உன்ன மட்டும் தப்பு சொல்ல முடியாது திலீப். எல்லாருமே ஒருவித ஈகோவோட இருந்துட்டோம். இப்போ பாரதியோட லைஃப் ரொம்ப ரிஸ்க்கான இடத்துல இருக்கு. நீதான் அவகிட்ட பேசணும். அவளோட மனச மாத்தணும்..."



"நானா! நா எப்படி!"



"உன் மேல அவளுக்கு நிறைய கோபம் இருக்கு... வருத்தம் இருக்கு... ஆனா அதுக்கு எல்லாத்துக்கும் மேல அவ மனசுக்குள்ள உனக்கு ஒரு நல்ல இடம் இருக்கு. அவ மனசுல இருக்க கோவமெல்லாம் கொறஞ்சிடுச்சுன்னா நீ சொல்றதை கேட்பா... அவளை சமாதானம் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வை"



திலீப்பின் முகத்தில் கலவரம் சூழ்ந்தது. இது சாத்தியமா என்கிற சந்தேகம் எழுந்தது. மீண்டும் அவள் காதல் கீதல் என்று திரும்பிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் எழுந்தது. அந்த பயத்தை அவன் மாயாவிடம் வெளிப்படுத்தவும் செய்தான்.



சட்டென்று மாயாவின் முகம் இறுகியது. கண்களை மூடி அவள் ஆழமாக மூச்செடுத்த போது அவள் தனக்குள் போராடுவது அவனுக்கு புரிந்தது.



"ஐம் சாரி... பாரதியை நான் தப்பா நினைக்கல. ஆனா அவ ஏற்கனவே மனசு பட்டிருக்கு... அதான்... நா திரும்ப போயி அவ மனசை கெடுத்துடாக் கூடாதேன்னு..." - முடிக்க முடியாமல் தயங்கினான்.



"ஒரு குடும்பத்தை கலைக்கறது எவ்வளவு பெரிய பாவம்னு எங்களைவிட யாரும் அதிகமா உணர்ந்திருக்க முடியாது திலீப்... என் தங்கச்சி உன்னோட மனைவிக்கு துரோகம் பண்ணனும்னு கனவுல கூட நினைக்க மாட்டா..." - உறுதியாகக் கூறினாள்.



குற்றஉணர்ச்சி சுருக்கென்று குத்தியது... வார்த்தையை விட்டுவிட்டோம் என்று எண்ணி உதட்டை கடித்துக் கொண்டான். "சாரி..." - மெல்ல முணுமுணுத்தான்.



அவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தை கவனித்துவிட்டு, "தட்ஸ் ஓகே..." என்றாள்.



அதற்கு மேல் அவன் அதிகம் யோசிக்கவில்லை. பாரதியின் மனதை மாற்றி அவளுடைய வாழ்க்கையை சீரமைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டான்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 96

திலீப் பாலி ஹில் வந்த போது தேவ்ராஜ் வீட்டில் இல்லை. இராஜேஸ்வரியிடம் மாயா அனைத்தையும் ஏற்கனவே சொல்லியிருந்ததால் அண்ணன் மகனைப் பார்த்ததும் அவனை வரவேற்று உபசரித்தவள், "இதெல்லாம் சரியா வறுமாப்பா..." என்று பயந்தாள்.



"ஐ வில் டேக் கேர் ஆஃப் இட் அத்த... பயப்படாதீங்க" என்று கூறிவிட்டு "இப்போ எங்க இருக்கா?" என்றான்.



"பின்பக்கம்... கார்டன்ல இருக்கா. கூப்பிடவா..."



"இல்ல... நானே போயி பார்த்துக்கறேன்" - திலீப் தோட்டத்திற்கு வந்த போது அவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்தாள் பாரதி. எதையோ பறிகொடுத்தது போல் இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பவளைக் கண்டு அவன் மனம் சங்கடப்பட்டது.



"குட்டிமா..." - அந்த குரலை கேட்டதும் அவளுடைய முதுகு விறைத்து நிமிர்ந்தது.



'குட்டிமா!' - சிறு பிள்ளையாக இருந்த போது அனைவருக்கும் அவள் குட்டிமாகவாத்தான் இருந்தாள். அந்த பெயர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது ஆதிராதான் குட்டிமா. ஆனால் இப்போது இவன்! இவளை...! - பாரதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவள் அழுகிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது.



"குட்டிமா..." - மீண்டும் அழைத்தான். சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு கோபமாக திரும்பியவள், "நா குட்டிமா இல்ல. கால் மீ பாரதி" என்றாள் சீற்றத்துடன்.



"நீ எனக்கு எப்பவுமே குட்டிமா தான். சின்ன வயசுல என் கூட விளையாடின அதே குட்டிமாதான் நீ. நா உன்ன அப்படித்தான் பார்க்கறேன்" என்றான்.



"நீ என்னை எப்படியும் பார்க்க வேண்டாம். போ இங்கேருந்து. எதுக்கு வந்த இங்க..." - வெறுப்புடன் கத்தினாள்.



"உங்கிட்ட கொஞ்சம் பேசணும். பேசிட்டு போயிடறேன்" என்றான்.



"என்கிட்ட பேச உனக்கு என்ன இருக்கு? நீ யார் எனக்கு முதல்ல...? யார் உன்ன உள்ள விட்டது?" - அவள் ஆத்திரத்துடன் வெடிக்க, அவன் முகத்தில் புன்னகை தோன்றியது.



"அந்த கோபம் இன்னமும் அப்படியே இருக்கு... மதுரா உன்னைவிட ரெண்டு வயசு பெரியவ... சின்ன வயசுல நீ அவளையே அடிச்சுடுவ. துருவ் பாய் மதுராவுக்கு சப்போர்ட் பண்ணுவாரு... நா உனக்கு தான் சப்போட் பண்ணுவேன். அதெல்லாம் மறந்துட்டியா?" - பாரதி உதட்டை கடித்துக் கொண்டாள்.



"இந்த பழங்கதையெல்லாம் சொல்லிட்டு போகத்தான் வந்தியா? அப்படின்னா ஐம் சாரி... இதையெல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்ல..."



"நா பழைய கதையை சொல்ல வரல... உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்ல வந்தேன்"



"ஸ்டாப் இட் யூ ப்ளடி புல்ஷிட்... ஜஸ்ட் கோ டு ஹெல்... " - கோபத்தில் மேல்மூச்சு வாங்க கத்தினாள். அவளுடைய கோபம் அவனை சிறிதும் பாதிக்கவில்லை.



"ஐ ப்ராமிஸ் யூ. சின்ன வயசுலேருந்தே எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். மதுராவை எப்படி பார்த்தேனோ அப்படித்தான் உன்னையும் பார்த்தேன். வேற மாதிரி உன்ன யோசிக்க முடியல எனக்கு. மத்தபடி உன்மேல எனக்கு வெறுப்போ கோபமோ இருந்ததே இல்ல குட்டிமா. இதை நீ நம்பனும்..." - தழைத்த குரலில் கூறினான்.



அவள் மீது அவனுக்கு எந்த வெறுப்பும் இல்லை என்பதை அவள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறினால் அவளிடமிருக்கும் தாழ்வுமனப்பான்மை கோபமெல்லாம் மறைந்துவிடும் என்று நம்பினான்.



"இதெல்லாம் எதுக்கு இப்போ நீ என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க? உனக்கு பிடிச்சா என்ன... பிடிக்கலைன்னா எனக்கென்ன? எனக்கு உன்ன சுத்தமா பிடிக்காது. அதனாலதான் உன்ன வேண்டான்னு சொன்னேன். திரும்ப வந்து என்கிட்ட பேசிகிட்டு இருக்க! பெரிய தியாகி... மகாத்மான்னு நெனப்பா உனக்கு?" -அவள் வெறுப்புடன் பேசினாலும் திலீப்பின் கணக்கு பலித்தது. அவள் மனதில் இப்போது கோபம் சிறிதும் இல்லை. அவள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரம் வெகுவாய் குறைந்திருந்தது.



************************



பிரபாவதிக்கு ஒரே கவலை. என்னதான் அன்பை அள்ளிக் கொடுத்து கட்டி அணைத்தாலும் ஓட்டமாட்டேன் என்கிறானே இந்த குட்டிப்பையன் என்கிற வருத்தத்தில் மாண்டுபோனாள். அவளுடைய குரலோ அணுகுமுறையோ... ஏதோ ஒன்று பிடிக்கவில்லை அவனுக்கு. அவள் தூக்கினால் மட்டும் கத்தி ஊரை கூட்டிவிடுவான்.



அன்றும் அப்படித்தான்... மதுரா குளிக்கச் சென்றுவிட்டாள். தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தவன் விழித்துவிட்டான். கொள்ளை பிரியத்தோடு பேரனை அள்ளி அணைத்தாள் பிரபாவதி. அவ்வளவுதான்... அலறி தீர்த்துவிட்டான். தங்கமே... வைரமே என்று அவளும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாள். ஆனால் அவன் அடங்குவதாக இல்லை. பல் இல்லாத பொக்கை வாய் ஈறுகளை இறுக்கமாகக் கடித்து, பாட்டியின் நெற்றி முடியை கொத்தாக பிடித்து இழுத்து கையேடு கொண்டு வந்துவிட்டான்.



"ஆ... ஐயோ... விடுடா... வாலு பயலே..." என்று அவள் வலியில் கத்த, நரேந்திரமூர்த்திதான் மனைவியின் முடியை பேரனின் கையிலிருந்து பிய்த்துவிட்டார்.



"பார்த்தீங்களா உங்க பேரனை...! இந்த வயசுலேயே என்ன பண்ணறான்னு! என்னோட முடியை பூரா கையோட கொண்டுவந்துட்டான்" - அழுது கொண்டிருக்கும் பேரனின் கன்னத்தில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கணவனிடம் புகார் வாசித்தாள்.



"அவனுக்கு உன்ன பிடிக்கல... அதான் போடுறான்... நீ எதுக்கு கிட்ட போற?" - மனைவியை கிடல் செய்து சிரித்தார்.



"பிடிக்காது பிடிக்காது... என் வீட்ல இருந்துகிட்டு என்னையே பிடிக்காதா? நாலு போடு போட்டா எப்படி பிடிக்காம போகும்?" - விளையாட்டாகத்தான் சொன்னாள். ஆனால் அதற்கே நரேந்திரமூர்த்தி கண்டித்தார்.



"என்ன பேசுற? மது காதுல விழுந்தா வருத்தப்பட போறா" என்றார்.



"நீங்க சும்மா இருங்க. மது நம்ம பொண்ணு... நா விளையாட்டா பேசுறேனா சீரியஸா பேசுறேனான்னு அவளுக்கு தெரியாதா? அதெல்லாம் ஒண்ணும் வருத்தப்படமாட்டா" என்று கூறி கணவனை அடக்கிவிட்டு அழும் குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.



என்னதான் தாயாக இருந்தாலும், தன் குழந்தையிடம் வினையாக பேசவில்லை என்று தெரிந்தாலும் சில சமயங்களில் மதுராவின் மனம் புண்படத்தான் செய்தது. அதை அறியாத பிரபாவதி, கிண்டல் கேலி என்று நினைத்து அடிக்கடி எக்குத்தப்பாக எதையாவது பேசிவைப்பாள்.



'காடைக்கு களம் கொடுத்தாலும், காடை காட்டைத்தான் பார்க்கும்' - 'அப்படியே அப்பன் பிடிவாதம்' - 'அப்படியே அப்பன் கோவம்' - 'பேர்லையாவது அந்த தேவ் இல்லாம இருந்திருக்கலாம். அதுல கூடவா அப்பன் மாதிரி!' - 'என்ன இருந்தாலும் குட்டிமாதான் இந்த வீட்டு பிள்ளை. நீ அந்த வீட்டு வாரிசாச்சே! அதான் என்கிட்ட வர மாட்டேங்கிற' - இது போன்ற வார்த்தைகளெல்லாம் மதுராவின் மனதை ஒவ்வொரு முறையும் சுருக்கென்று தைக்கும். ஆனால் காட்டிக்கொள்ள மாட்டாள். விளையாட்டாக பேசுவதை பெரிதுபடுத்தக் கூடாது என்று அமைதியாக இருந்துவிடுவாள்.



அன்று திலீப் வீட்டில் இருந்தான். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த தங்கை மகனை தாயிடமிருந்து வாங்கி சமாதானம் செய்தான்.



"அடேயப்பா...! என்னால இவனை சமாளிக்க முடியலப்பா! நீயாச்சு... உன் தங்கச்சசி மகனாச்சு... பார்த்துக்க..." என்று மகனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் பிரபாவதி.



நரேந்திரமூர்த்தியும் ஏதோ வேலையிருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். திலீப் மட்டும் குழந்தையோடு ஹாலில் அமர்ந்திருந்த போது தேவ்ராஜ் வீட்டிற்குள் நுழைந்தான்.



அந்த சூழ்நிலை இருவருக்குமே சங்கடமானதுதான். இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து பேசி பலகாலமாகிவிட்டது. அவனுடைய குழந்தை இவன் கையில்... குழந்தையை பார்க்கத்தான் அவன் வந்திருக்கிறான். இப்போது என்ன செய்வது! குழந்தையை எப்படி அவனிடம் கொடுப்பது! பேசாமல் சோபாவில் அமரவைத்துவிட்டு போய்விடலாமா! ஆனால் குழந்தை நழுவி விழுந்துவிட்டால் என்ன செய்வது!' - திலீப்பின் சிந்தனை தறிகெட்டு ஓடிய போது எதுவுமே நடக்காதது போல் நிதானமாக அவனிடம் நெருங்கினான் தேவ்ராஜ்.



"என்ன சொல்றான்? ரொம்ப வாலு பண்ணறானா?" என்று பேச்சு கொடுத்தான்.



அவன் அப்படி இயல்பாக தானே முன்வந்து பேசிய பிறகு தவிர்க்க முடியாமல், "ஆங்... கொஞ்சம்... சேட்டை..." என்று தடுமாற்றத்துடன் பதிலளித்தான்.



குழந்தையை அவனிடமிருந்து வாங்கியபடி, "தேங்க்ஸ்" என்று முணுமுணுத்தான் தேவ்ராஜ். அவனை வியப்பாக பார்த்தான் திலீப்.



"பாரதிகிட்ட சேஞ்சஸ் தெரியுது" என்றான்.



நொடியில் திலீப்பின் முகம் மலர்ந்தது. அந்த மலர்ச்சியில் தெரிந்த மகிழ்ச்சியை கவனித்தபடி குழந்தையோடு மனைவியின் அறைக்குள் நுழைந்தான் தேவ்ராஜ்.



தேவ்ராஜ் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள் மதுரா. பனியில் நனைந்த ரோஜா போல் பளிச்சென்றிருந்தாள். அவள் கூந்தலிலிருந்து வடிந்த ஈரம் ஆடையை சற்று நனைத்திருந்தது. கழுத்திலும் முகத்திலிலும் ஆங்காங்கே முத்து போல் நீர் திவலைகள் பூத்திருந்தன. அவனுடைய பார்வை மாறியது. கண்களில் கிறக்கம் கூடியது.



கணவனைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்து, "எப்ப வந்தீங்க?" என்றாள் மதுரா.



அவன் பதில் சொல்லவில்லை. அவள் மீது வைத்த கண்ணனை விளக்கவும் இல்லை. அவன் கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தைக் கண்டுகொண்ட மதுராவின் முகத்தில் புதுரத்தம் பாய, குபீரென்று சிவந்தது அவள் முகம். அவன் பார்வையை தவிர்த்தபடி கீழுதட்டை மடித்துக் கடித்தாள்.



'தட்ஸ் மை ஜாப்...' - அவன் மனம் சிணுங்கியது. அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை அவள் உள்ளுக்குள் உணர்ந்தாள். கண்கள் தானாய் விரிந்தன. அதை பார்த்த அவன் முகத்தில் குறும்புப் புன்னகை எட்டிப்பார்த்தது. அவள் 'என்ன?' என்று புருவம் உயர்த்தினாள். அவன் தலையை குறுக்காக ஆட்டினான்.



'ஃப்ராட்...' - அவள் மனம் முணுமுணுத்தது. இப்போது 'ரியலி?' - அவன் புருவம் உயர்த்தினான். அவள் முகம் சிரிப்பில் மலர்ந்தது. பெற்றோரின் ரகசிய சம்பாஷணைகள் எதுவும் புரியாமல். 'ங்கா... ங்கா..." என்று பொம்மையை போட்டு அடித்துக் கொண்டிருந்தான் குட்டி தேவ்.



கீழே குனிந்து குழந்தையை தூக்கிய மதுரா அங்கிருந்து விலகும் முன் அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமரவைத்தான் தேவ்ராஜ்.



"ப்ச்... என்ன! விடுங்க..." - சங்கடத்துடன் குழந்தையை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.



"வீட்டுக்கு வா..." - கரகரத்த குரலை செருமி சரிசெய்துக் கொண்டு அழைத்தான்.



மதுராவின் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து தீவிரம் குடியேறியது. மனைவியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனிக்காமல், அவள் கையை தன் கைகளுக்குள் அடக்கி, அவளுடைய தளிர்விரல்களோடு விளையாடியபடி, "சோதிக்காத மது... ப்ளீஸ்..." என்றான்.



"வெயிட் பண்ணறேன்னு சொன்னீங்களே!" - மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். அவள் கையை பிடித்திருந்த அவன் பிடி சட்டென்று தளர்ந்தது. மனைவியின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.



"உன்ன இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் போல இருக்கு... ஐ மிஸ் சோ மச்... ப்ளீஸ் டோன்ட் டெஸ்ட் மீ எனிமோர்..." - தழைத்த குரலில் கூறினான். கெஞ்சினான் என்று கூட சொல்லலாம். அவள் பதில் சொல்லவில்லை. அவன் முகம் இறுகியது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான். ஒன்று இரண்டு மூன்று என்று மனதிற்குள் எண்ணினான். சற்று நேரம் கழித்து கண்களை திறந்து அவளை பார்த்தான். அவள் பார்வை இவன் முகத்திலேயே பதிந்திருக்க, கண்கள் நான்கும் பின்னிக் கொண்டன.



"பாரதி மாப்பிள்ளை பார்க்க சொல்லிட்டா... சீக்கிரமே கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடும். இதுக்கு மேலையும் டிலே பண்ணினா எப்படி? எப்பதான் வர்றதா இருக்க?" - சிறு எரிச்சல் எட்டிப்பார்த்தது அவன் குரலில். அப்போதும் அவள் பதில் சொல்லவில்லை. தலைகுனிந்தபடி அழுத்தமாக அமர்ந்திருக்கும் மனைவியை பார்த்து பற்களை நறநறத்தான் தேவ்ராஜ்.



"திஸ் இஸ் த லிமிட் மது. இதுக்கும் மேல என்னால உன் கால்ல விழுந்து கெஞ்ச முடியாது. அது உன்னோட வீடு... உனக்கே எப்ப வரணும்னு தோணுதோ வா... இனி நா கூப்பிட மாட்டேன்" என்று சிடுசிடுத்துவிட்டு எழுந்தான்.




 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 97

கோபத்தில் சிடுசிடுவென்று பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய அவளுடைய அதிர்ந்த முகத்திலிருந்து மீள மறுக்கிறது மனம். 'இந்த கோபம்தான் அவளை நம்மிடமிருந்து விளக்கி வைத்திருக்கிறது. அதையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அறுகதையோடு நாம் அவளை அழைக்கிறோம்!' என்று தன்னைத்தானே குற்றவாளி கூண்டில் நிறுத்தினான் தேவ்ராஜ்.



வெகுநேரமாக தோட்டத்தில் தனிமையில் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருக்கும் மகனை நெருங்கிய இராஜேஸ்வரி பாரதிக்கு வந்திருக்கும் வரன் ஒன்றைப் பற்றி அவனிடம் கலந்தாலோசித்தாள். தங்கையின் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியோடு தன் வாழ்க்கைப் பற்றிய கவலையை தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு, முழு ஈடுபாட்டோடு அந்த வரனைப் பற்றிய விசாரணையில் இறங்கினான். முதற்கட்டத் தகவல் திருப்திகரமாக இருந்ததால், மேற்கொண்டு வெளியே விசாரித்துவிட்டு பேசலாம் என்றான்.



தாயிடம் சொன்னபடியே முழு மூச்சாக மாப்பிள்ளையை பற்றியும் அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் அலசி ஆராய்ந்தான். தனக்கு முழு திருப்தியான பிறகு பாரதியின் அபிப்ராயத்தை கேட்டான். அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமையனும் தாயும் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டாள். எனவே அடுத்தகட்டமாக மாப்பிள்ளை வீட்டில் பேசினார்கள். அவர்களும் ஆர்வத்தோடு சம்மதம் தெரிவித்துவிட நிச்சயதார்த்தம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.



"ரொம்ப நாளா கல்யாணம் தடைபட்டுக்கிட்டே இருக்கு. அதனால ரொம்ப நாளை கடத்தாம நேரடியா கல்யாணத்துக்கே தேதி குறிச்சிடுவோம்" என்று அபிப்ராயம் சொன்னாள் இராஜேஸ்வரி.



தேவ்ராஜிற்கு அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. மாப்பிள்ளை வீட்டில் பேசினார்கள். அவர்களுக்கும் திருமணத்தை விரைவாக நடத்துவதில் சந்தோஷம் என்று கூறிவிட, பாரதியின் திருமண நாள் நிச்சயமானது.



ஓட்டத்தில் குறியாக இருக்கும் தடகளவீரன் எவ்வளவு வேகமாக ஓடுகிறானோ அவ்வளவு வேகமாக மூச்சுக்காற்றை உள்ளிழுப்பான். அவனுடைய குறி ஓட்டத்திலும் இலக்கை அடைவதிலும்தான் இருக்கும். ஆனால் அவனுடைய உண்மையான தேவை என்னவோ மூச்சுக்காற்றுதான். ஓட்டத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தன்னை அறியாமல் அதிவேகமாக மூச்சை உள்ளிழுக்கும் தடகள வீரனைப் போல, கடமையை நிறைவேற்ற பரபரப்போடு சுழன்றுக் கொண்டிருந்தாலும்... இயல்பாக தினமும் மனைவியையும் குழந்தையையும் தேடி வந்து கொண்டிருந்தான் தேவ்ராஜ்.



ஆனால், அவனால் முன்பு போல் அதிக நேரம் அவர்களோடு செலவழிக்க முடியவில்லை. அதற்கு வேலை பளு ஒரு காரணம் என்றாலும், மதுராவின் அருகாமையையும் அந்நியத்தன்மையையும் ஒரே நேரத்தில் கையாளமுடியாத அவனுடைய தடுமாற்றம் தான் முக்கிய காரணம்.



தளும்பத்தளும்ப காதலை நெஞ்சில் நிறைத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினால், ஏதோ தூரத்து உறவுக்காரனைப் பார்ப்பதுப் போல் பார்க்கும் அவளுடைய பார்வையை சகிக்க முடிவதில்லை அவனுக்கு.



அதுமட்டுமா! அவளுடைய சிரிக்கும் கண்களும், முத்துதிற்கும் இதழ்களும் செய்யும் இம்சையிலிருந்து தப்பிக்கும் வழியறியாது தவிக்கும் போதெல்லாம் அவள் முகத்தை பார்ப்பதையும் அவளோடு பேசுவதையும் தவிர்த்தான். அப்படியும் அலைக்கழிக்கும் ஆசையிலிருந்து விடுபட முடியாத சந்தர்ப்பத்தில்தான் மாமனார் வீட்டில் தங்கும் நேரத்தை குறைத்தான்.



இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன. அப்போதுதான் ஒருநாள், பாரதிக்கு வரன் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் நரேந்திரமூர்த்தியின் மூலம் பிரபாவதிக்கு தெரியவந்து, பிரபாவதியின் மூலம் மதுராவின் செவியை எட்டியது.



ஏற்கனவே தேவ்ராஜிடம் தெரிந்த மாற்றம் மதுராவிற்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தினமும் தவறாமல் வீட்டுக்கு வருகிறவன் குழந்தையிடம் மட்டும் நேரத்தை செலவு செய்துவிட்டு தன்னை கண்டுகொள்வதில்லை என்கிற வருத்தம் அவள் மனதை குடைந்துக் கொண்டிருந்தது.



முன்பெல்லாம் அவனுடைய பார்வை ஒருவித ஏக்கத்தோடு அவளை விடாமல் பின்தொடரும். அவனுடைய பேச்சில் ஒரு உரிமை இருக்கும். கோபமோ... சந்தோஷமோ... அவனுடைய மனநிலை எதுவாக இருந்தாலும், அவளை பார்க்கும் பார்வையில் ஒரு நெருக்கம் இருக்கும்... ஒரு அன்னியோன்யம் இருக்கும்... இப்போது அது எதுவுமே இல்லை.



அவன் அவளோடு பேசுவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவளோடு சிறிதும் நேரம் கழிக்கவில்லை என்று கூற முடியாது. ஆனால் அந்த பழைய ஓட்டுதல் இல்லை... பிணைப்பு இல்லை... அந்த வெறுமையான கண்கள் வெகு அந்நியமாய் தோன்றியது அவளுக்கு. அந்த அந்நியத்தன்மையை அவள் துக்கத்துடன் உணர்ந்தாள். அந்த துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை... விருப்பமும் இல்லை... ஊமை கண்ட கனவு போல மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் புழுங்கினாள். அந்த நேரத்தில்தான் பாரதியின் திருமண விஷயத்தை கேள்விப்பட்டாள்.



மனம் பொங்கிப்பொங்கி அடங்கியது. தினமும் வீட்டுக்கு வருகிறான்... அவளை பார்க்கிறான்... பேசுகிறான்...! ஆனால் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயத்தை பற்றி அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றவே இல்லையா! தன்னை அந்த குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்கவே இல்லையா! - உள்ளே வலித்தது. ஆனாலும் எள்ளளவு நம்பிக்கை அவள் மனதில் இருந்தது. இந்த விஷயத்தை பற்றி தானாக தன்னிடம் பேசுவான் என்று ஒவ்வொரு நாளும் காத்திருந்தாள்.



அதே எதிர்பார்ப்பைத்தான் தேவ்ராஜும் அவள் மீது வைத்திருந்தான். பாரதியின் விஷயத்தில் அவன் எவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பது அவள் அறிந்ததுதான். இப்போது அவள் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாள் என்று முதல் நாளே அவளிடம் ஓடிவந்து கூறினான். அதன் பிறகு ஒரு வார்த்தை அதைப் பற்றி என்ன ஏது என்று அவள் கேட்கவே இல்லை. நரேந்திரமூர்த்தியின் மூலம் திருமணப் பேச்சுவார்த்தை துவங்கிய முதல் நாளே அவளுக்குத் தெரியப்படுத்திவிட்டான். அதன் பிறகும் கூட வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அவனிடம் விசாரிக்கவில்லை... கவலைப்படவில்லை.



'எங்கே இதை பற்றி பேசினால், வீட்டுக்கு வா என்று அழைத்துவிடுவானோ என்று எண்ணி ஒதுங்கியிருக்கிறாள்...' - அவன் மனம் புண்பட்டது. மனைவியிடம் அவன் எதிர்பார்ப்பது அக்கறையாக ஒரு வார்த்தை மட்டும்தான். அதற்கு கூட தான் தகுதியற்றவனாகிவிட்டோமா என்கிற எண்ணத்தில் சற்று ஒதுங்கியிருந்தான். இந்த ஒதுக்கம் அவர்களுக்குள் ஒரு பனித்திரையைப் போட்டுவிட்டது. அதை கிழித்துக் கொண்டு வெளியே வர இருவருமே முன்வரவில்லை.



நாட்கள் செல்லச்செல்ல அவர்களுடைய எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மனதை அழுத்தத் துவங்கியது. அந்த அழுத்தத்தை அவள் மீதிருந்த அன்பையும், அவள் மனதிலிருக்கும் காயத்தையும் முன்னிறுத்தி சமாளித்துக் கொண்டான் தேவ்ராஜ். ஆனால் மதுராவிற்கு முடியவில்லை. உள்ளே இருக்கும் அழுத்தம் பல நேரங்களில் கோபமாய் வெளிப்பட்டது.



அன்று வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நேராக மாமனார் வீட்டுக்கு வந்தான் தேவ்ராஜ். உள்ளே நுழையும் பொழுதே, "சார் என்ன பண்ணறாரு..." என்று மகனை கேட்டுக் கொண்டே வந்தான்.



"வாப்பா... வாப்பா... குட்டிப்பையன் தூங்கறான். இப்படி வந்து உட்காரு..." - மருமகனை வரவேற்று உபசரித்தார்.



டைனிங் ஹாலில், குழந்தையின் பால் பாட்டிலை ஸ்டீம் செய்து துடைத்து வைத்துக் கொண்டிருந்த மதுரா கணவன் வந்திருப்பதை அறிந்தும் வெளியே வராமல் அழுத்தமாக நின்றாள்.



வேலைக்கார பெண் காபி ட்ரேயோடு சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.



"யாருக்கு கொண்டு போற?" - மதுரா.



"சார் வந்திருக்காங்க..." - மதுரா காபி கப்பை பார்த்தாள். பால் கலந்த காபி இருந்தது. "யார் இதை ரெடி பண்ணினது?"



"அம்மா..."



'எத்தனை தடவ சொன்னாலும் புரியாது' - பல்லை கடித்த மதுரா, "பிளாக் காபி எடுத்துட்டு போ..." என்றாள் எரிச்சலுடன்.



அந்த பெண் சமையலறைக்குள் நுழையும் முன், "ஆஷா..." என்றாள். அந்த பெண் நின்று திரும்பிப் பார்த்தாள்.



"நா கொடுத்துக்கறேன். நீ போ..." என்று கூறிவிட்டு, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு விருப்பமான விதத்தில் கறுப்புக் காப்பியை கலந்து ஹாலுக்கு கொண்டுவந்தாள்.



"ரெண்டு தேதி இருந்தது. நமக்கு இதுதான் வசதி... அதான் பிக்ஸ் பண்ணிட்டேன்..." - மாமனிடம் பேசிக் கொண்டிருந்தான் தேவ்ராஜ்.



பாரதியின் திருமண தேதியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட மதுராவின் முகம் கடுத்தது. அவன் முகத்தை பார்க்காமல் ட்ரேயை நீட்டினாள்.



மாமனிடம் பேசியபடியே மனைவியை நிமிர்ந்து பார்க்காமல் காபியை எடுத்துக் கொண்டான் தேவ்ராஜ். பார்த்து என்ன புண்ணியம்... அதுதான் அவள் முகத்தில் தகிக்கும் வெப்பம் இவனை சுட்டு பொசுக்குகிறதே!



சற்றுநேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு பிறகு எழுந்து உள்ளே சென்றான். தொட்டிலில் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை வாஞ்சையோடு பார்த்தான். உள்ளே அழுத்திக் கொண்டிருந்த பாரமெல்லாம் வடிந்தது மனம் லேசாவதை உணர்ந்தான்.



கணவன் ஹாலில் அமர்ந்திருக்கிறான் என்னும் நினைவில் அறைக்குள் நுழைந்த மதுரா அங்கே அவனைக் கண்டு திகைத்தாள். அந்த கணத்தில் இருவர் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்த்துவிட, திரும்பிச் செல்ல வழியில்லாமல் உள்ளே நுழைந்தாள்.



தேவ்ராஜின் பார்வை அவளை பின்தொடர்ந்தது. அதை அவள் உணர்ந்தாள். இருந்தும் அவன் பக்கம் திரும்பாமல் கர்ம சிரத்தையாக அலமாரியை அடிக்கிக் கொண்டிருந்தாள். சற்று நேரம் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன், "பாரதிக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு" என்றான்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 98

"பாரதிக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு" - கணவனின் வார்த்தையைக் கேட்டதும் பொருட்களை அடுக்குகிறேன் பேர்வழி என்று கலைத்து கொண்டிருந்த மதுராவின் கை சட்டென்று வேலை நிறுத்தம் செய்தது.



இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள். இந்த பேச்சை அவன் என்றைக்கு எடுக்கிறானோ அன்றைக்கு நன்றாக திட்டிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இப்போது அதை நிறைவேற்ற முடியும் என்று தோன்றவில்லை. பொங்கிவந்த ஆத்திரம் தொண்டையை அடைத்துக் கொண்டது. சம்மந்தமில்லாமல் அழுகை வரும் போலிருந்தது. 'ச்சே! என்ன இது!' - கண்களை மூடி ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள். இறுக்கிப் பிடித்திருந்த உணர்வுகளை முயன்று தளர்த்தினாள்.



தனக்கு முதுகுகாட்டி நிற்கும் மனைவியின் மீதிருந்து பார்வையை அகற்றவில்லை தேவ்ராஜ். அவள் ஏதேனும் பதில் சொல்வாள் என்று ஓரிரு நிமிடங்கள் காத்திருந்தான். அவளிடமிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை.



"ஹும்ம்ம்..." - பெருமூச்சுவிட்டான். குழந்தையின் முகத்தைப் பார்த்து அவளுடைய புறக்கணிப்பை உதறியவன், பாரதிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை, அவனுடைய தொழில் குடும்ப விபரம் அனைத்தையும் அவள் கேட்காமலே கூறினான்.



கணவனுக்கு புறமுதுகு காட்டியபடி அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மதுரா பதில் ஏதும் சொல்லவில்லை. உண்மையில் சொல்ல முடியவில்லை. ஏதேனும் பேசினால் அவன் மீதிருக்கும் பிணக்கில் வெடித்து அழுதுவிடுவோம் என்று பயந்து அமைதியாக இருந்துவிட்டாள்.



அவள் அப்படி எதுவுமே சொல்லாமல் மரம் போல் நிற்பது, இழுத்துப் பிடித்து வைத்திருந்த அவனுடைய பொறுமைக்கு வேட்டு வைத்துவிட்டது.



"நீயா எதுவும் கேட்கமாட்ட... நானா சொன்னாலும் ரெஸ்பான்ஸ் பண்ணமாட்ட... குட்... வெரி குட்..."



".................."



"ஐ நோ... நா தப்பு பண்ணியிருக்கேன்... நீ ரியாக்ட் பண்ணற... ஆனா எவ்வளவு நாளைக்கு?"



"...................."



"என்மேல கோவம்னா அதை சொல்லு... திட்டு... வெளிப்படுத்து... வொய் த ஹெல் ஆர் யு சோ நம்?" - 'ஏன் இப்படி அமைதியா இருந்து தொலைக்கிற?' என்று கத்தினான்.



விரல் நகங்கள் உள்ளங்கையை பதம்பார்க்கும் அளவிற்கு கைகளையும் கண்களையும் இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றாள். உள்ளே படபடவென்று அடித்துக் கொண்டது. கன்னங்கள் ஈரமானது.



"ஓ...கே...!!! இப்படித்தான் இருக்கணும்னு நீ விரும்பினா இரு... எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் இப்படியே இரு... நானும் என்னோட பொறுமையோட எல்லை என்னதான்னு தெரிஞ்சுக்கறேன்..." - விலகிச் செல்லும் அழுத்தமான காலடிகளின் சத்தம் அவன் அறையிலிருந்து வெளியேறுவதை அவளுக்கு உணர்த்தியது.



ஓரிரு நிமிடங்கள் கழித்து திரும்பிப் பார்த்தாள். அவன் இல்லாத அறை வெறுமையாய் தோன்றியது. ஏதோ பெரும் குற்றம் இழைத்துவிட்டது போல் மனதை பெரும் பாரம் அழுத்தியது. வேகமாக பாய்ந்து வந்து மெத்தையில் விழுந்தவள் அழுது கொட்டினாள். ஏன் அழுகிறோம் என்று புரியவில்லை... கோபம் கோபமாக வந்தது... யார் மீது என்று தெரியவில்லை... யாரையாவது அடிக்க வேண்டும் போல் இருந்தது... யாரை அடிக்க முடியும்...! தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் ஏன் அடித்துக்கொள்கிறோம் என்று விளங்கவில்லை. பைத்தியம் பிடித்துவிட்டதா! - விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். இன்னும் ஆத்திரம் தொண்டையிலேயே இருந்துக் கொண்டு கரைந்து தொலைவேனா என்றது. முழங்காலைக் கட்டிக்கொண்டு, 'ஊ... ஊ..' என்று அழுதாள்.



மருமகன் கத்திவிட்டு வேகமாக வெளியேறியதை கவனித்துவிட்டு மகளுடைய அறைக்கு வந்தாள் பிரபாவதி. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் மகளைக் கண்டு பதறியவள், "ஐயையோ என்ன ஆச்சு? மறுபடியும் வம்பிழுத்துட்டுப் போயிட்டானா? அடிச்சுட்டானா? அவன் திருந்தவே மாட்டான்... நல்ல காலம்... அங்க போமாட்டேன்னு சொல்லிட்ட. இங்க வந்தே இந்த அராஜகம் பண்ணறவன் அங்க என்னென்ன பண்ணுவான்...! கடவுளே! இந்த கொடுமையிலிருந்து என் பொண்ணுக்கு விடுதலையே இல்லையா!" என்று கடவுளிடம் பஞ்சாயத்து வைத்தாள்.



ஏற்கனவே எரிச்சலிலிருந்த மதுரா தாயின் பேச்சைக் கேட்டு இன்னும் கடுப்பானாள். அதே நேரம் பிரபாவதி போட்ட கூச்சலில் உறங்கி கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு வீறிட்டான்.



"அடேய்... கத்தாதடா... உங்க அப்பன் போட்டுட்டு போன சத்தம் போதாதுன்னு இப்போ நீ வேற கிளம்பிட்டியா! அப்படியே அப்பன் மாதிரி" - திட்டிக் கொண்டே குழந்தையை தூக்கினாள்.



"பிள்ளைங்க அப்பா மாதிரி இல்லாம வேற யார் மாதிரி இருப்பாங்க? ஏன் எப்பவும் அப்பா மாதிரி இருக்கே அப்பா மாதிரி இருக்கேன்னு குழந்தையை திட்டி, தேவ் ஏதோ தப்பான அப்பா மாதிரி ப்ரொஜெக்ட் பண்ணுறீங்க?" - காலி அவதாரம் எடுத்தது போல் விழிகள் சிவக்க தாயை உக்கிரமாக முறைத்தாள்.



மேல்மூச்சு வாங்க ஆவேசமாக தன்னை பார்வையால் எரிக்கும் மகளை திகைப்புடன் பார்த்த பிரபாவதி, "இப்போ நா என்ன சொல்லிட்டேன்" என்றாள்.



"நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். எப்ப பார்த்தாலும் என் பிள்ளையை திட்டிகிட்டே இருக்கீங்க? என்ன பிரச்சனை உங்களுக்கு தேவ பிடிக்காது... அதனால அவரோட பிள்ளையையும் பிடிக்கல... அதானே?" - பல நாட்களாக உள்ளே அடக்கி அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்துக் கொண்டு வெளியேறியது.



"மது! நா எப்பவும் சும்மா விளையாட்..." - "என்ன விளையாட்டு? இல்ல என்ன விளையாட்டு விளையாடுறீங்க நீங்க? அடுத்தவங்களை புண்படுத்தறதுதான் உங்க விளையாட்டா? தெரியாமத்தான் கேட்கறேன்... அவரு உங்க மருமகன் தானே? வீட்டுக்கு வந்தா வாய்க்குள்ளேயே முணுமுணுக்குறீங்க... மூஞ்ச திருப்பிகிட்டு போறீங்க... அவரு என்ன இந்த வீட்டுக்கு வரணுன்னு ஆசைப்பட்டா வர்றாரு? எனக்காக... என் பிள்ளைக்காக... இங்க வந்து உங்ககிட்டயெல்லாம் அவமானப்பட்டுக்கிட்டு போறாரு" - படபடவென்று மூச்சுவிடாமல் பொரிந்தாள்.



உண்மையில் பிரபாவதி அவமதித்ததெல்லாம் ஐதொரு காலம்... தான் அவமதித்துவிட்ட கோபத்தை தன் மேல் காட்டிக்கொள்ள முடியாமல் சிக்கிய பிரபாவதியை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தாள்.



"ஏய்... ரொம்ப பேசாதடீ... நா எப்ப அவனை அவமானப்படுத்தினேன்... நீதான்..." - "இதோ... இப்ப அவமானப்படுத்தல? மருமகனை அவன் இவன்னுதான் மரியாதை இல்லாம பேசுவீங்களா? துருவன் பாயை அத்தை இப்படி பேசினா விடுவீங்களா?"



"தேவையில்லாம உங்க அத்தைகாரியை என் கூட கம்பார் பண்ணாதடீ... அவன் இப்பதான் உன் புருஷன். சின்ன வயசுலேருந்து எனக்கு நாத்தனார் மகன். நா அப்படிதான் கூப்பிடுவேன்... அதெல்லாம் மாத்திக்க முடியாது..."



"மாத்திக்க முடியாதா? முடியாதா??? அதெப்படி முடியாது?"



"முடியாதுன்னா முடியாதுதான்... நா அவனை 'அவன் இவன்'னுதான் கூப்பிடுவேன். உனக்கு பிடிக்கலைன்னா காதை மூடிக்க"



"காதை மூடிக்கணுமா! நா ஏன் காதை மூடறேன்? எங்க அத்தைகிட்ட போயி, உங்க பையனை 'அவன் இவன்'னு கூப்பிட சொல்றேன்"



"சொல்லு சொல்லு... எம்மருமக வருவா... வந்து சொல்லிக் கொடுத்த உன் நாக்கையும்... பேசின உங்க நொத்தை நாக்கையும் கட் பண்ணி எடுத்துட்டு வந்துடுவா..."



"ஐயை...யையே...! என்ன சத்தம் இங்க... பிரபா... நீ இருக்கற இடம் அமைதியாவே இருக்காதா? அம்மாடி... நீயும் என்னடா பதிலுக்கு பதில் பேசிகிட்டு இருக்க?" - பெண்களின் சண்டையில் இடையில் நுழைந்து தலையைக் கொடுத்தார் நரேந்திரமூர்த்தி.



"என்னை எதுக்கு குறை சொல்லறீங்க? உங்க மகளை கேளுங்க..." - பிரபாவதி.



"டாடி... இவங்க ஓவரா பேசுறாங்க... வாயை மூட சொல்லுங்க" - மதுரா.



"ஐயையோ! ஓவரா பேசுறேனா! ஏங்க... அழுதுகிட்டு இருந்தாங்க... என்னனுதான் ஒரு வார்த்தை கேட்டேன்... கரண்ட்டு மாதிரி என்னைய பிடிச்சுகிட்டா... அப்புறம் நா காத்தாம என்னங்க செய்வேன்? நீங்களே சொல்லுங்க..."



"டாடி... அவங்க என்னன்னு மட்டும் கேட்கல டாடி... தேவ் மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லி தம்பியை திட்டுறாங்க..."



"ஆமாம்... அதுல என்ன தப்பு... உன் பிள்ளையும் புருஷனும் ஒரே மாதிரிதான் இருக்காங்க... அந்த முட்டை கண்ண வச்சுக்கிட்டு என்னைய முறைச்சு முறைச்சு பார்க்கறாங்க... அதுக்கு என்ன இப்போ? ஏங்க... நா இங்க வரும்போது இவ அழுதுகிட்டு இருந்தா.... எதுக்கு அழுதான்னு கேளுங்க... அவன்தான் என்னமோ பண்ணிட்டு போய்ட்டான். அந்த கோவத்துலதான் என்னைய பிடிச்சுக்கிட்டு உதறுறா..."



"நான்சென்ஸ்... அவங்களுக்குள்ள ஏதாவது இருக்கும். நீ எதுக்கு தேவையில்லாம அதுல தலையிடற? உனக்கு அப்பவே சொன்னேன்... லூஸ் டாக் அதிகமா பண்ணிக்கிட்டு இருக்க... கண்ட்ரோல் பண்ணுன்னு... கேட்டியா? வாயையே திறக்காத மதுவே உன்கிட்ட சண்டைக்கு வந்துட்டான்னா, தப்பு உன்மேலதான் இருக்கும். போ இங்கேருந்து... போன்னு சொல்றேன்ல..." - கணவனின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத பிரபாவதி அதிர்ந்துபோனாள். 'போன்னு சொல்றேன்ல' - என்று அவர் இன்னொரு முறை அதட்டியதும், கண்களில் கண்ணீருடன், "ஹும்" என்று முகத்தை வெட்டி திருப்பிக் கொண்டு அங்கிருந்து விலகினாள்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 99

தேவ்ராஜ் நிறைய மாறியிருக்கிறான். மனைவிக்காக தன்னுடைய விருப்பங்களை மாற்றிக்கொள்கிறான். உரிமைகளை வீட்டுக் கொடுக்கிறான். விருப்பமின்மையை சகித்துக்கொள்கிறான். அனைத்திற்கும் மேலாக கோபத்தை கட்டுப்படுத்துகிறான். அவனுடைய குணத்திற்கு இவையெல்லாம் இயலாத காரியம். ஆனால் இயற்றிக் காட்டியிருக்கிறான்... அவளுக்காக... - மதுராவின் மனம் குளிர்ந்தது. கூடவே அழுகையும் வந்தது...



எத்தனை பழிச்சொற்கள்! எத்தனை காயங்கள்! எத்தனை வலிகள்! சொல்லில் அடங்காத துன்பங்களுக்கு அவளை ஆளாக்கியிருக்கிறான். மன்னிக்கவே முடியாது என்று எண்ணியிருந்த அவனுடைய தவறுகள் மற்றும் நெறி தவறிய நடத்தைகளின் தாக்கம் இன்று அவன் மனதில் சிறிதும் இல்லை. மாறாக அவனுடைய சிறு முகவாட்டம் பெரிதாகத் தோன்றுகிறது. அந்த அளவிற்கா அவள் மனம் வெட்கம்கெட்டுப் போய்விட்டது! - தன்னை நினைத்து தானே வியந்தாள். ஆனாலும் அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. மனம் போராடியது. அவனை பார்க்க வேண்டும்போல்... அவனை சமாதானம் செய்ய வேண்டும் போல் மனம் உந்தியது. கட்டுப்படுத்திக் கொண்டாள். உணர்ச்சிவசத்தில் இப்படியெல்லாம் தோன்றுகிறது. உறங்கியெழுந்தால் இந்த உணர்வுகளெல்லாம் மட்டுப்பட்டுவிடும் என்று எண்ணி கண்களை இருக்க மூடிக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாள்.



மூடிய இமைகளுக்குள் தோன்றிய அவன் முகம், கோபப்பார்வையுடன் கொஞ்சல் மொழிப்பேசியது. இம்சை தாங்காமல் எழுந்து அமர்ந்தாள். அருகில் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கம் பார்வை திரும்பியது. அவனுடைய குழந்தை... அவனுடைய இரத்தம்... ஆனால் இதுவரை இந்த குழந்தையின் நிழல் கூட அவனுடைய வீட்டில் விழுந்ததில்லை. சுருக்கென்று உள்ளே வலித்தது. அநியாயம் செய்கிறோமோ என்று தோன்றியது. இந்த பிரச்சனையெல்லாம் இல்லாமல் அனைத்தும் சுமூகமாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனம் ஏங்கியது.



அலைபேசியை எடுத்து ஏதேனும் மெசேஜ் அனுப்பியிருக்கிறானா என்று சோதித்தாள். 'குட் நைட்' மெசேஜ் கூட இல்லை... மனம் ஏமாற்றத்தில் சோர்ந்தது. அவன் மீதான ஏக்கம் இன்னும் அதிகமானது. பழைய மெசேஜ்களை திறந்து ஒவ்வொன்றாக வாசித்தாள்.



'மிஸ் யூ மை லவ்...' - 'தூங்க முடியல ஸ்டராபி...' - 'வைட்டிங் ஃபார் மை ஃபேமிலி' - போன்ற வாசகங்கள் அவள் கண்களைக் கலங்க செய்தன. அவன் மீதான ஏக்கம் மனதை அழுத்த, மறு நொடியே எதையும் யோசிக்காமல் 'கால் பட்டனை' சொடுக்கினாள்.



நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. வெகுநேரம் உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்த தேவ்ராஜ் அப்போதுதான் கண்ணயர்ந்தான். சற்று நேரத்திலேயே அலைபேசி ஒலித்தது. அழைப்பது யார் என்று கூட பார்க்காமல், உறக்கக் கலக்கத்திலேயே எடுத்து காதுக்குள் கொடுத்து, "ஹலோ" என்றான் அதட்டல் தொனியில். தூக்கம் கெடுகிறதே என்கிற எரிச்சல் அவனுடைய குரலில் தெரிந்தது.



அவனுடைய கடுமையான குரல் மதுராவின் மனதில் சுருக்கென்று தைத்தது. 'இன்னும் கோபம் போகல...' - வருத்தத்துடன் நினைத்துக் கொண்டு, "நான்தான் பேசுறேன்" என்றாள் மெல்லிய குரலில்.



சட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான்.



"மது! என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?" - அவசரமாக வெளிப்பட்டது அவன் குரல். வழக்கத்திற்கு மாறாக நேரம்கெட்ட நேரத்தில் அழைக்கிறாள் என்றால் பயம் வரத்தானே செய்யும்.



சட்டென்று அவளுடைய மன இறுக்கம் தளர்ந்தது. அவனுடைய அக்கறை அவள் மனதை வருடியது. "இல்ல... அதெல்லாம் ஒண்ணும் இல்ல" என்று முணுமுணுத்தாள்.



"வேற என்ன?" - சந்தேகத்துடன் கேட்டான். 'ஏதோ இருக்கிறது இல்லையென்றால் இந்த நேரத்தில் அழைக்க மாட்டாளே!' - பதட்டத்துடன் மனைவியின் பதிலுக்காகக் காத்திருந்தான்.



ஓரிரு நிமிடங்கள் தயக்கத்திற்குப் பிறகு, "நா வீட்டுக்கு வர்றேன்" என்று மெல்லிய குரலில் கூறினாள் மதுரா.



சட்டென்று அவனுடைய உலகமே அழகாகிவிட்டது. மனதில் ஆனந்த மழை பெய்தது... உண்மைதானா! உண்மையேதானா! நம்ப முடியவில்லை அவனால். ஒருவேளை கனவாக இருக்குமோ! தன்னைத்தானே தொட்டுப் பார்த்தான். உணர்விருந்தது. 'ஓ மை காட்!' - உற்சாகத்தில் மனம் துள்ளியது. வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும் போல் இருந்தது. அத்தனை உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு, "சரி வா..." என்றான் இலகுவாக.



'தட்ஸ் இட்!' - கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருந்தவனுக்கு அவளுடைய வருகை தரும் சந்தோஷம் இவ்வளவுதானா! மதுராவின் மனம் சுணங்கியது.



"காலையில ட்ரைவரை அனுப்பறேன். வந்துடு"



'ட்ரைவரையா!' - கண்கள் கலங்கின.



"வேண்டாம்... நானே... டாடிகூட... வந்துடறேன்" - தொண்டையை அடைக்கும் ஆத்திரத்தை விழுங்கி கொண்டுப் பேசினாள்.



"ஓகே... குட் நைட்" - அழைப்பை துண்டித்துவிட்டான்.



அவனுடைய விட்டேற்றியான பேச்சு அவள் கண்களைக் கசியச் செய்தது. 'நாமாக வருகிறேன் என்று சொன்னதால்தான் இப்படி உதாசீனப்படுத்துகிறானா!' - தவறு செய்துவிட்டோமோ என்று வேதனையுடன் நினைத்தவள் அழுகையில் கரைந்தபடியே உறக்கத்தைத் தழுவினாள்.



************************



அன்று இரவு மதுரா உணவருந்த மறுத்துவிட்டாள். தான் அவ்வளவு தூரம் சொல்லியும், 'நா அபப்டித்தான் பேசுவேன். அவனுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்' என்று பிரபாவதி அழுத்தம் திருத்தமாகப் பேசியது அவள் மனதைவிட்டு நீங்க மறுத்தது. ஆனால் மகளின் எடுத்தெறிந்த பேச்சை பிரபாவதி மறந்துவிட்டாள். என்னதான் இருந்தாலும் தாய்மனம் அல்லவா... கோபத்தைவிட மகளின் பசித்த வயிறே அவளுக்கு பெரிதாகப் பட்டது.



மகன்களையும் கணவனையும் தூதுவிட்டுப் பார்த்தாள். பிறகு தானே நேரில் சென்றும் சமாதானம் செய்தாள். 'பசிக்கல' என்கிற ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டாள் மதுரா.



'ஐயோ! தெரியாம பேசித் தொலைச்சுட்டோமே! இப்படி சாப்பிடாம கிடக்கிறாளே! பால் கொடுக்கற உடம்பு... எப்படி தாங்கும்...' - கவலையோடு படுத்தவளுக்கு பாதி இரவில் அடிக்கடி விழிப்பு வந்தது.



அப்படி ஒருமுறை விழிப்பு வந்தபோது, எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு வந்தவள், கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திடுக்கிட்டாள்.



"யாரது?" - அதட்டலுடன் வெளிப்பட்டது அவள் குரல். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, "நான் தான்" என்றது தேவ்ராஜின் குரல். உடனே ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.



"என்ன ஆச்சு? இந்த நேரத்துல?" - பதற்றத்துடன் கேட்டாள்.



சிறு புன்னகையுடன், "ஐம் சாரி... டிஸ்டர்ப் பண்ணிட்டேன்" என்றபடி அவளுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் மனைவியின் அறைக்குள் நுழைந்தான்.



விடிவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில், வரைந்து வைத்த ஓவியம் போல் குழந்தையை அனைத்துப் பிடித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மதுரா. உதட்டில் தவழும் மென் புன்னகையுடன் வெகுநேரம் அந்த காட்சியை கண்டு மனதை நிறைத்துக் கொண்டவன், பிறகு மின்விளக்கை ஒளிரச் செய்துவிட்டு அவளை மீண்டும் பார்த்தான்.



வெளிச்சத்தில் அவளுடைய உறக்கம் களையும், விழித்துப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்துதான். ஆனால் அது நடக்கவில்லை. அவனுடைய புன்னகை மேலும் விரிந்தது. அருகில் சென்று மெத்தையில் அமர்ந்தான். அப்போதுதான் அதை கவனித்தான். கன்னங்களில் கண்ணீர் காய்ந்து கோடிட்டிருந்தது.



அந்த கண்ணீர் தடம் தன்மீது அவள் கொண்டிருக்கும் அன்பின் அடையாளம் என்பதில் அவன் மனம் கர்வப்பட்டது. காற்றில் களைந்து முகத்தில் சரிந்திருந்த அவளுடைய முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதழ்பதித்தான். அப்போதும் அவளிடம் அசைவில்லை. இப்போது இன்னும் அதிகமாக... சத்தம் வராமல் குலுங்கி சிரித்தான்.



'கும்பகர்ணி...' - மெல்ல முணுமுணுத்தபடி குழந்தையின் உள்ளங்காலை நிமிண்டினான். லேசாக காலை உதறிவிட்டு இன்னும் அன்னையோடு ஒட்டிக் கொண்டானே ஒழிய அவனும் விழிக்கவில்லை. அடுத்து காதில் துணியை நுழைத்து கூச்சப்படுத்தினான். எதிர்பார்த்தபடியே தொந்தரவு தாங்காமல் வேகமாக முண்டினான் குழந்தை. ஆனால் விழிக்கவில்லை.



'காட்! நீயும் உங்க அம்மாவுக்கு குறைஞ்சவன் இல்லடா...' - சிரித்துக் கொண்டே இன்னும் அதிகமாக தொந்தரவு செய்தான். இந்த முறை அவனுடைய முயற்சி வெற்றியடைந்தது. குழந்தை முனகலுடன் அழ துவங்கினான்.



'அப்பாடா...' - நினைத்ததை நடத்திவிட்ட திருப்தியோடு ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தான் தேவ்ராஜ்.



"ஒண்ணும் இல்ல... செல்லம்... தூங்குங்க..." - குழந்தையை சமாதானம் செய்தபடி சுருக்கிய இமைகளை லேசாக பிரித்தவள், கட்டிலுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த மதுரைவீரனைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். அது யார் என்பதே ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகுதான் புலப்பட்டது அவளுக்கு.



"நீங்களா! என்ன இந்த நேரத்துல" - வியப்புடன் கணவனைப் பார்த்தாள்.



"லைட்ட போட்ட உடனே குழந்தை முழிச்சுட்டான். நீ என்ன இப்படி தூங்கற! திருடன் வந்தாக்கூட என் பிள்ளைதான் உன்ன காப்பாத்தணும் போலருகே!" - மனைவியை கேலி செய்தபடி குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான்.



மதுரா சுவர் கடிகாரத்தை பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்தாள்... "மணி ரெண்டரை ஆகுது. இந்த நேரத்துல நாய் நாரி கூட தூக்கிகிட்டு தான் இருக்கும்"



"சரி வா... நம்மளும் போயி தூங்கலாம்"



"எங்க!!!" - அவளுடைய வியப்பு இன்னும் அதிகமானது.



"வீட்டுக்கு"



"இந்த நேரத்துலேயா!"



"இப்பதானே நீ வீட்டுக்கு வர்றேன்னு சொன்ன?"



"ட்ரைவரை அனுப்பறேன்னு சொன்னீங்க?"



"ம்ம்ம்... அனுப்பியிருக்கலாம். ஆனா பையன் கோச்சுக்குவான். அதான்... நானே வந்துட்டேன்"



"அப்போ... எனக்காக வரலையா?"



"உனக்காகவே! உனக்காக நா ஏன் வரணும்... நீ ஒரு ராட்சஸி... பிடிவாதக்காரி..."



"அப்போ நீங்க? ராட்சஸனுக்கெல்லாம் இராட்சஸன்... உலகத்துலேயே ரொம்ப பெரிய இராட்சஸன்..."



"அப்படியா? சரி வா... நீ பெரிய இராட்சசியா... இல்ல நா பெரிய இராட்சசனான்னு வீட்ல போயி டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்..." - அவளுடைய கையை பிடித்தான்.



"ஹலோ... நா வரல..."



"எனக்கு காது கேட்காது..." - தரதரவென்று இழுத்துக் கொண்டு அறையின் வாசல் வரை வந்துவிட்டான்.



"தேவ்... இருங்க... இந்த நேரத்துல எப்படி... ப்ளீஸ்..."



"இந்த நேரத்துலதான் நீ நல்ல முடிவை எடுத்திருக்க. நான் என்ன பண்ணறது.. வா..."



"ஐயோ... டிரஸ் கூட மாத்தல..."



"அதெல்லாம் வீட்ல வந்து மாத்திக்கலாம்"



"வீட்ல வந்தா! அதுக்கு எதுக்கு மாத்தணும்"



"அது என் பிரச்சனை இல்ல..."



"ஐயோ.. இது நைட் டிரஸ்..."



"நானும் நைட் டிரஸ்ல தான் வந்திருக்கேன். என்ன ஆயிடிச்சு இப்ப?" - ஹால் வரை இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.



"கடவுளே! தேவ்..." - உள்ளுக்குள் டன் டன்னாய் மகிழ்ச்சி பொங்கினாலும் வெளியே அலுத்துக் கொண்டாள்.



புன்னகை மாறா முகத்தோடு இருவரும் எதிரெதிர் திசையில் இழுத்தபடி ஹாலுக்கு வந்ததை பார்த்து அவர்கள் ஏதோ விளையாட்டுத் தனமாக ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்கிறார்கள் என்று புரிந்துக் கொண்ட பிரபாவதியின் முகத்தில் புன்னகை தோன்றியது.



'சாயங்காலம் அப்படி அழுதுகிட்டு இருந்தா! இப்போ இப்படி சிரிச்சுக்கிட்டு வர்றாளே! அப்போ அது விளையாட்டு சண்டைதானா! அதுக்குத்தான் அவ்வளவு ரியாக்ட் பண்ணினாளா! ம்ஹும்... இதுங்க விஷயத்துல நாம நுழைஞ்சோம்... அவ்வளவுதான்...' - தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறை பக்கம் நடந்தாள்.



"நாங்க கிளம்பறோம்... கதவை பூட்டிக்கோங்க" - தேவ்ராஜ்.



'என்ன!' - அதிர்ச்சியுடன் சட்டென்று திரும்பி மருமகனைப் பார்த்தாள்.



"எங்க?" - புரியவில்லை அவளுக்கு. 'இந்த நேரத்துல எங்க கிளம்பரதா சொல்றான். அதுவும் நைட் ட்ரஸ்சோட!' - குழப்பத்துடன் பார்த்தாள்.



"வீட்டுக்கு" - பிரபாவதியின் பார்வை மகளுடைய முகத்தில் பதிந்தது.



"இந்த நேரத்துலேயா?"



மதுரா சங்கடத்துடன் தாயைப் பார்க்க, "ஆமாம்..." என்று அழுத்தமாக சொன்னான் தேவ்ராஜ்.



"என்ன திடீர்ன்னு!!"



"நல்ல முடிவுதானே! எப்ப எடுத்தா என்ன?" - மனைவியின் முகத்தை பார்த்தபடி மாமியாருக்கு பதிலளித்தான்.



"குழந்தையை முதன் முதல்ல அந்த வீட்டுக்கு அனுப்பும் போது சில சடங்கெல்லாம் செஞ்சு நல்ல நேரத்துல அனுப்பனும் மது. என்ன அவசரம் இப்போ... அதுவும் நடு இராத்திரில...?"



"ம்மா... இல்ல... தேவ் ப்ளீஸ்... டாடி தூங்கறாங்க... காலையில..." - தடுமாறினாள் மதுரா.



"நீ எதுவும் பேச வேண்டாம்... என்னோட பையன் எப்ப என் வீட்டுக்கு வந்தாலும் அது நல்ல நேரம் தான். நீங்க பயப்படாதீங்க. காலையில வந்து மாமாவை பார்க்கறோம்... வர்றோம்..." - மனைவியின் பிடித்த கையை விடாமல் வெளிப்புறம் நோக்கி நடக்க எத்தனித்தான்.



"ஒரு நிமிஷம்" - விறுவிறுவென்று பூஜையறைக்கு ஓடினாள். இனி இவனிடம் வாதாடி பயனில்லை என்று அவளுக்கு புரிந்துவிட்டது. எப்படியோ நன்றாக வாழ்ந்தால் சரி என்று தாய் மனம் வாழ்த்த தயாராகிவிட்டது. விளக்கேற்றி திருநீர் குங்குமம் கொண்டு வந்து மகளுக்கு வைத்தாள். பிறகு மருமகனின் தோளில் உறங்கி கொண்டிருந்த குழந்தைக்கு வைத்தாள். சிறு தயக்கத்திற்கு பிறகு தேவ்ராஜின் நெற்றியிலும் வைத்தாள்.



"சந்தோஷமா இருங்க..." என்று மனதார வாழ்த்தினாள். சட்டென்று தாயை கட்டிக்கொண்ட மகள், "சாரி ம்மா" என்றாள் குரல் கறகறக்க....



"ச்சே... ச்சே... என்ன பேச்சு... நீ நல்ல இருப்ப... சந்தோஷமா போயிட்டு வா..." என்று வாழ்த்தி நிறைந்த மனதோடு வழியனுப்பி வைத்தாள்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 100

அந்த கருநிற மெர்சிடிஸ் பூனை போல் வந்து பார்க்கிங் பகுதியில் நின்று போது வீடு நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி, மறுபக்கம் வந்து மனைவிக்கு கதவை திறந்துவிட்டான் தேவ்ராஜ். குழந்தையை அணைத்துப் பிடித்தபடி கீழே இறங்கினாள் மதுரா. வாயிலில் நின்ற துவாரபாலகர்களில் ஒருவனிடம் கார் சாவியை கொடுத்து, காரை கேரேஜில் விடும்படி கூறிவிட்டு மனைவியோடு உள்ளே செல்ல எத்தனித்தவன், சட்டென்று ஒரு யோசனைத் தோன்ற, "வெயிட் வெயிட்..." என்று அவளை உள்ளே செல்ல விடாமல் பின்னுக்கு இழுத்தான்.



"என்ன?" - மதுரா.



"ஒரு நிமிஷம் இங்கேயே வெயிட் பண்ணு..." - அவசரமாக உள்ளே ஓடினான். அவன் எதையோ போட்டு உருட்டும் சத்தம் வாசல்வரை கேட்டது. பிறகு ஒரு தட்டையும் கற்பூரத்தையும் கொண்டு வந்தான். தட்டில் ஆரத்தி கரைக்கப்பட்டிருந்ததைக் கண்ட மதுரா விழிவிரித்தாள்.



"இதெல்லாம் எப்படி தெரியும் உங்களுக்கு!" - ஆச்சர்யமாகக் கேட்டாள்.



"பார்த்திருக்கேன்... ஆனா ஒண்ணு மட்டும் புரியில. இந்த தட்டுலதானே இதை கொளுத்துவாங்க. ஆனா தண்ணியில வச்சா எப்படி எரியும்?" - குழப்பத்துடன் கற்பூரத்தை காட்டினான்.



"வெத்தலையை வச்சு அதுமேல கற்பூரத்தை வைக்கணும்"



"ஓ!" - 'அதுக்கு எங்க போறது இப்போ!' - அவன் யோசிக்கும் போதே , "சாமி பக்கத்துல இருக்கான்னு பாருங்க" - மதுரா ஐடியா கொடுத்தாள். சிறு பிள்ளை போல் உற்சாகமாக உள்ளே ஓடியவன் வரும் பொழுது கையில் வெற்றிலையோடு சந்தோஷமாக வந்தான்.



மனைவியின் ஆலோசனைப்படி ஆராத்தித் தட்டின் நடுவில் வெற்றிலையை வைத்து, அதன் மீது கற்பூரத்தை வைத்து ஏற்றியவன், ஒரு கணம் யோசித்தான். பிறகு, அங்கே நின்றுக் கொண்டிருந்த இன்னொரு துவாரபாலகனை அழைத்து அவன் கையில் ஆராத்தித்தட்டைக் கொடுத்துவிட்டு, மனைவியிடமிருந்து குழந்தையை வாங்கி கொண்டு அவளோடு சேர்ந்து நின்றுக் கொண்டான்.



"சார்!' - அவன் புரியாமல் விழிக்க, "ம்ம்ம்... சுத்து" என்றான்.



"நானா!" - 'துப்பாக்கியை பிடிக்கும் கையில் ஆரத்தி தட்டா! கத்தியை சுழற்ற வேண்டிய கை ஆரத்தியை சுற்றுவதா!' - அவன் மனம் முரண்டியது.



"நா எப்படி சார்?" - தயங்கினான்.



"ஒண்ணும் இல்ல... ஜஸ்ட் தட்டோட சேர்த்து கையை ரொட்டேட் பண்ணு போதும். இப்படி இப்படி.... அவ்வளவுதான்... அப்புறம் பொட்டு வைக்கணும்... பையனுக்கு... மறந்துடக் கூடாது" - அவனுடைய மனநிலை புரியாமல் வெகு தீவிரமாக விளக்கம் கூறினான்.



பாதுகாவலனின் முகம் போனபோக்கைக் கண்டு, சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டாள் மதுரா. அவருக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல... விட்டுடுங்க..." - கணவனின் காதில் முனுமுனுத்தாள்.



"ப்ச்... இட்ஸ் நாட் எ பிக் டீல் மேன்... ட்ரை பண்ணு... யூ கேன் டூ இட்" - மனைவியின் கிசுகிசுப்பை கண்டுகொள்ளாமல், அந்த மாவீரனுக்கு ஊக்கம் கொடுத்தான்.



வேறு வழியின்றி, ஆரத்தி சுற்றுவதையே தனக்கு இடைப்பட்ட கட்டளையாக எண்ணி நிறைவேற்றியவன் மறக்காமல் குழந்தைக்கு திலகமும் இட்டான்.



"குட்..." - தேவ்ராஜ் அவனை சந்தோஷமாக பாராட்ட, "இதை கேட்டுக்கு வெளியில கொட்டிடுங்க..." என்றாள் மதுரா.



மனைவியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றான் தேவ்ராஜ். வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் போது அவளுக்குள் ஒரு நடுக்கம் தோன்றியது. எத்தனையோ சுக துக்கங்களை இதே வீட்டில் அனுபவித்திருக்கிறாள். இனி எப்படி இருக்கப் போகிறது இந்த வீட்டில் அவள் வாழ்க்கை! - நடக்க முடியாமல் கால்கள் பின்னியது. அவளுக்குள் தோன்றிய இந்த உணர்வை பயம் என்று சொல்ல முடியாது. இது ஒருவித பதட்டம்... எதிர்பார்ப்பு...



தேவ்ராஜ் மனைவியின் முகமாற்றத்தை பார்க்கவில்லை. அவளுடைய தடுமாற்றத்தை கவனிக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு தூண்டியது... மனம் உந்தியது... ஒரு கையில் குழந்தையை வைத்திருந்தவன், மறுகையால் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். அந்த கணம் அவள் மனதிலிருந்த அனைத்து குழப்பங்களும் கலைந்தோடிவிட்டன. பாதுகாப்பான இடத்தில் சரணடைவது போல் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.



தங்களுடைய அறைக்கு வரும்வரை இருவரும் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால் இதயங்கள் இரண்டும் மௌனமாய் ஆயிரம் உணர்வுகளை பரிமாறிக் கொண்டன. உள்ளே நுழைந்ததும் மின்விளக்கின் சுவிட்ச்சை தட்டினான் தேவ்ராஜ். நொடியில் அந்த அறை பிரகாசமானது... அவன் வாழ்க்கையைப் போல...



குழந்தையை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு அருகிலேயே அமர்ந்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். உள்ளே ஏதேதோ உணர்வுகள்... அலையடிப்பது போல்... பொங்கிப் பெருகும் ஊற்று போல்... அடைமழை போல்... மகிழ்ச்சிதான்... மனம் தளும்பத்தளும்ப மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. உள்ளத்தின் கொள்திறனை விஞ்சிய மகிழ்ச்சி...



அவனுடைய உணர்ச்சிவசப்பட்ட மனநிலை முகத்தில் தெரிந்தது... உதட்டைக் கடித்துக் கொண்டு இறுக்கமாக ஒரே நிலையில் அமர்ந்திருக்கும் அவனுடைய உடல்மொழியில் தெரிந்தது.



மெல்ல அவனிடம் நெருங்கி தோளில் கைவைத்தாள் மதுரா. சட்டென்று அந்த கையில் கன்னத்தை சாய்த்துக் கொண்டான். கண்கள் தானாய் மூடின. மூடிய இமைகளுக்குள்ளிருந்து இரு துளி நீர் மணிகள் உருண்டோடின.



"தேவ்... காம் டௌன்...ப்ளீஸ்..." - மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.



"இன்னிக்கு நைட் இவனை... இங்க... இந்த பெட்ல பார்ப்பேன்னு நினைக்கல..." என்றவன், நிமிர்ந்து மனைவியின் கண்களைப் பார்த்து, "தேங்க்ஸ்" என்றான்.



அவனுடைய கண்களில் பளபளத்த கண்ணீர் அவளுடைய அடிவயிற்றை பிசைந்தது.



"ஐம் சாரி தேவ்..." - ஆத்திரம் தொண்டையை அடைத்தது.



தேவ்ராஜின் முகம் மாறியது. "நோ... டோண்ட் சே தட்... இன்னொரு தரம் அந்த வார்த்தை உன்கிட்டேருந்து வர கூடாது... ஐம் சாரி... ஐ... ஆ...ம் சாரி... வாழ்க்கை முழுக்க சாரி சொல்லிட்டே இருந்தாலும் போதாது..." என்றான் வருத்தத்துடன்.



மதுரா வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள். "இட்ஸ் ஆல் ஓவர்... விட்டுடுங்க... மறந்துடுங்க" என்றாள்.



அடுத்த சில நிமிடங்களுக்கு அவனுடைய பார்வை அவள் முகத்திலேயே உறைந்துவிட்டது. அவனுடைய வருத்தத்தை உடனே களைய வேண்டும் என்கிற அவளுடைய வேகம் அவனை மலைக்கச் செய்தது. தன்னை அடித்தவர்களை மறுகணமே மன்னிக்கும் தெய்வீக குணம் குழந்தைகளுக்கு மட்டுமே உரித்தானது. இப்போது மதுரா அவன் கண்களுக்கு குழந்தையாகத்தான் தெரிந்தாள்.



எழுந்து நின்று அவள் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணோடு கண் கலந்து, "யூ ஆர் மை ஏஞ்சல்... மை லைஃப்... மை லவ்... மை ஸோல்..." - 'நீ என் தேவதை... என் வாழ்க்கை... என் காதல்... என் ஜீவன்...' என்றான்.



மதுரா அழகாக சிரித்துக் கொண்டே, 'இல்லை' என்று தலையசைத்தாள். அவள் கண்களில் குறும்பு கூத்தாடியது. தேவ்ராஜின் மனநிலை இலகுவானது. மனைவியை சுவாரஸ்யமாகப் பார்த்தான்.



"நா ஏஞ்சல் இல்ல... இரா...ட்...சசி..." - என்று அழுத்தம் திருத்தமாக இராகம் போட்டாள். மனைவியின் விளையாட்டில் தேவ்ராஜின் கண்கள் பிரகாசமானது. முகத்தில் புன்னகை விரிந்தது.



"ஓ! அப்போ நா கூட யாருன்னு காட்டியாகணும்... இல்ல?" - அந்த இராட்சசனின் குரல் குழைந்தது... பார்வையில் கிறக்கம் கூடியது... மதுரா முகம் சிவந்தாள்.



விடிந்து வெகுநேரமாகியும் மகன் கீழே இறங்கி வரவில்லையே என்கிற சிந்தனையோடு நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த இராஜேஸ்வரி மாடியில் குழந்தை சத்தம் கேட்டதும் திடுக்கிட்டாள். சற்று நேரம் எதுவுமே புரியவில்லை. 'டிவியில் ஏதோ குழந்தை அழுகிறதோ!' என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் அது டிவியிலிருந்து வரும் சத்தமல்ல என்பது சில நிமிடங்களிலேயே புரிந்துவிட, காட்ஸை பார்த்தாள்.



"நைட் யார் வந்தது?" என்றாள்.



"அஞ்சு மணிக்கு ஷிப்ட் மாறியிருக்கோம் மேம்... அதுக்கு பிறகு யாரும் வரல"



'மதுரா வந்துட்டாளா! நைட்ல எப்படி! ஒருவேளை சண்டை ஏதும் போட்டுக்கிட்டு குழந்தையை மட்டும் தூக்கிட்டு வந்துட்டானோ!' - குழப்பங்கள் பல மூளையை சூழ்ந்துகொள்ள அவசரமாக மாடிக்கு ஓடினாள் தாய்.



ஒரு பக்கம் மகன் மறுபக்கம் மனைவி... இருவரையும் இரு தோள்களில் தாங்கியபடி நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான் தேவ்ராஜ். நெடுநாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு குழந்தை அழும் சத்தமும் கேட்கவில்லை... கதவு தட்டப்படும் சத்தமும் கேட்கவில்லை. மதுராதான் அவசரமாக எழுந்து குழந்தையை தூக்கி சமாதானம் செய்தபடியே கதவைத் திறந்தாள்.



மருமகளைக் கண்டதும் ஆச்சரியப்பட்ட இராஜேஸ்வரி, "மது!!! எப்ப வந்த?" என்று கேட்டதோடு பதிலைக் கூட எதிர்பார்க்காமல், "கண்ணே! மணியே!" என்று பேரனை தூக்கிக் கொஞ்சத் துவங்கிவிட்டாள். அனைத்தையும் மறந்துவிட்டு பேரனின் அழகில் திளைத்துவிட்டது இராஜேஸ்வரியின் மனம்.



"நா குழந்தையை கீழ கொண்டு போறேன்... நீ குளிச்சுட்டு வா..." என்று கூறிவிட்டு பேரனோடு கீழே சென்றுவிட்டாள்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 101

"நைட்டோட நைட்டா இப்படி கடத்தல்காரன் மாதிரி பிள்ளையை தூக்கிட்டு வந்திருக்கியே! இதுக்கெல்லாம் சில சடங்கு சம்பிரதாயம் இருக்கு... அதை பத்தியெல்லாம் உனக்கு எந்த அக்கறையும் இல்லையா?" - மகனை கடிந்துக் கொண்டாள் இராஜேஸ்வரி.



"என்ன பெரிய சடங்கு... எனக்கு தெரியாத சடங்கு...? அதெல்லாம் செய்ய வேண்டியதை செஞ்சுதான் உள்ள கூட்டிட்டு வந்தேன்" - சப்பாத்தியை சுவைத்துக் கொண்டே அலட்சியமாக தாய்க்கு பதிலளித்தான்.



"ஓஹோ! அப்படி என்ன செய்ய வேண்டியதை செஞ்ச நீ?"



"ஆரத்தி எடுக்க வச்சேன்" - பெருமையாகக் கூறினான்.



"ஆரத்தி எடுத்துட்டா போதுமா? அது சரி யார் ஆரத்தி எடுத்தது? யார் அதை ரெடி பண்ணினது?"



"நான் தான் ரெடி பண்ணினேன்... ஏன்?"



"நீயா? நீ எப்படி ரெடி பண்ணின!" - சந்தேகத்துடன் கேட்டாள் தாய்.



"ம்மா... தண்ணியில குங்குமத்தை கரைச்சு தட்டுல ஊத்தி சுத்தறது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?"



"நெனச்சேன்... குங்குமத்தை கரைச்சுதான் பிள்ளைக்கு சுத்தி போட்டீங்களா?"



"ஆமாம்... ஏன்? அந்த தட்டுல ரெட் கலர் தண்ணிய நா பார்த்திருக்கேனே! அது குங்குமம் தானே?"



இராஜேஸ்வரி மகனை முறைத்தாள். பிறகு மருமகளிடம், "நீயாவது சொல்லியிருக்கலாம்ல?" என்றாள்.



என்ன சொல்லியிருக்க வேண்டும் என்று அவளுக்கும் புரியவில்லை. "வெத்தல... கற்பூரம் எல்லாம் வச்சுதான்..." - இழுத்தாள்.



"கிழிஞ்சது... உனக்கும் தெரியாதா! மனுஷங்களுக்கு ஆரத்தி சுத்தும் போது மஞ்சளையும் சுண்ணாம்பையும் கரைச்சுதான் தட்டை ரெடி பண்ணுவாங்க... குங்குமத்தை இல்ல..."



"ஓ!" - மதுராவுக்கே இது புதிய செய்தி... அப்படியென்றால் தேவ்ராஜை பற்றி கேட்கவே வேண்டாம்.



"சரி விடுங்க... எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கணும்னா எப்படி?" - தேவ்ராஜ்.



"நீங்களா எல்லாத்தையும் உங்க இஷ்டத்துக்கு செஞ்சா இப்படித்தான். பெரியவங்க நாங்க எதுக்கு வீட்ல இருக்கோம்? எழுப்ப வேண்டியதுதானே?"



"எதுக்கு உங்க தூக்கத்தை கெடுக்கணும்னு நெனச்சேன். அது ஒரு பிரச்சனையா இப்ப? குருமாவை போடுங்க ப்ளீஸ்..." - அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அண்ணன் மகனை தூக்கி கொண்டு முகம் கொள்ளா சிரிப்போடு அங்கு வந்தாள் பாரதி.



"ம்மா... ரோச்சர் கத்து கத்துன்னு கத்துது... பயப்படவே மாட்டேங்கிராம்மா! திருப்பி 'ஊ ஊ'ன்னு இவனும் கத்தறான். அதை மிரட்டப் பார்க்கறான்...!" என்று துள்ளலுடன் அண்ணன் மகனின் பெருமையை பூரித்தாள்.



ரோச்சர் என்பது தேவ்ராஜின் நாய்... நாய் என்றால் சாதாரண நாய் அல்ல... வேட்டை நாய்... அதை பராமரிப்பதற்கே தனியாக இரண்டு ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதனிடம் நெருங்க முடியாது. தேவ்ராஜை பார்த்துவிட்டால் மட்டும் குழந்தை போல் குழையும். மற்ற நேரத்தில் கோரப்பல் கொண்ட கொடூரனாகவே காணப்படும். அந்த நாயை பார்த்து அந்த சிறுவன் பயப்படவில்லையாம்! பயப்படாதது மட்டும் அல்ல.. மிரட்டிப்பார்க்கிறானாம்! - பாரதி சொன்னதைக் கேட்டு எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள்.



"மது...! காலையில என்ன கொடுத்த பிள்ளைக்கு? நா ஏதாவது ஊட்டிவிடட்டுமா?" - மதுராவிடம் இயல்பாகப் பேசினாள்.



ஆம் இப்போது பாரதியின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. காரணம் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிளை. அவன் அவளை மிகவும் நேசித்தான்... கொண்டாடினான்... வசீகரித்தான்... அவள் மனதை முழுவதும் ஆக்கிரமித்தான். அவளிடம் இருந்த எதிர்மறை எண்ணங்களையெல்லாம் களைந்தெறிந்தான்.



மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது மூன்று முறை தான் சந்தித்திருப்பார்கள்... மற்றபடி போனில் தான் பேசிக்கொள்வது... அப்படி இருந்தும் அவளை கவர்ந்திழுக்கும் காந்த சக்தி அவனிடம் இருந்தது. மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த பாரதி சுற்றியிருப்பவர்களிடமும் சந்தோஷமாகவே பழகினாள். ஆரம்பத்தில் மதுராவிடம் பேச சற்று தயங்கினாலும், சற்று நேரத்திலேயே சமாளித்துக் கொண்டாள். குழந்தையை பாலமாக வைத்து அவளோடு சினேகமாக பேசினாள். மதுராவுக்கும் அதில் மகிழ்ச்சிதான் என்பதால் அவளும் இன்முகத்தோடு பதிலளித்தாள்.



அடுத்த சில மணிநேரங்களில் மாயா தாய் வீட்டில் இருந்தாள். "என்ன தேவ் பாய்... இப்படி பண்ணீட்டிங்க? காலையில எழுந்ததும் எல்லாருக்கும் பகீர்ன்னு ஆயிடிச்சு... குட்டிப்பையன் இல்லாம அங்க வீடே ஒரு மாதிரி இருக்கு... யாருமே இல்லாத மாதிரி ஃபில் ஆகுது..." - படபடவென்று பொரிந்தபடி வீட்டுக்குள் நுழைந்தவள், பாட்டியின் மடியிலிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சினாள். புது இடத்தில் பழகிவிட்டானா என்று விசாரித்தாள். அங்கு அனைவரும் எதையோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருப்பதாகக் கூறி வருத்தப்பட்டாள்.



அன்று மாலை தேவ்ராஜும் மதுராவும் குழந்தையோடு ஜூஹூ சென்றார்கள். அனைவரையும் பார்த்து பேசிவிட்டு மறுநாள் தங்களுடைய வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி அழைப்பு விடுத்தார்கள். தாத்தாவும் பாட்டியும் பல ஆண்டுகள் பேரனை பிரிந்துவிட்டது போல் விழுந்து விழுந்து கொஞ்சினார்கள். பிறகு மனமே இல்லாமல் அவர்களை வழியனுப்பினார்கள்.



மறுநாள் விருந்துக்கு திலீப் மட்டும் வரவில்லை. அலுவலகத்தில் வேலை இருப்பதாக கூறினார் நரேந்திரமூர்த்தி. ஆனால் தேவராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. தானே அவனுக்கு அலைபேசியில் அழைத்து காரணம் கேட்டான். அவன் வேலையை காரணமாக் கூறியபோது, வேலை முடிந்து அவன் வரும் வரை தான் காத்திருப்பதாகக் கூறினான். அடுத்த ஒரு மணிநேரத்தில் திலீப்பும் மாமன் வீட்டில் இருந்தான்.



kanalvizhi.jpg




இளம் பெண்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் இன்முகமாகப் பேசிக் கொண்டார்கள். இராஜேஸ்வரியும் பிரபாவதியும் ஒட்டி உரசிக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் முகம் திருப்பிக்கொள்ளவில்லை. ஆதிராவும் தேவ் தர்ஷனும் செய்யும் சேட்டைகளை மொத்த குடும்பமும் சேர்ந்து ரசித்தது. பொழுது இனிமையாக கழிந்தது.



சற்று நேரத்தில் இளங்காளைகள் மூவரும் தனியாக ஒதுக்கினார்கள். அப்போது விபரமாக நரேந்திரமூர்த்தியை மட்டும் பெண்களோடு கழட்டிவிட்டு விட்டார்கள். அவரும் ஏதும் புரியாத அப்பாவியாக குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தார்.



மாடியில் மைத்துனர்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தான் தேவ்ராஜ். அவர்களுக்கு பிடித்த இசையும் உடன் கொஞ்சம் மதுவும் ரம்யமான சூழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவராஜ் தங்களுக்குள் இருக்கும் தடைகளையெல்லாம் உடைத்தெறிய மனம்விட்டு பேச... மன்னிப்புக் கேட்க... சகோதரத்துவத்துடன் பழக இந்த ஏற்பாடு உதவும் என்று நினைத்தான்.



அவனுடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இரண்டு ரவுண்ட் உள்ளே சென்றதும் கேலி கிண்டல் என்று தேறி, தங்களுடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டு, தவறை மன்னித்துக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். மனம் சங்கடங்களை மறந்து லேசானது. உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. மனநிலைக்கு ஏற்றார் போல் இசையை அதிரவிட்டு ஆட்டம் போட்டார்கள். அன்று முழுவதும் சந்தோஷமும் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது அந்த வீட்டில்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 102

"இதுக்குதான் மூணு பேரும் நைசா நழுவி மாடிக்கு போனீங்களா!" - உறங்கும் மகனை தொட்டிலில் இட்டபடி கேட்டாள் மதுரா.



மிதக்கும் கண்களால் மனைவியை ரசித்தபடி, "பார்ட்டி டைம் ஹனி... ட்ரிங்க் இல்லன்னா எப்படி?" என்று குழைந்தான்.



"பார்ட்டி டைம் இல்ல... பேமிலி லஞ்ச்... அவ்வளவுதான்... உங்களுக்கு ட்ரிங்க் பண்ணனும். அதுக்கு இது ஒரு காரணம்..."



"டோன்ட் கெட் மேட் அட் மீ ஸ்வீட்டி... ஐ ஜஸ்ட் வாண்ட்டெட் டு என்ஜாய் எவெரி சிங்கள் மொமெண்ட் வித் மை ஹோ...ல் பேமிலி டுடே... தே ஆர் மை பேமிலி... ஐ என்ஜாய்ட் வித் தெம்... ஐம் சோ ஹாப்பி நௌ... டோன்ட் கெட் மேட் அட் மீ டார்லிங்" - 'என் மேல கோவப்படாத செல்லம்... இன்னைக்கு ஒவ்வொரு நிமிஷத்தையும் என்னுடைய மு..ழு... குடும்பத்தோட என்ஜாய் பண்ண விரும்பினேன். அவங்க எல்லாரும் என்னோட குடும்பம்... அவங்களோட நா என்ஜாய் பண்ணினேன். இப்ப நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... என் மேல கோவப்படாத டார்லிங்...' - போதையில் பேசினாலும் மனதிலிருந்து பேசுகிறான் என்பதை உணர்ந்தாள் மதுரா.



தன்னுடைய குடும்பத்தை அவனுடைய குடும்பமாக நினைக்கிறான் என்பது அவளுக்கு பெரிய ஆச்சர்யம். நம்ப முடியவில்லை. ஆனால் அவன் முகத்திலிருந்த உண்மை அவளை நெகிழ்த்தியது. கனிவோடு கணவனைப் பார்த்து புன்னகைத்தாள்.



"ஆங்...! தட்ஸ் மை ஸ்டராபி.... தட்ஸ் மை ஸ்வீட் ஸ்டராபி..." - எழுந்துச் சென்று அவள் எதிரில் நின்று இரு தோள்களிலும் கையைப் போட்டான். சட்டென்று அவளுக்குள் இருந்த ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் வெளிப்பட்டாள்.



"ஒழுங்கா போயி படுத்துடுங்க... நீங்க ரெண்டு பேரும்தான் அராத்து... துருவன் பாய் பாவம்... அவரை ஏன் உங்க டீம்ல சேர்த்தீங்க?" என்றாள் கண்டிப்புடன்.



"யாரு? யாரு பாவம்? துருவனா! இந்த வீக் எண்ட் ஸ்டார் நைட் பிளான் பண்ணியிருக்கான். அவனா பாவம்?" என்றான் சிரித்துக் கொண்டே...



"ஸ்டார் நைட்டா! துருவன் பாயா! கதை விடாதீங்க... அதெல்லாம் உங்க வேலை..." - செல்லமாக அடித்தவள் சட்டென்று நாக்கைக்கடித்தாள். 'கோவப்படப் போறான்' - சிறு பயம் தோன்றியது.



ஆனால் அவனுக்கு எந்த மனநிலை மாற்றமும் ஏற்படவில்லை. மனைவியின் செல்ல அடிகளை இன்பமாக ஏற்று, "ஸ்ரீ ராம்!! ஸ்ரீ ராம்!!!" என்றான் சிரிப்புடன்.



மதுரா குஷியாகிவிட்டாள். இந்நேரம் பழையா தேவ்ராஜாக இருந்திருந்தால் ரகளை செய்திருப்பான். விளையாட்டாகக் கூட பெண்கள் விஷயத்தில் அவனுடைய ஒழுக்கத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. ஆனால் இப்போது விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. இது போதாதா!



மனம்கொள்ளா மகிழ்ச்சியோடு அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு, "ட்ரிங்க் பண்ணறதை விட்டுட்டீங்கன்னு நெனச்சேன்" என்றாள்.



அவளை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பிறகு, "விடணுமா?" என்றான்.



"லைட்டா எடுத்துக்கிட்டா ஒண்ணும் பிரச்சனை இல்ல... ஆனா உங்களுக்கு கண்ட்ரோல் இருக்க மாட்டேங்குது. ட்ரிங்க் பண்ணும் போதெல்லாம் ரொம்ப வயலெண்டா ஆயிடுவீங்க. இன்னைக்கு பயந்துகிட்டேதான் இருந்தேன்..."



"சீரியஸ்லி?" - அவளுடைய முகத்தை கைகளில் ஏந்தினான். அவள் 'ஆம்' என்பது போல் தலையசைத்தாள். சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவோடு கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான். பிறகு அவள் நெற்றியில் இதழ்பதித்து, "இன்னைக்கு தான் கடைசி..." என்று உறுதியளித்தான்.



***********



தேவ்தர்ஷன், தந்தையின் மறு பிரதி என்பதை தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் அழுத்தமாக பதிவு செய்து கொண்டிருந்தான். ஜூஹூவில் இருந்ததை விட இங்கு வந்த பிறகு இன்னும் கொண்டாட்டம் போட்டான். அதற்கு முதல் காரணம், கால் முளைத்த பிள்ளைக்கு பெரிய வீடு வசதியாக இருந்தது. இரண்டாவது காரணம் ரோச்சர். அந்த வேட்டை நாயோடு விளையாடுவதென்றால் அவனுக்கு கொண்டாட்டம். ஆனால் இவை இரண்டிற்கும் மேலாக இன்னும் ஒரு காரணமும் இருந்தது. அது அவனுடன் சரிக்கு சரி அலுக்காமல் விளையாடும் அவனுடைய தந்தை...



அலுவலகத்தலிருந்து எவ்வளவு சோர்வாக வந்தாலும் மகனோடு மணிக்கணக்காக நேரம் செலவிடுவான் தேவ்ராஜ். மகனை, நின்றபடியே மெத்தையில் தூக்கிப் போடுவான்... உயரத்தில் தூக்கிப் பிடித்து விளையாட்டு காட்டுவான். கடுமையாக கத்தும் ரோச்சருக்கு அருகில் தூக்கிச் செல்வான். அதன் தலையை தடவ... கழுத்தை வருட கற்றுக் கொடுப்பான்... அவனுடைய முரட்டு விளையாட்டில் மதுராவின் மனம் பதைபதைக்கும். ஆனால் குட்டி தேவ் அதைத்தான் விரும்பினான். தந்தை எப்போது வருவான் என்று காத்திருந்து ரோச்சரிடம் அழைத்துச் செல்ல சொல்வான்.



"அது கடிச்சு கிடிச்சு வச்சிடப் போகுது" என்று பயப்படுவான் மதுரா.



"என் பிள்ளை கருவிலேயே சாவை சாகடிச்சுட்டு வந்தவன்... அவ்வளவு சீக்கிரம் தோத்துட்ட மாட்டான்" என்பான் தேவ்ராஜ்.



"அவன் சின்னக் குழந்தை... நாயோட எச்சில் இன்பெக்ஷன் ஆயிடும்... இந்த பக்கம் கொண்டு வந்துடுங்க" என்று தூரத்தில் நின்று கொண்டே கெஞ்சுவாள்.



"வேணுன்னா இங்க வந்து தூக்கிக்க" என்று வம்பிழுப்பான் தேவ்ராஜ். மதுரா அச்சத்துடன் பின்வாங்கிவிடுவாள்.



"உன் பையன் வருங்காலத்துல எவ்வளவு பெரிய மாவீரனா வரப்போறான்... நீ என்னடான்னா இப்படி பயப்படற!"



"என் பிள்ளை வீரனாவும் வளர வேண்டாம்... சூரனாவும் வளர வேண்டாம்... சாதாரணமா... நல்ல பிள்ளையா வளர்ந்தா போதும். கொண்டுவாங்க இங்க..." என்று மனைவி சற்று கோபமாக கேட்கும் போது, தேவ்ராஜ் சரி போகலாம் என்று நினைத்தாலும் குட்டி தேவ் விடமாட்டான். ரோச்சரை கட்டிப் பிடித்துக்கொள்வான். சில நாட்களுக்குப் பிறகு அதன் மீது ஏறி சவாரி செய்யவே துவங்கிவிட்டான்.



"தேவ் தர்...ஷ...ன் யா...ரு?" என்று மதுரா ராகம் போட்டால், எங்கிருந்தாலும் "பா...ப்...பாகி... ஜா...(ன்)" - "அப்பாவின் உயிர்" என்கிற அர்த்தத்தில் மழலை மொழியில் குரல் கொடுப்பான்.



"பாப்பாகி ஜான் நை... மம்மா கி ஜான்... போல்..." - 'அப்பாவோட உயிர் இல்ல... அம்மாவோட உயிர்... சொல்லு...' - மதுரா சொல்லிக் கொடுப்பாள். ஆனால் அவன் தெளிவு... இவள் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் கவனமாகக் கேட்டுக் கொண்டு திரும்ப, "பா....ப்பா கி... ஜா..." என்று தான் இழுப்பான்.



வீட்டில் அனைவரோடும் ஒட்டிக் கொண்டான். வேலைக்காரர்கள் முதல் பாதுகாவலர்கள் வரை அனைவரும் அவனுடைய பாஷயை கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று... ஒரு நாள் பாதுகாவலர்களின் இடுப்பு பெல்ட்டில் இருந்த துப்பாக்கியை கவனித்துவிட்டு அதை கேட்டு ஒரே அடம்... யார் என்ன சமாதானம் செய்தும் கேட்கவில்லை. வெகுநேரம் தானாக அழுது தானாக ஓய்ந்தான்.



மாலை தந்தை வேலை முடிந்து வந்ததும் கச்சேரியை திரும்ப ஆரம்பித்தான். பிறகு ஒரு டம்மி துப்பாக்கியை கொடுத்த பிறகுதான் விட்டான். அதன் பிறகு பல நாட்கள் அதை வைத்தே விளையாடிக் கொண்டிருந்தான். குழந்தையின் முரட்டுத் தனமும் அவனுடைய விருப்பங்களும் பல நேரங்களில் மதுராவின் வயிற்றை கலக்கும்.



"என்ன இவன்! இப்பவே இப்படி இருக்கான்...!" என்று கணவனிடம் புலம்பிவிட்டு பக்தி பாடல்களையும், வேத போதனைகளையும் சொல்லிக் கொடுப்பாள்.



"ரெண்டு வயசு குழந்தைக்கு என்ன தெரியும்... இதையெல்லாம் இப்பவே சொல்லிக் கொடுக்கணுமா?" என்பான் தேவ்ராஜ்.



"அதுசரி... பக்தி வேண்டாம்... வேதம் வேண்டாம்... துப்பாக்கியும் தோட்டாவும் போதும்... கொடுங்க... நல்ல பிள்ளையா வளருவான்" என்று கடுப்படிப்பாள் மதுரா.



"ப்ச்... சும்மா பேசாத மது... துப்பாக்கி மட்டும்தானே வச்சிருக்கான்... அதுவும் விளையாட்டு துப்பாக்கி... தோட்டா எங்க இருக்கு?"



"ஓஹோ! அதையும் கொடுப்பீர்களா?"



"இப்போ இல்ல..."



"பின்ன?"



"தேவைப்படும் போது..."



"ரொம்ப வருத்தப்படறேன்"



"எதுக்கு?"



"பொம்பள பிள்ளையா பெத்திருக்கலாமேன்னு..."



"அப்பவும் கொடுப்பேன்..."



"விளங்கிடும்... எப்படியோ போங்க..." என்று வாய் வார்த்தைக்கு கூறினாலும் குழந்தையை நெறி தவறாமல் வளர்ப்பதில் அவள் வெகு கவனமாக இருந்தாள். அதே போல் மகனை வீரமாகவும் விவேகமாகவும் வளர்ப்பதில் தேவ்ராஜ் குறியாக இருந்தான்.



***********



பாரதிக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதை அறிந்த முகேஷ் அவளை தொடர்புகொள்ள முயன்றான். அவளுடைய மனதை கலைக்க வேண்டும் என்கிற அழுக்கு எண்ணத்தோடு அவளுடைய அலைபேசிக்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தான். குறுஞ்செய்திகள் அனுப்பினான். அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தன் போக்கில் சென்றுக் கொண்டிருந்தாள் பாரதி.



அடுத்தக்கட்டமாக மோனிக்காவை பற்றி குறுஞ்செய்திகள் அனுப்பி அவளுடைய உணர்வுகளை உடைத்து பலவீனப்படுத்த முயன்றான். ஆனால் அன்றொருநாள் அவன் கண்ணில் கண்ட வன்மத்தை அவள் மறக்கவில்லை. சட்டென்று அவனுடைய தொடர்பு எண்ணை பிளாக் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டாள்.



அவளிடமிருந்து எந்த மறுமொழியும் வராததைக் கண்டு கோபம் கொண்ட முகேஷ் சகோதரியிடம் அவளை பற்றி அவதூறாகப் பேசினான். ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாத மோனிகா, "பாரதி அவரோட பொண்ணு... அவ எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும். அதைத்தான் அவரோட ஆன்மா விரும்பும்... அவரோட ஆன்மா எதை விரும்புதோ அதைத்தான் நானும் விரும்புவேன்... இதுக்கு மேல அவளைப்பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை நீ தப்பா பேசக் கூடாது... அவளுக்கு எதிரா ஒரு காரியம் செய்யக் கூடாது... மீறி செஞ்சா, அது எனக்கு எதிரா செய்யற மாதிரி..." என்று சற்று கடுமையாகவே கண்டித்தாள்.



விருப்பம் இல்லை என்றாலும் அந்த குடும்பத்தை தலைமுழுகித் தொலைப்பது என்கிற முடிவை எடுத்தான் முகேஷ்.



***********



மும்பை மாநகரமே திரும்பிப் பார்க்கும் வகையில் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்தான் தேவ்ராஜ். அந்த திருமணத்தின் பிரம்மாண்டம் அவன் தங்கையின் மீது கொண்டிருக்கும் அன்பின் அடையாளம். மண்டபம், கேட்டரிங், ஆடை அணிமணிகள், அழைப்பிதழ் என்று அனைத்திற்கும் பணம் கோடிகளில் புரண்டது. அனைத்திலும் மதுராவின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.



"தேவ் பாய்... இது என்ன உங்க கல்யாணம்னு நினைச்சீங்களா? பாரதி கல்யாணம்... அவளை கேளுங்க... பத்திரிக்கை பிடிச்சிருக்கா... பாத்திரம் பிடிச்சிருக்கான்னு... மதுராவை கேட்கறீங்க?" என்று எல்லோருக்கும் முன்பாக கிண்டலடித்துவிட்டாள் மாயா.



ஒரு நொடி திருத்திருத்த தேவ்ராஜ், "ஆங்... பாரதிக்குத்தான் கல்யாணம்... ஆனா அவதான் ஆல்வேஸ் போன்ல பிஸியா இருக்காளே! வேற என்ன பண்ணறது.. நாமதான் செலெக்ட் பண்ணனும்..." என்று சமாளித்தான். எல்லோரும் குபீரென்று சிரிக்க மதுராவுக்கு வெட்கமாகிவிட்டது.



"ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?" என்று தனிமையில் கணவனை கண்டித்தாள். கண்டிக்கும் மனைவியை கட்டுக்குள் கொண்டுவரும் வித்தையை அவன் கற்றிருந்தான்.



***********



அன்று பாரதியின் திருமணம்... விருந்தினர்களும் முக்கிய பிரமுகர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தார்கள். அனைவரையும் வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் பிசியாக இருந்தான் தேவ்ராஜ்.



எதேர்சையாக மணவறை பக்கம் திரும்பிய தேவ்ராஜின் கண்கள் நிலைகுத்திவிட்டன. பட்டுப்புடவையும் பளபளக்கும் ஆபரணங்களும் அணிந்து அப்சரஸ் போல் வலம்வந்துக் கொண்டிருந்த மனைவியிடமிருந்து மீள மறுத்தன அவன் கண்கள்.



புரோகிதரிடம் குனிந்து ஏதோ கேட்டாள். பிறகு அருகில் நிற்கும் பெண்ணிடம் ஏதோ சொல்லி சிரித்தாள். பிறகு கண்களால் கூட்டத்திற்குள் யாரையோ தேடினாள்... தேடினாள்... தேடித் கொண்டே வந்தவள் அவன் பார்வையை சந்தித்ததும் சட்டென்று பிரகாசமானாள். சைகை செய்து அவனை மேடைக்கு அழைத்தாள். அவன் இங்கிருந்தே, 'என்ன?' என்று புருவம் உயர்த்தினான்.



கையை சுற்றி சுற்றி ஏதோ சைகை செய்தாள். பிறகு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, "வா...ங்...க..." என்று உதட்டை அசைத்தாள். நொடியில் கோவைப்பழத்தை கொத்தி தின்னும் கிளியாய் மாறியது அவன் மனம்.



உணர்வற்ற சிலை போல் அசைவற்று நின்றான். தலையில் அடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள் மதுரா.



"மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்கணும். இங்கே நின்னு என்ன பராக்கு பார்த்துக்கிட்டு இருக்கீங்க?" என்று கடிந்துக் கொண்டு அவன் கையைப் பிடித்து மேடைக்கு இழுத்துச் சென்றாள். கணவனும் மனைவியும் சேர்ந்து நின்று மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கை செய்தார்கள்.



பிறகு சற்று கேப் கிடைத்த போது கணவனை தனியாகத் தள்ளிக் கொண்டு போய், "என்ன அப்படி வெறிச்சு பார்த்துகிட்டு நின்னீங்க?" என்றாள் சிவந்த முகத்துடன். அவளுக்கு தெரியும் அவன் தன்னைத்தான் பார்த்தான் என்று. ஆனாலும் ஒரு அல்ப ஆசை... அதை அவன் வாயால் கேட்க வேண்டும் என்று.



"வேண்டாம்... நா சொல்லிடுவேன்... அப்புறம் நீ திட்டுவ..." என்றான் பயந்தவன் போல் பாவனை செய்து கொண்டு.



"அடடே... நம்பிட்டேன்... சொல்லுங்க? யாரை பார்த்தீங்க?" - 'உன்னைத்தான் டீ என் செல்ல குட்டி...' என்று சொல்ல வேண்டும் என்பது அவள் எதிர்பார்ப்பு. ஆனால் அவனோ,



"அதோ நிக்குது பார் ஒரு செர்ரி பழம்..." என்று ஆரம்பித்தான். மறு நொடியே "ஸ்ஸ்... ஏய்..." என்று கிசுகிசுத்தான். காரணம், நறுக்கென்று அவன் கையில் பதிந்தது மதுராவின் நகம்.



"அதை பார்க்கலன்னு சொல்லவந்தேன்... ஸ்ஸ்... திரும்பவும் ஏன்...!"



"பொய் சொல்லாதீங்க"



"நோ... இட்ஸ் ட்ரூ..." - மதுராவின் பார்வை அவன் பார்வையோடு கலந்தது.



"வேண்டாம்... அப்படி பார்க்காத..." - எச்சரித்தான்.



"வீட்டுக்கு வாங்க கவனிச்சுக்கறேன்..." - பொங்கிவரும் புன்னகையை மறைத்துக் கொண்டு அவனை மிரட்டிவிட்டு மணமகள் அறைக்குள் நுழைந்தாள்.



நாத்தனாரை கைபிடித்து அழைத்து வந்து மணவறையில் அமரவைத்தாள். புரோகிதர் விடாமல் மந்திரம் ஓதி கொண்டிருந்தார். மணமக்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தார்கள். தந்தையின் ஸ்தானத்திலிருந்து தங்கைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்தான் தேவ்ராஜ். மங்கள வாத்தியங்கள் முழங்க, உற்றாரும் உறவினர்களும் அட்சதை தூவ... செல்வி பாரதி திருமதி பாரதியானாள்.



இராஜேஸ்வரியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. "சாதிச்சுட்ட ராஜி... சந்தோஷமா இரு... கண் கண்கலங்காத..." என்று கூறி தங்கையை அணைத்துப் பிடித்து ஆறுதல் அளித்தார் நரேந்திரமூர்த்தி.



விருந்து ஒரு பக்கம்... கேளிக்கை கொண்டாட்டங்கள் ஒரு பக்கம்... பரிசளிப்பும் புகைப்பட பதிவுகளும் இன்னொரு பக்கம் என்று மண்டபமே அமளி துமளியானது. அனைத்தும் ஓய்ந்து விருந்தினர்கள் மெல்ல கரைந்த பிறகு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தார்கள்.



முதலில் மாப்பிள்ளை வீட்டார் குடும்ப புகைப்படம் எடுத்தார்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக எடுத்துவிட்டு பெண்வீட்டிற்கு இடம்விட்டு ஒதுக்கினார்கள்.



"சார்... உங்க ஃபேமிலியை கூப்பிடுங்க... ஒரு ஸ்நாப் எடுத்துடலாம்..." - கேமிரா மேன் குரல் கொடுத்தான்.



"மது...வா...வா... தர்ஷனை தூக்கிட்டு வா..." - தூரத்தில் நின்ற மனைவியை அழைத்தான் தேவ்ராஜ்.



"என்னங்க...?" - அருகில் வந்து நின்ற பிறகு கேட்டாள் மதுரா.



"ஃபேமிலி போட்டோ..."



"ஓ! அத்தையை கூப்பிடறேன்" - கீழே இறங்கிச் சென்று இராஜேஸ்வரியை கையேடு அழைத்து வந்தாள்.



"ரெடியா சார்? எடுக்கலாமா?"



"வெயிட் வெயிட்... மாயா எங்க?" என்று கண்களால் தேடிவிட்,டு தூரத்தில் நின்ற தங்கையை கைகாட்டி அழைத்தான்.



அவள் மேடைக்கு வந்து அண்ணன் அழைத்த காரணத்தை தெரிந்துக் கொண்ட பின், "துருவன் இல்லாம எப்படி நம்ம ஃபேமிலி கம்ப்ளீட் ஆகும். நா போயி கூட்டிட்டு வரேன்" என்று கீழே இறங்கிச் சென்று கணவனை கையேடு அழைத்து வந்தாள்.



"ரெடியா? எடுத்துடலாமா?"



"தம்பி இருப்பா..." - இராஜேஸ்வரி.



"அண்ணனை கூட்டிட்டு வந்துடறேன்" - தன் உடன் பிறப்பை தேடித் சென்று இழுத்துக் கொண்டு வந்தாள் இராஜேஸ்வரி. வரும் பொழுதே "என்ன விஷயம் ராஜி?" என்றார்.



"ஃபேமிலி போட்டோ"



"ஃபேமிலி போட்டோவா! பிரபாவதி வெளியே நிக்கிறாளே! ஒரு நிமிஷம் இரு..." - ஓடிச் சென்று மனைவியை அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார்.



காத்திருந்த கேமிரா மேன் களைப்புடன், "ரெடியா சா...ர்...?" என்றான்.



"ரெடி... ரெடி..."



"ஒன் மினிட்... திலீப் மட்டும் மிஸ்ஸிங்" - பாரதி.



"காட்! திலீப்பை விட்டுட்டோமே. கொஞ்சம் வெயிட் பண்ணு... நா போயி கூட்டிட்டு வந்துடறேன்... " - தேவ்ராஜ் கீழே இறங்கினான். வரும் பொழுது திலீப் மற்றும் தேஜாவோடு வந்தான்.



நரேந்திரமூர்த்தி நடுவில் அமர்ந்திருக்க அவருக்கு ஒருபக்கம் மனைவியும் இன்னொரு பக்கம் தங்கையும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இடது பக்கம் தேவ்ராஜ் தம்பதியும், வலது பக்கம் துருவன் தம்பதியும் நின்றுக் கொண்டிருக்க பின்பக்கம் திலீப் பற்றும் தேஜா நின்றார்கள். முன் பக்கம் வீட்டு பெரியவர்களின் மடியில் சாய்ந்தபடி மண்டியிட்டு மணமக்கள் அமர்ந்திருந்தார்கள். ஆதிரா துருவன் கையில் இருந்தாள். தேவ் தர்ஷன் பிரபாவதியின் மடியில் இருந்தான்.



"ஆல் செட்... இப்போ எடு..." - நரேந்திரமூர்த்தியின் ஆணையை ஏற்றான் கேமிரா மேன்.



"சூப்பர்... ரெ...டி... சிரிங்க...."



"வெ....யி...ட்...!!!" - கத்தினாள் ஆதிரா.



"எ...ன்...ன பாப்பா?" - அலுத்துப் போனது அவனுக்கு.



"நா தம்பி பக்கத்துலதான் நிப்பேன்"



"சரி வா... நா தூக்கிக்கறேன்" - நரேந்திரமூர்த்தி பேத்தியை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டார்.



"மம்ம்...மா..." கத்தினான் தேவ் தர்ஷன்.



"ஷ்ஷ்ஷ்ஷப்பா...!!!"



"என்ன வேணும் பேட்டா?"



"தர்ஷ் பாப்...பா கி ஜ்ஜா(ன்)..." - தந்தையின் பக்கம் கையை நீட்டி தூக்கச் சொன்னான். உடனே தன்னுடைய இடத்திலிருந்து நகர்ந்து முன்பக்கம் வந்து மகனை மாமியாரிடமிருந்து வாங்கினான்.



'முடி...ய...ல...' - போட்டோ பிடிக்க வந்து வசமாக மாட்டிக்கொண்ட ஜீவன் முணுமுணுத்தது.



தேவ்ராஜ் மனைவியோடு சேர்ந்து நின்ற பிறகு, ஆதிராவும் தாத்தாவிடமிருந்து நழுவி மாமனைத் தொடர்ந்து ஓட அவளை அள்ளிக் கொண்டாள் மதுரா. இப்போது தன் விருப்பப்படி தம்பியின் பக்கத்தில் இருந்து போஸ் கொடுக்க முடிந்தது அவளுக்கு.



"கி...ரே...சி ஃபேமிலி" - வாய்க்குள் முணுமுணுத்தான் கேமரா மேன். தரைக்கு ஒரு ஆளும் தண்ணீருக்கு ஒரு ஆளுமாக இழுக்கும் குடும்பத்தைப் பார்த்து அவனுக்கு வேறு என்ன தான் தோன்றும்!



"என்ன??? என்ன சொன்ன?" - கேமிராகாரனிடம் புருவம் உயர்த்தினான் தேவ்ராஜ்.



'நாங்க அப்படிதாண்டா இருப்போம். நீ அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது' என்பது போல் மிரட்டியது அவன் குரல்.



"தும்ஹாரே ஃபேமிலி... ஸ்வீ...ட்... ஃபேமிலி சார்..." - இளிப்புடன் சமாளித்தான். அவனுடைய பேய் முழியையும் சமாளிப்பையும் கண்டு அந்த குடும்பம் குலுங்கி சிரிக்க, கேமரா 'கிளிக்' ஒலியை எழுப்பியது.



சிதறி கிடந்த குடும்பத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து ஒன்றாக ஒரே மேடையில் நிற்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் ஒற்றுமையாக சிரிக்கவும் வைத்தது காலம். அந்த சிரிப்பை சிறப்பாக கேமராவில் பதிவு செய்துவிட்ட திருப்தியோடு, "பக்கா..." என்று கட்டை விரலை உயர்த்தினான் புகைப்பட கலைஞன். குடும்பத்தில் உள்ள அனைவருடைய மனநிலையையும் வெளிப்படுத்துவது போல அந்த ஒற்றை வார்த்தையை உதிர்த்தான் தேவ்ராஜ்...



"மகிழ்ச்சி"

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
749
Reaction score
859
Points
93
குட் பை கனல்விழி!!!

அன்பு தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம் மற்றும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...



கனல்விழி காதல் - பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்... விளையாட்டுத் தனமாக... நீண்ட இடைவெளியினால் உண்டான ஸ்டார்டிங் ட்ராபிளை நீக்குவதற்காக... இந்திரா மற்றும் சசியின் உந்துதலினால் எழுத துவங்கிய கதை. இந்த கதை இத்தனை வாசகர்களின் விருப்பத்தையும் அன்பையும் சம்பாதித்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கதை ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று வரை என்னோடு சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை தோழமைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்... நன்றி! நன்றி!! நன்றி!!!



கதையை படித்ததோடு நிற்காமல் உங்கள் தோழமைகளுக்கு பரிந்துரை செய்து பெரிதும் கனல்விழியை பிரபலமாக்கிய ஹேமா போஸ் மற்றும் மேகலா அப்பாதுரை அவர்களுக்கும் என்னுடைய மனம் கனிந்த நன்றிகள். இவர்கள் மட்டும் அல்லாமல் ப்ரியா ஷக்தி மற்றும் என்னுடைய கவனத்திற்கு வராமல் இன்னும் சில தோழிகள் பர்சனலாக உங்கள் நட்பு வட்டத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறீர்கள். வாசகர்களை தளத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள். உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்... நன்றி தோழிகளே!



இந்திரா மற்றும் சசி... கனல்விழி காதலின் ஒவ்வொரு எழுத்திலும் உங்களுடைய பங்களிப்பு இருக்கிறது. நான் தடுமாறிய தினத்திலெல்லாம் ஊக்கம் கொடுத்து உறுதுணையாக நின்றீர்கள். அதற்கு நன்றியெல்லாம் போதாது... எனவே மனம் கனிந்த எனதன்பை இங்கே பதிவு செய்கிறேன்...



தேவ்ராஜ் - அதிரடியான கதாபாத்திரம்... அதிரடியாகவே உங்களில் பலரின் மனக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட்டான் என்பதை உங்களுடைய பின்னூட்டங்களிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.



மதுரா - தாலாட்டும் தென்றல் அவள். மென்மையாகவே கதை முழுவதும் பயணிக்கிறாள்.



இவர்கள் இருவருடைய அடிப்படை குணம் கடைசி வரை மாறாமல் கதையை நகர்த்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது. அதை ஓரளவுக்கு நிறைவேற்றியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.



இதில் சிலருக்கு வருத்தமும் இருந்தது. ஏன் இவள் அனைத்தையும் பொறுத்துப் போகிறாள்? ஏன் பொங்கி எழ மாட்டேன் என்கிறாள் என்றெல்லாம் வருத்தப்பட்டார்கள். அதற்கு காரணம் நான் மேலே கூறியதுதான்... அடிப்படை குணத்தை மாற்ற விரும்பவில்லை. அதே சமயம் ரியாக்ட் செய்யவும் வேண்டும்... அதை ஓரளவுக்கு பாலன்ஸ்டாக கொடுத்துத்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.



அடுத்து மோனிகா... மோனிகா பாத்திரத்தின் நியாயத்தை அவள் பக்கம் இருந்து விலக்கியதில் சிலருக்கு கோபம். அவளிடம் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்விகள் எழுந்தது. தவறே செய்தாலும் தன் பக்கம் நியாமா இருக்கிறது என்று நினைத்துக் கொண்டுதான் மனிதர்கள் தவறு செய்கிறார்கள். அதை அவர்கள் பக்கத்திலிருந்து நின்று பார்த்து எழுத வேண்டியது கதாசிரியரின் பொறுப்பாக எனக்குத் தோன்றியது. அதை செய்தேன். பிடிக்காதவர்கள் மன்னிக்கவும்...



ரொமான்ஸ் - நிறைய வாசகர்களின் விருப்பம் இது. தவறில்லை... அது ஒரு மெல்லிய உணர்வு... கதையில் நிறைய இடங்களில் இருக்கிறது. சண்டை போடும் இடங்களில் கூட இருக்கிறது. கவனமாகப் படித்துப்பாருங்கள் புரியும்.



தேவ் மற்றும் மதுராவோடு உங்களை தினமும் வந்து சந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சந்திப்பு இன்றோடு முடிவதில் வருத்தம் என்றாலும் எத்தனை நாட்களுக்குத்தான் உங்களை படுத்த முடியும்... பாவம் பிழைத்துப் போங்கள் என்று விட்டு விடுகிறேன்... பாய் ஃபிரண்ட்ஸ்...!!! பாய் மது...!!! பாய் தேவ்!!! குட் பாய் கனல்விழி...!!!

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom