அத்தியாயம் 14
"எதே சகலையா.... என்னடா கொஞ்ச நேரம் முன்ன வரைக்கும் மச்சான்னு தான்டா கூப்ட இப்ப என்ன புதுசா சகல..." நண்பனை ஏற இறங்க பார்த்தபடி மதுரன் கேள்வி கேட்க
இரண்டு கைகளின் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் குவித்து ஒன்றாக்கி அபிநயத்தபடி "அது வந்து எப்படியும் ஒரே வீட்டில் பொண்ணெடுக்க போறோம் அதுதான் இப்பவே சகலன்னு கூப்பிட்டு பழகிக்கலாம்னு.." என்று வெட்கத்தோடு ரகு கூறியதை கேட்டு திகைத்து போனான் மதுரன்.
"ஒரே வீட்ல பொண்ணா ... அடேய் என்னடா சொல்ற... யாரை சொல்ற ராதாவா அருந்ததியா..." என்று அதிர்ந்தான்.
"ச்சீ.. அருந்ததி நம்ம கொழுந்தியாடா... ராதா தான்.." என்று மேலும் வெட்கப்பட்டு நிற்க,
சட்டென மனம் மகிழ்ந்தாலும் ரகுவின் இந்த செய்கை மதுரனை குழப்ப
"அடச்சீ முதல்ல இப்படி வெட்கபடுறது நிறுத்து கெரகத்த பாக்கவே சகிக்கல... ஒழுங்கா விசயத்தை சொல்லு. துளசிக்கு என்னாச்சுன்னு விசாரிக்கத் தானே போன இப்ப என்ன புதுசா வந்து கதை சொல்ற.." என சந்தேகத்தோடு வினவினான்.
"துளசிக்கு என்ன ஆச்சுன்னு தான் கேக்க போனேன். ராதா மட்டும் தான் இருந்தா. அவகிட்ட கேட்டா என்னால தான் துளசி இப்படி இருக்கா போல இருக்கு நான் ஊருக்கே போறேன்னு அழ ஆரம்பிச்சிட்டா.. அவ அழுவதை பார்த்து மனசு தாங்கலடா சமாதானப்படுத்தி பேசிட்டே அவளை பார்த்தேனா... அவ்ளோ தான்டா சகல... ப்ளாட் ஆயிடடேன்டா..." என்றான் ரகு.
"டேய் நிஜமா தான் சொல்றியா... என் மனசை திசை திருப்ப நீ விளையாடலயே..."
"இல்லடா... நிஜம்மா தான் சொல்றேன். நான் சொல்றவிதம் உன் மனசை திருப்ப தான். ஆனா சொல்லும் செய்தி உண்மை தான் சகல. இன்னைக்கு தான் அவளை சரியா பார்த்தேன். என்னா லட்சணமான பொண்ணு டா.. எந்த செயற்கை அலங்காரமும் இல்லாம ஹோம்லியா அழகா இருக்கால்ல. ச்சே இத்தனை நாளா இவளை நல்லா பார்க்காம விட்டேனேடா என குறைபட்டுக் கொண்டான்.
"அப்ப நீ துளசியை பத்தி விசாரிக்கல அங்க போய் ராதாவை சைட் அடிச்சிட்டு இருந்திருக்க அதானே..."
"நோ.. நோ... ழெவ் பண்ணிட்டு இருந்தேன்."
"ழெவ்வா.... அதென்னடா ழெவ்வூ...."
"லவ் ன்னு சொல்லி பாரு எஃபெக்ட் லைட்டா தான் இருக்கும். அதே ழெவ்வ்வ்... சொல்லி பாரு எஃபெக்ட் ஸ்ட்ராங்கா இருக்குல்ல அதான்..."
"கெரகத்த... இனி இந்த தொயரத்தெல்லாம் வேற பாக்கனுமா... ஆமா அதுசரி
என்னடா ஸ்ட்ரெய்ட்டா லவ்வுங்கற, இந்த சைட்டு... பாக்கறது, ரசிக்கிறது அப்புறமா லவ் பண்றதுன்னு லா இல்லையா..."
"நோ வேஸ்ட் ஆஃப் டைம்... நான் ழெவ் பண்ணிட்டே சைட் அடிக்க போறேன், பாக்க போறேன், பேச போறேன், ரசிக்க போறேன். இத்தனை நாள் என்னை வெறுப்பேத்தினேல்ல இனி பாரு இந்த காளியோட ஆட்டத்த..." என்ற ரகுவை பார்த்து உண்மையிலேயே மிரண்டு போய் நின்றிருந்தான் மதுரன்.
"டேய் இதெல்லாம் விளையாட்டில்ல... வாழ்க்கை. ராதா இப்ப தான் கொஞ்சம் தேறி வர்றா... இப்ப போய்.." என்று நிறுத்தினான் மதுரன்.
"சோ வாட்... நான் ராதாவை விரும்பறது தப்புங்கறியா.." என்றான் நண்பனை நோக்கி நேரடியாக
"தப்புன்னு சொல்லல. உன்னை மாதிரி ஒருத்தன் ராதாவுக்கு கெடச்சா அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு வேற எதுவுமில்ல. ஆனா ராதா இதுக்கு சம்மதிக்கனும். உங்க விட்ல சம்மதிக்கனும். இன்னும் எத்தனையோ இருக்கே.."
"ஓ... சார் எல்லார்கிட்டயும் சம்மதம் வாங்கிட்டு தான் லவ் பண்றீங்களா...? அதென்ன டா உங்களுக்கு ஒரு சட்டம் எனக்கொரு சட்டம். நல்ல போங்காட்டமா இருக்கே.. இங்க பாருங்க சகல... நீங்க துளசிய பாருங்க பாக்காம போங்க... உங்க ஊட்ல சம்மதம் வாங்குங்க வாங்காம போங்க... ஆனா நான் ராதாவை ழெவ் பண்றது கன்பார்ம்...ஹான்..." என சூரி மாடுலேஷனில் கூறி முடிக்க.
மகிழ்ச்சி ஒரு புறமும், வருத்தம் ஒரு புறமுமாய் மதுரனால் இதை எப்படி எடுத்துக்கொள்வதென்றே புரியவில்லை.நண்பனின் முகம் தெளியாதது கண்ட ரகு
"என்ன இன்னும் இது உண்மையான்னு உனக்கு சந்தேகமா...? இங்க பாருங்க சகல... நான் சகலன்னு உங்களை கூப்டற வார்த்தை நிஜம். எனக்கு கல்யாணம்ன்னு ஒன்னு நடந்தா அது ராதாவோட தான்னு அவ வீட்லேர்ந்து வெளியே வரும்போதே முடிவு பண்ணிட்டு தான் வந்தேன். அதனால நீங்க என்ன பண்றீங்க இனி ரெண்டு பேரு ழெவ்வுக்கும் சேர்த்து யோசிப்பீங்களாம். சரியா.." என்று முடித்தான்.
எவ்வளவு பெரிய விசயத்தை இப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டான்.
"ரகு.. ராதாவை முழுசா தெரியாம.." என்று முடிக்கும் முன்னே குறுக்கிட்டான் ரகு.
"ராதாவோட இறந்தகாலம் எதுவும் எனக்கு தேவையில்லை. இன்னைக்கு நான் பார்த்த ராதாவைத்தான் நான் விரும்பறேன். அவ என்னை விரும்பலேன்னா கூட அவங்கப்பாட்ட பேசி முறைப்படி தாலி கட்டி கல்யாணம் செய்துகிட்டு அவளை விரும்பவெச்சிக்கறேன். இதுக்கு மேல அவ பாஸ்ட் லைஃப், ஜாதி, மயிறு, மண்ணாங்கட்டின்னு ஏதுவும் எனக்கு தேவையில்ல. இதை எதையும் நானும் பார்க்க மாட்டேன் என் வீட்லயும் பார்க்கமாட்டாங்கன்னு உனக்கே தெரியும். ஏற்கனவே எங்கம்மா மானங்கெட பேசறது உனக்கே தெரியும். இன்னைக்கோட அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளிய வெச்சிட்டு இந்தாம்மா உன் மருமக வந்து பாத்துக்கோன்னு சொல்ல போறேன்.... என்று பேசியவனை ஆரத் தழுவிக் கொண்டான் மதுரன்.
"டேய்.. டேய்.. போதும்டா வுட்றா.... ச்சைக் ஒரு ஆம்பளைய கட்டிபுடிச்சிட்டு..." என்றவன்
"இப்படித்தான் மச்சினிய கட்டிபுடிச்சீங்களா சகல... அதான் ஓங்கி சப்புன்னு ஒன்னு வெச்சிட்டா.." என்று கூறியபடி விலகி ஓட
"அடேய் உன்ன.." என்று விரட்டினான் மதுரன்.
"அய்யைய்யோ இந்த நாட்ல ஆம்பளைங்களுக்கு பாதுகாப்பே இல்லையா... ஒரு பொம்பள புள்ள தொரத்துனா கூட பரவால்ல ஆம்பளை தடிமாடுல்ல தொரத்துது.." என்றபடி வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி ஓட
துரத்தியவன் நின்று தலையடித்துக் கொண்டான். "கொஞ்சமாவது டாக்டர் மாதிரி நடந்துக்கோடா..." என்று முறைத்தான்.
"அடடே வாங்க டாக்டர் மதுரன். நீங்க மிஸ். துளசியை கட்டிபுடிச்சு கிஸ் அடிக்கும் போது நீங்க ஒரு டாக்டர்ங்கறது உங்களுக்கு மறந்து போச்சா.." என்று சீண்ட
"நீ உதை வாங்க போற..." என்றான் மதுரன்.
"வாங்க சகல மச்சினிட்ட சேர்ந்து உதை வாங்கலாம்...." என்று அவன் தோள்மீது கை போட்டு அவனை அணைத்துக் கொண்டான்.
ரகு கூறியது அத்தனையும் உண்மை ராதாவின் வீட்டை விட்டு வெளியேறும் போது இனி என் வாழ்வு இவளோடு தான் என்று முடிவே கட்டி இருந்தான். ஏன் எதற்கு என்றெல்லாம் கேள்விக்கு இடமே இல்லாமல் அந்த கிராமத்து தேவதையை இந்த படித்து பட்டம் பெற்ற மருத்துவனுக்கு மிகவும் பிடித்து போயிருந்தது. கண்டவுடன் காதல் எல்லாம் இல்லை ஆனால் இப்போது அவன் மனதில் காதல் புகுந்து இருந்தது. மனம் முழுக்க மகிழ்ச்சியோடு இந்த விஷயத்தை உடனே மதுரனிடம் கூற வந்தவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது மதுரனின் காதல். பத்து வருட காதலாயிற்றே நண்பனுடையது. அவன் எவ்வளவு வருத்தத்தோடு இருப்பான். அவன் வருத்தத்தைப் போக்க வேண்டுமென்றே அத்தனை நேரம் அவனை சீண்டி விளையாடிபடியே தன் காதலையும் தெரிவித்திருந்தான் ரகு.
மதுரனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஏனெனில் ராதாவின் வாழ்க்கை குறித்தான பயமும், கலக்கமும், வருத்தமும் அவள் குடும்பத்தில் அனைவருக்குமே எப்பொழுதும் உண்டு. ரகுபதி, ராதாவை மணந்தால் அவள் வாழ்வு அடியோடு மாறிப்போகும் என்பதில் ஐயமில்லை. ரகுவை போன்ற ஒருவன் ராதாவுக்கு கிடைத்தால் அந்த குடும்பமே பெரும் மனபாரத்தை இறக்கி வைத்தார் போலாகும் என்றே மதுரனுக்கு தோன்றியது. ரகு சொல்வதை செய்பவன். அவன் பெற்றோர்கள் அவனைவிட ஒரு படி மேலே போய் மகன் இம்மென்று சொல்லும் முன்னே முடித்து வைப்பவர்கள்.
ராதா கொடுத்து வைத்தவள். இனி அவள் துன்பமெல்லாம் பனிபோல் விலகிவிடும். ஆனால் ராதா இதற்கெல்லாம் சம்மதிக்க வேண்டுமே. இத்தனை ஆண்டுகள் நடந்துவிட்ட துயரத்திலேயே உழன்று கொண்டிருந்தவள் இப்போது ரகுவை ஏற்க வேண்டுமே என்ற எண்ணம் தான் மதுரனுக்கு.
"துளசியவே இன்னும் சம்மதிக்க வைக்க முடியல... இதுல ராதாகிட்ட எப்படிடா என்று தனக்குள்ளே பேசுவதாய் எண்ணி வாய்விட்டு பேசி பெருமூச்சு விட
"அதுக்கு முதல்ல தோண்டோனும்... அப்பறம் தான் மரத்த நடோனும்... நீ இன்னும் துளசிட்ட பேசவே இல்ல... முதல்ல பேசனும் அப்புறமா உன் காதலை சொல்லனும், அப்புறமா தா இந்த கிஸ்ஸூ எல்லாம்... ஆனா பாருங்க சகல... நீங்க நேரா கிஸ்ஸூக்கே போய்ட்டீங்க... இனி எப்ப எப்படி பேசி அவளை சமாதானப்படுத்தி சம்மதம் வாங்கி, அப்புறம் என் ஆளை கரெக்ட் பண்றது... என்னமோ போடா மதுரா..." என்றான் ரகு.
"டேய்... அது ஏதோ தெரியாம நடந்துடுச்சு. அதுக்காக அதையே சொல்லிட்டு இருக்காத எப்படி பிரச்சனையை சரி செய்யலாம்னு சொல்லு. அதைவிட்டுட்டு கடுப்பேத்திட்டு..."
"எது... தெரியாம நடந்துச்சா.. அதுவா... அதுசரி.."
"சரி.. சரி.. இப்ப துளசியை எப்படி மீட் பண்றது. அவட்ட எப்படி பேசறது அதை சொல்லு.."
"செய்யறதெல்லாம் நீ செஞ்சிட்டு இப்ப என்கிட்ட ஐடியா கேட்கற.." என்று கூறும் போது மதுரனின் அலைபேசி ஒலித்தது.
"இந்தா மணி அடிக்குதுல்ல. உன் செல்ல தங்கச்சியா தான் இருக்கும். அவகிட்ட கேளு... அப்படியே எனக்கும் சேர்த்து கேளு.." என்று முடிக்கும் முன் மதுரன் அலைபேசியை எடுத்திருந்தான்.
"சொல்லு டா மயிலே..." என்றவன் முகம் மாறியது.
...............
"என்னாச்சு... எப்போ.. ஏன் எனக்கு சொல்லல, உடனே கூப்டறதுக்கென்ன... "
................
ஓகே ஓகே... நீங்க வாங்க நாங்க ஆஸ்பிடல் வந்துடறோம். பயப்படாதே. அப்பா எங்கே... அவர்ட்ட போனை குடு.
.......................
"அப்பா பயப்படவேணா இங்க வாங்க நாம பாத்துக்கலாம். ஒன்னும் ஆகாது.." என்று கைபேசியை அணைக்க அது மீண்டும் ஒலித்தது.
ஏதோ பிரச்சினை என்று ஊகிக்கும் முன்னே மதுரனின் அலைபேசி பேச்சு அவனுக்கு அத்தனையும் விளங்கவைத்து.
தொடர்வார்கள்...
உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள் மக்களே... ஆவலோடு நான்😍😍😍😍😍