செந்நிற பூமி -1
சிவப்பு நிற புழுதி அடங்கி பழுப்பு நிறத்தில் புழுதி காற்று வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மனித தலைகள் உலவியபடி எதையோ எதிர் பார்த்து காத்திருந்தனர்.
"ஏன்யா பொன்னுச்சாமி அந்த முனியாண்டி உனக்கு வழி விடுவாரா இல்லை இந்த தடவையும் புழுதியாகவே போயிடுமா… ம்ம்ம்"
"அட ஏன் மாமா நீங்க வேற நானே சுத்தமா ஒரு லட்சத்தை போட்டுட்டு அல்லாடிகிட்டு கெடக்கேன் நீங்க வேற அந்த வண்டி ஓட்டுறவன் இதுக்கு மேல போனா ஆயிரம் அடி வந்திடும் னு சொல்றான் அந்த கருப்பன் மனசு வச்சு தண்ணி வந்துட்டா கெடா வெட்டி ஊருக்கே விருந்து வச்சிடுவேன்" என்றார் பொன்னுசாமி .
“அப்போ பங்காளி நமக்கு கறி சோறு கிடைக்காது… . எங்க ஆயிரம் அடி போயும் தண்ணி வரக்காணோமே வெறும் புழுதி தான் வருது… இதுல இவுக கறிவிருந்து வைக்கிறாகளாமாம் …. ஏன் மாமா நீ இந்த வயசுல விவசாயம் பண்ணி என்ன பங்களாவா கட்ட போற… அதான் உன் மகன் வெளிநாட்டுல சம்பாதிக்கிறானே அப்புறம் என்ன போய் நிம்மதியா இருப்பியா மகன் சம்பாதிச்சதை இப்புடி புழுதியா பறக்க விடுற அட போ மாமா நீ வா பங்கு விடிய விடிய காத்து கெடந்தாலும் வெறும் காத்து தான் வரும் இவங்களால நம்ம தூக்கம் போச்சு” என்று தன் நண்பர்களுடன் கிளம்பிய சிவசக்திபாலனை அவனது நண்பன் ஒருவன் தடுத்தான். “இரு மச்சான் வந்ததுக்கு காபியாவது குடிச்சிட்டு போவோம் வீட்டுக்கு போனா பச்சதண்ணி கூட கிடைக்காது “என்க .,” இருந்துட்டா போச்சு” என்று மறுபடியும் வரப்பிலேயே வந்து உட்கார்ந்தான்.
“ ஆமா இல்லாட்டி னா மட்டும் இவனுக விடிய கருக்கல்ல எழுந்து ஏர் உழுவ போற மாதிரியே பேசுறது…. சூரியன் சுள்ளுனு மொகரையில் அடிக்கிறது தெரியாம கூட தூங்குற பயலுவ …வெட்டிப்பயலுக” என்று பொன்னுசாமியிடம் பேசிய பெரியவர் தன் பங்கிற்கு பேசி விட்டு வேப்ப மரத்தில் சாய்ந்து அமர்ந்தார்.
"ஏப்பு அதுல சாயுறீக சுளுக்கி அலையப் போவுது இங்க வாங்க ஏலே அந்த சாய்வு நாற்காலியை எடுத்து போடு ..அய்யா உட்காரட்டும் அப்படியே எல்லாருக்கும் வரத்தண்ணி வைக்க சொல்லு உன் பெரியம்மா கிட்ட சொல்லு என்ற பொன்னுசாமியிடம் சரிங்க அய்யா” என்று பதிலிறுத்து விட்டு ஓடினாள் சூரியகாந்தி.
“அடியே சன்ஃப்ளவரு மாமனுக்கு சுக்கு கருப்பட்டி கொஞ்சம் தூக்கலா போடு புள்ள “என்க அவளோ” ம்ம்க்கும் இப்ப அது ஒண்ணு தான் கொறைச்சல் போய் தூங்கு போ” என்று விட்டு ஓடினாள்.
“அடியே சோளத்தட்டை இருடி உன்னை வச்சுக்கிறேன் ஓவர் குசும்பு ஒரு கிராஜீவேட்டை பார்த்து பாரு மாப்ள எப்படி பேசுறானு … நாளைக்கு அவ சைக்கிள் பஞ்சர் ஆகனும் மாப்ள அதுக்கு நீ தான் பொறுப்பு… “என்றான்.
“உன் கூட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு இது ஒண்ணு தான் மிச்சம் மச்சான் செய்றேன் ..வேற என்ன பண்றது “என்று சலித்து கொண்ட நண்பனிடம்… "வேணுன்னா நம்ம மாவட்ட கலெக்டர் கூட சகவாசம் வச்சுக்கிறியா… வாயை மூடிகிட்டு சொன்னதை செய்டா இல்ல டீக்கடையில் இருக்க பாக்கியை பூராம் நீ தான் தரனும் தெரியுமில்ல…” என்றதும் அவன் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டான்.
அந்த இரவுப் பொழுதுக்கு இதமாக வந்தது சுக்கு பனங்கருப்பட்டி தட்டி போட்டு வைத்த சுக்கு காபி… சூரியகாந்தி தான் கொண்டு வந்தாள். அவள் பின்னாலேயே இரு சிறுமிகள் தட்டில் பேப்பர் கப்பில் ஊற்றிய கமகமக்கும் சுக்குகாபியுடன்… அவர்களில் ஒருத்தியை அவளது சடையை பிடித்து இழுத்து தட்டை பிடுங்கி கொண்டான் சிவசக்தியின் நண்பர்களில் ஒருவன்.
"ஏ சில்லுவண்டு இங்கன ஆளுக உட்கார்ந்து இருக்கறது தெரியலியோ.... அவளை நூலு பிடிச்ச மாதிரி பின்னாடியே போறவ…. ஓடு.. !!"பங்கு இந்தா நீ எடு ...இந்தா மாப்ள இது உனக்கு "என்று தன் நண்பர்களுடன் சுக்குகாபியை பகிர்ந்து கொண்டான் அவன்.
“மாமா ஏ சடைய புடிச்சு இழுத்தல்ல நான் என் மாமன் கிட்ட சொல்லி விடுறேன் பாரு…ரெண்டு நாளைக்கு உனக்கு கஞ்சி கெடைக்காது ஆமா… .”என்று சிலுப்பி கொண்டு சென்றாள் அந்த சிறுமி.
இவர்கள் சம்பாஷணைகள் தொடர்ந்தபடி இருக்க பொன்னுசாமிக்கு மனம் உடையும் அளவிற்கு அந்த தகவலை கூறி விட்டு கிளம்பினர் போர்வெல் வண்டிக்காரர்கள்.
“ ஏதோ பொழங்க தண்ணி கிடைக்கும் அவ்வளவு தான்… மத்தபடி விவசாயம் பண்ற அளவுக்கு தண்ணி இல்லீங்க… இதுக்கு மேற்பட்டு ஆழம் போகவும் முடியாது… பேசுன காசை கொடுத்தா நாங்க கிளம்புறோம் “ என அந்த வண்டியின் உரிமையாளர் சொல்ல விடிகாலைப் பொழுதில் மொத்த ரொக்கமாக பணத்தை அவர் கையில் கொடுத்தார் பொன்னுசாமி.
“நாங்க தான் சொன்னோம் ல இந்த ஊருக்கு தண்ணி கிடைக்கறது எல்லாம் லேசுபட்ட விஷயமா… பாறையில தண்ணி வர வைக்க நினைச்சா அப்படி தான் வாங்கடா போகலாம்… பேசாம கரகாட்டம் பார்க்க போயிருக்கலாம்…. இவிங்க பேச்சை கேட்டு வந்து தூக்கம் தான் போச்சு” என்றபடி கிளம்பினான் சிவசக்திபாலன்.
ஆளாளுக்கு வருத்தமும் அங்கலாய்ப்புமாக பேசி விட்டு கிளம்பினர்.
“இதோட பத்து எடத்துக்கு மேல தோண்டியாச்சு ஒரு பக்கமும் தண்ணி கிடைக்கலை ஏன் காச கரியாக்குறீக… நமக்கு என்ன குறைச்சல் னு இப்ப இந்த வேலை பாக்குறீங்க நம்ம மவன் சம்பாதிச்சு போடுறது பத்தாதா நமக்கு…. இனி ஒரு தரம் போரு போடுறேன் னு திரிஞ்சீங்க அவ்வளவு தான் சொல்லிட்டேன் “ என பொன்னுசாமி மனைவி வேதனையை கோபமாக காட்டி விட., பொன்னுசாமியோ "தலைமுறை தலைமுறையா சோறு போட்ட பூமி இன்னைக்கு காஞ்சு கெடக்கிறதை பார்த்தா வயிறு எரியுது…… ..உங்களுக்கு எல்லாம் எக்காளமா இருக்குது நான் என்ன செய்ய…." மனதில் வெறுமை குடி கொண்டது பொன்னுசாமிக்கு.
விடிகின்ற வேளையில் ஊர் முழுவதும் பொன்னுசாமியின் தோட்டத்தில் தண்ணீர் வராததே பேச்சாக இருக்க பொன்னுசாமி வீட்டோடு முடங்கிப் போனார்.
டீக்கடையில் இருந்து பால் சொசைட்டி வரை இதே பேச்சாக இருக்க பொன்னுசாமி மனைவி பாலை கொடுத்து விட்டு வீட்டிற்குள் கடுகடுவென நுழைந்தார்.
"இதுக்கு தான் சொன்னேன் கேட்டிங்களா இப்ப ஊர் வாய்க்கு அவலாக இருக்கிறோம் …. இன்னும் அவன் ஃபோனு போட்டு ஒருலட்சத்துக்கு கணக்கு கேட்டா நான் என்ன பதில் சொல்லப் போறேன்னு தெரியலை… அந்த ஒரு லட்சத்துக்கு மூணு மாடு வாங்கி இருந்தா கூட பொழைப்பை ஓட்டி இருக்கலாம்" என்று அங்கலாய்த்தபடி பால் கேனை பொத்தென்று வைத்தார்.
பொன்னுசாமி வாயை திறவாமல் கயிற்று கட்டிலில் படுத்து இருந்தவர் சூரியகாந்தியை அழைத்து .,"சின்ன பொருவே (பெண் என்று அர்த்தம்) நல்லா சுக்கை தட்டி போட்டு எருமைபால் ல டீ போடுத்தா… ரவை(இரவு) எல்லாம் தூங்காதது கண்ணை எரிச்சுக்கிட்டு கிறக்கமா வருது" என்றவர் தன் மனைவியிடம் திரும்பி .,"தண்ணி வந்திருந்தா ஊருக்கே மகராசன் னு சொல்லி பெருமை பீத்தி இருப்பீங்க … இப்ப தண்ணி வரலை அதுனால ஏசுறீக… "என்று வேப்பங்குச்சியை ஒடித்து பல்லை துலக்க ஆரம்பித்து விட்டார்.
கருத்தம்பட்டி மணப்பாறையில் உள்ள ஒரு சிற்றூர்… செம்மண் பூமி என்ன போட்டாலும் விளைந்திடும் பூமிக்கு ஆற்றுப் பாசானத்திற்கு வழி இல்லை.. காட்டாற்று வெள்ளம் வந்தால் தான் உண்டு… அணை கட்டப்பட்டு இருந்தாலும் நீர் வரத்து இருக்குமா என்பது சந்தேகம் தான்… அவரை ,துவரையில் இருந்து கரும்பும் வாழையும் போட்டி போட்டு வளரும்… சுற்றிலும் மலை நடுவே கிராமம் மழை பெய்தால் அது தான் சொர்க்க பூமி வானம் பார்த்த பூமி… மழையை நம்பி தான் விவசாயம் செய்ய வேண்டும்… நிலத்தடி நீரை நம்பியே இவர்களது விவசாயம்… ஆங்காங்கே நிலத்தடி நீரை எடுக்க நீர்மட்டம் குறைந்து போனது. குளம் வெட்டி வைத்திருந்தாலும் அதில் வளர்ந்தது என்னவோ சீமைக் கருவேல மரங்கள் தான்.. சீமைக்கருவேல மரங்கள் எல்லாம் தன் இருப்பிடத்தில் சுற்றி இருக்கும் நீரை முழுவதும் உறிஞ்சும் திறன் கொண்டவை… அங்கே அது தான் செழிப்பாக வளர்ந்திருந்தது. மணப்பாறை மாட்டு சந்தைக்கும் முறுக்கிற்கும் பிரபலம் என்றால் சுற்று வட்டார கிராமங்களோ தண்ணீர் பஞ்சத்தில் பிரபலமாகிப் போனது.
அப்படிப்பட்ட கிராமத்தில் வசிப்பவன் தான் நமது நாயகன்… திரைப்படங்களில் வருவது போல படித்து விட்டு வேலை இன்றி தன்னைப் போல இருப்பவர்கள் நால்வரை இழுத்து கொண்டு ஊரை சுற்றி வரும் இளங்காளை. சிவசக்திபாலன்(அ)சிவனேஷ். சிவனேஷ் என்பது அவன் வைத்து கொண்ட பெயர்... ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக கெஸட்டில் மாற்றிக் கொண்டான்.
இரவு வெகு நேரம் கண் விழித்தவன் காலைப் பொழுது வந்தது கூட அறியாமல் உறங்கி கொண்டிருந்தான்.
"ஏன்யா சக்தி இன்னும் தூங்கினா என்ன அர்த்தம்.. உங்க அய்யா வந்துடப் போறாரு எழுந்திருயா …. வந்ததும் திட்டுவாங்க அப்புறம் எனக்கும் சேர்த்து தான் பேச்சு வாங்க வேண்டி வரும்…"அன்னை எழுப்பிட அவன் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். அவர் கத்திய கத்தலில் கண் விழித்தவன் தன் அன்னையை முறைத்தான்.
"அய்யேய்ய… ஏன் மா காலையிலையும் கத்துற… . நேத்து பொன்னுசாமி மாமன் வீட்ல போர் போட்டாங்க அங்க போயிட்டு விடியல்ல தானே வந்தேன்… அப்புறம் என்ன… உன் ஊட்டுக்காரருக்கு கஞ்சியை நீ கொண்டு போனா அவர் ஏன் இங்க வர்றாரு… போம்மா காலையிலையே மனுசனை டென்சன் படுத்திக்கிட்டு… இப்ப தான் மணிரத்னம் சார் கையால அவார்டை வாங்க போனேன் ரஷ்மிகா களுக்கி சிரித்தபடி கை தட்டுனா அதுக்குள்ள பொறுக்கலை எழுப்பி விட்டுட்ட… என்னவோ போ…" என சலித்து கொண்டான்.
"நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ஏலே எழுந்திருச்சு போய் நம்ம செவப்பியை செனைக்கு ஓட்டிட்டு போ அங்க வீரமணி இருப்பான் அவன் கிட்ட மாட்டை விட்டுட்டு இந்த கஞ்சியை உன் அய்யா கிட்ட தந்துட்டு வா… வாரையில அந்த செல்லமணி தோட்டத்துல மகுளி கீரை பறிச்சு வாங்கியா.. மதியத்துக்கு கடையனும்… அப்படியே" எனும் போதே இடை வெட்டியவன்.," நீ விட்டா லிஸ்ட் போடுவ…. போம்மா இன்னைக்கு எல்லாம் என்னா மாறி கடமையோட நாங்க எழுந்திருச்சிருக்கோம் போம்மா…. மாட்டை ஓட்டு கீரை வாங்குனு பெரிய அக்கப்போர் பண்ற மா நீயி… சரி சரி நான் போய் பல்லை வெளக்கிட்டு வரேன் நீ அந்த கெல்லாஹ்ஸை சுண்ட காய்ச்சிய பசும்பாலை ஊற்றி அதுல ரெண்டு முந்திரியும் பாதாமும் அப்படியே பனித்தூறல் மாதிரி தூவி விட்டு.. சும்மா மணக்க மணக்க எடுத்துவை பார்க்கலாம்… "என்றவன் கொல்லைபுறத்திற்கு சென்றான். அவன் அம்மா சித்திரை செல்வியோ… மக வாழ்ற வாழ்வுக்கு மாசம் எட்டுக்கட்டு வெளக்கமாறாம்… அது மாதிரி இருக்கு டா நீ பண்ற அலும்பு…. பழைய சோறும் புளிமிளகா ஊறுகாயும் வச்சிருக்கேன் தின்னா தின்னு இல்ல பட்டினி கெட… என்று உள்ளே சென்றார்.
வாயைக் கொப்பளித்து விட்டு திரும்பியவன்.," பார்த்தியா தாத்தா உன் மருமகளுக்கு இருக்க நக்கல்ஸை … உன் பொண்டாட்டி இருந்திருந்தால் இந்த பேச்சு எல்லாம் வருமா…. அதுக்கு என்ன அவசரமோ டிக்கெட் வாங்கிடுச்சு… இல்லாட்டி காளியம்மா சண்டைக்கு போயிருக்காது… சரி விடு நமக்கு சாப்பிட இடமா இல்ல… சிவசாமி ஹோட்டல் ல இட்லி மல்லிப்பூ மாதிரியே போட்டு இருப்பான் மணக்க மணக்க சாம்பாரை ஊத்தி கொழைச்சு அடிச்சா பசி எடுக்கும்… ம்ஹூம்… சரி வரட்டா" என பின்வாசல் வழியாக கிளம்பி விட்டான்.
வண்டி சத்தம் கேட்டதும் தான் அவன் போனதை கண்டு கொண்டார் செல்வி.
கோயில்மாடு மாதிரி சுத்தி திரிஞ்சா பொறுப்பு எப்ப தான் வரப்போகுதோ தெரியலை சலித்து கொண்டவர் கணவனுக்கு கஞ்சியை எடுத்து கொண்டு மாட்டையும் இழுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.
"ஏ ஆச்சி உன் பேத்தி எங்க தனியா பாக்கு இடிக்கீறிக…!!" வம்பளந்தாள் பக்கத்து வீட்டு பழனியம்மாள்
"அவ உன்னை மாதிரி வெட்டி சிறுக்கியா அவ ஊருக்கே பாடம் சொல்லி தர டீச்சரு டி முழுப் பரிட்சை நெருங்குது இல்ல அதான் பாடம் சொல்லி கொடுக்க வெள்ளென கிளம்பிட்டா… எனக்கு சமைச்சுட்டு தான் போயிருக்கா.. ம்ஹ்ம்.. இந்நேரம் அவளுக்கு ஒரு நல்லது நடந்திருந்தா எனக்கா ஆக்கி போட்டுட்டு இருப்பா… புருஷனுக்கு ஆக்கி போட்டு பகுமானமா இருந்திருப்பா என்ன பண்ண… அப்பன் உசுரோட இருந்தும் அவளுக்கு ஒரு நல்லது பண்ண ஆளு இல்ல.." என்று வழக்கமாக பேசும் பேச்சை ஆரம்பித்தார்.
"அதெல்லாம் சரி ஆகிடும் விடு ஆச்சி….. ஏம்ல சேர்மக்கனி இத உங்க டீச்சரு கிட்ட குடுத்துடு…" என பள்ளி செல்லும் சிறுமியான சேர்மக்கனியிடம் டிபன்பாக்ஸை திணித்தார் பழனியம்மாள்.
"அதுல என்னடி இருக்கு… .??"
"அட தூத்துக்குடி டவுனுக்கு என் வூட்ல போயிருந்தாக… முந்திரிகொத்து வாங்கினாராம்… நம்ம மலருக்கு அது இஷ்டம் னு கொண்டாந்தேன்… "என்றாள்.
"ம்ம்ம்… சரி அப்டியே அந்த கம்மஞ்சோத்தை எடுத்து குடுத்துட்டு போ… மணப்பாறையில் இருந்து ஃபோன் வந்தா தகவல் சொல்லுடி…" என்றவர் எடுத்து கொடுத்த கம்மஞ்சோற்றை கரைத்து குடித்தார்.
அன்று மாலையே பள்ளி முடிந்து வந்தவள் .,"ஏ ஆச்சி ஒழுங்கா சாப்டியா இல்ல கம்மஞ்சோற்றை குடிச்சிட்டு படுத்துக்கிட்டியா "என்றவாறு வந்தாள் பனிமலர்.
"அடி போடி எனக்கு இந்த நெல்லு சோத்தை பார்த்தாலே பிடிக்கலை… ஏட்டி உன் பெரியாத்தா ஃபோன் பண்ணா... முழு பரிட்சை முடிஞ்சதும் ஊருக்கு போவியாம்… "என்று இழுத்து பேசினார்.
"ஊர் சுத்துனா உனக்கு யார் சோறு போடுவா.. நான் எங்கேயும் போகலை… "என்று சொல்லி கொண்டே ஆடை மாற்றி முகம் கழுவி வந்தாள்.
"ஏட்டி என்னால தானே நீ எங்கேயும் போகாம கெடக்குத… இந்த வங்கெழடுக்கு வடக்க போவ நாளும் வர மாட்டேங்கிது போ… " என்று சலித்தவரை முறைத்தாள்.
"ஏ ஆச்சி இப்படி எல்லாம் பேசுத… எனக்கு உன்னை விட்டா ஆரு இருக்காவ.."
"ஏன் டி நீ ராசாத்தி மாதிரி இருக்க வேண்டியவ உனக்கு சொந்தம் எல்லாம் வகை வகையா இருக்காவ நீ இப்படி சொல்லிட்டு திரியுத "பேத்தியிடம் தவிப்பாக கேட்டார்.
"ஆச்சி செத்த சும்மா கெட எனக்கு உன்னையும் பெரியம்மாவையும் தவிர உறவு கிடையாது… . வேற ஆரும் உறவு கெடையாது "என தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையாக போட்டுக் கொண்டே வாரியலை எடுத்து பெருக்கினாள் .
"நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்க தான் டி உன் உறவு… சாதி சனம் எல்லாம்… சரி சரி இதுக்கு மேல பேசினா ஒரண்ட இழுக்கிறேன் னுவ" என்று பாக்கை இடித்தார் .
"சரி சரி ராத்திரிக்கு என்ன கொழம்பு வெக்கட்டும்.. மிதுக்குவத்த குழம்பு வைக்கவா…!!!" பேச்சை மாற்றினாள் பனிமலர்.
"ஏட்டி மலரு… உனக்கு ஃபோன் வந்திருக்கு வாட்டி" என பழனியம்மாள் அழைக்க" இந்தா வரேன் அக்கா" என்று துப்பட்டாவை எடுத்து மேலே போட்டு கொண்டு சென்றாள்.
"ஹலோ… !!"என்க
“உங்க தாத்தா முடியாம கெடக்காரு ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போ… டாக்டர் நாள் கணக்கு தான் னு சொல்லிட்டாரு அவரு உன்னைப் பார்க்கணும் கடைசி ஆசை அது இதுன்னு பெனாத்துறாரு நாங்களும் எவ்வளவு நாளைக்கு அவருக்கு பணிவிடை செய்றது வெரசா வந்துட்டு போ" என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பனிமலருக்கு உடம்பெல்லாம் வெடவெடத்து போனது. ரிசீவரை வைத்து விட்டு வெளியே வந்தவள் தன் ஆச்சியிடம் தகவலை கூறினாள்.
“நான் இருந்துக்கிடுவேன் டி நீ போய் தாத்தனை பாரு… “என்றார் ஆச்சி.
“உன்னை விட்டு எங்கிட்டும் போறதா இல்லை ரெண்டு பேரும் போவோம் சரியா !!”என்றவள் மிதுக்குவத்தலை எடுத்து குழம்பு வைக்க போனாள்.
....... தொடரும்.