Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

6​

கிருபாகரனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே பேசலானாள் மகிமா.

“கிருபா ஒரு சின்ன ஹெல்ப்”

“என்ன மகி”

“வந்து.. தப்பா நினைக்கக் கூடாது. என்னடா இவள் நம் அலுவலக வேலையில் மூக்கை நுழைக்கிறாளே என்று”

“ச்சேச்.. சே நிச்சயமாக இல்லை சொல்லு”

“என் தோழி ரொம்பவும் நெருங்கிய தோழி பாவம் இந்த வயதிலேயே விதவையாகி விட்டாள். இப்போது அவளுக்கு முக்கியமான தேவை ஒரு வேலையாம் நேற்று கோவிலில் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் தன் சோகங்களை எல்லாம் கொட்டி அழுது தீர்த்துவிட்டாள். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. உங்கள் அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவை என்று மாமாவும் நீங்களும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். அந்த வேலையை என் தோழிக்கு தரமுடியுமா? அவளுக்கு அதற்கான தகுதி இருந்தால்”

திருமணமாகி இத்தனை நாட்களில் தனக்கென்று அவனிடம் அவள் கேட்டது இதைத்தான். அவளது முதல் வேண்டுகோள் மறுக்க அவனுக்கு மனம் வரவில்லை.

“உன் தோழியை என் அலுவலகத்திற்கு அனுப்பி வை மகி. பயோடேட்டாவோடு பத்து மணியளவில் வரச் சொல் கூடுமான வரை முயற்சிக்கிறேன்” என்றவன் வரப்போகும் பூகம்பம் தெரியாமல் அலுவலகம் சென்றான்.

சரியாக பத்து மணிக்கு அவனது அறைக்கதவு தட்டப்பட்டது.

“எஸ் கமின்” என்று பதிலளித்தவன் தன் கோப்புகளில் கவனமாக இருந்தான்.

கதவு திறக்கப்பட்ட பின்,

“குட்மார்னிங் சா...” என்ற வார்த்தை முடிவடையும் முன் சட்டென நிமிர்ந்து பார்த்த கிருபாகரனும் சரி, எதிரில் பைலுடன் இருந்த பொண்ணும் சரி உறைந்து விட்டனர். பதட்டத்தில் தன் இருக்கையிலிருந்தே எழுந்துவிட்டான்.

“புவி.. புவனேஸ்வரி! நீ... நீங்களா?”

என்ன உளறுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.

“கரன்... நீங்களா? நீங்கள் மதுரையில்...”

பழைய நினைவுகள் தன்னுள் தோன்ற அவஸ்த்தையாய் தலை கவிழ்ந்தாள்.

“கவலை தரும் பல நினைவுகள் அந்த மதுரை முழுவதும் நிரம்பிக் கிடப்பது போல் தோன்றியதால், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அப்பாவின் சொந்த தொழிற்சாலையை நிர்வகிக்க சென்னை வந்துவிட்டேன். அம்மாவின் உடல்நிலையும் ஒரு காரணம் தான்”

அவன் கூறுவதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அவளுக்கும் மதுரைக்கு சென்றால் அதே பிரச்சனை தானே. என்னென்னவோ நினைவுகள் தோன்ற, எல்லாவற்றையும் பின் தள்ளி வேறு பேச முயன்றாள்.

“மகி... மகிமா...”

“ஆம், என் துணைவி தான்”

“ஓ.. அவள் சொல்லி இருப்பாளே”

“ம்.. சொன்னாள்..”

சிறு மௌனத்திற்குப் பின்,

“மூன்று வருடம் தான் ஓடியிருக்கும், அதற்குள் எத்தனை மாற்றங்கள். உன் நிலைக்கு உண்மையிலேயே நான் வருந்துகிறேன்”

“உங்கள் வருத்தத்தை விட எனக்கு முக்கிய தேவை ஒரு வேலைதான் கரன்.. சாரி கிருபாகரன் சார்”

புவனாவை அலுவலகத்திலும், மகிமாவை வீட்டிலும் மாறி மாறி பார்த்து அவன் மூளை காய்ந்து விட்டது. ஆபீஸில் புவனாவை பார்க்கும் பொழுது, அவர்கள் காதலித்தது, ஊர் சுற்றியது எல்லாம் நினைவில் வரும். பாவம், இந்த சிறுவயதில் இப்படி தனிமரமாகி விட்டாளே என்ற துக்கம் அவனுள் எழும். எல்லாம் தெரிந்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் சேர்ந்து கொள்ளும்.

வீட்டிற்கு வந்தால் மகிமா. அவள் ஒவ்வொன்றையும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்வது தான் ஒரு நல்ல கணவனாக இல்லாத பட்சத்திலும் மனைவிக்கான சகலகாரியங்களையும் ஒரு குறைவும் சொல்ல முடியாத அளவில் நிறைவேற்றிக் கொண்டு, தன் சொந்தபந்தங்களை விட்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல மனைவியாய், தோழியாய் விளங்கும் மகிமாவையும் அவனால் விட்டுத்தர முடியவில்லை.

புவனா வேலைக்கு சேர்ந்து இந்த ஒரு வார மன போராட்டத்தில் கிருபாகரன் ரொம்பவும் மனம் நொந்து போனான்.

அப்போது தான் அந்த பார்ட்டி வந்தது. தன் நெருங்கிய நண்பனான பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்ததால் பேட்சிலர்ஸ் பார்ட்டி வைத்திருந்தான். எப்போதாவது இது போன்ற பார்ட்டிகளில் நாகரீகம் கருதி லேசாக ஆல்கஹால் பருகுவது கிருபாவின் வழக்கம். வேண்டாம் என்றால் ரொம்பவும் பிகு செய்வதாகவும், நடிப்பதாகவும் அந்த வட்டத்தில் கருதப்படும். அதனால் ஒரு ஸ்மாலை எடுத்துக் கொண்டு அந்த பார்ட்டி முழுவதும் குடித்துக் கொண்டே வலம் வருவான். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ். அவன் மனம் அவனது கட்டுப்பாட்டிலில்லை. அவன் மனதின் வலி தீர்க்க மதுவிடம் சரண் புகுந்தான்.

பாஸ்கரன் எத்தனை முயன்றும் கிருபவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அளவிற்கதிகமாக குடித்துவிட்டு பிதற்ற ஆரம்பித்துவிட்டான். இதற்குமேல் சரிபடாது என்பது புரிய கிருபாவின் டிரைவரை வரவழைத்து கைத்தாங்கலாக காரினுள் ஏற்றி அனுப்பி வைத்தான்.

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாத கிருபாகரனை நினைத்து ரொம்பவும் கவலைப்பட்டாள் மகிமா. போன் செய்தாலும் பதிலில்லை. அவனாகவும் தகவல் தரவில்லை என்று சிறு பதட்டத்தோடு காத்திருந்தாள். சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் கதவு தட்டப்பட்டதும் திறந்த மகிமாவிற்கு அதிர்ச்சியில் இதயமே ஒரு நொடி நின்று பின் துடித்தது.

“என்ன மணி அண்ணா, இவருக்கு என்னவாயிற்று பதட்டமாக கேட்டவளிடம்”

“பயப்படும்படி எதுவுமில்லை அம்மா! ஒரு பார்ட்டியில்...” என்று அவர் தயங்கவும்.

மகிமா கிருபாகரனை நெருங்கியதும் அவர் முடிக்காமல் விட்ட வாக்கியத்தின் மீதியை அவனிடமிருந்து வந்த மதுவின் வாடை சொல்லியது. சட்டென்று நாசியைப் பொத்தியவள், கிருபாவிற்கு இந்தப் பழக்கம் உண்டா. கல்யாணமாகி இத்தனை மாதத்தில் ஒரு நாளும் இப்படி இல்லையே. அல்லது புதிதாக கற்றுக் கொண்ட பழக்கமா, நினைத்ததை டிரைவரிடம் கேட்டும் விட்டாள்.

“இல்லை மா.. அய்யா இப்படி அதிகமாக மது அருந்தி நான் இதுவரை பார்த்ததில்லை. அது தான் அம்மா மனசு புண்படுமே என்று நினைத்து இத்தனை தாமதமாக வீட்டிற்கு அழைத்து வந்தேன்” என்று பேசிக் கொண்டே இருவருமாக அவனை கட்டிலில் படுக்க வைத்தனர்.

“ரொம்பவும் நன்றி அண்ணா, அத்தைக்குத் தெரிந்தால் வேதனைப்படுவார்கள்”

“சரிம்மா நான் கிளம்புறேன்” என்று டிரைவர் சென்றுவிட சில நிமிடங்கள் கட்டிலில் கிடந்த கிருபாகரனை வெறித்தாள்

எதற்காக கிருபா இந்த மிதமிஞ்சிய மது!

புவனாவை மறக்கவா, அல்லது என்னை உங்கள் வாழ்வில் சகித்துக் கொள்ள முடியாமல் வந்த துக்கத்தில் குடித்ததா? எதுவாக இருந்தாலும் வேதனை எனக்குத்தான். என்னால் தானோ என்ற குற்றவுணர்வு என்னை சுட்டெரிக்கிறது என்று மனதினுள் பேசிக் கொண்டவள் ஒரு பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு, அவனை நெருங்கி அவனது ஷூ, கோட், டை என தேவையில்லாவற்றை களைந்தாள். இறுதியாக அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ்சை அவள் எடுத்ததும் அவனிடம் அசைவு தெரிந்தது. குழறலாய் ஏதோ பேசவும் செய்தான். எத்தனை உற்றுக் கேட்டும் அதன் பொருள் சுத்தமாக அவளுக்கு விளங்கவில்லை. அவளின் செவியை அவனது இதழோரம் வைத்தும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இது தேவையில்லாத வேலை என்பது புரிய நிமிர நினைத்தவளால் எழ முடியவில்லை. காரணம் கிருபாவின் கரம் அவள் கரத்தைப் பற்றி இருந்தது. மெதுவாக அதை அகற்ற முயன்றவள் தோற்றுத்தான் போனாள். அவன் அத்தனை இறுக்கமாக பற்றி இருந்தானா அல்லது அவன் பற்றுதலில் இருந்து விடுபட அவள் விரும்பவில்லையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இறுதியாக தன் சக்தியை ஒன்று திரட்டி அவனின் கைகளை விடுவித்துக் கொள்ள முயல்கையில், அவனது மற்றொரு கரம் அவளது இடையை வளைத்து அவன் மேல் போட்டுக் கொண்டது. நிலை குலைந்து அவன் மேல் விழுந்தவள், இது நல்லதற்கல்ல என்பது புரிய, திமிறி விலக முயன்றாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. அவன் முகத்தைப் பார்த்தாள், அவன் கண்கள் மூடியே தான் இருந்தது. இது உள்ளே சென்ற மதுவின் பேயாட்டம் தான் என்பது புரிய,

“கிருபா இங்கே.. பாருங்கள் இது சரியல்ல, தப்பு. நீங்கள் அதிகமாக குடித்திருக்கிறீர்கள். உங்கள் நினைவில் நீங்கள் இல்லை. என்னை விட்டுவிடுங்கள் ப்ளீஸ்”

கண்களில் நீர் திரையிட அவனிடம் மன்றாடினாள். மனமோ! அவன் அணைப்புத் தந்த கதகதப்பில் துள்ளிக் குதித்தது.

அறிவோ ‘மகிமா விழித்துக்கொள், அவர் இப்போது சுயநினைவில் இல்லை. அவரை நீ காதலிக்கிறாய், இந்த நெருக்கம் உனக்கு பிடித்திருக்கலாம். ஆனால் காலை எழுந்தவுடன் என் பலகீனத்தைப் பயன்படுத்திக் கொண்டாயா? என்று அவர் கேட்டால் என்ன செய்வாய்? முகத்தை எங்கே வைத்துக் கொள்வாய், வேண்டாம் அவரிடமிருந்து விலகு’ என்று அவளை எச்சரித்தது.

“கிருபா... ப்ளீஸ் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம். இப்போது என்னை விடுங்கள்” என்று கெஞ்சியவளை, ஒரே சுற்றில் கீழே படுக்க வைத்து அவளின் காதோரம்

“ஐ லவ் யூ...” என்றான்.

சப்த நாடிகளும் நின்றுவிட்டது அவளுக்கு. அவள் கேட்டது நிஜமா என்று கூட சந்தேகம் வந்தது. அவளது சந்தேகம் தீரும் விதமாக மறுபடியும் சற்று உரக்கவே.

“ஐ லவ் யூ சோ மச்...” என்றான் கிருபாகரன்.

இதற்குத்தானே அவள் ஆசைப்பட்டாள். இதற்காகத்தானே இத்தனை மனவலியையும் தாங்கினாள். இன்று இது நிஜமா அல்லது போதையில் அவன் உளறியதா என்பதை அவள் யோசிப்பதற்குள் கிருபா அவளை தன் வசபடுதும் முயற்சியில் இறங்கினான். உண்மையா பொய்யா?! நிஜமா போதையா? என்ற கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருந்த போதிலும் அவளால் அவனை தடுக்க முடியவில்லை. பாவம் அவளும் பெண்தானே, அதுவும் கிருபாவின் மீது காதல் கொண்ட மனம், அவன் தொட்டதும் நெகிழ்ந்து விட்டாள். தன் உண்மையான காதலை அவனுக்கு அளித்தாள். இருவரும் ஒருவருக்குள் மற்றவரை தொலைத்து எப்போது தூங்கினார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

காலையில் முதலில் எழுந்தது மகிமாதான். எழுந்ததுமே நேற்றிரவு நடந்ததெல்லாம் அவள் நினைவுகளில் விரிய வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தன. இதழோரம் வெட்கச் சிரிப்புடன் கிருபாகரனை பார்த்தவளால் அது முடியவில்லை. தூங்கும் அவனை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கமாக இருந்தது. அவனின் தூக்கம் கலையாமல் மெல்ல கட்டிலை விட்டு எழுந்தவள் நெகிழ்ந்திருந்த ஆடையை சரி செய்து கொண்டிருக்கையில் காதில் நாராசமாய் அந்தப் பெயர் ஒலித்தது கிருபாகரனிடமிருந்து,

“புவனா... புவனா.. புவனா...”

இன்றும் ஏதோ குழறலாய் மூடிய கண்களை திறக்காமலே அவன் புலம்புவது அவள் காதுகளில் அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது.

அமிலம் என்பது கூட சாதாரண வார்த்தைதான். அந்த வலியை அவளால் சொல்லவும் முடியவில்லை. இதயத்தை யாரோ கத்தியால் இரண்டு துண்டுகளாக வெட்டியது போல் இருந்தது. அப்படியானால்? அப்படியானால்? புவனா என்று நினைத்து... என்... என்னை, அதற்கு மேல் யோசிக்கவும் அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவன் தொட்டயிடமெல்லாம் எரிந்தது. எங்கே அழுது, அவன் எழுந்து இன்னமும் அசிங்கமாகி விடுமோ என்ற பயத்தில், குமுறிக் கொண்டு வந்த அழுகையை கை வைத்து மூடி கட்டுப்படுத்திக் குளியலறை நோக்கி விரைந்தாள்.

எத்தனை தண்ணீர் ஊற்றியும் உடலின் அழுக்கு அப்படியே இருப்பதுபோல் தான் இருந்தது. இந்த அழுக்கை எப்படி அகற்றுவது, கடவுளே என் மீது கருணை காட்டிவிட்டாய் என்று சந்தோஷப்பட்டேனே. எத்தனை தேய்த்தும் உடலின் கறை போனதுபோல் தோன்றவில்லை. எனவே ஷவரை வேகமாக திறந்துவிட்டு அமர்ந்தாள். விழிநீர் நீரோடு கலந்து கரைந்து கொண்டிருந்தது. ‘ஐ லவ் யூ’ ‘ஐ லவ் யூ சோமச்’ கிருபாகரனின் குரல் அவளின் காதுகளில் ஒலித்து மேலும் அவளை இம்சித்தது. காதுகளை அழுந்த மூடியும் அவளுக்கு அது கேட்டுக் கொண்டே இருந்தது. எல்லாம்.. எல்லாம் புவனாவிற்குத்தான். அவளுக்கான வார்த்தையை எனக்காகவென்று எண்ணிய முட்டாள் மட சாம்பிராணி நான் தான். எத்தனை மட்டித்தனம், எத்தனை அறிவீனம், எத்தனை அசிங்கம். என் பெண்மை அசிங்கப்பட்டுவிட்டதே. இதை எப்படி சரி செய்வது? இனி கிருபாகரனின் முகத்தில் எப்படி விழிப்பது.

ஒருவேளை அவருக்கு நூறில் ஒரு சதவீதம் நேற்று நடந்தது ஞாபகம் வந்துவிட்டால் வேறு வழியில்லாமல் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டால், மனதில் புவனா, படுக்கைக்கு நான் என்ற இந்த நிலை நிரந்திரமானால் ச்.. சீ.. அதை விட வெட்கக்கேடு வேறு என்ன இருக்கிறது. அதற்கு தூக்கில் தொங்கிவிடலாம் என்று உயிரை விடும் அளவு ஒரு நொடியில் முடிவெடுத்தாள். அதை உடனே அழித்தாள். உயிர் கடவுள் கொடுத்தது, அதை அழிக்கும் உரிமையும் அவருக்கே உண்டு. அப்படியானால் இப்படி ஒரு வாழ்க்கையை, என் சுயத்தை விட்டுக் கொடுத்து வாழ வேண்டுமா? முடியவே முடியாது. அது எந்தக் காலத்திலும் நடக்காது என்ற முடிவிற்கு வந்தவள். உடனே குளியலறையிலிருந்து வெளியேறி உடைமாற்றி தயாரானாள். நல்லவேளையாக அவள் வெளிவரும் பொழுது கிருபாகரன் அங்கு இல்லை.

அவளின் மனப் போராட்டத்தில் அதிக நேரம் குளியலறையில் இருந்ததால் அவன் எழுந்து சென்றிருக்க வேண்டும் என்று யூகித்தவளுக்கு அவன் அலுவலகமே சென்றுவிட்டான் என்ற தகவல் வேலைக்காரி மூலம் தெரியவந்தது. கையில் சூடான காப்பியுடன் அவளை எதிர்கொண்ட சமையல்காரம்மா,

“ஐயா ஆபீஸ் போயிட்டாரும்மா. அம்மா உங்களுக்கு சூடா காப்பி கொடுக்கச் சொன்னாங்கம்மா” என்றதும் இன்னமும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.”ச்சே.. அழுவது எத்தனை மடத்தனம். இன்னமும் இந்த அறையில் இந்த வீட்டில் கிருபாகரனின் முகம் பார்த்து வாழ்வது மிகவும் கடினம்” என்று மனதினுள் நினைத்தவள் சமையல்காரம்மாவை அனுப்பிவிட்டு வேகமாக ஒரு பெட்டியை எடுத்து தன் துணிகளை அடுக்கலானாள். தன் செல்போன் மூலம் தந்தையுடன் தொடர்பு கொண்டு பேசினாள்.

“அப்பா, அம்மாவை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது. அவர் அதிக வேலையாக இருப்பதால் நீங்களே வந்து கூட்டிக் கொண்டு போகிறீர்களா?” என்று முடிக்கையில் அழுகையை கட்டுப்படுத்த சிரமப்பட்டு போனாள்.

அவர் என்ன நினைத்தாரோ உடனே வருவதாக் ஒப்புக் கொண்டார். மனம் சற்று நிம்மதியடைந்தது போல் தோன்றியது. ஆனால் அத்தையிடமும் மாமாவிடமும் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவள் மெல்ல காயத்ரியை தேடிச் சென்றாள்.

தோட்டத்தில் காலை நடைப்பயற்சி முடிந்து அங்கிருந்த கல் பெஞ்சில் இளைப்பாறிக் கொண்டிருந்த காயத்ரியை நெருங்கியவள்.

“அத்தை” என்று மென்மையாக அழைத்தாள்.

“வா மகிமா இப்படி உட்கார்” என்று தள்ளியமர்ந்தார் காயத்ரி.

“அத்தை.. வந்து...”

அவள் தயங்கவும்

“என்னம்மா... என்ன தயக்கம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்” என்று ஊக்கமூட்டினாள் அவர்.

“என்... நெருங்கிய தோழிக்கு திருமணமாம். இப்போதுதான் அப்பா போன் செய்தார். நான் நிச்சயமாக போக வேண்டும். அப்பா ஏதோ வேலையாக சென்னை வருகிறாராம். நீங்கள் அனுமதித்தால் அவரோடு...”

முடிக்க முடியாமல் நிறுத்தினாள். “இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது கிருபாகரனிடம் கேட்டாயா அவன் என்ன சொன்னான்?”

லேசாக கண்கள் கலங்கிவிட அது காயத்ரிக்கு தெரியாமலிருக்க தலை கவிழ்ந்தாள்.

“அவரிடம் நீங்கள் தான் சொல்ல வேண்டும் அத்தை”

வார்த்தைகளை கோர்த்து சிறிதும் தடுமாற்றமில்லாமல் பேசிவிட்டதை எண்ணி அவளுக்கே ஆச்சர்யம் தான். அவளின் முகத்தில் எதைப் படித்தாரோ அவளுக்கு தெரியவில்லை முகம் மலர,

“அதற்கென்ன மகிமா, புது மனைவியை பிரிய யாருக்குத்தான் பிடிக்கும். நான் அவனிடம் பேசுகிறேன், ஏதேனும் திட்டிவிட்டானா? கண்கள் கலங்குகிறது பார். சரியான முட்டாள் அவன்” என்று சரமாரியாக மகனை திட்ட ஆரம்பித்தவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி காத்தாள் மகிமா.

மறுபடியும் அறையினுள் சென்றவளால் கொஞ்சமும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கிருபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதி விடலாமா? நன்றாக நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் எழுத்தில் கோபத்தை காட்டலாமா? என்று யோசித்தவள். ஒரு பேப்பர் பேனா சகிதமாக அமர்ந்தாள். ஆனால் அவளால் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. கண்ணீர் தான். கேட்காமலே சென்று விட்டால் என் மனம் ஆறாது என்றுணர்ந்தவள். ஷாப்பிங் போக வேண்டும் என்று காயத்ரியிடம் சொல்லிவிட்டு காரில் கிளம்பிவிட்டாள். நல்லவேளையாக அவள் கார் ஓட்ட கற்றிருந்தாள். இல்லையேல் டிரைவர் எங்கே சென்றாள் என்று மாமியாரிடம் சொல்லிவிடக் கூடுமல்லவா.

என்னென்ன பேச வேண்டும் என்று மனதினுள் குறிப்பெடுத்துக் கொண்டே வண்டி ஒட்டியவள். ஒருவாறு பேசும் துணிவுடன் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு மேலே அறைக்குச் செல்லலானாள். வழியில் எதிர்ப்பட்ட சிலர் திருமணத்திற்கு வந்ததால் அடையாளம் தெரிந்து முகமன் தெரிவித்தனர். போலியான புன்னகை ஒன்றை பதிலாக கொடுத்தவள் வேகமாக எம்.டி என்ற பெயர் பலகையிட்ட அறையை நோக்கி விரைந்தாள். அறை வாசலில் இருந்த கேபினில் செக்கரட்டரியை காணோம்.

இந்த ஈஸ்வரி எங்கே போய்த் தொலைந்தாள் என்று ஒரு நொடி அங்கே சுற்றும் முற்றும் தேடியவள் உடனே ஏதோ தோன்ற விரைந்தாள். நான் கிருபாகரனின் மனைவி தானே நான் ஏன் அவரின் அறைக்கு செல்ல தயங்குகிறேன். இப்படி நினைத்தவள் உடனே கதவை நோக்கி விரைந்தாள். லேசாக திறந்திருந்த கதவை தட்டுவதற்காக கை வைத்தவள் சிலையென உறைந்து நின்றாள்.

உள்ளே.. உள்ளே ஈஸ்வரி கண்ணீருடன் கிருபாகரனின் மார்பில் சாய்ந்திருந்தாள்.

“நாம் பிரிந்திருக்கக் கூடாது கரன், எல்லா பிரச்சனைகளும் வேதனைகளும் அதனால தான். நீங்களும் சரி, நானும் சரி வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் கரன்” என்று உரக்கப் பேசி குலுங்கி அழுது கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. நல்லவேளை கிருபாகரன் கதவிற்கு முதுகுக்காட்டி நின்றிருந்ததால் மகிமாவை பார்க்கவில்லை. சட்டென திரும்பியவள் அந்த காட்சி தந்த அதிர்ச்சி குறையாமலே வீடு வந்து சேர்ந்தாள். எப்படி வந்தாள்? அதுவும் எந்த விபத்தும் ஏற்படாமல் எப்படி வந்தாள், அவளுக்கே ஆச்சர்யம்தான் அவள் வருவதைப் பார்த்த காயத்ரி பேசியது கூட அவள் காதுகளில் துளியும் விழவில்லை. நேராக அறைக்குள் சென்று கதவடைத்தவளுக்கு அழுகை கூட வர மறுத்தது.

ஈஸ்வரி புவனேஸ்வரி.. அவள் தான் புவனாவா? இது கூட தெரியாமல் அவளை நானே வேலைக்கு அமர்த்த கோரி சிபாரிசு செய்தேனே. கடைசியில் நான்... என் தலையில் மண் அள்ளி போட்டுக் கொண்டேனே.. இல்லையில்லை, புவனா இல்லாத போது மட்டும் கிருபாகரன் என்னோடு கொஞ்சினாரா என்ன இல்லையே. அவள் மேல் பழிபோட்டு என்ன பலன். எனக்கு தாலி கட்டியவர் மனதில் நான் இல்லையே அவள் தானே. இப்படி ஆபீஸில் புவனாவோடு சல்லாபமாக இருப்பதாக நினைத்து தான் அவர் நேற்று என்னோடு சீ... ச்சீ.. இனி அவருடன் பேசுவது என்ன, அவரை கண்ணால் பார்ப்பது கூட பாவம்.. அசிங்கம்.. இனி கொஞ்சமும் தாமதிக்க முடியாது. இந்த வீட்டில் இருந்தாலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். எங்கே அம்மா.. அம்மாவின் மடிதான் இப்போது தேவை அவளுக்கு. இப்படி நினைவுகளில் மூழ்கி திளைத்தவள். வேலைக்கார மணி வந்து கதவு தட்டியது கூட தெரியாமல் விட்டத்தை வெறித்திருந்தாள்.

“அம்மா அம்மா” சற்று உரக்க அவன் அழைத்ததும் தான் நினைவிற்கு வந்தாள்.

“எ.. என்.. என்ன மணி?”

“உங்கள் அப்பா வந்திருக்கிறார். அம்மா உங்களை கூட்டி வரச் சொன்னார்கள்” என்றது தான் தாமதம் பெட்டியோடு கீழே இறங்கிவிட்டாள்.

“அடடா உங்கள் பெண்ணை பாருங்கள், அப்பா வீடு என்றதும் பெட்டியோடு இறங்கிவிட்டாள்” என்று கிண்டலடித்த காயத்ரியை,

“நீ மட்டும் என்னவாம். இன்றும் உன் தம்பிகள் யாரேனும் வந்து நிற்கட்டுமே, எப்படி பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடுவாய் என்று எனக்கல்லவா தெரியும்” என்ற லக்ஷ்மணனோடு சேர்ந்து மூவரும் சிரித்தனர். மாமியாரின் முன் வந்து நின்றவள்,

“அத்தை நான் கிளம்பட்டுமா?”

பலகீனமான குரலில் கேட்டாள்.

“அட, என்ன அவசரம் மகிமா, அப்பா இப்போது தானே வந்தார் சாப்பாடு தயாராகிவிட்டது. சாப்பிட்டதும், நீயும் சாப்பிடு பிறகு போகலாம்” என்ற காயத்ரியிடம்.

“வேண்டாம் சம்பந்தி. இப்போதுதான் சாப்பிட்டேன் கொஞ்சம் அவசரம் ஊரில் வேலை இருக்கிறது, நாங்கள் கிளம்புறோம்”.

அப்பாவின் பதில் அவளுக்கு நிம்மதி அளித்தது. இன்னமும் கொஞ்ச நேரம் அந்த வீட்டில் இருந்தாலும் உடைந்து அழுது, ஒரு பெரிய களேபரமாகிவிடும் என்பது அவளுக்கு சர்வ நிச்சயம்.

“ஆமாம் அத்தை, அப்பா சொல்வதும் சரிதான் அவருக்கு அங்கே அதிக வேலை இருக்கிறது என்று சொல்லி, என்னைத் தயாராக இருக்கச் சொன்னார்”

“ஓ..” என்று யோசித்த லக்ஷ்மணன்.

“சரி சம்பந்தி, உங்கள் வேலை கெடுவதாக இருந்தால் நீங்கள் கிளம்பலாம். ஆனால் அடுத்த முறை வரும்பொழுது ஒரு நாள் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்”

“நிச்சயமாக சம்பந்தி” என்றவர் பொதுவான வணக்கத்தோடு வெளியே காரை நோக்கி சென்றார்.

மாமியாரின் அருகில் சென்றவள், மறுபடியும் ”நான் கிளம்புறேன் அத்தை... அவர்...” என்று முடிக்க முடியாமல் நிறுத்தினாள். அவளை புரிந்து கொண்ட காயத்ரி மென்மையாக அவளின் கைப்பற்றி,

“நான் அவனிடம் பேசிவிட்டேன் மகிமா. தோழியின் திருமணத்திற்கு நீ போவதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையாம். அதையே நினைத்து மனதை வருத்திக் கொள்ளாமல் நிம்மதியாக உன் தோழியின் திருமணத்தில் கலந்து கொள்” என்று முடித்த போது மகிமாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல் கொட்டியது

“அட, என்னம்மா நீ, மூன்று நாள் ஊருக்கு போவதற்காகவா இப்படி அழுகிறாய்”

“அட, என்னம்மா நீ, கணவனை பிரிந்து முதல் முறையாக போகும்போது எல்லாப் பெண்களும் அழுவார்கள் தானே. நீ கூடத்தான் முதன்முதலில் சீமந்தம் செய்து, உன்னை அழைத்துச் சென்ற போது என் கையை பிடித்துக் கொண்டு எப்படி அழுதாய்” என்று பேசி நிலைமையை சகஜமாக்கினர்.
 
7​

எப்போதும் அப்பாவுடன் முன் சீட்டில் அமர, கவிதாவும் மகிமாவும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் இன்று பின் சீட்டில் ஏறி அமர்ந்த மகிமாவை வித்தியாசமாக பார்த்தார் சிவநேசன்

வீட்டிற்குள் நுழைந்ததுமே சம்பந்தி அவர்கள்.

“என்றைக்கு சம்பந்தி திருமணம்” என்று கேட்டபோது கொஞ்சம் தடுமாறித்தான் போனார் ஆனால் பதில் சொல்லவில்லை.

“தோழிக்கு திருமணம், ஊருக்கு போக வேண்டுமென்று ரொம்பவும் சந்தோஷமாக கிளம்பிக் கொண்டிருக்கிறாள் மகிமா” என்ற காயத்ரியின் பேச்சைக் கேட்டு ஏதோ புரிந்தார் போல் அமைதி காத்தார்.

“ஏதோ வேலை விஷயமாக இங்கு வந்ததாக மகிமா கூறினாள், அது நல்லபடியாக முடிந்ததா?’ என்ற கேள்விக்கும் லேசாக ஆம் என்பது போல் தலையாட்டி வைத்தார்.

இப்போது மகிமா கண்மூடி சாய்ந்திருக்கும் இந்த நிலையை பார்க்கும்பொழுது. ஏதோ பிரச்சனை என்பது சர்வநிச்சயம். ஆனால் அதை என்னவென்று கேட்பது. இது சொந்த விஷயமென்று மகிமா சொல்லிவிட்டால், கூடாது கூடாது இதில் அவசரப்படக் கூடாது. வீட்டில் உமாவிடம் சொல்லிவிட்டால் அவள் கேட்டுக் கொள்வாள். அம்மாவிடம் பெண்கள் மனம் விட்டுப் பேசுவார்கள்.

உமா வாசலிலேயே இவர்களை எதிர் கொண்டார். எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் மகிமா வீட்டிற்குள் வந்தது அவரை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அதை விடவும் அவள் கையில் இருந்த பெரிய விஐபி சூட்கேஸ் அவருக்கு பயத்தை அளித்தது என்று கூட சொல்லலாம். யோசனையாய் கணவரைப் பார்க்க, அவரோ விட்டத்தை வெறித்துவிட்டு உள்ளே சென்றார். அப்போதே மண்டைக்குள் அபாயமணி அடித்தது. இப்போது எதுவும் பேச வேண்டாமென்று முடிவு செய்தவர். இருவருக்குமான சிற்றுண்டியை கொடுத்துவிட்டு, மகள் படுக்கச் சென்றதும், கணவரை தேடி தோட்டத்திற்கு சென்றார்.

தேங்காய் குலைகளின் எண்ணிக்கையை சொல்லிக் கொண்டிருந்தார் கணக்குபிள்ளை சுந்தரம். ஆனால் அவரது கவனம் அதில் இல்லை என்பதை அவர் முகம் பார்த்துப் புரிந்து கொண்ட சுந்தரம் அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டார். இதை பார்த்துக் கொண்டே அருகில் வந்த உமாவின் கண்ணசைவில், சுந்தரம் அங்கிருந்து சென்றுவிட்டார். கணவரை நெருங்கியவர், மென்மையாக அவர் தோள் தொட்டார். தொடுகையை உணர்ந்து நடப்பிற்கு வந்தவர் திரும்பவும்,

“என்னங்க ஆச்சு, ஊரிலிருந்து வந்த நீங்களும் சரியில்லை, மகியும் சரியில்லை அப்படி என்னதான் நடந்தது”

“தெரியலயே உமா எத்தனை யோசித்தும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ பெரிய பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது என்ன?”

“சின்ன சின்ன விஷயங்களுக்கு நம் பெண் இது போல் பெரிய முடிவு எடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. அப்படி இருக்க, இந்த முடிவு எதனால்? எத்தனை யோசித்தும் புரியவே இல்லை எனக்கு.

கவலை அதிகமான முகத்துடன் தன்னைத் தானே அவர் வருத்திக் கொள்வது புரிய,

“என்னங்க இது, அவள் எதற்காக இங்கே வந்தாள் என்று நிச்சயமாய் தெரியாத போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும். ஒருவேளை உண்மையிலேயே நம்மைப் பார்க்கும் ஆசை வந்திருக்கலாம். வெறுமனே போக வேண்டுமென்று சொன்னால் அனுப்பமாட்டார்களோ என்று பயந்து தோழிக்கு திருமணம் என்ற பொய்யையும் சொல்லியிருக்கலாம். முதலில் நீங்கள் தைரியமாக இருங்கள். நான் விசாரிக்கிறேன்” என்று உமா பேசியதும் தான் லேசான தெளிவு அவர் முகத்தில தெரிந்தது. ஆனால் அதற்கு ஆயுள் குறைவு என்று பாவம் அவருக்கு தெரியவில்லை.

ஏதோ பெயருக்கு சாப்பிட்டுவிட்டு தன் அறையில் விட்டத்தை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் மகிமா. என்னவெல்லாம் நடந்துவிட்டது. நேற்று இரவுஅவருடன் எத்தனை இன்பமாக இருந்தது. இன்று இப்படி தனிமையில் மனம் முழுக்க புழுக்கமாய் கடவுளின் திட்டம் தான் என்ன. என்னை படைக்கும் பொழுது, அந்த பிரம்மதேவன் கோபமாக இருந்தாரோ. கோபத்தில் ஏதேதோ கிறுக்கிவிட்டாரோ? கண்ணீர் கசிந்து வழிந்தோடியது.

அவளின் களையிழந்த முகமும், கண்ணீரும் வெறித்த பார்வையும் மனதால் படம்பிடித்த வண்ணம் உள்ளே நுழைந்தாள் உமா.

“என்ன மகி ஏதோ யோசனையாய்?”

சட்டென நடப்பிற்கு வந்தவள் வேகமாக கண்ணீரைத் துடைத்துவிட்டு,

“ஒன்றுமில்லை அம்மா .நான் இல்லாமல் அவர் எப்படி சமாளிப்பார் என்று யோசித்தேன்..”

ஏதோ மழுப்பலாய் பேசி முடித்தாள்.

“ஏன் ஆறு மாதத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இருப்பார்” குறும்போடு கேட்டார் உமா

அப்படியே இருப்பது தானே என்னுள் வலியை ஏற்படுத்துகிறது என்று மனதினுள் பேசியவள்.

“போங்கம்மா” என்று வெட்கப்படுவது போல் முகத்தை கவிழ்த்துக் கொண்டாள். நடிப்பு ஆரம்பமாகிவிட்டது. இத்தனை நாள் புகுந்த வீட்டில் தான் நடந்தது. இன்று பிறந்த வீட்டிலும் ஆரம்பிக்கிறது. இன்னமும் என்னவெல்லாம் நடக்குமோ என்று யோசித்தவளை அதிகமாக கவலைப்படுத்தாமல் உமா அங்கிருத்து அகன்றார்.

“என்ன உமா பேசினியா, ஏதேனும் தெரிந்ததா?” என்று ஆர்வமாய் கேட்ட சிவநேசனை, ஒரு வினாடி நிமிர்ந்து பார்த்த உமா லேசான புன்னகையை இதழோரம் செயற்கையாய் ஏற்படுத்திக் கொண்டு

“எல்லாம் பேசியாச்சு, எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாமல் மனதை வருத்திக் கொள்ளாமல் இருந்தாலே போதும்” என்று விளக்கியதும் தான் அவர் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

“அப்பாடா, இப்போது தான் என் மனதிலிருந்த பாரம் இறங்கியது உமா, நீ சொன்னது உண்மைதானே. காரில் வரும் பொழுது கூட பிள்ளை முகத்தில கவலை படர்ந்திருந்தது. அதனாலத்தான் கேட்கிறேன். முதல் தடவையா புருஷனை விட்டுட்டு தனியா வர கஷ்டமா இருந்திருக்கும். அதுக்கெல்லாம் இப்படி மனசைப் போட்டு குழப்பிப்பாங்களா. நீங்க கவலைப்பட எதுவுமே இல்லை. நீங்க நிம்மதியா இருக்கனும் அதுதான் வேணும்” என்று பேசிப் பேசியே சிவநேசனின் கவலையைப் போக்கினார். தன்னுள் அதைவிட பல மடங்கு சுமையை ஏற்றிக் கொண்டார்.

ஒரு பெண்ணின் உள்ளம் மற்றொரு பெண்ணிற்குத் தானே தெரியும். அதுவும் பெற்ற தாய்க்கு மகளின் உணர்வுகள் புரியாமல் இருக்குமா என்ன? எல்லாம் புரிந்தது, அவள் முகத்தில் படிந்திருக்கும் கவலை, வெட்கம் என்று சொல்லிக் கொண்டு தலை கவிழ்ந்து அவள் அழும் நிலை, இப்படி எல்லாமே முரண்பாடாகத் தான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும் அது தான் புரியவில்லை. இன்று மகிமா பேசியதை வைத்துப் பார்த்தால் எப்படியும் அவள் வாய்வழி உண்மை வரப் போவதில்லை என்பது உறுதி. அவளின் கண்களில் கணவனைப் பிரிந்த துன்பம் தெரிகிறது. அப்படியானால் அது காதல் தான், இத்தனை காதலை வைத்துக் கொண்டு எதற்காக பிரிந்து வர வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளை ஏதேனும் தவறு.. இதை எப்படி கண்டுபிடிப்பது,உள்ளும் புறமும் குழம்பி நின்றார் உமா.
 
8​

நேரமும் காலமும் யாருக்காகவும் நிற்பதில்லை. மகிமா தாய் வீடு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில் தினமும் கிருபாகரன் தொலைபேசி மூலம் மாமானரிடமோ, மாமியாரிடமோ பேசி மகிமாவின் நலனைப் பற்றி தெரிந்து கொள்வான். “மகிமாவிடம் பேசுங்களேன் மாப்பிள்ளை” என்று இவர்கள் கேட்கும் பொழுதெல்லாம்,

“அவளின் செல்போனில் தினமும் நான்கு முறை பேசத்தான் செய்கிறேன் மாமா, இருப்பினும் உங்களிடமும் கேட்டால் தான் எனக்கு முழு நிம்மதி அதனால்தான்” என்று அக்கறையாய் பேசும் மாப்பிள்ளையிடம் வேறு எதைக் கேட்பது.

காயத்ரியும், லக்ஷ்மணனும் அவ்வப்போது மகிமாவுடன் பேசுவதுண்டு. அப்பொழுது எல்லாம், “நீ இல்லாமல் வீடே சரியில்லை மகிமா. ஏன் கிருபாகரனும்தான். ஆனால் உன்னை இங்கே வரச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்று உறுதியாக எங்களிடம் சொல்லிவிட்டான்”

அவர்களிடம் வருகிறேன் என்றும் சொல்ல முடியாமல், வரமாட்டேன் என்றும் சொல்ல முடியாமல் மௌனம் காப்பாள். போதாதற்கு வற்புறுத்த வேண்டாம் என்று கிருபாகரன் சொன்னது வேறு அடிமனத்தைக் குடைந்தது. வலி, வலி... உடல் மனம் என்று எல்லாம் வலி.. கிருபாகரனை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் தன்னுள்ளேயே புழுங்கி துடியாய் துடித்தாள். சரியாக சாப்பிடாமல், தூங்காமல் நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே போகும் பெண்ணை பார்க்க உமாவிற்கும் சிவநேசனிற்கும் உள்ளம் பதறியது. ஆனால் இருவரிடம் கேட்டாலும் யார் மீதும் தவறு இருப்பது போலவே காட்ட மறுக்கிறார்கள். இது தான் பிரச்சனை என்று தெரிந்தால் தானே அதற்கான தீர்வை யோசிப்பது, பிரச்சனையே இல்லை என்று நடிக்கும் இருவரிடமும் எப்படி மேற்கொண்டு பேசுவது என்பது புரியாமல் இரு தரப்பு பெரியவர்களும் குழம்பினார்கள்.

இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. எப்பொழுதும் போல் மதிய வேளையில் பம்ப்செட்டிற்கு சென்ற மகிமா மயங்கி விழுந்துவிட்டதாக செய்தி வர, உமா என்னவோ ஏதோ வென்று பதறியடித்துக் கொண்டு ஓடினார். ஆனால் அங்கே அவர் காதிற்கு இனிய செய்தியே கிடைத்தது. மகிமா தாய்மையடைந்து விட்டாள் என்று. ஆனால் இதற்கு சந்தோஷப்படுவதா இல்லையா என்பது தான் குழப்பமாகவே இருந்தது.

மயக்கத்திலிருந்து எழுந்த மகிமாவோ அந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தாளே ஒழிய மகிழ்ந்ததாய் உமாவிற்குத் தோன்றவில்லை. அங்கே வைத்து எதையும் பேச வேண்டாமென்று தோன்ற, அவசரத்திற்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிந்து விட்டு, கைத்தாங்கலாய் மகிமாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

அறையின் கட்டிலில் அமர்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த மகளை எது கேட்கவும் பயமாக இருந்தது. இத்தனை பெரிய சந்தோஷமான விஷயத்தை சம்பந்திகளிடமிருந்து மறைப்பதும் தவறுதானே என்று யோசித்தவர். ஒருவாறு மனதில் உறுதியை வரவழைத்துக் கொண்டு தொலைபேசி மூலம் அவர்களுக்கு செய்தியை தெரியப்படுத்தினார். போனிலேயே அவர்களது மகிழ்ச்சி வெளிப்படையாய் தெரிந்ததுமில்லாமல் மறுநாளே வீட்டிற்கும் வந்திறங்கி விட்டனர். கூடை கூடையாய் பழம், மாங்காய், பூ..இத்யாதி இத்யாதி என்று ஏகப்பட்டதை வாங்கி வந்து மருமகளின் முன் குவித்தனர்.

சந்தோஷம் என்பது துளியும் இல்லை என்றாலும் மூத்த தலைமுறையினர் மனம் நோகக்கூடாது என்பதற்காக மகிழ்வது போல் நடித்தாள் மகிமா.

“என் தங்கம்...” என்று திருஷ்டி முறித்தபடி அருகில் அமர்ந்த காயத்ரி.

“என் நோயெல்லாம் போன இடம் தெரியலடியம்மா என்னவோ பத்து வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போன்னு பார்த்து கிருபா வேற ஏதோ மீட்டிங்குன்னு வெளியூர் போயிருக்கான். ஆனாலும் செய்தியை சொல்லிவிட்டோம். கேட்டதும் சந்தோஷத்துல பேச்சு மூச்சு இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சுதான் நிஜமாவான்னு கேட்டான். ஆமாண்டான்னு நான் சொல்லும் பொழுதே அந்த செக்கரட்டரி புவனா வந்து கூப்பிட்டிருப்பாள் போல அவள் குரல் போலதான் இருந்தது. அப்புறம் பேசுறேன்மான்னு சொல்லி வெச்சுட்டான்” என்று குறைப்பட்ட காயத்ரியை அடிபட்ட மனதுடன் பார்த்தாள் மகிமா.

அவர் சந்தோஷத்தில் உறையவில்லை. அத்தை அதிர்ச்சியில் உறைந்திருப்பார், கூடவே தான் இருக்கிறாளே புவனா. அவள் இருக்கும் பொழுது என் சம்பந்தப்பட்ட செய்திகளெல்லாம் அவருக்கு தேவையற்றவைதானே, என்று மனதினுள் நினைத்தவள், உள்ளேயே அழுதும் தீர்த்தாள். இன்னமும் கடவுள் அவளுக்கு எத்தனை துன்பங்களை உருவாக்கி இருக்கிறாரோ எல்லாம் படத்தானே வேண்டும். கெடுதலிலும் ஒரு நன்மையை கிருபாவின் உயிர் என்னுள். அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே என் காலத்தைக் கழித்துவிடுவேன். இது நான் கிருபாவின் மேல் கொண்ட காதலின் அடையாளம் அல்லவா. அதை என்னால் எப்படி வெறுக்க முடியும்.

கிருபாவிற்கு இந்த விபரம் தெரிந்துவிட்டதே அவர் என்ன நினைப்பார். அன்று நடந்தது அவர் நினைவில் இருக்கிறதோ இல்லையோ? ஒருவேளை இது.. இது.. யார் குழந்தை? என்று கேட்டுவிட்டால் அய்யோ!... என் போன்ற நிலை இந்த உலகில் எந்த ஒரு பெண்ணிற்கும் வந்துவிடக் கூடாது. கூடுமானவரை அவர் இங்கு வராமல் இருந்தாலே போதும். அவர் முகத்தைப் பார்க்க எனக்கு துளியும் விருப்பம் இல்லை என்று நினைத்தவளை விதி பார்த்து சிரித்தது. அப்படி இலகுவாகவிட்டுவிட்டால் விதி வலியது என்ற கூற்றிற்கு பொருள் இருக்காது தானே.
 
9​

மாமியார் மாமனார் வந்து போன மூன்றாம் நாள் மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த மகிமாவிடம், கவிதா மூச்சிரைக்க வந்து நின்றாள்.

“என்ன கவிதா! இத்தனை அவசரமாக ஓடிவரும் அளவிற்கு அப்படியென்ன மிக முக்கியச் செய்தி?” என்று கேட்டவளிடம்,

“மா...மா.. மாமா வந்திருக்கிறார், அம்மா உன்னை கையோடு அழைத்து வரச் சொன்னார்கள்”

வேக மூச்சுக்களிடையே திக்கத் திணறி பேசி முடித்தாள் கவிதா.

சப்த நாடிகளும் அடங்கிவிட்டது மகிமாவிற்கு. சுவாசிக்கவும் மறந்து விழி விரித்து நின்றவளிடம்,

“அடடா, மாமா வந்துட்டாருன்னதும் சந்தோஷத்துல உறைஞ்சு நின்னுட்டியே. இப்படியே நின்னா உனக்கு அவரைப் பார்க்க இஷ்டமில்லைன்னு திரும்பிப் போயிடப் போறாரு” என்று சிரித்துக் கொண்டே பேசிய கவிதாவிடம் என்ன சொல்வது என்று புரியாமல்,

“நீ போ கவிதா நான் பின்னோடு வருகிறேன்” என்று விட்டு கண்களை மூடி வேகமாக பெரிய மூச்சுக்கள் எடுத்து தன் இதயத்துடிப்பை சமன்படுத்த முனைந்தாள். முழுதாக முடியவில்லை என்றாலும், ஓரளவு சமன்ப்பட்டதும் மெல்ல படி இறங்கலானாள்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது கிருபாவை பார்த்து அவர் குரலைக் கேட்டு. எப்படி இருப்பார், நான் அவரை விட்டு வந்த சந்தோஷத்தில் கொஞ்சம் உடல் பருமனாகியிருப்பாரோ, விட்டது சனியன் என்ற நிம்மதியில் அவரின் முகம் அதிக களையாக இருக்குமோ? இப்படி ஏதேதோ யோசித்துக் கொண்டே கூடத்திற்கு வந்தவள் சோபாவில் அமர்ந்திருந்த கணவனின் கால்களை மட்டுமே பார்த்தாள் எனலாம். அதைத் தாண்டி அவன் முகம் பார்க்க அவளது மனம் அனுமதிக்கவில்லை. ஏதோ ஒரு பொருளை கீழே தொலைத்துவிட்டு தேடுவதைத் தன் முதல் கடமைபோல் நிலம் பார்த்து நின்ற மகிமாவிடம்,

“மகி மாப்பிள்ளையை உள்ளே கூட்டிப் போய் குளிக்கச் சொல்லம்மா, பிரயாண களைப்புத் தீரும். குளிச்சிட்டு வந்தீங்கன்னா பலகாரம் சாப்பிடலாம் மாப்பிள்ளை” என்ற சிவநேசனின் வார்த்தைக்கு கட்டுபட்டுபவன் போல்

“சரிங்க மாமா...” என்று உடனே எழுந்து கொண்டான். அவனின் குரல் அவளுள் என்னவோ செய்தது. ஆனால் எதுவும் பேச மனமின்றி படிகளில் முன்னே ஏறி அவனுக்கு வழி காட்டுவதுபோல் செல்ல,அவளை பின் தொடர்ந்தான்.

அறையினுள் சென்றதுமே கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது மகிமாவிற்கு. எந்த ஒரு பிடிப்புமில்லாமல் நிற்பது நிச்சயம் சாத்தியப்படாது என்பது புரிய, கதவருகில் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டாள். ஏதோ பேச வாய் திறந்தால், வெறும் காற்றுதான் வந்ததே தவிர ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஒருவாறு மென்று விழுங்கி,

“குளியலறை அந்தப் பக்கம்” என்று சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டாள். அவளின் எந்த வார்த்தையையும் எதிர்பார்க்காமல் முதலிலேயே கட்டிலில் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸை வைத்துவிட்டு அதிலிருந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தான். அவளின் குரல் கேட்டு நிமிர்ந்தவன், இப்பொழுதும் அவள் நிலம் பார்த்தே நின்றாள்.

“எப்படி இருக்கிறாய் மகிமா?” என்ற அவனது மெல்லிய விசாரிப்பில் சட்டென விழி உயர்த்தி பார்த்தவளது கண்கள் தாமாக கலங்கின.

சேச்சே.. இவர் முன் அழுவதா! கூடாது கூடாது என்று தன்னை கட்டுபட்டுத்திக் கொண்டவள். கண்ணீர் அவனுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மறுபடியும் தலை கவிழ்ந்தாள். அவர் கேட்ட கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டுமே என்பது உறைக்க,

“ம்...” என்ற பதிலை மட்டும் கூறிவிட்டாளே தவிர, அது அவளுக்கே கேட்டதா என்று புரியவில்லை. ஆனால் அதற்குள் கிருபாகரன் குளியலறைக்குள் புகுந்து கதவடைக்கும் சத்தம் கேட்டது. அப்பாடா என்ற நிம்மதி மனதினுள் எழுந்தது. அப்பொழுதுதான் அவனது தோற்றம் குறித்து ஏதோ சிந்தனை அவளுள் எழுந்தது. கொஞ்சமாய் இளைத்திருக்கிறாரே, முகத்தில் கூட முன்பிருந்த அந்த தேஜஸ், கண்களின் ஒளி, இப்படி எதுவும் இல்லையே ஏன்.. ஏன்.. ஒருவேளை நான் தாயாகப் போவது புவனாவிற்கு தெரிந்து ஏதேனும் தகராறு செய்தாளா? அதில் வந்த சோகமா? பேசாமல் இது உங்கள் குழந்தை இல்லை, நீங்கள் மனம் போல் வாழலாம் என்று சொல்லிவிடவா? அச்சச்சோ.. என் வயற்றில் உதித்த ஒரே பாவத்திற்காக அந்த பிஞ்சுக் குழந்தை களங்கப்பட வேண்டுமா? கூடாது கூடாது. இப்படி ஏதேதோ யோசித்துக் கொண்டு நின்றவள், கணவன் குளித்து விட்டு வந்ததைக் கூட கவனிக்கவில்லை. குளிக்க போகும் முன் நின்ற அதே இடத்தில் இருந்த மகிமாவை வினோதமாகப் பார்த்தவன்.

“எத்தனை நேரம் இப்படி நின்று கொண்டே இருப்பதாய் உத்தேசம்” என்று கேட்டதும் தான் நடப்பிற்கு வந்தாள்.

“வா, வந்து உட்கார்” என்று கட்டிலைக் காட்டியவனிடம் மறுப்பாய் தலையசைத்தாள் மகிமா.

“சரி உன் இஷ்டம், நான் கீழே போகிறேன், வருவதானால் வரலாம்”

பேசியபடியே கதவைத் திறந்து வெளியேறியவனை பின் தொடர்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. போகாவிட்டால் பெற்றோரின் கேள்விக்கு வேறு பதில் சொல்ல வேண்டுமே அதற்கு பல்லைக் கடித்துக் கொண்டு நடப்பதை சகிப்பதே மேல்.

கீழே அவனுக்காக சுடச்சுட பஜ்ஜியும். கேசரியும் தயாராக இருந்தது.

“நீ மாப்பிள்ளைக்கு வேண்டியதை பார்த்து வைம்மா, நான் காப்பி கலந்து வருகிறேன்” என்று இருவரையும் தனிமையில் விட்டுச்சென்ற தாயை மனதினுள் நன்றாகத் திட்டினாள்.

இயந்திரமாய் இரண்டு பஜ்ஜியையும் தேங்காய் சட்னியையும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் நீட்டியவளிடம்

“முதலில் இனிப்பு கொடுக்கலாமே” என்ற கணவனின் குரலில் ஏதோ ஒன்று மறைந்திருப்பது புரிந்தது

இல்லை இல்லை இந்த காதல் கொண்ட மனமே இப்படித்தான் பைத்தியமாய் யோசிக்கும் என்று அந்த யோசனையை பின் தள்ளி மற்றொரு தட்டில் கேசரி வைத்து அவனிடம் நகர்த்தினாள். சந்தோஷமாக உண்ணத் தொடங்கிய கணவனை, அவன் பார்த்துவிடாத வண்ணம் பார்த்து ரசித்தாள். இவைதானே அவளது வாழ்வில் கடைசிவரை அவள் நினைவுகளில் புதைந்துவிடப் போகிற புகைப்படங்கள். கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

சாப்பிட்டு முடித்தவன் உமா கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு,

“நீயும் காப்பி குடித்துவிட்டு தயாராகிவிடு மகி, நாம் வெளியே செல்லலாம். அத்தை நான் மகிமாவுடன் வெளியே போகலாம் தானே அல்லது வேறு ஏதேனும் முக்கிய வேலை இருக்கிறதா?”

“அதெல்லாம் இல்லை தம்பி, நீங்க போயிட்டு வாங்க” என்று வாயெல்லாம் பல்லாக பேசும் தாயைப் பார்க்க பார்க்க கோபமாக வந்தது.

“அப்போ சீக்கிரமாக கிளம்பு மகி” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் படிகளில் ஏறினான்.

எத்தனை சாமர்த்தியம், அம்மாவின் முன்னிலையில் கூறிவிட்டாள் என்னால் மறுக்க முடியாது அப்படித்தானே. ஒருவேளை தனியே கூட்டிப்போய் யாருதடி இந்தக் குழந்தை என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. உண்மையை சொன்னால் நம்புவாரா, இதற்கு யாரை சாட்சிக்கு அழைக்க முடியும். அவராக அன்று நடந்ததை நினைவில் கொண்டு வந்தால்தான் என் மானம் காக்கப்படும். கடவுளே என்னுடன் துணையிரு என்ற வேண்டுதலுடனேயே அவனோடு காரில் ஏறினாள்.

கார் நேரே ஒரு பெரிய மகப்பேறு மருத்துவமனையில் சென்று நின்றது. உடனே மகிமாவிற்கு அபாய மணி அடித்தது. இப்படி நயமாக பேசி இங்கே அழைத்து வந்தது கருகலைப்பிற்காகவா? அப்படித்தான் இருக்க வேண்டும். அவருடைய குழந்தை என் வயற்றில் வளர்ந்தால் விவாகரத்து கிடைப்பது கொஞ்சம் சிரமமாகிவிடும். புவனாவும் இதை ஏற்க மாட்டாள். குடும்பத்தில் உள்ளவர்களும் குழந்தைக்காகவேனும் முடிவை மாற்றிக் கொள் என்று அவனை மூளைச் சலவை செய்வார்கள்.

இதற்கெல்லாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்தாரோ? அய்யோ என் குழந்தை, இதை நான் அழிக்க விடமாட்டேன். அவர் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எனக்கு அதில் எந்த கவலையும் இல்லை, என் குழந்தை எனக்கு வேண்டும், என்று மனதினுள் குமுறியவளை,

“இறங்கு மகி” என்ற கிருபாகரனின் குரல் இன்னமும் ஆவேசப்படுத்தியது.

“இல்லை நான் இறங்க மாட்டேன் எனக்கு என் குழந்தை வேண்டும். இதை கலைக்க விடமாட்டேன். முடியாது நான் வர முடியாது” என்று ஆவேசமாய் கத்தியவளை அதிர்ச்சியோடு நோக்கினான் கிருபாகரன். சில நிமிடம் என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. உடனே காரினுள் அமர்ந்து கதவைச் சாத்தி, கண்ணாடிகளை மேலேற்றி, ஏசியை ஆன் செய்தான். அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து அவளிடம் நீட்டினான்.

வேக மூச்சுக்களோடு இரு கைகளையும் வயிற்றின் மேல் வைத்து அழுந்த பிடித்துக் கொண்டு வெளிறிய முகத்துடன் அமர்ந்திருந்தவளை பார்க்க அவனுக்கே பாவமாகத் தான் இருந்தது.

“முதலில் இந்த தண்ணீரைக் குடி” என்றவனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“சரி, தண்ணீர் வேண்டாமென்றால் பரவாயில்லை. முதலில் உன் பயத்தை அகற்று. நம் இங்கு வந்தது கரு கலைப்பிற்காக இல்லை” என்று அவன் முடிக்கும் முன்னே,

“இல்லை, நான் நம்ப மாட்டேன், என் குழந்தை. இது என் குழந்தை. நீங்கள் வேண்டுமானால் உங்கள் புவனாவை மணந்து கொள்ளுங்கள். ஆயிரம் குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள் என் வாழ்வின் ஆதாரமான என் குழந்தையை விட்டுவிடுங்கள். தாலி கட்டிய பாவத்திற்காக வேணும் என்னை விட்டுவிடுங்கள்” என்ற அழுகையினுடே வெடித்து குமுறியவள் இறுதியில் மயங்கி சரிந்தாள்.

வாடிய கொடி ஒன்று பற்றுதலுக்காக தன் மேல் சாய்ந்தது போல் தோன்றியது கிருபாகரனுக்கு. எத்தனை மனக்கஷ்டம், உடல்கேடு, வலிகள் எல்லாம் என்னால்தானே. என் இருதயத்தில் இருந்து இம்சித்த புவனாவால் தானே, எல்லாம் விதி என்பதா அல்லது கடவுளின் விளையாட்டு என்பதா? நான் மட்டும் புவனாவை சந்தித்திராமல் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும். என் கையில் கிடைத்த மாணிக்கக் கல்லை கூழாங்கல் என்று தவறவிடும் நிலைமை ஏற்பட்டிருக்குமா? இதற்கெல்லாம் எது காரணம், ஒருவேளை ஆன்மீகம் சொல்வது போல் பூர்வ ஜென்ம பாவங்களா? முன்னோரின் பாவச் சுமைகளா? எதுவென்றாலும் புழுவைப் போல் துடிதுடிப்பது இந்த அப்பாவி பெண்ணா? இது என்ன நியாயம் என்று தன்னைதானே கேட்டுக் கொண்டான் கிருபாகரன்.
 
10​

மகிமா மயக்கத்திலிருந்து எழுந்தவுடன் முதலில் பார்த்தது உமாவைத்தான்.

“அம்மா” என்ற விசும்பலுடன் அவரின் தோள்களில் தஞ்சமடைந்தாள். ஒரு தாய்க்கல்லவா தெரியும் தன் குழந்தையைப் பற்றி, அவளை தன்னோடு சேர்த்தணைத்து ஆறுதல்படுத்தினார். சில நொடிகளில் சட்டென விலகியவள்.

“அம்மா அவர்.. அவர்...” என்ற குரலில் அதிக நடுக்கத்தை உணர்ந்த உமா

“தம்பி அப்போதே சென்றுவிட்டார் மகிமா.. ஏதோ முக்கிய வேலையாம்” என்ற அம்மாவின் பதிலில் சற்றே சமாதானமடைந்தாள்.

தன் நிலையை நினைத்து அவளுக்கே பரிதாபமாக இருந்தது. இது போன்ற சமயங்களில் பெண்கள் தன் கணவனுடன் இருக்கவேண்டுமென்று தான் விரும்புவார்கள். ஆனால் நான், அவர் போக வேண்டுமென்று வேண்டுகிறேன். என் இந்த நிலை, என் விரோதிக்கும் வரக்கூடாது.

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. ஆறு மாதங்கள் வேகமாக உருண்டோடியது என்று சொல்ல முடியாது. கவலை அதிகமாக இருந்தால் நேரம் பொறுமையாகத் தான் செல்லும். ஆனால் பொறுமையாக சென்றாலும் நேரம் செல்லத்தானே செய்கிறது. கண்ணீருடனும், கவலையுடனும் ஆறு மாதங்களை தள்ளிவிட்டாள் மகிமா.

ஒவ்வொரு மாதமும் டாக்டர் எத்தனையோ எடுத்துச் சொல்லிவிட்டார்.

“நீ இப்படி உடம்பைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது நல்லதல்ல, உன் குழந்தையைப் பாதிக்கும்”

“அதுதான் நீங்கள் டானிக் கொடுக்கிறீர்களே டாக்டர்”

“மருந்தும் மாத்திரையும் எதுவும் செய்ய முடியாதம்மா, உன் மனம் அதற்கு ஒத்துழைக்கும் வரையில்”

மனதிற்கு என்ன டாக்டர், நான் நன்றாகதான் இருக்கிறேன்

“உன் டெஸ்ட் ரிசல்ட் அப்படிச் சொல்லவில்லையே மகிமா. அத்துடன் என் கண்களும் ஒன்றும் மங்கிவிடவில்லை. இங்கு வரும் அத்தனை பெண்களும் தான் தாய்மையடைந்து விட்டோம் என்ற பூரிப்பில் மாதா மாதம் எடையை ஏற்றிக் கொண்டே போகிறார்கள். நீயானால் எடை குறைந்து கொண்டே போகிறாய். உன் கணவர் எங்கே? நான் அவருடன் பேச வேண்டும்”

கணவர் என்றதும் முகம் வெளிறிவிட்டது மகிமாவிற்கு.

“அவர்.. அவர்’.. வெளிநாட்டில் இருக்கிறார் டாக்டர்”

“வெளிநாட்டிலா? இப்படிப்பட்ட நேரத்தில் மனைவியுடன் இருக்காமல் பணத்தின் பின் ஓடுகிறாரா?”

“ஆ.. ஆ.. ஆமாம் டாக்டர்”

அவளின் படபடப்பும் வெளிறிய முகமும் டாக்டருக்கு எதையோ உணர்த்த

“சரி, நீ போய் உன் அம்மாவை அனுப்பு அவர்களிடம் தனியாக பேச வேண்டும்”

“எதுவானாலும் என்னிடமே சொல்லுங்களேன்”

“எதை யாரிடம் சொல்ல வேண்டுமோ அதை அவர்களிடம் தான் சொல்ல வேண்டும். நீ வெளியே சென்று உன் அம்மாவை உள்ளே அனுப்பு” என்று உத்தரவிடும் தொனியில் டாக்டரம்மா பேசியதும் வேறு வழியின்றி உமாவை உள்ளே அனுப்பினாள் மகிமா.
 

New Threads

Top Bottom