- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 23
மாலை மயங்கும் நேரத்தில்! இளமஞ்சள் நிறக் கதிர்களை ஆதவன் அள்ளி இறைக்கும் வேளையில் ! திகழொளி தனது பட்டுப் பாவடையை மடித்து அமர்ந்து ,தங்கள் வீட்டு வாசலில் அழகான ரங்கோலிப் போட்டுக் கொண்டு இருந்தாள்.
அருகில் அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் அவள் வரைந்து முடித்த வளைவு, நெளிவுகளுக்கு வண்ணப் பொடிகளைத் தூவிக் கொண்டு இருந்தான்.
அன்று கார்த்திகை தீபம்! மாலையில் தீபம் வைப்பதற்காக கடந்த ஒரு மணி நேரமாக வாசலில் கால் வலிக்க தன் திறமை எல்லாம் கோலத்தில் காட்டிக் கொண்டிருந்தாள் திகழொளி !
திகழொளிக்கு கோலம் போடுவது என்பது மிகவும் பிடித்த விஷயம்! அழகழகாய் போடுவாள்.அதுவும் மிகவும் ரசித்துப் போடுவாள்.
இன்றும் அது போல் தன்னை மறந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவளை, அவளின் தாய் பொன்னி அழைத்தார்.
"திகழி கோலம் போட்டது போதும் வா..இந்த விளக்குகளுக்கு எல்லாம் திரி போட்டு எண்ணெய் ஊற்று..அக்காளும், தம்பியும் கோலத்துக்கிட்டேயே உட்கார்ந்துட்டா ! மத்த வேலை எல்லாம் யார் செய்வா ?போதும் வாங்க.."
"அம்மா கொஞ்சம் இருங்கம்மா ..முடிக்கப்போறேன்! முடிச்சுட்டு வந்தறோம் .."
"எத்தனை நேரம் தான் கோலம் போடுவே? போதும் வா திகழி..!" என்றபடி வீட்டுக்குள் இருந்தபடியே சத்தம் போட்டார்.
எதிர் வீட்டுப் பேச்சு சத்தத்தைக் கேட்டு மிகன் தன் அறையின் சாளரத்தின் வழியாக எதிர் வீட்டைப் பார்த்தான்.
நேற்றுத் தான் புது வீட்டிற்கு குடி வந்தார்கள்..அவனுக்கு சாமானங்களை ஒழுங்கு படுத்தவே நேரம் சரியாக இருந்தது.
மிகனின் அத்தை மகன் நீரன் மதியம் வேலை இருக்கிறது என்று வெளியில் போனவன் இன்னும் வரவில்லை..
காலையிலிருந்து வேலை செய்து களைத்துப் போயிருந்தவனுக்கு,எதிர்வீட்டு வாசலில் கேட்ட சின்ன பெண்ணின் குரல் வெளியில் சென்று பார்க்க அவனைத் தூண்டியது.
எழுந்து சென்று சாளரத்தின் வழியில் பார்த்தவனுக்கு,
அங்கு பச்சைக் கலர் பட்டுப் பாவாடை சட்டையில், இரண்டு ஜடை பின்னி தலை நிறைய மல்லிகைப் பூவுடன் தங்கள் வீட்டைப் பார்த்தபடி குனிந்து கோலம் வரைந்து கொண்டிருந்த சின்னப் பெண்ணைக் கண்டான்.
குனிந்து கோலம் போடுவதற்கு இடைஞ்சலாக தன் முன்னால் விழுந்த பின்னலையும் ,தொங்கிக் கொண்டிருந்த பூவையும் சிறு எரிச்சலுடன் நிமிர்ந்து பின்னால் தூக்கிப் போட்டாள்.
ஏனோ, மிகனுக்கு அந்த சிறு பெண்ணைப் பார்த்தவுடன் மிகவும் பிடித்து விட்டது.பார்க்கப் போனால் ஒன்பதாவதோ, பத்தாவதோ படிக்கும் பெண் போல தான் தெரிந்தாள்.
அவள் அருகில் அமர்ந்து கோலத்திற்கு வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்த சிறுவனிடம் இந்த கலர் கொடு! அந்த கலர் கொடு! என்று சொல்லிக் கொண்டே தன் வேலையிலும் கவனமாக இருந்தாள்.
அவள் வரைந்திருந்த கோலம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் அத்தனை அழகாக இருந்தது.
கோலத்தை முடித்தவுடன் அக்கா, தம்பி இருவரும் வீட்டீற்குள் சென்று விட்டனர்.
ஆனால், மிகனுக்கோ அவளைப் பார்த்த பின் அந்த சாளரத்தை விட்டு நகர முடியவில்லை..
கல்லூரியில் படிக்கும் அவன் எத்தனையோ பெண்களை கடந்து வந்து இருக்கிறான்.ஆனால் ஏனோ இந்தப் பெண் அவனைப் பெரிதும் ஈர்த்தாள்.
அவள் மீண்டும் எப்போது வெளியில் வருவாள் ? என்று எதிர்பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தான்.
மாலை லேசாக இருட்டத் தொடங்கியதும்.அவனை அதிகம் காத்திருக்க வைக்காமல் அவள் கார்த்திகை தீபங்களுடன் வெளியில் வந்தாள்.
தீபங்களுடன் அவளைப் பார்க்கும் போது அவள் அவனுக்காகவே வந்த அழகு தேவதையாக தெரிந்தாள்.
வீட்டின் சுற்றுச் சுவர் மீதும், வீட்டின் படி ,மாடிப்படி என்று அவள் தம்பியுடன் அவள் தீபம் வைக்கும் அழகை அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
கடைசியாக கோலத்தில் தீபம் வைத்து முடித்தவளிடம் அவளுடைய தாய் பொன்னி தட்டு நிறைய பலகாரங்களைக் கொடுத்து "திகழி இதை எதிர்வீட்டு ஆண்டியிடம் கொடுத்துட்டு வாம்மா.." என்றார்.
எதிர் வீட்டில் புதிதாக குடி வந்திருந்த அந்த வீட்டம்மா மணியரசி பொன்னியை பால் காய்ச்ச அழைத்திருந்தார்.
பொன்னியும் அழைப்பை ஏற்றுச் சென்றார்.
வீட்டிற்கு வந்தவரை மணியரசி அன்பாக உபசரித்து, இனிமையாகவே பேசிப் பழகினார்.
பொன்னிக்கும் அவரை மிகவும் பிடித்து விட நேற்றிலிருந்து அவருக்கு தேவையான சின்ன சின்ன உதவிகளை செய்து கொடுத்தார்..
இப்போது கார்த்திகை தீபத்திற்கு செய்த பலகாரத்தை அவர்களுக்கு கொடுத்து வரும் படி மகளை ஏவினார்.
திகழொளியும் "சரிம்மா.." என்றவள், தட்டை வாங்கிக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி நடந்தாள்.
மிகனோ, சாளரத்தின் வழியாக அதை பார்த்தவன், அவள் தங்கள் வீட்டிற்குள் வருவதற்கு முன் இரண்டு, இரண்டு படிகளாக தாவி மாடிப்படிகளில் இறங்கியவன், வாசலிலேயே அவர்களை எதிர் கொண்டான்.
வீட்டிற்குள் வந்த அக்காவும், தம்பியும், நெடுநெடுவென எதிரில் நின்ற ஆடவனைப் பார்த்ததும், அப்படியே தயங்கி நின்றனர்.
மிகனோ, அவர்களின் தயக்கத்தைப் பொருட்படுத்தாமல் "வாங்க என்ன விஷயம் சொல்லுங்க .."என்றான் பெரிய மனுஷன் தோரணையில்..
அவளோ, தயங்கியபடி .."அம்மா பலகாரம் கொடுத்துட்டு வரச்சொன்னாங்க..அது தான் உங்க அம்மா கிட்ட இதை கொடுக்க வந்தோம்.." என்று பலகாரத் தட்டை நீட்டீனாள்.
மிகனோ ,அதை வாங்காமல் பேச்சு கொடுக்கும் பொருட்டு "ஆமாம் உங்க பேர் என்ன..?என்றவனிடம்..
தயங்கியபடியே "என் பேர் திகழொளி! இது என் தம்பி அமுதன்..!"
'திகழொளி' என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.அழகான தமிழ் பெயர் என்று எண்ணினான்.
"ம்..என்ன படிக்கிறீங்க..?"என்று தொடர்ந்து பேச்சை வளர்த்தான்.
"நான் டென்த்! இவன் சிக்ஸ்த் ..!"
"ஓகே.. என்றவன் 'நாம் நினைத்தபடி இவள் டென்த்து தான் படிக்கிறாள்' என்று சிந்தித்தவன்.
அவளிடம்"அத்தை உள்ளே தான் இருக்காங்க.. போய் நீங்களே கொடுத்துடுங்க.." என்றபடி வீட்டிற்குள் போக வழி விட்டான்.
"ம்..!" என்று தலையாட்டியபடி இருவரும் உள்ளே சென்றார்கள்..
மணியரசியோ, அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக வரவேற்று அன்போடு பேசினார்.
இவர்கள் கொடுத்த பலகாரத்தை வாங்கிக் கொண்டு அவர் செய்த இனிப்புகளையும் கொடுத்தார்.
திகழொளியோ, அதைப் பெற்றுக் கொண்டு "ஏன் ஆண்டி நீங்க தீபம் வைக்கலையா..?" என்று கேட்டாள்.
அவர்கள் வீட்டில் இன்னும் தீபம் வைக்காததைக் கண்டு..
"இதோ, இனிமேல் தான் வைக்கனும் மா.. நான் ஒருத்தியே எல்லா வேலையும் செய்துட்டு இருந்தேனா.. கூடவே இந்த சாமானங்களையும் ஒதுக்கி வச்சுட்டு இருந்தேன். அது தான் நேரம் ஆகிடுச்சு.."
"ஓ..!ஏன் ஆண்டி உங்க வீட்டில் அக்கா எல்லாம் இல்லையா..?"
அவரோ, சிரித்தபடி "எங்க வீட்டில் இரண்டு பெரிய பசங்க தான் இருக்காங்க..அவங்க எங்க இந்த வேலை எல்லாம் செய்யப் போறாங்க."
"ஓ..! நான் வேணா தீபம் வைக்கட்டுமா? நீங்க ஏத்தி கொடுக்குறீங்களா.."
"ஓ...வைம்மா ! எனக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்.."என்றவர்..
தீபங்களை அவளிடம் எடுத்து கொடுத்தார்.
அவர் கொடுத்த பலகாரத்தட்டை மேஜை மீது வைத்து வீட்டு தீபங்களை வாங்கிக் கொண்டாள்.
அக்காளும் ,தம்பியும் மறுபடியும் தீபம் வைக்கும் வேலையில் இறங்கினார்கள்..
மிகனோ ,என்றுமில்லாமல் அன்று அவர்களோடு அவனும் சேர்ந்து கொண்டான். அவர்களுடன் அவன் பேசியபடியே அவர்களுக்கு உதவினான்.
"உங்க பேர் என்ன அண்ணா ..?என்று அமுதன் கேட்கவும் "மிகன்..!" என்று கம்பீரமாக சொன்னான்.
திகழொளியோ, 'மிகன்' அழகான பெயர் என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.
மிகனுடன் அக்காவும், தம்பியும் அண்ணா !அண்ணா !என்று நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள்.
அவர்கள் தீபம் எல்லாம் வைத்து முடித்ததும்
மணியரிசியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.
மணியரசியோ, "இருவருக்கும் ரொம்ப நன்றிம்மா.. இன்னைக்கு உங்க கூட சேர்ந்து மிகனும் தீபம் வச்சுருக்கான்..இந்தாம்மா இந்த பலகாரத்தை அம்மாவிடம் கொடுத்துடுங்க..!" என்றபடி பலகாரத்தை கொடுத்து விட்டார்.
இருவரும் அதைப் பெற்றுக் கொண்டு அவனைப் பாரத்து சிரித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.
மிகன் அவர்களுடன் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தான்.
திகழொளி போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
அவர்களுடன் நேரம் செலவழித்தது மிகனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
அவன் மனசுக்குள் உற்சாகம் பீறீட்டது.
திகழொளி மீது அவனையும் அறியாமல் பெரும் ஈர்ப்பு உண்டானது.
மனதிற்குள் சொல்ல முடியாத ! இனம் புரியாத! புது உணர்வு அவனை தொற்றிக் கொண்டது. மனம் முழுவதும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.
ஆனால் அவள் 'அண்ணா' என்று அழைத்தது மட்டும் ஏனோ அவனுக்கு நெருடலாகவே இருந்தது.'இனிப் பேசினால், அண்ணான்னு சொல்லாதேன்னு அவ கிட்ட சொல்லனும்' என்று கமனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
இருவரும் தங்கள் வீட்டிற்குள் வந்ததும் மணியரசி கொடுத்தனுப்பியிருந்த பலகாரத்தை தாயிடம் கொடுத்துவிட்டு ,
மணியரசி பாசமாக தங்களிடம் பேசியதை தன் தாயிடம் கூறினார்கள்.
அப்போது தான் வேலையிலிருந்து வந்திருந்த அறவாணன் தன் பசங்களைப் பார்த்ததும் "இத்தனை நேரம் எங்கே டா போய் இருந்தீங்க..?"என்று கேட்டார்..
பிள்ளைகள் இருவரும் எதிர்வீட்டுக்கு போன கதையை தந்தையிடம் சொன்னார்கள். "அங்கே இரண்டு அண்ணாக்கள் தான் இருக்காங்க அப்பா
." என்று மகள் கூறியதை ஆமோதிப்பது போல் ..
கணவரிடம் பொன்னி "ஆமாங்க அந்த அம்மாக்கு ஒரு பையன் தான்.இன்னொரு பையன் அவங்க அண்ணன் பையன் . அந்த பையனின் அம்மா சிறுவயதிலேயே இறந்துட்டாங்களாம்.."
"ஓ..அப்படியா !' என்ற கணவரிடம்.
"ஆமாங்க, அதனால் தான் அவங்க அண்ணன் பையன் தாய் இல்லாமல் கஷ்டப்படக் கூடாதுன்னு இவங்களும் அண்ணன் கூடவே வந்துட்டாங்க.. இரண்டு பசங்களையும் தன் மகனாட்டமே பார்த்துக்கிறாங்க.."
"ஓ..!அப்ப அந்த உயரமான அண்ணாக்கு அம்மா இல்லையா மா.. ?பாவம்!" என்ற மகளிடம்..
"ஆமாம் பாவம் தான்..! அம்மா இல்லைன்னாத் தான் அம்மா அருமை தெரியும். உங்களுக்கு எப்பவாவது என்அருமை தெரியுதா.
?"என்று குழந்தைகளிடம் குறை பேசிய மனைவியிடம்..
"பொன்னி குழந்தைங்ககிட்ட இது என்ன பேச்சு! அவர்கள் எப்போ உன் பேச்சை கேட்காமல் நடந்து இருக்காங்க..!"
"ஹப்பா மகளை ஏதாவது சொன்னா உங்களுக்கு கோவம் பொத்துட்டு வந்துடுமே ..'
"ஆமாம் ,அவ என் பிள்ளை! என் பிள்ளை எப்போதும் எந்த தப்பும் செய்ய மாட்டா. அவளை ஏதாவது குறை சொன்னே! எனக்கு கெட்ட கோவம் வரும்.."
"ம்ஹூம்! உங்க மகளை நான் ஒண்ணும் சொல்லலே சாமி..சரி வாங்க டிபன் எடுத்து வைக்கிறேன்..சாப்பிடலாம்.."என்றபடி பொன்னி சமயலறைக்குள் சென்றாள்.
திகழொளியோ, மிகனை நினைத்து யோசனையாகவே இருந்தாள்.
மகளின் முகத்தைப் பார்த்து "என்ன டா தங்கம்? இந்த குட்டி மண்டைக்குள்ளே பயங்கர யோசனை.." என்று அவளின் தலையை தடவியபடி கேட்ட தந்தையிடம்.
"ஏம்பா அந்த அண்ணா பாவம் தானே! அம்மா இல்லைன்னா ரொம்ப கஷ்டம் இல்லை யாப்பா..?"
"ம்..கஷ்டம் தான்..!நீ அதை எல்லாம் போட்டு குழப்பிக்காமல் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்களே போய் சாப்பிடலாம் வா.!இல்லைன்னா அம்மா சாமி ஆடிடுவா.." என்று மகளைச் சாப்பிட அழைத்தார்.
அவருக்கு மகளைப் பற்றி நன்கு தெரியும்..! அவளிடம் அதைப்பற்றி ரொம்ப பேசினால் , மனசுலே அதையே நினைத்து குழப்பிக்குவான்னு , பட்டும் படாமல் பதில் சொன்னார்.
திகளொழிக்கோ , மனதிற்குள் ஏனோ மிகனின் மீது ஒரு பரிதாபம் உண்டானது. மிகனைப்பற்றியே நினைவே அவள் மனதை நிரப்பி இருந்தது.
அதன் பிறகு வந்த நாளில் மிகன் திகழொளியைப் பார்க்கும் போது எல்லாம் மென்புன்னகை புரிவான்.
திகழொளியின் ஒவ்வொரு செயலையும் அவன் மிகவும் ரசிக்க ஆரம்பித்தான்.
சாளரம் தான் அவனின் உற்ற தோழன் ஆனது..கல்லூரி முடிந்து வந்தாலே சாளரத்தின் அருகில் தஞ்சம் கொள்வான்.
அவள் பெரும்பாலும் அவர்கள் வீட்டு வராண்டாவில் அமர்ந்து தான் படிப்பாள்.
தன் தம்பிக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு அவளும் படிப்பாள்.
விளையாடினாலும் அங்கே அமர்ந்து தான் விளையாடுவார்கள்.
மிகன் வீட்டு சாளரத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் வீட்டு வராண்டா நன்றாகத் தெரியும்..
அவனையும் அறியாமல் அவன் மனதிற்குள் திகழொளி ஆழமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தாள்.
திகழொளிக்கு மிகனின் மீது இருந்த பரிதாபம் பாசமாக மாறியது .. அவனின் புன்னகை அவளுக்கு நாள்தோறும் புது உற்சாகத்தைக் கொடுத்தது.
அதுமட்டுமின்றி அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்பியது. மற்றபடி அவளுக்கு வேறு எந்த எண்ணமும் அப்போது தோன்றவில்லை..
இருவருக்கும் நாட்கள் தொய்வில்லாமல் அழகாக நகர்ந்தது.
இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும் பார்த்துக் கொண்டால் ஒரு சின்ன புன்னகையைப் பரிமாறிக் கொண்டார்கள்.
மிகனுக்கு அதுவே அப்போது போதுமானதாக இருந்தது.
மிகனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை அவனுடைய அத்தை மகன் நீரன் மட்டும் கண்டு கொண்டான்.
அதைப்பற்றி நீரன் விசாரித்த பொழுது மிகன் எதையும் சொல்லாமல் மழுப்பி விட்டான்.
தன் அத்தையுடன் நீரன் இவர்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து மிகன் நீரனை தன் உடன்பிறந்தவனாகவே எண்ணினான்..
நல்ல நண்பர்களாகவே இருவரும் இருந்தனர்.
ஆனால், அது எல்லாம் கல்லூரி படிப்புக்குள் நுழைந்த பின் இருவரிடமும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தது.
மிகன் பொறியாளர் படிப்பைத் தேர்ந்தெடுத்தான். அவனின் மதிப்பெண்ணுக்கு எளிதாகவே அவனுக்கு நல்ல பொறியாளர் கல்லூரியில் இடம் கிடைத்தது.
நீரன் கலைக் கல்லூரியில் (பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி) இளங்கலை வேதியியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தான்.
அதனால் இருவரும் வேறுவேறு கல்லூரிக்குச் சென்றனர்.
கல்லூரிக்கு சென்ற பின் நீரனின் நடவடிக்கைகள் மெல்ல மெல்ல மாறியது..மிகனுக்கே தெரியாமல் பல கெட்ட பழக்கங்களையும் கற்றுக் கொண்டான்..அவன் பழக்க வழக்கங்கள் , குணம் எல்லாமே மாறியது.
ஆனால் இது எதுவுமே மிகனுக்கு அப்போது தெரியவில்லை..அவன் அவனை நல்ல தோழனாகவே எண்ணினான்.
ஏன் இன்றுவரையுமே அவனை நம்புகிறான்.
மிகன் மட்டும் நீரனை சரியாக அப்போதே கண்டு கொண்டிருந்தால் ,பின்னால் வருப் போகும் பல பிரச்சினைகளைத் தடுத்து இருக்கலாம்.
எதுவுமே நம் கையில் இல்லையே..
தொடரும்
அடுத்த யூடி புதன்கிழமை.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை கீழே உள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
அன்புடன்
இனிதா மோகன்