காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 29
விக்கியின் கடந்தகாலத்தை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த உத்ரா திடீரென அவனை நிறுத்தினாள்.
“ஒரு நிமிஷம்! உண்மையாவே நீங்க ரெண்டுபேரும் லவ் பண்ணீங்களா இல்லையாடா? கேவலமா இருக்கு உன் கடந்தகாலம். இந்த காதல் கதைக்கு தான் சார் தாடி வளத்து வண்டி வண்டியா குடிச்சீங்களோ? தெளிவா ஒருப்பொண்ண டூர் கூட்டிட்டுப் போய் மேட்டர முடிச்சிருக்க. அதுல அவ கன்சீவாகி அவ அம்மா குறுக்க வந்ததும் இதான் சாக்குனு அவள நீயே கழட்டி விட்டிருக்க. உண்மைய சொல்லு இதான நடந்தது?” எனவும்,
“இப்ப புரியுதா இவ்வளவு நாள் நான் ஏன் என் கடந்தகாலத்த உன்கிட்ட சொல்லலனு? நான் என் அப்பா சொன்னதுமே அவள தல மொழுக நெனச்சிருந்தா அவ வீட்டுக்குப்போய் கெஞ்சியிருக்க மாட்டேன். அப்ப அவ அம்மா ஒரு புழுவப் பாக்கற மாதிரி பாத்தாங்க. நான் அவ கர்ப்பமா இருக்குறத சொல்லிக்கூட அவங்க மனசு எறங்கல.
சிம்ப்ளா அதுனால என்ன? ஜெயகாந்தனோட அக்னிப்பரீட்சை படிச்சதில்ல? நெட்பிளிக்ஸ்ல கௌதம்மேனன் எடுத்த வான்மகள் ஷார்ட்ஃபிலிம் இருக்கும், போய்ப்பாரு. எம்பொண்ண எப்படி சுத்தப்படுத்தனும்னு எனக்கு தெரியும். நீ இப்ப மரியாதையா என் வீட்ட விட்டு வெளியப் போயிருன்னு அசிங்கப் படுத்திட்டாங்க. அதுக்கூட பரவாயில்ல. அவ சொன்னத தான் என்னால தாங்கவே முடியல உதி. ஏன் இன்னும் ஒடம்புக்கு காத்துருக்க பொணந்திண்ணி கழுகு மாதிரி என் பின்னாடியே சுத்துறீங்க? நீங்க என் முன்னாடி நிக்கிற ஒவ்வொரு நிமிசமும் கழிவ அள்ளி அப்புன மாதிரி அருவருப்பா இருக்குனு சொல்லிட்டா. அதுலயே செத்துட்டேன் நான்.”
“அப்போ கொழந்தைய கலைச்சிட்டாளா அவ?”
“ஆமா” ஆறியதாக நினைத்த காயத்தில் யாரோ கத்தியைக் கொண்டு கீறுவது போல் வலித்தது அவனுக்கு.
“அவ அம்மாவுக்காக சட்டுன்னு உன்ன பிரிஞ்சுப்போனத தான் உன்னால தாங்கிக்கவே முடியல இல்ல?”
“அப்ப என் ஆஃபிஸ்ல இருந்த ஒவ்வொருத்தரும் என்ன பாத்த பார்வ இருக்கே? உன்ன மாதிரி தான் அவங்களும் நான் அவள கைக்கழுவிட்டதா நெனச்சாங்க. உனக்குக் கீழ வேலைப் பாக்கறவங்களுக்கு உம்மேல உள்ள மரியாத கொறயும்போது வர்ற ஃபீல் இருக்கே? கொடும உதி!
அப்ப அப்பாவுக்கும் ஒடம்பு சீரியஸானதால என்னால வேலைல சரியா ஃபோகஸ் பண்ண முடியல. என் கேர்லெஸ்னெஸ்ல கம்பெனிக்கு வர வேண்டிய ரெண்டு பெரிய ப்ராஜெக்ட்ஸ் கைநழுவிப் போயிடுச்சு. அதுக்கப்பறம் அந்த கில்டினஸ்லயே எனக்கு ஆஃபிஸ் போகவும் புடிக்கல. எல்லாத்தையும் மகேஷ்கிட்ட ஒப்படைச்சிட்டு எதுக்கு பொறந்தோம், எதுக்கு வாழ்றோம்னு பைத்தியக்காரன் மாதிரி திரிய ஆரம்பிச்சிட்டேன்.”
“நீ ஆசை ஆசையா உருவாக்கின கம்பெனிய ஒரு சின்ன சறுக்கல் வந்ததும் இன்னொருத்தர் தலைல தூக்கிவச்சிட்டு வந்தது கெட்டிக்காரத்தனம் கெடையாது விக்கி. அப்பறம் இப்ப தான் அனன்யாவோட அம்மா இல்லயே, இப்ப அவள நீ ஏத்துக்கறதுல என்ன ப்ராபளம் உனக்கு?”
“என்ன இன்னும் உன் அறிவு வெளியப் பொங்கி வழியலையேனு நெனச்சேன். வழிஞ்சிருச்சி. ஒரு தடவ அந்த பாம்புக்கிட்ட கொத்து வாங்குனதே போதும்னு இருக்கு. ஆளவிடு!”
“உன் கதைய தாட் பிராஸஸ் பண்ண எனக்கு கொஞ்சம் டைம் வேணும் விக்கி. ஆமா அனன்யாவோட அம்மா எப்படி எறந்தாங்க?”
எப்போதும் தன் மேல் நம்பிக்கையின்றி பேசுபவளைக் கண்டு அவனுக்கு சலிப்பாயிருந்தது.
“நீ டிடெக்டிவ் தான? கண்டுபுடி.” என்றான் சவாலாக.
“நீ சொன்னதும் தான் ஞாபகம் வருது விக்கி. நம்ம டிடெக்டிவ் ஏஜென்சி இப்ப என்ன கன்டிஷன்லடா இருக்கு?”
“வேலையெல்லாம் இன்னும் டூ டேஸ்ல முடிஞ்சிரும். நாறிப்போன பேரக் காப்பாத்த யாராவது பெரிய செலப்ரிட்டியா கூட்டிட்டு வந்து இனாக்ரேட் பண்ண வேண்டியது தான். உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு? அப்பறம் சொல்ல மறந்துட்டனே. என் வீட்ல உனக்கு ஒரு முக்கியமான ஆள இப்ப இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கப்போறேன்” என்று எழுந்து வெளியே சென்றவன் உள்ளே வரும்போது ஒரு நாயோடு வந்தான்.
அதன் பெயர் ஜான்சீனாவாம். அதைப் பார்த்ததும் முகத்தை சுளித்தாள் உத்ரா.
“எனக்கு டாக்ஸே புடிக்காதுடா” என்று பதறி மெத்தை மேல் ஏறினாள்.
அதுவோ அவளை விடாமல் துரத்தியது. அதட்டி அதனை தன் பக்கம் நிறுத்தியவன் ஏமாற்றமாக வெளியே கொண்டுபோய் கட்டி வைத்துவிட்டு வந்தான்.
மதியம் கீழே சாப்பிட வருமாறு வேலைக்காரப் பெண்மணி பாக்கியம் வந்து அழைத்துவிட்டுச் செல்ல, உத்ராவின் அலைபேசி கிணுகிணுத்தது. கவிலயா தான் அழைத்திருந்தாள். உத்ராவை நினைத்து கலங்கும் தங்கள் அன்னைக்கு அழைப்பு விடுத்துப் பேசுமாறு அவள் கூற, உத்ரா விக்கியின் கடந்த காலத்தை மனம் பொறுக்காமல் அவளிடம் கொட்டினாள்.
கவிலயா தான் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்த உணர்விலிருந்தாள்.
உத்ரா, “என்ன சத்தத்தையே காணோம்?” என்றிட, அவளுக்கு புகழாரம் சூட்டினாள்.
“சின்ன வயசுலயிருந்து எனக்கு எவ்வளவோ நல்லது பண்ணிருக்கக்கா. ஆனா, இப்ப நீ எனக்கு பண்ணிருக்க நல்லது இருக்கே.. ஜஸ்ட் மிஸ்ல நா விழ வேண்டிய குழிக்குள்ள நீ விழுந்துருக்கக்கா. இந்த நன்றிகடன நான் எப்படி அடைக்கப்போறேனு தான் தெரியல. அப்பறம் அன்னைக்கு நான் சொன்னனே தியாகத்தலைவி பட்டம் எனக்கு தான்னு? தப்பு! ரொம்பத் தப்பு! நான் சொன்ன அந்த வார்த்தைய நானே வாபஸ் வாங்கிக்கறேன். அந்த பட்டம் என்னைக்குமே உனக்கு தான் க்கா.” என்றவளை,
“செருப்பு பிஞ்சு போகும் உனக்கு. தியாகத்தலைவி பட்டமா குடுக்குற? மொதல்ல அம்மாக்கிட்ட பேசிட்டு வந்து உன்ன வச்சிக்கிறேன்டி.” என்று அழைப்பை துண்டித்துவிட்டு தன் அன்னைக்கு அழைத்தாள்.