Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 35


விக்கி படுத்ததும் குறட்டைவிட அதிர்ச்சியாகப் பார்த்தாள் உத்ரா. இவ்வளவு நாள் தனக்குப் பின்பு தான் அவன் தூங்குவான் என்பதால் இந்த குறட்டை விசயம் அவளுக்கு தெரியாமல் போயிருந்தது. இன்றோ அது தனக்கு தெரிந்ததும் விடுவதாய் இல்லை.

உடனே தனது அலைபேசியில் காணொளியாக பதிவு செய்தாள். எப்போதும் கவிலயா செய்யும் வேலையை இன்று அவள் கையிலெடுத்தாள்.

“ஏன்டா இவ்வளவு நாளா தூக்கத்துல என் கால் லேசா உன் மேல பட்டதுக்கே என்ன குதி குதிச்ச? இனி நீ எப்படி என்ன கேலி பண்றனு பாக்குறேன்டா” என்று குதூகலித்தாள்.

வெகுநேரம் தூக்கம் வராமல் இருக்கவும் புரண்டு புரண்டு‌ படுத்தவள் அலைபேசியில் ஃபேஸ்புக் சென்று பார்க்க, அவளின் நட்புப் பட்டியலில் இருந்த விக்கி தனது அன்னை தந்தையரின் பழைய திருமணப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தான். தனது தந்தையை தான் மிஸ் செய்வதாகவும் அந்த வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தான்.

அவன் அந்தப் பதிவில் வாசனையும், வேணியையும் டேக் செய்திருக்க, வாசனின் பெயரைத் தொட்டு அவரின் முகப்புப்பக்கத்திற்கு சென்றாள்.

அவரின் இறப்பின்போது இரங்கல் நல்கிய பலரும் அவரின் அருமைபெருமைகளை பதிவுகளாயிட்டு அவரை டேக் செய்திருந்தார்கள்.

அவற்றை வாசித்துக்கொண்டிருந்த உத்ராவுக்கு திடீரென ஒருப்பொறி தட்டியது. அனன்யாவின் அன்னை ஒருவேளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்திருந்தால் அவர் ஆசிரியை என்பதால் அவருக்கும் அவரின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் இரங்கல் பதிவு எழுதியிருப்பார்கள் தானே என்ற எண்ணம் எழுந்ததும், முதலில் அனன்யாவின் அலைபேசி எண்ணை‌ வைத்து ‘பீப்பிள் யூ மே க்னோவ்’வில் அவளின் முகப்புப்பக்கத்தை கண்டுபிடித்தாள்.

அவளை வால் பிடித்து சென்றதில் கங்காவின் முகப்புப்பக்கம் சிக்கியது. தங்கள் தொழில்நுட்ப வல்லுநரை தொடர்புகொண்டு அவரின் உதவியோடு பூட்டுப் போட்டிருந்த அந்தப் பக்கத்திற்குள் அவசரமாய் நுழைந்தாள்.

கடைசியாய் கங்காவுடன் வேலைப் பார்த்தவர்களும், அவரின் மாணவர்களில் சிலரும் அவருக்கு இரங்கல் பதிவிட்டிருந்தார்கள். அந்தப்பதிவுகளின் கருத்துப்பெட்டிகளில் அச்சமயம் ஊரிலில்லாத மாணவர்கள் சிலர் எப்படி அவர் இறந்தார்‌ என அதிர்ச்சி தெரிவிக்க, அந்த அசம்பாவிதத்தை தங்களுக்கு தெரிந்த வகையில் விவரித்தார்கள் சிலர்.

அதை வாசித்ததும் உத்ரா சிலையானாள். அவள் என்னென்னவோ கற்பனை செய்திருக்க, நடந்ததென்னவோ வேறு.

இருப்பினும், அதை ஆதாரங்களுடன் அறிய முதலில் அவர் வேலைப் பார்த்த பள்ளியின் பெயரை கண்டுபிடித்தாள். அங்கு சென்று விசாரிப்பது இரண்டாவது வேலை தான். முதல் வேலையாக இருந்தது அவர் இறந்த தேதியை வைத்து அதற்கு மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் எல்லாம் அவர் பற்றிய செய்தியைத் தேடுவது.

மறுநாள் காலை எழுந்ததுமே உத்ரா கங்கா‌ தொடர்பான விவரங்களை சேகரிக்க உற்சாகமாக டிடெக்டிவ் ஏஜென்சிக்கு கிளம்ப‌, படுக்கையில் தனது நாயை கொஞ்சிக் கொண்டிருந்தான்‌ விக்கி.

“விக்கி இப்ப ஏன் நீ இப்டி கெளம்பாமக் கொள்ளாமப் படுத்திருக்க? மொதல்ல அந்த நாயக் கொண்டுபோய் கட்டி வச்சிட்டு வாடா. நான் தூங்குற எடத்துல இது என்ன பகுமானமா படுத்திருக்கு பாரு.” என்று அதட்டினாள்.

“சும்மா இரு உதி. என் பேச்சக் கேட்டு தான் என் தம்பி அமைதியா படுத்திருக்கான். இல்ல உன் மேல பாய்ஞ்சிருவான்.”

“உன்ன மாதிரியா விக்கி?” என்றவள் கண்ணடிக்க,

“நீ ரொம்ப மாறிட்ட உதி. தப்பு தப்பா பேசுற.” என்று கன்னங்களில் போட்டுக்கொண்டான்.

“அடேங்கப்பா! அல்வாக்கடக்காரனுக்கு ஜீனின்னா அலர்ஜியாம். நம்புற மாதிரியா இருக்கு? ச்சை! அத உன் மூஞ்சில நக்கச் சொல்லாதடா. இனி நான் எப்படிடா உன் மூஞ்சில முத்தம் குடுப்பேன்?”

“நீ செய்ய வேண்டியத தான் என் தம்பி செய்யுறான். நீ ஒழுங்கு மரியாதையா ஆஃபிஸுக்கு கெளம்புற வழியப் பாரு.”

“அப்போ நீ‌ இன்னைக்கு என் கூட வர்றதா இல்லயா?”

“ஆமா, எனக்கும் வெக்கம், மானம், சூடு, சொரனையெல்லாம் இருக்கு”

“ஆமா! ஆமா! நேத்து ராத்திரி நீ‌ என்ன இழுத்த வேகத்துல தான் எல்லாம் தெரிஞ்சதே. தயவுசெஞ்சு நம்புற மாதிரி ஏதாவது சொல்லு?”

“இன்னைக்கு நான் விக்டரி டெக் சொலுஷனுக்கு போகலாம்னு இருக்கேன்.”

“இப்ப தான சொன்னேன்? நம்புற மாதிரி ஏதாவது சொல்லுனு?”

“நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்”

“விக்கி உண்மையாவா சொல்ற? அட! அட! என் புருஷனுக்கு ரோசத்தப் பாரேன். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக உருப்படலாம்னு முடிவு பண்ணிட்டான்.”

“போறியா? இல்ல என் ஜான்சீனாவ விட்டு உன் வாயில கடிக்க சொல்லவா?”

“நீ கடிக்கிற கடிக்கு ஜான்சீனாவே மேல்டா”

“அப்போ இனி நம்ம ரெண்டு பேருக்கு நடுவுலயும் ஜான்சீனாவையே படுக்க வச்சிடுறேன். அப்பறம் இதுல இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என்ன தெரியுமா? உன் ஒதையில இருந்தும் நான் தப்பிக்கலாம்.”

“ஓஹோ! நீங்க மட்டும் உங்க இரவுகள தியாகம் பண்ணல தம்பி. நாங்களும் தான். இத மொதல்ல பாரு” என்று அவன் குறட்டை விடும் காணொளியைக் காண்பித்தாள்.

அதைப் பார்த்ததும் அவன் அதை பிடுங்குவதற்காக, “ஜான்சீனா அட்டாக் ஹெர்!” என்று உத்தரவிட, பாய்ந்து மின்தூக்கிக்குள் நுழைந்தாள் உத்ரா.

அவளின் முகத்தில் விக்கியின் மாற்றத்தை நினைத்து சந்தோஷக்கீற்று. மாலை அதை அவன் சுத்தமாக துடைத்தெறியப்போவதை அவள் அறியவில்லை.

தங்களின் அலுவலகத்திற்கு வந்ததும் ரகசிய உளவாளி ஒருவரின் மூலமாக அந்த குறிபிட்டத் தேதியுள்ள செய்தித்தாள்களையெல்லாம் வரவழைத்தவள் அந்தப் பள்ளிக்குச் சென்று கங்காவைப் பற்றியும் விசாரிக்கச் சொன்னாள்.

விசாரித்துக் கிடைத்த தகவலில் ஃபேஸ்புக்கில் அந்த முன்னாள் மாணவர்கள் சொன்னதனைத்தும் உண்மை தான் என புலனாகவும், கங்காவுக்காக இரக்கப்பட்டாள்.

உண்மையில் அந்த தலைமையாசிரியர் தான் கங்காவை கொன்றிருப்பார் என்று தப்புக்கணக்கு போட்டாள் உத்ரா. ஆனால், அவரைக் கொன்றதோ அவர் ஒன்றரை வருடம் பாடம் கற்பித்த மாணவன் ஒருவன்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
தலைமையாசிரியரின் அறையிலிருந்த ரெகார்ட் புத்தகங்களை எடுக்க வந்தவன் சாளரம் வழியாக கங்காவின் கையை தலைமையாசிரியர் ஆசையுடன் தடவுவதைப் பார்த்து திக்பிரம்மை அடைந்தான்.

அவனால் அந்தக் காட்சியை மறக்கவே முடியவில்லை. ஆனால், யாரிடமும் சொல்லவும் பயம். அந்தப் பயத்தை அவனை கோபமுறச்செய்து வெளியேற்றினார் கங்கா.

அவர் வகுப்பறையில் பிதாகரஸ் தேற்றம் நடத்திக் கொண்டிருந்தபோது அவன் மூன்று மேசைகளுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த மாணவி ஒருத்தியின் பெயருடன் தன் பெயரை எழுதிப் பார்த்து ‘FLAMES’ போட்டுக் கொண்டிருந்தான்.

கங்கா தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தவர் அவனருகில் வந்து புத்தகத்தை விரித்துக் காட்டச் சொன்னார். அவன் தயங்கவும் தானே வலுக்கட்டாயமாய் பிடிங்கி விரித்தவர் அவன் காதைப் பிடித்துத் திருகினார்.

“என்னடாயிது? படிக்கிற வயசுல இந்த வேல வேறப் பாக்குறியா? நாளைக்கு உன் அம்மா அப்பாவ என்ன வந்து பாக்கச் சொல்ற நீ. ஹாஃப்பேர்லி எக்ஸாம்ல நீ மார்க் கொறஞ்சதுக்கு எங்கள எப்படியெல்லாம் கேள்விக்கேட்டாரு உன் அப்பா? அவரு மகனோட லட்சணம் என்னனு இப்ப அவருக்கு தெரியட்டும். அது வர உன்னோட இந்தப் புத்தகம் மட்டும் என்கிட்டயே இருக்கட்டும்.” என்று திரும்பியவரின் காலைப் பிடித்துக் கெஞ்சினான் அவன்.

“மிஸ், மிஸ், சாரி மிஸ். இனிமே நான் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன் மிஸ். ப்ளீஸ் மிஸ், எங்க அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிறாதீங்க மிஸ். அவருக்கு தெரிஞ்சதுனா என்ன கொன்னே போட்ருவாரு மிஸ்” என்று அழுகுரலில் கெஞ்சினான்.

கங்கா மனமிறங்கவில்லை.

“அப்படினா உன் அப்பா தான் உனக்கு சரி” என்று தன் கால்களை அவர்‌ விடுவிக்கப் போராட, அவனுக்கு கோபமாகிவிட்டது.

“இவ்ளோ பேசுறீங்கல்ல நீங்க மட்டும் ஒழுங்கா மிஸ்? அன்னைக்கு ஹெச்.எம் சார் உங்க கையப் பிடிச்சு தடவல? அதவிட ஒன்னும் நான் செஞ்சது தப்பில்ல மிஸ்” எனவும், ஆத்திரம் தலைக்கேறியது கங்காவுக்கு.

மற்ற மாணவர்கள் முன் அவன் தன்னை அவமானப்படுத்திய கோபத்தில் அவனின் கன்னங்களில் மாறி மாறி அறைந்தார்.

உடன், “உன்ன இப்பவே ஹெச்.எம் சார்கிட்ட சொல்லி டீசி குடுத்து வெளிய அனுப்பச் சொல்லல என் பேரு கங்கா இல்லடா” என்றவர் திரும்பியபோது அவரின் பிடரியில் இறங்கியது அந்த கூர்மையான காம்பஸ்.

கூச்சலிட்டு ஓடினர் அங்கு உட்கார்ந்திருந்த மாணவ மாணவியர் அனைவரும். அதன்பின்னான சம்பவங்கள் எதுவும் கங்காவை காப்பாற்ற உதவவில்லை. கைது செய்யப்பட்ட மாணவனும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான். எதிர்பாராச் சம்பவத்தில் தன் அன்னையை இழந்து தனிமரமானாள் அனன்யா.

தற்போது உதய்கிருஷ்ணாவின் வீட்டில் அவள் தலை தான் உருண்டு கொண்டிருந்தது. காரணம் யூடியூப் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி அதில் கவிலயாவின் சானலும் குறுக்கே வந்து செல்ல, சானலின் பெயரை அழுத்தி அவளின் மற்ற காணொளிகளைப் பார்த்தாள்.

அதில் நேற்றிரவு கவிலயா பதிவேற்றியிருந்த காணொளியொன்று அவளின் கவனத்தை அதிகமாய் பெற்றது. சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சியின் திறப்புவிழா பற்றிய கொண்டாட்டங்களை தான் யூடியூபில் பதினைந்து நிமிட காணொளியாகப் பதிவேற்றியிருந்தாள் கவிலயா. அதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் தம்பதி சமேதராகவும் காவல் ஆணையரின் பக்கத்தில் நின்றிருந்த விக்கி, உத்ராவைப் பார்த்ததும் ரஞ்சனிக்கு கொலைவெறியானது.

“இவளுக்கே கல்யாணமாகிருச்சி.‌ ஆனா, உனக்கு இன்னும் ஆகலையேடா தம்பி” என்று மூக்குறிஞ்சினாள், அந்த காணொளியைச் சுட்டிக்காட்டி.

அவனோ விரக்தியாய் பேசினான்.

“அதுக்கென்னக்கா பண்றது? நம்ம நேரம் அப்படியிருக்கு”

“என்ன நேரம்? அந்த நந்தகோபனுக்கு போன் போட்டு ரெண்டுல ஒன்ன இப்பவே கேக்குறனா இல்லையாப் பாரு. என்ன அவன் நெனச்சுட்டு இருக்கான்? மொத மாப்பிள்ளவீட்டுக்காரங்க நாமளா? இல்ல அவங்களா? அன்னைக்கு உடனே கல்யாணம் வச்சிக்கலாம்னு வாய் கிழியப் பேசிட்டு இப்ப வழுக்கத்தலையன் எங்கப்பொண்ணு எப்ப ஓகே சொல்றாளோ அப்ப தான் கல்யாணம்னு ஜகா வாங்குறானேடா. இத இப்படியே விட்டா சரி வராது. நம்ம ஒரு முடிவ இப்பவே எடுத்தாகனும்.” எனவும், உதய்கிருஷ்ணாவின் குரல் பிசிறு தட்டியது.

“என்னக்கா முடிவெடுக்கச் சொல்ற? இப்ப நீ அவருக்கு போன் போட்டு கேட்டாலும் அதே பதிலத் தான் சொல்வாரு.‌ ஏன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடி நான் கேட்டப்பயும் அந்தப்பொண்ணு அதே பதிலத் தான் சொன்னா.”

“இல்லடா எனக்கு இதுல ஏதோ வில்லங்கம் இருக்குனு தோணுது. இல்லனா அவ‌ எதுக்கு யோசிக்க டைம் கேக்கனும்? நாம பாக்கற பொண்ணுங்கல்லாம் என்னடா இந்த லட்சணத்துல இருக்காளுக? நீ என்ன நொண்டியா மொடமா? ஆளு பாக்க சும்மா மாதவன் மாதிரி இருக்க. சம்பளமும் கை நெறைய வாங்குற. உன்னப்போய் நான் இப்படி துப்புக்கெட்ட சம்பந்தங்கள்ல கோர்த்துவிட்டு உன்ன விளங்கவிடாம பண்ணிட்டு இருக்கேனேடா. இத மேல இருக்க நம்ம அம்மா அப்பா பாத்தா ரொம்ப சங்கடப்படுவாங்கடா உதய். பேசாம நான் ஒரு யோசன சொல்றேன். அதுபடி செஞ்சன்னா நம்ம எல்லாரும் எந்தப் பிரச்சனையும் இல்லாம திருப்தியா வாழலாம்.” எனவும், அவனின் புருவங்கள் நெரிந்தன.

“என்ன யோசனக்கா?”

“அதுவந்து அக்கா சுயநலமா பேசுறேனு நெனைக்காதடா தம்பி. உனக்கு ஊர் ஊரா பொண்ணுத்தேடி சீப்பட்டு நிக்கிறதால தான் இந்த யோசனைய சொல்றேன். நீ பேசாம எம்பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கடா. அவளுக்கும் உனக்கும் பன்னண்டு வயசு தான வித்தியாசம்? அதனால என்ன? ஊர் ஒலகத்துல இப்படி யாரும் கல்யாணம் பண்ணிக்கலையா சொல்லு? எல்லாம் சரியா வரும். நம்பு உதய்.” என அவன் நாடியைப் பிடிக்கவும், தட்டிவிட்டான் அவன்.

“அக்கா என்ன பேசுற நீ? மேகா எனக்கு பொண்ணுக்கா. நான் என் கையால தூக்கி வளத்தவ. அவ பெரியப் பொண்ணாகி நின்னப்பக்கூட என்கிட்ட தான் க்கா நீ நாப்கின் வாங்கிட்டு வரச்சொன்ன. தயவு செஞ்சு எங்க ஒறவ கொச்சப் படுத்தாதக்கா.”

“தெரியும்டா! நீ இப்படி தான் சொல்லுவனு தெரியும். இந்த ஆள் என்னன்னா லட்சக்கணக்குல கடன் வாங்கி என்ன ஒரு பொட்டு மூக்குத்தி கூட இல்லாம மூலைல உக்கார வச்சிருக்காரு. இந்த நெலமைல நான் எம்பொண்ண சீர் செனத்தி செஞ்சு யாருக்கு கட்டிக்குடுப்பேன் சொல்லு? நீ நெனைக்கிற மாதிரி உனக்கு வர்றவளும் எம்பொண்ண அவப்பொண்ணா நெனைக்க அவளுக்கென்ன பைத்தியமாடா? எப்படியும் உன்ன எங்கக்கிட்டருந்து பிரிச்சிக் கூட்டிட்டுப் போகத்தான் பாப்பா. அக்காவ நடுத்தெருவுல நிக்க வச்சிராதடா தம்பி. எம்பொண்ணுக்கு வாழ்க்கக் குடுடா.” என்று கைகளைக் கூப்பி கெஞ்சினாள்.

அவன் என்ன சொல்வதெனத் தெரியாமல் விக்கித்து நின்றான். தாய்மாமனை கல்யாணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகள் மனநலம் குன்றி பிறப்பதை பற்றி அவளுக்கு எடுத்துரைக்க ஆசை தான். ஆனால், தற்போதைய நிலையில் அதைக்கூட எதையாவது சொல்லி வாயை அடைத்துவிடுவாள் ரஞ்சனி என்பதால் எண்ணத்தை கைவிட்டான்.

இப்போது உதய்கிருஷ்ணாவிற்கு இருக்கும் ஒரே வழி அனன்யா தான். அவளுக்கிருக்கும் வசதிக்கு மேகாவை ஜாம்ஜாம் என கல்யாணம் முடித்து கொடுக்கலாம்.

அவளுக்கு தாய் தந்தையர் என்று யாரும் இல்லாதது ஒரு ப்ளஸ். சூது சொல்லிக்கொடுக்கவும் ஆளில்லை. அவன் அவள் பணத்தை செலவு செய்யும்போது அவள் கேட்க முடியாதபடி அன்பால் வாயடைத்து விடலாம்.

இப்படியொரு திட்டத்தோடு அவளிடம் இன்னொருமுறை முயற்சி செய்துப் பார்க்கலாமென அவளை அதே காஃபிஷாப்பிற்கு வரச் சொன்னான் உதய்கிருஷ்ணா.

மறுக்காமல் அவளும் வந்தாள். காரணம், விக்கி சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவளை நேரில் சந்தித்துப் பேசியிருந்தான்.



கலைடாஸ்கோப் திரும்பும்...​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்னும் நான்கு அத்தியாயங்களில் நாவல் நிறைவுபெறவிருக்கிறது ப்ரெண்ட்ஸ். நாவல் நிறைவுபெற்றபின் ஒரு வாரத்திற்கு மட்டுமே தளத்தில் இருக்கும். உங்களுக்கு இந்நாவல் பிடித்திருப்பின் தாமதியாமல் உங்கள் நண்பர்களுக்கும் கதையின் திரியை பகிர்வீர்களாக!
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் முப்பத்தாறு இதோ...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 36


கறுப்புநிற அரைக்கை டீசர்ட்டும், லைட் பீஜ் நிற கார்போ பேண்ட்டும் அணிந்து தனது‌ உப்புமிளகு தலைமுடியில் அக்கறையில்லாதவனாய் தன் முன் உட்கார்ந்திருந்த உதய்கிருஷ்ணாவை முதல்முறை அதிகமாய் கவனித்தாள் அனன்யா.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு ஒரு நடிகனின் முகம் ஞாபகம் வரும். அது யாரென இன்று தான் சரியாக கண்டுபிடித்தாள். கங்கை கொண்டான் பட வினய் ராய்.

அவனுக்குமே அவள் தன் முகத்தைப் பார்ப்பது ஆச்சரியம் தான்.

“அதுவந்து… நீங்க என்ன இப்ப கூப்டலனா நானே உங்கள இங்க வரச் சொல்லியிருப்பேங்க.” எனவும், அவள் பேசியதை நம்ப முடியாமல் பார்த்தான்.

“உண்மையாவா சொல்றீங்க?”

“ம். நான் உங்களையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

திடீரென பணமழை பொழிந்தது போல் ஒரு ஆனந்த அதிர்ச்சி உதய்கிருஷ்ணாவுக்கு.

“நீங்க சொன்னது சந்தோசம் தான். ஆனா திடீருனு எப்படிங்க இப்படியொரு மாற்றம்?”

“யோசிச்சுப் பாத்தேன். சரினு பட்டது அதான்.”

“ஓ! பரவாயில்லங்க. நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னதே போதும். நம்ம கல்யாணத்த எப்படி ஜமாய்ச்சிடறேனு மட்டும் பாருங்க. ஐயோ! எனக்கிருக்க சந்தோசத்துக்கு இப்பயே உங்கள தூக்கி சுத்தனும் போல இருக்குங்க.” -உற்சாகத்தில் சற்று சத்தமாகக் கூறினான்.

பக்கத்து மேசைக்காரர்கள் அவனை திரும்பிப் பார்த்து சிரித்தார்கள். அனன்யா கண்களால் அதை அபிநயம் பிடித்துக்காட்டவும், அசடு வழிந்தவன் பின்னந்தலையை தட்டிக்கொண்டான்.

“சொல்றேனு தப்பா நெனைக்காதீங்க. நம்ம கல்யாணத்த ரொம்ப கிராண்டால்லாம் பண்ண வேண்டாம். சிம்ப்ளா கோவில்லயே பண்ணிக்கலாம்.”

“ஏங்க? ஏன் இப்படி சொல்றீங்க? என் அக்கா என் கல்யாணத்துக்கு எப்போ எப்போனு வெயிட் பண்ணிட்டிருக்கா. ஏற்கனவே ஒரு தடவ ஃபிக்ஸாகி நின்னுபோனதால இப்படி சொல்றீங்களா?”

‘இல்ல எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் இல்லாததால சொல்றேன்’ என அனன்யாவின் உள்மனம் கூவியதை பாவம் உதய்கிருஷ்ணா அறியவில்லை.

“நீங்க நம்புறீங்களோ இல்லயோ? நான் நம்புறேங்க. மறுபடியும் எல்லாரோட கண்ணும்பட்டு நம்ம கல்யாணம்…. வேணாங்க. எங்கப் பெரியப்பா நான் இப்படியெல்லாம் சொன்ன கேக்க மாட்டாரு. அதனால நீங்களே அவர்கிட்ட புரியுற மாதிரி எடுத்து சொல்லிருங்க.” எனவும், சம்மதம் சொல்ல சற்று திணறினான் உதய்கிருஷ்ணா.

“அதுவந்து என் அக்காக்கிட்டயும் ஒரு வார்த்த கேட்டுட்டு சொல்றேனேங்க”

தங்களுக்கிடையில் அவன் அக்காவை கொண்டுவந்தது மிளகாய் கடித்த உணர்வைக்‌ கொடுத்தது அவளுக்கு.

“இப்படி ஒவ்வொரு விசயத்தையும் உங்க அக்காவ கேட்டு தான் முடிவு பண்ணுவீங்கன்னா நம்ம கல்யாணம் நடக்குறதே டவுட்டு தாங்க. எனக்கு என் ஹஸ்பண்ட் என்ன மட்டுமே தாங்குறவரா இருக்கனும். அவர் அக்காவ இல்ல. நீங்க ரெண்டுல ஒன்ன இப்பவே சொல்லுங்க. அத வச்சு தான் நான் என்‌ பெரியப்பாக்கிட்ட பேச முடியும்” என்றாள் கறாராக.

உதய்கிருஷ்ணா ‌இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தான். பின், அவள் கல்யாணத்திற்கு சம்மதித்ததே பெரிது என்று அவளின் விருப்பத்திற்கு இணங்கினான். அனன்யா திருப்தியாக அங்கிருந்து விடைபெற்றாள்.

அதன்‌பின், இருவீட்டுப் பெரியவர்களும் கலந்து ஆலோசித்ததில் வரும் முகூர்த்தத்திலேயே இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அனன்யா தனது இக்கட்டான நிலையை மானசீகமாக தனது அன்னையிடம் சொல்லி புலம்பினாள். அவளின் இந்த அவசர முடிவுக்கு காரணம் ஒரு பக்கம் விக்கி சொல்லிய உண்மையென்றால், மறுபக்கம் நந்தகோபனின் சுயரூபம்.

நந்தகோபன் அனன்யா திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதைப் பார்த்து, அவளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு தங்களின் நம்பிக்கையான‌ சோதிடரிடம் சென்றார். அவரோ அதனை அலசி ஆராய்ந்துவிட்டு அவள் மனதில் யாரோ இருப்பதாக யூகத்தில் அடித்துவிட, வீட்டிற்கு வந்து அவளை சித்ரவதை செய்தார் நந்தகோபன்.

“அவன் வேற ஜாதிக்காரனு தான பெரியப்பாக்கிட்ட சொல்ல மாட்டேங்குற?” என்று உறுமினார்.

அவள், “இ.. இ.. இல்ல பெரியப்பா. அப்படி யாரையும் நான் லவ் பண்ணல பெரியப்பா” என்று பம்மினாள்.

“உண்மையா தான் சொல்றியா?”

“ஆ.. ஆமா பெரியப்பா”

“ம், அதான பாத்தேன். எனக்கு எம்பொண்ணு வேற என் தம்பிப்பொண்ணு வேற இல்ல. நான் இவ்வளவு நாள் உன் பேச்சக் கேட்டு ஆடுனதே தப்பு. சீக்கிரம் யோசிச்சு நல்ல முடிவாச் சொல்லு. இல்ல வேற மாப்பிள பாக்குறதுனாலும் எனக்கு தெரிஞ்ச ரெண்டு பேர் மாப்பிள துப்புச் சொல்றாங்க. அதுல ஒருத்தன பேசி முடிச்சிரலாம். என்ன சொல்ற?” என மிரட்டவும்,

“சரி.. சரிங்கப் பெரியப்பா” என்று திணறினாள்.

நந்தகோபனை வெகுநாள் ஏமாற்ற முடியாதென அவள் கலங்கி நின்ற சமயம் தான் விக்கி அவளை நேரில் சந்தித்தான். அவன் சொல்லிய விசயங்கள் தெரியாத பிசாசிற்கு தெரிந்தப் பேயே மேல் என்று அவளை உதய்கிருஷ்ணாவை நோக்கித் தள்ளின.

இருப்பினும், விக்கி கூறியது பொய்யாக இருக்கக்கூடாதா என்று பிரயாசைப்பட்டாள்.

ஆனால், அவன் தான் அடித்து சொல்லிவிட்டானே. இனி தனது வாழ்க்கையைப் பார்ப்பது தான் புத்திசாலித்தனமென்று தனது அன்னையை‌ மனதில் வேண்டிக்கொண்டு திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள்.

இவையெதையும் அறியாமல் யாருக்கும் கிடைக்காத அரிய சம்பந்தம் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக பூரித்தாள் ரஞ்சனி.

கங்காவின் இறப்பு குறித்த உண்மை முழுவதையும் முழுவீச்சுடன் அறிந்துகொண்ட உத்ரா அன்றையநாள் இரவு விக்கியிடம் அதைப் பகிர ஆவல் கொண்டாள். அதற்கு முன் அவனின் இன்றைய நாள் எப்படியிருந்தது? நிறுவனத்தில் அவனின் ஊழியர்கள் அவனை எப்படி எதிர்கொண்டார்கள்? என்றறிய ஆர்வம் கொண்டாள்.

அவனோ வீட்டிற்குள் நுழைந்ததும் டையை கழற்றினான்.

மிகவும் களைப்பாக, “உதி, எனக்கு ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வர்றியா?” என்றான்.

“எல்லாம் என் நேரம்டா” என்று நொந்தபடியே பாக்கியத்தின் உதவியுடன் காஃபி தயாரித்து வந்து கொடுத்தாள்.

அவன் அதை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தபோது எதிரில் வந்த வேணி, “விக்கி நீ இன்னைக்கு உன் ஐ.டி கம்பெனிய மகேஷ்கிட்டயே முழுசா ஒப்படைக்கிறதா சொன்னியாமே?” என்றார்‌ உஷ்ணக்குரலில்.

“ஆமா சொன்னேன்”

அவனின் பதிலில் சுருக்கென்றது உத்ராவுக்கு. அவனை ஆத்திரமாகப் பார்த்தாள்.

“நீ அவனுக்கு அத குடுக்கறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, இலவசமா குடுக்கறேனு சொன்ன பாரு. அதான் இளிச்சவாய்த்தனம்.”

“இது என் முடிவு மாம். அவன் எனக்கு சமமா ஏன் எனக்கு மேலேயேவும் அந்த கம்பெனிக்காக ஒழச்சிருக்கான். அவனுக்கு அத குடுக்கறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்ல.”

“விக்கி நீ உனக்குனு ஒரு அடையாளத்த உருவாக்கத்தான் இன்னைக்கு ஐ.டி கம்பெனிக்கு போனன்னு நெனச்சேன்.” உத்ரா பாவமாய் சொன்னாள்.

“பகல் கனவு உதி. நான் ஒன்னும் வேலப் பாக்கறதுக்காக அங்கப் போகல. அந்த கம்பெனிய அவன்‌ பேருக்கே எழுதித் தர்றதா சொல்லத்தான் போனேன்.” எனவும், வெகுண்டெழுந்தாள்.

“சரியான முட்டாள்தனம் இது!”

“என் கம்பெனிக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கெடையாது உதி. ஸோ, நீ இதுல தலையிடாம இருக்கறது தான் நம்ம ரெண்டுபேரோட ஒறவுக்கும் நல்லது.”

அவனின் பேச்சில் அடிவாங்கியது போல் பார்த்தாள் உத்ரா. அவளை அவன் எட்டி நிறுத்தியதில் வேணிக்கு சற்று தைரியம் வந்தது.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
“அந்த மகேஷுக்கு அவன் மாமனார் வீட்டுப்பக்கம் இருந்து ஏதோ சொத்துப் பிரிக்கறதுல பெரிய லேண்டு ஒன்னு கெடைக்கப்போறதா கேள்விப்பட்டேன்டா. அதோட வேல்யூ கூட ட்வெல் க்ரோர்ஸாம். நீ என்னன்னா பொழைக்கத் தெரியாதவனா இருக்க, ஒரு பிச்சக்காரிய கல்யாணம் பண்ணிக்கிட்டு.” என்றார் அருவருப்பாக.

“ஸ்டாப் இட் மாம்! இதுக்கு மேல பேச ஒன்னுமில்ல. லீவ் மீ! லீவ் மீ அலோன்!” என்று கத்திவிட்டு மின்தூக்கியில் தனதறைக்குச் சென்றான்.

உத்ரா அவனின் பின்னேயே ஓடினாள்.

வேணி கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தார்.‌‌

அறைக்குள் வந்ததும்‌ உத்ராவின் கோபம் பலமடங்கானது.

“விக்கி உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? அந்த மகேஷ் உன்கிட்ட பொய் பொய்யா சொல்லிருக்கான்டா. அந்த கம்பெனி ஒன்னும் இப்ப நஷ்டத்துல இல்ல.” என்றாள்.

“தெரியும்.”

“அப்பறம் ஏன்டா அத தார வாக்க நெனைக்கிற?”

“எல்லாத்துக்கும் காரணம் சொல்ல முடியாது உதி.”

“இல்ல, இனியும் நான் உன்ன விடுறதா இல்ல. எல்லாத்துக்கும் நீ இன்னைக்கு காரணம் சொல்லித்தான் ஆகனும். நானும் பொறுத்து பொறுத்துப் பாத்துட்டேன். நீ அப்ப சொல்லமாட்டியா இப்ப சொல்லமாட்டியானு சோந்து போயிட்டேன்டா.

யெஸ்! உன்கிட்ட நான் சரண்டராகுறேன். நீயே உன் வாயால எல்லாத்தையும் சொல்லிரு ப்ளீஸ்! மனசு விட்டு அழுதுரு. இதுக்கு மேலயும் நீ உன் மனசுல எதயும் போட்டு பொதச்சு வைக்க வேணாம். எல்லாத்தையும் வெளிய கொட்டிரு டேமிட்!”

“என்ன கொட்டச் சொல்ற? எதுக்கு அழச் சொல்ற?”

“ஓ! அப்போ சொல்ல எதுவுமே இல்லைல?‌ என் அம்மாவுக்காக என் கழுத்துல தாலி கட்டுற லெவலுக்கு போன நீ உன் அம்மா பக்கத்துல உக்காரக்கூட மாட்டிக்கிறியே அதுக்கு என்ன காரணம்‌‌ விக்கி? அவங்க மேல உள்ள மரியாதையா? பாரேன் நீயே சிரிக்கிற?

உன் அந்தஸ்துக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத என்ன ஏன்டா கல்யாணம் பண்ணின? என்ன காதலிக்கிறதா இப்ப வர சொல்லல நீ. இந்த லட்சணத்துல அந்த கமிஷ்னர் நீ என் மேல உயிரையே வச்சிருக்கதா அளந்து விடுறாரு. இதுக்கெல்லாம் மேல உன்ன தூக்கிப்போட்டுட்டு போன அந்த அனன்யாவ எந்தப் பிரச்சனைலயும் மாட்டிவிடாம காப்பாத்த நெனைக்குற.

உன் வாழ்க்கையோட லட்சியமா நீ ஆரம்பிச்ச உன் சாஃப்ட்வேர் கம்பெனியையும் உன் ஃப்ரெண்டுக்கு தார வாக்க தயாராகிட்ட? இதெல்லாம் எதுக்காகடா பண்ற? அவ்ளோ நல்லவனா நீ? என் அனுபவத்துல ஒரு மனுஷன் இவ்ளோ நல்லவனா இருக்க முடியாதுடா.

என்னக் கேட்டா உனக்கு‌ மண்ட கொழம்பிருக்கனும். இல்ல நீ சீக்கிரமே மேலப்போறதா இருக்கனும்” என்றுவிட்டு அவளே தனது வாயை மூடிக்கொண்டாள்.

அவளின் கண்கள் அவனை அதிர்ச்சியுடன் நோக்க, சலனமின்றி பார்த்தன அவனது விழிகள்.

“நீ ஒரு நல்ல டிடெக்டிவ்னு ப்ரூவ் பண்ணிட்ட உதி. உன் பிஎஸ்சி சைக்காலஜி படிப்பு வீண் போகல.”

அவனது உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை கிரகிக்க அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டாள்.

“விக்கி நீ என்னடா சொல்ற? நீ என்னவிட்டு போறன்னா சொல்ற? நேத்துக்கூட என் அம்மா ரொம்ப தள்ளிப்போடாம சீக்கிரம் ஒரு கொழந்தயப் பெத்துக்கோன்னு சொன்னாங்கடா. உனக்கு என் சாயல்லயும் உன் சாயல்லயும் கொழந்தப் பெத்துக்க ஆசை இல்லையா?

காதல் தோல்வி ரொம்ப வலி நெறஞ்சது தான். அதுக்காக உயிரையே விட்டுடுறதா? இங்கப்பாரு நம்ம ஒருத்தவங்கள லவ் பண்றோம்னா மொதல்ல அவங்கள நம்பனும். நா ஈஸியா யாரையும் நம்ப மாட்டேன். அதான் யார் மேலயும் எனக்கு லவ் வரல. உதய்கிருஷ்ணா மேல வந்தது கூட ஜஸ்ட் இன்ஃபாக்சுவேஷனோனு இப்ப தோணுது. பட், நீ அப்படி இல்ல. நீ அவள நம்புன. அந்த நம்பிக்கைக்கு தகுதி இல்லாதவளா‌ போனது அவளோட துரதிர்ஷ்டம். அன்ட், என்னோட அதிர்ஷ்டமும். ஸோ, நீ இதுக்கு கில்டியா ஃபீல் பண்ண எந்த அவசியமும் இல்லடா.

லவ், ப்ரேக்கப், டைவர்ஸ் எல்லாம் ஒரு சிவிலைஸ்டு சொசைட்டில இயல்பானது விக்கி. இப்பவே எல்லாத்தையும் நார்மலைஸ் பண்ணிட்டிருக்காங்க நம்ம மக்கள். நீ உன் சூசைட் பிளானை மட்டும் கைவிட்டிரு ப்ளீஸ்!” என்று இறைஞ்சினாள்.

ஆனால், அது அவனை துளியும்‌ அசைக்கவில்லை. அவள் கண்களை ஆழப் பார்த்தான்.

“உதி நான் சாகப்போறேனு தான் சொன்னேன். ஆனா தற்கொல பண்ணிக்கப்போறேனு சொல்லல.” என்றான்.

அவள் புரியாமல் பார்த்தாள்.

“என் அப்பா மாதிரியே எனக்கும் கேன்சர் உதி”

ஒருகணம் அவளின் உலகமே நின்று விட்டது. மெதுவாக தன்னை சமாளித்துக்கொண்டு கேட்டாள்.

“இல்ல நீ என்கிட்ட விளையாடுற”

“எனக்கும் விளையாட்டுனு சொல்ல ஆச தான் உதி. ஆனா உண்ம அது இல்லயே”

அவளின் கடந்தகால நினைவுகளின் ஓட்டத்தில் அன்று கவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவன் ஏன் இரத்தம் கொடுக்கத் தயங்கினான் என்பதற்கான காரணமும் புலப்பட, நடைப்பிணமாக அவனருகில் வந்தாள்.

மெதுவாக அவன் முகத்தை தாங்கி, “இன்னும் எவ்வளவு நாள்?” என்றாள் தனக்கே கேட்காதபடி.

“எந்த நிமிஷம்னாலும்.” என்றவன் சொன்னதை அவளால் ஏற்கவே முடியவில்லை‌.


கலைடாஸ்கோப் திரும்பும்…
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
நானும் உங்களை கமெண்ட் த்ரெட்டில் கமெண்ட் பண்ண வைக்க பல வகையான பாடல்கள் மூலம் அழைத்துவிட்டேன். ஆனால், யாரும் மனம் இறங்குவதாய் இல்லை.

ஃபேஸ்புக்கிலும் 'நைஸ், குட்' என்ற ஒரு வார்த்தைக்கு மேல் உரையாடுவார் இல்லை. அனைத்தையும் 'ஆல் இஸ் வெல்' மனநிலையோடு கடக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்னும் மூன்று அத்தியாயங்களில் கதை நிறைவுபெறவிருக்கிறது ப்ரெண்ட்ஸ். இக்கதை உங்களுக்கு பிடித்திருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களாக!
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom