காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
இறுதி அத்தியாயம்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு…
குழந்தை வளர்ப்பினால் கடும் மனஉளைச்சலில் இருந்த அனன்யாவை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் வந்திருந்தான் உதய்கிருஷ்ணா. அவனுக்கு ஒரு குடிலை காண்பிப்பதாக கூக்கால் அழைத்து வந்திருந்தாள் அவள்.
ஆம், பள்ளத்தாக்கையொட்டிய அதே குடிலுக்கு தான். உதய்கிருஷ்ணா அங்கு தரையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவனின் முதலிரண்டு சட்டைப்பொத்தான்களை கழற்றி மார்பில் முகம் புதைத்திருந்தவள் மெதுவாக தன் மனதைத் திறந்தாள்.
“உதய் நான் இப்ப சொல்லப்போற விசயத்தக் கேட்டு நீங்க என்ன வெறுக்கக்கூட செய்யலாம். ஆனா, அத மறச்சி வைக்க முடியாம தான் உங்கக்கிட்ட கொட்றேன்.”
“என்ன பீடிகையெல்லாம் பலமா இருக்கு.” அவனின் விரல்கள் ஹூடி அணிந்திருந்தவளின் இடையை வருடிக் கொண்டிருந்தன.
அவர்களின் ஒரு வயதுக் குழந்தை கட்டிலில் லேசாக புரண்டு சிணுங்கிவிட்டு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தது.
“உதய் அதுவந்து… நான்… என் அம்மா எறந்த சமயத்துல ஒரு மூனு மாசம் மனநெல சரியில்லாம மென்டல்ஹெல்த் ஹாஸ்பிடல்ல இருந்தேன்.”
“ச்சே! இதுக்கு தானா இந்த அக்கப்போரு? பழசையெல்லாம் மறந்துருனு சொன்னா நீ கேக்கமாட்டியா? உன்ன எப்படி மறக்க வைக்கிறது எனக்கு தெரியும்.” என்று அதட்டலாக ஆரம்பித்து கிசுகிசுப்பாக முடிக்க, அவளின் கன்னங்கள் ரூஜ் பூசின.
அந்த கடுமையான குளிரில் தாய்மையில் மிளிர்ந்தவளின் அபரிமிதமான அழகு அவனை கிறங்கடித்தது. இருப்பினும் தங்களின் தங்கும்விடுதிக்குச் சென்று கச்சேரியை வைத்துக்கொள்ளலாமென மென்மையாக அவளின் நெற்றியில் தனது இதழ்களை ஒற்றியெடுத்தான்.
புகைமூட்டமான அந்த பகற்பொழுதில் உதய்கிருஷ்ணாவின் கைகளுக்குள் அடங்கியிருப்பது அவளுக்கு அவ்வளவு நிம்மதியைத் தந்தது.
அதேசமயம் பானுமதி, ரஞ்சனி, வேணி என்று மூவருமாகச் சேர்ந்து கோவாவிற்கு சுற்றுலாச் சென்றிருந்தார்கள்.
கடற்கரையில் உடலில் சன் ஸ்க்ரீன் பூசிக்கொண்டு டூ பீஸ் உடைகளோடு வேணி குடைக்குக் கீழ் படுத்துக் கிடக்க, அவரின் பக்கத்தில் கெண்டைக்கால் வரையிலான கவுன் அணிந்திருந்த பானுமதியும், ரஞ்சனியும் ப்ரெட்டில் சீஸ் தடவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அன்றைய இரவில் அவர்கள் கேம்ப் ஃபயர் சென்று காக்டைல் அருந்தி அடித்தக் கூத்திருக்கிறதே, பிள்ளைகள் பார்த்திருந்தால் விக்கியைத் தவிர்த்து அனைவரும் மயக்கம் போட்டு விழுந்திருப்பார்கள்.
அந்நேரம் பார்த்து செல்ல மகள் கவிலயா தன் தாய்க்கு அழைப்பு விடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
அவர் ஏற்றதுமே, “அம்மா நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லம்மா” என்று முதல் வாக்கியத்திலேயே பட்டாசாய் வெடித்தாள்.
அவர் தன்னைச் சுற்றி ஆராய்ந்துவிட்டு, “நீ என்ன சொல்றனே எனக்குப் புரியல லயா?” என்றார்.
“எனக்கு முப்பது வயசு ஆகுதே, ஒரு கல்யாணத்த பண்ணி வைப்போமேனு கொஞ்சமாவது உங்களுக்கு அக்கற இருக்காம்மா? இதே வயசுல அக்கா இருந்தப்ப மட்டும் அவளுக்கு எப்ப கல்யாணம் நடக்கும்னு கோவில் கோவிலாப்போய் வேண்டுனீங்க. இப்ப எனக்கு மட்டும் ஓரவஞ்சனையா கோவா போயிருக்கீங்க. இது கொஞ்சம் கூட சரியில்லம்மா.
இந்தக்கவின் நான் வீடியோ அப்லோட் பண்ணப்ப மட்டும் சோசியல் மீடியா ஒரு பொதகுழினு கிளாஸ் எடுத்தான். இப்ப அவன் பொண்டாட்டிக்கூட சேர்ந்து கபுள் விலாக் போட்டு எஞ்சாய் பண்றான்.” என்று வயிற்றெரிச்சலில் பொருமினாள்.
“இங்கப்பாரு லயா! பிரியங்கா சோப்ரா, நயன்தாரா எல்லாம் உனக்கு உதாரணப் புருஷிகள். ஒருப்பொண்ணுக்கு கல்யாணம், புருசன், கொழந்தைக மட்டுமே வாழ்க்கையில்ல. அதெல்லாம் லேட்டா கூட வரும். இப்ப உங்கிட்ட இருக்கு பாரு எளம? அதான் பொக்கிஷம். என் வயசுல உங்கிட்ட அது இருக்காது. இருக்கும்போதே அத வச்சு உருப்படியா என்ன செய்யமுடியுமோ செய்.” எனவும்,
“அதத்தான் நானும் சொல்றேன். எளமப்போனா வராது. நீங்க ஆலியாபட்ட எனக்கு உதாரணப்புருஷியா பாருங்க. சீக்கிரமே எனக்கொரு கல்யாணம் பண்ணி வைங்கம்மா. இத நான் நீங்க என் பக்கத்துல இருக்கும்போதே சொல்லிருப்பேன். ஆனா, என்ன ரொம்ப அல்பமா பாப்பீங்களோனு தான் இப்ப சொல்றேன்.
எனக்கு குயிலி, தில்லையாடி வள்ளியம்ம, பட்டுக்கோட்ட கல்யாண சுந்தரம், விவேகானந்தர் மாதிரியெல்லாம் ஆக வேணாம்மா. எனக்கு ஒரு அக்மார்க் இல்லத்தரசியா என் புருஷன் புள்ளைகளோட சேர்ந்து விலாக் போட்டு சந்தோசமா இருக்கனும். அதான் என் ஆம்பிஷன். ஒழுங்கு மரியாதையா நீங்களே எனக்கொரு மாப்பிளையப் பாருங்க. இல்ல நண்பன் படத்துல வர்ற இலியானா மாதிரி எனக்கு பிடிச்சவனத் தேடி நானே ஓடிப்போயிருவேன்.” என்று மிரட்டவும்,
“ஓடிப்போ! சந்தோசமாயிரு!” என்று அழைப்பைத் துண்டித்தவர் தனது தோழிகளுடன் அதகளம் செய்தார்.
மறுநாள் காலையில் டிண்டர் செயலியில் தனக்கு பிடித்தமாதிரி ஒருவனை தேர்வு செய்துவிட்டதாக கவிலயா வாட்சப்பில் தகவல் அனுப்ப, காளியாடி விட்டார்.
வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு விளக்குமாற்றில் பத்து அடி விழுமென அவர் எச்சரிக்க, அமிகா கவிலயாவின் அலைபேசியைப் பிடிங்கி, “பாட்டி எப்ப வருவீங்க? நீங்க வரும்போது எனக்கு..” என்று ஆரம்பித்தவள் ஒரு இருபது பொருள்களின் பெயரை பட்டியலிட்டு வாங்கிவரச் சொன்னாள்.
அவர் ஒப்புதல் அளித்ததும் முகம்கொள்ளா புன்னகையுடன் மீண்டும் அலைபேசியை கவிலயாவிடம் தந்தாள். மேலும், பல மண்டகப்படிகளைப் பெற்றுவிட்டு அலைபேசியை அணைத்த கவிலயாவுக்கோ தனது அன்னையின் ரெமோ, அம்பி மாற்றத்துக்கான காரணம் சுத்தமாக விளங்கவில்லை.
இன்னொருபக்கம் விக்கியும், உத்ராவும் இளம்பெண் ஒருத்தியை பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்பெண் தெப்பக்குளத்திண்டில் தனக்காக காத்திருந்த ஆண்மகன் ஒருவனைப் பார்த்ததும் தீவிர சண்டையில் இறங்கினாள்.