காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
நாவலாசிரியர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 34
மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் தங்கள் டிடெக்டிவ் ஏஜென்சி பற்றிய செய்திகள் சொன்னபடியே கவனிப்பை பெறும் வகையில் அச்சடிக்கப்பட்டிருந்தது திருப்தியாய் இருந்தது வேணிக்கு.
மகனும் மருமகளும் சிரித்த முகத்துடன் மின்தூக்கியிலிருந்து இறங்க, முகத்தைக் கோணினார்.
தன்னை கடந்துபோனவர்களை குறுக்கே சென்று நிறுத்தியவர் செய்தித்தாள் விசயத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு தனது தோழிகள் அவர்களுக்கு திருமண விருந்து கொடுக்க விரும்புவதாகவும் கூறினார்.
நேற்று தன்னை விக்கியை விட்டு விலகுமாறு கூறியவர் இவர் தானா என்று பார்த்தாள் உத்ரா. தன்னிடம் ஒரு பேச்சு, மகனிடம் ஒரு பேச்சு என்றும் உள்ளுக்குள் பொருமினாள்.
விக்கி யோசித்துக் கூறுவதாகச் சொல்லிவிட்டு சாப்பாட்டு மேசைக்குச் சென்றான். அங்கு வேணி எந்த பிரச்சனையும் கிளப்பாமல் இருப்பது கண்டு உத்ரா குழம்பினாள். கீழே அவள் தன் கால்விரலால் விக்கியின் காலைத் தடவ, அவனின் கைவிரல் அவளின் பெப்லம் டாப்பை விலக்கி இடையில் கோடு கிழித்து விளையாடியது.
அவள் கூச்சத்தில் நெளிந்துகொண்டே அவனின் தொடையில் நறுக்கென்று கிள்ளி அவதியுறச்செய்தாள்.
திடீரென அவர்களுக்கருகில் வந்த பாக்கியத்தைக் கண்டதும் கைகளை இழுத்துக்கொண்டார்கள் இருவரும்.
அவர், “இந்தாங்க தம்பி பாயாசம்” என்றொரு பாத்திரத்தை அவன் பக்கம் நகர்த்தி வைத்து ஒரு கிண்ணத்தில் அதை எடுத்து வைக்க,
“இன்னைக்கு என்ன விசேஷம்?” என்றான்.
“அம்மாவுக்கும் ஐயாவுக்கும் இன்னைக்கு கல்யாணநாள் தம்பி” என்று நினைவுபடுத்த, தனது அன்னையின் முகத்தை வேதனையுடன் பார்த்தான்.
அவர் உணவில் கவனமாயிருந்தார். அவரின் இன்றைய சாந்தத்திற்கு காரணம் அப்போது தான் தெரிந்தது உத்ராவுக்கு.
மாலையில் குடும்பமாக தங்கள் தந்தையின் கல்லறைக்குச் சென்று மாலை சார்த்திவிட்டு வரலாம் என்றவன் சொல்ல, வேணி உடனே சரியென்றார்.
வேணி தனது சோப்புத் தொழிற்சாலைக்குச் சென்றதும், விக்கியும் உத்ராவும் டிடெக்டிவ் ஏஜென்சிக்குச் சென்றார்கள்.
அனைத்து கோப்புகளையும் ஒருமுறை சரி பார்க்கும் பெரும்வேலை உத்ராவின் தலையில் விழுந்தது. அவள் ஒவ்வொரு அலமாரியாகச் சென்று கோப்புகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, விக்கி அவளை தொல்லை செய்ய ஆரம்பித்தான்.
கையில் கோப்போடு நின்றிருப்பவளின் முதுகில் மீசையால் கூசுவது, இடையில் கிள்ளுவது, முகத்தில் முத்தம் கொடுப்பதென்று சில்மிசம் செய்து கொண்டிருந்தான்.
அப்போது டிடெக்டிவ் ஏஜென்சியின் எண்ணிற்கு அழைப்பொன்று வர, ஏற்றுப் பேசினான். யாரோ திருநகரிலிருந்து பேசுகிறார்களாம். அவர்களின் நாயொன்று சமீபத்தில் காணாமல் போய்விட்டதாம். காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்திருந்தாலும் அதில் நம்பிக்கையின்றி அவனிடம் அதைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லி கேட்கிறார்களாம்.
விக்கி இதைக் கேட்டதும் அசட்டையாக, “இங்க நாங்க கொஞ்சம் பிஸியா இருக்கோம். நீங்க வேற டிடெக்டிவ் ஏஜென்சிய கான்டாக்ட் பண்ணுங்க ப்ளீஸ்!” என்று அழைப்பை கத்தரித்தான்.
உத்ரா அவனின் பதிலில் கடுப்பானது தெரியாமல் கழுத்தில் அவன் முகம் புதைக்க, “விக்கி ப்ளீஸ் என் வேலைய என்ன செய்ய விடுறியா? எல்லாத்துக்கும் ஒரு நேரமிருக்கு. இப்படி நீ தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருப்பனா நாளைலயிருந்து நம்ம இங்க வரவேணாம். நம்ம பெட்ரூம்லயே இருந்துக்கலாம். இது தொழில் பண்ற எடம். இதுக்குனு ஒரு மரியாத இருக்கு, தர்மம் இருக்கு. நீயும் ஒரு கம்பெனிக்கு சிஇஓவா இருந்தவன் தான?” என்று எரிச்சலாகக் கேட்டதில், அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.
“இப்படி தான் ஒவ்வொரு தடவயும் என் செல்ஃப் ரெஸ்பெக்ட்ட சீண்டிப் பாத்து என்ன எல்ல மீற வச்சிடுற உதி. ஆமா உன் பிரச்சன தான் என்ன? நேத்து தொடவே மாட்டிக்கிறேனு குதிச்ச. இன்னைக்கு தொடுறேனு குதிக்கிற.”
“என் பிரச்சன தான? சொல்றேன். எனக்கு என் புருஷன் இப்படி என் டாப்ஸப் பிடிச்சிட்டு மாலா மாலானு சுத்துறது சுத்தமாப் பிடிக்கல போதுமா? அவன் அவனோட தொழில்ல தனித்துவமாத் தெரியனும். இப்ப உன்னால என் பிரச்சனைய தீத்து வைக்க முடியுமா விக்கி?”
“ஏன்டா உன்ன கல்யாணம் பண்ணோம்னு இருக்கு. அன்னைக்கு நீ என்ன ஒதவாக்கர, சட்டைய உரிக்கறதனால பல்லி பாம்பாகாது, இவன் வாசன் சார் மாதிரி கெடையாதுனு பட்டியல் போட்டு வெறுப்பேத்திருக்க வேணாம்.” என்று துயரமாக சொன்னவன் வேகமாக வெளியேறினான்.
உத்ராவுக்கு அவனின் போக்கு எதுவும் சரியாய் படவில்லை. அவன் செய்வதனைத்தையும் நல்ல முறையில் அணுக நினைத்தாலும் அவனே அதற்கு முட்டுக்கட்டைப் போடுவது அயர்வைத் தந்தது.
அவள் வேலைப்பளுவில் சற்று விக்கியை மறந்திருந்த சமயம் அவனின் சித்துவேலையொன்று தட்டுப்பட்டது. மகேஷை தனது நிறுவனத்தில் சந்திக்கச் செல்லும்முன் அவன் தங்கள் தொழிற்நுட்ப வல்லுநர் குழுவிடம் கேட்டிருந்த, மகேஷின் அலைபேசித் தொடர்புகள் பற்றிய தரவுகளின் நகலொன்று சம்பந்தமே இல்லாமல் ஒரு கோப்பிற்குள் மடக்கி வைக்கப்பட்டிருந்தது. விரித்துப் பார்த்தவள் விக்கியைக் கழுவி ஊற்றினாள்.
“ஓ! இதுக்கு தான் சார் ஐ.டி கம்பெனிக்குப் போனீங்களா? சீக்கிரமே உன்ன சிஇஓவா பொறுப்பேக்கவும் போக வைக்கிறேன்டா” என்று சபதமெடுத்தாள்.
ஆனால், அதற்கு மேல் அவளால் அந்த வேலைகளைத் தொடர முடியவில்லை. தனது அன்னையைப் பார்க்கச் சென்றாள்.
மகள் வீட்டிற்கு வந்ததும் விழுந்து விழுந்து கவனித்த பானுமதி அவளிடம் தற்போது உதய்கிருஷ்ணாவின் நிலை என்னவென்று விசாரிக்க, “நீங்க இப்டில்லாம் விசாரிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் என் ஆஃபிஸ்லயே கவுந்தடிச்சி படுத்திருப்பேம்மா. என் தலவலிய இன்னும் அதிகப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என்று முகத்தைச் சுண்டினாள்.
“சரிம்மா, சரிம்மா. அப்பறம் நீ கோவிச்சிக்க மாட்டேன்னா அம்மா ஒன்னு சொல்லுவேன் உதி. அது வந்து உனக்கு இப்பவே வயசு முப்பதாகுது. இன்னும் நீ நாள் தள்ளிப் போட்டீன்னா உனக்கு தாம்மா பின்னாடி கஷ்டம்” என்றதும்,
அவர் குழந்தையைப் பற்றி தான் சுற்றி வளைக்கிறார் என புரிந்துகொண்டவள் ‘கொழந்த என்ன பின்னாடியா பொறக்கப்போகுது. முன்னாடி தான பொறக்கும்?’ என்று வேடிக்கையாக நினைத்தாள்.
“என்ன உதி அம்மா சொல்றது புரியுதா?” என்று ரகசியக்குரலில் கேட்கவும்,
“இன்புட்டே குடுக்கலையாம். இதுல எங்கயிருந்து நான் அவுட்புட் பிரச்சன பத்தி யோசிக்குறது?” என்று சலித்தாள்.
“என்னது இன்புட்? அவுட்புட்?” என்றவர் கேள்வியெழுப்ப, அவசரப்பட்டு பதிலளித்த தன் முட்டாள்தனத்தை நொந்தாள்.
“எனக்குத் தெரியும்மா.” என்று சமையலறையிலிருந்து சத்தமாகக் கத்தினாள் கவிலயா.
“அப்டினா என்னடி?” என்றவர் விசாரிக்கும்போது நல்லவேளையாக கவின் வந்து அவளைக் காப்பாற்றினான்.