உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 27
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவராஸ்யமே இருக்காது.நடப்பதை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வது தான் பக்குவம். எல்லாருக்கும் இங்கே நினைத்த வாழ்க்கை எப்போதும் கிடைப்பதில்லை..
நாம் எதிர்பாராத நிகழ்வு நடக்கும் போது அது நம்மை மொத்தமாக நொறுக்கி விடும்..
அது போல் திகழொளி கல்லூரி படிப்பின் இறுதி தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள்.
தன் வீட்டு சுற்றுச் சுவர் அருகில் வரும் போதே மிகனின் குரல் அவள் செவியில் விழுந்தது.
அவனின் குரலைக் கேட்டதும் ! எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
ஆனால் மிகன் தங்கள் வீட்டு வராண்டாவில் நின்றிருந்த கோலமும், அவன் எதிரில் தன் பெற்றவர்கள் குனிக் கூறுகி நின்றிருந்த தோற்றமும், அமுதனின் கலங்கிய முகமும் அவளின் மகிழ்ச்சியை வடியச் செய்தது.
என்ன விஷயம்? ஏதோ சரியில்லை என்று நினைத்தவாறே திகழொளி மனம் படபடக்க அவர்கள் அருகில் சென்றாள்.
மிகனோ அவளைக் கண்டதும் , "இதோ உங்க பொண்ணு வந்துட்டா ! அவளையே கேளுங்க.." என்றான் கோபமாக..
எப்போதும் தன்னைக் கண்டால் அவன் விழிகளில் தென்படும் நேசமில்லை..மாறாக சொலில்லடங்கா வெறுப்பு தான் கொட்டிக் கிடந்தது.
அவனின் விழிகளைப்பார்த்ததுமே அவளின் மொத்த சக்தியும் வடிந்தது.
பொன்னியோ, "திகழி இந்த தம்பி சொல்லறது எல்லாம் உண்மையா ..?"என்று கேட்டார் அப்போதும் மகள் மீது நம்பிக்கையுடன்..
அறவாணனோ, மகளின் முகத்தையே பார்த்தார். அந்த பார்வையில் கவலை ,ஏக்கம் , ஏமாற்றம் வலி எல்லாமே தெரிந்தது.
திகழொளிக்கோ, ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. ஆனால், என்னவென்று தான் தெரியவில்லை..
ஒவ்வொருவரின் முகத்தை பார்த்து வந்தவள், கடைசியில் அமுதனை பார்த்தாள்.ஆனால், அவன் கண்களோ தமக்கைக்கு வெறுமையைத் தான் காட்டியது.
என்னவென்று தெரியாமல் குழப்பத்துடன் நின்ற மகளைப் பார்த்து "திகழி பதில் சொல்லு டீ .."என்ற தாய்யிடம்..
"என்ன பதில் மா ? எனக்கு எதுவுமே புரியலேயே..என்று தெம்பு இல்லாமல் சொன்னவளிடம்..
" உனக்கு எப்படி புரியும்.. செய்வதெல்லாம் செய்துட்டு என்னமா நடிக்கிறே..!"
" மிகன் என்ன சொல்றீங்க? எனக்கு நிஜமாவே புரியலே.."
'ம்..! உன்னால் அங்கே நீரன் சாகக்கிடக்கிறான்.."
"என்னாச்சு அவருக்கு? நான் என்ன செய்தேன்..?"
"என்ன செய்தீயா? அவனை காதலிக்கிறேன்னு சொல்லி அவன் மனசுலே ஆசையை வளர்த்துட்டு, இப்போ இது ஒத்து வராதுன்னு பிரிஞ்சுடலாம்ன்னு சொல்லியிருக்கே.. அதை தாங்க முடியாமல் அந்த படுபாவி விஷத்தை குடிச்சுட்டான்.இப்போ ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.."
"அச்சோ! நான் அவரிடம் பேசியது கூட இல்லே..நான் எப்போ அவரை விரும்புறேன்னு சொன்னேன்! இது அப்பட்டமான பொய் மிகன்! என்னை நம்புங்க ..!"
"உன்னை தானே நம்புனேன்! ஆனால் இப்படி ஒரு வஞ்சகியாக நீ இருப்பின்னு எனக்கு தெரியாமல் போச்சே..!"
"மிகன் உண்மையாக சொல்றேன்..நான் உங்களைத் தான் நேசித்தேன் ..அவரை இல்லை..அவருடன் நான் சரியா பேசியது கூட இல்லை..தயவு செய்து நான் சொல்வதை நம்புங்க.."என்று கெஞ்சினாள்.
இது அவளுடைய மிகன் தானா? இவ்வளவு கடுமையாக கூட அவன் பேசுவானா? அவள் விரும்பிய மிகன் இது இல்லையே! இது கனவாக இருக்குமோ என்றெல்லாம் மனதிற்குள் நினைத்தாள்.
மகள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பெற்றவர்கள் மனதில் இடியை இறக்கிக் கொண்டு இருந்தது.அதுவும் உங்களைத் தான் விரும்பினேன் என்று மகள் சொன்னதும் அவர்களுக்கு மகள் மீது கொண்ட நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தது.
மிகனோ, "என்னால் இப்ப கூட இதை நம்பவும் முடியலே! நம்பாமல் இருக்கவும் முடியலே..நீ இவ்வளவு பெரிய ஏமாத்துக்காரியாக இருந்து இருக்கீயே..!"
மிகன் தன் தமக்கையை தவறாக சொல்லுவதைப் பொறுக்க முடியாமல் "என் அக்கா எந்த தப்பும் செய்யலே ! அந்த அண்ணா கூட அக்கா பேசியது கூட இல்லை.."என்று அதுவரை திகைப்பில் நின்றிருந்த அமுதன் கோவமாக பேசினான்.
"உன் அக்கா ஒன்னும் செய்யலையா? நீ சின்ன பையன் உங்கக்காவின் உண்மை முகம் உனக்கு தெரியலே.."என்றான் அளவுகடந்த கோவத்தில்..
"நீங்க ரொம்ப பேசறீங்க..எங்கக்கா தப்பு செய்தாங்கறதுக்கு என்ன ஆதாரம் .."
"ஆதாரமா கேட்கிறே ?இதோ காட்டறேன்.." என்றவன்.சட்டென்று தன் வீட்டுக்கு சென்று இரண்டு பைகளை எடுத்து வந்தவன் அக்கா தம்பி முன்னாடி அதில் ஒரு பையை தலைகீழாக கொட்டினான்.
திகழொளியோ ,அதைக் கண்டு இது எல்லாம் நாம் மிகனுக்கு வாங்கி கொடுத்ததே! இதை ஏன் கொட்டறான் ?என்று எண்ணிக்கொண்டே அவனிடம் 'இது உங்களுக்கு நான் கொடுத்தது தானே.." என்று அவள் கேட்டாள்..
"எனக்கு மட்டும் கொடுத்து இருந்தால்? நான் சந்தோஷப்பட்டு இருப்பேன் ..ஆனால், இது நீ நீரனுக்கும் கொடுத்து இருக்கிறேயே.."
"என்ன உளறறீங்க .."
"நான் பேசுவது உனக்கு உளறலாகத் தான் தெரியும்.. அவனை காதலிப்பதாக சொல்லி, அவனுக்கு எல்லாம் வாங்கி கொடுத்து, அவன் மனசில் ஆசையை வளர்த்துட்டு இப்போ கழற்றிவிட்டுட்டே.."
"போதும் நிறுத்துங்க..! வாய்யிருக்குன்னு என்ன வேணா பேசாதீங்க.. நான் எப்போதும் அவரை காதலித்தது இல்லை..நான் காதலித்தது உங்களை மட்டும் தான்.."
"ஆமாம் ! ஏன்னா ?அவனுக்கு சரியான வேலை இல்லை.. எனக்கு நல்ல வேலை ..!வசதி இருக்கு! அப்படி நினைச்சு இருப்பே.. இன்னும் என்னை விட பெட்ரா எவனாவது கிடைச்சா! என்னை விட்டுட்டு அவன் பின்னாடி போவே..'என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பு..
அமுதன் பாய்ந்து சென்று அவன் சட்டையைப் பிடித்து, "இதுக்கு மேலே எங்கக்காவைப் பற்றி ஒரு வார்த்தை பேசுனீங்க! நடக்கிறதே வேறே ..!"என்று கண்கள் சிவக்க நின்றவனை பொன்னி தான் ஓடி வந்து அமுதனை பிடித்து தடுத்தாள்..
மிகனோ தன் கசங்கி இருந்த சட்டையை சரி செய்த படி .. "உங்க அக்கா குணம் தெரியாமல் ரொம்ப துள்ளாதே ..உன் வீரத்தை உங்க அக்கா கிட்ட காட்டு எங்கிட்ட காட்டாதே..!"என்றான் வெறுப்புடன்..
"நீங்க என்ன சொன்னாலும், எங்க அக்கா குணம் எனக்கு தெரியும்..! உங்களுக்கும் அது ஒரு நாள் தெரியும்! அப்போ உங்க தப்பை உணர்வீங்க.."
"ஓ..!கண்டிப்பா இப்பவே உணர்ந்துட்டேன்.இந்த மாதிரி ஒரு பொண்ணுகிட்ட இருந்து காலம் தான் என்னை காப்பாத்தி இருக்கு.."
"உங்களை மாதிரி ஒரு ஆளை நம்பின எங்க அக்காவுக்கும் காலம் தான் உங்க முகத்திரையை கிழித்து காட்டி இருக்கு.."என்று அவனும் பதிலுக்கு பதில் கோவத்துடன் பேசினான்.
"அமுதா !"என்று பொன்னி அவனை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
மிகனோ..தன் கையில்லிருந்த இன்னொரு பையையும் திகழொளி முன் வீசிவிட்டு "இதை பத்திரமா எடுத்து வச்சுக்கோ..இன்னும் என்னை மாதிரி வேறு எவனாச்சும் இளிச்சவாயன் கிடைத்தால் இதை கொடுக்க உதவும்.." என்றான் அவளை வெறுப்புடன் பார்த்தபடி..
திகழொளியயோ, உடைந்து போய் அவனை உயிரே இல்லாமல் பார்த்தாள்.
மிகனுக்கோ, அவள் முகத்தைப் பார்த்ததும் இவள் தப்பு செய்திருப்பாளா? இவள் முகத்தைப் பார்த்தால் தப்பு செய்வது போலே இல்லையே..ஆனாலும் அவளுக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கே..என்று தவித்தான்.
இப்படி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு தான் தன்னை ஏமாற்றி இருக்கிறாள் என்று நினைத்தவனுக்கு ,அவள் மீது எல்லையில்லா கோபம் வந்தது..
அவனோ அவளின் பார்வையை தாங்கிய படி.."நீ இவ்வளவு வேஷக்காரியா இருப்பீன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலையே..எப்படி என்னையும் ,அவனையும் ஏமாத்த உனக்கு மனசு வந்துச்சு..? என்ன பெண் நீ! உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு .."என்று வார்த்தைகளில் அனலைக் கக்கினான்.
"மிகன் உண்மையை தான் சொல்றேன் ..நான் அவர் கூட சரியா பேசியது கூட இல்லே.. நான் உங்களை மட்டும் தான் விரும்புனேன் என்னை நம்புங்க.!என்று மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லி கெஞ்சினாள்.
நானும் உன்னை நம்பினேனே! ஆனால், எல்லாம் போச்சு..நான் என் உயிரா உன்னை நினைத்தேனே! ஆனால் இப்படி கேவலமான புத்தி உன்னிடம் இருக்கும் .என்று தெரியலையே என்று வார்த்தைகளில் நெருப்பை அள்ளி வீசினான்.
"மிகன் ஏன் இப்படி என் மேல் அபாண்டமா பழி சொல்றீங்க..?"என்று பொறுக்க முடியாமல் திகழொளி கேட்டாள்.
"நான் பழி சொல்றேன்னா? இப்ப கூட உனக்கு ஒரு சதவீதமாவது குற்றவுணர்வு இருக்கா? உன்னால் ஒருவன் சாவோடு போராடிட்டு இருக்கான்.."
"நான் செய்யாத தப்புக்கு எதுக்கு குற்றவுணர்வு கொள்ளனும்.."
"தப்பு செய்யலையா? இதோ இந்த கிப்ட் எல்லாம் எனக்கு கொடுக்கும் முன்னே அவனுக்கும் வாங்கி கொடுத்து இருக்கே.அவனுடன் பழகாமல் இது எப்படி சாத்தியம்.."
"மிகன் போதும் நிறுத்துங்க..உங்க வாய்க்கு வந்த படி பேசாதீங்க..காதலில் நம்பிக்கை தான் முக்கியம் அது உங்க கிட்ட சுத்தமா இல்லை.."
"நம்பிக்கை! அதன் அர்த்தம் உனக்கு தெரியுமா.. ?"
மிகன்..!
"உண்மை கசக்குதா..என் வாழ்க்கையிலேயே உன்னை மாதிரி ஒரு கேவலமான பொண்ணை பார்த்ததே இல்லை பாதகி .." என்று எல்லையில்லா கோபத்தில் கத்தினான்.
அதுவரை நடப்பதை நம்பமுடியாமல் அளவுகடந்த அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அறவாணன் "மிகன் போதும் இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசாதீங்க.. என் பொண்ணை இவ்வளவு மோசமா பேசாதீங்க..ஏதோ தப்பு நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.. இதற்கு மேல் அவளை பேசினால் எனக்கு கெட்ட கோவம் வரும்.."
ஓ..! உங்க மேலே எவ்வளவு மரியாதை வச்சு இருந்தேன்.இப்ப உங்க பொண்ணை சொன்னா உங்களுக்கு கோவம் வருதா..? அங்கே உங்க பொண்ணால் ஒரு உயிர் சாகக்கிடக்குதே அதற்கு என்ன பதில் சொல்றீங்க..? உங்க பொண்ணைக் கூப்பிட்டு விசாரிக்க துப்பில்லை என்னை பேச வந்துட்டார்..""என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்..
திகழொளியோ, தன் தந்தையை அவன் மரியாதை இல்லாமல் பேசுவதை பொறுக்க முடியாமல்.."மிகன் போதும் ! இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசுனீங்க..?"
"பேசுனா என்ன டீ செய்வே.. ?"என்று அவளின் பெற்றவர்கள் முன்னே டீ போட்டு பேசியதுமில்லாமல் ,எகிறினான்.
"என்னால் என்ன செய்ய முடியும்..எதையும் புரிந்து கொள்ளாமல் !தீர விசாரிக்காமல் ! நீங்களே ஒன்றை நினைத்து! அது தான் உண்மை என்று பேசுபவரிடம் நான் என்ன செய்ய முடியும்.."
"எல்லாம் புரிஞ்சு ! தீர விசாரித்து தான் பேசறேன்.."
"சரி புரிஞ்சுட்டீங்க தானே போதும் முதலில் வெளியில் போங்க.." என்று கை எடுத்து கும்பிட்டாள்.
"போகத்தான் போறேன்..போகாமல் இங்கே என்ன வாழை இலை போட்டு சாப்பிடவா போறேன். இச்சே உன்னைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கு..நீரனுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் அப்புறம் உன்னை பேசிக்கிறேன்.." என்றான் பற்களை வெறுகியபடி.. அவனால் அவளை மன்னிக்கவே முடியலை..
அறவாணனோ, மிகன் பேசிய வார்த்தையின் வலியை பொறுக்க முடியாமல் " மிகன் போதும் அவள் தப்பு செய்ய மாட்டாள்..நாங்க அப்படி வளர்க்கலே..என்றார் அவரும் கோபத்துடன்.
"உங்க மகள் செய்யமாட்டான்னு சொல்றீங்களே..அவளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு..? என்னையே எத்தனை முறை காலேஜ் வரச் சொல்லி கடிதம் எழுதி அமுதனிடம் கொடுத்து அனுப்பி இருக்கா தெரியுமா..?இவளின் உண்மை முகம் தெரியாமல் நானும் எத்தனை முறை காலேஜ் சென்று பேசி இருக்கேன் தெரியுமா? என்று அவன் எதுவுமே செய்யாத மாதிரியும்! கடிதம் அவள் மட்டுமே எழுதியது போலவும் ! என்ன பேசிகிறோம் என்று தெரியாமல் ஆத்திரத்தில் புத்தி கெட்டுப் போய் சொன்னான்.
அவள் இப்படி செய்துவிட்டாளே என்ற ஆத்திரத்தில் தன்னை மறந்து பேசிவிட்டான்.
மிகன் சொன்ன வார்த்தையை கேட்டதும் பெற்றவருக்கு மகள் மீது வைத்திருந்த நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்தது. தன் மகளாக இப்படி செய்தாள் ? என்று அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தார்..மகளின் செயல் ஒரு புறமும் , மிகன் பேசிய வார்த்தைகள் ஒரு புறமும் அவரை கொள்ளாமல் கொன்றது.
மிகன் சொன்ன வார்த்தைகளை தாங்க முடியாமல் தந்தையின் நிலையைக் கண்டு திகழொளி மனதிற்குள் அழுது கொண்டு சிலையாக நின்றாள்.
பொன்னியோ, மிகன் பேசியதைப் பொறுக்க முடியாமல் திக்குபிரமை பிடித்தது போல் நின்றிந்த மகளிடம் " இப்படி குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சுட்டீயே டீ.. ! என்னை விட உங்க அப்பா உன்னை நம்பினாரே ..அவரை இப்பிடி கண்டவனிடம் பேச்சு வாங்க வச்சுட்டீயே டீ..படிக்கிற வயதில் உனக்கு என்ன காதல் கேட்குது..?" என்றவர் தன் கோவம் தீர மகளை கன்னம் கன்னமாக அறைந்தார்.
திகழொளியோ, தாயின் அடியை வாங்கிக் கொண்டு அப்படியே அசையாமல் நின்றாள்.
அமுதன் தான் தன் தாய்யை தடுத்து, "அக்கா எந்த தப்பும் செய்யலை மா .. நான் சொல்றதை நம்புங்க மா.." என்று கெஞ்சினான்.
திகழொளியோ தன் சக்தி எல்லாம் வடிய தொய்ந்து போய் அமர்ந்தாள்.அவளால் அழுக கூட முடியவில்லை ..அளவு கடந்த அதிர்ச்சியால் அவளின் கண்ணீர் சுரப்பிகள் கூட வற்றிப் போய்விட்டது.
மிகனோ அவளை வெறுப்புடன் பார்த்து விட்டு "பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க..இச்சே!" என்றான் அளவுகடந்த வெறுப்புடன்.
அறவாணனோ "போதும் ..இதுக்கு மேல் பேசவேண்டாம் தயவு செய்து வெளியில் போங்க.." என்றார்.
மிகன் காட்டு கத்து கத்தியதில் அக்கம்பக்கத்து வீட்டுகாரர்கள் வேடிக்கை பார்த்தனர்.அறவாணனும், பொன்னியும் அவமானத்தில் நொறுங்கி போனார்கள்.
மிகனோ ,திகழொளியை கடைசியாக திரும்பி பார்த்தான்..அவளும் அவனைத் தான் பார்த்தாள்.
அவனின் விழிகளோ உன்னை எவ்வளவு நம்புனேன் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாயே..? என்று கேட்காமல் கேட்டது.
அவளின் விழிகளோ என்னை கடைசி வரை நம்பாமல் பேசிகிறீர்களே.. யாரோ சொன்னதை நம்பி என் நேசத்தை சந்தேகப்பட்டுடீங்களே.. என்று குற்றம் சாட்டியது..
அது தான் இருவரும் கடைசியாக பார்த்துக் கொண்டது.
மிகன் சென்றதும் அமுதன் திகழொளியை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.
அவளின் பெற்றோர்களோ , சில்லுசில்லாக உடைந்து போனார்கள்.மற்றவர்களின் பார்வையையும், விமர்சனங்களையும் தாங்க முடியாமல்வ வீட்டிற்குள் வந்து கதவடைத்தனர்.
யார் முகத்திலும் விழிக்கும் தெம்பு அவர்களுக்கு அப்போது இல்லை..
திகழொளியோ, தன் தந்தையிடம் "அப்பா என்னை நம்புங்கள் நான் எந்த தப்பும் செய்யலே.." என்று கண்ணீர் மல்க கதறினாள்.
பொன்னியோ," உன்னை நம்பியதுக்குத் தான் எங்களுக்கு நல்ல மரியாதை செய்துட்டேயே..உன்னை பெத்த கடனுக்
கு இன்னும் என்னென்ன பார்கனுமோ.."என்றார் கண்ணீர் மல்க..
அறவாணனோ, ஒரு வார்த்தை கூட மகளிடம் பேசலை..இடிந்து போய் அமர்ந்திருந்தார்..
மிகனோ, அங்கே ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு வீட்டிற்குள் வந்து மனதிற்குள் அழுது கொண்டிருந்தான்.
தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் படித்துவிட்டேன்.. பிடித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்