Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL சிவதாசன் எனும் நான் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
759
Reaction score
863
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
1- சிவதாசன் எனும் நான்…!

சில தினங்களாகவே காணக்கூடாத காட்சியெல்லாம் கண்டதில் ஏற்பட்ட சலிப்பும், வெறுப்பும், இவ்வளவு அவலங்களைப் பார்த்தும் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனமும் சேர்ந்த கோபத்தில் மேற்கு அடிவாரத்தை நோக்கி செங்கதிரோன் விழ, அடிவாரம் முழுவதும் ரத்தச் சிவப்பாகியது… அந்தோ! வீரத் தமிழினத்தின் மாட்சிமையை எட்டுத்திக்கும் பரைசாட்டிய வெற்றி வேந்தனை இந்நிலையில் பார்க்கும் மனோதிடம் எனக்கில்லை. இன்றோடு தமிழ் இனத்தின் வீரம், பண்பாடு, கலாச்சாரம், சுதந்திரம் அனைத்தும் அவனோடு கண்மூடப் போவதை என்னால் சகிக்க முடியவில்லை... இதோ நான் மறைந்தே போகிறேன் என்று மறைகிறான் அந்தி நேரக் கதிரவன்.

வெய்யோன் மறைய… இமைகளைப் பிரிக்க முடியாமல், மெல்ல மெல்ல இமைகளைப் பிரித்துப் பார்த்தான்... அவனுக்குப் பிடித்தமான அந்திமாலை பொழுது... சூரியன் மறைந்தும் மறையாமலும் வெளிச்சம் இருந்தும் இல்லாமலும்… மிதமான வெப்பமும், இதமான குளிரும் தாக்கியதால் உண்டான சுகானுபவத்தில் ஆழ்ந்து மூச்செடுத்தவனுக்கு, பழக்கப்பட்ட ஆனால் விரும்பத்தகாத நெடி மூக்கைத் துளைக்க, கண்களை மலர்த்தி சுற்றிலும் பார்க்கிறான்…

அரண்மனையின் தர்பார் மண்டபத்தின் முன் இருந்த பெருந்திடலின் மத்தியில் தாம் கிடப்பதை உணர்ந்தவன், "சொக்கா! இதெல்லாம் உண்மைதானோ? நான் அசுப கனவேதும் காண்கின்றேனோ? என் இனம் என் இனத்தில் பிறந்த ஒருவனாலேயே சிதைக்கப்பட்டு விட்டதா? ஏழு கடல் தாண்டி ஆட்சியமைக்க ஓடியவன் ஏழடியில் இருந்த புல்லுருவியை, சாதாரணமாக எண்ணியது இன்று இவ்வளவு பெரிய இழப்புக்குக் காரணமாகிவிட்டதே? இன்னும் யான் உயிரோடிருக்கிறேன் என்றால் கடைசி நேரத்திலும் நான் என் மக்களுக்குச் செய்ய வேண்டிய ஏதோ கடமை இருக்கிறதோ? " என்று ஈசனிடம் முறையிட்டவன், எழுந்து அமர முயற்சி செய்து, முடியாமல் போகவே, தலையை மட்டும் உயர்த்தி, தன்னைச் சுற்றிலும் பார்க்கிறான்.

"என்ன கொடுமை?... படைவீரர்கள் இரத்தத்தில் மிதக்கின்றனரே… அவர்களின் வாள் வீச்சிற்கு சிறிதும் ஈடாகாத கயவர்களின் கையால், வீழ்த்தப்பட்ட அவமானம் தாளாமல், தம் உடல் மண்ணில் சாயும் முன் உயிர் துறந்து வீழ்ந்திருக்கும் கோரக் காட்சியைக் காண்பதற்காகவா இன்னும் உயிரோடிருக்கிறேன்… வீரர்களின் முகத்தில், நேருக்கு நேர் போரிட்ட மிதப்பும், என் தாய் மண்ணை விட்டுப் பிரிகிறேனே என்ற வலியும் ஒருங்கே தெரிகிறதே… துரோகத்தால் அழியப் போகிறோம் என்று தெரிந்தும் இறுதி வரை போரிட்ட என் செல்வங்கள் மண்ணில் சாய்ந்து விட்டனரே…

அடப்பாவி துரோகி! இவர்கள் எல்லாம் நமக்காக, உன் சந்ததிக்காவும்தானே பாடுபட்டனர்… நம் இரத்தத்தை நாமே குடிப்பதைப் போன்றதடா நீ செய்த செயல்… இந்த மாபெரும் புகழுடைய வீர வம்சத்தில் இப்படி ஒரு பிறவி எப்படிப் பிறந்தாய்? அடேய்! அடி முட்டாளே! பிறரிடம் நம் குலத்தைக் காட்டிக் கொடுத்து நீ அடையப் போவதென்ன? வானவரே நடுங்கும் படையையும், வீரமும், தீரமும் இருந்த நம் நிலத்தையும் அழித்து விட்டு, உன்னை மட்டும் நன்றாக வாழ வைப்பான் என்றா நினைக்கிறாய்?... உம்முடைய தீய ஆசைக்கு நம் மக்களை அந்நியரிடம் பறிகொடுத்து விட்டாயே… அந்நியர் கையில் நம் மக்களின் நிலையை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்திருந்தால் இப்படியான ஒரு கொடூரச் செயலை நீ செய்திருக்க மாட்டாய்… வீரமும் ஈரமும் நிறைந்த நம் தமிழ் மண்ணை, முதுகில் குத்தும் கயவர்கள் கையில் கொடுத்து விட்டாயே... உனக்காக இன்று நான் மிகவும் வேதனைப்படுகிறேன்… இன்றைய உன் செயல் காலம் காலமாக நம் தமிழ் மக்களால் தூற்றப்படும்…. இனி நம் மக்கள் படும் துயரத்திற்கும், கண்ணீருக்கும் நீயே காரணமானாய்… யாரை நம்ப வேண்டுமோ அவர்களை நம்பாமல் நம்பக்கூடாத அவர்களை நம்பி, நீ சேர்ந்து இருக்குமிடம் எப்படிப்பட்டது என்று உனக்கொரு நாள் உணர்த்தும்…. மாற்றான் கொடுத்த பிச்சையில் உயிர் வாழப்போகும் உன்னைப் பார்த்து எம் தமிழ் ரத்தமே ஏளனமாக சிரிக்கிறதடா… உன்னைப் போன்றவனை, நன்கு அறிந்தும் அருகில் வைத்திருந்தது குற்றமே… பாம்பைப் பழுதென எண்ணிவிட்டேன்... இதோ என்னைச் சுற்றிக் கிடக்கும் சடலங்களைப் பார்! இவர்களுடன் ஒரு பொழுதேனும் நீ இன்புற்றிருக்க வில்லையா? இவர்கள் எதற்காக, தம் நாட்டிற்காக உயிர் துறக்க வேண்டும்? இவர்கள் உண்ட உணவைத்தானே நீயும் உண்டாய்? இவர்களிடம் உள்ள தேசப்பற்றில் சிறிதேனும் உனக்கு இல்லாமல் போனதே…" என்று வருந்தியவன்,

தன்னைச் சுற்றிலும் சடலமாகக் கிடந்த வீரர்களை நோக்கி, "நம் மண்ணின் பெருமைக்காக, உயிர்துறந்த உங்களுக்கு எம்மால் செய்யக்கூடியதென்ன?" என்று எண்ணுகையிலேயே,

அழகும், வளமும் நிறைந்த இந்நாடும், தேவரும் வியக்கும் கம்பீரமான அரண்மனையும், அரசனைக் கண்டாலே முகம் மலரும் மக்களும்… அரசனுடைய நடையின் கம்பீரத்தில் தங்களின் வீரத்தை உணர்ந்து விரைப்பாகும் வீரர்களும், அரசனின் வருகையில் குதூகலமடைந்து கனைக்கும் குதிரைகளும், தும்பிக்கை உயர்த்தி பிளிறும் யானைகளும், அவன் தேசத்துக் கொடியும் சட் சட்டென்று பிம்பங்களாய் தோன்றி மறைய,

"இந்திரலோகத்தையும் விஞ்ச, பார்த்துப் பார்த்து வடிவமைத்த நாடு, இனி தன் வேந்தனைப் பிரிந்த அவலத்தில் சீர்குலைந்து போகுமோ… மகாதேவரும் ஆசைப்பட்டு பவனி வரும் தேர்கள் வெறும் மரத் துண்டுகளாகிப் போனதே… பேணி வளர்த்து, அதன் திறமைகளைக் கண்டு பெருமையுடன் பார்த்து ரசித்த, போர் யானைகளும் குதிரைகளும் இன்று, பிணம் உண்ணும் உயிரினங்களுக்குப் பலியாவதைக் காண்கிறேனே... இப்படி ஒரு நாள் வரக்கூடாதென்று தானே அல்லும் பகலும் என் கண்ணைப் போல் காத்தேன்… இறுதியில் தன் விரலே தன் கண்ணைக் குத்தும் நினைத்துப் பார்க்கவில்லை…" என்று வருந்தியவன், தன்னுடைய இறுதி நேரம் நெருங்கியதை உணர்ந்ததும்,

வீழ்ந்த நிலையிலும் தன்னைப் பார்த்தவன்,

உடல் முழுவதும் அம்புகள் துளைக்க, அம்புகள் அனைத்திற்கும் தன் மார்பிலே இடமளித்த கர்வத்துடன்,

"என்னை ஈன்ற தாயே! எமக்குத் துணை நின்ற ஈசனே! மீனாட்சி அம்மையே! இத்தனை காலம் எனைச் சுமந்த தமிழ் மண்ணே… என் இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுகிறேன்… எனக்குப் பிறகு எம் தமிழ் மண்ணை, ஆருயிர் தமிழ் மக்களை, தாயாய் அரவணைத்து, தந்தையாய் வழிநடத்தி, இறையாக நின்று காத்தருளுவீராக… வருகிறேன்." என்று கண்மூடித் தலை சாய, இருகரங்கள் அவனுடைய தலையைத் தாங்கி, மடி மீது வைத்தது...

மிகவும் சிரமப்பட்டு, 'இவ்வேளையில் தன்னை மடியில் தாங்குபவர் யார்?' கண் விழித்துப் பார்த்தான்.

அவனுடைய தாயின் முகம் கண்களில் தேங்கிய கண்ணீருடன் காட்சியளிக்க, தனது வலது கரத்தை உயர்த்தி, அவள் கண்ணீரைத் துடைக்க எத்தனித்தவனின் வலிமை மிகுந்த கரம் அப்படியே நின்றது…

அவன் தாய் முகம் மறைந்து, வேறொரு பெண் முகம் தோன்ற,

"யாரம்மா நீர்?" என்று கேட்டான்.

"என்றும் யாராலும் வெல்ல முடியாத என் வீரத்திருமகனே… இத்தனை காலம் உன்னைப் பெருமையுடன் தாங்கிய மீனாட்சியடா நான்!" என்று கூறினாள்.

அந்த நிலையிலும் தன் மீசையை வருடிக்கொண்டே சிரித்தவன், "இதைத்தான் தாயன்பு என்பதா? வீழ்ந்து கிடக்கின்றேன்... என்னைப் பார்த்து யாராலும் வெல்ல முடியாதவன் என்கிறாய் தாயே!" என்றவனின் இதழ்களைத் தன் திருக்கரங்களால் மென்மையாக மூடியவள்,

"அப்படிச் சொல்லாதே என் வெற்றித் திருமகனே! நீங்கள் வீழவில்லையடா... வீழ்த்தப்பட்டவர்கள்… எம் வீரத்தமிழ் மகனை இதுவரை நேருக்கு நேர் நின்று போரிட்டு வெற்றி பெற ஒருவரும் பிறக்கவில்லையடா... இனி ஒருவரும் பிறக்கப் போவதுமில்லை... சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்தால் என் வீரத்தமிழ்மகன் துரோகங்களால் மட்டுமே வீழ்கிறான்... அதே வகையில்தான் நீயும் இன்று என் மடி சாய்ந்து இருக்கிறாய்…. துரோகத்தால் வீழ்த்தப்பட்டாய் மகனே நீ!" என்றார் கண்கலங்க.

"அப்படிப்பட்ட துரோகிகளையும் தாங்கள் தானே தாயே தாங்குகிறீர்கள்" என்றான் விரக்தியான புன்னகையுடன்.

"இல்லையடா... இல்லை!... எந்தத் தாயும் துரோகிகளை விரும்பி சுமப்பதில்லை… துரோகத்திற்குத் தகுந்த தண்டனை கொடுக்காமலும் இருப்பதில்லை... ஆனாலும் பொறுக்க முடியவில்லையடா… ஒவ்வொரு முறையும் வீரத் தமிழன் துரோகத்தால் வீழ்த்தப் படும்போது துடி துடித்துப் போகிறேன்… இப்படிப்பட்ட துரோகிகளையும் சுமப்பதில் வெட்கத்தில் தலை சாய்கிறேன்.. என் தவிப்பை அறிவாயா மகனே"

"தாயே! என் இறுதி மூச்சுள்ளவரை என் தாய்த்தமிழும்… என் தமிழ் மக்களும் தலைகுனிய விடமாட்டேன்… என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்…"

"உன்னுடைய கடமையை மறந்தாயா? அல்லது என்னை சாட்சியாக வைத்து உன் நண்பனுக்கு நீ தந்த வாக்கை மறந்தாயா? எழுந்து வா மகனே... எதிரியை வெல்லும் முன் துரோகிகளைக் கலைந்து எடு... தமிழினத்தில் துரோகிகளே இல்லாமல் செய்துவிடு… எம் மண்ணில் இனி துரோகம் செய்யவே அஞ்சி நடுங்கும்படி செய்துவிடு… துரோகம் செய்ய நினைக்கும் பொழுதே அவனுடைய நினைவுத்திறனையே அழித்துவிடு… துரோகி என்ற அசிங்கத்தை என்று நீ இல்லாமல் செய்கிறாயோ, அன்று பெருமிதத்துடன் நிமிரும் என் சிரசு…" என்ற மீனாட்சி அம்மையின் கூற்றுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைவதைப் போல் தோன்றியது...

ஊர் மக்கள் அனைவரும் கோட்டை வாசலில் பீதியுடன் இமைகளைக்கூடச் சிமிட்ட மறந்து, பயத்தில் உதடெல்லாம் காய்ந்து, ரத்தப்பசையின்றி முகம் வெளுத்து, கண்ணீர் ஆறாய் பெருக நின்றிருந்தனர்…

"இப்படி ஒரு கொடூரத்தை இந்த ஜென்மத்தில் நான் பார்த்ததில்லை" என்று சிலரும்,

"மீனாட்சி! சொக்கா! இதென்ன கொடுமை!" என்று சிலரும் அரற்றிய வண்ணம் இருந்தனர்…

சிலர் அந்தந்த இடத்திலேயே மூர்ச்சையாகி விழுந்தனர்…

அருகிலிருப்பவர் சின்னதாக இருமினாலே, "என்ன இப்படி இருமுகிறாய்? மிளகு ரசம் வைத்துக் குடி!" என்று கூறும் ஈரநெஞ்சம் படைத்த மக்கள் இன்றோ மூர்ச்சையாகி விழுந்தவர்களைக்கூட எழுப்பத் தோன்றாது பூமியில் வேரோடி நின்றிருந்தனர்.

அதே நேரத்தில் அரண்மனைக்குச் சொந்தமான மாட்டுக் கொட்டிலில் பதுங்கிப் பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒருவன் சென்று கொண்டிருந்தான்.

தலையில் வெள்ளை தலைப்பாகை, முகம் முழுவதும் ஒரு வெள்ளைத் துணியால் மூடி, கண்கள் மட்டுமே வெளியே தெரிந்த வண்ணம் இருந்தது… அவனுடைய கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல் ரத்தச் சிவப்பாக இருந்தது.

அவ்வப்பொழுது கைகளின் முஷ்டி இறுக்கி, அருகிலிருந்த சுவரின் மீதோ அல்லது கையில் சிக்கிய பொருளையோ அடித்து, அவனுடைய கோபத்தை வெளிப்படுத்தியவாறு வந்து கொண்டிருந்தான்.

அவன் வரவை அறிந்துகொண்ட கொட்டிலிலிருந்த பசுக்களும், காளைகளும் மிரண்டு, அதனதன் இடத்திலேயே ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றன.

வந்தவனுடைய உடற்கட்டும் அவன் கை முஷ்டி இறுகும் வன்மையும், அவன் கண்களில் தெறிக்கும் கோபத்தையும் பார்க்கும்போது அவன் மிகப்பெரிய வீரனாகத் தெரிந்தாலும், இன்றைய நிலைமையில் அங்குள்ளவர்களில் எவன் நல்லவன்! எவன் கெட்டவன்! என்று அறியக்கூட முடியாமல் குழம்பித் தவித்தன அங்கிருந்த நிரைகள்(மாடுகள்).

அன்றுவரை தங்களைச் சீராட்டி, அன்பாகக் கவனித்துக் கொண்டவர்களில் ஒருவர் கூட இன்று நடந்த கொடூரத்தைத் தடுத்து நிறுத்தவில்லை... மேலும் அப்பாதகச் செயலுக்குத் துணையிருந்தார்கள்…

அவன் கொட்டிலுக்குள் சற்று குனிந்தவாறு அங்குமிங்கும் பார்த்தபடி வந்ததும், 'யார் இவன்? இங்கே எதற்காக வந்திருக்கிறான்? இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது இந்த இடத்தில்?' என்று நினைத்த வண்ணம் பசுக்களும் காளைகளும் மிரண்டு பார்த்தன.

வந்தவனும், தன்னைப் பார்த்துப் பயந்த பசுக்களையும், காளைகளையும் அருகில் சென்று தடவிக்கொடுத்தவன், சட்டென்று மேல் கூரையில் செருகியிருந்த அருவாளை உருவினான்…

நாட்டு மக்கள் வீரர்கள், அனைவரும் கோட்டை வாசலில் நிற்க,

வைகைக்கரை ஒட்டிய மணல் பாதையில் குதிரை வண்டியில் காற்றையும் கிழித்த வேகத்தில் சென்று கொண்டிருந்தான் அந்த வெள்ளைத் தலைப்பாகை…

வண்டியில் சென்று கொண்டிருக்கும் போதே வண்டிக்குள் எட்டிப் பார்த்தான்…

வண்டியிலிருந்த சிவப்பு நிறப் பட்டுத்துணியில் கட்டப்பட்டிருந்த மூட்டை, வண்டியின் வேகத்திற்குத் தகுந்தாற்போல் அசைந்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் கண் இமைக்காமல் அதையே பார்த்தவன், பாதையில் கவனம் வைத்து குதிரை வண்டியை இன்னும் வேகமாகச் செலுத்தினான்.

சைந்தவா! சத்திகா! இன்னும் வேகத்தை அதிகப்படுத்துங்கள். யாரேனும் வருவதற்குள் நாம் இந்த எல்லையைத் தாண்டி விட வேண்டும் என்று தன் இரு குதிரைகளுக்கும் கட்டளையிட்டான்.

அயல் தேசங்களிலிருந்து தருவிக்கப்பட்ட குதிரைகள். மிகவும் உறுதியுடனும் கம்பீரத்துடனும் இருந்தன. அக்குதிரைகள் தன் தலைவன் இட்ட கட்டளையைக் காதில் வாங்கிப் புயல் போல் பறந்தன.

குதிரைகளுக்குப் பழக்கப்பட்ட வழி என்பதால் அவை தன் தலைவனின் கட்டளைக்குக் காத்திருக்காமல், செல்ல வேண்டிய இடத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தன…

அன்று காலை முதல் சிறு ஓய்வின்றி சுற்றிச்சுற்றிப் பறந்தவன், களைப்பின் மிகுதியால் வேரோடு பிடுங்கி எறிந்தவன் போல், குதிரை வண்டியின் இருக்கையில் தொப்பென விழுந்தான் அந்த வெள்ளை தலைப்பாகை.

சில காட்சிகள் அவன் கண் முன் நிழலுருவங்களாக வந்து வந்து மறைந்தன…

"எமது தமையனார் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து விட்டான்…"

... "மீனாட்சி…." என்று வானம் அதிரும் படி கத்தினான்…

….அரண்மனை பொக்கிஷங்கள் மற்றும் பல பொன், முத்து வைர, வைடூரிய ஆபரணங்களைப் பல மூட்டைகளாகக் கட்டப்பட்டிருந்தன…

….அரண்மனைப் பெண்கள் அனைவரையும் இருட்டான ஒரு பாதாளத்தில் இறங்கச் சொல்லி விரட்டினான்…

...மதகுருமார்களை நான்கு பக்கமும் அடைபட்டு வானம் மட்டும் கம்பிகளுக்கு நடுவே தெரியும்படியான, சிறைக்கைதிகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளில் ஏற்றினான்…

…அன்னை மீனாட்சியின் முன் விழுந்து வணங்கினான்…

"என் தாயையும், தந்தையையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன்… சிறையிலிருந்து அவர்களை மீட்டு விடு நண்பா…"

சட்டென்று வெள்ளைத் தலைப்பாகை அணிந்தவனின் உடல் உலுக்க, உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது…

தனது வலது கரத்தில் முகத்திலிருந்த வியர்வையை வழித்தவனின் கண்கள் தீப்பிழம்பாக எரிந்தது…

எரியும் விழிகளுக்குள் மீண்டும் அந்தக் காட்சி தோன்றியது...

….தன் சிரசை இதுநாள் வரை முத்துக்களாலும் நவ மணிகளாலும் அலங்கரித்த மணிமகுடத்தை அருகிலிருந்தவன் சிரசில் பொருத்தினான்…

"இனி இத்தேசத்தின் வேந்தன் நீயே!" என்று மணிமகுடத்தைப் பொறுத்தவன் கண்கள் கலங்க, கம்பீர சிரிப்பு முகத்தில் தவழ, தன் மீசையை முறுக்கியபடி கூற,

சிறிதுகூட முகத்தில் மகிழ்ச்சியின்றி, தலை வணங்கி மணிமகுடத்தை வாங்கியவன்,

"சிவதாசன் எனும் நான்…"

வார்த்தைகளின் எண்ணிக்கை -1318

சிவதாசனின் கர்ஜனை தொடரும்...


⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
2.சிவதாசன் எனும் நான்…!

அதிகாலை சூரியனின் செங்கதிர்கள் இதமான வெப்ப மூச்சோடு எழுந்து கொண்டிருந்தான்…

இரவு முழுவதும் நிலவு அணைத்திருந்ததால் குளர்ந்திருந்த வைகை ஆறு, செங்கதிரோனின் தீண்டல் பட்டு சிலிர்த்து, தன் வேகத்தை அதிகப்படுத்தி ஓடிக்கொண்டிருந்தது…

வைகை ஆற்றின் சலசலப்போடு குதிரைகளின் சலங்கை ஒலி கேட்டு, நீர் அருந்த வந்த புள்ளினங்கள், "விடிகாலையிலேயே நம்மைத் தொந்தரவு செய்வது யார்?" என்று சலங்கை சத்தம் வரும் திசையைப் நிமிர்ந்து பார்க்க, அங்கே இரண்டு குதிரைகளில் இரு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.


மெதுவாக நடந்து வந்த இரு குதிரைகளும், குதிரைக்கு அணிவிக்கப்படும் எல்லாவிதமான அணிகலன்களும் அணிவிக்கப்பட்டு அழகாக வந்துகொண்டிருந்தன...


குதிரையின் பிடரியில் 'செவ்உளை' எனப்படும் பிடரியில் அணிவிக்கப்படும் சிவந்த அணி இருந்தது. கழுத்தில் ‘வல்லிகை’ எனப்படும் கழுத்தணி அணிவிக்கப் பட்டிருந்தது...

குதிரையின் தலையின் ஓரங்களிலிருந்து காதுவரை 'சாமரை' அணிவிக்கப்பட்டிருந்தது… புருவத்திற்கு மேலே தாழ்ந்து வந்த 'கண்ணுறை' அழகுக்கு அழகு சேர்த்தது...

குதிரையின் நெற்றியில் அணிவிக்கப்பட்ட 'உத்திரியப் பிடி' பார்ப்போர் கண்களுக்கு விருந்து அளித்தது... ‘பல்பிடி கண்டிகை’ எனப்படும் பல நூலாலான கழுத்து மாலையும் அதில் தங்கத்தாலான சதங்கைகளும் பொருத்தி, குதிரையின் அசைவுக்குத் தகுந்தாற்போல் இசைத்தது.

குதிரையின் மேலேறி அமர்பவர்கள் பிடித்துக் கொண்டு ஏற வசதியாக, 'நூபுரப்புட்டில்' என்னும் கயிற்றைக் குதிரையின் இடையில் கட்டியிருந்தது.

இவ்வாறு அலங்கரித்த குதிரையின் மீதேறி வரும் அந்த இரு இளைஞர்களும் காண்பதற்கு, ஒரு தேசத்தின் உயரிய குலத்தவர்கள் போல் அணிமணிகள் அணிந்திருந்தனர்… பதினைந்து வயதிற்கே உரிய இளமையும், பற்பல பயிற்சிகளின் விளைவில் முறுக்கேறிய தோள்களும், மாநிறத்தில் பளபள வென்றிருந்த தோலும்… இராச கலையுடன் கூடிய வதனமும், நெருப்புப் பறந்த கண்களும், அடர்ந்த சுருள் சிகையும், குதிரையைக் கையாண்ட லாவகமும், புள்ளினங்களையே கண்ணிமைக்க மறந்து ரசிக்க வைத்தன.

அவர்களோ குதிரையை வேகமாக ஓடவிடாமல் மெல்ல நடத்தி வந்தனர்…

"இவர்கள் இப்போதைக்கு இங்கிருந்து போவது போல் தெரியவில்லை… இவ்வளவு மெதுவாக நடந்து வருவதற்கு எதற்காகக் குதிரைகள் மீது வரவேண்டும்? குதிரையை விடுத்து, இவர்கள் இருவருமே நடந்து வந்து இருக்கலாமே!" என்று தங்களுக்குள் அவ்விருவரையும் கிண்டல் செய்தபடி, "சரி வாருங்கள் நாம் கிளம்புவோம்!" என்று சொல்லி பறவைகள் பறந்தன…

"என்ன மாறா? எதுவும் பேசாமல் வந்து கொண்டிருக்கிறாய்?" என்று இரு இளைஞர்களில் ஒருவன் கேட்டான்.

"எப்படி ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை விக்ரமா!"

"நாளை, இப்பாண்டிய பெரு தேசத்தின் இளவரசுப் பட்டம் உனக்குக் கொடுக்கப் போகிறார்கள். அதைப்பற்றிய யோசனை தானே?" என்று விக்ரமா என்று அழைக்கப்பட்டவன் கேட்டான்.

"ஆமாம்!" என்பதைப் போலத் தலையாட்டினான் மாறன்.

"நினைத்தேன்!" என்று சிரித்த விக்ரமன், "நீ மட்டுமில்லை… நம் நாட்டு மக்கள், குறுநில மன்னர்கள், சோழர்கள் என்று தென்னக தேசங்களில் வசிக்கும் சிறு உயிரினம் கூட, இவ்வேளையில் இதே சிந்தனையுடன் தான் உலவுகின்றன..."


"என்ன பேசிக்கொள்கிறார்கள் நம் நாட்டு மக்களும், மற்ற தேசத்தவர்களும்?"

"சுந்தரன் இருக்க, மாறனுக்கு இளவரசுப் பட்டம் கொடுப்பது நல்லதல்ல என்று ஒரு சாராரும், சுந்தரனுக்கு சுகபோகத்தில் தான் நாட்டம் அதிகம்… அவன் கையில் பாண்டிய நாட்டை ஒப்படைக்க நம் மன்னர் தயங்குவதில் தவறில்லை… மாறன் சிறு பிராயத்திலிருந்தே நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் மிகுந்த அன்பும், ஆற்றலும் கொண்டவன், அதனால் மாறன்தான் இளவரசன் ஆகவேண்டும் என்று ஒரு சாராரும் பேசிக் கொள்கின்றனர்."

"நண்பன் என்பதால் மேலோட்டமாக கூறுகிறாய் என்பது எனக்குப் புரியாமலில்லை விக்ரமா… என்னுடைய செவிக்கும் சில வேண்டாத வார்த்தைகள் வந்து விழத்தான் செய்கின்றன… சுந்தரன் தான் பட்டத்தரசியின் மைந்தன்… அவன் தான் இளவரசனாக வேண்டும். அதைவிடுத்து மன்னரின் ராணிகளில் ஒருத்தியின் மகனான இளையவன் மாறன் இளவரசு பட்டம் ஏற்பது அவ்வளவு சரியில்லை! என்று கூறுவதும் எனக்குக் கேட்கிறது விக்ரமா!' என்றான் மாறன்.

"நீயே சொல்லி விட்டாயே, வேண்டாத வார்த்தைகள் என்று! பிறகு ஏன் கவலைப்படுகிறாய்? உன் மாமன் பெருங்கிள்ளி பாண்டியர் என்ன சொல்கிறார்?"

"அவர், என் பெரியன்னை பெருந்தேவியின் உடன் பிறந்தவராக இருந்தாலும், என் தந்தை மாமன்னர் மாறவர்ம குலசேகர பாண்டியர் எடுக்கும் முடிவு தான் சரியானது என்று கூறுகிறார்"

"பிறகென்ன? உன் மாமா நல்ல அனுபவசாலி! நம் தேசத்தின் மீது அக்கறை உள்ளவர்... அவர் கூறுவது சரியாகத்தான் இருக்கும்! இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டிற்கு, ஒரு வீர தீரன் தான் அரசாள வேண்டும்"

"ஆனாலும் பட்டத்தரசியின் மகன் இல்லையே நான்!" என்ற மாறனின் தோளைத் தொட்ட விக்ரமன்,

"எல்லாவற்றையும் விடு! யோசித்துப்பார்! இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டை சுந்தரன் போல் சுகபோகி ஆண்டால், நம் நாட்டின் நிலை என்ன ஆகும்?" என்று கேட்டான்.

"ஆனால் எனது பெரியன்னை பட்டத்தரசி பெருந்தேவிக்கும், அரண்மனையில் உள்ள ஒரு சிலருக்கும் அவ்வளவாக விருப்பமில்லை விக்ரமா!"

"பெருந்தேவியின் நிலையிலிருந்து பார்த்தால், அவர் எண்ணம் சரியாகத்தான் தெரிகிறது... 'தான் பட்டத்தரசியாக இருக்கும் பொழுது, தனது மகன் அடுத்த இளவரசனாக வர வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை... ஆனால் அந்த நினைவு சுந்தரனை வளர்க்கும் விதத்தில் இருந்திருக்க வேண்டும்... அதை விடுத்து, தன் மகன்தான் அரசனாகப் போகிறான் என்ற நம்பிக்கையில், அவனுக்கு, ஒரு நாட்டை ஆளக்கூடிய பொறுப்பு, அதற்கான புத்தி சாதுரியம், மற்றும் வீரதீர செயல்களிலும் ஆர்வமில்லாமல் வளர்த்தது தவறுதானே? பெருந்தேவியார் ஒரு மகனின் தாயாக மட்டுமின்றி ஒரு நாட்டின் மகாராணியாக யோசித்தால், நீ இளவரசனாகப் பொறுப்பேற்பதே நாட்டிற்கு நலம் பயக்கும் என்பதை அறிவார்."

இவ்வாறு பேசிக்கொண்டே குதிரையில் சவாரி செய்தவர்களைக் கவனித்த ஒரு வீரன், ஆற்றங்கரையில் நெருக்கமாக வளர்ந்திருந்த பனை மரங்களுக்கு நடுவே, மறைவாகக் கட்டப்பட்டிருந்த தன் குதிரையின் மீதேறிச் சென்றான்.

அரண்மனை அந்தப்புர உப்பரிகையில் நின்றவாறு இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பெருந்தேவியிடம் சேடிப்பெண் அழைத்துச் செல்ல, ஆளரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்த பெருந்தேவியைப் பணிந்து நின்றான் அக்குதிரை வீரன்…

"வந்த விபரம்?" என்ற பெருந்தேவியின் கம்பீரக் குரல் கேட்டதும்,

"மாறனைப் பின் தொடர்ந்ததில் அவருக்கும் இளவரசு பட்டம் கிடைப்பதில் விருப்பமிருக்கிறதென்றே தெரிகிறது தாயே!" என்றான் குனிந்த தலையை உயர்த்தாமல்.

"சரி! நீ போகலாம்!" என்றவர், தனது அந்தரங்க சேடிப்பெண்ணை அழைத்து,

"நான் அவசரமாக என் தமையனார் பெருங்கிள்ளிப் பாண்டியரைப் பார்க்க விரும்புவதாகக் கூறி அவரை அழைத்து வரச்செய்!" என்று கட்டளை பிறப்பிக்க, அப்பெண், பட்டத்தரசியைப் பணிந்து வெளியேறினாள்.

அரண்மனை அந்தப்புரத்திற்கு அருகில் இருக்கும் கொற்றவை கோயில் மண்டபம்….

"நான் வந்து அரை நாழிகையாகப் போகிறது பெருந்தேவி!…" என்றார் பட்டத்தரசியின் தமையன் பெருங்கிள்ளி பாண்டியன்.

"சுந்தரன் இளவரசனாக வழிகள் இல்லையா?" என்று பெருந்தேவி நேரடியாக விசயத்திற்கு வர,

"நிறைய இருந்தது… ஆனால் அதையெல்லாம் வீணடித்தது யார்? இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை… இளவரசுப் பட்டம் தானே மாறனுக்கு வழங்க இருக்கிறோம்… இனி வரும் காலங்களையாவது உனது மகன் சரியாகப் பயன்படுத்தி, அரசரின் நன்மதிப்பைப் பெற்றால், சுந்தரன் அடுத்த அரசராவதற்கு வழியிருக்கிறது."

"ஏன் என் மகனுக்கு அரசனாகும் தகுதி இல்லையென்றா நினைக்கிறீர்கள்?"

"அப்படிச் சொல்லவில்லை… நாட்டை ஆள, அரச பரிவாரங்களை வழிநடத்த, மக்களைப் பேணி காக்க, எதிரிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பது அவ்வளவு எளிதன்று… அதற்கு உரிமை மட்டும் போதாது…"

"ஒரு முறை, தன் வீரத்தை வெளிப்படுத்தியதால், மாறனுக்கு மட்டும் நீங்கள் கூறும் தகுதிகள் வந்துவிட்டதாக அர்த்தமா?"

"பாண்டியப் பேரரசின் பட்டத்தரசி போலவா பேசுகிறாய்? எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில், மாறன் தன் வீரத்தை மட்டுமல்ல, தனக்கான பொறுப்பையும் வெளிப்படுத்திய அந்த நாளை அவ்வளவு சீக்கிரமாக மறக்க இயலாது தேவி" என்று அவர் கூற,

அந்நாளைய நிகழச்சியை இருவரும் நினைத்துப் பார்த்தனர்…

பாண்டியப் பேரரசர் முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியன் தனது படைகளைத் திரட்டி ஈழத்தின் மீது போர்தொடுக்கச் சென்றிருந்த வேளையில் திடீரென்று கொட்டை வாயில்கள் மூடப்பட்டன…

வேகமாக அரண்மனை தர்பார் மண்டபத்தில், அரசவை அமைச்சர்கள் மற்றும் போருக்குச் சென்ற தளபதிகள் போக எஞ்சியிருந்த சேனைத் தலைவர்கள், பட்டத்தரசி முன்னிலையில் கூடினர்.

"பெரும் வரலாறு கண்ட பாண்டிய தேசம் வாழ்க! சங்கம் வளர்த்த இப்பாண்டிய தேசத்தின் மன்னர், வீராதி வீரர், 'எம் மண்டலமும் கொண்டருளிய குலசேகரர்', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்'..., ஸ்ரீ ஸ்ரீ மாறவர்ம குலசேகர பாண்டியர் வாழ்க! பாண்டியப் பேரரசின் பட்டத்தரசி பெருந்தேவி வாழ்க!... நம் அரசர் மாறவர்ம குலசேகர பாண்டியர் அவர்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பாண்டிய தேசம் செல்வச் செழிப்போடு காணப்படுகிறது… அதற்கு அவரின் அரசியல் உத்திகள் மட்டுமல்ல போர்களும் காரணம் என்பதை யாம் அனைவரும் அறிவோம்… நம் அரசர்
கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், ஆகிய நாடுகளை வெற்றி கொண்டவர்.
மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை வென்றவர்…. அன்னாரின் பெருமைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்… அத்தகைய வீர வேந்தர், ஈழத்தை நோக்கி போருக்குச் சென்றிருக்கும் இவ்வேளையைப் பயன்படுத்திக் கொண்டு, நம் ஆட்சிக்குட்பட்டு கப்பம் செலுத்திவரும் சிற்றரசர் திருவழுதி அவர்கள், நம் நாட்டை நோக்கி படைகளைத் திரட்டி வந்து கொண்டிருக்கிறார் என்று ஒற்றர் மூலம் செய்தி வந்துள்ளது." என்று தலைமை அமைச்சர், அவையில் உள்ளோரிடம் கூறி பட்டத்தரசியை வணங்கிவிட்டு தமது இருக்கையில் அமர்ந்தார்.

"போருக்கான அழைப்பு வரவில்லையே?" என்று கேட்டார் பட்டத்தரசி

"படைகளைத் தயார் நிலையில் நம் நாட்டின் எல்லையில் நிறுத்திவிட்டு, சம்பிரதாயமாக அழைப்பு விடப்போவதாகவும் தகவல் வந்திருக்கிறது…"என்றார் மற்றொரு அமைச்சர்

"எதற்காக இந்த போராம்?"

"தன்னாட்சி உரிமைக்காக!"

"நம் அரசுக்குக் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசராகிய திருவழுதிக்கு நம்மையே எதிர்த்துப் போர் திரட்டும் துணிவு எப்படி வந்தது?"

"நம் அரசர், படை முழுவதையும் திரட்டி ஈழம்வரை சென்றிருக்கும் தைரியம்… விபரம் அறிந்தாலும் உடனே திரும்பி வரமுடியாத சூழ்நிலையை அவருக்குச் சாதகமாக்கிக் கொள்ள வருகிறார்."

"என்ன ஒரு நரித்தனமான செயல்… இங்கிருக்கும் சேனைகளைக் கொண்டு அவரை வெல்ல முடியாதா?"

"ஏன் முடியாது? ஆனால் படை நடத்திச் செல்ல தலைமை இல்லாததே இப்போதைய கவலை…"

"நம் இளவரசர் தலைமையில் படை நடத்தலாமே?"

"போருக்கு வருபவன் போர்திறைமைகளில் வல்லவன், நம் இளவரசர் போர்க்கலைகளில் சிறந்தவராயினும் இதுவரை போர்க்களம் காணாதவர், மேலும் தற்சமயம் இளவரசர் சுந்தரர் தனது தாயாதி நாட்டிற்குச் சென்றிருப்பதும் சிக்கலான விசயம்." என்றார் பெருங்கிள்ளி பாண்டியரின் பிரதிநிதி.

"இளவரசர் சுந்தரர் விரைவில் மதுரை வர ஏற்பாடு செய்யுங்கள்... நம் நட்பு சிற்றரசர்கள், குறுநில மன்னர்களுக்குத் தூது அனுப்புங்கள். விரைவில் நம் சேனைகளை ஏற்று நடத்தத் தகுந்த ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்… நாளை அரசவையில் சந்திப்போம்!" என்று பட்டத்தரசி பெருந்தேவி கட்டளையிட்டதும் சபை கலைந்தது.

வைகை ஆற்றின் அக்கரையில், அரண்மனைக்குச் சொந்தமான அந்தப் பெருந்திடலில் ஆங்காங்கே வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். யானைகளை ஒருபுறம், குதிரைகளை ஒருபுறம் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தனர்…

அப்பொழுது, திடீரென குதிரைகள் நாலாபுறமும் சிதறி ஓட, காலைநேரப் பனியைச் சிதறடித்து கதிரவன் தோன்றுவதைப் போல, சிதறி ஓடிய குதிரைகளின் பின்னணியிலிருந்து தனது குதிரையில் காற்றைக் கிழித்துக்கொண்டு மாறன் வெளிப்பட்டான்… குதிரைக் கூட்டத்திலிருந்து விடுபட்டவுடன் தன் குதிரைக்கு மாறன் சமிக்ஞை செய்ய, அவனுடைய குதிரை வினோதமாகக் கனைத்தது… அந்த சப்தத்தைக் கேட்ட மற்ற குதிரைகள் அப்படியே திரும்பி மாறனையும் அவனுடைய குதிரையையும் பார்த்ததும், மீண்டும் பழைய நிலையில் அதனதன் இடத்திற்குச் சென்று நின்றுகொண்டன.

இதையெல்லாம் பார்த்தபடி வந்துகொண்டிருந்த விக்ரமன், "நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது... நீ இங்கே குதிரைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய்?" என்று மாறனிடம் கேட்க,

தன் குதிரையின் வேகத்தைக் குறைத்து, விக்ரமன் அருகில் வந்த மாறன், " என்னைப் பார்த்தால் விளையாடுவதுபோலா தோன்றுகிறது? குதிரைகளைப் பழக்கப்படுத்துகிறேன்… எதன் காரணமாகவும் அதிர்ச்சியால் பயந்து குதிரைகள் தம்மிடத்தை விட்டு ஓடினாலும், என் குதிரையின் கனைப்பு சப்தம் கேட்டதும் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு பழைய நிலைக்குத் திரும்பிவிடும்… இது போர்க்காலங்களில் எதிரியை குழப்பிவிட உதவும்… நம் வீரர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்." என்று கூறி சிரித்த மாறனிடம்,

"இப்பொழுது நம்மிடமுள்ள குறைந்த அளவு சேனைகளை வைத்து நாம் போரிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது… சிற்றரசர் திருவழுதி போருக்கு ஆயத்தமாகி நம் எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்."

"என்ன ஆயிற்று அவருக்கு? இதுவரை நல்ல முறையில் தானே கப்பம் செலுத்தி வருகிறார்?"

"சுயாட்சி வேண்டுமாம்!"

"ஹஹ்ஹஹாஹா! மிக நல்ல தருணம்… அனுபவசாலி ஆயிற்றே சரியான பொழுதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்…"

"அவர் நம் மீது போர் தொடுத்து வருகிறார் நீ அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறாயே?"

"ஹஹ்ஹஹாஹா… அது சரி நீ என்னைத் தேடிவந்த நோக்கத்தைச் சொல்லவில்லையே"

"நான் வந்ததே இந்த விசயமாக உன்னிடம் பேசத்தான்… அங்கே போர் தலைமையேற்று நடத்தத் தகுந்த வீரனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்…"

"சுந்தரனும், மாமா பெருங்கிள்ளி பாண்டியரும் இருக்க வேறொருவரைத் தேடுவானேன்."

"சுந்தரன் ஏதோ காரியமாக தூரதேசம் சென்றிருப்பதாகத் தகவல்."

"என்ன சொல்கிறாய் விக்ரமா?"

"நடப்பதைச் சொன்னேன்."

"மாமா எங்கே?"

"அவர்தான் உன்னிடம் விசயத்தைக் கூறச் சொல்லி விட்டு அவரது படையுடன் இங்கு வந்து கொண்டிருக்கிறார்."

"யோசிக்கவும் நேரமில்லை… நீ போருக்குத் தலைமை தாங்க தயாராகு… நானும் வருகிறேன்."

"தொலைந்தான் திருவழுதி அவன் தலையைக் கொய்து, ஈழப்போரிலிருந்து வென்று வரும் என் தந்தைக்குப் பரிசளிக்கிறேன்!" என்று தன் வாளை வானை நோக்கி ஏந்தியவாறு போருக்கு அந்த நிமிடமே தான் தயார் என்பதை வெளிப்படுத்தினான் மாறன்.

வார்த்தைகளின் எண்ணிக்கை- 1317

சிவதாசனின் கர்ஜனை தொடரும்...
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
Last edited:

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்-3

சைந்தவன் மற்றும் சத்திகனின் கனைப்புச் சப்தம் வெள்ளைத் தலைப்பாகை அணிந்தவனை சுய உணர்வுக்குக் கொண்டு வர, வண்டி ஓடாமல் நின்றிருப்பதைக் கண்டதும் தாம் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டவன்,

"இங்கு வசந்த மண்டபத்தைக் காணோமே சைந்தவா? அவர்களையும் காணவில்லையே, முன்கூட்டியே வந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருப்பதாகச் சொன்னார்கள்?" என்றவன் வண்டியிலிருந்து இறங்கி நின்றபடியே அந்த அடர்ந்த வனத்தைச் சுற்றிலும் யாரையோ தேடினான்.

பிறகு சைந்தவன், சத்திகன் என்ற இரு குதிரைகளிடம், "சரி நீங்கள் பசியாறி சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் சென்று பார்க்கிறேன்." என்று கூறி இரு குதிரைகளையும் வண்டியின் பிணைப்பிலிருந்து விடுவித்தான். ஆனால் இரு குதிரைகளும் நகராமல் நின்ற இடத்திலேயே நின்றன. அதைக்கண்ட வெள்ளைத் தலைப்பாகை,

"என்ன பசியாறவில்லையா?" என்று கேட்டபோது தான் குதிரைகளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான்.

குதிரைகளின் மனம் புரிந்து கொண்ட வெள்ளைத் தலைப்பாகை ஒன்றும் கூறாமல் குதிரைகளைத் தடவிக் கொடுத்தபடி, அதன்மீதே தன் தலையைச் சாய்த்தான்.

"வந்து விட்டீர்களா? அதோ அங்கே வாருங்கள்" என்று ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டியபடி முன்னால் நடந்தாள் ஒரு பெண்.

"நிலா! வசந்த மண்டபத்தில் தானே ஏற்பாடு செய்வதாக இருந்தோம்?" என்று அந்தப் பெண்ணை,வெள்ளைத் தலைப்பாகைக் கேட்க,
"நாங்கள் நேற்றே வந்துவிட்டோமல்லவா? எங்களுடன் சில நம்பிக்கைக்குரிய வீரர்களை அழைத்து வந்தோம். அவர்கள், வசந்தமண்டபம் யார் கண்ணுக்கும் புலப்படா வண்ணம், ஆங்காங்கே இருந்த மரங்களை வேரோடு எடுத்து வந்து, வசந்தமண்டபத்தைச் சுற்றிலும், நெருக்கமாக அரண் போல நட்டு வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்." என்று கூறியபடி நடந்த, அந்த நிலா என்ற பெண்ணை, குதிரைகளை மீண்டும் வண்டியில் பிணைத்து, பின்தொடர்ந்தான் வெள்ளைத் தலைப்பாகை.

நிலா, சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு மண்டபம் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. அவ்வளவு நெருக்கமாகவும் புதர்மண்டிக் கிடந்தன மரங்கள்…

அவற்றையெல்லாம் விலக்கி குதிரை வண்டியைக் கொண்டு செல்வது சற்று கடினமாகவே இருந்தது… செயற்கையாக உருவாக்கப்பட்ட அந்தக் கடின பாதையில் சிறிது தூரம் சென்ற பின் வசந்தமண்டபம் கண்களுக்கு எட்டியது.

அந்தச் சிறிய வசந்தமண்டபத்தைப் பார்த்தவனுக்குக் கண் கலங்கியது.

"இப்படி ஒரு ஏற்பாட்டிற்காகத் தான் முன்னரே இந்த வசந்தமண்டபத்தைக் கட்டி வைத்தாயா?" என்று மண்டபத்தைப் பார்த்தபடி தன் வாய்விட்டுப் புலம்பினான்.

தலைப்பாகை என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாற் போல் அந்த இரு குதிரைகளும், வினோதமான சங்கேத ஒலியில் கனைத்தன.

குதிரைகளுடன் தலைப்பாகை வசந்த மண்டபத்தை அடையவும் மண்டபத்திலிருந்து நாற்பது வயதை நெருங்கிய ஒருவர் இவர்களை நோக்கி வந்தார்.

என்னதான் மாறுவேடத்தில் அவர் சாதாரண குடியானவன் போல் இருந்தாலும், அவருடைய கம்பீரமான நடையையும் வலுவான தேகத்தையும் ஒளி பொருந்திய முகத்தையும் பார்க்கும்போதே அவர் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

வெள்ளைத் தலைப்பாகையும் அந்த மனிதரும் சேர்ந்து வண்டியிலிருந்த சிவப்பு மூட்டையை எடுத்து, வசந்தமண்டபத்தில் கொண்டுபோய் வைத்தனர்.

மண்டபத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்த்த வெள்ளைத் தலைப்பாகையின் கண்கள் சிவந்து கண்ணீர் வழிந்தது.

"இதே இடத்தில், இந்த மண்டபத்தில் எத்தனை நாட்கள் ஓய்வெடுத்து இருப்போம்… எத்தனை நாட்கள் மகிழ்ந்து களித்திருப்போம்… இப்பொழுதும் நீ, நான், நம் சைந்தவன், சத்திகன் நான்கு பேரும் இதே வசந்தமண்டபத்தில் தான் இருக்கிறோம்... ஆனால் பழைய சந்தோஷம் இல்லை… உன்னுடன் இப்படி ஒரு கோலத்தில் நான் இங்கு வருவேனென்று ஒரு நாளும் நான் நினைத்ததில்லை." என்று அதற்குமேல் நிற்கமுடியாதவனாக, மண்டியிட்டு அமர்ந்து அன்னாந்த நிலையில் வாய் விட்டு அழ ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து அவன் தோளைத் தொட்ட அந்த மனிதர், "போதும்! நேரமாகிவிட்டது. யாரேனும் வந்துவிடக் கூடும். அந்த மாபாவிகள் கண்களில் பட்டால் இந்த இடத்தையும் சிதைத்து விடுவார்கள்… மனதைத் திடப்படுத்திக் கொண்டு வா… ஆக வேண்டியதைப் பார்ப்போம்!" என்று கூறிய அவர் கண்களிலும் தண்ணீர் இருந்தது.

மண்டபத்தைச் சுற்றிலும் வாழை மரங்கள் நடப்பட்டுத் தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அம்மண்டபத்தின் நடுவில் முப்பது விசை நிறையுள்ள அகில், சந்தனம், தேக்கு போன்ற உயர்தர மரங்கள் சிதை வடிவில் அடுக்கப்பட்டு இருந்தன…

பெரியவரும் தலைப்பாகையும் சேர்ந்து சிவப்பு பட்டுத் துணியால் கட்டி இருந்த மூட்டையை அவிழ்க்க, உள்ளே! மேந்தோல் (வெளிப்புறத்தோல்) இல்லாத மனித உடல் இருந்தது...

அதைப் பார்த்ததும் மீண்டும் வெள்ளைத் தலைப்பாகை கதறியழ,

"இப்படி ஒரு மாபாதகம் வந்துவிடும் என்று நினைத்துத்தான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்... ஆனால் அந்தப் பாவியின் காதில் விழவில்லையே… கடைசியில் அந்த இரக்கமற்ற மிருகங்களின் கையில் உன்னைக் கொடுத்து விட்டானே… இதே உன் உடலை, எத்தனை முறை நான் பெருமையாகப் பார்த்து ரசித்திருப்பேன்… இன்று தோல் உரிக்கப்பட்ட இந்த நிலையிலா நான் உன்னைக் காண வேண்டும்... என்னை மன்னித்துவிடு... உன்னுடைய இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமோ என்று என் மனம் கதறித் துடிக்கிறது…" என்ற அந்தப் பெரியவரும் அரற்றினார்.

அவர்களுக்கு அருகில் நின்று அழுத நிலா, "எவ்வளவு நாள் அழுதாலும் தீராத வேதனை இது... ஆனால் இப்பொழுது அதற்கு சந்தர்ப்பம் இல்லை…. இறுதி யாத்திரையாவது நல்லபடியாக நடக்கட்டும்... சீக்கிரம் வந்த காரியத்தை முடித்துச் செல்வோம்…" என்று கூற,

அந்தத் தோல் அற்ற உடலை எடுத்து சந்தன மரக்கட்டைகள் அடுக்கிய சிதை மேல் வைத்து, அதன் மேல் சில கட்டைகளை வைத்து உடல் தெரியாத வண்ணம் அடுக்கினர்.

வெள்ளைத்தலைப்பாகையும், நிலாவும், அந்தப் பெரியவரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

"மீனாட்சி, சொக்கநாதா!" என்று கடவுளை அப்பெரியவர் வணங்க,

"மீண்டும் உன்னை வெற்றியுடன் சந்திக்கிறேன்… எனக்காகக் காத்திரு…" என்று கூறி சிதையில் நெருப்பை வைத்தான், வெள்ளைத் தலைப்பாகை.

பகை முடிக்காமல் இறந்த வெஞ்சினம் வெளிப்பட்டது போல, சிதையின் நாலாபுறமும் சீறி எழுந்த அக்கினிச் சூழலில் உடல் எரிந்து, மறைந்து சாம்பல் ஆகியது.

"இனி என்ன செய்வதாக உத்தேசம்?" என்று தலைப்பாகையிடம் அந்தப் பெரியவர் கேட்க,

"இனி எவனும் அந்த அரியணையில் நிம்மதியாக அமர விடமாட்டேன். அந்த மனித மிருகங்களை நமது தேசத்தை விட்டுத் துரத்தி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்!" என்று வெள்ளைத் தலைப்பாகை கூற,

"அதுவரை எங்கே மறைந்து வாழப் போகிறாய்? நீ உயிருடன் இருப்பது தெரிந்தால், உன்னையும் விட்டு வைக்க மாட்டார்கள்… பழைய பெயரில் அழைக்காமல் இனி உன்னை சீலன் என்றே அழைப்போம்." என்று அந்தப் பெரியவர் கூறியதும்.

"சீலன்!" ,"சீலன்" என்று இருமுறை தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், "நல்லது! நான் கொல்லிமலைக்குப் போகிறேன்… நீங்கள் அவ்வப்போது அனுப்பும் தகவலைக் கொண்டு கொரில்லா போர் முறையைக் கையாள இருக்கிறேன்…" என்றவனைப் பார்த்தவர்,

"வீரத்தோடு, மீனாட்சி சொக்கரின் துணையும் உனக்கு இருக்கட்டும்… இந்தப்பெண்... பெயர் என்னம்மா?" என்று நிலாவிடம் அவர் கேட்க,

"நிலா!" என்றாள்.

"நல்லது… உன் வடிவில் நங்கையைப் பார்க்கிறேனம்மா… அதனால் தான் கொஞ்சம் மனதைரியமாக இவ்வளவு காரியம் செய்ய முடிந்தது..." என்றவர் வெள்ளைத் தலைப்பாகையைப் பார்த்து,

"இந்தப் பெண்ணைப் பத்திரமாக அவள் இல்லத்தில் சேர்த்துவிடு... நான் சைந்தவனை (குதிரை) என்னுடன் கூட்டிச்செல்கிறேன்… அவனையே உன்னிடம் தூதனுப்புகிறேன்… நீ சத்திகனை (குதிரை) வைத்துக்கொள்… உனக்கு என்ன தேவையென்றாலும் எனக்குத் தெரியப்படுத்து… வீரர்கள், ஆயுதம் எதுவாயினும்… இனி, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் இருக்கட்டும்…. யுத்த அறநெறிக்குப் பொருள் கூடத் தெரியாத அந்த மூர்க்கனை, அவன் வழிமுறையிலேயே சென்றால்தான் வெற்றி கிட்டும்... நீ நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஜெயமாகட்டும்!" என்று வாழ்த்தி பெரியவர் விடைபெற்றார்.

இரு குதிரையால் இயங்கும் அவனுடைய குதிரை வண்டியில் சைந்தவனோடு, அந்தப் பெரியவர் ஏறி வந்த குதிரையைப் பிணைத்து அவரை அனுப்பி வைத்தான் சீலன். (இனி நாமும், வெள்ளைத் தலைப்பாகையை சீலன் என்றே அழைப்போமே)

அவர் சென்ற பிறகு, அந்த அடர்ந்த கானகத்தை விட்டு, சீலனும், நிலா என்ற பெண்ணும் ஆளுக்கொரு குதிரையில் ஏறி காவிரி நதிக்கரைக்கு வந்தனர்...

அவளுக்கும் விடை கொடுக்கும் நேரம் நெருங்கவே,

அந்தப் பெண்ணிடம், "நிலா! உன்னை அங்கே அனுப்பத் தயங்குகிறேன்… நீ எதற்கும் ஒரு முறை நன்றாக யோசித்து முடிவெடு… நீ செல்லப்போவது சிங்கத்தின் குகையல்ல, நேருக்குநேர் போரிட… அறம் என்பதே அறியாத, பெண்ணினத்தின் மகத்துவம் தெரியாத, சதைவெறி பிடித்த காட்டேரிகளின் இருப்பிடம்."

"ஆனால், நான் ராணியின் அந்தரங்க சேடிப்பெண்ணாகத்தானே செல்கிறேன்…"

"அங்குள்ள அக்கிரமம் பிடித்த பெண்பித்தன் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என்பது தான் என் கவலை…"

"'நங்கை' அளவுக்கில்லை என்றாலும், எனக்கும் போர்க்கலையில் சிறிது பரிட்சயமுண்டு… தப்பிக்க வழியில்லையென்றால் என்னையே மாய்த்துக் கொள்வேனேயன்றி கயவன் கையில் சிக்கமாட்டேன்… அதோடு அந்த மகாராணிக்கு ஒரு விந்தையான வழக்கமாம்… அவளுக்குப் பணிவிடை செய்யும் பெண்கள் அழகு என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாதவர்களாம்…"

"ம்ஹும்!...கணவனின் சுயரூபம் தெரிந்தவரல்லவா? பிறகெப்படி உன்னை அந்தரங்க சேடிப்பெண்ணாக ஏற்பார்கள்? உன் பெயருக்கேற்ற இனிய ரூபம் கொண்டவளாயிற்றே நீ"

"உங்களுடனான இத்தனை காலப் பழக்கத்தில், எனக்கும் மாறுவேடம் கைவந்து விட்டதென்பதை தாங்கள் அறிந்ததே… இரு முறை ஆண்பிள்ளையாகவே திறம்பட வேடமணிந்தவளுக்கு, அழகற்ற பெண் குரூபி வேடமணிவதா கஷ்டம்?" என லேசாகச் சிரித்தவாறு கூறிய நிலாவை, இதமாக இழுத்து தன் நெஞ்சோடு சாய்த்து,

"குரூபியா? நீயா?" என்றவன், "எனக்காக நீ இந்தளவுக்குத் துணிவாய் என்று எண்ணியதில்லை…" என்று அவளுடைய அழகிய வதனத்தை வாஞ்சையுடன் நிமிர்த்தி, கண்களுக்குள் பார்த்தவாறு கூறியவனின் நெஞ்சம் வேகமாகத் துடிப்பதை உணர்ந்த நிலா,

"நீங்கள் நம் நாட்டில் ஊடுருவிய களைகளை வேரறுக்க நெருப்பாக மாறும் பொழுது, நான் களைகள் அறுக்கும் அரிவாளாக இருக்க மாட்டேனா? அதோடு 'நங்கை' என் உயிர்த்தோழி என்பதையும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்… அவள் உயிர் பிரிவதை, என்னிரு பாவப்பட்ட கண்களால் கண்டவள் நான்… வீரத்தையும் தன்மானத்தையும் அணிகலனாக அணிந்திருந்த அவள், உயிர் பிரியும் நிலையிலும், தன் வலியைக் காட்டினாளில்லை… ஆனால் அக்கொடூரத்தை நேரில் கண்ட எனக்கு உயிர் துடித்தது... அதற்குக் காரணமானவர்களை என்னால் மட்டும் விட்டுவிட முடியுமா?"

"உன்னை நினைத்துப் பெருமிதமாக இருக்கிறது. அதே வேளையில் என் அழகிய முயல்குட்டியை வேட்டைக்காரன் இடத்திற்கே அனுப்புகிறேனே என்று…" சீலன் தயங்க,

"என்று???... அச்சமா?"

"அச்சமா? எனக்கா? ஹ… அது என் வியர்வைத் துளியிலும் கிடையாது. ஆனாலும் ஏனோ ஒரு தவிப்பு…"

"தவிப்பெதெற்கு? நீங்கள் என் மனதில் இருக்கும் போது, எப்படிப்பட்ட பயங்கரமான இடத்திலும் என்னால் சாதிக்க முடியும்!" என்றவளை மேலும் இறுக்கியவன்,

"...நிலா… உன் பெயரைப்போலவே நிர்மலமில்லாமல் இனிய கானமாகச் சென்று கொண்டிருந்த உன் வாழ்க்கையில் சூறாவளியாக நான் வந்திருக்க வேண்டாம்" என்றவனது இதழ்களில் கைவைத்துத் தடுத்தவள்,

"நீங்கள் இல்லா என் வாழ்வில் அப்படியென்ன வசந்தம் வீசியது? உங்களைச் சந்தித்தபிறகே இந்த நிலாவிற்கு, யாழின் இசையைப் போல் இன்பம் சேர்ந்தது… உங்களைப் போன்ற ஆற்றலும், ஆண்மையும் அதோடு அழகிய இதயமும் உடையவருடன் வாழும் நாட்கள் சொர்க்கத்தையும் விஞ்சக்கூடியவை… நிச்சயமாக அந்த நாட்கள் என் வாழ்வில் மலரும்… நம் பகையைச் சேர்ந்தே வேரறுத்து வெற்றிவாகையுடன் மீண்டும் சந்திப்போம்! என்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல் சென்று, வென்று வாருங்கள்… உங்கள் வெற்றித்திருமுகத்தைக்கான நான் மட்டும் காத்திருக்கவில்லை…"

இருவருமே சிறிது நேரம் எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்…

பிறகு…

"நம் நாட்டுக் குதிரைகளைப் பழக்க வந்த 'இளம்பொறை' இந்த நிமிடம் வரை நமக்கு விசுவாசமானவனே… கண்ணனூரில் போர் நடந்தபோது நமக்குத் துரோகம் செய்துவிட்டு, பகைவர்கள் பக்கம் சென்ற நம் படைவீரர்களோடு, நமக்கு விசுவாசமான ஆட்களையும் அனுப்பிவைத்தோம்…. அவர்களில் ஒருவன் தான் இந்த இளம்பொறை என்பது நீ அறிந்ததே... அவன் உன்னை, அந்த மகாராணியிடம் வேலைக்குச் சேர்த்து விடுவான்… கவனம், அங்கே நடப்பவற்றை எனக்குத் தெரியப்படுத்துவதில் அவசரம் கொள்ளாமல் விவேகமாக நடந்துகொள்… அடிக்கடி எனக்குத் தூது அனுப்பு… யாரையும் முழுமையாக நம்பாதே… இளம்பொறை உட்பட…" என்று கூறி தனது விரலிலிருந்த கணையாழியைக் கழட்டி அவள் விரல்களில் அணிவித்தவன்,

"இப்பொழுது நீ என் மனைவியாகச் செல்கிறாய்! சத்திகனை(குதிரை) உன்னோடு அழைத்துச்செல்… இக்கட்டான சூழ்நிலையில் நீ தப்புவதற்கு சத்திகனை விடச் சிறந்த துணை கிடையாது... வென்று வா! சந்திப்போம்…" என்று கூறி நிலா சத்திகனின் மீதேறி கண் மறையும் வரை பார்த்திருந்து விட்டு, நிலா கொண்டு வந்த குதிரையில் ஏறி கொல்லிமலை நோக்கி விரைந்தான்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1219
சிவதாசனின் கர்ஜனை தொடரும்...


⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

Comment link:

 
Last edited:

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 4

மாறன், சிற்றரசர் திருவழுதியைப் போரில் சந்திக்கத் தயாரான விசயம் பாண்டிய தேசத்தில் பரவ ஆரம்பித்த வேளையில், பாண்டிய அரசவையில் அமைச்சர்கள், படைத்தலைவர்கள், ஒற்றர்கள், தூதுவர்கள், அந்தணர்கள் கூடியிருந்தனர்…

மாறன், சிற்றரசர் திருவழுதிக்கு எதிராகப் போர்க்களம் செல்வதை, சிலர் ஆதரித்தும், சிலர் மறுப்பு தெரிவித்தும் விவாதம் சூடு பிடித்தது...

"குமாரர் மாறனால் சிற்றரசர் திருவழுதியை வெல்ல இயலுமா?" என்று சில படைத்தலைவர்கள் ஐயங்கொள்ள,

"நம் அரசருக்குப் பின்னர் நாடாளும் உரிமையுள்ள சுந்தரனால் தற்சமயம் இங்கே வர இயலாத நிலை… பிறகு? படை நடத்திச்செல்வதற்கு ஒரு தலைமை வேண்டாமா? அது மாறானாக இருப்பதில் தவறென்ன?" என்று சில அமைச்சர்கள் கேட்க,

"தவறென்று சொல்லவில்லை… குமாரர் மாறனும் இதுவரை போர்க்களம் கண்டதில்லை என்ற யோசனைதான்…" என்று நிறுத்திவிட்டு மற்றவர்களைப் பார்த்தார் சேனைத் தலைவர்.

"குமாரர் மாறனை விட்டால், நம் முன் இருப்பது ஒரே வழிதான்… நம் அரசரின் மைத்துனரும், பட்டத்தரசியாரின் தமையனாருமாகிய, மன்னர் பெருங்கிள்ளி பாண்டியர் அவர்கள் தலைமையேற்று நடத்தலாம்… ஆனால் பெருங்கிள்ளி பாண்டியர், அவருடைய படையுடன் நம் தேசத்தின் எல்லையை நெருங்குவதற்குள், பகைவர் சிற்றரசர் திருவழுதியின் படைகள், நம் கோட்டைக்குள்ளே புகுந்து நாசம் செய்துவிடுவார்கள்… அல்லது பணயமாக நம் தேசத்தின் முக்கியஸ்தர் யாரையேனும் கைது செய்து அவர் நாட்டிற்குக் கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது" என்று தலைமை அமைச்சர் கூறியதும் சிறிது நேரம் அனைவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.

"தலைமை அமைச்சர் சொல்வதும் சரிதான்… காலந்தாழ்த்துவது நல்லதல்ல… மேலும் குமாரர் மாறனின் தோள் வலிமையை நான் பல தருணங்களில் பார்த்திருக்கிறேன்…" என்று ஒற்றர்களில் ஒருவர் கூறினார்.

"கற்கும் இடத்திலும், பயிற்சி மேற்கொள்ளும் இடத்திலும் பிரமாதமாக வாள் சுழற்றுவது வேறு, எதிரியின் வாளுக்குப் பதில் சொல்வது வேறு… அதுமட்டுமின்றி…" என்று சேனைத்தலைவர் கூறிக் கொண்டிருக்கும் போது தூதுவன் ஒருவன் அவசரமாக வந்து பணிந்து நின்றான்.

"அரசவை நடக்கும் வேளையில் இடையூறு செய்வதற்குப் பட்டத்தரசியாரும், அமைச்சர் பெருமக்களும்… பெரியோர்களும் மன்னித்தருள்க…" என்று அவ்வீரன் பணிந்ததும், அனைவரும் அவனைப் பார்க்க,

பட்டத்தரசி பெருந்தேவி, "வந்த விபரம்?" என்று கேட்டார்.

"மன்னரின் இளையராணி புதல்வராம் குமாரர் மாறன் அவர்கள், யானைப்படை, குதிரைப் படைகளைக், கோட்டை வாசலுக்கு வெளியே நிற்கச்சொல்லி கட்டளையிட்டிருக்கிறார்… அரசவையிலிருந்து உத்தரவு வரவில்லையே என்றதற்கு, நாம் இந்நாட்டின் குடிமகனாக நம் கோட்டையைக் காக்கச் செல்வோம்… பின்னர் அரசவை கூடி யாரைத் தேர்ந்தெடுத்து படைநடத்தச் சொல்கிறார்களோ அவர்களின் கீழ் நின்று போரிடுவோம்…" என்று வீராவேசமாகக் கூறி கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதை நம் யானைப்படைத் தலைவர், அரசவையில் கூறிவருமாறு அனுப்பி வைத்தார்." என்றான்.

"இதென்ன சிறுபிள்ளைத்தனம்?" என்று ஒரு அமைச்சரும்

"பெருங்கிள்ளி பாண்டியர் வந்தால் என்ன பதில் சொல்வது?" என்று மற்றொரு அமைச்சரும் வினவ,

"ஸ்ரீ ஸ்ரீ தொண்டை மண்டல அரசர் பெருங்கிள்ளி பாண்டியர் தூதனுப்பிச் சொல்லியதிற்கிணங்கத்தான் குமாரர் மாறன் அவர்கள், படைகளைப் போருக்குத் தயார் செய்தாராம்!" என்று செய்தி சொல்ல வந்த தூதுவன் கூறினான்.

"சரி நீ போகலாம்! அவையின் முடிவுகளைக் கோட்டை வாசலுக்குத் தெரியப் படுத்துகிறோம். அதுவரை மாறன் கட்டளையினைப் பின்பற்றுங்கள். " என்றார் பட்டத்தரசி பெருந்தேவி.

பட்டத்தரசியின் உத்தரவைக் கேட்டதும் மாறன், முப்படைகளையும் நோக்கி, "சிற்றரசர் திருவழுதியை நம் கோட்டை வரை வரவிட வேண்டாம்… அரசர் இல்லாவிட்டாலும், பெரிய சேனைத் தளபதிகள் இல்லாவிட்டாலும், இப் பாண்டியப் பேரரசை யாராலும் அசைக்க முடியாது என்பதைக் காட்டுவோம்… இனி ஒருவன் நம் அரசர் சேனைகளைத் திரட்டிக்கொண்டு வேறு தேசங்களுக்குச் சென்றிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, நம் நாட்டின் மீது போர் தொடுத்து வர எண்ணவே கூடாதென்றால் அதற்கு இன்று திருவழுதியை புறங்காட்டி ஓடச்செய்வதே மற்ற தேச மன்னர்களுக்கு ஒரு பாடமாக அமையும்… வாருங்கள் பகை வென்று வருவோம்!" என்று கூறி படைகளின் முன்னால் தன் குதிரையை மாறன் செலுத்த வீறுகொண்டெழுந்த படைப் பரிவாரங்கள் ஆர்ப்பரித்தவாறு திழுவழுதி முகாமிட்டிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றன…

சிற்றரசர் திருவழுதி முகாமில், தங்களது படைகள் பாண்டியரின் கோட்டை வாசலுக்குச் செல்வது பற்றித் தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருந்த போது, ஒற்றனின் வருகையைக் காவலாளி தெரியப்படுத்த, ஒற்றனை வரச்சொல்லும்படி திருவழுதி கூறவும் ஒற்றன், சிற்றரசர் மற்றும் தளபதிகள் இருந்த படை வீட்டிற்குள் வந்தான்.

"அரசர் வாழ்க! தாங்கள் பாண்டிய நாட்டின் மீது போர் நடத்திச் செல்லும் செய்தி அறிந்து, பாண்டியர் படை நம் படைவீட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறது…"

"படைக்குத் தலைமையேற்று வருவது யார்?" என்று சிற்றரசர் திருவழுதி கேட்டார்.

"மன்னர் மாறவர்ம குலசேகரப் பாண்டியரின் இளையராணி குமாரர் மாறன் வருகிறார் அரசே!"

"மாறனா? சரி நீ செல்லலாம்!" என்று சிற்றரசர் திருவழுதி உத்தரவு கொடுத்ததும், ஒற்றன் வெளியேறினான்.

"மாறனை எவ்வாறு படைக்குத் தலைமை தாங்க வைத்தனர் என்று தெரியவில்லை… இது நமக்கு மிகவும் சாதகமான விசயம்… மாறன் பாலகன்… இதுவரை போர்க்களம் சென்றறியாதவன்… போர்த் தந்திரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… இதுவே நமது வெற்றிக்கு வழி வகுக்கும்,… வாருங்கள்! அந்த பாலகனைத் தோற்கடித்து நம் நாட்டை, சுயேட்சை நாடாக்குவோம்!" என்று சிற்றரசர் திருவழுதி கூறியதும்,

"வெற்றி நமதே! வாழ்க நம் அரசர்!" என்ற வாழ்த்தொலியுடன் சேனைகள் தங்களது படைகளைத் தயார் படுத்திப் பாண்டிய நாட்டின் கோட்டையை நோக்கிச் சென்றனர்.

மாறனின் சேனைகளும், சிற்றரசர் திருவழுதியின் சேனைகளும் காவிரிக்கரையில் நேரெதிரில் சந்தித்துக் கொண்டனர்.

திருவழுதி தேரிலும் அவருக்கு நேர் எதிரே மாறன் குதிரையிலும் வீற்றிருந்தனர்…

அதைப் பார்த்ததும் திருவழுதியும், அவரைச் சுற்றியிருந்தவர்களும் கெக்கலி கொட்டிச் சிரித்தனர்… "குமாரர் மாறனுக்கு ஒரு ரதம் கூட ஏற்பாடு பண்ணவில்லையா உங்கள் அரசியார்?" என்று திருவழுதி கிண்டலாகக் கேட்க, அவரைச் சுற்றிக் குதிரையில் இருந்தவர்கள், இடிஇடியெனச் சிரித்தனர்.

"எத்தனையோ போர் கண்ட, வெற்றி வீரர் ஸ்ரீ ஸ்ரீ திருவழுதி அவர்கள், யுத்தம் நடத்தத்தேவை ரதமா?, வீரமா? என்று அறியவில்லை போலும்… பரவாயில்லை! இன்று அதைத் தங்களின் வாழ்நாளில் மறக்க இயலாத வண்ணம் நன்கு அறிய வைத்துவிடலாம்…" என்று மாறன் புன்னகை தவழ கூற,

"அப்படியா? பாலகனாக இருந்தாலும் வாய்ச்சவடாலில் பெரிய வித்தகன்தான் போலிருக்கிறது" என்று மீண்டும் கேலியில் இறங்கியவரைப் பார்த்து, அர்த்தமுள்ள புன்னகை ஒன்றை சிந்திவிட்டு, யுத்தத்திற்குத் தயாரானான் மாறன்.

போர் ஆரம்பமானது…

கோஷமிட்டவாறு இருபுறமிருந்தும் வாளுடனும் வேலுடனும் வீரர்கள் தாக்கத் தொடங்கினர்…

'அரசனில்லாத படைக்கு எப்படி இவ்வளவு வேகம் வந்தது?' என்று திருவழுதியும் அவருடைய படைகளும் ஆச்சரியப்பட்டனர்.

மாறன் பாலகன் தானே என்ற எண்ணத்தில் சற்றே அலட்சியமாக இருந்த திருவழுதியும், அவரது படையும் போர் ஆரம்பித்த ஒரே நாழிகையில் வியூகம் அமைத்து, மாறனின் படை வீரர்கள் திருவழுதியின் படைகளைச் சிதறடித்த விதம்…

ஓரிடத்தில் நிலையாமல் தன் வீரர்கள் மற்றும் சேனைத்தலைவர்களிடம் கட்டளைகள், போர்த் தந்திரங்கள் மற்றும் எதிரியைக் கையாளும் விதம் என பறந்து பறந்து மாறன் செயல்பட்ட வேகத்தினைப் பார்த்து அரண்டே போயினர் திருவழுதிப் படைகள்…

மாறன் தன்னுடைய குதிரையில் இருந்தபடி, திருவழுதியுடன் வாள் போர் புரியும் போதே, தனது சேனைகளுக்கு ஆணை பிறப்பித்த விதத்தைக் கண்டு, "இவன் என்ன மனிதனா சூறாவளியா?" என்று ஆடிப்போனான் திருவழுதி…

மாறன் வீற்றிருந்த குதிரையின் வித்தியாசமான கனைப்புச் சத்தத்தைக் கேட்டு யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகளும் சட்டென்று குறிப்பிட்ட பகுதிக்கு இடம்பெயர்வதும், அவ்வாறு யானைகள் அல்லது குதிரைகள் இடம் மாறும் சமயத்தில் அவற்றின் மீதிருந்து போரிட்ட வீரர்கள் மாறனைப் பார்க்க, வலதுகையில் வாளேந்தி எதிரியை மிரள வைத்தபடியே தனது இடது கையில் சில முத்திரைகளைக் காட்டினான் மாறன்… அந்த முத்திரை கூறும் செய்தியை உள்வாங்கிக்கொண்டு போர் புரிந்தனர் பாண்டிய வீரர்கள். இத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது...

'இது என்ன மாதிரியான போர்த் தந்திரம்? மாறனின் விரலசைவுக்கு அர்த்தம் புரிந்து போர் புரியும் வீரர்களைக் கண்டு வியப்பதா? ஒவ்வொரு முறையும் மாறுபடும், மாறன் வீற்றிருக்கும் குதிரையின் கனைப்பொலியின் ஓசைக்குத் தகுந்தவாறு தங்களின் இடத்தை மாற்றி, 'என்ன நடக்கிறது?' என்று எதிரிலிருப்போர் அறியும் முன் எதிர் படையினரைக் குழப்பிவிட்டு, எதிரியின் தலையைத் துண்டாக்கும் வித்தையைக் கண்டு மலைப்பதா?' என்று புரியாமல் திருவழுதியும் அவரது படைகளும் திணறிய வேளையில்,

திடீரென விக்ரமனின் படைகளும் மாறனின் படைகளுடன் சேர்ந்து கொண்டு திருவழுதியின் படைகளைத் தாக்கின.

போர்க்களத்தில் கிளம்பிய புழுதியில், மேகங்களுக்கு நடுவே போர் புரிவதைப் போலிருந்தது.,..

விக்ரமன் வந்ததும், மாறன் தன்னுடைய முழு கவனத்தையும், வாள் வீசும் திறமையையும் திருவழுதியின் மீது மட்டுமே பிரயோகிக்க, எத்தனையோ போர் கண்ட திருவழுதி, அச்சிறு பாலகனின் வாள் வீச்சிற்கு இணையாகப் போரிட முடியாமல் திணறினார்...

இதுபோதாதென்பது போல், விக்ரமனோ ஒருவருடன் போரிட்டுக் கொண்டிருக்கும் போதே, வேறு இடத்தில் தன் வீரர்கள் பாதிப்படைவதைக் கண்டால், உடனே அந்த வீரனை விலக்கி, தன் வாளுக்கு எதிரி வீரனை பழியாக்கினான்… விக்ரமன் செல்லும் இடமெல்லாம் வீரர்களின் சடலங்கள் குவிந்தன… யானைகள் மதங்கொண்டதைப்போல் திக்கு தெரியாமல் தன் நாட்டு வீரர்களையே துவம்சம் செய்தபடி ஓடின… குதிரைகளோ விக்ரமனின் வாள் வீச்சில் மடங்கி விழுந்தன...

மூன்று நாழிகைக்குள் தன் படைகள் பெருமளவு குறைந்ததைப் பார்த்த திருவழுதிக்கு, இரு சிங்கங்களுக்கிடையே சிறு நரி போல் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்ததும்

"சேனைத் தளபதிகளே இவர்கள் இருவரையுமே நம்மால் சமாளிக்க முடியவில்லை… இந்நிலையில் பெருங்கிள்ளி பாண்டியரின் படைகளும் சேர்ந்தால், நம் படைகள் சர்வநாசம் அடைவது உறுதி… நம் கோட்டையை நோக்கி படையைத் திருப்புங்கள்!" என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு,

சட்டெனப் புறங்காட்டி தன் நாட்டை நோக்கித் தன் தேரை திருவழுதி செலுத்த, அவருடைய மீதமிருந்த வீரர்களும், யானைப்படை, குதிரைப்படையும், தன் அரசரின் உத்தரவிற்கு இணங்கி அவரைப் பின்தொடர்ந்தது ஓடலாயினர்.

அவ்வளவுதான் மதுரை மண்ணின் சீறும் சிறுத்தைகளின் ஆரவாரம் விண்ணைக் கிழித்தது…

"வாருங்கள் வீரர்களே! புறமுதுகிட்டு ஓடும் பகைவரின் படையை இறுதிவரை துரத்திச் செல்வோம்" என்று மாறன் ஆணையிட,


பாண்டிய வீரர்கள் ஆரவாரத்துடன் திருவழுதியின் வீரர்களைத் துரத்திக் கொண்டு ஓடினர்.

அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது,

தன் கூட்டைத் தீண்டியவரைத் துரத்தும் தேனிக்கள் கூட்டம் போலிருந்தது‌ மாறனின் படைகள்…

துரத்தி வரும் காட்டு யானைக்கூட்டத்திடமிருந்து தப்பிச் செல்லும், எருதுக்கூட்டம் போல் திருவழுதியின் படைகள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர்…

திருவழுதியின் படைகள், தங்களது கோட்டைக்குள் சென்றதும், கோட்டையின் வாசலை மூட எத்தனிக்கும் பொழுதே புயல்போல் பாய்ந்து கோட்டைக்குள் சென்றனர் மாறன் படைகள்…

கோட்டைக்குள் புகுந்த பாண்டியர் படையைத் தடுப்பதற்காகப் புதிது புதிதாக, திருவழுதி நாட்டின் வீரர்கள் வந்த வண்ணமே இருந்தனர்…

அவ்வீரர்களை மாறனின் படைகள் எதிர்கொள்ள, மாறனும் விக்ரமனும் திருவழுதியைத் துரத்திக்கொண்டு சென்றனர்…

கண்ணுக்கெட்டிய தூரத்தில் அரண்மனை தெரிந்ததும், தன் தேரிலிருந்து இறங்கி நின்ற திருவழதி,
"ஒப்பற்ற வீரனே… உம்மைப்போல் அசகாய சூரனை அடைய, பாண்டிய தேசம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்… போர்க்களத்தில் உன் அசாத்திய போர்த்திறனையும், போர் வீரர்களை நீ வழிநடத்திய விதத்தையும் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்… குட்டியென்றாலும் சிங்கக்குட்டி என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டாய்… யுத்தத்திற்குத் தேரில் வராததற்கான காரணத்தையும் உன் செயலில் கண்டேன்… உயிர்காக்கும் தோழனையும் பெற்ற உன்னை வெல்ல இப்பூவுலகில் எவரும் இலர்... உன் வீரத்தின் முன் தோற்று நிற்கிறேன்.‌‌.." என்று மாறனின் வாளுக்குத் தன் நெஞ்சைக் காட்டி நின்றார் திருவழுதி…

"உம் தலையைக் கொய்து, ஈழத்திலிருந்து வெற்றிவாகை சூடிவரும் எங்கள் மன்னருக்குப் பரிசளிக்க எண்ணியிருந்தேன்… தோல்வியை ஒத்துக்கொண்டு, பல போர்களில் வெற்றியின் பரிசாகக் கிடைத்த விழுப்புண்களை உடைய உமது நெஞ்சத்தை என் வாளுக்கு முன் அர்ப்பணித்த உம் வீரத்துக்குத் தலைவணங்கி, மனதை மாற்றிக் கொண்டேன்… ஆனால் நீங்கள் செய்த துரோகச் செயலுக்குத் தண்டனையாகவும், என் தந்தைக்குப் பரிசாகவும் தங்களின் சிரசை அலங்கரிக்கும், நவமணிகளுடன் உம் புகழையும் ஒரு மணியாகப் பதித்த திருமுடியை நீங்களே என்னிடம் கொடுத்து விடுங்கள்… நான் என் தந்தையாம் பாண்டியப் பேரரசருக்கு, வெற்றிப்பரிசாக அளித்தபிறகு, எம் தந்தையிடம் வந்து மன்னிப்புக் கேட்டு, அவர் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று, உங்கள் கௌரவமாம் திருமுடியை வாங்கிச்செல்லுங்கள்." என்று மாறன் கூற,

'சிறு பாலகன் என்று எள்ளி நகையாடிய சிறுவனின் தீரத்தின் முன் தோற்று, காலங்காலமாய் எம் முன்னோர் கட்டிக் காத்த பெருமையை இழந்து நிற்கிறேனே!' என்று அவமானத்தில் சிறிது தயங்கிய திருவழுதி,
சிரம் தாழ்ந்து, நடுங்கும் தன் கைகளால் தனது மணிமகுடத்தைப் பிடிக்கப் போன சமயத்தில்,

"நிறுத்துங்கள் அப்பா! பாண்டியரின் குமாரர், தனியாக என்னுடைய வாளுக்குப் பதில் சொல்லட்டும்... என்னை வென்று காட்டட்டும். பிறகு அவர் கட்டளையின் படி நடக்கலாம்?" என்ற வீர குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த மாறன் அதிர்ச்சியில் உறைந்தான்...

வார்த்தைகளின் எண்ணிக்கை-1254

சிவதாசனின் கர்ஜனை தொடரும்...
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

கதையைப் படிக்கும் நல் உள்ளங்கள் தங்களது கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிற்கு சென்று கூறுங்கள்...

நன்றி!

 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 5

சீலனின் குதிரை காவிரிக்கரையோரமாக வேகமாகப் பயணித்தது… காவிரி ஆற்றில் சங்கமித்த 'அய்யாறு' என்ற கொல்லிமலையிலிருந்து காவிரியில் சங்கமமாகும் ஆற்றின் கரையில் பயணித்து, கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை என்ற ஊருக்கு வந்துவிட்டான்…

தனக்குப் பழக்கமில்லாத குதிரையாக இருந்தாலும், இவ்வளவு தூரம் பயணம் செய்தும் குதிரை சோர்வடையாமல் இருப்பதை, அதன் உடல்மொழி வாயிலாக உணர்ந்து, குதிரையிலிருந்து இறங்கி, அதன் பிடரியில் தடவிக் கொடுத்தான்…

"நாம் இங்கே இன்றிரவு இளைப்பாறுவோம்… இரவு வேளையில் மலைமீது ஏறுவது கடினம்… நாம் செல்லும் பாதை வேறு மனித நடமாட்டம் இல்லாத பாதை… அதனால் இருட்டில் போவது நல்லதல்ல…" என்று குதிரையிடம் அன்பாகக் கூறியவன், அதன் பதிலை எதிர்பார்க்காமல் அதை ஒரு மரத்தில் கட்டிவிட முனைய,

ஒரே உதறலில் சீலனிடமிருந்து விடுபட்ட குதிரை,

"என்னை ஏன் கட்டுகிறாய்? நான் எங்கும் ஓடிவிட மாட்டேன்... உனக்குத்தான் என்னைத் தெரியவில்லை… எனக்கு உன்னை நன்றாகவே தெரியும்… அதோடு, இந்த மலைப்பாதையில் நான் ஏற்கனவே பலமுறை ஏறியிருக்கிறேன்… எனக்கு ஒன்றும் சிரமமில்லை" என்று தனக்கே உரிய பாணியில் குதிரை சீலனிடம் கூற,

குதிரையின் மொழி புரிந்த சீலன், "அடடா! அப்படியானால் நாம் மலையின் மேல் ஏறி, சிறிது தூரம் சென்று மறைவான இடத்தைத் தேர்வு செய்யலாம்… அங்கே நாம் பசியாறவும் ஏதாவது கிடைக்கும்." என்று சீலன் கூறியதும் வித்தியாசமான கனைப்பை சிந்தி தன் தலையை ஆட்டிய குதிரையைக் கண்டதும், அந்தக் குதிரை 'யாரால் பழக்கப்படுத்தப் பட்டது?' என்று புரிந்து கொண்டு, ஆச்சரியத்தில் புருவங்கள் மேலேறிய சீலனுக்குக் கண்கள் கலங்கியது…

"நல்லது நண்பா… நான் மட்டும் தனியாகப் பயணிப்பதை எண்ணி மிகுந்த மனவேதனையோடு வந்த எனக்கு, உன் அருகாமை, வலுவான மனதைரியத்தைக் கொடுக்கிறது… நல்லது!… எனது மொழி புரிந்து, மறு மொழி கூறுகிறாய் என்றால், நிச்சயம் போர்க்கலையும் கற்றிருப்பாய்! உன்னைப்போல் ஒருவன் தான் இச்சமயத்தில் எனக்கு வேண்டும்…" என்று சீலன் உணர்ச்சி மிகுதியில் பேசியதை இடையில் நிறுத்தி ஏதோ யோசித்தவன்,

"உனக்கு ஏற்கனவே ஏதேனும் பெயர் இருக்கலாம்… ஆனால் நானும் உனக்கு ஒரு பெயர் வைக்கிறேன்… ம்ம்?" என்று சீலன் கேட்டதும் வேகமாகத் தலையாட்டியது குதிரை…

'இனி இறுதிவரை இவன்தான் என் தோழன், துணை எல்லாமே. அதனால் இவனுக்கு 'இந்திரன்' என்ற பெயரை வைத்தால் என் மனதுக்கும் ஊக்கமளிப்பதாய் இருக்கும்' என்று குதிரையையே பார்த்தவாறு யோசித்த சீலன்,

"இனி உன் பெயர் இந்திரன்! சரியா?" என்று கேட்டதும், குதிரை எந்த வித பாவனையும் இல்லாமல் சீலனையே சில விநாடிகள் வெறித்துப் பார்த்தது… பிறகு 'சரி!" என்பது போல் தலை அசைத்தது.

குதிரையின் சம்மதம் கிடைத்ததும், "வாடா! நாம் மலை ஏறுவோம்!" என்று கூறியபடி குதிரையின் மேல் ஏறி சீலன் அமரவும், குதிரை மலைப்பகுதியில் ஏற ஆரம்பித்தது. சில அடிகள் மேலே ஏறும்போதே குளிர் எலும்பை ஊடுருவிச் சென்றது… காதுகள் அடைத்துக்கொண்டன… கைகால்கள் சில்லிட்டன… பல வித நறுமணங்கள் வீசத் தொடங்கியது… வானமே தெரியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்த கொல்லி மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தது… அதனால் நிலவின் வெளிச்சம் மரங்களை ஊடுருவ முடியாமல் தோற்றுப்போனது... மனிதர்கள் தினசரி உபயோகத்திற்குப் பயன்படுத்தாத வழி என்பதால் ஏறுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது...
ஆனால்...
கொஞ்சம்கூடத் தடுமாறாமல், கரடு முரடான மலையில், வெளிச்சம் நுழைவதற்கான சாத்தியமே இல்லாத இருட்டில், இந்திரன் (குதிரை) அனாயாசமாக மேலேறிச் சென்றதைப் பார்க்கும்பொழுது, 'இந்திரன் ஏற்கனவே இந்த மலையில் பலமுறை ஏறி இருக்கிறான்!' என்பது சீலனுக்கு நன்கு விளங்கியது. அவ்வளவு லாவகமாக ஏறியது குதிரை.

ஒரு இடம் வந்ததும் குதிரை நின்றது. 'என்ன இந்திரா இங்கே நின்றுவிட்டாய்?" என்று சீலன் கேட்கவும்,

குதிரை தன்னுடலை சிலிர்த்து உலுக்கியது. உடனே சீலன் குதிரையிலிருந்து இறங்கி குதிரையின் முகத்திற்கு நேரே சென்று, "என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

குதிரை பாதையிலிருந்து விலகி, மலையில் அடர்ந்து வளர்ந்திருந்த காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தது.

"நாம் சரியான பாதையில் தான் வந்துகொண்டிருக்கிறோம்… நீ ஏன் பாதை மாறிச் செல்கிறாய்?" என்று சீலன் கேட்டதும்,

'தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு' சமிக்ஞை செய்துவிட்டு இந்திரன் என்ற குதிரை நடக்க ஆரம்பித்தது…

சீலனுக்கு இருள் சூழ்ந்த வனத்தில் சுற்றுப் புறங்கள் தெளிவாகத் தெரியாவிட்டாலும் குதிரை செல்லும் வழியைப் பார்த்தவாறே குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான்.

சிறிது தூரம், மரக் கிளைகளை விலக்கி, கீழே சாய்ந்து வளர்ந்திருந்த மரங்களைத் தாண்டிச் சென்றதும், "ஓகோ இதனால்தான் என்னைக் கீழே இறக்கிவிட்டு நடக்கிறாயா? ஆமாம் இந்தப் பக்கம் என்ன இருக்கிறது?" என்று கேட்ட சீலனுக்குப் பதிலாக,

"பேசாமல் உன் திருவாயை மூடிக்கொண்டு என் பின்னால் வா!" என்பது போல் கனைத்து விட்டு அதன் வழியில் நடந்தது…

'கொஞ்சம் சேட்டை செய்யும் குதிரை போலிருக்கிறதே? இவனை எப்படி நிலா கையாண்டாள்?' என்று நினைத்தவாறு நடந்தான்…

நடந்தான் என்று சொல்லமுடியாது, தட்டுத்தடுமாறி, தாவித்தாவி மற்றும் குனிந்து சென்றான்…

நூறு அடி தூரம் நடந்திருப்பார்கள், ஒரு மேடிட்ட பாறைக்கு அருகில் சென்று நின்ற இந்திரன், சீலனைப் பார்த்தான்.

அங்கே பாறையைக் குடைந்து பாதை அமைத்திருப்பதுபோல் தெரிந்தது... அருகில் சென்று அந்தப் பாறையின் உள்ளே சென்று பார்த்தான். குறுகிய பாதையின் முடிவில் குகைபோல் குடையப்பட்டிருந்தது…

'அருமை இந்திரா! இரவுப் பொழுதைக் கழிக்க அருமையான இடம் இது... யாரோ சித்தர்கள் அல்லது சமணர்கள் இந்த இடத்தில் தங்கியிருக்க வேண்டும்…" என்று வியந்து பாராட்டியவன் குதிரையைத் திரும்பிப் பார்த்து,

"இந்த இடத்துக்கு ஏற்கனவே வந்திருக்கிறாயா இந்திரா? என்று கேட்டான்.

"ஆமாம்!" என்பதைப் போல் இந்திரன் தலையை அசைத்தது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், 'இப்படி ஒரு பாதுகாப்பான இடம் இங்கே இருப்பதைப் பகல் பொழுதில் கூடக் கண்டுபிடிப்பது சிரமம்… இந்த இடத்தில் ஒரு குகை இருப்பது, இந்த வழியில் யாரேனும் பாதை தவறி வந்தாலும் கூடச் சுத்தமாகத் தெரியாது…' என்று எண்ணியபடி,

அந்தத் குகைக்குள் இருவரும் சென்றனர்.

சீலனை குகைக்குள் விட்டுவிட்டு குதிரை வெளியே செல்ல,

"இந்தக் குளிரில் வெளியே போகாதே இந்திரா! இந்தக் குகை, கடுங்குளிர் தாக்காத வண்ணம் நல்ல இதமான சீதோஷ்ண நிலையில் இருக்கிறது. நீயும் குகைக்குள்ளேயே இளைப்பாறு!" என்று சீலன் கூறியதும், தனது வாயை அசைபோடுவது போல் சைகை காட்டிவிட்டுச் சென்றது…

"மிகவும் களைத்திருப்பான். பசியாறிவிட்டு வரட்டும்" என்ற சீலன், அப்பொழுதுதான் தனக்கும் பசிப்பதை உணர்ந்தான்… தூரத்தில் எங்கோ தண்ணீர் விழும் சப்தம் கேட்டது…

'தண்ணீராவது குடிக்கலாம்…' என்று நினைத்து, குகையை விட்டு வெளியே வந்தவனுக்குக் குளிர் தாங்க முடியவில்லை… நெருப்பு மூட்டவும் வழியில்லை… மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டிய, எந்த முன்னேற்பாடும் செய்யும் மனநிலையில் இல்லாததால், தான் மட்டும் குதிரையிலேறி வந்துவிட்டான்...

'சுத்தமாக வெளிச்சமே இல்லாத இந்த மலை வனத்தில் எங்கே போய்த் தண்ணீரைத் தேடுவது… எந்தத் திசையிலிருந்து தண்ணீர் விழும் சப்தம் வருகிறதென்று கூடத் தெரியவில்லையே?...' என்று நினைத்தவன் மீண்டும் குகைக்குள் சென்று படுத்துக் கொண்டான்…

உடம்பின் ஒவ்வொரு அணுவும் வலித்தது… சீலன் உண்டு, உறங்கி மூன்று நாட்கள் ஆகிவிட்டது… அதனால் அவனது உடல், தன் தளர்வையும் வேதனையையும் கூறியது… இதில் வயிற்றுப் பசியும் சேர்ந்து கொள்ள, சீலனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது… மூன்று நாட்களில் அவன் பட்ட துன்பங்களும் களைப்பை உருவாக்கக் கண்களை மூடினான்...

"இனி இத்தேசத்தின் வேந்தன் நீயே!" என்று மணிமகுடத்தைப் பொறுத்தியவன் கண்கள் கலங்கி, கம்பீர சிரிப்பு முகத்தில் தவழ, தன் மீசையை முறுக்கியபடி கூற,

சட்டென்று எழுந்து அமர்ந்தான் சீலன்… 'அரியணையிலிருந்து அக்கொடும் பாவியை இறக்கும் வரை தன்னால் நிம்மதியாக உறங்க முடியாது' என்பதை உணர்ந்தவனுக்குக் கண்கள் சிவந்தன…

"இப்படியொரு துயரச் சம்பவம் நடக்கும் முன்னர், இன்னும் சில தினங்களில் மணமேடை ஏறியிருக்க வேண்டியவன், இன்று அத்துவானக் காட்டில் தன்னந்தனியனாய் மனம் முழுவதும் புண்ணாகி, வேதனைப்பட்டுக் கொண்டிருப்பேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் தாடை வலிக்குமளவு சிரித்திருப்பேன்…" என்று துயரக்கடலில் சிக்கித்தவித்த சீலன்,

"சொக்கநாதா! இனி என் வாழ்வில் ஒளி வரக் கூடுமா?" என்று அரற்றிய வேளையில் குகை, இருள் நீங்கி ஒளி மயமாகியது.

'மனப்பிரமை' என்று நினைத்தபடி தலையைச் சிலுப்பியவன் மேல் வாழை, கொய்யா மற்றும் மாங்கனிகள் விழுந்தன.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன் முன் இந்திரன் நின்று கொண்டிருந்தான்… அதன் வாயில் புல் போன்ற எதையோ கவ்வியிருந்தான் அந்தப் புல்லின் நுனி எரிந்து வெளிச்சம் கொடுத்தது. அந்த ஒளியால் குகையும் வெளிச்சமாக இருந்தது…

"அந்தப் புல்லைக் கீழே போடு! உடம்பில் நெருப்பு பற்றி விடப் போகிறது" என்றான் பதற்றமாக.

பின்னே? இப்பொழுது அவனுக்குக் கிடைத்த ஒரே துணையல்லவா இந்திரன்?

இந்திரன் தன் வாயில் கவ்வியிருந்த புல்லை அதற்கென உள்ள சிறு பள்ளத்தில் வைத்தது…

"இந்தப் புல்லை வைப்பதற்கென்றே உருவாக்கி இருக்கிறார்கள் போலிக்கே!" என்றவன், அந்தப் புல் நிதானமாக எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து, கண்கள் விரிய ஆச்சரியமாகி, சீலன் அந்தப் புல்லையும் இந்திரனையும் மாறிமாறி பார்த்தான்.

"இது என்ன இந்திரா? இந்தப் புல் தீவட்டிபோல் நீண்ட நேரம் நின்று எரிகிறதே? இந்த மலைக்கு இருமுறை நாங்கள் வந்தோம். ஆனால் இதுவரை நான் இந்தப் புல்லைப் பார்த்ததில்லை? அதுசரி, நீ எப்படி இத்தனை பழங்களை எடுத்து வந்தாய்?" என்று கேட்க,

சீலனின் முகத்தை உற்றுப் பார்த்த இந்திரன், 'புரியவில்லையா? மர்மமாக இருக்கிறதா? பரவாயில்லை… மர்மத்தோடவே உறங்கு... எனக்குச் சோர்வாக இருக்கிறது!' என்பதுபோல் குதிரை சென்று தனக்கான இடத்தில் படுத்துக் கொண்டது.

'ஆகா… இவன்ன்ன்… இவனை என்ன பண்ணலாம்?' என்று நினைத்தவன், குதிரை செய்யும் குறும்பை எண்ணி, மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னையறியாமல் மிக மிக மெல்லியதாகப் புன்னகைத்துக் கொண்டான்.

காலையில் சூரியன் எழும் நேரத்தில் சீலனும், இந்திரனும் கொல்லிமலையில் வீற்றிருக்கும் "அறப்பளீஸ்வரர் கோயில்" என்ற சிவன் கோயிலை அடைந்தனர்.

ஏற்கனவே, சீலன் இந்தக் கோயில் ஈசனைத் தரிசித்திருக்கிறான்தான். என்றாலும், இன்று அந்தக் கோயிலைக் கண்டவனுக்கு வெகுநாள் தாய்ப்பசுவைப் பிரிந்து வாடும் கன்று, தன் தாயைக் கண்டது போல் மனம் தவித்தது… 'விரைந்து ஓடிச்சென்று தன் வேதனைகளை ஈசனின் மலர்ப் பாதங்களில் கொட்டவேண்டும்' என்று தோன்றியது.

கோயிலுக்கு நேர் கிழக்கில், அரை மைல் தூரம் கீழ் நோக்கி, பயங்கரமான பாதை வழியில் இறங்கிப் போனால் நூற்று எண்பது அடி உயரத்திலிருந்து ஆகாய கங்கை அருவி விழுந்து கொண்டிருந்தது.

அந்த அருவி நீர் பாயும் ஓடை வழியாகச் சென்றால் ஒரு சிறு செங்குத்தான குன்றும் அதனுள் குகையும் இருப்பது தெரிந்தது.

சென்ற முறை சீலன் இங்கு வந்தபொழுது, "இது கோரக்கர் குகை! இங்கு கோரக்கர் என்னும் சித்தர் தன் மாணவர்களுடன் கூடித் தவம் இருந்தார்" என்று ஒரு சிவனடியார் கூறியது ஞாபகம் வந்தது.

குகைக்குப் பக்கத்தில் தென்புறம் ஒரு அகழி இருந்தது. அந்தக் குகையைச் சுற்றிப் பல அரிய மூலிகைகளும், பழ மரங்களும் இருந்தன…

‘இந்த இடமே, தான் மறைந்து வாழ்வதற்கும், தான் வந்த காரிய்த்தை முடிப்பதற்கும் சரியான இடம்’ என்ற முடிவுக்கு வந்தவன்,

அங்கேயே காலைக்கடன்களை முடித்துவிட்டு, 'ஆகாய கங்கை' நீர்வீழ்ச்சியில் குளித்து அறப்பளீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றான்.

கோயில் அருகில் ஓடிய மீன்பள்ளி என்ற ஆறைப் பார்க்கும் பொழுது, சென்ற முறை இருவரும் வந்து, வெகுநேரம் சிரித்துப் பேசியபடியே, மீன்பள்ளி ஆற்றில் துள்ளி விளையாடிய மீன்களுக்கு உணவிட்டு மகிழ்ந்தது, "கோயில் நடை சாத்தப் போகிறோம்… பகவானைத் தரிசனம் செய்ய வாங்கோ!" என்று கோயில் அர்ச்சகர் கூறியது, எல்லாம் ஞாபகத்திற்கு வர நெஞ்சம் கனத்தவன்,

"இன்று உனக்குக் கொடுக்க உணவு கொண்டுவரவில்லை… என்னப்பன் சிவனுக்குப் படைப்பதற்காக, அருகில் பறித்த பழங்களை உனக்கும் சிறிது கொடுக்கிறேன்" என்று கூறிக் கையிலிருந்த பழங்களில் ஒன்றை மீன்பள்ளி ஆற்றில் இருக்கும் மீன்களுக்குக் கொடுத்துவிட்டு, கோயிலுக்குள் சென்றான்.

'அறப்பளீஸ்வரர்', அம்பாள் 'தாயம்மை,' விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரே இடத்தில் நின்று, ஒரே நேரத்தில் ஒரு சேர தரிசித்து விட்டு,

பின் வினாயகர், அனைத்து உலகிற்கும் தாயான 'தாயம்மை' என்ற ‘அறம் வளர்த்த நாயகி’யின் சன்னதி மற்றும் இருதேவியருடன் மயில்வாகனராக அருள்புரியும் ஆறுமுகன் சன்னதி என்று அனைத்து தெய்வங்களையும். அவரவர் சன்னதி சென்று வணங்கிவிட்டு,

மூலவராம் அறப்பளீஸ்வரர் சன்னதிக்குச் சென்று சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் ஈசனின் முன் நிற்க சக்தியற்று மண்டியிட்டு அமர்ந்தான்..

"என்னை அடையாளம் கண்டீரா என்னப்பனே?… அனைத்தும் இழந்து உன் முன் வந்து நிற்கும் என்னைத் தெரிகிறதா? நினைவு தெரிந்த நாள் முதலாய் எந்த நாட்டுக்குப் பயணப்பட்டாலும், உம் கோயிலைத்தானே முதலில் நாடி வருவேன்… நாங்கள் இருவரும் என்ன குற்றம் செய்தோம்? யாருக்குத் தீங்கு விளைவித்தோம்? இந்நிலையில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறாயே! கையெடுத்துக் கும்பிடக்கூடத் தோன்றாமல் உன்னிடம் நியாயம் கேட்டு நிற்கிறேன்… இதுவரை உம்மிடம் எனக்கென்று எதுவும் கேட்டறியாத நான், இன்று உன் பாதம் பணிந்து கேட்கிறேன்… நான் மீண்டும் மதுரையைக் கைப்பற்ற வேண்டும்… என்னை ஆசீர்வதியுங்கள் இறைவா!" என்று கூறி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கண்ணீர் பெருக உள்ளம் வெடிக்க, சீலன் கதறிய வேளையில்,

"ஜெயம் உண்டாகட்டும் மகனே!" என்ற தெய்வீகக் குரல் கேட்டது.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1307
சிவதாசனின் கர்ஜனை தொடரும்...
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

கதை எப்படி இருக்கிறது?
என்பதைக் கீழே உள்ள லிங்க் ற்கு சென்று பதிவிடுங்கள் பா

 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 6

சிற்றரசர் திருவழுதி, புறங்காட்டி தன் கோட்டைக்குள் சென்றும், அவரைத் துரத்திச்சென்றனர் மாறன் படையினரும், விக்ரமன் படையினரும். கோட்டைக்குள்ளிருந்த வீரர்களாலும் மாறனையும், விக்ரமனையும் தடுக்க முடியாமல் போகவே, திருவழுதி மாறனிடம் சரண் அடைந்தார்… அதன் விளைவாக திருவழுதியின் மணிமுடியை மாறன் கேட்க, அதைத் தன் சிரசிலிருந்து திருவழுதி எடுக்க முயன்றபோது,

அதைத் தடுத்து நிறுத்திய மிடுக்கான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த மாறன், அங்கே அழகுக்கே அதிகாரம் எழுதியவளைப்போல் ஓர் ஆரணங்கு நிற்பதைக்கண்டு இன்ப அதிர்ச்சி எனும் பனியில் உறைந்தான்…

அந்தக் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரி, கண்களில் நீரும், நெருப்பும் பறக்க நின்றிருந்தாள்…

வாளெடுத்து வந்து, தன்னைப் போருக்கு அழைத்த பெண்ணை, உச்சி முதல் பாதம் வரை ஆவலுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தான் மாறன்…

இளம் தென்றல் காற்றில், படர்ந்து விரிந்த கூந்தலும், மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் உடைய 'பூங்கரை நீல' வண்ணப் பட்டாடையும் இசைபாடியதைப் பார்க்கும் பொழுது, மழையின் வருகையை அறிந்து, தன் அழகான தோகையை விரித்து ஆனந்த நடனமாடும் மயில் போலிருந்தாள்…

குலசேகரப் பாண்டியரின் மகனை, போருக்கு அழைப்பு விடுப்பவள், போர் புரிவதற்குத் தயாராகி வரவில்லை என்பது அவளைப் பார்த்த கணத்திலேயே நன்கு தெரிந்தது…

தங்கம் போன்ற பளபளப்பும், வாழைத்தண்டுபோல் மென்மையாகவும், வளப்பமாகவும் இருந்த வலது கரத்தில் ஏந்திய வாள் தவிர வேறு எந்தப் பாதுகாப்புக் கவசங்களுமின்றி நின்றிருந்தாள்…

நவமணிகளால் அழகு செய்யப்பட்டிருந்த சிகை அலங்காரத்துடன், மணம் வீசும் மலர்களையும் சூடிய கருங்கூந்தலை, ‘தலைக்கவசம்’ கொண்டு மறைத்தாளில்லை… அவளுடைய கூந்தலோ அழகான பனிச்சையிட்டு முடிந்த போதும் பொதிகை மலையிலிருந்து கொட்டும் அருவிபோல முழங்கால் வரை அலையலையாய் சுருண்டு பின்னழகை மறைக்க ஆடை தேவையின்றி மறைத்தது…

வலதுகரத்தில் வாளேந்தி நின்றவள், இடதுகரத்தில் ‘கேடயத்தைப்’ பிடிக்க மறந்தாளோ…

. பூங்கரை நீல வண்ண அழகிய பட்டாடையும், ஒளிவீசும் முத்துச்சரமும், மாணிக்கமும், வைர வைடூரியங்களால் ஆன நவமணி ஆரங்களும் மறைத்த நெஞ்சத்தில் ‘மார்புக்கவசம்’ அணிய விருப்பமில்லையோ?...

செம்பொன்னால் இழைத்ததைப் போன்ற இடையில் மேகலை அணிந்தவளுக்கு, அதைக் கழட்டி எறிந்துவிட்டு 'இடைவார்' அணிய நேரமில்லையோ…

தன் தந்தைக்கு இழுக்கு நேர்ந்ததை அறிந்து, பருத்திப் பூ போன்ற மென்மையான பாதங்களில் காலணிகூட அணியாமல் வந்தாளோ?' என்று எண்ணி மயங்கியவனை,

"பாண்டிய குமாரருக்கு என்னுடன் தனியாகப் போர் புரிவதில் யோசனை ஏனோ? பெண் என்ற எண்ணமாக இருந்தால் வாளெடுத்து வந்தால் தானே தெரியும் என் வாள் வீச்சின் வேகம்…" என்று பெண் சிங்கமாய் முழங்கியவளை,

"என்னை வென்றுவிட முடியும் என்று எண்ணுகிறாயா?" என்று கண்களில் குறும்பு கொப்பளிக்க சிலேடையாகக் (இரட்டை அர்த்தத்தில்) கேட்டான் மாறன்

"என்னை வென்றால் மட்டுமே என் தந்தையை நெருங்க முடியும் என்கிறேன்" என்று கனல் வீசியவளிடம்,

"நான் வென்று விட்டால்! என் ஆணைக்கு நீயும் கட்டுப்பட வேண்டும்." என்று மாறன் கூறிய விதத்தில் அரண்டு போன சிற்றரசர் திருவழுதி,

"வேண்டாம் குமாரரே! என் மகள், என் மீதுள்ள அன்பின்பால் தங்களைப் போருக்கு அழைக்கிறாள்… உங்கள் ஆணைக்கு நான் கட்டுப்படுகிறேன்… என் அருந்தமிழ்ச் செல்வியை விட்டுவிடுங்கள்." என்று பதறியதைப் பார்த்த மாறன்,

"ஏன் உங்கள் மகளின் வீரத்தில் உங்களுக்கு ஐயமுள்ளதா?" என்று வினவ,

"ஒருபோதும் இல்லை! ஆனால் உங்கள் போர் உத்திகளைப் பார்த்திருக்கிறேன்."

"அது உங்கள் துரோகத்திற்கு நான் கொடுத்த பரிசு… நாட்டில் அரசரில்லாத நேரத்தில் போருக்கு வந்தவர் நீர்... ஆனால் உங்கள் மகள், என்னை நேருக்குநேர் போருக்கு அழைக்கிறார்… அதனால் செண்பகப்பொழல் இளவரசி செண்பகாதேவியுடன் வாள் போரைத் தவிர வேறு எந்தப் போர் முறையையும் கையாள மாட்டேன். போதுமா?" என்று மாறன் சொல்லிக் கொண்டிருந்த பொழுதே,

"என் பெயர் செண்பகா தேவி அல்ல… "ருத்ர...!" என்று தன் பெயரை, கண்களை அகல விரித்து, தலை நிமிர்ந்து சொல்ல ஆரம்பித்தவள், ‘தனது பெயரைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் மாறன் நடத்தும் லீலையோ?’ என்ற ஐயம் எழ, சட்டென்று அவள் தன் கீழுதட்டைப் பற்களால் அழுத்திய விதத்தில் தன்னைப் பறிகொடுத்தான் மாறன்.

"கேள்விக் கணை தொடுத்தவன் இங்கிருக்க, என்னைத்தாக்காமல் கனியிதழைத் தாக்கலாமோ?" என்று முனங்கியபடி,

"அடேயப்பா! ருத்ரா...? மிகவும் பொருத்தமான பெயர்தான்.." என்று பாராட்டியவன், குறும்பாக சிரித்தபடி " நன்றி!" என்றான்.

"இது எதற்காகவோ?"

"தங்களின் திருநாமத்தை எனக்கு எடுத்தியம்பியதற்காக…" என்று கூறிய மாறனின் குரலிலிருந்த பரிகாசம், செண்பகப்பொழில் அரசராம் திருவழுதியின் ஒரே அருந்தவப் புதல்வி ருத்ராவைச் சீண்டியது…

அதே வேளையில், "பாண்டிய குமாரரைப் பார்த்தால் வாட்போர் செய்ய வந்தவரைப்போல் தெரியவில்லையே, வாய்ப்போர்தான் செய்து கொண்டிருக்கிறார்.‌.." என்று ஒரு பெண்ணின் குரல் கனீரென்றொலிக்க, குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான் மாறன்.

விக்ரமன் அருகே நின்றபடி விக்ரமனிடம், வேண்டுமென்றே சப்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.

"அவ்வளவு அவசரம் ஏன் பெண்ணே? நீ யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்ற மாறனிடம்,
.
"நீங்கள் போர் புரியத்தானே வந்தீர்கள்?" என்று அந்தப்பெண் கிண்டலாகக் கேட்டதும், விக்ரமனைப் பார்த்தான் மாறன்.

"விரைவில் போரைத்தொடங்கி, பகை அரசரின் மணிமுடியோடு வருவாயாக மாறா… வாளைவிடக் கூர்மையான நாவைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் இந்நாட்டுப் பெண்கள்…"

'அந்தப் பெண்ணிடம் இதுவரை வாக்குவாதம் புரிந்திருப்பானோ?' என்று எண்ணிய மாறன், ருத்ராவை நோக்கி வாளெடுத்து நின்றான்.

‘எதிரிலிருப்பவள் பெண்! அதுவும் தன் மனம் கவர்ந்தவள்!’ என்ற எண்ணத்தில் மாறன் சற்று அசட்டையாக வாளைச் சுழற்ற,

ருத்ராவோ, தன் பெயருக்குப் பொருத்தமானவள் என்பதை நிரூபிப்பது போல ஆரம்பத்திலேயே தன் வாளின் வேகத்தைக் காட்டினாள்…

சற்றே திகைத்தாலும், மாறனும் அவள் வாளுக்கேற்ற பதிலைத் தர,

ருத்ரா, தன் போர்த் திறமையெல்லாம் வீரியத்தோடு வெளிப்படுத்தினாள். கண்களில் கோபாக்னி எரிய, கையிலிருந்த வாளோ அந்த அக்னியைவிடக் கொழுந்து விட்டு எரிந்தது… ஒவ்வொரு வாள் வீச்சும் மின்னல் போல் தெறித்தது… அவள் வாளைப் பிடித்துப் போர் செய்த விதமே, தினமும் போர்க்கலையில் பயிற்சி எடுக்கிறாள் என்பதை விளக்கிற்று…

மாறன் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அவனுடைய வாள் பறக்க நேரிட்டது… மாறனின் தலைக்கு வந்தது ருத்ராவின் வாள்!

ருத்ராவின் அசாத்திய வாள் வீச்சைக் கண்ட விக்ரமன்,

"மாறா விளையாடியது போதும், இளவரிசியின் போர்த்திறனைக் கண்டு வியந்ததும் போதும். சீரிய முறையில் யுத்தம் செய்வாயாக" என்றதும்,

மாறனும் தன் வாள் வீச்சின் வல்லமையைக்காட்ட, கொஞ்சம் திணறினாலும் உடனே சமாளித்து அவன் வாளுக்கு இணையாக வாளை சுழற்றினாள் ருத்ரா…

'ஒரு பெண் தனக்கு இணையாக வாள் வீசக்கூடும்' என்று சிறிதளவும் எண்ணிப் பார்த்திராத மாறன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்…

இருவருக்குமான வாட்போர் சில நாழிகை தொடர்ந்தது… ஒருவருக்கொருவர் சளைக்காமல் போர் புரிந்தனர்…

ருத்ராவும் மாறனின் வாள் வீச்சைக்கண்டு வியந்தாள்… வாளை இலகுவாக அவன் கையாண்ட விதத்தில் தன்னை மறந்து மாறனின் முகத்தைப் பார்த்த நொடியில், அவள் கவனம் சிதற, மாறன் தன் வாளால் ருத்ராவின் வாளை தனதாக்கினான்…

இரு வாளையும், தன் இரு கையிலும் ஏந்தியவன், தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, ருத்ராவின் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவாறு,

"செண்பகப்பொழில் இளவரசியை வென்று விட்டேனா?" என்று மீண்டும் சிலேடையாக வினவ,

இவர்கள் இருவரின் போர்த்திறனில் மயங்கிய ஆதவன் மேற்கு திசை மேகத்தினுள் சாய்ந்தான்...

போர் முரசறைந்து, போர் முடிவுற்றதை அறிவுறுத்தியது…

மாறனுக்கு, ருத்ராவின் அருகாமையை இழக்க மனமில்லை என்றாலும் சூரிய அஸ்தமனமாகிவிட்டதால், நாட்டின் எல்லையில் மாறனும் விக்ரமனும் தங்குவதற்காக, பசிய மூங்கிலால் கட்டப்பட்டிருந்த பாசறைக்குச் சென்றான்...

அவனுடைய பாசறையைச் சுற்றிப் படை வீரர்கள் தங்குவதற்குத் தழைகளை வெட்டி மேற்கூரையாக இட்டுச் சிறுசிறு அறைகள் வகுக்கப்பட்டிருந்தது...
மாலை நேரம் மயங்கி இருள் சூழ ஆரம்பித்தது…

இரவு உணவு முடிந்தபின்,

வீரர்கள் தங்கள் வெற்றியை ஆரவாரத்தோடு கொண்டாடினர்.

ஒரு புறம் யானைகள் முழங்கியது. ஒருபுறம் ஆடல் பாடல் மகளிரின் கூத்து நடந்தது. படை வீரர்கள் ‘கள்’ அருந்தி மகிழ்ந்திருந்தனர்...

இவற்றையெல்லாம் ரசித்தவாறே, அடுத்த நாளுக்கான திட்டங்களைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக விக்ரமன், மாறனின் பாசறைக்குச் சென்றான்…

பாசறையில், மாறன் தூரத்தில் தெரிந்த அருவியைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்.

மெய்க்காப்பாளன் விக்ரமன் வந்திருப்பதை மாறனிடம் தெரியப்படுத்தி விட்டு பாசறைக்கு வெளியே சென்றுவிட்டான்…

மெய்க்காப்பாளன் கூறிய விசயங்கள் எதையும் மாறன் கவனித்ததைப் போல் தெரியவில்லை…

"அப்படி என்ன யோசனை மாறா?… நாளை சிற்றரசர் திருவழுதி அவர்களின் மணிமுடியைப் பெற்றுக்கொண்டு, நம் நாடு நோக்கிச் செல்வதைத் தவிர வேறு ஏதேனும் செய்யத்தக்கக் காரியங்கள் இருக்கிறதா?" என்று விக்ரமன் கேட்டதும் மாறன் செவியில் விழுந்ததாகத் தெரியவில்லை.

மாறனின் அருகே சென்று அவன் தோளைத் தொட்டான் விக்ரமன்.

"வா விக்ரமா என்ன விஷயம்?" என்று அருவியைப் பார்த்தவாறு கேட்டான் மாறன்…

" நாளைய பற்றிய திட்டங்களைப் பற்றிக் கலந்தாலோசிக்க வந்தேன்"

"எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றான் மாறன்.

"என்ன?!!!" என்று அதிர்ச்சியடைந்த விக்கிரமன் மாறனின் தோளை உலுக்கி,

"உனக்கு என்னவாயிற்று? நான் வந்ததைக் கூடக் கவனியாத அளவுக்கு அப்படியென்ன யோசனை?" என்று விக்ரமன் கேட்டான்.

"தெரியவில்லை" என்ற மாறனை வினோதமாகப் பார்த்தான் விக்ரமன்.

"பார்த்தாயா விக்கிரமா?" என்று அருவியைப் பார்த்தவாறே மாறன் கேட்க,

விக்ரமன் "பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்… ஆனால் அருவியை ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை… நாளை நாம் செய்யவிருப்பதை நீ கூறினால், நானும் நிம்மதியாக அருவியை ரசிக்க வாய்ப்பிருக்கிறது"

"அருவியா? ஆம்! அருவியைப் போல் தான் சடசட வென்றிருந்தது அவளுடைய வாள்வீச்சு!" என்று முகம் முழுவதும் பிரகாசமாய்க் கூறியவனைப் பார்த்ததும்,

‘மாறன் ருத்ராவைத்தான் சொல்கிறான்’ என்பதைப் புரிந்து கொண்ட விக்ரமன்.

"ஆம் மாறா! அவளின் வாள் வீச்சைக் கண்டு நானும் மலைத்தேன்" என்று ஆச்சரியம் விலகாமல் கூறினான்.

"கண்டார் உயிருண்ணும் காரிகை! என்று புலவர் பெருமக்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ஆனால் இன்றுதான் அப்படி ஒருத்தியைப் பார்த்தேன்."

‘இப்பொழுது யாரைச் சொல்கிறான்?’ என்று புரியாத விக்ரமன் "யாரது மாறா?" என்று கேட்டான்.

"அவளுடைய வாளுக்கு இசையாத என் வீரநெஞ்சம், கூர்வாளைப் போன்ற கண்களால் காயம்பட்டு நிற்கிறேன்."

"நீ யாரைச் சொல்கிறாய்?" என்று ஒருவாறு யூகித்து, புருவம் சுருக்கி கேட்ட விக்ரமனிடம்,

"அவளுடைய நாசியைக் கவனித்தாயா? கோபத்தில் வெளியேறிய வெப்ப மூச்சுக்காற்றால் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது."

"நானெங்கே அதையெல்லாம் கவனித்தேன்?"

"அவளுடைய பவள இதழ்களை மடித்தபோது நானும் மடிந்தேன்…

"இப்பொழுது நான் மடிகிறேன்!"

"நல்லது! என்னை இடையூறு செய்யாமல் போய்வா!"

"அடக்கிராதகா!.... மாறா!..."

"இன்னுமா போகவில்லை!"

"எங்கே போவது?"

"எனது மனம் அவள்பால் சென்றுள்ளது… எனக்கு அவளைச் சந்திக்க வேண்டும்!"

"யாரை?"

"செண்பகப்பொழில் இளவரசி ருத்ராவை"

"முடிந்தது!"

"எது?"

"ம்ம்… நம் ஆயுள்!"

"அதைத்தான் அவள் பறித்துச் சென்று விட்டாளே"

"சந்தோ...சம்!"

"ஆம்! அந்த சந்தோசம் கிடைக்கவேண்டுமானால் நான் அவளைச் சந்தித்தே ஆகவேண்டும்…"

"அது எப்படி முடியும்?"

"நீ மனது வைத்தால்!"

"நானா? என்ன விளையாடுகிறாயா மாறா? திருவழுதிப் பாண்டியர் நம்மிடம் மிரண்டு போனாரே, தவிரத் தோற்று ஓடவில்லை... அவர் புறங்காட்டியதற்குக் காரணம் பெருங்கிள்ளி பாண்டியர் என்பதை மறவாதே!"

"அதை எதற்கு இப்பொழுது சொல்கிறாய்?" என்று சலித்தவனிடம்,

"இளவரசி ருத்ரா அவருடைய அருமை மகள்!"

"அதனாலென்ன?"

"புரிந்து தான் கூறுகிறாயா? ஒரு இளவரசியை அந்தப்புரத்திற்குச் சென்று சந்திப்பதென்பது சாத்தியமான விசயமில்லை…"
"சாகச வேலைதான்... காதலில் சாகசம் அவசியம் நண்பா… சிக்கல் இருந்தால்தான் காதலின் ஆழம் கூடும்."

"காதலா?!! ஒரு முடிவோடுதான் பேசுகிறாயா? இளவரசி ருத்ராவிற்கு உன் மீது எப்படி விருப்பம் வரும்?"

"நீ கண்டாயோ? ஆனால் நான் கண்டேன் அவள் தடுமாற்றத்தை."

"அவள் கண்களில் கனல்தான் தெரிந்தது... காதல் தெரியவில்லை…'

"நீ அந்த வாயாடிப் பெண்ணுடன் வழக்காடியதால் கவனிக்கவில்லை நண்பா!"

"இவள் யார்?"

"உன் அருகில் நின்று கொண்டிருந்தவள்."

"அந்தப்பெண் பிரதான தளபதியின் மகள்"

"ஐயோ பாவம்! அவருக்கு இப்படி ஒரு வாயாடி மகளா"

"..." ஒன்றும் பேசாமல் மாறனை பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரமன்.

"வா நண்பா! போய் வருவோம்."

"இதில் நானெதற்கு?"

"அந்தப்புரக் காவலர்களை சமாளி! அதற்குள் நான் சென்று…"

சிறிது நேரம் அமைதியாக யோசித்த விக்ரமன், மாறனின் முகத்தைப் பார்த்ததும், அதில் தெரிந்த பாவத்தில் (முகபாவம்) சிரித்தபடி, "சரி வா! என்னதான் நடக்கிறதென்று பார்த்து விடுவோம்" என்றதும் இருவரும் காவலாளி போல் மாறுவேடம் புனைந்து அரண்மனையை நோக்கிச் சென்றனர்.

அரண்மனையின் பின்புறம் வரும் வரை மிக எளிதாகக் கடந்து வந்த இருவரையும் அந்தப்புர வாசலில் வைத்து, காவலாளி மடக்கி விட்டான்.

"நில்லுங்கள்! யார் நீங்கள்?" என்றதும்,

விக்கிரமன் வேகமாக அவனருகில் சென்று, “நாங்கள் பிரதான தளபதியின் மாளிகை பணியாளர்கள். அவர் தன் மகளிடம் கூறி வரச் சொல்லி செய்தி அனுப்பியுள்ளார்” என்று சரளமாகப் புளுகினான்.

வார்த்தைகளின் எண்ணிக்கை-1257
சிவதாசனின் கர்ஜனை தொடரும்...
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

ஆரணங்கு = அருமை+அணங்கு = அருமையான பெண்

பனிச்சை = கொண்டையிட்டு முத்துக்களால் அலங்காரமாகத் தொங்க விடுதல் (மீனாட்சி அம்மன், ஆண்டாள் கொண்டையில் முத்துகள் தொங்குமே)

பூங்கரை நீலம் = பூ + கரை + நீலம் = பூவேலைப்பாடுகளை ஓரங்களில் உடைய நீல ஆடை. ஆடையின் மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் இருக்கும்.



கதையைப் படிக்கும் அன்புள்ளங்கள் கதையைப் பற்றி என்னிடம் நீங்கள் சொல்ல விரும்புவதை கீழே உள்ள லிங்க் ஐப் பயன்படுத்தி கமெண்ட்ஸ் பாக்ஸ்சில் தெரிவியுங்கள்...

 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22-சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -7

அறப்பளீஸ்வரர் சன்னதியில், சீலன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய போது,

"ஜெயம் உண்டாகட்டும் மகனே!" என்ற தெய்வீகக் குரல் கேட்டது.

திடுக்கிட்டு, தரையில் படிந்திருந்த தன் சிரசைத் தூக்கி சிவனைப் பார்த்தான் சீலன்.

'உண்மையிலேயே குரல் கேட்டதா? அல்லது என் மனப் பிரமையா?' என்ற ஐயம் எழ,

"கோயிலில் என்னைத் தவிர எவருமில்லை… என்னை வாழ்த்தியது யார் அய்யனே? நீரா? சித்தர்கள் வாழும் புனித பூமியில் என் பாதம் பட்டு, சித்தர்களின் உறைவிடமான குகையில் தங்கி, சித்தர்கள் நீராடிய அருவியில் நீராடியதால், உம் குரல் கேட்குமளவு நான் புண்ணியம் செய்தவனாகி விட்டேனா?" என்று உள்ளம் உருகி நிற்க,

"ஈசன் அருளில்லாமல் நானும் உன்னை வாழ்த்தியிருக்க முடியாது மகனே!" என்று சீலனின் பின்புறமிருந்து குரல் வர, திரும்பிப் பார்த்தவன் அதிர்ச்சியில் சட்டென்று எழுந்து நின்றான்…

அங்கே ஒரு சிவனடியார் தியானம் செய்யும் கோலத்தில் அமர்ந்திருந்தார்.

"சுவாமி! தாங்கள் யார்? சன்னதிக்குள் வரும்பொழுது உங்களை நான் பார்க்கவில்லையே? அந்த அளவுக்கா மதிமயங்கிப் போய்விட்டேன்?"

"அதைப் பற்றிப் பிறகு பேசலாம்… நீ ஏன் மறைந்து வாழக் கொல்லிமலையைத் தேர்ந்தெடுத்தாய் என்று நான் அறியலாமா?"
"பாண்டிய தேசத்தில் எத்தனையோ மலைப்பிரதேசம் இருக்க நான் இங்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது சுவாமி… அதில் ஒன்று, இங்கே நான் ஏற்கனவே இருமுறை வந்திருக்கிறேன்…அந்நாளில் நான் விளையாட்டாகப் பார்த்து வைத்த குகை தான் இன்று எனக்கு அடைக்கலம் தந்திருக்கிறது… இரண்டாவது,
தெய்வ கடாட்சம் நிறைந்த சித்தர்கள் இம்மலையில் அதிகம் விரும்பி வசிக்கிறார்கள் என்று சென்ற முறை வந்தபொழுது அறிந்தேன்...

என்னைப் பற்றி அறிந்த தங்களுக்குப் பாண்டிய நாட்டின் இன்றைய நிலைமையும் அறிந்திருப்பீர்… அந்தக் கொடூரர்களை வெல்ல எனக்கு, இங்குள்ள சித்தர்களின் துணையும் வேண்டும்... சில கலைகளும், மருத்துவ உதவியும் தேவைப்படுகிறது…"

"ஏன் உனக்கிருக்கும் வல்லமை போதவில்லையா?"

"அறவழியில் போர் புரிந்தால் இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்… ஆனால் அக்கொடியவர்களுக்கு அறம் என்ற பதத்திற்கே பொருள் தெரியாதே… தென்னவனாம் பாண்டியனை நேருக்கு நேர் நின்று வெற்றி பெற அவனுக்குத் துணிவிருக்கவில்லையே…"

"நீ சொல்வது சரிதான்… வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும் என்கிறாய்… உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் நீ கேட்கலாம்… என்னால் ஆகாதெனினும் உபாயத்தைக் கூறுவேன்." என்றதும்,

'சித்தர்களைச் சந்திக்க இயலுமா? அப்படியே சந்தித்தாலும் தான் வந்த காரியத்திற்குத் துணைபுரிவார்களா?' என்ற நிச்சயமில்லாமல் வந்தவனுக்கு அந்தச் சிவனடியாரின் வார்த்தைகள், மீண்டும் உயிர் தருவதாக இருந்தது...


சன்னதியில் இருக்கும் சிவனிடம், "இருளடைந்த என் வாழ்வில், என்ன செய்வது?… எப்படிச் செய்வது? என்று ஒருவழியும் புலப்படாது, உன் மேலுள்ள நம்பிக்கை எனும் தீபத்தை மட்டுமே நம்பி வந்தேன்… நல்வழி காட்டினாய்… எந்தையே இறுதிவரை உன் அருட்பார்வை என் மீதும், எம் மக்கள் மீதும் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்…" என்று ஈசனுக்கு நன்றி கூறி, சிவனடியாரைப் பார்த்தான்.

"முதல் உதவியாக, எந்தையும் தாயும் சிறு வெளிச்சம் கூட இல்லாத இடத்தில் சிறைப்பட்டிருக்கிறார்கள்… அவர்களைத் தினசரி தரிசிக்க வழி இருக்கிறதா? இங்குள்ள சித்தர்கள், கூடு விட்டு கூடு பாயும் கலையில் தேர்ந்தவர்கள் என்று அறிந்தேன்… எனக்கு அந்தக் கலையைக் கற்றுத்தர இயலுமா?"

"உனக்கு இயலாது என்று கூற என் நா எழவில்லை… ஆனால் அந்தக் கலையைக் கற்பதற்குள் காலங்கள் சில கடந்துவிடும்... அதற்குள் அந்த எத்தர்கள் பாண்டிய தேசத்தில் வேரூன்றி விடக்கூடும்… அதனால், நீ நினைப்பதைத் திறம்படச் செயல்படுத்த எளிய வழியொன்று இருக்கிறது… ஆனால் அதற்கு முன் இம்மலையின் காவல் தெய்வமான கொல்லிப்பாவையைத் தரிசித்து, உன் மனச்சுமையை அவள் பாதத்தில் சமர்ப்பித்து, அவளுடைய கருணையைப் பெற்றுவிடு… கொல்லிப்பாவை மிகவும் இரக்க சிந்தை மிக்கவள். உனக்கு இரங்குவாள்… அவளுடைய ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே இம்மலையிலிருந்து எதையும் எடுத்துச் செல்ல முடியும்… கொல்லிப்பாவையின் ஆசீர்வாதம் வாங்கி வா… உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்…" என்றார்.

அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு மேற்கு பகுதியில் இரண்டு காத தூரம் இந்திரன்(குதிரை) மீதேறிச் சென்று, கொல்லிப்பாவை என்ற காவல் தெய்வத்தைத் தரிசித்தான்…

ஒவ்வொரு முறை கொல்லிப்பாவையைத் தரிசிக்கும் பொழுதும் மனதில் எழும் ஆச்சரியம் இப்பொழுதும் எழுந்தது…

'இப்பாவையை வடித்தவர் யார்?

எத்தனையோ விதமான அழகு சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்திருக்கிறேன்… ஆனால் இந்தக் கொல்லிப்பாவையிடம் ஏதோ விசித்திரமான அழகு குடியிருக்கிறது… இவ்வளவு சுந்தர வதனமும், எழில் வடிவும் ஒருங்கே அமையப்பெற்ற பெண் முற்காலத்தில் வாழ்ந்துள்ளாளா?

இறைவனே இப்பாவையை வடித்ததாகச் சிலர் கூறக்கேட்டேன்…

இறை வடிவங்களில் தெரியும் சுந்தரமான வடிவம் வேறு, இப்பாவையிடம் தெரியும் மனோகர வடிவம் வேறு…' என்று தன் எண்ணப்போக்கு எங்கோ செல்வதை உணர்ந்த சீலன்,

"என் எண்ணத்தில் தவறு இருப்பின் மன்னித்தருளுங்கள் தாயே! உம் காருண்ணியம் வேண்டி வந்திருக்கும் எனக்கு, நல்லருள் புரியுங்கள்…"


என்று ஆரம்பித்து, தான் எடுத்த காரியசித்திக்கு வழிகாட்டி அருள்புரியுமாறு வேண்டி நின்றான்…

கொல்லிப்பாவை, தன் இதழ் விரித்து, மோகனப் புன்னகை சிந்தி, கண்களின் இமைகளை மூடித் திறந்து சம்மதம் அளித்தாள்.

ஏற்கனவே, 'கொல்லிப்பாவை, அங்கங்கள் அசையும் தன்மை கொண்டவள்!' என்று கேள்விப் பட்டிருந்தாலும் நேரில் கண்ட இன்ப அதிர்ச்சியுடன் கொல்லிப்பாவை குடிகொண்டிருந்த குடவரையை விட்டு வெளியேறினான்...


அடுத்தக் கணம் சீலன் அந்தச் சிவனடியார் முன் நின்றான்…

ஒரு மூலிகையை எடுத்துச் சீலனிடம் காட்டினார்… அந்த மூலிகை விளையும் பகுதியையும் கூறினார்..
"இந்த முறை, சித்தர் குளிகையை நான் செய்து காட்டுகிறேன்… நன்றாகக் கவனித்துக் கொள்… பிறகு உனக்குத் தேவைப்படும் போது நீயே செய்துகொள்வாய்…" என்று கூறிவிட்டு,

"இந்த மூலிகையின் பெயர் ஆதள மூலிகை… ஆதளம் என்ற செடியில் உள்ளது… அதன் சாபம் நீக்கி மூலிகையை எடுத்து வந்து, மூலிகையின் இலையைக் கிள்ளி, அதிலிருந்து வரும் பாலுடன் கரும்பூனையின் முடியைப் போட்டு, செம்புப் பாத்திரத்தில் சுடவைத்து, மலைத்தேன் கொண்டு பிசைந்து, உருண்டையாக்கி, செப்புத் தகடு இந்திரத்தினுள் மூடி வைத்துக் கொள்ள வேண்டும்… இதைச் சித்தர் குளிகை என்றும் அழைப்பர்... இந்தக் குளிகையை வாயில் போட்டு அதக்கினால்... யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறையலாம்!" என்றார்.

"கேள்விப்பட்டிருக்கிறேன் சுவாமி… ஆனால் உண்மையாகவே பிறர் கண்ணுக்குத் தெரியமாட்டேனா?"

"மருந்தோ, மந்திரமோ, முழுவதும் நம்பி செயல்படுத்தினால் மட்டுமே பலிக்கும்… ஆகையால் உன் முன்னால் செய்து காட்டுகிறேன்… இதோ அந்தக் குளிகை தான் இது…" என்று கூறி அதை வாயில் போட்ட ஒரு நாழிகைக்குள் சிவனடியார் மறைந்தார்…"

சீலனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை… சிவனடியார் இருந்த இடத்தைக் காற்றில் துழாவினான்… அப்பொழுது சிவனடியாரின் குரல் மட்டும் கேட்டது.

"இப்பொழுது நம்புகிறாயா? நீ சிவனின் சன்னதிக்குள் வரும்போது, நான் உன் கண்களுக்குப் புலப்படாததற்கான காரணமும் இதுதான்…" என்றார்.

சிறிது நேரத்தில் கண்களுக்குப் புலப்பட்டவர், மற்றொரு குளிகையைக் காட்டி, "ஆதளமூலிகைக் குளிகைக்கு, மாற்றுக் குளிகை இது! இதை வாயில் போட்டால் மட்டுமே மீண்டும் உன் உருவம் அனைவருக்கும் கண்களுக்கும் தெரியும்… நீ ஆற்ற வேண்டிய காரியங்களைத் திறம்பட முடித்து விட்டு, என்னிடமே வந்து இந்த மாற்றுக்குளிகையைப் பெற்றுக்கொள்... ஏனெனில் இந்த மாற்றுக் குளிகையின் ரகசியம் சித்தர்கள் தவிர யாருக்கும் சொல்வதில்லை…" என்றவர் ஆதள மூலிகைக் குளிகையை மட்டும் சீலனிடம் கொடுத்தார்.

"இதுவே, தாங்கள் எனக்கு அளித்த பெரிய வரம் சுவாமி! உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை… இப்போராட்டத்தில் நான் வெற்றி வாகை சூடிய பிறகு, மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மையின் திருக்கோயிலின் உட்புறம் உங்களுக்கு ஒரு தனிச் சன்னதி அமைத்து வழிபடுகிறேன்... என் வாழ் முழுதும் உங்கள் சேவையை என் முதல் பணியாகச் செய்வேன்…" என்று பணிந்து வணங்கியவன்,

"தாயையும், தந்தையையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறேன். எனக்கு விடை தாருங்கள்…" என்றான்.

"மிக முக்கியமான விபரம்! இது எப்பொழுதும் உன் ஞாபகத்தில் இருக்கட்டும்... இம்மலையிலிருந்து நீ எடுத்துச் செல்லும் எந்த ஒரு பொருளும், நல்லன செய்வதற்காக மட்டுமே உபயோகிக்க வேண்டும். மாறாக, தீய செயலுக்கு உட்படுத்தினால், கொல்லிப்பாவையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அவள் யாரையும் மன்னிப்பதில்லை. உயிர் பலி வாங்கி விடுவாள். இதை எப்போதும் உன் மனதில் இருத்தி வை. சென்று வா!" என்று கூறி மறைந்தார்.

இந்திரனின் மீதேறி மதுரையின் கோட்டை வாசலை அடைந்தான்…

ஆதள மூலிகைக் குளிகையைத் தன் வாயில் போட்டுக்கொண்டு,

"இந்திரா! இப்பொழுது நான் யார் கண்ணிற்கும் புலப்பட மாட்டேன்… அதனால், உன் மீது நான் அமர்ந்திருப்பதை, பிறர் அறியாவண்ணம், நீ நடந்து கொள்ள வேண்டும்… அதன் பொருட்டு, நீ நோய்வாய்ப்பட்ட குதிரை போல் தளர்வாக நடந்து, நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல். ஏனென்றால் நீ வலிமையான புரவி என்றறிந்தால், கயவனின் ஆட்கள் உன்னை அவர்களின் குதிரை லாயத்திற்குக் கொண்டு சென்று விடுவர்... கவனம் இந்திரா! நான் சொல்வது புரிகிறதா?" என்றதும், வேகமாகத் தலையாட்டியது இந்திரன் என்ற சீலனின் புரவி.

மனிதர்கள் கண்ணுக்கு சீலன் புலப்படாததால், பகை வீரர்களின் பாதுகாப்பை மீறி, அன்னையும் தந்தையும் இருக்கும் இடத்திற்கு எளிதாகச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கில் ஜோதிப்புல்லை வைத்து விளக்கேற்றி, அவர்களுக்கு சேவை செய்து விட்டு,

"தினமும் ஆதவன் உதிக்கும் வேளையிலும், மறையும் வேளையும், நான் இங்கு வருகிறேன்… என்னுடைய ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெற வழிகாட்டுங்கள்." என்று அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறினான்.

அல்லும் பகலும் மக்கள் கூட்டம் சுறுசுறுப்பாக இயங்கும் மதுரை வீதிகள், ஆளரவமற்று வெறிச்சோடி காணப்பட்டது.

நாட்டு மக்களின் நிலை அறியும் பொருட்டு, பாண்டிய வீரன் ஒருவனின் வீட்டில் வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்கான திண்ணையில் அமர்ந்தான்‌ சீலன்.

சீலன் எதிர்பார்த்ததைப் போலவே அந்த வீரன் தன் குடும்பத்தாருடன் நாட்டின் நிலைமையைக் கவலை தோய்ந்த குரலில் அளவளாவிக் கொண்டிருந்தான்.

அரண்மனையில் பகைவர்கள் இருக்கிறார்கள்… நம் வீரர்கள் யாரும் இல்லை… உள்ளே என்ன நடக்கிறது? என்று கூடத் தெரியவில்லை… இது போதாதென்று, இன்றைய நிலைமைக்குக் காரணமான நம் இளவரசரும் அரண்மனையில் இல்லையாம்... எங்கே சென்றார்? என்று யாருக்கும் தெரியவில்லை…

"தாயே மீனாட்சி! இதென்ன சோதனை… இளவரசரும் இல்லையெனில் நம் நாட்டின் நிலை?" என்று கவலையுடன் கேட்டது பெண் குரல்.

"நட்பு நாடுகளுக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார் நம் பிரதான அமைச்சர்.... இனி அக் கொடுங்கோலன்தான் நம் பாண்டிய நாட்டை ஆளப் போகிறான் போலிருக்கிறது…"

"இதென்ன கொடுமை! அப்படி என்றால் நம் மக்களின் நிலைமை?"

"இரத்தத்தில் வீரத்தையும் நெஞ்சில் ஈரத்தையும் சுமந்த நம் மன்னருக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தே மக்கள் மிரண்டு போயுள்ளனர்… அமைச்சர் பெருமக்களே தங்களது மாளிகையை விட்டுவிட்டு சாமானிய மக்களில் ஒருவராக மறைந்து வாழ்கின்றனர்... நம்மையெல்லாம் அந்த மீனாட்சியும் சொக்கரும்தான் காப்பாற்ற வேண்டும்…"

"அதெப்படி? அவர்களின் மூல விக்கிரகத்தையே சேதப்படுத்தி விட்டார்களாமே? அது என்ன பழக்கம்? ஒரு நாட்டைக் கைப்பற்றினால், அந்நாட்டின் கோயில்கள், அரண்மனை, கோட்டை இவற்றையெல்லாமா சேதப்படுத்துவது?"

"தங்களிடம் தோல்வியுற்ற மன்னர்களின் சாதனைகளைச் சொல்லும் எந்த ஒரு சின்னமும், தாங்கள் கைப்பற்றிய நாட்டில் இருக்கக் கூடாது என்று வெற்றி வாகை சூடும் எல்லா அரசர்களும் செய்வதுதான்... ஆனால் இவர்கள் வேறு வகை…" என்று அக்குடும்பத்தினரின் உரையாடல் தொடர, சீலன் அங்கிருந்து வெளியேறினான்.

'அரண்மனையின் நிலையைப் பார்த்து வரலாம்!' என்று எண்ணிய சீலன்,

இரவு இரண்டாம் சாமம் வரைக் காத்திருந்து, அரண்மனைக்குள் சென்றான்.

அரண்மனை எவ்விதத்திலும் சேதப்படாமல் இருந்தது… அதோடு அரண்மனையின் ஒவ்வொரு மூலையிலும் பகை நாட்டு வீரர்களும், காவலாளிகளும் நின்ற வண்ணமிருந்தார்கள்.

'இவ்வளவு வீரர்கள் அரண்மனைக்குள் இருக்கிறார்கள் என்றால் அக்கொடியவன் அரண்மனைக்குள்தான் இருக்கிறானா?' என்ற எண்ணம் எழ, சீலன் அரண்மனையின் ஒவ்வொரு அறையிலும் சென்று பார்த்தான்.

சீலன் எதிர்பார்த்ததுபோல் அக்கொடியவன் காலங்காலமாகப் பாண்டிய வேந்தர்களின் சயன அறையில், சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.

அதனைக்கண்ட சீலனின் இரத்தம் கொதித்தது… கண்கள் சிவக்க, தாடை இறுகி பற்கள் நற நறத்தபடி,

"யார் மஞ்சத்தில் யார் உறங்குவது? பன்னெடுங்காலமாக வீரம் செறிந்த வேங்கைகள் இளைப்பாறிய அறை இது… உன்னைப் போன்ற பிறவிகளின் நிழல் கூட இவ்விடத்தில் இருந்திருக்கக் கூடாது. முதலில் உன்னை இங்கிருந்து விரட்டுகிறேன்' என்று நினைத்த சீலன்,

சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த வாளை உருவி, கொடியவனின் கழுத்தைக் குறிவைத்து ஓங்க,

"இது உனக்கு ஊழிக் காலமடா… யாரைப்பார்த்து ஏளனம் செய்கிறாய்? உனக்கு முடிவு வந்துவிட்டது… என் அன்னை மீனாட்சியின் சாட்சியாகக் கூறுகிறேன்... உன் முடிவு இதைவிடக் கோரமாக இருக்கும்." என்ற பெண்ணின் சூளுரை சயன அறை முழுவதும் எதிரொலித்தது…

சட்டென்று தன்னுணர்வு பெற்ற சீலன்,

"சேச்சே! உன்னைப் பார்த்த ஒரு கணத்தில் உன் புத்தி எனக்கு வந்து விட்டதே? பாண்டிய வம்சத்தை நெருங்கியதே தவறு என்று எண்ணி, உன்னை ஓட ஓட விரட்டுகிறேன் பார்… நிம்மதியான உறக்கத்தை உன் வாழ்நாளில் கிடைக்க விடாமல் செய்கிறேன்…' என்று வஞ்சினம் கொண்டவன், வாளை இருந்த இடத்தில் வைத்து விட்டு,

சயன அறையின் அனைத்துக் கதவுகளையும் வெளிப்புறமாகத் தாழிட்டான்…

வெற்றிபெற்ற களியாட்டத்திலிருந்த காவலாளிகள் மற்றும் வீரர்களின் கண்களில் சீலன் புலப்படாததால் அவர்கள், தாழ்ப்பாள் அசைவதைக் கவனிக்கவில்லை...

அக்கொடியவன் உறங்கிய மஞ்சத்தின் மீது அருகிலிருந்த தீப்பந்தங்களைத் தூக்கி வீசி விட்டு, அங்கிருந்து சீலன் அகன்றான்.

சிறிது நேரத்தில் காவலாளிகள் பரபரப்பாகி, அனைவரும் சயன அறையை நோக்கிச்செல்ல,

சீலன், அரண்மனைக் கொலு மண்டபத்தில், பாண்டிய மாமன்னர்கள் வீற்று அரசு புரிந்த, அரியாசனத்தை எடுத்துக்கொண்டு, சுரங்கப் பாதை வழியாகக் கிருதுமால்நதி என்னும் புண்ணிய நதி தீரத்தை அடைந்தான்…

அரண்மனைக்கு அருகில் இறங்கிய பொழுது சீலன், கிருதுமால் நதி தீரத்தில் தனக்காகக் காத்திருக்கச் சொன்னதன்படி, இந்திரன் (குதிரை) நதிக்கரையில் காத்திருந்தது…

"அரண்மனையைக் கையகப்படுத்திக் கொண்ட அக்கயவன், நம் பாண்டியர் குல வேந்தர்களின் அரியணையை அவன் நெருங்கவும் கூடாதென்று, எடுத்து வந்துவிட்டேன்… இதை நம் எண்ணம் நிறைவேறும் வரை பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும் வா!" என்று இந்திரனிடம் கூறி,
இந்திரன் மீதேறி கிருதுமால் நதிக்கரை வழியாகவே, கிருதுமால் நதி தோன்றிய ஊற்றுகளில் ஒன்றான நாகத்தீர்த்தத்தை நோக்கிச் சென்றான்... நாகமலையின் அடிவாரத்தில், விரிந்து பரந்திருந்த அடர்ந்த வனத்தில் இருந்தது நாக தீர்த்தம்.

நாக தீர்த்தத்திற்குள்ளே புகுந்து சென்று, அதன் உள்ளே இருக்கும் குகையின் மறைவான பகுதியில் மறைத்து வைத்தான்…

தீர்த்தத்திலிருந்து வெளியேறி, நாகதேவதையின் முன் பணிந்து, "தாயே பன்னெடுங்காலமாக நீதிநெறி வழுவாமல் ஆட்சிபுரிந்த பாண்டியர்களின் அரியாசனத்தை, உம் வசம் ஒப்படைக்கிறேன்... நான் வந்து எடுக்கும்வரை, தொன்மை வாய்ந்த இந்த அரியணையைப் பாதுகாத்து அருளுங்கள் தாயே!" என்று வேண்டிய சீலன்,

கொல்லிமலை நோக்கி விரைந்தான்.


வார்த்தைகளின் எண்ணிக்கை:1445


சிவதாசனின் கர்ஜனை தொடரும்...
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 சிவதாசன் எனும் நான்!... அத்தியாயம் -8

செண்பகப்பொழில் இளவரசி ருத்ராதேவியை, அந்தப்புரத்தில் சந்திக்க மாறனும், விக்ரமனும் செல்லும்பொழுது தடுத்த அரண்மனைக் காவலாளியை சமாளித்து, அந்தக் காவலாளியிடமே இளவரசியின் அரண்மனைக்குச் செல்லும் வழியைக் கேட்டனர்.

"ராணிகளுக்கான அரண்மனைக்கு அடுத்ததாக இளவரசியின் அரண்மனை இருக்கிறது. அங்கே இருக்கும் சேடிப்பெண்கள் உங்களைத் தளபதியின் மகளிடம் அழைத்துச் செல்வார்கள்…" என்று கூறிவிட்டு, மாறனும் விக்ரமனும் அந்தப்புரத்திற்குள் இளவரசியின் அரண்மனையை நோக்கிச் செல்வதை உறுதிசெய்த பிறகு காவலாளி தன் வழியே சென்றான்.

ருத்ராதேவியின் அரண்மனை வாயிலிலேயே மடக்கிய இரு சேடிப்பெண்களிடமும் தங்களை பிரதான தளபதி அனுப்பியதாக மாறன் கூறியதும்.

"ஓ! யாழைத் தேடி வந்துள்ளீரா? அவள் எப்பொழுதும் இளவரசியின் அருகில்தான் இருப்பாள்." என்று ஒருத்தி கூற,

"ஓ! அந்த வாயாடிப் பெண்ணின் பெயர் யாழா? யாழின் இசையைப் போன்று இனிமையாகப் பேசுவாள் என்று ஏமாற்றமடைந்திருக்கிறார் இத்தேசத்தின் பிரதா...ன தளபதி" என்று தன் நண்பன் விக்ரமன் காதுக்குள் மாறன் கிசுகிசுத்தான்.

மாறனின் பரிகாசத்தால் ஏற்பட்ட சிரிப்பை மிகவும் கஷ்டப்பட்டு மறைத்தவண்ணம் சேடிப் பெண்களிடம்,

"நல்லதாகப் போயிற்று... உங்கள் இளவரசி எங்கே இருக்கிறார்?" என்று கேட்டான் விக்ரமன்.

"அந்தப்புரத்திற்குள்ளேயே ஆடவர் யாரும் வர அனுமதியில்லை… தாங்கள், பிரதான தளபதி சொல்லி அனுப்பிய தகவலுடன் அவரது மகளைப் பார்க்க வந்திருப்பதால் மட்டுமே இளவரசியாரின் அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுகிறீர்கள்… இருப்பினும் இளவரசி இருக்கும் இடத்திற்கு அந்நிய ஆடவர்கள் செல்ல அனுமதி கிடையாது… யாழ், இளவரசியாருடன் அரண்மனை மேல்மாடத்தில் இருக்கிறார்கள்… நீங்கள் இந்த இருக்கையில் அமர்ந்தீர்களானால் நாங்கள் சென்று, யாழை இவ்விடம் வரச் சொல்கிறோம்." என்று கூறி, நண்பர்கள் அமர்வதற்கான கூடத்தில் விட்டுவிட்டு, சேடிப்பெண்கள் மாடிப்படிகளில் ஏறினர்.

"இவர்கள் இருவரையும் இந்த ஊரில் பார்த்தது போலில்லையே?" என்று கூடத்தின் எதிர்புறம் அமர்ந்து பூக்களைத் தொடுத்துக்கொண்டிருந்த பணிப்பெண்களில் ஒருத்தி கூற,

"உடையைப் பார்த்தால் பணியாள் போலிருக்கிறது… ஆனால் முகக்களையோ பணியாள் போலில்லையே…" என்றொருத்தி ஆராய,

"இத்தனை சுந்தரமான ஆடவரை நான் இதுநாள்வரை பார்த்ததே இல்லை…" என்றொருத்தி பெருமூச்சு விட,

"சரியாய் போயிற்று… இளவரசியின் அரண்மனைக்குள் வந்திருக்கிறார்கள் என்றால் நம் பட்டத்தரசியின் தூதுவர்களாகவோ உறவினராகவோ இருக்கக்கூடும்… அரசிக்கு உங்களின் இந்த உரையாடல் தெரிந்தால் நம் நிலை என்னாகும்? வீண்பேச்சை நிறுத்திவிட்டுப் பூக்களைத் தொடுக்கும் வேலையைக் கவனியுங்கள்" என்றதோடு அந்தக் கூடத்தின் திரைச்சீலைகளை இழுத்து அக்கூடத்தை மறைத்தாள் ஒரு பணிப்பெண்.

பணிப்பெண்களின் உரையாடலைக் கேட்டு விக்ரமன் குனிந்து சிரித்துக்கொண்டான். இது எதையும் கவனிக்காமல் அரண்மனையைப் பார்வையால் அலசிக்கொண்டிருந்த மாறனின் நாசியில் சுகந்த நறுமணம் காற்றோடு வர, வாசம் வரும் திசையை நோக்கிச் சென்றான்.

அங்கே மாறனையும் விக்ரமனையும் அமரவைத்த கூடத்தின் பின்புறம் அழகிய நந்தவனம் இருந்தது...

நந்தவனம் என்ற சொல்லமுடியாத அளவிற்கு இயற்கை அன்னையின் வரப்பிரசாதமாக இருந்தது… செயற்கையாக அமைக்கப்பட்டதைப் போன்றில்லை… இயற்கையாக வளர்ந்த மரங்கள், செடி, கொடிகளை முறையாகப் பராமரித்ததைப் போன்று அமைந்திருந்தது… அனைத்தையும் ரசித்தவாறு நடந்துகொண்டிருந்தவனின் கண்களில், சற்றுத் தொலைவில் இருந்த தாமரைக்குளம் தென்பட்டது. அதைச்சுற்றிலும் உலாவிய அன்னங்களும், மயில்களும், மான்களும், முயல்களும் நந்தவனத்தில் மிக இயல்பாக, சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தன. அந்த இடமே குளுமையான வனத்தைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது…

`நந்தவனத்தை ரசிக்கத்தான் இங்கே வந்தாயா மாறா?` என்று உள்ளுணர்வு நகைக்க, விக்ரமன் இருந்த இடத்திற்குத் திரும்பினான்.

விக்கிரமன் சேடிப்பெண் காட்டிய இருக்கையிலேயே அமர்ந்திருக்க, மாறன், நடந்து சென்று நந்தவனத்தைப் பார்த்தவாறு இருந்த திண்டில் அமர்ந்துகொண்டான்.

திடீரென்று ஒரு பெண் சிரிக்கும் ஒலி கேட்க, மாறன் எழுந்து நந்தவனத்தை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தவனுக்கு, சிரிப்பொலி மேலிருந்து வருவதைப் புரிந்துகொண்டு, சப்தம் வந்த பகுதியில் அன்னாந்து பார்த்தான்.

அங்கே மேல்மாடத்தில் அலங்கார பூங்கொடிகளுக்கிடையே ஒரு பெண் மயிலாசனத்தில் அமர்ந்திருப்பதும், அவளெதிரில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதும் தெரிந்தது. சற்றே தள்ளி நின்று பார்க்கையில், நின்றுகொண்டிருந்தவள் யாழ் எனத் தெரிந்துகொண்டான் மாறன்.

"நானும் அப்பொழுதிருந்து பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன் இளவரசி… தாங்கள் ஒரே இடத்தை வெறித்தவாறு அமர்ந்திருப்பதன் காரணத்தை அடியேன் அறிந்து கொள்ளலாமா?" என்று யாழ் இளநகையுடன் கேட்டாள்.

"நாளை என்ன சம்பவங்கள் நடக்கவிருக்கிறதோ என்பதை நினைக்கும்பொழுது மனம் மிகவும் கலங்குகிறது யாழ்…" என்ற குரல் நிச்சயமாக ருத்ராதேவியுடையது என்பதை அறிந்த மாறன், ருத்ராதேவியை இன்னும் அருகில் சென்று பார்க்கும் வகையில் மேல் மாடத்தின் கீழே நின்றபடி நிமிர்ந்து பார்க்க, அவர்களின் உரையாடல் தெளிவாக மாறனின் செவியில் விழுந்தது…

`ஆகா நம்மைப் பற்றிதான் நினைத்துக்கொண்டிருக்கிறாளோ?` என்ற எண்ணம் மாறனின் மனதை குஷிபடுத்த, அவ்விரு பெண்களின் உரையாடலைக் கவனிக்கத் தொடங்கினான்.

"மன்னியுங்கள் இளவரசி! நீங்கள் கவலையுடன் இருந்திருக்கிறீர்கள். நான் அது புரியாமல் ஏதோ உளறி விளையாடி விட்டேன்." என்றாள் யாழ்.

"அதிருக்கட்டும்... நாளை நடக்கவிருப்பதை உன்னால் யூகிக்க முடிந்ததா?" என்று ருத்ராதேவி கேட்டாள்

மேலே சிறிது நேரம் மவுனம் நிலவியது…

“அதை என்னிடமல்லவா தேவி கேட்டிருக்க வேண்டும்?” என்றான் தனக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"என்ன யாழ் ஒன்றும் பேசாமல் அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்று ருத்ராதேவி கேட்டதும்,

"பாண்டிய குமாரர் தங்கள் தந்தையைக் கைது செய்யப் போவதில்லை... ஆனால்… மன்னரின் மேன்மை மிகு மணி மகுடத்தைப் பெற்றுக் கொண்டு மதுரை சென்று விடுவார்... அதை நினைத்தாலே எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது... ஆனால்…"

"ஆனால்?"

"மதுரை பேரரசர் பெரிய பாண்டியர் இல்லாத நேரத்தில் நாம் போருக்குச் செல்வதில் சேனைகள் எல்லோருக்குமே ஒரு தயக்கம் இருந்தது… அதன் விளைவோ நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்துவிட்டது… ம்ம்ம்… நாளை பாண்டிய குமாரர், மணிமகுடத்தைப் பெற்றுச் சென்று விட்டால் நம் மன்னர், பேரரசர் பெரிய பாண்டியரிடம் சென்று மணிமகுடத்தை வாங்கி வருவதென்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை... மேலும் மதுரை பேரரசர் பெரிய பாண்டியர், மணிமகுடத்தைத் தருவதற்கு முன் என்ன மாதிரியான கட்டளைகள் பிறப்பிப்பார் என்பதும் தெரியவில்லை…" என்று தளபதியின் மகளாக யாழ் கவலையுற, இளவரசி ருத்ராதேவியோ,

"மாறன் மணிமகுடத்தைப் பெற்று செல்லமாட்டார் என்றே தோன்றுகிறது…" என்று ஏதோ யோசனையோடு கூறியதைப் பார்த்த யாழ்,

`என்னை அறிந்தவள் நீ` என்று ஆனந்தத்தில் திளைத்தான் மாறன்.

"மாறனா? பாண்டிய குமாரரையா கூறுகிறீர்கள்?" என்று கண்களை அகல விரித்து யாழ் கேட்க,

`பிறகு உன் தந்தை பெயரா மாறன்?` என்று மாறன் யாழை கலாய்த்தான்.

"ஆமாம்!" என்பதைப் போலத் தலையசைத்த இளவரசி ருத்ராதேவியின் கண்களில் தெரிந்த நளினத்தில் குழம்பிய யாழ்,

"இளவரசியின் கவலைக்குப் பாண்டிய குமாரர் தான் காரணமோ?"என்று கேட்க,

மீண்டும் "ஆமாம்!" என்பதைப் போலத் தலையசைத்த ருத்ராதேவியின் மனதை படித்த யாழ்,

"இளவரசி… தங்களின் மனக்குளத்தில் பிரதிபளிக்கும் பேறு கிடைப்பது அரிது…"

`இவள் புகழ்கிறாளா அல்லது?...` என்று மாறன் யாழின் முக பாவத்தைக் கவனிக்க,

"அப்பேறு மாறனைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது? என் மனம் அவரின் கம்பீர அழகிலோ, பாண்டியப் பேரரசின் புதல்வர் என்பதாலோ, அவரின் பராக்கிரமத்தாலோ மட்டும் ஈர்க்கப்படவில்லை யாழ்… போருக்கான எந்தக் கவசமுமின்றி அவர் எதிரில் நின்று போருக்கு அழைத்தேன்… அவரின் வாளும், அதைவிடக் கூர்மையான கண்களும் என் வாளைத்தவிர என் அங்கங்களில் படியவில்லை… என் ஆடைகளின் சிறு நுனிகூட அவரின் வாள் வீச்சை அறியவில்லை... கண்ணியமான போர்முறையைக் கையாண்டார்… எந்த ஒரு பெண்ணின் மனதும் தன் மானம் காப்பவன் பால் செல்வது ஒன்றும் புதிதல்ல… எதிரியின் மகளாக இருந்தும் என் பெண்மையை மதித்தவர்… என் வாள்வீச்சைக் கண்டு அவரின் தீர்க்கமான விழிகள் பாராட்டவும் தயங்கவில்லை… ஒரு பெண் என்னை எதிர்ப்பதா என்ற ஆணவம் துளிகூட இல்லை… இதைவிட வேறென்ன வேண்டும்?"

ருத்ராவின் மனதிலும் தான் இருப்பதை அவள் வார்த்தை மூலமாகவே கேட்ட ஆனந்தத்தில் மாறன் திளைக்க,
"ஆனால் அவர் மனதில் என்ன இருக்கிறதோ?... அவரைப் பொருத்தவரை தாங்கள், அவரால் தோற்கடிக்கப்பட்ட, பாண்டிய பேரரசிற்குத் துரோகம் விளைவித்த சிற்றரசரின் புதல்வி."

`ஆமாம் நீ கண்டாய்` என்று மனதிற்குள் யாழை, மாறன் வசைபாட,

"அவர் அப்படி எண்ணியதாகத் தெரியவில்லையே யாழ்!" என்றாள் ருத்ராதெவி கண்களில் கனவுகளோடு.

"மாமன்னர் குலசேகரப் பாண்டியரின் குமாரர் அவர்… வீரத்திலும் ஈரத்திலும் ஈடில்லா மதுரை மண்ணின் மைந்தர்…. அவருக்குப் பெண்களை மதிக்கக் கற்றுத்தரத் தேவையில்லை… இதுவும் ஒரு வகையில் அவருடைய கண்ணியத்தின் வெளிப்பாடாகத்தான் தோன்றுகிறது…"

`இவள் திருவாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டாள் போலிருக்கிறதே?` - மாறன்.

"அவர் கண்கள் வேறு கூறியதே, யாழ்… ஆரம்பம் முதல் மாறன் கண்களில் ஆர்வமிருந்தது... அவர் மனதில் நான் இருக்கிறேன் யாழ்…"

`அப்படிப்போடு` - மாறன்

"அவர் மதுரை பேரரசரின் குமாரர்… அவர்கள் ஆட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்திருப்பார்… இளம்வயது ஆண்மகன், கண்ணுக்கு லட்சணமான பெண்ணை ஆர்வமாக பார்ப்பது இயல்புதானே இளவரசி... அவர் ஆர்வமாகப் பார்க்கும் பெண்கள் எல்லோரும் அவர் மனதில் இருக்கமுடியுமா ருத்ரா?" என்று தவிப்பின் எல்லைக்குச் சென்ற யாழ் இளவரசியைப் பெயரைச் சொல்லி விழிக்க,

`தன் நாட்டு இளவரசியின் நாமத்தைக் கூறி பணிப்பெண் அழைப்பதா?` என்ற ஆச்சரியத்தில் மாறன் திகைத்து நிற்க, அடுத்தடுத்த உரையாடல்கள் மாறனின் இதயத்தைக் கூறு போடலாயின.

உணர்ச்சி மிகுதியில் மட்டுமே நெருங்கிய தோழியாக, தன் பெயரை உச்சரிக்கும் யாழின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட இளவரசி ருத்ராதேவி, தன் மேல் அவளுக்கு இருக்கும் அக்கரையில் மனம் நெகிழ்ந்தாள்.
"ஆனால் என் மனதில் அவர்தான் இருக்கிறார் யாழ்… இனி அவரின்றி வேறொருவரை என் மனம் ஏற்காது என்பது திண்ணம்." என்ற ருத்ராதேவியின் குரலில் இருந்த உறுதியில் கவலையுற்ற யாழ்,

"இளவரசிக்குத் தெரியாதது எதுவுமில்லை… பாண்டிய குமாரரைப் பற்றிய எண்ணங்களை விடுப்பது தங்களுக்கு நல்லதென்று தோன்றுகிறது…" என்ற யாழை நிமிர்ந்து பார்த்த ருத்ராதேவியின் கண்கள் சுருங்கியது.

"இப்பொழுது பேசுவது என் தோழியா? அல்லது பிரதான தளபதியின் மகளா?" என்ற ருத்ராதேவியிடம்,

"தங்களின் நலத்தை மட்டுமே விரும்பும் தோழியேதான்… " என்ற யாழை ருத்ராதேவி யோசனையுடன் பார்த்தாள்.

"நம் மன்னர் பெருமானுக்குத் தங்களின் எதிர்கால வாழ்வைப் பற்றிய கனவுகளை அறிந்தும்…." என்று யாழ் நிறுத்த

"இப்பொழுது மட்டும் என்ன நேர்ந்தது? மதுரை பாண்டிய பேரரசரின் குமாரரைவிடச் சிறந்த வரன் யாராக இருக்க முடியும்?" என்ற ருத்ராதேவியின் கண்களுக்குள் பார்த்து விட்டு, யாழ் தன் பார்வையைத் தாழ்த்தி, வேறுபுறம் திருப்பி, மிகவும் தயங்கியவாறு,

"மதுரை பாண்டியரின் குமாரர் தான் இவர், மதுரை இளவரசர் அல்ல,.."

"அதனால்?"

"ஒரு குறுநில மன்னருக்குத் தங்களைத் திருமணம் செய்து கொடுத்தாலும், பட்டத்து இளவரசருக்குத் தங்களை மணம் முடிக்கவே நம் மன்னர் விரும்புவார்…"

"புரிகிறது… எந்தப் பெண்ணிற்குமே, தன் மனம் கவர்ந்த மணாளன் அருகில், பட்டத்தரசியாக வீற்றிருப்பது தான் கனவாகும்… எனக்கும் அதில் மாற்றுக்கருத்து இல்லை…"

"பிறகு இவர்?"

"எனக்கு மாறனைப் பார்க்கும்பொழுது இளவரசராகத்தான் தெரிகிறது…"

"இது உங்கள் கற்பனை இளவரசி… நிதர்சனம் வேறு."

"இல்லை! நான் பாண்டிய தேசத்தின் பட்டத்தரசியாகத்தான் வாழ்வேன், என் மனம் கவர்ந்த மாறனோடு…"

"இளவரசி, பாண்டிய குமாரர் மதுரை பெரிய பாண்டியரின் ராணிகளில் ஒருவரின் புதல்வர்... பட்டத்தரசியின் புதல்வரல்ல... அவரை மணந்தால் தாங்கள் எப்படிப் பட்டத்தரசியாக முடியும்?" என்று யாழ் கேட்டுக்கொண்டிருந்த போதே, அதுவரை தோழிகள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த மாறனுக்கு யாழ் கூறியதன் பொருளுணர்ந்த வேதனையில் கண்கள் சிவக்க வேகமாக அந்தப்புரத்தை விட்டு வெளியேறினான்….

நடந்த விபரங்கள் புரியாவிட்டாலும் தன் நண்பனின் முகத்தில் தெரிந்த வலியை உணர்ந்த விக்ரமனும் கேள்வி எதுவும் கேளாமல் மாறனைப் பின்தொடர்ந்தான்.

அதிகாலை துயில் எழும் பொழுதே இளவரசி ருத்ராதேவியின் மனம் சஞ்சலத்தைத் தத்தெடுக்க, வேகமாகக் குளியலை முடித்து, 'அடுத்து நடக்கவிருப்பவை நல்லதாக அமையவேண்டுமே!' என்ற வேண்டுதலுடன் சிவன் கோயிலுக்குப் புறப்படுவதற்காகப் பல்லக்கில் ஏறியவளின் கண்களில் வியர்க்க விறுவிறுக்க யாழ் ஓடிவருவது தெரிந்தது.

பல்லக்கின் அருகில் வந்த யாழ் இளவரசி ருத்ராதேவியின் செவியில் ஏதோ கூற,

தன் வாழ்வின் முதல் அதிர்ச்சியால் சட்டென்று பல்லக்கிலிருந்து இறங்கி, கோயில் கோபுரத்தை ருத்ராதேவி பார்க்க,

கோயிலின் ஆலயமணி ஒலித்தது...

வார்த்தைகளின் எண்ணிக்கை - 1189

சிவதாசனின் கர்ஜனை தொடரும்...

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 

Meerajo

Member
Vannangal Writer
Messages
33
Reaction score
6
Points
8
RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 9

பாண்டிய வம்சத்தினரின் அரியாசனத்தை, நாகதீர்த்ததில் இருந்த குகையில் மறைத்து வைத்துவிட்டு கொல்லிமலைக்கு விரைந்து சென்றுகொண்டிருந்தான் சீலன்.

அவன் மனமோ பின்னோக்கிச் சென்று, தான் மகிழ்ந்து களித்திருந்த நாட்களின் நினைவில் சிக்குண்டு தவித்தது… எவ்வகையிலும் குறை காணா வசந்த காலங்கள் அவை... அருமையான பெற்றோர்களுக்குச் செல்ல மைந்தனாக, செழிப்பான நாட்டின் பட்டத்து இளவரசனாக, தோள் கொடுக்கும் தோழர்களின் உற்ற தோழனாக, தன் வீரத்திலும், விவேகத்திலும் மயங்கி நின்ற உயிர்க்காதலியின் அன்புக் காதலனாக வாழ்ந்த காலங்கள் இனி வரப்போவதில்லை என்பதை புத்தி உணர்த்தினாலும், இனிமையான கனவுபோல் இன்றும் இன்பம் தந்த அந்நாட்களின் நினைவுகளிலிருந்து வெளிவர மனம் இல்லாமல், அவை போன போக்கிலேயே போகவிட்டபடி, இந்திரனையும் வழிநடத்தாமல் சென்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது, எங்கோ தூரத்தில் சீலனுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒலி கேட்டது.

தன் இனிய நினைவுகளிலிருந்து தன்னை வெளிக்கொணரும் அந்த ஒலியைப் பற்றிய எண்ணத்தைக் கைவிட்டவனாய் சென்றுகொண்டிருந்தான் சீலன்.

பழக்கப்பட்ட வழியென்பதால் சீலனின் உத்தரவுக்குக் காத்திராமல், சீலனின் எண்ண அலைகளுக்கும் ஊறு விளைவிக்காவண்ணம் மலைப் பாதையில் ஏறிகொண்டிருந்த இந்திரன், தூரத்திலிருந்து ஒலி எழுப்புவது யாரென்பதை உணர்ந்து, சப்தம் நெருங்கி வந்துகொண்டிருந்த இடத்தில் நின்றுகொண்டு, தன் உடலைச் சிலிர்த்தது.
இந்திரனால் உலுக்கப்பட்ட சீலன், தன் நிலை உணர்ந்து, "ஏன் இங்கே நிற்கிறாய் இந்திரா?" என்று கேட்டுக்கொண்டிருந்த பொழுதே, சீலனுக்கு மிக அருகில் அவனுடைய புரவியான சத்திகனின் கனைப்பு ஒலி கேட்டது.
சத்திகனின் கனைப்புச் சப்தம், சத்திகனுடன் தான் கழித்த அற்புதமான காலங்களின் நினைவலைகளை மேலும் உந்த, தன்னையும் அறியாமல் சீலன், இந்திரனிடமிருந்து துள்ளி இறங்கினான்.

சீலன் இறங்கி நின்று சுற்றிலும் பரிதவிக்கும் பார்வையால் துழாவ, இந்திரன் தன் வாலால் சீலனை அடித்தது…

சுளீரென்று புஜத்தில் அடி விழுந்ததும் இந்திரனைப் பார்த்தவன்,

"ஆகா இவன் பொறாமை படுகிறான் போலவே!" என்று புன்னகைத்தபடி, இந்திரனின் முகத்தைப் பரிவாகத் தடவிக் கொடுத்தவன் இந்திரனிடம்,

"இனி எப்பொழுதும் உன்னுடன்தானே இருக்கப் போகிறேன்… நீ ஏன் இந்திரா இவ்விதம் செய்கிறாய்?" என்று செல்லக் கோபத்துடன் கேட்கும் பொழுதே சத்திகன் (புரவி) சீலனின் எதிரில் வந்து நின்றது.

தான் வந்ததைக்கூடக் கவனிக்காமல் இந்திரனுடன் பேசிக்கொண்டிருந்த சீலனைப் பார்த்து,

'நிலாவுடன் அனுப்பியதோடு என்னை மறந்துவிட்டாயா?' என்பதுபோலச் சப்தம் எழுப்பியது சத்திகன்.

உடனே விரைந்து சத்திகன் அருகில் சென்ற சீலன், "எப்படியடா இருக்கிறாய்? நிலா எப்படி இருக்கிறாள்? பாதுகாப்பாக இருக்கிறீர்களா? நீ நிலாவுக்குத் துணையாக இருப்பதை அவர்கள் அறியவில்லை தானே?" என்று சீலன் கேள்விகளை அடுக்கிய வேகத்தைக் கண்ட இந்திரன், “உஷ்ஷ்” என்று சப்தமெழுப்பியவாறு சற்றே நகர்ந்து சென்று தரையில் அமர்ந்துவிட்டது…

இந்திரன் தன்னைப் பரிகாசம் செய்வதை உணர்ந்த சீலன், இரு புரவிகளையும் பார்த்து மென்மையாகச் சிரித்தபடி, சத்திகனிடம்,

"நிலா ஏதேனும் செய்தி அனுப்பினாளா?" என்று கேட்டுக்கொண்டே சத்திகனின் முதுகில் அமர்வதற்காகப் பிணைக்கப்பட்டிருந்த பட்டுத் துணியை விலக்க, அதனுள் ஒரு `சுருள் ஓலை` ஒன்று கசங்கிய துணியால் சுற்றப்பட்டு, யாரும் அறியாவண்ணம் துணிகளுடன், ஒரு துணிபோல மறைந்து இருந்தது.

சுருள் ஓலையை எடுத்துக் கொண்ட சீலன், சத்திகனை பாராட்டுவதன் அறிகுறியாகத் தட்டிக்கொடுத்தான்.

பாராட்டை ஏற்ற சத்திகனும் கனைத்தபடி சீலனைப் பிரிந்து வாடும் பிரிவுத்துயரை சற்றேனும் தணிப்பது போல் நெருங்கி நின்றான்…

சத்திகனின் இச்செயலால் மனம் கணத்த சீலன், சத்திகனின் பிடறி மயிரைக் கோதியவாறே சத்திகனின் நெற்றியில் முத்தமிட்டான்…

உடனே இந்திரனின் கனைக்கும் ஒலி கேட்க, இந்திரனைப் பார்த்து சிரித்துவிட்டு, நிலா கொடுத்தனுப்பிய ஒலையை சீலன் பிரிக்க,

அதில் பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர், 'தேகத்தின் உஷ்ணத்தை அதிகரிக்கும் மூலிகை அல்லது குளிகை அனுப்பவும்.' என்று எழுதியிருந்தது.

"இந்தக் குளிகை எதற்குச் சத்திகா? ஏன்? அவளுக்கு என்னாயிற்று? அவள் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சனையாகிவிட்டதா?" என்று மீண்டும் பதற்றத்துடன் கேள்விகளை சீலன் அடுக்க,

'தகவல் கொண்டு வந்தவனைப் பேசவிடுகின்றானா பார்?' என்பது போல் ஒரு பரிகாசக் கனைப்பு கனைத்தது இந்திரன்.

சத்திகன் "இல்லை!" என்பது போல் தலையை ஆட்டியது.

"பிறகு எதற்கு உடல் உஷ்ணம் அதிகரிக்கும் மூலிகை?" என்று சீலன் கேட்க,

அதற்கும் சத்திகன், "தெரியவில்லை!" என்பது போல் சப்தம் எழுப்பித் தலையாட்டியது.

"அங்கு நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?" என்று சீலன் கவலை தோய்ந்த குரலில் மீண்டும் கேட்க,

"ஆமாம்!" என்பது போல் தலையை ஆட்டிய சத்திகனின் கண்களில் தெரிந்த பிரகாசம், நிலாவும் சத்திகனும் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தியது.

அதைக்கண்ட சீலனின் மனம் சற்றே அமைதியுற, இரு புரவிகளுடன் அறப்பளீஸ்வரர் கோயிலை அடைந்தான்.

கருவறையில் சரவிளக்குகளின் ஒளியால் பிரகாசமாக வீற்றிருந்த சிவனின் பாதத்தில் நிலா கொடுத்து அனுப்பிய ஓலையை வைத்துவிட்டு,

"எந்தையே! உம் ஒருவனின் பாதம் பற்றியே இத்தகைய கடுமையான காரியத்தில் இறங்கியிருக்கிறேன். அதே நம்பிக்கையில் ஒரு பெண்ணை வேறு இறக்கி விட்டிருக்கிறேன்… எங்களின் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் துணையிருந்து காப்பாற்றுங்கள் ஐயனே…! இனிமேல் நடக்கவிருக்கும் அனைத்து நிகழ்வுகளிலுள்ள இடர்களைக் களைந்து, உகந்த பாதையைக் காட்டி வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறேன்... இப்பொழுது, உடல் சூடு அதிகரிக்கும் குளிகையை அனுப்பி வைக்குமாறு நிலா கேட்டிருக்கிறாள்‌. அந்தக் குளிகை எதற்காக? என்னவென்று எனக்குப் புலப்படவில்லை. ஆயினும், அவள் விருப்பப்படி நான் அனுப்பும் குளிகை அவளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நல்லதையே செய்யும்படி அருள் புரிவீராக!' என்று ஈசனிடம் மனமுருகி வேண்டினான் சீலன்.

"சிவன் துணை இருக்க உனக்கு என்ன கவலை சீலா?" என்று பின்னால் இருந்து குரல் வர, அது சிவனடியாரின் தெய்வீகக் குரல் என்பதை உணர்ந்து சந்தோசமாகத் திரும்பிய சீலன், நிலா அனுப்பிய ஓலையை அவருடைய சிவந்த கரத்தில் சமர்ப்பித்தான்.

ஓலையைப் பிரித்துப் படிக்காமலேயே, "அவள் கேட்டபடி தேகத்தில் உஷ்ணம் அதிகரிக்கச் செய்யும் குளிகையை நான் தருகிறேன். நீ அதை அவளிடம் அனுப்பி வைத்துவிடு." என்றார் கருணை பொங்கும் கண்களுடன்.

'படித்துப் பார்க்காமலேயே செய்தி அறிந்து, தேவையையும் நிறைவேற்றி விட்டாரே!' என்று சீலன் வியந்த அதே வேளையில், 'இவர் சித்தர்! இவர் அறியாதது என்ன இருக்க முடியும்?' என்றும் தோன்ற,

சீலன் அவரைப் பார்த்து,"பெருமானே! உடல் சூடு அதிகரிக்கும் குளிகையை எதற்காகக் கேட்டிருக்கிறாள்? அவளுக்கு ஏதேனும் உடல் நலக் குறைவாக இருக்குமோ?" என்று பணிவாகக் கேட்டான்.

"நீ கவலை கொள்ள வேண்டாம் சீலா… குளிகையை அவளுக்காகக் கேட்கவில்லை... மருந்தையே ஆயுதமாக உபயோகிக்க எண்ணுகிறாள்... அவள் எண்ணம் ஈடேறும். கலக்கத்தை விடுத்து நான் கொடுக்கும் குளிகையை அவளிடம் சேர்ப்பித்து விடு!" என்றார் சிவனடியார்.

"அவளுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடாதிருக்க வேண்டும்... அவள் ஏதேனும் செய்யப்போய்ப் பிரச்சனையாகி விடக்கூடாதே, என்பதே என் ஐயம்." என்று சிவனடியாரின் ஒளி பொருந்திய விழிகளைப் பார்த்து, தயக்கமாகக் கேட்ட சீலனிடம்,

"பெண்ணைச் சாதாரணமாக எண்ணிவிடாதே சீலா… பெண்கள் மதிநுட்பமும், மனோதிடமும் மிக்கவர்கள்… எத்தகு இக்கட்டான சூழ்நிலையிலும், உடல் பலத்தை விட, மனபலம் மிக்கவனே வெற்றி பெறுவான்… மனோபலம் என்பது சாதாரண விஷயமல்ல… எப்படிப்பட்ட சமயத்திலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதே மனோபலம் தானே?… மனோபல விஷயத்தில் ஆண்களை விடப் பெண்களே மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்... அதனால்தான் அவர்களை சக்தியின் ரூபமாக நாம் பார்க்கிறோம்... ஆண்டவன் பெண்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய அரியதொரு சக்தி மனபலம்… அவமானம், தோல்வி, பயம், வலி இவற்றையெல்லாம் கடந்து வரும் சக்தி மனபலம் உள்ளவர்களுக்கே வாய்க்கும்... நன்றாகக் கவனித்துப் பார் சீலா. பிரசவ வலி என்பது உயிரின் உச்சபட்ச வலி… ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒரு பெண் மறு ஜென்மம் எடுக்கிறாள்… அதே உயிர் வலியை மீண்டும் அனுபவிக்க நேரிடும் என்பதை நன்கு அறிந்தும், அடுத்தக் குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராகிறாள் என்றால், பெண்ணிற்கு எவ்வளவு மனோதிடம் இருக்க வேண்டும்? அதனால் இனியொரு முறை எதிரியின் வாழிடத்திற்கு ஒரு பெண்ணை அனுப்பி விட்டோமேயென்று நீ கவலைகொள்ளாதே. மனதில் வைராக்கியத்துடன் எதிரியின் கூடாரத்திற்குச் சென்றிருக்கிறாள் என்றால், நிச்சயம் வெற்றிக்கான வழியையும் கண்டறிந்து விடுவாள்… அவளுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு நீ உன் செயலில் கவனத்தைச் செலுத்து." என்று அறிவுறுத்தினார் சிவனடியார்.

சிவனடியார் கூறியதிலிருக்கும் நிதர்சனம் சீலனுக்குப் நன்கு விளங்கியதால், "ஆகட்டும் பெருமானே!" என்று தலையாட்டிவிட்டு சிவனடியார் கொடுத்த குளிகைகளைப் பெற்றுக்கொண்டான்.

ஆலய வாயிலில் காத்திருந்த சத்திகனின் அருகில் சென்று, நிலா, ஓலையைப் பாதுகாப்பாக வைத்து அனுப்பிய பகுதியில், சுருள் ஓலையைச் சுற்றியிருந்த துணியிலேயே குளிகையை வைத்தவன்,

சத்திகனின் முகத்தைத் தன்புறம் இழுத்து, அவனுடைய நெற்றியில் அன்பு பொங்க முத்தமிட்டு, "நீயும் நிலாவும் எக்கணத்திலும் மிகவும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செயல்படுங்கள்…" என்று கூறி வழியனுப்பி வைத்தான்.

பிறகு, தான் அடுத்துச் செய்ய வேண்டிய விஷயங்களை யோசித்தவனின் கண்களுக்குள் பகைவனின் முகம் விகாரமாகத் தோன்ற,

"இவனை முதலில் மதுரையம்பதியை விட்டு, தலைதெறிக்க ஓடவிட வேண்டும்… அதுமட்டுமின்றி அவனே, அவனுடைய அரசனிடம் சென்று, பாண்டியர்களிடம் வம்பு வைத்தது தவறு என்று கூறுமளவு இவனுக்குத் தகுந்த பாடம் புகட்டி விரட்ட வேண்டும்" என்று எண்ணிய சீலன்,

'இன்று இரவும் பகைவனின் படுக்கைக்கு நெருப்பு வைத்துவிடுவோம்… ஒரு கணம் கூட அவனை நிம்மதியாக இருக்கவிடக் கூடாது!' என்று முடிவு செய்து இந்திரனைத் தேட

சீலனின் மனமறிந்து, அவனருகில் இந்திரன் வந்து நின்றது.

"நாம் கிளம்பலாம் இந்திரா!" என்று கேட்டபடி இந்திரனின் மீதேற முயன்ற சீலனை உதறிவிட்டு,

"எங்கே போவது? உன்னைத்தேடி இன்னொரு நண்பன் வந்திருக்கிறான்." என்றது இந்திரன்.

"நண்பனா? எனக்கா? உன்னைத் தவிர வேறு நண்பன் ஏது இந்திரா?"

"சற்றுமுன் வந்துபோன சத்திகனும் உன் நண்பன்தானே?" என்பது போல் பார்த்தான் இந்திரன்.

"மறுபடியும் ஆரம்பித்துவிட்டாயா? உனக்கு என்னதான் பிரச்சனை?"

"எனக்கு உன்னைத் தவிர வேறு என்ன பிரச்சனை?" என்று கூறியபடி வீம்பாகத் திரும்பி நடந்த இந்திரனை சீலன் பிடிக்க முயன்றபொழுது, தூரத்தில் சைந்தவன் (பெரியவருடன் சென்ற புரவி) நின்றிருந்ததை சீலன் பார்த்துவிட்டான்.

'சைந்தவனா?' என்று ஆச்சரியப்பட்ட சீலன், இந்திரனை விடுத்து வேகமாகச் சைந்தவனை நோக்கி ஓடினான்.

"இப்பொழுதுதான் என்னைத்தவிர வேறு நண்பன் இல்லை என்றான்... பிறகு எதற்கு இந்த ஓட்டம்?" என்று புலம்பியபடி மிகவும் நொந்துபோய் மெதுவாக, சீலனைப் பின்தொடர்ந்தது இந்திரன்.

தன்னை நோக்கி, சீலன் வருவதைக் கண்ட சைந்தவன், சீலனின் அருகில் உரசியபடி வந்து நின்றது.

விழிகளில் ஏக்கமிருந்தாலும் உடல்வனப்பில் செழித்திருந்த சைந்தவனை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தபடி,

"வா சைந்தவா! பெரிய இடத்துக் கவனிப்பில் நன்றாக மெருகேறியிருக்கிறாயே" என்று சீலன் உவகை பொங்க வரவேற்றதும்,

"பின்னே என்னைப் போல் பசிபட்டினி மறந்து, காடு மலையெல்லாம் சுற்றும் அதிர்ஷ்டம் அவனுக்கில்லையே" என்பதைப் போல இந்திரன் கனைத்தது

இந்திரனை நோக்கி, "ஏன்டா? ஏன்?" என்பதுபோல் ஒரு பார்வையை வீசிவிட்டு, சைந்தவனிடம்,

"என் துணைவனாக அல்லாமல் தூதுவனாக வந்துள்ளாயோ?" என்று கூறியபடி சைந்தவனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 'பல்பிடி கண்டிகை' எனப்படும் பல நூலாலான மாலையில் இணைக்கப்பட்டிருந்த சதங்கைகள் ஒவ்வொன்றையும் அசைத்துப் பார்த்தான். மாலையின் மையப்பகுதியில், பெரிய அளவில் இருந்த சதங்கையினுள்ளே ஏதோ மோதியதால் உண்டாகும் சப்தம் வந்தது… அந்த வேலைப்பாடுகளுடன் மிளிர்ந்த வெண்கலச் சதங்கையை திருகியதும், சதங்கை இரண்டாகப் பிரிந்து அதனுள் இருந்த ஓலையைக் காட்டியது…

ஓலையிலிருந்த வரிகளைப் படித்தவனின் கண்கள், கலங்கிய அடுத்த கணமே கண்களில் ரௌத்திரம் பரவியது…

"இது என்ன மாதிரியான மனநிலை சைந்தவா? வேதனையிலும் சிறு ஆறுதலடைகிறதே என் ஆழ்மனம்?" என்றவன்,

"நீ முன்னே செல்!" என்று சைந்தவனிடம் கூறிவிட்டு, இந்திரனின் மீதேற முயன்ற சீலனைத் தள்ளிவிட்டது இந்திரன்.

"இப்பொழுது என்ன? நான் உன்னோடு தானே வருகிறேன்?" என்ற சலித்த சீலனிடம்,

"ஏன் சுமை இல்லாமல் நான் வரக்கூடாதா? நீ சைந்தவன் மீதேறிச்செல்! நான் உங்களைப் பின்தொடருகிறேன்." என்றதும் சிரித்தபடி, சீலன் சைந்தவன் மீதேற, சைந்தவன் காற்றைக்கிழித்தபடி பறந்தான்.

கானகத்தின் நடுப்பகுதியில் இருந்த வசந்தமண்டபத்தை நோக்கிச் சைந்தவன் செல்ல,

"சைந்தவா! பெரியவர் இங்கேயா இருக்கிறார்?" என்று யோசனையுடன் சீலன் கேட்டான்.

“ஆமாம்!” என்பதைப்போலக் கனைத்துவிட்டு, வசந்த மண்டபத்தின் முன்பு நின்றுகொண்டிருந்த பெரியவர் அருகில் சென்று நின்றது.

"எப்படி நடந்தது?" என்று பெரியவரிடம் வேதனையுடன் கேட்டான் சீலன்.

"பின்னே? வேறென்ன எதிர்பார்க்க முடியும் அந்தக் கயவர்களிடம்? இந்த மாதிரி நேர்ந்துவிடக்கூடும் என்றுதானே ஒவ்வொரு முறையும் தடுத்தேன்… என் வார்த்தைக்கு மதிப்பு எங்கே இருந்தது?" என்று விரக்தியால் கலங்கிய கண்களுடன் பெரியவர்கூற,

"அவர் சரீரத்தையாவது கைப்பற்ற முடிந்ததா?" என்று சீலன் வலிமிகுந்த தொனியில் கேட்க,

"இதோ!" என்று பெரியவர் விலகி நின்று, அவருக்குப் பின்னாலிருந்த சாரட் வண்டியில், அன்றுபோலவே சிவப்புப் பட்டுத்துணியால் சுற்றப்பட்டிருந்த சடலத்தைக் காட்டினார்.

சடலத்தின் அருகில் சென்ற சீலன், "உன்னை நினைத்தால் எனக்கு வேதனையாகவும் இருக்கிறது. அதேவேளையில், உனக்கு இது தகுந்த தண்டனைதான் என்றும் தோன்றுகிறது… அகம்பாவத்தில் நீயாக இழுத்துக் கொண்ட வினை இது... எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவன் நீ? உன் வாழ்வில் என்ன குறை இருந்தது? உன் கையில் கிடைத்த அமிர்தத்தை, கையாளத் தெரியாமல் உன் இழி செயலால் உனக்கே விஷமாக்கி விட்டாயே… இப்பொழுது எதைச் சாதித்தாய்? 'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்று நம் முன்னோர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவனா நீ?' என்று எண்ணியபடி, தன்னையுமறியாமல் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, பெரியவரைப் பார்த்தான்.

"இவரை இங்கே ஏன் கொண்டு வந்தீர்கள்? இந்த வசந்த மண்டபத்தில் ஒரு தூய ஆன்மா உறங்கிக் கொண்டிருக்கிறது…"

"இதோ உன் மரணத்திற்குக் காரணமானவனை உன் முன்னே கொண்டு வந்து போட்டு விட்டேன்! என்று காட்டுவதற்காகவே இங்கே கொண்டு வந்தேன்… என்னயிருந்தாலும் இவன் நம் வம்சத்தவன்… ஆனாதையாகக் காகத்திற்கும், கழுகிற்கும் இரையாவது பொறுக்கவில்லை" என்ற பெரியவரின் கண்களுக்குள் பார்த்து,

"எவ்வளவு அநியாயம் செய்திருந்தாலும், உங்கள் மனம் இவரை மன்னிக்கச்சொல்கிறது... இல்லையா? ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமே!’ சரி! தங்கள் விருப்பத்தை நான் எப்பொழுது மீறியிருக்கிறேன்? ஆனால் ஒரே விண்ணப்பம், இவரது சடலத்தை, மண்டபத்திற்கு வெளிப்பகுதியில் தகனம் செய்யவேண்டும்…” என்று இரைஞ்சும் பார்வையுடன் சீலன் கேட்க, பெரியவர் சம்மதித்தார்.

“வாருங்கள்! ஆக வேண்டிய காரியத்தை விரைந்து செய்வோம்"

மண்டபத்தின் மேற்கு மூளையில், தற்போது பொரியவர் கொண்டு வந்தவனின் புதிய சிதையில் நெருப்பு பற்றி எரிய,

அதைவிட அதிகமாகக் கனன்றது சீலனின் மனம்.

"அடுத்து?" என்று சீலன் பெரியவரின் உத்தரவை எதிர்பார்த்து நிற்க,

"நேற்று அரண்மனைக்கு நெருப்பு வைத்தவன் நீதானே? ஒருவர் உறங்கும்பொழுது இவ்வாறு செய்யலாமா?" என்றார் கண்டனத்திற்குரிய குரலில்.

"அவர்கள் செய்ததென்ன?" என்றான் மதுரை இருந்த திசையைப் பார்த்தவாறு...

"அவர்களும் நாமும் ஒன்றா?"

"இல்லை… ஆனால் அவர்கள் வழியில்சென்றே அவர்களை அழித்துவிட எண்ணுகிறேன்…" என்ற சீலனுடைய வார்த்தைகளின் தாக்கத்தை உணர்ந்து கொண்ட பெரியவர்,

"நானும் சிற்றரசர்களும், அடுத்து வரும் அமாவாசையன்று மதுரை அரண்மனையைச் சுற்றி முற்றுகையிடப்போகிறோம்,.."

"அதனால் அரண்மனையைக் கைப்பற்றுவதைத் தவிர வேறு என்ன பயனென்று எனக்குக் கூற இயலுமா?"

"நீ படுக்கை அறைக்கு நெருப்பு வைத்ததைப் போலத்தான்… அக்கயவர்களை நிம்மதியாக அரசாள விடக்கூடாது… அடிக்கடி பிரச்சனைகள் கொடுத்துக் கொண்டே இருப்போம்… தகுந்த காலம் வரும் வரை…"

"அவர்களின் அரசன் இங்கு வந்து மதுரையை ஆளப்போவதில்லையாம்… படைதிரட்டி வந்த படைத்தலைவனின் வசமே மதுரையின் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறானாம்!"
"எனக்கும் அப்படியொரு தகவல் வந்தது… அதுவே உண்மையாகும் பட்சத்தில் இந்தப் படைத்தலைவனை விரட்டுவது எளிதாக இருக்கும்…"

"அவ்வளவு எளிதாக அவர்களை எண்ண வேண்டாம்… முதுகுக்குப் பின்னால் அடிக்கும் கலையில் வல்லவர்கள் நம் பகைவர்கள்… அப்படிப்பட்டவர்கள் நமக்கு அருகிலேயே, அவர்களுக்கு நம்பகமான ஆட்களை ஒற்றறிய வைத்திருக்கக்கூடும்… தங்களுக்கு நான் கூறத்தேவையில்லை… இருப்பினும் எவரையும் முழுமையாக நம்ப வேண்டாம்…"

சீலனின் வார்த்தைகளுக்குச் செவி மடுத்தவர், "நீ அடுத்து என்ன செய்யப்போவதாக இருக்கிறாய்?" என்ற கேட்டதற்கு, சீலன் கொடுத்த பதிலில் பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது…

"பலே! அருமையான திட்டம்… நீ எப்பேர்பட்ட விவேகி என்பதை நினைவுறுத்துகிறாய்… இருப்பினும் கவனமாகச் செயல்படு!" என்று சீலனின் இரு தோள்களையும் பற்றிப் பாராட்டினார்…

வார்த்தைகளின் எண்ணிக்கை- 1590

சிவதாசனின் கர்ஜனை தொடரும்...
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
 
Status
Not open for further replies.

Latest Episodes

New Threads

Top Bottom