காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்
எழுதியவர்: ஷிவானி செல்வம்
அத்தியாயம் 38
மருத்துவமனை சகவாசம் முடிந்து விக்கியும் உத்ராவும் வீட்டிற்கு திரும்பிய ஒரு மாதம் சென்று, அமிகா அவர்களைப் பார்க்க அடம்பிடித்ததால் அவளுக்குப் பிடித்த இனிப்புவகைகளை வாங்கிக்கொண்டு கிருஷ்ணாபுரம்காலணி அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்கள் தம்பதியர் இருவரும்.
பானுமதி தம் மக்களுடன் ஏற்கனவே விக்கியை மருத்துவமனையிலும், வீட்டிலும் பார்த்து நலம் விசாரித்திருந்தாலும் வீட்டில் பார்த்ததும் கண்கலங்கிவிட்டார்.
எப்போதும் தன்னை உடல்நலம் எப்படியுள்ளதென்று விசாரிப்பவனை இன்று தான் விசாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது பெரும் சோகத்தை உண்டாக்கியது அவருக்கு. பிறகு, உத்ரா தான் அவரை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.
எப்போதும் விக்கியுடன் வம்பு வளர்க்கும் கவிலயாவோ அவனை பாவமாக பார்த்து வைக்க, வெறுத்து விட்டான்.
“உதி நான் எப்பவும் என் கவலைகள மறந்து சந்தோசமா உலாவுற ஒரே எடம் உன் வீடு மட்டும் தான். இவங்களும் என்ன இன்னைக்கு ஏதோ ஏலியன பாத்த மாதிரி ட்ரீட் பண்றது அன்கம்ஃபர்டபிளா இருக்கு.” எனவும், அவனின் உணர்வுகளை புரிந்து கொண்ட உத்ரா சமாதானம் சொன்னாள்.
“அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடு விக்கி. உன் பழைய பேச்சையும், அடாவடி நடவடிக்கையையும் பாத்துட்டாங்கன்னா அவங்களே மாறிடுவாங்க.”
“அது இருக்கட்டும்! நீ எப்ப நம்ம கச்சேரிய ஆரம்பிக்கலாம்னு சொல்லு?” என்றான் ஆர்வமாக.
“அது ஒரு ஒன் மன்த் ஆகட்டும் விக்கி. அப்பறம் பாக்கலாம்” என்றவள் மேம்போக்காகச் சொல்ல,
“ஒன் மன்த்தா? ம், வெயிட் பண்றேன். பட், ஞாபகம் வச்சிக்கோ. நான் என்ன பண்ண சொன்னாலும் நீ தட்டாம பண்ணனும்.”
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு. ஓவரா மெரட்டாதடா!”
அவள் வாய் தெம்பாக சொல்லிவிட்டாலும் மனம் மட்டும் அவன் என்ன செய்யப் போகிறானோ என்று பீதியடைந்தது.
அவன் ‘இவ்வளவு தைரியமா உனக்கு?’ என்று அவளை பார்வையால் கேட்டுக்கொண்டிருந்தபோது, பூஜையறையிலிருந்து ஒரு திருமண பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு வந்தார் பானுமதி.
அது அனன்யா - உதய்கிருஷ்ணாவினுடையது. ரஞ்சனி தன் விரோதிகளை வயிறெரியச் செய்ய இவ்வாறு அனுப்பியிருந்தாள்.
அதைப் பார்த்த உத்ராவும் விக்கியும் மகிழ்ச்சியில் முகம் மலர, பானுமதி, “நாளைக்கு காலைல அழகர்கோயில்ல கல்யாணமாம் உதி. இன்னைக்கு நைட் பரிசம். ரஞ்சனி நேர்ல வந்து பத்திரிக்கை வைக்கலனாலும் நான் இதுக்கு போகலாம்னு இருக்கேம்மா. அந்தத்தம்பி உதய்கிருஷ்ணாவ நான் ரொம்ப சங்கடப்படுத்திட்டேனோனு இருக்கு” என்று வருத்தப்படவும்,
“நாங்களும் வரோம் ஆன்ட்டி” என்றான் விக்கி.
ப்ரவுனி செய்து கொண்டிருந்த கவிலயாவும், திருமண பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்த உத்ராவும் ஒருசேர அவனை ‘உனக்கென்ன பைத்தியமா?’ என்பது போல் முறைத்தார்கள்.
அவன் தனது முடிவில் உறுதியாய் இருந்தான்.
அன்றைய இரவு நிச்சய மேடையில் உதட்டில் ஒட்ட வைத்த சிரிப்புடன் நின்றிருந்தாள் அனன்யா. செவ்வரளியின் நிறத்திலான கனத்த லெஹங்காவை அவளுடல் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு நிகரான அழகுடன் கறுப்பு நிற கோட்சூட்டில் கம்பீரமாக நின்றிருந்தான் உதய்கிருஷ்ணா.
உண்மையில் அன்று அவர்களின் ஜோடிபொருத்தத்தை வியக்காத ஆளில்லை.
நந்தகோபன் திடீரென உள்ளே நுழைந்த உத்ராவையும், விக்கியையும் கண்டு குழம்பினார்.
ரஞ்சனியோ, “ரோசங்கெட்டதுக” என்று முகத்தை நொடித்தாள்.
அனன்யா விக்கியைக் கண்டதும் ஒருநொடி கலக்கமடைந்தாள் என்றால் உதய்கிருஷ்ணா உத்ராவைக் கண்டதும் பதற்றமடைந்தான்.
அவர்கள் கையில் பரிசுபொருளோடு மேடையேறி இருவரையும் வாழ்த்தி விடைபெற, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நிம்மதி.
இணையர் இருவரும் புகைப்பட நிபுணரின் பக்கம் பார்வையை திருப்பியபோது விக்கியும் உத்ராவும் ஓரமாக நின்று அவர்களின் ஜோடி பொருத்தத்தை மெச்சினார்கள்.
ரஞ்சனி அவர்களை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தபோது அவள் கழுத்தில் போலி நகைகளை அணிந்திருப்பதைக் கண்ட உறவினர் ஒருவர், “என்ன ரஞ்சனி உன் நக எதயும் போட்டுக்காம கவுரிங்க அள்ளிப் போட்டிருக்க? உன் பொண்ணுக்கும் ஒரு மோதிரம் கூட தங்கத்துல இல்ல. அவளுக்கு கல்யாண வயசு வந்துட்டத மறந்துட்டியா நீ? கொஞ்சமாச்சும் தங்கம் போட்டுவிட்டா தான பொண்ணுக்கேட்டு வருவாங்க. ஆமா உன் பொண்ணுக்கு எவ்ளோ நக போடலாம்னு இருக்க ரஞ்சனி? எனக்கு தெரிஞ்ச எடத்துல பொண்ணு இருந்தா சொல்லச் சொல்றாங்க. மேகாவப் பத்தி சொல்லவா?” எனவும், தனது பெருமை பீற்றலை ஆரம்பித்தாள்.
“என்ன பாத்தா உங்களுக்கென்ன பிச்சக்காரி மாதிரி தெரியுதா சித்தி? ட்ரெஸுக்கு மேட்ச்சா இருக்கட்டுமேனு ஐயாயிரம் ரூபா வாடக குடுத்து இந்த செட்ட எடுத்துருக்கேன். எனக்கிருக்கதோ ஒரேப்பொண்ணு. அவள நான் நட்டாத்துல விட்ருவேனு நெனைக்கிறீங்களா? நான் விட்டாலும் என் தம்பி அவள கைவிட மாட்டான். அவன் பொண்டாட்டி நகைகள போட்டாவது என் பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்துருவான்” என்று மார் தட்டி சொல்ல, பின்னால் நின்றிருந்த நந்தகோபன் அவள் பேசியதையெல்லாம் கேட்டுவிட்டார்.
அவருக்கு அவளின் திட்டம் நன்றாக புரிந்துபோனது. பையனுக்காகப் பார்த்து அனன்யாவை அவர்கள் குடும்பத்தில் கட்டிக்கொடுத்தால் அவளை ஓட்டாண்டி ஆக்காமல் விடமாட்டார்கள் என்பதை உணர்ந்தவர் ரஞ்சனியை இப்போதே மிரட்டி வைக்க எத்தனித்தார்.
இருவரும் மாறிமாறிப் பேச வாக்குவாதம் முற்றியது. அனன்யா நந்தகோபனையும், உதய்கிருஷ்ணா ரஞ்சனியையும் அடக்க முயன்று தோற்றுப்போனார்கள்.
உதய்கிருஷ்ணா தனது முதலாளி வீட்டினர் வந்திருக்கும் சமயத்தில் இவ்வாறு ரகளை நடக்கிறதேயென்று பிரச்சனையை முடிக்க வேறுவழியின்றி அந்த வாக்குறுதியைத் தந்தான்.
“அனன்யாவோட நக, பணம், சொத்துனு எதயும் நான் விக்கவோ, அடகு வைக்கவோ மாட்டேன். இது நான் இங்க நிக்கிற உங்க எல்லார் முன்னாடியும் அவளுக்கு செஞ்சு குடுக்குற சத்தியம்.” என்றதும், கைத்தட்டினான் விக்கி.
அனைவரும் அவனை திரும்பிப் பார்க்க, அவன் காலை மிதித்தாள் உத்ரா. கைத்தட்டுவதை நிறுத்திக்கொண்டான்.
நந்தகோபன் தனக்கு தேவையான வாக்குறுதி கிடைத்ததும், “போம்மா! மேடைல போய் நில்லு!” என்று அனன்யாவை அனுப்பி வைத்தார்.
அவள் தனது கனத்த பாவாடையை தூக்கிக்கொண்டு நடக்க, கீழே விழுந்து புரளும் அவளின் துப்பட்டாவை ஏந்திக்கொண்டு பின்னால் சென்றான் உதய்கிருஷ்ணா.
ரஞ்சனிக்கு அதைப் பார்த்ததும் ரத்தக்கொதிப்பு அதிகமானது. அனைத்தையும் தன்னைக்கேட்டே முடிவெடுக்கும் தம்பி இன்று சுயமாக எடுத்த முடிவை அவளால் சகிக்க முடியவில்லை. தனது கையாலாகாத்தனத்தை நினைத்து கண்கள் கலங்கினாள்.