RD-22 - சிவதாசன் எனும் நான்… அத்தியாயம்- 6
சிற்றரசர் திருவழுதி, புறங்காட்டி தன் கோட்டைக்குள் சென்றும், அவரைத் துரத்திச்சென்றனர் மாறன் படையினரும், விக்ரமன் படையினரும். கோட்டைக்குள்ளிருந்த வீரர்களாலும் மாறனையும், விக்ரமனையும் தடுக்க முடியாமல் போகவே, திருவழுதி மாறனிடம் சரண் அடைந்தார்… அதன் விளைவாக திருவழுதியின் மணிமுடியை மாறன் கேட்க, அதைத் தன் சிரசிலிருந்து திருவழுதி எடுக்க முயன்றபோது,
அதைத் தடுத்து நிறுத்திய மிடுக்கான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த மாறன், அங்கே அழகுக்கே அதிகாரம் எழுதியவளைப்போல் ஓர் ஆரணங்கு நிற்பதைக்கண்டு இன்ப அதிர்ச்சி எனும் பனியில் உறைந்தான்…
அந்தக் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரி, கண்களில் நீரும், நெருப்பும் பறக்க நின்றிருந்தாள்…
வாளெடுத்து வந்து, தன்னைப் போருக்கு அழைத்த பெண்ணை, உச்சி முதல் பாதம் வரை ஆவலுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தான் மாறன்…
இளம் தென்றல் காற்றில், படர்ந்து விரிந்த கூந்தலும், மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் உடைய 'பூங்கரை நீல' வண்ணப் பட்டாடையும் இசைபாடியதைப் பார்க்கும் பொழுது, மழையின் வருகையை அறிந்து, தன் அழகான தோகையை விரித்து ஆனந்த நடனமாடும் மயில் போலிருந்தாள்…
குலசேகரப் பாண்டியரின் மகனை, போருக்கு அழைப்பு விடுப்பவள், போர் புரிவதற்குத் தயாராகி வரவில்லை என்பது அவளைப் பார்த்த கணத்திலேயே நன்கு தெரிந்தது…
தங்கம் போன்ற பளபளப்பும், வாழைத்தண்டுபோல் மென்மையாகவும், வளப்பமாகவும் இருந்த வலது கரத்தில் ஏந்திய வாள் தவிர வேறு எந்தப் பாதுகாப்புக் கவசங்களுமின்றி நின்றிருந்தாள்…
நவமணிகளால் அழகு செய்யப்பட்டிருந்த சிகை அலங்காரத்துடன், மணம் வீசும் மலர்களையும் சூடிய கருங்கூந்தலை, ‘தலைக்கவசம்’ கொண்டு மறைத்தாளில்லை… அவளுடைய கூந்தலோ அழகான பனிச்சையிட்டு முடிந்த போதும் பொதிகை மலையிலிருந்து கொட்டும் அருவிபோல முழங்கால் வரை அலையலையாய் சுருண்டு பின்னழகை மறைக்க ஆடை தேவையின்றி மறைத்தது…
வலதுகரத்தில் வாளேந்தி நின்றவள், இடதுகரத்தில் ‘கேடயத்தைப்’ பிடிக்க மறந்தாளோ…
. பூங்கரை நீல வண்ண அழகிய பட்டாடையும், ஒளிவீசும் முத்துச்சரமும், மாணிக்கமும், வைர வைடூரியங்களால் ஆன நவமணி ஆரங்களும் மறைத்த நெஞ்சத்தில் ‘மார்புக்கவசம்’ அணிய விருப்பமில்லையோ?...
செம்பொன்னால் இழைத்ததைப் போன்ற இடையில் மேகலை அணிந்தவளுக்கு, அதைக் கழட்டி எறிந்துவிட்டு 'இடைவார்' அணிய நேரமில்லையோ…
தன் தந்தைக்கு இழுக்கு நேர்ந்ததை அறிந்து, பருத்திப் பூ போன்ற மென்மையான பாதங்களில் காலணிகூட அணியாமல் வந்தாளோ?' என்று எண்ணி மயங்கியவனை,
"பாண்டிய குமாரருக்கு என்னுடன் தனியாகப் போர் புரிவதில் யோசனை ஏனோ? பெண் என்ற எண்ணமாக இருந்தால் வாளெடுத்து வந்தால் தானே தெரியும் என் வாள் வீச்சின் வேகம்…" என்று பெண் சிங்கமாய் முழங்கியவளை,
"என்னை வென்றுவிட முடியும் என்று எண்ணுகிறாயா?" என்று கண்களில் குறும்பு கொப்பளிக்க சிலேடையாகக் (இரட்டை அர்த்தத்தில்) கேட்டான் மாறன்
"என்னை வென்றால் மட்டுமே என் தந்தையை நெருங்க முடியும் என்கிறேன்" என்று கனல் வீசியவளிடம்,
"நான் வென்று விட்டால்! என் ஆணைக்கு நீயும் கட்டுப்பட வேண்டும்." என்று மாறன் கூறிய விதத்தில் அரண்டு போன சிற்றரசர் திருவழுதி,
"வேண்டாம் குமாரரே! என் மகள், என் மீதுள்ள அன்பின்பால் தங்களைப் போருக்கு அழைக்கிறாள்… உங்கள் ஆணைக்கு நான் கட்டுப்படுகிறேன்… என் அருந்தமிழ்ச் செல்வியை விட்டுவிடுங்கள்." என்று பதறியதைப் பார்த்த மாறன்,
"ஏன் உங்கள் மகளின் வீரத்தில் உங்களுக்கு ஐயமுள்ளதா?" என்று வினவ,
"ஒருபோதும் இல்லை! ஆனால் உங்கள் போர் உத்திகளைப் பார்த்திருக்கிறேன்."
"அது உங்கள் துரோகத்திற்கு நான் கொடுத்த பரிசு… நாட்டில் அரசரில்லாத நேரத்தில் போருக்கு வந்தவர் நீர்... ஆனால் உங்கள் மகள், என்னை நேருக்குநேர் போருக்கு அழைக்கிறார்… அதனால் செண்பகப்பொழல் இளவரசி செண்பகாதேவியுடன் வாள் போரைத் தவிர வேறு எந்தப் போர் முறையையும் கையாள மாட்டேன். போதுமா?" என்று மாறன் சொல்லிக் கொண்டிருந்த பொழுதே,
"என் பெயர் செண்பகா தேவி அல்ல… "ருத்ர...!" என்று தன் பெயரை, கண்களை அகல விரித்து, தலை நிமிர்ந்து சொல்ல ஆரம்பித்தவள், ‘தனது பெயரைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் மாறன் நடத்தும் லீலையோ?’ என்ற ஐயம் எழ, சட்டென்று அவள் தன் கீழுதட்டைப் பற்களால் அழுத்திய விதத்தில் தன்னைப் பறிகொடுத்தான் மாறன்.
"கேள்விக் கணை தொடுத்தவன் இங்கிருக்க, என்னைத்தாக்காமல் கனியிதழைத் தாக்கலாமோ?" என்று முனங்கியபடி,
"அடேயப்பா! ருத்ரா...? மிகவும் பொருத்தமான பெயர்தான்.." என்று பாராட்டியவன், குறும்பாக சிரித்தபடி " நன்றி!" என்றான்.
"இது எதற்காகவோ?"
"தங்களின் திருநாமத்தை எனக்கு எடுத்தியம்பியதற்காக…" என்று கூறிய மாறனின் குரலிலிருந்த பரிகாசம், செண்பகப்பொழில் அரசராம் திருவழுதியின் ஒரே அருந்தவப் புதல்வி ருத்ராவைச் சீண்டியது…
அதே வேளையில், "பாண்டிய குமாரரைப் பார்த்தால் வாட்போர் செய்ய வந்தவரைப்போல் தெரியவில்லையே, வாய்ப்போர்தான் செய்து கொண்டிருக்கிறார்..." என்று ஒரு பெண்ணின் குரல் கனீரென்றொலிக்க, குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான் மாறன்.
விக்ரமன் அருகே நின்றபடி விக்ரமனிடம், வேண்டுமென்றே சப்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஒரு பெண்.
"அவ்வளவு அவசரம் ஏன் பெண்ணே? நீ யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்ற மாறனிடம்,
.
"நீங்கள் போர் புரியத்தானே வந்தீர்கள்?" என்று அந்தப்பெண் கிண்டலாகக் கேட்டதும், விக்ரமனைப் பார்த்தான் மாறன்.
"விரைவில் போரைத்தொடங்கி, பகை அரசரின் மணிமுடியோடு வருவாயாக மாறா… வாளைவிடக் கூர்மையான நாவைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் இந்நாட்டுப் பெண்கள்…"
'அந்தப் பெண்ணிடம் இதுவரை வாக்குவாதம் புரிந்திருப்பானோ?' என்று எண்ணிய மாறன், ருத்ராவை நோக்கி வாளெடுத்து நின்றான்.
‘எதிரிலிருப்பவள் பெண்! அதுவும் தன் மனம் கவர்ந்தவள்!’ என்ற எண்ணத்தில் மாறன் சற்று அசட்டையாக வாளைச் சுழற்ற,
ருத்ராவோ, தன் பெயருக்குப் பொருத்தமானவள் என்பதை நிரூபிப்பது போல ஆரம்பத்திலேயே தன் வாளின் வேகத்தைக் காட்டினாள்…
சற்றே திகைத்தாலும், மாறனும் அவள் வாளுக்கேற்ற பதிலைத் தர,
ருத்ரா, தன் போர்த் திறமையெல்லாம் வீரியத்தோடு வெளிப்படுத்தினாள். கண்களில் கோபாக்னி எரிய, கையிலிருந்த வாளோ அந்த அக்னியைவிடக் கொழுந்து விட்டு எரிந்தது… ஒவ்வொரு வாள் வீச்சும் மின்னல் போல் தெறித்தது… அவள் வாளைப் பிடித்துப் போர் செய்த விதமே, தினமும் போர்க்கலையில் பயிற்சி எடுக்கிறாள் என்பதை விளக்கிற்று…
மாறன் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அவனுடைய வாள் பறக்க நேரிட்டது… மாறனின் தலைக்கு வந்தது ருத்ராவின் வாள்!
ருத்ராவின் அசாத்திய வாள் வீச்சைக் கண்ட விக்ரமன்,
"மாறா விளையாடியது போதும், இளவரிசியின் போர்த்திறனைக் கண்டு வியந்ததும் போதும். சீரிய முறையில் யுத்தம் செய்வாயாக" என்றதும்,
மாறனும் தன் வாள் வீச்சின் வல்லமையைக்காட்ட, கொஞ்சம் திணறினாலும் உடனே சமாளித்து அவன் வாளுக்கு இணையாக வாளை சுழற்றினாள் ருத்ரா…
'ஒரு பெண் தனக்கு இணையாக வாள் வீசக்கூடும்' என்று சிறிதளவும் எண்ணிப் பார்த்திராத மாறன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்…
இருவருக்குமான வாட்போர் சில நாழிகை தொடர்ந்தது… ஒருவருக்கொருவர் சளைக்காமல் போர் புரிந்தனர்…
ருத்ராவும் மாறனின் வாள் வீச்சைக்கண்டு வியந்தாள்… வாளை இலகுவாக அவன் கையாண்ட விதத்தில் தன்னை மறந்து மாறனின் முகத்தைப் பார்த்த நொடியில், அவள் கவனம் சிதற, மாறன் தன் வாளால் ருத்ராவின் வாளை தனதாக்கினான்…
இரு வாளையும், தன் இரு கையிலும் ஏந்தியவன், தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, ருத்ராவின் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவாறு,
"செண்பகப்பொழில் இளவரசியை வென்று விட்டேனா?" என்று மீண்டும் சிலேடையாக வினவ,
இவர்கள் இருவரின் போர்த்திறனில் மயங்கிய ஆதவன் மேற்கு திசை மேகத்தினுள் சாய்ந்தான்...
போர் முரசறைந்து, போர் முடிவுற்றதை அறிவுறுத்தியது…
மாறனுக்கு, ருத்ராவின் அருகாமையை இழக்க மனமில்லை என்றாலும் சூரிய அஸ்தமனமாகிவிட்டதால், நாட்டின் எல்லையில் மாறனும் விக்ரமனும் தங்குவதற்காக, பசிய மூங்கிலால் கட்டப்பட்டிருந்த பாசறைக்குச் சென்றான்...
அவனுடைய பாசறையைச் சுற்றிப் படை வீரர்கள் தங்குவதற்குத் தழைகளை வெட்டி மேற்கூரையாக இட்டுச் சிறுசிறு அறைகள் வகுக்கப்பட்டிருந்தது...
மாலை நேரம் மயங்கி இருள் சூழ ஆரம்பித்தது…
இரவு உணவு முடிந்தபின்,
வீரர்கள் தங்கள் வெற்றியை ஆரவாரத்தோடு கொண்டாடினர்.
ஒரு புறம் யானைகள் முழங்கியது. ஒருபுறம் ஆடல் பாடல் மகளிரின் கூத்து நடந்தது. படை வீரர்கள் ‘கள்’ அருந்தி மகிழ்ந்திருந்தனர்...
இவற்றையெல்லாம் ரசித்தவாறே, அடுத்த நாளுக்கான திட்டங்களைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக விக்ரமன், மாறனின் பாசறைக்குச் சென்றான்…
பாசறையில், மாறன் தூரத்தில் தெரிந்த அருவியைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்.
மெய்க்காப்பாளன் விக்ரமன் வந்திருப்பதை மாறனிடம் தெரியப்படுத்தி விட்டு பாசறைக்கு வெளியே சென்றுவிட்டான்…
மெய்க்காப்பாளன் கூறிய விசயங்கள் எதையும் மாறன் கவனித்ததைப் போல் தெரியவில்லை…
"அப்படி என்ன யோசனை மாறா?… நாளை சிற்றரசர் திருவழுதி அவர்களின் மணிமுடியைப் பெற்றுக்கொண்டு, நம் நாடு நோக்கிச் செல்வதைத் தவிர வேறு ஏதேனும் செய்யத்தக்கக் காரியங்கள் இருக்கிறதா?" என்று விக்ரமன் கேட்டதும் மாறன் செவியில் விழுந்ததாகத் தெரியவில்லை.
மாறனின் அருகே சென்று அவன் தோளைத் தொட்டான் விக்ரமன்.
"வா விக்ரமா என்ன விஷயம்?" என்று அருவியைப் பார்த்தவாறு கேட்டான் மாறன்…
" நாளைய பற்றிய திட்டங்களைப் பற்றிக் கலந்தாலோசிக்க வந்தேன்"
"எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றான் மாறன்.
"என்ன?!!!" என்று அதிர்ச்சியடைந்த விக்கிரமன் மாறனின் தோளை உலுக்கி,
"உனக்கு என்னவாயிற்று? நான் வந்ததைக் கூடக் கவனியாத அளவுக்கு அப்படியென்ன யோசனை?" என்று விக்ரமன் கேட்டான்.
"தெரியவில்லை" என்ற மாறனை வினோதமாகப் பார்த்தான் விக்ரமன்.
"பார்த்தாயா விக்கிரமா?" என்று அருவியைப் பார்த்தவாறே மாறன் கேட்க,
விக்ரமன் "பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்… ஆனால் அருவியை ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை… நாளை நாம் செய்யவிருப்பதை நீ கூறினால், நானும் நிம்மதியாக அருவியை ரசிக்க வாய்ப்பிருக்கிறது"
"அருவியா? ஆம்! அருவியைப் போல் தான் சடசட வென்றிருந்தது அவளுடைய வாள்வீச்சு!" என்று முகம் முழுவதும் பிரகாசமாய்க் கூறியவனைப் பார்த்ததும்,
‘மாறன் ருத்ராவைத்தான் சொல்கிறான்’ என்பதைப் புரிந்து கொண்ட விக்ரமன்.
"ஆம் மாறா! அவளின் வாள் வீச்சைக் கண்டு நானும் மலைத்தேன்" என்று ஆச்சரியம் விலகாமல் கூறினான்.
"கண்டார் உயிருண்ணும் காரிகை! என்று புலவர் பெருமக்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ஆனால் இன்றுதான் அப்படி ஒருத்தியைப் பார்த்தேன்."
‘இப்பொழுது யாரைச் சொல்கிறான்?’ என்று புரியாத விக்ரமன் "யாரது மாறா?" என்று கேட்டான்.
"அவளுடைய வாளுக்கு இசையாத என் வீரநெஞ்சம், கூர்வாளைப் போன்ற கண்களால் காயம்பட்டு நிற்கிறேன்."
"நீ யாரைச் சொல்கிறாய்?" என்று ஒருவாறு யூகித்து, புருவம் சுருக்கி கேட்ட விக்ரமனிடம்,
"அவளுடைய நாசியைக் கவனித்தாயா? கோபத்தில் வெளியேறிய வெப்ப மூச்சுக்காற்றால் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது."
"நானெங்கே அதையெல்லாம் கவனித்தேன்?"
"அவளுடைய பவள இதழ்களை மடித்தபோது நானும் மடிந்தேன்…
"இப்பொழுது நான் மடிகிறேன்!"
"நல்லது! என்னை இடையூறு செய்யாமல் போய்வா!"
"அடக்கிராதகா!.... மாறா!..."
"இன்னுமா போகவில்லை!"
"எங்கே போவது?"
"எனது மனம் அவள்பால் சென்றுள்ளது… எனக்கு அவளைச் சந்திக்க வேண்டும்!"
"யாரை?"
"செண்பகப்பொழில் இளவரசி ருத்ராவை"
"முடிந்தது!"
"எது?"
"ம்ம்… நம் ஆயுள்!"
"அதைத்தான் அவள் பறித்துச் சென்று விட்டாளே"
"சந்தோ...சம்!"
"ஆம்! அந்த சந்தோசம் கிடைக்கவேண்டுமானால் நான் அவளைச் சந்தித்தே ஆகவேண்டும்…"
"அது எப்படி முடியும்?"
"நீ மனது வைத்தால்!"
"நானா? என்ன விளையாடுகிறாயா மாறா? திருவழுதிப் பாண்டியர் நம்மிடம் மிரண்டு போனாரே, தவிரத் தோற்று ஓடவில்லை... அவர் புறங்காட்டியதற்குக் காரணம் பெருங்கிள்ளி பாண்டியர் என்பதை மறவாதே!"
"அதை எதற்கு இப்பொழுது சொல்கிறாய்?" என்று சலித்தவனிடம்,
"இளவரசி ருத்ரா அவருடைய அருமை மகள்!"
"அதனாலென்ன?"
"புரிந்து தான் கூறுகிறாயா? ஒரு இளவரசியை அந்தப்புரத்திற்குச் சென்று சந்திப்பதென்பது சாத்தியமான விசயமில்லை…"
"சாகச வேலைதான்... காதலில் சாகசம் அவசியம் நண்பா… சிக்கல் இருந்தால்தான் காதலின் ஆழம் கூடும்."
"காதலா?!! ஒரு முடிவோடுதான் பேசுகிறாயா? இளவரசி ருத்ராவிற்கு உன் மீது எப்படி விருப்பம் வரும்?"
"நீ கண்டாயோ? ஆனால் நான் கண்டேன் அவள் தடுமாற்றத்தை."
"அவள் கண்களில் கனல்தான் தெரிந்தது... காதல் தெரியவில்லை…'
"நீ அந்த வாயாடிப் பெண்ணுடன் வழக்காடியதால் கவனிக்கவில்லை நண்பா!"
"இவள் யார்?"
"உன் அருகில் நின்று கொண்டிருந்தவள்."
"அந்தப்பெண் பிரதான தளபதியின் மகள்"
"ஐயோ பாவம்! அவருக்கு இப்படி ஒரு வாயாடி மகளா"
"..." ஒன்றும் பேசாமல் மாறனை பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரமன்.
"வா நண்பா! போய் வருவோம்."
"இதில் நானெதற்கு?"
"அந்தப்புரக் காவலர்களை சமாளி! அதற்குள் நான் சென்று…"
சிறிது நேரம் அமைதியாக யோசித்த விக்ரமன், மாறனின் முகத்தைப் பார்த்ததும், அதில் தெரிந்த பாவத்தில் (முகபாவம்) சிரித்தபடி, "சரி வா! என்னதான் நடக்கிறதென்று பார்த்து விடுவோம்" என்றதும் இருவரும் காவலாளி போல் மாறுவேடம் புனைந்து அரண்மனையை நோக்கிச் சென்றனர்.
அரண்மனையின் பின்புறம் வரும் வரை மிக எளிதாகக் கடந்து வந்த இருவரையும் அந்தப்புர வாசலில் வைத்து, காவலாளி மடக்கி விட்டான்.
"நில்லுங்கள்! யார் நீங்கள்?" என்றதும்,
விக்கிரமன் வேகமாக அவனருகில் சென்று, “நாங்கள் பிரதான தளபதியின் மாளிகை பணியாளர்கள். அவர் தன் மகளிடம் கூறி வரச் சொல்லி செய்தி அனுப்பியுள்ளார்” என்று சரளமாகப் புளுகினான்.
வார்த்தைகளின் எண்ணிக்கை-1257
சிவதாசனின் கர்ஜனை தொடரும்...
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
ஆரணங்கு = அருமை+அணங்கு = அருமையான பெண்
பனிச்சை = கொண்டையிட்டு முத்துக்களால் அலங்காரமாகத் தொங்க விடுதல் (மீனாட்சி அம்மன், ஆண்டாள் கொண்டையில் முத்துகள் தொங்குமே)
பூங்கரை நீலம் = பூ + கரை + நீலம் = பூவேலைப்பாடுகளை ஓரங்களில் உடைய நீல ஆடை. ஆடையின் மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் இருக்கும்.
கதையைப் படிக்கும் அன்புள்ளங்கள் கதையைப் பற்றி என்னிடம் நீங்கள் சொல்ல விரும்புவதை கீழே உள்ள லிங்க் ஐப் பயன்படுத்தி கமெண்ட்ஸ் பாக்ஸ்சில் தெரிவியுங்கள்...
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com