Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold மதுரதுளசி

Megala Pazhaniyappan

Active member
Saha Writer
Messages
75
Reaction score
71
Points
33
டீசர் 1


அவள் தான்..! அது அவளே தான். ஒரு நொடி தன்னை அவள் உற்று பார்த்தது போல் தோன்றியது மதுரனுக்கு.


துளசி..! அவனையறியாமல் அவன் உதடு முனுமுனுக்க அவளை நோக்கி வேகமாகச் சென்றான். அந்த திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து அவளை நோக்கிச் செல்லும் முன் அவள் மாயமாய் மறைந்திருந்தாள்.


எங்கே போனாள். சுற்றும் முற்றும் தேடினான். அவள் நின்றிருந்த அந்த கடையில் "அண்ணா இப்ப பச்சகலர் புடவை கட்டின பொண்ணு இங்க இருந்தாங்களே.. அவங்க எங்க...?" என விசாரிக்க அவர் பதில் அளிக்காமல் போகவே மீண்டும் மீண்டாம் அதையே கேட்டபடி சுற்றிலும் பார்வையை சுழற்ற


"ஏ தம்பி நோம்பி நேரத்துல எத்தனையோ பேரு வருவாங்க.. வேவாரத்தை பாக்காம அவங்க எங்கேன்னா பார்த்துட்டு இருப்பேன்.." என வியாபரநேரத்தில் தொந்தரவு செய்யும் அவனிடம் சலித்துக் கொண்டார்.


'அது துளசியே தான். என் துளசியேதான். எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை கூட்டத்திலும் உன்னை அடையாளம் காண முடியாமல் போகுமா துளசி. எங்கே போன...? என்னை நீ பார்த்தை நான் பார்த்தேனே... என்னைப் பார்த்தும் ஏன் துளிசி போன...' என அரற்றியபடியே கண்களும், கால்களும் அந்த திருவிழா கூட்டத்தில் அவளை தேடிக் களைத்தது. கடந்த பத்து ஆண்டுகளாய் அவன் மனதை துளைக்கும் கேள்வி அன்றும் துளைத்து எடுத்து அவனை உறங்கவிடாமல் செய்தது.


ஏன் துளசி என்னை விட்டு போன... என மறுகியபடியே அவளின் நினைவுகளோடு உரையாடிக் கொண்டிரூந்தான் மதுரன்.


**********************


"ச்சீ கையைவிடு.." என்றபடியே பளாரென அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது அவள் கரம்.


சட்டென அவன் காதுகள் அடைத்து உலகமே நிசப்தமானது போல் இருந்தது அவனுக்கு. கன்னத்தை பிடித்தபடி ஒரு நொடி தள்ளாடி நின்றவனை "தமிழ்.." என்றபடி ஓடி வந்து தாங்கி நின்றான் ரகுபதி.


"ஏய்..." என ரகுபதி முஷ்டியை இறுக்க அவனை அடக்கியபடி


ஏன் துளசி நான் உன்னை தொடக்கூடாதா.. என ஏக்கமாக கேட்டவனிடம்


"யார் நீ.." என்றாள் அவள் உக்கிரகாளியாய் மாறி. கனல் வீசிடும் வார்த்தைகளால் அவனைக் கேட்டது அவள் தான் என நம்பமுடியவில்லை அவனால்.


"துளசி... என்னையா யார்ன்னு கேட்கற.." அவன் உடல் இறுகியது.


"உன்னைத் தான் கேட்கிறேன். யார் நீ.." என அதை உக்கிரத்தோடு மீண்டும் அவள் நாக்கு அமிலத்தை துப்பியது.


அவன் முகம் கறுத்து, உடல் இறுகி அவளையே பார்த்திருக்க அவனைத் துளியும் கவனிக்காது, அங்கு அப்படி ஒருவன் இருக்கிறான் என்று கூட தெரியாதது போல் முகத்தில் அதே உக்கிரம் தாண்டவமாட, அதே நேரம் தன்னியல்பாய் அவள் பணிகளை பரபரப்பாய் தொடர்ந்து கொண்டிருப்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
 
மதுரதுளசி



அத்தியாயம் - 1


இரவின்

இருளுளை

கிழித்துக்கொண்டு

நுழைந்தது அந்த

பெருமழையின்

பேரிரைச்சல். அந்த வீட்டுக் கூரையின் மீது பெருங்கற்களை வாரி இரைப்பதைப் போன்றதொரு சப்தம் மதுரனின் தூக்கத்தை எப்போதோ விரட்டியிருந்தது. அந்த நள்ளிரவிலும் அவனது நினைவில் , இப்படி இடி இடித்து பெய்யும் மழைக்கு பயந்து நடுங்கிப் போவாளே,இப்பொழுது என்ன செய்வாள், அவள் தந்தை அவளுக்கு துணையிருப்பாரோ.... இல்லை அம்மாவென்று அவள் தாயின் அருகில் கோழிகுஞ்சாய் தஞ்சமடைந்திருப்பாளோ. இடி சத்தம் கேட்டா அர்ஜூனா, அர்ஜூனா சொல்லு துளசி பயமா இருக்காது என பால்யத்தில் மதுரன் சொன்னதும்,மதுரா பயமாருக்குடா.. மதுரா.. மதுரா.. என கைகளை இறுகப் பற்றி அவன் தோள்மீது முகத்தைப் புதைத்து அருகே அணைத்து கிடந்தது நினைவில் நிழலாடியது. அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாது. இருக்கிறாளா இல்லையா என்று கூட தெரியாது. ஆனால் அவளது நினைவுகள் மட்டும் அவனை நீங்காது நிழலாய் தொடர்கிறது.


என்னை விட்டு எங்கே போன துளசி. என்கிட்ட சொல்லாம ஏன் போன...? காற்றோடு நித்தமும் அவன் கேட்கும் கேள்வி இது.



மதுரனின் முழு பெயர் தமிழ்மதுரன். தமிழாசிரியர் மாணிக்கவாசகர், மனோன்மணி தம்பதியின் அருமை புதல்வன். உடன் பிறந்த தங்கை வெண்பா. பள்ளி இறுதி ஆண்டு வரை தன் சொந்த மண்ணான கோபிசெட்டிபாளையத்தின் ஒரு கிராமத்தில் படித்தவன். தந்தையின் கனவை தனது லட்சியமாய் சுமந்து நன்றாக படித்து மருத்துவக் கல்வியை கோவை அரசுகல்லூரியில் முடித்தான். நல்லவேளை அப்பொழுது நீட் தேர்வு நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. இல்லையெனில் நம் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்தவம் என்பது எட்டாக்கனி ஆனது போலே மதுரனுக்கும் நேர்ந்திருக்கும்.


மருத்துவப்படிப்பை முடித்தவன், சிறப்பு மருத்துவராக எலும்பு மூட்டு மருத்துவம் (Orthopaedic) பட்டம் பெற்றான்.


என்னதான் அவன் படிப்பு, கல்லூரி, மருத்துவம் என முழுக்க முழுக்க மருத்துவத்துறையில் அவன் கவனத்தை செலுத்தினாலும் அவன் ஒவ்வொரு அணுவும் தன்னைப் போலவே துளசியும் மருத்துவக் கனவுகளோடு படித்தவள் தானே... அவளும் மருத்துவ துறையை தேர்ந்தெடுத்திருப்பாளா என்ற ஆவலில் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் அவளை தேடிக்கொண்டிருந்தான்.


மதுரன் நான்காம் வகுப்பு படிக்கும் போது துளசி ஒன்றாம் வகுப்பு சேர்ந்தாள் அன்று முதல் மாணிக்கவாசகர் வாத்தியாரின் செல்ல மாணவி அவள்.


மாணிக்கவாசகர் அந்த கிராமப்புற மாணவர்களுக்கு என மாலையில் சிறப்பு டியூஷன் வகுப்பை எடுப்பார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை எப்படியாவது கரையேற்றி விட வேண்டும் என முனைவார். தன்வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் அனைத்து மாணவர்களையும் தன் டியூஷன் வகுப்பிற்கு வர சொல்லி பாடம் நடத்துவார்.


கல்வி ஒன்றே அடுத்த தலைமுறையையும், சமுதாயத்தையும் முன்னேற்றும் என்பது அவர் அறிந்த பால பாடம் அனுபவ பாடமும் கூட. அவரின் டியூஷன் வகுப்பிற்கு அந்த ஊர் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாத சுற்று வட்டாரத்திலிருந்து பல கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இவரிடம் டியூஷனுக்கு வருவார்கள் .




வள்ளுவனுக்கேற்ற வாசுகியாய் மனோன்மணி அம்மாளும் தனக்கு தெரிந்தவற்றை ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார். அப்படித்தான் துளசியை மதுரன் வீட்டிற்கு டியூஷன் கொண்டு வந்து விட்டார் துளசியின் தாய் பவானி.


வெண்பாவும், துளசியும் ஒரே வகுப்பு தான் என்றாலும் வெண்பாவைவிட துளசி ஒரு வருடம் மூத்தவள். துளசியை தாமதமாகவே பள்ளியில் சேர்த்தனர் பவானி, சின்னச்சாமி தம்பதியினர். அவளுக்கு அடுத்தடுத்து பிறந்த மூன்று பிள்ளைகளை வளர்க்க துளசியையும், அவளுக்கு மூத்தவளான ராதாவையும் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததை கண்டு மாணிக்கவாசகமே அவர்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்தார்.


பள்ளியிலும் சரி டியூசன் வகுப்பிலும் சரி ராதா, துளசி, வெண்பா மூவரும் ஒட்டிக்கொண்டே திரிவார்கள். தங்கைகளை பார்த்துக்கொள்ளவென ராதா பள்ளிவிட்டு நேரே வீடு செல்ல.. துளசி நேராக வெண்பாவோடும், மதுரனோடும் மனோன்மணியைத் தேடி வந்துவிடுவாள். மனோன்மணிக்கும் மாநிறத்தோடு, பளிச்சென்ற கண்களுடனும், குண்டு கன்னங்களுடனும், எப்பொழுதும் பச்சரிசி பல் காட்டி சிரித்தபடி வளைய வரும் துளசியை மிகவும் பிடிக்கும். வெண்பாவின் ஆடை அணிகலன்களை துளசிக்கும் உடுத்தி அழகு பார்ப்பாள். எல்லாவற்றையும் துளசியோடு பங்கு போடும் வெண்பா அண்ணனை மட்டும் விட்டுத் தரமாட்டாள். ஆரம்பத்தில் துளசி மதுரனை அண்ணாவென அழைக்க அழுது ஆர்ப்பாட்டம் செய்யலானாள். எதற்கும் மசியவில்லை. அவன் என் அண்ணன் எனக்கு மட்டும் தான் அண்ணன் அவ அப்படி கூப்பிட கூடாது என ஒற்றைக்காலில் நிற்பாள்.


மதுரனே அதற்கு தீர்வாய் "நீ மதுரன்னே கூப்டுக்கோ துளசி... எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. எங்க வெண்பாக்குட்டிக்கு மட்டும் தான் நான் அண்ணன். இல்லடா தங்கமயிலே.." என அவளை தூக்கி கொஞ்ச சமாதானமானாள் வெண்பா. எப்போதும் மதுரனுக்கு வெண்பா செல்லம், தங்கம், குட்டி தான். அதுவும் என் தங்கமயிலே என அண்ணன் கூப்பிட்டுவிட்டால் அதற்குபின் அவன் மொழிக்கு மறுமொழி கிடையாது வெண்பாவிடம்.


ஆண்டுகள் செல்ல, செல்ல மாணிக்கவாசகரின் மூலம் அந்த கிராமத்தில் கல்வி கற்று அடுத்த தலைமுறை முன்னேற ஆரம்பித்தது. கல்வியினால் சமூகத்தை சீர்திருத்தலாம் என்று எண்ணிய மாணிக்கவாசகர் தன் வீட்டின் மூத்த தலைமுறையை ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆம் அவர் தாய் ராசம்மாள் அந்த காலத்து மனுஷி. சாதி, மதம் பார்க்காமல் எல்லோரையும் வீட்டுக்குள் சேர்த்து படிப்பு சொல்லிக் கொடுக்கிறான் தன் மகன் என்று ஒரே காரணத்துக்காக தன் கணவனோடு தனியே பிரிந்து சென்றவர்.


தனியே என்றால் வேறு தெருவுகோ வேற ஊருக்கோ அல்ல.. மாணிக்கவாசகத்தின் வீடு அவர் ஆசிரியர் பணிக்கு வந்த பின் கட்டிய பழைய கையோடு வேய்ந்த எட்டுக்கட்டு வீடு. மாணிக்கவாசகரின் தந்தை ஒரு விவசாயி என்பதால் வீட்டின் முன் பெரிய களம் உண்டு. பெரிய திண்ணை வைத்த வீடு.



ஏற்கனவே தம் தாத்தா காலத்தில் கட்டிய வீட்டில் தான் மாணிக்கவாசகம், உடன் பிறந்த சகோதரி செல்லம்மா,பிறந்தது வளர்ந்தது எல்லாம் . மகன் ஊர் பிள்ளைகளை எல்லாம் வீட்டிற்குள் அனுமதிப்பது கண்டு பொறுக்காத ராசம்மா வசைப்பாட ஆரம்பித்தாள்.


"என்ன சாதியோ, என்ன சனமோ இப்படி எல்லாத்தையும் ஒன்னு மண்ணா புழங்க விட்டா நாங்க எப்படி அன்னந்தண்ணி உங்கறதுன்னு வேணாமா.." என உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். மாணிக்கவாசகம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.


"பெத்த தாயை விட ஊராம்புள்ளைங்க முக்கியமா போச்சா.. உனக்கு..." என்றபடி தங்கள் பழைய வீட்டிலே தனி குடித்தனம் சென்று விட்டார். பெருசுகள் இருவரும் அங்கே தான் ஜாகை. தப்பி தவறி கூட எந்த பிள்ளைகளும் அந்தப் பக்கமாய் கால் வைத்து விட முடியாது. அவ்வளவுதான், அவர்கள் குலம் கோத்திரத்தோடு சொல்லி வசைப்பட ஆரம்பித்து விடுவார் ராசம்மா.


தன் மாமியாரின் குணமறிந்த மனோன்மணி வரும் பிள்ளைகளிடம் முன்னமே எச்சரித்து விடுவார். கிழிக்கப்படாத லக்ஷ்மணன் கோடாய் இரண்டு வீட்டிற்கு இடையே கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு இருந்தது. அதை தாண்டி ராசம்மாவும் இங்கு வருவதில்லை மதுரனையும் வெண்பாவையும் தவிர வேறு யாரும் அந்த பக்கம் செல்ல முடியாது. மீறி சென்று விட்டால் ராசம்மாவின் ருத்ர தாண்டவத்தை ஒரு வாரம் வரை தாங்க வேண்டி இருக்கும்.


இது ஊர் அறிந்த செய்தி என்பதால் யாரும் தப்பி தவறி கூட அந்த பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள்.


மதுரனும், துளசியும் வெண்பாவும், ராதாவும் தங்கள் பால்யத்தை ஒன்றாக ஆனந்தமாய் கழித்தனர். ராதா எட்டாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்திக் கொள்ள துளசியும், மற்றவர்களுக்கும் பள்ளி படிப்பை தொடர்ந்தனர்.


என்னதான் மாணிக்கவாசகம் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் கல்வி கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் பெண்களுக்கு ஏனோ அது எட்டாக கனியாகவே இருந்தது பெரும்பாலும் வயது வந்ததும் அவர்களது கல்வி அத்தோடு முற்றுப்பெற்றது. என்ன செய்தும் அவரால் அதை மட்டும் மாற்றவே முடியவில்லை. ஒன்று இரண்டு பெண் பிள்ளைகள் 9 10 தாண்டினாலும் கல்லூரி வரை செல்லவில்லை. அதற்குள் அவர்களுக்கு கால் கட்டு போட்டு விடுவார்கள்.


ராதா பள்ளி படிப்பை நிறுத்தினாலும் துளசி தொடர்ந்தாள். துளசியுடன் அந்த வயதில் உள்ள பெண் பிள்ளைகள் எல்லாமே தங்களது கல்வியை தொடர்ந்தனர்.


துளசியும் வெண்பாவும் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுத மதுரன் தீவிரமாய் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினான்.


தேர்வு முடிந்த இரண்டாம் நாளில் அந்த ஊரின் பெரிய வீட்டு மகனோடு ராதா ஊரைவிட்டு ஓடி இருந்தாள். இன்றைய காலத்தில் கூட காதலித்தால் சேர்த்து வைக்க படித்தவர்களே யோசிக்கிறார்கள் எனும் போது சாதித் தீயில் ஊறி இன்னும் சாதி, மதம் பாரம்பரியம் கௌரவம் என தங்களை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி அவர்களும் வெளிய வராமல், யாரையும் உள்ளேயும் அனுமதிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழும் ஊர் அது. அப்படிப்பட்ட ஒரு ஊரின் தாழ்ந்த குடியாக கருதப்படும் ராதா பெரிய வீட்டு மகன் மணிகண்டனோடு ஊரைவிட்டு ஓடிவிட ஊரே ஒன்று திரண்டு துளசியின் தாய் தந்தையை கட்டி வைத்து அவர்கள் எங்கே என கேட்டு சித்திரவதை செய்தது.


அவர்கள் எத்தனை அழுதும், புரண்டும் கூட அவர்களை விடுவிக்கவில்லை அந்த ஊர் மக்கள். ஒரு கூட்டம் ஓடிப் போனவர்களை தேடிச் சென்று விட, மாணிக்கவாசகம் ஊரிடம் என்ன பேசியும்.. துளசியின் தாய் தந்தையை அவரால் விடுவிக்க இயலவில்லை.


அவர்கள் விடுவிக்கவில்லை எனில் தான் போலீசுக்கு போக நேரும் என்று அவர் ஒரு அரசு பணியாளனாய் மிரட்டியும் கூட அவர்கள் யாரும் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அவரும் அதை அறிவார். என்னதான் அவர் ஆசிரியராக அந்த சமூகத்தின் செல்லரித்துப் போன பழைய கட்டுப்பெட்டித்தனங்களை மாற்ற எண்ணினாலும், ஒட்டுமொத்த ஊரையும் எதிர்த்து தனி ஒருவரால் ஏதும் செய்ய இயலவில்லை. ஆனாலும் தன் கண் முன் குடும்பம் அழிந்து போவதை அவர் விரும்பவில்லை.


காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவென அவர் சென்று விட, திரும்பி வந்து பார்க்கும் பொழுது அந்த குடும்பம் அந்த ஊரிலேயே இல்லை.


பரீட்சை முடிந்து அடுத்த நாளே தன் அத்தை செல்லம்மாவின் ஊர் திருவிழாவிற்கு சென்று விட்டு திரும்பிய மதுரனும் வெண்பாவும் கண்டது துளசியின் எரிந்து போன குடிசையைத்தான்.


நிலைகுலைந்து போனான் மதுரன். எங்கே போனார்கள் என்னவாயிற்று என தந்தையிடம் கேட்டு அழுது அரற்றி ஓய்ந்து போனால் வெண்பா. அவருக்கும் தெரிந்தால் அல்லவா கூறுவார் அவருக்கே தெரியாத ஒன்றை என்னவென்று சொல்வார்.


ஒரு வாரம் கழித்து நடைபிணமாய் மணிகண்டன் அழைத்துவரப்பட்டான். ராதாவுக்கு என்ன நேர்ந்தது என்பது அந்த ஊரின் சிலரைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.

அவர்களும் பெரிய வீட்டு விசுவாசி என்பதால் விசயம் கடுகளவு கூட கசியவில்லை.


போலீசும் அந்த ஊரின் ஒர் அங்கமாகவே செய்பட மாணிக்கவாசகர்

தனி ஒருவராய் அந்த குடும்பத்தையும், ராதாவையும் தேடாத இடமில்லை. இன்றுவரை அவர்கள் யாரையும், யாரும் பார்க்கவில்லை எங்கே போனார்கள் என்ன ஆனார்கள். உயிருடன் தான் இருக்கிறார்களா என யாருக்கும் தெரியாமல் போனது.



"எங்கே இருக்க துளசி..? நிச்சயமா நீ உயிரோட தான் இருப்பேன்னு எனக்கு தெரியும்.எங்கேயடி மறைந்திருக்கிறாய்.." என அவன் மனம் உள்ளுக்குள் அழுது அரற்றியது.


காதல் என்றால் என்னவென்றே புரியாத வயதில்,மனதில் தோன்றிய ஓர் மெல்லிய உணர்ச்சி அவனுக்குள்.ஆம்..காதல் மலர்ந்த ஒரே மாதத்தில் காதலியை தொலைத்து விட்ட காதலன் அவன்.
 
அத்தியாயம் -2


கோவை மாவட்டத்தில் கோணியம்மன் கோவில் திருவிழா களை கட்டியிருந்தது. எங்கு காணினும் மக்கள் வெள்ளம். ஊரே பூக்கோலம் பூண்டு, புத்தாடை உடுத்தி, உற்சாகத்தில் மிதந்தபடி வலம் வந்து கொண்டிருந்தனர். பக்தி பரவசத்தோடு அம்மனை தரிசிக்க ஒரு பெரும் கூட்டம் வரிசையில் காத்திருந்தது. தரிசித்த பரவசத்தில் கோயிலை விட்டு வெளியே வந்தபடி ஒரு கூட்டம். கோவிலில் உள்ள சிலைகள் அழகா இல்லை கோவிலை வலம்வரும் இந்த பெண்சிலைகள் அழகா என காண்பதற்கென்று ஒரு பெரும் கூட்டம்.


கோவை மாநகரை பொறுத்தவரை உள்ளூர் வாசிகளை விட வெளியூர் வாசிகளே அதிகமாக இருப்பர். தொழில் மாநகரமான கோவைக்கு தமிழ்நாட்டின் பல மூளை முடுக்குகளில் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் குடிபெயர்ந்து வசித்து வந்தனர். பெற்றோரை விட்டு சொந்தபந்தங்களைப் பிரிந்து தன் தாய்மண்ணைவிட்டு இங்கு வந்து வேலை செய்து வாழும் இளைஞர், இளைஞிகள் அதிகம்.


அப்படி வந்த அத்தனை பேருக்கும் கோணியம்மன் திருவிழா ஒரு பெரும் கொடை. மகிழ்ச்சியோடு அத்தனையும் மறந்து தங்கள் நட்புகளோடு கைகோர்த்து சிரித்து மகிழ்ந்து வலம் வந்து கொண்டிருந்து அந்த பட்டாம்பூச்சி கூட்டங்கள்.


மதுரனும் அம்மனை தரிசிக்க வந்திருந்தான். கோவையின் ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்திருந்தது. நாளை அவன் பணியில் சேர வேண்டும். தன் நண்பன் ரகுபதியும் அதே மருத்துவமனையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராய் பணியாற்ற அவனுடனேயே தங்கிக்கொள்வதென முடிவெடுத்து இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டான்.


அம்மா மனோன்மணியின் அன்பு கட்டளை , பணியில் சேர்வதற்கு முன் கோனியம்மனை தரிசித்து அவள் ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பது. அதற்காகவே ரகுபதியோடு கோவிலுக்கு வந்திருந்தான்.


கல்லூரியில் படிக்கும் காலங்களில் அப்பொழுது அவர்கள் இங்கு வருவது வாடிக்கை தான் என்றாலும் இந்த திருவிழா கூட்டத்தில் இன்று வந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு மதுரனுக்குள். அம்மனை மனமுருகி வேண்டி நின்றான். அவன் வேண்டுதல் எல்லாம் ஒன்றே ஒன்று தான் துளிசியை காணவேண்டும் என்பது.


இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை சோதிப்பதாய் உத்தேசம், கொஞ்சமேனும் என் மேல் இரக்கம் காட்ட கூடாதா? எங்கிருக்கிறாள் என் கண்மணி? என அம்மனை இறைஞ்சி நின்றான்.


எப்பொழுதும் கோயிலுக்கு வந்து தொழும் வேளைகளில் எல்லாம் ரகுபதி ஆச்சரியப்பட்டு தான் போவான். படிப்பு, மருத்துவம், வேலை என்று அத்தனையிலும் இவன் பார்க்கும் மதுரன் வேறு, ஆனால் கோயிலில் தெய்வத்தின் முன் மனம் உருகி நிற்கும் இந்த மதுரன் வேறு.. கண்கள் பனிக்க உள்ளம் உருகி அவன் வேண்டி நிற்கையில் இறைவா இவனுக்கு வேண்டியதை அருளேன் என ரகுபதியையும் வேண்ட வைக்கும்.


"அப்படி என்ன தான்டா வேண்டுவ..." என எப்போது கேட்டாலும் மதுரனிடம் இருந்து வரும் ஒரே பதில்


"என் உயிரை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டுகிறேன்.." என்பான். அதற்கு மேல் அவன் எதுவுமே கூறியதில்லை. காதல் என்பது மட்டும் அவன் நண்பனுக்கு ஊர்ஜிதம். அதற்கு மேல் அவன் வற்புறுத்தவில்லை கோணியம்மனை மனதார வேண்டி விட்டு கோயிலை விட்டு வெளியே வந்தார்கள். மாலை மயங்கி இருள் கவிய தொடங்கியது. வெளியே வந்து அண்ணாந்து கோபுரத்தை நோக்கி வணங்கி விட்டு திரும்பியவனுக்கு அந்த அம்மனே வரமாக வந்தாளென ..... அது, அது துளசி தானே... அவள் அவனையே பார்ப்பதாகத் தோன்றியது. அவளே தான்... அது அவளே தான். அவன் இதயத்துடிப்பு உணர்ச்சி மிகுதியில் எகிற, மயக்கமுறும் நிலை அடையும் வேளையில் ,அருகில் இருந்த ரகுபதி அவனை தோளில் தட்டி என்னடா என கேட்கவும் ஒரு நிலைக்கு வந்தான்.அது அவள் தானே, அவளாகவே இருக்க வேண்டும் என அம்மனை வேண்டியபடி அவளை நோக்கி வேகமாக எட்டு வைத்தான்.


ஆம், அவள் என்னவள் தான் ,என் துளசி கிடைத்துவிட்டாள். பத்து வருட தவம். இதயம் படபடக்க, நடையில்

சிறுபிள்ளைகளின் துள்ளலுடன் பார்வையால் அவளை மனதில் நிறைத்துகொண்டே அவளை நோக்கி வேகமாக முன்னேறினான். கூட்டநெரிசலில் அது அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை. அவளை நோக்கி முன்னேற சட்டென அவள் பின்னடைவது அவனுக்கு தெரிந்தது. ஒரு நொடி தன்னை அவள் உற்று பார்த்தது போல் தோன்றியது மதுரனுக்கு.


துளசி..! அவனையறியாமல் அவன் உதடு முனுமுனுக்க அவளை நோக்கி வேகமாகச் சென்றான். அந்த திருவிழா கூட்டத்திற்குள் புகுந்து அவளை நோக்கிச் செல்லும் முன் அவள் மாயமாய் மறைந்திருந்தாள்.


எங்கே போனாள். சுற்றும் முற்றும் தேடினான். அவள் நின்றிருந்த அந்த கடையில் "அண்ணா இப்ப பச்சகலர் புடவை கட்டின பொண்ணு இங்க இருந்தாங்களே.. அவங்க எங்க...?" என விசாரிக்க அவர் பதில் அளிக்காமல் போகவே மீண்டும் மீண்டும் அதையே கேட்டபடி சுற்றிலும் பார்வையை சுழற்ற


"ஏ தம்பி நோம்பி நேரத்துல எத்தனையோ பேரு வருவாங்க.. யாவாரத்தை பாக்காம அவங்க எங்கேன்னா பார்த்துட்டு இருப்பேன்.." என வியாபார நேரத்தில் தொந்தரவு செய்யும் அவனிடம் சலித்துக் கொண்டார்.


'அது துளசியே தான். என் துளசியேதான். எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை கூட்டத்திலும் உன்னை அடையாளம் காண முடியாமல் போகுமா துளசி. எங்கே போன...? என்னை நீ பார்த்ததை நான் பார்த்தேனே... என்னைப் பார்த்தும் ஏன் துளிசி போன...' என அரற்றியபடியே கண்கள் கலங்க வெறி பிடித்தவன் போல தேடி அலைந்தான் மதுரன். அவன் என்ன தேடுகிறான் என்று புரியாமல் அவனுடன் சேர்ந்து அலைந்தான் ரகுபதி. அவன் மதுரா, என்னடா, இருடா என்றபடி அவனை தொடர்ந்து கொண்டிருந்தான்.



மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அந்த சுற்று வட்டாரத்தில் ஒரு அங்குலம் விடாமல் துளசி.. துளசி.. என தேடியலைந்தவன் எங்கும் அவளை காணாது போகவே, "எங்கடி போன.." என வாய்விட்டு அரற்றிய படி மண்டியிட்டு கதறியவனை கண்டு பதறிப் போனான் ரகுபதி.


ஒரு படித்த இளைஞன், ஒரு மருத்துவன் நட்ட நடு வீதியில் ஒரு பெண் பெயரைச் சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுகிறான் எனின் நண்பனின் மனநிலை அவனுக்கு தெளிவாக புரிந்தது. அருகில் இருந்த கடையில் தண்ணீரை வாங்கி நண்பனுக்கு குடிக்க வைத்து எழுப்பி ஒரு ஓரமாய் கொண்டு வந்து அமர்த்தினான். தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்து விட்டான் மதுரன். அவன் கண்களில் இருந்து வடியும் கண்ணீர் நிற்கவே இல்லை. ரகுபதியும், எவ்வளவு நேரம்தான் அவன் அப்படி அழுவதை பார்த்துக் கொண்டே இருப்பான். எழுந்து சென்று இரண்டு கப்புகளில் காப்பியை வாங்கி வந்து அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு மதுரனின் தோள்களில் கை போட்டு தேற்றிய படியே "உன் துளசியை கண்டுபிடிச்சிடலாம்டா.. முதல்ல காப்பிய குடி என நண்பனை ஆறுதல் படுத்தினான் ரகுபதி. கண்களை துடைத்தபடி மெல்ல காப்பியை குடித்து முடித்தான் மதுரன். மணி இரவு பதினொன்றை தாண்டி இருக்க திருவிழா கூட்டம் கலைய தொடங்கி இருந்தது. எழுந்து காலிக் கப்புகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தன் கலைந்த தலையை சரி செய்தவாரே நடக்கத் தொடங்கினான் மதுரன்.


மீண்டும் கோயில் வாசல் வந்து நின்றபடி கோபுரத்தை நோக்கி கை உயர்த்தி வணங்கினான் 'என் துளசியை என் கண்ணுல காட்டிட்ட.. சீக்கிரம் அவளை கண்டுபிடிச்சிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..' என கண்களில் நீர் வழிய வணங்கிவிட்டு நண்பனோடு கிளம்பினான்.


வழி நெடுகிலும் ஒன்றுமே பேசாமல் மதுரன் அமர்ந்து வர ரகுபதி வண்டியை இயக்கினான். வழி நெடுக மதுரன் மௌனமாய் எதுவுமே பேசாமல் வந்தாலும், அவன் மனதுக்குள் துளசி துளசி துளசி என பேரிரைச்சல். ஒரு நொடி ஒரே ஒரு நொடி என்றாலும் கூட அவள் கண்களை நேருக்கு நேராய் கண்டது பொய்யில்லை அது உண்மைதானே. அவள் என் துளசியே தான். பின் ஏன் என்னை பார்க்காமல் மறைந்துவிட்டாள் என மீண்டும் அவன் மனம் கலங்க.. ரகுபதி வாகனத்தை மெதுவாகவே இயக்கியதால் மதுரனின் கண்ணீர் துளி வழிந்து அவன் மேல் படவும் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினான். அமைதியாய் இறங்கி தன்னிலைக்கு வர முடியாமல் தவிக்கும் நண்பனை கண்டு கோபம் கொண்டான்.


"என்னதான்டா உன் பிரச்சனை சொல்லி தான் தொலையேன். என்னால உன்னை இப்படி பார்க்க முடியல டா..


"துளசிடா... என் துளசிடா.. பத்து வருசமாச்சுடா.. தொலைச்சிட்டு தேடிட்டு இருக்கேன்.‌இன்னைக்கு, இன்னைக்கு அவளை பார்த்தேன். ஆனா மறுபடியும் மாயமா மறைஞ்சிட்டாளேடா... என்னால தாங்கமுடியல ரகு... வாய் விட்டு அரற்றியவனை சமாதானம் செய்ய இயலாமல் அவனையே பார்த்திருந்தான்.


பத்து வருடங்களுக்கு முன் துளசி பட்டாம்பூச்சியாய் வளைய வந்த காலங்கள் கண்முன் தோன்றின.


அன்று ஊரில் அம்மனுக்கு காப்புகட்டி திருவிழா தொடங்கி இருந்தது. எப்பொழுதும் போல வெண்பாவுடன் சேர்த்து துளசிக்கும் மனோன்மணி புத்தாடை எடுத்து வைத்திருக்க புத்தம் புது மலராய் பாவாடை தாவணியில் அன்று தான் முதன் முதலாய் துளசியை கண்டான். பளிச்சென மின்னும் கண்களில் அன்று புதிதாய் ஓர் நாணம். அழகான இரட்டைபின்னலில் அடர் நீல நிற பாவடையில் ரோஜாநிற பட்டு சரிகை. அதே வண்ணத்தில் ரவிக்கை தாவணி அவளுக்கு பாந்தமாய் பொருந்திப் போக அத்தனை அழகாயிருந்தாள் அவள். அதே டிசைனில் பச்சை வண்ண பட்டில் அதே ரோஜா நிற ரவிக்கை தாவணி வெண்பாவுக்கு இருவருக்கும் தலைநிறைய பூவை சூட்டி நெட்டி முறித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார் மனோன்மணி.


"நாய குளிப்பாட்டி நடுவூட்ல கொண்டு வந்து கட்டுங்கடா... அது வாலயும் ஆட்டும் மூஞ்சயும் நக்கும்.." என ராசம்மாள் நொடித்துக் கொண்டு போக துளசியின் முகம் வாடியது கண்டு மதுரனின் மனம் வருந்தியது.


எல்லோரையும் சேர்த்து இழுத்துக் கொண்டு மனோன்மணி கோயிலுக்கு கிளம்ப திருவிழா கொண்டாட்டத்தில் ராசம்மாளின் கடுஞ்சொற்கள் காற்றோடு கரைந்துவிட்டிருந்தது.


வெண்பாவோடும், மதுரனோடும் வழக்கம் போல துளசி வர,

கண்ணாடி வளையல்கள் குலுங்க அந்த பாவாடை தாவணியில் வளைய வந்தது ,அத்தனை நாட்கள் இல்லாது மதுரனின் மனதினில் ஏதோ ஒரு வித இனம் புரியாத இன்ப அவஸ்த்தையை உண்டாக்கியது. அவளது துள்ளல் நடையும், சிரிப்பும் எல்லாமே அவன் சிறு வயது முதலே கண்டதுதான். ஆனால் இன்று எல்லாமே புதிதாகத் தோன்றியது அவனுக்கு.


"துளசி,நீ இத்தனை அழகா..." என கண்ணெடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். முதன் முதலாய் காதல் என்னும் மெல்லிய உணர்வு அவனுக்குள் முளைக்கத் தொடங்கியது.
 
அத்தியாயம் - 3


துளசி கிராமத்து தேவதையின் எளிய சாயல். ஆம் அவளை அப்படித்தான் சொல்லவேண்டும். மனோன்மணிக்கு எப்பொழுதும் அப்படியே தோன்றும். "லட்சணமா இருக்கேடி கண்ணு.." என்றபடியே அழகாய் மை தீட்டி விடுவார்.

துளசி எப்பொழுதும் படிப்பில் படுசுட்டி. கற்பூரபுத்தி ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில் பதியவைத்துக் கொள்வாள். மாணிக்கவாசகர் சொல்லிதருவதை எல்லாம் சட்டென பிடித்துக் கொண்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றுவிடுவாள். எல்லோருக்கும் ஒன்றாய்த் தான் பாடம் நடத்துவார். ஆனால் துளசி எப்போதும் புரிந்து படிப்பதில் புத்திசாலி. படிப்பு ஒன்றே நம் தலையெழுத்தை மாற்றும் என்ற மாணிக்கவாசகரின் சொல்லை மந்திரமாய் கொண்டு படிக்கலானாள்.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற சொலவடை ஒன்று உண்டு. அது ஊரின் தாழ்ந்த குடியாக கருதபடும் வகுப்பில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுந்தும்.

"ஏலேய் துளசி... இந்தா போற போக்குல இந்த கேவூர அந்த மூனாவது தெரு கோமதி வூட்ல கொடுத்துட்டு போய்டு.."என்பாள் சம்பூரணம்.

ஏய் இந்தாடி சின்னச்சாமி மவளே எங்க அவ்வளவு வெரசா போறவ.. பள்ளிகோடத்துக்கா.. ஆமா நீ படிச்சி என்னத்த கிழிக்கப் போற ... எப்படியும் உங்க ஆத்தா அப்பனோட சேர்ந்து அழுக்கத்தானே வெளுக்கப் போறவ.. கொஞ்சம் பொறு இந்தா இந்த சோத்து போசிய போற போக்குல மேட்டாங்காட்டால இருக்க அப்புச்சிட்ட குடுத்துட்டு போ..." என்று ஏவுவாள் இரண்டாவது தெரு ஞானாம்பா.

இந்தாடீ... போற போக்குல மணியாரு வூட்ல இந்த துணிய குடுத்துட்டு போ என கூறும் அம்மாவின் சொல்லை தட்டமுடியாமல் துணியை எடுத்துச் சென்றால் அங்கிருந்து அவ்வளவு சுலபத்தில் அவள் நகர்ந்துவிட முடியாதபடி அவள் மீது பணிச் சுமைகள் விழும். சும்மா போகும் கழுதைதானே கொஞ்சம் பொதியும் சுமக்கட்டுமே என்ற எண்ணம். எளியவரை ஏய்க்கும் மேல்தட்டு புத்தி. தன்னைவிட இளைத்தவரென்றால் என்ன வேண்டுமாலும் செய்துபார்க்கலாம் என்ற பொதுபுத்தி எல்லோரிடமும் மலிந்து கிடந்தது.

துளசி தன் குலத்தொழிலை என்றுமே தலைகுனிவாக எண்ணியதோ , சுணக்கம் காட்டியதோ இல்லை. ஆனால் ஊரில் உள்ள நண்டுசிண்டுகள் கூட மரியாதையில்லாமல் ஏவல் செய்யும் போது ஏன் என்ற கேள்வி அவளுள் தோன்றும். அதுவும் வயதில் மூத்த தன் அன்னை, தந்தையை அவளைவிட சிறியவர்கள் கூட பெயர் சொல்லி அழைத்து வேலை ஏவும் போது புரியாத வயதிலேயே அத்தனை ஆத்திரம் தோன்றும்.

"ஏம்பா எல்லாரும் தான் வேலை செய்யறாங்க ஆனா யாரையும் மரியாதை இல்லாம நடத்துறதில்ல. நம்மளை மட்டும் கேவலமா நெனக்கிறாங்க... ஆனா ஊருக்குன்னா மட்டும் உடனே கூப்டு வேலை வாங்கறாங்க..." என்று அறியாது கேட்டபோது

"அவுக ஏவல் சொல்ற சாதி நாம அந்த ஏவல செய்யுற சாதி சாமி..." என கூறிய போது அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் அவள் வளர, வளர இந்த சமூகத்தின் தீண்டாமைகளை நித்தம், நித்தம் அனுபவித்த போது அதை உணர்ந்தாள். மனிதனை மனிதன் அடிமையாக்கும் ஈனச்செயலுக்கு சாதி என்றொரு பெயர் உண்டென்று.

அத்தனைக்கும் மாற்றாய் கல்வி ஒன்றே இருக்கும் என மாணக்கவாசகரின் போதனை அவளை பதின்ம வயதிலேயே வைராக்கியமாய் படிக்க உதவியது. அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் மனோன்மணியும் மாணிக்கவாசகமும் மட்டுமே ஒரே ஆறுதல்.

தன் தாய் தந்தையின் வளர்ப்பினாலோ என்னவோ வெண்பாவும் மதுரனும் எப்பொழுதும் சாதி வேறுபாடு பார்த்ததே இல்லை அவர்களை பொருத்தவரை துளசியும் ராதாவும் மற்றவர்களும் எல்லோரும் ஒன்று என்று எண்ணம்.

சிறு வயது முதலே தன்னுடன் வளர்ந்ததாலேயே துளசியின் மீது மதுரனுக்கு எப்போதும் ஒரு பிரியம் உண்டு. அதுவும் அவளுக்கு 10 12 வயது இருக்கும் போது வெண்பாவை காப்பாற்றும் பொருட்டு ஒரு கருந்தேளை தன் கையால் அடித்து நசுக்கி இருந்தாள் துளசி. அதையும் மீறி தேள் துளசியை கடித்ததில் விஷம் பரவி இரண்டு நாட்களாக வலியில் துடித்ததை பார்க்க பார்க்க மதுரனால் தாங்க முடியவில்லை . தன் தங்கைக்கு வந்த ஆபத்தை ஏற்றுக் கொண்டு வலியில் துடித்த அவள் மீது இன்னும் அதிகம் பிரியமாகி போனது மதுரனுக்கு.

ஆனால் இது எதையுமே அவன் வெளிப்படையாக காட்டியதில்லை வழக்கம் போல படிப்பும் விளையாட்டுமாய் இருந்த அவர்கள் வாழ்வில் ,அவள் தாவணியிட்ட நாள் முதலாய் கூட்டுப் புழுவில் இருந்து வெளிவரும் பட்டாம்பூச்சியாக மாறி இருந்தது அவன் மனம்.

தன்னை மீறி தன் கண்கள் அவளைத் தொடர்வதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த இளம் பருவத்திற்கே உரிய பரபரப்பும், உற்சாகமும், குதூகலமும் அவன் மனதில். என்னவென்று புரியாத ஒரு உணர்வுடன் அவளைக் கண்டாலே மனதில் எழும் புத்துணர்வும் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுத்தது. பாடத்தில் வரும் தலைவன் தலைவி பற்றிய குறுந்தொகையும் அகநானூறும், புறநானூறும் அவனுக்கு இனிமையாய் இருந்தது.


கடந்த ஒரு மாத காலமாக அவன் துளசியை பார்க்காமல் ஒரு நாளும் நிறையாததை போல் உணர்ந்தான். இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென இப்போது ஏன் இந்த தவிப்பு என்ற அவன் கேள்விக்கு இதுதான் காதல் என்றவன் மனம் ஓங்கியுறைத்தது. இதெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் அந்த வயதில் அப்பொழுது தோன்றவே இல்லை.


தன் தங்கையின் சிநேகிதியாய் அவளோடு இருந்த பிரியம் எப்போது எந்த கணத்தில் தன் உள்ளம் கவர்ந்தவளானால் என்று மதுரனால் அறியமுடியவில்லை.
வெகுளியாய் வலம் வரும் துளசியின் பின்னே கன்றுகுட்டியாய் இவன் மனம் துள்ளி வந்தது. அவள் இருக்கும் நேரங்களில் எல்லாம் இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் போட்டி போட்டு பாடிக்கொண்டிருப்பார்கள்.

தங்கைக்காய் வளையல், பொட்டு, கம்மல் என வாங்கி வரலானான். அவளோடு சேர்த்து துளசிக்கும். தவறு தவறு, துளசிக்கு வாங்கி கொடுக்கும் சாக்கில் வெண்பாவுக்கும்.

ஆனால் இந்த மகிழ்ச்சி அத்தனையும் அந்த ஒரு இரவில் முடிவுக்கு வந்தது.


ராதாவும், மணிகண்டனும் ஊரைவிட்டு ஓடியதும், அதனால் துளசி குடும்பமே கண்காணாமல் போனதும் அதன் பின் அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் போனது மதுரனை மட்டுமல்ல மாணிக்கவாசகரையும் நிலைகுலையச் செய்திருந்தது.

அன்று முதல் மாணிக்கவாசகர் ஊருக்கு தெரியாமலும், மதுரன் தன் தந்தை கூட அறியாமலும் தேடிக்கொண்டு தானிருந்தனர். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

சிறு வயது முதல் தன்னோடு ஓடியாடி விளையாடிவள், தோழியாய் தன் வீட்டில் ஒருத்தியாய் வளைய வந்தவள், முதல் காதலை தனக்குள் விதைத்தவள் மாயமாய் மறைந்து போய்விட்டாள். அவள் அருகிலேயே இருந்திருந்தால் கூட அவள் மீது இவ்வளவு நேசம் உண்டாகி இருக்காதோ..‌ ஆனால் இந்த நெடிய பத்து வருடங்களில் அவள் மீதான நேசம் நாளுக்கு நாள் அதிகரித்ததே ஒழிய குறையவேயில்லை.

மதுரன் கூறியதை கேட்டு அதிசயித்து நின்றான் ரகு. சிறு வயதில் அனைவருக்குமே ஏற்படும் ஒரு முதல் காதலுக்காக ஒருவன் பத்து வருடங்கள் இப்படி தவம் போல் காத்திருக்க முடியுமா...? அதுவும் அவள் காதலித்தாளா என்பது கூட தெரியாமல். முதலில் அவளுக்கு காதல் என்றால் என்னவென்றே அறியாத வயதில்... இது எப்படி சாத்தியம் என்று தன் நண்பனிடம் வினவினான் ரகு.

ரகு.. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசி பழகி ஒன்னா கை கோர்த்து நடந்தா தான் காதலா... ஒருத்தரை பார்க்க வேணா.. பேச வேணா... பழகவேணா... ஆனா அவங்க நினைவுகளை மனசுக்குள்ள வெச்சிட்டு அவங்களோடவே ஒரு வாழ்க்கை வாழ்வோம் பாரு அதுவும் காதல் தான். அது நடக்குமா நடக்காதான்னு எல்லாம் தெரியாது. எதிர்காலத்துல பார்ப்போமா இல்லையான்னு கூட தெரியாது ஆனா நம்ம மனசுக்குள்ள எப்பவும் அவங்களுக்காக ஒரு வேண்டுதல் இருக்கும். அவங்களை நெனச்சாலே மனசுக்குள்ள ஒரு பூ பூக்கும். முகம் தானா புன்னகையை ஏந்தி நிற்கும். இறகு இல்லாமலே பறக்க ஆரம்பிப்போம். அவங்களுக்காக எதுவேணா செய்யலாம்னு ஒரு உறுதி வரும். அதுக்கு அவங்க கூட இருக்கனும்னு அவசியமில்ல.." என்ற நண்பனை வியப்போடு பார்த்தான்.

சற்று நேரம் அவனையே பார்த்திருந்தவன், " ஆமாடா மச்சான், நீ ஆர்த்தோபீடிக் தானே படிச்சே... சைக்காலஜில எதுவும் டாக்டரேட் பண்றியா என்ன", என அந்த இறுக்கமான சூழ்நிலையை சகஜமாக்க முயல...
துளசியின் நினைவுகளை அசைபோட்டு அவளை பற்றி பேசியதாலோ என்னவோ மதுரன் சற்றே தன்னிலைக்கு வந்திருந்தான்.

"டேய்..." என மதுரன் முறைக்க

"பின்ன என்னடா... பத்து வருசத்துல அவளுக்கு கல்யாணம் ஆகி புள்ளகுட்டி கூட பொறந்திருக்கலாம். அப்போ பார்த்த ஒருத்திய லவ் பண்றேன்னு சொன்னதில்லாம பூவே உனக்காக விஜய் மாதிரி
டயலாக்கெல்லாம் பேசிட்டு இருக்க..." என்றான்.


ஒரு வேளை ரகு கூறியது போல் அவளுக்கு திருமணம் நடந்திருக்குமா..? குழந்தைகள் பிறந்திருக்குமா...? ஆனால் சிலமணிநேரங்களுக்கு முன் பார்த்த அந்த தீர்க்கமான கண்கள் அவனுக்கு வேறு எதையோ உணர்த்துவது போலல்லவா இருந்தது. என்ன அது. நிச்சயமாக அந்த பார்வையில் காதலும் இல்லை, ஏக்கமும் இல்லை. நீண்ட நெடிய
காத்திருப்பிற்கு பின் ஒருவரை கண்ட பரபரப்போ பரிதவிப்போ கூட இல்லை. மாறாக அவளது பார்வையின் பொருள் என்ன..? குழம்பிப்போனான் மதுரன். மீண்டும் நண்பனின் முகம் மாறுவது கண்டு

"டேய் யப்பா ராசா... பசிக்குதுடா... வயிறு கிள்ளுது. காலைல டூட்டிக்கு போகனும். போன போக்குல ஏதாவது வயித்துக்கு போட்டு போய் கொஞ்ச நேரமாச்சும் தூங்கலாம் வர்றியா.." என கெஞ்ச

ஒருவாறாய் சமாதானமாகி வழியில் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.


பரபரப்பான காலை வேளையில் அந்த பிரபல மருத்துவமனையின் எலும்புமூட்டியல் சிறப்பு மருத்துவராக பணியில் அமர்ந்தான் மதுரன். மருத்துவமனையின் உள்ளே வந்துவிட்டால் அவன் ஒரு சிறந்த மருத்துவன். நோயாளிகளின் தன்மை அறிந்து அவர்களுக்கேற்றபடி அவர்கள் போக்கில் பேசி வைத்தியம் பார்ப்பதில் சமர்த்தன். காலை முதல் புறநோயாளிகளை பார்த்துவிட்டு பணியில் தன்னோடு மூத்த மருத்துவர் ஒருவர் உள்நோயாளிகள் பிரிவில் பார்வையிட செல்ல அவரோடு பேசியபடியே அவனும் உள்நோயாளிகள் பிரிவில் நுழைந்தான். மருத்துவர்களாய் தங்களுக்குள் விவாதித்தபடி உள்ளே நுழைந்தவர்களை

குட் ஆப்டர்நூன் டாக்டர் என்ற குரல் கலைத்தது.

அங்கே ஆகாய நீல நிற சீருடையும் தூக்கி போடபட்ட கொண்டையில் அதே நீல நிற சீருடை தொப்பியோடு அவள் நின்றிருந்தாள்.

அது துளசி. அவனுக்குள் லட்சோபலட்சம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன. அவளே தான். அது அவன் துளசியே தான். அவன் மனம் பரபரத்தது. அவள் கைகளை பிடித்துக்கொண்டு துளசி என கதறவேண்டும் போல மனம் துடித்தது. ஆனால் அங்கே உள்ள சூழல் அவனை சற்றே நிதானமாக்கியது. ஆனால் அவளோ அவனை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஏன்..? அது துளசியே தான். அதில் அவனுக்கு எந்த ஐயமும் இல்லை. அவனோடு சேர்ந்து விளையாடி அவன் வீட்டில் செல்லபிள்ளையாய் வளர்ந்த அவள் முகம் அத்தனை எளிதில் அவனுக்கு மறந்துவிடக்கூடியதா...?

அதே முகம், அதே கண்கள், ஆனால் அந்த கண்களில் எந்தவித சலனமும் இல்லை. இன்னும் சற்றே கறுத்துவிட்டாளோ என்று தோன்றும் அளவிற்கு சற்றே கறுத்து மெலிந்திருந்தாள். இதயம் படபடக்க உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அவளையே விழியெடுக்காமல் அவன் பார்த்துக் கொண்டிருக்க

குட் ஆஃப்டர்நூன் ஏஞ்சலின் என்றவாரே மூத்தமருத்துவர் நோயாளிகளை கவனித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அவருக்கான பதில்களை அமைதியாக கொடுத்தபடி உடன் நடந்தாள் ஏஞ்சலின்.

ஏஞ்சலின் ஆ .... இவள் என் துளசி ... என் துளசி எப்போது ஏஞ்சலின் ஆனாள். ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் மதுரன்.


தொடர்வார்கள்...
 
அத்தியாயம் - 4

ஏஞ்சலினா... நிச்சயமாய் இவள் ஏஞ்சலின் இல்லை. இவள் என் துளசி. எத்தனை வருடங்கள் ஆனால் என்ன அவள் முகம் எனக்கு மறந்துவிடுமா என்ன..? முகம் மறந்தால் கூட இந்த உணர்வு. அவளைக் கண்டது முதல் உள்ளமெல்லாம் சிலிர்த்து என்னுள் பூத்து நிற்கும் இந்த மகிழ்ச்சி இதெல்லாம் இன்னொரு பெண்ணை கண்டால் ஏற்படுமா என்ன..? இவள் நிச்சயமாக துளசியேதான் என எண்ணியபடி
அவள் பெயர்பட்டியை அவன் அவசரமாக நோக்க அதில் ஏஞ்சலின் ரோஸ் பி.எஸ்ஸி நர்ஸிங் என்று குறிப்பிட்டிருந்தது.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நடப்பவை எல்லாம் அவனுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவனுக்கு ஒன்று மட்டும் உரைத்தது. அவள் இவன் புறம் திரும்பவேயில்லை. ஏதோ மூன்றாவது மனிதனை காண்பது போல் கூட அவள் தன்னை நடத்தவில்லை. தன்னியல்பாய் நோயாளிகளின் உடல்நிலை பற்றி எடுத்துரைத்து அதற்கு மருத்துவர் கூறும் மருந்துக்களைக் குறித்தபடி தன் பணியில் கருமமே கண்ணாயிருந்தாள்.

சில நிமிடங்களில் மதுரன் தன்னை இயல்புக்கு கொண்டுவந்தான். இது மருத்துவமனை. இங்கே தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை எப்படியும் துளசியை கண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி அவன் உள்ளம் முழுவதும் நிரம்பி வழிந்தது அவளை கண்களால் அளந்து கொண்டே மூத்த மருத்துவர் நோயாளிகளை பரிசோதித்து விட்டு அவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்துக் கொண்டிருந்தான். அந்த உட் நோயாளிகள் பிரிவு முழுவதும் பார்த்துவிட்டு தேவையான நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளையும் அறிவுரைகளையும் வழங்கிவிட்டு திரும்பும் போது அங்கிருக்கும் பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு மதுரனை அறிமுகம் செய்தார் மூத்த மருத்துவரான டாக்டர் கார்த்திக்.

சிஸ்டர்ஸ் இவர் தமிழ்மதுரன் ஆர்த்தோபீடிக். இன்னிலிருந்து இங்க ஒரு சார்ஜ் எடுத்து இருக்காரு. என்று அவனை அறிமுகம் செய்தவர்.

இவங்க ஏஞ்சலின் ரோஸ் இந்த டிபார்ட்மெண்ட் ஹெட்நர்ஸ். இங்க எது தேவைன்னாலும் எந்த சந்தேகம்னாலாம் ஏஞ்சலினை கேட்டுக்கலாம் டாக்டர். என சுருக்கமாய் தன் அறிமுகத்தை முடித்தார் டாக்டர். கார்த்திக்.

"ஹாய் ஏஞ்சலின்.." என்றவன் அந்த ஏஞ்சலின் என்ற பெயரை சறாறே அழுத்தமாய் உச்சரித்தானோ.

அவளும் பதிலுக்கு ஹாய் டாக்டர் என்றவள் மருந்துக்கு கூட சிரிக்கவில்லை என்பதை மனதில் குறித்துக்கொண்டான். மற்றவர்களையும் அறிமுகபடுத்திக்கொண்டு அவர்கள் கிளம்ப ஒரு நீண்ட பெருமூச்சோடு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஏஞ்சலின்.

அவள் அப்படி அமர்வதை அவளறியாமல் பார்த்துவிட்டே சென்றான் மதுரன். தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவன் மனம் இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தது என் துளசி கிடைத்து விட்டாள். என் பொக்கிஷம் எனக்கு திரும்ப கிடைத்துவிட்டது. இத்தனை நாட்கள் இங்கே எங்கே என ஏங்கி தவித்து தேடிக் கொண்டிருந்தவள் இன்று கண்ணார கண்டு விட்டேன் என மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தாலும் ஏன் என்னை தெரிந்ததாய் அவள் காட்டிக் கொள்ளவில்லை துளசி எப்படி ஏஞ்சலின் ஆனால் பார்வையால் கூட தன்னை தெரிந்தது போல் அவள் காட்டிக் கொள்ளவில்லையே என்னவாக இருக்கும் என்னை மறந்து விட்டாயா பத்து வருடங்களை அவள் இல்லாமல் நான் தவித்த தவிப்பு ஒவ்வொரு கணமும் அவளைப் பற்றியே எண்ணி மறுகி கொண்டிருக்கிறேனே என்னை பற்றி ஒரு சிறு நினைவு கூடவா அவளுக்கு இல்லாமல் போயிருக்கும் வெண்பாவையும், என்னையும், அம்மாவையும், அப்பாவையும் அவ்வளவு சீக்கிரத்தில் அவள் மறந்து விட முடியுமா...? ஏன்...?எதனால்..? என்ன..? என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் அவனுள்.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன். துளசி கிடைச்சிட்டா... இனி எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். அவ எந்த பேர்ல இருந்தாலும் அவ என் துளசிதான். அதுல எந்த மாற்றமும் இல்லை என்று எண்ணியபடியே தன் நண்பனைத் தேடிச் சென்றான்.

மதிய உணவு இடைவெளிக்காய் அவனோடு கேன்டீன் சென்றவன் விசயத்தை விளக்க..

என்னடா சொல்ற இங்கயா... அதுவும் உன் டிபார்ட்மெண்ட்லயேவா... நல்லா பார்த்தியா அது துளசி தானா.. என சந்தேகத்தோடனேயே கேட்டான்.

"ஆமா டா அது துளசிதான். ஆனா..." என இழுத்தவன் அவள் பெயர் மாற்றம் பற்றி குறிப்பிட


சற்றே யோசித்த ரகுபதி நீ சொன்னதை வெச்சு பாக்கறப்ப அவ தன்னை யாரும் அடையாளம் தெரிஞ்ச்சிக்ககூடாதுன்னு கூட பேரை மாத்தி வெச்சிருக்கலாம்ல என்று கூற மதுரனுக்கும் அது சரியென்றேபட்டது.


"ஆனா அது உண்மைலயே துளசிதானா...." என மீண்டும் சந்தேகத்துடன் வினவினான் ரகு.

கோபத்தோடு தன்னை நிமிர்ந்து பார்த்தவனை சரி..சரி... இந்த காணமா போனவங்களை கண்டுபிடிக்கற மாதிரி, குடும்ப பாட்டு, குடும்ப மச்சம்னு ஏதாவது இருக்கா உன் துளசிக்கு என அவன் விளையாட்டாய் கிண்டலடிக்க

துள்ளி எழுந்தான் மதுரன் அவனையும் இழுத்துக்கொண்டு எலும்புமூட்டியல் வார்டு நோக்கி வரும்போதே ரகு துளசிக்கு வலது கையில் சுண்டுவிரலுக்கு அடுத்து குட்டியா ஒரு ஆறாம் விரல் உண்டு. வெண்பாவுக்கு அது ரொம்ப புடிக்கும். அவளோட இருக்கும் போது எப்பவும் அந்த குட்டிவிரலை பிடிச்சிட்டு விளையாடிட்டேதான் பேசுவா. என கண்களில் புதுவிதமான பரபரப்போடு வேகமாக நடையோடே நண்பனிடம் கூறினான்.


"ஹேய் நான் விளையாட்டா கேட்டேன்டா நீ நிஜம்மாலுமே அப்படி ஒரு அடையாளம் இருக்குன்னு சொல்ற..." என ஆச்சர்யத்தோடு அவனோடு உடன் நடந்தபடியே கூறினான்.

அவள் தன் துளசிதான் என்று
நண்பனின் சந்தேகமற நிருபிக்கவேண்டுமென்ற ஆவல் ஒருபுறமும், அவளுக்கு தன்னைத் தெரிவித்துவிடவேண்டாமென்ற தவிப்பு ஒருபுறமுமாய் வார்டை அணுகினான்‌.

உள்ளே நுழையும் போதே ஒரு நோயாளியின் அறையில் இருந்து அவள் வெளியே வருவதை அவன் பார்த்துவிட்டான்.


பரபரப்பாய் அருகில் வந்தவள் "எஸ் டாக்டர்..." என தன் சீருடையின் பாக்கெட்டினுள் தன் கைகையை நுழைத்தவாரே அவர்களை எதிர்கொண்டாள் ஏஞ்சலின்.

நீ.... நீங்க துளசி தானே... என்றான் சற்றே தவிப்புடன்.

துளசியா... நான் ஏஞ்சலின் டாக்டர் நீங்க வேற யாரோன்னு நெனச்சு என்ட்ட பேசறீங்க...என்றாள் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமலே.


அவன் உறுதியாய் அவள் முகத்தை பார்த்தவாறே இல்ல நீ துளசி தான். என் துளசியை எனக்கு தெரியாதா என்றவாறே அவள் கையை காட்டி அவளை ஊர்ஜிதபடுத்த எண்ணி அவள் கையைப் பற்ற..

சட்டென கையை பற்றியதும் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது. சுற்றிலும் பார்த்தாள். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணுகிறாளாவேன மதுரன் எண்ணினான்.

கையை விடுவிக்க முயன்று தோற்றவாறே

"ப்ளீஸ் டாக்டர் விடுங்க.." என்றாள்.

"நோ... நீ என் துளசி தானே.. பின்னே ஏன் ஏஞ்சலின்னு ஏமாத்துற.." என கேள்வி எழுப்ப


அவள் முகம் கடுக்க தன் கையை உதறி "ச்சீ கையைவிடு.." என்றபடி விடுவித்தவள் கரம் பளாரென அவன் கன்னத்தை பதம் பார்த்தது .

சட்டென அவன் காதுகள் அடைத்து உலகமே நிசப்தமானது போல் இருந்தது அவனுக்கு. கன்னத்தை பிடித்தபடி ஒரு நொடி தள்ளாடி நின்றவனை "தமிழ்.." என்றபடி ஓடி வந்து தாங்கி நின்றான் ரகுபதி.

"ஏய்..." என ரகுபதி முஷ்டியை இறுக்க அவனை அடக்கியபடி

ஏன் துளசி நான் உன்னை தொடக்கூடாதா.. என ஏக்கமாக கேட்டவனிடம்

"யார் நீ.." என்றாள் அவள் உக்கிரகாளியாய் மாறி. கனல் வீசிடும் வார்த்தைகளால் அவனைக் கேட்டது அவள் தான் என நம்பமுடியவில்லை அவனால்.

"துளசி... என்னையா யார்ன்னு கேட்கற.." அவன் உடல் இறுகியது.

"உன்னைத் தான் கேட்கிறேன். யார் நீ.." என அதை உக்கிரத்தோடு மீண்டும் அவள் நாக்கு அமிலத்தை துப்பியது.

அவன் முகம் கறுத்து, உடல் இறுகி அவளையே பார்த்திருக்க அவனைத் துளியும் கவனிக்காது, அங்கு அப்படி ஒருவன் இருக்கிறான் என்று கூட தெரியாதது போல் முகத்தில் அதே உக்கிரம் தாண்டவமாட, அதே நேரம் தன்னியல்பாய் அவள் பணிகளை பரபரப்பாய் தொடர்ந்து கொண்டிருப்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அவன் கண்கள் அவளைவிட்ட நகரவேயில்லை. நடந்ததை எல்லாம் கண்ட ரகு அவன் பார்வை அவளை விட்டு நகராது இருப்பதை கண்டவன் நண்பன் தோள் தொட மதுரனோ அவளை ஏறிட்டு காட்டினான். மதுரனின் குறிப்பறிந்து அவன் ஏஞ்சலினை நோக்க வேலை செய்து கொண்டிருந்தவனின் கையில் அந்த ஆறாம் விரலைக் கண்டான்.

மதுரன் இன்னுமும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளோ அங்கே எதுவுமே நடக்கவில்லை.. தன்னருகே யாருமே இல்லை எனும் விதமாய் தன் பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தாள்.

"துளசி.." என மீண்டும் அழைத்தவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள் ஏஞ்சலின். "டாக்டர்... ப்ளீஸ் உங்க ப்ரொபஷன்க்கு நான் மரியாதை தர்றேன். தயவு செய்து கிளம்புங்க... என்னை டிஸ்டர்ப் செய்யாதீங்க.." என்றாள் அடக்கப்பட்ட சினத்தோடு.

"நீங்க ஏஞ்சலின்னா... உங்களுக்கு ஏன் என்னை பார்த்து இவ்வளவு கோபம்.." என்றவனை ஏறிட்டு பார்த்தவள்

"ஒரு பொண்ண கையபுடிச்சு இழுத்தா சிரிச்சிட்டே கூட வருவாங்களா டாக்டர்.." என்றாள் அதே கோபத்தோடு



"தமிழ்.. வா.." என அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றான் ரகுபதி.

"நிச்சயம் நீ துளசிதான்..." என்றான் உறுதியோடு

கையில் இருந்த பைலை கோபத்தோடு பட்டென்று வைத்தவாறே ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையை சத்தமில்லாமல் உதிர்த்தாள் ஏஞ்சலின்.

அதற்கு மேல் மதுரனை அங்கே நிற்கவிடவில்லை ரகுபதி. நேராக கேண்டீன் இழுத்து வந்தான். அவனை அமரச்செய்துவிட்டு இரண்டு காபியை ஆர்டர் கொடுத்து விட்டு நண்பனிடம் வந்தான்.

"சோ... இது துளசி தான்னு கன்பார்மா சொல்றியா... ?"


"ம்.. அவளே தான்... ஆனா என்னை ஏன்டா தெரியாத மாதிரி நடந்துக்கனும். நான் என்ன செய்தேன்..." அவளின் செயலுக்கு காரணம் தெரியாமல் புலம்பினான்.

"நிஜம்மாவே உன்னை அடையாளம் தெரியலயோ என்னவோ... இல்ல அவளை போல உருவ ஒற்றுமை இருக்க வேற யாரோவா கூட இருக்கலாம்ல... என்றவனை கோபத்தோடு நோக்கினான் மதுரன்.

கொஞ்சமாவது படிச்ச டாக்டர் மாதிரி பேசுடா... ஒரே மாதிரி சாயல் கூட இருக்கலாம். ஒரு மாதிரி ஆறாவது விரலுமா இருக்கும்..." என்றான் கோபம் குறையாமலேயே

"இப்பத்தான் நாம டாக்டர்ஸ்ஸூன்னு ஞாபகம் வருதா உனக்கு. அவ வேற யாரோவா இருந்தா கொஞ்ச நேரத்துல உன் சீட் கிழிஞ்சிடும் டாக்டர். தமிழ்மதுரன்.."


"ஏன்..." என்றான் புரியாமலேயே

"ஏனா... என்ன டாக்டர் ஒரு ஸ்டாப்ப கைய புடிச்சி இழுத்திருக்கீங்க... அவங்க மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைண்ட் செய்யமாட்டாங்களா..."

"ஓஓ... ஆமால்ல... ஆனா அவ கம்ப்ளைண்ட் செய்யமாட்டா பார்க்கறியா.." என சவால் விடும் தொணியில் கேட்டான் மதுரன்.


"ஓகே... அவ கம்ப்ளைன்ட் செய்தா அவ ஏஞ்சலின் நீ ஒத்துக்கறியா...."

"அவ துளசிதான்... நிச்சயமா அவ கம்ப்ளைண்ட் செய்யமாட்டா... வேணா பார்.. என்றான் உறுதியாக

"எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல மேனேஜ்மெண்ட்லேர்ந்து கூப்ட போறாங்க... உன் கூட வந்த பாவத்துக்கு உன்னோட சேர்ந்து எனக்கும் ஆப்பு வெக்க போற அது தான் நடக்கப் போகுது பாரு..." என்றான் முறைத்த மதுரனை கிண்டலாய் பார்த்தபடியே

உனக்கு அவளை பற்றி தெரியாதுடா... என்றபடியே அவளது நினைவுகளில் மூழ்கி போனான்.

தொடர்வார்கள்....‌
 

New Threads

Top Bottom